கம்பர் முகந்தது

கி.வா.ஜகந்நாதன்

தமிழ்த்தாயின் அணிகலங்களுள் காப்பியச் சுவை பல நிரம்பி விளங்கும் சிந்தாமணி, கற்றவர் உள்ளங்களைக் களிக்கச் செய்யும் சிறந்த நூல். பெரும் புலவர்கள் இந்தக் காப்பியக் கடலுள் துளைந்து விளையாடி இன்புற்றார்கள். பிற்காலத்தில் தமிழில் காப்பியங்களை இயற்றிய கவிஞர் அனைவரும், சிந்தாமணியை நன்றாக ஆராய்ந்து, அதன் சொல்லையும் பொருளையும் தம்முடைய நூல்களில் எடுத்து ஆண்டிருக்கின்றனர்.

தமிழில் சுவைப் பிழம்பாய் விளங்கும் இராமாயணத்தைப் பாடிய கவிச் சக்ரவர்த்தியாகிய கம்பர், சிந்தாமணியின் அமைப்பை நன்றாகக் கண்டு ஈடுபட்டார். சொல், பொருள், யாப்பு, அணி என்ற வகைகளில் சிந்தாமணியிலே கண்டவற்றை அவர் பொன்னே போலப் போற்றிப் பொதிந்து கொண்டார். சிந்தாமணியைப் புதையலெடுத்தாற் போல எடுத்து அணி செய்து தமிழ் உலகில் உலவவிட்ட தமிழ்ப் பேராசிரியப்பிரானாகிய 'மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள்', சிந்தாமணியின் மூன்றாம் பதிப்பு முகவுரையிலே ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கிறார்கள்:

'.....இராமாயணத்தைக் கம்பர் அரங்கேற்றுகையில்,'அள்ளிமீ துலகை வீசும்' (விபீடணன் அடைக்கலப் படலம். 133) என்னும் பாடலில் உள்ள, 'வெள்ளிவெண் கடலின்' என்ற பகுதியைக் கேட்ட புலவர் ஒருவர், 'இது சிந்தாமணிப் பிரயோகமாய் இருக்கிறது' என்று சொல்லியபோது கம்பர், 'சிந்தாமணியிலிருந்து ஓர் அகப்பை முகந்து கொண்டேன்' என்று விடை பகர்ந்தனர் என்பது பழைய பிரதி ஒன்றில் எழுதிய குறிப்பால் தெரிய வருகிறது என்பதே அச்செய்தி. இதனால், கம்பர் சிந்தாமணியாற் பெற்ற பயன் இன்னதென்பது நன்கு தெரியவரும்.

ஒருவர், "உலகமே சுவைக்கவில்லை!" என்று சொல்கிறார்; "எந்தப் பொருள் எப்படிப் போனால் என்ன? சூரியன் எங்கே உதயமானால் என்ன?" என்று பேசுகிறார்; "உலக வாழ்க்கையில் இன்பம் காணும் முயற்சியே இனி வேண்டாம்" என்றும் சொல்கிறார். அவர் இலக்கியத்தில் இன்பங் கண்டவர். இப்போது அதுகூட வேண்டாம் என்கிறார். நல்ல தமிழ்க் காப்பியங்களை ஆவலுடன் வாசித்தவர், அவர் அப்புலவர் அருமையாக எடுத்துக் கூறும் காவியங்கள் மூன்று; திருக்குறள் ஒன்று.

 

திருத்தக்க மாமுனிசிந் தாமணி கம்பர்

விருத்தக் கவித்திறனும் வேண்டேம் - உருத்தக்க

கொங்குவேள் மாக்கதையைக்* கூறேம் குறள்அணுகேம்

எங்கெழிலென் ஞாயி றெமக்கு?

 

*கொங்குவேள் மாக்கதை - கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை.

 

என்பது அந்த இலக்கிய ரசிகர் கூற்று. என்ன காரணத்தாலோ ஒரு சமயத்தில் மனம் நைந்து இப்படிக் கூறினாலும் அவர் கூற்றிலிருந்தே அவருக்குத் தமிழ் நூல்களில் எத்தனை ஆர்வம் இருக்கிறதென்பது தெளிவாகும். 'நல்ல தமிழ் நூல்களே வேண்டாம் என்ற நிலை வந்த பிறகு சூரியன் உதயமாவதைப் பற்றி நமக்கு என்ன கவலை?" என்றல்லவா அவர் சொல்கிறார்?

இங்கே அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நூல்களுள், சிந்தாமணி முதலில் நிற்கிறது. அதனை அடுத்துக் கம்பராமயணம் வருகிறது. இரண்டும் காப்பியச் சுவையிலே சமானமாய் நிற்பவை என்று அவர் எண்ணினார் போலும்! கம்பரையும் திருவள்ளுவரையும் 'தமிழுக்குக் கதி' என்று சொல்வது ஒரு வழக்கு. தமிழ்க் காவிய உலகத்தில் கம்பரும் திருத்தக்கதேவரும் கதி என்று புதிய வழக்கு ஒன்றை நாம் புக விட்டால், அது உண்மைக்கு மாறு ஆகாது.

கம்பர் சிந்தாமணியிலிருந்து பல சொற்களையும் சொற்றொடர்களையும் முகந்துகொண்டிருக்கிறார்; பொருளமைதியையும் காவிய மரபையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்; இன்ன வகையான செய்திகளை இன்ன வகையான செய்யுளில் சொல்லவேண்டு மென்பதையும் தெரிந்து அமைத்திருக்கிறார். பலபல உவமைகளை மொண்டு கொண்டிருக்கிறார். அவர் முகந்துகொண்டது ஓர் அகப்பையே என்றாலும், அது மிகமிகப் பெரிய அகப்பை! அவர் தம்முடைய அகமாகிய பையையே அகப்பையாகக் கொண்டு முகந்திருக்க வேண்டும்!

அவர் முகந்து கொண்டவற்றை நூல்பிடித்துப் பார்த்து வரையறுப்பது எளிய காரியம் அன்று. ஆனாலும் சிலசில உதாரணங்களால் கம்பருக்குச் சிந்தாமணி எவ்வாறு உதவியாய் விளங்கியது என்பதைப் புலப்படுத்தலாம்.

---------

முதலில் சொல்லைக் கவனிக்கலாம். ஐயரவர்கள் முகவுரைக் குறிப்பில் 'வெள்ளிவெண்' என்ற பிரயோகத்தைச் சிந்தாமணிப் பிரயோகம் என்று ஒரு புலவர் கூறியதாகக் காட்டியிருக்கிறார்கள். 'வெள்ளி' என்றோ 'வெண்மை' என்றோ சொல்லாமல், இரண்டையும் சேர்த்துச் சொல்லியவர் திருத்தக்க தேவர். 'மழைத் தாரைகள் வெள்ளை வெளேரென்று வெள்ளிக் கோலைத் தொங்கவிட்டாற்போல் இருந்தன' என்பது தேவர் கூறும் வருணனை. அங்கே,

 

.. ... ... ... வெள்ளிவெண்

கொல்தி ரைத்தன பொற்கொழுந் தாரைகள்

 

என்கிறார்.

 

நாற்றிசையிலும் அருவி விழுகிறது. அதன் நீர் ஒழுக்கு வெள்ளிக் கம்பிகளைப் போல இருக்கிறதாம்.

 

வெள்ளி வெண் திரள் விசித்து*

 

என்று வருகிறது பாட்டு. இந்த 'வெள்ளி வெண்' என்ற தொடரையே கம்பர் எடுத்து ஆண்டார். 'இராமன் கடற்கரையில் குரங்குக் கூட்டத்திற்கு மத்தியில் இருந்தான். பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தவன் தேவர்கள் வேண்டத் துயிலெழுந்து அமர்ந்திருந்தவன் போல இருந்தது அந்தக் காட்சி' என்று கம்பர் கூறுகிறார்.

 

வெள்ளிவெண் கடலின் மேனாள்

      விண்ணவர் தொழுது வேண்டப்

பள்ளிதீர்ந் திருந்தான் என்னப்

      பொலிதரும் பண்பி னானை

 

என்பது பாட்டு.

 

'நமர்' என்பதற்கு 'நம்மவர்' என்பது பொருள். நமர்களை அழைப்பதாயின், 'நமர்களே' 'நமர்காள்' என்று அழைப்பது இயல்பு. சிந்தாமணியில் முதல் முதலாக, 'நமரங்காள்' என்ற விளியைத் திருத்தக்க தேவர் அமைத்தார்.

 

நம்குடித் தெய்வம் கண்டீர்

      நமரங்காள்! அறிமின் (547)

செல்வம் நமரங்காள்! நினையன்மின்;

      செய்தவமே நினைமின் கண்டீர் (2623)

நம்பன்மின் செல்வம் நமரங்காள்!

      நல்லறமே நினைமின் கண்டீர் (2624)

 

என அச்சொல்லைச் சிந்தாமணியிலே கண்டார் கம்பர்;

 

நாகக் குன்றின் நின்றன காண்மின் நமரங்காள்!

நளினக் காடே ஒப்பன காண்மின் நமரங்காள்!

நாவாய் மானச் செல்வன காண்மின் நமரங்காள்!

நடக்கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள்!

நழுவிச் செல்லும் இயல்பின காண்மின் நமரங்காள்!

நாளின் முற்றா வெண்பிறை போலும் நமரங்காள்!

நகரம் நோக்கிச் செல்வன காண்மின் நமரங்காள்!

 

என்று களங்காண் படலத்தில் பல இடங்களில் அச்சொல்லைப் பெய்து கொண்டார். அப்பால் வந்தவராகிய குமர குருபரரும் இச் சொல்லை எடுத்தாண்ட கற்பனை நயம் பெறச் செய்திகளைச் சொல்வதில் தேவரும் கம்பரும் வல்லவர். சில கற்பனைகளைத் தேவரிடமிருந்து கம்பர் பெற்றுத் தமது காவிய மாளிகையிலே பொருத்தியிருக்கிறார்.

உழவர் வயல்களில் வேலை செய்கின்றனர். சிலர் களை பறிக்கின்றனர். மற்றக் களையெல்லாம் களைந்தவர்கள், குவளையையும் தாமரையையும் தொடவில்லையாம். அவை தம் காதலிமார் கண்ணைப் போலவும் முகத்தைப் போலவும் இருந்தமையால் அவற்றைக் களையாமல் விட்டார்களாம்.

 

கண்ணெனக் குவளையுங் கட்டல் ஓம்பினார்;

வண்ணவாண் முகமென மரையின் உள்புகார்;

பண்எழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்;

தண்வயல் உழவர்தம் தன்மை இன்னதே!

(கட்டல்-களையெடுத்தல். ஓம்பினார்-நீக்கினார். மரை-தாமரை)

 

குவளை களைதலை நீங்கினார், அவை காதலிமார் கண்களைப் போன்று இருந்தமையால் தாமரையின் பக்கத்திலே கூடப் போகவில்லை; அவை தம் காதலிமார் வண்ணவாள் முகமெனத் தோன்றினமையால் குவளையையும் தாமரையையும் கண்டபோது அவைகளைகள் என்ற நினைவையே மறந்து, தம் காதலிமார் அழகை நினைந்தனர். அந்த நினைப்பிலே அவர்கள் உள்ளத்தில் இன்பம் கொந்தளித்தது. பாடல்களை அந்த உற்சாகத்திலே பாடத் தொடங்கினார்கள்; மெல்லப் பாடினார்கள். இந்தக் காலத்துப் பாடகர்கள்கூட, வார்த்தைகளை விழுங்கிவிட்டு ராகத்தால் பூசி மெழுகுகிறார்களே; அப்படிப் பாடவில்லை. எழுத்தின் இயல் நன்றாக வெளிப்படும்படியாக, அட்சர சுத்தமாக, பண்களைப் பாடிப் பரப்பினார்கள். குளிர்ந்த வயலில் உள்ள உழவர்களின் இயல்பு இப்படிப்பட்டது. மலர்க் காட்சியும் மங்கையர் நினைப்பும் இனிய பாடலும் ஒன்றுபடும் இடமாக அந்தத் தண்வயல் விளங்குகிறது.

கம்பர் இந்தப் பாட்டைப் பார்த்தார். அவர் நாட்டுப் படலத்தில் மள்ளர்களைக் காட்டுகிறார். இந்தப் பாட்டின் கருத்தைப் பின்னும் கம்பர் விரிவாக்கினார். கோசல நாட்டு மள்ளர்கள் களை பறித்தலையே விட்டுவிட்டு நின்றார்களாம். அதற்கு இரண்டு காரணம்: ஒன்று, வயல் முழுவதும் குவளையும் தாமரையும் ஆம்பலுமாகவே நிற்கின்றன; அவை கடைசியருடைய கண்ணையும் கையையும் காலையும் முகத்தையும் வாயையும் நினைப்பூட்டுகின்றன. இரண்டு, அவர்கள் காமத்தால் மயங்கி நின்றார்கள். அதோடு கள் மயக்கமும் சேர்ந்து கொண்டது. அதனால், எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்ற மாட்டாமல் மனம் மயங்கி நிற்கிறார்கள். சின்னப்புத்தி படைத்தவர்கள் காமத்தின் வயப்பட்டால் கடமையைச் செய்ய முடியுமா, என்ன? அவர்கள் எங்கே அதிலிருந்து பிழைக்கப் போகிறார்கள்!

கம்பர் இவ்வாறு வருணித்துக் 'காமத்தைப் பெற்ற சிறியோர் உய்யமாட்டார்' என்ற நீதியையும் இங்கே இணைத்து விட்டார்.

 

பண்கள்வாய் மிழற்றும் இன்சொற்

      கடைசியர் பரந்து நீண்ட

கண்கைகால் முகம்வாய் ஒக்கும்

      களையலால் களையிலாமை

உண்கள்வார் கடைவாய் மன்னர்

      களைகலா துலவி நிற்பார்;

பெண்கள்பால் வைத்த நேயம்

      பிழைப்பரோ சிறியர் பெற்றால்?

[கடைசியர்-மள்ளருடைய மனைவிமார். இலாமை- இல்லாமல். உண்கள்வார் கடைவாய்- தாம் உண்ட கள் ஒழுக்ன்ற கடைவாயை உடைய. மள்ளர்- உழவர்.களைகலாது- களையாமல்]

பதுமை என்பவள் தூங்கிக்கொண்டிருந்தபோது சீவகன் அவளைப் பிரிந்து போய்விடுகிரான். கண் விழித்த பதுமை,தன் அரும்பெறற் காதலனைக் காணாமல் வருந்துகிறாள்; கண்ட கண்ட பொருள்களையெல்லாம் பார்த்துப் புலம்புகிறாள்; கிளியையும் பூவையும் அன்னத்தையும் மயிலையும் விளக்கையும் மாடத்தையும் விளித்து என்ன என்னவோ சொல்கிறாள்.

மயிலைக்கண்டாள். அதன் தோகையிலேதான் எத்தனை கண்கள்! அவள் கயற் கண்ணினாள்; அந்தக் கண்ணை மூடித் தூங்க்ப்போனாள். அப்போது சீவகன் பிரிந்து மறைந்தான். மயிலினுடைய கண், மூடாத கண் அல்லவா? அத்தனை கண்களில் ஒன்றாவது அவனைப் பார்த்திராதா? அவன் எந்த வழியாகப் போனான் என்று தெரிந்து கொண்டிராதா?- பாவம்!

பதுமை பிரிவு பொறாமல் இப்படியெல்லாம் நினைக்கிறாள். 'மையில்லாத கண், மயிற்கண்; தூங்காத கண். மெய்யெல்லாம் அப்படிப் பல கண்களைப் படைத்தது மயில். அவற்றைக் கொண்டு உண்மையைக் கண்டிருக்குமே! ஐயன் சென்ற இடத்தை அறிந்திருக்குமே!' ஆம் அதைக் கேட்டுக்கொண்டே ஒரு கும்பிடு போட்டாள் பதுமை.

 

மையில் வாள்நெடுங் கண்வள ராதன

மெய்யெ லாம்உடை யாய் மெய்ம்மை காண்டிநீ

ஐயன் செந்றுழிக் கூறுகென் றாய்மயில்

கையி னால்தொழு தான்கயற் கண்ணினாள்.

 

[மை இல்-மை இல்லாத. வான்-ஒளி. வளராதன- தூங்காதனவாகிய. காண்டி-பார்ப்பாய். சென்றுழி- சென்றவிடத்தை. ஆய்மயில்- அழகையுடைய மயில்.]

 

'மயில் அத்தனை கண்களாலும் பார்த்திருக்கக் கூடுமே!' என்று பிரிவினால் மயங்கிய ஒருத்தி கூறும் இதைக் கம்பர் கண்டார்; நல்ல இடத்தில் இதைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டு மென்று நினைத்தார். அவருடைய காவியத்திலேதான் இராமனும் சீதையும் பிரிந்து வாடும் கட்டங்கள் இருக்கின்றனவே! வேறு ஒரு கவிஞராயிருந்தால், சீதை வருந்துவதாக வரும் இடத்தில் இந்தப் பாட்டை அப்படியே தூக்கி வைத்து விடுவார். கம்பர் சாமர்த்தியசாலி; எதையும் புதுமெரு கேற்றிப் பொலிவூட்டுபவர். இராமன் சீதையைப் பிரிந்து வருந்துமிடத்தில் பல கண்களையுடைய மயிலைக் கொண்டு வந்தார். இராமன் அதைப் பார்க்கிறான். அது ஆயிரம் கண்களையுடையது; நிச்சயம் சீதை போகுமிடத்தைப் பார்த்தே இருக்கும். கம்பர், 'நீ பார்த்தாயா? சொல்' என்று இராமன் சொன்னதாக அமைக்கவில்லை. அப்படி அமைத்தால்' பதுமைக்குப் பதில் இராமன் சொல்வதாக இருப்பதை யன்றி மற்ற எல்லாம் ஒன்றாகவே இருக்குமே! 'ஆடவன் சொல்வதிலே பின்னும் நயம் காட்டலாம்' என்று எண்ணினார்.

மயில் ஆடுகிறது; சீதை சென்றதை ஆயிரங் கண்களால் பார்த்தும் அது இப்படிச் சிந்தை உவந்து ஆடுவதற்குக் காரணம் என்ன? சீதைக்கும் மயிலுக்கும் பகை உண்டு. ஆம்! னுன்பெல்லாம் சீதையைக் கண்டால் மயில் முன்னே நிற்காமல் ஓடும்; அவளுடைய சாயலைக்கண்டு, ' இந்தச்சாயல் நமக்கு இல்லையே!' என்று அழுக்காறு அடைந்து ஒதுங்கி மனம் வெதும்பிப் பகைவரைப் போலே திரியும். இப்போது சிந்தை உவந்து ஆடுகின்றது. இராமன் தன் உயிர் போன்ற சீதையைத் தேடிக்கொண்டிருக்கிறான். மயில் நினைத்தால் உண்மையைச் சொல்லலாம். ஏனென்றால், அது நிச்சயமாக அவளைக் கண்டிருக்கிறது. ஆயிரங் கண்ணுடைய அதற்குத் தெரியாமல் ஒளிந்து போகமுடியுமா?

இராமன் கூற்றாக வைத்து, இத்தனை எண்ணங்களையும் அவன் வெளிப்படுத்துவதாகக் கம்பர் பம்பைப் படலத்தில் பாடுகிறார்:

 

ஓடா நின்ற களிமயிலே!

      சாயற்கு ஒதுங்கி உள்ளழி*ந்து

கூடா தாரின் திரிகின்ற

      நீயும் ஆகம் குளிர்ந்தாயோ?

 

தேடா நின்ற என்னுயிரைத்

      தெரியக் கண்டாய் சிந்தை உவந்து

ஆடாநின்றாய் ஆயிரங்கண்

      உடையாய்க்கு ஒளிக்கு மாறுண்டோ?

 

[ஓடாநின்ற-முன்பெல்லாம் ஓடுகின்ற. அழிந்து-வருந்தி கூடாதாரின் -பகைவரைப் போல உடை யாய்க்கு -உடைய உனக்கு]

* *

காவியங்களில் முதலில் மழையைப் பற்றிக் கூறி மழை பெய்ய நீர்மல்கி அருவி பாய்ந்து ஆறாகி, ஆற்று வெள்ளம் பாய்ந்து வயல் வளம் பெறுவதாக அமைப்பது மரபு. இந்த மரபுக்கு வழி காட்டியவர் திருத்தக்க தேவர். கம்பர் அதனை விரிவாக அமைத்தார். அப்படியே திணை வருணனையும் திணை மயக்கமும் காவியத்தில் அமைவதைச் சிந்தாமணியில் முதலிற் காணலாம். காப்பிய நாயகனுக்கும் நாயகிக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலைச் சிந்தாமணி பல இடங்களில் காட்டும்; கம்பரும் காட்டுகிறார்.

உயர் நிலையில் வாழும் தலைவிமார்களுக்கு வினைவல பாங்கினராகக் கூன் , குறள், சிந்து என்ற விகார உருவத்தினர் இருப்பதாகப் பழைய நூல்கள் கூறும். பெருங்கதையாசிரியர் அதை அமைத்திருக்கிறார். சிந்தாமணியிலும் வருகிறது; கம்பரும் சொல்கிறார். ஆனால் சிந்தாமணியிலும் இராமாயணத்திலும் தலைவி புறப்படுகையில் இந்தக் கூட்டத்தினர் உடன் வருகின்றனர்.

காந்தருவ தத்தை அழகாக அலங்காரஞ் செய்து கொண்டு புறப்படுகிறாள். அவளுடன் குறளும் சிந்தும் வந்தனவாம். குறள், மிகக் குட்டையான வடிவம்; அதைவிடச் சிறிது உயர்ந்தது சிந்து. அவை கையை வீசி நடப்பது தேரை நடப்பது போல இருந்ததாம்.

 

ஆரம் துயல்வர அந்துகில் சோர்தர

வீரம் பட க்கையை மெய்வழி வீசித்

தேரை நடப்பன போற்குறள் சிந்தினொ

டோரும் நடந்தன ஒண்டொடி முன்னே.

 

[ஆரம் துயல்வர - முத்து மாலை அசைய துகில் = ஆடை. ஓரும் - அசை. ஒண்டொடி - காந்தருவதத்தை.]

இராமாயணத்தில் சீதை திருமண மண்டபத்துக்கு வருகிறாள். தோழிமார் புனைந்த அணிகளும் மணிகளும் ஆடையும் அழகு செய்ய நடந்து வருகிறாள். அப்போது சிந்து குறள் கூன் ஆகிய கூட்டங்கள் வந்து பணிகின்றன; அவளுடன் வருகின்றன.

 

சிந்தொடு குறளும் கூனும்

சிலதியர் குழாமும் தெற்றி

வந்தடி வணங்கிச் சுற்ற

மணியணி விதான நிழல்

இந்துவின் கொழுந்து விண்மின்

இனத்தொடும் வருவ தென்ன

நந்தலில் விளக்க மன்ன

நங்கையும் நடக்கலுற்றாள். (கோலங்காண். 23.)

 

[சிலதியர்= *** மகளிர். குழாம் - கூட்டம். தெற்றி - நெருங்கி. இந்து சந்திரன். விண்மீன் - நட்சத்திரம். நந்தல் இல் விளக்கம் - அவியாத விளக்கு.]

இராமன் நகர் நீங்கிய பிறகு அயோத்தி நகரம் ஜீவனற்றுக் கிடந்ததைக் கம்பர் சோகச் சுவை சொட்டச் சொட்டப் பாடுகிறார். சிந்தாமணியில் முத்தியிலம் பகத்தில் சீவகன் துறவை மேற்கொண்டபோது நகரம் பொலிவழிந்திருந்ததைத் தேவர் வருணிக்கிறார். இரண்டிலும் பல கருத்துக்கள் ஒத்து நடப்பதைக் காணலாம்.

* *

இன்ன சுவையுள்ள பகுதிக்கு இன்ன வகையான செய்யுள் பொருத்தமாக இருக்கும் என்று ஆய்ந்து அமைப்பது பெருங் கவிஞருக்கு இயல்பு. அந்த வகையிலும் சிந்தாமணியைக் கண்டு கம்பர் அமைத்த இடம் சில உண்டு. கம்பர் பின்னும் நுணுக்கமாக அமைத்தவற்றைப் பிற்காலக் கவிஞர்கள் கடன் கொண்டு அமைத்திருக்கிறார்கள்.

சீவகனைப் பிரிந்த பதுமை, அருகிலுள்ள பொருள்களை யெல்லம் பார்த்துப் புலம்புகிறாள்.

 

நிரைவி ழருவிந் நிமிர்பொன் சொரியும்

வரையே! புனலே! வழையே! தழையே!

விரையார் பொழிலே! விரிவெண் ணிலவே!

உரையீர் உயிர்கா வலனுள் வழியே *

 

என்பது போன்ற கலி விருத்தங்களைத் திருத்தக்கதேவர் அங்கே அமைக்கிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பரும். சீதை இராவணனால் சிறையெடுக்கப் பெற்றுச் செல்லும்போது இந்தச் சந்தத்தில் அமைந்த கலி விருத்தங்களையே ஆளுகிறார்.

-------------------------------------

* வரிசையாக விழும் அருவியானது ஒளி ஓங்கும் பொன்னைச் சொரிவதற்கு இடமான மலையே, நீரே, சுரபுன்னையே, மரங்களின் தழையே, வாசனை கொண்ட சோலையே, விரிந்த வெள்ளியே,நிலவே, என் உயிருக்குக் காவலனாகிய சீவகன் இருக்கும் இடத்தைச் சொல்வீராக.

 

மலையே! மரனே! மயிலே! குயிலே!

கலையே! பிணையே! களிறே! பிடியே!

நிலையா உயிரேன் நிலைதே றினிர்போய்

உலையா வலியா ருழைநீர் உரையீர் * (சடாயு உயிர் நீத்த. 77)

 

என்பது போன்ற பாடல்களைப் படிக்கும்போது மேலே சொன்ன சிந்தாமணிப் பாடல்களைப் படித்த நினைவு வருவது இயல்பே.

பின்னும் சுந்தர காண்டத்தில், அசோக வனத்தில் தனியிருந்து புலம்பும் சீதையின் வாக்கை இதே சந்தத்தில் கம்பர் காட்டுகிறார்.

 

தழல்வி சக(?)லாய் வருவா டைத ழீஇ

அழல்வீர்! எனதா வியறிந் திலிரோ?

நிழல்வி ரையனார் உடன்நீர் நெடுநாள்

உழல்வீர் கொடியீர் உரையா டிலிரோ? + (உருக்கட்டு 6)

 

என்ற இடத்தைக் காண்க.

கவிக்குச் சுவைதரும் அலங்காரங்கள் பலவற்றுள் தலைமை பெற்றது உவமை. பெருங்கவிஞர்கள் இடத்துக்கு ஏற்றபடியும் பொருளுக்கு ஏற்றபடியும் பாத்திரங்களுக்கு ஏற்றபடியும் உவமைகளை அமைப்பார்கள். திருத்தக்க தேவர் பல புதிய புதிய உவமைகளைக் கூறுகிறார். கம்பரும் உவமை கூறுவதில் சளைத்தவர் அல்லர்; சில சில உவமைகளைச் சிந்தாமணியினின்றும் எடுத்துச் சிறிது மாற்றியும் கூட்டியும் போற்றி வைக்கிறார்.

-----------------

* மலையே, மரமே, மயிலே, குயிலே, ஆண் மானே,பெண்மானே, ஆண்யானையே, பெண்யானையே, நிலைநில்லாத உயிரையுடைய எனது நிலையைத் தெரிந்துகொண்டு போய்த் தளராத வலிமையை யுடைய என் காதலரிடம் சென்று நீர் உரைப்பீர்களாக.

+ கொடியீர், (கொடிகளே என்றும், கொடியவர்களே என்றும் இருபொருள் படும்படி இச்சொல் அமைந்தது.) நெருப்பின் வெம்மை வீச உலாவி வரும் வாடைக் காற்றைத் தழுவிக்கொண்டு என் உயிர் எரியும்படி செய்கிறவர்களே, இதனை நீங்கள் அறியவில்லையோ? நிழல் காட்டும் கடல் போன்ற திருமேனியை உடைய என் காதலருடன் நெடுநாள் பழகி அலைந்தவர்களே, அவருக்கு என்னைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ?

மழைத் தாரைக்கு வெள்ளி வெண் கோலைத் தேவர் உவமை கூறினார். கம்பர் வெள்ளி விழுதைக் கூறினார்:

 

.... .... ..... வெள்ளிவெண்

கோல்நி ரைத்தன போற்கொழுத் தாரைகள்

வான்நி ரைத்து மணத்து சொரிந்தவே

      (சிந்தாமணி 33)

(நிரைத்தனபோல் - வரிசையாக வைத்தவற்றைப் போல. நிரைத்து - வரிசையாக நின்று.)

 

வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்

... ...... வழங்கின மேகமே.

      (கம்பராமாயணம்)

(வீழ் - விழுது. வீழ்த்தென - வீழச்செய்ததுபோல. தாரைகள் - மழைத்தாரைகளை.)

 

இராசமாபுரத்தின் வீதிகளில் பல நாட்டு மக்களும் வந்து குழுமுகிறார்கள். பதினெட்டுப் பாஷையைப் பேசுகிறவர்களும் கூடித் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பேச்சின் ஒலிக்குத் திருத்தக்க தேவர் ஓர் உவமை கூறுகிறார். ஆல மரத்தில் பட்சிக் கூட்டங்கள் சேர்ந்து பல பல விதமான ஓசையை எழுப்புமே, அப்படி இருந்ததாம்:

 

இட்டஎள் நிலப்படா வகையின் ஈண்டிய

முட்டிலா மூவறு பாடை மாக்களால்

புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய

மட்டிலா வளநகர் வண்ணம் இன்னதே.

 

[எள்போட்டால் எள் நிலத்தில் விழாதபடி கூடியிருந்த குறைவில்லாத பதினெட்டுப் பாஷைகளைப் பேசும் மக்களால், பல வகைப் பறவைகள் பழகுகிற ஆலமரத்தைப் போன்ற சிறப்பைப் பெற்றதும் எல்லையற்ற வளத்தை உடையதுமாகிய நகரத்தின் இயல்பு இத்தகையது.]

இந்த உவமையைக் கம்பர் எடுத்துக் கொண்டார். ஆனால், இதைத் திருப்பி உபமானத்தை உபமேயமாக்கினார். அதாவது, பதினெட்டுப் பாஷைக்காரர் பேச்சுக்குப் பறவைகளின் ஒலியைத் தேவர் உவமை குறினார்; கம்பர் பறவைகளின் ஒலிக்குப் பதினெட்டுப் பாஷைக்காரர் பேச்சை உவமை கூறினார். பம்பைப் பொய்கையில் இன்னவென்று காண முடியாத பல ஒலிகளைச் சோர்வில்லாமல் ஒலிக்கின்றன பல புட்கள். ஆரியம் முதலிய பதினெண் மொழிபேசும் சாமானிய மக்கள் ஓரிடத்தில் கூடினால் எப்படிச் சளசளவென்று பேசுவார்களோ அப்படி இருந்தது அந்த இரைச்சல்.

 

ஆரியம் முதலிய பதினெண் பாடையிற்

பூரியர் ஒருவழிப் புகுந்த போன்றவ,

ஓர்கில கிளவிகள் ஒன்றொ டொப்பில

சோர்வில் விளம்புபுள் துவன்று கின்றது.

 

[பூரியர் - பாமர மக்கள். துவன்றுகின்றது - நெருங்கியுள்ளது.]

 

நாலு பேர் கூடும் இடத்தில் தங்கள் தங்கள் பேச்சைச் சளசளவென்று பேசிக் கொள்பவர்கள் பாமர

மக்களாகத்தான் இருக்கக்கூடும். ஆதலின், 'அறிவற்றவர்' என்னும் பொருள்பட, 'மாக்கள்' என்று தேவர் கூறினார். கம்பர் அதைப் பின்னும் விளக்குபவர் போல, 'பூரியர்' என்றே கூறிவிட்டார். அதோடு இரண்டு ஒலிகளுக்கும் பொதுவான லட்சணங்களையும் விரித்திருக்கிறார். கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதவை, ஒன்று போல ஒன்று அமையாதவை. சோர்வில்லாமல் சதா கேட்பவை-பாமரர் பேச்சுக்கள். அதுவும் பதினெட்டுப் பாஷைகள் பேசும் பெருங்கூட்டத்துப் பேச்சுக்கள் இப்படித்தானே இருக்கும்? பறவைகளின் ஒலியும் இப்படித்தான் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.

போர் நடக்கிறது. குதிரை இங்கும் அங்கும் சென்று சுழன்று வருகிறது.

 

கூட்டுற முறுக்கி விட்ட

      குயமகன் திகிரி போல

வான்திறல் தேவ தத்தன்

      கலினமா ... ... ...

... ... திரியும் அன்றே (786)

 

என்று குலாலனது சக்கரத்தை உவமை கூறினார் தேவர். மிதிலையிலே வரும் கலினப் பாய் மாவும் (கடிவாளத்தையுடைய குதிரை) குலாலன் முடுக்கிவிட்ட மட்கலத் திகிரி போலவே வந்தன என்கிறார் கம்பர்.

 

கொட்புறு கலினப் பாய்மா

      குலால்மகன் முடுக்கி விட்ட

மட்கலத் திகிரி போல

... ... ... வருவ

 

என்பது கம்பர் வாக்கு. 'முடுக்கி விட்ட' என்ற பாடம் வழங்கினாலும்,'முறுக்கிவிட்ட' என்ற பாடம் ஒன்று இருக்க வேண்டுமென்பது சிந்தாமணிப் பாட்டைக் கொண்டு பார்த்தால் தெரியவில்லையா?

 

சந்திரோதயம் ஆகின்றது. இருட்டிலே கைவிளக்

கெடுத்தாற் போலச் சந்திரன் தோன்றுகிறதாம்.

 

ஏறனாற் கிருளை திங்கக்

கைவிளக் கேத்தி யாங்கு

வீறுயர் மதியந் தோன்ற (1542)

 

என்பது சிந்தாமணி.

 

.... ..... ..... வானம்

கைவிளக் கெடுத்த தென்ன

வந்தது கடவுட் டிங்கள்

      (தைலமாட்டு 49)

 

என்பது இராமாயணம்.

செல்வம் நிலையாமையைத் திருத்தக்க தேவர் கூற வருகிறார்; அதற்கு விளக்கை உவமை கூறுகிறார். அதே உவமையைக் கம்பர் வாழ்க்கை நிலையாமைக்குக் காட்டுகிறார்.

 

புரிமுத்த மாலைப் பொற்கோல்

      விளக்கினுட் பெய்த நெய்யும்

திரியுஞ்சென் றற்ற போழ்தே

      திருச்சுடர் தேம்பி னல்லால்

எரிமொய்த்துப் பெருக லுண்டோ?

      இருவினை சென்று தேய்ந்தால்

பரிவுற்றுக் கெடாமற் செல்வம்

      பற்றியார் அதனை வைப்பார்? (2316)

 

என்பது திருத்தக்க தேவர் வாக்கு.

 

புண்ணிய நறுநெயிற் பொருவில் காலமாம்

திண்ணிய திரிவினில் விதியென் தீயினில்

எண்ணிய விளக்கு, அவை இரண்டும் எஞ்சினால்

அண்ணலே! அவிவதற் கையம் யாவதோ?

 

என்பது கம்பர் வாக்கு.

இரண்டிலும் நெய்யும் திரியும் ஆகிவிட்டால், அவிக்கின்ற விளக்கைக் காண்கிறோம். புண்ணிய பாவம் என்ற இரண்டை நெய்யும் திரியுமாகச் சொன்னார் தேவர். கம்பரோ, புண்ணியத்தையும் காலத்தையும் நெய்யாகவும் திரியாகவும் சொன்னார். அங்கே அவிகின்ற விளக்கு, செல்வம்; இங்கே அவிகின்ற விளக்கு வாழ்க்கை. இரண்டிடத்திலும் திருச்சுடர் தேம்புகிறது. விளக்கு அவிகிறது. இந்த உவமையினிடையே தேவர் வாக்கைக் கம்பர் அறிந்து பயன்படுத்திக் கொண்டார் என்ற செய்தி அவியாது

விளக்க முறுகிறது.

தேவர் படைத்த சிந்தாமணி விருந்துப் பானையில் கம்பர் இவ்வாறு மொண்டு கொண்டவை பல. இவை சில உதாரணங்கள். இவற்றைப் பார்த்தாலே கம்பர் முகந்து கொண்ட அகப்பை மிகப் பெரிது என்பது தோன்றவில்லையா?

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)