இலக்கணமும் சரித்திரமும்

கி.வா.ஜகந்நாதன்

தமிழருடைய சரித்திரத்தைத் தெரிந்துகொள்வதற் குரிய சாதனங்கள் பல. சமீபகாலச் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ளப் பல கருவிகள் உதவுகின்றன. எந்தக கருவியும் கிடைக்காமல் வெறும் ஊகத்தினால், "தமிழர் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்" என்று எண்ணும் காலத்தைச் சரித்திர காலத்துக்கு முற்பட்டது என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் சொல்வது வழக்கம்.

சரித்திர காலத்துக்கு முற்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் சில கருவிகள் உண்டு. வாழ்க்கையைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவு தெரிந்துகொள்ள அக்கருவிகள் உதவும். அத்தகைய கருவிகளுள் நூல் ஒன்று.

மணிமேகலை என்ற நூலைக் கடைச் சங்கம் ஓய்ந்து போன காலத்தில் எழுந்ததென்று சொல்வார்கள். கி.பி. இரண்டாவது நூற்றாண்டு என்று ஒரு சாராரும், கி.பி. ஐந்தாவது நூற்றாண்டென்று வேறொரு சாரா ரும் கூறுவர். அது எப்படியானாலும் மணிமேகலை உண்டான காலத்துத் தமிழர் வாழ்க்கையை ஓரளவு அந்த நூலிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அந்தக் காவியத்தில் ஓரிடத்தில், மணிமேகலை ஒரு கண்ணாடி அறைக்குள் புகுந்து கொண்டாள் என்றும், அவள் இயங்குவது வெளியில் தெரிந்ததேயன்றி அவள் பேசிய பேச்சுப் புறத்தே கேட்கவில்லை யென்றும் புல வர் பாடியிருக்கிறார். கண்ணாடியினூடே ஒளி செல்லும், ஒலி செல்லாது என்ற உண்மையை அக்காலத்தில் தமிழர் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரம். இப்படிக் கதைக்குப் புறம்பாகத் தமிழர் வாழ்க்கைப் பகுதிகளைத் தெரிந்து கொள்ளப் பழந் தமிழ் நூல்கள் உதவுகின்றன.

தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு உரிய இலக்க ணத்தை வகுப்பது அதைப் படிப்பவர்கள் இலக்கணத் தைத் தெரிந்து கொள்வதற்காகவே படிக்கிறார்கள். ஆனால், அதை வேறு ஒரு பயன் கருதியும் படிக்கலாம். தமிழர் வாழ்க்கையைப் பற்றி என்ன என்ன செய்தி களைத் தொல்காப்பியர் இடையிடையே தெரிவிக்கிறார் என்ற ஆராய்ச்சியை நடத்தலாம். தொல்காப்பியம் எவ்வளவுக்கு எவ்வளவு பழையதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த ஆராய்ச்சிக்கு மதிப்பு உண்டு. ஒரு கால் தொல்காப்பியத்திலுள்ள இலக்கணச் செய்திகள் அவ்வளவும் மாறி அந்நூல் இலக்கண நூல் என்ற வகையில் பயனின்றிப் போய்விட்டதாக வைத்துக் கொள்வோம். அப்போது கூடத் தமிழர் சரித்திரப் பகுதிகளை உணரும் கருவியாக அது இருக்கும்.

எழுத்தின் இயல்பு, எழுத்துக்களின் வகை, எழுத் துக்கள் ஒன்றோடு ஒன்று சேரும் புணர்ச்சி முதலிய வற்றைத் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் சொல் கிறார். ஒலி எப்படிப் பிறக்கிறது, வெவ்வேறு ஒலியாக எப்படி அமைகிறது முதலிய தத்துவங்களைச் சொல்கிறார். வார்த்தையும் வார்த்தையும் நெருங்கும்போது முன்னுள்ள சொல்லின் கடைசி எழுத்தும், பின்னுள்ள தன் முதலெழுத்தும் சேரும். அதைப் புணர்ச்சி என்பார்கள். இப்படிச் சேரும் பொழுது இடையே சில மாறுபாடுகள் உண்டாகும். அவற்றை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.நிற்கிற எழுத்து வேறொன்றாக மாறும்; அது மறைந்து போவதும் உண்டு;அல்லது புதிய எழுத்துத் தோன்றும். இந்த மாறுபாட்டைத் திரிபுஎன்றும், விகாரம் என்றும் இலக்கணக்காரர் சொல்வர்.

இந்த விகாரம், நிற்கிற சொல்லையும், வரும் சொல்லையும் பொறுத்த ஒன்று. இன்ன சொல்லுக்கு முன்னால் இன்ன சொல் வந்தால் இத்தகைய விகாரம் உண்டாகும் என்று தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கிறார். அத்தகைய இடங்களில் பல சொற்களை அவர் எடுத்துச் சொல்கிறார். அவர் சொல்லும் விகாரத்தைப் பற்றிய செய்தி இலக்கணம். ஆனால் அவர் எடுத்துக் காட்டும் சொல்லோ நம்முடைய ஆராய்ச்சிக்கு உதவுவது.

"தாழ் என்ற சொல்லும் கோல் என்ற சொல்லும் ஒன்று சேர்ந்தால் தாழக்கோல் என்று வரும்" என்று ஒரு சூத்திரம் இருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் '' என்ற எழுத்து இடையே புதிதாக வருவதைச் சொல்கிறார். அது தமிழ் இலக்க ணம் படிப்பவரகளுக்கு உபயோகமான செய்தி. தமிழர் சரித்திரம் படிப்பவர்களுக்கு இந்தச் சூத்திரத்தில் ஓர் அரிய செய்தி உண்டு. தொல்காப்பியர் காலத்தில் 'தாழக்கோல்' என்ற கருவி இருந்தது என்ற செய்தி யை இந்தச் சூத்திரத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாமே! அது மட்டுமா? தாழ் என்ற பொருள் ஒன்றும், அதைத் திறக்கும் கோல் என்பது ஒன்றும் உண்டு என்றும் தெரிந்து கொள்ளலாம். வீட்டுக்குக் கதவும் அந்தக் கதவுக்குத் தாழும் இருந்தன. வெளி யிலே செல்கிறவர்கள் ஒரு கோலினால் உள்ளே உள்ள தாழைத் திருப்பி விடுவார்கள்; திறப்பார்கள். தாழைத் திறப்பதனால் தாழக்கோல் என்ற பெயர் வந்தது. வெளியிலே நாதாங்கியில் பூட்டை மாட்டிப் பூட்டுவது பழந் தமிழருக்குத் தெரியாது என்று மேலும் அந்த ஆராய்ச்சியை விரித்துக்கொண்டுபோக இடம் உண்டு.

இந்த முறையில் தொல்காப்பியத்திலிருந்து தெரிந்துகொள்ளக் கூடிய துப்புக்கள் இன்னவென்று சற்றே கவனிக்கலாம்.

முதலில் எழுத்ததிகாரத்தின் ஆரம்பத்தில் நூல் மரபு என்ற அத்தியாயம் இருக்கிறது. அதில் எழுத் துக்களின் பெயர்கள், அவற்றின் பிரிவுகள், அவற்றின் ஓசை முதலிய செய்திகள் வருகின்றன. பிறகு மொழிமரபு என்ற அத்தியாயம் வருகிறது. அதில், எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாவகையும், அப் பொழுது சில எழுத்துக்களுக்கு உண்டாகும் விசித்திர மான மாறுபாடுகளையும் சொல்கிறார். அடுத்த அத்தி யாயமாகிய பிறப்பியலில் எழுத்தை உச்சரிக்கும்போது எந்த எந்த உறுப்புகள் எப்படி எப்படி வேலை செய் கின்றன என்பதைச் சொல்கிறார். அதற்குப்பின் வரும் ஆறு அத்தியாயங்களில் புணர்ச்சியைப் பற்றிய செய்தி கள் வருகின்றன.

இந்தக் காலத்தில் நாம் மெய்யெழுத்துக்களுக்கு மாத்திரம் புள்ளி வைக்கிறோம். பழங்காலத்தில் வேறு சில எழுத்துக்களுக்கும் மேலே புள்ளி வைத்தார்கள் என்று தெரிகிறது. இப்போது ',' என்று எழுதும் எழுத்துக்களின் உருவம் புதியது. முன்பெல்லாம் '' என்று எழுதினால் என்றுதான் வாசிப்பார்கள். என்பது ஓகாரத்தையும் கொ என்பது கோ என்பதை யும் குறித்தன. என்ற எழுத்தின்மேலே ஒரு புள்ளி வைத்தால் அப்போதுதான் அதை எகரமாகப் படிப் பார்கள். வீரமாமுனிவர் என்ற மேல் நாட்டுப்புலவர் இந்த நாட்டுக்கு வந்து தமிழ் பயின்றார்; நூல்களை இயற்றினார். அவரே என்ற எழுத்துக்குக் கீழே ஒரு சிறிய கோடு இழுத்து ஆக்கினார். ஒகரத்தின் கீழ்ப் பாகத்தைச் சுழித்து என்ற எழுத்தை அமைத் தார். கெ என்பதன் கொம்பையும் கொ என்பதன் கொம்பையும் மாற்றி, கே என்றும் கோ என்றும் ஆக்கி னார். இப்படி உருவம் மாறியது முதல் எகர ஒகரங் களுக்குப் புள்ளி வைக்கும் வழக்கம் நின்று போயிற்று.

இப்படியே குற்றியலுகரம் குற்றியலிகரம் என்ற இருவகை யெழுத்துக்களுக்கும் முற்காலத்தில் புள்ளி போட்டார்கள். ஓசை குறைந்த 'ம்' என்ற எழுத்துக்கு உள்ளே ஒரு புள்ளியை வைத்தார்கள். அதற்கு மகரக் குறுக்கம் என்று பெயர். உலக வாழ்க்கையில் எல்லப் பிராணிகளும் உயி ரோடும் உடலோடும் கூடி இயங்குகின்றன. எழுத்தி லும் உயிர் உண்டு; உடலுண்டு. உயிர் உடலோடு சேர்ந்து இயங்கும்; தானே தனியாகவும் இயங்கும்.

மெய் உயிரோடு சேராமல் இயங்காது.உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று எழுத்துக்களில் இரண்டு வகை இருக்கின்றன. உயிரெழுத்தின் தொடர்பே இல்லாமல் மெய்யை உச்சரிக்க முடியாது. சொல்லாக்கவும் முடியாது. உயிர் தனியாக நிற்கும்.

உயிரெழுத்துக்களில் குறில் என்றும் நெடிலென்றும் பிரித்திருக்கிறார்கள். ஓசையின் அளவைக்கொண்டு பிரித்த பிரிவு இது. மெய் எழுத்திலும் வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற பிரிவு இருக்கிறது. ஓசையின் இயல்பைக்கொண்டு பிரித்த பிரிவு இது.

எழுத்து, வாயிலிருந்து வெளியாகும்போது அதன் ஒலி காதுக்குக் கேட்கிறது. அந்த ஒலி வாயிலிருந்து எழுவதற்கு முன்னாலே பல பல காரியங்கள் உடம்பிலே நிகழ்கின்றன. நம்முடைய நாபியில் உதானன் என்ற காற்று அடங்கி யிருக்கிறது. நாம் பேசத்தொடங்கும்போது முதலில் உந்தியில் வேலை ஆரம்பமாகிறது. உதானன் என்ற வாயு எழும்பி மேல் நோக்கிப் புறப்படுகிறது. நேரே செல்லும் அந்த வாயு ஒரே மாதிரி வெளியாவதில்லை. நாம் ஒலிக்கின்ற எழுத்தின் அமைப்புக்கு ஏற்ப வேறு வேறு முறையில் வெளியாகிறது. அதற்கு முக்கியமாக மூன்று திருப்பங்கள் இருக்கின்றன. தலை ஒரு திருப்பம்; கழுத்து ஒன்று மார்பு ஒன்று. தலைக்கு வந்த வாயு அங்கிருந்து வாய் வழியாகப் புறப்படும்போது பல், இதழ், நாக்கு, மூக்கு என்ற கருவிகளால் வெவ்வேறு ஓசையை உண்டாக்குகிறது. மூக்கு வழியாக வந்தால் ,,,,,, என்ற மெல்லின ஒலியை உண்டாக்குகிறது. இப்படியே மற்ற எழுத்துக்கள் வெவ்வேறு வகையான முயற்சிகளால் ஒலி வேறுபாட்டை அடைகின்றன.

இவற்றை விரிவாகத் தொல்காப்பியர் சொல்லி யிருக்கிறார். இதை அவராகச் சொல்லவில்லை. அவருக்கு முன்பே புலவர்கள் எழுத்தின் ஒலி எப்படி உண் டாகிறது என்பதை ஆராய்ந்து வைத்திருக்கிறார்கள்.

தொல்காப்பியர் கூறும் இலக்கணங்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இரண்டுக்கும் உரி யனவே. சில இடங்களில் உலக வழக்கில் இப்படி வரும் என்று வேறு பிரித்தும், செய்யுளில் இப்படி வரும் என்று தனியாகவும் சொல்கிறார்.

தமிழ் நாட்டில் வியாபாரம் நன்கு நடைபெற்ற காலம் அது. பண்டங்களை அளந்தும் எண்ணியும் நிறுத்தும் முகந்தும் வியாபாரம் செய்தார்கள். அதற் குரிய அளவுப் பெயர்களை எழுத்ததிகாரத்தில் காண லாம். பல மரங்களின் பெயர்களும் வருகின்றள. இயற்கை வளம் மிகுந்த இடத்தில் வாழ்ந்த தமிழருக்கு அந்த இயற்கையிலே அமைந்த மரங்கள் பலபல திறத் தில் பயன்பட்டன. அவர்களுடைய வாழ்க்கையில் பயன்பட்ட மரங்களைப்பற்றி அவர்கள் அடிக்கடி பேசிக் கொண்டார்கள். பேச்சு வழக்கிலே வரும்போது சொற்களின் உருவத்திலே சில வேறுபாடுகள் தோன் றின. அவற்றைத் தொல்காப்பியர் கவனித்தார் இலக்கணம் செய்தார்.

மாடு என்ற பொருளும் அதைக் குறிக்கும் சொல் லும் இருக்கின்றன. கால் என்ற அவயவமும் அதைக் குறிக்கும் அச்சொல்லும் இருக்கின்றன. மாடு என்ற சொல்லோடு கால் என்பது சேருமானால், அவை அப்படியப்படியே சேர்ந்து நிற்பதில்லை. மாடு கால் என்றால் ஒட்டியதாகவே தெரியவில்லை. மாட்டுக்கால் என்று சொன்னால்தான் மாடும் காலும் இணைந்தவை என்று தெரியவரும். மாடு, கால் என்பவற்றைப் பேச்சு வழக்கிலும் மாட்டுக்கால் என்றே இணைத்துப் பேசு கிறோம்.புதிதாகத் தோன்றிய ட், க் என்ற எழுத்துக் கள் இலக்கணம் படித்தவர்கள் பேச்சில் மாத்திரம் வந்தால் இது இலக்கணத்தைக் கற்றுப் பேசுகிறது என்று சொல்லாம், தமிழர் யாரானாலும் மாட்டுக்கால் என்றே சொல்வார்கள். மாடு, கால் என்ற இரண்டும் சேர்ந்து வழங்கும்போது, ட் என்ற எழுத்தும் க் என்ற எழுத்தும் தோற்றும் என்று இலக்கணக்காரர் சொன்னது, முன்பே இருப்பதைச் சுட்டிக் காட்டியதே யன்றி,புதிதாக இனி இப்படி இருக்கவேண்டும் என்று விதித்தது அல்ல. "கடல் நீல நிறம் உடையது" என்று ஒருவன் சொன்னால், கடலில் நீல நிறத்தை அவன் புதிதாக உண்டாக்கி விடவில்லை. கடலில் நீல நிறம் இருப்பதைத் தனியே சிந்திக்காமல் இருந்த வருக்கு முன்பே உள்ள ஒன்றைச் சொல்கிறான். அவ் வளவுதான்.

எழுத்ததிகாரத்தைப் போலவே சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத்திலும் உள்ள சூத்திரங்களும் இலக்கணச் செய்திகளை நன்றாகச் சொல்கின்றன. அவற்றில் தமிழ் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளும் சரித்திரத் துணுக்குகளும் இருக்கின்றன.

தொல்காப்பியர் வீட்டிலும், நாட்டிலும், கடையி லும்,சபையிலும், வயலிலும், வாசலிலும் வழங்கிய தமிழைக் கண்டார். அதில் ஏற்படும் விசித்திரங்களை, "இதோ பாருங்கள்" என்று சுட்டிக் காட்டுகிறார். அப் படி அவர் காட்டுவனற்றில் சில நமக்கு விளங்கவில்லை. சில இப்போது மாறிவிட்டன. காரணம் வாழ்க்கையில் உண்டான மாறுபாடுதான்.

  

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)