ஓவிய வித்தகர்

கி.வா.ஜகந்நாதன்

தமிழ் நாட்டில் அறுபத்து நான்கு கலைகளும் நன்றாக நிலைகொண்டு வளர்ந்தன என்பதை நூல் களின் வாயிலாக உணர்கிறோம். கலைகளுள் நுண் கலைகள் (Fine arts) என்று சிலவற்றைப் பிரித்து உரைப்பது மேல்நாட்டார் வழக்கம். அந்த நுண்கலை களுள் ஒன்று ஓவியக்கலை எந்த நாட்டில் வாழ்க்கை வளம் பெற்று, நாகரிக நலம் உயர்ந்து சிறக்கின்றதோ அந்த நாட்டில் கலைவளம் சிறந்து நிற்கும். கலைகள் பலவற்றுள்ளும் காவியமும் ஓவியமும் சிறப்பாகப் பயிலும் நாடு மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் காவியப் புலவர்கள் பலர் இருந் தார்கள் அவ்வாறே ஓவியப்புலவர்களும் இருந்தார் கள். கவிதைச் சுவையை நுகரும் ஆற்றல் படைத்த தமிழர் ஓவியச் சுவையையும் அறிந்து இன்புற்றார்கள். வாழ்க்கையிலே பொழுது போக்குக்காகப் கலைகளைப் பயில்வதும் அநுபவிப்பதும் பல நாட்டினர் வழக்கம். இந்த நாட்டில் வாழ்க்கையிலேயே கலைகள் இணைந்து நிற்கும். ஆதலின் பழந்தமிழரிற் பெரும்பாலோர் கலைகளி்ல் ஓரளவு பயிற்சி பெற்றிருந்தனர்.

வீட்டில் உள்ள மகளிருக்குப் பாடத் தெரியும்; சித்திரம் எழுதத்தெரியும். கடவுளை நாள்தோறும் இசை பாடித் துதித்தார்கள். அந்தத் தோத்திரம் தினசரிக் கடமைகளில் ஒன்று. விழாக் காலங்களில் பெண்கள் ஒன்றுகூடி, "வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டு" வேறு உண்டு. மாடமாளிகைகளில் வாழும் மக்கள் மாத்திரம் இப்படி இருந்தார்கள் என்று நினைக்கக் கூடாது; தொழில் செய்து பிழைப்பாரும் தங்கள் வாழ்க்கையிலே பாட்டுப் பாடி வாழ்ந்தார்கள்.

ஓவியக்கலையும் பொது மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. வீட்டுப் பெண்கள் தினந்தோறும் வாச லிலே இடும் கோலம் அவர்களிடத்திலும் ஓவியக்கலை யின் முளை உண்டென்பதைப் புலப்படுத்தும். குடிசை யிலும் குச்சியிலும் வாழும் தொழிலாளர் கூடக் கூடையும் முறமும் விசிறியும் பின்னுவார்கள்; பாய் முடைவார் கள். அவற்றிலே சித்திரச் செய்கையைக் காணலாம். சின்னஞ் சிறு குழந்தைகளுக்குக் காசு போட்டுச் சித் திரப் பொம்மை வாங்கிக் கொடுக்கும் வழக்கம் நம் முடைய காலத்தது. பழங்காலத்தில் வாழ்க்கைத் தரத்துக்குத் தக்கபடி குழந்தைகளுக்கு விளையாட்டுப் பண்டம் கிடைக்கும்.

ஏழைப்பெண் ஒருத்தி அழுகின்ற தன் குழந் தைக்கு அஞ்சு நிமிஷத்திலெ கிலுகிலுப்பை பண்ணிக் கொடுத்து விடுகிறாள் பனை ஓலையைக் கிழித்துச் சிறிய கற்களை உள்ளே வைத்து அந்தக் கற்களைக் கொள் ளும் புட்டிலும் அதற்கு மேலே கையிலே பற்றிக் கொள்ளப் பிடியும் அமைத்து அற்புதமாகக் கிலுகிலுப் பையைப் பண்ணி விடுகிறாள். இன்னும் வசதி உள்ள வளாக இருந்தால் சாயம் பூசிய ஓலையில் விதவிதமான கிலுகிலுப்பைகளைப் பண்ணித் தருகிறாள்.

இன்றும் செட்டி நாட்டுப் பெண்டிர் முடையும் ஓலைப் பெட்டிகளின் அழகைக் கண்டவர்களுக்குத் தெரியும் அவற்றின் அருமை. கையிலே தென்னை ஓலை கிடைத்தால் பாம்பும், தாமரைப் பூவும், கிளியும், கிலு

கிலுப்பையும் மிக விரைவிலே செய்து கொடுக்கும் வித்தை இன்றைய கிராமத்தாருக்குக்கூட சுலபமான காரியம்.

தையல் வேலைகளிலே வீட்டுப் பெண்கள் கலைத் திறம் காட்டிய காலம் முன்பு. இப்போது யந்திரத்தை நம்பி வாழ வேண்டி வந்துவிட்டது.

பொது மக்களே ஓரளவு கலைத்திறம் படைத்தவர் களானால் அவர்களுக்குள்ளே சிறந்த புலவர்கள் எவ் வளவு வல்லவர்களாக இருக்க வேண்டும்! சில பெண்கள் வீட்டுச் சுவர்களில் விதவிதமாகச் சித்தி ரத்தை எழுதுவார்கள். சுண்ணாம்பும், செம்மண்ணும், கரியும், மஞ்சளும், இலைச்சாறுமே அவர்களுடைய வண்ணப் பொருள்கள். அவற்றைக்கொண்டு நாகப் பின்னல்களும், கோட்டை கொத்தளங்களும் எழுதி விடுவார்கள். கிழிந்த துணிகளைக் கொண்டு கிளியும் குருவியும் செய்து குழந்தைகளின் தொட்டிலுக்கு மேலே தொங்க விடுவார்கள்.

இவ்வாறு ஓவியக்கலை பல்வேறு வகையில் வாழ்க் கையிலே கலந்து பொதுமக்களின் கையிலே பழகி விளங்கியது. அவர்களுக்கு மேலாக, கலையையே தங் கள் வாழ்க்கையின் தலைமைத் தொழிலாகக் கொண்ட வர்களைப் புலவர்கள் என்று போற்றினார்கள். தங்கள் தங்கள் வீட்டிலே பெண்கள் சமைத்துக் கொண்டால் அது வாழ்க்கை; பல பேருக்கு ஒருவர் உணவு சமைத்தால் அது உத்தியோகம். தங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணத்திலே பாடினாலும், கடவுளை வணங்கும் போது பாடினாலும் அவை வாழ்க்கைப் பகுதியாகி விடுகின்றன. பல்லோர் கூடும் சபையிலே பாடினால் தொழிலாகிறது. முன்னது பொதுமக்கள் வேலை; பின்னது கலைஞர் வேலை.

அந்த முறையில் தமக்கென்று பயன்பட ஓரளவு ஓவிய வகையில் பயிற்சி பெற்று வாழ்ந்தவர் தமிழர். பலருக்குப் பயன் படும்படியாக வாழ்க்கைத் தொழிலாக ஓவியக்கலையைக் கொண்டவர் ஓவியப் புலவர்.

ஓவியப் புலவரில் பல வகையினர் உண்டு. சுவரி லும் கிழியிலும் வண்ணங்கொண்டு ஓவியம் வரையும் ஓவியர் ஒருவகை. சுண்ணம் கொண்டும், வண்ணம் கொண்டும் பாவை அமைப்பார் ஓரினம். கல்லிலும் மரத்திலும் நெட்டியிலும் உருவம் அமைப்பார் ஒரு குழுவினர். உலோகத்தால் அமைந்த பாத்திரங் களிலும், பொன்னணிகளிலும் சித்திரம் பொறிப்பார் ஒருவகையினர். இவர்களை யெல்லாம் வித்தகர் என்ற சொல்லால் பழந் தமிழ் நூல்கள் குறிக்கின்றன.

ஓவியர், சித்திரகாரிகள், கண்ணுள் வினைஞர், கண்ணுளார் என்று ஓவியப் புலவர்களுக்குப் பெயர்கள் வழங்கும்.

வித்தகக் கலையாகிய ஓவியத்தில் வல்லுநர்களாக இருந்தமையின் வித்தகர் என்ற பெயர் வந்தது.

வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம்

என்று மணிமேகலையிலும்,

 

வித்தகர் இயற்றிய விளங்கிய கோலம்

என்று சிலப்பதிகாரத்திலும்,

வித்தக வினைஞர் மத்தியிற் குயிற்றிய சித்திர சாலை

என்று பெருங்கதையிலும் இப்பெயர் வருகிறது. மெய்ஞ்ஞானம் படைத்தவர்களை வித்தகர் என்பது இந்த நாட்டு மரபு. சிந்தனாசக்தி படைத்தவர்களை வித்தகர் என்று சொல்வது பொருந்தும். ஓவியப் புலவர்கள் வெறும் தொழிலாளர்கள் அல்ல. கண்ணும் கையும் படைத்தவர்களெல்லாம் சித்திரம் வரைந்துவிட முடியாது. கருத்திலே நினைந்து நினைந்து நிறை வெய்திய கற்பனையை உருவாக்குபவனே கலைஞன். சிந்தனாசக்தி இல்லாதவன் கலைஞன் ஆகமுடியாது. ஓவியக் கலைஞனும் சிந்தனாசக்தியும், கற்பனை வளமும் பொருந்தியவன்; ஆகையால் மெய்ஞ்ஞானியருக்குரிய வித்தகன் என்ற பெயர் அவனுக்கு ஏற்புடையதாயிற்று.

மணிமேகலை ஒரு பளிங்கறைக்குள்ளே இருந் தாள். அசையாமல் அவள் நின்றபோது உதயகுமாரன் என்ற அரச குமாரன் அங்கே வந்தான். கண்ணாடி அறைக்குள்ளே மணிமேகலை நிற்கிறாளென்பதை முதலில் அவன் உணர வில்லை. சுற்றிலும் 'சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன'வாக இருந்தமை யால், அந்தச் சித்திரக் கூடத்துள் அமைத்து வைத்த பாவை என்று முதலில் எண்ணினான். மற்றப் பெண் களைப்போலச் சிறந்த அலங்காரம் ஒன்றும் இல்லாமல், தனியாக அழகே உருவெடுத்து வந்தாற் போன்று நின்றாள் மணிமேகலை. அந்த உருவம் வழக்கமாக அலங்காரங்களோடு ஓவியர் வனையும் உருவமாகத் தோற்றவில்லை. "இப்படி ஒரு உருவத்தை ஓவியன் கற்பனை செய்தானே, அவன் கருத்து என்ன?" என்று சிறிது நேரம் உதயகுமாரன் யோசித்து நின்றானாம்.

ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்

என்று மணிமேகலை ஆசிரியர் சொல்கிறார். ஓவியன் உள்ளத்தே நன்றாகச் சிந்தித்துத் தன் கலைத்திறமையைக் காட்ட வேண்டுமென்ற உண்மையை இந்த அடி தெரிவிக்கின்றது.

வண்ணமும் கிண்ணமும் தூரிகையும் கிழியும் கையும் கண்ணும் மாத்திரம் இருந்தால் ஓவியம் வந்து விடாது. சிந்தனாசக்தி மிகவும் அவசியம்.இதனைக் கம்பர் அழகாகச் சொல்கிறார்.

சீதா பிராட்டியின் அழகைச் சொல்ல வருகிறார் அப்பெரும் புலவர். அவளுடைய திருமேனி அழகு நாவினால் வருணிக்க ஒண்ணாதது. அந்தப் பேரழகி யைப் பார்த்தபோது மன்மதனுக்கு அப்பெருமாட்டி யின் திருவுருவத்தை எழுத வேண்டுமென்று ஆர்வம் உண்டயிற்றாம். இந்த ஆதரம் எழவே. சித்திரம் எழுதுவதற்கு வேண்டிய கருவிகளை சேகரிக்கத் தொடங்கினான். சாமானிய மாதர்களைப் போன்றவளா சீதை? அவளை எழுதுவதற்கு உலகத்திலே கிடைக்கும் வண்ணங்கள் பயன்படா. ஆகவே அமிழ்தத் தினாலே வண்ணக் கலவைகளை உண்டாக்கிச் சீதை யின் சித்திரத்தைத் தீட்ட வேண்டுமென்று எண்ணி னான். அமுதத்தைக் கிண்ணங்களிலே நிரப் பிக்கொண்டான்; வண்ணங்களையும் வைத்துக் கொண்டான். நல்ல எழுது கோலாகத் தேர்ந் தெடுத்தான். கையிலே கோல்பிடித்து அமுதத்திலே தோய்த்தான்.

இந்தப் புறக்கருவிகள் இருந்தாலே போதும் என்று மன்மதன் நினைத்து விட்டான். சாதாரணமாக ஒரு சித்திரம் வரைய வேண்டுமென்றாலே, முதலில் சிந்தனையை எழுப்பிக் கற்பனையிலே படரவிட வேண்டும். யார்க்கும் எல்லை காணரிய பேரழகியைச் சித்திரிக்க வேண்டுமானால் எவ்வளவு காலம் சிந்திக்க வேண்டும்? அவளுடைய புறஎழில் மாத்திரம் கண் ணுக்குத் தெரிந்த அளவிலே அமைத்தால் போதுமா? வேறு ஓர் அழகியின் உருவத்தை அமைத்துவிடலாம். ஆனால் உள்ளும் புறமும் பேரழகு படைத்த அப் பெருமாட்டியைச் சித்திரத்திலே தீட்ட வேண்டுமானால் அகமும் புறமும் ஆராயும் சிந்தனையும் கண்ணும் உடையாரே செய்யத் துணிய வேண்டும்.

காமன் அழகுலத்தின் தெய்வம் என்ற அகங்கா ரத்தினால், யாருக்கும் கிடைக்காத அமுதத்தையே வண்ணக் குழம்பாகப் பெற்ற செருக்கினால், சீதையை எழுத உட்கார்ந்தால் வருமா? ஒவ்வோர் அவயவ மாகச் சித்திரிக்கலாமென்றால் அந்த அவயவத்தோடு பொருந்திய நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சியூடே வெளிப் படும் சீதையின் தனிச்சிறப்பு முதலியவற்றைச் சிந்திக்க வேண்டாமா? முதலில் மிக்க பக்தியுடன் உள்ளமாகிய கிழியைத் தூயதாக்கிக்கொண்டு அங்கே சிந்தனையாலே உருவெழுதிக் கற்பனையாலே வண்ணந் தீட்டிப் பிறகல்லவா கிழியிலே அமைக்க முந்த் வேண்டும்? அப்போதுதானே அது கலை ஆகும்?

காமன் வெறும் தொழிளாளியைப் போல ஆரம்பித்தான். கோடரியைக் கொண்டு விறகு பிளப்பவன் தொழிலாளி; அவன் சிந்தனை வேலை செய்யவில்லை. அவன் தூங்கிக்கொண்டே மரம் பிளக்கலாம். சேகேறிய மரத்திலே உருவம் செதுக்கும் சிற்பக்கலைஞனோ சிந்தனை செய்கிறான். உளியை இயக்குவதற்கு முன் உள்ளத்தை இயக்குகிறான்.

மன்மதன் விறகு பிளக்கிற தொழிலாளியைப்போல வெறும் கருவிகளின் பலத்தினாலே இந்தக் காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று முந்துகிறான். அது நடக்கிற காரியமா? கோலை அமுதிலே தோய்த்து எழுதப் போனால் ஓடவில்லை. உள்ளத்தே ஒளி உண்டானால் அது புறத்தே சுடரும். இவன்தான் உள்ளக் கதவைச் சாத்திவிட்டானே! அங்கே இருள்தான் படியும். மயக்கந்தான் உண்டாகும்; திகைப்புத்தான் ஏற்படும். அமுதத்தையும் கோலையும் கொண்டு சீதையை எழுதப்புகுந்த மன்மதன் எப்படி எழுதுவது என்று திகைகிறானாம்,

 

ஆதரித்து அமுதில் கோல்தோய்த்து

      அவயவம் அமைக்கும் செய்கை

யாதெனத் திகைக்கும் அல்லால்

      மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை

 

என்பது கம்பர் பாட்டு.

மன்மதன் வித்தகனாக இருந்தால் சீதையின் சித்திரத்தைத் தீட்டிவிடலாம் சிந்தனை செய்யும் வித்தகர்க்கே உரியது ஓவியக்கலை.

கம்பர் பின்னும் ஓரிடத்தில் ஓவிய வித்தகன் சிந்தனையாளனாக இருக்க வேண்டுமென்று சொல் கிறார். கண்ணாலே பொருளை நன்கு பார்த்து அப்பால் அதை உள்ளத்திலே வடித்து அதன்மேல் கற்பனை யாலே மெருகேற்றும் கலைஞன்தான் சிறந்த ஓவியங் களை எழுதமுடியும். வெறும் கையும் தூரிகையும் இருந்தால் போதா என்று சொல்கிறார்.

 

கருத்துஇலான் கண் இலான் ஒருவன் கைகொடு

திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய

 

என்பது கும்பகர்ணன் வதைப் படலத்தில் வரும் பாட்டு.

சிந்திக்கும் கருத்து இல்லாதவன் ஓவியனாக முடியாது. அந்தக் கருத்திலே பதியும் வண்ணம் பார்க்கும் கண் இல்லாதவன் சித்திரம் எழுத முடியாது. ஓவிய வித்தகன் நன்றாகப் பார்த்துப் படம் பிடிக்கும் கண்ணை யுடையவனாய், அதனைச் சிந்தித்துச் சிந்தித்துப் பதியவைக்கும் கருத்துடையவனாய், கலைப் பண்பு துளும்ப ஓவியத்தை அமைக்கும் கற் பனைத் திறம் உடையவனாய் இருக்கவேண்டும். இதைப் பண்டைப் புலவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)