மழை வேண்டாம்!

கி.வா.ஜகந்நாதன்

"மழை வேண்டாம்!" என்று அவர்கள் சொன் னார்கள்.'இப்படியும் சொல்வார் உண்டோ?' என்று நமக்குத்தோன்றுகிறது.எத்தனையோ காலமாக மழையைக் காணாமல் பஞ்சத்தில் அடிபட்ட நமக்கு, "வருமா, வருமா" என்ற ஏக்கம் இருப்பதுதான் இயற்கை. ஆனால், நமக்கு வேண்டிய மழை பெய்து, அதற்கு மேலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டி ஆற்றில் வெள்ளம், ஏரியில் உடைப்பு,குளங்களில் கரைகள் உடைந்து எங்கும் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், "மழையே!மழையே!வா,வா!" என்றா பாடுவோம்? "கடவுளே! இப்போதைக்கு மழை வேண்டாம்" என்றுதான் சொல்வோம்.

மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும்.அளவுக்கு மிஞ்சிப்போகும் எதனாலும் துன்பம் விளைவுதான் இயற்கை. குறைந்த மழையை அநாவிருஷ்டி என்றும், மிகு பெயலை அதிவிருஷ்டி என்றும் சொல்வார்கள்.இரண்டினாலும் துன்பம் உண்டாகும்.

மழை இல்லாமையால்,"மழை வேண்டும்" என்று கடவுளுக்குப் பூசை போட்டார்கள்; பழனியைச் சார்ந்த இடங்களில் வாழ்ந்த குறிஞ்சி நிலமக்களாகிய குறவர்கள் ஆவினன்குடி முருகனுக்குப் பூசை போட்டார்கள். முருகன் திருவருள் செய்தான்.மழை பெய்தது. ஆனால் அது அளவுக்கு மிஞ்சிவிட்டது. ஆகவே, "கடவுளே! எங்களுக்கு மழை போதும். இந்த மேகங்கள் கீழே வந்து மழை பெய்தது போதும். இனி மேலே போகட்டும்" என்று மறுபடியும் முருகனுக்குப் பூசை போட்டார்கள். மழை நின்றது. அவர்களுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. தாங்கள் விளைத்த தினையைச் சமைத்துப் பொங்கலிட்டு விருந்துண்டு களிக் கூத்தாடினார்கள்.

 

இதைப் புறநானூறு என்ற நூலில் கபிலர் என்ற பெரும்புலவர் ஒரு பாட்டில் சொல்கிறார்.

 

மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்,

மாரி ஆன்று மழைமெக்கு உயர்கெனங்

கடவுட் பேணிய குறவர் மாக்கள்

பெயல்கண் மாறிய உவகையர், சாரற்

புனத்தினை அயிலும் நாட.

 

'மலையில் மேகங்கள் வந்து சூழட்டும் என்று கடவுளுக்கு உயர்ந்த பூசனைப் பொருளைத் தூவி (வழி பட்டார்கள்). அப்பால்(மழை மிகுதியாகப் பொழிந்தமையால்) மழை நின்று மேகம் மேலே போகட்டும் என்று கடவுளை வழிபட்ட குறவர்கள், மழை மாறி விட்டதனால் மகிழ்ச்சி அடைந்து மலைச்சாரலிலே உள்ள புனத்தில் விளைந்த தினைச்சோற்றை உண்ணும் நாடனே' என்பது இதன் பொருள்.

இதே மாதிர் வேறு ஒரு நிகழ்ச்சியைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் பாடுகிறார்.

சோழ நாட்டில் திருப்புன்கூர் என்பது ஒரு தலம். நாடு முழுவதும் மழையில்லாமல் மக்கள் வாடினர்.

அப்போது திருப்புன்கூரிலுள்ள அன்பர்கள் ஆலயத் துக்குச் சென்று சிவபிரானிடம் ஒரு பிரார்த்தனை செய்துகொண்டார்கள். "கடவுளே!உலக முழுவதும் மழை மறந்து நீரற்றுப் போயிற்று.வயலில் நீரில்லை. அதனால் மக்கள் துன்பப்படுகின்றனர் மழைபெய்யச் செய்து நாங்கள் உய்யும்படி திருவருள் பாலிக்க வேண்டும்.தேவரீருக்குப் பன்னிரு வேலி நிலத்தை எழுதி வைக்கிறோம்" என்று வேண்டிக் கொண்டார்கள். இறைவன் அருளால் மழை பெய்யத்தொடங் கியது.ஊரார் சிவபிரானுக்குப் பன்னிரு வேலியை எழுதி வைத்தார்கள்.

மழை விடாமற் பெய்தது.எங்கும் வெள்ளம் பரந்தது.அளவுக்கு மிஞ்சி மழை பெய்தது.'இனிப் பெய்தால் நாடு முழுவதும் நாசமாகும்' என்று அஞ்சி அன்பர்கள் மறுபடியும் இறைவனிடம் வந்தார்கள். 'திருப்புன்கூர்ப் பெருமானே! உன்னுடைய திருவரு ளால் மழை பெய்தது போதும்.இனிமேல் மழை வேண்டாம்.மழை நின்றால் மறுபடியும் பன்னிரு வேலி தேவரீருக்குத் தருகிறோம்' என்று பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

மழை நின்றது. ஊரார் மறுபடியும் பன்னிரண்டு வேலியை ஆலயத்துக்கு எழுதி வைத்தார்கள்.இந்த நிகழ்ச்சியைப் பின்வரும் தேவாரத் திருப்பாட்டினால் உணரலாம்.

 

வையகம் முற்றும் மாமழை மறந்து

      வயலில் நீர்இலை மாநிலம் தருகோம்

உய்யக் கொள்கமற் றெங்கனை என்ன

      ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந்தெங்கும்

 

பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்

      பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளும்

செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்

      செழும்பொழில்திரும்புன்கூர் உளானே!

 

"திருப்புன்கூரில் உள்ள சிவபெருமானே! உலக முழுவதும் பெரிய மழை மறந்து வயலில் நீர் இல்லை. உனக்குப் பெரிய நிலத்தைத் தருவோம்.எங்களை உய்யும்படி செய்யவேண்டும்' என்று வேண்ட ஒளியையுடைய வெள்ளை முகிலாகப் பரந்து(கறுத்துப்) பெய்த பெரு மழையால் உண்டான பெரிய வெள்ளத்தை மாற்றி, மறுபடியும் பன்னிரண்டு வேலி நிலம் கொண்டருளிய அருட் செய்கையைக்கண்டு, (நீ வேண்டுவார் வேண்டிய வண்ணம் அருளும் பெருந்தகை என்பதை உணர்ந்து) நின் திருவடியைப் புகலாக அடைந்தேன்" என்பது பொருள்.

முன்னே சொன்னது கொங்கு நாட்டுக்கதை; அதைப்பாடியவர் கபிலர்.பின்னே சொன்னது சோழநாட்டுக்கதை; அதைப் பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார்.

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)