தலைச் சங்கம்

கி.வா.ஜகந்நாதன்

அகத்திய முனிவர் பொதியில் மலையிலே வளர்த்து வந்த சங்கம் தமிழ் நாட்டுக்குச் சிறப்பை உண்டாக்கியது. தமிழ்ச் சான்றோர் அச்சங்கத்தில் கலந்து கொண்டனர். இயல், இசை, நாடகம் என்று மூன்று வகையாகப் பிரித்துத் தமிழை ஆராய்ச்சி செய்தார்கள். இலக்கண இலக்கியங்களை இயலென்று பிரித்தார்கள். பண்ணையும் பாட்டையும் இசையென்று வகுத்தனர்; அபிநயம், ஆடல் என்பவற்றை நாடகமாக அமைத்தனர். இந்த மூன்று திறத்திலும் ஆராய்ச்சி விரிவடைந்தது.

தமிழ் நாட்டில் இயல் தமிழாகிய இலக்கண இலக்கியங்களில் வல்ல புலவர்கள் அங்கங்கே இருந்தனர். இசைத்தமிழாகிய பண்ணிலும் பாட்டிலும் இசைக் கருவிகளிலும் வல்ல பாணரும் பொருநரும் விறலியரும் வாழ்ந்து வந்தனர். கூத்தில் வல்ல கூத்தரும் அங்கங்கே சிதறுண்டு கிடந்தனர். அவர்களுடைய கலைத் திறத்தைப் பாதுகாக்கும் முயற்சியை அகத்தியரைத் தலைவராகக் கொண்ட சங்கத்தினர் செய்யலாயினர்.

நாட்டில் அமைதி இருந்தால்தான் கலைகள் ஓங்கும். அமைதியின்றி ஆட்சி வழுவி அறம் மாறிக் கொடுங்கோன்மை மலிந்தால் அந்த நாட்டிலே பேரறிவாளர் இருந்தாலும் அவர்களுடைய முயற்சிக்குப் பாதுகாப்பு இராது. நாளடைவில் அவர்கள் மங்கி மறைவார்கள்.

தமிழ் நாட்டில் தமிழ் வழங்கத் தொடங்கிய காலம் இன்னதென்று வரையறுப்பது மிகவும் கடினமான செயல். தமிழுக்கு ஜாதகம் எழுதும் சோதிடர் யாரும் இல்லை. பிறந்த நாள் தெரியாமல் வளர்ந்த சோடும் தெரியாமல், இன்னும் தெய்வத் திருவருள் விலாசத் தோடு விளங்குவதனால் பராசக்தியைக் கன்னி என்று ஓதுவர் பெரியோர். தமிழும் அத்தகைய இயல் புடையதே. ஆதலின் இதனைக் கன்னித் தமிழ் என்று சான்றோர் வழங்கினர். தமிழரிடையே தமிழ் நெடுங்காலமாக வழங்கியது.

அவர்கள் வாழ்வு சிறக்கச் சிறக்க அவர்கள் பேசும் மொழியும் சிறப்பு அடைந்தது. ஒரு மொழிக்குச் சிறப்பு, அதில் உள்ள நூல்களால் அமையும். தமிழில் பல நூல்கள் உண்டாயின. ஆனால் தமிழர் வாழ்வில் அமைதியில்லாமற் போகவே, தமிழ் நூல்கள் ஆதரிப்பா ரற்று மங்கலாயின. புலவருடைய புலமையைப் போற்று வார் இல்லை.

இத்தகைய காலத்தில் அகத்தியர் தென்னாட்டுக்கு வந்து அறநெறியை நிமிர்த்தினார். ***மீட்டும் தமிழ்நாடு வளம் பெறலாயிற்று. தமிழரசர் வலி பெற்றனர். தமிழ் தழைக்கத் தொடங்கியது. மூலை முடுக்கில் அடங்கி ஒடுங்கியிருந்த புலமை வெளியாகியது. அகத்திய முனிவர் நிறுவிய தமிழ்ச் சங்கம் பல புலவர் கள் சேரும் பெருங் கூட்டமாயிற்று.

'இந்த நாட்டுமொழி எவ்வளவு அழகாக இருக்கிறது! அறிவு சிறந்த இயலும், இன்பம் மலிந்த இசையும், அறிவும் இன்பமும் ஒருங்கே செறிந்த கூத்தும் நிலவும் இந்த நாடு இறைவனுக்கு உகந்தது. இந்த மொழியில் மீட்டும் நல்ல இலக்கண நூல்கள் எழ வேண்டும்' என்று விரும்பினார் தவமுனிவர் அகத்தியர். இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ் நூல் களையும் ஆராய்ந்தார். அவற்றில் வல்ல புலவர் களோடு பழகி மரபு வகைகளைத் தெரிந்து கொண்டார். பேரறிவு படைத்தவராகையால் அந்த மூன்று தமிழுக்கும் உரிய பெரிய இலக்கண நூல் ஒன்றை இயற்றத் தொடங்கினார்.

எந்த வகையிலும் குறைவில்லாத அத் தவ முனிவர் மிக எளிதில் இலக்கண நூலை இயற்றி நிறை வேற்றினார். அகத்தியரால் இயற்றப் பெற்றதாதலின் அதற்கு அகத்தியம் என்ற பெயர் உண்டாயிற்று. பொதியிற் சங்கத்துப் புலவர்கள் அதைக் கண்டு பெரிதும் போற்றினர். பாண்டிய மன்னன் பெருமிதம் அடைந்தான்.

அக்காலத்தில் தமிழ்நாடு மிக விரிவாக இருந்தது. இப்போது தமிழ் நாட்டின் தெற்கெல்லையாக உள்ள குமரி முனைக்கும் தெற்கே பல மைல் தூரம் தமிழ் நாடு பரவியிருந்தது. அங்கே நாற்பத்தொன்பது பகுதிகள் தமிழ் நாட்டைச் சார்ந்திருந்தன என்று புலவர்கள் தெரிவிக்கிறார்கள். குமரிமலை யென்று ஒன்று இருந்ததாம். குமரியாறு என்று ஒரு நதி அந்த நிலப்பரப்பிலே ஓடியதாம். பஃறுளியாறு என்ற ஆறு ஒன்று மிகத் தெற்கே இருந்தது. அவற்றை யெல்லாம் பிற்காலத்தில் கடல் விழுங்கி விட்டது. பூகம்பம் ஒன்று நேர்ந்து அவை மறைந்தன.

முன் இருந்த நிலப் பரப்பில் மிகத் தெற்கே மதுரை என்ற நகரம் இருந்தது. இப்போதுள்ள மதுரை வடக்கே இருப்பதால் இதற்கு வட மதுரை என்ற பெயர் வழங்கியது. தமிழ் நாட்டில் இரண்டு மதுரைகள் இருந்தமையால் ஒன்று தென் மதுரை யெனவும், மற்றொன்று உத்தர மதுரை யெனவும் வழங்கின.

பழைய மதுரையில் பாண்டிய மன்னன் அரசு புரிந்து வந்தான். அகத்தியர் பொதியிற் சங்கத்தை வளர்த்து வந்த காலத்தில் அந்த மதுரைதான் பாண்டிய நாட்டுத் தலை நகராக விளங்கியது. அடிக்கடி அகத்திய முனிவருடைய தரிசனத்தைப் பெற்றுப் பொதியிற் சங்கத்தில் ஒரு புலவனாக இருந்து தமிழ் இன்பம் நுகர்ந்த பாண்டியன், தன் நகரத்தில் சங்கம் வைக்கவேண்டு மென்று விரும் பினான். புலவர்கள் யாவரும் சேர்ந்து வாழ்வதற்கு உரிய இடம் தலை நகராதலின், அங்கே தமிழ்ச் சங்கம் வைத்து நடத்துவது எளிதாக இருக்கும் என்று அவன் கருதினான். இராசதானி நகரத்துக்குத் தமிழ்ச் சங்கம் பெரும் சிறப்பை உண்டாக்கு மென்பதும்

அவன் எண்ணம்.

அகத்தியர் அவன் விருப்பத்தைத் தெரிந்து மகிழ்ந்தார். வரவரப் பெருகிக் கொண்டிருக்கும் புலவர் கூட்டத்தை அரசனால் பாதுகாக்க முடியுமே யன்றி, ஆசிரமவாசியாகிய முனிவரால் முடியுமா? ஆகவே பாண்டியனது விருப்பத்துக்கு முனிவர் இணங்கினார்.

அகத்திய முனிவருடைய ஆசிபெற்று மதுரையில் தமிழிச்சங்கம் தோன்றியது. புலவர்கள் வண்டுகளைப் போல் வந்து மொய்த்தார்கள். அகத்தியர் பொதியில் மலையில் வாழ்ந்தாலும் பாண்டியனுடைய வேண்டுகோ ளுக்கு இணங்கி அவ்வப்போது தமிழ்ச்சங்கத்துக்கு வந்துபோவது வழக்கம். அவரோடு பொதியிலில் அவர் பால் பயிலும் மாணாக்கர் சிலர் வாழ்ந்து வந்தனர்.

சங்கம் வரவரப் புலவர் பெருகிவாழும் இடமாக வளர்ந்தது. தமிழாராய்ச்சி பெருகியது. பாண்டிய னுடைய பாதுகாப்பிலே புலவர் யாவரும் சொர்க்க லோக போகத்தை நுகர்ந்து பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்தும், புதிய நூல்களை இயற்றியும் இன் புற்றனர். நிரந்தரமாக மதுரையிலே இருந்து வநதவர் பலர். தமிழ் நாட்டிலுள்ள பல ஊர்களிலிருந்து அவ்வப்போது வநது சென்ற புலவர் பலர்.

அகத்தியர் இயற்றிய அகத்தியமே அந்தச் சங்கப் புலவர்களுக்கு இலக்கணமாயிற்று. முதல் முதலாக ஏற்படுத்திய சங்கம் ஆகையால் அதனைத் தலைச்சங்கம் என்று பிற்காலத்தார் சொல்வது வழக்கம்.

தமிழ்நாட்டில் உள்ள புலவர்கள் நூல் செய்தால், தமிழ்ச்சங்கத்துக்கு வந்து அரங்கேற்று வார்கள். சங்கத்துச் சான்றோர் அவற்றை ஆய்ந்து, பிழையிருந்தால் திருத்தச் செய்து மகிழ்வார்கள். தமிழ் நாட்டினரும் சங்கப்பபுலவரின் மதிப்பைப் பெறாத நூலை நூலாகவே போற்றாத நிலை வந்தது. அதனால் தமிழ்நூலென்றால் சங்கத்தாருடைய உடம்பாட்டைப் பெறவேண்டும் என்ற நியதி, சட்டத்தால் வரையறுக்கப் படாமல், சம்பிரதாயத்தால் நிலை பெற்றது.

இறையனார் அகப்பொருள் என்ற நூலின் உரையில் இந்தச் சங்கத்தின் வரலாறு வருகிறது. அதில் உள்ள பல செய்திகள் புராணத்தைப்போலத் தோன்றும். ஆனாலும் அதனூடே உண்மையும் உண்டு. தலைச் சங்கத்தில் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும், பிறரும் புலவர்களாக இருந்தார்களாம். ஐந்நூற்று நாற்பத் தொன்பதுபேர் தலைச்சங்கத்தில் புலவர்களாக வினங்கினார்களாம். சிவபிரானும், முருகவேளும், குபேரனும் தமிழ்ப்புலவர்களாக இருந்தரென்பதை, அவர்களே வந்து புலவர்களோடு புலவர்களாய் இருந்து பேசினார்கள் என்று கொள்ளவேண்டிய அவ சியம் இல்லை. தெய்வ பக்தியிலே சிறந்த தமிழ் நாட்டார் சங்கத்தில் அவர்களுக்கென்று ஆசனங்களை இட்டு அவர்களை நினைப்பிக்கும் அடையாளங்களை வைத்து வழிபட்டார்களென்று கொள்ளலாம், பிற் காலத்தில் இத்தகைய வழக்கம் தமிழர் வாழ்க்கையில் பலதுறையில் இருந்து வந்ததுண்டு. தெய்வங்களை நினைத்து வைத்த ஆசனங்கள் இருந்தாலும் முதலாசனம் அகத்தியனாருக்கே அளித்தனர். தமிழாராயும் இடத்தில் தமிழ்ப்புலவருக்கே முதலிடம் என்ற கொள்கையை இச்செய்தி தெரிவிக்கிறது.

தலைச் சங்கத்தாருடைய மதிப்பைப் பெற்றுப் பாடிய புலவர்கள் 4449 பேர். அவர்கள் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற பெயர்களையுடைய பழைய பாடல்களைப் பாடினார்கள். இந்தப்பெயர்களில் பரிபாடல் என்ற ஒன்றுதான் நமக்குத்தெரியும். இசைப்பாட்டு வகையில் ஒன்று பரிபாடல். அது போலவே மற்றவையும் பாடல்களின் வகையென்று கொள்ளவேண்டும்.

இந்தத் தலைச் சங்கத்தைப் பாதுகாத்த பாண்டியர்கள் 89 பேர் என்று கூறுவர். காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரைக்கும் உள்ள எண்பத்தொன்பது பாண்டியர்களில் புலவர்களாக இருந்தவர்கள் ஏழுபேராம். இந்தச்சங்கம் நெடுங்காலம் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. மக்கள் பெரும்பாலும் நூறாண்டு வாழ்ந்து வந்த அந்த நாளில் 89 பாண்டியர்களின் காவலில் வளர்ந்த சங்கம் 4440 வருஷம் நடைபெற்றது என்று எழுதியிருக்கிறார்கள். கிட்டத் தட்ட ஒரு பாண்டியனது ஆட்சிக்காலம் ஐம்பது வருஷங்களாகிறது. இது பொருத்தமாகவே தோன்றுகிறது. ஆனாலும் இந்ததக் கணக்குக்கு வேறு ஆதாரம் இல்லாமையால், குறிப்பிட்ட காலத்தை ஆராய்ச்சிக்காரர் நம்புவதில்லை. எப்படியானாலும் அகத்திய ருடைய ஆசிபெற்றுத் தோன்றிய தலைச்சங்கம் பல நூறு வருஷங்கள் சிறந்து விளங்கி வந்தது என்ற செய்தியை உண்மையாகக் கொள்ளலாம்.

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)