ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை

கி.வா.ஜகந்நாதன்

நான் சிறு பையனாக இருந்த காலம். விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பூரானைக்கண்டேன். அதன் மேல் ஒரு கல்லை எறிய போனேன். அதை என் பாட்டி கண்டுவிட்டாள். "அடே! அதைக் கொல் லாதே! ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையடா!" என்று கத் தினாள். அவளுக்குத் தெரியாத பழங்கதை இல்லை; சம்பிரதாயம் இல்லை. நான் கல்லைக் கீழே எறிந்து விட்டு, "பாட்டி, பாட்டி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்றாயே; அது என்ன?" என்று கேட்டேன். அவள் கதை சொல்லத் தொடங்கினாள்.

"ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பூரான்களே நெளிந்து கொண்டிருந்தன. கால் வைத்த இடமெல் லாம் பூரான். எல்லோரையும் பூரான்கள் கடித்துத் துன்புறுத்தின. ஜனங்கள் பகவானிடம் முறையிட்டுக் கொண்டார்கள். பகவான் பூரானுக்கு ஒரு சாபம் கொடுத்தார். 'நீ குட்டியைப் பெறப் பெற எல்லா வற்றையும் தின்றுவிடுவாயாக!' என்று சாபம் இட் டார். பூரான், 'அப்படியானால் என் வம்சம் எப்படி விருத்தியாகும்?' என்று அழுதுகொண்டே கேட்டது. 'நீ ஒரு பிள்ளையை மட்டும் மிச்சம் வைத்து மற்றவற் றைத் தின்பாய். அந்த ஒரு பிள்ளையால் உன் வம்சம் விருத்தியாகும்' என்று பகவான் மறுசாபம் கொடுத்தார். அது முதல் பூரான்கள் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாகவே இருந்து வருகின்றன. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை யென்றால் அந்தப் பிள்ளைக்கு ஒரு கெடுதலும் செய்யக்கூடாது ,அது பாவம்! என்று கதையைமுடித்தாள்.

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையென்று பூரானிடத் திலேயே இரக்கம் காட்டவேண்டுமானால் மனித சாதி யின் திறத்தில் எத்தனை பரிவு உண்டாகவேண்டும்! உண்மையில் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்றாலே நமக்கு இரக்கம் உண்டாகத்தான் உண்டாகிறது. பிறர் தம்மிடம் இரக்கம் காட்டவேண்டுமென்று எதிர்பார்க்கிறவர்கள், " ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஐயா!" என்று சொல்லி அந்த இரக்கத்தைப் பெறு கிறார்கள். இதை உலக வாழ்க்கையில் பார்ப்பதோடு இலக்கியங்களிலும் காணலாம்.

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையென்றால் , அது ஆண் பிள்ளையானாலும் சரி, பெண்பிள்ளையானாலும் சரி, பெற்றவர்களுக்கு அருமைப் பிள்ளைதானே?

ஒரு தலைவன் சில காலம் தன்னுடைய மனை வியைப் பிரிந்து வேறு ஒருத்தியோடு தங்கினான். அப்படித் தங்கிவிட்டு மறுபடியும் தன் மனைவியிடம் வந்தான். அவன் மனைவிக்குத் தோழி ஒருத்தி இருந் தாள். அவள் அவனுடைய தவறான செயலை எடுத் துச்சொன்னாள். அவன் தான் தவறே செய்யவில்லை என்று சொல்லித் திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணையிட்டான். அந்த ஆணையினால் பொய்யனாகிய அவ னுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அவன் மனைவி உயிர் விடுவாள். ஆதலால் அவளை நினைத்தாவது அவன் ஆணையிடுவதைத் தடுக்க எண்ணினாள் தோழி. அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. 'பெரியவர்களுக் குப் பிறந்த அயோக்கியனே! நீ ஆணையிடாதே, அத னால் இவளுக்குத் துன்பம் உண்டாகும். இவள் ஒரு தாய்க்கு ஒரு பெண்பிள்ளை' என்று கூறுகிறாள்.

 

சான்றாளர் ஈன்ற தகாத அத் தகாஅமகான்,

ஈன்றாட்கு ஒருபெண் இவள்.

 

"சான்றாண்மையுடையோர் பெற்ற, மிகத்தகுதி இல் லாத மகனே! இவளைப் பெற்றவளுக்கு இவள் ஒரு பெண்" என்பது இதன் பொருள். இது பரிபாடல் என்ற சங்க நூலில் வரும் காட்சி. தோழி தலைவனு டைய உள்ளத்தில் இரக்கம் தோன்றும்படி செய்ய, 'ஈன்றாட்கு ஒருபெண் இவள்' என்று சொல்கிறாள்.

கட்டிளங்காளை ஒருவனும் அழகி ஒருத்தியும் ஒருவரை ஒருவர் காதலித்து அளவளாவினர். அவர் களுடைய காதல் யாருக்கும் புலப்படாமல் இருந்தது. காதலன் காதலியை மணம் செய்து கொள்ள விரும்பி னான். ஆனால் அதற்குக் காதலியைப் பெற்றவர்கள் இணக்கமாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. 'இனி இவளை இங்கே விட்டு வைக்கக் கூடாது' என்று தீர்மானித்த காதலன் அவளை யாரும் அறியாத படி அழைத்துக் கொண்டு தன் ஊருக்குச் சென்று விட்டான். அவர்கள்போன பிறகு அவர்களுக்குத் துணையாக இருந்த தோழி உண்மையை வெளியிட்டாள். அதனைத் தெரிந்துகொண்ட தாய்,"ஐயோ! இது முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கே அவளை மணம் செய்து கொடுத்திருப்பேனே!" என்று வருந்தினாள். தன் மகளை நினைக்கும் போதெல் லாம் அவளுக்குத் துயரம் பொங்குகிறது. மகளைக் கண் மணியைப்போல் வைத்துப் பாதுகாத்து வந்தவள் அவளுடைய வருத்தத்தைக் கண்ட பெரியோர், "ஏண் அம்மா வருத்தப்படுகிறாய்? பெண் என்று பிறந் தால் வேறு ஒருவனுக்கு உரியவளாகி அவனுடன் சென்று வாழ்வதுதானே உலக இயல்? இதற்காக வருந்தலாமா? வருந்தாதே!" என்று சொன்னார்கள் அவளுக்கு அந்த வார்த்தைகள் ஆறுதலை உண்டாக வில்லை, ஆத்திரந்தான் வந்தது.

"வருத்தப்படாதே என்று சொன்னீர்களே! எனக்கு நாலைந்து பேர்களா இருக்கிறார்கள்? ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு'என்று பொத்தி பொத்திக் காப்பாற்றினேன்.அவள் நேற்று ஒரு காளையோடு, கடத்தற்கரிய பாலைவனத்தைக் கடந்து போய்விட்டாள். அதை நினைத்தாலே என் நெஞ்சு வேகிறது. என் கண்மணியைப்போல வாழ்ந்தாளே! விசுக்கு விசுக்கென்று அவள் நடக்கும்போது நான் பார்த்து மகிழ்ந்து போவேனே! சின்னஞ்சிறு பெண். இதோ இந்த நொச்சி மரத்தடியிலேதான் விளையாடிக் கொண்டிருப்பாள். இந்தத் திண்ணையில்தான் செப் பையும் பொம்மைகளையும் வைத்து விளையாடுவாள். நொச்சி மரத்தைப் பார்த்தால் எனக்கு அழுகையாக வருகிறது. அவள் இல்லாமல் இந்தத் திண்ணை வெறிச்சோடிக் கிடக்கிறதே! அதைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்க முடியுமா? ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை அல்லவா அவள்?"

 

இவ்வாறு தாய் தன் வருத்தத்தைக் கொட்டுகிறாள்.

 

ஒருமகள் உடையேன் மன்னே அவளும்

செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு

பெருமலை அருஞ்சுரம் தெருதற் சென்றனள்;

இனியே, தாங்குதின் அவலம் என்றிர்,

அதுமற்று

யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடை யீரே'

உள்ளின் உள்ளம் வேமே; உன்கண்

மணிவாழ் பாவை நடை கற் றன்னஎன்

அணிஇயற் குறுமகள் ஆடிய

மணியேர் நொச்சியும் நெற்றியும் கண்டே.

 

"ஐயோ! ஒரு மகளை உடையவளாக இருந்தேன். அவளும் போரில் மிகுகின்ற வலிமையையும் கூரிய வேலையுமுடய காளையோடு, பெரிய மலையைச் சார்ந்த கடத்தற்கரிய பாலை நிலத்தின் வழியே நேற்றுப் போய்விட்டாள்; இப்போது 'உன் வருத் தத்தைப் பொறுத்துக்கொள்' என்று சொல்கிறீர் கள். அறிவுடையவர்களே! அவள் பிரிவை நினைந் தாலே மனம் வேகுமே. மையுண்ட கண்ணிலுள்ள கருமணியில் வாழும் பாவை நடைகற்றாற் போன்ற அருமைப்பாடும் அழகுமுடைய என் அழகிய இயல் பையுடைய சிறு மகள் விளையாடிய, நீலமணி போன்ற மலரையுடைய நொச்சியையும் திண்ணையையும் கண்டு வருந்தாமல் இருப்பது எவ்வாறு முடியும்?" என்பது இதன் பொருள்.

அவள் இரங்குவதற்கும் அவள்பால் மற்றவர்கள் இரக்கம் காட்டுவதற்கும் உரிய தலைமையான காரணம், பிரிந்து சென்ற பெண் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்பது. அதைத் தாய் முதலிலேயே, "ஒரு மகள் உடையேன் மன்னே!" என்று சொல்லி அறிவுடை யோர் நெஞ்சில் கருணை ததும்பச் செய்கிறாள். இது நற்றிணையில் வரும் பாட்டு.

பெரியாழ்வார் கண்ணபிரானைப் பற்றிப் பாடிய பாடலில் ஓரிடம் வருகிறது. தாய் தன் பெண்ணைப் பிரிந்து வருந்துகிறாள். செங்கண்மால் அவளை அழைத்துச் சென்றுவிட்டான். "அவளைத் திருமகளைப் போல வளர்த்தேன். உலகமெல்லாம் அவள் அழ கையும் குணத்தையும் பார்த்துப் புகழ்ந்தது. அவளைச் செங்கண்மால் கொண்டுபோனான். யசோதை தன் மருமகளாகிய இவளைக் கண்டு மனமகிழ்ந்து இவளுக்கு வேண்டிய சிறப்புகளையெல்லாம் செய்வாளோ! அவ ளும் பெரிய குடும்பத்தில் வாழ்ந்து, பெரிய பிள்ளை யைப் பெற்றவள் ஆயிற்றே!" என்று தாய் வருந்து கிறாள். இப்படி வருந்தும்போது அவள் முதலில் சொல் வது என்ன தெரியுமா? "எனக்கு நாலைந்து பெண் களா இருக்கிறார்கள்? ஒருபெண்தான். அவளைத் திரு மால் கொண்டுபோனான்" என்று புலம்புகிறாள்.

 

ஒருமகள் தன்னை உடையேன்;

      உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்;

      செங்கண்மால் தான்கொண்டு போனான்;

 

பெருமகள் ஆய்குடி வாழ்ந்து

      பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமகளைக்கண் டுகந்து

      மணாட்டுப் புரஞ்செய்யுங்கோலோ!

 

அவளுடைய துக்கத்தைச் சொல்லும் இந்தப் பாட்டின் பல்லவிபோல நிற்பது, "ஒரு மகள் தன்னை உடையேன்" என்ற தொடர்தான்.

2

பெண்ணைப்பற்றிச் சொல்லும் தாய்மார்களின் பரிவை மேலே சொன்ன பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆண்பில்லையை உயர்வாகக் கருதினர் பழங்கால மக்கள். ஆதலின் ஒரு தாய்க்கு ஓர் ஆண்பிள்ளையானால் அவனிடம் தாய்க்கு எத்தனை அன்பும் பிடிப்பும் இருக்கும்! இலக்கியங்களில் இந்த அன்பைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் இடங்களும் உண்டு.

பழங்காலத்து வீரக்குடி ஒன்று. போர் என்று சொன்னால் அடுப்பங்கரையில் ஒளிக்கும் கோழைகள் அல்ல, அந்த வீட்டு ஆடவர்கள். பரம்பரை பரம்பரையாக அந்த இல்லிலே பிறந்தவர்கள் யாவருமே போரில் தம் வீரத்தைக் காட்டினவர்கள். ஒருவராவது நோய் வந்து செத்தார் என்பது இல்லை. எல்லாருமே போர்க்களத்தில் உயிரைக் கொடுத்துப் புகழை வாங்கிக்கொண்டவர்கள். இது பழந்தலைமுறைக் கதை.

இந்தத் தலைமுறை எப்படி? இந்த வீட்டில் இப்போது ஒரு பெண் இருக்கிறாள். ஒரு சின்னக் குழந்தை இருக்கிறான். ஆண் என்று சொல்வதற்கு அவன் ஒருவன்தான் உண்டு. அந்த வீட்டில் ஆணே இல்லையா? இப்போது இல்லை. முன்பு இருந்தார்கள். இவளுக்கு அண்ணன் இருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ஒரு போரில் படை வீரனாகச் சென்றான். அங்கே தன் உயிரைக் கொடுத்தான். சமீபத்தில் நடைபெற்ற போரில் இவள் கணவன் உயிர் துறந்தான். இப்போதும் போர் மூளும் போல இருக்கிறது.

போர் மூண்டால் ஆடவர் தினவுகொண்ட தோள் துடிப்பது பெரிது அன்று. பெண்களுக்கே வீர உணர்ச்சி உண்டாகிவிடும். வீட்டில் உள்ள ஆடவர்களைப் போருக்கு அனுப்புவதில் முனைவார்கள். "என் தமையன் போர்வீரன்" என்று சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு அளவற்ற பெருமை. இதோ போர்ப்பறை கேட்கிறது. இவள் தன்னுடைய ஒரே மகனைப் பார்க்கிறாள். அவனை அழைத்து முதலில் அவன் கையில் வேலைக் கொடுக்கிறாள். "போ சண்டைக்கு" என்கிறாள். பிறகுதான் அவனைப் பார்க்கிறாள். தலை மயிர் பறக்கிறது. இடுப்பில் நல்ல வேட்டியில்லை. அவசர அவசரமாகத் தலையில் எண்ணெயைத் தடவி வாருகிறாள்; வெள்ளை வேட்டியை விரித்து உடுத்துகிறாள். "போர்க்களத்துக்குப் போய் வெற்றியோடு வா" என்று அனுப்புகிறாள்.

இவளுடைய துணிவுதான் என்ன? இத்தகைய வீரப் பெண்டிரை முதல் மகளிர் என்று பழம் புலவர்கள் சொல்வார்கள். "இவளுடைய துணிவை நெஞ்சம் நினைக்கப் பயப்படுகிறதே! கெடுக இந்தச் சிந்தை எவ்வளவு கடுமையான துணிவு இவளுக்கு! இவள் வீரக்குடியில் உதித்தவள் என்பது தகும் தகும். அன்று ஒரு நாள் எழுந்த போரில் இவள் தமையன் யானையை வெட்டி வீழ்த்திப் போர்க்களத்தில் இறந்தான். நேற்று உண்டாயிற்று ஒரு சண்டை; அதில் இவள் கணவன் பெரிய பசுக்கூட்டத்தைப் பகைவர் கொண்டு போகாமல் தடுத்தான். அங்கேயே உயிரை நீத்தான். இன்றைக்கோ, போர்ப்பறை காதில் பட்டதுதான் தாமதம். அந்த ஒலி கேட்டதிலே ஒரு மகிழ்ச்சி. ஆனால் அடுத்த கணத்தில் 'அடடா, யாரை அனுப்புவது?' என்ற மயக்கம். அதுவும் மறு கணத்திலேயே போய்விட்டது. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை. அவனை அழைத்தாள்; வேலைக் கையிலே கொடுத் தாள்; வெள்ளை வேட்டியை விரித்து உடுத்தாள்; பரட்டைத் தலையிலே எண்ணெயைத் தடவி வாரினாள்; போர்க்களத்தைப் பார்த்துப் போ! என்று அனுப்புகிறாளே!" என்று கண்டவர் ஆச்சரியப் படுவதாகப் புலவர் பாடுகிறார்.

 

கெடுக சிந்தை!கடி துஇவள் துணிவே!

மூதில் மகளிர் ஆதல் தகுமே.

மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை

யானை எறிந்து களத்துஒழிந் தனனே;

நெருநல் உற்ற செரிவிற்கு இவள்கொழுநன்

பெருநிரை விலங்கி ஆண்டுப்பட்டவனே;

இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே.

 

[மூதில் மகளிர்-முதிய வீரக்குடியில் பிறந்த பெண்டிர். செரு-போர். தன்னை-தமையன். எறிந்து- கொன்று. களத்து-போர்க்களத்தில். நெருநல்-நேற்று. நிரை-பசுக்கூட்டம். விலங்கி-தடுத்து. பட்டனன் - இறந்தான். செருப்பறை-போர்முரசு.வெளிது-வெள்ளை வேட்டி. உடீஇ-உடுத்து. பாறு மயிர் - விரிந்த மயிர். செருமுகம்-போர்க்களம்.]

"ஒரு மகன் அல்லது இல்லோள்" என்பது அந்த மறமகளுடைய சிந்தைத் துணிவை எடுத்துக் காட்டுகிறது.

திருவாரூரில் வாழ்ந்து அரசு செலுத்திய மனு நீதிச்சோழன் வரலாறு தமிழ்நாடு நன்கு அறிந்தது. ஒரு கன்றுக்குட்டியின் மேல் தேரை விட்டு அது இறக்கும்படி செய்ததற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டு அந்தக் குற்றத்துக்குத் தண்டனை விதிக்க எண்ணிய செம்மையாளன் அவன்.அந்த மன்னன் தன் மகனைக் கீழே கிடத்தி அவன்மேல் தேரை ஊர்ந்த அருமைச் செயலைப்பாடுகிறார் சேக்கிழார். நெடுங்காலமாக இடையறாது வரும் சோழர் குலத்திற் பிறந்த பிள்ளை அவன். மனுநீதிச் சோழனுக்கு ஒரே பிள்ளை.இதனைச் சிறிதும் கவனியாமல் அறம் திறம்பக்கூடாது என்ற ஒரே கருத்தைக் கொண்டு மனு வேந்தன் தன் மைந்தனுடைய மார்பின்மேல் தேரை ஓட்டினான்.அவனுடைய அர சாட்சியின் அருமைதான் என்னே!' என்று பொருள் படப் பாடுகிறார்.

 

ஒருமைந்தன் தன்குலத்துக்கு

      உள்ளான்என் பதும்உணரான்;

தருமம்தன் வழிச்செல்கை

      கடன்என்று தன்மைந்தன்

மருமந்தன் தேர்ஆழி

      உறஊர்ந்தான்;மனுவேந்தன்

அருமந்த அரசாட்சி

      அசிதோமற்று எளிதோதான்?

 

அவன் ஒரு பிள்ளை என்பதை எடுத்தவுடனே சொல்கிறார். அப்படியிருந்தும் அதனை ஓராமல் அவன்மேல் மனுவேந்தன் தன் தேரை விட்டான் என்று சொல்லுவதில் அவ்வேந்தனுடைய நீதி முறையின் சிறப்புப் புலப்படுகிறது. அவன் அரு மந்த மைந்தன் தான், ஒரே பிள்ளையாகையால்;ஆனால் அவனைக்காட்டிலும் அருமையானது தருமம்.தன் மகனை அழிக்கலாம்; தருமத்தை அழிக்கக்கூடாது. அவன் தேர்க்காலில் ஊர்ந்தவன் சொந்தப் பிள்ளை என்று சொன்னால் போதாது;அவன் அவனுக்கு ஒரே பிள்ளை என்று சொன்னால் போதாது; அந் தக் குலத்துக்கே ஒரு பிள்ளை என்று சொல்லி, அவனையும் தியாகம் செய்யத் துணிந்தான் மனு வேந்தன் என்று புலப்படுத்துகிறார் சேக்கிழார்.

திருவிளையாடற் புராணத்திலும் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஒருத்தன் வருகிறான்.சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல் களில் மாமனாக வந்து வழக்குரைத்தது ஒன்று.தன பதி என்ற வணிகர் தலைவன் தன் தங்கையின்

மகனைத் தன் பிள்ளையாகக் கொண்டு வளர்த்து வந்தான். பிறது தன் சொத்தையெல்லாம் அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தவம் புரியப் போய்விட்டான். அவன் போனவுடன் அவனுடைய தாயாதிகள் அந்தச் சொத்தையெல்லாம் வௌவிக்கொண்டு அந்த இளங்குழந்தையைப் பரிதவிக்க விட்டு விட்டார்கள். அந்தக் குழந்தையின் தாயும்,தனபதியின் தங்கையுமாகிய மாது சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டுக் கொண்டாள். இறைவர் கட்டளைப்படி நியாய சபையில் தன் வழக்கை எடுத்துச்சொன்னாள். அப்போது சோமசுந்தரக்கடவுள் தனபதியைப் போன்ற உருவம் தாங்கி வந்து, நீதிபதிகளின் முன்பு வழக்குரைத்து மீட்டும் அந்தக் குழந்தைக்குச் சொத்துக்களை வாங்கித் தந்தார். இதுவே அந்தத் திருவிளையாடல்.

 

பையனுடைய தாய் சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிடுகிறாள்.

 

"அருட்பெருங்கடலே; எங்கும் இருப்பவனாகிய நீ உண்மையை அறிய மாட்டாயா? எனக்கு யார் பற்றுக் கோடு? நானோ பெண்பால். என் மகன் அறிவு நிரம்பாதவன்" என்றெல்லாம் சொல்லிப்புலம்புகிறாள். அப்படிச்சொல்வதற்கு முன் எடுத்த எடுப்பில், "நான் ஒருத்தி. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை இவன்" என்று தொடங்குகிறாள்.

 

ஒருத்தி நான்; ஒருத்திக்கு இந்த

      ஒருமகன்; இவனும் தேறும்

கருத்திலாச் சிறியன்;வேறு

      களைகணும் காணேன் ஐய!

 

அருத்திசால் அறவோர் தேறும்

      அருட்பெருங் கடலே, எங்கும்

இருத்தி நீ அறியாய் கொல்லோ?

      என்றுபார் படிய வீழ்ந்தாள்.

 

அவளுக்கு எத்தனை துக்கம், பாவம்! சுந்தரேசப் பெருமானிடம் அவள் மனமுருகிச்சொல்கிறாள்; 'ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஐயா! நீதான் காப்பாற்ற வேண்டும்' என்று சொல்கிறாள். அந்த வேண்டுகோள் பயன்பட்டது. மதுரைப் பெருமான் அவளுக்குத் துணையாக வந்தார்.

இவ்வாறு 'ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை'யின் அருமையை இலக்கியங்கள் சொல்கின்றன.

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)