தொல்காப்பியம் உருவான கதை

கி.வா.ஜகந்நாதன்

படை பதைக்கும் வெயில்; அந்த வெயிலில் ஒரு சோலைக்குள்ளே போகிறோம். நெடுந்தூரத்தில் வரும் பொழுதே சோலையின் பசுமைக்காட்சி நம் கண்ணைக் குளிர்விக்கிறது. "தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு" என்பது பழமொழி அல்லவா? மெல்ல மெல்ல நடந்து சோலைக்குளே நுழைகிறோம். நுழைவதற்கு முன் சோலை ஒரேபிழம்பாக, பச்சைப் பரப்பாகத் தோற்று கிறது. அதற்குள் நுழைந்தபிறகு சோலை பிழம்பாகத் தோற்றுவதுபோய் அந்தப் பிழம்பாகிய முழுத் தோற் றத்தைத் தந்த மரங்களைப்பார்க்கிறோம். மரங்கள் இல்லாமல் சோலை என்று தனியே ஒன்று இல்லை. நெடுந்தூரத்திலிருந்து பார்க்கையில் சோலை யென் னும் முழுப்பொருள்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குள் நுழைந்துவிட்டால் அந்த முழுப் பொருளை ஆக்கும் மூலம் இன்னதென்று தெரிகிறது.

இப்போது சோலை என்ற பொது உருவத்தை விட்டு, மரங்கள் செடிகள் என்ற அந்த உருவத்தை உண்டாக்கும் பகுதிகளைக் காண்கிறோம். இதோ மாமரம், இதோ தென்ன மரம், இதோ பலா மரம் என்று பார்த்துப் பார்த்து இன்புறுகிறோம். பூமரமும் பழமரமும் நிழல் மரமும் தனித்தனி கண்ணிலே படுகின்றன. வெயில் வேகம் மறந்து போயிற்று. மெல்ல ஒரு மரத்தடியிலே சென்று அமர்கிறோம். அதன் பரந்த நிழலிலே மேல் துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறோம். இப்போது நமக்கு மாமரம் ஒன்றுதான் தெரிகிறது. மற்ற மரங்களைப் பார்ப்பதில்லை. மெல்ல மரத்தின் ஒரு கிளையில் கண்ணைத் திருப்புகிறோம். அந்தக் கிளையில் பல வளார்கள் இருக்கின்றன. ஒரு வளாரைப் பற்றுகிறோம். அதிலிருந்து சிறு கொம்புகள்; அந்தக் கொம்புகளில் ஒன்றின் நுனியில் அழகான பூங்கொத்து. அடுத்த கொம்புக்குத் தாவுகிறோம் அங்கே இப்போதுதான் பிஞ்சுவிட்ட மாவடுக் கொத்து. அடுத்த கொம்பில் முற்றின மாங்காய். அதோ வேறொரு கிளையில் வேறொரு வளாரில் ஒரு கொம்பின் நுனியில் மாம்பழம் தொங்குகிறது. அதைப் பார்த்தவுடன் நம் நாக்கில் நீர் சுரக்கிறது.

சாலையிலிருந்து சோலையைப் பார்த்தபோது அதைப்பற்றி இத்தனை விஷயங்கள் தெரிந்தனவா? இல்லை. அதற்குள்ளே புகுந்தபோது மரங்களும், செடி களும், கொடிகளும் தெரிந்தன. மரத்தில் உள்ள கிளைகளும் வளார்களும் கொம்புகளும் தெரிந்தன. பூவும் பிஞ்சும் காயும் கனியும் தெரிந்தன.

வாழ்க்கை யென்னும் பிரயாணத்தில் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் மொழியென்னும் பூஞ்சோலைக்குப் புறத்தேதான் நடமாடினார்கள். கருத்தைத் தெரிவிக்கும் ஒலிக் கூட்டமாக அது அவர்களுக்குத் தோன் றியதே தவிர அதில் உள்ள உறுப்புக்கள் என்ன வென்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. நாளடை வில் மொழியாகிய சோலைக்குள்ளே அறிஞர்கள் புகுந்து பார்த்தார்கள். அந்தக் காலத்துக்குள் சோலையும் வரவர வளம் பெற்றது. மரம் முதலியவற்றைக் கண்டு, இந்தச் சோலையின் அழகுக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து, பிறரும் தெரிந்து கொள்ளும் படி வெளிப்படுத்தினார்கள். அப்படி வெளியிட்டது தான் இலக்கணம்.

தமிழ்ப் பூஞ்சோலைக்குள்ளே நுழைந்தால் மரங் களும் அதற்கு உறுப்பாகிய கிளைகளும் இலை பூ காய் கனியாகியவைகளும் தோற்றம் அளிக்கும்.

பேசும் மொழியில் ஒலியும் பொருளும் சேர்ந்து வருகின்றன. அந்த ஒலியையும் பொருளையும் தனித் தனியே காணும் நிலை முதலில் வந்தது. பிறகு ஒலியைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினார்கள். பொருளையும் ஆராய்ச்சி பண்ணினார்கள். சொற்கள் பல சேர்ந்து கருத்தை விளக்க உதவுகின்றன என்று தெரிந்து கொண்டார்கள். அந்தச் சொல்லும் எழுத் துக்கள் பல சேர்ந்த ஒன்று என்று தெரிந்து கொண் டார்கள்.

 

தமிழ்ப் பூஞ்சோலைக்கு உள்ளே புகுந்து ஆராய்ந்த அறிஞர்கள் எழுத்து, எழுத்துக்களாலான சொல், சொற் கோவைகளால் புலப்படும் பொருள் என்றவற்றைத் தெரிந்து கொண்டார்கள். இந்த மூன்று பகுதிகளையும் பற்றி விரிவான ஆராய்ச்சி நடந்துகொண்டே வந்தது; இன்னும் நடந்து வரு கிறது.

தமிழானது இயல் இசை நாடகம் என்று மூன்று பிரிவாக அநுபவிக்கும் நிலையில் உள்ளது. இயல் தமிழின் இலக்கணமும் மூன்று பிரிவாக அமைந்தது. எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக் கணம் என்ற மூன்றாகப் பழங்காலத்தில் புலவர்கள் பிரித்தார்கள். அகத்திய முனிவர் தாம் இயற்றிய இலக்கணத்தில் இயற்றமிழ்ப்பகுதியில் இந்த மூன்றை யும் பற்றிச் சொல்லியிருந்தார். இயல் தமிழுக்குத் தனியே இலக்கணம் இயற்றிய தொல்காப்பியர் அகத் தியர் கூறிய இலக்கணங்களையும் தமிழ் நாட்டுப் பேச்சு வழக்கையும் அக்காலத்தில் வழங்கிய இலக்கியங்களையும் நன்றாக ஆராய்ந்து, எழுத்து முதலிய மூன்று பிரிவையும் விரிவாகத் தம் இலக்கணத்தில் அமைத்தார்.

************

அவர் தொல்காப்பியத்தைத் திடீரென்று ஒரு நாள் நினைத்துக்கொண்டு இயற்ற உட்காரவில்லை. தம்முடைய ஆசிரியாராகிய அகத்தியர் இயற்றிய இலக் கணம் இருந்தாலும், பல செய்திகளுக்கு அதில் தெளிவு காணப்படவில்லை. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றையும் தனித்தனியே வரையறுத்து ஒன்றன் இலக்கணம் ஒன்றோடு கலவாமல் அதில் சொல்லப்படவில்லை. இவற்றை நினைந்து, "விரிவாக ஓர் இலக்கணம் இயற்ற வேண்டும்" என்று தீர்மானம் செய்தார்.

தமிழுக்கு இலக்கணம் இயற்றப் புகுந்தால், 'அது எழுதுகிற மொழிக்காகவா? பேசுகிற மொழிக்காகவா?' என்று இப்போது கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழ் என்பது பேசுகிறதும் எழுதுகிறதும் ஆகிய இரண்டுந்தான். தினந்தோறும் பழகுகிற பித்தளைப் பாத்திரங்களும், விசேஷ காலங்களில் பழகுகிற வெள்ளிப் பாத்திரங்களும் பாத்திரங்கள் என்ற வகையில் ஒரு சாதியே. ஆகையால் தமிழுக்கு இலக்கணம் செய்யும்போது பேச்சுத் தமிழை விட்டு விட்டால் அந்த இலக்கணம் 'மெஜாரிடி' யின் சார்பைப் பெறாது: சிறுபான்மைக் கட்சியின் சட்டமாகத்தான் இருக்கும்.

தொல்காப்பியர் எப்படி இலக்கணத்தை இயற்றினார் என்பதை யாரும் கட்டுரையாக எழுதிவைக்க வில்லை அதற்காக அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை அறிய அவர் 'டைரி' யும் எழுதவில்லை. ஆனால் பழைய கால வழக்கப்படி, தொல்காப்பியத்துக்கு ஒரு வர் மதிப்புரை எழுதியிருக்கிறார். மதிப்புரை என்று சொல்வதைவிட முகவுரை யென்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அந்த முகவுரையை எழுதினவர் தொல்காப்பியரோடு சேர்ந்து படித்த பனம்பாரனார் என்பவர். அவருடைய தோழர் ஆகையால் அவர் பட்ட சிரமங்களையும் செய்த ஆராய்ச்சியையும் அறிய முடியும் அல்லவா? ஒருவாறு பனம்பாரனார் தம்முடைய சிறப்புப் பாயிரத்தில் அந்தச் செய்திகளைக் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார்.

தொல்காப்பியர் தமிழ் நாட்டில் வழங்கும் மொழியை ஆராய்ந்தாராம். ஏதோ ஒரு மூலையில் மக்கள் பேசும் பாஷையை மட்டும் ஆராய்ந்தால் போதாது. ரெயிலும் மோட்டாரும் ஆகாய விமான மும் மாகாண வேறுபாட்டை மறக்கச் செய்யும் இந்தக் காலத்திலே திருநெல்வேலியிலிருந்து வரும் நண்பர் நம்மைப் பாளையங்கோட்டையில் வைத்துப் பார்த்ததாகச் சொல்லித் தம் தமிழின் தனிச் சிறப்பைக் காட்டுகிறார். திண்டுக்கல் நண்பரோ எந்த லெக்கில் கண்டோ மென்று ஞாபகமில்லாதவராக இருக்கிறார். சேலம் ஜல்லாக்காரரோ சிக்கிக்கொண்டதாகச் சொல்கிறார். நடுவில் தஞ்சாவூர் ஜில்லாக்காரரோ, "உடம்பாமே?" என்று நம் அசௌக்கியத்தைப் பற்றி விசாரிக்க, செட்டி நாட்டு நண்பர் 'ரெண்டு மாசமாக முடியவில்லை' என்று நமக்காக பதில் சொல்கிறார். இவர்களுக் கிடையே 'நித்துண்டு' செங்கற்பட்டு ஜில்லாக்காரர் அருகில் உள்ள ரிக் ஷா வை* இஸ்த்துகினு வா' என்று ரிக் ஷாக்காரனைக் கூப்பிடுகிறார்.

 

பழைய காலத்தில் இத்தகைய வேறுபாடுகள் அதிகமாக இருந்திருக்கும். எனவே தமிழை ஆராய வேண்டுமானால் தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங் களில் வழங்கும் மொழியைக் கவனிக்க வேண்டும். தொல்காப்பியர் கவனித்தாராம். "வடக்கே திருவேங்கட மும் தெற்கே குமரி யாறுமாகிய எல்லைகளுக்கிடையே தமிழ் கூறும் நல்ல உலகத்தில் வழங்கும் பேச்சு வழக்கையும் செய்யுளையும் ஆராய்ந்தார். அவற்றில் உள்ள எழுத்து சொல் பொருள் என்பவற்றை நாடினார்" என்று பனம்பாரனார் தொடங்குகிறார்.

 

வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல் லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி.

 

இலக்கணம் செய்ய வருபவர் இலக்கியத்தை ஆராய வேண்டும். தமிழ்மொழி வழக்கிலும் புலவர்கள் இயற்றிய கவிதையிலும் உள்ளது. ஆகையால் அந்த இரண்டையும் ஆராய்ந்தாராம். முதலில் பேச்சு வழக்கைத்தான் ஆராய்ந்தார். அவற்றுக்குள்ளே புகுந்து எழுத்து முதலிய மூன்று பகுதிகளையும் ஆராய்ச்சி செய்தார்.

தமிழ் நாட்டைத் தொல்காப்பியர் ஒரு சுற்றுச் சுற்றி வந்திருக்க வேண்டும். அங்கங்கே மக்கள் பேசும் பேச்சுவழக்கைக் கவனித்தார். புலவர்களோடு பழகி அவர்களிடம் உள்ள பழைய நூல்களையும் புதிய நூல்களையும் வாங்கிப் படித்தார்.

இப்போது பெரும்பான்மையோருடைய தமிழாகிய வழக்குத் தமிழையும், சிறுபான்மையோர் தமிழாகிய செய்யுள் தமிழையும் கரை கண்டவராகிவிட்டார் தொல்காப்பியர். இலக்கணம் இயற்றுவதென்றால் சுலபமான காரியமா?

இந்த ஆராய்ச்சியோடு தொல்காப்பியர் நிற்கவில்லை. அவர் காலத்துக்கு முன்னே இலக்கணங்கள் சில இருந்தன; அவற்றையும் தேடித் தொகுத்தார். அவற்றை ஆராய்ந்தார். இப்போது ஒருவகையாகத் தமிழின் சொரூபம் அவர் உள்ளத்தில் வந்துவிட்டது. வழக்கு, செய்யுள், பழைய இலக்கணம் ஆகிய மூன்று வழியிலும் உணர்ந்தவற்றை உள்ளத்தில் சேர்த்துக் குவித்தார். ஆறுதலாக அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினார். எழுத்துச் சம்பந்தமான செய்திகள் இவை, சொல்லோடு தொடர்புடைய இலக்கணங்கள் இவை, பொருளைப்பற்றியவை இவை என்று பிரித்துக் கொண்டார்.

இந்தக் காலத்தில் 'சாஸ்திரீய ஆராய்ச்சி' என்று அடிக்கடி ஒரு தொடர் நம் காதில் விழுகிறது. ஒன்றைப்பற்றி ஆராய வேண்டுமானால் அது சம்பந்தமாக உள்ளவற்றை யெல்லாம் தொகுக்க வேண்டும். பின்பு அவற்றை ஒழுங்குபடுத்தி இன்ன இன்ன பகுதியிலே இவை அடங்கும் என்று வகுத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வகையிலும் புகுந்து அறிவுக்குப் பொருந்தும் வகையில் ஆராய வேண்டும். இப்படி ஒழுங்காக, குழப்பம் இன்றி ஆராய்வதைச் சாஸ்திரீய ஆராய்ச்சி (Scientific Research) என்று வழங்குகிறார்கள். தொல் காப்பியர் அத்தகைய ஆராய்ச்சியைத்தான் செய்திருக்க வேண்டும்.

தொகுத்த செய்திகளை வகுத்து முறைப்பட எண்ணி நூலை இயற்றத் தொடங்கினார். ஒன்றனோடு ஒன்று கலவாமல் வேறு பிரித்து இலக்கணங்களைச் சொன்னார். ஐந்திர வியாகரணத்தில் அவருக்கிருந்த புலமை, இலக்கண நூலை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கு வழி காட்டியது.

சிரமப்பட்டுத் தொகுத்த செய்திகளை அறிவினால் வகைப்படுத்தினார். ஆற அமர இருந்து நூலை இயற்றினார். இன்று அவர் படித்த இலக்கணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவர் காலத்தில் வழங்கிய இலக்கியங்களும் மறைந்தன. "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி யன்" என்று அவரைப் பாராட்டுகிறார் பனம்பாரனார். அந்த ஐந்திரங்கூட இல்லாமற் போயிற்று. ஆனால் அவற்றை நன்கு ஆராய்ந்து அறிவுத் திறத்தாலும் தவச் சிறப்பாலும் நூல் செய்த தொல்காப்பியருடைய தொல்காப்பியம் மட்டும் இன்றும் நிலவுகிறது. அவர் பட்ட சிரமம் வீண்போகவில்லை. அவர் தவத்திறமும் அறிவாற்றலும் அவருடைய நூலை மலைபோல நிற்கச் செய்திருக்கின்றன.

அவர் பெற்ற புகழ் மிகப் பெரிது. பனம்பாரனார் அதைத்தான் தம் சிறப்புப் பாயிரத்தின் இறுதியிற் சொல்கிறார்.

 

மல்குநீர் வரைப்பின்

      ஐந்திரம் நிறைந்த

தொல்காப் பியனெனத்

      தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த

      படிமை யோனே.

 

[நிறுத்த - நிலைபெறச் செய்த, படிமை யோன் - தவஒழுக்கம் உடையவன்.]

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)