புன்னையின் கதை

கி.வா.ஜகந்நாதன்

ஆழமும் அகலமும் காணமுடியாத கடலின் கரையிலே புன்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஆழம் காணமுடியாத காதலையுடைய அவ்விருவரும் அந்தப் புன்னைப் பூம்பொழிலில் சந்தித்து அளவளாவி இன்புற்றனர். இன்னும் அவர்களுக்கு மணம் ஆகவில்லை. களவிலே சந்தித்துக் காதலை வளர்த்தனர். காதலியின் தோழி ஒருத்தி அவர்களுடைய காதற்கொடி படர்வதற்குக் கொம்பு நட்டுப் பந்தரிட்டுப் பாதுகாத்தாள்.

காதலன் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்து தன் காதலியைச் சந்திப்பான். அவன் வேறு இடத்திலிருந்து வருகிறவன். அவனும் கடற்கரையில் உள்ள ஓர் ஊருக்குத் தலைவன்; செல்வமும் அழகும் வலிமையும் பெற்றவன். காதலியின் ஊரும் கடற்கரையைச் சார்ந்தே இருந்தது. அதன் அருகில் உள்ள புன்னைப் பொழிலில்தான் அவ்விருவரும் கண்டு அளவளாவினர்.

அவர்களுடைய உறவு தொடங்கிச் சிறிது காலமே ஆயிற்று. ஆயினும் பல ஆண்டுகள் பழகினவர்களைப் போல ஆகிவிட்டனர். அவர்களுடைய உயிர்கள் ஒன்றனை ஒன்று பல பிறவிகளாக அறிந்து கொண்டவை போலும்; இவ்வுலகத்தில் இப்பிறவியில் இதுகாறும் ஒருவரை ஒருவர் அறியாமல் சில ஆண்டுகள் வாழ்ந்தார்களே. அதுதான் அதிசயம். அவர்கள் பிரிவின்றி வாழப் பிறந்தவர்கள்.

காதலன் காதலியைச் சந்தித்துப் பிரித்து செல்வான். அவனோடு அளவளாவிய போதெல்லாம் இன்பம் கண்ட காதலி. அவன் பிரிந்தபோது எல்லையில்லாத துன்பத்துக்கு ஆளானாள். அவனைப் பிரிந்திருக்கும் நேரமெல்லாம் அவளுக்குத் தீயின்மேல் இருப்பதுபோல் இருந்தது. ஆம், அவள் பிரிவுத்தீயிலே வெதும்பினாள்.

இது அவளுடைய ஆருயிர்த் தோழிக்குத் தெரிந்தது. காதலனைக் களவிலே சந்திக்கும் நேரம் சிறிது; அவனைப் பிரிந்து வாழும் நேரம் பெரிது. ஆகவே, காதலிக்குப் பிரிவினால் வரும் துன்பமே பெரிதாக இருந்தது.

காதலன் காதலியைப் பிரியாமல் எப்போதும் உடன் உறைந்தால் அவளுக்குத் துன்பம் இராது. களவுக் காதல் புரிந்துவரும் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? ஆனால்....ஆனால்...

தோழி சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்தக் கட்டிளங்காளை தன் தலைவியை ஊரார் அறியத் திருமணம் செய்து கொண்டால் என்றும் பிரியாமல் வாழலாம். அவனுடைய வீட்டுக்கே சென்று உலகறியக் கணவன் மனைவியராக வாழ்ந்து இல்லறம் நடத்தலாம்.

இந்த எண்ணம் தோன்றியவுடன் தோழிக்கு ஆறுதல் பிறந்தது. அந்த இரண்டு காதலர்களையும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

காதலனாகிய அந்த ஆடவன் எல்லா வகையிலும் உயர்ந்தவன். அவனிடம் தோழி, "நீ எங்கள் தலைவியை மணம் செய்துகொள்ள வேண்டும்" என்று வெளிப்படையாகச் சொல்வது மரியாதை அன்று. அவனே,'நாம் இனி இவளை மணப்பதுதான் சரி' என்று எண்ணி, அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவனோ களவிலே பெற்ற இன்பப் போதையினால் தலைவிக்குத் தன்னைப் பிரியும் காலத்தில் துன்பம் உண்டாகும் என்பதையே நினையாமல் இருக்கிறான். அவன் தன் காதலியைப் பிரிந்திருக்கும் போதிலெல்லாம் பல வேலைகளில் ஈடுபடும் வாய்ப்புள்ளவனாதலின் அவனுக்கு அத்தகைய துன்பம் மிகுதியாக இல்லை.

அவனுக்குத் தன் காதலியை மணம் செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்படி செய்யவேண்டும். அதற்கு வழி என்ன என்பதைத் தோழி உன்னினாள். இப்போது அவனும் அவளும் பிறர் அறியாமல் ஒன்று படுகிறார்களே, இது எளிதில் நிகழ்வதன்று; இதற்ககுப் பல இடையூறுகள் உண்டு என்பதை அவன் உணர்ந்தானானால், அந்த இடையூறுகள் இல்லாமல் அவளைச் சந்திக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றி, அதற்குத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே ஏற்றதென்று தெரிந்து கொள்வான். ஆதலின் களவுப் புணர்ச்சியில் இடையூறுகள் உண்டு என்பதை அவன் தெரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும்.

வழி தெரிந்தவுடன் முயற்சி பலமடைகிறது. தோழி தலைவனுக்குக் குறிப்பாக களவுப் புணர்ச்சியில் உள்ள இடையூறுகளை உணர்ந்த முற்படுகிறாள். நாள் தோறும் சந்திக்கும் இடத்தை மாற்றுகிறாள் காலத்தையும் இடத்தையும் அமைத்துக் கொடுத்து அவர்கள் உறவுக்கு உரமிடுகிறவள் அவள்தானே? இவ்வாறு மாற்றி அமைப்பதைக் குறி பெயர்த்திடுதல் என்று தமிழ்ப் புலவர்கள் சொல்வார்கள்.

இடத்தை மாற்றும் எண்ணமுடைய தோழி அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுகொண்டாள்.

காதலனும் காதலியும் ஒரு குறிப்பிட்ட புன்னை மரத்தின் நிழலில் சந்தித்தார்கள். ஒருநால் காதலன் வந்து அளவளாவி விட்டு விடைபெற்றுச் செல்லத் தொடங்கினான். அப்போது தோழி அவனைக் கண்டு தன் கருத்தை நிறைவேற்ற முயன்றாள்.

 

"நாளை முதல் இந்தப் புன்னை மரத்தடிக்கு வர வேண்டாம்" என்றாள் அவள்.

 

"ஏன்?" என்று கேட்டான் தலைவன்.

 

"இப்போதுதான் இந்தப் புன்னை மரத்தைப் பற்றி எங்கள் அன்னை சொன்ன செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை நினைந்தால் இதன் அடியில் நீங்கள் சந்திப்பது தகாது என்று தோன்றுகிறது."

 

"என்ன செய்தி அது?"

 

"ஒருநாள் எங்கள் தாயும் நானும் நின் காதலியும் இந்தப் பக்கமாக வந்தோம். அப்போது இந்த மரத்தைக் கண்டவுடன் எங்கள் தாய் சற்று நின்றாள். அவள் முகத்தில் ஒரு விதமான மலர்ச்சி ஏற்பட்டது. ' ஏனம்மா நிற்கிறாய்?' என்று கேட்டோம். அப்போது இந்தப் புன்னை மரத்தின் கதையைச் சொன்னாள்" இப்படிக் கூறித் தலைவியின் தாய் சொன்னதைத் தோழி எடுத்துச் சொன்னாள்.

*

தாய் இளம் பெண்ணாக இருந்த காலம் அது. வேறு இளம் பெண்களோடு அந்தக் கடற்கரையில் விளையாடுவது அவள் வழக்கம். புன்னைக் காய்களைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு விளையாடுவார்கள்.ஒருநாள் அப்படி விளையாடியபோது ஒரு புன்னைக் காயை மணலுக்குள்ளே புதைத்து வைளையாடினார்கள். பிறகு விளையாட்டுப்போக்கில் அதை மறந்து வீட்டுக்குப் போய்விட்டார்கள்.

இரண்டு மூன்று நாள் கழித்த பிறகு ஒருநாள் அந்த இடத்தில் புன்னைக்கொட்டை முளை விட்டிருப்பதை அவள்- தலைவியின் தாய்- கண்டாள். 'அடே! நாம் அன்று புதைத்து மறந்துவிட்டுப் போய்விட்டோம். அது முளைத்திருக்கிறதே!' என்று ஆச்சரியப் பட்டாள். அவளுக்கும் அவளுடைய தோழிகளுக்கும் அதனிடம் தனியே ஓர் அபிமானம் தோன்றிவிட்டது; தம் கையால் நட்ட வித்திலிருந்து தோன்றிய முளை என்ற அபிமானம். அது முளைக்கவேண்டும் என்று எண்ணி அவர்கள் புதைக்கவில்லை. ஆனாலும் அது முளைத்துவிட்டது. எதிர்பாராமல் தோன்றியமையால் அவர்களுக்கு வியப்பு; தாங்கள் புதைத்தது என்பதனால் ஆனந்தம்.

இனி அதை நன்றாக வளர்க்கவேண்டும் என்ற பற்று உண்டாகிவிட்டது,. இளங் குழந்தைகளின் நெஞ்சிலேதான் எத்தனை ஆசை! அதற்கு நீர் வார்த்து வளர்ப்பதா! சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பாலூட்டி யல்லவா வளர்க்கவேண்டும்? அவர்கள் தம் வீட்டில் நெய்யும் பாலும் உண்டு வளர்கிறவர்கள். அவர்களூடைய குழந்தையாகிய அந்தப் புன்னையும் நெய்யும் பாலும் உண்டு வளரவேண்டும். தினந்தோறும் பாலும் நெய்யும் கொண்டு வந்து விட்டு வளர்த்தார்கள். பாலிலும் தண்ணீர் இருக்கிறது. வானிலிருந்து பெய்யும் மழைநீர் இருக்கிறது. இவற்றால் அந்தப் புன்னை முளை இலைவிட்டுச் செடியாயிற்று.

"அந்தச் செடி வளர்ந்து மரமாகி விட்டது. அது தான் இது. நெய்யும் பாலும் ஊட்டி உங்களை வளர்ப்பதற்கு முன்னே இந்தப் புன்னைக்கு நெய்யும் பாலும் ஊட்டி இதனை வளர்த்தேன். இதுதான் என் முதற் குழந்தை. அந்த முறைப்படி பார்த்தால் இந்தப் புன்னை உங்களுக்கு அக்காளாக வேண்டும்" என்று தாய் சொன்னாள். இதைத் தோழி இப்போது தலைவனிடம் கூறினாள்.

 

"உங்களைக்காட்டிலும் சிறந்தது இது. உங்களுக்குக் தமக்கையாகும்" என்று அன்னை சொன்னாள். இந்தப்புன்னை யக்காளுக்குப் பக்கத்தில் களவிலே சந்திப்பதற்கு எங்களுக்கு செட்கமாயிராதா? இந்தக் கடற்கரையில் மரத்துக்குப் பஞ்சம் இல்லை. இன்னும் பல மரங்கள் இருக்கின்றன" என்று கூறினாள்.

மரத்தைக் குழந்தை போலப் பாதுகாக்கும் உயர்ந்த பண்பை அவனும் அறிவான். தம்முடைய தமக்கையாகப் பாவித்து ஒழுகும் பெண்களின் நுட்பமான உணர்ச்சியும் அவனுக்கு விளங்கியது.

அவன் குணத்திற் சிறந்த தலைவன். கடற்கரை ஊருக்குத் தலைவன். வலம்புரிச் சங்கங்கள் முழங்கும் கடல் துறையை உடையவன். பாணர்கள் தம் யாழில் விளரிப்பண்ணை வாசித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் வலம்புரிச்சங்குகளின் முழக்கம். அத்தகைய உயர்நிலையில் உள்ள இந்தக் கட்டழகன் அறிவும் உணர்ச்சியும் உடையவன். அதனால் தோழியின் கூற்றை நன்றாகத் தெரிந்து கொண்டான். அதனூடே மறைந்திருக்கும் குறிப்பை அறிந்தான். 'இந்த இடத்தை விட்டுவிட்டால் இனி இங்கே வேறு இடம் பார்ப்பது ஏன்? வலம்புரிமுழங்கும் நம்முடைய கடற்கரை ஊருக்கே இவளைக் கொண்டுபோய்விடலாம். களவாக அல்ல, கல்யாணம் செய்து கொண்டு, இவளுக்கு நான் கணவன் என்ற உரிமையோடு என் காதலியை அழைத்துச் செல்லலாம்' என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகிவிட்டது.

அதைத்தானே தோழி விரும்பினாள்?

தோழி தலைவனிடம் புன்னையக்காளைப் பற்றிச் சொன்னதை நற்றிணை என்ற சங்க நூலில் உள்ள பாட்டு ஒன்று நமக்குத் தெரிவிக்கிறது.

 

"விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முனை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப,

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்" என்று

அன்னை கூறினள், புன்னையது சிறப்பே.

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே

விருந்திற் பாணர் விளரிஇசை கடுப்ப

வலம்புரி வான்கொடு நாலும் இலங்குதிர்த்

துறைகெழு கொண்க! நீ நல்கின்

நிறைபடு நீழல் பிறவுமார் உளவே.

["விளையாடுகின்ற பெண்களின் கூட்டத்தோடு வெள்ளையான மணலில் அழுத்தி மறந்து விட்டுச் சென்ற கொட்டையானது முளைவிட்டுத் தளிர்க்க, நெய்யோடு இனிய பாலைப் பெய்து இனிமையாக நாங்கள் வளர்த்துவர, உம்மைவிடச் சிறந்ததாயிற்று; அதனால் உங்கள் தமக்கை ஆகும்" என்று இந்தப் புன்னையின் சிறப்பை அன்னை கூறினாள். ஆதலால் உம்மோடு இங்கே மகிழ்ந்திருப்பதற்கு நாணுகின்றோம். புதுமையான பாணர்கள் பாடும் விளரிப் பண்ணைப்போல வெள்ளிய வலம்புரிச் சங்கு முழங்குவதும், விலங்கும் நீரை யுடையதுமாகிய கடல் துறையையுடைய தலைவனே! நீ நின் காதலிக்கு மகிழ்ச்சியை வழங்குவதானால்,அதற்கு ஏற்றபடி நிறைந்திருக்கின்ற மரநிழல் பிறவும் இருக்கின்றன.

ஆயம்-மகளிர் கூட்டம். காழ்-கொட்டை. அகைய- தழைக்க. நுவ்வை-நும் தவ்வை; உங்கள் அக்காள். நாணுதும்-நாணம் அடைகிறோம். நகை-மகிழ்ச்சி. விருந்து-புதுமை, கடுப்பு-ஒப்ப. வான்கோடு-வெள்ளைச் சங்கு.நரலும்-முழங்கும். கொண்க-தலைவ. நல்கின்- வழங்கினால், பிறவுமார்; மார்; அசை நிலை.]

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)