வாத்தியார்
ஐயா

கி.வா.ஜகந்நாதன் 
 

"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார்" என்ற பழமொழி இக்காலத்தில் எங்கும் வழங்குகிறது. இந்தப் பழமொழி ஏதோ நடுவில் வந்த புதுமொழி என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் நம்முடைய தேசத்தில் கோவில் பூசகர்களையும் உபாத் தியாயர்களையும் இழிவாக நினைக்கும் வழக்கம் பழங் காலத்தில் இல்லை. கோவில் ஒவ்வோர் ஊருக்கும் அவசியம் என்று பழந்தமிழர்கள் நினைத்தார்கள்.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஒரு பழமொழி.

"திருக்கோயில் இல்லாத திருவில் ஊர்" என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார். கோயில் இல்லாத ஊரில் திருமகளின் விலாசம் இராதாம். அதை மூதேவி பிடித்த ஊர் என்றே சொல்ல வேண்டுமாம்.

 

இந்த மாதிரியே வாத்தியார் இல்லாத ஊரும்

பிரயோசனம் அற்றது என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

கணக்காயர் இல்லாத ஊரும்.......

நன்மை பயத்தல் இல

 

என்று ஒரு பழைய நூல் சொல்கிறது. உபாத்தியாயருக்கு அந்தக்காலத்தில் கணக்காயர் என்ற பெயர் வழங்கி வந்தது. கணக்கு என்பது நூலுக்குப் பெயர். அதைக் கற்பிக்கிற தலைவர் கணக்காயர். நக்கீரர் என்ற புகழ்பெற்ற சங்கப்புலவருடைய தகப்பனார் மதுரையில் வாழ்ந்த ஒரு சிறந்த உபாத்தியாயர். இப் போதும் மரியாதையாக ஒரு கிராமத்தில் உள்ள உபாத்தியாயரைப் பேர் சொல்லாமல் "வாத்தியார் ஐயா" என்று சொல்வதில்லையா? அதுபோல அவரை எல்லோரும் 'கணக்காயர்' என்ற அழைத்து வந்தார் கள். அதனால் நாளடைவில் அவர் பெயர் மறந்து போகவே 'மதுரைக் கணக்காயனார்' என்ற பெயர் நிலைத்து விட்டது. பழைய புத்தகங்களில் நக்கீரர் பேர் வரும் இடங்களிலும் எல்லாம் 'மதுரைக் கணக்காய னார் மகனார் நக்கீரனார்' என்று எழுதியிருப்பதைக் காணலாம்.

 

இந்தக் காலத்தில் வாத்தியார் ஐயா இளப்பமான பேர்வழி ஆகிவிட்டார். போதாக்குறைக்கு அவரைப் பற்றி எத்தனையோ கதைகள் கட்டி அவற்றின் மூல மாகவும் அவரைச் சேர்ந்தவர்களுக்குப் பெயர் வைத் திருக்கிறார்கள். "டானாக் கூட்டம்" என்றும், அண்ணாவி கள் என்றும் சமுதாயத்தின் ஒதுக்குப்புற வாசிகளாக அவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் அவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக் கட்டும். அவர்களே ஒருவருக்கு ஒருவர் மதிப்பு வழங்குவதில்லை. வேறு ஒரு வேலையும் கிடைக்கா விட்டால்தான் படித்தவர்கள் வாத்தியார் வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் உற்சாகம் இல்லாமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுடைய சம்பளந்தான். மற்ற உத்தியோகஸ்தர் களெல்லாம் தொப்பியும் நிஜாரும் அணிந்து கொண்டு டாக் டீக்கென்று உலவும் உலகத்தில் மூலைக்கச்சத்தை யும் அங்கவஸ்திரத்தையும் ஈசல் சிறகை விரித்துப் பறப்பதுபோலப் பறக்கவிட்டுக்கொண்டு செல்லும் வாத்தியார் ஐயா நிலை பரிதாபகரமானதுதான்.

 

பழைய காலத்தில் வாத்தியார் ஐயா இப்படி இருக்கவில்லை. அவர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் கூட்டத்துக்குத் தலைவர்; எதிர்கால சந்ததி களுக்கு அவரே கடவுள்.

 

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்" என்று அதிவீர ராம பாண்டிய மன்னர் சொல்லுகிறார். இறைவன் போன்றவன் என்று சொல்லாமல் இறை வனே ஆவான் என்று சொல்லிவிட்டார். அகக் கண்ணைத் திறந்து வைக்கும் தெய்வம் அவன்தானே? தெய்வம் என்று சாமான்ய மனிதனைக் கண்டால் நமக்கு மதிக்கத் தோன்றுகிறதா? ஊரார் எல்லோரும் ஒருமனிதனை அப்படி மதிக்க வேண்டுமானால் அதற்கு ஏற்ற காரணம் இருக்கவேண்டும். அந்த மனித னிடத்தில் அதற்கு ஏற்ற குணங்களும் ஆற்றலும் இருந்தால்தான் ஜனங்களுடைய மதிப்பு நிரந்தரமாக இருக்கும். இல்லாவிட்டால் வெறும் சம்பிரதாயத் துக்காக உபாத்தியாயருக்குப் பூசை செய்யும் நிலை தான் வரும்.

 

வாத்தியார் ஐயா எப்படி இருந்தார்? எப்படி இருந்தால் வாத்தியார் ஐயா என்ற பட்டம் கொடுக் கலாம்? அவர் குணம், பழக்கவழக்கங்கள், கல்வி, சொல்லிக் கொடுக்கும் முறை முதலியவைகளின் இயல்பு என்ன?- இந்த விஷயங்களைத் தமிழர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். அநேகமாக இலக்கண நூல் ஒவ்வொன்றிலும் ஆரம்பத்தில் இந்த விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இலக்கணத்தில் பொதுப் பாயிரம் என்று ஒரு பகுதி வருகிறது. அங்கே புத்தகம் எப்படி இருக்க வேண்டும், அதைச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும், அவர் எப்படிப் பாடம் சொல்ல வேண்டும் மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்ற விஷயங்கள் வருகின்றன. இவற் றைப் பற்றிய விரிவான இலக்கணங்களைச் சொல்லும் சூத்திரங்களைப் பழைய நூல்களிலிருந்து உரையாசிரி யர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். அவற்றைக் கொண்டு,வாத்தியார் ஐயாவைப்பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களை இனிப் பார்க்கலாம்.

 

வாத்தியார் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும். நற்குண நற்செய்கைகள் உடையவராக இருந்தால்தான் பொது ஜனங்களுடைய மதிப்புக்குப் பாத்திரராக முடியும். "நான் சொல்வதை மாத்திரம் கேள் நான் செய்வதை கவனிக்காதே" என்றால் வாத்தியார் ஐயாவை ஒரு வாரத்தில் ஊரார் அவமா னப்படுத்தி அனுப்பிவிடுவார்கள். நல்ல ஒழுக்கமும் நல்ல பழக்கங்களும் இருப்பதற்கு, அவர் நல்ல மனிதர் களுடைய குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்; இல்லா விட்டால் நல்ல குருவினுடைய பழக்கத்தை உடையவராக இருக்க வேண்டும். இவ்வளவும் சேர்ந்த ஒரு தகுதியை 'குலன்' என்று ஆசிரியர்கள் குறிக்கிறார்கள்.

 

ஆசிரியரைத் தெய்வமாகக் கருதவேண்டுமென்று சொன்னார்களே, அதற்கு ஏற்றவாறு ஆசிரியருக்கும் தெய்வத்தின் குணம் இருக்கவேண்டும் அல்லவா? தெய்வத்துக்கு என்ன என்னவோ விசேஷ குணங்கள் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பக்தர்களுக்கு அவற்றைப்பற்றிக் கவலை இல்லை. கடவுள் நம்முடைய பிரார்த்தனைக்கு அருள் புரிய வேண்டுமென்ற ஒன்றுதான் அவர்களுடைய நோக்கம். அருள் என்னும் குணம் இருப்பதனால் தான் தெய்வத்தை நாம் கொண்டாடுகிறோம்; சிற்று யிர்க்கு இரங்கும் பேரருளாளன் என்று பாராட்டு கிறோம். குருவுக்குத் தெய்வத்தைப்போன்ற மதிப்பு வேண்டுமானால் அவரிடமும் அருள் இருக்க வேண்டும். பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற நினைவு அருளிலிருந்து பிறப்பதே.அறியாமை நிரம்பிய உலகத்தில் உள்ளவர்கள் பால் இரக்கம் பூண்டு, அறிவு ஊட்டும் சிறந்த தொண்டை ஆசிரியர் மேற் கொள்ளவேண்டும். அறியாமையால் செய்யும் பிழை களைப் பொறுக்கும் இயல்புக்கும் அவ்வருளே காரணமாக நிற்கும்.

 

குலனும் அருளும் ஒருங்கு இயைந்த குருவுக்குத் தெய்வ பக்தியும் அவசியமானது. கல்வியின் பயனே கடவுளை அறிதல் என்ற கொள்கையில் ஊறிய இந் நாட்டில் கடவுளை நினைத்தே கல்வியைத் தொடங்கு கிறார்கள். மாணாக்கர்களுக்குக் கல்வி புகட்டி அவர் களுடைய வாழ்நாள் நற்பயன் பெறும்படி செய்யும், வழியை உபதேசிக்கும் ஆசிரியர் தெய்வ நம்பிக்கை உடையவராக இருந்தால்தான் மாணாக்கர்களிடத்தி லும் அது வளரும்.

குரு பெருந்தன்மை உடையவராக இருக்க வேண்டும். சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி வீண் சச்சரவுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. வாழ்க்கை முழுவதும் பயன்படும் சாதனைகளை மாணாக்கர்களுக்குப் பயிற்றும் மாபெருந் தொண்டில் ஈடுபட்டவர் உபாத்தி யாயர். அவர் சில்லறை விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினால் அவருடைய குறிக்கோள் சிதறிவிடும்; திண்மை கலங்கும். இந்தப் பெருந்தன்மையை "மேன்மை" என்று இலக்கணக்காரர்கள் குறிக்கிறார்கள்.

குலமும், அருளும், தெய்வங் கொள்கையும், மேன்மையும் ஆகிய உயர் குணங்கள் ஆசிரியர்பால் இருக்கவேண்டுமென்று சொல்வதன் மூலமாக இலக் கண நூல்கள், அவர் மனிதருட் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதையே வற்புறுத்துகின்றன.

வாத்தியார் ஐயா மனிதருட் சிறந்தவராக இருக் கிறார். போதுமா? அவர் நன்றாகப் படித்திருக்க வேண்டும். பல நூல்களை வெறுமனே கணக்குப் பண்ணிப் படித்திருந்தால் மட்டும் போதாது. படித்த தைத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். தெளிவு இல்லாமல் அவருக்கே சந்தேகம் இருந்தால் அவரிடம் படிக்கும் மாணாக்கர்கள் உருப்படுவது எப்படி? ஆகவே அவர் கலைகள் பயின்றிருக்க வேண்டும். பரீக்ஷை கொடுத்துப் பட்டம் பெற்றிருந்தால் இந்தக் காலத்துக்குப் போதுமானது. அந்தக் காலத்தில் இதெல்லாம் பலிக்காது; படித்ததைச் சந்தேக விபரீதமின்றிப் படித்திருக்க வேண்டும்.

நன்றாகப் படித்தவரெல்லாம் வாத்தியாராக முடியுமா? எவ்வளவோ படித்தவர்களைப் பார்க்கிறோம். புத்தகத்தில் பிள்ளையார்சுழி முதல் முற்றிற்று வரையில் படித்துத் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லுமையா என்றால் ஒரே குழப்பம் வந்துவிடும். முன்னுக்குப்பின் பொருத்த மில்லாமல் உழப்புவார். சொல்கிற விஷயம் இன்ன தென்றே விளங்காது. கொஞ்சம் விளங்கினாலும் அழுத்தமாகப் பதியாது. உலக அநுபவமும் கல்விப்

பழக்கமும் உடைய நமக்கே புரியாதபடி இருந்தால் குழந்தைகளுக்கு அவர் எதைச் சொல்லித் தரப் போகிறார்? படிப்பு வேறு; படித்ததைக் கற்றுத் தரும் சக்தி வேறு. இரண்டும் யாரிடம் பொருந்தியிருக் கின்றனவோ அவரே உபாத்தியாயர் வேலைக்குத் தகுதியானவர்.

கலைபயில் தெளிவு வாத்தியாருக்கு வேண்டுமென்று நிறுத்திவிடாமல் மேலே "கட்டுரை வன்மை" வேண்டு மென்று சொல்கிறது இலக்கணம். ஒரு விஷயத்தை, கேட்பவர் உள்ளத்தில் பதியும்படி சொல்லும் திறமை தான் அது. கட்டுரை என்பது ஒரு கலை. அதில் நல்ல வன்மை இருக்கவேண்டும். சும்மா 'என்னைத் தெய்வம் என்று கொண்டாடுங்கள்' என்று வாத்தியார் ஐயா சொன்னால் ஜனங்கள் கொண்டாடி விடுவார்களா, என்ன? உரைகல்லில் உரைத்துப் பார்த்து, 'ஐயா நல்ல மனுஷர்; நன்றாகப் படித்திருக்கிறார்; சாமர்த்தியமாகச் சொல்லித் தருகிறார்' என்று தேர்ந்தால்தான் கிராமத்து ஜனங்கள், "வாத்தியாரையா, நமஸ்காரம்" என்று கும்பிடு போடுவார்கள். இல்லாவிட்டால், "அழுகற்பழம் அண்ணவிக்கு" என்ற பழமொழியைச் சொல்லிக் குப்பைத் தொட்டியில் போடும் பதார்த்தத் தைத்தான் நிவேதனம் செய்வார்கள்.

இவ்வளவும் சொன்னது போதாதென்று வாத்தி யாரை வடிகட்டிப் பார்க்கும் இலக்கணக்காரர்கள், வாத்தியார் இன்ன இன்ன பொருளைப்போல இருக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறார்கள். மிகவும் விரிவாகவும் நுணுக்கமாகவும் சொல்ல வேண் டியதைச் சுருக்கமாகச் சொல்வதற்கு, உபமானம் ஒரு நல்ல வழி. உபமானத்தை மனம்போன மட்டும் விரித்துப் பார்த்துக் கொள்ளலாம். வேதாந்தத்தில் வரும் உபமானங்களுக்குக் கணக்கு வழக்கு உண்டா? இந்தத் தந்திரத்தை வேத காலத்து ரிஷிகளும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; ஏசு கிறிஸ்துவும் தெரிந்திருக்கிறார்; ராம கிருஷ்ண பரம ஹம்ஸரோ உபமானக் கதைகள் சொல்லி, விளங்காதவற்றை யெல்லாம் விளங்க வைத்து விடுகிறார்.

வாத்தியார் ஐயாவை எந்த எந்தப் பொருளுக்குச் சமமாகச் சொல்லுகிறார்கள் என்பதை இனிமேல் கவனிப்போம்.

"வாத்தியார் ஐயா பூமி தேவியைப் போல் இருக்க வேண்டும்; மலையைப் போல் இருக்க வேண்டும்; தரா சைப் போலவும் மலரைப் போலவும் இருக்க வேண்டும்" என்று பழைய தமிழர்கள் சொல்லியிருக் கிறார்கள்.

பூமி தேவியை உபமானம் சொல்லும்போது நமக்கு ஒரு விஷயம் நிச்சயமாக ஞாபகத்துக்கு வந்து விடுகிறது. பொறுமைக்குப் பூமி தேவியைச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருக்கிறோமே!

படிக்கும் பிள்ளைகள் அறிவு பெறுவதற்காக ஆசிரியரை அணுகுகிறார்கள். பிழை செய்வது அவர் களுக்கு இயல்பு. அதை மாற்றித் திருத்தமாக இருப்பதையே இயல்பாகப் பண்ணும் பொறுப்பைத்தான் வாத்தியார் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆகையால் மாணாக்கர்களிடம் சிடு சிடுவென்று விழுந்தால் அவர்கள் 'வாத்தியார் என்றால் காட்டு மிருகம்' என்று நினைத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் வாத்தியாருடைய பேரைப் பூச்சாண்டியாகச் சொல்லி பயமுறுத்தி வந்த காலமும் உண்டென்பது நமக்குத் தெரியுமே! பயப்படுவதற்குரிய பொருளாக ஆசிரியர் இருக்கக்கூடாது.

நிலத்தைப் பொறுமைக்கு உபமானமாகச் சொல் வதோடு பெருமைக்கும் திண்மைக்குங்கூட உவமை யாக எடுத்தாளுவார்கள். " நிலத்தினும் பெரிதே" என்று பெருமைக்கு அதைச் சொல்வதை இலக்கியங்களிலே காணலாம். ஆசிரியர் பெருமையில் நிலத்தைப் போல இருக்க வேண்டும். பெருமை என்பது அவருடைய குணப் பெருமையையும் கல்விப் பெருமை யையும் குறிக்கும்.

அடுத்தபடி நிலத்திற்குரிய சிறப்பியல்பு திண்மை. "மண்கடின மாய்த்தரிக்கும்" என்று சாஸ்திரம் சொல்கின்றது.மனத்திண்மை ஆசிரியரிடம் இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் சந்தேகமின்றி உறுதியாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எத்தகைய கேள்வி வந்தாலும் மாறாத திண்மை இருந் தால்தான் எக்காலத்தும் மாணாக்கர்களுடைய அறிவை வளர்க்க உபயோகமாக இருப்பார்.

நிலமானது பருவத்துக்கு ஏற்றபடியும் வேளாளர் கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழுது எருவிட்டுச் சிரமப் பட்டுப் பயிரிடுகிறார்களோ அதற்கு ஏற்றபடியும் பயன் கொடுக்கும். கையைக்கட்டிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிலம் வளம் சுரக்காது. நினைத்த பொழுதெல்லாம் விளைச்சலையும் தராது. பயிர் விளையப் பருவம் உண்டு; முயற்சியும் அவசியம்.

வாத்தியார் ஐயா நிலம்; மாணாக்கன் உழவன். மாணாக்கனுடைய பருவத்துக்கு ஏற்றபடி வாத்தியார் ஐயா சொல்லித்தரவேண்டும். தமக்குத் தெரிந்த சமாசாரங்களை யெல்லாம் பையனுடைய மூளையில் ஏற்றிவிடவேண்டுமென்ற பெருங்கருணை வியர்த்த மாகிவிடும். யார் யார் எந்த எந்தப் படியில் இருக்கி றார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு அவர்க ளுடைய பக்குவத்துக்கு ஏற்ற விஷயங்களைக் கற்பிக்க வேண்டும்.எழுவாய், பயனிலை,செயப்படு பொருள் இன்னவென்று தெரியாத மாணாக்கனுக்குத் தொல் காப்பியச் சூத்திரங்களைச் சொல்லித்தந்தால் அவனுக் குத் தலைவலி உண்டாவது தான் லாபம். வாத்தியார் ஐயா தம்முடைய சக்தியை வீணாகச் செலவிடுகிறவரா கிறார். "என்னடா இது, பேரிழவாக இருக்கிறதே!' எந்று மாணாக்கன் தொல்காப்பியச் சூத்திரத்தையும் தொல்காப்பியரையும் சேர்த்துத் திட்ட ஆரம்பிப்பான். ஆசிரியருக்குத் தொல்காப்பியரிடத்தில் பக்தி இருக் கலாம்; தொல்காப்பியத்தில் நல்ல பயிற்சி இருக் கலாம்; 'பாத்திரமில்லாத இடத்தில் பிச்சை இட்ட' வாத்தியார் குற்றத்துக்காகத் தொல்காப்பியர் நிந்த னைக்கு ஆளாகிறார்.

மாணாக்கனுடைய முயற்சிக்கு ஏற்ற அளவில் போதிக்க வேண்டும். சிறு முயற்சி செய்பவனுக்குப் பெரிய பொருளைப் போதித்தால் அந்தப் பொருளி னிடத்தில் மாணாக்கனுக்குக் கௌரவ புத்தி ஏற்படாது. இலவசமாக இறைபடும் பண்டமென்று எண்ணிக் கொள்வான். 'வாத்தியாருடைய பெருங் கருணையைப் பாராட்டக் கூடாதோ?' என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் அறிவு நிரம்பின பெரியவர்கள் கடமை யல்லவா? மாணாக்கன் அவ்வளவு உயர்ந்த பண்புடைய வனாக இருந்தால் ஆசிரியனிடம் எதற்காக வருகிறான்?

எந்தத் தொழிலிலும் உலக இயல்பு தெரிந்து நடக்க வேண்டும். பொருளைச் சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும் என்று சொல்கிறோம். அறிவுச் செல் வத்தையும் சிக்கனமாகத்தானே வழங்க வேண்டும்? முயற்சி செய்யச் செய்ய வஞ்சமின்றி வாரி வழங்கினால் வாங்கிக் கொள்பவனுக்கும் மகிழ்ச்சி, கொடுப்பவனுக்கும் திருப்தி உண்டாகும். ஆகவே பருவம், முயற்சி என்பவற்றின் அளவறிந்து வாத்தியார் ஐயா தம் தொழிலை நடத்தி வரவேண்டும். இலக்கண நூல், ஆசிரியருக்குப் பூமியை உவமையாகச் சொல்லும் போது, இந்த மாதிரி இயல்புகளையே குறிக்கின்றது.

 

தெரிவரும் பெருமையும்

திண்மையும் பொறையும்

பருவம் முயற்சி

அளவிற் பயத்தலும்

மருவிய நன்னில

மாண்பா ரும்மே,

 

(பொறை - பொறுமை. பயத்தல்- பயன்படுதல். மாண்பு - இயல்பு.)

 

மலை என்ற மாத்திரத்திலே அதனுடைய உன்னதமான சிகரங்களும் பரப்பும் நம் ஞாபகத்துக்கு வரு கின்றன. மலை அளப்பதற்கு அரியது.எத்தனையோ உபயோகமான பொருள்கள் அதன்கண் விளைகின் றன. அவற்றிற்கும் ஓர் எல்லை இல்லை. பெரிய மனிதர்களை மலைக்கு ஒப்பிட்டுப்பேசுவது நம்மவர் வழக்கம். மலையைப் போன்ற சரீரம் உடையவராக இருப்பவரையா அப்படிச் சொல்கிறார்கள்? இல்லை, இல்லை. நிலப்பரப்பில் மேடும் பள்ளமும்,ஆறும் குளமும், வயலும் பொழிலும் இருந்தாலும் மலைதான் எல்லோருடைய கண்களிலும் முதலில் படுகிறது. அதுபோல ஒரு நாட்டிலோ, ஓர் ஊரிலோ யார் வந்தாலும் அவர்கள் காதில் யாருடைய புகழ் முதலில் விழுகிறதோ அவரே பெரிய மனிதர். அந்த ஊருக்கு வராமலே அந்தப் பெரிய மனிதருடைய புகழைப் பலர் அறிந்துகொண் டிருப்பார்கள். வாத்தியார் பெரிய மனிதராக இருக்கவேண்டும். 'அளக்கலாகா அளவு' உடைய மலையைப்போல விளங்க வேண்டும்.

மலையில் அளக்கலாகாத பொருள்கள் விளைகின் றன. ஆசிரியரிடத்தில் உள்ள பொருள்களும் அப் படியே இருக்க வேண்டும். 'இவரிடம் உள்ள சரக்கு இவ்வளவுதான்' என்று அறுதியிடும் நினைவு யாருக்கும் வரக்கூடாது. 'எந்த விஷயத்தைக் கேட்டாலும் இவர் சொல்கிறாரே. இவருக்கு இன்னது தெரியும், இன்னது தெரியாது என்ற வரையறையே இல்லை போலும்!' என்று மக்கள் வியக்கும்படி ஆசிரியர் இருந்தால் அவரை மலை என்றும் சொல்லலாம்; கற்பகமென்றும் சொல்லலாம்.

மலைக்கு அசலம் என்பது வடமொழியில் வழங்கும் பெயர்களில் ஒன்று. 'அசையாதது' என்பது அதன் பொருள். வாத்தியார் சுக துக்கங்களுக்கும், ஐயந்திரிபுகளுக்கும் எதிர் நின்று அசையாமல் இருக்க வேண்டும். கல்வியென்பது உலகத்தில் பணம் படைக் கவும், புகழ் படைக்கவும் மாத்திரம் ஏற்பட்டதன்று. உயிருக்கு உறுதி பயக்கும் முயற்சியில் தலைப்படவும், இறைவனை உணரவும், இறுதியில்லாத இன்ப வீட்டை அடையவும் அது சாதனமாக உதவுவது. ஆகவே, கல்வியென்பது ஒருவகையான சாதனை. மனத்தைப் பண்படுத்தும் சாதனை என்றே சொல்ல வேண்டும். "வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்" என்று ஒளவைப் பாட்டி சொல்கிறாள். அந்தப் பழக்கம் முறுக முறுக மனிதனுக்குத் தெளிவும் திருப்தியும் உண்டாகும். நெஞ்சார நல்ல நெறியில் நடக்கும் திறமை ஏற்படும்.

"நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமை யால், கல்வி அழகே அழகு" என்று நாலடியாரில் வரு கிறது. கல்வியினால் உள்ளத்தைப் பண்படுத்தியவன் பிறருடைய மதிப்பினால்தான் நல்லவனென்ற பெயரை அடையவேண்டும் என்பது இல்லை. அவனே தன்னை நடு நிலையில் நின்று சோதித்துக் கொள்வான். அவனுடைய பயிற்சி மிகுதியாக ஆக, 'நாம் நல்ல மனிதர்களோடு சேரத் தகுதியுடையோம்" என்ற நம் பிக்கை உதயமாகும்.

இத்தகைய உள்ளப் பயிற்சியையே கல்வி முறை யாக முன்னோர் போற்றினார்கள். இதை மாணாக்கர் களுக்குக் கற்பித்துத் தரும் ஆசிரியர் நடுங்கும் உள்ளத்தோடு இருக்கலாமா? அசையாத உறுதியும் நிலையான இயல்பும் அவர் உள்ளத்தில் நிலவ வேண்டும் அல்லவா? ஆதலால் ஆசிரியர் அசலத் தைப் போலத் 'துளக்க லாகா நிலை' யை உடையவ ராவதும் அவசியம்.

ஆசிரியர் பிறருடைய கவனத்தை ஈர்க்கும் தோற் றம் படைத்தவராக இருக்க வேண்டும். தோற்றம் என்பது உடலின் தோற்றம் அன்று; அவருடைய இயல்பு. வார்த்தைகள் எல்லாம் சேர்ந்த ஓர் உருவம் (Personality). அகத்திய முனிவர் உருவத்தால் சிறியவர்; ஆனாலும் அவருடைய தோற்றம் பெரிது. எவ்வளவு மக்கள் கூடியிருந்தாலும் அவரைத் தனியே கண்டுபிடித்து விடலாம். உருவச் சிறுமையாலன்று. அந்தப் பெரிய கூட்டத்தில் அவரைச் சூழ மக்கள் பணிவோடு நிற்பார்கள். எல்லோருடைய கண்ணும் கருத்தும் அவரிடமே செல்லும்.

ஆசிரியர் இத்தகைய தோற்றம் இருக்க வேண்டும். வேகமாகக் காற்று அடிக்கிறது. மேகங் கள் கலைந்து ஓடுகின்றன. உன்னதமான மலை ஒன்று இருந்தால் மேகங்கள் தடைப்பட்டு நின்று விடுகின் றன. மலையின் தோற்றம் எல்லாப் பொருள்களையும் தன்னிடத்தில் நிற்கும்படி செய்கிறது. வெகு வேக மாக ஒரு காரியத்தைச் செய்ய ஒரு மனிதன் ஓடுகிறான்.

இடையே வாத்தியார் ஐயாவைச் சந்திக்க நேர்ந்தால் அவன் வேகம் குறைந்து சட்டென்று நின்று ஒரு கும்பிடு போடுகிறான். அவர் பேச ஆரம்பித்தால் பொறுமையோடு கேட்கிறான். சில சமயங்களில் அவருடைய நல்லுரைகளில் ஈடுபட்டுத் தன் வேலை யையே மறந்து போனாலும் போய்விடுவான். இப்படி ஒரு தோற்றம் ஆசிரியருக்கு இருக்க வேண்டுமென்றால் அவரை ஊராரெல்லாம் பாராட்டித் தொழுவதில் ஆச்சரியம் என்ன?

பஞ்சம் வந்நு விட்டது; அப்போது மற்ற இடங் களிலெல்லாம் விளைவு குறைந்து விடும். மலையுள்ள இடங்களில் பஞ்சத்தின் கொடுமை உடனே தாக்காது. மரங்களும் அருவிகளும் நிரம்பிய மலை பஞ்ச காலத்தில் மக்களுக்கு ஒரு சேம நிதிபோலப் பயன்படும். ஆசிரி யர் 'வறப்பினும் வளந்தரும் வண்மை' உடையவராக இருக்க வேண்டுமென்று இலக்கணம் சொல்லுகிறது. பொருட் பஞ்சம் ஏற்பட்டாலும் அறிவுப் பஞ்சம் வராமல் பாதுகாப்பது அவர் கடமை. இவ்வளவு விஷயங்களையும் சேர்த்து இலக்கணம் ஒரு சூத்திரத் தில் சொல்கிறது.

 

அளக்கல் ஆகா அளவும் பொருளும்

துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்

வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே.

 

(துளக்கல் - அசைத்தல். வறப்பினும்- பஞ்சம் வந்தாலும்.)

 

கலைபயின்ற தெளிவுடைய ஆசிரியர் துலாக் கோலைப்போல ஐயமின்றிப் பொருளின் மதிப்பைத் தெரிவிக்க வேண்டும். ஒரு பண்டத்தை நிறுக்கிறோம்.

தராசு முள் நடுநிலையில் நின்றால்தான் பொருளின் உண்மைக் கனம் தெளிவாகும். ஒரு பொருளையும் நிறுக்காமல் தராசை முதலில் தூக்கிப் பார்த்து, முள் நடுநிலையில் நிற்கிறதா என்று தெரிந்து கொண்ட பிறகே நிறுப்பது வழக்கம். முள் ஒரு பக்கமாகச் சாய்ந்தால் நியாயமான வியாபாரி அதைக் கையால் கூடத் தொடமாட்டான். ஆசிரியர் நூற்பொருளை நிறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும். தம்முடைய விருப்பு வெறுப்பினால் நூலில் உள்ள கருத்தைக் கூட்டியோ குறைத்தோ சொல்லக் கூடாது. சாதி, சமயம். கொள்கைகளால் வேறுபட்ட புலவர் ஒருவர் இயற்றிய நூல் ஒன்றைப் பாடம் சொல்லும்போது, தம் கொள்கைக்கு மாறுபட்டது என்ற காரணத்தால் அதைக் குறைத்துக் கூறக்கூடாது. நூல்களைத் தாம் ஆராய்ந்தாலும், கற்பித்தாலும் நடுநிலையில் நின்று, நூற்பொருளில் தம் கருத்தை நுழைக்காமல் இருப்ப வரே சிறந்த ஆசிரியர்.

 

ஐயம் தீரப் பொருளை உணர்ந்தாலும்

மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே

 

என்று இலக்கணம் கூறுகிறது.

 

சமூகமாகிய மரத்தில் வாத்தியார் ஐயா மலரைப் போல விளங்குகிறார். மலர் அழகிய பொருள்; மங்கலமான பொருள். வாத்தியார் ஐயா இருந்து விட்டால் சமுதாயம் சோபையை அடைகிறது.சமுதா யத்துக்கு இன்றியமையாத பொருள் அவர். ஊரில் எந் தப் பொதுக் காரியமானாலும் வாத்தியார் ஐயாவுக்கு முதல் அழைப்பு. யாராக இருந்தாலும் அவரை வர வேற்று உபசரிப்பார்கள். அவர் யாவருக்கும் இனியவர். இதமான வார்த்தைகளைச் சொல்பவர்; மென்மயான இயல்புடையவர். 'மலர் மங்கலமானது; நல்ல காரியங் களுக்கு இன்றியமையாதது; யாவரும் மகிழ்ந்து கொள் வதற்குரியது; மெல்லியது' என்று புகழ்கிறோம். அந்தப் புகழை அப்படியே வாத்தியார் ஐயாவுக்கும் சொல்லும்படி அவர் இருக்க வேண்டுமாம்.

மலருக்குப் போது என்று ஒரு பெயர் உண்டு. தக்க பொழுதில் தவறாமல் மலர்வதனால் அதற்கு அப்பெயர் வந்ததாம். இயற்கையிலே அமைந்த கடிகாரம் அது. ஆசிரியர் அதைப்போலக் காலந் தவறாமல் மாணாக்கர்களுக்கு முகமலர்ச்சியோடு பாடம் சொல்லித் தரவேண்டும். காலக் கணக்கைக் கவனிப்பதில்லை என்ற குறைபாடு நம்மவர்களுக்கு இருப்பது உலகம் அறிந்தது. வாத்தியார் ஐயா அந்த அபவாதத்துக்கு உட்படக்கூடாது.பொழுதறிந்து கடமையைப் புரியும் இயல்பு அவரிடம் இருக்கவேண்டும்.

 

மங்கலம் ஆகி இன்றியமையாது

யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்

பொழுதின் முகமலர் வுடையது பூவே.

 

என்று மலரின் இயல்பைச் சொல்லும் வாயிலாக வாத்தியார் ஐயாவின் இயல்பையும் குறிப்பாக இலக்கண ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வளவு உபமானங்களால் உபாத்தியாயருடைய தகுதியை அளவிட்டு விட்டு, "உலகியல் அறிவும் இவைபோன்றவேறு சிறந்த குணங்களூம் உடையவன் ஆசிரியன்" என்று தமிழிலக்கணக்காரர் சொல்லுகிறார். எவ்வளவுதான் படித்தாலும், நல்ல குணம் உடையவராக இருந்தாலும் உலகம் தெரியா விட்டால் என்ன பிரயோசனம்? காலத்துக்கு ஏற்றபடி போதனா முறைகள் மாறும்;உதாரணங்கள் மாறும்: கொள்கைகள் மாறும்; இலக்கணமே மாறும். இவற்றை யெல்லாம் உணர்வதற்குப் பழைய நூலறிவு மாத்திரம் போதாது. உலகமே ஒரு பெரிய புத்தகம். அதை உணராவிட்டால் வாத்தியார் படித்த புத்தகங்கள் அவ்வளவும் பயன்படாமற் போய்விடும். ஆகையால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டுக் கடைசியில் உலகிய லறிவு வேண்டுமென்று விதிக்கிறார்கள்.

வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுருக்கமாக ஞாபகப்படுத்திக் கொள்ள இதோ இலக்கணச் சூத்திரம் இருக்கிறது.

 

குலன், அருள், தெய்வம், கொள்கை, மேன்மை,

கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை-

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்,

உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்

அமைபவன் நூல்உரை ஆசிரி யன்னே.

 

[நிறைகோல்-தராசு,மாட்சி-பெருமை. இனைய- இத்தகையவை.]

 

 

வாத்தியார் ஐயா எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுவதோடு நில்லாமல் இலக்கணம் எழுதினவர்கள்,"எப்படி இருக்கக்கூடாது?" என் றும் கூறுகிறார்கள். அப்படிச் சொல்லும்பொழுதும் கெட்ட வாத்தியாரின் குணங்களையும் தொழில்களையும் சொல்லிவிட்டு, உபமானங்களின் மூலமாகவும் பொல் லாத வாத்தியார்கள் இப்படி இருப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

நல்ல குணங்கள் இல்லாமல் இருந்தால் பிள்ளை களுக்கு அவரிடத்தில் வேலை இல்லை; வெறும் படிப்பை மாத்திரம் கற்றுக் கொள்வது என்பது பழைய தமிழ் நாட்டில் இல்லை. நடை, உடை , பாவனை எல்லா வற்றிலும் நல்லவைகளைப் பிள்ளைகள் ஆசிரியரிடத்தில் கற்றுக்கொள்வார்கள். தாம் கற்ற கல்வியை ரூபா, அணா, பைசாவாக மாற்றுவது அக்காலத்தவர்கள் நோக்கம் அல்ல.கல்வியை வாழ்க்கையாக மாற்று வார்கள். கற்றவற்றைச் சோதனையிடுவதையே வாழ்க்கையாக எண்ணுவார்கள்.வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வியைச் சிறந்த குணங்களைப் பெற்ற ஆசிரியர்களிடம் கற்கவேண்டுமே யொழியச் சாதாரண மனிதர்களிடம் கற்பதில் சிறப்பு ஒன்றும் இல்லை.

சிறந்த குணங்கள் இல்லாவிட்டாலும், குற்ற மில்லையென்று வாத்தியார் ஐயா ஒருவரிடம் குழந்தை களை ஒப்பிக்கிறோம்.'லட்சிய வாழ்க்கைக்குரிய வழியை கற்றுத் தரவேண்டாம்; சாமான்ய வாழ்க்கைக் குப் போதியவற்றைக் கற்பித்தால் போதும்' என்று எண்ணுகிறோம். அந்த வாத்தியார் கெட்ட குணம் உடையவராக இருந்தால் பையனுக்கு முதலில் அது தானே படியும்? இளம் பருவத்தில் நல்லது ஏறா விட்டாலும் கெட்ட பழக்கங்கள் மிக விரைவாக ஏறி விடும். ஆகையால், 'வாத்தியார் ஐயா ஒரு மகாத்மா வாக இல்லாமற் போனாலும் குற்றம் இல்லை;போக்கிரி யாக இருக்கக்கூடாது'.என்று நாம் நினைக்கிறோம். அதையே இலக்கணக்காரர்களும் சொல்கிறார்கள்.

வாத்தியார் மற்றவர்களுடைய நலத்தைக் கண்டு பொறாமை கொள்ளும் பேர்வழியாக இருக்கக்கூடாது. பையனே ஆசிரியரைவிடச் சில சமயங்களில் அறிவுத் திறன் உடையவனாக இருக்கும்படி நேர்ந்துவிட்டால் பொறாமைக் குணமுள்ள ஆசிரியர் சும்மா இருப்பாரா? ஆபத்து வந்துவிடும். அதுமட்டும் அல்ல. உலகத்தில் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எல்லோ ரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. ஏற்றத் தாழ்வு இருப்பது இயல்பு. தம்மைவிடக் கல்வி யறிவிலோ, பொருள் நிலையிலோ உயர்வையுடைய ஆசிரியர் ஒருவர் பக்கத்தில் வாழ்பவராகவோ, அடுத்த வீட்டுப் பையனுக்குச் சொல்லிக் கொடுப்பவராகவோ இருந்து விட்டால் பொறாமைக்கார வாத்தியார் ஐயா என்ன செய்வார், தெரியுமா? தினந்தோறும் அவரைப் பற்றிக் குறை கூறுவார்; பாடம் பாதி நேரம் நடந் தால், 'அவனுக்கு என்ன தெரியும்? சுத்த முட்டாள். அவனிடம் வாசிக்கிறவன் உருப்பட்டாற் போலத் தான்!' என்ற பாடம் பாதி நேரத்தைக் கபளீகரித்து விடும். பையன் படிப்புக் கெட்டுப் போவதோடுகூட, வாத்தியார் ஐயா சொன்ன சமாசாரங்களைப் பலர் காதில் விழும்படி செய்யும் ஊக்கம் அவனுக்கு உண் டாகிவிடும். அதன் பயன் வீண் கலகமும் மனஸ் தாபமுமே.

வாத்தியாருக்குப் பேராசை கூடாது. மாணாக்கன் பெரிய செல்வனாக இருக்கலாம். அவன் வாத்தியார் ஐயாவிடம் தானாக மதிப்பு வைத்து எது வேண்டு மானாலும் தரலாம். அவன் கொடுப்பதைப் பெறுவது தான் நல்லது. அவன் சொத்திலே தமக்கும் ஒரு பங்கு உண்டென்று உரிமை பாராட்டுபவரைப் போலச் சில ஆசிரியர்கள் பேசுவார்கள். 'எனக்கு நூறு ரூபாய் தரக் கூடாதோ? இவனுக்குப் பணமா இல்லை? கொடுத்தால் குறைந்து விடுமா? நான் வாங்கிக் கொள்ளத் தகாதவனா?" என்று கேட்பார்கள். அவன் பணக்காரனாக இருப்பதற்கு வாத்தியார் ஐயாவா காரணம்? அவருடைய பாடத்திற்கும் அவ னுடைய பணத்திற்கும் என்ன சம்பந்தம்? ஆகவே, அவாவை உடையவரை ஆசிரியர் பதவியில் வைத் திருக்கக் கூடாதென்று தமிழர்கள் சொல்லியிருக்கிறார் கள். 'கொடுக்க வில்லையே!' என்ற குறை வாத்தியார் ஐயா உள்ளத்திலே தோன்றிவிட்டால், பிறகு அவர் எப்படி நன்றாகக் கல்வியைக் கற்பிக்க முடியும்?

அடுத்தபடியாக வாத்தியார் ஐயாவுக்கு விரோதி வஞ்சகம். ஆசிரியர் உண்மையான ஞானம் வாய்ந் தவராக இருக்கவேண்டும். ஆசிரியர் கூட்டத்தில் அடிப்படையில் இருப்பவர் போதகாசிரியர்; மேற்படியில் இருப்பவர் ஞானாசிரியர். அவர்கள் ஒரே சாதியினர். ஆகையால் உள்ளத்தால் பொய்யாது ஒழுகவேண்டி யது அவர்கள் கடமை. நேர்மைக் குணம் அவர் களுக்கு இன்றியமையாதது. தெரிந்ததை மறைத்து வைப்பதும், மாணாக்கனை வஞ்சிப்பதும் ஆசிரியரைப் பாவிகளாக்கிவிடும். மெய்யன்பு உடையவர்களிடம் வஞ்சகம் இராது. மாணாக்கர்களைச் சொந்தப்பிள்ளை களைப் போலப் பாதுகாக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட வாத்தியார் ஐயா அந்த மாணாக்கர்களிடத் தில் அன்பில்லாமல் பழகுவது நியாயமன்று. ஆகவே, வஞ்சகம் அவரிடத்தில் எள்ளளவும் தலைகாட்டக் கூடாது.

மெத்தென்று விஷயங்களைக் கற்பிக்காமல் மாணாக்கர்களைப் பயமுறுத்திக் கற்பித்தல் கூடாது. வாத்தியார் ஐயாவின் குரலைக்கேட்டால் மாணாக்கர்கள் நடுங்கி விடுவார்களென்று சொல்வது அவருடைய பெருமைக்குக் காரணமாகாது. இனிமையாகப் பேசத் தெரியாதவன் வாத்தியார் வேலைக்கே வரக்கூடாது. வாத்தியார் வேலை முழுவதும் நாவில் இருக்கிறது; அந்த நாக்கு எவ்வளவு மிருதுவாக இருக்கிறது! பின்னும் அதில் இனிமை சேரவேண்டும். கடுமை யான பேச்சினால் அச்சத்தை உண்டாக்கும் வாத்தியார் ஐயா, தம்முடைய பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தினவர் ஆகிறார். அறிவுப் பலமும், ஒழுக்க உயர்வும் உடையவர்கள் அச்சம் உண்டாகும்படி வார்த்தையாட மாட்டார்கள்.

முன் நல்ல ஆசிரியர்களுக்கு வேண்டுமென்று மொழிந்த குணங்கள் இல்லாமையும், இழிந்த குணத் தோடு கூடிய இயல்பும், பொறாமையும், பேராசையும், அச்சமுண்டாகப் பேசுவதும் கெட்ட வாத்தியாருடைய லட்சணமென்று சொன்ன இலக்கண நூலாசிரியர் கள், மேலும் அவரைக் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு என்று வைகிறார் கள். "நாயே, பேயே, கழுதையே" என்று ஒருவனை அவன் குணங்களுக்கு ஏற்ற உபமானங்களால் நாம் அழைக்கும்போது, "ஆகா, என்ன அழகான உவமை!" என்றா கேட்பவர்கள் நினைக்கிறார்கள்? அதை வசவென்று உலக சம்பிரதாயத்தில் சொல் கிறோம். அந்த மாதிரியே உபமான மென்ற உருவத் தில் மேலே சொன்ன கழற்குடம் முதலிய வார்த்தை களால் கெட்ட வாத்தியாரைப் பெரியவர்கள் சொல்கிறார்கள். வசவென்று சொன்னாலும் ஒன்றுதான்; உபமானம் என்று சொன்னாலும் ஒன்றுதான். ஏன் அப்படிச் சொன்னார்கல் என்பதைக் கவனிக்கலாம்.

பழைய காலத்தில் எந்தப் பொருள்களையேனும் கணக்குப் பண்ண வேண்டுமானால் கழற்சிக்காயை வைத்துக்கொண்டு எண்ணுவது ஒரு வழக்கம். ஒவ் வொன்றாக எண்ணும்போது ஒவ்வொரு கழற்சிக் காயை ஒரு குடத்திற்குள் போடுவார்கள். இப்படிப் போட்ட கழற்சிக்காயகளை கடைசியில் எடுத்து எண்ணுவார்கள்.

கழற்சிக்காய்களில் எல்லாம் ஒரே அளவாக இருப்பதில்லை. சின்னதும் இருக்கும், பெரியதும் இருக்கும். நல்ல உருண்டையாகச் சில இருக்கும்; சில ஒழுங்கற்ற உருவத்தோடு இருக்கும். முதலில் குடத்திலே போடும்போது எந்த முறையில் காய்கள் விழுகின்றனவோ அதே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக மீட்டும் எடுக்கும்போது வருவது இல்லை. ஒரேயடியாகச் சேர்ந்து விழுந்துவிடும். போடும்போது விழுந்த முறைப்படியே எடுக்கும்போதும் வரவேண்டு மென்றால் கழற்குடத்தில் நடக்காது. செங்கல்லாக இருந்தால் ஒன்றன் மேல் ஒன்றை அடுக்கி மீட்டும் அப்படியே எடுக்கலாம். கழற்சிக்காய் ஒன்றனோடு ஒன்று ஒட்டாது; போட்டஇடத்தில் இராது. ஆகவே எடுக்கும்போது முறைமாறி வருவதிலும் பல சேர்ந்து விழுவதிலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

கழற்சிக்காய் பெய்த குடத்தில் காணப்படும் இந்த முறைமாற்றம் போலி வாத்தியார் ஐயாவிடம் இருக் கும். அவர் வாசித்த காலத்தில் இன்னதன் பின் இது என்ற முறைப்படியே ஒழுங்காகக் கற்றுக் கொண் டிருப்பார். சொல்லிக் கொடுக்கும்போதோ, அந்த முறையெல்லாம் மறந்து போய்விடும். தெரிந்த வற்றைத்தான் சொல்லிக் கொடுப்பார். ஆனால் முறைமாறிப் போய்விடும். ஒவ்வொன்றாகச் சொல்லு வதை விட்டு ஒரேயடியாகப் பல விஷயங்களைத் திணித்துவிடுவார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று முறையாகச் சொல்லிக் கொடுக்காமல் வகுத்தலிலிருந்து ஆரம்பித்தால் பையனுக்கு ஒன்றுமே வராது. இலக்கிய இலக்கணத்திலும் இப்படி முறை உண்டு. அந்த முறை பிறழ்ந்தால் மாணாக்கனுக்கு வீண் சந்தேகங்கள் கிளம்பும். முறை மாறிச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைக் கழற் குடத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதில் பிழை என்ன?

 

பெய்த முறை அன்றிப் பிறழ உடன் தரும்

செய்தி சுழற்பெய் குடத்தின் சீரே.

 

[பெய்தல் - இடுதல், பிறழ - மாறும்படி. உடன் தரும் - ஒருங்கே கொடுக்கும். செய்தி - இயல்பு.]

 

இன்னும் சில வாத்தியார்கள் உண்டு. நன்றாகப் படித்திருப்பார்கள். ஆனால் அவரிடம் உள்ள கல்வியை எளிதில் நாம் பெற முடியாது. அவர்களிடன் நடையாய் நடந்து அவர்களுடைய கோபதாபங்களுக்கு உட்பட் டுக் கற்றுக் கொள்ளவேண்டும். அவர்களாக மனம் வந்து சொல்லிக் கொடுத்தால் ஏதாவது தெரிந்து கொள்ளலாம். மாணாக்கன் சொந்த முயற்சியினாலும் பக்தியினாலும் அவர்கள் உள்ளத்தைக் கனிவிக்க இயலாது. இந்த இனத்தாரை இலக்கணக்காரர்கள் பனைமரம் என்று சொல்கிறார்கள்.

மடல் அடர்ந்து நிற்கும் பனை மரத்தில் பன நுங்கோ பழமோ இருக்கிறது. விடுவிடுவென்று ஏறினோம், பறித்தோம், தின்றோம் என்பதற்கு இல்லையே! எவ்வளவு கஷ்டப்பட்டு உடம்பிலே காயத்தை ஏற்றுக்கொண்டு காயைப் பறிக்க வேண்டும்! இல்லாவிட்டால் பனம்பழம் தானே விழும்வரையில் காத்திருக்க வேண்டியதுதான். பனைமர வாத்தியாரால் மாணாக்கர்களுக்கு என்ன பிரயோசனம் இருக்கப் போகிறது?

 

தானே தரக்கொளின் அல்லது தன்பால்

மேவிக் கொளக்கொடா இடந்தது மடற்பனை.

 

பருத்திக் குடுக்கை வாத்தியாரென்று ஒர் சாதியை இலக்கண நூலில் காணலாம். பழைய காலத்தில் சிக்கிமுக்கிக் கல்லால் நெருப்பு உண்டாக்கி வந்தார்கள். சிக்கிமுக்கிக் கல்லை உராயும்போது நெருப்புப் பொறி உண்டாகும். அதைப் பருத்தியிலே பற்றச் செய்து அதிலிருந்து தேங்காய் நார், உமி முதலியவைகளில் பற்ற வைப்பது வழக்கம். இந்தக் காரியத்துக்காக ஒரு குடுக்கையில் பருத்தியை அடைத்து வைத்திருப்பார்கள். அதிலிருந்து கொஞ் சங் கொஞ்சமாக அவ்வப்போது பஞ்சை எடுத்து உபயோகிப்பார்கள்.

பருத்திக் குடுக்கையில் பஞ்சை அடைப்பதும் கஷ்டம்; அதிலிருந்து எடுப்பதும் கஷ்டம். கொஞ்சங் கொஞ்சமாகத்தான் அடைக்க வேண்டும்; அப்படியே சிறிது சிறிதாகவே எடுக்கவேண்டும். பருத்திக் குடுக்கை வாத்தியாரிடத்தில் உள்ள படிப்பும் அந்தப் பஞ்சைப் போன்றதே அவர் மூளை கொஞ்சங் கொஞ்சமாகவே கல்வியை ஏற்றுக் கொண்டிருக்கும். பாடம் சொல்லித் தரும்போதும் சிறிது சிறிதாகவே சொல்லிக் கொடுப்பார். மாணாக்கனுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் சரி, அவருடைய ஆமை நடை மாறாது. பழங்காலத்தில் இப்படிச் சில தமிழாசிரியர் கள் இருந்தார்கள். ஏதாவது ஒரு நூலைச் சிரமப் பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அவர்களிடம் யாரேனும் போய்ப் பத்துப் பாடல்களை ஒருங்கே கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், "தமிழ் கிள்ளுக் கீரையா? சுலபமாக வாரி இறைக்கக் கடலைச் சுண்டலா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டேன், தெரியுமா?" என்று சொல்வார்கள். அவர்கள் கஷ்டப்பட்டதற்கு மாணாக்கன் எப்படிப் பிணையாவான்?

பருத்திக் குடுக்கையின் இயல்பைச் சொல்லும் சூத்திரம் பின் வருமாறு:

 

அரிதிற் பெயக்கொண்டு

அப்பொருள் தான்பிறர்க்கு

எளிதீ வில்லது பருத்திக் குண்டிகை.

 

[அரிதின் - கஷ்டத்தோடு, பெய-செலுத்த, எளிது

ஈவு இல்லது - எளிதிலே கொடுக்கும் இயல்பு இல்லாதது.]

 

முடத்தெங்கு வாத்தியார் ஒருவகை. கண்ண பிரானைப்பற்றி ஒரு கதை கேட்டிருக்கிறோம். சத்திய பாமைக்காக அப்பெருமான் பாரிசாத மரம் கொணர்ந்து அத்தேவி வீட்டில் நட்டானாம். அது வளைந்து வளர்ந்து ருக்மணியின் வீட்டில் பூவை உதிர்த்ததாம். முடத்தெங்கு என்பதற்கு வளைந்த தென்னமரம் என்று பொருள். வேர் படர்ந்த இடம் ஒன்றானால் தேங்காய் விழும் இடம் வேறாக இருக்கும். ஒருவன் தன் வீட்டுப் புறக்கடையில் மரத்தை வைத்துத் தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினால் முடத்தெங்கு அடுத்த வீட்டுப் புறக்கடையில் தலையை நீட்டும். அதிலிருந்து விழும் மட்டையோ தேங் காயோ அடுத்த வீட்டுச் சொத்தாகப் போய்விடும்.

எவ்வளவோ பயபக்தியோடு வந்து வழிபடும் மாணாக்கனைப் புறக்கணித்து விட்டு, வருவார் போவோ ருக்கெல்லாம் உபதேசம் செய்யும் வாத்தியார் ஐயாவை முடத்தெங்கென்று சொல்கிறார்கள்.

 

பல்வகை உதவி வழிபடு பண்பின்

அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே.

 

வழிபடும் மாணாக்கன் அறிவுப் பசியோடு ஏமாந்து நிற்கச் செய்வது பாவம் அல்லவா?

 

போலி வாத்தியாரின் இலக்கணங்களைத் தொகுத்து இலக்கண நூல் சொல்வதைப் பாருங்கள்:

 

மொழி குணம் இன்மையும்

இழி குண இயல்பும்

அழுக்காறு அவாவஞ்சம்

அச்சம் ஆடலும்

கழற்றும் மடற்பனை

பருத்திக் குண்டிகை

முடத்தெங்கு ஒப்பென

முரண்கொள் சிந்தையும்

உடையோர் இலர்

சிரியர்ஆ குதலே.

 

[அச்சம் ஆடல் - பயம் உண்டாகப் பேசுதல்.]

 

'இந்தக் குணங்கள் கெட்ட வாத்தியார்களுக்கு உரியன' என்று சொல்லவில்லை; இந்த லட்சணங்களை உடையவர்கள், ஆசிரியர் ஆகலாம் என்ற சிந்தனைக்கே உட்படாதவர்களாம். ஆசிரியர் ஆகுதல் அவர்பால் இல்லையென்று சாதுரியமாகச் சொல்கிறது சூத்திரம்.

எல்லாவற்றையும் பார்க்கும்போது 'வாத்தியார் ஐயா' என்ற பட்டம் சுலபமாகக் கிடைக்கக் கூடிய தென்று தெரியவில்லை.

வாத்தியார் ஐயா தொழிலாளி அல்ல. தமிழர் கொள்கைப்படி அவர் ஒரு தாதா; வள்ளல். மாணாக் கர்கள் இரவலர். திருவள்ளுவர், "பணக்காரருக்கு முன்னால் நின்று யாசிக்கும் இரவலரைப்போல் ஆசிரி யரிடம் கல்வியை யாசித்து ஏங்கி நின்று கற்றவர் மேன்மை அடைவார்; அப்படிக் கல்லாதவர் கடைப் பட்டவர்" என்று சொல்கிறார். பாடம் சொல்லிக் கொடுப்பது ஒரு தொழில் அல்ல; கலை. அது ஒரு தியாகம். அழியும் பொருட் செல்வத்தை வழங்கும் வள்ளலைக் காட்டிலும் அழியாத கல்விச் செல்வத்தை வழங்கும் வள்ளல் பெரியவர்; சமுதாயத்தின் கொழுந்து அவர். அவர் பாடம் சொல்வதை "ஈதல்" என்றே இலக்கணக்காரர் சொல்கிறார்.

"கல்விக் கொடை எப்படி நிகழவேண்டும்?" என்பதை இலக்கணக்காரர்கள் வகுத்திருக்கிறார்கள். வாத்தியார் ஐயா பாடம் சொல்லிக் கொடுக்கும் முறைதான் அது. பாடம் சொல்லும் காலம் ஏற்றதாக இருக்க வேண்டும். மூளையைப் பொறுத்த விஷயம் ஆகையால் இயற்கையின் சார்பினால் சோர்வோ, துன்பமோ இல்லாத காலம் நன்மை பயக்கும். சந்தையிரைச்ச லுள்ள இடத்திற்கு நடுவே பள்ளிக்கூடம் இருக்க லாமா? கல்விக்கு மன ஒருமைப்பாடு அவசியம். கடவுளைக் கும்பிடும் கோயில் நல்ல இடத்தில் அமைந் திருப்பதைப்போலக் கல்விச் சாலையும் நல்ல இடத்தில் இருக்க வேண்டும். நல்ல இடத்தைத் தேர்ந்தெடுப் பது அந்தக் காலத்தில் வாத்தியார் கடமை.

பழங்காலத்து வாத்தியார் ஐயா பாடம் சொல்லத் தொடங்குகிறார்.

நல்ல ஆசனத்தில் அமர்கிறார். கடவுளுக்கு முத லில் ஆசனத்தைச் சமர்ப்பிக்கிறோம் அல்லவா? பிறகு அவர் தெய்வத்தைத் தியானித்துக் கொள்கிறார். தமக்கும் பிறர்க்கும் நல்ல பயனை உண்டாக்கும் ஒரு கைங்கரியத்தைத் தொடங்குபவர் கிரமமாகத் தெய்வ வணக்கத்தோடு ஆரம்பிப்பதுதானே நல்லது?

பாடம் சொல்லும்போது எந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லப்போகிறோம், எப்படிச் சொல்ல வேண்டும் என்று வாத்தியார் ஐயா திட்டம் பண்ணிக் கொள்வார். சொல்லுகிற விஷயம், முறை இந்த இரண்டையும் இக்காலத்தில் கூட வாத்தியார்கள் மேலதிகாரிக்குக் காட்டுவதற்காக எழுதிவைத்துக் கொள்கிறார்கள். உரைக்கவேண்டிய பொருளை உள்ளத்தில் அமைத்துக்கொண்டு பாடம் சொல்ல ஆரம்பிப்பார். அவருக்கு அதில் சந்தேகம் இராது; அதனால் விடுவிடுவென்று சொல்லிக்கொண்டு போக லாம். அப்படிச் செய்தால் மாணாக்கர்களுக்குப் புரிவது கஷ்டம். ஆகையால் விரையாமல் பாடம் சொல்வார். மாணாக்கர்களெல்லாம் ஒரே மாதிரியான அறிவு படைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். சிலர் தீவிரமான அறிவுடையவர்களாக இருக்கக் கூடும்; சிலர் சற்று மந்தமாக இருக்கலாம். பாடம் சொன்ன வுடன் கிரகிக்கவில்லையே என்று வாத்தியார் ஐயா கோபித்துக் கொள்ள மாட்டார். பாடம் சொல்வதிலே அவருக்கு ஓர் இன்பம் உண்டு. ஆகையால் விருப்பத் தோடு சொல்வார். மலரைப் போன்ற பண்புடைய அவர் பாடம் சொல்லுகையில் முகம் மலர்ச்சியாக இருக்கும். பாடம் கேட்கிறவன் எப்படி விஷயத்தை ஏற்றுக் கொள்கிறான் என்பதை ஆசிரியர் நன்றாகக் கவனிப்பார். அவன் தகுதிக்கு ஏற்றபடி, அவனுக்கு எப்படிச் சொன்னால் விளங்கும் என்பதை யோசித்துப் பாடஞ் சொல்வார். அவன் சக்திக்கு எவ்வளவு சொல் லித் தந்தால் போதுமோ அந்த அளவையும் தெரிந்து, அவன் உள்ளம் கொள்ளும்படி சொல்வார். சொல் லும்போது மனம் கோணாமல் நடுநிலையில் நின்று

வித்தியா தானமாகிய தொண்டைச் செய்து வாழ்வார்.

 

இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு சூத்திரம் சொல்லுகிறது.

 

ஈதல் இயல்பே இயம்புங் காலைக்

காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்

சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத்து அமைத்து

விரையான் வெகுளான் விரும்பி முகம்மலர்ந்து

கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்

கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப.

 

(ஈதல்-பாடம் சொல்லுதல். வாலிதின்- நன்றாக. சிறந்துழி-சிறந்த இடத்தில். கொள்வோன்-மாணாக்கன். கோட்டம்-பட்சபாதம். மனத்தின்-மனத்தோடு. கொடுத்தல்-கொடுக்க; சொல்லித்தரவேண்டும்,என்ப- என்று பெரியவர்கள் சொல்வார்கள்.]

இந்த மாதிரியான வாத்தியார் ஐயா இன்று தமிழ் நாட்டில் இருந்தால், - அதைப்பற்றி இப்போது நினைத்து என்ன பிரயோசனம்? பழைய காலத்தில் தான் இப்படி இருந்தார்கள் என்பது என்ன நிச்சயம்? இருந்தார்களோ, இல்லையோ, வாத்தியார் ஐயா இன்னபடி இருக்கவேணடும் என்று ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்கள்; அவ்வாறு நடக்க முயன்றும் இருப்பாரகள். அந்தத் திட்டத்தின் உயர்வையும் அதை அமைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கை லட்சி யத்தையும் நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். நல்லதை நல்லதென்று சொல்வதில் லோபத்தனம் எதற்கு?

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)