கபாடபுரம்

கி.வா.ஜகந்நாதன்

தெற்கே இருந்த மதுரையில் இருந்து பாண்டிய மன்னர் ஆண்டு வந்த காலத்தில், அதற்கு வடக்கே கடற்கறையில் கபாடபுரம் என்ற பட்டினம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் முத்துக் குளித்து அருமை யான முத்துக்களை எடுத்தார்கள். வேறு நாட்டி லிருந்து வந்த வாணிகர்கள் அந்த முத்தின் அருமை யைப் பாராட்டித் தம் நாட்டுப் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து முத்துக்களை வாங்கிச்சென்றனர். பாண்டிநாடு முத்துக்குப் பேர்போனது என்ற பெருமை உலகெங்கும் பரந்தது. அதற்குக் காரணம் கபாடபுரமேயாகும்.

பாண்டிநாட்டு வளப்பத்தையறிந்து பிறநாட்டார் பாண்டிய மன்னனோடு தொடர்பு வைத்துக் கொண்டார்கள். யவனர் முதலிய பல சாதியினர் பாண்டி நாட் டுக்குவந்து அங்குள்ள வளத்தை அறிந்து சிலகாலம் தங்கினர். தம் நாட்டுப் பொருளைக் கொடுத்தும் பாண்டி நாட்டுப் பொருளைப் பெற்றும் சென்றனர். இவ்வாறு வெளி நாட்டிலிருந்து மக்கள் கடல் வழியாக வந்து கபாடபுரத்தில் இறங்கி மதுரை முதலிய இடங் களுக்குச் சென்றார்கள். வேற்று நாட்டு வாணிகருக் குப் பாண்டி நாட்டிற்புகும் வாயில் போல இருந்தமையால் அந்தப் பட்டினத்திற்குக் கபாடபுரமென்ற பெயர் வந்தது. கபாடமென்பது கதவுக்குப்பெயர்.

நாளடைவில் மதுரையில் வாழ்ந்த பாண்டியன் உள்ளத்தில் கடற்கரைப் பட்டினத்திற்கு வந்து அதனையே இராசதானி நகரம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. சேர சோழர்கள் கடற்கரை நகரங்களாகிய வஞ்சியையும் புகாரையும் தலை நகரங்களாகப் பெற்றிருந்தனர். அப்படியே தாமும் கபாடபுரத்தையே இராசதானியாக வைத்துக் கொள்ளலாமென்று தீர்மானித்தனர்.

மதுரையிலிருந்து பாண்டியர் தலைநகரம் கபாட புரத்திற்கு மாறிற்று. மதுரையில் நிகழ்ந்து வநத தமிழ்ச் தங்கமும் கபாடபுரத்துக்கு வந்தது. கபாடபுரத் துக்கு வந்தது முதல் அந்தச் சங்கத்தைப் பிற்காலத் தார் இடைச்சங்கம் என்ற பெயரால் குறிப்பிடுவர்.

வால்மீகி ராமாயணத்தில் இந்தக் கபாடபுரத்தைப் பற்றிய செய்தி வருகிறது. சீதாபிராட்டியைத் தேடும் பொருட்டு வானர வீரர்கள் புறப்பட்டபொழுது அவர் களைப்பாத்துச் சுக்கிரீவன் இப்படி இப்படிப் போக வேண்டுமென்றும், இன்ன இன்ன இடத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமென்றும் சொல்லி அனுப்பு கிறான். அங்கே தாமிரபர்ணி யாற்றைக் கடந்து செல்லுங்கள். ஒரு மட மங்கை தன் கணவனகத்தை ஆவலுடன் அடைவது போல அந்த ஆறு கடலொடு கலக்கும். பின்பு கவாடத்தைப் பார்ப்பீர்கள். பொன் வளம் நிறைந்து அழகு மிக்கதாய் முத்துக்களாலும், மணிகளாலும் அணிபெற்றது அந்நகரம். பாண்டிய மன்னருக்கு உரியது" என்று சொல்லுகிறான். தாமிர வர்ணியின் சங்கமத் துறைக்கு அருகே கபாடபுரம் இருந்த தென்று இதனால் தெரிய வருகிறது. அந்த நகரம் சுவர்ணமயமாக இருந்ததென்று சுக்கிரீவன் சொல்வதாக வால்மீகி குறிப்பிடுகிறார். அந் நகரத்தின் செல்வ மிகுதியைக் குறிப்பது அது. இராசதானி நகர மாதலின் அழகு மிகப் பெற்றிருப்பது இயல்பே. முத்தும் மணியும் நிரம்பியிருப்பது என்பது அத்துறையில் முத்துக் குளித்துத் தொகுத்தன ரென்பதைக் குறிக்கும்.

கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் கபாட புரத்து முத்தை ஓரிடத்திலே குறிப்பிடுகிறார். முத்தின் வகைகளைச் சொல்லும்போது 'பாண்ட்ய கவாடகம்' என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறார். பாண்டியருக்குரிய கபாட புரத்திலே எடுப்பது என்ற செய்தியை அப் பெயர் தெரிவிக்கிறது.

பாரதத்திலும் கபாடபுரத்தைப் பற்றிய பிரஸ்தாபம் வருகிறது. துரோண பர்வத்தில் ஓரிடத்தில், 'பாண்டியன் இறந்தனன். அவனது நகரமாகிய கபாட புரமும் அழிந்தது.' என்று கூறப்படுகிறது.

இவற்றால் கபாடபுரத்தில் பாண்டியர்கள் இருந்து அரசு புரிந்து வந்த செய்தி தெரியவரும். தமிழ்ச் சங்கங்களைப்பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முதல் ஆதாரமாக இருப்பது இறையனாரகப்பொருள் என்ற இலக்கணத்தின் உரை. அதில் மூன்று சங்கங்களைப் பற்றிய விவரங்களும் வருகின்றன. இடைச் சங்க மாகிய இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் இருந்த தென்று அவ்வுரை சொல்லுகிறது.

வெண்டேர்ச் செழியன் என்ற பாண்டியனே கபாடபுரத்திற்கு வந்த மன்னன். ஆகவே, அவனே இடைச் சங்கத்தைப் போற்றிப் பாதுகாத்த பாண்டியர்களில் முதல்வன். அவன் முதலாக ஐம்பத்தொன்பது பாண்டியர்கள் கபாடபுரத்தில் இருந்து அரசாண்டு வந்தார்கள். அந்நகரத்தில் கடைசியாக ஆண்ட பாண்டியன் முடத்திருமாறன் என்பவன். இந்த ஐம்பத்தொன்பது பாண்டியர்களுக்குள் கவிஞர்களாக விளங்கியவர்கள் ஐந்து பேர். மொத்தம் ஐம்பத் தொன்பது புலவர்கள் இடைச் சங்கத்தில் இருந்தார்கள். பல புலவர்கள் கவிதைகளை இயற்றி இடைச் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள். அப்படிப் பெற்றவர்கள் 3700 பேர். "இடைச் சங்கம் இருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க்காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக்கோனும் கீரந்தையுமென இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்ப தின்மர் என்ப" என்று இறையனாரகப் பொருள் உரை காரர் சொல்கிறார்.

முதற் சங்கத்தில் சிவபெருமானும் முருகனும் குபேரனும் ஆகிய தெய்வங்களைப் புலவர் கூட்டத்திலே சேர்த்து எண்ணினார்கள். இடைச் சங்கத்தில் இருந்த துவரைக் கோன் கண்ணபிரான் என்று கூறுவர் சிலர். முதற் சங்கத்தைத் தொடங்கிப் பாண்டியனுக்கு அறிவுரை பகர்ந்த அகத்தியமுனிவர் இடைச் சங்கத் திலும் இருந்தார். அவருடைய மாணாக்கர்களில் தலை சிறந்த தொல்காப்பியரும் இடைச் சங்கப் புலவர்களில் ஒருவர்.

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியம் என்ற நூலை அகத்தியர் முன்பு இயற்றினார். தலைச் சங்கத்தில் இலக்கணமாக இருந்த அதுவே இடைச் சங்கத்திற்கும் இலக்கண மாக இருந்தது. ஆனால் இலக்கணம் அதோடு நிற்க வில்லை. மொழி வளர வளர இலக்கியங்கள் வளரும். பெரும் புலவர்கள் தம்முடைய புலமைத் திறத்தால் புதிய புதிய நூல்களை இயற்றுவார்கள். அந்த நூல் களில் அமைந்த அமைதியை ஆராய்ந்து அறிந்து சொல்வதே இலக்கணம். அகத்தியம் எழுந்தபின்னர், தமிழில் எத்தனையோ நூல்கள் எழுந்தன. தமிழ்ச்சங்கம் தோன்றிய பின்னர்த் தமிழ்ப் புலவர்களுக்குப் பெரு மதிப்பு உண்டாயிற்று. மன்னர்களால் மதிப்பும் ஊக்கமும் உண்டாயின. அதனால் அவர்கள் பல பல நூல்களை இயற்றத் தொடங்கினர். மொழியின் அழகு பலபல வகையிலே விரிந்தது. அவற்றைக்கண்டு இலக்கணமாக அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது.

இயல் முதலிய தமிழ் மூன்றில் ஒவ்வொன்றும் பலபல கிளைகளாக விரிந்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்து இலக்கணம் வகுப்பது ஒருவரால் முடியாத காரியம். எனவே இயல் தமிழைத் தனியே ஆராய்ந் தனர் சிலர். மற்றவற்றையும் இப்படியே புலவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள்.

தொல்காப்பியர் இயல் தமிழுக்கு இலக்கணம் வகுக்கத் தொடங்கினார். தொல்காப்பியம் என்ற இலக் கணத்தை இயற்றினார். இன்னும் சில புலவர்கள் இயற்றமிழாராய்ச்சியில் இறங்கினர். தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். மாபுராணம், பூதபுராணம் என்று இரண்டு பெரிய இலக்கண நூல்கள் எழுந்தன. ஒரு புலவர் இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து இலக்கணம் இயற்றினார். அதற்கு இசை நுணுக்கம் என்ற பெயர் ஏர்பட்டது. எல்லாவற்றையும் இடைச் சங்கத்தார் தங்களுக்குரிய இலக்கண நூல்களாகக் கொண்டார்கள். பழைய இலக்கணமாகிய அகத்திய மும் புதிய இலக்கணங்களாகிய தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம் என்பவையும் அவர்களுக்குச் சட்ட நூல்களாயின.

இடைச் சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பல. 3700 பேர் பாடினார்கள் என்றால் ஆளுக்கு ஒரு பாட்டுப் பாடியிருந்தாலும் 3700 பாட்டு ஆகியிருக்குமே! இவ்வளவு புலவர்களில் நூலாகச் செய்தவர்கள் ஆயிரம் பேரேனும் இருக்கமாட்டார்களா? ஆயிர நூல்கள் இருந்தனவென்று சொல்லலாமே! கலி குருகு, வெண்டாளி, வியாழமாலை யகவல் என்பன அவர்களாற் பாடப்பட்டவை என்று இறையனாராக பொருளுரை கூறுகின்றது. இடைச் சங்க நூல் களில் தமிழருடைய அதிருஷ்டத்தினால் இன்றுவரை உயிருடன் இருப்பது தொல்காப்பியம் ஒன்றுதான்.

இடைச் சங்கம் 3700 வருஷங்கள் நடந்துவந்தது என்று சொல்வார்கள். முடத்திருமாறன் என்ற மன்னன் காலத்தில் பாண்டி நாட்டைக் கடல் கொண்ட தாம். பூகம்பம் வந்து நாட்டிந் பல பகுதிகள் மறைந் தன.பழைய மதுரையும் கபாடபுரமும் குமரி நதி, பஃறுளியாறு என்பவையும் வேறு பல பிரதேசங்களும் கடலில் மறைந்து போயின. பாண்டிய மன்னன் முடத்திருமாறன் இந்தக் கடல் கோளில் தப்பிப் பிழைத்து வந்தான். வேறு தலைநகரத்தை ஆராய்ந்து தேடினான். கடைசியில் இப்போதுள்ள மதுரை பாண்டியர்களின் மூன்றாவது தலை நகரமாயிற்று.

  

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)