கடைச் சங்கம்

கி.வா.ஜகந்நாதன்

பாண்டிய மன்னர்கள் தம் ஆணையைப் பரப்புவதைக் காட்டிலும் தமிழைப் பரப்புவதில் பேரார்வம் கொண்டவர்கள். எங்கே இருந்தாலும் தமிழ்ப்புலவர்களுடைய உறவையும் பாதுகாப்பையும் தலைமையான செயலாகக் கருதுபவர்கள். அதனால் தமிழ் நாடு என்று சொன்னால் பாண்டிநாடு என்று அர்த்தம் செய்யும் சிறப்பு உண்டாயிற்று. பாண்டியனுக்குச் செந்தமிழ் நாடன் என்ற பெயர் ஏற்பட்டது. சோழ நாட்டுக்கு நீர் நாடு என்று வேறு ஒரு பெயர் உண்டு. சோழ அரசனால் ஆளப்பெறுதலின் சோழ நாடு ஆயிற்று. இயற்கையில் நீர் வளம் மிக்கிருத்தலினால் நீர் நாடு என்ற பெயர் வந்தது. சேரர் அரசாண்டதனால் சேரநாடு என்ற பெயர் பெற்ற நாட்டில் மலைகள் மிகுதியாக இருப்பதனால் மலைநாடு என்ற பெயரும் அமைந்தது. அப்படியே அரசனை நினைந்து அமைந்த பெயரையுடைய பாண்டி நாடு தமிழைத் தனி உரிமையாகப் பெற்றமையின் தமிழ் நாடு என்று செய்யுளில் வழங்கும். இடைச் சங்கம் கபாட புரத்தில் நிகழ்ந்துகொண் டிருந்த காலத்தில் கடல் கோள் நிகழ்ந்தது என்பதற்குத் தமிழ் நூல்களில் ஆதாரம் இருக்கின்றன. இறையனாராகப்பொருள் உரையில், 'அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்து என்ப. அக்காலத்துப் போலும் பாண்டியன் நாட்டைக் கடல் கொண்டது' என்று இடைச் சங்கத்தின் வரலாறு வருகிறது. கடைச்சங்கத் தைப் பற்றிய செய்தியில், 'அவர்களைச் சங்கம் இரீ இயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப' என்ற பகுதி இருக்கிறது. இவற்றால் கடல் பொங்கிப் பாண்டி நாட்டின் ஒரு பகுதியை அழித்த காலத்தில் இடைச் சங்கம் நிகழ்ந்ததென்றும், அந்த பூகம்பத்தில் தப்பிவந்த முடத்திருமாறன் என்ற பாண்டியன் கடைச் சங்கத்தைத் தொடங்கி நடத்தி வந்தான் என்றும் தெரியவருகிறது.

இப்படிக் கடல் பொங்கி அழித்த பகுதியை அடியார்க்கு நல்லார் என்ற உரையாசிரியர் சிலப்பதிகார உரையில் குறித்திருக்கிறார். 'தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத ஆறும் இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகாரை நாடும், ஏழ் குறும்பணை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண்டது' என் பது அவர் தெரிவிக்கும் செய்தி.

முடத்திருமாறன் இப்போது உள்ள மதுரையைத் தலைநகராக்கி ஆளத் தொடங்கினான். மதுரைப் புரா ணம், பாரதம் முதலிய நூல்களிலிருந்து இந்த நகரம் புதிதாகப் பாண்டியனால் அமைக்கப்பட்ட தென்று தெரியவருகிறது. மதுரை இராசதானியாவதற்குமுன் மணலூர் என்ற நகரமே பாண்டியருக்குத் தலைநக ராயிற்று. கடல் கோளில் வருந்திய பாண்டியன், 'இனிக் கடற்கரைக்கு அடுத்து வாழ்ந்தால் மீட்டும் நகரம் கடலுக்கு இரையாகுமோ!' என்று எண்ணி உள் நாட்டில் ஒரு தலை நகரத்தை அமைக்கத் தீர்மானித்தான். பாண்டி நாட்டின் நடுவில் அவ்வாறே ஒரு நகரத்தை அமைத்து மிகப் பழங்காலத்தில் பாண்டியர் தலை நகராகத் தெற்கே இருந்து விளங்கிய மதுரை என்ற பெயரையே அதற்கு வைத்தான்.

மதுரை தலைநகரான பிறகு பாண்டியன் செய்த முதல் காரியம் புலவர்களை வருவித்துச் சங்கம் அமைத்ததுவே. பாண்டி நாட்டு வளப்பத்துக்கு அரச நீதி முதலியன காரணமாக இருந்தாலும், தமிழ் வளர்ச்சியே மிகச் சிறந்த காரணம் என்பதை உணர்ந்த பாண்டியன் சங்கத்தை மீட்டும் நிறுவினான். பல திசையினின் றும் சிறந்த புலவர்கள் வந்து சேர்ந்தனர். இந்த மூன்றாவது சங்கத்தைக் கடைச் சங்கம் என்று பிற்காலத்தார் வழங்குவர்.

கடைச் சங்கத்தில் இருந்த புலவர்களுள் தலைமை பெற்றவர்கள் 49 பேர். 'இனிக் கடைச் சங்கம் இருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும், சேந்தம் பூதனா ரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனா ரும், மருதன் இளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன் பதின்மர் என்ப' என்று இறையனாரகப் பொருள் உரையில் வருகிறது.

இந்தக் கடைச் சங்கத்தில் தம்முடைய பாட்டை அரங்கேற்றினவர்கல் 449 புலவர்கள் என்று கூறுவர். அவர்களுக்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக் கண நூல்களாக இருந்தன. முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரையில் 49 பாண்டியர்கள் 1850 ஆண்டு கடைச் சங்கத்தை நடத்தி வந்தார்களாம். இந்த 49 மன்னர்களுள் மூன்று பேர் சங்கப் புலவர் களாகவே விளங்கினார்கள்.

அக்காலத்தில் சங்கத்தில் அரங்கேற்றம் பெற்ற நூல்கள் பல. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற முப்பத்தாறு நூல்கள் கடைச் சங்க நூல்கள். கூத்து நூல் சிலவும் வரிப் பாட்டும் சிற்றிசை, பேரிசை என்ற இசைப் பாடல் களும் அக்காலத்தில் எழுந்தன.

இராமாயணம் கடைச் சங்க காலத்தில் தமிழில் இருந்தது. பெருந் தேவனார் என்ற புலவர் பாரதத்தைத் தமிழில் பாடினார். தகடூர் யாத்திரை என்ற போர்க்காவியம் ஒன்றைப் பல புலவர்கள் சேர்ந்து பாடினர். ஆசிரிய மாலை, மார்க்கண்டேயனார் காஞ்சி முதலிய நூல்களும் கடைச் சங்க காலத்தில் உண்டாயின.

இத்தனை நூல்களுள் இப்போது கிடைப்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்ற முப்பத்தாறு நூல்களே. இராமாயணம், பாரதம், தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்னும் நூல்களிலிருந்து சில பாடல்கள் உரைகளினிடையே மேற்கோளாக வருகின்றன.

புலவர்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திருந்த சங்கம் தமிழ் மக்களின் மதிப்புக்கு உரியதாயிற்று. அரசர்களை யும் அடக்கும் ஆணைதாங்கிப் புலவர்கள் தமிழை வளம் படுத்தினர். சாதி, சமயம், நாடு, தொழில் என்ற வேறு பாடுகளை நினையாமல் ஒன்றுபட்டு வாழ்ந்த புலவர்கள் நாட்டில் ஒற்றுமையை நிலை நிறுத்தும் விஷயத்தில் ஈடுபட்டார்கள். தமிழ் மரபைப் பாதுகாத்துப் புதிய புலவர்களுக்கு ஊக்கம் உண்டாக்கினர். புதிய புதிய துறைகளில் நூல் செய்பவர்களுக்கு ஆதரவு அளித் தனர். இதனால் தமிழ் மேன்மேலும் வளர்ந்து வந்தது.

இயல் தமிழைப் புலவர்கள் ஆராய்ச்சி செய்தது போலவே இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் தனித் தனிச் சங்கம் அமைத்துப் புலவர்கள் ஆராய்ந் தனர். வரவர அவை விரிந்து வந்ததனால்தான் இப் படித் தனியே இசைச் சங்கமும் நாடகச் சங்கமும் நிறுவவேண்டி நேர்ந்தது. ஆரம்பத்தில் அகத்தியம் ஒன்றையே மூன்று தமிழுக்கும் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அப்பால் நாளடைவில் ஒவ்வொரு துறையிலும் தனித் தனியே ஈடுபட்டுத் தனித்தனி இலக்கணத்தைப் புலவர்கள் வகுத்தனர். அதனால் ஒவ்வொரு தமிழையும் தனியே ஆராய்ச்சி செய்வதற்கு வாய்ப்பு உண்டாயிற்று. மேலும் மேலும் தமிழ் விரிந் தது. நூல்கள் மலிந்தன. மூன்று தமிழுக்கும் தனித் தனியே இலக்கணம் அமைந்ததோடு நில்லாமல் ஒவ் வொரு தமிழிலும் ஒவ்வொரு பகுதிக்குத் தனித்தனியே இலக்கணங்கள் எழுந்தன.

புலவர்களின் ஒற்றுமையையும் அவர்கள் கூடிச் சங்கத்தில் தமிழாராய்ந்தசிறப்பையும் நூல்கள் பல படியாகப் பாராட்டுகின்றன. தமிழ்ச்சங்கத்தைத் தன்பாற் கொண்ட மதுரைமா நகரத்தை ஒரு புலவர், "தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மரபின் மதுரை" என்று கூறுகிறார்.

புலவர்கள் அறிவு மாத்திரம் நிரம்பியிருந்தால் அவர்களுக்கு பெருமதிப்பு வராது. கல்வி, அறிவு, ஒழுக்கம் என்ற மூன்றிலும் சிறந்திருந்தமையால் அவர்களைக்கண்டு அரசர்களும் வணங்கினர். எல்லாக் குணங்களும் நிறையப் பெற்றவர்களைச் சான்றோர் என்று வழங்குவது தமிழ்மரபு. சங்கத்துப் புலவர்களை நல்லிசைச் சான்றோர் என்றும், சான்றோர் என்றும் குறிப்பது புலவர் இயல்பு. ஒழுக்கம் நிரம்பியவர்கள் என்பதை இந்த வழக்குத் தெளிவிக்கின்றது.

புலவர்கள் தமிழாட்சி நடத்தினார்கள். அவர்கள் செலுத்தும் அதிகாரம் எந்த நாட்டிலும் செல்லும். அந்த அதிகாரம் ஒருவர் கொடுத்து வந்ததன்று.மிகப் பழங்காலந் தொடங்கியே அந்த ஆணை புலவர்பால் இருந்து வருகிறது. அதனைத் 'தொல்லாணை' என்று குறிப்பார்கள். ஒரு புலவர் பாண்டியன் ஒருவனைச் சிறப்பிக்கின்றார். அவன் இத்தகைய சங்கத்துச் சான்றோர்களோடு சேர்ந்து தமிழின்பத்தைக் கூட்டுண்ணும் சிறப்பை உடையவனாம். 'பழைய காலந் தொடங்கி மாறாமல் வருகின்ற ஆணையைப் படைத்த நல்ல ஆசிரியர்களாகிய புலவர்கள் மனம் ஒன்றிச் சேரும் சங்கத்தில் கலந்து கூடி அவரோடு தமிழின்பத்தை நுகர்ந்த புகழ் நிரம்பிய சிறப்பை உடையவன்' என்று புலவர் பாராட்டுகிறார்.

 

தொல்ஆணை நல்ஆசிரியர்

புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன்.

 

இது மதுரைக்காஞ்சியில் வருகிறது.

இவ்வாறு வாழ்ந்த புலவர்கள் தமிழ் நாட்டுக்கே கல்வியையும் ஒழுக்கத்தையும் உபதேசிக்கும் உபகாரிகளாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய கூட்டந்தான் சங்கம். அவர்களுடைய ஆராய்ச்சியிலே புகுந்து சாணையிடப் பெற்றுவந்த நூல்களையே தமிழ் நாட்டார் ஏற்றுக் கொண்டனர். சங்கத்தில் ஏறிய தமிழ் தான் தமிழ் என்று தமிழர் கொண்டனர். அதனால் தான் சங்கத்தமிழ், சங்கமலி தமிழ் என்ற சிறப்பு இந்தத் தென்மொழிக்கு உண்டாயிற்று.

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)