கலை இன்பம்

கி.வா.ஜகந்நாதன்

ஒருவர் வீட்டில் நன்றாக வைரம் ஏறிய கருங்காலிக் கட்டை ஒன்றை ஒரு நண்பர் கொண்டு வந்து போட் டிருந்தார். நல்ல பெரிய கட்டை. ஒரு பாட்டி அங்கே வந்தாள்; அந்தக் கட்டையைப் பார்த்தாள். "எவ்வளவு பெரிய கட்டையாக இருக்கிறது! அதுவும் சேகு ஏறிய கட்டை போல் இருக்கிறது. இதைப் பிளந்தால் ஒரு மாதத்துக்கு வெந்நீர் போடலாமே!" என்றாள்.

அடுத்த படியாக அங்கே ஒரு தச்சன் வந்தான். மரத்தைத் தட்டிப் பார்த்தான். "நல்ல கருங்காலிக் கட்டையாக இருக்கிறதே! மேஜை, நாற்காலி, அல மாரி எல்லாம் செய்யலாமே!" என்றான்.

இன்னும் சிறிது நேரம் கழித்து மற்றோர் ஆசாரி யார் வந்தார். அவர் மரச் சிற்பி. கடைசல் வேலை செய்கிறவர். இந்தக் கட்டை கண்ணிலே பட்டவுடன், "ஹா ஹா!" என்று ஆச்சரியப்பட்டுப்போனார். கட் டைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தட்டிப் பார்த்தார்; மோந்து பார்த்தார்; "மிகவும் அருமையான மரம். சேகு ஏறின மரம். ஒரே சீராக இருக்கிறது. இந்தமாதிரி மரம் கிடைக்கிறது மிகவும் அருமை. ராமாயணத்தில் வரும் பாத்திரங்களையெல்லாம் ஒரே மரத்தில் பொம்மையாகப் பண்ணவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு வாகான கட்டை இது" என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

கட்டை உங்களுடையதாக இருந்தால் யாருக்குக் கொடுப்பீர்கள்? நிச்சயமாகச் சிற்பிக்குத்தான் தருவீர் கள். ஏன்? அவர் அதை மிகச் சிறந்த முறையில் பயன் படுத்திக் கொள்வார் என்று நமக்குத் தோன்றுகிறது. விறகாக எரிப்பதைக் காட்டிலும், மேஜை, நாற்காலியாகப் பண்ணுவது சிறந்தது; அதைவிடப் பொம்மைகளாகப் பண்ணுவது மிகமிகச் சிறந்தது என்று நாம் எண்ணுகிறோம். மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அதைச் சற்று ஆராய்வோம்.

பாட்டி அந்தக் கட்டையைப் பொசுக்கிச் சாம்ப லாக்கி விடுவதிலே நோக்கமுடையவளாக இருந்தால். கண்ணாலேயே அதைப் பொசுக்கி விட்டாள் என்றே சொல்லவேண்டும். அவள் அழிவு வேலைக்காரி. அவ ளைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. மற்ற இரண்டு பேரும் அதை உண்மையாகவே பயன்படுத்திக் கொள்ள எண்ணினவர்கள். அவர்களுக்குள்ளே வேறு பாடு இருக்கிறது. மேஜை நாற்காலி செய்கிறவன் ஒரு மாதம் முயன்று அந்தக் கட்டையிலிருந்து அவற் றைச் செய்துவிடுவான். ஆனால் ராமாயணப் பொம்மை செய்கிறவர் அவ்வளவு விரைவிலே செய்ய மாட்டார். பல மாதங்கள் வேலைசெய்து கடைசல் பிடித்து நுட்ப மாகச் செதுக்கிச் செய்யவேண்டி யிருக்கும். இதனால் மேஜை நாற்காலி செய்து விற்கும் தச்சனைக் காட்டி லும் சிற்ப உருவங்களாகச் செய்து விற்கும் சிற்பிக்கு அதிகப் பணம் கிடைக்கும்.

இந்த வேற்றுமைக்கு அடிப்படையான காரணம் தச்சன் செய்வது தொழில், சிற்பியின் வேலையோ கலை யென்பதுதான். தொழிலாளியின் படைப்பைக்காட்டிலும் கலைஞனின் படைப்பு மிக மிக உயர்ந்தது. தொழிலாளி கருவிகளையும் கையையும் அதிகமாகவும் அறிவைக் குறைவாகவும் உபயோகப்படுத்திப் பண்டங்களை உண்டாக்குகிறான். கலைஞன் கையையும் கருவிகளையும் விட அதிகமாக அறிவையும் கற்பனையையும் பயன் படுத்துகிறான். அதனால்தான் கலைப்பொருளுக்கு மதிப்பு அதிகமாக இருக்கின்றது. கருவியும் கையும் எல்லோரிடமும் இருக்கின்றன. கருத்தும் கற்பனையும் அருமையாகவே இருக்கின்றன.

மேஜை நாற்காலிகளைவிடச் சிற்ப உருவங்களுக்கு என்ன உயர்வு வந்துவிட்டது? இரண்டு வகைப் பொருள்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

மேஜை நாற்காலிகள் கருவிகளாகப் பயன்படுகின்றன. கருவியைப் பயன்படுத்த மக்கள் இல்லாதபோது அவற்றை யாரும் மதிக்கமாட்டார்கள். மேஜை ஒரு காரியத்துக்குப் பயன்படும் கருவியாக இருகிறது. ஆனால் சிற்ப உருவங்களைக் கருவியாகக் கொண்டு வேறு ஒன்றைச் செய்வதில்லை அவற்றையே பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். மேஜையைப் பார்த்து மகிழ்வதைக்காட்டிலும் அதை உபயோகப் படுத்தி மகிழ்வதுதான் பெரிதாக இருக்கிறது. சிற்ப உருவங்களை வேறு ஒரு காரியத்துக்குப் பயன்படும் கருவிகளாக உதவுமென்பதற்காக அன்றி அவற்றைக் கண்ட அளவிலே ஆனந்தமடைகிறோம்.

அப்படி ஆனந்தம் அடைவதற்குக் காரணம் நுட்பமானது. ராமாயண உருவங்களை அந்தச் சிற்பி அமைத்து விட்டான் என்றே வைத்துக் கொள்வோம். நவராத்திரிக் கொலுவில் அத்தனை பொம்மைகளையும் வைக்கிறார்கள். நாம் பார்க்கிறோம். அதைப் பார்ப்ப தனால் மாத்திரம் நமக்கு இன்பம் வராது. அந்தப் பார்வையினால் நம்முடைய உள்ளத்திலே சில எண் ணங்கள் கிளர்ந்து எழுகின்றன. ராமனையும் ராவண னையும் அநுமாரையும் சீதையையும் போல அமைத்த திருவுருவங்களைக் காணும்போது நாம் படித்த ராமா யணக் கதை நம் அகக்கண்முன் வந்து நிற்கிறது. ராமனுடைய குணங்களும் மற்றவர்களுடைய இயல்பு களும் நினைவுக்கு வருகின்றன. ராமாயணத்தில் அதிக மாக ஈடுபட்டவராக இருந்தால் இந்த உருவங்களைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியை அடைவார். முன்பே ராமனையும் மற்றவர்களையும் எண்ணி இன்புற்ற உள்ளத்துக்கு அந்த இன்ப உலகத்தைத் திறந்து காட்டும் திறவுகோல் போல இந்தப் பொம்மைக் காட்சி உதவுகிறது. அவற்றைக் கண்டவுடன் நாம் வேறு உலகத்துக்குப் போய்விடுகிறோம். இப்போது நிற்கும் காலத்தையும் இடத்தையும் மறந்து வேறு காலத்துக்கு, வேறு இடத்துக்குப் போய் நிற்கிறோம். காசு கொடுத்து வண்டியில் ஏறினால் வேறு இடத் துக்குப் போக இயலுமென்பது நாம் அறிந்தது. வான விமானத்தில் ஏறினால் நெடுந்தூரத்தில் உள்ள இடத்துக்கு விரைவில் போய்விடலாம். ஆனால் எந்த விதமான வாகனமும் நம்மை வேறு காலத்துக்குக் கொண்டுபோக முடியாது. கலைப் பொருள்கள் நம்மை வேறு இடத்துக்கு வேறு காலத்துக்குக் கொண்டுபோய் விடுகின்றன. உடம்பால் பிரயாணம் செய்வதில்லை என்பது உண்மை; ஆனால் உள்ளத்தால் பிரயாணம் செய்கிறோம். அந்தப் பிரயாண மார்க்கத்தைக் கலைப் பொருள் திறந்து காட்டுகிறது. நம்மை மறக்கச் செய்கிறது.

சதா வழவழ என்று பேசிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனுக்கு எப்போதும் தலைவலியைக் கொடுத்து வந்தாளாம். அந்தப் பெண் மணி ஆக்ராவிலுள்ள தாஜ்மகலுக்கு வந்தாள். ஏதா வது புதிய பொருளைக் கண்டால் அவள் பேச்சுத் தொடங்கிவிடும். அப்புறம் கடவுள்தான் அவள்வாயை அடக்கவேண்டும். அவர் அப்படி அடக்குவதாகத் தெரியவில்லை. தாஜ்மகலைப் பார்த்தாள். அந்தக் கலைப் படைப்பின் அழகிலே அவள் தன்னை மறந்துபோனாள். அவள் வாயடைத்து மௌனமாகி நின்றாள். அவளைப் பார்த்து, அவளுடன் வந்த ஒருவர், இறந்தவர் பிழைத்து விட்டால் எப்படிப் பிரமிப்பாரோ, அப்படிப் பிரமித்தார். உடனே அந்த அம்மாளின் கணவருக்குத் தந்தியடித்தாராம். "உங்கள் மனைவி மௌனமாகி விட்டாள்" என்றுதான்.

கலையிலே தன்னை இழப்பதற்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் தேவை இல்லை. சிற்பம், சித்திரம், இசை, கவிதை எல்லாமே நுட்பமான கலைகளின் வகை. எல்லாம் நம்மை வேறு உலகத்துக்கு அழைத் துச் சென்று நம்மையே மறக்கச் செய்கின்றன.

பழைய சங்க காலத்து நூல் ஒன்றில் ஒரு செய்தி வருகிறது. இசையிலே புலமையுடைய பாணர்கள் நாடெங்கும் சென்று ரசிகர்களிடமும் செல்வர்களிடமும் தங்கள் இசைத்திறமையைக் காட்டிப் பரிசு பெறுவார்கள். இன்னிசை யாழை வாசித்து மக்களை மகிழ்விப்பார்கள்.

அவர்கள் ஊர் ஊராகப் போய்கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு வள்ளலைக் காண்பதற்காகப் போகும்போது வழியிலே ஒரு பாலை நிலம் இருக்கிறது பயிர் பச்சை ஒன்றும் இல்லாமல் எங்கே பார்த்தாலும் வெறிச்சோடிக் கிடக்கும் இடம் அது. அங்கே சிலர் வசிக்கிறர்கள். அவர்கள் எப்படி ஜீவனம் செய்வது? வழிப் பிரயாணிகளைக் கொள்ளை அடித்து, அதனால் கிடைத்ததைக்கொண்டு பிழைத்து வருகிறார்கள். இந்த வழிப்பறிக்காரர்களை 'ஆறலை கள்வர்' என்று சொல்வார்கள்.

மேலே சொன்ன பாணர்கள் நாலைந்து பேராகச் சேர்ந்து பாலை நிலத்தின் வழியே வருகிறார்கள். அவர்களுடன் பாட்டுப் பாடும் பெண்மணிகளும் வருகிறார்கள் வெப்பமான அந்தப் பிரதேசத்தில் நடந்து வருகிறார்கள். நெடுந்தூரத்தில் அவர்கள் வரும்போதே பேச்சரவம் கேட்கிறது. அது கேட்ட ஆறலை கள்வர்கள், " இன்று நமக்குப் பெரிய வேட்டை கிடைக்கப்போகிறது " என்று மகிழ்ச்சி அடைகிறார்கள் பாணர்கள் நெருங்கி வருகிறார்கள். அருகில் வந்தவுடன் கள்வர்கள் திடீரென்று அவர்களை மடக்கிக் கையில் இருப்பதைக் கீழே வைக்கச் சொல்லுகிறார்கள்.

பெண்கள் நடுங்குகிறார்கள். பாணர்களில் சிலர், "எங்களிடத்தில் ஒன்றும் இல்லை ஐயா! நாங்கள் பாட்டுப் பாடிப் பிச்சை எடுக்கிறவர்கள்" என்று சொல்கிறார்கள்.

"பாட்டா? எப்படிப் பாடுவீர்கள்?" என்று கள்வர் பரிகாசமாகக் கேட்கிறார்கள்.

ஒரு பாணன் தன் யாழைச் சுருதி கூட்டிப் பாடத் தொடங்குகிறான். இன்ன காலத்தில் இன்ன ராகத்தைப் பாட வேண்டும் என்ற வரையறை உண்டு. பாலை நிலத் தில் எரிக்கும் வெயிலில் பாலைப் பண்ணைப் பாடத் தொடங்குகிறான் பாணன். அவன் பாடப் பாடப் பாலை வன நினைவு அந்தப் பாணனுக்கே மறந்து போகிறது. கையில் ஆயுதங்களுடன் வந்த ஆறலை கள்வர்களின் காதுவழியாக அந்தச் சங்கீதம் சென்று அவர்கள் கருத் தைக் கவர்கிறது. அவர்களும் மெல்ல மெல்லத் தங் களை மறக்கிறார்கள். அவர்கள் கையிலே வைத்திருந்த ஆயுதங்கள் தாமே நழுவிக் கீழே விழுந்துவிடுகின் றன. கள்வர்களும் இருதயம் உள்ளவர்களே அல்லவா? அவர்களிடத்தில் அன்பு மறைந்து நின் றது. மனிதப் பண்பு மங்கி மறைந்திருந்தது. இசை அவற்றை வெளிப்படுத்தியது. கொடிய இயல்பை மறந்து கேட்டார்கள். அவர்களிடத்தே இருந்த கொடிய குணத்தையும் அப்போதைக்கு நழுவும்படி செய்து விட்டது அந்தப் பாலைப் பண். பாணன் பாட்டை நிறுத்தினான். கள்வர்கள் தம் நினைவு பெற்றார்கள். பாணர்களிடம் கொள்ளையடிக்க வந்தவர்கள் அவர்கள். இப்போது இசையிலேயே மனத்தைப் பறிகொடுத்துத் தங்கள் கையில் கொஞ்ச நஞ்சம் இருந்த உணவுப் பொருள்களைக் கொடுத்து, 'ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்' என்று வழியனுப்பினார்கள். இந்தக்காட்சியை மிகச் சுருக்கமாக அந்தச் சங்கப்புலவர்சொல்கிறார்.

 

ஆறலை கள்வர் படைவிட, அருளின்

மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை

 

என்று பாடுகிறார். 'வழிப்பறிக்காரர் தம் கையிலே உள்ள ஆயுதங்களை நழுவ விடும்படியாக, அவர்களி டத்தே உள்ள அருளுக்கு மாறுபட்டதாகிய கொடுமையை மாற்றும், அநுபவிப்பதற்கு இனிய பாலைப் பண்ணைப் பாடும் யாழ்' என்று இதற்குப் பொருள்.

கலை தன்னை மறக்கச்செய்யும் என்பதை இந்தப் பாடலும் தெரிவிக்கிறது.

தன்னை மறப்பது இன்பம். தன்னை மறந்து இறைவனை நினைப்பது பேரின்பம். ஞான நெறி இதைக் காட்டுகிறது. தன்னை மறக்கும் இன்பத்தைத் தருவது கலையின் பொது இலக்கணம். எல்லா நாட்டுக்கலைக்கும் பொது இது. ஆனால் இந்திய நாட்டுக் கலையோ தன்னை மறந்து தலைவனாகிய கடவுளை நினைக்கச் செய்கிறது. ஞானியும் கலைஞனும் ஒரே காரியத்தைச் செய்கிறார்கள். ஞானி தன்னை மறந்து கடவுளை நினைந்து ஒன்றுகிறான். கலைஞன் ஒருபடி மேலே போகிறான். தன்னை மறந்து கடவுளோடு தான் ஒன்றுவதை யன்றி மற்றவர்களையும் தம்மை மறந்து இறைவனோடு ஒன்றச் செய்துவிடுகிறான். இந்த நாட்டுச் சிற்பிகள் ஞானியர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே. ஞானசம்பந்தர் முதலியவர்களும் ஆழ்வார்களும் கவிக் கலைஞர்கள்; அதோடு ஞானிகளாகவும் விளங்கினார்கள்.

இந்த நாட்டுக் கலைகள் யாவும் கடவுளைச் சார்ந்தே விளங்குகின்றன. சிற்பமானாலும் ஓவியமானாலும் இசையானாலும் கவிதையானாலும் கடவுளைச் சுற்றியே படர்கின்றன.

இந்தக்கலையின் தத்துவம் விளங்கினவர்களுக்கு கோயிலையும், விக்கிரகங்களையும், தேவாரத்தையும், திவ்விய பிரபந்தத்தையும், சித்தர் பாடலையும் நன்றாக அநுபவிக்க முடியும்; தம்மை மறந்து இறைவன் உணர்வில் ஒன்ற முடியும்.

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)