உழவர் மொழி

கி.வா.ஜகந்நாதன்

ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே ஒருவரைச் சிநேகம் பிடித்தேன். யாரோ கிராமவாசி. ஆனாலும் நாகரிகம் தெரிந்தவராக இருந்தார். கலகலப்பாகப் பேசினார். அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவர் ஒரு வேளாளர் என்று அறிந்தேன். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த ஊரில் அவருக்கு நாலு ஏகரா நன்செய் இருக்கிறதாம்.

பேசிக்கொண்டே வந்தேன். அவரும் ரஸமாகப் பேசினார். யாரோ ஒருவர் தம் பையன் சரியாகப் படிக் காமையால் பரீட்சையில் தோல்வியுற்ற கதையைச் சொன்னார். " காலேஜில் அவனுக்கு இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை" என்று சொல்லி முடித்தார். அதைக்கேட்ட என் நண்பராகிய அந்த விவசாயி, "உழவுக் காலத்தில் ஊரைவிட்டே போய்விட்டால் அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டாம்" என்று ஒரு பழமொழியை வீசினார்.

"உங்கள் தொழிலுக்கு ஏற்ற பழமொழியைச் சொல்கிறீர்கள்" என்றேன்.

"ஆமாம்; என் தொழில் என்ன? இந்தியாவுக்கே அதுதானே தொழில்? அதை விட்டு விட்டுத்தான் இப்போது ஆலாய்ப் பறக்கிறார்கள். நிலம் படைத்தவர் எல்லாம் பட்டணத்திலே போய் உட்கார்ந்து கொண்டால் நிலத்தில் என்ன விளையும்? குத்தகைக்கு விட்டு விட்டுக் குத்தகைக்காரன் தருவதை வாங்கிச் செலவு செய்தால் என்ன லாபம்? நிலந்தான் உருப்படுமா? உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?" உத்தியோகம் பண்ணிப் பண்ணி என்ன கண்டார்கள்? 'உழவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார்' என்ற வசனத்தைக் கேட்டதில்லையா?"

உத்தியோகத்தில் எத்தனை பேர் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்?"

அங்கொருவர் இங்கொருவராக இருந்தால் போதுமா? ஆயிரம் சொல்லுங்கள். தன் நிலத்தைத் தானெ உழுது பயிர் செய்கிறவனுக்குச் சமானம் யாருமில்லை. ' உழவு அற உழுதவன் ஊரில் பெரியவன்"

நான் நடுவே குறுக்கிட்டேன். ' உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுகோலும் மிஞ்சாது என்று சொல்லுகிறார்களே! அப்படி இருக்க உழவினால் எப்படி முன்னுக்கு வருகிறது?

" அதுவா? அந்தப் பழமொழிக்குத் தப்பாக அர்த்தம் செய்துகொண்டு பேசுகிறார்கள் ஜனங்கள்; வியாபாரிதான் ஒவ்வொன்றுக்கும் கணக்குப் பார்த்துச் செட்டாக வியாபாரம் பண்ணவேண்டும். வேளாளன் செட்டாக இருந்தால் ஒன்றும் பயன் இல்லை. அவன் கணக்குப் பார்க்க ஆரம்பித்துக் கூலிக்கு அஞ்சி உழவைக் குறைத்தாலும், பணத்துக்கு அஞ்சி உரத்தைக் குறைத்தாலும் விளைவு மோசமாகிவிடும். அதனால் தான் ' செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை' என்று சொல்லுவார்கள்".

கும்பகோணத்தித் தாண்டி விட்டோம். அங்கே வாழைத் தோட்டங்கள் இருந்தன. அவற்றில் இலையை அறுத்திருந்தார்கள். அதைப் பார்த்த என் நண்பர்." இலை தின்னி காய் அறியான்" என்றார்.

தினமும் சாப்பிடுவதே கஷ்டமாக இருக்கும் ஏழைக்குக் குப்பையில் முளைத்த கீரைதான் கறி அவன் இலையைத் தின்னுகிறவன். அவனுக்குக் காய் வாங்க பணம் ஏது? இதுதான் அந்தப் பழமொழொயின் பொருள் என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர் அதை இப்போது கூறுவதற்குக் காரணம் என்ன?

 

"வாழைக்கும் அந்தப் பழமொழிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

"வாழையை வைத்தால் இலை நறுக்கக்கூடாது. இலையை நறுக்கிவிட்டால் காய் சிறுத்துவிடும். இலையை நறுக்கிப் போட்டுச் சோறு தின்றால் காய் உதவாமற் போய்விடும்" என்று அவர் விளக்கினார்.

"வீட்டுக் கொல்லையிலே வாழை போட்டால் இலைக்குத்தானெ உதவுகிறது?"

"வாழையடி வாழையாக வரணுமே ஒழிய வாழையோடு வாழையாக வளரவிட்டால் காய் நன்றாக இருக்காது. எட்டு அடி வாழையும் பத்து அடி பனையும் என்று சொல்லுவார்களே; கேட்டதில்லையா? இடம் விட்டு நட்டால்தான் நல்ல வளர்ச்சி ஏற்படும்"

அவர் எங்கே வாழையைப்பற்றி ஒரு பிரசங்கமே செய்துவிடப் போகிறாரோ என்று பயந்து போய் என் பேச்சை மாற்றத் தொடங்கினேன்.

"உங்கள் ஊரில் கமுகந் தோட்டம் இல்லையா?"

"அதெல்லாம் மலையாளத்தில்தான். அதிகம் கமுகை வைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம். கை காய்த்தால்தான் கமுகு காய்க்கும்" என்றார்.

"கை காய்ப்பதாவது!" ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"அதற்குத் தண்ணீர் விட்டு தண்ணீர் விட்டுக் கையில் காய்ப்பு ஏற்படவேண்டும். அவ்வளவு பாடு பட்டால்தான் கமுகைக் காப்பாற்றலாம்."

 

"அவர் தம் பிள்ளையைப் பற்றிச் சொன்னார். அதற்கு நீங்கள் ஒரு பழமொழி சொன்னீர்கள். அதிலிருந்து எத்தனையோ பழமொழிகளைக் கொட்டி விட்டீர்கள்" என்று நான் சொன்னேன்.

"பிள்ளைகளை வளர்க்கிறது எவ்வளவு அருமை! விளையும் பயிர் முளையிலே தெரியும். இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லாம் பிஞ்சிலே பழுக்கிற பேர்வழிகள். விழலுக்கு இறைத்த நீர்போலத் தங்கள் இளமைக் காலத்தை வீண் ஆக்குகிறார்கள்."

"பெரியவர்கள் பிள்ளைகளைக் கவனித்து வந்தால் அவர்கள் சரியாக இருப்பார்கள்."

"வேலியே பயிரை மேய்கிறது போல வயசானவர்களுக்கே ஒன்றும் தெரிகிறதில்லை. நல்ல முறையில் அவர்கள் வாழ்ந்தால் பிள்ளைகளும் நன்றாக இருப்பார்கள். 'பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்' என்பது பொய்யாகவா போகும்? 'ஆச்சா விதைத்தால் ஆமணக்கு முளைக்குமா?' தாம் மனம் போனபடி நடந்தால் அவர் பிள்ளைகள் அதற்கு மேல் நடக்கிறார்கள். 'பாவி பாவம் பதராய் விளைந்தது' என்று சொல்கிறது மெய்யான பேச்சு."

அவர் விவசாயத்தில் ஊறினவர். அவர் பேச்சிலெல்லாம் விவசாயப் பழமொழிகள் துள்ளின.

"விவசாயத்தைப்பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய நாடு விவசாய நாடு. ஆனால் எல்லோரும் விவசாயம் செய்ய முடியுமா? நிலம் வேண்டாமா?" என்று நான் கேட்டேன்.

"நிலமா? காந்தி சொன்னாரே; ஒரு சின்ன டப்பாவில் தக்காளிச் செடியையாவது பயிரிடுங்கள் என்று சொன்னாரே; அது நினைவு இருக்கிறதா? அவரவர்கள் வீட்டுக் கொல்லையில் ஏதாவது செடி நடலாம். 'அவரைக்கு ஒரு செடி. ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை' என்று சொல்வதைக் கேட்டதில்லையா? குழியிற் பயிரைக் கூரைமேல் ஏறவிட்டாற் போயிற்று; 'ஆடிமாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய் காய்க்கும்.' இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய அநுபவமே இன்று பழமொழிகளாக வழங்குகிறது."

நான் இறங்குகிற இடம் வந்து விட்டது. அதனால் அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன்.

"'வேல மரத்துக்கு நிழல் இல்லை; வெள்ளாளருக்கு உறவு இல்லை' என்று சொல்லுவார்கள். நான் அப்படி இல்லை. என்னை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் ஊர்ப்பக்கம் எப்போதாவது சௌகரியப்பட்டால் வாருங்கள்" என்று அவர் விடையளித்த போதும் ஒரு பழமொழியைச் சொந்னார்.

அவர் இந்தக் குறுகிய காலத்துக்குள்ளே சொன்னவையே இத்தனை என்றால் இன்னும் எத்தனை பழமொழிகள் அவரிடம் இருக்கின்றனவோ!

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)