எப்படி அளப்பது?

கி.வா.ஜகந்நாதன்

சேலம் ஜில்லாவில் சிறிதளவு தூரம் காவிரி ஓடு கிறது. மிகவும் அகலமான காவிரி. அதன் இரு மருங்கும் உள்ள நிலம் பொன் கொழிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பிற இடங்களைக் காட்டிலும் அந்த இடத்தில் உள்ள நிலத்துக்கு விலை அதிகம். அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் தங்கள் நிலத்தைப்பற்றி மிகவும் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.

"இப்போதெல்லாம் எங்கள் ஊரில் ஓர் ஏகரா நிலம் எவ்வளவு விற்கிறது தெரியுமா?" என்று கேட் பார் ஒருவர். மற்றவர் செங்கற்பட்டு ஜில்லாக்காரராக இருப்பார். "என்ன, அதிகமாகப் போனால் ஆயிர ரூபாய் இருக்குமா?" என்பார் அவர்.

" ! நன்றாய்ச் சொன்னீர்கள். உங்க ளுக்கு நிலத்தைப்பற்றிய விவகாரமே தெரியாதுபோல் இருக்கிறது. யுத்தத்துக்கு முன்னாலேயே ஏகரா நாலா யிரம் ஐயாயிரம் என்று விற்ற இடமாக்கும்."

"என்ன ஐயா, புரளி பண்ணுகிறீர்? நிலமா இல்லை, வேறு ஏதாவதா?" என்று நண்பர் கேட்பார்.

"என்ன, ஐயாயிரம் என்று கேட்கிறபோதே வாயைப் பிளக்கிறீர்களே! இப்போது விற்கிற விலை யைக் கேட்டால் உங்களுக்கு மயக்கம் போட்டுவிடும் போல் இருக்கிறதே!"

"குற்றம் இல்லை. சொல்லுங்கள் கேட்கிறேன். வேண்டுமானால் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் கொண்டுவந்து வைத்துக்கொள்கிறேன்; மயக்கம் வந்தால் தெளித்து எழுப்பிவிடுங்கள்" என்று வேடிக்கையாகச் சொல்வார் செங்கற்பட்டுக்காரர்.

"பன்னிரண்டாயிரம் முதல் பதினையாயிரம் வரையில் ஏகர் விலைபோகிறது. மகா மட்டமான நில மாக இருந்தாலும் எண்ணாயிரத்துக்குக் குறைவில்லை."

இத்தகைய பேச்சினிடையே நிலத்தின் பெரு மையை அளக்கிற விதம் எப்படி இருக்கிறது? எல் லாம் ரூபா அணா பைசாதான்.

லத்தை விளை நிலமாக எண்ணாமல் விலை நில மாக எண்ணும் மோசமான நிலை இந்த நாட்டுக்கு வந்துவிட்டது. நாணயம் என்ற பேய், மனிதன் மன சிலே புகுந்து பொருள்களின் மதிப்பை மாற்றி விடு கிறது. ஏறிய விலைக்கு விற்கிறதென்று எண்ணி, தலை முறை தலைமுறையாக வந்த நிலங்களைச் சிலர் விற்று விட்டார்கள். காரணம் என்ன? அவர்கள் தங்கள் நிலத் தைப் பணத்தால் அளக்கிறார்கள். முன்பு அங்கிருந்த நிலம், இப்போது அளவில் விரிந்திருப்பதுபோல வும், இனி மறுபடியும் சுருங்கிவிடுமென்றும் எண்ணு கிறார்கள்; சூட்டோடு சூடாக விற்றுவிடத் துணிகிறார்கள்.

 

நெல் விளையும் பூமியைவிடப் புகையிலை விளையும் பூமி உயர்ந்ததாகிவிட்டது. நெல்லைக் காட்டிலும் புகை யிலை உயர்ந்ததா? அல்ல, அல்ல. நெல்லால் வரும் பணத்தைக் காட்டிலும் புகையிலையால் வரும் பணம் அதிகம் அல்லவா? அப்படியானால் ஒன்றுமே விளையாமல் பத்துச் செண்டு நிலம் மூவாயிரம் நாலாயிரம் என்று விலை போகிறது சென்னையில்; அந்த நிலங்கள் உயர்ந்தவைகளா? பணத்தைக் கொண்டு அளந் தால் அவைகளே சிறந்த நிலங்கள். அந்த நிலங்களை வளமுடைய நிலங்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது. பணமுடைய நிலங்கள் என்று வேண்டு மானால் சொல்லலாம். நிலத்தின் பெருமையை அளக்க, அது என்ன விலைக்குப் போகும் என்ற ஆராய்ச்சி பயன்படாது. அதில் என்ன விளையும் என்று ஆராய வேண்டும். விலை நிலத்தைக் காட் டிலும் விளை நிலத்துக்குத்தான் எக் காலத்திலும் மதிப்பு உண்டு.

2

தமிழ் நாட்டில் நிலத்தின் மதிப்பை அதன் விளைச் சலைக் கொண்டே அளந்தார்கள். நில வளப்பத்தை எடுத்துச் சொல்லும்போது, இத்தனை ரூபாய் விலைக் குப் போகும் என்ற சிந்தனையே அவர்களுக்கு இல்லை. நிலத்தின் பெருமையை எப்படி அளந்து சொன்னார்கள் பழந் தமிழர்கள் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

ரிகால் சோழனைப்பற்றி மிக விரிவாக முடத் தாமக் கண்ணியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். பொருநராற்றுப்படை என்பது அந்தப் பாட்டின் பெயர். காவிரி சோழ நாட்டை வளப்படுத்திப் பாது காக்கிறது. சோழ நாட்டில் உள்ள நிலவளத்தை அழகாக வருணிக்கிறார் புலவர். கடைசியில் பாட்டை முடிக்கும்போது,

 

ஆயிரம் விளையுட் டாகக்

காவிரி புரக்கும் நாடுகிழ வோனே

 

என்று புலவர் பாடுகிறார். 'ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளையும்படியாகச் காவிரி பாது காக்கும் சோழநாட்டுக்கு உரியவனே' என்பது இதன் பொருள். வேலி என்பது நிலப்பரப்பின் அளவு. நிலத் தின் பரப்பைக் கொண்டா அதற்குப் பெருமை ஏற் படுகிறது? இல்லை. அதனால் உண்டாகும் பயனைக் கொண்டுதான் அதற்குப் பெருமை. அதைத்தான் புலவர் சொல்கிறார். "வேலிக்கு ஆயிரம் கல நெல் விளையும் எங்கள் சோழநாட்டுப் பூமியில்!" என்று சொல்வதில் சிறப்பிருக்கிறதா? "ஏகரா பதினையாயிரம் ரூபாய் விலைக்குப் போகும்" என்று சொல்வதில் சிறப் பிருக்கிறதா? முன்னது விளைநிலத்தின் பெருமையை உணர்ந்த வேளாண் செல்வர் பேசுவது; பின்னது விலைநிலத்தின் விற்பனையை நினைத்து வியாபார நோக்கமுடையவர் சொல்வது.

3

மற்றொரு புலவர் சோழநாட்டு நிலத்தை அளக் கிறார். ஆவூர் மூலங்கிழார் என்ற பெயருடையவர் அவர். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னனைப் பாடு கிறார். அப்போது சோழநாட்டின் நிலவளத்தை அளந்து சொல்கிறார். அவர் அளக்கிற முறை அழகாக இருக்கிறது.

மனிதன் அரிசிச் சோறு சாப்பிடுகிறான். அந்தக் காலத்தில் சாமானிய மனிதன் ஒரு நாளைக்குச் சின்னப் படியில் ஒரு படி அரிசிச் சோறு சாப்பிடுவானாம். "உண்பது நாழி" என்று ஔவைப்பாட்டி பாடி யிருக்கிறாள். மனிதன் உண்ணும் அளவையே அளவாக நிலத்தை அளப்பது ஒரு முறை. இப் போதுகூட நாம் சிலரைப்பற்றிப் பேசும்போது, "அவனுக்கு ஆறுமாதச் சாப்பாட்டிற்கு இருக்கிறது" என்று சொல்வது உண்டல்லவா? அதைப்போல ஆவூர் மூலங்கிழார் சொல்ல வருகிறார். அவர் மனிதனுடைய வயிற்றை அளவாகக் கொள்ளவில்லை. பெரிய அளவு கருவியைக் கொண்டு அளக்கிறார். மனிதன் நாழி அரிசி உண்டால் யானை எவ்வளவு உண்ணும்? "யானை யைக் கட்டித் தீனி போடுவதா?" என்று பழமொழியே இருக்கிறதே! யானைக்குத் தீனிபோட்டுக் கட்டாது. அந்த யானையின் உணவையே தம் அளவு கருவியாக் கிக் கொள்கிறார் புலவர்.

பெண்யானை ஒன்று அயர்ச்சியினால் படுத்துக் கொண்டிருக்கிறது. அது எத்தனை பரப்புடையதாக இருக்கும்? அந்தப் பரப்பையுடைய நிலத்தில் சோழ நாட்டில் உண்டாகும் விளைச்சலுக்குக் கணக்குச் சொல்கிறார்.

 

ஒருபிடி படியும் சீறிடம்

எழுகளிறு புரக்கும் நாடு.

 

ஒரு பெண்யானை படுத்துக் கொள்ளும் சிறிய இடத்தைக்கொண்டு ஏழு ஆண்யானைகளைப் பாது காக்கலாமாம். அவ்வளவு சின்ன இடத்திலே விளையும் நெல்லைக் கொண்டு ஏழு களிறுகளை எப்போதும் கவ ளம் இட்டுக் காப்பாற்றலாம். நிலப்பரப்பையும் யானை யைக் கொண்டு அளவிட்டார்; நிலத்தின் விளைச்சலையும் அதைக்கொண்டே அளவிட்டு விட்டார். ஏழு யானைக்குத் தீனிபோடும் நிலம் என்று. சாதாரணமா கச் சொன்னால் ஏகராக் கணக்கில் இருக்குமென்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சோழநாட்டு நிலம் உயர்தரமானதாயிற்றே; ஒரு யானை படுக்கும் இடத் தில் ஏழு யானையை வளர்க்கும் விளைச்சல் விளைகிறது. புலவர் நிலத்தை அளப்பது எப்படி இருக்கிறது?

4

மற்றொரு புலவர் சோழநாட்டு நிலவளத்தைப் பொதுப்படையாகச் சொல்கிறார். மற்ற நாட்டின் நில வளப்பத்தோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்.

சோழநாடு காவிரியினால் வளத்தைப் பெறுகிறது. ஆற்றுப் பாய்ச்சல் இல்லாத பிற நாடுகளில் ஏரிகள் உள்ளன; கொங்கு நாடு போன்ற இடங்களில் கிணறு கள் தோண்டி ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சுகிறார்கள். ஆற்றுக்கால் பாய்ச்சல், ஏரிப் பாய்ச்சல், இறைவைப் பாய்ச்சல் என்ற இந்த மூன்று வகையில் ஆற்றுக்கால் பாய்ச்சலே சிறந்தது. அதுவும் காவிரியாற்றுப் பாய்ச் சல் மிக மிகச் சிறந்தது.

ஏரியினால் விளையும் நாட்டினரும், ஏற்றத்தால் விளையும் நாட்டினரும் தங்கள் நாடுகளில் விளையும் நெல்லைக் கணக்கெடுக்கிறார்கள். எல்லாக் கணக்கையும் கூட்டிப் பார்க்கிறார்கள். அந்தக் கணக்கு அவர்களுக்குப் பிரமாதமாக இருக்கும். சோழநாட்டுக்காரன் அந்தக் கணக்கைப் பார்க்கிறான் என்று வைத்துக்கொள் வோம். "மகா பிரமாதம்!" என்று சப்புக் கொட்டுவான். அவனுடைய நாட்டிலே விளையும் நெல் எங்கே? இந்த விளைவு எங்கே? அஜகஜாந்தரமாகவல்லவா இருக்கும்?

புலவர் கரிகாலனுக்குச் சொந்தமான சோழ நாட்டை, காவிரி சூழ்நாட்டைப் பாராட்டுகிறார். "மற்ற நாடுகளில் நீர்ப்பாசனம் ஏரியினாலும் ஏற்றத்தாலும் நடைபெறுகிறது. அதனால் நெல் விளைகிறது. அப்படி உண்டாகும் நெல்லை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், எங்கள் சோழநாட்டில் அறுவடைக் காலத் தில் அரியும்போது கீழே உதிர்கிறதே அந்த நெல் லுக்கு ஒருகால் சமானமாக இருக்கலாம்" என்று சொல் கிறார். அரிகாலின் கீழே சிதறும் நெல்லைச் சோழ நாட்டில் நிலத்துக்கு உடையவர்கள் பொறுக்கமாட்டார் கள். அறுவடையான பிறகு, கீழே சிந்திய நெல்லை ஏழைகள் பொறுக்கிக்கொள்வார்கள். அவர்களாலும் பொறுக்க முடியாமல் கிடக்கும் நெல்லை வாத்துக்கள் கொத்தித் தின்னும். அப்படி அரிகாலின் கீழே உக்க நெல்லைத் தொகுத்துப் பார்த்துக் கணக்கெடுத்தால், ஏரியினாலும் ஏற்றத்தினாலும் விளையும் பிற நாட்டு நெல்விளைச்சல் அத்தனைக்கும் சமானமாக இருக்கு மாம். புலவர் சோழநாட்டு நிலத்தின் தரத்தை அளக் கும் முறை இது.

 

ஏரியும் ஏற்றத்தி னானும் பிறநாட்டு

வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின்

அரிகாலின் கீழ் கூடும் அந்நெல்லே சாலும்

கரிகாலன் காவிரிசூழ் நாடு.

 

இப்படி அளந்து பெருமைப்பட்டால் உண்மை யான விளைநிலத்தின் மதிப்பை உணரலாம். ரூபாயைக் கொண்டு அளந்தா நிலத்தை மதிப்பிடுவது?

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)