சிந்தா நதி ((நினைவலைகள்)

லா.ச.ராமாமிருதம்
 

சல சல
 

84. கடைசி. ஒருநாள், தினமணி கதிர் காரியாலயத்துக்குச் சென்றிருந்தபோது, ஆசிரியர், "வாரம் இரண்டு பக்கங்கள் உங்களுக்காக ஒதுக்குகிறேன், எழுதுங்களேன்" என்றார்.

நான்: 'எதைப் பற்றி?

ஆசிரியர்: 'பூமிமேல் எதுபற்றி வேனுமானாலும்; உங்களுக்குத் தோன்றியபடி:

தாரளமான ஆர்டர்தான்

நான்: ‘'இப்பத்தான் உங்கள் சிப்பந்தி, கதிருக்கு வந்த கடிதம் ஒன்றைக் காண்பித்தார். லா..ரா. என்னத்தை எழுதுகிறார்? ஒன்றுமே புரியவில்லை. மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருக்கிறது. அப்படியுமா என்னை எழுதச் சொல்கிறீர்கள்?"

ஆசிரியர்: "பிய்த்துக் கொள்ளட்டுமே! இரண்டு பக்கங்கள்தானே !"

ஒரு சிறுகதை எழுதவே, சாதாரணமாக மூணு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் எனக்கு, கதிரின் அச்சு யந்திரங்களுக்கு என் பங்குத் தீனியை வாராவாரம், நேரத்தில் போட இயலுமா?

பிடிகொடாமல் என்னத்தையோ முனகி விட்டு நழுவி விட்டேனானாலும் வெட்டென விட்டொழிக்க முடியவில்லை. ‘விண் விண்"' பொறுக்காமல், ஒருநாள் எழுந்து உட்கார்ந்து முனைந்து எழுதத் தலைப்பட்டதன் விளைவாய்

சிந்தா நதி போன வருடம், கதிர் பொங்கல் இதழில் பெருக ஆரம்பித்து, வருடம் முடியப் பரவி-

நதி வற்றவில்லை. ஆனால் பத்திரிகைத் தொழிலில் வியாபார ரீதியில் ஸ்தாபனத்தின் செளகரியங்கள், சொந்தப் ப்ரச்சனைகள், அவ்வப்போது புதுமை ஏதேனும் செய்துகொண்டிருக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தங்கள்- இவை எழுத்தாளனுக்கு முற்றிலும் புரியாது; புரிந்தாலும் அவைகளுடன் அவன் சமாதானமாக மாட்டான். கிடக்கட்டும்.

சிந்தா நதி என்கிற தலைப்பு, உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது?

வாரா வாரக் கட்டளைக்கு எவ்வாறு என் எழுத்துப் படிந்தது?

நினைவு, எடுக்க எடுக்க அடியே காண முடியா இத்தனை பெரிய பேழையா?

இன்னும் நான் மீளா வியப்புக்கள்.

ஆனால் எல்லாவற்றிலும் ஆச்சரியம், வாசகர்கள், ஆரம்பத்திலிருந்தே, இந்தத் தொடருக்குக் காட்டிய அமோகமான ஆதரவுதான்.

சம்பிரதாயமாகப் பத்திரிகைக்கு வரும் பாராட்டுக்கள் தவிர, என் பேருக்குத் தனிப்பட்ட முறையில் வந்த, இன்னமும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களிலும்.

வீட்டுக்கும்,

தற்செயலாக நான் வெளியூர் போக நேர்ந்த போது, நான் வந்திருப்பது எப்படியோ தெரிந்து பலப்பல தூரங்களிலிருந்தும்,

என்னைக் காண வந்தவர்கள், சிந்தா நதியின் அலைகளில், தங்கள் நெஞ்ச நெகிழ்ச்சிகளை இதயப்பாளங்களை, பரிமளங்களை, சஞ்சலங்களை அடையாளம் கண்டுகொண்டது பற்றியும், சிந்தா நதி ஸ்னானத்தில் அவர்கள் அடைந்த அமைதி, ஆறுதல், தைரியம் பற்றியும்,

மனம் திறந்து வெளியிட்டுக் கொண்ட போது, அது ஒன்றும் நான் மார் தட்டிக் கொள்ளும் விஷயமாக இல்லை. ஏதோ வேளைக் கூரில், சொல்லின் மந்திரக்கோல் பட்டு இந்த அலைகள், வாசகனின் தருணத்துக்கேற்றபடி, ஆத்மாவின் திறவுகோலாக அமைந்திருக்கையில், ஒருவிதமான அச்சம்தான் காண்கிறது. தரிசன பயம், மானுடத்தின்மேல் மரியாதை.

Reverence for life

இந்த நிலைகளின் தூய்மையை ஆய நான் தக்கோன் அல்லன். இதோ நிறுத்திவிட்டேன்.

மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் கட்டங்கள் பற்றிப் பணிவுடன்,அழுத்தமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். -

ஒருவருக்கு ஒருவிதமாகப் படுவது, அடுத்தவருக்கு வேறு விதமாகப் படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப் புரிகிறது.

இன்றைக்குப் புரியாவிட்டால், நாளைக்குப் புரிகிறது. 

அட, கடைசிவரை, புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே!

எல்லாமே புரிந்துவிடும், புரிந்தாகணும் என்று எதிர்பார்ப்பது முறை அன்று. அப்படி முழுக்கப் புரிந்து கொள்வதற்கும் அல்ல. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் - இதை நான் சொல்லவில்லை.

விஷயம் அதனதன் உருவில், ஒரு ஒரு வழி வெளிப்படக் காத்திருக்கிறது. அதனதன் வேளையில் வெளிப்படுகிறது.

விஷய தாதுக்களின் நியதியே இதுதான். மீண்டும் மீண்டும், அவரவர் பூத்ததற்குத் தக்கபுடி - கர்த்தாவையும் சேர்த்துத்தான் - அதன் சத்திய நிலைமாறாமல், ஆனால் உருமாறிக் கொண்டேயிருப்பதுதான்.

இதையே ஒரு மழுப்பல்தான் என்கிற வாதத்திற்கும் என்னிடம் மறுப்பு இல்லை. ஏனெனில், என்னுடைய இப்போதைய வளர்ச்சி நிலையில் இதற்குமேல் விளக்கமும் என்னிடம் இல்லை.

புரிவதைக் காட்டிலும், வாசகன் உணரக் கூடியது, உணர வேண்டியது விஷயத்தின் தாக்குதல்; அந்த முதல் பாதிப்பு Impression, impact. அந்த மோதலில் ஏற்படுமே உள் நசுங்கல் (Inner dent) இதுதான் ரத்தத்துடன் கலந்து உள் சத்தில் ரஸாயனம் நிகழ்வது.

சின்னச் சின்ன அலைகள், படுபடு ஆழங்கள்,
பிரயாணம்
பகு பகு தூரம்.
சிட்டச்
சிட்ட ஸ்வரங்கள். கன கன ராகங்கள்.
எட்ட
எட்ட மேருக்களின், கிட்டக் கிட்ட நிழல்கள்.
உயர
உயரத் தாருவின் இலைகள் பூமிமேல் நெய்யும்
குட்டிக்
குட்டிக் கோலங்கள்.
மின்னா
மினுக்கி, மின்மினிப் பூச்சிகள்
ஸகஸக
ஸரிஸா
கமகம
கதஸா
தஸபகரிகா
கமதஸகஸா

சிந்தா நதி என் எஸ்டேட்டில் ஒடும் எனக்கே சொந்த நதி அல்ல. சிந்தா நதி உயிரின் பரம்பரை லோகோஸ்ருதியின் மீட்டல் கங்கை இதன் கிளை.வாரத் தொடராகப் பாய்ந்தபோது சிந்தா நதி எனும் பொதுத் தலைப்பு தாங்கிக் கொண்டது. ஆனால் புத்தக உருவில், இந்த அலைகளுக்குத் தனித் தனித் தலைப்புக்கள் பாந்தம், தேவையெனப்பட்டது.

சரி,வாருங்கள், இனி நதியில் இறங்கலாம்.

சிந்தா நதி தீரே
சிந்தா
விஹாரே. . .


லா..ராமாமிருதம்

1-9-1996

---------------- 


 

1. அம்மா

 இந்தப் பக்கத்தை, அம்மாவைப்பற்றி ஒரு சம்பவத்தில் ஆரம்பிக்கத் தகும். அப்போ அம்மாதான் குடித்தனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சம்பளத்தைக் கொடுத்துவிடுவேன். என் கைச் செலவுக்கே அம்மாதான் தருவாள். நிம்மதி. விட்டதையா பொறுப்பு. கடை கண்ணி, மார்க்கெட், வெளிவேலை, பால் கணக்கு, கொடுக்கல் வாங்கல் எந்த ஜோலியும் எனக்கு இல்லை.

ஆனால் மாதா மாதம் அம்மா கணக்குப் புத்தகத்துடன் என்னிடம் வருவாள். கைகூப்பி விடுவேன்.

"அம்மா, எதுவும் எனக்கு வேண்டாம். உன்னிடம் தான் கொடுத்தாச்சே!"

"அப்படியில்லேடா. என்னிடம் ஒப்படைச்சிருக்கே. என்ன போச்சு, வந்தது, உனக்கே தெரிய வேண்டாமா? ஆற்றில் போட்டாலும்."

சரிதாம்மா, ஆளை விடு. வேளா வேளைக்கு எனக்கு கலத்தில் சோறு விழறதா, அதோடு நான் சரி. ஒரு பத்து நிமிஷம் முன்னாலே என்னை விரட்டி, அந்த 9-15 நான் பிடிக்கிற மாதிரி பாரேன்-"

அம்மா பண்ணாத நிர்வாகமா? நாங்கள் குழந்தைகளாக இருந்த நாளிலிருந்தே, அப்பாவுக்கு முப்பது ரூபா சம்பளத்தில்.

அப்படியும் ஒருமுறை அம்மா கணக்குப் புத்தகத்துடன் வந்தாள். அவசரமா ஆபீசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். எப்படியும் அந்த 9-15 என்னால் பிடிக்க முடியாது. நான் கேட்டபடி அம்மா என்னைத் தயார்ப்படுத்தினாலும் என்றுமே நான் 9-15ஐப் பிடித்ததில்லை.

நான் கை கூப்பினேன்.

-"இல்லை, நீ பார்த்துத்தான் ஆகணும். இந்த மாசம் பெரிய துண்டா விழும்போல இருக்கு. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருக்கும்போல இருக்கு. எனக்கே புரியலை. என் கூட்டல் கழித்தல் சரியா பாரேன்."

"அதுக்கெல்லாம் எனக்கெங்கேம்மா டைம்? எவ்வளவு துண்டு விழறது?"

"போன மாசம் அப்பா தெவசம் வந்ததா? அப்புறம் குணசீலம் போனோமா...?"

"அம்மா, அதெல்லாம் எனக்கு வேண்டாம். எவ்வளவு குறையறது ?"

"ஒரு நூறு ரூபாய்-"

"நூறு ரூபாய்!" அதிர்ச்சியில் என் குரல் கோணிக் கொண்டது. முப்பது வருடங்களுக்கு முன்னால் நூறு ரூபாய் எவ்வளவு பெரிய தொகை, புரட்டுவது எத்தனை கடினம் என்று இந்நாளவர்க்கு எங்கே புரியப் போகிறது! ஆத்திரத்தில் அம்மா கையிலிருந்து நோட்டைப் பிடுங்கிக் கொண்டேன்.

"அம்மா, நீ பொய் சொல்றே-"

இந்த வாக்கியம் எப்படி என் வாயிலிருந்து வந்தது, இந்த ரூபத்தில் ஏன் வரணும்? இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே மலம்-உடம்பு என்கிற சாக்கில் மனத்திலா மனம் என்ற சாக்கில் உடம்பிலா? எவ்வளவு ஓடிக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்று என்பது தவிர வேறு தெரியவில்லை.

"பொய் சொல்றேனா?" அம்மா ஒரு அடி பின்னடைந்தாள். அவள் பேச்சு 'திக்' கென்ற மூச்சில் தொத்திக் கொண்டு வந்தது.

"பொய் சொல்றேனா?"

"பொய் சொல்றேனா?"

மடேரென விழுந்துவிட்டாள்.

நான் வெலவெலத்துப் போனேன். "அம்மா! அம்மா!" அம்மா தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன். பேச்சு மூச்சுக் காணோம்.

"அம்மா! அம்மா!"

என் அலறல் கேட்டு மற்றவர்கள் ஓடி வந்தனர். யாரோ அம்மா முகத்தில் ஜலம் தெளித்து முகத்தை ஒற்றி விசிறியால் விசிறி - கண்கள் மெல்ல மலர்ந்தன.

"எங்கே இருக்கேன்?" எழ முயன்றாள். என் கையைத் தள்ளி எழுந்து உட்கார்ந்தாள். "என்ன ஆச்சு?"

"என்னவோ உளறிட்டேன் அம்மா. அம்மா, என்னை மன்னிச்சுடு."

"| ! ஓஹோ!" மூழ்குபவன் பிடியில் அவள் கைகள் என்னைப் பற்றின, "ராமாமிருதம், என்ன சொன்னாலும் அந்த ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லாதே. என்னைச் சொல்லாதே-"

"பரதனுக்கு முடி சூட்டிக்கொள். ஆனால் அந்த மற்ற வரம்-

அது மாத்திரம் வேண்டாம்.

சக்ரவர்த்தியின் தேம்பல் என் உட்செவி நரம்பில் அதிர்கிறது.

நடப்பதேதான் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது.

ஓடுகிற தண்ணீர் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிராயச்சித்தத்தைத் தேடி, சிந்தா நதியில் இன்னமும் குளித்துக் கொண்டிருக்கிறேன்.

 

2. சூடிக்கொண்டவள்

 

தோட்டத்தில் செம்பருத்திச் செடிகள் இரண்டு. வேறு தாவரங்கள் ஏதேதோ பயிர் செய்ய முயன்றும், மண் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் செம்பருத்திச் செடிகளில் மட்டும் தினம் மூன்று நான்கு பூக்களுக்குக் குறைவில்லை. ஒரேயொரு சமயம் ஏழு, எட்டுகூடப் பூத்துத் தள்ளி விடும்.

அம்பாளுக்குச் செம்பருத்திப் பூ விசேஷமாமே! சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.

பக்தி பற்றிக்கொண்டதா? உன் உதட்டுக் குழியில் புன்னகையின் குமிழ் தெரிகிறது. பக்தி பொங்குமளவுக்கு மனம் களங்கமற்று இல்லை. இருக்கப் போவதுமில்லை. தெரிகிறது. வட்டம் ஆரம்பித்துப் புள்ளிக்குத் திரும்பி, அதில் முடியப் போகிறதென்று நினைக்கிறேன். முறைதானே!

அன்று அம்மா, தன் மடியில் என்னை இருத்தி, என் கைகளை ஒன்று சேர்த்துக் கூப்பி, 'ஓம்மாச்சி' சொல்லித் தந்தாள்.

இன்னமும் அம்மா மடி கிடைக்குமா? நானும் ஆசைப் படலாமா ?

அடுத்து அம்பாளின் மடிதான் அடைக்கலம், அங்கு இடம் என்ன சுலபமா? இருந்தாலும்-

ஒம் புவனேஸ்வரியே நம:

 

இதைக் காலட்சேப மேடையாக மாற்றுவதாக எண்ணமில்லை. அதற்கு என்னிடம் சரக்கு இல்லை. எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. குங்குமத்தால் அர்ச்சிக்கவோ, மலர்களைத் துாவவோ- ஊஹும். வடமொழி எழுத்து வாஸனைகூடக் கிடையாது. முதுகு நிமிர்ந்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து உட்காரக்கூடத் திராணி இல்லை. ஆனாலும் உட்காருகிறேன். சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.

ஒம் மாத்ரே நம:

ஆரம்பமே அம்மா.

ஆனால் இன்று-இடறி, இடறி நாமாக்களை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை.

ஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு.

அவள் விளக்கில் இறங்கி, குத்து விளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப் பூவை எடுத்துத் தன் கூந்தலில் செருகிக் கொண்டது போல- முகம் காட்டவில்லை தலையின் பின்புறம்- அதையும் ஸ்துலமாகக் காண்பதென்பது அத்தனை சுலப சாத்தியமா? சிரமமாகக்கூடச் சாத்தியமா? முதலில்- சாத்தியமா?

பிரமை? ஒப்புக்கொள்கிறேன், பிளட் பிரஷர்? இதுவரை இல்லை. "ஹம்பக், புரளி, காதில் பூ சுத்தறே" ஊமையாகிறேன். தரப்பு பேச வாதங்களுக்கு எங்கு போவேன்? ஃபான்டஸி? இருக்கலாம். ரொமாண்டிக் இமாஜினேஷன்? மறுக்கப் போவதில்லை. அதற்கு வயது உண்டா?

என் பங்கில் ஒன்று மன்றாடுகிறேன். தானாக எழுந்த தோற்றம்தான். எண்ணத்தை முறுக்கி நான் வரவழைக்கவில்லை. "எப்படியும் முன்னால் முறுக்கி இருப்பாய். முறுக்காமல் இருந்திருக்க முடியாது". சரி. வலுக்கட்டாயத்தில் மட்டும் வந்துவிடுமா? எப்படியும் இந்த வடிவத்தில் நினைக்கவில்லை.

"அது உன் ஸ்ப் கான்ஷியஸ்."

இருக்கலாம், இருந்துவிட்டுப் போகட்டுமே! எதையும் நான் நிரூபிக்க வரவில்லை. எனக்கு நேர்ந்ததை அல்லது நேர்ந்த மாதிரி இருந்ததைச் சொன்னேன். இதுவும் நான் சொல்வதுதான். ஆனால் நேர்வதில் 'மாதிரி' என்பது கிடையாது. நேர்ந்தது நேர்ந்ததுதான். நம்பு என்று சொல்ல நான் யார்?

உருவகம், கனவு, ப்ரமை, ஹம்பக், ஃபான்டஸி இன்னும் என்னென்னவோ, உள்ளத்தின் அவஸ்தையில் உள்ளனவே. இன்றியமையாமையே.

ஆனால், விசாரணை, ருசு, நிரூபனை, தீர்ப்பு, நிபந்தனை, இதையெல்லாம் கடந்து, அறியாத, புரியாத, நிலைகளும் இருக்கின்றன என்கிற தடத்தில் சம்மதம் காண்போமா? 

ஒன்று நிச்சயம், அவளே இருக்கிறாளா? அது அவளா, அவனா? சர்ச்சையை விற்பன்னர்களுக்கு விட்டு விட்டால், மிஞ்சுவது என்ன? எண்ணத்தின் அழகு. எண்ணத்தில் அழகு என்று சொல்கிறேன், ஒருவேளை இதுவேதான் அவளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ?

ஒரு சமயம் அவள்.

ஒரு சமயம் அவன்.

சிந்தா நதி தீரே, சிந்தா விஹாரே.

 

3. ஒரே அம்மா

 

1967/68

-நாகர்கோயிலில் ஒரு நண்பர் வீட்டில், நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில், ஒரிரண்டு இலக்கியக் கூட்டங்களில் அவரைச் சந்தித்ததோடு எங்கள் பரிசயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு, விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோசம் எங்களுக்கிடையே இடறிற்று. ஆனால் நண்பரின் தாயாரைச் சந்திக்கும் பெரும் பேறு எனக்கு கிடைத்தது. அந்த அம்மா என் நாவல்'புத்ர' வைப் படித்திருந்தார்; என்று சொன்னால் மட்டும் போதாது. ஆங்காங்கே வாக்கியங்களை ஒப்பித்து ரசித்து மகிழ்ந்தார். அதுவும் பெரிதல்ல. புத்தி பூர்வமாக இலக்கிய ரீதியில் வாழ்க்கையையே நோக்கப் பழகிக்கொண்ட பக்குவ மனம் அதுவும் பெண்டிரில் காண்பது மிக மிக அரிது என்று என் கருத்து. அந்த மூன்று நாட்களும் எனக்கு மிக்க சந்தோஷமான நாட்கள்.

கன்யாகுமரியின் காந்தம் சாதாரணமன்று; மறு வருடமும், ஆனால் நான் மட்டும் தனியாக தஞ்சை, திருச்சி, மதுரை என்று ஆங்காங்கே தங்கி, ரசிக நண்பர்களுடன் அளாவி... அது தனிக் குஷிதான்.

தென்காசியில் ஒரு நண்பர் வீட்டில் மூன்று நாட்கள் டேரா. ஜாலி டைம். அவர் பேச்சுவாக்கில் நாகர்கோயிலில், என் நண்பரின் தாயார் தவறி நான்கு மாதங்களாயின என்று சொன்னபோது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். என் பிரயாணமே நாகர்கோயிலை நோக்கி அந்த அம்மாவுடன் சந்திப்பை எதிர்நோக்கித்தான். ஆனால் அவர் மறைவு பற்றி எனக்கு ஏன் தெரிவிக்க வில்லை? எனக்கு மன வருத்தம்தான்.

 

மறுநாள். நாகர்கோயிலில் நண்பர் வீட்டை அடைந்த போது, பிற்பகல் 3 மணி இருக்கும். என்னைக் கண்டதும் எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்! அந்த உணர்ச்சியின் பரஸ்பரத்தை விஸ்தரிக்க இயலாது.

வாசல் அறையில், நண்பரும் நானும் பேசினோமோ பேசினோமோ நேரம் போய்க் கொண்டிருந்ததே தெரியவில்லை. அவர், தரையில் பாயில் படுத்த வண்ணம். எதிரே விசுப் பலகையில், தலையணையில் சாய்ந்தபடி நான்.

என்ன பேசினோம்? எல்லாவற்றையும் பற்றித்தான் மேனாட்டு இலக்கியம், நம் நாட்டு இலக்கியம், புதுக் கவிதை, புது வசனம், எழுத்தின் நுணுக்கங்கள், பங்சுவேஷனின் தனி பாஷை, மனிதர்கள், புவனம், வாழ்க்கை.

சினிமாவைத் தவிர, இந்நாளில், தடுக்கி விழுந்தால், பேசுவதற்கும், கடிதங்களில் பரிமாறிக்கொள்ளவும் அது தானே சப்ஜெக்டே!

அந்தியிறங்கி, ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு அறையிருண்டுவிட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக்கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத் தான் கழற்றிக் கொண்டது. எப்போது மெளனமானோம் ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில், எங்களைப் பூரா வியாபித்துக் கொண்ட இருளின் இதவில், ஒரு சின்னச் சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான்மாத்திரைகள் போல், ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த் தாதுக்கள் போல், பறவைக் கூடில் இரு குஞ்சுகள் போல், எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில், ஒரு தனிக் கதகதப்பில், அது தந்த மதோன்மத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை.

சிருஷ்டியின் ஓயாத நூற்பில், இரண்டு இழைகளாக இழைத்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில் எங்களை இழைத்து விட்டது என்று சொல்லட்டுமா?

ஆனால் இதுபோன்ற நேரங்கள், காய்ப்புக் காண நினைவைச் சூடிவிட்டுப் போமே தவிர, நம்மோடு காயமாக இருத்தி வைத்துக் கொள்ளற் பாலன்று.

சற்று நேரம் கழித்து-எந்நேரமோ? அவர் புழக்கடைப் பக்கம் போனார்.

விளக்கைப் போடாமலே, நான் அந்த அறையுள் இன்னொரு அறையுள்- இல்லை, அதன் வாசற்படியிலே நின்று சுற்றி நோக்கினேன்.

கட்டில், ஜன்னலோரமாக, அதே மூலையில்தான் மெத்தையும், இரண்டு தலையணைகளும்- அவைகளும் அதே தாமோ? மற்றப்படி பண்டங்கள், நாற்காலிகள், ஏற்கெனவே நான் அவைகளைப் பார்த்திருந்த இடங்களும் நிலையும் பெரிதும் கலைந்த மாதிரித் தெரியவில்லை.

"அம்மாவைத் தேடறேளா?" என் பின்னாலிருந்து, என் செவியோரமாய், பேச்சே ஒரு மூச்சு.

தன் தாயாரின் மறைவை அவர் தெரிவிக்கும் விதமா?

எப்படியும் இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

இல்லை, அந்தக் கேள்வியை ஒரு பதிலாகவே நான் படித்தேன். அதுவும் அந்தத் தருண விசேடம் தானா?

அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித்தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா.

போன வருடம் இந்த வீட்டுக்கு நான் வந்திருந்த போது, என் தாயின் முதல் வருடச் சடங்குகள் முடிந்த கையோடு.

ஆகவே, இங்கே, இப்போ நான் தேடியது அவர் தாயாரையா? என் தாயாரையா?

பதிலை எதிர்பார்க்காமல், ஆனால் ஏதோ இன்ப ரகசியத்தில், சீண்டிக் கொண்டேயிருக்கும் கேள்வி.

சிந்தாநதி ஓட்டத்தில், துள்ளு மீன்....?

 

4. கண் கொடுக்க வந்தவன்

 

ஐந்தாறு வருடங்களாக, கண்ணில் சதையால், மிக்க அவதியுற்றேன், முதலில் இடக்கண், மறு வருடம் வலது. நாள் ஒரு இம்மியாக, சதை வளர்ந்து அதுவும் கடைசி இரண்டு வருடங்கள். அப்பப்பா, வேண்டாம். என்றால் விடுமா? சாப்பாட்டில், வாய்க்கு வழி கை தானே கண்டுகொள்ளுமானாலும், இலையில் என்னென்ன எங்கே பரிமாறியிருக்கிறது? ஒரே தடவல். வழித்துணையிலாது வெளியே போக முடியாது. சினிமா, டிராமா, கச்சேரி, இலக்கியக் கூட்டங்கள்- முடியாது. படிக்க முடியாது; எழுத முடியாது. டிக்டேஷன்? சரிப்பட்டு வரவில்லை. ஒரு படைப்பு உருவாகும் அந்தரங்கத்தைப் பிள்ளையோடானாலும் பங்கிட்டுப் பழக்கமில்லை. பிறகு வீட்டுக்குள்ளேயே, மேடு பள்ளமாக இடறி விழுந்து இந்திரப்ரஸ்த மாளிகையில் துரியோதனன், திரெளபதியின் சிரிப்புக்கு ஆளானது போல்- எப்போதும், எங்கேயும் திரெளபதிகள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒருமாதிரியாக இற்றுப்போக ஆரம்பித்துவிட்டேன்.

ஆஸ்பத்திரியில் சோதித்த பெரிய டாக்டர்: "அடாடா, இது ப்ளாக் காட்டராக்ட் அல்லவா? பத்து வருடங்களுக்குக் கத்தி வைக்க முடியாதே! வெச்சால் பெரிய ரிஸ்க். ரேர் கேஸ் உங்களுக்குன்னு வந்திருக்கு."

தீர்ப்பு எப்படி? ஆயுளுக்கும் படிப்படியாக- ஒருநாள் முழுக் குருடு இல்லை, பத்து வருடங்களுக்குப் பின் இவரிடம் ஆபரேஷன் பண்ணிக் கொள்ள, நான் இப்பவே அடைந்துவிட்ட வயது. இடது கொடுக்க வேண்டாமா? இன்னும் பத்து வருடங்களுக்குப் பாஞ்சாலி சிரிப்பா? பயங்கரம் என்ன வேணும் ?

 

மனச்சலிப்பு உயிர்ச் சலிப்பாகத் திரிந்து கொண்டிருக்கையில்- 83 தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. ஒரு நாள் மாலை-

அவனுக்கு 25/27 இருக்கும். லா..ரா. வீடு தேடி விசாரித்து வந்து என்னைக் கண்டதும் தடாலென்று விழுந்து நமஸ்கரித்து, "என் பெயர் வெங்கட்ராமன், பி.டி.சி.யில் வேலை செய்கிறேன். உங்கள் எழுத்தில் வெகு நாளைய ஈடுபாடு. உங்களை நேரில் காண வேணுமென வெகு நாள் ஆசை. விலாசம் சரியாகக் கிடைக்கவில்லை. லால்குடிக்கே போய் விசாரிக்கலாமான்னு யோசனை பண்ணினதுண்டு. எப்படியோ வேளை வந்துவிட்டது. இந்த மாசம் 14-ம் தேதி என் தங்கைக்குக் கலியாணம். மாமியோடு அவசியம் வரணும்."

அவன் ஆர்வம், பேச்சு, சுழல்காற்று வேகத்தில் தன்னோடு என்னை அடித்துக்கொண்டு போயிற்று.

பின்னும் பலமுறை வந்தான்.

"இங்கே வருவதில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் உங்கள் பேச்சைக் கேட்பதில் என் மனதில் ஏதேதோ சந்தேகங்கள் தெளிகின்றன. குழப்பங்கள் பிரிகின்றன. அமைதி தருகிறது."

அவன் தங்கை கலியாணத்துக்குப் போனேன். எனக்குப் புது வேட்டி மரியாதை. அங்கு அவனுடைய தந்தையைச் சந்தித்தபோது, அவர் கூழாங்கல் கண்ணாடி அணிந்திருப்பது கண்டு, அதையொட்டி அவரை விசாரித்ததில், முந்தைய வருடம்தான் காட்டராக்ட் ஆபரேஷன் பண்ணிக் கொண்டாராம். "லயன்ஸ் க்ளப் ஆஸ்பத்திரியில் நன்றாகக் கவனிக்கிறார்கள். எனக்கு இப்போ கண் நன்றாகத் தெரியறது."

என் கை என் நெஞ்சக் குழியைத் தொட்டுக் கொண்டது. சபலத்தின் சிறகடிப்பு படபட-

கலியாணச் சந்தடி ஒய்ந்த பின், வெங்கட்ராமனிடம் பிரஸ்தாபித்தேன்.

", தாராளமா! என் சந்தோஷம்!"

அம்பத்தூர் எங்கே, ஆஸ்பத்திரி தி. நகரில் எங்கே? முற்பாடு சோதிப்புக்கள் ஏற்பாடுகளுக்காக, ஐந்தாறு முறை வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் சென்று, மீண்டும் வீடு சேர்த்துவிட்டுப் போனான். இதில் எத்தனை நாள் தன் ட்யூட்டி இழந்தானோ?

பிள்ளைகள் இருக்க, பிறன் ஏன் இத்தனை முயற்சி எடுத்துக்கொள்ளணும்? கேள்விக்குச் சரியான பதில் அற்றவனாக இருக்கிறேன். ஆனால் என் மூத்த பிள்ளை வாயிலிருந்து, அவன் அறியாமலே வந்து விட்டது.

"நியாயமா நாங்கள் செய்யவேண்டியதை வெங்கட்ராமன் செய்கிறான்."

திடீரென்று ஒரு நாள், டிசம்பர் 16. காலை, ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கிறேன்.

ஆபரேஷன் செலவு பூரா தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமென முரண்டினான். மிகவும் சிரமப்பட்டு, அவன் மனதைத் திருப்ப வேண்டியிருந்தது.

ஆபரேஷன் வெற்றி.

அப்புறமும், கட்டு அவிழ்க்கும்வரை, அவிழ்ந்த பின்னும் வாரம் ஒரு முறை, ஆறு வாரங்களுக்கு வந்து காண்பிக்க வேண்டும்.

நான்கு முறைகள் வந்து அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டில் கொண்டுவந்து விட்டான்.

ஐந்தாம் முறை- அவனுக்கு என்ன அசந்தர்ப்பமோ? அடுத்தும் வரவில்லை.

அப்புறம்- வரவேயில்லை.

என்னவானான்? உண்மையில் என் கண் ஆபரேஷன் அவனுடைய வெற்றி அல்லவா?

மீதிக் காரியம் வேறு துணைக்கொண்டு ஒருவாறு முடிந்தது.

அவன் வராத ஏக்கம், வருத்தத்திற்கு அப்பால், சூட்சும தடத்தில் கொக்கிகள் நீந்தின.

உண்மையில் இவன், அல்லது இது யார்?

என்ன செய்வது? அறியாமல், என் நூல் நுனியை நான் அடைந்துவிட்ட சமயத்தில், என் விமோசனத்துக்காகவே, உயிரின் ஊர்கோலத்தினின்று வெளிப்பட்டு, எனக்குக் கண்ணைக் கொடுத்ததும், மீண்டும் வந்தவழியே போய் மறைந்து விட்ட சக்தி அம்சமா?

தெய்வம் மனுஷ்யரூபேண:

இவன் தங்கை கலியாணத்துக்குப் போனதால், மனதில் அடித்துக் கொண்ட சபலத்தின் சிறகுகள், கருணையின் அகண்ட சிறகுகளாக மாறி, மேல் இறங்கி கிருபை என்னே!

சோதனைகள் தீரும் வேளை, விதம், வழி, மூலம்- நமக்குக் காட்டாத மிஸ்டிக்குகள்.

அவனை 17-சி, 9, ரூட்களில் பார்த்ததாக என் பிள்ளை சொன்னான்.

அவன் விலாசம், வடபழனி தாண்டி- தெரியும். ஆனால் போகமாட்டேன்.

அன்று ராமன், அக்னி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனைச் சோதரனாக வரித்தான்.

 

இன்று என் ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, சாக்ஷி அக்னி என் எழுத்தா?

ஜன்மாவின் தொட்ட பிசுக்கு- தொட்டாப் பிசுக்கு,

மறு கண் ஆபரேஷனுக்குக் காத்திருக்கிறது. அப்போது வருவாயா?

அல்லது இன்னொரு வெங்கட்ராமனா?

சிந்தா நதியில் குமிழிகள் தோன்றுகின்றன. சேர்கின்றன, பிரிகின்றன, மூழ்குகின்றன, மறைகின்றன.

 

5. சொல்

 

அன்றொரு நாள்.

தெருவில் போய்க்கொண்டிருக்கையில், மாலை யிருளில் யாரோ ஒருத்தி இன்னொரு ஆளிடம் பேசும் குரல் பிரிந்து வருகிறது.

"அந்த ஆசாமியா, நீ சொல்றதை நம்ப முடியல்லியே! அவன் முதுகைத் தடவினால் வவுத்திலிருக்கிறதைக் கக்கிக் கொடுத்திடுவானே!" ஸ்தம்பித்துப் போனேன். இந்த நாட்டுப்புறத்தாளிடம் இத்தனை கவிதையா?

போன வாரம் அடுப்புக்கரி வாங்க விறகு மண்டிக்குப் போனேன். நாடார், 'போன வாரம் கிலோ ரூ.1-50. கிஸ்ணாயில் தட்டுப்பாடு ஆனவுடனே கரி மேலே மார்க்கெட் பிரியமாயிட்டுது!" பிரியமாம். விலை உயர்வை உணர்த்தும் நேர்த்தி எப்படி?

சமீபத்தில் ஒரு கலியாணத்துக்குப் போயிருந்தேன். மணப்பெண்ணின் தம்பி, சின்னப் பையன், பதினாலு வயதிருந்தால் அதிகம். என்னைப் பந்தியில் இடம் தேடி உட்கார வைத்து, உபசரித்து, பேச்சோடு பேச்சாக:

"மாமா, வந்தவாளை உபசாரம் பண்ணி, திருப்திப்படுத்தி, இந்தச் சமயத்தைப் பரிமளிக்கச் செய்வதை விட எங்களுக்கென்ன வேலை?"

இவ்வளவு ஓசை இன்பத்துடன், மனத்துடன் சொல்லிக் கொடுத்த வார்த்தையா? இராது!' Sponaneous ஆக, இந்த வாண்டினிடமிருந்து எப்படி வருகிறது? அப்பவே பாயசம், அதில் போடாத குங்குமப்பூவில், பரிமளித்தாற்போல் பிரமை தட்டிற்று.

இன்னொரு சமயம். குழந்தை அம்மாவைக் கேட்கிறது. "அம்மா, இந்த மூக்கை (முறுக்கை)த் தேந்து (திறந்து) தாயேன்!" இதில் ஸ்வரச் சொல், 'திறந்து'.

 

இவை என் எழுத்துப் பிரயாசையில் நான் கோர்த்த ஜோடனைகள் அல்ல. தற்செயலில் செவியில் பட்டு, நினைவில் தைத்து, தைத்த இடத்தில் தங்கி, 'விண், விண், விண்...'

குளவிகள்.

வாய்ச் சொல்லாகக் கண்ட பின்னர், வார்த்தை எழுத்தில் வடித்தாகிறது. வாய்ச் சொல்லுக்கும் முன்னாய உள்ளத்தின் எழுச்சியின் உக்கிரத்தை மழுப்பாமல் எழுத்தில் காப்பாற்றுவது எப்படி?

இதுதான் தேடல்.

தேடல் என்றால் டிக்ஷனரியில் அல்ல.

உன் விதியில் தேடு.

பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன்மையை அதனதன் ஓசையினின்று தவிர்த்து, அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஒவியங்கள் பயங்கும் மயக்கம். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும்.

பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக்.

தருக்களின் இலைகளினூடே, காற்றின் உஸ்!.....

அந்தி வேளையில் விண்மீன்கள் ஜரிகை கட்டிய இருள் படுதாவின் படபடப்பு.

நடு நிசி. கடற்கரையில் ஓடத்தடியில், அலை மோதிப் பின் வாங்குகையில், கரையில் விட்டுச் சென்று, கண் சிமிட்டும் நீல நுரைக் கொப்புளங்களின் மின் மினுக்கு.

சமயங்களில், கிராமத்தில், நக்ஷத்ர ஒளியினாலேயே செண்டு கட்டினாற் போலும் கருவேல மரத்தின் மேல் நெருக்கமாகப் படர்ந்து அப்பிய மின்மினிப் பூச்சிக் கூட்டங்கள்.

கிசுகிசு என்னவோ இன்னதென்று தெரியாது. ஆனால் என்னவோ நேரம் நலுங்குகிறது. இதோ என் ராஜா வரப் போகிறார் என்கிற மாதிரி மகத்துவத்தை எதிர் நோக்கும் அச்சத்தில் இரவின் ரகஸ்ய சப்தங்கள். பூவோடு பூ புல்லோடு புல். காயோடு இலையின் உராய்வுகள்-

சப்த மஞ்சரி.

செம்பருத்திச் செடியடியில் சலசல- புஸ்.....ஸ்.

உச்சி வேளை, தாம்பு சரிந்து, கிணற்றுள் வாளி விழும் 'தாடல்.'

 

மறுக்கப்பட்ட காதல், தன் வேட்கையின் தீர்வைத் தேடி அடி மேல் அடி வைக்கும் கள்ளத்தனத்தில், கதவுக் கீலின் க்ற்...றீ...ச்.....'

திடு திடு. புழக்கடையில் திருடன் ஒடுகிறான்.

இல்லை.

பிரமை-

கம்யூனிகேஷனில் எத்தனை விதங்கள், ஸ்வரங்கள், ஸ்ருதிகள், அதிர்வுகள், உருவங்கள், உருவகங்கள், நயங்கள், நயனங்கள்!

திடீர் திடீர் எனக் காரணம் தெரியா மகிழ்ச்சி.

இனம் தெரியா-துக்கம். உடனே ஏக்கம்.

ராக் ரஞ்சித்.

ராக் துக்.

வரிகளை மடித்து எழுதினால் மட்டும்

பிராசத்தால் மட்டும்

கவிதை உண்டாகி விடாது. வசன கவிதை ஆகி விடாது.

கேட்கிறேன். உள்ளபடி கவிதைக்கும் வசனத்துக்கும் என்ன வேறுபாடு?

பொருளின் முலாம் ஓசையா? ஓசையையும் அடக்கித் தான் பொருளா?

ஓசைக்கும் பொருளுக்கும் நிக்கா மேல் இழுத்த திரைதான் வார்த்தை?

அது கவிதையோ வசனமோ எதுவானால் என்ன?

எல்லாம் கவித்வமே.

கெளரி கல்யாண வை போ மே

நித்ய கல்யாண வை போ மே

கவிதா கல்யாண வை போ மே

முதன் முதலில், ஒசை வயிறு திறந்ததும், அதனின்று பிரிந்தது வார்த்தை அல்ல. சொல்தான் பிறந்தது.

சொல் வேறு. வார்த்தை வேறு.

சொல் என்பது நான். என் தன்மை, என் பொருள், என் தேடல், என் சுழி, என் ஆரம்பம், என் முடிவு, முடிச்சு, முடிச்சின் அவிழ்ப்பு. அதற்கும் அப்பால் என் மறு பிறப்பு. எல்லையற்ற பிறவி மூலம் என் புதுப்பிப்பு.

 

ஆதிமகனும் ஆதிமகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட முதல் சமயம் கண்ட உள்ள எழுச்சி தேடிய வடிகால், இருவரும் கண்ட முதல் சொல்லின் தரிசனத்தை அனுமானத்தில் காணக்கூட மனம் அஞ்சுகிறது.

சிந்தா நதி தலைக்கு மேல் ஆழத்தில், மண்டை ஒடுள் தோற்றங்கள்.

 

6. உபதேச மந்த்ரம்

 

அப்போ நாங்கள், பைக்ராப்ட்ஸ் ரோடு, ஜாம்பஜார் மார்க்கெட்டுக் கெதிரே, ஆயில் மாங்கர் தெருவிலே குடியிருந்தோம். கிழக்கில் அதே பைக்ராப்ட்ஸ் ரோடில் கலக்கும் நல்ல தம்பி முதலித் தெருவில் என் தங்கை மகளின் புக்ககம். நடை தூரம்தான்.

என் மருமாள் மாதம் ஒருமுறை, இரு முறை பாட்டியை மாமாவைப் பார்க்க வருவாள்.

ஆபீஸ் விட்டு, பஸ்ஸில் திரும்புகையில் அவள் தெரு முனையில்தான், நான் இறங்கணும். வாரம் ஒரு முறையேனும் எட்டிப் பார்த்துவிட்டு வருவேன்.

என் வீட்டுக்கு நான்கு வீடுகளே தாண்டி, எதிர்ச் சாரியில் எங்களுடைய வாடிக்கை மளிகைக்கடை. முதலாளி செட்டியார். பிதுங்கிய பெரும் வண்டு விழிகள். கடை பார்க்கச் சிறியது ஆயினும், 'ஜே ஜே'. தொப்புளடியிலிருந்து கத்தியவண்ணம், செட்டியார் சிப்பந்திகளைக் கார்வார் பண்ணுகையில், எங்கள் வீட்டுக் கூடத்தில் கேட்கும்.

நான் எப்பவோ ஒப்புக்கொள்ள வேண்டிய விவரம், இனியும் ஒத்திப்போட முடியாது. என் பாடும் 'பற்று'த் தான். நாடு விடுதலை பெற்று எத்தனை வருடமானாலும் சரி, எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, உற்பத்திப் பெருக்கு எத்தனை ஆனாலும் சரி, இந்த நடுத்தரக் குடும்பம் இருக்கிறதே, இதற்கு விமோசனம் கிடையாது. எல்லோருடனும் சேர்ந்து கும்மி அடிக்கிறேனா? அடித்து விட்டுப் போகிறேன்.

நாங்கள் குடியேறின ஆறு மாதங்களுக்குள் முழியான் செட்டியார், எங்களைத் தன் கணக்குப் புத்தகத்துள் இழுத்து விட்டார். சிறுகச் சிறுக ஆரம்பித்து, ஒரு நாள் முழுக்க. அப்புறம் முதலை வாய்தான். சம்பளத்துக்கு ஒரு வாரம் முன்னரே, லிஸ்டைக் கொடுத்துவிட்டால், அன்று மாலையே, மறக்காமல் கொசிர்ப் பொட்டலத்துடன் (அதைச் சொல்லு), பெரிய அட்டைப் பெட்டியில் சாமான்கள் வந்து இறங்கிவிடும். லிஸ்டைத் தவிர, தனித் தனியா வேற அப்பப்போ, பெண்டிருக்கு வெகு செளகர்யம். அம்மியில் தேங்காய்த் துருவலையும் பச்சை மிளகாயையும் வைத்துக்கொண்டு, உடைத்த கடலைக்கு, கடைக்குட்டியைக் கடைக்கு அனுப்பலாம்.

 

சின்னப் பையனிடம்கூட செட்டியாரின் கவனமும் மரியாதையும் குறிப்பிடத் தக்கதாயிருக்கும்.

"இந்த மாதம் சாமான் கூட ஆயிடுத்து செட்டியார்...."

"ஆவட்டும், ஆவட்டும். பிள்ளைங்க நல்லாச் சாப்பிட்டு நல்லா வளரட்டும்."

"பணம், செட்டியார்-"

"என்ன சாமி, பணம், பணம் ? நான் வாயைத் துறந்து கேட்டேனா? வசூலுக்கு இதுவரை உங்கள் வாசப்படி மிதிச்சிருப்பேனா பணம் எங்கே ஒடிப் போவுது? மனுஷாள்தான் முக்கியம் சாமி!"

அவ்வளவுதான், தொப்புள்வரை 'ஜில்'

ஒரு சமயம், ஆபீஸ் விட்டு, வழக்கம்போல் கலியாணி வீட்டில் எட்டிப் பார்க்கையில், என்னைக் கண்டதும் அவள் முகம் சட்டென இறங்கிற்று. என்னோடு முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. எனக்குப் புரிய வில்லை. வீட்டில் ஏதேனும் மசமசப்பா? நோ.நோ.நோ. அவளுக்கு அங்கே ரொம்ப செல்லம். அதிர்ஷ்டசாலி தென் வாட்? அடுத்த தடவையும் அப்படியே. நான் என்ன குற்றம் செய்தேன்?

மூன்றாம் 'பீட்'டின்போது மாடியில் நான் தனியாக ஏதோ பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருக்கையில், மேலே வந்தாள்.

"மாமா, உங்களிடம் சொல்லலாமா வேண்டாமா, இதுவரை யோசனை பண்ணிப் பண்ணி உங்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமைன்னு முடிவு பண்ணிட்டேன்."

"என்ன? என்ன ஆச்சு?"

சுப்ரீம் பீடிகை வயிற்றில் புளியைக் கரைத்தது.

"அன்னிக்கு உங்காத்துக்கு வந்திருந்தேனா? திரும்பும் போது வீட்டில் டீ தீர்ந்துபோச்சு ஞாபகம் வந்தது. எதிரே செட்டியார் கடையேறி 50கி. பாக்கெட் ஒண்ணு கேட்டேன். கடையில் அவரைத் தவிர யாரும் இல்லை. சாப்பாட்டு வேளையோ என்னவோ? செட்டியார் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். சாமானை எடுத்து வரக் கடையின் உள் அறைக்குப் போனார்.

தற்செயலில் என் பார்வை, திறந்தபடி அப்படியே விட்டுப் போயிருந்த கணக்கு நோட்டின் மேல் விழுந்தது. கொட்டை எழுத்தில், தலைப்பில் உங்கள் பெயர் பார்த்ததும், கவனம் சட்டுனு அங்கு ஊணித்து. ஐட்டங்களின் நடுவிலிருந்து டீ-ஒத்தை எழுத்தோன்னோ- தனியாப் பிதுங்கித்து.

 

'100. கி பாக், 2-50.'

"இந்தாம்மா டீ, A-1 சரக்கு-என்னம்மா பார்க்கறீங்க?" குண்டுக் கண் கடுத்து உடனே கனிஞ்சதை டிக்கெட் கொடுத்துப் பார்க்கலாம். புத்தகத்தைப் படக்'னு மூடினார்.

"என்ன செட்டியார்வாள், எனக்கு டீ விலை ரூ. 2. அதே பொட்டலம், அதே ரகம் மாமாவுக்கு 2-50!"

ரோசத்தில் என் குரல் தேம்பித்தோ என்னவோ?

அவர் அமைதியா, "ஏம்மா, நீங்க காசைக் கொடுத்துட்டு டீ சாப்பிடறீங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கிறாங்க!"

அன்னியிலேருந்து எனக்கு மனசு சரியில்லே மாமா. அம்மாடி! இன்னிக்கு சுமை இறங்கித்து, இனி உங்க பாடு."

-துடித்துப் போனேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கஜகர்ணம் கோகர்ணம் போட்டு, எப்படியோ புரட்டி, அடுத்த நாளே, செட்டியார் 'பற்றைப்' பூரா அடைத்தேன் என்பது வேறு கதை. அன்றிலிருந்து ரொக்கம். 'காசில்லேன்னா அந்த சாமான் இல்லாமலேயே நடக்கட்டும்'- உத்தரவு போட்டு விட்டேன். ஆச்சு, முப்பது வருடங்களுக்கு மேல். இது எல்லாமே கிடக்கட்டும்.

அன்று செட்டியார் பேசினது நியாயமோ, நாணயமோ, கேலியோ- ஆனால் சந்தேகமில்லாமல் இலக்கியம். என்ன கச்சிதம், ஸ்வரக்கட்டு, லயம், என்ன அர்த்த வீச்சு!

இன்னும் வியக்கிறேன்.

'சுரீல்' -ஒரு பொறி

-ஒரு முள் தைப்பு

-ஒரு பாம்புப் பிடுங்கல்

-ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக்கூடிய உபதேச மந்த்ரம் இப்படித்தான் அமையுமோ?

சிந்தா நதியில் தண்ணிர் எப்பவுமே பளிங்கல்ல.

உச்சி வெய்யிலுக்கு, கக்கல் கரைசல், பாசி, கும்மி, அழுகிய தழை, இலை, வேரோடு பிடுங்கிக்கொண்ட கோரை, எல்லாம் மிதக்க, கலங்கலாயும் வரும் போலும்!

 

7. அங்குல்யப்ரதானம்

 

மோதிரத்தைக் கானோம். எப்படி? இரவு, படுக்கு முன், சில சமயங்களில் கழற்றி, தலையணை உறையுள் போட்டுவிடுவேன். மறுநாள், எழுந்து, தலையணையை உதறினதும், மோதிரம் தரையில்க்ளிங்' என்று விழுகையில், நினைவில் ஏதேதோ எனக்கே சொந்தம் எதிரொலிகள் எழும்.

சங்கராந்தியுமதுவுமாய் மோதிரத்தைக் காணோம். ஆனால் தாமதமாகத்தான் ஞாபகம் வந்தது. ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கையில், விரலின் வெறிச்சைப் பார்த்ததும், தன் அறைக்குப் போய் சுருட்டின படுக்கையை விரித்து, தலையணையை உதறினால்-'ப்ளாங்கி.'

உடல் வெலவெலத்து அங்கேயே உட்கார்ந்துவிட்டது. எப்படி, என்ன, ஏது ஆகியிருக்கும்?

வெகு நாளாகவே என் அறை, படுக்கை, சாப்பாடு முறை, வேளை கூடத் தனி. இளவட்டத்தின் இரைச்சல்- பேச்சுத் தளம் ஒவ்வவில்லை. ஈடு கொடுக்க முடியவில்லை. என் அறைதான் எனக்கு அடைக்கலம். பிறர் நடமாட்டத்துக்கு அதிகம் ஏதுவில்லை. என் புத்தகங்களை யார் எடுத்துப் படிக்கப் போகிறார்கள்?

" 'The power of Silence'- தலைப்பைப் பார்த்தாலே தொடணும் போல இருக்கா பார்! ஓஹோ, அதனால் தான் ஐயா கொஞ்ச நாளா 'உம்' மா?"

ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு வேலைக்காரி பெருக்க வருவாள். அந்தச் சமயத்துக்கு என் புத்தகங்களை என்னைச் சுற்றிப் பரப்பிக் கொண்டிருந்தேனானால், கையை ஆட்டிவிடுவேன். அவளுக்கு வலிக்கிறதா?

ஆனால் எப்பவுமே, எங்கேயுமே, இப்படித்தான் என்று நினைக்கிறேன். ஒரு பண்டம் காணாமற் போனால், சந்தேகத்துக்கு முதல் காஷுவல்டி வேலைக்காரிதான்.

இவள் வந்து இன்னும் வாரம் ஆகவில்லை. கல்யாணமாகி ஒரு வருடம் ஆகவில்லை. மாமியார் வீட்டோடு சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டார்களாம். புருசன் குடிக்கிறானாம், அடிக்கிறானாம்.

பார்க்க நல்ல மாதிரியாகத்தான் தோன்றுகிறாள். ஆனால் புதுக்கை, கை சுத்தம் பற்றி என்ன கண்டோம் ?

சரிதான், என் தலையணையிலிருந்து அவள் எப்படி எடுத்திருக்க முடியும் ? சாத்தியத்துக்கும் பகுத்தறிவு நியாயத்துக்கும் சமயத்தில் புத்தி அவிந்துவிடுகிறதே! அவள் இன்னும் பெருக்க வரவில்லை.

வென்னிர் அடுப்படியில் உட்கார்ந்து, கட்டையை உள்ளே தள்ளும் பாவனையில் என்னிடமிருந்தே ஒளிந்து கொள்கிறேன்.

"அப்பா ஏன்டா ஒரு மாதிரியா இருக்கா?"

"யார் கண்டது: The Power of Silence."

 

"என்ன சொல்றே?"

"சொன்னால் உனக்கும் புரியாது. எனக்கும் புரியாது."

அத்தனையும் கிசுகிசு. ஆனால் என் செவி படணும். நான் சூளையில் வெந்து கொண்டிருக்கிறேன்.

கனுவன்று கன்னியம்மா நோட்டீஸ் கொடுத்து விட்டாள். மாமியாரும் புருசனும் கூட்டிப் போக நேரே வந்திருக்காங்களாம். "குடிகாரனோ, கொலைகாரனோ, என் இடம் அங்கேதானேம்மா! தை பிறந்திருக்குது. எனக்கு வழி விடுது-"

ஓஹோ, அப்படியா? பலே கைக்காரிதான். காரியம் முடிந்ததும், Knack- கழன்றுகொள்கிறாளா? ஆனால் ஜாடையாகக்கூடக் கேட்க முடியுமோ? புருஷனை அவள் அழைத்து வந்து விட்டால், அவ்வளவுதான், என்னை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி விடுவானே! கேட்க வேண்டிய சமயத்தைக் கோட்டை விட்டாச்சு. இனி அவ்வளவுதான். இனி என்ன ?

வீட்டுக்குத் தென்புற முன்வேலியை ஒட்டிப் புல்தரையில் உட்கார்ந்திருக்கிறேன்.

-ஒரு thesis டைப் அடித்துக் கொடுத்ததற்குக் கிடைத்த ஊதியத்தை, அம்மா சொற்படி, (உருப்படியா பண்ணிக்கோ, குடும்பம்தான் எப்பவுமே இருக்கு, எத்தனை வந்தாலும் போறாது!) அப்படியே பண்ணி, அம்மா கையில் கொடுத்து, வாங்கி, விரலிலேறி ஆச்சு இன்று இருபத்து ஏழு வருஷங்களுக்கு மேல். அம்மா காலமும் ஆயாச்சு. மோதிரமும் போயாச்சு.

இனி என்ன !

கரணையா ஒரு பவுன். ஆனால் அதன் மதிப்பு அதன் தங்கத்தில் அல்ல.

வானத்தில் அங்குமிங்குமா, ஒண்ணும் இரண்டுமாகத் தெளித்தாற்போல் சுடர்கள் ஏற்றிக் கொள்கின்றன. மோதிரத்தைத் தேடவா? அல்ல, என் நட்சத்திரத்தின் கண்ணிர்த் துளிகளா?

"ஸார்! ஸார்! பாம்பு!"

நானும் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்து அடி. மஞ்சள் நிறம். சருகின் பழுப்பு மஞ்சள். நொடிக்கு ஒரு முறை நாக்கு வெளி நீண்டு, உடனே உள்வாங்கி- தேடுகிறது.

முள்வேலி அடியில் இலைச் சருகுகள் சலசல……

அம்மாவும் எனக்காகத் தேடுகிறாளா?

பையன் கையில் கல்லை எடுத்துவிட்டான். எழுந்து ஓடிப்போய் விரட்டினேன். மொணமொணத்துக் கொண்டே மனமில்லாமல் நகர்ந்தான். ஆனால் நான் விரட்டத் தேவையே இல்லை. திரும்பி என் இடத்துக்கு வந்ததும் சோடையே காணோம்.

 

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய்- 'உங்கள் மோதிரம் எங்கே?"

காத்திருந்த கேள்விதான். ஆனாலும் குப்பென்று வியர்வை.

"இதோ பார்……." ஏதோ ஆரம்பித்தேன்.

என் கையைப் பிடித்து இழுத்து, மோதிர விரலில் அவள் செருகியதுதான் தாமதம்-

என்னுள் ஒரு பெரும் சக்தி அலை எழும்பியதை

அனுபவத்துக்குத்தான் அறிய முடியும். கிணறு பொங்கின மாதிரி.

இந்த சமயம் உலகமே என் உள்ளங்கையில் ஒரு லேகிய உருண்டை.

அம்மாவின் ரக்ஷைக்கு சாஷி வேற வேணுமா?

உன் ஆவாஹனத்துக்கு ஏற்றபடி உன் அபிமானம். அபிமானத்துக்கேற்றபடி அருள்.

"என்ன வேலைக்காரியோ, என்ன பெருக்கறாளோ? பத்து நாள் முத்து மழை பேஞ்சு, ஒரு பழம் புடவையும் புது ரவிக்கையும் பிடுங்கிண்டு போனதோடு சரி. இன்னிக்கு உங்கள் புஸ்தக ஷெல்படியில் வாருகலைக் கொடுத்துப் பெருக்கறேன். கலம் குப்பையோடு இதுவும்-எல்லாம் நான் பார்த்தால்தான் உண்டு. நான் செஞ்சால் தான் உண்டு."

அரற்றுவதோடு சரி. எலியுடன் பூனை விளையாட்டின் நுண்ணிய கொடூரம் அறியாள். வெகுளி.

படுக்கையைச் சுருட்டி வைக்கையில், கண்ணுக்குத் தெரியாமல், காதுக்கும் கேட்காமல் எப்படியோ நழுவி விழுந்து உருண்டோடி, ஒளிந்துகொண்டு, எனக்கு 'ஜூட்' காட்டி, என்னை அம்பேல் ஆக்கிவிட்டது.

கன்னியம்மா, உன் ஊழல் காரியத்துக்கு நன்றி.

என் ஸகியே, உன் புலம்பலுக்கு நன்றி.

பொங்கலோ பொங்கல்!

சிந்தா நதியில் ஒரு சுழி.

 

8. சொல்

 

காலையில் கண் விழித்ததும் கண்ணில் படுவது இதோ என் பூமி,

இரவு கண் மூடுகிறேன்; அப்பவே மாய்ந்தேனோ என்னவோ? என் புவனமும் என்னுடன் அழிகிறது.

தினம் பிறக்கிறேன், பிறப்பிக்கிறேன், அழிகிறேன், அழிக்கிறேன்.

அன்றன்று ஒன்றொன்று அவனவன் பூமி,

பிறத்தலுக்கும், பிறப்பித்தலுக்கும், அழிதலுக்கும் அழித்தலுக்குமிடையே பேசினேன். 'நீ' என்றேன். 'அவன்' என்றேன். 'எவன்' என்றேன்.

இந்தநீயும்' ‘அவனும்' ‘எவனும்' யாவன்?

யாவும் எனக்கு அர்ச்சனைகள்.

பெரிது பெரிது புவனம் பெரிது.

அதனினும் பெரிது சிந்தனை.

அதனும் பெரிது நான்.'

ஏனெனில், சிந்தனையில் புவனத்தையே சிருஷ்டிக்கிறேன்.

ஆனால் நான் சிந்தனைக்கு அர்ச்சனை.

இதன் புதிர் என்ன?

அர்ச்சனை யெனும்சொல்.'

ராமன், கிருஷ்ணன், ரிஷிகள், புத்தர், சங்கரர், நபி, சாக்ரடிஸ், Zorasther, Confucius, யேசு, காந்தி இத்யாதி இதுவரை தோன்றி, அவ்வப்போது இனியும் தோன்றப் போவோர் யாவரும் சிருஷ்டியின் கடையலில் உண்டாகி, இயங்கி, அவரவர் சொல்லைச் சொல்லியானதும் அதிலேயே மறைந்தவர்தாம்.

சிந்தனையெனும் சிருஷ்டி.

சிந்தனைக்கென்றே ஒரு தக்ஷிணாமூர்த்தியைப் படைத்தேன்.

அவனே சிவன்; அவனே தவன். சிந்தனையெனும் தவம். சிந்தனையின் படுக்கையில் அவன் ஆழ்ந்து கிடக்கும் இடமும் ஆழமும் அவனே அறியான். எங்கு இருக்கிறேன்? எங்கிருந்து வந்தேன்? ஏன் வந்தேன்?

சிந்தனா நதியில் அவன் முகத்துக்குக் காத்துக் கிடக்கிறான்.

மொழி முத்து.

முத்தான சொல்.

எழுத்தாய்க் கோர்த்த சொல் எனும் ஜபமணி.

சொல் எனும் உருவேற்றம்.

எப்பவோ 'நான்' என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில் எழுத்து வாக்கில் ஒரு சொற்றொடர்.

'நெருப்பு என்றால் வாய் வெந்துபோக வேண்டும்', என்று விழுந்துவிட்டது. கேலியாகவோ, ஒரு சில சமயம் பாராட்டியோ, இன்னும் அபூர்வத்தில் சொந்த வியப்பில், இந்த வாக்கியம் இன்னமும் எனக்கு நினைவு மூட்டப்படுகிறது.

சொல் எனும் உருவேற்றம்.

மனம் படைத்தேன் மானுடன் ஆனேன்.

மனம் எனும் சிந்தனையின் அத்தர்.

கும்-கும்-கம்-கம்-கமகம

ஸரி கம -என்ன இது? இதுதான் சொல்.

மனம், மனஸ்-மனுஷ்-மனுஷ்ய....

பவுருஷம், ஆணவம், மணம், மாண்பு, மானுடம்

மானுடத்தின் மாண்பைச் சொல்லி

மரபுக்குச் சாசனமாகும் சொல்.

என் தாய், தந்தை, என் வீடு, என் நாடு, இமயத்தினின்று இலங்கைவரை ராமன், சீதை, அனுமன் என்ற பெயரில் எண்ணற்ற சீலர்கள். *வரைற்ற காலமாகத் திரிந்து, அவர்கள் பாதம் பதிந்த மண். இது என் மண். என் இறுமாப்பு. என் சொல்லின் இதழ்விரிப்பு.

வழி வழி சிந்தனையில் பூத்து, பரம்பரையின் சாதகத்தில் மெருகேறிய சொல் எனும் நேர்த்தி.

எண்ணத்தின் எழில். மணத்துடன், பூர்வ வாசனையும் கலந்து, ஓயாத பூப்பில், அழியாத என் புதுமையில் நான் எனும் ஆச்சர்யம்.

என் சிந்தனையில் புவனத்தை சிருஷ்டித்தேன்.

ஆகையால் சிந்தனையிலும் பெரிது நான்.

ஆனால் நான் சிந்தனைக்கு அர்ச்சனை.

இதுவே என் ஆச்சர்யம்.

வசனா, கவிதா, வசன கவிதா, அர்ச்சனா, அக்ஷரா, அக்ஷரார்ச்சனா.

புஷ்பா, புவனா, ஸரி, ரிக, கம, பதநி-ஸா.

சிந்தா நதியின் தலை முழுக்கு ஆழத்துள், மண்டையோட்டுள் புயல் நடுவே.

 

9. யுக மணம்

 

இது நடந்து இன்று மூன்று வருடங்களாகியிருக்கும். கதையைப் பாராட்டி-கதிரில் வெளியான 'மேனகை' என்றே நினைக்கிறேன்- கடிதம் ஒன்று வந்தது. "வெகு நாட்களாகிவிட்டன. உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதோ இல்லையோ" என்கிற ரீதியில் முடிந்து 'பாஸ்கர்'

எழுதியிருந்த படியே நினைப்பு மழுப்பிற்று. பாஸ்கர்? எத்தனையோ பாஸ்கர்கள். பாஸ்கர், முரளி, ஸ்ரீகாந்த், குமார்-இட்ட பெயர் எதுவாயினும், அழைக்க இவை தான் இப்போது ஃபாஷன். கடைசியில் போயே பார்த்து விடுவதென........

வருகிற எல்லாக் கடிதங்களின் விலாசங்களையும் தேடிச் செல்வது சாத்தியமா? அல்ல. எனக்குத்தான் கெளரவமா? ஆனால் இதற்கு மட்டும் ஏன் இத்தனை நெஞ்சு முள் இடறல்? எதுவோ கட்டிப் பிடித்து இழுத்தது.

தெரு முனையிலேயே ஆசாமி பார்த்துவிட்டார். எதிர் கொண்டு வந்து என்னைத் தழுவிக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார். எனக்கும் அடையாளம் விடிந்து விட்டது.

வயதில் எங்கள் இருவருக்குமிடையே ஒரு தலை முறையே முழுமையாக உருவாகியிருந்தது. அதே முகம், ஒரு சுருக்கம் கூடக் கிடையாது. பாஸ்கருக்குக் கண்கள் எப்பவுமே அழகு. மான் விழி. உடல்தான் தடித்து விட்டது. நெல்லுக்கு முனை கிள்ளி விட்டாற்போல், உச்சரிப்பில், அதே லேசான கொச்சைக் குரலில், பாஷையில் அதே மிருது. எங்கள் சந்தோஷத்திற்கும், பேச விஷயங்களுக்கும், பரிமாறல்களுக்கும் கேட்கணுமா?

கடல் போலும் வீடு. மூன்று பிள்ளைகளும், சம்சாரங்களும் தவிர, சுற்றம், போவோர், வருவோர் சந்தடிநாடி ஸ்வச்சமாகத் தெரிந்தது. பயணத்தின் வசதிகள் அனைத்தும் தெரிந்தன. இந்த தினப்படி உற்சவத்தில் அத்தனை வசதிகளும் தேவைதான் என்றும் தெரிந்தது.

வயிற்றுப் பாடின் எதிர் நீச்சலின், ஒரே சமயத்தில் பல லைன்களில் sales Representative ஆக, ஒரு தோல் பையைத் துக்கிக்கொண்டு, படிப்படியாக ஏறி இறங்கி வந்த அந்த நாள் பாஸ்கருக்கு இவர் எங்கே?

இப்போது பாஸ்கர் சொந்த பிஸினெஸ் பண்ணிக் கொண்டிருந்தார். அது சம்பந்தப்பட்ட வியாபாரி சங்கத்தின் காரியதரிசியும்கூட. வசதி, க்ஷேமம், பதவி மூன்றும் கூடிவிட்டன.

"உலகம் ஒரு பிரமாண்ட நரம்பு லிஸ்டம். எங்கே தட்டினாலும் விதிர் விதிர்ப்பு எவ்வளவு தூரம் பரவுகிறது! இல்லாவிட்டால், முப்பது வருடங்கள் கழித்து நாம் இப்படிச் சந்திக்க முடியுமா? விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தொட்டுக்கொள்ள முடியுமா?" என் கையைப் பிடித்துப் பட்சத்துடன் அமுக்கினார். "இத்துடன் நான் சொன்ன வேரோட்ட பலம் இருக்கும் வரை, மற்ற மற்ற முரண்பாடுகள் எல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள், Time marches on."

"காலத்துக்குத் தக்கபடி நியதி மாறுகிறது. நம் நியாயங்கள் இப்போ பொருந்தா. நாம் நம் முன்னோர்களின் வாரிசுகள் என்பது நம்முடைய தத்துவம். கொடு, கொடு. கொடுத்துக் கொண்டேயிரு-நம் கோட்பாடு கொடுப்பதற்கு அப்போ இருந்தது. கொடு என்பதில் நான் எல்லாவற்றையும்தான் சேர்த்துக்கொள்கிறேன்; அன்பு, பாசம், பிரியம், தியாகம், So on. ஆனால் வாழ்க்கை ஒரு நீண்ட அவசரமாகி விட்ட பின், அவனவன் அவனவனுக்கே. பற்றிக்கொள்ள முடிந்தவரை பற்றிக்கொள்- இது வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டது. மிஞ்சத் தக்கவன் தான் எஞ்ச முடியும் எனும் இந்த rat race இல் இளைய தலைமுறை என்னதான் செய்யும்! அவர்களுக்கு மனம் இல்லை என்று சொல்ல மாட்டேன். அவர்களால் முடிந்ததைக் கொடுக்கிறார்கள். கொடுக்கிறது என்பதில் நான் எல்லாவற்றையும்தான் மடக்குகிறேன். அன்பு, பாசம், பிரியம், நேசம் So on. ஆனால் நமக்குப் பங்கு குறைந்துபோய்விட்டது; குறையத்தான் செய்யும். பங்குதாரர்கள் கூடிவிட்டார்கள். சரக்கும் குறைந்து போச்சு. இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் அத்துடன் நாம் சமாதானமானால் வாழ வழி. இல்லையேல் Generation Gap, குற்றம் குறை. கொடுப்பதென்றால் அதன் வீச்சு நம் பிள்ளைகளுக்குத் தெரியாது."

"ஏண்டா பாஸ்கர், வேட்டியை இன்னும் விழுத்துப் போடல்லியா? எப்போ தோய்ச்சு எப்போ காயறது?"

வாசற்படியில் ஒரு கிழவி நின்றாள். 70, 75. உடல் வற்றி புடவை கொம்புக் கிளையில் மாட்டினாற்போல் ஆங்காங்கே தொங்கிற்று.

பாஸ்கர் எழுந்து நின்றார். அமைதியாக, அன்பாக, "இதோ வந்துட்டேன் அம்மா."

அம்மாவா? இவளா? வேளைக்காரி என்று சொல்லாமலே தெரிகிறதே!

"இந்த மகன் யாரு?"

"இவரை உனக்குத் தெரியாது. ரொம்ப வேண்டியவர்.

"சுருக்க விழுத்துப் போடுடா. பேச்சுக்கு ஆள் அகப்பட்டா போதும். தோச்சுப் போட்டுட்டு நான் கட்டையைச் சத்தே நீட்ட வேண்டாமா?"

பின்வாங்கி, வீட்டைச் சுற்றிக்கொண்டு, புழக்கடைப் பக்கம் சென்றாள்.

என் முகத்தின் திணறலுக்குப் பாஸ்கர் புன்னகை புரிந்தார். நாற்காலியில் சாயந்து கொண்டார்.

"இவளுக்குக் கலியாணமான கையுடன், வேலை செய்ய எங்கள் வீட்டுக்கு இவள் வந்தபோது, என் தாயார் என்னைக் கர்ப்பமாயிருந்தாள். அம்மா சமையல் பண்ணிக்கொண்டிருக்கையில், சமையலறையிலேயே திடீரென்று நான் அவதாரமாகி விட்டேன். இவங்க ரெண்டு பேரைத் தவிர வீட்டில் யாருமில்லை. கூடத்துக்குக் கூட்டிப் போகவோ, ஒரு விரிப்புக்கோகூட நேரமில்லை. ஆகவே என்னைப் பிரசவம் பார்த்தவளே இவள்தான். அத்தோடு நிற்கவில்லை. அடுத்து வந்த தம்பி, அப்புறம் தங்கை, மறுபடியும் தம்பி, மறுபடியும் தங்கை-அந்த நெருக்கடி நேராவிட்டாலும் இவள்தான் மருத்துவம். ஆகவே இவள் Status தனிப்பட்டது. அம்மா வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். ஆகவே இவள் தான் எங்களை வளர்ந்தாள். என் மூக்கை எத்தனை தரம் சிந்திப்போட்டிருப்பாள். இவளிடம் எத்தனை உதை வாங்கியிருப்பேன். எத்தனை தரம் எடுத்து விட்டிருக்கிறாள்!" அவர் குரலில் பெருமிதம் ஒலித்தது. ஆம், இவளுக்கும் குழந்தை குட்டிகள் இருக்கிறார்கள், நிறைய.

"அப்புறம் அப்பா காலமானார். அடுத்த வருடமே அம்மா அவரைத் தொடர்ந்து விட்டாள். பிறகு இவளுடைய ப்ரசன்னம் எங்கள் உடலோடு, குடும்பத்தோடு ஊறிப்போன தன்மையாகி விட்டது.

"என் பேரக் குழந்தைகளுக்கு இவள் வைத்யம் சரிப்படுமா? காலத்துக்கேற்றபடி அவர்கள் நர்ஸிங் ஹோம் ப்ராடக்ட்ஸ்.

"வாட் நெள? இவள் எங்களோடயே தங்கிவிட்டாள். இவளுடைய பிள்ளைகள் விழுந்து விழுந்து அழைக்கிறார்கள். ஆனால் ஏனோ இவளுக்கு அங்கே பிடிப்பு இல்லை.

"இன்னும் பற்றுப் பாத்திரம் தேய்க்கிறாள். ஆனால் கை அழுந்தவில்லை. இவ்வளவு பெரிய குடும்பத்திற்கு வண்டிப் பாத்திரம் விழுகிறது. நீ தேய்க்க வேண்டாம். ஒன்னுமே செய்ய வேண்டாம் என்றால் கேட்க மாட்டேன்கிறாள். திருட்டுத்தனமாகச் சமயலறையில், மாமியாரும் நாட்டுப் பெண்களும் பாத்திரங்களை மறுபடியும் தேய்த்தாகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் தனக்குச் சம்பளம் வேண்டாம் என மறுத்து விட்டாள். ரேழியில் ஒரு கந்தல் பாயில் படுக்கிறாள். வேறு கொடுத்தாலும் மறுக்கிறாள்.

"டே பாஸ்கர்! (எப்பவுமே கொஞ்சம் தோரனைதான்) நான் செத்துட்டா, நீ கொள்ளி போட்டுடு. ஆனால் உன் ஜாதி புத்தியைக் காண்பிச்சாலும், செத்தப்புறம் எனக்கென்ன தெரியப் போவுது, தெரிஞ்சு என்ன ஆவணும்? நெருப்புக் குச்சி யார் கிழிச்சாலும் பத்திக்கும். ஆனால் வர வர இப்போ, கொஞ்சம் ஞாபகம் பிசகறது. அதனாலதான் வேளையில்லாத வேளையில் என் வேட்டியைக் கேட்கிறாள். இடம், வேளை, இங்கிதம் பிசகுகிறது. ஸோ வாட்? இப்பவும், இவள் எங்களுக்கு அரண்!"

மல்லிப் பந்தலை ஊடுருவிக் கொண்டு தென்றல் பாய்ந்தாற் போல், அவர் குரல் லேசாக நலுங்கிற்று.

திடீரென நாங்கள் இருந்த இடத்தையே- அந்த வேளையையே ஒரு மணம் சூழ்ந்தது.

சில மலர்கள் வதங்க வதங்க மணம் மிகுகிறது.

சிந்தா நதியில் ஒரு சந்தோஷமான துளையல்.

10. சருகுகள்

 

வெய்யில் உச்சியை எட்டவில்லை. ஆனால் பிளக்க ஆரம்பித்து விட்டது.

என்னைச் சுற்றிலும் ஒரே காகிதக் குப்பை. பெட்டியில் இன்னும் இதைப்போல் இரண்டு பங்கு,

-பெட்டியா? பெரிய ட்ரங்க். பெரிய டாங்க். என் புத்தகங்கள், என் எழுத்துக்கள், என் கடிதங்கள், என் அடைசல்கள். பூட்டு இல்லை, உடைந்த தாழ்ப்பாள், கீல் கழன்று கீச் கீச்..

இந்த ஜங்கிளுள் புகுந்துவிட்டால், நேரம், சோறு போனதே தெரியாது. இடையில் பின்வாங்க முடியாது.

இதிலிருந்து என்னென்ன வெளிப்படும், எனக்கே தெரியாது. புலி, கரடி, புருஷாமிருகம், பூதம்- என் விதியுடனேயே சந்திப்பு நேரலாம்- 'சுருக்'- தோளைக் குடைந்து கொண்டு மண்டைக்கேற்ற எந்நேரம் ஆகும்? ஐயா, பெட்டி அத்தனை பெரிது. அதனினும் பெரிது அதில் சேர்ந்திருக்கும் கூளம்.

முதலில் என் கையெழுத்துப் பிரதிகளைச் சொல்லுங்கள். முதல் வார்ப்பு, இரண்டு, மூன்று. சில பக்கங்கள் எட்டு, பத்து. திரும்பத் திரும்ப, இப்படியே மலை திரண்டாயிற்று. போகிக்கு ஒரு சொக்கர்பானைக்குக் கணிசமாகும். ஆனால் மனம் கேட்கவில்லையே.

ரசீதுகள், கோயில் கும்பாபிஷேகப் பிரகடனங்கள், பிள்ளையாண்டான் காலேஜ் நாட்களில் எழுதிய கடிதங்கள், சில கோர்ட் தஸ்தாவேஜுகள், வீட்டுப் பத்திரம், உடைந்துபோன பேனாக்கள், தீர்ந்துபோன பாட்டரி ஸெல்கள், காலி அட்டைப் பெட்டிகள், சோப்பு உறைகள், -என் பெட்டி மற்றவர்களுக்குக் குப்பைக் கூடை.

அழைப்புகள், கலியாணம், இலக்கியக் கூட்டம், புதுமனை புகுவிழா, ஆண்டு நிறைவு, ஸஷ்டியப்த பூர்த்தி, முண்டான் சடங்கு, இடையிடையே சில, மூலைகளில் கறுப்பு மசி தடவி, உருவில், தோற்றத்தில் வாசகத்தில் எத்தனை எத்தனை வேறுபாடுகள்! வருடக் கணக்கில் சேர்ந்துவிட்ட இவை இப்போ படையெடுப்பாக அசத்துகின்றன.

ஏதோ ஒன்றை, கையில் பட்டதை எடுக்கிறேன். என்னுடைய திருமணப் பத்திரிகை. 1-7-1946. சுவரில், படத்திலிருந்து அப்பா புன்னகை புரிகிறார். "ஏண்டா, என்னுடையதும் இருக்கா பாரேன்!" கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. Magic box, Pandora's box, too.

இந்தப் பத்திரிகைகளில் சிலவற்றில் காணும் பெயர்கள் இந்த தூர இடைவேளையில் நினைப்பில் இல்லை. அப்படியே மங்கலாகத் தெரிந்தாலும், முகம் மறந்து போச்சு.

 

இதுகளை இனி என் செய்ய? அனாவசியமாக இடத்தை அடைத்துக்கொண்டு. கிழித்து எறிய வேண்டியதுதான். இல்லை, கலியாணப் பத்திரிகைகள். அச்சானியம். இடம் கொடுக்கவில்லை. திரியாகக் கத்தரிக்கலாம், அதுவும் சேதிப்புத்தானே! பின்பக்கம் காலி. பால் கணக்கு, வண்ணான் துணி விவரங்கள், மளிகை லிஸ்ட் No. இந்தக் கன்னி வெண்மையைக் களங்கப்படுத்தும் பாபத்தில் போகேன். இந்தத் தம்பதிகள் எங்கிருந்தாலும் சரி, செளக்கியமாக இருக்கணும்.

உன் நல்லெண்ணம் இருக்கட்டும், இவர்கள் இப்போ எங்கெங்கிருப்பார்கள்? நான் அறியாமலே அடுத்த தெருவில், நாட்டின் எந்த மூலை முடுக்கிலோ? அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவரை, ஏன், வட துருவம், தென் துருவங்களும் கூட, எங்கானும்- விஸாதான் சிரமம். உலகமே கொல்லைப்புறம்.

ரிஸெப்ஷனில் ஒருவருக்கொருவர் தோளிடித்துக் கொண்டு, முகத்துள் முகம் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டு, அத்தனை கும்பலிலும், இந்த உலகில் அவர்கள் மட்டும் தனி-இப்பவும் அப்படியே இருப்பார்களோ? Don't be a fool. அதெப்படி சாத்தியம்? குடும்பம் ஆகியிருக்க மாட்டார்களா? குழந்தைகள் பெரியவர்களாகியிருக்க மாட்டார்களா? அவர்களுக்கே வயது ஏன், கண்ணாடியில் உன்னைப் பார்த்துக் கொள்ளேன்!

வெளிநாடு சென்றவர்களின் வாழ்க்கை, அவர்களின் குழந்தைகள்- இங்கேயும் ஒட்ட முடியவில்லை, அங்கேயும் வேண்டா விருந்தாளிகள். இப்படி ஒரு தனி வர்க்கமே உருவாகிக் கொண்டிருக்குமல்லவா? தங்களைப் போலவே, தங்களுக்குள் தேடிக்கொண்டு, தங்களைத் தேடிக்கொண்டு; இந்த நிலையைத் தவிர்க்கவே, பெற்றோர்கள் குழந்தைகளைத் தாத்தா பாட்டியிடம், ஹாஸ்டலில் அல்லது உள் நாட்டில் எங்கோ தங்க விட்டு, வருடங்களாகப் பிரிந்து, திரும்பச் சந்திக்கையில், அப்பவும் எப்படியிருக்கும்? முழுக்க சரியாயிருக்குமோ? யாராயிருந்தாலும் கொண்டாடிக் கொண்டேயிருந்தால் தான் உறவு; இல்லையேல், எல்லாம் யூகத்துக்குத்தான்.

இந்தக் கவலையெல்லாம் ஏன் உன் தலையெழுத்து? வீண் அக்கப்போர்.

அப்படியில்லை. தெரிந்தவரோ தெரியாதவரோ வேண்டியவரோ வேண்டாதவரோ எல்லாரும் சந்தோஷமாயிருக்க வேண்டாமா?

சரி, உன் கார்த்த வீரியார்ச்சுனக் கரங்களால் அகிலத்தையே அணைத்துக் கொள்ளேன்! ஆஷாட பூதி!

என்னிடமிருந்தே நான் வாங்கிக் கட்டிக் கொள்ளுமளவுக்கு அட, போதாத காலம் இப்படியும் இருக்க முடியுமா?

 

ஏதோ குருட்டு யோசனையில் என்னை இழந்ததேன். எதற்கும் முதன்முறை, அந்த ஒரு முறையோடு சரி. அதன் மறுமுறைகள், மீண்டும் மீண்டும் முதன்முறையின் பலவந்தம் கற்பழிப்பு; தூய்மையின் உன்னதம் இச்சையாய் இழிந்து, பழகிப் பழகிப் பச்சையாகி, படிப்படியாகப் பச்சையும் நச்சாகி, நச்சோடு வாழும் இந்த வாழ்வும் வாழ்வா? சரி, என்ன தான் வழி? இதென்ன வெறும் சொல்வித்தையா? செயலின் திசை தப்பலா? உயிரின் நிரந்தர மானபங்கமே வாழ்க்கையின் தத்துவமா?

"ரொய்.ஞ்..ஞ்..ஞ்."

ஒரு பெரிய வண்டு வர வரக் குறுகும் வட்டத்தில், என்னைச் சுற்றி, அந்தரத்தில் நீந்திற்று. வெய்யில், தாலாட்டு மாதிரி கண் செருகிற்று.

ஒழித்துப் பெருக்கும் வேளை, விசன வேளைதான்.

எதையும் ஒதுக்க முடியவில்லை. ஏதோ வகையில் யாவும் மானச் சின்னங்கல். முதன் முறையின் சாஷிகள்.

அள்ளி மீண்டும் பெட்டியில் போடுகிறேன். அந்த அள்ளலிலிருந்து இரண்டு பத்திரிகைகள், ஓலைச்சுவடி உருவத்தில், பட்டு நாடாக்கள் கோர்த்து, மடியில் விழுகின்றன. இதுவரை பார்த்த ஞாபகம் இல்லையே! வியப்புடன் எடுக்கிறேன்.

ஒன்று ஸீதா கலியாணப் பத்திரிகை. கோவில் உற்சவப் பத்திரிக்கை அல்ல. அசல்- Original.

இக்ஷ்வாகு வம்சமே தங்கள் வருகையைக் கோருகிறது. தசரதச் சக்ரவர்த்தி!'

மற்றது ஸ்ரீராமனின் அசுவமேத யாகத்துக்கு அழைப்பு.

உயிர் சீதைக்கு பதில், எதோ விக்ரஹ சமேதனாய்......

ராமசோகம் கவ்வுகிறது.

சிந்தா நதியில் மிதக்கும் ஒரு சருகு.

 

11. நிர்மாலியம்

 

சிந்தா நதிக் கரையோரம் குப்புறப் படுத்து, ஜலத்துள் எட்டிப் பார்க்கிறேன். முகங்கள், நிழல்கள், உருவங்கள். எல்லாமே தெரிந்த முகங்கள் இல்லை. அன்று என்று மறுப்பதற்கும் இல்லை. மெதுவான பவனியில் யுகம் நகர்கிறது.

திரேதா, க்ரேதா, துவாபர, கலி-காலம் ஒரு முப்பட்டகம் எனில், யுகங்கள் அதன் முகங்கள்.

 

"இப்படி எல்லாம் தெரிந்தமாதிரி உன் அதிகாரப் பூர்வம் என்ன?" எனக் கேட்டால்,

"தெரியாது."

முப்பட்டகத்தில் ஒரு இம்மி அசைவுக்கும் காட்சி மாறல் க்ஷண யுகம். ராமாயணம், பாரதம், பகவத்கீதை, ஷா நாமா, அம்ருத மந்தன், அராபிய இரவுகள் Iliad odessey- இன்னும் எனக்குச் சொல்லத் தெரியாதது, எனக்கு முற்பட்டது, எனக்கு அப்பாற்பட்டது- விந்தை. அங்கும், எதிலும் நான் இருக்கிறேன்.

கதை கதையாம் காரணமாம், காரணத்தில் ஒரு தோரணமாம். ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜாவாம், ராஜாவுக்கு ஒரு ராணியாம், இதுவும் நதியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

காலமெனும் முப்பட்டகத்தில் இம்மி அசைவுக்கும் க்ஷண யுகத்தில் க்ஷணமே யுகம். யுகமே முகம் எனக்காட்சி மாறியபடி இருந்துகொண்டிருக்கும் இந்த Keleidoscopeஐத் திருப்புவது யார்?

-பழைய ஆகமம், புது ஆகமம், Genesis மத்தேயு, Psalms...

-ஸரி கம பத நி வித வித கானமு வேதஸாரம்-

-யார், யார், யார் ?

எனக்கு இது ஒரு வியப்பு. ஏன் எதையுமே கதையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு? வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம்.

அனுபவம், நினைவு கூட்டல், மறு உரு, கதை- வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களாகத் திகழ்கின்றன.

அனுபவத்தில் என்னைக் கண்டு பயப்படுகிறேன்.

கதையெனும் மறு உருவில் என்மேல் ஆசை கொள்கிறேன்.

பாஷையின் ரஸவாதம்.

அனுபவத்தில் நான் என் பேதைமைகளுடன் அம்மணம். கதையில் நான் நாயகன்.

-ராமன், அர்ச்சுனன், அபிமன்யு, அலெக்சாண்டர், ரஸ்டம், ஸோரப், பீஷ்மன், பிருத்விராஜ் இவர்களைப் போல் நான் இருக்க விரும்பும் ஆசையில், திரும்பத் திரும்ப இவர்களை நினைவு கூட்டலினாலேயே இவர்களாக மாறி விட்டதாக ஆசையின் நிச்சயத்தில், இவர்கள் அனைவரிலும் இனிமேலவரிலும் எனக்கு என் பங்கு உண்டு.

திரும்பத் திரும்ப இந்த நினைவு கூட்டலில், கால அளவில் கூட்டலின் திரட்சியில் ஏதேனும் ஒரு சமயம் திரட்சியின் சிதறலில் நான் ஒரு சிதறாக இவர்களுடன் அமரத்துவம் எய்திடுவேன். நாயக பாவத்தின் பதவி அப்படிப்பட்டது. நாயக பாவமில்லாவிடின், அதன் தனித்தனி விதத் தடங்களில் தெய்வங்கள் ஏது? தெய்வங்கள் வேண்டும். தெய்வீகம் அறியோம்.

தெய்வீகம்: முக்தியின் வெட்ட வெளி. தெய்வங்கள் எனும் உச்சத்தடக் கதாநாயகர்கள் உருவாகும், உருவாக்கும் பட்டறை. அனுபவம், பாஷை, நினைவு கூட்டலின் முக்கூடல், முக்கூடலின் ரஸாயனத்தில் நேர்ந்த பூகம்பத்தின் சித்தி.

கதை கதையாம் காரணமாம்..........

நினைவு கூட்டல், திரும்ப நினைவு கூட்டல், நினைவு கூட்டலே, உன் மறு பெயர் தியானம். கதை, கற்பனை. inspiration. நடப்பு வெளி உலகம், உள் உலகம், இனி உலகம், கலை, காலம், முகம்- இன்னும் சொல்ல விட்டவை அனைத்தையும் அகப்பை அகப்பையாகச் சொரிந்து, தியானத்தின் தீராப் பசிக்குத் தீனி தியானமெனும் தீ, ஸர்வ கபளீகரி,

நினைவில் தீ நடுவில் அமர்ந்தேன்.

வெல்லத்தைக் காய்ச்சக் காய்ச்சப் பாகாய்க் கெட்டிப் படுகிறது.

சாந்தைக் கூட்டக் கூட்டச் சாந்து கெட்டிப்படுகிறது.

நினைவைக் கூட்டக் கூட்ட நினைவு இறுகுகிறது.

மறு உருவங்கள், மறு மறு உருக்கள் உருகி உருகி, இறுக இறுக ஒரு உருவாகி ஒரே உருவாகிக் கொண்டிருக்கும் பாகின் த்ரில்- பிந்து ஸாரம், பிந்து மகிழ்ச்சி, ராகம் பிந்துமாலினி.

இருளில் கன்னத்தில் ஒரு முத்தம் யார் தந்தது? அனுபவம் சொல்ல முடியாது. சொல்வதற்கில்லை, யாரிடம் சொல்வேன்? யார் முத்தம் என்று தெரிவேன்? நினைவு பித்தடிக்கிறது.

தியானமே உன் கதையென்ன? , மெளனம் உன் இயல்பல்லவா? என் பேச்சை உதவுகிறேன். எனக்காகப் பேசி உன் கதையைச் சொல்லமாட்டாயா?

"சொல்ல என்ன இருக்கிறது, நான் வேறேதுமில்லை. உன் இசையில் உன் ஈடுபாடு. ஈடுபாடில் பாகுபாடு. பாகுபாடில் இழைபாடு. இழைபாடின் வழிபாடு, இழைபாடே வழிபாடு. வழிபாடே இழைபாடு.

தியானேச்வரத்தில் நான் வஜ்ரேச்வரன் ஆனால், ஒரு நாள் ஆகையில், பிந்துமாலினி என் தியானேஸ்வரி வருவாள். இருளில் அவள் முகத்தைத் தருவாள். முத்தம் அடிக்கும் பித்தே முத்தியின் வெட்ட வெளிக்குச் சாவி. முத்தி வேண்டாம்.

தியானம் ஒரு புஷ்பம். நேற்று அவள் கூந்தலில் செருகிய மலராகி மணத்தேன். இன்று நிர்மாலியாகி, நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்- சிந்தா நதியில்.

"என்ன அத்தனையும் பேத்தல், வார்த்தைகளின் பம்மாத்து!"

 

ரொம்ப சரி. அத்தனையும் தூக்கி எறி,

சிந்தா நதியில்.

 

12. ஒரு யாத்திரை

 

முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன், என் எழுத்தின் பாதிப்புக் காரணமாக எனக்கு ஒரு நண்பர் குழு சேர்ந்தது. கொத்தாக நாலு பேர். தாத்து, மாசு, செல்லம், வரதராஜன். இப்போதைய நிலவரம் தாத்து காலமாகி விட்டார். உத்யோக ரீதியில் செல்லம் எங்கேயோ? மாசுவும் வரதராஜனும் சென்னையில் இருப்பதால் தொடர்பு அறியவில்லை. அப்படியும் நானும் வரதராஜனும் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.

வரதராஜன்- அதான் நா.சி.வரதராஜன் கவிஞர். 'பீஷ்மன்' என்கிற புனைபெயரில் கதைக்ஞர்.

இவர்களுக்குள் நான்தான் மூத்தவன். அவர்களிடையே அவர்கள் ஏறக்குறைய ஒரே வயதினர். எல்லோருக்கும் பூர்வீகம் வில்லிப்புத்தூர். சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர். கொத்தாக ஒரே இடத்தில் குடியிருந்தனர்.

வரதராஜன் மட்டும் சிந்தாதிரிப்பேட்டையில். மாசு, நான் இன்னும் படித்து முடிக்க முடியாத ஒரு தனிப் புத்தகம், அவர் தன்மைக்கு இரண்டு மாதிரிகள் மட்டும் காட்டி நிறுத்திக் கொள்கிறேன்.

"உங்களைப் படித்ததன் மூலம் உங்களுடன் நேரிடையான பரிச்சயம் கிடைத்தது. நீங்கள் எழுதியவை அத்தனையும் நான் படித்தாக வேண்டும் என்பதில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். உங்களுடன் நேரப் பழகும் வாய்ப்புக்குப் பின் உங்களுக்கப்புறம்தான் உங்கள் எழுத்து."

அவருடைய தராசு தூக்கியே பிடித்திருக்கும். இப்படிச் சொன்னாரே ஒழிய அவர் என்னை விடாது படித்து வந்தவர். எனக்குத் தெரியும்.

நாங்கள் சந்தித்து இரண்டு வருடங்களாகியிருக்குமா? ஓரிரவு பத்து, பத்தரை- பதினொன்று. வாசற் கதவை மெதுவாகத் தட்டும் சத்தம். எழுந்து போய்த் திறந்தால், தெரு விளக்கு வெளிச்சத்தில் மாசு.

என்ன மாசு, இந்த நேரத்தில், என்ன விசேஷம்?' அவரை உள்ளே அழைப்பதா, அங்கேயே நிறுத்திப் பேசுவதா? சங்கடம்.

"ஒன்றுமில்லை. உங்களைப் பார்க்கணுமென்று என்னவோ திடீரென்று தோன்றியது. என்னால அடக்கவே முடியவில்லை. வந்தேன். பார்த்தாச்சு. போய் வருகிறேன்." மறு பேச்சுக்கே காத்திருக்கவில்லை. விர்ரென்று தெருக்கோடியில் மறைந்து விட்டார்.

அங்கேயே சுவரில் முகத்தை வைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதேன். என் தங்கையை சிதையில் வைத்து விட்டு வந்திருக்கிறேன். இப்பவும் எரிந்து கொண்டிருப்பாள்.

நான் சொல்லி அனுப்பவில்லையே. இவருக்குத் தெரிய நியாயமோ, வழியோ இல்லையே! தங்கச்சாலைக் கோடி எங்கே, மீர்சாப்பேட்டை எங்கே? டெலிபதி? நரம்பு ஆட்டம்? இன்னதென்று புரியாமலே, ஏதோ

நரம்புக்கு நரம்பு அதிர்வில் வந்திருக்கிறார்?

கவிதை, வார்த்தைகளில் இல்லை, மடித்து எழுதும் வரிகளால் இல்லை.

நரம்புக்கு நரம்பு தன் மீட்டலில்தான் இருக்கிறதென்பதில் இனியும் ஐயமுண்டோ?

நாங்கள் சேர்ந்து இருந்த வரையில், அந்த நாளில் ஒரு 'ஜமா'. கையில் ஓட்டம் கிடையாது. அதனால் என்ன? கால் நடையில்லையா, இளம் வயது இல்லையா, உடம்பில் தென்பு இல்லையா, மனதில் உற்சாகம் இல்லையா?

ராச் சாப்பாட்டுக்குப் பின், சுமார் எட்டு மணிக்குக் கிளம்புவோம். அவர்கள்தான் என்னை அழைத்துப் போக வருவார்கள்- மாசு, தாத்து, செல்லம்; தங்க சாலைத் தெருக்கோடியிலிருந்து பேசிக்கொண்டே, மரீனாவுக்கு நடந்து, அதன் வழியே டவுன், தங்கச் சாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவனில் பூரி, பாஜி, அரைக் கப் பால். (மலாய்! மலாய்!) பேசிக்கொண்டே, கோவிந்தப்ப நாயக்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் இரவு பகலாகியிருக்கும். கை வளையலும், பாதக் கொலுசும் குலுங்க, விதவித வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, மார்வாரிப் பெண்கள் கும்மி அடிக்கையில் இது என்ன செளகார் பேட்டையா, பிருந்தாவனமா?

மீண்டும் மரீனா பீச், நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. லேசான குளிர். பேசிக்கொண்டே பைக்ராபட்ஸ் ரோடு, விவேகானந்தர் இல்லம், ஐஸ் ஹவுஸ் ரோடு, மீர்சாப் பேட்டை, பெசண்ட் ரோட்டில் என் இல்லத்தில் என்னை விட்டுவிட்டு, அங்கே வாசலிலேயே ஒரு நீண்ட ஆயக்கால்- மணி இரண்டு- பிரியாவிடை பெற்றுக் கொண்டு கால் நடையாக அவர்கள் மீண்டும் தங்க சாலைத் தெருவுக்கு.

ஞாயிற்றுக்கிழமை, அத்தனைபேரும் சிந்தாதிரிப் பேட்டையில் வரதராஜன் வீட்டில் காம்ப். அவருடைய தாயார், அக்கா, அண்ணா மன்னி- அத்தனை பேருமா அப்படி ஒரு பிரியத்தைக் கொட்டுவார்கள்! ஒரு சமயமேனும் ஒருத்தருக்கேனும், ஒரு சிறு முகச்சுளிப்பு? ஊஹூம். இப்படிச் சந்தேகம் தோன்றினதற்கே என்ன பிரயாச்சித்தம் செய்துகொள்ள வேண்டுமோ?

 

-பேசுவோமோ, பேசுவோமோ என்ன அப்படிப் பேசுவோமோ இலக்கியம், சினிமா, ஆண்டாள், ஸைகல், கம்பன். 'துனியா ரங்க ரங்கே', ஆழ்வாரதிகள், பாரதி, ராஜாஜி, ஆக், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், பேச்சு எங்கெங்கோ தாவி, எங்களை இழுத்துச் செல்லும் தன் வழியில் பலகணிகள் ஏதோதோ திறக்கும். புது வெளிச்சம் புது சிருஷ்டிகள். திறந்து மூடுகையில், புதுக் கூச்சங்கள். வியப்பாயிருக்கும் ஆனந்தமாயிருக்கும் சில சமயங்களில்- பயமாயிருக்கும்.

பசி அடங்கி, வயிறு நிரம்புவது போல் மனம் நிறைந்து மோனம் ஒன்று எங்கள் மேல் இறங்கும் பாருங்கள், எத்தனை பேச்சும் அதற்கு ஈடாக முடியுமா?

அந்த உலகம் எங்களுக்காக மீண்டும் இறங்கி வருமா? வாழ்க்கையின் பந்தாட்டத்தில், அவரவர் சிதறி, 'ஜமா' தானே பிரிந்துவிட்டது.

ஆனால் நாங்கள் எல்லோரும் ருசி கண்டுவிட்ட பூனைகள். எங்களுக்கு ருசி மறக்காது.

போன தடவை நான் பீஷ்மனைச் சந்தித்தபோது அவர் திருவல்லிக்கேணிக்குக் குடி மாறிவிட்டார். பேச்சு வாக்கில் நான்,

"வரதராஜன்! அந்த நாள் உங்கள் வீட்டு அடை டிபன் மறக்க முடியுமா? வரட்டி போல், விரைப்பான அந்த மொற மொறப்பு, இடையிடையே ஜெவஜெவ வென மிளகாய், அப்படியே கல்லிலிருந்து தோசைத் திருப்பியில் எடுத்து வந்து வாழையிலைப் பாளத்தில் விடுகையில், பளப்பளவென எண்ணெயில் அந்த நக்ஷத்ர மினுக்கு.

"அதன் மேல், மணலாய் உறைந்த நெய்யை உங்கள் அம்மா விட்டதும், அது உருகுகையில் உஸ் அப்பா!" அந்த நினைப்பின் சுரப்பில் தாடை நரம்பு இழுக்கிறது. கன்னத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டேன்.

"உங்காத்து அடை அதுபோல வார்த்துப் போடச் சொல்லுங்களேன்!"

புன்னகை புரிந்தார். "நீங்கள் அடையின் பக்குவத்தையா சொல்கிறீர்கள்? அதன் கவிதையை அல்லவா பாடுகிறீர்கள்! இவளை அடை பண்ணச் சொல்கிறேன். இவளும் நன்றாகப் பண்ணுகிறவள்தான். ஆனால் நீங்கள் கேட்கிற அந்த அடை உங்களுக்குக் கிடைக்காது. அந்த மனுஷாள் இப்போ இல்லை. போயாச்சு!"

மேலெழுந்தவாரியில் இது ஒரு சாப்பாட்டு ராமமாகப் பட்டால், இதன் உயிர்நாடி அடையில் இல்லை.

அந்த மனுஷாள் இப்போ இல்லை. போயாச்சு!

சிந்தா நதியில் ஒரு யாத்திரை.

 

13. நேர்த்தியின் நியதிகள்

அன்று என் பெட்டியைக் குடைகையில்-

, பெட்டியைக் குடைவதற்கு எனக்கு வேளை, பொழுதே வேண்டாம். அது என் அவமானம். ஆனால் கூடவே பழக்கமாகவும் படிந்துவிட்டது. வேடிக்கை. அதில் தேடிய பொருள் அதில் கிடைப்பதில்லை. சந்தியாவந்தனப் புத்தகத்தைப் பெட்டியில் தேடினால் அது அரிசிப் பீப்பாயில், அரைப்படிக்குள் ஒளிந்துகொண்டிருக்கும். எப்படி? அதுதான் இந்த வீட்டில் கேட்கப்படாது. அதேபோல, என் பெட்டியில் ஒன்று தேடப் போய், ஒன்று கிடைக்கும் விந்தைக்கு என்ன பதில்? அதிசயம் (Miracle) என்றே சொல்லணும். உள் ஆழத்தில் எங்கோ கிடந்துவிட்டு, மேலே மிதக்க அதற்கு இப்போ வேளை வந்ததா, அல்ல, தன் உயிரில், தன் எண்ணத்தில் சுயமாக இயங்குகிறதா?

ஒரு குறிப்பு. எப்போவோ எழுதினது. என் இதயத்துக்கு அப்போது ஒப்படைத்த அந்தரங்கம். எந்த எழுத்துமே அந்தரங்கம்தான்.

எழுத்தாகிவிட்ட பின் கிழிக்க எனக்கு மனம் வருவதில்லை. இது என் பலவீனமா, பலமா? இத்தனை வருடங்களுக்குப் பின் இதோ என் *எழுத்து, சாக்ஷிக்கூண்டில் வாக்குமூலம் சொல்கிறது. இதன்மூலம் எனக்கு முள் கிரீடமா? தலையைச் சுற்றிப் புஷ்பச் சரமா?

நேர்த்தியின் நியதிகள்

 

1. தினம் சுத்தமான ஆடை அணிக (எளிமையான உடை) வீட்டுள்: பனியன், வேட்டி. (பனியன் தேவையா) வெளியே குர்த்தா, பனியன், வேட்டி.

 

2. மெருகு பழகிய குரலும், பேச்சில் தன்மையும், இரண்டும் சத்தம் உயராதபடி பார்த்துக்கொள்க. இரைச்சலே விரஸம்.

 

3. எப்பவும் குறைந்தபட்சப் பேச்சு (முடியுமா?)

 

4. உணவு குறைந்தபட்ச உட்கொளல்: குறைந்தபட்சத் தடவைகள்.

 

காலைச் சாப்பாடு: வாழையிலையில்- கட்டுப்படி ஆகவில்லை. இரவு: சாப்பாடு வேண்டாம்; ஒரு தம்பளர் கஞ்சி. சிற்றுண்டி: தவிர்க்க.

நாக்குக்கும், வயிற்றுக்கும் ஓயாத போராட்டத்தில் அனுபவத்துக்கு முழுக்கக் கைவரவில்லை. நாக்கு உணக்கையும், காரமும் கேட்கிறது. குடல் இரண்டுக்கும் அஞ்சிச் சுருங்குகிறது. நாக்கே வெற்றி கொள்கிறது. வயிறு பலனை அனுபவிக்கிறது.

உடலுக்குள்ளேயே நியாயங்கள் நடைபெறவில்லை. வெட்கம் கெட்ட நாக்கு.

 

5. தன் உணர்வுடன் (Self Consciousness) தியானம், தியானம் இல்லை. புரட்டு.

 

எண்ணப்பாடு- கூடியவவை விலக்கு (சொல்ல எளிது), ஆனால் மனதுக்கு எண்ணாமல், எண்ணி எண்ணித் தன்னைப் புண்ணாக்கிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இனி தனியாக, சுய விசார விஷயம்.

 

6. எழுதுவது: ஆம், இது என் வேலை. இதைப் பூதஞ்சி பண்ணாமலை செய்க.

 

7. மெளனம். இது ஒரு பெருகும் அழகு. இதன் அழகு கலையாமல் பேணுக... சிந்தனையின் ஓட்டத்தில் தானே படரும் மோனத்துடன் தானே இழையும் தியானத்தின் அடையாளம் கண்டுகொள்ள முடியும். கண்டுகொள்ளப் பழகிக்கொள்.

 

8. ஆர்வத்துடன் எதையேனும் (ஸ்தூலப் பொருளை), நீ விரும்பினால், உனக்கு வேண்டுமென்று வாய் திறந்து கேளாதே. உன் சக்திக்குள் அதை வாங்க முடியாவிட்டால், மற.

 

9. உன்னுள் ஓரளவேனும் உன்னை ஒடுக்கிக் கொள்ளுதல், லோகாயதமாகவும், ஆத்ம ரீதியாகவும் உசிதம். அதற்காகச் சிடுசிடுப் பூனையாகவும் இருக்கக் கூடாது.

 

10. பசி: உன் வயதில் அடக்கி ஆள்வது அசாத்தியம் அன்று. ஆச்சரியமும் அன்று. அவசியம் என்றே சொல்லலாம். இச்சையைப் பசியென்று உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே.

 

11. கோபம்: கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். மெளனம் இதற்கு வகையாகக் கை கொடுக்கும். கொடுக்க வேண்டும்.

 

12. நீயாகக் கடிதங்கள் எழுதாதே, வந்த கடிதங்களுக்குப் பதில் தவிர. அதுவும் பதில் தேவையானால், தேவையான பதிலை எழுதத் தவறாதே.

 

13. கேட்காத புத்திமதியை நீயாக வழங்காதே. உன்னை மலிவு படுத்திக்கொள்ளாதே.

 

14. காரியங்கள் நீ எண்ணியபடி அமைய வேண்டுமெனில் நீயே செய்து கொள்வதுதான் சரி.

 

15. பிறரிடம் பக்குவத்தை எதிர்பார்ப்பது முறையன்று. அவரவர், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி.

 

பொதுவாகவே, உன் உடலிலும் மனதிலும் தெம்புக்கேற்றபடி, பிறரை எதிர்பாராது உன் காரியங்களை நீயே செய்து கொள்வதுதான் முறை. அது உன் சுய மரியாதை. அதில் ஒரு ஸ்வதந்திரம் இருக்கிறது. ஒரு கலை மிளிர்கிறது. அதில் இழையோடும் ஆணவம் கடைசிவரை ஓங்கட்டும்.

 

16. அவரவர் தயாரித்த கிடைக்கையில் அவரவர் படுக்கட்டும். சின்ன மீன்கள் பெரிய மீன்களைக் கடித்துக் கொண்டு, அத்தோடு தொங்கிக்கொண்டு, அதன் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதுதான் இப்போதைய வாழ்க்கை உக்தி, ஒட்டுண்ணிகளை உதறு.

 

17. உன் பாக்கிகள்: எந்த வகையில் இருப்பினும் சரி. செலுத்திவிடு. செலுத்திக் கொண்டேயிரு.

 

18. வாக்கு கொடுக்காதே. கொடுத்த வாக்கைத் தலை போனாலும் காப்பாற்று.

 

இதற்காகவே ராமன், அரிச்சந்திரன், தருமபுத்திரன் இத்யாதிகள் பாடுபட்டார்கள், வாழ்ந்தார்கள். நீ இவர்களைத் தவிர வேறு யாருமில்லை; இதுதான் நம் மதம், நம் பண்பு, நம் சத்தியம். இதில்தான் பிறந்தோம். இதுதான் நம் வாழ்க்கையின் சாரக் கொம்பு. தட்டிவிடாதே.

 

19. எப்பவுமே கடமை One Way Traffic. எதிர்பார்க்காதே. நீ செய். கடமை என்பது என்ன? அது வேறு கதை.

 

மேற்கண்ட கோட்பாடுகளை ஓரளவேனும் கடைப் பிடித்து. இவைகளுள் நீ அடங்கினால், ஓரளவேனும் உன் உள் செளந்தர்யத்தைக் காண்பாய்.

 

இவை அனைத்தும் வெறும் ஆசைகளாகவே இருக்கலாம்.

 

ஆனால் ஆசைகள், லக்ஷிய மலர்கள், மலர்களின் நளினங்கள் அத்தனையும் நீர்த்துப்போன நக்ஷத்ரங்களாயிருக்கலாம். ஆயினும் இவையெல்லாம் ஒரு காலத்தில் நக்ஷத்ரங்கள்.

 

எனக்கு மட்டுமல்ல. எல்லோருடைய நஷத்ரங்கள்.

 

எல்லோருக்கும் வான் ஒன்று.

 

சிந்தா நதியில் ஒரு காயிதக் கப்பல்.

 

14. நீ

 

நீ காலத்தைப் போக்க இங்கு வரவில்லை.

நீ காலத்தோடு போகவும் இங்கு வரவில்லை.

நீ காலத்தை நிறுத்த வந்திருக்கிறாய்.

ஒரு கணத்தில் ஒரு யுகம் பண்ண வந்திருக்கிறாய்.

நீ நித்யன்.

அனுமனுக்கு அவனை நினைவு மூட்ட

அவனைச் சுற்றி இருந்தனர்.

அது அன்று.

இன்று உன்னை உனக்கு நினைவு மூட்ட

நீதான்; நீயேதான்.

உனக்கு நீதான் என்பதிலும்

ஒரு பெருமிதம், இறுமாப்பு கண்டாயோ?

உன் இறுமாப்பு, நீ விந்தியா.

உன் பெருமிதம், நீ மேரு.

நீ உன்னதன்.

உனை நீ மறவாதே.

 

காலம்?-நியமித்தே நீ

-உன் சுண்டு விரலில் நீ சுற்றும் மோதிரம்

உன் கண்களில் ஒளி, உன் மண்டையில் ஊறும்

மாணிக்கம்.

நெற்றி, உன் வான்.

உன் புருவ நடுவில் யாக குண்டம்.

உன் விஷத்தைச் சிந்தாதே.

சேமி.

அத்தனையும் மாணிக்கம்.

 

உண்டு என்றேன், உடனே இல்லை என்றேன்.

இரண்டுமே இல்லை என்று கண்டேன்.

இரண்டுமே வேண்டாம்.

வேண்டும் என்றேன்; உடனே வேண்டாமென்றேன்.

இரண்டுமே வேண்டாமென்று இப்போது

கண்டேன்.

ஆசைப்பட்டுப் புன்னகையிலோ,

வெறுத்த சுளிப்பிலோ,

என் முகம் கோணுவானேன்?

என் கோபுரம் சாய்வானேன்?

 

நான் விந்தியா.

நான் மேரு.

நான் வான்.

நான் நித்யன்.

 

15. தன்மானம்

 

நன்கு இருட்டிவிட்டது. ஆனால் இரவு ஆகவில்லை. விளக்கு வைத்தாகிவிட்டது. நான் ஒரு சந்தைக் கடந்து கொண்டிருந்தேன். அடுத்த தெருவுக்குப் போக அதுதான் குறுக்குவழி. கொஞ்சம் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போகணும். வேளை சமயத்துக்குக் காய்ந்த மீன் வாடை பார்த்தால் முடிகிறதா? அவசரங்கள் அப்படி அமைந்து விடுகின்றன.

திடீரென்று ஒரு பெரிய கூக்குரல் என் பின்னால் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினேன்.

ஒரு நாயும், ஒரு பூனையும் சண்டைக்கு ஆயத்தமாக நின்றன. நான் கேட்டது பூனையின் கத்தல்.

என் கண்ணெதிரிலேயே, மயிரைச் சிலிரித்துக் கொண்டு பூனை மிகப் பெரிதாகி விட்டது. இரண்டு பங்கு, இரண்டரைப் பங்கு. போர்க் கொடியாக விரைத்த வால். பூனையின் ஆற்றல் இந்த அளவுக்கு நான் பார்த்ததில்லை.

என் காரியத்தை மறந்து நின்றுவிட்டேன்.

சிந்தப் போகும் இரத்தத்திற்குத் தனி வசியம் இருக்கத்தான் செய்கிறது.

மனிதனாவது, மிருகமாவது, மரமாவது! உயிரின் அடிப்படை வனவாடை, எத்தனை லட்சக் கணக்கில் வருடங்கள் ஆனாலும், எங்கே போகும்? நான் சொல்கிறேன், எங்கும் போகவில்லை. உள்ளேதான் உறங்குகிறது. அது விழிக்கும் நேரம் சொல்லிக்கொண்டு வராது.

எல்லா ஜீவராசிகளுக்கும் பொது டினாமிநேட்டர்; குரூரம்.

 

இப்போது, இந்தச் சேரிச் சந்தில், நிமிஷமாக உருவாகியிருக்கும் இந்தக் கோதாவின் சரித்திரப் பரம்பரை, பின்னோக்கில் ரோமன் காலத்தை எட்டுகிறது. அவ்வளவு துரம் போக வேண்டாம். ஸ்பெயின் புல் ஃபைட். இன்னும் கிட்ட இப்பவே. நம் தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு.

மூன்றும் நான் பார்த்ததில்லை. எனக்குக் கிடைத்தது இந்த நாயும் பூனையும் சண்டைதான்.

ஆனால், இந்த அலசல் எல்லாம், பின்னால், சாய்வு நாற்காலியில் அவகாசச் சிந்தனையில்.

பூனைமுகம் நேர் பார்வைக்கு, மனிதமுகத்தை நிறைய ஒத்து இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மனிதனுக்குப் போலவே, முகத்தின் அவயவங்கள்- நெற்றி, கண்கள், மூக்கு, அடியில் வாய், மோவாய்கூட உள் அடங்கியிருக்கின்றது. அதுவும் இப்போ முகத்தில் காணும் கோபத்துக்கு எச்சில் துப்புவதுபோல் அது அவ்வப்போது சீறித் தும்மும் குரோதத்துக்கு..... நாய்க்கும் பூனைக்கும் பகை. இன்றையதா நேற்றையதா, சிருஷ்டியிலிருந்தே அல்லவா?

இவ்வளவு உன்னிப்பாய் இவைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எப்போ, என்ன- கண்ணெதிரில் பூச்சி பறந்த மாதிரி இருந்தது, அவ்வளவுதான். இரண்டும் ஓருருவாய் உருள்வதுதான் கண்டேன்; காண முடிந்தது.

பாய்ச்சலைப் பார்க்க முடியவில்லை. இந்த மோதலும் ஒரு கணம்தான். இல்லை, அதிலும் பாதி, இரண்டும் அவைகளின் தனித்தனி இடத்துக்கு மீண்டு விட்டன.

உர்.... உர்ர்..... உர்ர்ர்.....

பூனையின் ஊளைக்கு ஈடு சத்தம் என்னால் எழுத்தில் எழுப்ப முடியவில்லை. அதன் கத்தல் அடி வயிற்றைக் குழப்பிச் சுண்ட அடித்தது.

பூனை நிச்சயமாக ஒரு உத்தியைக் கண்டுபிடித்து விட்டது. தன்னைப் பந்தாகச் சுருட்டிக்கொண்டு எகிறி எகிறி நாய்மேல் விழுந்தது. நாய், பூனையைப் பூனையாகப் பார்க்கவில்லை. (நானும் அவ்விதமே) ஒரு பெரிய பந்து கால் பந்தைக் காட்டிலும் பெரிய, உயிருள்ள, காட்டுக் கத்தல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் முள் பந்து. இதென்ன மந்திர வாதம், சூன்யம்?

எனக்கு அப்படித் தோன்றிற்று. நாய்க்கு எப்படித் தோன்றிற்றோ? *பத்து எகிறி எகிறித் தன் மேல் விழும் இரண்டு மூன்று தடவைக்கு. அது சமாளித்துப் பார்த்தது. ஆனால், பந்து, அடுத்தடுத்து, அலுக்காமல், தன் உயிரையும், உருவத்தையும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு அதன்மேல் விழுகையில், அதன் முகத்தில் குழப்பத்தை என்னாலேயே காண முடிந்தது.

குழப்பம்- கலக்கம்- பீதி- பிறகு அப்பட்ட பயம்.

 

புறமுதுகிட்டு ஓடிற்று, ஓடியே விட்டது.

பந்து, விண்டு, சுய ரூபத்துக்கு விரிந்தது. ஆனால் அதன் வால், அதன் வெற்றிவிரைப்பினின்று இறங்கவில்லை. அடிவயிற்றை, நின்றபடியே, அவகாசமாக நக்கிக் கொண்டது. பிறகு மெல்ல நடந்து, மெல்ல மெல்ல எதிர்ச் சுவரோரமாக, தெரு விளக்குக் கம்பத்தின் நிழல் மறைவில் ஒதுங்கி, விழுந்து, மரணாவஸ்தையில் கால்களை உதைத்துக் கொள்ள ஆரம்பித்தது.

அதன் இழுப்பு, கடைசி அமைதியில் அடங்குவரை பார்த்துக்கொண்டு நின்றேன்.

"ஸோ, அதற்கு விழுந்துவிட்ட மரணக் கடியைக் கடைசிவரை எதிரிக்குக் காட்டிக் கொடுக்காது, கொடுக்கக் கூடாத, முடியாத ஒரு கெளரவம், தன்மானம், ஜயம் கண்ட பின்தான் மரணம் எனும் தீர்மானம் அதற்கு.

அதற்கே, அப்படி.

அப்போ நாம்?....

சிந்தா நதியில் அலைந்து செல்லும் ஒரு சருகு.

 

 

16. அப்துல்

 

என் நண்பர் பக்வன்தாஸ். அவரை பற்றித் தனிப்பட எழுதவே விஷயம் இருக்கிறது. அவரை நினைத்ததுமே முந்திக் கொண்ட இடைச் செருகல் இது.

என் நண்பர் தாஸ், வசதிகள் படைத்திருந்தும், ஒழுங்காக வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏனோ அவருக்கு ராசியில்லை. சமையற்காரன் சரியாக அமைவதில்லை. ஒன்று வந்த இரண்டு வாரங்களுக்குள் அவனுக்கு வேலை வேறெங்கேனும் கிடைத்துவிடும். சொல்லிக் கொள்ளாமலே கம்பி நீட்டிவிடுவான். அல்லது சமையல் அவனுக்குச் சரிப்படாது. அவனே நின்றுவிடுவான். அல்லது-

இவரும் சாமான், பதார்த்தம் வாங்கக் கொடுக்கும் பணத்துக்கு அதிகணக்கன். ஒரு சோடா குடிச்சேன் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார். அது சாக்கில் தர்க்கம் முற்றி, அவன் தன் கணக்கைப் பைசல் பண்ணச் சொன்னால், அந்த நேரம்வரை அவன் சம்பளம் ரூ.17.31 என்று கணக்காகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு பைசாவை இப்போ அது செல்லுபடியில் இல்லை எப்படியேனும் தேடிப்பிடித்து அப்படித்தான் கணக்குத் தீர்ப்பார். கணக்கில் தன் சூரத்தனத்தைக் காட்ட அல்ல. இது அவருடைய கொள்கை.

 

போகிறவனை இரு என்று தடுக்கமாட்டார். தானாகவும் வேலையிலிருந்து நீக்கமாட்டார். இதுவும் கொள்கையைச் சேர்ந்ததுதான்.

எப்படியோ மாதம் பாதி நாள் புஹாரியிலிருந்து பிளேட் வரவழைத்தாகணும். நித்தியப் படிக்கு அவருக்கு அசைவ உணவு இல்லாமல் முடியாது.

சொந்த வீட்டுக்காரர், மாடியில் வாசம். கீழே அலுவலகம்.

ஒருநாள் அவருடைய நண்பர் ஒருவர், சமையலுக்கு ஒரு ஆளைச் சிபாரிசு செய்தார். ஸிந்தி எனக்கு எங்கே புரியும் கிளுகிளு கடகட- தண்ணிரின் ஓட்டம் போன்ற ஓசை பாஷை. கூட வந்திருந்தவன்மேல் என் பார்வை சென்றது.

அஞ்ஞாத வாசத்தால் அருச்சுனன்- இந்தச் சொற்றொடர் உடனே எனக்குத் தோன்றுவானேன்?

25, 26 இருந்தால் அதிகம். கறுகறு புருவங்களடியில் சாம்பல் நிறத்தில் தணல் விழிகள். அவை மேல் கவிந்த நீண்ட நுனி சுருண்ட ரப்பைகள். கூரிய மூக்கு. கூரிய மோவாய். ஜாதி வேட்டைநாயின் கம்பீர அமைதி,

பரிச்சயம் முடிந்து, மாடிக்குச் செல்ல அவனைப் பணித்ததும், ஸேட்ஜிக்கு அவன் அடித்த ஸல்யூட்டில் ராணுவப் பயிற்சி தெரிந்தது.

அவனுக்கு மாற்று உடை இருந்ததாகத் தெரியவில்லை. வந்தபடியே தங்கி விட்டான். முன் பணம் கொடுத்து எசமான் உதவினாரோ என்னவோ?

உடனே அவன் காரியங்களில் இறங்கிய லாகவம், வியக்கத் தக்கதாயிருந்தது.

அடுத்த நாளிலிருந்தே என் நண்பரின் நாட்கள் துளிர்ப்பு கண்டு, பரிமளமும் வீசத் தொடங்கின.

அவனுடைய சமையல்! சமையலா அது? "அம்ருத்

ராமா, அம்ருத்!"

அப்போ அஞ்ஞாத வாசத்தில் நளன்.

நானே பார்த்தேன். அடுப்பிலிருந்து சுடச்சுட சப்பாத்தியைத் தோசைத் திருப்பியில் கொண்டு வந்து அவர் கலத்தில் போடுகையில், அவன் பொன்னிறம், தங்கத் தகடு லேசு, கத்தரித்து எடுத்தாற் போன்ற வட்டம், பார்க்கவே வாயில் ஜலம் ஊறிற்று. கூடவே அவன் சிக்கனை அதன் மேல் வடிக்கிறானே! இல்லாவிடில் நானும்....

"ராமா, இந்த ஆள் செய்யற நான்-விஜ் டிஷஸ் இங்கே இல்லை. சிங்கப்பூர், ஜப்பானில், பெரிய ஓட்டலில் இவன் ட்ரெயினிங் எடுத்திருக்கணும். ராமா, ம் லக்கி."

 

சமான்களின் கணக்கை அவன் சீட்டில் குறித்து, சீட்டுமேல் சில்லரையையும் ஸேட் எதிரில் வைத்துவிட்டு, அவன் பாட்டுக்கு மேல காரியத்துக்குப் போய்விடுவான். அனாவசிய சகஜம் கொண்டாடவில்லை. பேச்சிலே கொஞ்சம் பிகுதான்.

இதெல்லாம் கிடக்கட்டும். இவை அவன் வேலை.

மொட்டை மாடியில் வேப்ப மரத்திலிருந்து, ஜமக்காளம் விரித்தாற் போன்று உதிர்ந்திருந்த பூ, இலை, சருகு, செத்தையை அப்புறப்படுத்தி, வீட்டுக்கு ஒட்டடை அடித்து, சோப்பும் பினாயலும் பக்கெட்டில் கரைத்து வாரம் ஒரு முறை மாடி பூரா அலம்பி,

 

அது அதுக்கு அதனதன் இடம்.

 

அடுக்கி, சீர்படுத்தி,

 

நாற்காலி, சோபாக்களுக்கு உறை மாற்றி,

 

படுக்கையை வெய்யிலில் காய வைத்து உதறி,

 

திரும்பப் போட்டு,

 

(கட்டின பெண்டாட்டி, 'உங்களுக்கெல்லாம் சமைத்துப் போடணும்னு என் தலையெழுத்தா? என்று கேட்கிற நாள் இது!)

 

மூக்கைச் சிந்திவிட்டு, ஈரத்தால் முகம் துடைத்து, பவுடர் அப்பி, முதுகைத் தட்டி, முத்தம் கொடுத்தாற் போல, வீட்டுக்கே ஒரு முகப்பு கண்டதும்-

 

சேட்டுக்கு ஐஸ் வைக்கும் நோக்கத்தில் ஈதெல்லாம் செய்ததாகத் தோன்றவில்லை. அவனுக்கு அடிப்படையாக அசுத்தத்துக்கும் அவலக்ஷணத்துக்கும் இருந்த அஸஹிப்புதான் காரணம் என்று நினைக்கிறேன்.

 

தினமும் இரண்டு வேளை குளியல். ஒரு சமயம் தற்செயலாய் அவன் உடம்பைத் துவட்டிக்கொண்டே குளியலறையிலிருந்து வெளிப்படுவதைக் காண நேர்ந்தது. உடலின் ஒரு தோல் வயண்டாற்போல அப்படியா ஒரு செங்கதிரொளி நிறம்? பதினாறு கால் மண்டபத் தூண் ஒன்றிலிருந்து சிற்பம் உயிர்த்துப் புறப்பட்டாற்போல் தேகக்கட்டு, பென்சில் கோடுபோல் துளிர்மீசையில் லேசான தங்கச் செவ்வரி படர்.

 

ஒரு நாள் இரவு எல்லா வேலையும் முடிந்து, நண்பரும், நானும் அவருடைய அறையில் பேசிக்கொண்டிருக்கையில், -அப்படி நான் வெகுநேரம் தங்குவதுண்டு- என் வீடு அவர் வீட்டுக்கு மூன்று வீடுகள் தாண்டி அடுத்த தெருவில் மூன்றாவது வீடு, மொட்டை மாடியிலிருந்து ஒரு தீர்க்கமான குரல் பாட்டில் புறப்பட்டது.

 

இரவின் அந்த முதிர்ந்த வேளைக்கு, அகண்ட வான் வீதியில், மேகங்கள் அற்ற, நக்ஷத்ரங்களின் துணையுமின்றித் தளித்து நின்ற முக்கால் நிலவில்,

 

வேப்ப மரத்தினின்று உதிர்ந்த பூவர்ஷத்தில்,

 

ஒளியும், நிழலுமாய் மரத்தின் இலைகள், பூமியில் வீழ்த்திய பிரம்மாண்டமான கோலத்துக்கு,

 

குளிர்ந்த ஸன்னமான காற்றின் நலுங்கலில்,

 

குரல் ஒருவிதமான அசரீரமும், அமானுஷ்யமும் கொண்டு,

 

சினிமா பாட்டுத்தான்- (முகல்--ஆஸாம்?)

 

எங்களுக்கு எலும்பே கரைந்து விடும்போது....

 

அவர் கண்களில் ஸ்படிகம் பளபளத்தது.

 

இவன் யாவன்? இது பிறவி அம்சம், ஸாதக விளைவு அல்ல.

 

இத்தனை வளங்கள் இவனுக்கு வழங்கியிருக்கும் இயற்கை, கூடவே வறளி விள்ளலால் தலையில் விதியை எழுதியிருப்பானேன்?

 

அதுதான் ப்ரஞ்ச லீலா.

 

அஞ்ஞாத வாசத்தில் நளன்....

 

இல்லை.

 

அஞ்ஞாத வாசத்தில் அர்ச்சுனன்.

 

பிராசம் மட்டுமல்ல. பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான் சரி. இதுதான் என் இஷ்டம். போங்களேன்; கடைசி எடையில் இஷ்டம்தான் இலக்கணம். இலக்கணத்தையே மாற்றி அமைக்கும் இலக்கணம்.

 

ஆபீசுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தேன்.

 

"ஸேட் கையோடு அழைத்துவரச் சொன்னார்....' என்று பையன் வந்தான். அவர் வாசலில் கோலி விளையாடும் பையன், போனேன். எனக்குக் கொஞ்சம் சிடு சிடுப்புத்தான். ஏற்கெனவே 'லேட்.'

 

நான் உள்ளே நுழைகையில், யாரோடோ பேசிவிட்டு அப்போதான் போனைக் கீழே வைத்தார். அவர் முகம் மிக்க கலவரமடைந்திருந்தது. மிக்க மிக்க.

 

"ராமா, ஸேஃப் துறக்கவில்லை."

 

இதென்ன அவ்வளவு முக்கியமான சமாச்சாரமா? நான் என்ன செய்ய? ஆனால் நான்தான் அவருக்கு மந்திரி.

 

"கம்பெனிக்குப் போன் பண்ணினா, ஆள் வரான்," என்று சோபாவில் சாய்ந்தேன்.

 

"நோ, நோ, ராமா, யு டோண்ட் அண்டர்ஸ்டாண்ட். இது சீரியஸ் 45 வருஷம் ஸ்மூத் ஆகத் திறந்து மூடறேன். இன்னிக்கு சாவி சிக்கிக்கிட்டு டர்ன் பண்ணமாட்டான். கம் ஹியர்."

 

சாவியை நுழைக்கும் சந்தைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றும் உள்ளேயும் கீறல்கள். ஒருவரை யொருவர் திருதிருவென விழித்தோம்.

 

மேல் இருந்து ஆள் இறங்கி வரும் சத்தம். பீங்கான் பிளேட்டில் மெத்தென இரண்டு 'தோசா'.... மேலே வெளுப்பாய்ச் சட்னி, சட்னி மேல் உருகிக் கொண்டிருக்கும் நெய்யின் பளபளப்பு.

 

மேஜை மீது வைத்துவிட்டு, ஆபீஸ் அறையைத் தாண்டியதும் குஷியாக விசில் அடித்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

 

பக்வன்தாஸின் நண்பர் வந்துவிட்டார். இருவரும் தனியாகத் தங்கள் பாஷையில் குமைத்தனர். பெல்லை அழுத்தி அவனை வரவழைத்து, விசாரணை தொடங்கிற்று விசாரணையா அது? இரண்டு வார்த்தைகள். ஏதோ வந்தவர் கேட்டார். ஹிந்தியும் அறியேன். அவன் ஏதோ இல்லையென்று தலையை ஆட்டினான். இவர் திடீரென எழுந்து மூர்க்கமாக அவன் முகத்தில் இரண்டு குத்து. அதிலிருந்து அவன் தேறுவதற்குள் வயிற்றில் ஒன்று. நான் முகத்தைப் பொத்திக் கொண்டேன். பக்வன்தாஸுக்கு முகம் சுண்ணாம்பாக வெளுத்துவிட்டது. தடுக்க முயன்றார். முடியவில்லை. அந்த மனுஷனுக்கு வெறி பிடித்துவிட்டது. தான் சிபாரிசு பண்ணின ஆள் என்கிற ரோஷம். பையன் கூழாகிவிடுவான் என்று பயமாகி விட்டது.

 

என் நண்பர் அவசரமாகப் போன் பண்ணினார். பத்துக் கட்டடம் தாண்டினால் போலீஸ் ஸ்டேஷன்.

 

நிமிஷமாக வாசலில் ஜீப் நின்றது. ஒரு இன்ஸ்பெக்டரும், இரண்டு சிவப்புத் தலைப்பாக்களும் இறங்கினார்கள். "மிஸ்டர் பக்வன்தாஸ், க்யா ஹூவா?" பையனைப் பார்ததும் இன்ஸ்பெக்டருக்கு முகமே மலர்ந்தது. "அரேரே பழைய புள்ளின்னா!" பட்சத்துடனேயே அவன் தோள் மேலே அவர் கை விழுந்தது என்று சொல்லலாமா?

 

இரண்டு கைகளையும் சேர்த்துப் பூட்டு ஏறிவிட்டது.

 

ஒரு கணம் எசமானனும், வேலைக்காரனும்- கண்கள் சந்தித்தன.

 

கவித்வம் சொரியும் துயரக் கண்கள்.

 

"ஸாரி அப்துல்...."

 

உயிரின் ஒருமை, ஆத்மாவின் கெளரவம் வெளிப்படும் விதம், தன்மை, வேளை பற்றி இன்னமும் திகைப்பில் இருக்கிறேன்.

 

சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் சுடர்.

 

17. மணிக்கொடி சதஸ்

 

நாற்பத்து ஐந்து, நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும், கண்ணகி சிலை இல்லை.

ஸ்ப்- வே இல்லை. மூர்மார்க்கெட் பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய்ப் (எத்தனை நாள் Carry over?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்பொக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற் போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். , அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ்-மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கறும் பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. .நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த

கு. . ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு..ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்- எனக்குப் புரியவில்லை.

புதுமைப் பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

 

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி. எஸ். ராமய்யா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில், சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி, அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி. . . முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும் போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி. சு. செல்லப்பா, . நா. சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்துகொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில், என்னை என்னிலிருந்து மீட்டு, எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு, தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த 'ஷார்ட் ஸ்டோரி' ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் .ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

"ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!"

தி. . , அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இதுமாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு 'தில்' கிடையாது. போயும் போயும் இங்கே 'றாபண'வா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார் தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு, கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி, ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

 

"ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!" என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்..... எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa "வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!"

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளே*யே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

 

18. இந்திரா

 

மாலை ஆபீஸ் முடியும் நேரத்துக்கு ஸ்ரீனிவாஸன் என்னிடம் வந்தான். "நீங்கள் இன்று வீட்டுக்கு வரணும்."

"என்ன விசேஷமோ?"

"என் மனைவிக்கு ஆறுதல் சொல்லணும்; எங்கள் முதல் குழந்தை காலமாகிவிட்டதற்கு." இது *நான் எதிர்பாராதது. என் ஸ்வரம் இறங்கிற்று.

"இதோ பார், சீனு, இதற்கெல்லாம் எனக்கு என்ன தகுதி? பெரியவாள் சமாச்சாரம், ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண்."

"No, you are a writer, you are gifted. நீங்கள் தான்- I want it. Please."

 

சீனிவாஸன் இதுபோல் அடிக்கடி ஆங்கிலத்துக்கு நழுவிவிடுவான், நன்றாகவும் பேசுவான். கெட்டிக்காரன், Push உள்ளவன். உத்தியோகத்தில் எனக்கு மூன்று வருடம் ஜூனியர்.

G.T.இல், தெருப் பெயர் மறந்துவிட்டது. ஏறக் குறைய நாற்பது வருடங்கள் ஆகின்றன. வளைக்குள் வளைபோல் குடித்தனங்கள் நிறைந்த ஒரு நீண்ட வீட்டினுள், கடைசி வளையுள் அழைத்துச் சென்றான். வாசற்படியண்டை

உட்கார்ந்திருந்த ஒரு யுவதி என்னைப் பார்த்தும் வெடுக்கென எழுந்தாள்.

"இந்திரா, This is the famous லா. சா. ரா"

வந்த கோபத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன், முதலில். அப்போது நான் Famous இல்லை ("இப்போ மட்டும்?" என்று கேட்டு விடாதீர்கள். மேலே சொல்லனும்) இரண்டாவது. இது போன்ற அறிமுகம் எனக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அவன் படும் பெருமை*யை, சந்தோஷத்தைக் கெடுக்க முடியுமா?

இருவரும் அவர்கள் குல முறையில், காலில் விழுந்து, ஐந்து முறை கும்பிட்டுக் கும்பிட்டு, சேவித்தனர்.

இந்திரா- இட்ட பெயரா, அழைக்கும் பெயரா, இன்னமும் அறியேன். அவ்வளவு இளவயதில், அந்த 'ஐயங்கார்' கட்டுக்கும் சுயமான துருதுருப்புக்கும்- 'ரம்மியம்' என்ற வடமொழிக்கு அதே ஓசைருசி, பொருள் நளினத்துடன் நேர் தமிழ், தெரிந்தவர் சொல்லுங்களேன்!

அறிவுப்பூர்வமாக சம்பாஷிக்கத் தெரிந்து, மரியாதையும் தெரிந்து, பெண்மையின் பிகு குறையாமல், இன்முகம், பண்பு, உபசரிப்பும் கூடிவிட்டால், - அதெல்லாம் புண்ணிய சமாச்சாரம், எல்லாருடைய அதிர்ஷ்டமல்ல.

அவள் என் கதைகளைப் படித்தவள் அல்லள். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை.

நான் சாப்பிடுவதற்கு இலை வாங்கச் சீனு போனான். போகும்போது எனக்கு ஜாடை காட்டிவிட்டுப் போனான்.

தக்குணுண்டு சாமிக்குத் துக்குணுண்டு நாமம்-ஒரு குட்டி அறைக்குள் ஒரு குஞ்சான் அறை. அவர்கள் ஆண்ட இடம் அவ்வளவுதான்- உள் அறையில் எட்டிப் பார்த்தேன். குழந்தையை மடியில் போட்டுத் தூங்கப் பண்ணிக் கொண்டிருந்தாள். இது பெண். நறுவலாகத் தான் இருந்தது. இன்னும் ஆறு மாதம் ஆகியிருக்காது.

என்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தாள்.

 

"என் பெற்றோருக்கு நான் ஐந்தாவது பிறப்பு!" என்றேன். எங்கானும் ஆரம்பிக்கணுமே! முன்பின் பீடிகையில்லாமல், இதுவும் ஒரு 'பாணி'தான், இல்லை?

"அப்படியா? அப்போ தங்கள் குடும்பம்-" சட்டெனக் குழப்பத்தில் அவள் முகம் மாறியது. "இல்லை, தேவரீர் மூத்தவர்னு அவர்....." என்று இழுத்தாள்.

"நான் ஐந்தாவது என்று சொன்னேனே தவிர, எனக்கு முன்னதெல்லாம் தக்கித்து என்று சொல்லவில்லையே! அப்புறம், திலோமம் பண்ணி, தவங்கிடந்து, விரதமிருந்து, ராமேசுவரம் போய் அடியேன் ராமாமிருதம், ஏன் பிறந்தேன்னு இருக்கு."

"அப்படிச் சொல்லக்கூடாது."

அவள் குரல் நடுங்கிற்று.

"தமாஷுக்குக் கூடச் சொல்லக் கூடாது!' என்று மீண்டும் அடித்துச் சொன்னாள்.

நான் தமாஷுக்குச் சொல்லவில்லை என்று அவள் எப்படி அறிவாள்?

"நான் சொல்ல வந்தது அது அல்ல. வேறு. 'நட்டதெல்லாம் பயிரா? பெத்ததெல்லாம் பிள்ளையா?' ன்னு அம்மா சொல்வாள். அதையேதான் உன்னிடம் சொல்ல வந்தேன்."

அவள் புரிந்துகொண்டு விட்டாள். உடனேயே அவள் கன்னங்களில் வழிந்த கண்ணிர் எனக்குச் சற்று அதிசயமாகத்தானிருந்தது. ஆனால் நான் விடவில்லை. தொடர்ந்தேன்.

"அந்தக் குழந்தை குறை ப்ரசவமா, நிறை ப்ரசவமா, இருந்து போச்சா, உடனேயே போச்சா, எதுவும் அறியேன். இப்போ நீ அழுவது சுமந்த கனத்துக்கா, வளர்த்த பாசத்துக்கா, உனக்குத்தான் தெரியும். துக்கங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது முறையல்ல. அவரவர் துக்கம் அவரவருடையது. ஆனால் இப்போ உன் மடியில் ஒரு குழந்தையிருக்கிறது. அது உன் முகத்தைப் பார்த்துச் சிரிக்க, நீ அதன் முகத்துள் குனிந்து சிரிக்க....."

இதெல்லாம் நானா?

அப்புறம் இரண்டு மாதங்களுக்கொரு முறை அங்கு போவேன். என் வீட்டுக்கு நான் அவர்களை அழைக்கவில்லை. நான் அழைக்காமல் அவர்கள் எப்படி வருவார்கள்?

கீதாவுக்கு முதல் ஆண்டு நிறைவு வந்தபோது, நான் சீனுவிடம் பணம் கொடுத்து, குழந்தைக்கு ஏற்றபடி, காஞ்சிபுரம் பட்டுத் துண்டு வாங்கிக்கொள்ளச் சொன்னேன்.

 

திணறிப்போனார்கள். எப்படியும் அந்த நாளிலும் அது ஒரு கணிசமான ஐட்டம் அல்லவா?

அது சரி, ஐயாவுக்கு எங்கிருந்து இந்தத் தாராளம்? குழந்தைமேல் பாசம் பொங்கிற்றோ? இல்லை, கொல்லையில் காசு மரமா?

திருவல்லிக்கேணியில் அதுவும் வாடகை வீட்டில் கொல்லைப்புறமா? இடமும் ஏவலும் நன்றாப் பார்த்துக் கேட்டேளே? அந்தக் குழந்தையை நான் தொட்டதுகூட இல்லை.

அப்போ? கர்ண பரம்பரையாக்கும்!

கர்ணனைப் பற்றி பேச்சு எடுத்ததால் சொல்கிறேன்; கொடுப்பது என்பது கருணையால் மட்டும் அன்று. குழந்தையை மூட்டை கட்டி ஆற்றில் விட்ட தொட்டியிலிருந்து, கடைசியில் உயிர் விட்ட தேர்த் தட்டுவரை, கர்ணன் வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவன். தாயாரிலிருந்து, மனைவியிலிருந்து, தெய்வத்தால்வரை. அம்சங்களுக்குக் குறைவு இல்லை. சாபங்களுக்கும் குறைவில்லை. தாய் மூலம் தன் உண்மை தெரிந்தும், கடைசிவரை வெளிப்படுத்த முடியவில்லையே! உண்மையும் துரோகம். துரோகம் தவிர-அப்பா, வேண்டாம்.

ஏன் கொடுத்தான் ?

வாழ்க்கைமேல் வெறுப்பு, தன் மேலேயே வெறுப்பு. கூடவே ஒரு இறுமாப்பு. விதியே, உன் கை வரிசை இவ்வளவுதானா? இதற்கு மேலும் உன்னால் முடியுமா?

கொடுப்பதில் ஒரு பழிவாங்கல் இருக்கிறது. யாரை? என் விதியை, நான் வந்த வழியை எடுத்துக்கொள், எடுத்துக்கொள், எல்லாவற்றையும் எடுத்துக்கொள். நான் கொடுக்கக் கொடுக்க, எனக்கு விஷய விரக்தி கூடக்கூட, உனக்கு அபஜெயம்.

அந்த மனநிலையில் இருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கோளேன். இத்தனை கசப்புக்குக் காரணம்? எதற்கு சொல்வதில் பயனில்லை. அதனால் நிலைமை மாறப்போவதில்லை. அதனாலேயே சொல்லத் தேவையுமில்லை

1951 வாக்கில் எங்கள் வங்கி பெரிய வங்கியோடு இணைந்த போது, Retrenchmnet கோடரி ஸ்ரீனிவாஸன் மேல் விழுந்தது. பிறகு அவன் பிஸினஸ்ஸில் புகுந்து விட்டான். ஒரு அச்சுக்கூடம் சின்னதாக ஆரம்பித்தான். உத்தியோகம் அவனை விட்ட வேளை, அவனுடைய நல்ல காலத்தின் துவக்கமாக அமைந்துவிட்டது.

சீக்கிரமே வீடு கட்டி, குரோம்பேட்டைக்குப் போய் விட்டான். எங்கள் சந்திப்புக்கு வாய்ப்புக்களும் குறைந்து போயின. எப்போதேனும் ரயிலில் சந்தித்தால் உண்டு. எங்கள் தண்டவாளங்கள் மாறிவிட்டன. எங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் நேரமில்லை.

கண்ணில் படவில்லை, மனதிலும் படவில்லை.

 

நான் உத்தியோகத்தில் உழன்று மாற்றம் ஆகி, அங்கு உழன்று, முறையாக ஓய்வு பெற்றுச் சென்னைக்குத் திரும்பி ஆச்சு, ஒன்பது வருடங்கள்.

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு கல்யாணப் பத்திரிகை வந்தது, ஒரு பத்திரிகை ஆபீஸிலிருந்து திருப்பப்பட்டு. வதுக்களின் பெயர்கள், அழைப்பவர் பெயர் எல்லாமே புதுசு.

ஆனால் ஊன்றிப் படித்தபோது-

என் சகோதரியும் லேட் எஸ். ஆர். ஸ்ரீனிவாஸனின் இரண்டாவது புத்திரியுமான செளபாக்கியவதி வேதாவை,

எஸ். ஆர். ஸ்ரீனிவாஸன் லேட் என்னைவிடப் பத்து வயது இளையவன். என்ன அக்ரமம்! ஆனால் அவன் தானா?

கல்யாணம் மைலாப்பூரில். நான் அடைந்த நேரம், மத்தியானச் சாப்பாடு முடிந்து, வரவேற்புக்கு முன், சந்தடி சற்று ஒய்ந்த நேரம்.

நறுவலாக ஒரு ஸ்திரீ, முப்பது வயதிருக்கலாம். எதிர்ப்பட்டாள்.

"கல்யாணப் பெண்ணின் தாயாரைப் பார்க்க முடியுமா?"

"என்னோடு வாங்கோ."

சாமான் அறைக்கெதிரில் முன்றானையை விரித்துப் படுத்திருந்த-

"அம்மா, உன்னைப் பார்க்க யாரோ மாமா வந்திருக்கார்."

-உருவம் எழுந்தது. பாவம், அசதி.

"யாரது? !"

முகம் அரவிந்தமாகும் அந்த அற்ப நேரத்துள் நிகழும் கற்ப காலத்துக்கு என்னிடம் வார்த்தை இல்லை.

அப்படியேதான் இருக்கிறாள். "என்னடி கீதா? லா. . ரா. வைத் தெரியவில்லியா?"

அந்த சந்தோஷ நேரத்தில் ஸ்ரீனிவாசனைப் பற்றிய நினைவு தவிர்க்க முடியாது.

ஆனால் கல்யாண வீடு. கண்ணிர் சிந்தக்கூடாது. கண்ணிர் பளபளக்கும் விழிகளில் சிரிப்புடன் கீதா!

"மாமா! நீங்கள் என் ஆண்டு நிறைவுக்குக் கொடுத்தேளே, பட்டுப் பாவாடை- பத்திரமா என் பெட்டி அடியில் இருக்கு."

பூமி கிடு கிடு.

 

சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் விளக்கு.

 

19. மணிக்கொடி சதஸ்

 

மெரினாவில் மணிக்கொடி எழுத்தாளர்களின் மாலைச் சந்திப்பு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஸ்ரீ சிதம்பர சுப்பிரமணியன், சில சமயங்களில், பட்டானியோ, சுண்டலோ, வேர்க்கடலையோ வாங்கிக் கொடுப்பார். "அதோ கொஞ்சம் எட்டினாற்போல உட்கார்ந்திருக்காளே, அந்த மூணு பேருக்கும்கூட," என்று சுண்டல்காரனுக்கு எங்களைச் சுட்டிக் காட்டுவார். ஆளுக்கு ஒரு அணா, வெங்காயம், மாங்காய், தேங்காய், கடுகு தாராளமாகத் தாளித்து, நல்லெண்ணெய்ப் பசையுடன்- பஹு ருசி. அறிவுக்கு உணவோடு நாக்குக்கும் சற்று ஈயப்படும்.

இந்த மாலைக் கூட்டத்தைப் பற்றிய புலன், எந்த திராஷைக் கொடி மூலமோ, பெரிய இடங்களுக்குப் போய்விட்டது. வேடிக்கை பார்க்க வருவோர், வேவு பார்க்க வருவோர், என்னதான் வாண வேடிக்கை இங்கு எனும் அவாவில் வருவோருமாகக் கூட்டம் பெருக ஆரம்பித்தது. லேசாக நாங்கள் அரை டிக்கெட்டுகள் கவலைப்பட ஆரம்பித்து விட்டோம். அந்த, குறிப்பிட்ட ஏழெட்டுப் பேர் மட்டும் அடங்கிய குழுவில் நிலவிய அந்நியோன்யம், பேசப்படும் விஷயங்களின் ஆசாரம்,

தடங்கலற்ற கருத்துப் பரிமாறல்- சிறுகச் சிறுகப் பாதிக்கப்பட ஆரம்பித்து விட்டனவோ?

யாகத்தைக் கலைக்க அசுரர்கள் வருவதுபோல, பாதகமான அம்சங்களும் கலந்துகொள்ள முயன்றன. அரசியல், கக்ஷி, குதர்க்கம், அநாவசியமான பேச்சுக்களைப் புகுத்தி பாதைகளையே திருப்ப முயன்ற களைகள். ஆனால் அவைகளுக்கு இங்கு பேசப்பட்ட விஷயங்களின் தடங்கள் புரியாமல், எட்ட முடியாமல், சுவாரஸ்யம் குன்றித் தாமே உதிர்ந்து போயின.

கொஞ்ச காலத்துக்குச் சில ப்ரமுகப்ரஸன்னங்கள் பங்கு கொண்டன. (பெயர்களை உதிர்க்கப் போகிறேன்) டாக்டர் வி. ராகவன், ஸ்ரீ கே. சேஷாத்ரி, ஸ்ரீ கே. சந்திரசேகரன், 'றாலி', ஸ்ரீ எஸ். வி. வி. 'ஹிந்து' ஸ்ரீ ரகுநாத அய்யர் (விக்னேச்வரா) அவரவர் வெளியிடும் கருத்துக்களைக் காட்டிலும் அவர்கள் வெளியிடும் தோரணை- நாங்கள்- இளவல்களின் கவனத்தை ஈர்த்தது.

இரவு, தலையணைமேல் தலை, மாலை நடந்ததைத் திரும்ப எண்ணிப் பார்க்க முயல்கையில், ஏதோ ஒரு குறைபாடு, நெஞ்சீரல், குழந்தைக்கு முழுத் தோசையை ஓரத்தில் விண்டு கொடுத்தால் அந்த அதிருப்தி- இம்சித்தது கலப்படம். இந்தக் கூட்டம் தன் பழைய Size க்குத் திரும்புமா?

 

எங்களுடைய மெளனப் பிரார்த்தனை கேட்க வேண்டிய செவியில் விழுந்து விட்டாற் போலும். இந்த அதிகப்படி பங்காளர்கள், பார்வையாளர்கள், சேர்ந்த மாதிரியே, விலகியும் போயினர். அப்பாடி!

'ஹிந்து' ரகுநாத அய்யர் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு வந்து கொண்டிருந்தார். அவருடைய முன்னிலை, ஈடுபாடு மணிகொடி குழுவுடன் கலவை இழந்த மாதிரி எனக்குப் படவில்லை; ஆனால் அந்தச் சிறிய உடலுக்குள் என்ன புலமை! என்ன ஆகாசம்! மணிக்கணக்கில், கீழே இறங்காமலே, சிறகை அடிக்காமலே, அங்கேயே நீந்துவார்.

குறுமுனி.

மணிக்கொடி ஸதஸ், வேறு முகம் எடுக்க ஆரம்பித்தது.

ஸ்ரீசிதம்பர சுப்ரமணியன், நாங்கள் சற்று எட்ட ஒதுக்கிப் பார்க்கும் கூட்டம் உள்பட, வீட்டுக்கு இந்த எழுத்தின் உபாஸகர்களை அழைத்து, பாயஸம் பச்சடியுடன் விசேஷ சாப்பாடு போட்டார்.

அடுத்து .நா.சு. அதேபோல் விருந்து வைத்தார்.

துமிலன் விட்டில் நடைபெற்ற எஸ். கே. சி. பார்ட்டியில் (ஸ்வீட், காரம், காபி) ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அவர் கேட்டுக் கொண்டபடி, வந்திருந்தவர் ஒவ்வொருவரும் எழுந்து நின்று தங்கள் பெயரைச் சொல்லிக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். என் முறை வந்ததும், "என் பெயர் லா..ராமாமிருதம்!" என்று கூறிவிட்டு, என் பக்கலில் உட்கார்ந்திருந்த துமிலன் ஸாரைச் சற்றுப் பெருமிதத்துடன் பார்த்தேன். நான் எதிர்பார்த்த அடையாளம் அவர் கண்களில் கூடுவது காண அதைவிடக் குஷியாக இருந்தது. அப்போது அவர் புதுச் சிறுகதைகள் மட்டும் கூடிய கதைக்கோவை மாதம் ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

"ஓஹோ, இந்த மாஸம் வெளிவந்த 'சுமங்கல்யன்' என்கிற கதையை எழுதியவர் நீங்கள்தானா? ரொம்ப நன்றாக இருந்தது. எந்த மொழியிலிருந்து தர்ஜமா அல்லது மொழி பெயர்ப்பு தெரியவில்லை."

பலூன் முகத்தில் வெடிக்கும்விதம் எப்படி?

இது சாக்கில் இதேபோல், மற்றொரு சம்பவத்தையும் சொல்லி விடுகிறேன்.

மேற்கூறிய சம்பவத்துக்குப் பின்னர்தான், 'ஹிந்துஸ்தான்' வாரப் பத்திரிகைக்கு ஒரு கதை அனுப்பியிருந்தேன். பத்து, பன்னிரண்டு நாட்கள் கழித்து அதன் விதியை அறியச் சென்றேன்.

"உங்களை ஆசிரியர் பார்க்க விரும்புகிறார்."

உள் அறையில் ஆசிரியர் உட்கார்ந்திருந்தார்.

 

"உட்காருங்கள். ஹூம், Yes, Mr.ராமாமிருதம், உங்கள் கதை 'துறவு' மொழி பெயர்ப்பா, தழுவலா? Be frank with me you are a young man. உங்கள் கதை original ஆக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இவ்வளவு நன்றாக, புதுமையான டெக்னிக்கோடு அமைந்திருக்கும் ஒரு விஷயத்தை வெளியிடுவதற்கு எனக்கு இஷ்டம், சந்தோஷம். ஆனால் ஒரிஜினலை அக்னாலட்ஜ் பண்ணி விட்டால், நல்லது. பின்னால் சிக்கலுக்கு வழியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?"

இது எப்படி! ஆகவே ஒன்று. உள் பொறியை அவிக்க மழைத்துளி வேண்டுமென்பது கூட இல்லை. விரல் நுனித்தெறிப்பே போதும். நண்பனே, உன் கொழுந்தைக் காப்பாற்ற வேண்டுமானால் பொங்கியெழும் ரோசத்தை சுரனை கெட்ட அழும்பாக மாற்றிக்கொண்டு, உன் முதுகு எலும்பைப் பலப்படுத்திக் கொள்.

பின்னர், ஒரு சமயம், மைலாப்பூரில் ஒரு வீட்டில் அப்பா என்ன கூட்டம்! இது என்ன சினிமா காக்ஷியா, கலியாணமா? இல்லை, மணிக்கொடி எழுத்தாளர்களைச் சந்திக்க வந்தவர்கள். இவர்களில் முக்காலே மூணு வீசம் பேருக்கு மேல், இவர்களுக்கும் எழுத்துக்கும் வாசகர் என்கிற முறையிலேனும் சம்பந்தம் இருக்குமோ, சந்தேகம், வகையான தீனி. என்னென்ன பட்டுப் புடவைகள். விதவிதமான கொண்டைகள், நகை வரிசைகள்.

ஒரு அம்மாவின் 'மேக் அப்' அலங்காரம் அடேயப்பா!- புதுமைப்பித்தன்: "யார் இவங்க, மாஸ்டர் விட்டலுக்கு ஸ்திரீ பார்ட்டா?" என்றதும், நாங்கள் குப்பென்று சிரித்துவிட்டு, சிரித்த காரணத்தை வெளியிட முடியாமல், திருதிருவென விழித்தது ஞாபகம் வருகிறது.

இப்போ ஒன்று தெளிவாயிருக்கும். எங்களுக்குத் தீனி பிடித்தது. தீனிக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ இலக்கியம் எனும் பெயரில் நடந்த கூட்டம் பிடிக்கவில்லை. இந்தக் குற்ற உணர்வில், நாளடைவில், அந்தத் தீனியும் பிடிக்கவில்லை.

விருந்துகளும் ஒய்ந்து போயின. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டே!

திரும்பவும் குறிப்பிட்ட அந்த ஏழு எட்டு பேர் கடற்கரையில் சந்திக்கும் வாய்ப்புகளும் குறைந்து போயின. இரண்டாவது உலக மஹாயுத்தம், சுதந்திரப் போராட்டம், அவரவர் ப்ரச்னைகள்; ஸதஸ் கலைந்து விட்டது.

ஆயினும் என் போன்றவன் நெஞ்சில் அது நட்ட விதை வீண் போகவில்லை. துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.

 

யோசித்துப் பார்க்கிறேன். அந்தக் கடற்கரைச் சந்திப்பு கலைந்தது பேரிழப்போ? அதன் காரியம் முடிந்தது, லபியும் முடிந்தது என்றுகூட எண்ணிக் கொள்ளலாம்.

சந்திரோதயத்தில் என் கதை 'அபூர்வ ராகம்' அப்போதுதான் வெளியாகியிருந்தது. பிற்பகல். எர்ரபாலு செட்டித் தெரு வழியே போய்க் கொண்டிருக்கிறேன். புதுமைப்பித்தனும் . பிச்சமூர்த்தியும் ஏதோ அவர்களிடையே, சுவாரஸ்யமாக, முக்கியமாகப் பேசிக்கொண்டு எதிர்நோக்கி வருகிறார்கள். முட்டிக்கொள்கிறாற்போல் நெருங்கிய பின்தான் அவர்கள் கவனம் என் மேல் பட்ட்து.

புதுமைப்பித்தன், வெடிப்பான அவர் சிரிப்பைச் சிரித்துவிட்டு, என்னை அணைத்துக் கொண்டார்.

"ஊம், நீங்களும் நம்மவரோடு சேர்ந்தாச்சு."

பிச்சமூர்த்தி பார்த்துக்கொண்டு நிற்கிறார். மீசைக்கும், தாடிக்கும் இடையே ஒளிந்து கொண்ட புன்னகை அவருடைய மூக்குத் துண்டு, விழியோரச் சுருக்கங்களில் வெளிப்படுகிறது. அவர் பார்வையே ஆசீர்வாதம். அவ்வளவுதான். போய்க் கொண்டேயிருக்கிறார்கள். போய் விட்டார்கள்.

வண்டி வாஹனப் போக்குவரத்துக்கு இலக்காக நடுத்தெருவில் நான் நிற்பதுகூடத் தெரியாமல், நடுத்தெருவில் நிற்கிறேன். பாதம் பூமியில் இல்லை.

சங்கப் பலகையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டேன்.

 

20. யூகமாலிகா

 

ஆண்டவனே! ஆண்டவனே! அபஸ்ருதிக்குப் பிராயசித்தம் உண்டோ? நீ எப்படி எங்களை ஸஹித்துக் கொண்டிருக்கிறாய்? அப்போ உனக்கே பிராயச்சித்தம் கிடையாதா? கேட்டுக்கொண்டிருக்கும் உனக்கே இல்லாவிடின், அதையே பயின்று கொண்டிருக்கும் நாங்கள் ஆவதென்ன? சொல், சொல், சொல்லேன்!

உலகினைப் படைத்து, உயிரினைப் படைத்து, உன் லீலா என்று எங்களுக்குப் போதித்து, நீயும் லீலா என்று நினைத்து, ஆனால் நீ நினைத்தது ஒன்று, நடந்தது வேறு என்று உனக்கே ஆகிவிட்டதோ! உன் பந்து உன்னையே எதிர்நோக்கி விட்டதும், உனக்கு வாயும் போச்சு, பதிலும் இல்லை. மோனத்தில் மூழ்கிவிட்டாய்.

உன்னை மீறியது விதியெனப் பெயர் கொண்டது. அவரவர் வினைப்படி அவரவர் விதியென மறு கணக்கும் கண்டது. என் சொல்கிறாய்?

அவனன்றி ஒரணுவும் அசையாது.

 

-இது ஒரு ஆறுதலா?

சின்னஞ் சிட்டுக் குருவிகூட அவனுக்குத் தெரியாமல் ஆகாயத்தினின்று விழவில்லை.

  -இது பயமுறுத்தலா?

இன்று செம்பருத்தஞ் செடி செண்டாவே மாறிவிட்டது. இன்று இதன் தனி உவகை என்ன? கொழிப்பு கண்ணைப் பறித்தது. குங்குமப் பொட்டுக்கள். சிவப்பேறிய விழிகள். பறிக்க மாளாது எட்டா உயரங்களில் மோஹச் சிரிப்புகள். கண் தொட்டு, கைபட இயலா முடுக்குகளிலிருந்து மோனக் கொக்கரிப்பின் குலுங்கள். "என்னைப் பார். என் அழகைப்பார். என் அழகில் உனக்குப் பட்டதை எனக்குப் பாடு, பார். மகிழ். தொடாதே."

தொடவில்லை. அப்படியே கிணற்றடியிலேயே அவனுக்கு அர்ப்பணம்.

இன்றைய பூஜை மானஸம்.

இன்று அவள் ரூபம். பெயர் மானஸா.

ஒவ்வொரு சம்பவத்தின் கழிப்பில், தம்பிடி வெள்ளித் தகடு அடைத்துக் கொண்டிருக்கிறது. உன் பிம்பம் தெரியும் கண்ணாடி. என் பிம்பம் என் அபினி.

மனித பரம்பரையின் நீண்ட நினைவுச் சரத்தினின்று பூக்கள், இதழ்கள், மனங்கள், நிர்மாலியங்கள் உதிர்ந்த வண்ணம், சொரிந்த வண்ணம். இவைதாம் எண்ணங்கள். மணிக்கூண்டின் ஒளித்துாலம் சுற்றியபடி, துாலம்பட்ட இடத்தில் அலைகள் வெளிச்சத்தில் குளிக்கின்றன. தூலம் நகர்ந்ததும், அந்த இடம் மீண்டும் இருள்.

எண்ணம் மனதை வெளிச்சமாக்குகிறது. மனதின் இருள் கலைகிறது. இருள் பிரம்மாண்டமான பாம்பு வாய். அதனுள் எண்ணங்கள் மின்மினிப் பூச்சிகள்.

மனிதன் அழியும் தன்மையன்.

ஆகவே மனமும் அழியும் தன்மைத்து.

ஆனால், மனதின் விளைவாய் எண்ணங்கள் அழிவற்றன. இது அதிசயமன்று?

புழுவின் முதுகு வெடித்துப் பட்டாம் பூச்சி.

வாத்து முட்டையினின்று அன்னக் குஞ்சு.

இங்கு எண்ணம் என்கையில், ஞானம், விஞ்ஞானம், கலை, சமுதாயம், சரித்ரம், புராணம், இதிஹாசம், அனுமானம், புண்ணியம், இத்தனையும், இத்யாதியும், இவைகளின் எதிர் மறைகளும் உள் அடங்கியவை.

அறியாமையும்.

 

அறிய அறிய இன்னும் அறியாமை.

மானுடத்தின் பொற்காலம் ஏற்கெனவே நிகழ்ந்தாகி விட்டது.

இல்லையேல், வேதங்களும், நாதங்களும், கீதங்களும் இவைகளின் ஸாரங்களும் எப்படி?

அந்த ஸூஸ்ருதியின் உச்சத்தின் ஸூஸ்வரங்களின் இயக்கத்தில், இதயத்தோடு மனம் இழைந்து, நூற்ற எண்ணத்தின் இதழ்விரி பீடத்தில் அவனை இருத்தினோம்.

பிறகு அவனை இழந்தோம்.

எண்ணங்கள் முள் காடாகிவிட்டன.

கண்ணுக்குள்ளேயே முள் அவனை மறைக்கிறது.

ஆனால்

அவன்

இதய நந்தனத்துள்தான் இருக்கிறான்.

எல்லா பாதிப்புகளுக்கும் அப்பாற்பட்டவன், என்று அவனை வரித்துவிட்டு, நம் சுயநலத்தில், நம்முடைய சுகதுக்கங்கள், லாப நஷ்டங்களுக்கு அவனைப் பொறுப்பாக்கி, அவனை அழைப்பதில், பின்னர் அங்காலய்ப்பதில் அர்த்தம், முறை என்ன? நாம் அவனைப் பொறுப்பாக்கினாலும், அவன் தலையை நீட்டுபவனா?

எந்தெந்த சமயம் என்னென்ன செய்ய, அவன் அறிவான்.

அவன் தாராமல் இருப்பானோ? அவன் என்ன சத்தியம் மறந்தவனோ?

இதுவும் நமக்கு நம் சமாதானம்.

நம்பிக்கையின் பலம். ஆண்டவன் பலத்தைக் காட்டிலும் பெரிது.

வாக்குத் தத்தங்களுக்கு வாக்குத் தத்தமானவன். வரையற்றவன். நிகழ்ந்து கொண்டேயிருப்பவன் என்றெல்லாம் வர்ணித்துக்கொண்டே, அவனைப் பூரண ப்ரக்ஞையின் உறைவிடம் என்று அர்ச்சிக்கையில், அவன் எல்லைப் படுத்தப்படுகிறான்.

ப்ரக்ஞைக்கு, தான் ப்ரக்ஞையென்று தோன்றிய அப்போதே, ஆயுசும் பிறந்தது.

எல்லைகள் வகுத்தாகிவிட்டன. சம்பவத்துக்கு மீட்சி கிடையாது. அதற்கு மறுமுறை கிடையாது. ஒவ்வொன்றும் அதன் ஒரு முறையுடன் அது அது சரி.

நடந்ததை மீண்டும் நடத்த அவனாலும் முடியாது.

 

கற்பு என்பது இதுதானோ,

ஒரு தடவை

ஒரே தடவை

ஒன்று

ஒற்றே எல்லாவற்றின் பெருவினை. ஒரு விதி.

இந்த நோக்கில் எல்லாமே ஒன்று, ஒரு தரம் தான்.

ரத்து அற்ற ஒன்று.

ஒன்றுக்கு மீறிய அதிகாரமில்லை. நியாயம் இல்லை. நியதி இல்லை.

இந்த நியாயங்கள், நியதிகள், நம்பிக்கைகள் அனைத்தும், பூமியெனும் இந்தக் கிரஹத்தோடு சரி. பிறிதான கிரஹங்களில், உயிரின் வாழ்முறை, வழிமுறை கோட்பாடுகள் என்னென்ன, எவ்வெப்படியோ?

இந்த எண்ணத்தின் பயத்தில், நாம் நம் நம்பிக்கையில் பழக்கப்பட்ட ஆண்டவன் எனும் எண்ணத்துள் அடைக்கலம் நாடுவதன்றி வேறு வழி?

உயிர்த் தாதுவின் விஹாஸத்துக்கு

மகத் அத்தாக்ஷி ஆண்டவன்.

புலி வேட்டையில் மனிதனும் புலியும் ஒன்றை யொன்று வேட்டை.

இருவரில், நீ அல்லது நான்.

இந்த வேட்டையில் எது ஆண்டவன், எது புலி? ஆண்டவனே புலியா?

எது? நான் கடைசிவரை அறிய முடியாது. அறிந்ததும் சொல்ல முடியாது.

ஆண்டவன் வேட்டையில், அவனுக்கும் வேட்டையின் பலா பலன்களுக்கும் சம்பந்தமில்லை.

ஆனால் வேட்டையாடும் முறையென்னவோ இதுதான்- என்று மனம் சொல்கிறது.

சிந்தாநதியில் மூழ்கியும் மிதந்தும் வந்த உதிரிப் பூக்கள். இதழ்கள், நிர்மாலியங்கள், மணங்கள்.

 

21. ட்ரிபிள்ஸ்

 

கண்ணனும் நானும் அசோக் நகரிலிருந்து வட பழனிக்கு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தோம். டபிள்ஸ். ஸ்தூபியிலிருந்து வடபழனிக்கு த்ரு ஒரே சாலை. ஆனால் கண்ணன் என்னவோ, மடக்கி, திருப்பி, குறுக்குத் தெருவுகளில் நுழைந்து சென்றான். ட்ராஃபிக் வேளையாம். நான் நம்பவில்லை. இன்றைக்கு அவன் மூட் இப்படி என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

சைக்கிள் வெண்ணையில் வழுக்கிக்கொண்டு போயிற்று. சென்ற பாதை வெண்ணயாக இல்லை. மேடு பள்ளம், கரடு முரடு. ஆனால் கண்ணனிடம் வண்டி, வயலின் வில்லாகப் பேசிற்று.

"கண்ணா, நீ சைக்கிளில் Aceதான். ரொம்ப நாளாகச் சொல்ல வேண்டுமென்றிருந்தேன்."

அவன் ஒன்றும் பூரித்துப் போகவில்லை. 'உங்களுக்கு சைக்கிளைப் பற்றி ஒன்றும் தெரியாது'. வாஸ்தவம், ஆனால், சுட்டிக் காட்டியது பிடிக்கவில்லை. ஆனால், பையன்கள் வயது ஏறிக்கொண்டு வருகிறார்கள்.

சட்டென வாய்விட்டுச் சிரித்தான். "அப்பா, நினைப்பு வரது உங்களுக்கு சைக்கிளில் பாலன்ஸ் கிடையாது, இல்லையா? ஏறுவதற்காக, இடது பக்கம் ப்ளாட்பாரம், மேடு, ஒரு கல்லையேனும் தேடிண்டு போவேளே!

நாங்கள் மூவரும் சிரிப்போம். ஹரி சொல்வான். "டேய் கண்ணா, உன் அப்பா இப்படியே பாதி தூரம் ஏற இடம் தேடிக்கிட்டு, சைக்கிளைத் தள்ளிக் கிட்டுப் போயிடுவாரு மிச்சப் பாதிக்கு ட்ராஃபிக் கெடுபிடி. அதுக்கும் தள்ளிக்கிட்டே போயிடுவாரு ஆபீஸும் வந்துடும்."

ரோசப்பட்டுப் பிரயோசனம்? ஆனால் இவன்கள் என்ன பழி தீர்த்துக் கொள்கிறான்கள்?

'நீதான் என்னையும் சேர்த்து வைத்து நன்றாக ஓட்டுகிறாயே!" என்றேன்.

"என்னப்பா, ஒரு நாளா, இரண்டு நாளா? அம்மா வயிற்றுள் சிசுவா, காலை உதைக்கிறபோதே, சைக்கிள் மிதியில்தான்."

கண்ணனும் கதை எழுதுகிறான்.

"நான் தான் சொன்னேனே, நீ Ace."

"அப்படிச் சொல்வதற்கில்லை. ஹரிக்கு அப்புறம் தான் நான்."

"அப்படியா?" ஹரி, கண்ணன், நாகராஜன், பள்ளி நாளிலிருந்தே ஒரு ஜமா. இன்னும் ஜமா.

"ஒரு சம்பவம் நினைவுக்கு வரது, சொல்லட்டுமா ?"

அவன் என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.

 

அப்போது மூணாவது ஃபாரம் நான். நான் என்ன, நாங்கள். மேற்கு மாம்பலம் பள்ளி. ஒரு சனிக்கிழமை வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு சினிமா போனோம். மாட்டினி, சைதாப்பேட்டை நூர்ஜஹான். ட்ரிபிள்ஸ். நான் சைக்கிள் Bar, ஹரி மிதிச்சான், நாகராஜன் பின்னால் carrier. ஷோ முடிஞ்சு திரும்பி வரோம்.

வாத்தியார் படம், டிஷூ, டிஷூ. உடம்பிலே, மனசிலே, படம் ஊறிப்போய் ஒரே குஷியிலிருந்தோம். ஒரு சினிமா மெட்டை, கோரஸ்ஸா முப்பது குரலில் பாடிண்டு-நாங்கள் சைக்கிளில் இல்லை- பனிச்சறுக்கில் Ski விளையாடிக் கொண்டிருந்தோம்.

வழியில் ஒரு டீ கடை வந்தது. வெளியில் போட்ட பெஞ்சில் உட்கார்ந்தபடி, ஒரு சிவப்புத் தலைப்பா 'டீ' குடிச்சிண்டிருந்தது. எங்களைப் பார்த்து விட்டது.

டபிள்ஸே அப்போ சட்டப்படி குற்றம்.

சட்டெனத் திரும்பி மறைவதற்கோ, இறங்குவதற்கோ சந்து கூட இருந்தது. ஆனால் நாங்களா இறங்குவோம்? எங்களுள் புகுந்து கொண்டிருப்பது யார்? அந்தப் பெஞ்சை உராய்ந்தாற் போலேயே நீந்திக் கொண்டு போனோம். போற போக்கில் ஹரி, போலீசுக்காரனுக்கு "டாட்டா!" அடிச்சான். நான்தான் சொன்னேனே. மூன்று ஹீரோக்கள் ஒரே கதாநாயகியை நந்தவனத்தில் ஒடிப்பிடிச்சு விளையாடறோம். ரெண்டுபேர் பாடினால் டூயட். மூணுபேர் பாடினால், அதுக்கு என்ன அப்பா வார்த்தை?

Dream sequence இலிருந்து முரட்டுத்தனமாகச் சுய நினைவுக்குக் கொண்டு வரப்பட்டோம்.

"டேய் ! நில்லுங்கடா !"

திருப்பிப் பார்த்தால், சைக்கிளில் துரத்திண்டு வரான்.

ஹரி, சும்மா, ஸ்பீடை வாரினான். போலீஸ்காரன் பின்னால் புள்ளியாகிவிட்டான். ஆனால் அது என்ன மந்திர வாதமோ, எங்களுக்கு முன்னால், பக்கவாட்டில், இரண்டு சந்துகளிலிருந்து, சைக்கிளில் இரண்டு காவல் புலிகள் எதிர்ப்பட்டு, குறுக்கே வெட்டி, எங்களை மடக்கி விட்டன. இவங்க எங்கிருந்து, எப்படி?...

துரத்தியவனும் வந்து சேர்ந்தான்.

"வாங்க, ஸ்டேஷனுக்குப் போவோம். ஏம்பா, நீங்க பள்ளியிலே படிக்கிறீங்களா, ஸ்ர்க்கலில் வேலை பார்க்கிறீங்களா? கேஸ் பதிவாகிவிட்டது. சைக்கிளும் பிடுங்கப்பட்டது.

"சொல்லிட்டேன். தப்புப் பேர் தப்பு விலாசம் தந்தீங்க இதுக்குமேல் தண்டா. திங்கள் கிழமை, சைதாப்பேட்டை கோர்ட்டில் 'டா'ண்ணு 9 மணிக்கு ஆஜர். இது க்ளாஸ்-க்கு கட்' அடிக்கிற மாதிரியில்லை. கோர்ட். ஞாபகமிருக்கட்டும்."

 

சைக்கிள் கடைக்காரனுக்குச் சொல்லிக்கலாம். தெரிஞ்சவன்தான். நாள் முழுக்கவே hire அப்போ ஒரு ரூபாய்தான். அவசரமா மூணு குயர் கணக்கு நோட் வாங்கட்டா வெளியில் நிக்கணும்னு வீட்டில் சொல்லிக்கலாம்.

ஆனால் கோர்ட்டில் தீட்டிடுவானே! உள்ளே தள்ளிட்டான்னா? நினைக்கவே பயமாயிருக்கே! மீட்க யார் வருவா? நடந்ததை வீட்டில் சொல்லவே தென்பில்லை. என்ன கிடைக்கும்னு தெரியும். என்னதான் செய்வோம்? தெரு முனைப் பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டு, தப்புக் கேட்டுண்டு, தப்பிக்க வழிகாட்டச் சொல்ல, அதுக்கே கற்பூரம் கொளுத்தக் கால் ரூபாயேனும் வேணுமே! அஞ்சு பைசாவுக்கு இங்கே வழியில்லே.

அன்னி ராவுக்கு, ஞாயிற்றுக்கிழமை பூரா, நாங்கள் மூவரும் எங்களுக்குள் சபை கூட்டிக் குமைந்தும், வழி தென்படவில்லை. இதோ திங்களும் விடிந்துவிட்டது. பிள்ளையார் கைவிட்டுவிட்டார். அம்மா, முப்பாத்தம்மா நீயே கதி, ஊஹாம் தைரியம் கொடுக்கவில்லை. பயம், எச்சில் முழுங்க முடியல்லே.

'ஸ்பெஷல் க்ளாஸ்'னு சொல்லிட்டுக் கிளம்பு முன், கடைசி முறையாக அண்ணன், தம்பிமார், தங்கச்சியைப் பார்த்துக் கொண்டேன். அம்மா, அம்மா, மறுபடியும் எப்பவோ ?

எங்களுக்கது முன்னாலேயே 249 காத்துக் கொண் டிருந்தான்.

"மொத்தம் மூணு நிமிஷம் தான். மாஜிஸ்ட்ரேட்டோடு வாதம் பண்ணாதீங்க. கேட்ட கேள்விக்கு உடனே ஒப்புக்கிடுங்க தெரியுதா?"

தலையை ஆட்டினோம். ஹரிக்குக் கண் துளும்பிற்று. அவனைக் கேட்டால், என்னைச் சொல்வான். நாகராஜன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அவன் எப்பவுமே அழுத்தம்தான். மொத்தத்தில் எங்கள் வயதின் இயற்கைத் தன்மை தலை காட்ட ஆரம்பித்துவிட்டது. வெளியே ஜிகினா. உள்ளே பிசுபிசு-

"Order! Order! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!"

சிம்மாசனத்தில் அமர்ந்தவர் முகத்தைப் பார்த்ததும், மூவருக்குமே வயிற்றில் புளியைக் கரைத்தது. இவர் எங்கே இங்கு வந்தார்? இவர் நம் தெருக் கோடியில் இருப்பவர்னா? வேலை நேரம் போக, மிச்சத்துக்கு ஹானரரி மாஜிஸ்ட்ரேட் வேறயா? ஐயையோ! நாங்கள் திரும்பி, வீட்டைப் பார்த்த மாதிரிதான்!

கத்தரிக்காய்க்குக் காலும் கையும் முளைத்த மாதிரி, கட்டை குட்டையா, தன் குட்டைக்கு ஈடு செய்ய, ஜே.பியில் சாவிக் கொத்தைக் குலுக்கியபடி எகிறி எகிறி நடந்து செல்கையில், எத்தனை முறை, குள்ளா குள்ளா கோழி முட்டை, குள்ளன் பிள்ளை வாத்து முட்டை! என்று கத்தியிருக்கிறோம்! ஓரொரு சமயம் தெரு முனையில் நின்று, எங்களைத் திரும்பிப் பார்ப்பார். பார்க்கட்டுமே! இப்போ வட்டியும் முதலுமா எங்களைப் பார்த்து விடுவார்.

எங்கள் பெயர்களைக் கூவ ஆரம்பித்ததுமே, எழுந்து போய் எதிரில் நின்றோம்.

"ட்ரிபிள்ஸ் போனிங்களா?"

போனோம்."

"ரூபா வெச்சிருக்கீங்களா?"

தலையை ஆட்டினோம். மெய்யாவே, வாயை அடைந்துவிட்டது. ஆனால் தேம்பல் சப்தம், யாரு?

"ஹூம். இனிமேல் செய்யாதிங்க ஆல்ரைட். வெளியிலே ரைட்டர்கிட்டே சீட்டு வாங்கிட்டு ஸ்டேஷனுக்குப் போய் சைக்கிளை விடுதலை வாங்கிக்கங்க".

கனவா? நனவா?? நிமிண்டிப் பார்த்துக்கொள்ளக் கூட வழியில்லை.

"இறங்குங்க. நெக்ஸ்ட்!"

வெளியில் 249 காத்துக் கொண்டிருந்தான்.

"பரவாயில்லை, அதிர்ஷ்டசாலிங்கதான். குண்டு மிளகா உங்களை எப்படி சும்மா விட்டாரு இதையே தனியா ஒரு சிங்கிள் டீ மேலே யோசிக்க வேண்டிய சமாச்சாரம்."

அவன் கேட்பது எங்களுக்குத் தெரியவில்லையா? ஆனால் ஓட்டாண்டியா நிக்கறோமே!

"பரவாயில்லே தம்பிங்களா, குன்னிப் போயிடாதிங்க, சின்னப் பையன்க, படிக்கிற பசங்கன்னு அன்னிக்கு சும்மாவே விட்டிருப்பேன். ஆனால் உங்களில் எவன்? 'டாட்டா' காட்டினதும் ரோஷம் பொங்கிச்சு, டிபார்ட்மெண்டா, கிள்ளுக்கீரையா?"

"ஸார், ஸார்-" ஒற்றை விரலை வினயமாக நீட்டிக் கொண்டு, இது நான்.

"என்ன தம்பி" எண்ணாலேயே அவனை அழைத்து, 'ஸாரை' எங்கு கண்டான்.

"நீங்கள் இவ்வளவு நல்லவர்னு எங்களுக்குத் தெரியாது. இனிமேல் இப்படிச் செய்யமாட்டோம். சத்யமா!"

முதுகைத் தட்டிக் கொடுத்தான். "பரவாயில்லே தம்பி! எல்லாமே நடக்கறதுதான். இல்லாட்டி, டிபார்ட்மெண்ட் பிழைக்கறதெப்படி?"

"ஸார், நாங்கள் ஸ்டேஷனுக்குப் போய் வண்டியை மீட்டுண்டு, பள்ளிக்கூடம் போய்ச் சேர்றதுக்குள்ளே ரொம்ப லேட் ஆயிடும்."

"சாயங்காலம் மீட்டுக்கங்க. அவசரமில்லே."

"இல்லை, இப்பவே மீட்டுண்டுதான் போவணும். எங்களுக்கு வேறு வழியில்லே. ஸார், ஒரு ரிக்வெஸ்ட், அவன் கண்களில் வினாக்குறி மேலும் கீழுமாகக் குதித்தது.

 

"ட்ரிபிள்ஸுக்கு..." அந்த ஒரு செக்கெண்டு திகைப்பில் என் அர்த்தம் தோய்ந்ததும், ஆளைப் பிடுங்கிண்டு ஒரு சிரிப்பு வந்தது பாருங்கோ- நாங்கள் பிய்த்துக் கொண்டோம்.

சிரிப்பே சம்மதம் தவிர, எங்கள் ஹெட்மிஸ்ட்ரெஸ் ஒரு முழி முழிச்சாள்னா, அந்தக் கிலிக்கு நாங்கள் 249 என்ன 249, 378, 875 எல்லாமே சமாளிக்கத் தயார்.

"அட்வெஞ்சர் எப்படி? அப்பா, ஒண்ணு. இதில் அப்பாக்களுக்கு ஒரு நீதியிருக்கிறது. பிள்ளைகளிடம் எப்பவும் இருக்கிறபடியா பத்து ரூபாய்க்கேனும் குறையாமல் கொடுக்க வெக்கணும். என்ன சொல்றேள்?"

நான் சொல்ல என்ன இருக்கிறது?

இது இளைஞர் ஆண்டு.

 

22. சாக்ஷி : கற்பூரம்

 

அப்போது எனக்கு வயது ஆறு இருக்கலாம். ராயப்பேட்டையில் முத்து முதலித் தெருவில் குடியிருந்தோம்.

எதிர் வீட்டுப் பின் கட்டில், ஒரு தச்சனார் குடும்பம். பின்கட்டு பெரிய கட்டு. அதில் குடும்பமும் பெரிய குடும்பம். அப்பா தச்சனார், அம்மா தச்சனார், மூன்று பிள்ளைகள் தச்சனார்- அவர்கள் சம்சாரம். பெரியவர் வாட்டசாட்டமாக, வண்டு விழியும் கிருதா மீசையுமாய்ப் பின்னால் நான் பார்த்த சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி கம்பீரமாக அகன்ற நெற்றியை அரைப் பங்குக்கு மேல் அடைந்த தென்கலை நாமம்.

வீட்டினுள்ளேயே முற்றத்தில் தகரக் கொட்டகை போட்டு அதுதான் பட்டறை. மூன்று மகன்களைத் தவிர இரண்டு சின்னப் பையன்கள் வேலை செய்தார்கள். இவர்களுடைய உற்பத்தி அனேகமாகக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான், சமையலறைப் பண்டங்கள்பொம்மை வண்டி, சொப்புகள் மரப்பாச்சி, உப்பு மரவை, அரிவாமணை, துருவலகாய், மத்து, மனை, ஸ்டுல், இத்யாதி, பெரிய சாமான்களில் இறங்குகிற மாதிரி அவர்களிடம் சாதனங்கள் இல்லை. பண்ணவும் தெரியுமோ தெரியாதோ?

இங்கு நான் எப்படிச் சேர்ந்தேன்? எதிர் வீடுதானே! பின்கட்டுக்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். இதெல்லாம் எப்படிச் செய்யறது? என்று அவர்களைத் தொணப்புவேன். அண்ணா-அப்பாவை அண்ணாவென்றுதான் அழைப்போம் அண்ணாவும் தச்சரும் ஒருநாள் அளவளாவுகையில், 'பையன் உங்கள் தொழிலில் அக்கறை காட்டுகிறான்; சும்மா உங்களிடம் வந்துபோய்க் கொண்டிருக்கட்டுமா?' என்று கேட்டு, அவரும் உடனேயே சம்மதித்தார். நான் பள்ளிக்கூடம் இன்னும் சேரவில்லை. வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து எழுதப் படிக்கத் தெரியும்.

ஐயர் வீட்டுப் பையன் பட்டறையில் வேலை செய்வதில் அவர்களுக்கும் பெருமை. ("வெள்ளைக்காரன் தோத்தான், என்ன நிறம் பாத்தியா' எனக்கு ஒரு இடத்துக்கு வேளையாகப் போய், வேளையாகத் திரும்பி வருவதாக ஒரு ஒழுங்கு படிபட்டுமே! பின் என்ன, தச்சுத் தொழிலா என் பிழைப்பாக இருக்கப்போகிறது? ஏதோ பொழுது போக்கு.

தாத்தா பட்டறையில் உட்கார்ந்து நிரந்தரமாக வேலை செய்யமாட்டார். ஏன் செய்யனும்? மேல் பார்வை பார்ப்பார். தப்புத் திருத்துவார். சத்தம் போடுவார். கோபத்தில், கல்யாணமான தன் பையன்களைச் சில சமயங்களில் கைமிஞ்ச அஞ்சமாட்டார். பட்டறையிலேயே ஒரு ஒரமாக ஒரு குட்டி விமானத்தில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் பெருமாளுக்குப் பூஜை செய்வார். சின்ன விக்ரகங்கள். அவருடைய தாத்தா நாளிலிருந்து இருக்கிறதாம். இரண்டு பக்கங்களிலும் தேவிகள். சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நாழிகை கட்டைக் குரலில் துதிகள் பாடிக் கொண்டிருப்பார். திடீரெனத் தோத்திரங்கள் அடங்கி, குறட்டை பட்டறையைத் துரக்கும்.

இவர்கள் உற்பத்தியை விற்பனை செய்யக் கடை யென்று ஒன்று எங்கோ வைத்திருந்தார்கள். என்றாலும், அது ஒழுங்காக வேலை செய்த மாதிரித் தெரியவில்லை. ஆங்காங்கே கோயில்களில் நடக்கும் பிரம்மோற்சவங்களில் அவர்கள் விரித்த கடையையே நம்பியிருந்தார்கள். கபாலி கோயில், பார்த்தசாரதி கோயில், கந்தசாமி கோயில் தவிர, ஒரு ஐந்தாறு மைல் வட்டாரத்தில், பட்டணத்தில் அவர்களுக்குத் தெரிந்தபடி வெவ்வேறு மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் கோயில்கள் இருந்தன. இரவு எப்படியும், மிச்ச சரக்குடனும், வசூலுடனும் வீடு திரும்பி விடுவார்கள். முற்பகல் வேளைக்குப் பையன்கள் பட்டறையில் இருப்பார்கள். பிற்பகலில் வியாபாரத்தைக் கவனிப்பார்கள்.

மாலை விளக்கு வைக்கும் நேரத்துக்கு, அல்லது இரவு வீடு திரும்பியதும் விற்பனைத் தொகையை அப்பாவிடம் ஒப்புவிப்பார்கள். அவர் வெகு ஜாக்கிரதையாக எண்ணி, உள்ளே அலமாரியில் பூட்டி வைத்துக் கொள்வார்.

அன்றாடச் செலவுக்கு, அரிசியிலிருந்து எண்ணெய் வரை, அவருக்கும் பாட்டிக்கும் ஆயிரம் தர்க்கங்களுக்கிடையே அலமாரியிலிருந்து வழங்குவார். கடை கண்ணிக்குப் போவதெல்லாம் பாட்டிதான். ஆட்சி, இன்றைய பாஷையில், இரும்புக் கரம்தான். ஐயாவுக்கு நடந்தது, இதுவும் இன்றைய பாஷை தான்.

வெள்ளிக்கிழமையன்று மாலை பெருமாளுக்கு விசேஷ பூஜை, தேங்காய், சீப்புப் பழம், பொரிகடலை நிவேதனம். பட்டறையில் வேலை செய்வோருக்குப் பட்டுவாடா, பையன்களுக்குக் கைச் செலவுக்குத் தலா இரண்டனா. எனக்குக் கிடையாது. காசு வாங்கக் கூடாதுன்னு ஆத்தில உத்தரவு. பொரிகடலை போனாப் போறது. கொடுத்தா வாங்கிக்கோ நீயே மொக்க வேண்டாம். உன் தம்பிகளுக்கும் கொடு.

இங்கே நான் என்ன வேலை செய்தேன்னு யாரும் கேட்கமாட்டேங்கறாளே! சரி, நானே சொல்றேன்.

காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு, பட்டறைக்கு வந்துவிடுவேன். சுவரில் எல்லோரையும்போல் ஆணியில் சொக்காயை மாட்டிவிட்டுச் சக்கரம் வெட்டுவேன்.

அதாவது, ஒரு மெல்லிசுப் பலகையில் ஒரு வட்டம் பென்சிலால் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்தக் கோட்டு மேலேயே விளம்பின மாதிரி உளியால் செதுக்கிக் கொண்டே போகணும், வெட்டிக் கொண்டிருக்கையிலேயே விண்டுபோகும். போவட்டும், இன்னொண்ணு வெட்டு.

உளி பிடித்து, அதன்மேல் கொட்டாப்புளியால் தட்டுவதில் கண்டிப்பாகத் தனிக் குஷிதான். டொக் டொக், லொட் லொட்- இதுதான் என் வேலை.

அனேகமாக, கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என்கிற மாதிரிதான்.

இது தச்சன் பட்டறை. ஆனால் பலன் என்னவோ ஒண்ணுதான்.

அபூர்வமாக, ஒன்று பூரா வட்டம் கண்டுவிட்டால் என்னைக் கட்டிப் பிடிக்க முடியாது.

("மூஞ்சியிலே செழுப்பு எப்படி ஏறுது பார்த்தியா?")

அன்னிக்குக் கனாவுலே நான் வெட்டின சக்கரம், மாட்டு வண்டி சக்கரம் பெரிசுக்கு. அதன் சிரங்குப் பொருக்கு விளிம்புடன் வந்து கிறுகிறுன்னு சுற்றும்.

நான் வெட்டின சக்கரம். விஷ்ணு சக்கரம்.

ஒரு நாள்.

காலை. அப்போதுதான் பட்டறையில் கூடியிருக்கிறோம்.

அறை உள்ளிருந்து பெரியவர் வெளிப்பட்டார் என்னென்னவோ வாயில் வந்தபடி பிதற்றிக்கொண்டு. அம்மா! அந்த மாதிரிக் கோபத்தை நான் பார்த்ததில்லை உடம்பெல்லாம் ஆடுகிறது. வேட்டி அவிழ்ந்து போனது தெரியவில்லை. அவரைப் பிடிக்க முயன்று, முடியாமல் பாட்டி அவர் தோளில் தொங்குகிறாள். வாயில் துரை தள்ளுகிறது.

என்ன ஆச்சு? என்ன நடந்தது?

எங்களுக்குள்ளேயே கிசுகிசுவில், படிப்படியாக என் குழந்தை அறிவுக்குப் புரிந்தவரை, நேற்று எண்ணி, அலமாரியில் பூட்டி வைத்த பணத்தில், பத்து ரூபாயைக் காணோமாம்.

"பூ!" யாரேனும் உதட்டைப் பிதுக்கறேளா?

அப்போ, பவுன் பதின்மூன்று ரூபாய்க்கு வித்தது. இப்போ விலை ரூ.2000-

அந்நாளைய பத்து ரூபாய் பாய்ந்த வேகத்தையும், வீச்சையும் இதைவிட ருசுப்படுத்த எனக்குத் தேவை யில்லை. மேலே போகிறேன்.

பெரியவர் புயல் வீசுகிறார். சாமான்கள் உருள்கின்றன. மகன்கள் மேல் தனித் தனியாகப் பாய்கின்றார்.

"இருங்க நைனா! பொறுங்க நைனா சாந்தமாவுங்க நைனா!" மூத்தவன் கெஞ்சுகிறான். "தயவு செய்து கேட்டுக்கங்க! நீங்க எண்ணி வெக்கறதுலே கணக்குப் பிரண்டு போயிருக்கலாமா? இல்லே, உங்கள் குறிப்பேடுலே கூட்டல் கழித்தல்லே-"

"என்னடா பேமானி, எனக்குக் கணக்கு சொல்லித் தரவா வரே!" நோட்டைத் தூக்கி அவன் முகத்தில் சுழற்றி அடித்தார். "ஒரு பத்து ரூபா நோட்டுடா!

நேத்திக்கு ரூவா சில்லரையோடு பிஸ்கட் டப்பியிலே வெச்சிருக்கேன், இன்னிக் காலையிலே காணம்னா, எனக்குப் பாடம் படிக்க வரானே! அந்த நோட்டிலே, ராஜா தலையிலே மச்சம் மாதிரி ஏதோ துரு இருந்தது. சுரண்டிப் பார்த்தேன் வரல்லே. சரி, நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்னடா, எனக்குக் காதா குத்தறே! கடுக்கன் தொங்குது பார்த்தியா?"

இன்னும் என்னென்னவோ புதுசு புதுசா அர்த்தம் புரியாத வார்த்தைகள். இப்போ புரிகிறது. ஆனால் சொல்வதற்கில்லை.

விசாரணை, வீட்டுப் பெண்டிரையும், பிள்ளைகளையும், கூட்டாயும், தனித் தனியாகவும், உள்ளே கூப்பிட்டும் பட்டறையிலுமாக நடக்கிறது.

"நேத்திக்கு மறதியா அலமாரிக் கதவுலேயே சாவி நின்னுபோச்சு. இருந்தால் என்ன? இது குடும்பமா, குடித்தனமா? இதென்னடா வீடு! எத்தினி நாளா, இந்த சமயத்துக்கு எவன்டா காத்திருந்தான்? என்னால் ஜெரிக்கவே முடியல்லியே!"

இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்குமாக அலைகிறார்; திகைத்து நிற்கிறார். கண்களில் காங்கை அடிக்கிறது. மனிதன் மாறிவிட்டான்.

பெருமாளுக்குப் பூஜை நடக்கவில்லை சாமி வாயில் மண். ஏன், வீட்டில் எல்லார் வாயிலுமே அதுதான். அடுப்பு ஒழுங்காகப் புதைந்ததோ? அன்றைய வயிறு அலும்பலுக்குப் பணம் கேட்க யாருக்குத் தைரியம் இருக்கு?

மத யானை, நெருங்கவே பயமாயிருக்கே! குளிக்கக் கூட இல்லை.

இத்தனை நாழிக்கு இட்லிக்கடை நடந்துகொண்டிருக்கும். சட்டினி, சாம்பார், சர்க்கரையுடன் குழந்தைகள் கண்டபடி வாரியிறைத்துக் கொண்டு.

 

இருக்கிற ஒன்று அரை அரிசியைத் திரட்டிப் பொங்கி, நீராகாரத்தைக் கலக்கி- அது ஆண்களுக்கு ஆச்சு. பெண்கள்?

பாட்டி அவரிடம் இரு கைகளிலும் பயபக்தியுடன் ஏந்திக் கொணர்ந்த தம்ளரை அப்படியே தட்டி வீசி அடித்தார்.

பட்டறையில்தான் என்ன வேலை நடக்கும்? பேசவே அஞ்சினோம்.

மத்தியானச் சாப்பாட்டுக்கு நான் போய்த் திரும்பி வந்தபோது, அவர் விமானத்துக்கெதிரே, கண்ணை மூடிய வண்ணம், நிமிர்ந்த முதுகுடன் அசைவற்று உட்கார்ந்திருந்தார்.

மணி ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு- அப்படியே தூங்கிப்போயிட்டாரா? தூங்க முடியுமோ?

ஐந்தரை, ஆறு மணி வாக்கில், கலைந்தார். ஏதோ முடிவுக்கு வந்தாற் போல் முகத்தில் ஒரு தெளிவு.

பிள்ளைகளை விளித்தார். எதிரே வந்து நின்றனர்.

"துட்டை நீங்க எடுக்கல்லே இல்லியா?"

மூவரும் சேர்ந்தாற்போல் தலையை ஆட்டினர்.

"சரி, பெருமாளுக்குக் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்து அணையுங்க."

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மூவருக்கும் முகம் ஒரே மாதிரியாக வெளிறி விட்டது.

"நான் செய்யற மாதிரியே செய்யணும். ருக்மிணி, குத்து விளக்கை ஏத்து."

விளக்கை ஏற்றுகையில், கிழவிக்குக் கை நடுங்கிற்று. சுடர் குதித்தெழுந்தது. நாங்கள் பையன்கள் பார்த்துக் கொண்டு நின்றோம்.

பெரியவர், கற்பூர டப்பாவிலிருந்து கணிசமான ஒரு கட்டியெடுத்து, பெருமாளுக்கு எதிரே வைத்து ஏற்றினார்.

"அலமாரியிலிருந்து சத்தியமா, நான் ரூபாய் எடுக்கல்லே!" என்று உரக்கக் கத்திக் கையைப் பட்டென்று தட்டினார். கற்பூரம் அவிந்து விக்ரஹம் பொட்டென விழுந்தது. எடுத்து நிமிர்த்தினார்.

"உம், பாண்டுரங்கா- ஆகட்டும்!"

பட்டெனத் தட்டி, பெருமாள் குப்புறக் கவிழ்ந்ததும், எனக்குப் பயத்தில் அரை நிஜார் நனைந்துவிட்டது.

"விஜய ரங்கா! அடுத்தது," பட் பகீர்-

"ரங்கநாதா!"

முடிந்தது.

பெரியவர், அங்கேயே இழைப்புளி பெஞ்சில், இடுப்பு வேட்டியை முகம்வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு காலை நீட்டி விட்டார்.

"போங்கடா போங்க. இங்கே என்ன வேடிக்கை பார்த்துகிட்டு! இன்னிக்கு இனிமேல் வேலை கிடையாது."

அன்றிரவு படுக்கும்வரை, ராத்திரி, வீட்டில் எனக்கு இதே பேச்சுத்தான். அம்மா எனக்கு விபூதி இட்டாள்.

மறுநாள் காலை, பட்டறைக்குக் கிளம்ப, சொக்காயைத் தலைமேல் மாட்டிக்கொள்கையில் ஜேபியிலிருந்து ஏதோ பறந்து விழுந்தது. அதைப் பார்த்ததும் எனக்குப் பயமாப்போச்சு,

"அண்ணா! அண்ணா!" அலறினேன். அண்ணா வந்தார். ஒரு நொடியில் புரிந்துகொண்டுவிட்டார். என் கையைப் பிடித்துக் கொண்டார்.

"பயப்படாதே. நானும் வரேன்."

பெரியவர் தனியாக இருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்று எதிரே அமரச் சொன்னார்.

அண்ணா அவரிடம் கையை நீட்டினார்.

நோட்டைப் பிரித்து, இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு, வெகுநேரம் அதையே வெறித்துக் கொண்டிருந்தார். பிறகு- "நான் குழந்தையைச் சந்தேகிக்கிறேன்னு நினைக்கிறீங்களா?"

"நாயக்கர்வாள், இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? நோட்டு கெட்டுப்போனது. உங்கள் குடும்பச் சொந்த விஷயம். அது அகப்பட்டது என் பையன் சொக்காய்ப் பையில். அவரவர் மனசு அவரவருடையது. உள்ளே புகுந்தா பார்க்க முடியும்? இந்த சந்தேகம் இருக்கே, இது ராமாயண காலத்திலிருந்தே வேலை செய்கிறது."

மறுபடியும் மெளனம்.

அவர் விழிகளிலிருந்து ரெண்டு பெரிய துளிகள் புறப்பட்டு வழிந்து, மோவாயில் உதிர்ந்தன.

"சாமி, எடுத்ததோடு அல்லாமல் ஒரு குழந்தை பழி ஆவட்டும்னு அதன் மேலே சுமக்கற அளவுக்கு இந்த வீட்டுலே கலி தனியா முத்திப்போச்சு, நஷ்டம் எனக்குப் பெரிசு இல்லே. துரோகம்தான் தாங்க முடியல்லே. சரி, போய் வாங்க."

அன்று நான் பட்டறைக்குப் போகல்லே. அன்றிலிருந்தே போகல்லே.

அன்று மாலை, எதிர்வீட்டு வாசலில் ஒரு ஜட்கா வந்து நின்றது. பெரியவரும் பாட்டியும் ஏறிக்கொண்டனர். வண்டி கொள்ளவில்லை.

 

போய்விட்டார்கள்.

திரும்பி வரவேயில்லை.

சிந்தா நதியில் ஒர் அலையெழுச்சி.

 

23. வானவில்

 

இன்னும் அறியோமாம் ஆதியும், மூலமும், உயிர் பிறந்தது எப்படி? ஆனால் அதன் ஓயாத இயக்கத்தில் ஆதி மூலமே அதன் நிதரிசனமாக உதிர்ந்த சிதர்கள். உரு, பூதங்கள், பேதங்கள். உருப்பேதங்களின் உறமுறைகள் ஆக்கம், அழிவு, காலம்.....

உறமுறையின் ஒரு முறை தலைமுறையென உயிர் சக்தியின் ஏதோ வியாபகத்தின் எண்ணற்ற உருக்களில், ஒவ்வொரு உருவும் அது படும் கடையலில், அதன் ஈடுபாடும், மாறுபாடும், பாகுபாடும், இடம், ஏவல், காலம் கொண்டு தனிக்கதி, தனித்தனிக் கதி ஆன பின்.

இத்தனைக்கும் முன்னணி, பின்னணி இயக்க சக்தியின் நித்தியத்தை அதன் பெயர் சத்தியம் என்று அழைத்து, உருவின் தலைமுறை சிந்திக்க மனமெனும் கருவி உயிரின் இத்தனை பெரிய வியாபாகத்தைத் தன்னுள் அடக்கும் அதன் வல்லமைதான் என்ன!

மனமெனும் தேன் கூடு

தேன் கூட்டின் எண்ணற்ற வளைகள்

வளைகளின் கணிக்க ஒனா ஆழங்கள் இருள்கள்

மனமெனும் அரங்கம், அப்பவே

அந்தரங்கம்

இந்த வியப்பைச் சந்ததி தனக்குள் பங்கிட்டுக்கொள்ள, அதனாலேயே வியப்பு மேலும் மேலும் மேலிட எப்போது, தோன்றிற்று பாஷையெனும் தனி ப்ரகாசம். அதைச் சத்தத்திக்குச் சாசுவதமாக்க எழுத்து ?

சிந்தனையும் அதன் வெளியீடு பாஷையும் கூடியபின், கேள்வி இன்றியமையாத விளைவு.

எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்? உயிரே முதலில் நானே ஏன்?

கேள்வி இல்லாமல் முடியாது. வாழ்க்கை ஒடிக் கொண்டிருப்பதே- இல்லை- வாழ்க்கையே கேள்வியின் பின்னல் கோலம்தான்.

 

கேள்வி உயிரின் சிறப்பு. துடிப்புக்குப் பொருள் காண முயல்வது, கேள்வியெனும் தூண்டலில் மாட்டிக் கொண்டு அந்த துடிப்பின் வேதனையிலிருந்து விடுபட வழி தேடுவது சிந்தனையின் இயல்பு. இந்த வழிக்குப் பிடித்த வெளிச்சம். துணைதான் பாஷை,

கதையென்றும், கவிதை யென்றும், காவியமென்றும், தியானம், ஞானம், விஞ்ஞானம், கலையென்றும் அதன் பெயர்களில் விதங்கள் வழிகள் பல பல. கேள்வி தேடல் தவம் தவத்தின் முடிவில் பிறவியின் வயது பூரா வித விதமான வழிகளில் வயதில் முடிவில் இதோ கண் பஞ்சடைப்பில் நினைவு இற்றுப் போமுன் பிறவியின் கடைசித் தரிசனம்.

"நீ முடிந்தாய். நான் இருக்கிறேன்!" கேள்வி பதில் சொல்கிறது.

இத்தனை வியாபகம், விவரம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய உயிரின் இயக்கத்துக்குக் காரணமும் அர்த்தமும் தேடுவதில் ஆயுசையே அர்ப்பணித்துக் கொண்டபின், கடைசியில் கண்ட தெளிவு: இந்த இயக்கத்துக்கு அர்த்தமேயில்லை. ஆகவே கேள்வியின் பயனில்லை, கேள்விக்குப் பதிலும் இல்லை என ஏற்பதன் இந்த வியர்த்தத்தைக் காட்டிலும் பெரும் துக்கம் உண்டெனில் எனக்குக் காட்டு.

உடனேயே சொல்கிறேன். 'ஆனால்'- ! இது பாஷை தந்த அற்புதச் சொல். அதுவே மறுப்பு, அதுவே பதில், அதுவே அமைதி, அதுவே நம்பிக்கை. நாளையெனும் வானவில்லைச் சுட்டிக் காட்டும் ஒளிக்கதிர்.

"ஆனால்" என்பதே தனி மந்திரம். மாத்திரை. மாத்திரை நேரத்துக்குத் தனி உலகம்.

வாசுதேவன் சிறைப் பூட்டைக் கழற்றிய சக்தி.

அவர் தன் தலை மேல் கூடையுடன் கோகுலம் செல்ல யமுனா நதி நடுவே பிரிந்த பாதை.

இல்லை, உண்டு எனும் இரு சமுத்திரங்களையும் பிரிக்கும் வரப்பு.

ஆகவே, ஆனால் உயிருக்கே அர்த்தமில்லாததால், தேடலில் அர்த்தமில்லை என்று பதில் கிடைத்தால். குடி ஒன்றும் மூழ்கிப் போய்விடவில்லை. *இதுவும் தெளிவுதான்; பொருள் இல்லை எனத் தெரிந்தபோது இல்லாத பொருளைத் தேடாமல் இருக்கப் போகிறோமா? அதற்கு இன்றுவரை நீடித்து வரும் இவ்வுலகமே இன்று என்ன, இனிமேலும் எக்காலமும்..

சிறகுடன் பிறந்துவிட்டு, அதை அடிக்காமலேயே உயரப் பறக்காமலோ, ககனத்தில் நீந்தாமலோ இருக்க முடியாது.

 

உயர உயர இன்னும் உயர என்னால் எட்ட முடிந்த உயரத்தினின்று என்னைக் சுற்றியும், கீழும் பார்க்கின்றேனே, இந்தக் காட்சி ஒன்றிற்கே பிறவி தகும்.

காலம் பொய், காயம் பொய், ஆகையால் நாளையும் பொய், ஆனால் வானவில்லின் வர்ணங்களை நினைவினின்று அழிக்க முடியவில்லையே! அதுவும் பொய்யானாலும், மெய் போலும்மே மெய் போலும்மே.

இதுவே பதவி, இதுவே சித்தி,

சிந்தனா சக்தியை ஆய ஆய, அதன் எல்லைகள் அசாத்தியம்.

என் சொல்லின் உருவேற்றத்தால்தான் என் சக்தி.

உருவேற ஏற, நான் உயர உயர...

நான் மண்டல ஜித்

மேகநாதன்.

அதோ, இல்லை, இதோ மேகங்களின் நடுவே கிடக்கும் என் வானவில்லைக் கிட்டத் தரிசிக்கிறேன்.

என் ஆச்சரியம், என் பிறவியை வாட்டிய கேள்வியே தான் இப்படி வானவில்லாய்க் கிடக்கிறதோ?

உரு ஒருபோலவே தோன்றுகிறது! என் சொல் தந்த வில் அன்றோ! அதன்மேல் காதல், தொண்டை அடைக் கிறது. -

காமம் வெறி ஏறுகிறது. சொல்லுங்கள், வார்த்தைகளின் நகாசு, கபடுத் திரையை விலக்கிய பின், உண்மையில் காமத்துக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்? இந்த வில்லும் பெண்ணின் உடல் வளைவுகளை ஒத்திருக்கிறது. ஆசையுடன் வருகிறேன். அணைத்துக்கொள்கிறேன்.

மேரா அவுரத்.

வளைக்கிறேன். ஒலிகள் உதிர்கின்றன. வில் நுனியில் சொல்லின் கண்டாமணி முழங்குகிறது.

சிவதனுஷ், விஷ்ணு வில், கோதண்டம், காண்டீபம் எல்லாமே இதற்குப் பின்தான்.

இங்கு சொன்ன தெல்லாம் உடல் உறவில் ஜன விருத்தி பற்றி அல்ல.

இதுவரை படித்ததெல்லாம் இங்கு காணும் இந்த வரிகள் கூட அல்ல.

வரிகளினிடையே படித்தால்-

உன் வானவில்லின் கண்டா மணியோசை உனக்குக் கேட்கவில்லை?

சிந்தா நதி மேல் வானவில்.

 

24. ப்ரளயம்

 

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு கடிதம்.

"ப்ரளயம் என்கிற உங்கள் கதையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் விளைவாய் என் வாழ்வைப் பெற்றேன்.

இந்தப் பக்கம் உங்களுக்கு வர நேர்ந்தால், உங்கள் செளகரியத்தில் என் வீட்டுக்கு வருகை தாருங்கள்."

விஷயம் இதுதான். தற்சமயம் கடிதம் என்னிடம் இல்லை. காப்பாற்றி வைப்பதில் எனக்குச் சிரத்தை போதாது; என் குற்றமே. ஆனால் நான் என்ன, சாக்ஷிக் கூண்டிலா நிற்கிறேன்?

கடிதத்தில் எழுதியிருந்தபடி, எனக்கு அந்தப் பக்கம் நேமம் இல்லை. நேமம் தனியாக வேண்டுமா என்ன? ஏற்படுத்திக்கொள்ள முடியாதா? கடிதத்தை எழுதியிருந்த பூடகமே நேமம் ஆகாதா?

ஆனால் கடிதம் கிடைத்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர்தான், அதன் அழைப்புக்கிணங்கச் சாத்தியமாயிற்று. சமயம் அப்படித்தான் நேரிடுகிறது.

பஸ்ஸிலிருந்து மெயின் ரோடில் இறங்கியபோது, முதிர்ந்த பிற்பகல்.

- இந்த இடத்தில் என் கதையைப் படித்திராதவர்களுக்கு- எழுதி மூன்று தலைமுறை காலத்துக்கு மேலாகிறது. கதையின் சுருக்கத்தையேனும் தெரியப்படுத்தும் தேவை ஏற்படுகிறது.

என் கதாநாயகன் வசதியான குடும்பத்தில் முதல் குழந்தையாக உலகத்துக்குக் கண் திறக்கையிலேயே வலது கை, தோளிலிருந்து விரல் நுனிவரை சூம்பிப் பிறக்கிறான். அந்த அதிர்ச்சியிலேயே அவன் தாய், பிரசவத்தை ஒட்டி இறந்துவிடுகிறாள். தகப்பனாரும் அவளைத் தொடர்ந்த பின்னர், பையன் அங்கும் இங்குமாக உறவினரிடம் வளர்ந்து பெரியவன் ஆனதும் சொத்துக்கும் சுயேச்சைக்கும் தனி ராஜாவாகிறான்.

ஆனால் அவன் மணம் செய்துகொள்ளவில்லை. காரணம்- ஊனத்தால் தாழ்வு மனப்பான்மையோ அல்லது ஆத்ம கர்வமோ?

அவன் முனைந்திருந்தால் மணம் புரிந்திருக்கக்கூடிய பெண்ணையும் அவள் பெற்றோர் தங்கள் அந்தஸ்துக்குத் தக்கபடி வேறிடத்தில் கொடுத்துவிட்ட பின், பையனுக்கு உத்யோக ரீதியில் வெளியூர் மாற்றத்தில் தம்பதிகள் ஊரைவிட்டே போய்விட்டனர்.

அந்தப் பையனும் அவனுக்குப் பழக்கமானவன்தான். அவ்வப்போது அவனிடமிருந்து கடிதம் வரும்- சினேக பாவத்தில், உத்யோகப் பொறுப்பின் கடினங்களையும், கடுமைகளையும், வரவரச் சமாளிக்கக் கஷ்டமாயிருக்கும் பொருளாதார நெருக்கடி பற்றியும்...

அவன் தன்னைத் தப்பாக நினைக்காத வகையில் இவனும், பணமும் வகையுமாக உதவிகள் அனுப்புவான்.

கதாநாயகன் ஒரிரவு கனவு காண்கிறான். அவளும் அவனும் ஒரு வாய்க்காலில், ஒரு குறுகிய ஒடத்தில் மிதந்து செல்கின்றனர். கனவில், கை ஊனம் இல்லை. திடகாத்திரனாகவே இருக்கிறான். அவள்மேல் கவிகிறான்.

புணர்ச்சியின் கடைசிக் கட்டத்தில், ஒடத்தில் அடித்தட்டு திடீரென கழன்று அவள் அப்படியே தண்ணிரில் மூழ்கிப் போய்விடுகிறாள்.

கனவு கலைந்துவிடுகிறது.

மூன்று மாதங்கள் கழித்து, வழக்கமாக வரும் கடிதப் போக்கில் இரண்டு வரி: அவள் மூன்று மாதமாக ஸ்நானம் பண்ணவில்லை.

இவன் நினைத்துக் கொள்கிறான். அவள் கண்டிருக்கும் கரு, அவன் கனவில் நட்ட வித்தென. அதில் ஏதோ ஒரு மன நிறைவு. ஆனால், முறைப்படி, முதல் பிரசவத்துக்குப் பிறந்த வீட்டுக்கு வந்திருந்த இடத்தில், ஒரு நாள் கிணற்றடியில் சறுக்கி விழுந்து, இசைகேடாக மண்டையில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். குழந்தையும் அவளுடன்.

எந்தக் கதைச் சுருக்கமும் அதிருப்தியைத்தான் கொடுக்கும். முழு உருவில் ஒரளவேனும் நுகரக்கூடிய பொருள் நயம், சொல் நயம், நடை நயம், வரிகளிடையே கேட்கும் மோன சப்தங்கள். சப்தங்களின் அதிர்வுகள் உணரக்கூடிய சிருஷ்டி வேதனை, எழுதத் துண்டிய மனித அனுபாதபம்- இவையெல்லாம் கதைச் சுருக்கத்தில் தப்பி விடும் அவலக்ஷனமான பாவச் செயல், உயிருடன் இந்தக் கோழி உரிப்பு, எனக்கு என் மேலேயே பொங்குகிறது. ஆனால் வேறு வழி?

விசாரித்துக் கொண்டு இடம் சேர்ந்ததும்-

நவராத்ரி கொலுவில் வைத்திருப்பது போன்று, சின்னத் தோட்டத்தின் நடுவே (நாலைந்து வாழை மரங்கள், தென்னை, சில பூச்செடிகள்) அடக்கமாக ஒளிந்திருக்கும் சிறிய வீடு. மண் சுவர், ஒலைக்கூரை, வெளியே பார்க்கவே படுசுத்தம்.

உள்ளே கைத்தறிச் சத்தம் கேட்கிறது.

 

நான் உள்ளே நுழைந்ததுமே, என்னைப் பார்த்ததுமே நான் என்னை அறிவிக்காமலே ஆள் என்னைத் தெரிந்து கொண்டுவிட்டான். அதற்காகத் தறியிலிருந்து அவன் இறங்கவில்லை. அந்தத் தொழிலில் நேரம் எவ்வளவு விலை உயர்ந்தது என்று எனக்குத் தெரியும். முகத்தில் என்ன மலர்ச்சி!

"ஐயா! வாங்க, வாங்க. ரொம்ப நாளா எதிர்பார்த் திட்டிருக்கேன். அதுவும் சென்ற ஒரு வாரமா உங்க நினைப்பு அப்படி அழுத்தது. நீங்க வேணுமானா அவளைக் கேளுங்க- கமலீ! யாரு வந்திருக்காக பாரு!"

நடு முற்றம் தாண்டி, சமையலறையிலிருந்து அவள் வெளிப்பட்டாள், இடுப்பில் குழந்தையுடன். எப்படி, தாழல் போன்ற இந்த செக்கக் செவேல் மேனி?

நேரே என்னிடம் வந்து, இதற்காகவே இந்நாள் காத் திருந்தாற்போல், குழந்தையை என்னிடம் கொடுத்தாள். அதுவும் வேற்று முகம் பாராமல் வந்தது. என் மோவாயின் தாடி முள்ளைத் தடவிச் சிரித்தது. ஸ்வர்ண விக்ரஹம், வயதுக்கு என் தாய்க்குத் தோற்கமாட்டேன் என்கிற மாதிரி, உடனேயே அது என் மடியை நனைத்ததும், மூவரும் ஒருங்கே சிரித்துவிட்டோம். அவள்வரை புன்னகைதான். அவனுக்குப் பரம சந்தோஷம். "இது பிறந்ததில், உங்கள் எழுத்தின் பங்கை நான் இனிச் சொல்லத் தேவையில்லை. இதான் முத்திரை வெச்சுட்டதே! என்ன சொல்றே, கமலி?"

அவள் ஒன்றுமே சொல்லவில்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு போனாள்.

"குழந்தைக்கு என்ன பெயர் தெரியுங்களா? ஜனனி!"

"ஐயாவுக்கு ஒண்ணும் அவசரமில்லேங்களே? இரண்டு நாள் தங்கிப் போவலாமில்லே? உங்களுக்கு எந்த சந்தேகமும் வேணாம். ஏழு தலைமுறையாக எங்கள் குடும்பம் சைவம். எங்கள் ஜாதியில் சாப்பிடறவங்க இருக்காங்க"

கண்ணைச் சிமிட்டினான். "அதுவேறே சமாச்சாரம், இவள் பிராமணப் பெண். இவள் தாயார் எங்களோடு தான் இருக்காங்க சமையல் அவங்கதான். நான் உங்க பிள்ளை மாதிரி. எனக்கு வேறே சொல்லத் தெரியலே."

அவன் கண்கள் பனித்தனவோ?

மிக்க அன்புடன் என் பற்றி, சுற்றம் பற்றி, பொறுமையாக, விவரமாக விசாரித்தான். முதன் முதலாக என் எழுத்து அவன் கண்ணுக்குத் தற்செயலாகப் பட்டு, படிக்க நேர்ந்ததிலிருந்து இதுவரை அவனுக்கு அதிலிருந்த ஈடுபாடு, புத்தகங்கள் கிடைக்காமல், தேடியும் திருடியும் கூடப் படிக்கப்பட்ட சிரமங்களைத் தெரிவித்துக் கொண்டான். வரிசையாக ஒப்பித்தான். ஒரு குட்டிப் பிரவசனமே நடந்தது. பிறகு அவன் பரம்பரைத் தொழிலைப் பற்றி, அதன் நுணுக்கங்கள், அது வாங்கும் உழைப்பு...

 

வாய் பேசிக்கொண்டே, *வன் கைகளும், கால்களும் தம் தம் வேலையைச் செய்துகொண்டிருந்தன. இழை அறுத்த சமயத்தில் கவனம் பிசகாமல், விரல்கள் முடிச்சுப் போட்டன.

இடையே அவள் பொத்த இளநீர் ஒன்று கொணர்ந்து கொடுத்தாள்.

சற்று நேரத்துக்குப் பின் காப்பி. நான் அடையாளம் கண்டுகொள்கிற மாதிரிதான்.

காலையில் எண்ணெய் ஸ்நானமோ? அவள் திரும்புகையில், அடர்ந்து, பிசுபிசுவென உலர்ந்து, நுனி முடிச்சிட்ட கூந்தலில் பேரலைகள் பாய்ந்தன. தோணி ஏறி இறங்கலாம்.

பேச்சில் நேரம் போனதே தெரியவில்லை. விளக்கு வைக்கும் சமயத்துக்கு, தறியை வணங்கிவிட்டு, அந்தப் பள்ளத்திலிருந்து சுறுசுறுப்புடன் ஏறி மேடையினின்று குதித்து என் கைகளைப் பற்றி- தடுக்க நேரமில்லை. தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

வலது காலுக்குமுட்டுக் கொடுக்க பூட்.

"இளம்பிள்ளை வாதம். என்னை முழுசாகக் கண்டுட்டீங்க. என் கதையை நான் தனியாகச் சொல்லத் தேவையில்லை."

சிரித்தான். சோகமும் வெற்றியும் கலந்த சிரிப்பு.

சாப்பிட இன்னும் நேரம் இருந்தது. கோவிலுக்குப் போய் வருகிறேன் என்று நான் சொன்னது ஒரு சாக்கு. என் எண்ணங்களுடன் நான் தனியாக இருக்க விரும்புகிறேன் என்று புரிந்துகொள்ள அவனுக்குத் தெரியாதா என்ன!

பாடல் பெற்ற ஸ்தலம். புராதனமான கோவில்.

சில தூண்களில், சிற்பங்கள் முகம் தேய்ந்து போயிருந்தன. கோவில்களில் கூடத்தான், புகாத இடமில்லாத மின்சாரமும், டேப்ரிகார்டரும் ஏனோ இந்தக் கோவிலை மறந்துவிட்டன. எங்கும் அகல் விளக்குகளின் ஒளியும், நிழலாட்டமும் இழைந்த இருளில் நியாயமாக ஸன்னிதானத்துக்கு உரிய ஒரு மர்மஸ்தாயி (mystery) திகழ்ந்தது. அந்த மங்கலில், சிற்பங்களை வியந்துகொண்டே வந்தவன் த்வஜஸ்தம்படியில் திடீரென நின்று விளக்குப் பாவையில் மனம் நழுவி, அதை வெடுக்கென இழந்தும் போனேன்.

என்ன வேலைப்பாடு, என்ன அழகு! இவளுக்கும் கோவிலில் வயதாகியிருக்குமோ!

இவளை வெறுமனே விளக்கேந்தும் பணிப் பெண்ணாக என்னால் எண்ண முடியவில்லை. அவன் மேல் காதலாகி, ஆனால் அவன் கிடைக்கமாட்டாதவன் என உணர்ந்துகொண்டு அவனுக்கு ஏந்தும் சுடர்த் தழலுக்குத் தன்னை ஆகுதியாக- அகலை இரு கைகளிலும் இவள் ஏந்திய விதம் அதாவது, தன் அங்கங்கள், உடல், கால் கட்டை விரலினின்று மண்டை உச்சிவரை ஆவித் துடிப்பை ஒருங்கே, மனோவன்மையில், கைகளுக்குக் கொணர்ந்து, அகல் சுடரில் இறக்கி-

அந்தச் சமயத்தில் அந்த முக்கால் இருளிலிருந்து பாவை விளக்கின் வெளிச்சத்துக்கு, உருவக் கோடுகள் ஸ்திரமாகி அவள் வெளிப்பட்டாள். இப்போ அவளோடு குழந்தை இல்லை. நாங்கள் ஒருவரை யொருவர் எதிர் பாராத, கண நேர திக்பிரமையில் திகைத்து, எதிர் எதிர் நின்றோம்.

இப்பவும் அந்த முகத்தில் ஏதும் காண முடியவில்லை. முகமனோ, சிரிப்போ, சிடுப்போ, அல்ல. எந்த உணர்ச்சியின் மறைப்போ- அது மந்த முகமில்லை.

என்னைக் கடந்து சென்றாள்.

கடந்த அந்தத் துடி நேரப் பொழுதில், அந்த ஆழ் கடல் விழிகளினின்று ஒரு கொழுந்து புறப்பட்டு, என்னை மின்னுருவித் தன்னில் குளிப்பாட்டி மறைந்தது.

அவ்விதம் அவள் பார்வையில் தெரிந்தது நன்றியா?

அல்ல, வேறெதாயிருந்தால், அது எது?

நான் குளித்தது வெம்மையிலா? தண்மையிலா?

நாணயத்தின் மறுபக்கம் போல், அந்தப் பார்வையில் நான் படித்தது, நான் எழுதிய கதைக்கு மறு பக்கமா?

கேள்வி என் மேல் நூற்கும் பட்டு நூல் கூட்டுக்குள், பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சிந்தா நதிப் படுக்கையில் ஒரு சிப்பி முத்து.

 

25. "தப்பிச்சுக்கோ"

 

Vauhini pictures Ltd.

Presents

வந்தே மாதரம்

A
REDDY – RAMNOTH – SEKAR
Production

 

இளைய தலைமுறை சினிமா authorityகளே !

சினிமா பத்திரிகை பாராயணமும் T.V. தரிசனமும் தவறாத தாய்மார்களே !

வாஹினி பிக்சர்ஸ் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

வந்தேமாதரம் படமும் கேள்விப்பட்டிருக்கலாம்.

ஆனால் இந்த 'ரெட்டி- ராம்னாத்- சேகர்' கொடி உங்களுக்குத் தெரியாதெனத் திண்ணமாகக் கூறுவேன்.

'38, 39, 40' வாஹினியில் நான் வேலை பார்த்தேன். வந்தேமாதரம் தயாரிப்பு. வினியோக காலம், அடுத்து சுமங்கலி, அடுத்து தேவதா (இத்தனை காலத் தூர நினைவில் தேதிகள் குத்து மதிப்புத்தான். ஒரு வருடம் அப்படி, இப்படி).

தயாரிப்புக் காரியாலயம் கோபாலபுரத்தில், ஒரு வாடகை பங்களா.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோ- வாஹினி- இன்னும் எண்ணமாகக் கூடப் பிறப்பெடுக்கவில்லை.

கீழே முன் அறையில் ஆபீஸ். பெரிய பின்கட்டில் மெஸ்,

மாடியில் ஒத்திகை, இசையமைப்பு, இதை பழகல், நடிகர்கள் கோஷ்டியின் வம்பளப்பு, தர்க்கம், கத்தல், பூசல், பூனை இல்லாத சமயத்தில் எலிகளின் கும்மாளம்.

நான் டைப்பிஸ்ட். மாதச் சம்பளம், சுளை சுளையாக எண்ண இருபத்து ஐந்து ரூபாய்கள். ஸ்தாபனம் எனக்குக் கொடுப்பதைச் சம்பளமாக நினைத்தோ? அல்லது சன்மானமாகவோ? என்ன பேர் சொல்லி, என்ன கொடுத்தாலும் சரி, என் காலம் அப்போது அப்படி.

சினிமா நக்ஷத்ரங்களின் பதவி எப்பவுமே உயரத்தான் என்றாலும், இப்போப்போல் மண்டை கிறுகிறுக்கும் உயரத்தில் அவர்கள் ஆட்சி சென்று கொண்டிருக்கவில்லை. டைரக்டர் காமெராமானுக்குப் பயப்பட்டார்கள். டைரக்டரே முதலாளியாகவும் இருந்தால், அத்து கூடத்தான். இங்குலேவாதேவி'களில் இன்று போய் நாளை வா மழுப்பல்கள் எல்லாம் கிடையாது. ஏதோ மார்க்கெட் கூடிவிட்டதால் ஏற்படும் மண்டைக்கிறுக்கு, ப்ளாக்மெயிலிங், சண்டித்தனம் எல்லாம் இங்கு வேகாது. பணத்தின் பவர் இவர்களிடம் இருந்தது. அது தரும் பலமும் கூடவே இவர்களிடம் இருந்தது.

என் வரை நான் ஆபீஸ் டைப்பிஸ்ட். என் நேரம் எட்டு மணியிலிருந்து எட்டு மணிவரை. ஞாயிற்றுக்கிழமையும் வந்தாகணும்.

ஆனால் காலை வந்த உடனே டிபன், மத்தியம் சாப்பாடு, மாலை டிபன்- நோகிறதா? வெண்ணெயும் பாலும் வெள்ளமாய்ப் பாய்ந்தன. பதினைந்து

நாட்களுக்கு ஒரு முறை நேரே ஆந்திராவிலிருந்தே, டின் டின்னாக, மூட்டை மூட்டையாக, கூடை கூடையாக லாரியில் வந்து இறங்கின. அங்கிருந்தே இறக்குமதியான சமையல் கோஷ்டி.

 

இப்படி ஒரு தீனியில் எனக்குச் சதை பிடித்து, மேனி தனிச் சிவப்பிட்டுக் கொண்டு, அங்கேயே, நான் ப்ரபாத் ஸ்டார் சந்திரமோஹன் ஜாடையில் இருக்கிறேன் என்று சுற்றியிருந்த சில்லறைத் தேவதைகள் சொல்லத் தலைப் பட்டன. Original சினிமாவில் தலையெடுப்பது மிகமிகக் கஷ்டம். சினிமா நடிகன் இவனைப்போல், அவனைப் போல் என டூப்ளிகேட்டாக நினைத்துக்கொள்வதிலோ, பிறர் சொல்லக் கேட்பதிலோ என்ன மகிழ்ச்சியோ! நானும் மனிதன்தானே! வயதின் ஏதோ ஒரு கட்டத்தில் சின்னம்மை, சிரங்கு கண்டு போவது போல, சினிமா சபலம். என்றேனும் ஒருநாள், நானும். அதுவும் சினிமா கம்பெனியில் இருந்துகொண்டு-

ஆனால் சீக்கிரமே தெரிந்துகொண்டேன். சான்ஸ் இங்கே கிடைக்காது. என் இடம் டைப்ரைட்டர். எதிரே, ஆனால் ஒரு திருப்திபட்டுக் கொள்ளலாம். வந்தே மாதரம், சுமங்கலி, தேவதா படங்களின் Shooting Scriptகளை நான் டைப் அடித்தேன்.

Long Shot, medium shot, close up, fade in, fade out, montage, boom shot... trolley shot, trolley in trolley back, cut to, cut.

ஸ்ரீராம்னாத் எழுதித் தள்ளிய வேகத்துக்கு என் டைப்பிங் ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் ஏக்தம்மில் பத்து நாட்களில் முடித்தது, எனக்கு ஒண்ணரை மாதங்களாயிற்று.மாடியில் இசை அமைப்பு நடந்துகொண்டிருக்கிறது. வாசித்ததையே வாசித்துக் கொண்டு, சொன்னதையே சொல்லிக்கொண்டு, ஹார்மோனியத்தின் பற்களைக் குருட்டுத் தடவலில் நெருடிக்கொண்டு-- இடையிடையே வாத்தியக்காரர்களுக்குள் சண்டை, "உன் சுருதியை சரியாக் கூட்டுடா ! இன்னும் சுருதி கூட்டத் தெரியலே! என்னைக் குத்தம் சொல்ல வந்துட்டான். தானும் ஒரு வாத்தியம்னு வாசிக்க வந்துட்டான்!" ஒரு சமயம் இரு சமயம் கைகூடக் கலந்திருக்கிறது.

காஞ்சனமாலா அபூர்வமாக விஜயம்.

பெயரிலேயே காந்தமும் கவிதையும் சொரிந்தன.

நேரிலும் பிரமிக்கத் தக்க அழகு. புன்னகையில் காந்தம், இன்னும் அடிக்கடி வரமாட்டாளா? இவளுக்குக் கதாநாயகி பாத்திரம் ஆதலால் ஒத்திகை தேவையில்லையா?

ஒரு நாள் சாஹிப் வெளியிலிருந்து வந்து ஸாரங்கி வாசித்தார். இசைக் குழுவில் ஒரு ஆந்திரா 'ப்ரதர்' தபேலா வாசித்தான். சாஸ்த்ரீய சங்கீதம்.

ஒரு கட்டத்தில் இருவரும் வாத்தியங்களின் மேல் பட்டுத் துணி போட்டு வாசித்தனர்.

ஸாரங்கியோ எலும்பு உருக்கியோ!

இன்னும் நினைவை விட்டு அகலா அனுபவம்.

மேல் தடத்திலிருந்து காப்பிப் பையன்வரை இங்கு எல்லோரும் 'ப்ரதர்'களே! அவர்கள் போட்டுக் கொள்ளும் ப்ரதர்களின் Brotherhood of man இங்கேதான் தோன்றிற்றோ எனத் தோன்றும். ஆனால் அப்படி எண்ணினால், எண்ணுபவர் ஏமாந்தவர்.

ஐந்தடி முழுக்க இருப்பாரா? எனக்குச் சந்தேகம். காமேரா மேதையென அப்பவே படவுலகில் மிகப் பிரசித்தி, ஏற்கெனவே பெரிய விழிகள். கனத்த கூழாங்கற் கண்ணாடி பின் அசாதாரணப் பெரிதில் தோன்றின. சற்று உள் அடக்க மறுத்த மேல் பல் வரிசை. அரைக் கைச் சட்டை. தரையில் புரளப் புரளக் கட்டிய வேட்டி. மேஜை விளிம்பில் முழங்கால்களை முட்டுக் கொடுத்து, நாற்காலிக் கைகள்மேல் முழங்கைகளை ஊன்றி இரண்டு கை விரல் நுனிகளும் மோவாயடியில் தொட்டுக் கொண்டு மணிக் கணக்கில் உட்கார்ந்திருப்பார். அவரைச் சுற்றி 'ப்ரதர்'கள் அடிக்கும் அரட்டை, அரட்டையைச் சூழ்ந்த சிகரெட் புகை மண்டலம், நடுவே மோன அரணுள் மனிதன் பத்திரமாக இருந்தான். ஏதோ தவநிலையில் இருப்பதுபோல எனக்குத் தோன்றும். என்ன தவம்? ஆனால் அந்த முகமே ஒரு முகமூடி.

பிரம்மச்சாரி,

ஒருநாள் காலை. ஆபீஸில் நாங்கள் இருவர் மட்டுமே. Picture Discussion என்கிற பேரில் அரட்டைக் கச்சேரி கூட இன்னும் சற்றுநேரம் இருந்தது. தன்னைக் கலைத்துக் கொண்டு--என்னை நோக்கியா? ஆம், என்னையேதான்-நடையில் லேசான விந்தல். வந்து எதிரே நாற்காலியில் உட்கார்ந்தார். இதுவரை அவர் என்னோடு பேசியதில்லை. என்னைக் கண்ணெடுத்துப் பார்த்ததில்லை. எனக்கு எப்படி இருக்கும்?

"ஏம்பா....யில் கதை எழுதினது நீதானா? இல்லை, வேறே ராமாமிருதமா?" எனக்கு இன்னும் எப்படியிருக்கும்?

ராஜ சமுகம். உள்ளுக்கு இழுத்துவிட்ட நாக்கை வசப்படுத்த முயன்று, தோற்று, தலையை ஆட்டினேன்.

இடையே நொடியுக மோனம்.

"ஹும், நான் ஒண்னு சொல்றேன், கேட்பையா?"

தலையைப் பலமாக ஆட்டினேன். சினிமாவுக்குக் கதை எழுதச் சொல்லப் போகிறார் (ரா?).

"இந்த சகாவசத்தில் உன் Gift உன்னை விட்டுப் போய் விடுமுன், நீ இங்கே விட்டுத் தப்பிச்சுக்கோ. ஆமாம், இது ஒரு பொய் உலகம். இதை நம்பாதே. இது ஒரு உளை, தப்பிச்சுக்கோ."

வெளியே போர்டிகோவுக்குள் கார் நுழையும் சப்தம்.

எழுந்து என் கன்னத்தை லேசாகத் தட்டினார். "Yes, don't abuse your gift." புன்னகை ஒரு கணம் முகமூடியைத் தூக்கி, உள் அழகைக் காட்டிற்று. தன்னிடத்துக்குப் போய்விட்டார், நடையில் லேசான விந்தல்.

அவர் சொல்லிவிட்டால் ஆயிற்றா? அப்புறம் மூணு வருடங்களுக்குப் பின்தான், நான் உதற முடிந்தது.

அப்புறம் நான் அங்கு இருந்தவரை நாங்கள் பேசவில்லை.

சிந்தா நதியில் ஒரு மந்த கதி,

 

26. நாணயத்தின் இரு பக்கங்கள்

 

என் சித்தப்பா திருமணத்துக்கு என் பெரியப்பா (அம்மாவுக்கு அக்கா புருஷன்) காரைக்குடியிலிருந்து வந்தார். அங்கே அவர் போஸ்ட் மாஸ்டர். வாட்ட சாட்டமான கம்பீர புருஷன். கட்டுக் குடுமியில் ஆங்காங்கே நரையின் மின், லேசாக வளைந்து நுனி கூரிட்ட மூக்கின்கீழ் செதுக்கிய வாயும், மோவாயும். இந்த ஜாடை விசேஷங்களும், தூக்கத்திலும் மாறாத பஞ்சகச்சமும், அமைதியான குரலும் நினைவில் நிற்கின்றன.

ஜட்காவை விட்டு அவர் இறங்கியதும் அவர் மூட்டையை வாங்கிக் கொண்டவன் நான்தான். ஒரு சின்னப் பெட்டி, ஒரு பெரிய கூஜா. அவரை முன்னால் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் கலியாணத்துக்கு வருபவர் யாராயிருந்தால் என்ன?

"அம்மாப் பெண் பிள்ளையா நீ? அப்படியே உரிச்சு வெச்சிருக்கே? அவர் அம்மாப் பெண்ணைத்தான் தேடினார். நமஸ்காரங்கள், குசலங்கள் ஆனபின், "என்ன அத்திம்பேரே உடம்பு?" என்று அம்மா கேட்டதும், அவர் கண்களில் ஒரு மிரட்சி புகுந்தது.

"ஏன், அப்படி ஏதேனும் தெரியறதா?"

"இல்லை, வெளிச்சமாகத் தெரியல்லே. ஆனால் நீங்கள் சரியாயில்லை. என்ன உடம்பு!"

மழுப்பினார். "இந்தக் கலியாண சாக்கில், இட மாற்றமாயிருக்கலாம்னு வந்தேன். மூணு நாள்தான் லீவு. வேலையையும் பொறுப்பையும் நினைச்சுப் பார்த்தாலே, இப்பவே மறு வண்டிக்குத் திரும்பிடலாமான்னு இருக்கு."

", அதுதான் உங்களுக்கு உடம்பு."

 

மறுபடியும் கண்களில் அந்த ஏதோ பயம். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என் தோள்மேல் கைபோட்டுக் கொண்டார். "உன் பையனைக் கூட்டிக்கொண்டு பட்டணத்தைச் சுற்றிப் பார்க்கலாம்னு இருக்கேன்."

" முதலில் அவன் பட்டணத்தில் என்னத்தைக் கண்டான்? ஆனால் உங்களுக்குத் துணை வரட்டுமே! அதைவிட அவன் வெட்டி முறிக்கறது என்ன?"

அந்த மூன்று நாட்களும் அவருடன் சுற்றி, பட்டணம் பார்த்தது நான்தான். பெங்களுரிலிருந்து வந்த புதிதில், குழந்தைப் பிராயத்தில், செலவில்லாத இடங்களுக்குப் பெரியவர்கள் அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இந்த வருடம் S.S.L.C. தேறி, நான் பெரிய பையன்; almost இளைஞன். என் மறு விழிப்பில் இருந்தேன். உயிரோ, ஜடமோ எனை மதித்து என் பார்வைக்கு எதிர்ப் பார்வை தந்தன.

மிருகக் காட்சி சாலையில், "பையா, சித்தே உள்ளே வரமாட்டியா?" என்று சிங்கம் பார்வையில் என்னை அழைத்தது. "பார் இந்தப் பாவிகளை, என்னை இப்படிக் கூண்டில் அடைத்துப் போட்டிருக்கான்கள்!"

விலங்குகளின் கர்ஜனையில், கத்தலில், வீறலில் இனம் காணாத அடையாளம், அதன்மூலம் ஒரு உறவு, என் எலும்பில் உணர்ந்தேன்.

National Art Galleryஇல், ஆண்களும் பெண்களும் என்னைச் சுற்றி ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

"நீ இங்கே எங்கு வந்தாய்?"

மணிக்கூண்டில் முதன்முறையாக ஏறிப் பார்க்கிறேன். கீழே அலைகள் மத்துக் கடைகின்றன. 'அலேக்கா' என்னைத் துக்கிக் கடலில் எறிந்துவிடும் போல் காற்று. கப்பலுள் ஏறிப் பார்த்தது இப்பத்தான் முதல் தடவை; அதுவே கடைசித் தடவையும்.

என்னோடு வந்தாரே ஒழிய, என்னோடு பார்த்தாரா? சொல்ல முடியவில்லை. எப்படியும் என்னைப்போல பார்க்கவில்லை. அது நிச்சயம். நான் காணும் ஆச்சரியங்களுக்கு என் முக மாறுதல்களைப் பார்த்து, என் சந்தோஷத்தைத் தன் முறையில் அனுபவிப்பதில் அதிக சந்தோஷம் அடைந்தார் என்று பட்டது. அந்த முறை யென்ன? தெள்ளத் தெரியவில்லையே! உதட்டில் புன்னகை, கண்களில் ஏதோ மருட்சியின் பின்னணியில் லேசான புலர்ச்சி. அவருக்கு என்ன நோய் ஆனாலும், உடல் நோய் இல்லை.

மூன்றாம் நாளிரவு, அவரை ரயிலேற்றப் போனேன். வண்டி புறப்பட்ட சமயம்- நகர்ந்துவிட்டது. கூட நகர்ந்தேன், ஓடினேன். அவர் ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி என் கையில் எதையோ திணித்து, அன்புடன் என் தலையைத் தடவிக் கொடுத்துத் தன் தலையை ஆட்டினார். ('டாட்டா' இன்னும் இறக்குமதி ஆகவில்லை) ஓட முடியவில்லை. வேகம் அதிகரித்து, வண்டி வளைவில் மறைந்தும் போயிற்று.

 

ஒரு வெள்ளி ரூபாய். இந்நாள் ரூபாய் அல்ல. கனமாக வெள்ளிப் பங்கு நிறைய. முதன் முதலாக எனக்கே ஒரு முழு ஒரு ரூபாய்.

செலவழிக்க மனம் வரவில்லை. இரண்டு நாட்களுக்குக் கையில் வைத்துக்கொண்டு தடவிப் பார்த்து, அழகை அனுபவித்துவிட்டு, அம்மாவிடம் கொடுத்துவிட்டேன்.

இது நடந்து வருடங்கள் நாலு ஓடிவிட்டன. ஷார்ட் ஹாண்டு, டைப்பிங் பயின்றுகொண்டே வேலைக்கு அலைகிறேன். என் தகப்பனாருக்கு சொற்ப சம்பளத்தில், காஞ்சிபுரத்துக்கருகே ஒரு கிராமத்தில் பள்ளிக்கூட வாத்தியார் வேலையில் என் பெற்றோர்கள், என் பின் பிறப்புகளுடன் காலம் கடத்துகிறார்கள். இங்கே நான் சித்தப்பா வீட்டில் தஞ்சம்.

எனக்கு முக க்ஷவரம் ஆகிவிட்டது. மூஞ்சி முற்றிக் கொண்டே வருகிறது. பருக்கள். எனக்கே என்னை ஆகவில்லை.

உலகம் இவ்வளவு பெரிய சிறையா? கையில் காலணாக் காசு கிடையாது. ஆனால் ஓயாத பசி பழையதைப் பிழிந்து வைத்துக்கொண்டு சாப்பிடு என்றால், மூணு வேளையும் சோறுதானா? இது என்ன தண்டனை?

நடக்கிறேன். நடந்துகொண்டே யிருக்கிறேன். வேலைக்காக நடக்கிறேன். என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ள நடக்கிறேன். Oh god! இதற்காகவா என்னைப் படைத்தாய்? நியாயம் கேட்க அவனைத் தேடி நடக்கிறேன். வயிற்றைக் கிள்ளும் பசியை மறக்க நடக்கிறேன்.

எங்கு வந்திருக்கிறேன்? இது State Bank கட்டடம் அல்லவா? Reserve Bank அண்ணா இங்கேதான் இருக்கிறார் இல்லையோ? அந்நாள் Reserve Bank, அதே கட்டடத்தில்தான் இயங்கிற்று. படியேறிப் போனேன்.

அவர் பெயர் வெங்கடராம அய்யர். ஆனால் எல்லோருக்கும் அவர் 'அண்ணா' அவர்போல் பரோபகார சிந்தை இன்னும் பார்க்கப் போகிறேன். திருவல்லிக்கேணியில் அத்தை வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவர்களுக்கு அவர் உறவு.

ஆபீஸ் உடையில் சட்டென அடையாளம் தெரியவில்லை. தலைப்பாகை, கழுத்துவரை பொத்தான் கோட்டு, பஞ்சகச்சம். கணிசமான தொந்தி.

"என்னப்பா இவ்வளவு தூரம்?"

"வேலைக்கு இண்டர்வ்யூவுக்கு, ப்ராட்வே பக்கம் வந்தேன்." பொய், , பொய் சொல்ல எல்லாம் பழக்கிக் கொண்டாயிற்று. ஆனால் காசு கேட்கத்தான் இன்னும் தெரியவில்லை. ஆனால் கேட்காமல் தெரிந்துகொள்வது எப்படி?

 

"எனக்கு ஒரு ரூபாய் தர முடியுமா? ஷார்ட்ஹாண்டு நோட், பென்சில் வாங்கணும். ஒரு வாரத்தில் கொடுத்து விடுகிறேன்."

உடனே, ஜே.பியிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தார். "ஒரு வாரத்தில் கொடுத்து விடுவாயா?" புன்னகை புரிந்தார். "நிச்சயமா?"

திடுதிடுவெனப் படியிறங்கிப் போய், நேரே, ப்ராட்வேக்குப் பக்கத்து சந்தில் நியூகோமாஸ் ஒட்டலுள் நுழைந்து தனி மேஜை பார்த்து உட்கார்ந்தேன்.

"ஒரு ப்ளேட் கேஸரி, மைசூர் போண்டா சாம்பார், அப்புறம் ஒரு ரவா ஆனியன் முறுகல்- ஆர்டரைக் கொடுத்துவிட்டு நாற்காலியில் பின்னுக்குச் சாய்ந்ததும் அப்பா, மனதுக்கு என்ன அமைதி, என்ன இதம்!

பதினைந்து நாட்களுக்குப் பின்தான் நாங்கள் ஒருவருக்கொருவர் கண் பட்டோம். அவர் அத்தையோடு பேசிக் கொண்டிருந்தவர், நான் தலைமறைவாக முயல்வது கண்டு, நேரே என்னிடம் வந்து என் தோன் மேல் கை போட்டுக் கொண்டு, நாங்கள் இருவர் மட்டுமே தனித்த மூலையில், விரலைச் சுண்டிக் காட்டிப் புன்னகை புரிந்தார்.

"கொடுத்துடறேன். இன்னும் கிடைக்கல்லே."

"ஒரு வாரத்துலேயே சொன்னே! உன் படிப்புக்குத் தானே வாங்கினே! சித்தப்பாவிடம் கேட்டு வாங்கித் தந்துட வேண்டியதுதானே ! உன் சித்தப்பாவுக்குத் தெரியுமோ? No? I thought so."

கொஞ்ச நேரத் தயக்கம்.

"அப்போ நீ கேட்ட காரியத்துக்குச் செலவு ஆகல்லே. No? I Thought so."

மீண்டும் தயக்கம்.

'ஒண்னு சொல்றேன். கடனாக வாங்கினதை சொன்னபடி திருப்பிக் கொடுத்துடனும். அதுதான் கெளரவம், மானம். இல்லாட்டா, அப்புறம் புத்தி என்னென்னவோ மாதிரி போயிடும். நீ வளர்ற பையன் பாரு! வர வாரம் கொடுத்துடுறியா? கொடுத்துடு."

வர வாரமாவது: எத்தனையோ வாரங்கள். என்னைப் பார்க்கும் போதெல்லாம், புன்னகை புரிந்து, எனக்கு மட்டும் தெரிய விரலைச் சுண்டுவார். நான் அசடு வழிவேன். சித்தப்பாவிடம் எப்போ சொல்லி விடுவாரோ? பகீர் பகீர்-

அந்நாள் பையனை, இந்நாள் கண்களுடன் பார்க்கக் கூடாது. பெரியவர்களுக்கும், நியாயத்துக்கும் பயந்த நாள். அதுவும் குற்றம் செய்த நெஞ்சு.

ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் யோக்யதை எனக்கு வரும் வேளைக்கு, மாரடைப்பில் அவர் மண்ணை விட்டே மறைந்து போனார்.

 

நிச்சயமாகச் சொல்கிறேன். அவர் என்னைத் தூண்டில் விளையாடவில்லை. தன்னால் முடிந்தவரை என்னை மீட்கத்தான் முயன்றார் என்றே சொல்வேன்

ஒன்று புரிந்து கொண்டேன். ஒரே நாணயத்தில் சம்புவும், சைத்தானும் ஒன்றி வாழ்கிறார்கள் என்று.

சிந்தா நதியில் ஒரு நாணயம் கப்பல் ஏறுகிறது.

 

27. கயிறு

 

அன்று, வீட்டுக்குத் திரும்பும் தெரு முனையில், காலடியில் ஒரு கயிறு அகப்பட்டது. அந்த முதிர்ந்த அந்திக்கு, கையில் எடுத்ததுமே அது உயிர் பெற்றிருக்க முடியும்; மாறாதது என் அதிர்ஷ்டம், என் தைரியம் என இப்போது சொல்லிக் கொள்கிறேன்.

சணல் கயிரு. அரைச் சுண்டுவிரல் தடிமனுக்கு -- நல்ல முறுக்கேறி, ஒரு முழம்- சற்றுக் கூடுதலாக இருக்கலாம் வழ வழ--

கழுத்தை நெரிக்க ஒரு முழம் போதாது? கைப்பிடிக்கு இன்னும் சற்றுத் தேவைப்படுமோ?

யார் கழுத்தை? இப்படித் தோன்றுவதற்கு இன்றைய மனநிலை அப்படி, வேறு சமாதானம் என் சொல்வது?

இப்படி எண்ணு-- இப்படி எண்ணாதே-- ஓயாத சாதகத்தால், மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள். நானும் முடிந்தவரை பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஊஹூம்.

எண்ணமாகத் தோன்றும் விபரீதம் செயலாகாத வரை, ஜபமுள்ளவரை பயமில்லை. எண்ணத்துக்கும் செயலுக்கும் இடை இழை கண்ணாடி அடியிலும் X rayக்கும்கூடத் தென்படா அத்தனை ஸன்னம். கம்பி எண்ணும் கைதிகளுக்கும், வெளியே விடுதலையாகித் திரிபவர்க்கும் வேறுபாடும் இதேபாடுதான்.

"எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி, நெஞ்சத்தைப் புண்ணாக்கி....."

"எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுவதன்றி வேறேதும் அறியேன் பராபரமே."

அவ்வப்போது என்னை எச்சரிக்க, ரக்ஷாமந்திரமாக அழைப்பதுடன் சரி.

புண், புண், புண், மனம் சல்லடைக் கண்.

புழுங்கிப் புழுங்கி உள்வேகப் புழுக்கச் சால்.

மனதை வெற்றி கண்டேன் என்று நினைக்கும்போதே காலை வாரிவிடும் மனம்.

 

நான் எழுத்தை அப்யசிப்பவன். எண்ணாத எண்ணங்கள் என்னை ஊடுருவாமல் இருக்க முடியாது.

முறையான எண்ணங்களையே எண்ணும்படி, மனதை வாய்க்கால் படுத்துமளவுக்கு, உண்மையிலேயே மனதை ஆட்சி கொண்டவனும், அதன் சாக்கடைகளில் உழலாமல், அதன் பிலங்களினின்று வெளிப்பட முடியாது. மனத் துய்மையை அடைந்தவனே எண்ணாத, எண்ணத்தகாத எண்ணங்களை எண்ணியவன்.

மனம் வேறு, நான் எனும் பிரக்ஞை வேறு எனும் விவாதத்துக்கு என் பதில்: மனமெனும் திசைமானியிலாது, என் பிரக்ஞையை அடைவதெப்படி?

மனமெனும் சைத்தான், சம்பு, பழுதை, பாம்பு, மலம், மலர், நகரம், சொர்க்கம், மனமெனும் மதி, மதியே விதி.

எண்ணற்ற நாமங்கள், எல்லையற்ற உருவங்கள். மனதின் ஆகாயத்தில் அதன் நாமங்கள் நீந்தியபடி அதன் ஜபமாலை, ஒருசில சமயங்களில், இதுபோல் காலடியில் கயிறாக விழுந்து கிடக்கிறது

அட்லாண்டிக்கில் விழுந்த விமானம்- பத்து நாட்களாக யாவருக்கும் அது நினைப்புத்தான்.

இறந்தவர் போய்விட்டார்கள். நான் சமாதானம் சொல்லவில்லை. நெற்றிக்கண்ணே நிலாவென்று நினைக்கும்படி வெம்மையில் எரியும் அவரவர் விட்டுச் சென்றவர்களின் வயிற்று நெருப்பு அடங்க எந்நாள் ஆகுமோ? அப்பவும் அணையுமோ?

முதல் அதிர்ச்சி, முதல் பயங்கரம், முதல் தன்பயம், மனம் தன் சிதர்களை ஒருவாறு சுட்டிக் கொண்டதும் எழுவது.

இந்த அத்தனை உயிர்களும் எங்கெங்கோ தங்கள் தனித்தனி வாழ்வுகளை வாழ்ந்தும், இந்த விமானத்தில் தங்கள் ஒருமித்த முடிவுக்கு ஒன்று சேரும்படி, அவரவர் தனித்தனி விதிகள் திரித்துக்கொண்ட பின்னலில், ஒரு உறவு. நம் எண்ணத்தை மீறியதோர் சாக்ஷாத்கார உறவு தெரியவில்லை?

மதியே விதியாகும் மனதின் அகண்ட உறவு.

எண்ணி எண்ணி, நொந்து, நைந்து நைந்து, எல்லாவற்றையும் தன்னுள் உறிஞ்சிக் கொள்ளும் பஞ்சு மனம்.

மனமே, நெஞ்சுகிறேன்; ஒருகணம் துஞ்சாயோ?

மனம், புத்தி, சித்தம், உணர்வு, உள் உணர்வு, நெஞ்சு உரம், ப்ரக்ஞை, ஸ்திதப்ரக்ஞை- அத்தனையும் எல்லை யற்ற துரங்களினின்று ஆசை காட்டும் கிரஹங்கள். மண்டையைப் பிய்த்துக் கொள்கிறேன்.

 

பல வருடங்களுக்கு முன், மதுரை சர்வ கலாசாலையில், என் எழுத்து பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கு நடந்தது. அதன் எதிரொலிப்பாக, சின்னாள் பொறுத்து Madura காலேஜில் ப்ரொஃபெஸர்களுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடாயிற்று. மற்ற கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்கள் வந்திருந்தனர். மொத்தம் சுமார் 40 பேர்.

நான் எழுத்தைப் பயில்பவன்; வாழ்க்கையின் கீதத்தைப் பாடிக்கொண்டு, நடு நிலவில் தெரு வழியே நடந்து செல்கிறேன். வாசல் கதவுகள், ஜன்னல் கதவுகள் திறக்கின்றன. சில மூடுகின்றன. சிலர் திண்ணைக்கு வந்து நிற்கின்றனர். சிலர் அன்பில் என்னை வழியனுப்புவது போலும், ஒரு தூரம் வந்து அங்கு நின்று விடுகின்றனர். நான் கண்ட இன்பம், பாடிக்கொண்டே போகிறேன். நான் என் இயல்பில் உணர்ச்சி பூர்வமானவன். பாடுவது அன்றி வேறு அறியேன்.

ஆனால் இவர்கள் மிக்க மிக்கப் படித்தவர்கள்: இவர்கள் அறிவு ஜீவிகள். என் கீதத்துக்கு இலக்கணம் வகுப்பவர்கள். என் பார்வை உணர்ச்சி பூர்வமானது. அவர்களுடையது அறிவு பூர்வமானது. உணர்ச்சியும் அறிவும் இழைந்து ஏதோ தருணத்தில் ரஸவாதம் நிகழ்கையில்- அம்மா! உடல் சிலிர்க்கிறது,

கலந்துரையாடல் என்ற பெயரில் ஆரம்பித்த இந்தச் சந்திப்பு, வெகு சீக்கிரமே அதன் சம்பாஷணைத் தன்மை ஓய்ந்து, என் குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். ஆனால், ப்ரவசன முறையிலோ, ப்ரசங்க முறையிலோ இல்லை. என்னுள் இதழ் இதழாக விரிந்து ஏதேதோ விஷயங்கள். எனக்கு ஏற்கெனவே தெரிந்தவை, இப்போது ஒரு புதுமை பெற்றவை. தெரிந்தவை, ஆனால் தெரியாதவை. தெரியாதவை, ஆனால் தெரிந்தவை. தெரிந்தும் தெரியாதவை, தெரியாமலே தெரிந்தவை. ஒரு மறையாகி-- ஏதோ ஒரு முறையில் இவைகள் எனக்குள்ளிருந்தும் எனக்குப் புறம்பானவை, தாம் வெளிப்பட நான் காரணமானேன்.

போகப் போக நான் போதையில் திளைத்துக் கொண்டிருந்தேன். என்னிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் விஷய போதை, அது ஏறி வரும் பாஷை போதை, தரிசன போதை. என் வார்த்தைகளில் ஒரு அதிகாரம், அதன் போதை என் சபை என் மகுடியில் கண்டுண்டிருக்கும் போதை,

எனக்கு நேர் எதிராக அமர்ந்திருக்கும் பேராசிரியரை விளித்தேன்.

"Hello சைக்காலஜி சார்! நான் பேசுவதை இதுவரை கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே! உங்கள் மனோதத்துவ சாஸ்திரத்தில் எனக்கு என்ன Definition கொடுப்பீர்கள், அல்லது இப்பவே கொடுத்திருப்பீர்கள்!"

எழுந்து நின்றார்.

"நான் இங்கே வந்தபோது பத்து நிமிடங்களில் எழுந்து போய்விட வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் வந்தேன். எனக்கு முக்கியமான எங்கேஜ்மெண்ட். ஆனால் இப்போ ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. சைகலாஜி, Conscious, Sub-conscious ஒருவேளை sub subconscious levels- இவை தாண்டி ஆராய்ச்சி இன்னும் எட்டவில்லை. ஆனால் நீங்கள் எட்டும் ஆரோகணம், ஆழும் அவரோகண நிலைகள் எல்லாம் எங்கள் பாஷையில், ஆபத்ஜலங்கள். அங்கு புத்தி ஸ்வாதீனத்தையே இழந்து விடக்கூடும். ஆனால் நீங்கள் எப்படி இவ்வளவு சகஜமாக, உங்கள் பத்திரத்தை இழக்காமல், அதற்கு ஒரு டெக்னிக்கும் இல்லாமல் INTACT ஆக, நீந்திக் கொண்டிருக்கிறீர்கள் எனும் ஆச்சர்யத்தில், திகைப்பில் இருக்கிறேன்-" .

இனம் கண்டு கொண்டோர் எறியும் பூச்செண்டு, வாடா மணம்.

சிந்தா நதியில் ஒரு முத்துக் குளிப்பு.

 

28. ஸ்த்ரீ

 

My dark Gazelle of the nights!

என் இரவின் கரிய மானே!

இரவு கண்ட விரிசல் போலும், மின்னல் கிளை பிரிந்த உன் கொம்பு விலாவில் ஏறி, நான் வீழ்ந்த மூர்ச்சையினின்று மீண்டபோது, உந்தன் முன்னங் குளம்புகள் என் மார்மீது உணர்ந்தேன்.

உன் மூச்சின் நெருப்பு, குங்கிலியத்தின் குபீர் குபீரில் உன்னைச் சூழ்ந்த இருளை எரித்து, அந்த வெளிச்சத்தில் நீ விட்டுவிட்டு வெளிப்பட்டு, உடன் உடன் மறைகையில்,

என் கன்னத்தில் உன் மூக்கு ஈரத்தின் உராயலில்,

உன் நக்கலில்,

மீண்டும் நான் மூர்ச்சையில் மூழ்காமல்,

--நில் நில் நினைவே, மாறி மாறி நீ விழுவதும் எழுவதும்,

இழப்பதும் என் அவமானம்.

இச்சமயம் மானாகா வந்திருக்கிறாள், விடாதே விடாதே. உன் மார்மேல் குளம்புகளைச் சிக்கெனப் பிடி!-

குளம்புகள் மார்பினின்று இறங்கிவிட்டன. என் கைகள் இருளைத் துழாவுகின்றன.

விலாவை ஒரு கையால் பிடித்தபடி எழுந்து உட்காருகிறேன். அருவி என் கைமேல் வெம்மையில் கொட்டுகிறது.

ஆனால் உயிர் போகேன்.

உயிர் போயினும் நினைவு போகேன்.

குங்கிலியத்தின் குபீர் குபீர் ஜ்வாலை கம்கம் கமகம.

உன் மூச்சு விட்டு விட்டுக் காட்டும் வெளிச்சத்தில் தொடர்கிறேன்.

கருமுகில் காட்டுக்குள் நுழையுமுன் ஒரு முறை என்னைத் திரும்பிப் பார்க்கிறாய்- நெஞ்சு பகீர்.

பளப்பள கரும் திராக்ஷைப் பெரும் விழிகள் என்னைக் கவ்வ விழுங்கித் துப்பி

அடவியுள் மறைந்து போனாய்.

என் செல்வமே! என் உயிரே!

தொடர்கிறேன். கல்லில், முள்ளில் தட்டுத் தடுமாறி இடறி விழுகிறேன், எழுகிறேன், தொடர்கிறேன்.

இது கர்ப்ப இருள். ஆயினும், என் இளமையுள் உன் மூச்சு அனல் கக்கிய கலிக்கத்தில் புறத்தில் கண்டதைக் காட்டிலும் பரிமாணம் பிதுங்குகிறாய்.

சதைப் பிடிப்பான தொடைகள்.

நெஞ்சை அள்ளும் பிருஷ்டத்தின் மேல் வால் முளை, ஓயாத துடிப்பில் விளிக்கிறது.

என் அகத்தின் இருளே! என் உயிரின் பிரிவே! நான் எதிர் நோக்கும் என் மரணானந்தமே!

என்னை உன்னோடு அழைத்துச் செல்லாயோ!

--உஷ், எங்கே போகிறாய்? போவது போலும் பொய் காட்டுகிறாய் !

நீ எங்கேயும் போகவில்லை. எங்கேயும் போக முடியாது.

நானும் உனை அடைய இயலேன். அடைவதற்கில்லை.

என் உண்மையைக் கடைந்து, அதன் நேர்த்தியைச் சுவைக்கவே காத்திருக்கிறாய்.

காதலின் பந்தம், தன்மையே பரஸ்பரம் இதுதான்.

அவரவர் இதயக் கலசத்தைக் குடைந்து அதனுள் அமுதமே உன் உணவின் குறைந்த பட்சத் தரம். உன் உடல் புள்ளிகள் ஒவ்வொன்றும், நீ கொள்ளையாடும் கலசங்களினின்று தெறித்து, தெறித்த இடத்தில் ஊறிப் போன அமுதத் துளிகள்.

என் மரணமே! என் அமரமே!

 

மூச்சு, அசைவு, நினைப்பு, உணர்வு- இவை உயிர்ச் சக்தி உடலில் நிலவும் அடையாளங்களன்றி. இவை மட்டுமே உயிர்ச் சக்தி ஆகா. அது எந்த விதம் வருவது, உருவெடுப்பது, புறப்படுவது அதன் இஷ்டம், இந்நிலைகளின் கோர்வை- இவை என் வாழ்வின் ஜபமாயிருக்குமே அன்றி, தீர்வைக்கு அதற்குமே என்றுமே அப்பால் என்று கண்டும் இன்னும் சக்திக்குச் சலிப்பில்லை.

என் உயிர்ச் சக்தியே!

ஏன், மான்மேல் ஆசை கொள்ளலாகாதா? அது வக்கிரமா ?

உயிரினம் ஒன்று விடாது, அசலனத்திலிருந்து தாவரம் வரை, தாவரத்திலிருந்து உயர் மனிதம்வரை ஒவ்வொன்றிலும் ஸ்த்ரீ இருக்கிறாள் என்பது சக்தியின் ஸத்யம்.

உயிர்ச்சக்திக்குத் தோன்றிய உருவுக்கும், அது கிளைக்கும் அதிர்வுகளுக்கும் தடை கட்டச் சாத்தியமா? வடிவம் என்பதே ஒரு வடிகால் தானே!

ஆசை, பாசம், காமம், காதல், வேட்கை, பிரியம், ப்ரேமை, ராக், LOVE passion, கலை, தாபம், காவியம், கற்பனை, யுகம், யோகம், ஆக்கல், ஆகல், அழித்தல், அழிதல்- உன்னுள் வெகுண்டெழும் வேகத்தின் சாயல்கள், சாயங்கள், சாயைகள்; உன் மண்டையில் ஊறிக்கொண்டிருக்கும் மாணிக்கத்தின் பிம்பங்கள், இதயத்தில் புத்தியைக் கூர் தீட்டுகையில் உயிர்ச் சாணையிலிருந்து பறக்கும் பொறிகள் வடிவமே அந்தச்சாணை.

நட்ட கல்லைத் தொழுவாய், உயிர் குடிக்கும் பாம்புக்குப் புற்றில் பால் வார்ப்பாய், வடிவம் உன் இனம் தாண்டி இருக்கலாகாதா? இது மட்டும் வக்கிரமா? வக்கிரத்துக்குப் புத்தியின் இலக்கணத்தை உடைப்பில் எறி.

விண் விண் விண்- இதயத்தின் பொளியலே! என் உயிருக்குக் கண்ட புற்றே! புரிய பாந்தவி!

மாரீச! எழுந்திரு. அம்பு பட்டு நீ விழுந்த இடத்திலிருந்து உன் மருமான் உன்னை மீட்டானா? அப்படி விவரம் இருப்பின் அதை நான் அறியேன். உனை ஒன்று கேட்கணும். எனக்கும் மான்ரோக் கண்டு இருக்கிறது. ஆனால் என் ரோகம் ஸீதையின் மோகத்தைக் காட்டிலும் மகத்தானது. என் மான் மாரீசமற்றது. ஆகவே எனைப் பீடித்திருக்கும் ஏக்கத்தின் மேல் ஆணையாக, எழு என்றால், எழு, !

மாரீச, இது உனக்கும் எனக்கும் இடையேதான். இது ராமாயணத்தில் காண முடியாது-எட்டவும் கிட்டவுமாய் அவளுக்கு நீ ஆசை காட்டினபோது ஒரு சமயமேனும் அவள் உனைத் தொட நேர்ந்ததா? அவள் உன்னைத் தொட்டிருந்தால், நீ அவளுக்குக் கிட்டியிருந்தால்?

சிந்திக்காமல் இருக்க முடியவில்லை- ராமகாதையே திசை திரும்பியிருக்கும்.

 

அல்லவா?

குளம்போசை என்னுள் கேட்கிறது. உயிர் துள்ளுகிறது. Heart attack?

ஹிந்தோளம், மால்கோஷ், மால்கவுன்ஸ், சந்த்ர ஹான்ஸ், ஸாரமதி- என்று கட்டான்களைக் காட்டி உதறும் ஒரே கோலத்தைக் கேட்டுக் கேட்டுச் செவி பொளிந்து விட்டது. ஆனால் நீ ராக ரத்ன மாலிகா.

My immortal wound! என் ஜுரமே!

பிதற்றல், பேத்தல்-இத்தனையும் ஜன்னி, அப்படித்தானே !

ஜன்னியில்லாமல், காவியங்கள் உண்டாகியிருக்க முடியாது.

லலிதா ஸஹஸ்ர நாமம், ஸெளந்தர்யலகரி, சியாமளா தண்டகம், மேக சந்தேசம், அபிராமி அந்தாதி, பராபரக் கண்ணி, பத்ரகிரிப் புலம்பல்- அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!

தேவி! என் பாவி!

Mysticism- காதலின் மஹோன்னத தத்துவத்தில் காதற் பொருள்- அது மானாயிருந்தா-லென்ன, மனிதையாயிருந்தால் என்ன?

My dark Gazelle of the Night!

சிந்தா நதியில் தட்டிய நிழல்கள்.

 

29. யாகம்

 

அம்பத்தூரில் நான் குடித்தனமான புதுசு, அந்தப் பையன் எனக்கு அறிமுகமானான். என் பிள்ளையைப் பார்க்க வருவான். அம்பத்தூர் தொழிற்பேட்டை I.T.I.யில் படித்துக் கொண்டிருந்தான்.

நாக்கு துணிக்கூர் லேசாக மழுங்கினாற்போல் உச்சரிப்பில் லேசான கொச்சை, அங்கும் இங்குமாகத் தெளித்த தெலுங்கு வார்த்தைகள். "நேனு தெலுகு நாயுடு பாபு!" எனக்கு அவனை மிகவும் பிடித்தது. அவன் மேல் சிறகணைப்பைத் தூண்டிற்று. உத்யோகத்தினின்று ஒய்வு பெற்ற பின், சிறகு, நிழலோ அடக்கமோ தருமளவுக்கு நீளமும் அகலமுமாயிருக்க முடியாது. கேட்கப் போனால் ஜடாயு சிறகுகள்தாம். ஆயினும், மறைந்திருக்கும் தாய்மை உணர்வைத் தூண்டினான் என்றே சொல்ல வந்தேன்.

மரியாதை உள்ள பையன், எப்போது வந்தாலும் வாசலிலேயே என் பிள்ளையுடன் பேசிவிட்டு எந்நேரமானாலும் உள்ளே வந்து என்னைப் பார்க்காமல் போக மாட்டான். "ஒக்கஸாரி அம்மகாரும் மீரும் மன இன்டிக்கு ரா ஒத்ஸனு." அடிக்கடி அழைப்பான். "நுங்கு, இளநீர், மஞ்சி ஆவு பாலு சாப்பிடலாம். வீட்டிலே மாடு இருக்கு!" என்று ஆசை காட்டுவான். இன்னும் போகப் போகிறேன்.

" நாளுலோ கவனங்கா சதவே லேது. அதனாலே இப்புடு I.T.I." என்று விரக்தியோடு சொல்கையில் எனக்கு வயிற்றை என்னவோ பண்ணிற்று. "அப்பா க்ருஷி. நேனே ஒரே ஆண் பிள்ளை. நாலு சிஸ்டர் இருக்காங்க யாருக்கும் கலியாணம் ஆவல்லே. ஏமோ கொஞ்சம் பூஸ்திதி உன்னதி. ஆனால் அப்பாவால் நேரா விவசாயம் பண்ண முடியல்லே, ஏர் பிடிச்சு எத்தனையோ வர்சமாயிந்தி."

"ஏன், வயசாயிடுத்தா?"

"இல்லேங்க; T.B.. இந்த ஒரு வருஷமா படுத்த படுக்கையாயிட்டாரு இனி தேறமாட்டாரு, எல்லாருக்கும் தெரியும், எல்லாருக்கு முன்னாலே அவருக்குத் தெரியும். அவருக்கு முட்டைக்காக ரெண்டு கோழி வளர்க்கிறோம். ஆனால் சத்து எங்கே பிறக்குது? மருந்து மாயம் எல்லாம் பார்த்தாச்சு. அம்மா கழுத்துலே மஞ்சக்கயிறுதான் பாக்கி.

"தாம்பரம் ஸானடோரியமுலோ இருக்கலாம். ஆனால் அவரு இஷ்டப்படல்லே, எங்களுக்கும் இஷ்டமில்லே. அவரைப் பிரிஞ்சு இருக்க முடியாது. இப்பவே அவரைப் பிரிஞ்சு ஒவ்வொரு நாளும் எத்தினி நேரம் இருக்கேன் தெரியுமா? Redhills பக்காலோ ஒக்க கிராமமுலோ வாஸ்மண்டி சொந்த இல்லு, உதயானிகி, 4.30 மணிக்கே எழுந்து சமையல் செய்தோ, பழையதோ-அம்மா எதைக் காட்டிக் கொடுக்குதோ! ரோட்டுக்கு ஒரு மைல் நடக்கணும், 6 மணிக்கு ஒரு ப்ரைவேட் பஸ். தவறிப் போச்சு, அடுத்தது 7.30 நிச்சயமில்லை. அன்னிக்கு I.T.I..க்கு வந்தாப்பிலேதான். அதேமாதிரிகா திரும்பற போதும் வீடு சேர ராத்திரி, 8, 8-30 ஆயிடும். அப்பாவை என்ன கவனிப்பேன் செப்பண்டி? உள்ளே நுழையறப்பவே தேவராஜ்! நாலு நாளா அதுகூட கேக்கல்லே!"

முகத்தைத் திரும்பிக் கொண்டான்.

"ராம்" அண்ணா என்னைக் கூப்பிடுகிறார். எத்தனை வருடங்கள் கழித்தும்! ஆனால் எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? நானும் திருதிருவென விழித்தேன்.

அவன் எங்கள் வீட்டுக்கு வரும் இடைவேளைகள் நீண்டு, ஒருநாள் வருவது நின்று போய்விட்டது.

ஒரு மாதம், இரண்டு, மூணு, ஆறு=

"என்னடா கண்ணா, உன் சினேகிதன் எங்கே?"

"எங்கானும் வேலை கிடைச்சிருக்கும். இல்லை, வேலைக்கு அலைந்துகொண்டிருப்பான். அவன் கவலை அவனுக்கு உங்களுக்கே முழு நேரத்தையும் கொடுக்க முடியுமா ?"

 

வாஸ்தவம்.

விளக்கு வைத்தாகி விட்டது. ஆயிரம் முணுமுணுப்புகளுடன் சீமெண்ணெய் விளக்கு. மூன்று நாட்களாக மின்சாரம் அம்பேல்.

வீட்டைச் சுற்றித் தண்ணிர்த் தகடு- மழை காலம் வந்தால், என் முதுகுக்குப் பின்னால், ஆனால் எனக்குக் காது கேட்கும்படி எனக்கொரு பெயர் "Captain of the sinking Ship" அல்லது தெப்போத்ஸவ மண்டகப்படிக்காரர்!"

"இருந்து இருந்து உங்கப்பா இடம் பார்த்து வாங்கினாளே!"

சிங்கத்துக்குப் பல் தேய்ந்துபோனால், நகம் இற்றுப் போனால், எலிகள் ஓடி விளையாடக் கேட்பானேன்!

ஆம், சிங்கம்தான், உத்தியோகம்போது.

எனக்குப் பார்வையில் தோஷம் அப்பத்தான் துவக்கம். நடந்தாலே தள்ளுகிறது. இவ்வளவு சுருக்க உடல் சரிய வேண்டாம்.

ஆண்களுக்கு உத்யோகம்தான், உடம்பை இழுத்துப் பிடித்து நிற்கவைக்கும் மாலிஸ். இல்லாட்டி-

"ஏமண்டி பாபு, குலாஸா உன்னாரா? மீரு க்ஷேம லாபம் எட்லா? எத்தனை நாள் ஆனால் என்ன? அந்தக் குரலை என்னால் எப்பவும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதுவும் இப்போ இருக்கும் என் மன நிலையில்......

"வா, வா, தேவராஜ். இப்படி உட்காரு. இதோ இங்கே-" கையை இழுத்துப் பிடித்து மேடையில் என் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டேன். மனதின் துளும்பலில் கொஞ்ச நாழி இருவரும் பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஏதோ ஒருவகையில் மாறியிருந்தான் நெற்றி விசாலித்து, ஆனால் மயிர் உதிர்ந்து அல்ல- முகம் தெளிவாகி, பார்வையில் ஒரு சிங்கம் படுத்திருந்தது. பாவனையில் பட்டறையில் காய்ச்சித் தட்டிய எஃகின் பிகு-

"அப்பா" என்று இழுத்தேன்.

"அப்பா காலமாயிட்டாரு."

அவனை அணைத்துக்கொண்டேன். எதிர்பார்த்ததுதான் என்றாலும். இதே வயதில்தான் நானும் என் தகப்பனாரை இழந்தேன். காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக, கோடை விடுமுறைக்குச் சென்னைக்கு வந்த இடத்தில் மாரடைப்பு. தலையணைமேல் தலை வெடுக்கென ஒரு பக்கமாகச் சாய்ந்தது இன்றும் கண்முன். ஐம்பது நிரம்பவில்லை. என் முதல் சம்பளத்தை அவரிடம் கொடுத்து நமஸ்கரிக்க இல்லையே- நான் சாகும்வரை எனக்குத் தீரா நெஞ்சக் குறை. என் தந்தை,

என் குரு.

"தேவராஜ்!" அதன் எதிரொலி "ராம்!" இது சமயம் இவனும் நானும் எங்கள் துக்கத்தில் ஒரே தோணி.

அப்பாவின் கடைசி நேரம் பற்றி விசாரித்தேன். முறைதானே!

"மூணு நாளா சீஷ்மம் கட்டி யிழுக்குது. அந்த மூணு நாளும் எனக்கு I.T.I.லே தேர்வுப் பரீக்ஷை. முதல் ரெண்டு நாள் சமாளிச்சுட்டேன். மூணா நாள் விடிகாலை கையைக் காட்டிக் கூப்பிட்டாரு. அந்தரு உன்னாரு."

"இதுகோ சூடு, ஒக்க கணடானி தாங்காது. ஆனால் இதை எனக்குக் கடைசி நேரம் கொடுக்கற வரமா நினைச்சுக்கோ. நீ அவசியங்கா பரீக்ஷை எழுதியாவணும் எனக்கா நின்னுட்டே, ஒரு வருஷம் அனாவசியங்கா வேஸ்ட் என்னை நாளைக்கு எடுத்தா ஆவாதா? உயிர் போனப்பறம் ஏமி உந்தி? எப்பவோ போ வேண்டியவன் தானே? ஆனால் நேனு செச்சிப் போயினானுனு நினைக்காதே. எழுதறியா இல்லையா, உன் பின்னாலே நின்னுட்டுப் பார்த்திருப்பேன். மன ராஜு, மன லால்!"

"இந்த உத்தரவை மீறி முடியுமா பாபு?"

என் முன் ஒரு தோற்றம் எழுகிறது. இவன் இங்கே பரீக்ஷை எழுதுகிறான். அங்கே அவர் கிடைக்கிறார். தலைப் பக்கம் ஊதுபத்தி, கால் பக்கம் சாம்பிராணிப் புகை. சுற்றும் குவிக்க, ஐஸ் கிடைத்திருக்குமா? கிராமம் ஆச்சே! மாலை சார்த்தியிருப்பார்களா?

பக்கெனச் சிரித்தான்.

"ஆனால் நான் பரீக்ஷை ஆவல்லே. ரெண்டு மார்க்கிலே போச்சு."

அவள் ஆளைப் பதப்படுத்தும் விதம், அவள் விளையாட்டின் விபரீதம், அவளுக்கே பிரீதி. மானுடத்தின் நேர்த்தியை எப்படியெல்லாம் ஒளித்து, அடுத்து வெளிப்படுத்துகிறாள்!

சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் விளக்கில், திரிப் புகைச்சல்.

 

30. பிள்ளைவாள்

 

அவரைப் பிள்ளைவாள் என்று அழைப்போம்.

பிள்ளைவாள் பிள்ளையார்வாள். நிற்கும் 'போஸில்' பிள்ளையார். தூக்க முடியாமல் தொந்தியைத் தூக்கிக் கொண்டு, ஒரு கையில் மோதகத்துடன் தும்பிக்கையத் தாங்கிக்கொண்டு, மத்தகத்தில் பட்டை பட்டையாக விபூதி, மகுடமில்லாது கட்டை குட்டையாக- பார்த்திருக்கிறீர்களா?

 

இந்த வர்ணனையில் தும்பிக்கையை எடுத்து விடுங்கள். பிள்ளைவாளைப் பார்க்கிறீர்கள். இன்னொரு வித்தியாசம் அவருடைய பருமனைப் பிள்ளைவாள் வெகு சுறுசுறுப்புடன் தாங்கினார். சின்ன வயசுதான். அவர் வயதில் எனக்கு ஒரு பிள்ளை இருக்கலாம்.

நான் ஊருக்குப் புதுசு. மாற்றலாகி வந்து ஒரு மாதமாகியிருக்கும். அவர் பெயரில் ஒரு கணக்கு, வங்கியின் புத்தகங்களில் சாதாரணமாக இயங்கிக்கொண்டிருந்தது.

அன்று சனிக்கிழமை- அவர் என்னைக் காண வந்தபோது. முதன்முதலாக அப்பத்தான் பார்க்கிறேன். சனிக்கிழமை அரை நாள்தான் வங்கி, மாடியில் வங்கி. கீழே மானேஜர் குடியிருக்க இடம்.

"சாமி வணக்கமுங்க. நான்தான், உங்க பிள்ளைங்க."

அற்புதமான மரியாதை, புன்னகை கிரண தூலமாய் விசிற்று. நெற்றியில் குழைத்திட்ட விபூதியடியில் புருவ மத்தியில் பலகை போல் சந்தனப்பொட்டு, அதன் கீழ்க் குங்குமம். களையான மனுஷன்.

"பூஜை புனஸ்காரம் உண்டுபோல இருக்கு!" என்றேன்.

"ஆமாங்க பிள்ளையார் பூஜை செய்யறேனுங்க! பூவைப் போட்டு அகவல் சொல்லி அப்புறந்தான் தொண்டையை நனைக்கிறது. அப்படியே வருடம் வருடமா நடக்குதுங்க. ஆண்டவன் புண்ணியத்திலே புளைப்பு குறைவில்லாம நடக்கி. இப்போ சாமி சகவாசமும் கிடைச்சிப்போச்சு. எனக்கு என்ன குறைங்க?"

பாங்க் வாசலில் அவர் வாகனம் நின்றது. அவர் அப்பா பள்ளியில் படிக்கும்போது வாங்கினதாக இருக்குமோ? நான் கேலி பண்ணவில்லை.

குசலப்ரச்னம், முன்னோட்டம் எல்லாம் ஒருவாறு தீர்ந்த பின்:

"சாமிகிட்ட பெரிய தயவுக்கு வந்திருக்கேன். ஒரு மில் விற்பனைக்கு வந்திருக்குமாம் போல. இதுவரை நான் சரக்கை இந்தக் கையிலே வாங்கி, அந்தக் கையாலே விக்கிறேன். சாமிக்குத் தெரியும். மில்லை வாங்க ஒத்தாசை பண்ணினால் நானே உற்பத்தி செய்து வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். தலைமுறைக்கும் சாமிக்குத் தீராக் கடன் குடும்பமே பட்டுடுவோம்."

இந்த ஆபீஸ் மூன்று வருடங்களாகத் தொடர்ந்து நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. வங்கிகள் இன்னும் தேசியமயமாகவில்லை. முதலாளிகள் லாபத்தின் பேரில் தான் குறியாக இருந்தனர்.

எனக்கு முன்னவரிடமிருந்து நான் சார்ஜ் வாங்கிக் கொண்டபோது:

 

"இதோ பாருங்க LSR! நீங்கள் நிர்வாக ஆபீசிலிருந்து இப்பத்தான் ஃபீல்டுக்கு வந்து இருக்கிறீர்கள். அங்கே நீங்கள் நடத்திய ஏட்டுச் சுரைக்காய் தர்பாருக்கும் யதார்த்தத்துக்கும் துளிகூடச் சம்பந்தம் கிடையாதுன்னு நீங்களே தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். மாதா மாதம் கடைசித் தேதிக்கு நம் சம்பளம் என்னிக்கும் கெட்டி. இருக்கிறவரை அதை வாங்கிண்டு ஊர் போய்ச் சேருங்கள். ஆகாச கங்கையைக் கொண்டு வர ஆசைப் படாதீர்கள். நான் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் தலையெழுத்து."

ஒப்புக்குத் தலையை ஆட்டினேனே தவிர, என்னுடைய அச்சே வேறு. பிறவி எடுத்ததற்கு மனிதன் தன் முத்திரை பொறித்துவிட்டுப் போகணும். அசட்டுத் துணிச்சலைத் தவிர். ஆனால் துணிவே துணை. நான் என்னை நிரூபிக்க வேண்டாமா? என் கைவரிசையைக் காட்டத் துருதுருத்தது.

வங்கி உதவியில், பிள்ளைவாள் வாங்கின விலைக்கு சொத்து லாட்டரியில் முதல் பரிசு அடித்த மாதிரிதான் இருந்தது. மூலக் கட்டடம் தவிர, அதில் ஐந்து கிடங்குகள், நாலு பெரும் கூடங்கள், ராக்ஷசக் கிணறு, மோட்டார், முப்பது தென்னை, தவிர நஞ்சை வயல், தேய்வு அதிகமாகிவிட்டாலும் தற்சமயத்திற்கு ஓட்டத்திலிருக்கும் யந்திரங்கள். எப்படியும் மாற்றியாகணும். வங்கி எதற்கு இருக்கிறது? நான் கிளை மானேஜராக எதற்கு இருக்கிறேன்?

பிள்ளைவாளுக்கு வெறும் அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. வாழ்வில் திருப்புமுனை கண்டுவிட்டார். ஆதிநாளில் சைக்கிளில் போய்த் தெருத் தெருவாய் விற்றுக் கொண்டிருந்தாராம்.

இந்தத் திருப்புமுனை இருக்கிறதே, அது, எப்படி, எப்போ, எங்கே நேர்கிறது- சிருஷ்டி சூட்சுமமே அதில்தான், அல்ல அதுவேதானோ?...

தேரைத் தாவலில் வளர்ந்துவிட்ட அவருடைய வியாபாரத்துக்கு ஏற்றபடி மேலும் வசதிகளை நானே சென்னைத் தலைமை ஆபீஸுக்குச் சென்று பெற்று வந்தேன்.

ப்ராஞ்சுக்கும் திருப்புமுனைதான். அந்த அரை வருடக் கணக்குக் கட்டின முடிவில், சென்ற மூன்று வருடத் தொடர்ந்த நஷ்டத்தை ஒழித்து லாபம், கொஞ்சமானாலும் கருப்பு மசி கண்டாச்சு. என் செலவில் அன்று staffக்கு பால் பாயச வினியோகம். தலைமை ஆபீஸிலிருந்து தொலைபேசி மூலம் எனக்கு முதுகில்ஷொட்டு.'

பிள்ளைவாள், பேரீச்சம் பழத்துக்குப் போடலாம் போன்ற சைக்கிளில்தான் இன்னும் சவாரி. சர்க்கஸில் யானைக் குட்டி விடுவதுபோல். பிஸினெஸைப் பொறுத்தவரை அவர் தலை தோள்களிடையே அழுந்தத்தான் திருகியிருந்தது. ஆனால் கொஞ்ச நாளாக அழுத்தம் ஒன்று புதிதாகச் சேர்ந்தது.

இந்தக் காசோலைப் புத்தகம் இருக்கிறதே, 25 தாள்களிலிருந்து 250 வரை, கணக்கின் விஸ்தாரத்துக்கு ஏற்றபடி, அதற்கே ஒரு கிறுகிறுப்பு உண்டு. அதற்கு நாளடைவில், ஒரு போக்கிரித்தனமும் சேர்ந்துவிடுகிறது. சும்மா வெட்டு, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் பாங்க் சில அவசியமான பட்டு வாடாக்களுக்குச் சலுகை காட்டுகிறது. அடுத்த நாள் ஈடு கொடுத்த அதிகப்படி கணக்கில் கட்டியாகிவிடும் என்கிற நம்பிக்கையில், சைகையில், அர்த்தத்தில், ஆனால் பெரும் தொகைகளுக்குப் புனாவிலிருந்து, கான்பூரிலிருந்து செக்குகள் வந்தால்- கணக்கில் இடமில்லாது, இந்த வெளியூர் மாப்பிள்ளைகளைச் சமாளிப்பதெப்படி?

பிள்ளைவாளுக்குப் புத்திமதியாகச் சொல்லிப் பார்த்தேன். அவர் விடும் காற்றாடிகளுக்கு பாங்க் வாசல் கட்ட இயலாது, நூலுக்கு மாஞ்சா தடவ முடியாதென்று. 'இந்தத் தடவை மட்டும்' என்று சிரித்தபடி கும்பிடு போடுவாரே அன்றி திருந்துவதாக இல்லை. அப்புறம் நான் என் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு அர்த்தமென்ன?

எப்பவுமே, வியாபாரம் பெருகப் பெருக, முதலீடும், கடனாக வாங்கிய பணங்களும், சரக்கு, மெஷினரி, வெளியிலிருந்து வசூலாக வேண்டிய பாக்கிகள் இத்யாதி எனப் பல உருவங்களில், விதங்களில் முடக்கிவிட, ரொக்கத்துக்கு வியாபாரத்தின் பசி, பகாசூரப் பசிதான். வியாபாரி மார்க்கெட்டை முடக்குவதற்கு பாங்க் உதவி செய்யாது, செய்யக் கூடாது.

நடுப்பகல், Banking Hall இல் கூட்டம் மும்முரம்.

திடீரென ஒரு உர்த்தண்டமான குரல். நான் என் அறையிலிருந்து வெளி வந்தேன். பிள்ளைவாள் கண்களில் பொறி பறக்க என்னிடம் வந்தார்.

பிள்ளையாருக்குக் கோபமா? புராணத்தில் அப்படிப் படித்த நினைப்பில்லையே! தொந்தி கணபதி ஜாலிப் பேர்வழியாச்சே!

"யார் இந்த போலோசந்த் ப்ரசன்ன சந்த் செக்கைத் திருப்பினது?" எல்லோரும் எங்களைத் திரும்பிப் பார்த்தனர். நான் உள்ளே திரும்பி என் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். மணியடித்து பியூனை வரவழைத்து அவரை அழைத்து வரக் கட்டளையிட்டேன்.

"பிள்ளைவாள், இது பாங்க். சினிமா கொட்டகை அல்ல."

"தெரியும் சாமி. உங்கள் பேரேடில் என் கணக்கு இல்லாவிட்டால் நீங்க பால் பாயசம் சாப்பிட்டிருக்க முடியாதுன்னும் தெரியும்."

ஐயையோ! பாயசத்தில் பங்கு கேட்கிறாரா?

"நான் ஒரு பெரிய மில் முதலாளி. என்னை இப்படி அவமானப்படுத்திட்டீங்களே, அதுக்கு என்ன ஜவாப் சொல்றீங்க?"

ஓஹோ! தண்டவாளம் அப்படி ஓடுகிறதா? எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது. ஒரு பக்கம் விழி நரம்புகள் குறுகுறுத்தன.

 

"உங்கள் கேள்விக்கு நான் ஒரே சமயத்தில் நாலு பதில்கள் சொல்ல முடியும். ஆனால் சொல்லப் போவதில்லை. நான் Branch manager மட்டுமல்ல. என் ஸ்தாபனத்தில் ப்ரதிநிதி."

இது சமயம் ஒன்று. யதார்த்தம் என்று சொல்கிறேமே, ஆனால் அதிலும் முழுமை கிடையாது. எப்படியோ Melodrama, நாடக பாணி புகுந்துவிடுகிறது.

"State Bank என்னைத் தாம்பூலம் வெச்சு அழைக்கறாங்க. நான்தான் பழைய நினைப்புக்குப் பார்க்கறேன்."

"பிள்ளைவாள், தாராளமாகப் போங்க. அவங்க தாம்பூலம் வெச்சால், நான் மேளம் வெக்கறேன். உங்கள் கணக்கில் பூரா பாக்கிக்கு அவங்க செக் அனுப்பிச்சாலும் சரி, நீங்கள் ரொக்கம் கட்டினாலும் சரி- கிடங்கில் பூட்டை மாற்றிக்க வேண்டியதோடு சரி. இன்னிக்கே இப்பவே."

என்னை ஒரு முறை முறைத்துவிட்டு இறங்கிப் போய் விட்டார்.

மறுநாள் காலை காப்பி வேளை. என் காப்பி வேளை ஐந்தரை மணி, மாடியில் டெலிபோன் மணி அடித்தது, கையில் தம்பளருடன் மாடிக்குச் சென்று டெலிபோனை எடுத்தேன்.

"நான்தானுங்க, உங்க பிள்ளைங்க!" குரல் கஞ்சியாகக் குழைந்தது. "சாமி நல்லாயிருக்கீங்களா?"

"பிள்ளைவாள், என்ன வாச்சு? ஸ்டேட் பாங்கிலிருந்து எந்தத் தகவலும் காணோம்?"

"அதெல்லாம் மறந்துடுங்க புருஷன் பெண்சாதி சண்டை ஒரு சண்டையா?"

அவர் குறிப்பிட்ட பாவனையில் அவரைக் கற்பனையில் நினைத்துப் பார்த்தேன். உடம்பு குலுங்கலில் காப்பி மேஜைமீது சிந்திற்று.

டெலிபோனை வைத்து விட்டேன்.

சிந்தா நதியில் ஒரு எறிகல்.

 

31. மாசு

 

இன்று முதிர் மாலை, நான் எங்கோ நினைவாயிருக்கையில், இருந்தாற்போல் பின்னாலிருந்து:

"அப்பா, ஒரு சேதி. ஆபீசுக்கு டெலிபோன் வந்தது. மாசு செத்துப்போயிட்டாராம். நேற்று."

 

ஒரு கணம் குரல் வளையை அழுத்திப் பிழிந்து உடனே விட்டுவிட்டது.

சிலந்தி, முதலில் தன் இரையைக் கொட்டி, விஷ நீரைச் சிந்தி, மூர்ச்சையாக்கிப் பின்னர் தான் இறுக்குமாம்.

"என்ன எப்படி, விவரம் சொல்லவில்லை."

விவரம் என்ன வேணும்? மாசு செத்துப்போயிட்டார்.

ஓய், மாசு, நீங்கள் செத்துப் போகவில்லை. உங்களால் செத்துப்போக முடியாது. புரளி பண்ணுகிறான்கள். ஹூகும், நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எங்களைப் போன்றவர்களுக்குத்தான் சாவு, அதன் பயங்கள், ஆனால் நீங்களோ முழுக்க முழுக்க வாழ்வோடு இழைந்தவர். You are involved in man. உமக்குச் சாவா? வெட்கக் கேடு. ''Get the behind me, Death."

மாசு, முதலில் சாவு என்பதே என்ன ? எல்லைக்கோடு தாண்டிப் போயிருக்கிறீர். உங்களைக் கேட்காமல் யாரைக் கேட்பது?

மாசு எனும் தனி மனிதன், என் சினேகிதனுக்குப் படும் துக்கம், தனித் துக்கம், எந்தத் தனித் துக்கத்திலும் சுயநலம் கலப்படம். அவர் இருந்தவரை அவரால் அடைந்த நலங்கள் இனிக் கிடையா எனும் சுயநலம். அம்மட்டுக்குத் தனித் துக்கம் மாசு படிந்ததே.

மாசு எனும் மனிதன் இனி இல்லை. மாசு என்ற ஒரு மனிதன்- அவனுடன்தான் என்பாடு, அவனுக்குத்தான் என் பாட்டு.

உறவினன் இழப்பைக் காட்டிலும் நண்பனின் இழப்பே மகத்தானது என்பது என் துணிபு.

உரிமையென்றும், கடமையென்றும், ரத்த பந்தமென்றும், உறவினரைப் பயன்படுத்துகிறோம். அவரால் பயன்படுத்தப்படுகிறோம். கைம்மாறு எதிர்பார்க்கிறோம். நட்பு அப்படி அல்ல. நட்பில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. நட்பு நட்புக்காகவே. நட்பு இருவர் இடையில் மட்டுமே. ஆனால் உறவு எனும் பெயரில், சுயநலத்தில் விஷ்தரிப்பு எல்லை கடந்தது.

நட்பின் பெரும் ஆச்சரியம் பார்த்தீர்களா? முதல் சந்திப்பிலேயே இனம் கண்டுகொள்வது மட்டுமல்ல. அடையாளமே கண்டு கொள்ளும் அதன் சக்தி! "முன்னேயே உங்களை எங்கேயோ பார்த்தாற் போலிருக்கிறதே!" என்பது சந்தேகத்தில் லஜ்ஜை முனகல் அல்ல. வாய் விட்டுச் சொல்லாமல், ஆனால், "நாம் இருவரும் ஒருவரையொருவர் எப்பவோ, எப்பவும் அறிவோம்!" எனும் தீர்க்கமான தீர்மானம். அதெப்படி? அதுதான் அதன் ஆச்சரியம்.

மாசு, இதற்குக் கோடி உம்மிடமே எனக்கு இருக்கிறது.

 

ஒரு நாள் இரவு 10.30, 11 இருக்கும். வாசற் கதவைத் தட்டும் சத்தம். திறந்தால் நீங்கள் நிற்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்களை உள்ளே வா என்று அழைப்பதா, வாசலில் நிறுத்தியே பேசுவதா, புரியவில்லை. அன்று மாலைதான் என் தங்கையைச் சிதையில் வைத்து விட்டு வந்திருக்கிறேன். 25 வயது கன்னிப் பெண். இன்னும் எரிந்து கொண்டிருப்பாள். என் தாய் மரண அடிபட்ட விலங்காய் மூலையில் சுருண்டு கிடக்கிறாள். பக்கத்தில் போகவே பயமாயிருக்கிறது.

நான் யாருக்கும் சேதி அனுப்பவில்லை. நம் குழாத்தில் யாருக்கும் தெரிய நியாயமில்லை. ஆகவே, மாசுவுக்குத் தெரியாது.

மாசு உள்ளே வர முயற்சிக்கவில்லை.

"என்ன மாசு ?"

"தெரியவில்லை. என்னவோ உங்களைப் பார்க்கணும் போல் திடீரெனத் தோன்றிற்று. கிளம்பி வந்துவிட்டேன். உங்களைப் பார்த்து விட்டேன். போகிறேன்." அவ்வளவு தான்- இறங்கி விர்ரென்று போய் விட்டீர்கள். இந்த விதிர் விதிர்ப்புக்கு என்ன சொல்கிறீர்கள்? காரணமே தெரியாது. ஆனால் அடக்க முடியாத இந்தப் பிரிவு, அடையாளம் கண்டுகொள்வதில்லையெனில் அது, பின் வேறு என்?

ஹனுமான் முதல் சந்திப்பிலேயே ராமனை அடையாளம் கண்டு கொண்டதுபோல.

அவசர அவசரமாக உடனேயே சொல்கிறேன். நான் ராமன் இல்லை. ஆனால் நிச்சயமாக நீங்கள் ஹனுமான்.

ஹனுமான்தான், ஆரத்தின் ரத்னகண்டி என மூலகாவியமே அறை கூவுகிறது.

மாசு, நீங்கள் எனக்குச் சுந்தர காண்டம் எத்தனை முறை பண்ணினாலும், பூர்த்தியாகாத பாராயணம்.

மாசு, நான் படித்து முடிக்காத, மூடவும் முடியாத புத்தகம்.

ஹனுமானிடம் எனக்கு, இன்றைக்கும் ஒரு அங்கலாய்ப்பு, எங்கு ராம நாமம் கேட்டாலும் அங்கு அவர் ஆஜர். உடனே வந்து விடுவானாம். தன்னலமற்றவனாக இருந்துவிட்டுப் போகட்டும்; தன் நினைப்பு கூட- நான் ஹனுமான் எனும் பெயர் உடையவன் என்கிற நினைப்புக் கூடவா அற்றுப் போக வேண்டும்! மாசு, உங்களால் எப்படி அப்படி இருக்க முடிந்தது. நீங்கள் மாசு என்கிற அக்கறையே உங்களுக்கு இல்லாமல்? ஆனால் அதுதான் உங்கள் ரஹஸ்யமோ? உங்களுக்கே தெரியாத ரஹஸ்யம். உங்களுடைய சதா உற்சாகம், எதில் ஈடுபடினும் கொள்ளும் தன்மை, அப்படி என்னைய்யா உங்கள் தலையெழுத்து? எந்த ராமனும் இத்துணை அன்புக்கு லாயக்கா? உம்மைக் கேட்டால்! எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை என்பீர்கள் அல்லவா?

 

மாசு, உம்முடைய கூற்று ஒன்று மறக்கமாட்டேன்.

"உங்கள் எழுத்து ஒரு நிமித்தமாக நம் சந்திப்பு நிகழ்ந்தது. உங்களைச் சந்தித்த பின், உங்கள் எழுத்தை விட, நீங்கள்தான் எனக்கு முக்கியம்."

மாசு, உங்கள் தன்மையில், நீங்கள் ஏதோ சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டீர்கள். ஆனால் இன்னும் நான் அதில் அந்தந்தச் சமயத்துக்கு வியப்புகள், வெளிச்சங்கள், வர்ணங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன்.

Kalaidoscope.

உண்மையான உண்மை- நான் ஏன் இப்படிச் சொல்கிறேன், அப்படி ஒன்று உண்டா? எனக்குத் தெரியாது. உண்மையான உண்மை, நேரப் பேச்சாக, பிரசார பாஷையாக, உபதேசமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில். ஏதோ ஒரு ஜாடையில், ஒரு சைகையில், ஒரு அக்ஷர சப்தத்தில், அடையாளத்தில்- கண்டு கொண்டவர் பாக்யம். மாசு, உங்களை நான் அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் எந்த உச்சரிப்பில் நீங்கள் ஒளிந்து கொண்டீர்கள், இப்போது, மணலில் மறைத்து, மணலைப் பொத்தி விளையாடுவது போல்?

மாசு, நினைவிருக்கிறதா?

நாம் சந்தித்த புதுசு. எனக்கு ராயப்பேட்டையில் ஜாகை. நீங்கள் டவுன். இரவு எட்டு மணி வாக்கில் வருவீர்கள். மாசு, தாத்து, செல்வம், ரங்கநாதன் எல்லோரும் பேசிக்கொண்டு மரீனா வழியே நடந்து, தங்கசாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவன்-பூரி, பாஜி, சேறாட்டம் பால், அதன்மேல் கணிசமாக மிதக்கும் ஏடு. அப்படியே பேசிக்கொண்டே கோவிந்தப்ப நாயக்கன் தெரு, விளக்கு வெளிச்சத்தில், இரவு பகலாயிருக்கும். மார்வாரிப் பெண்டிர் வளையல்களும், பாதங்களில் தண்டையும் கொலுசும் குலுங்க, விதவிதமான வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, தெருவில் கும்மியடிக்கையில்-இது செளகார்பேட்டையா பிருந்தாவனமா?

-அப்படியே பேசிக்கொண்டே, கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்குக் குறுக்கே வெட்டி, காந்தி இர்வின் சாலை வழி பேசிக்கொண்டே மீண்டும் மரீனா பீச், நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. பேசிக்கொண்டே பைகிராப்ட்ஸ் ரோடு, விவேகானந்தர் இல்லம், ஐஸ் ஹவுஸ் ரோடு, பெஸண்ட் ரோடில் என் வீட்டில் என்னை விட்டு விடடு, மணி இரண்டாகிவிடும்; பிரியா விடையில் டவுனுக்குத் திரும்புவீர்கள். நம் அத்தனை பேருக்கும் அதென்ன பைத்தியக்காரத்தனமோ?

பேசுவோம். பேசுவோமோ, என்னதெல்லாம் பேசுவோம்! இலக்கியம், சினிமா, ஆண்டாள், நியூ தியேட்டர்ஸ், Saigal, கம்பன், "துனியா ரங்க ரங்கே," ஆழ்வாராதிகள், தேவகிபோஸ், தேவதாஸ், வித்யாபதி, பாரதி, ராஜாஜி, நேரு, அத்வைதம், விசிஷ்டாத்வைதம், ஆவாரா- ராமானுஜர்- பேச்சு அது பாட்டுக்கு அதனிச்சையாக எங்கெங்கோ தாவி நம்மை இழுத்துச் செல்லும். அவசரமாக மூடும். புது வெளிச்சம், புது திருஷ்டிகள், புதுக் கூச்சங்கள், வியப்பாயிருக்கும், ஆனந்தமாயிருக்கும். சில சமயங்களில்-

பயமாயிருக்கும்.

ஆதியப்ப நாயக்கன் தெருவில் ஒரே வீட்டில் பதினெட்டு குடித்தனங்கள் நடுவே உங்களதும் ஒன்று. 'அது ஒரு Community life. நன்றாய்த்தானிருந்தது. நல்லது பொல்லாது சமயங்களுக்கு அத்தனை குடித்தனங்களும் ஒரு குடும்பமாகி விடுவோம்' என்பீர். உங்களுடைய சுபாவமே அப்படி. ஆயிரம் சோதனைகளுக்கு நடுவே எனக்கு தெரிந்தது, நீங்கள் உங்களை வெறுத்துக் கொண்டோ, பிறரைச் சுளித்தோ ஏதும் சொன்னதில்லை.

ஏறக்குறைய நம்முடைய முப்பத்து மூன்று வருடங்களில் நானும் பார்க்கிறேன், உம்மிடம் அசைக்க முடியாத சில திட்டங்களும் கொள்கைகளும் இருக்கின்றன (ஆம், நீங்கள் இறந்துபோனதாக நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்) உடல் பூஞ்சையானாலும், நீங்கள் பலவான். உங்கள் செயல்படலில் ஓசை கேட்பதில்லை. ஆனால் காரியம் முடிந்த பின், அதைவிடச் செவ்வனே அது இருக்க முடியாது.

அப்புறம் வாசகர் பேரவை என்று கூட்டினரீர்கள். நச்சு எழுத்தைக் கண்டிக்க; அதற்கு இடம் தந்து போஷிக்கும் பத்திரிகைகளைக் கண்டிக்க; வாசகர்களுக்கு அவர்கள் பொறுப்பை நினைவுபடுத்த, மனச்சாக்ஷியைத் தூண்ட நீங்கள் எடுத்துக்கொண்ட பிரயத்தனம் சாமானியமானதா? ஆனால் அதுதான் உம்முடைய தன்மை. "நடக்கிறது நடக்கட்டும். நாலுபேரேனும் விழித்துக் கொண்டால் சரி." அதுதானே உம்முடைய கொள்கை! எப்படி உங்களுக்குச் சமுதாயத்தின்மீது அவ்வளவு நம்பிக்கை?

மாசு நீங்கள்தான் வாழத் தெரிந்தவர். நீங்கள் தான் செளந்தர்ய உபாசகர்.

"நீ, நான் உறவின் விஹாஸிப்பன்றி வேறு என்ன, செளந்தர்ய உபாஸனை? ஞானம், விஞ்ஞானம், கலை, கடவுள் நம்பிக்கை, வேதாந்தம், சித்தாந்தம் இத்தியாதிகள் எல்லாம் உனக்கும் எனக்கும் இடையில்தானே. உனக்கும், எனக்காகத்தானே!" இந்த உண்மை எங்கள் எல்லாரைக் காட்டிலும் நீங்கள்தான் அறிந்தவர், அனுபவமாக.

ஒரு முறை பேச்சு வாக்கில் சொல்லியிருக்கிறீர்கள். முன்னும் பின்னுமாக உங்களுடன் பிறப்புகள் பதினைந்தில், உங்கள் பெற்றோருக்கு மிஞ்சினது நீங்கள் ஒண்டிதான் என்று. ஆனால் உங்கள் தாயாருக்கு நீங்களும் இப்போது மிஞ்சவில்லை.

உங்களுடைய விசுவ ரூபத்தில், நீங்கள் எல்லோருக்கும் எல்லா உறவும் ஆனவர்.

 

மாசு என்று ஒரு மனிதன் இருந்தான். இதுபோதும். ஒரு மனிதன் பதவி சமானிய சாத்தியமல்ல. ஒரு மனிதன் பூமியின் எரு. ஒரு மனிதன் லோகப் பரம்பரையைச் சேர்ந்தவன். எல்லோருக்கும் சொந்தமானவன்.

There was a man, by name masu-a statement of authority ஆகம பாஷை.

மாசு-, மாசு-மாசு, மாசு-

சிந்தா நதி பற்றி எரிகிறது.

 

32. குருக்ஷேத்ரம்

 

இது ஒரு diplomatic visit. இதில் உணர்ச்சிப் பிசுக்கு இருக்க முடியாது. வேஷத்தோடு சரி. என்னைப் பொறுத்தவரைதான் சொல்கிறேன்.

நியாயமாக எங்கள் மேலதிகாரி போயிருக்க வேண்டும். ஆனால் அவனுக்குத் தலைமை ஆபீஸில் ஒரு Conference. எனக்கு மேல் படிகளில் பதுமைகள் இருந்தன. ஆனால் ஏனோ அவன் என்னை நியமித்துவிட்டு, டில்லிக்கு ப்ளேன் ஏறிவிட்டான்.

ஆபீஸில் யார் போவதென்ற மொசமொசப்பு ஒய்ந்தது, தீர்மானமாகி, அன்றிரவு நான் வண்டியேறிய நேரத்துக்கு-

அந்த ஊருக்கு ரயில் அடிக்கடியில்லை, சுலபமாயில்லை. இடையில் மாறியாகணும் வேறே. போய்ச் சேரும் நேரத்துக்கு எடுத்திருப்பார்கள். ஏதோ ஒருசான்ஸ்'.

போகும் வழியில், இறந்தவனைப் பற்றிச் சிந்தனை இயல்புதானே! கோயமுத்துாரில் மூணு மில். மதுரையில் ஒன்று. பெண்ணாடத்தில் ஒரு ஆலை, கொடைக்கானலில் ஒரு பங்களா, ஊட்டியில் ஒரு 'Cottage.' பம்பாய்தாஜ்'இல் காயமாக வாடகைக்கு ஒரு Suite –இப்படி ராஜ்யத்தின் பரவலுக்கு, இங்கு எங்கானும் அவர் வேளை முடிந்திருந்தால் என்ன "ஹோ! ஹோ!" "ஜே! ஜே! என இருந்திருக்கும் ஆனால் பிறந்த ஊர் விசுவாசம், அதுவே விதியாக மாறி, அந்திம வேளைக்குத் தன்னிடம் இழுத்துக் கொண்டதோ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. இப்பவும் சொல்ல முடியாது. நான் ஒருவன்தான்லேட் லதீஃப்' என்னவோ?

சுய முயற்சியில், அடித் தளத்திலிருந்து முன்னுக்கு வந்த சூரன் (அல்லது அசுரனா?) இத்தனைக்கும் செக்கில் கூட்டெழுத்தில் தமிழில்தான் கையெழுத்து. அதுவே அவர் பெருமை. "என் தொழிலில் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு, இதுக்குன்னே வெளிநாடு போய்ப் பட்டத்துக்குப் படிச்சுட்டு வராங்களே, அவங்களுக்குத் தெரியுமா? சவாலை ஏத்துப்பாங்களா?"- மமதையின் புன்முறுவலுடன் ஒரு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 

பிஸினெஸ் நிமித்தமாக வருடத்துக்கு ஒரு முறை இரு முறை மாவட்ட ஆபீஸுக்கு வருவார். அடேயப்பா! அந்த வரவேற்பும், போம்போது, Boss லிப்ட்வரை துணை வந்துவிடும் பந்தாவும்- நாடகமே உலகம்.

ஆஜானுபாகு. எழுபது தாண்டியாச்சு என்று பார்த்தால் நம்ப முடியாது. நாளைக்கு இரண்டு வேளை சவரமோ எனச் சந்தேகிக்கும்படி முகம் மழமழ. சரிகைப் பட்டை தீட்டி ஓடிய பஞ்சகச்சம். முரட்டுத் துணி தோற்றம் தரும் கதர் ஜிப்பா. கழுத்தை ஒரு சுற்றுச் சுற்றி, முன்னும் பின்னும் முழங்கால்வரை தொங்கும் உத்தரீயம், எளிமையின் பகட்டு. ஆனால் உயர்ந்த ரகம். வெள்ளிப் பூண் போட்ட தடி. மறு கையில் தோல் பைண்டிங்கில் ஒரு புத்தகம் (ஒரு சமயம் அவர் "பாத்ரூம்" போயிருந்தபோது, திருட்டுத்தனமாகப் புரட்டினேன். திருவாசகம்). இயற்கையான ஆரோக்யம், மேலும் ஊட்டத்தில் மின்னும் பொன்மேனி, காயகல்பம், சியாவனப்ராஷ் அஸ்வகந்தி.... உடம்பு லேசில் படுக்காதென்றுதானோ மாரடைப்பில் சாய்ந்துவிட்டான்?

பெரிய குடும்பம். பெரீ- - ....

எண்ணிறைந்த பிள்ளை, பெண்கள், ஏராளமான பேரன் பேத்திமார். தொழில் ராஜ்யத்தின் உசிதமான ஆட்சிக்கு, ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்தார். சதுரங்கக் காய்கள். அந்தத் தொழில்களின் கணக்குகளில், வங்கிப் பணம் பல லட்சங்கள் முடங்கியிருந்தது கடனாக.

மாவட்ட ஆபீசில், கடன் இலாகா நிர்வாகம் என் உத்தியோகம் ஆதலால், அவரும் நானும் அந்தக் கணக்குகள் சம்பந்தமாக வாதிக்க நேர்ந்ததுண்டு. என் கடமை வழியில் அந்தக் கணக்குகளின் நடப்பில் முரண்பாடுகளை மீறில்களை எவ்வளவு நாசூக்காக அவர் முன் வைக்க முடியுமோ- அந்தச் சமயங்களுக்கு Boss வேணுமென்றே, வெளி ஜோலியாகக் கம்பி நீட்டிவிடுவார். வாங்கிக் கட்டிக் கொள்வது என் தலை மேல் விடியும்.

"இதோ பாரு தம்பி, பெத்த குழந்தைக்கு வவுத்திலே கட்டிவிளாதா? பல் முளைக்காதா? ஜூரம் வராதா? உங்கள் பஞ்சாங்கத்துக்கு ஒத்து வல்லேன்னு குப்பைத் தொட்டியிலே எறிஞ்சுட முடியுமோ? மில் ஆரம்ப தசையிலிருக்கு. இப்போ அது கேக்கற ஊட்டம் தந்தால் தானே, அது தலையெடுத்துப் பலன் கொடுக்கமுடியும்? கணக்கு வேணும்னு எட்டுத் தடவை லொங்கறீங்க. கொடுத்தால், சால்ஜாப்பு சொல்லி, சமயத்தில் களுத்தை அறுக்கறிங்க!"

முதலாளிகள் எல்லோரையுமே பொதுவாகப் பார்த்துவிட்டேன். அவர்கள் கருத்துப்படி அவர்களுக்குக் கடிவாளமே கூடாது. ஆனால் அதுவேதானே leadership quality, ‘எல்லோரும் என் பின்னால் வாருங்கள். '

A man becomes a legend in his own time.

 

நான் ஸ்டேஷனில் இறங்கியபோது, புலர ஆரம்பித்து விட்டது. நவராத்திரி கொலு ஸ்டேஷன் வழி விசாரித்ததில் ஊர் இன்னும் ஒண்ணரை மைல் நடக்கனும், நல்ல வேளை, கைப் பெட்டிதான். நடக்க நடக்க இடமும் தோற்றங்களும் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தன. ஒரு தூரம் வரப்பு, கொஞ்சம் மிதிபாதை, அடுத்துச் சற்று அகலமான புழுதி வழி (வண்டிப் பாதை, மறுபடியும். ஒற்றையடி இப்படி, ஒரு வளைவில் சிவன் கோவில் கோபுரம் காட்டிக் கொண்டது, பொதுவாக வறட்சிதான் காட்சி. வானத்தில் சீவனற்ற, ஊர முயன்ற ஒன்றிரண்டு தேசல் மேகங்களும் காய்ந்த பொருக்குகள். இத்தனைச் செழிப்பாயிருந்த மனிதர்கள் இங்கேயா பிறந்து, மடிய மறுபடியும் இங்கேயேவா வந்தான்?

இன்னும் ஆள் நடமாட்டம் தெரியவில்லை. யாருக்கும் சுவாரஸ்யமில்லை போலும்! இப்பவே கிராமத்தில் யார் இருக்கிறார்கள் எல்லோரும் பட்டணம் ஓடி வந்து விடுகிறார்களே, பார்க்கவோ, பிழைக்கவோ இழக்கவோ.

காய்ந்து கிடந்த பெரிய ஏரிப் பள்ளத்தில் குறுக்கே நடந்து, பனை மரங்கள் காவல் நின்ற மேடு ஏறிச் சற்று நேரம் நின்று என்னைச் சுற்றிப் பார்த்ததும், என் உயரத்தில், அதோ வீட்டுக் கூரைகள் தெரிய ஆரம்பித்து விட்டன. ஆனால் இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும். ஏரிக்கரை மேட்டின் மறு தாழ்வில் ஒரு பெரிய கிணறு. அப்புறம் ஒரு வயல் தாண்டி, சற்றுக் கிட்ட நின்ற நாலைந்து மரங்கள். அவைகளில் இரண்டு மரங்களினடியில் தனித்தனித் துரத்தில் இரண்டு பஸ்பமாய்ப் போன சிதைகள் ஒன்று இன்னும் லேசாய்ப் புகைந்துகொண்டிருந்தது இங்கிருந்தே தெரிந்தது. மறு சிதையெதிரே ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான், பின்னால் கைகளைக் கோர்த்த வண்ணம். சிதையைச் சிந்தித்த வண்ணம். அவன் முதுகு என் பக்கம் திரும்பியிருந்தது. இரட்டை நாடி, குள்ளம்.

அவன் சிந்னையின் அந்தரங்கத்துக்கு அவனுக்குத் தெரியாத சாட்சியாக நான் இப்படி நிற்பதுகூட அதன் புனிதத்தைக் கலைப்பதாகும் எனத் தோன்றிற்று. அவரவர் துயரம் அவரவருடையது.

பொதுவாகவே எனக்கு ஒரு எண்ணம். சாவு தவிர்க்க முடியாதது. ஆனால் எந்தச் சாவும் வாழ்வுக்கு இழைக்கும் துரோகம். இளம் வயதில் அபகரிக்கப்பட்டவன் இருந்திருந்தால், தனக்கும் சமுதாயத்துக்கும் இன்னும் எத்தனை பயன்படக் கூடியவன்!

வயதானவன் மறைவுடன் போயின அவனுடன், அவனுடைய அனுபவம், அதன் விளைவாய விவேகம், மணிக்கூண்டின் வழிகாட்டல் வெளிச்சம், ஆனால் இத்தனையும் கவைக்குதவாத வாதம். எல்லாம் இயற்கையின் கொப்பறையில் ஸ்வாஹா! பெருமூச்சு. என் நடையைத் தொடர ஒரு கால் வைத்து, மறு அடியும் தூக்கி விட்டது. ஆனால் ஏதோ ஒரு நுண்ணுணர்வு மேலே போக வொட்டாமல் தடுத்து நிறுத்தித் திரும்பிப் பார்த்தேன்.

 

நான் பார்ப்பதற்கும் அந்த ஆள் சிதைமேல் பாய்வதற்கும் சரியாக இருந்தது. முஷ்டித்த இரு கைகளையும் தூக்கிக்கொண்டு சிதைமேல் மிதி மிதியென அவன் ஆடிய வெறியில் சாம்பல் சிதறுண்டு கட்டியு முட்டியுமாகப் பக்கவாடுகளில் விழுந்தது. சிதை சிதைந்தது. உள் கணப்பு தணியவில்லையோ என்னவோ, ஒரு காலைப் பிடித்தபடி நொண்டியாடிக் கொண்டே அவன் திரும்பு கையில்- என்னைப் பார்த்து விட்டான்.

என் திகைப்பூண்டு கலைந்து நடையும் ஒட்டமுமாக ஒடினேன், நடந்தேன். அப்பா! ஊரை அடைந்து விட்டேன்.

நான் நினைத்ததெல்லாம் தவறு. தங்க இடமாவது மண்ணாங்கட்டியாவது! யூகத்தில் கோயில் குருக்கள் வீட்டைக் கண்டு பிடித்து, வந்த காரியம் முடியும்வரை பெட்டியை வைக்க ஏற்பாடு செய்து கொண்டேன். அவர் கொடுத்தது காப்பியா அது குமட்டிற்று. ஆனால் வேறு வழி?

"உங்களைப் போலவாளுக்கு, பத்தாவது மைலில், ஒட்டல், வாகன வசதி எல்லாம் இருக்கே! அடுத்த ஸ்டேஷன்! வேண்டிய பேர் நேற்று வந்திருந்தார்களே!"

அப்போ நான் அசடு. நான்தான். அசடுக்கு இன்னும் ருசு என்ன வேணும் ரா முழிப்புக்குச் சற்று சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டு, பதவிசான உடைக்கு மாறிக் கொண்டு, நான் கிளம்பும்போது வெய்யில் வந்து விட்டது. வாசலுக் கெதிர் இரண்டு மூன்று கார்கள் நின்றன.

உள்ளே பெரிய பட்டசாலை, ஜமக்காள விரிப்பின் மேல் ஏழெட்டுப் பேர் உட்கார்ந்து கொண்டு, மண்டைகள் கூடி, 'கிசுகிசு.' நானும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவர்களுடன் கலந்து விட்டேன்.

"ஐயா வராங்க! ஐயா வராங்க!" ஒரு ஓரத்துத் திரையை விலக்கிக்கொண்டு ஐயா வெளிப்பட்டார். எழுந்து நின்றோம். அவர் கைகூப்பினார். அவர் பின்னால் ஒரு சின்னப் பரிவாரம். பிறகு தனித் தனியாக ஒவ்வொருவரும் அவரிடம் சென்று கை குலுக்கி, ஏதோ வாய் முணமுணப்பு.

என் முறை வந்ததும், எங்கள் கண்களின் சந்திப்பில் லேசாக அந்தக் கருவிழியின் நடுங்கலில் அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டது தெரிந்தது. உடனேயே துக்கத்தின் முகமூடி விழுந்துவிட்டது.

அடுத்தவனுக்கு இடம் கொடுக்க நகர்ந்துவிட்டேன்.

செத்த வீட்டில் விடை சொல்லிக் கொள்ளக் கூடாது. எவ்வளவு செளகர்யம்!

-அப்போ, வரும் வழியில் நான் கண்ட காக்ஷி?

அவரைக் கேட்க முடியுமா? சிரிப்பு வருகிறது.

 

ஒரு பெரிய குடும்பம், ராஜ்யத்தை ஆள்வது போல தான்- அதுவும் லகான் ஒருவன் பிடியில் இருந்தால். சிற்றரசுகளின் சலசலப்பு. தளபதிகளின் கொந்தளிப்பு. பெரிய குடும்பம் Pressure Cooker. மூடி எப்போ வெடிக்கப் போகிறதோ?

நானே கேள்வி கேட்டு, நானே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். கேள்விக்கு இந்நாளில் பதில் ஏது?

எல்லாவற்றிற்கும் ஒரே பதில், மஹாத்மா காந்தியின் குரங்குப் பொம்மைகளை ஞாபகப்படுத்திக் கொள்.

சிந்தா நதி ஆழத்தில் காலைச் சுற்றிக்கொண்ட ஒரு கொடி.

 

33. சிம்னி

 

வாருங்கள், எல்லோரும் வாருங்கொளேன்.

எல்லோரும் மதுரைக்கு வாருங்கள்' என்று முன்னெல்லாம் மதுரை சோமு பாட்டுப் பாடி அழைப்பார்.

ஆனால் நான் உங்களை அழைப்பது எனக்கு சாக்ஷிக்கு. என் எசமானி கோபத்துக்கு ஆளாகிவிட்டேன். என்னைப் பொத்துவதற்கு யாரேனும் வேணும். அவள் வயதில் அவளுக்கு எப்படியும் கை ஓங்கித்தானே விடுகிறது! சொல் சுளிப்பு அதற்கெல்லாம் இப்போ நான் லாயக்காயில்லை.

சத்தியமா யாரேனும் விட்டேன்னு சொல்லுங்கோ, என் வயதில் நான் சத்தியம் வைக்கக் கூடாது. ஆனால் நான் இப்போ என் வயதில் இல்லை. ("ஆமாம் வயசாயிடுத்தோன்னோ? இப்ப எல்லாம் வேளைக்கொரு வயசில்லையா உங்களுக்கு?") ஆனால் அது உடையும்னு கனாவில் கூட நான் எதிர்பார்க்கல்லே. எதிர்பார்த்திருக்க முடியாது. ("எந்தக் கனா? ராக் கனாவா, பகல்லே உக்காந்துண்டே தூங்கி வழியறேளே அந்தக் கனவா?")

இதோ பாருங்கோ, சூள் கொட்டாதேங்கோ. கொஞ்சம் பொறுமையா யாரேனும் ஒருத்தர் செவி கொடுங்கோ, இங்கே மழைக் காலம் வந்துட்டாலே சேந்தாப்போல், மூணு நாள், ஒரு வாரம்னு மின்சாரம் அம்பேல். எங்கள் வீட்டுக்கு மட்டுமில்லே. இந்த வாட்டாரத்துக்கேதான். ஆனால் எங்களுக்கு மட்டும் வந்துவிட்ட தனிக் கஷ்டம்போல் மாமியின் ஸ்பெஷல் புலம்பல். இரண்டு முறை எழுதி வைத்து, நாலு தடவை போல் பிள்ளைகள் நேரே கண்டு பின்னே- என்னாலேயா முடியும்? என்ன பண்ணினால் என்ன, தண்ணீர் வடித்தால் தானே M.E.S. காரன் வருவான்! அப்பத்தானே கம்பம் ஏற முடியும்? ஏற்கெனவே இங்கே சொல்லியிருக்கேன் போல இருக்கே. என் முதுகின் பின்னால், ஆனால் என் காது கேட்கும்படியாக, எனக்கு இரண்டு அர்ச்சனைப் பெயர்கள் உண்டு! ஒன்று ‘Captain of the sinking Ship', மற்றொன்றுதெப்போத்ஸவ மண்டகப் படிக்காரர்.'

அந்த இருண்ட வேளைகளுக்கு, சாமி குத்துவிளக்கு இரண்டு போக, ('நல்லெண்ணெய் விக்கிற விலைக்கு') ஒரு பெட்ரூம் விளக்கு, ஒரே ஒரு ஹரிக்கேன் லாந்தர்-அதன் சிம்னிதான் இப்போ என் கழுத்துக்கு வந்திருக்கு.

சிம்னியைத் துடைக்கிறேன், ராஜா''ன்னு கிளம்பினேன். போன சீஸன் கரியோட இருந்தது. இருந்தால் என்ன, எத்தனைக்கெத்தனை கரியேறியிருக்கோ, துடைக்கத் துடைக்க அத்தனை பளிச் ஆயிடும். சும்மா, பழனி விபூதி தெளிச்சுத் துடைச்சோம்னா, 'கும்'னு ஆயிடாதா?

இந்த ஆசையோடு அவள் துடைக்கமாட்டாள். "ஆமா, வேறே வேலை என்ன? ஆச்சா, போச்சான்னு இழுத்தெறியறதை விட்டுட்டு!" இது ஜெட் யுகம். சிம்னிக்கு நேரம் இல்லை, யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை. ஆனால் எல்லாமே, 'போர்' அடிக்கறது.

விஷயத்துக்கு வாரும். விஷயம்: ஒரு தடவை துடைச்சாச்சு. இரண்டாம் கோட்டிங் கொடுப்போம்னு, சிம்னியை மடியில் இறக்கிட்டு, எனக்கு இடது பக்கமாகச் சற்றுத் தள்ளியிருந்த விபூதி மடலை எட்டிப் பிடிக்க, இடுப்பு திரும்பிக் குனிஞ்சேன் பாருங்கோ என்ன, எப்படி தெரியலே, மடியிலிருந்து சிம்னி குழந்தை மாதிரித் தவழ்ந்து உருண்டு தரையில் விழுந்து என்பது கூடப் பெரிய வார்த்தை-கிளிங் தரைமீது இரண்டு விள்ளல்களைத்தான் பார்த்தேன்.

எனக்குக் கூடச் சத்தம் சரியாக் கேக்கலே. ஆனால் வீட்டு வாசற்படியில் சினிமா எக்ஸ்பிரஸ் படிச்சிருந்தவளுக்கு என்ன செவியோ, குலுங்கக் குலுங்க ஓடி வந்தாள். ஆமாம், கொஞ்ச நாளாவே இரண்டு மூணு பூச்சுக்கூடத் தான்.

"திருப்தியாப் போச்சோன்னோ?"

திருதிருவென விழித்தேன்.

"திருப்தியாப் போச்சோன்னு கேக்கறேன். இனிமேல் உங்கள் இடத்துக்குப் போய் உட்காந்துடுவேள் இல்லியா?"

அவள் சொன்னபடியே, என் அறைக்குப் போய், ஜன்னலோரம் மேடையில் உட்கார்ந்து விட்டேன். நான் வேறு என்ன செய்ய முடியும்?

அவள் பாட்டுக்கு இரைந்துகொண்டிருந்தாள்.

"இப்போ நான் என்ன செய்வேன்? ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமா சிம்னி வாங்கிண்டு வாடா'ன்னு எப்படி விரட்டுவேன்? காலைக் கல்லாக் கட்டியிழுக்கும் இந்த வெள்ளத்துலே, மனசோடே குழந்தையை எப்படி அனுப்புவேன்? (குழந்தைக்கு அடுத்த பிறப்பு நாளைக்கு 25 ஆரம்பம்) இருக்கிற செலவு போறாதுன்னு, மாஸக் கடைசி-யுமதுவுமா இது வேற பச்சாவா? என்னென்னதான் அவன் சுமப்பான்? இருக்கறதெல்லாம் குடும்பத்துக்கே கொடுத்துடறான்! (ஹூம், சிரிப்பதா, அழுவதா?) நிஜம்மா எனக்கு அழுகையா வரது."

அழுதாள். நான் என்ன செய்ய முடியும்? நியாயம் அவள் பக்கம் இருக்கிறது.

"இவா சிம்னி துடைக்கல்லேன்னு யார் அழுதா? பொழுது போகல்லேனா, வழக்கம்போல், மேடையில் மல்லாந்தபடி விட்டத்தைப் பார்த்துண்டிருக்கிறதுதானே! அங்கேதான் இவாளுக்குக் கதை கதையா வருமே!"

அவள் சொன்னதுமே ஞாபகம் வந்தது. எனக்கு இடுப்பு விட்டுப்போறது. மேடையில் மல்லாந்து, உடம்பை நீட்டிவிட்டேன். நீ சொன்னபடி உண்மையிலேயே நான் வேறு என்ன செய்ய முடியும்?

விட்டத்தில்,

உடைந்த சிம்னி துண்டுகளாகப் படவில்லை. அழகிய இரண்டு பெரிய சுருண்ட இதழ்கள்.

(எழுத்தாளரோன்னோ? தனியாத் தோணறதாக்கும், செஞ்ச காரியம் ஜரிக்க!) அதுதான் விட்டத்தின் மஹிமை, கேலி பண்ணுவோர் பண்ணட்டும்.

உடைந்தது அவைகளுக்கே தெரியக்கூட நேரமில்லை. ஒரு தினுசான திக்பிரமையில் இருந்தன. பூமியில் விழுந்த சிசுப்போல், அழவில்லையே தவிர "குவா! குவா!" (எங்கே? எங்கே?) அவைகளின் திக்கற்ற நிலையினின்று ஒரு துக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது.

விட்டத்தில் இன்னும் ஏதோ தெரிகிறாப் போலிருக்கே!

ஆமாம், சிற்றப்பா சிம்னி துடைத்துக் கொண்டிருக்கிறார்.

குள்ளபட்டா. இடது கை வாகு. வலது கையில் சிம்னியைப் பிடித்துக்கொண்டு, தன் பலம் கொண்ட மட்டும் இடது கையால் அழுத்தி அழுத்தித் துடைக்கிறார்; உடல் பலம் பூரா- மேலே தோள்பட்டையிலிருந்து, கீழ் கால் கட்டை விரலிலிருந்து பலம் அத்தனையையும் இடது கை விரல்கள் மூன்றுக்கும் கொண்டுவந்து துடைக்கிறார். ஆஸ்துமா வேறே. மூச்சைப் பிடித்துக் கொண்டு அவர் துடைக்கும் தம்மில், விலா கட்டியிழுக்கிறது. ஆனால் விடமாட்டான் மன்னன். வாரா வாரம் தவறாத சடங்கு இது. ஹரிக்கேன் லாந்தர் 2. சுவரொட்டி விளக்கு ஒண்ணு, பெட்ரூம் விளக்கு.3.

ஆமாம், சென்னையில்தான் இருந்தோம். ஆனால் எனக்கு 13, 14 வயதில், நான் எட்டாவது படிக்கையில் திருவட்டீஸ்வரன்பேட்டைக் கோயில் குளத்தை ஒட்டிய நாகப்பையர் சந்தில், நாலு குடித்தனங்களில் ஒன்றாய் நாங்கள் குடியிருந்த வீட்டில் மின்சாரமாவது, மண்ணாங்கட்டியாவது ? கிரோஸின் விளக்குத்தான், விறகு அடுப்புத் தான்.

 

"நான் துடைக்கிறேன், சித்தப்பா! ஒரே ஒரு தரம் சித்தப்பா !" .

"அதெல்லாம் வேண்டாம். நான் துடைச்ச வெளிச்சத்தில் படிச்சு, அதே மாதிரி ப்ரைட்டா மார்க்கை வாங்கு. Brightன்னா அர்த்தம் தெரியுமோன்னோ?"

ஒரு சாதாரணப் பேச்சில் கூடப் படிப்போடு எப்படியோ முடிச்சுப் போட்டுவிட்டார். பெரியவாளின் வழி அது.

ஆனால் அந்த brightnessக்கு என்னால் மார்க்கு வாங்க முடியாது. அதன் வழியே பார்த்தால் மார்பு மட்டுமா தெரியும்? மனசே தெரியும்.

பிள்ளையாண்டான் இன்று 'லேட்'டாகத்தான் வந்தான். ஆபீஸ் சகா ஒருத்தன் இன்று காலை ஆபீசுக்கு வரும் நிமித்தத்தில் எலெக்ட்ரிக் ட்ரெயினில் விபத்து ஆனதாகத் தகவல் வந்து ஆபீஸிலிருந்து ஒரு பாட்ச் அவனைப் பார்க்கப் போயிருந்ததாம். போனதும் கதவைத் திறந்து வரவேற்றவனே அவன் தானாம்.

"இந்த அதிசயத்தை எல்லாரும் கேளுங்கள். கேட்கணும். சேத்துப்பட்டுக்கும், நுங்கம்பாக்கத்துக்கும் இடையில் ஸிக்னல் மாறுவதற்காக வண்டி நின்றது. இவன் கீழே அந்தண்டைப் பக்கமாக இறங்கி ஏன் இத்தனை நாழியென்று முன்னும் பின்னுமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், எதிர்வண்டி- அதுதான் விளக்கெண்ணெயில் வழுக்கினால்போல் வருமே- பின் புறமாக வந்து இடித்து, ட்ராக்கின் ஒரமா ஒரு பள்ளத்தில் துரக்கியெறிந்து விட்டுப் போயிடுத்தாம். கூடவே இவன் வண்டியும் கிளம்பிப் போயிடுத்தாம். ஆகவே இந்த accident நேர்ந்ததே யாருக்கும் தெரியாதாம். இவன் இசைகேடாகப் பள்ளத்தின் குறுக்கே பாலம்போல் விழுந்து கை காலை அசைத்து எழுந்திருக்க முடியவில்லை. நினைவு தப்பிப் போயிருக்கும்னு தோணறது. எத்தனை நேரம் அப்படிக் கிடந்தானோ, எத்தனை வண்டிகள் பாஸ் ஆச்சோ- தெரியல்லே."

"தற்செயலா, ட்ராக்கை இன்ஸ்பெக்ட் பண்ற வேலையிலே வந்துகொண்டிருந்த இரண்டு ரயில்வே Gang ஆசாமிகள் இவனைக் கண்டு, தூக்கி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று, அப்புறம் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தார்களாம். அந்த ஷாக்கைத் தவிர, சிராய்ப்பு கூட இல்லையாம்!"

எலெக்ட்ரிக் ட்ரெயினில் அடிப்பட்டு, ஆள் சாகாமலோ அல்லது முழுமையாக மிஞ்சினதாகவோ இது வரை யாரேனும், படித்தோ, கேட்டோ இருக்கேளோ? அது வந்து மோதற வேகத்திலேயே, அவன் தினம் மத்தியானம். காரனேஷன் தர்பாரிலிருந்து வரவழைக்கிற பிரியாணிக்குத் தொடுக்கற சட்டினியாக அவனே ஆகியிருக்க மாட்டானா ? 'மரிச்சது நீரோ, நீவிர் அண்ணனோ, கதையாயில்லே?'

இதைக் கேட்டதும் என் மனதில் சொல்ல எழுந்த ஒன்றை இழுத்து உள்ளே அடக்கிக் கொண்டேன். குதர்க்கமாக என்ன சொல்வாள் தெரியுமா?

"ஏன் அவனும் உங்கள் சிம்னி மாதிரி ஆகவில்லை என்கறேளா ?"

 

நீச்சல் தெரியாமல்

சிந்தா நதி நடுவில்.

 

34. துரோகம்

 

-ஏனோ அறியேன் இன்று மனம் ஏதோ பச்சாதாப நிலையில் பரிதவிக்கிறது. காரணம், காரியம் இதற்கெல்லாம் ஆய்ந்தாலும் தெளிவாகக் கிடைக்கப் போவதில்லை. செயல் ஒடுக்கம் காணக் காணப் பிறகு சிந்தனை தான் தூக்கல். அதுவும் பழங் கணக்கில் புழுக்கம்.

குற்றங்களை ஒப்புக்கொள்வதில் இப்போது ஒரு இன்பம் உணர்கிறேன். பையல் பருவத்தில், வாலிபத்தில் தடுத்த பயம், அல்லது அகந்தை, தாழ்வு மனப்பான்மை, அப்போது குளிருக்காக உடலைச் சுற்றிக்கொண்ட அங்கியாயிருந்தவை இப்போது புழுக்கத்தில் தாமாகவே கழன்று விழ. விளைவாய் மனத்தின் லேசு, அனுபவிக்கத் தான் தெரியும்.

குற்றம் என்றவுடனேயே இதோ ஒரு கதை வருகிறதென எழுந்து நிமிர்ந்து உட்காருவோருக்கு விசனத்துடன் கை விரிக்கிறேன். கொலை, *ளவு, கொள்ளையெனத் திடுக்கிடும் சாஹஸங்களுக்கு எங்கு போவேன்? அப்படிச் சட்ட விரோதமாகச் செய்திருந்தால் ஒப்புக்கொள்ளப் போகிறாயா எனும் ஏளனத்துக்கும் என் செய்வேன்? சிந்தா நதியில் பிராயசித்த ஸ்நானத்துக்கு இறங்குகையில் படித்துறை வழுக்குமே என்று யார் கையை நான் பிடித்தாக வேண்டும்?

குற்றங்களுக்கும் நியாய எடை, வாரெடை, தங்க எடை, சமய எடை, யானை எடை, கால எடை, காலத்துக்கும் எடை, மத்யஸ்த எடை- இவையெல்லாம் உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. ஆனால் இழைத்தவனின் சொந்த எடையின் உண்மையை மிஞ்ச எதுவுமில்லை. குற்றங்கள்-ஒப்புக் கொண்டவை, வெளியானவை, கையும் பிடியுமாகக் கண்டு பிடிக்கப்பட்டவை, விசாரணையில் குற்றமெனத் தீர்மானவை. இழைத்த சமயத்தின் நிலையிலேயே அவை நின்றுவிடவில்லை. அவை தாருக்கள். உணர்வே அவைக்குப் பாசனம். அவை அவையின் தனித் தனிக் காலக்ரமத்தில் கவிதையாக மலர்கின்றன. கொடுக்காய்க் கொட்டுகின்றன. புண்ணாக 'விண் விண்' தெறிக்கின்றன அல்லது

மறதியின் சருகுகளடியில் சலசலப்பு மட்டும் நம் வியப்புக்கு, புரியாத விசனத்துக்கு, இனம் தெரியாத அச்சத்துக்கு, உள்ளுணர்வில் கேட்கிறது.

 

குற்றம் செய்யாதவன் இல்லை. குற்றங்கள் பல அறியாமலே நேர்கின்றன; இழைக்கப்படுகின்றன. என்றோ இழைத்த மாண்டவ்யம் மறந்துகூடப் போய்த் திடீரென அதன் ஆணி முளைத்து அதில் கழுவேறுகையில்

வாழ்க்கையை நோகிறேன். பிறரைக் குற்றம் சொல்கிறேன்.

கர்மா theoryயைக் கரை காண்கிறேன். புண்ணிய, பாபம், பூர்வ ஜன்மாக்களைப் படி போட்டு அளக்கிறேன். "லாபம், ரெண்டு....."

ஒவ்வொரு செயலுக்கும் பிரதிச் செயல் உண்டு என chemistry ருசுப்படுத்துகிறேன்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என மற்றவனுக்கு நீதி போதித்து அவன் வினைக்கு உள்ளூரக் கொக்கரிக்கிறேன்.

ஸம்பவாமி யுகே யுகே பாடுகிறேன்.

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில், காலைக் காப்பிக்குப் பின்னர், சுமார் ஒன்பது மணி வாக்கில், அவ்வில்லத்தரசி பால் கலந்த சூடான பானம் ஒன்று கொணர்ந்து கொடுத்தாள். பஹு ருசி. தெரிந்த மாதிரியுமிருந்தது. ஆனால், வெகு வெகு முன்னால், சட்டெனப் பிடிபடவில்லை. என் திகைப்பைக் கண்டு புன்னகை புரிந்தாள்.

"பொரிக்கஞ்சி, ஒண்ணும் பண்ணாது, சாப்பிடுங்கள், சமையல், ஆகும்வரை தாங்க வேண்டாமா ?"

சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

பொரிக்கஞ்சி. அப்பா, எத்தனை நாட்கள், வருடங்கள்!

'யாழ்.' நான் பார்த்ததில்லை. ஆனால் எனக்கு மிக்கப் பிடித்த சொல். இவ்விரண்டு இடையினங்களும் உச்சரிப்பிலேயே இழைந்து நினைவே மீட்டுகின்றன. நினைவின் யாழ்.

அண்ணாவுக்கு அதே ஒன்பது மணிக்கு, ஒரு திருகு கூஜாவில் அம்மா கொடுத்த பொரிக்கஞ்சியை எடுத்துச் செல்வேன். மதிய உணவுக்குப் பதினொன்றரை மணிக்குத் தான் பள்ளியிலிருந்து திரும்புவார். அதுவரை அண்ணாவுக்குத் தாங்க வேண்டாமா ? சிற்றுண்டி உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. அண்ணாவுக்கு ஆஸ்துமா.

ட்யூஷனிலும், உத்யோகத்திலும், பட்டணத்தில் கை நிறையச் சம்பாதித்துக் கொண்டிருந்தவர். நோய் காரணமாகவே, ஒரு கிராமத்தில் ஒரு ஜில்லா போர்டு ஆரம்பப் பள்ளியில், எளிய சம்பளத்துக்குப் புகல் தேடும்படியாகி விட்டது. வைத்தியன் விரட்டிவிட்டான். சென்னையில், கம்பீரமாக யானைபோல் இருந்த அண்ணா, அவ்வளவு சின்னப் பையன் என் கண்ணெதிரேயே, நோய் வாயில் விலா எலும்புகள் முட்ட, நிழலாகத் தேய்ந்துவிட்ட அண்ணா நோயுடன் மனமும் சேர்ந்து அவரை எப்படி அரிந்திருக்கும் என்று உணர்கிறேன்.

 

அண்ணாதான் எனக்குப் பாடமும் சொல்லிக் கொடுத்தார்.

வைராக்கியங்களை வாழ்ந்து காட்டி, என்ன ஆளாக்கியவள் என் தாய். அண்ணா என் தாய்.

நான் பாக்யவான்.

உலகிலேயே சிறந்த உபாத்தியாயர் என் அண்ணா தான்.

என் தந்தை என்பதால் அல்ல. பின்னால் நான் முறைப்படி பள்ளியில் சேர்ந்தபோது, பல டீச்சர்களிடம் பாடம் கேட்டிருக்கிறேனே!

என் பிள்ளைகளும் அவர்கள் வாத்தியார்களிடம் கற்று வந்ததைப் பாடம் என்கிறார்கள். தலையும் எடுத்தாச்சே!

சரி, என் கண் சாயம் தோய்ந்ததாகவே இருந்து விட்டுப் போகட்டுமே, அதனாலேயும் தான் என்ன?

எனக்குச் சொல்லிக் கொடுக்க மிகவும் பிடிக்கும். அந்நேரத்துக்கு ஆத்மாவின் இதழ் இதழாக விரிவின்பம்... அப்பா...!

ஆனால் கடை விரித்தேன். வருவோர் யாருமிலையே!

'பரீக்ஷை பாஸ் பண்ணுகிற டெக்னிக் வேறு அப்பா! நீங்கள் சொல்லிக் கொடுக்கிற வழி இப்போ செல்லாது!'

கேட்டுக் கொள்கிறேன். புழுங்குகிறேன். இப்படிக் கேட்டுக் கொள்ளும் காலம் இது.

அண்ணா கணக்கும் ஆங்கிலமும்தான் கற்றுத் தந்தார். "மற்றதை நீ பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபின் படித்துக் கொள். இது இரண்டும் தெரிந்துகொண்டாயானால், மற்றதெல்லாம் தானாகவே வரும்!" என்று விட்டார். அந்த மட்டுக்கும் பிழைத்தேன். இவை இரண்டுக்குமே நேரம் போதவில்லை. அண்ணா அப்படிப் பிழிந்தெடுப்பார். இதென்ன காலை ஏழிலிருந்து இரவு எந்நேரமோ அதுவரையிலுமா? நோயில் அவஸ்தைப் பட்டுக் கொண்டே என்னோடயும் முட்டிக் கொண்டார்.

"It is all duty, my boy! I do mine, you do yours." அண்ணா ஆங்கிலத்தில்தான் பேசுவார்; என் நன்மைக்காக,

All work and no play makes jack a dull boy (Not necessarily. It makes him also cunning).

நான் புத்தி மந்தம் அல்ல. oh, yes. என்னைப்பற்றி எனக்குத் தைரியமாகத் தெரியும்.

ஆனால் பத்து வயதுப் பையன்.

 

கணக்கே! கசப்பே கழுத்தறுப்பே ! உன்னை எவன் படைத்தான் ?

பாகற்காயின் ருசி இப்பத்தான் தெரிகிறது. எல்லையற்றதையும் எல்லைப்படுத்தும் கணிதம், தெய்வத்தையே தன்னுள் அடக்கி ஸ்ரீ சக்ரம் என்று.

ஒரு நாள் மாலை அண்ணா எங்கோ அவசரமாகப் போக வேண்டியிருந்தது. நான் செய்ய, கணிதப் புத்தகத்தில் ஐந்து கணக்குகளைக் குறித்துக் கொடுத்துவிட்டும் போய்விட்டார்.

வாசல் திண்ணையில்தான் பாடம் நடக்கும். வீட்டுக்குறடுக்கெதிரிலேயே பெரிய புற்றரை.

வானின் மேலக் கோடியில் ஒரு பிரம்மாண்டமான தங்கத் தாம்பாளம் சுழன்றது. அது வீசிய பொன்னொளியில் புல் தரையில் என் கண்ணெதிரே பையன்கள் பளிஞ்சடுகுடு விளையாடுகின்றார்கள்.

முருகன், ஆறுமுகன், கோதண்டன், பழனிவேல், முனிசாமி, சின்னாண்டி நடேசன், குப்புசாமி, ஷண்முகம். இன்னும் பெயர்கள் மறந்து போச்சு.

நடேசனைக் கட்டிப் பிடிச்சுக் கீழே தள்ளிவிட்டான்கள். "குடுகுடு" தம் பிடித்தபடி அவன் அத்தனை பேரையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு, கோட்டைத் தொட நகர்கின்றான். விழி பிதுங்குகிறது.

பரபரப்புத் தாங்க முடியல்லே. போட்டது போட்ட படி, படியிறங்கி விட்டேன். எச்சரிக்கையில் அலறுவது போல, கணக்கு நோட்டின் பக்கங்கள், காற்றில் படபட வென்று அடித்துக் கொண்டன.

அண்ணா திரும்புகையில் இரவு வந்துவிட்டது. கிராமத்தில்தான் இரவின் வருகையைத் தனிச் சம்பவமாகப் பார்க்க இயலும், இரவின் புருஷன் இருளின் சால்வையைக் கம்பீரமாக வீசிப் போர்த்துக்கொண்டு நுழைகிறான்.

வீடு என்னவோ பெரிதேயொழிய உருப்படியா இரண்டு அறைகள் தேறாது. லங்கிணி வாய்போல், வானைப் பார்த்த பெரிய நடு முற்றம் மிச்சமெல்லாம் தாழ்வாரம், கூடம். மண்ணெண்ணெய் விளக்குதான். அதுகூட வீடு முழுக்க வெளிச்சமாகக் கட்டுப்படியாகாது. புழங்குமிடம் தவிர மிச்ச இடங்களில் கோயில் பிராகாரத்தின் அச்சம் தரும் இருள், நிழல்கள்.

"Ram! என்ன பண்ணினே?"

"கணக்கெல்லாம் போட்டுட்டேம்பா !"

"அட, you sound bright. Tired- இருக்கு. நாளைக்குப் பார்க்கட்டுமா? இல்லை, கொண்டு வா- பார்த்துடறேன். அப்புறம் ஆறின கஞ்சி ஆயிடும்."

அதுதான் அண்ணா,

 

"Yes, yes!" தனக்குள் முனகிக் கொள்கிறார். நான் கணக்குச் செய்திருக்கும் வழியை அடி அடியாகப் பார்த்துக் கொண்டே "That is right, ஹ்ம், கொஞ்சம் கவனமாயிருந்துட்டே, ராம்-உன்னை மிஞ்ச யாரும் இல்லை. Good- good. இது என்ன?" மூணு கணக்குத் தாண்டி யாச்சு. நாலாவதில் குழம்புகிறார். அவர் புருவங்கள் புரியாமல் நெரிகின்றன.

"ஏண்டா, இது எப்படி வந்தது?"

எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. மூன்றோடு, நாலையும் ஐந்தையும் மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு போய்விடுவார் என்று நினைத்தேன்.

அடுக்குள்ளிலிருந்து வற்றல் குழம்பு வாசனை கூடத்தைத் துரக்குகிறது.

"இதென்ன நடுவிலே gap, விடை மாத்திரம் எப்படி வந்தது?" நாலும் அப்படி, அஞ்சும் அப்படி என்னைப் பார்த்து வினாவில் விழிக்கிறார். நான் திருதிருவென விழிக்கிறேன்.

" !" புதிர் அவருக்குப் பிரிஞ்சு போச்சு அவர் கண்கள் அதிர்ச்சியில் என்மேல் விரிந்து பெரிதாயின.

"My God! ராமாமிருதம், நீயா ?"

அண்ணா இப்படித் துடித்துப் போவார் என்று நான் நினைக்கவில்லை.

"அம்மாப் பெண்ணே !"

அம்மா அடுக்குள்ளிலிருந்து வெளியே வந்து வாசற் படியில் நின்று என்னை மெளனமாகப் பார்க்கிறாள். எனக்குப் பரிந்துகொண்டு அம்மா எப்பவுமே வந்ததில்லை. அவளுக்கு எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. ஆனால், அவளுக்குத் தெரியாததே இல்லை.

அண்ணா என்னை ஒன்றும் செய்யவில்லை. எழுந்து சென்று கூடத்து அலமாரியில் இருந்த படத்துக்கெதிரே நின்று கன்னங்களில் போட்டுக்கொண்டார்.

"பெருந்திருவே, நீதான் என் பிள்ளையைக் காப்பாத்தனும் தெரியாவிட்டால் சொல்லிக் கொடுக்கலாம். துரோகத்துக்கு என்ன செய்வேன்?"

இப்போ தெரிகிறது. எனக்குச் சொல்லிக் கொடுப்பதில் அண்ணா எப்படித் தன்னை ஆஹூதியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று. அப்போது தெரிந்தது அண்ணா நிலை கண்ட ஒரு திகில்தான்.

"என்னை மன்னிச்சுடுங்கோ!"ன்னு விசும்பினேன், "மன்னிச்சுடுங்கோ! மன்னிச்சுடுங்கோ!" மந்திரம் மாதிரி.

உடலின் பரவாட்டல் தாங்காமல், கூடத்தில் அங்குமிங்குமாகப் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு அலைந்தார். யுகம் கடந்தது. அம்மா பார்த்துக்கொண்டு நிற்கிறாள்.

 

ஏதோ யோசனையில், "I may forgive you, but I can't forget what you have done."

வார்த்தைகளின் பொருளைக் காட்டிலும் அந்தக் குரலில் கசிந்த துயரம் தாங்க முடியவில்லை. விக்கி விக்கி அழுதேன்.

ஆனால், அது அந்நாள்.

இருங்கள் யாழின் மீட்டல் ஓயவில்லை.

 

35. ஒரு மீட்டல்

 

முன்பெல்லாம், யார் யாரை ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், அநியாயம் இழைத்துக் கொண்டிருந்தாலும், அவனவனுக்கு மனச்சாக்ஷி என்று ஒன்று இருக்கிறது. அதனுடைய உறுத்தல் விடாது. அதையே ஒரு ஆறுதலாக, தேறுதலாகச் சொல்வதுண்டு, சொல்லிக் கொள்வதுண்டு. கடவுள், அவர் இருக்கிறாரா இல்லையா என்கிற அடிப்படைக் கேள்வி, வாழ்க்கையின் கடையலில் வயதுக்கு வயது பல கட்டங்களில், பல உருவங்கள் மாறித் தற்சமயம் என் மனதில் அதன் தீர்மானம் என்ன வென்றால், அவன் எங்கும் நிறைந்திருக்கும் முறை, அவனவன் மனதையே அவனவனுக்குச் சாக்ஷியாக நிறுவியிருப்பதுதான். மனச்சாக்ஷிப்படி கேட்கிறானோ இல்லையோ அவன் எண்ணத்தின், செய்கையின் நியாய, அநியாய உணர்வைத் தப்ப முடியாது. அந்த உணர்வே தான் ஆண்டவன்.

வரவர நடப்பைப் பார்த்தால், மனச்சாக்ஷியே கொல்லப்பட்டு விட்டதோ, அல்லது அதன் குரல் எட்டாத ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்டதோ என்று திகைப்பாயிருக்கிறது! அதனாலேயே மனோதைரியம் கலகலத்துப் போய்விடுகிறது.

அல்லது வீசை, பலம் K.G. கிராமாகவும், படி ஆழாக்கு, லிட்டர் மில்லியாகவும் மாறி விட்டாற்போல், நியாயத்துக்கும் எடை மாறிவிட்டதா, சாஸ்திர எடையிலிருந்து, சமுதாய எடையாக காலத்தின் மேல் பழியைப் போட்டுக்கொண்டு, செளகரியம்தான் நியாயம் என்கிற புது எடையில், நியதிகளையே மாற்றி விட்டதோ?

அண்ணா வலியுறுத்திய கட்டுப்பாடு, ஒழுங்கு, திட்டங்கள் எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்த பாடம் மட்டில் தான். அப்புறம் நாங்கள் அவிழ்த்துவிட்ட கன்றுக்குட்டிகள்தான். பின்னங்கால்களை உதைத்துக் கொண்டு அவர் மேலேயே துள்ளலாம். அண்ணாவிடம் அவ்வளவு சலுகை உண்டு.

தோள்மேல் கை போட்டுக் கொள்வார். செல்லமாகத் தலை மயிரைக் குலுக்குவார். இரவு பெரிய கயிற்றுக் கட்டிலில் அவர் காலடியில்தான், பூனைக் குட்டிபோல் சுருண்டு படுத்து உறங்குவேன்.

"ராம்!" தேன், தேன்.

மனோதத்துவ ரீதிப்படி, மனிதன் இன்பம் நுகரும் வக்கிர வழிகளில் ஒன்று: பிறனுக்குக் கொடூரம் இழைத்து அவன் படும் வேதனையில். இன்னொன்று, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதில். முதல் வகை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அநேகமாக அது தானே நடந்து கொண்டிருக்கிறது!

பின்னதன்படி, தன்னைத்தானே, உடலையோ, மனதையோ மெனக்கெட்டுப் புண்படுத்திக் கொண்டு, அதன் விளைவாய் கசிவில் மகிழ்வது, பட்டினி கிடப்பது, தவம் கிடப்பது, தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது இவையெல்லாம் அடங்குமோ என்னவோ?

தான் செய்த தவறை ஒப்புக்கொள்வதும் தற்கொடுமையில் சேர்ந்ததுதான் என்று கட்சி பேசுவோருக்கு, அப்படியல்ல என்று உறுத்துவது அவசியமாகிறது.

இரண்டு நாட்களேனும் குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்கள் தின்பதற்காகத் தயாரித்து அம்மா டப்பாவில் அடைத்து வைத்திருக்கும் நொறுக்குத் தீனி எக்கச்சக்கமாகத் திடீரெனக் குறைந்திருப்பது கண்டு இரைவாள். தண்டிக்க வரும்போது, அண்ணா:

"சின்னப் பையன், பின்னே எப்படி இருப்பான்"

"உங்களுக்கு உங்கள் பாடத்தோடு போச்சு. உடம்புக்கு வந்தால் பட்றவள் நானுன்னா!"

"அவ்வளவு அக்குஸா உனக்கு இருந்தால், குழந்தைகளின் கண்ணில் படாமல், கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். இத்தனை வயது எனக்காச்சு. ஆஸ்துமாவில் அவதிப்படறேன். சபல புத்தி போறதோ?"

அண்ணாவின் நோக்கு முறைக்கு இது ஒரு மாதிரி.

மறுநாள் வயிற்று வலியிலும், வயிற்றுப் போக்கிலும் அவஸ்தைப் படும்போது, அண்ணா:

"ஏண்டா பையா, நான் என்ன பண்ணட்டும்? நீ பண்ணினதுக்கு நீ படறே!"

அண்ணாவின் நோக்கு முறைக்கு இது இன்னொரு மாதிரி.

முதல் குற்றத்தை உடனேயே ஒப்புக் கொள்ளாததால் அதை மறைக்க மற்றொன்று, அடுத்து அதன்மேல் ஒன்று. விளையாட்டுப் பொய், வெள்ளைப்பொய், அதை ஸ்தாபிக்க கறுப்புப் பொய், விபரீதப் பொய், விஷப் பொய், அப்புறம், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று கடைசி வரை வக்கிரப் பிடிவாதம். இப்படி வாழ்வே ஒரு பொய்ச் சங்கிலியாக. இந்தத் தொடருக்கு முடிவுதான் எங்கே? அல்ல, முடிவே கிடையாதா?

கணக்குத்தான் கசப்பு. அண்ணா கற்றுக் கொடுத்த விதத்தில், வெகு சீக்கிரமே ஆங்கிலத்தில் ருசி கண்ட பூனையாகிவிட்டேன். அண்ணா கரைத்துப் போட்டியதற்குக் காரணங்கள் உண்டு. அது பிரிட்டிஷ் ராஜ் காலம். வயிற்றுப் பிழைப்புக்கு ஆங்கிலத்தை நம்பியிருந்தோம். மற்றும் அற்புதமான பாஷை, உலகின் எல்லா பாஷைகளையும் ஒசைகளாகவும், சொற்களிளும், பாவங்களையும் ஸ்வீகரித்துக்கொண்டு, எப்பவும் வளர்ந்து கொண்டே, ஜீவ நதியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் பாஷை.

"என்னவோ பொய், பொய் என்று புழுங்குகிறாய்! நீ அப்படியே நிஜத்தின் பொக்கிஷமா?

இரண்டுமே மாயையின் சலனங்கள்.

ஒரே பொருளைப் பார்க்கும் இரண்டு கோணங்கள்.

ஒருவனின் பொய், மற்றவனுக்கு மெய்.

காலத்தோடு ஒத்துப் போகாதவனின் கவைக்குதவாப் பேச்சு."

தர்க்கங்களை மேலும் மேலும் சரக்கூடாகக் கட்டும் போது, தன்மேலேயே தனக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது.

நேர்மை அற்றதே நியதியாக மாறிக்கொண்டிருக்கிறதா? நேர்மை எதற்கு? நேர்மை என்பதே என்ன?

பயம்-மனிதன் ஒருவனை ஒருவன் ஆளும் கோல். பலம்- அதுதான் நேர்மையா?

ஏதேதோ சொல்லுக்காவும் லக்ஷியங்களாகவும் வாழ்ந்து காட்டிய நம் காவிய, இதிகாச, புராண நாயகர்கள் வியர்த்தமா? "இவைகளிலிருந்து கோட்பாடுகள் காட்டிக்கொண்டு, எங்களை மிரட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மடிசஞ்சிகள் உங்கள் காலம் நெருங்கி விட்டது. எண்ணத்தின் சுயேச்சை (Free Thinking) உங்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியாச்சு."

பையன்கள், 'கட்' அடிப்பதையும். 'பிட்' அடிப்பதையும், அதற்கு வாத்தியார் உடந்தையாக இருப்பதையும், இல்லாட்டி அவர் மண்டையை உடைக்கப் போவதையும் பற்றிப் பெற்றோர்கள் முதியோர்கள் முன்னிலையிலேயே சர்வ சகஜமாகப் பேசிச் சிரித்துக் கும்மாளம் அடிக்கையில் - இவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்?

இதைக் கேட்டுக்கொண்டு நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? "பார்த்தும் பார்க்காமல், கேட்டும் கேட்காமல், உங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு போகத் தெரியாவிட்டால் அவஸ்தைப்பட்டிண்டிருங்கோ. சொன்னால் செய்துவிடப் போகிறான்களா? உம்-ஊம் மேலே ஒட்டிண்டு போங்கோ-"

அண்ணா எனக்கு விஸ்தாரமாக நடத்துவதற்கு ஒரு இங்கிலீஷ் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

"The king and the Four Derwishes." பெயர் கூட இன்னும் நினைவிருக்கிறது. நல்ல தடிமன். தற்செயலாக அதையெடுத்துப் புரட்டினபோது கதை சுவாரஸ்யத்தில் அதிலேயே ஆழ்ந்துவிட்டேன். நாலே நாட்களில் படித்து முடித்துவிட்டேன். அண்ணாவுக்குத் தெரியாது.

ஒரு நாளைக்குச் சாங்கோ பாங்கமாக உட்கார்ந்து கொண்டு, ஒரு முறை அர்த்தமாகக் கனைத்துவிட்டு, அண்ணா: Rama! டிக்ஷ்னரியோடு வா! உனக்கு ஒரு புதுப் புத்தகம் ஆரம்பிக்கப் போகிறேன்."

", இதுவா? இது நான் படிச்சாச்சே!"

"No, no இருக்காது. உன்னுடைய வழக்கமான டிமிக்கி ட்ரிக்ஸ் வேண்டாம். இதை உன்னால் படிக்க முடியாது. இது Tough."

"இல்லேண்ணா, கேளுங்கோ, நான் கதையைச் சொல்லட்டுமா ?"

நான் சொல்லிக்கொண்டே வர வர, அண்ணாவின் முகத்தில் ஒளியும் நிழல்களுமாக மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தன. ஒருவாறு நான் சொல்லி முடித்ததும்- கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்- அண்ணா ஏதோ ஒரு மாதிரியாக என்னை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மெளனம் ஏதோ ஒருவிதத்தில் பயமாக இருந்தது.

புத்தகத்தை மூடி என் மடியில் வைத்தார்.

"Boy! இனிமேல் இங்கிலீஷில், நான் சொல்லிக் கொடுத்து, நீ கற்றுக்கொள்வதற்கு என்னிடம் விஷயம் இல்லை."

எனக்கு அப்போது வயது பன்னிரண்டு.

எந்தத் தகப்பனார் இப்படித் தன் மனம் திறந்து காட்டுவார்?

ஒரே நிறம், ஒரே Size, அடையாளம் தெரியாதபடி கசப்பு மருந்து பில்ஸ்களும், தித்திப்பு மிட்டாய் வில்லைகளும் கலந்துவிட்டன.

பஞ்சமம், மந்தரம் இன்னும் ஏதேதோ ஸ்ருதிகளும், ஸ்வரங்களும் ஒரே சமயத்தில் நினைவின் யாழ் மீட்டலில் தாமே வெளிப்படும் விந்தையை என் சொல்வது? மீட்டலுடன் நான் சரி.

ஆம், இந்த ப்ரஸ்தாரம் ஏன் இன்னும் முத்தாய்ப்பு காணவில்லை ?

மந்திர யாழ்.

 

36. ஒரு பொய்

 

பிற்பகல், சுமார் இரண்டு மணி, வெய்யில் பிளக்கிறது. கிராமத்து வெய்யிலுக்குக் கேட்பானேன்? வழக்கம் போல், திண்ணையில் எனக்குப் பாடம் நடந்து கொண்டிருக்கிறது, கணக்கு. அந்த வேளைக்கு அண்ணா ஒண்டிக்குத்தான், கற்றுக் கொடுக்கும் தீவிரம் இருக்க முடியும். என்னைப் பற்றிக் கேட்க வேண்டாம். வாசலுக்கு எதிரே மைதானத்தில் ஒரு ஒரமாகக் காவல் காக்கும் கருவேல மரத்தின் கிளைகளினூடே, கானல் நலுங்குகிறது. பூமியில் ஒரு மணல் திட்டில், வெள்ளைக் கற்கள் கண்ணாடித் துரள்களாகப் பளபளக்கின்றன.

ஒரு ஒற்றை மாட்டு வண்டி, மைதானத்தின் மேடு ஏற முயன்று கொண்டிருக்கிறது.

"ட்ரியோ, ட்ரியோ! ஹாய்; ஹோய்!"

இந்தச் சமயம் என்னைவிட்டால், நான் ஒடிப்போய்ப் பின்னால் நெற்றியை முட்டுக் கொடுத்து, வண்டியைத் தள்ளுவேன். மேடு ஏறினதும், சட்டென வண்டியில் ஏறி உட்கார்ந்து கொள்வதில் எத்தனை குஷி! கொஞ்ச தூரம் சவாரி கிடைக்கும்.

இரண்டு திண்ணைகளுக்குமிடையே, வாசற்புறத்துக் கட்டாந்தரையில், அம்மா பாக்கை உடைத்துக் கொண்டிருக்கிறாள். ஃபீட்டன் பாக்கு. அம்மாவே வாசனைப் பாக்குத் தயாரிப்பாள். அம்மா தினம் வெற்றிலை போட்டுக் கொள்வாள்.

கைக்கு அடங்கும் ஒரு கூழாங்கல்லால், இரண்டு மூன்று பாக்குகளை ஒன்று சேர்த்து, மறு கையால் தடுத்துக்கொண்டு, என்னதான் ஜாக்கிரதையாகத் தட்டினாலும், பாக்குக்குத் தெறிக்கும் சுபாவம் உண்டே!

ஒரு சிதர் தெறித்து, C.K.நாயுடு Sixer மாதிரித் திண்ணைக்கும் உயரமாக எழும்பி, நேரே என் மடியில் விழுந்தது. லட்டு catch. லபக்கென்று எடுத்து வாயில் போட்டுத் தாடையில் அடக்கிக் கொண்டேன். கொஞ்சம் பெரிய தூள்தான். உடனேயே சுரக்கத் தலைப்பட்டு விட்ட உமிழ் நீரில் ஊற வைத்து- கடித்தால் எட்டு ஊருக்குச் சத்தம் கேட்குமே!- அதக்கி எப்படியோ விழுங்கியும் விட்டேன்.

அண்ணா கணக்கில் ஒரு சிக்கலான இடத்தை விளக்கிக் கொண்டிருந்தார். கணக்குப் புத்தகத்தில் குனிந்தபடியே அது பாட்டுக்கு அது!

அம்மா தெறித்துப்போன துண்டத்தைத் தேடு தேடென தேடுவதைக் காண உள்ளூரச் சிரிப்பாயிருந்தது. ஆனால், சுருக்கவே அம்மா தேடுவதை விட்டு, மறந்தும் போனாள். உண்மையிலேயே அது அவ்வளவு பெரிய விஷயமா என்ன? நானும் மறந்து விட்டேன்.

அப்படி ஒன்றும் ருசியில்லை. பக்குவம் இன்னும் பண்ணவில்லையே. ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நெய் நினைக்கையிலேயே நாக்கை 'ஜிவ்' வென்று இழுத்தது. ஆனால், இப்போ, ஒரு கெட்டிக் கசப்புத்தான் கண்ட மிச்சம்.

 

"ஏண்டா, பாக்குத் தின்னாயா?"

பாடத்தின் நடுவே, என்னைத் திடுக்கிட வைத்தது.

"இல்லையே, அண்ணா!" ஒரு தட்டுத் தடங்கல் யோசனையின்றி உடனேயே மறுப்பு- எந்த விஷயத்துக்கும் மறுப்புத்தான். அந்த வயதுக்கே உரித்தானதா?

"உதட்டோரம் கறையிருக்கே!" உடனேயே பரபரவெனத் தேய்த்துவிட்டேன்.

சனியன், இப்படியும் காட்டிக் கொடுக்குமா என்ன?

"இல்லை, அண்ணா, நான் பாக்குத் தின்கல்லே. நீங்கள் பார்த்துட்டுத்தானே இருக்கேள்! நான் இங்கே விட்டு எங்கே நகர்ந்தேன்?"

அண்ணாவின் பார்வை, சிந்தனையில் என்மேல் ஆழ்ந்தது. பாடம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால், அவர் கண்களில் ஏதோ மூட்டம் கண்டுவிட்டது. ஆனால் நடத்தியபடியே, ஏதோ கவலை.

இப்போது பின்னோக்கில், அசப்பில் அண்ணாவுக்கும் ஜவாஹர்லால் நேருவுக்கும், முக ஜாடையில் சில ஒற்றுமைகள் தெரிகின்றன. டர்பன் அடியில் அண்ணா முகம். காந்திக் குல்லாய் அடியில் நேரு முகம். அதே நீண்டு குறிகிய முகம். மெல்லிய நாசித் தண்டு. லேசாகக் கசப்பு வார்ப்படத்தில் வாய். கீழுதடு சற்றுக் கனத்து. அதே மோவாய்.

நேருவின் கண்கள் கவிஞனின் கண்கள்.

அண்ணாவின் கண்களிலும் சோகத்தின் தேக்கம். நோய் அவரை வாழ்க்கையில் உச்ச கட்டத்தில் சறுக்கி விட்ட துரோகம், அதனால் குழந்தைகளுக்கும் பாதிப்பு என்கிற கிலேசம்.

அண்ணாவும் நல்ல நிறம்.

பாடம் முடிந்த தருவாயில்

"அப்போ நீ பாக்குத் தின்னல்லே?"

"இல்லவே இல்லை அண்ணா!"

பெருமூச்செறிந்தார். எழுந்து உள்ளே போய் விட்டார்.

'நான், தும்பை அறுத்துக்கொண்ட கன்றுக்குட்டி போல், திண்ணையிலிருந்தே 'அவுட் பாஸ்' ஆகிவிட்டேன், என் நண்பர்களைத் தேடிக்கொண்டு.

முருகன், சின்னாண்டி, ஷண்முகம்......

 

ஆனால், விளையாட்டில் மனம் ஊன்றவில்லை. கனத்தது. பொய் சொல்லியிருக்க வேண்டாம். அவசியமேயில்லை. ஆனால், கேட்டவுடன் மறுத்துவிட்டேன். அதனால், கடைசிவரை சாதிக்க வேண்டியிருக்கு.

நான் வீடு திரும்பியபோது, வாசலுக்கெதிரே மைதானம் கும்மிருட்டு. என்னுள் வெளிச்சம் இல்லையே!

முதுகின் பின்னால் கை கோர்த்தபடி, அண்ணா, தரைமேல் குனிந்த முகத்துடன், கூடத்தில் முன்னும் பின்னும் உலாவிக் கொண்டிருந்தார். அது அவருடைய Exercise, கூடம் மூலைக்கு மூலை முப்பதடி அப்போ முன்னும் பின்னும் அறுபது அடி. அப்படி நூறு முறை முன்னும் பின்னும் ஆறாயிரம் அடி. ஒரு மைலுக்குமேல் நடந்த மாதிரி.

நேரே அடுப்பங்கரைக்குச் சென்றேன்.என் தம்பிமார்களும் தங்கையும் ஏற்கெனவே கலத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

கபகபன்னு நல்ல பசி. நிஜம்மா? பின்னே அள்ளி அள்ளிக்கப்பறேனே, அதன் பேர் என்ன?

ஆமாம், அதன் பேர் என்ன?

ஏன் இப்படியெல்லாம் கேள்வி தோணறது?

கையலம்பப் போனபோது அண்ணா கூடத்தில் இல்லை. நல்லதாப்போச்சு, அண்ணா வரதுக்குள் தூங்கிட்டா, அண்ணா பாடத்துக்காகக்கூட எழுப்ப மாட்டார். அது அவருடைய கொள்கை.

அம்மா கூடத்தில் உட்கார்ந்து, கைக்குழந்தையை, எடுத்துவிட்டுக் கொண்டிருந்தாள். லாந்தர் வெளிச்சத்தில், அவள் முகம் மட்டும் ஏற்றிக் கொண்டாற்போல், ரோஜா கலர் அடித்தது.

ஈரக் கையை இடுப்பு முண்டில் துடைத்தபடி திரும்பு கையில்,

"ராமாமிருதம்!"

அம்மா பக்கம் திரும்பினேன்.

"நீ பாக்குத் தின்னையா !"

என் தலை மேலும் கீழும் அசைந்தது. இந்தச் சன்னிதானத்தில், அந்த மறுப்பு ஏன் எழவில்லை?

"ஏன் அதை அண்ணா கேட்டபோது சொல்லலே? 'என் பிள்ளை பொய் சொல்றாண்டி'ன்னு அண்ணா என்னிடம் சொல்லி வருத்தப்படறபோது எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா? அண்ணா வந்ததும் நீயே போய் ஒப்புக்கொள். கையால் களைந்து எறியறதைக் கோடாலியால் வெட்டறவரை வளர்த்து விட்டுக்காதே."

 

"பயமாயிருக்கே, அம்மா!" என் குரலில் கண்ணீர் துளம்பிற்று.

"பார்த்தயா, இதுக்குள்ளேயே, குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பு எந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது! நம்மைப் பத்தி எல்லோரும் நல்ல முறையில் ஆச்சரியப்படனுமே ஒழிய, இன்னாரத்துப் பிள்ளையா இப்படிச் செஞ்சான் என்று கெட்ட முறையில் ஆச்சரியப்படக் கூடாது.

சின்னப் பொய்யில் ஆரம்பிச்சதை இப்படியே விட்டுட்டா- இல்லை. இதைப் பற்றித் தொடர்ந்து பேச எனக்குப் பிடிக்கல்லே. நீ உணர்ந்துண்டா சரி."

பிரியத்தோடு பிகு. அதுகூட ஒரு அம்சமோ?

அண்ணா எப்போ வருவா? நானே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். வர வழியில் அண்ணாவுக்கு ஏதானும்.... கவலையே வந்துவிட்டது.

ஆகவே, அண்ணா உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய், அவரிடம் ஓடோடியும் சென்று.

"அண்ணா, நான் பாக்குத் தின்னலேன்னு சொன்னது பொய்!" என்று சொன்னதுமே, அந்த முகத்தில் மேகம் கலைந்து வெளிப்பட்ட உதயம்- அப்பா! எனக்கும் மார்பிலிருந்து ஒரு பெரிய கனம் இறங்கி. அம்மாடி! இந்த லேசு என்ன சுகமாயிருக்கு: நெஞ்சை அடைச்சுண்டு அண்ணா மேல் திடீர்னு ஒரு ஆசை. ஏன் இப்படிப் பொங்கறது:

அன்றிரவு வாசல் திண்ணையில், நாங்கள் படுத்துக் கொண்டு, அண்ணாமேல், சொகுஸாய் நான் காலைப் போட்டபடி!

"ஏன் அண்ணா, நீங்கள் பொய்யே சொன்ன தில்லையா?"

"அதெப்படிச் சொல்ல முடியும். No Man is perfect. பொய் சொல்றதுக்கு அடிப்படைக் காரணம் பயம். உன் வயசில் நான் சந்தோஷமாயில்லை. பல காரணங்கள். வயிற்றுக்கு ஒழுங்காக இல்லை. பெரியவாளின் பரிவும் இல்லை. அந்த நாளிலே வீட்டுக்குப் பெரியவர்கள் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினால் பையன்கள் மதிக்க மாட்டார்களே என்று அவர்களுக்கு ஒரு பயம். பிரியமான வார்த்தைக்கு நாங்கள் ஏங்கிக் கிடப்பதை அவர்கள் உணரவில்லை. ஆகவே, என் தகப்பனார் திண்ணையிலிருந்தால், நான் கொல்லைப்புறம். அவர் புழக்கடைக்கு வந்தால், நான் வாசல் பக்கம். இப்படியே நாங்கள் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள முடியாமல், ஒட்டாமலே போய்விட்டது.

"ஆனால், அவர் சாகிற சமயத்தில், அந்தக் கடைசி நேரத்தில் அவர் என்மேல், இதுவரை உள் அடக்கி வைத்திருந்த பாசமெல்லாம் பீறிட்ட போது, மனம் கலந்து பேசக்கூட நேரமில்லை. ஐயோ! இவ்வளவு அற்புதமான உறவை, இரண்டு பேரும் அனுபவிக்க முடியாமல் வாழ் நாள் பூரா வீணாப் போச்சே!" என்று நான் பட்ட வருத்தம் எனக்கும் என் குழந்தைகளுக்குமிடையே நேரக் கூடாது என்று அப்போதே பிரதிக்ஞை எடுத்துக் கொண்டேன். நான் உன்னிடம் அப்படி இருக்கையில், அனாவசியமா நீ பொய் சொன்னால் எனக்குத் தாங்குமா? பயமே நம்மிடையில் கூடாது. ஒன்று வைத்துக்கொள். என்னைவிட நீதான் எனக்கு உசத்தி. தன் பிள்ளை மூலம் தான் தகப்பன் பிரகாசம் அடைய எதிர்பார்க்கிறான். ராமன் மூலம் தசரதன் பிரகாசம் அடைந்த மாதிரி."

அண்ணா சொன்னதை யெல்லாம் நான் புரிந்து கொண்டேன் என்று சொல்ல முடியாது.

ஆனால், சொல் வேகத்தில் இருளில் அண்ணா என் தோளைப் பற்றியபோது, அந்த உள்ளங்கை உஷ்ணம் இப்பக்கூட உணர்கிறேன்.

வாசலுக்கெதிர் வெட்ட வெளிமேல், வான் குடையில் நக்ஷத்ரங்கள் நாலைந்து திடீரென்று ஒளி பிதுங்கின.

அதுவும் நினைவிலிருக்கிறது. சிந்தாநதி ஊடே, ஆள் இல்லாத் தனி ஓடம்.

 

37. கோவர்த்தன்

 

சேப்பாக்கத்தில், சி. என். கிருஷ்ணஸ்வாமி ரோடில் நாங்கள் குடியேறிய வீடு ஒரு முஸ்லிமுக்குச் சொந்தம். முப்பது, முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் வரலாறு வீட்டின் முகப்பு, பார்வையில்லாமல், நொண்டிக் குதிரைபோல், சரிவாகத் தோற்றமளித்தாலும் உள்ளே நல்ல விசாலம். இரண்டு கட்டுகள். விசாலமான கூடங்களில் எதிரும் புதிருமாக அறைகள். வானம் பார்த்த பெரிய நடு முற்றம். அதில் ஒரு மருதாணி மரம்.

இங்கு குடியேறின புதிதில் நாங்களும் நொண்டிக் குதிரையாக ஒரு கால் ஒடிந்திருந்தோம். முந்தின வருடந்தான் உற்ற வயதில் என் தம்பி, ஒரு கலியாணத்துக்குத் திருச்சிக்குச் சென்றவன், அங்கே மாரடைப்பில் போய் விட்டான். அதற்கு முதல் வருடம் கலியாணத்திற்கிருந்த தங்கை, மெனெஞ்சட்டிஸ்.

அடிமேல் அடிக்கு யாரைக் கேட்பது.? நம் சவுகரியத்துக்கு, நம் பயத்தில், திருடனுக்கும் கன்னக்கோல் சாத்துவதற்கு ஒரு சுவர் மூலை வேண்டுமே என்கிற முறையில் தானே நமக்குக் கடவுள் வேண்டியிருக்கிறான்.

உத்தியோகத்தில் என் தம்பி, வெகு வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த புள்ளி. அவன் இறந்து ஆறு மாதங்களுக்கு என் வலது தோள் பூட்டு, ஊமையாக

வலித்துக் கொண்டிருந்து. நம்பினால் நம்புங்கள், நம்பாவிடில் போங்கள்.

நானே இப்படி என்றால், அம்மாவைப் பற்றி என்ன சொல்ல ? ஆனால், அவள் வாழ்ந்த முறையில்தான் தெரிந்தது. துக்கம் கொண்டாடுவதற்கு அல்ல. அதற்கு முதுகு காட்டி ஓடுவதற்கும் அல்ல. மார்பில் தாங்கிக் கொள்ளும் கதை அடி.

பொருளாதாரம் படு மோசமான நிலையிலிருந்தது. குடும்ப நிர்வாகம் அம்மாதான். பிழைத்தேன்.

மருதாணி மரத்தை ஒட்டி, எட்டு, ஒன்பது அடி நீளத்துக்கு ஒரு சுவர் மாரளவு உயர்த்துக்கு ஓடிற்று. சுமார் ஐந்தடி தள்ளிப் பக்கத்து வீட்டுச் சுவர் உயரமாக எழும்பிற்று. இந்தச் சுவரின் அர்த்தம் என்ன? இந்தச் சந்தின் உபயோகம் என்ன ? வீட்டுக்காரனைக் கேட்டோம்.

"யார் அம்மா கண்டது? ரொம்பப் பழைய வீடு. அந்த நாள் Zenanaவில், இதுக்கு என்ன வேலையோ?"

எங்கள் வீட்டுக்காரன் அழகன், அப்பா, என்ன நிறம்! அவனுடைய சொந்தப் பெயர் தெரியாது. ஆனால், அவனை அழைக்கும் பெயர் குலாப், நல்ல பாஷை, நல்ல மரியாதை.

அம்மா தன் உதட்டின்மேல் இரண்டு விரல்களை வைத்தபடி அந்த இடத்தைச் சிந்திப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பற்றுத் தோய்த்து வீடு பெருக்க அமர்த்தியிருந்த பங்கஜத்தின் புருஷன் வரதனும் அம்மாவோடு நின்று அந்தச் சந்தைச் சிந்திப்பான்.

பங்கஜம் குள்ளமாக உப்பின கன்னங்களுடன் எப்பவும் சிரித்த முகம். மார்க்கனம் தாங்க முடியலேன்னு என் பிள்ளையாண்டான்களை எத்தனை முறை எடுத்து விட்டிருக்கிறாள்!

அத்தனைக் கத்தனை வரதன் முற்றின முருங்கைக்காய் மாதிரி, உயரமாக, உடம்பு நரம்பு முடிச்சுகளாக வற்றி, கன்னங்கள் ஒட்டிப்போய், முட்டிய மோவாய், பெரிய விழிகள், சதா வெற்றிலையைக் குதப்பிய வண்ணம்.

"ராமாமிருதம். ஒரு இருநூறு ரூபாய் பிரட்டிக் கொண்டேன்! இரண்டு மூன்று மாஸங்களில் திருப்பி விடறேன்."

'எதுக்கு அம்மா?"

பின்னாலே சொல்றேனே, உன்னிடம் மறைக்கப் போறேனா?"

ஒரு நாள் மாலை ஆபீஸிலிருந்து கிளம்பி வந்ததும், உள்ளே நுழைந்ததும், "அம்மே!" என்று ஒரு குரல் மருதாணி மரத்தை அடுத்த சுவரின் பின்னாலிருந்து வரவேற்றது. ஸ்தம்பித்து நின்றேன்.

"வாடாப்பா என்னருமைக் கன்னுக்குட்டி! என்றாள் அம்மா கிண்டலாக,

 

தோள்மேல் அணை கயிறுடன், பால் வழியும் சொம்புடன், வரதன் பின்னாலிருந்து வெளிப்பட்டான்.

"சாமி, நீங்க இப்போ முதலாளி!"

வரதப்ப நாயுடு பால்கார இடையன், என்னுடைய சஸ்பென்ஸ் எப்படி?

அதைவிட அம்மா எனக்குக் காட்டிய சஸ்பென்ஸ் எப்படி?

இரண்டு வாரமாக, வீட்டில் மற்றவர்களும் அம்மாவின் ரகஸ்யத்துக்கு உடந்தை.

மறுநாள் நான் வீடு திரும்பும் வேளைக்கு சந்துச் சுவருக்கும், அடுத்த வீட்டுச் சுவருக்கும் இடையே, மாட்டுக்கு அடக்கமாக, கன கச்சிதமாக, ஒரு ஒலைக் கூரை எழும்பியிருந்தது. வரதன் சகல கலா வல்லபனா? அம்மா கையில், அலாவுதீனின் அற்புத தீபமா?

அன்றிலிருந்து குடும்பத்திற்கு மந்திரக்கோல் நாட்கள் வந்துவிட்டன. 'உன் கண்ணை நீ நம்பாதே' நாட்கள்.

முதலில் எங்கள் பால் செலவுக்குக் கட்டிக் கொண்டது. நல்ல காப்பி. நல்ல பால், நல்ல மாடு. இரண்டு மூன்று மாதங்களுக்கெல்லாம் என் உதவி இல்லாமலே இன்னொரு மாடு; அடுத்த இரண்டாம் மாதம் இன்னொன்று. அப்படியும் வளர்ந்து விட்ட வாடிக்கைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

பட்டணத்தில், அதுவும். திருவல்லிக்கேணியில், அதுவும் வாடகைக்குக் குடித்தனமிருக்கும் இடத்தில், அதுவும் பார்ப்பான் வீட்டில் மாடா? அதுவும் ஒண்ணுக்கு மூணு என்னாலேயே நம்ப முடியலியே, உங்களால் எப்படி முடியும்?

தினப்படி மேஞ்செலவுக்கு, ஏன் சில கணிசமான செலவுகளுக்கே பணத்துக்குப் பஞ்சமில்லை.

பால் கறக்க அம்மா ஒரு பித்தளைக் குவளை வாங்கினாள். அதைப் பொன் என வரதன் தான் தேய்ப்பான். கூடத்தில் ஒரு சின்ன பெஞ்ச் போட்டு அதன் மேல் துணி போட்டு மூடி, பால் நிறைந்த எவர்சில்வர் அடுக்கெதிரே பித்தளை ஆழாக்குடன் அம்மா அமர்ந்து விடுவாள். அது எப்படி, அம்மா உட்கார்ந்தால் மட்டும் முக்காலியே சிம்மாசனம் ஆகிவிடுகிறது?

வந்து வாங்கிக்கொண்டு போவார்கள். "பாட்டி, மாமி, ஆத்தே, அத்தை, ஆயா!" அவரவர் வயதுக்கேற்ற படி அம்மாவை விளித்துக்கொண்டு.

அம்மாவைப் பார்க்கையில் அமைதியின் சிறகு மெத்தென என்மேல் இறங்கிற்று, வெகு நாட்களுக்குப் பிறகு பரவாயில்லை. முழு நேரமும் அம்மா தன் நெஞ்சு ரணங்களை நினைத்துக்கொண்டேயிருக்க அவளுக்கு நேரம் இருக்காது.

 

"என்னம்மா, நீங்க பால் வியாபாரம் பண்றிங்களா, மாரியாத்தாளுக்கு கஞ்சி வார்க்கறீங்களா? நீங்க ஊத்தற அளவும், பால் திடமும் அப்படித்தானே இருக்குது! அரிசி பருப்பாட்டம் ஆழாக்கில் குவிஞ்சி நிக்குதே!"

வரதனோ, கவிஞனோ, எரிச்சலோ!

அம்மா புன்னகை புரிவாள். ஆனால், அவனுக்கு ஆத்திரம் தனியாது. "இதோ பாருங்கம்மா, இப்படி வார்த்தால் வாங்கினவங்களுக்கு ஜெரிக்காது. முதலில் இதைப் பாக்கிற எனக்கு ஜெரிக்கலியே! மாட்டுக்கு காம்பிலே புண் வந்துவிடும்!"

அம்மா சிரிப்பாள். அழகாகிவிடுவாள்.

நல்ல வரதன். மாடு மூணு என்று பேரே ஒழிய மருந்துக்கும் கொசு கிடையாது. மாடுகளைத் தினம் இரண்டு முறை குளிப்பாட்டுவான். கொட்டகையில் கடப்பைக் கற்கள் அவன் அலம்பும் சுத்தத்தில் கரும் பளிங்கென மின்னின.

எங்கள் கன்றுக்குட்டிகள் ஜன்மமெடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவைகளில் துணியும் பஞ்சும் அடைக்கவில்லை. குழந்தைகளை முட்டித் தள்ளி, இனி வீட்டுக்கடங்கா என்று தெரிந்தபின், விற்கப்பட்டன. ஒரே ஒரு கிடேரி. அதை வரதனுக்கு இனாமாக ஒட்டிவிட்டாள், அவன் அதை விற்கக்கூடாது என்று வாக்கு வாங்கிக் கொண்டு.

சாணி, அன்றன்றே, தட்டுவோருக்கு இனாமாக வினியோகமாயிற்று.

அந்த ஆறு, ஏழு வருடங்களுக்குக் குடும்பம் பச்சையாக வாழ்ந்ததெனில், அடிப்படைக் காரணம், அம்மாவின் பால் ராசியும், வரதன் அம்மாமேல் வைத்திருந்த அலாதி விசுவாசமும்தான்.

வீட்டில் பால் பக்ஷணங்களாகப் புழுங்க ஆரம்பித்தன. மோர்க் குழம்பு, அவியல் தவிர. அவியலிலேயே எனக்குத் தெரிந்து மூணு தினுசுகள் இருக்கின்றன. தெரியுமா? திருநெல்வேலி "டொக்" அவியல், மலபார் அவியல், Madras அவியல், ஆம், நான் உணக்கைக்காரன்தான்.

பங்கஜத்துக்குக் கபாலி பிறந்ததும், இங்கிருந்து ஒரு சீரே போயிற்று. 'தாயில்லாப் பொண்ணுடா!'

"நான் ஒண்ணுமே சொல்லவில்லையே, அம்மா!"

"சொல்லித்தான் பாரேன்!" புன்னகையில் சோகம், கண்களில் விஷமச் சிமிட்டல்.

அம்மா நடந்துதான் மார்க்கெட்டுக்குப் போவாள். ஆனால், திரும்பி வருகையில் 'ரிக்க்ஷாவில் வந்து இறங்குவாள். எடுத்துக்கொண்டு போன பை போதாமல், இதற்கென்றே வாங்கிய புதுக் கூடையில் காய்கறிகளுடன்.

 

"போகும்போது எண்ணமே இல்லேடா. ஆனால், அங்கே என்னை சுற்றிப் பச்சைப்பசேல் என்று பார்த்ததும்......"

அந்தத் திகைப்பில் அம்மா முகம் குழந்தைபோல் ஆகிவிடும்.

"இருந்துட்டுப் போகட்டும். தின்கவா மனுஷாள் இல்லே? பச்சையாக் கொடுத்தாலும் போச்சு. முடியாதவாளுக்குப் பண்ணியே கொடுத்தால் போச்சு."

But all things must have an end, even good things.

ஒரு நாள் வக்கீல் நோட்டீஸ் வந்தது. "சொந்தக்காரனுக்கு வீடு தேவைப்படுவதால், இன்னும் இரண்டு மாதங்களில் இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும். இல்லையேல்..." இல்லையா, இத்யாதி.

யார், குலாப்பா?

"ஆமாம், ஏன் கூடாது? ஏன்ய்யா, வீட்டுக்காரன் அனுமதியில்லாமல், நீங்கள் மாடு கட்டிக்கொண்டால் என்ன நியாயம்? வாடகையேனும் கூடக் கொடுக்க வேண்டாமா?" என்று கேட்கிறீர்களா?

குலாப்பும்தானே எங்களிடம் பால் வாங்கிண்டான்? நாங்கள் வந்தபோது கொடுத்த வாடகை ரூ.80/-கடைசியாகக் கொடுத்த விகிதம் ரூ.150/- அந்த நாளில் அது அநியாய வாடகை என்று தான் சொன்னார்கள், மாட்டுக் கொட்டகைக்கும் சேர்த்துத்தான்.

உண்மைக் காரணம், அவனுக்கு ஆகவில்லை- அவனுக்குத் தோன்றாமல் அந்தச் சந்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டது.

எது எப்படியிருந்தால் என்ன? வீடு அவனுடையது தானே! இரண்டு வருடம் கோர்ட்டில் இழுபறிக்கலாம். ஆனால், என்றேனும் ஒரு நாள்……

அந்த நாளும் வந்து விட்டது. மேற்கு மாம்பலத்தில் இடம்பிடித்தேன். திருவல்லிக்கேணியில் ஊசி குத்த இடம் ஏது?

எல்லாச் சாமான்களையும் மாற்றி ஆன பிறகு, கடைசியாக மாடுகள்.

வரதன் ஓட்டிக் கொண்டு வந்து கட்டிவிட்டு அம்மா காலில் விழுந்துவிட்டு, விடு விடெனப் போய்விட்டான். இருந்தால், உடைந்து விடுவானோ என்கிற பயம்.

மாம்பலம் வந்த பிறகு எங்கள் கால வட்டமே மாறி விட்டதென்றுதான் சொல்ல வேண்டும். மாடுகளுக்குப் புது இடம் ஒத்துக்கொள்ளவில்லையோ, புது இடையன் ஒத்துக் கொள்ளவில்லையோ? ஆனால் வரதன் மாதிரி எவன் கிடைப்பான்?

அம்மா தனக்கு வயதாகி விட்டது, இனி முடியவில்லை என்று விட்டாள். குலாப்பின் துரோகம் அவளை அரித்துத் தின்றது.

 

ஒரு மாட்டுக்குச் சீக்குக் கண்டது. அதைத் தேற்றி விற்றாயிற்று. அதற்கு அடுத்த மாதம் மற்றொன்று. நாங்கள் பால் வாங்கிச் சாப்பிடுகிற நிலைக்கு வந்தாச்சு. எதிர்ச் சாரியில் கோடி வீடே பால்காரன் வீடு.

எஞ்சியது ஒரு மாடு. முதன் முதல் மாடு, கறவை இல்லை. விற்க மனமும் இல்லை. வாங்கினவன் கசாப்புக்குத்தான் நேரே ஒட்டுவான்.

அதற்குப் பாவம், போகப் போக வைக்கோலை மென்று தின்கவும் சக்தியில்லை; சிறுகச் சிறுகக் கடைசியில் கட்டாய முழுப் பட்டினி.

நள்ளிரவில் அம்மா எழுந்து கொட்டகைக்குப் போவாள். உதட்டில் இரு விரல்களை வைத்தபடி இவள் அதைப் பார்த்துக்கொண்டு நிற்க, அது எழுந்திருக்கவும் சக்தியற்று அடிக்கடி பெருமூச்செறிந்து, இவளைப் பார்க்க, இருவருக்குமிடையே மோனத்தில் ஏதோ பேச்சு.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல். அம்மா கிணற்றடியில் இருந்தாள்.

மாடு திடுதிடுவென எழுந்து தும்பை அறுத்துக் கொண்டு அம்மா முகத்தை முகர்ந்து, கைகளை நக்கி விட்டுப் பொத்தென்று காலடியில் விழுந்து, உடனேயே உயிர் பிரிந்துவிட்டது.

அம்மா அழுதுவிட்டாள். அம்மா உள்ளே முறிந்து போனாள்.

அம்மா பால்காரனை வரவழைத்துப் பித்தளைக் குவளையை அவனிடம் கொடுத்தாள்.

"வெச்சுக்கோ, ராசி ஏனம். நல்ல மனசோடு பால் ஊற்று."

ஒரு கையால் இரு தவடைகளிலும் போட்டுக் கொண்டு, ஏதேதோ சத்தியம் எல்லாம் பண்ணி விட்டுப் போனான்.

ஆனால், அன்று எட்டாம் நாளே, சோலையப்ப நாயக்கர் பாலை விளாவி, எங்களுக்குக் கொண்டுவந்ததே அந்தக் குவளையில்தான்.

ஸர்வம் துரோக மயம் ஜகத்.

அது ஏன் எந்தப் பால்காரனும், தண்ணீரும் பிரியவே முடியாதபடி அவ்வளவு பொருத்தம்?

பூர்வ ஜன்மாவில் பால்காரன் தவளையா?

சுறா மீனா?

சிந்தா நதிக் கரையில் மணலோரம் துளும்பும் சில சிற்றலைகள்.

 

38. தூதுவன்

 

சமீபத்தில் மும்மடிவாரம் பாலயோகியின் மரணச் செய்தியைப் பத்திரிகையில் படித்து, மிக்க கலவரம் அடைந்தேன். அவருடைய பாலிய வயதிலிருந்தே, சிவராத்திரி சமயத்துக்குத் தினசரிப் பத்திரிகையில் அவருடைய புகைப்படத்தைக் காணுந்தோறும்- அதற்காகவே காத்திருப்பேன்- அந்த முகத்தின் தனி அழகும், சாந்தமும், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மட்டிலேனும், மனதில் ஒரு விதமான அமைதி பாய்வதை உணர்வேன். கூடவே ஒரு ஏக்கம். மற்றவர்போல இவரைத் தரிசிக்க நானும் ஒரு நாள் மும்மடிவாரம் போகேனோ? ஆனால் இதுபோல், துளிர்த்த இடத்திலேயே வதங்கிக் காய்ந்து கருகிப்போன ஆசைகள் எத்தனையோ!

ஆனால், சென்ற நாலைந்து வருடங்களாக வந்த போட்டோக்களில், அவர் உடல் தடித்துப் போய், இனிப் பாலயோகி எனும் பெயர் பொருந்தாது என்று தெரிந்ததும் அதையே மனம் பொறுக்க முடியவில்லை.

அதுவும் அவர் மரணமடைந்த விதம், வேதனையை அதிகரிக்கச் செய்தது. பட்டினிச் சாவாகத்தான் தெரிகிறது. வருடம் பூரா ஆகாரமே இல்லாது வாழ முடிந்த சக்தி குலையும்படி, அந்தச் சக்திக்கும் அடிப்படைச் சித்தம் குலையும்படி, அந்தச் சித்தத்துக்கும், ஏன், எதற்குமே ஆதாரமாய் நம்பிக்கை தன்னை இழக்கும்படி, இத்தனை நாள் இல்லாதது எது நேர்ந்தது? சமாதி நிலை எது எப்படிக் கலைந்தது? பட்டினிக் கோரத்தை அவர் ஏன் அனுபவிக்க வேண்டும்? அந்த அறையுள் என்னதான் நடந்தது? இது யாராலும் துலக்கமுடியாத மர்மமாகவே, கடைசிவரை இருக்கப் போகிறது.

இரும்புத் தாழ்ப்பாள் இட்டு, முத்திரை வைத்த அந்தக் கதவுக்கு வெளியே, இவ்வளவு தூரத்தில், குறியற்ற அம்புகளைப் போன்ற கேள்விகளில் புழுங்கிக்கொண்டே யிருக்க வேண்டியதுதான்,

இல்லை, நான் நினைத்தது அத்தனையும் தவறென, சமாதியிலேயே தேகம் வியோகமாகி, நாளடைவில் இயற்கை வழி க்ஷீணமாகி விட்டதா? அது மட்டும் மனதுக்கு என்ன சமாதானத்தைத் தருகிறது? இதுவரை சிறுகச் சிறுக மனதில் திரண்டிருக்கும் அவருடைய ஆராதனையின் உருப்படி, இப்படியே அவருக்கு நேர்ந்திருக்கக் கூடாதே!

அட, உன் இஷ்டமா, உன் சட்டமா?

இதேபோல, பலப் பல வருடங்களுக்கு முன் நான் சிறான்- நரசிம்ம யோகியைப் பூமிக்கடியில் புதைத்து விட்டு, அவர் குறிப்பிட்ட மணி நேரங்களுக்குப் பின், தோண்டி எடுத்தால் பிணமாகியிருந்தார். ஆனால், பன்முறை இந்தச் சித்தை அவர் செய்திருக்கிறார். பூமிக்குள், எதிர்பாராத விதமாக ஹட யோகத்தினின்று வெடுக்கென விழிப்பு நிகழ்ந்து, சுய நினைவில் உயிர் போன அந்தச் சொற்ப இழைகளுக்கு, மூச்சு எப்படித் தவித்திருக்கும் மனம் என்னென்ன எண்ணியிருக்குமோ?

 

எண்ணிக்கூடப் பார்க்க முடியாத நிலை.

இதுவும் சமீபத்தில் வந்த பத்திரிகைச் செய்தி. இஸ்ரேலில் ஒரு ஆசாமி,'என் கர்த்தர் என்னை என் சாம்பரினின்று மீண்டும் உயிர்த்தெழச் செய்வார்' என்று அறைகூவித் தன்னைக் கொளுத்தச் செய்து, எரிந்து போனவன், அவன் உயிர்ப்புக்குச் சூழ இருந்தவர் எத்தனை நேரம் காத்திருந்தாலும் எரிந்ததுடன் சரி.

மேற்கூறிய மூன்று உதாரணங்களிலும், எந்த நம்பிக்கையின் தெம்பில் இவர்கள் உயிருடன் விளம்பர விளையாட்டில் இறங்கினார்கள்? என் சங்கடம், இவர்கள் கடைசியில் பட்டது உடல் அவஸ்தையா, அல்லது ஏதோ முறையில் அவர்கள் செய்கை அவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்ட அவமானமா? எதைக் காட்டிலும் எது?

பாலயோகியின் அருகே, ஒரு கிருஷ்ணர் படமும், கீதைப் புத்தகமும் இருந்தவனவாம். என் பார்வையில், அவர் எய்தியிருந்த முதிர்ந்த யோக நிலையில், இந்தப் பொருள்களின் துணை, உண்மையில் அவருக்குத் தேவைப்பட்டனவா?

இந்து மதத்தில், இந்து மதத்தைவிட- ஜைன மதத்தில் உபவாசம் இன்றியமையாத நியதி. ஏன், எல்லா மதங்களிலுமே, உபவாசத்துக்கு முக்கியத்துவம் உண்டு. ஜைனர்கள், பெண்டிர் உள்பட, 35 நாட்கள், 75 நாட்கள் என உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். காந்திஜி உபவாசத்தையே அரசியல் ஆயுதமாக எப்படிக் கையாண்டார் என்பது உலக ப்ரசித்தம்.

நோக்கம் எதுவாயிருப்பினும் சரி, இதுபோன்று நீண்ட விரதத்தை மேற்கொண்டு, அது நிறைவேற்றித் தந்த, தரும் நம்பிக்கையின் தன்மைதான் என்ன? ராமன் என்றும் கிருஷ்ணன் என்றும் தெய்வம் என்றும் சொல்லிவிட்டால் போதாது. இந்தக் கூட்டத்தில் அவைகள் வெறும் பெயர்கள். இதன் முதுகெலும்பு, ததீசம், சத்து, எஸன்ஸ் என்ன?

இந்த நம்பிக்கை எந்த இடத்தில், மேற்கூறிய மூன்று இடங்களில் விட்டது? அது விட்டதா? அவர்கள் அதைத் துறந்தார்களா? அவர்களுக்கு இருந்த அந்தச் சொற்ப நேரத்துள், படிப்படியாகக் கழன்றதா? தடாலென்று நழுவிவிட்டதா? இவர்கள் ஏற்கெனவே அடைந்திருந்த மனப் பக்குவத்தில், நம்பிக்கை இழப்புக்கும், உயிர்மேல் பற்றுக்கும் சம்பந்தம் உண்டா?

வேதனைவசியம் பயக்கும், வியக்கும் ஓயாத கேள்விகள், சாவு சமயம், உடலின் மறு செயலை, என் வேளை வரும்போது, ஒருவாறு அனுமானிக்க முயன்று பார்க்கிறேன். என் உண்மையின் தருணம் அல்லவா அது!

 

சென்ற வாரம் ஜுரத்தில் படுக்கையாகி விட்டேன். கூடவே மார்பில் முட்டு சளி, சாதரணமாக எனக்கு ஜூரம் வருவதில்லை (ஆனால் வேறு உபாதைகளை வேணது உண்டு). வந்தால் விடாது. மாதம்கூடச் சாய்த்து விடும். இருமி, வயிறு புண்ணாகிவிட்டது. மூன்று நாட்களாகக் குளிக்கவில்லை. உடலின் அவஸ்தை, உடல் மேல் அவமானம், என்மேல் வெறுப்பு. எல்லா நிலைகளுக்குமே அகம், புறம் இருப்பதாக, அனுபவத்தில் தெரிகிறது. சில அக நிலைகளுக்குள்ளேயே, அக அக நிலை. புறப்புற நிலை- வெங்காயத்தைத் தோல் உரிக்கிற சமாசாரம்.

நோய் மும்முரத்தில் ஒரு வினோத மன நிலை கண்டது. எனக்கும்- சூழ்நிலைக்கும்- இந்த வீடு, என் கிடக்கையில் ஜன்னலுக்கு வெளியே, செம்பருத்திச் செடி, செடியில் சிரிக்கும் பூக்கள், தாண்டி வாழைக் கன்றுகள், காடாக வளர்ந்துவிட்ட முள்வேலி, அப்பால், வெளியே தெரியும் புற்றரை, மேலே வானம், கீழே பூமி, தெருவில் நடமாடும் ஜனங்கள், வீட்டினுள் அவரவர் ஜோலியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தினர்,

இந்தத் திரைச் சீலையில், என் தனி நினைவற்று, என் கட்டானில் இழைத்திருந்த நான்- திடீரென எனக்கும் இதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தமற்று-முழுக்க வெட்டிக் கொள்ளாவிட்டாலும், ஒட்டிக் கொண்டிருந்த ஒரு நரம்பு விட்டுப் போய் (ஒட்டுள் புளியம்பழத் தத்துவம்?)-இனிமேல் மீண்டும் அந்த நரம்பு ஒட்டாது, விட்டது விட்டதுதான்- துரதிருஷ்டிக் கண்ணாடியின் மறு நுனியிலிருந்து பார்ப்பதுபோல், எல்லாம் எட்டி எங்கேயோ தூர், தூர், பஹுதூர். எண்ணத்தின் நூலில் தொங்குகிறேன். மூச்சு விடாமல் முற்றுப்புள்ளி காணாமல் தோன்றியதனைத்தையும் தோற்றமனைத்தையும் அப்படியே கொட்டிவிட வேண்டும் நோக்கத்தில் 'ஏக் தம்'மில் சொல்லிவிடப் பார்க்கிறேன்.

நூல் அறுந்த காற்றாடி, தன் திசையுமிழந்து, காற்றின் அலைவாய். அது கீழிறிங்கும் நேரமும் அலங்கோலமும் எப்படியோ, இல்லை, தரையில் இறங்காமலே, கம்பத்திலோ கிளையிலோ சிக்குண்டு, வேளைக்குக் கொஞ்சமாக, சிண்டு சிண்டாய்ப் பிய்ந்து, இதயகமலவாசியைக் கடைசிவரை அழைக்காத அகந்தையில், மானக்கோலம் ஆகிவிடுகிறதோ என்னவோ?

ஆனால் இந்தச் சொற்பநேரத் துச்சம் கூட, அதன் சுவாரஸ்யமும், சுபாவமும் இல்லாமல் இல்லை. பின்னால் ஒரு மட்டாய் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதன் முன் எச்சரிக்கை. முன் ருசி.

குறிப்பிட்ட மூன்று உதாரணங்களின் பொதுப்படை அம்சம் ஒன்றை இங்கு குறித்தல் வேண்டும். மூவருமே சாவுக்கு அஞ்சியவர்கள் அல்லர். அவர்களுடைய நம்பிக்கை அபாரமாக இருந்திருப்பினும், பரிபூரணமாக, முழுச் சதமாக இருந்திருக்க முடியாது. அவர்களையுமறியாமல் அவர்களுடைய துணிச்சலின் எத்தனாவது

தோலுக்கடியில் ஒளிந்துகொண்டு ஒரு மாகாணி சந்தேகம்..!?!!???

 

IF, BUT/BETWEEN THE CUP AND THE LIP

கையில் எடுத்த கவளம் வாய்க்குச் சேர அநிச்சயம். உயிரின் இயல்புக்கு உள்பட்டதுதானே!

ஆண்டவனுக்கும் அப்பால் பட்ட "ஆனால்!"

தன்னை அளவுமீறிச் சோதித்துவிட்ட கோபத்தில் திடீரெனச் சீறியெழுந்து இவர்களைக் கவிழ்த்திருக்க வேண்டும்.

புலியை வாலைப் பிடித்து இழுக்காதே.

துரத்திக்கொண்டு வந்த பாம்பு வளைக்குள் நுழைந்த பின், வெளியே துடிக்கும் வாலைப் பிடித்து இழுக்காதே. உள்ளேயே அதன் கடிக்கும் நுனிக்கு அதன் உடலை மடிக்க அதனால் முடியும். எந்த சுபாவத்தின் வாய் உள்ளேயும் தலையை நீட்டாதே.

மொத்தத்தில், இவர்கள் அடைந்த முடிவை அடைவதற்கு, இவர்கள் இதுவரை பட்ட சிரமம் தேவைதானா?

ஆனால், பாலயோகி விஷயத்தில் என்ன சொல்லியும் மனதைத் தோற்றிக்கொள்ள முடியவில்லை! இத்தனை பேசி அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டேனோ? நெஞ்சு குறுகுறுக்கிறது.

ஆனால், சாவை த்ருணமாக மதித்த, இந்த மூவர் கால் தூசு பெறாத நான் எந்தவிதத்திலும் இவர்களை மாசு பேச நான் யார்? ஆனால் மன ஓட்டத்தைத் தடுக்க முடியவில்லையே!

ஏலி ஏலி லாமா சபக் தானி?

என் கடவுளே! என் கடவுளே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

1984 வருடங்கள் தாண்டி, சிலுவையிலிருந்து அந்தக் கடைசிக் கூக்குரல், இதை எழுதும்போது கேட்கையில், இப்பவும் குலை நடுங்குகிறது. கோல்கோதாவின் இருள் இதய வானில் கவிகின்றது. தேவகுமாரன் பாடே ஈதெனில் இவர்கள் எங்கே, நாம் எங்கே, நான் எங்கே?

ஆனால், இந்தக் கூக்குரலில் ஒரு உபதேசம் இருக்கிறதோ எனக் கூடவே தோன்றுகிறது.

என்னதான் யார் எத்தனை உயர்ந்தவராய் இருந்தாலும், கடைசியில் மனித சுபாவம் என்பது இதுதான் என்று உணர்த்துகிற மாதிரி.

கர்ணனின் கடைசித் தியாகம். தான் செய்த புண்ணியம் அனைத்தையும் தானம் பண்ணிவிட்டுப் பார்த்தனின் பாணம் தன் உயிரைச் சூறையாடத் தேர்த்தட்டில் காத்துக் கிடக்கும் வெற்றுக் கர்ணன்.

 

யுத்தமென்றும், விமானம் வெடித்ததென்றும், பூகம்பமென்றும், காட்டுத் தீ யென்றும், கடல் புரண்டதென்றும், இயற்கையாகவும் செயற்கையாகவும் நிகழும் மொத்தவாரி உயிர்ச் சேதங்களை இங்கு எடுத்துக்காட்டுக்கு இழுப்பது பொருத்தமன்று. சமாதான காலத்தில், அவகாச நேரத்தில் சிந்திக்க இடம் தரும் தனி மரணத்தைத்தான் இங்கு நினைக்கிறேன்.

இந்த மூச்சில், வினோபா பாவே தன்னை முடித்துக் கொண்ட விதம், கெளரவம் பற்றி எண்ணாமல் முடிய விடியவில்லை..

உடல், சித்தத்துடன் ஒத்துழைக்க மறுக்கிறதென்று கண்டதும், பட்டினி கிடந்து, சடலத்தைக் கழற்றி எறிந்து விட்டார். அவர் செய்கை சட்ட விரோதமில்லையா,

அல்லது அந்தச் சமயத்துக்குச் சட்டம் கண்ணைச் சிமிட்டி விட்டதா? அதெல்லாம் வேறு விஷயம்.

இனி உயிர் நீடிப்பது, இயற்கைக்கே அவமானம் என்று சந்தேகமறத் தெளிந்தபின், பிராணத் தியாகத்துக்கு உரிமை வேண்டும் என்றே, வினோபா காட்டிய வழிப்படி தோன்றுகிறது. ஆனால், அந்த தீரத்துக்கு என்ன தவம் கிடக்க வேண்டுமோ!?

என் இளவரசியிடமிருந்து சேதி தாங்கித் தூதுவன் வந்துவிட்டான்.

என்னைப் பொறுத்தது அந்தண்டை காத்திருக்கும் என் மறு பாதி.

பிறவியும் மரணமும் தன் இரு பக்கங்களாய நாணயம் தானே வாழ்க்கை.

நான் இங்கு ஆண் ஆனால், அது அங்கே என் தலைவி.

நான் பெண்ணானால் அதோ அங்கு என் இளவரசன்.

எப்படியும் என் பிராண நாயகர்.

என் இளவரசியிடம் சேதி தாங்கி, என்னை அவனிடம் அழைத்துச் செல்லத் துதுவன் வந்துவிட்டான். இதற்கென்றே பிறவியெடுத்து, என் வாழ்நாள் பூராக் காத்திருந்த சேதி.

என் மணக் கட்டிலை அலங்கரியுங்கள்.

என் மரணத்தின்போது என் பக்கலில் யாரும் வேண்டாம்.

என் தலைவனை நாம் சந்திக்கப் போம் பிரயாணத்தில் என்னை, உங்கள் பாசாங்குக் கண்ணீரிடையே, ஆபாசக் கூக்குரல்களோடு வழி அனுப்ப வேண்டாம்.

இங்கு இருந்தவரை ஆயுசு பூரா உங்களுக்காக உழைத்தும், இன்னும் உங்களுக்குச் செய்து முடிக்க முடியாத காரியங்களையே நினைவுபடுத்திக் கொண்டிருப்பது உங்கள் வழி.

 

எனக்கு வந்திருக்கும் ஓலையே, என் பிராயண வழிக்கு ரக்ஷாபந்தன். மானஸீகமாக என் மணிக்கட்டில் நானே சுற்றிக் கொள்கிறேன். அதில் எழுதியிருக்கும் ரக்ஷா மந்திரத்தைப் படிக்கிறேன்.

'மனமே கடவுள், மனமே பணியாள், மனமே சத்ரு. மனமே மித்ரு.'

கட்டிலின் அஸ்மான கிரியிலிருந்து பக்கவாட்டைச் சுற்றிக் கறுப்புத் திரைகள் இறங்குகின்றன. கட்டில் நகர்கிறது. என் உள்ளங்கை என் கண்ணுக்குத் தெரியா மையிருளில் மிதந்து செல்கிறேன்.

இது கட்டிலா?

மீண்டும் என் தொட்டிலா?

படிக்கக் கிறக்கமாயில்லை? கவிதையாயில்லை?? சாவே சொர்க்கமாயில்லை?? ஆனால், நனவில் வேளை வருகையில் அதைச் சந்திக்க எப்படி வைத்திருக்கிறதோ?

சிந்தா நதிமேல் கிறங்கலடிக்கும் கயிறு அறுந்த காற்றாடி.

 

39. எல்லாமே சரி

 

"வசுதேவ பாலனே அசுரகுல காலனே
நந்த
கோபன் மைந்தனே நவநீத சோரனே
எழுந்திரும்
!"

 

மார்கழிக் குளிர். கம்பளிப் போர்வை அடியில், மோவாய்க்கு முட்டுக் கொடுத்த முழங்கால் வளைவுள் புழுவாய்ச் சுருண்டு கிடக்கும் அயர்ந்த தூக்கத்தைச் செதிள் செதி*ளாக, பக்குவமாக, மெத்து மெத்தெனத் தூக்கிக் கலைத்து செவிவழி, உள்ளே உடல் பூரா தேனின் துடிப்பில் அபிஷேகமாக வழிந்து, மாற்று மறு போதையென அம்மாவின் குரல் அதுவே ஒரு தனிக் கதகதப்பாக...

அந்த அதிகாலையில் ஸ்நானம் செய்துவிட்டுப் பாடிக் கொண்டே, அம்மா வீட்டுக் காரியங்களில் வளைய வருகிறாள். கிராமத்து விடிவேளை, குளிர், பட்டணத்தில் இருப்போர்க்கு ஒரு நாளும் தெரியப் போவதில்லை. மார்கழியில் தினே தினே, அந்த வேளைக்குச் சுவாமி விளக்கை ஏற்றினால், அத்தனை புண்ணியமாம். வாசற் கொறடில் பிரமாண்டமான கோலத்தின் நடுவே பூசணிப் பூக்கள்.

அந்த நேரத்தை, வேளையின் புனிதத்தை, புனிதமே அழகானதை, இந்நாளின் மனப்பான்மைக்கு உணர்த்தவோ, பொழுது விடிவு.

 

அம்மாவின் குரலில் ஒரு திகட்டலான இனிமை உண்டு. குழலின் தன்மை.

' பையா, எழுந்திரு.'

இன்றிலிருந்து பதினைந்து நாட்களுக்குக் காலையில் பால் வாங்கி வருவது என் முறை. கூஜாவுடன் கிளம்புகிறேன். வீட்டிலிருந்து இரண்டு பர்லாங். இடையில் வாய்க்கால் கடக்கணும். பால்காரி ஆதியம்மா, வயது, எண்பது, அண்ணாவைவிட உயரம், தும்பை நரைக் கூந்தல், இரும்புத் தகடுகளாலும் வார்களாலும் முடைந்தாற் போலக் கெட்டி ஒற்றை நாடி உடல்,

இடையன் பெயர் மொட்டை. ஏனோ புரியவில்லை. ஏனெனில், தலையில் காடாட்டம் மயிர். மாடு கறப்பதில் கில்லாடி குவளயில், க்ளிங் க்ளிங் என இனிய ஒசைகளுடன் ஆரம்பப் 'பீர்'கள் விழுந்து, அடுத்துக் கோபத்துடன் 'புஸ் புஸ்' என்று சீறிப் பால் நுரையுடன் குவளையில் ஏற ஏறக் கோபம் தணிந்து மெத் மெத்தென இந்தக் குணமாற்றம் எனக்கு ஓயாத வியப்பு. அதை இன்னும் நெருக்கமாகக் கவனிக்க, மாட்டின் பக்கத்தில் போனதும், மொட்டை ஒரு காம்பைத் திரும்பிப் பீச்சினதும், அதெப்படிக் குறி தவறாமல். பீறல் நேரே கண்ணுள் விழுந்து, அந்தக் கண்ணைக் கசக்கிண்டிருக்கையிலேயே, அடுத்த கண்ணில் ஒரு பீச்சு.

'கா கா !'

'கீச்! கீச்!'

"கொக்கரக்கோ!"

வாசல்களில் சாணித் தெளிப்பு, மரங்களில் இலைகளின் பெருமூச்சு, பூக்களின் சிரிப்பு.

விடிகாலை ஆலய மணி ஓசை.

இதுவே ஒரு கோஷ்டி கானம்.

இந்த வேளைக்கு, என் நினைப்புக்கு நேர்மாறாக, வாய்க்காலில் ஜலம் காலில் இதவாகக் கதகதக்கிறது.

நான் வீடு நெருங்குகிற சமயத்தில்தான் வானத்தில் சிவப்பு திட்டிடுகிறது. பொழுது விடிகிறது என்று சொல்வதைவிட வெடிக்கிறது என்பது சரியாகியிருக்குமோ? பின் ஏன் பாளம் பாளமாக அத்தனை விரிசல்? பெரிய சத்தம் போடாத விரிசல்கள்.

அண்ணா பல் விளக்கிக் கொண்டிருக்கிறார். அண்ணாவுக்குப் பல் விளக்கத் தினமும் வென்னீர்தான்.

அண்ணாவுக்குச் சமையல்கூடத் தனிதான். அதுக்காக அண்ணாமேல் அசூயை இல்லை. நோயில் அண்ணா படும் அவஸ்தையும் தனி ஆச்சே! இருமி இருமித் துப்பி, ஒருவாறு மார்பிலிருந்து கோழை கழன்ற பிறகுதான், மூச்சே ஒருவாறு வழிப்படும்.

 

அண்ணா மேல் பொறாமையில்லை. ஆனால், இரவு அண்ணாவுக்குக் குடிக்க, அம்மா ஆவி பறக்கத் தம்ளரில் பாலை எடுத்துக்கொண்டு வருகையில் எனக்கும் ஒரு முழுங்கேனும் கிடைக்காதா? அம்மா இத்தனைக்கும், மூணிலே, நாலிலே ஒரு தரம் கொடுப்பாள். மாதம் ஒரு நாள் எல்லாருக்குமே பாலும் சாதம் ஸாங்ஷன். ஆனால், சபலம் மட்டும் விடுவதில்லை.

அண்ணா குளிச்சுட்டு, ட்ரெஸ் பண்ணிண்டு, பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டாச்சு. கழுத்துவரை பொத்தான் கோட்டு, டர்பன். நெற்றியில் குழைத்து இட்ட விபூதி, கழுத்தைச் சுற்றி உத்தரீயம், பஞ்சகச்சம், வேட்டிக் கொடுக்கை ஒரு கையில் பிடித்த வண்ணம் 'வேக் வேக்' என நடந்து போகிறார். அண்ணாவின் வேட்டிக் கரையில் கூட அழுக்கு காணாது.

அதேபோல், அண்ணாவின் மோருஞ் சாதமும் வெள்ளை வெள்ளேர் என்றிருக்கும். தொட்டுக்கச் சொட்டிக் கொள்ளும் குழம்புகூடப் பொட்டிட்ட மாதிரித் துலங்குமே ஒழிய, மோரின் வெண்மை, தூய்மை குறையாது. இத்தனை சுத்தம் அண்ணாவுக்கு மட்டும் எப்படி? என் பொறாமை யெல்லாம் இப்படித் தானிருக்கும்.

வயது ஆறுதான். ஆனால், அந்த வயதுக்கு வேண்டிய நல்லத்தனம் என்னிடம் இல்லை என்றே இப்போ தெரிகிறது.

நான் பள்ளிக்கூடம் போகவில்லை. வீட்டில் இருக்கிறேன் என்று பெயரே ஒழிய, அண்ணா எனக்கு வேண்டிய பாடங்கள், கணக்குகள் செய்யக் கொடுத்திருக்கிறார். எனக்கு ஒழிவு என்பதே கிடையாது. எல்லாரும் மாலையில் விளையாடும் நேரத்தில், அண்ணா பள்ளிக் கூடத்தில் இருந்து திரும்பினதும், என்னைப் பிடித்துக் கொள்வார். என்னைக் கவனிக்க அவருக்குக் கிடைக்கும் நேரம் அப்போத்தான். அது பாட்டுக்குப் போய்க் கொண்டேயிருக்கும். ஏழு, எட்டு, ராச் சாப்பாடு தாண்டிக்கூட அடி, திட்டு, கெஞ்சல், கொஞ்சல், மிஞ்சல் இந்தச் சம்பிரமத்தோடு,

பாடங்களா அவை? என் வயதுக்கு மீறின அறிவை, தகவல்களை என் மண்டைக்குள் கெட்டிப்பு. அண்ணாவுக்கே அது தெரியும். "நாம் குறுக்கு வடம் போட்டவா. பேனா முள்ளைத் தள்ளறவா. நமக்கு விமோசனம் கிடையாது. நம் வயிற்றுப் பிழைப்புக்கு இத்தனை தயாரிப்பு வேண்டியிருக்கு."

என்ன புரியறது. ஏதோ எச்சரிக்கை என்று தவிர?

பாடம் நடக்கையில் அம்மா எனக்கு வாரிசு வர மாட்டாள். ஆனால் அவள் சொன்ன யோசனைப்படி-

 

எங்கள் வீட்டில் பரம்பரையாக ஒரு கோட்டு உண்டு. அதைப் போட்டுக் கொண்டு பாடத்துக்கு உட்காருவேன். அடித்தாலும் வலி அவ்வளவாக உறைக்காது அல்லவா? ஆனால், அனுபவத்தில் நான் கண்டது, அதெல்லாம் வெறும் நினைப்புத்தான். அண்ணாவுக்கு இந்தச் சூழ்ச்சி தெரியாதா? ஆனால் என்னை அவர் கோட்டைக் கழற்றச் சொன்னதில்லை. கன்னத்திலும் அடித்ததில்லை. அது அவருடைய கொள்கை போலும்.

அண்ணா மதியம் திரும்புவதற்குள், குழந்தைகளின் சாப்பாட்டுக் கடை ஆகிவிடும்.

சமையல் ஏதோ ஒரு ஐட்டம்தான். குழம்பு இருந்தால் ரஸம் இருக்காது, குழம்பு, பொரியல் அல்லது ரஸம், பொரியல் அல்லது துவையல், பானையில் குளிர வைத்த மோர். ஒன்றே சாப்பிட்டாலும் நன்றாகச் சாப்பிடுவோம். நன்றாக இருக்கும். இப்போ நாலு குழந்தைகளுக்கு அவர்கள் அம்மை. அவரவருக்குப் பிடித்ததாக நாலு தனித் தனிச் சமையல் செய்கிறாள். அரைத்து விட்டேண்டா கரைத்து விட்டேண்டா என்று கெஞ்சுகிறாள்.

சம்பாதிக்கிற பையன்கள் வகையாக ஓட்டலில் பிடித்துவிட்டு, இங்கே கலத்தில் உட்கார்ந்து எழுந்திருக்கிறான்கள். கலத்தின் கணிசமான மிச்சத்துக்கு ரோஸி, ஏற்கெனவே அதிலேயே கொழுத்து, முற்றத்தில் காத்திருக்கிறது.

"நாக்கை வளர்த்தால், நீ பாடம் படிச்சு உருப்பட்ட மாதிரிதான்." இது என் தாயார் வழி. இத்தனைக்கும் தவம் கிடந்து பெற்ற பிள்ளை நான். செல்லம் கொடுப்பது, பிரியமாயிருப்பது என்பதற்கு அந்நாளில் வேறு அர்த்தங்கள், பார்வைகள்.

அம்மா சொல்வாள்: "பிடித்தால் தின்னு, பிடிக்காவிட்டால் முழுங்கு." வாழ்வதற்கே உபதேச மந்திரமாக இதை நான் பார்க்கிறேன். இப்போதெல்லாம் எவ்வளவு கடித்து விழுங்குகிறேன்! விடமுண்ட கண்டன் என்னிடம் தோற்றான். அவன் ஒரு முறைதான் உண்டான். அதையும் விழுங்க விடவில்லை. தொண்டையிலேயே அவனுக்கு நிற்கிறது.

நானோ?

மத்தியானம் கூடத்தில் உட்கார்ந்திருக்கிறேன். அண்ணாவுக்கு இன்று சாப்பிட்டவுடன் ஒரு சின்னத் தூக்கத்துக்கு நேரம் இல்லை. பள்ளிக்கூடத்தில் இன்ஸ்பெக்க்ஷனாம். உடனேயே போய்விட்டார். கோடி வீட்டில் யாருக்கோ உடம்பு சரியில்லையாம். யோசனை கேட்க, அம்மாவை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். கூடவே கடைசித் தம்பி அவளுடன் ஒட்டிக் கொண்டு போய்விட்டான். எனக்கு அடுத்தவனும், தங்கையும் பட்டணத்தில் சித்தப்பா வீட்டில் இருக்கிறார்கள்.

எனக்கெதிரே, பாடப் புத்தகங்கள் விரித்துப் போட்டுக் கிடக்கின்றன. ஆனால், இந்த வேளைக்கு என்ன ஏறும்?

வீட்டுக்கே திறந்த வாய் போல், வானம் பார்த்த நடு முற்றத்தில் வெய்யில் பிளந்து கட்டறது. மருந்துக்குக்கூட ஒரு மேகத் தேய்சல் இல்லை. கண்ணைப் பறிக்கும் அசைவற்ற, அளவற்ற முழு நீலம். ஒரு பட்சி கூடப் பறக்கவில்லை. வெய்யிலுக்கு பயந்து அது அது எங்கெங்கோ ஒடுங்கிக் கிடக்கு.

வீடே நடு முற்றத்தைச் சுற்றி நாலு தாழ்வாரங்களோடு சரி. போனால் போகிறது என்று இரண்டு தாழ்வாரங்களில் இரண்டு அறைகள். ஒன்று படுக்க, மற்றது சமைக்க.

நள்ளிரவில் ஓட்டு வழி, நடு முற்றத்தில் நாலு திருடர்கள் இறங்கினால் கேள்வி இல்லை. இதுவரை வராததே ஒரு கேள்வி. பகல் வேளையில் அம்மாவுக்கு ஆண் பிள்ளைத் துணை நான்தான். எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா?

ஆனால், இப்போ வந்திருக்கும் திடீர் நிசப்தத்துக்கு என்ன அர்த்தம்? இது எப்படி வந்தது? இல்லை, இது எங்கள் இரைச்சல், வீட்டு இரைச்சல், தெரு இரைச்சல், ஊர் இரைச்சல் எல்லாத்தையுமே தாண்டி, ஏற்கெனவே, எப்பவோ முதற்கொண்டு இங்கேயே குடி கொண்டிருக்கும் நிசப்தம்தான். ஆனால், இப்பத்தான், நான் இருக்கேன்னு தெரியப்படுத்துகிறாப் போல, இது திருடன் பயத்தை விடப் பயமாயிருக்கு. கமாச்சிமா கப்சிப், உதட்டு மேலே விரலை வெச்சு உஷார்ப்படுத்தறாப் போல. இப்ப என்னவோ நேரப் போறது. நேர்றதுக்குத் துளும்பிண்டு நிக்கறது. ஆனால், என்ன நேரப் போறது, தெரியல்லே. இதுக்கு உடம்பில்லே. ஆனால் எங்கேயும் ஒரே கண்ணா, என்னையே பார்த்துண்டிருக்கு. என்ன இது? வலது பக்கத்துத் தாழ்வாரத்தில் கிணற்றிலிருந்து வெளிவந்திருக்கா? என்னால் எழுந்து ஓட முடியல்லே. உடம்பை மாத்திரம் இல்லே, எண்ணத்தையே கட்டிப் போட்டிருக்கு, கயிறு இல்லாமலே. இப்போ நானே இருக்கேனா இல்லியா?

என்னவோ ஒரு குமா குமா என்னை முழுங்க வாயைத் திறந்து காத்திண்டிருக்கு. இதோ அதன் வயிற்றுள் போயிடப் போறேன். போயிண்டே இருக்கேன்.

எங்கோ துரத்தில் பேச்சுக்குரல். குமா மனசில்லாமல் பின் வாங்கறது. தன் உள்ளுக்குச் சுருங்கறது தெரியறது. உதறிண்டு வெளியே ஒடறேன். அம்மா, அவளோடு இன்னும் இரண்டு பேர் பேசிச் சிரிச்சிண்டு வரா.

"அம்மா! அம்மா !!" அலறிண்டு ஓடிப் போய்க் கட்டிக்கிறேன்.

அம்மா என்னைப் பிடித்துக் கொள்கிறாள். "என்னடா கண்ணே?" பதறிப் போனாள். அம்மா என்னை லேசில் 'கண்ணே' சொல்லமாட்டாள்.

"அம்மா! அம்மா !"

அம்மாவைவிட, அம்மா! அம்மா!ன்னு அலர்றதுலே ஏதோ தனித் தைரியமாயிருக்கு. கூடவே அழுகை வரது.

அழறேன். சிரிக்கிறேன். உடனே அழறேன்.

 

கூட வந்தவளில் ஒருத்தி என்னை ஒரு மாதிரியா பார்க்கறா.

"கொளந்தையைக் காத்து தாக்கியிருக்குதம்மா! மூஞ்சியே சரியாயில்லே!" குனிந்து பூமியிலிருந்து மண்ணைக் கிள்ளி, என் நெற்றியிலிட்டு,

"துப்பு! துப்பு!" துப்புகிறேன்.

அவளும் துப்பறாள்.

என்னுள் விக்கல் அலைகள் படிப்படியாக அடங்குகின்றன.

அப்பத்தான் அம்மா இடுப்பில் இழுத்துக் கட்டியிருக்கும் புடவைத் தலைப்புல ஏதேதோ முடிச்சு முடிச்சா என் மூஞ்சியை உறுத்தறது தெரியறது. தலைப்பைப் பிடித்து இழுக்கிறேன்.

மடியிலிருந்து கொட்டறது.

"ஹாய், வேர்க்கடலை!"

முதுகில் வாங்குகிறேன்.

இதுதான் சரி. இப்போ எல்லாமே சரி.

சிந்தா நதியுள் ஒரு சின்னக் கோயில்.

 

40. வான்கோழி நடனம்

 

மெரீனா கடற்கரையில் மணிக்கொடி கோஷ்டி கலைந்துபோன பின்னர் கொஞ்ச காலம் எனக்கு ஏக்கமாயிருந்தது. அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த ஒரு பருவ இளைஞனுக்கு-இன்னும் பையல் பருவம் முழுக்கக் கடந்தபாடில்லை- அந்தச் சுகவாசமே ஒரு பாசனம். என்னுடை குண, சித்த அமைப்புக் கட்டத்தில் ஒரு அதிர்ஷ்ட வேளை ஆசை காட்டிவிட்டு அவிந்து விட்டது. இப்போதெல்லாம் என் அப்போதைய வயதினர் அந்நேரங்களைக் கழிக்க, வழிகள் எவ்வளவோ ஏற்பட்டிருக்கின்றன. அப்படியும் நான் கண்ட ருசியை அவர்கள் காணவில்லை என்றுதான் சொல்வேன். இன்றைய இளவல்களுக்கு எதிலுமே ஒரு வியப்போ, புனிதமோ, தரிசன உணர்வோ, உணர்ச்சியோ இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் எப்போதேனும் வாழ்க்கையில் ஆனந்தம் எனும் நிலையை அனுபவிப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

என் தந்தை எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த முறையில் என் பாலியத்தில், கிராமத்தில், ஒரளவேனும் இயற்கையுடன் இழைந்த வாழ்க்கையில், எனக்குக் கண்டிருந்த இலக்கியப் பற்று பிசுபிசுத்துப் போகவில்லை. கேட்கப் புகின், பட்டணத்தில் என் தனிமையின் வேட்கையில், அது கொழுந்து கண்டது. கன்னிமரா லைப்ரரி, யூனிவர்ஸிடி லைப்ரரி எனத் தேடிப் போய்ப் படித்தேன். இது உத்தியோக வேட்டை நடுவே.

கூடவே என் எழுத்து, சக்தி, சந்திரோதயம், பின்னர் தொடர்ந்து அமுதசுரபி, வெகு நாட்களுக்குப் பின்னர் கலைமகள் பத்திரிகைகளில் வெளிவரத் தலைப்பட்டது.

இதற்குள் வேலையும் நல்ல இடத்தில் நிலைத்ததும், என் வண்டியின் இரண்டு சக்கரங்களும் எண்ணெயும், மையுமிட்ட மாதிரி ஓடின. எழுத்துலகிலும் ஊன்றிக் கொள்ளும் அதிர்ஷ்டம் வந்தது. 'லா..ரா.' பாணி; புரியாத எழுத்தாளன்- அதுவே ஒரு விளம்பரம் தான். அதன் விளைவால் தன்னம்பிக்கையும் அதிகாரமும் ஊற ஆரம்பித்தன. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் நிலை இனி இல்லை. என் கலை எனக்கு. உத்யோகம் குடும்பத்துக்கு, என் கடமையைச் செலுத்த. இரண்டும் தனிக் குதிரைகள். ஜாதிக் குதிரைகள். சேர்ந்து பக்கத்தில் பக்கத்தில் ஓடின.

கலைஞனுக்குப் பசி தெரிந்திருக்க வேண்டும். பசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஆனால், அவனுக்கு வயிற்றுக் கவலை கூடாது. எளிமை, ஆனால் ஏழ்மை அல்ல. நேர்த்தி, ஆனால் தெவிட்டல் அன்று. கலையின் முறையான வளர்ச்சிக்கு இவை என் நிபந்தனைகள். நிமிர்ந்த பார்வை – a sense of romance. ஆனால், நான் குறிப்பிடுவது T.V. யில் 'ஒளியும்-ஒலியும்' romance அல்ல.

நான் குறிப்பிடும் sense of romance இலாது கலைமேல் வேட்கையோ, எந்தவிதமான தேடலோ, ஆத்மீகத் தேடல் உள்பட, இல்லை. நான் குறிப்பிடும் sense of romance is a cosmic emotion. இதற்கு என்னிடம் தமிழ் இல்லை.

அன்று... என்றோ என்று ஆகிவிட்ட அன்று, பண்பு மிக்க அந்த ஒரு சிலர், லக்ஷியவாதிகள், எழுத்துக்கே அர்ப்பணமானவர்கள், இலக்கியத்தைப் பற்றி, நின்று சில

நேரம் தென்பாகப் பேசக் கூடியவர்கள், அந்த நேரத்துக்கு என்னை வேறு தடத்துக்குத் தூக்கியவர்கள்- அந்த மெரீனா கடற்கரையில் மாலை வேளையில் கூடிய குழு. நான் மறக்கவில்லை. என் நினைவின் பின்னணியில் மறைவாக இயங்கிக் கொண்டுதானிருந்தனர். அவர்கள் எழுத்தாளர்கள் என்றால் அல்ல. ஏதா வகையில் அவர்கள் சீலர்கள்: தீரர்கள்.

நானும் ஏன் மணிக்கொடி கோஷ்டிபோல் ஒரு குழு சேர்க்கக்கூடாது? என்னுடைய முக்கிய நோக்கம் இலக்கியத்துக்குத் தொண்டு அல்ல. அன்றுபோல், புத்திசாலித்தனமான, அறிவுப்பூர்வமான சம்பாஷணை சற்று நேரத்துக்கேனும் கிடைக்காதா? ஆயிரம் புத்தகங்களைத் தனியாகப் படித்து, அறிவை விருத்தி செய்து கொள்வது என்ன, சற்று நேரம் நேரிடையாகக் கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கு ஈடாகுமா?

ஆனால், இது நெற்றியில் பட்டம் ஒட்டிக்கொண்டோ, பிள்ளையார் பூசை போட்டோ நடக்கிற காரியம் அல்லவே? கூட்டுவதைக் காட்டிலும், இது தானாகச் சேர வேண்டிய கூட்டம் அல்லவா? சிறுகச் சிறுக, இரண்டு மூன்று மாத காலத்தில் கபாலி கோவில் குளத்துப் படிக்கட்டில், கோபுரத்தைப் பார்த்த திக்கில்... ஒரு பத்துப்பேர். இவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் அல்லர், வாசகர்களுமல்லர். பேச்சு ருசிக்கு வந்தவர்களும் சேர்ந்து இருந்தார்கள்.

இந்தக் கூட்டம், மணிக்கொடி கோஷ்டிக்கு உறை போடக் காணாது என்பதை முன்னாலேயே நான் உணர்ந்திருந்தாலும், நாளடைவில், என் இஷ்டத்துக்கு இதைப் பட்டை தீட்டிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நாளாக ஆக என் ஆசையின் வீண்தான் வெளிப்பட்டது.

இது சாக்கில் ஒன்று சொல்லிவிடுகிறேன். தொழில் முறையில், தச்சனுக்கு உளியை உபயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குயவனுக்குச் சக்கரத்தைச் சுற்றத் தெரிந்திருக்க வேண்டும். கொல்லனுக்கு அவன் கரண்டியைப் பற்ற, சிற்பிக்கு- முடிவேயில்லை. இவர்கள் எல்லாம், பெரிய ஆளிடம் சிற்றாளாகப் படிப்படியாகத் தங்களைத் தயாரித்துக் கொள்கிறார்கள். அதே முறையில் எழுத்தாளனுக்கும், தொழில் முறையில் பார்த்தாலும், ஒரு அதம பக்ஷ முன் தயாரிப்பு வேண்டும். பேனாதானே அவன் ஆயுதம்! இதர இலக்கியங்களோடு தீர்மானமான பரிச்சயம், கற்பனையைச் சீரான பாதையில் செலுத்தும் விதம், சொற்களின் நயங்கள், ஒசைகளின் இடம், punctuation இன் பாஷை... ! முடிவே கிடையாது.

ஒரொரு சமயம் இடங்களிடம் நான் கண்ட வரட்சியில், கண்ணாடி மாறிவிட்டார்போல், அன்னியர்களாகவே பட்டார்கள். இவர்களில் ஓரிருவர் ஆனந்த விகடன், கல்கியில் பிரசுரமாகியிருந்தனர். எனக்கு அப்போது இன்னும் அங்கு இடம் கிடைத்த பாடில்லை. அந்த வெற்றியின் சேவற் கொண்டைச் சிலிர்ப்பு அவர்களிடம் இருந்தது. இருக்கவும் வேண்டியதுதான். ஆனால், என் லக்ஷியங்கள்படி இவர்கள் எழுத்தாளர்கள் இல்லை. இவர்களிடம் அதற்கு வேண்டிய வாசிப்பு, தயாரிப்பு ஆர்வம் இல்லை. இவர்களும் எழுதினார்கள். அவ்வளவு தான்.

இவர்களிடம் நான் Turgenev, Yama the pit, Johan Bojar, Knut Hamsun, Sir Thomas Mann என்று முழங்கினால் யார் பைத்தியக்காரன்? சீக்கிரம் எனக்கே திரிபு அறத் தெரிந்து விட்டது.

எல்லாம் ஒரு ஆள் கூத்தாக, நானே கேள்வி கேட்டு, நானே பதில் சொல்லிக்கொண்டு, நானே என்னை விளக்கிக்கொண்டு- இதென்ன வகுப்பா நடத்துகிறேன்? எனக்கு ஏதோ மானபங்கமாக இருந்தது.

நான் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பேன். அவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பார்கள், தங்களுக்குள்ளே, "இந்தக் கதைக்கு இன்ன சன்மானம் கிடைத்தது." "இந்தக் கதையை Editor திருப்பிக் கொடுத்து விட்டார். இன்ன இன்ன மாறுதல்கள் செய்தால் போடுவதாகச் சொன்னார். நாளைக்கு லீவு போட்டுவிட்டு அதான் வேலை."

 

அவர்கள் எனக்குக் காட்டிய மரியாதைக்குக் குறைவில்லை.

"ஆஹா! ஜனனி, யோகம், கொட்டுமேளம், பூர்வா, புற்று... இந்தக் கதைகளை உங்களால் எப்படி எழுத முடிந்தது? கற்பனைக்கும் அப்பாற்பட்ட சமாச்சாரம், எங்களால் நினைத்தே பார்க்க முடியாது."

ஆனால், இந்த மரியாதைப் பூச்சுக்கடியில், ஒரு சூக்குமமான எதிர்ப்பை உணர முடிந்தது.

"எழுத்தாம், தன்மானமாம், பிறர் தொடவிடக் கூடாதாம், என்ன இந்த மனுஷன் பிதற்றுகிறான்? இதென்ன கீதையா, வேதமா? Editer மாற்றச் சொன்னால், மாற்றிவிட்டுப் போகிறோம். இல்லை, அவரேதான் மாற்றிக் கொள்ளட்டுமே, தலை முழுகிப் போய்விடுமா? நம் பிழைப்பைக் கெடுக்கப் பார்க் கிறான்."

துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு ஒருவொருவராக நழுவும் நாள் நெடுந்துரத்தில் இல்லை.

ஒரு நாள், நான் மட்டும் குளத்தங்கரையில் உட்கார்ந்திருந்தேன். கோபுர விளக்கு எனக்குத் துணை.

சிந்தனைக்கு ஏற்ற சூழ்நிலை தனிமைதான்.

பண்டைய கால குருகுல வாஸம்- சங்கீதம், வேத பாடங்களுக்கு மட்டும்தானா? எழுத்தின் சாதகத்துக்கு இருந்திருக்கக்கூடாதா? இருந்ததா? இல்லையா? நாதோபாஸனையில் துணைக்கு ஒரு dimension ஏனும் உண்டு. செவி நுகர்ச்சிமூலம், பின்பற்றி, ஸ்வர ப்ரஸ்தாரத்திலும், ஆலாபனையுமாக விரிய. ஆனால் எழுத்தில் அந்தத் துணை கூட இல்லை. சிலந்தி தன் வயிற்றிலிருந்து நூற்ற நூலில் தான் ஆபத்கரமாகத் தொங்குவதுபோல, எண்ணத்தின் இழை. ஆகவே, குருவின் துணை இங்கு அத்தியாவசியம் இல்லையா?

என் பெருமூச்சு என்னின்று வெளிப்பட்ட பின் தெரிகிறது. இல்லை, எழுத்தில் இது சாத்தியமில்லை. தந்தை வழி மகன் பரம்பரை இதற்குக் கிடையாது. இது தவம். தனித் தனித் தவத்தின் தனித் தனித் தரிசனங்கள். உள் கண்ணில், வால்மீகி மறு நிகழ்ச்சியாகக் கண்டு, ராமாயணத்தை இயற்றினாற் போல.

ஆகவே, இவர்கள் வந்தார்கள், கலைந்தார்கள், அவரவர் விதிப்படி பிரிந்தும் போய்விட்டார்கள்.

என் எழுத்தின் தனிமையின் உருவமாகக் குளத்தங்கரையில், கோபுர விளக்கும் நானும்தான்.

சிந்தா நதியில் தூண்டிலில் மீன் பிடிக்க வீண் முயற்சி.

 

41. பாஷைக்குள் பாஷை

 

அம்மாவும் நானும் மதுரை மணி கச்சேரிக்குப் போயிருந்தோம். அந்த ஆபோஹி ஆலாப், "காணக் கண் கோடி" கடைசியில் "கந்தன் கருணைபுரி வடிவேல்" -என் போதையை யாருடனேனும் பங்கிட்டுக் கொள்ளவேணும் ஆர்வத்தில்:

"அம்மா, கச்சேரி எப்படி?"

"கூந்தல் உள்ள சீமாட்டி!" அத்துடனேயே நிறுத்திக் கொள்ள இருந்தவள், என் திகைப்பைக் கண்டு, தயவு புரிகிற மாதிரி:

"கொண்டை போட்டுக் கொள்ளலாம். பின்னித் தொங்கிவிட்டுக் கொள்ளலாம். ஒண்ணுமே வேண்டாம், வெறுமென அள்ளிச் சொருக்கிக் கொள்ளலாம். எதுவுமே அழகுதான்!"

எனக்குச் சற்று எரிச்சலாய் வந்தது. இதென்ன பதில்? ஆஹா ஒஹோ என்று என்னோடு சேர்ந்து மகிழ்ந்தால் என்ன ?

ஆனால், நிதானத்தில் அவள் பதிலின் பாஷையைச் சிந்தித்துப் பார்க்கையில், நான் எதிர்பார்த்த பதில் மட்டுமல்ல, இல்லை. அந்தப் பதிலேயில்லை, வேறு என்னென்னவோ பதில்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு ஒன்றிலிருந்து ஒன்றாகப் புறப்பட்டுக் கொண்டே ...ரு...ந்......

அம்மா எப்பவுமே இப்படித்தான்.

"அம்மா உனக்கு தெய்வத்தின் மேல் நம்பிக்கை உண்டா ?"

கையை விரித்துப் புன்னகை புரிந்தாள். உதடுகளின் மேல் படிந்த இரண்டு விரல்கள் அடியிலிருந்து:

"திருடனுக்கும் கன்னக்கோல் சாத்த ஒரு சுவர் மூலை வேணும்."

என் கேள்விக்குப் பதில், அவள் பதிலில் இல்லாமல் இல்லை. ஆனால், ஒரு மாதிரி கையில் அகப்படாத பதில்.

ஒரு சமயம் என் ஆணவத்தின் மதர்ப்பில்:

"ஏம்மா, யார் யாரோ, 'லா..ரா.' வைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். நீயும் பார்த்துண்டுதானிருக்கே ஆனால், அதுபற்றி ஒரு தரமேனும் உன் வாய் திறந்து பாராட்டாக எனக்கு ஒரு வார்த்தை கிடையாதா? வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி-"

மறுபடியும் அந்தப் புன்னகை.

"டில்லிக்குப் பாச்சாவானாலும், தல்லிக்குப் பிட்டா தானேடா? ஏண்டா, நானில்லாமல் நீ தனியா முளைச்சையா?"

இது பதிலா?

ஏன் இல்லை?

 

நீ மண்ணைக் கவ்வினால், அதுவே பதில் இல்லையா?

அம்மா வாய்விட்டுச் சிரிப்பது அபூர்வம்.

ஆனால் அவள் புன்னகை மிக்க சக்தி வாய்ந்தது.

இளமை, முதுமை, வயது, காலம் தாண்டிய ஒரு தன்மை அதில் இருந்தது.

Mystery.

வியப்பு, அச்சம் ஒருங்கே பயக்கும் ஒரு வசீகரம்.

என் பிள்ளைப் பிராயத்தினிலே, கிராமத்தில், எங்கள் வீட்டுக்கெதிர் வீட்டில் குப்புசாமி முதலியார் என்று ஒருவர் நெல் குதிர். முழங்காலுக்கு மேல் கட்டை வேட்டி, மேல் முண்டோடு சரி. வாயைத் திறந்தால் அது பாட்டுக்கு அறப்பளீசுவரர் சதகம், பட்டினத்தார், தாயுமானவர், 'கச்சியேகம்பனே,' தேவாரம், திருவாசகம்- நீர்வீழ்ச்சியாகக் கொட்டும். அக்ஷரங்கள் தனித் தனி முத்தென இலக்கணத் தமிழ் பேசுவார்.

நடைமேடையில் சாய்ந்தபடி, பாடாத நேரம், பேசாத நேரத்துக்கு ஒற்றை விரலால் காற்றில் எழுதிக்கொண்டிருப்பார். அது என்னவோ?

சில சமயங்களில், அண்ணாவின் பாடங்களினின்று அபூர்வமாகக் கிடைத்த ஒழிவு நேரங்களில், ஊர் தாண்டி, வயல் நடுவே பிள்ளையார் கோவிலுக்கு அவருடன் போவேன்.

போவோமே ஒழிய, பிள்ளையாரை வணங்க மாட்டார். சேவிக்க மாட்டார். சன்னிதானத்துக்கெதிரே, மார்மேல் கை கட்டியபடி, தரையில் வட்டம் போட்டாற் போல் சுற்றி நடந்து கொண்டேயிருப்பார். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்கூட. நேரமாச்சு என்று சொல்லப் பயமாயிருக்கும். பிறகு கவனம் வெடுக்கெனக் கலைந்தாற்போல் தலையை உதறிக்கொண்டு சுற்று முற்றும் பார்ப்பார். அன்னியனைப் பார்ப்பதுபோல், கண்ணில் லேசான கடுப்புக்கூட.

"உருவேறத் திருவேறும்" என்பார், முன்பின் தாக்கல் நோக்கல் இல்லாமல்,

"அப்படீன்னா ? நான் என்ன சின்னப் பையன் தானே !

"புரியவில்லையா?" புன்னகை புரிவார் (அரிசிப்பல்). "புரிந்து கொள்ளும்போது புரிந்துகொள். புரியும் வேளை வரும்போது தானே புரியும். அப்போதும் எல்லாமே புரிந்த மட்டில்தான்."

(இந்தச் சிலம்ப விளையாட்டு எனக்கென்ன புரிகிறது?)

இப்போது அனுபவத்தில் அறிகிறேன்.

பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்து கொண்டிருக்கிறது. பரிபாஷைதான் உண்மை பாஷை, ஒரு புருவ உயர்த்தல். ஒரு விரல் சொடுக்கு, ஒரு புன்னகை, அதரத்தின் வில் வளைவு; மோனமாகக் கன்னத்தில் புரளும் இரு கண்ணிர் துளிகள், நாணத்தில் தலைகுனிவு, இவை பேசும் ஒரு அகிலம், மூச்சு விடாமல் மணிக்கணக்கில் கொட்டும் வார்த்தைகளால் இயலா.

எல்லாம் பட்டவர்த்தனத்தில் வாழ்க்கையில் ஒரு வியப்பு. ஆச்சரியத்தை இழந்ததோடு இறைமறைவு, காய் மறைவின் Mysticism... இதையும் இழந்து கொண்டிருக்கிறோம். நாணம், வெட்கம், கூச்சம் எனும் பேரழகுகள் போயே விட்டன.

எதற்குமே நேர்ப் பதில் கிடையாது. இதுதான் உண்மை. எல்லாமே கேள்வியைச் சுற்றிய பதில்கள் தாம். கேள்வி ஒன்று ஆனால், பதில்கள் பல கேள்விக்கு ஒரு பதில். ஒரே பதில் என்பதில்லை. பதில்கள் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், கேள்வி மட்டும் ஒன்றுதான். கேள்விதான் நிரந்தரம் பதில்கள் அதைச் சுற்றி வரும் கிரஹங்கள்.

புலியின் மையத்தில் அதன் அமைதி என்கிறார்கள். கேள்வியும் அப்படித்தானோ? தன்னைச் சுற்றிப் புயலை எழுப்பிவிட்டுப் புயல் நடுவே ஆணித்தரமாக நின்று கொண்டிருக்கிறது.

அதனின்று துளிர்ந்த சொட்டுப் போன்ற புள்ளிமேல், கேள்விக் குறியில், பாஷையின் பரிபாஷனையைப் பார்ப்போம்.

புயலின் நடுவே அமைதியை அடையாளம் முடிந்தால் கண்டுகொள்.

கேள்விக் குறியின் நர்த்தனத்தில்.

கால் கட்டை விரல் நுனிமேல் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்தக் கூத்தன் தெரிகிறானா?

சிந்தா நதியில் புயல்.

 

42. மோனம்-I

 

நவராத்ரி.

மெளனம்.

இந்தப் பயிற்சி கடந்த நாலைந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நாலைந்து வருடங்களாக, வாரம் திங்கள் மெளனம்.

 

இதுவே ஒரு தனிக் கதை. ஒரு தடவை, என் தங்கை மகள், வீட்டுக்கு வந்திருந்த சமயம், என் மனைவியும் நானும் உரத்த சண்டை. அவள் சற்று எரிச்சலுடன் என் பக்கம் திரும்பி, "ஏன் மாமா, நீங்கள்தான் வாயை அடைச்சிண்டு இருக்கக்கூடாதா? என்னிக்கோ ஒரு நாளைக்கு வரேன்"- என்றாள்.

யார் கட்சி பேசினாளே? அவள் வார்த்தை முகூர்த்தம் அதையே உபதேசமாகக் கொண்டுவிட்டேன்.

ஆனால், மோனத்தால் மனதைக் கட்டுப்படுத்த என் முயற்சி இதுவரை வீண். நான் புண்ணியம் தேடவில்லை. ஆனால் என் சுபாவத்தில் நான் மனப்போராட்டம் மிக்கவன்.

ஆனால், எவனுடைய மனப்போராட்டமும் எத்துணை லோகாதயமாக இருப்பினும், அதன் ஆதாரத்தில் ஏதோ விதத்தில் ஆன்மிக சம்பந்தம் உடைத்து என்பது என் கருத்து.

நான் எழுத்தின் உபாசகன். ஐம்பது வருட ஈடுபாட்டுக்குப் பின் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

எழுத்தின் பலிபீடத்தில், தவங்கிடந்து பெற்ற பிள்ளைக்கு இட்ட தங்கத் தொட்டிலிருந்து அவன் வளர்ந்து மனிதனாகி முழு வயது வாழ்ந்து முடிந்த பின் அவன் சிதைக்கு அடுக்கும் வரட்டிவரை- ஏன், பின்னர் அவன் அஸ்திகூட எடையாகிறது. அதன் தீர்ப்பில், சுயவிளம்பரம், ஆஷாடபூதித்தனம், நன்னம்பிக்கைகள், நாணயம் யாவுமே எம்மாத்திரை? இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளும்போது இது போன்ற சாட்டல்களுக்கும் தயாராய் இருத்தல் வேண்டுமல்லவா?

எழுத்து ஒரு ருசி கண்ட சமாச்சாரம். அது வேறு விஷயம்.

உயிரைப் பொருட்டாமல், மனிதன் ஏன் எவரெஸ்ட் ஏறுகிறான்?

விபத்து போதிலும் ஏன் மோட்டார், குதிரை, ஸ்கூட்டர், இதரப் பந்தயங்கள்?

ரயில், ஏரோப்ளேன், கப்பல் பிரயாணங்கள்?

பொட்டாசியம் சயனைட் ருசி அறிய ஒரு பரிசோதனையாக அதை உட்கொண்டானாம்- சின்ன வயதிலேயே படித்தேன். ஆல்கலைன் டேஸ்ட்- அந்தச் சில நொடிகளுக்குள் சீட்டெழுதி விட்டான்.

ஏன்-? ஏன்-?? ஏன்-??? சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தனைக்கும் காரணம் மனிதனின் தியாக உணர்ச்சியா? இல்லை. சமுதாயத்தின்மீது பீறிடும் அன்பா? என்றால், முழுக்கவும் ஒப்புக்கொள்வதற்கில்லை.

 

சவால் என்கிறேன்.

பிறவியின் ஊடே வந்து அவனவன் விதி வட்டத்துள், மனிதன் தன் அமரத்தை நிரூபிக்க முயலும் தன்மை சிலரிடம் அதன் பலாபலன்களுடன் வெளிப்படையாகிறது. பிறரிடம் உறங்கிக் கிடக்கிறது, உரிய உந்தல் நேரும் வரை. ஆனால், யாரிடமும் இல்லாமல் இல்லை. இருக்க முடியாது. சவாலின் மறு பெயர் ரோசம். தனக்கு இல்லை என்று எவனும் ஒப்புக்கொள்ள மாட்டான்; அதுவே தனி ரோசம் (ரோஷம் ?).

எழுத்து ஒரு பெரிய சவால், ருசி கண்டவன் அறிவான். ஒரு பெரிய உந்தல் வெறி.

சொந்த நாணயத்துக்கு, அந்தந்த நாகரிகத்துக்கு எழுத்து ஒரு உரைகல்.

எங்கோ ஆரம்பித்து, சிந்தா நதியின் கதி தள்ளி, எங்கோ வந்துவிட்டேன்-

!- மோனம். மோனத்தில் நான் நாடியது இது வரை எனக்குக் கிட்டவில்லை என்று ஏற்கெனவே கூறி விட்டேன். அமைதி கூடக் கிடைக்கவில்லை. என்னதான் நாடுகிறேன்- திண்ணமாக அறியேன்.

வாயைப் பூட்டிவிட்டால் மட்டும் மோனம் ஆகி விடுமா? உள் புழுங்கும் ஆத்திரங்கள், பல் நெரிப்பு, எண்ணங்களின் சத்தமற்ற ஓயாத இரைச்சல்- இவைகளிட மிருந்து எங்கே ஒடுவேன்?

"இந்த வயசில், இந்த வம்பு எல்லாம் உனக்கேன்? பேசிவிடு. வாயைத் திற. ஆத்திரங்களை வெளியே கொட்டு." நமு நமு-

No.

மோனத்தின் சவாலை ஏற்றே ஆக வேண்டும். நான் உபாசிக்கும் எழுத்துக்கும் மோனத்துக்கும் ஏதோ இணைப்பு இருக்கிறது. எழுத்துக்கு அடுத்த பதவி அதுதான். தவநிலை கேட்கவில்லை. மோனத்தையேனும் அடைய முடியா நிலையா அது?

ஒன்றும் தெரியவில்லை. ஒரு ஏக்கம் தவிர, மோனத்தில் வார முழுக்கில், மூளைக்குள் கொப்புளிக்கும் என் திணறல் மூச்சுக் குமிழிகள் தவிர.

அந்தி யிருளில் ஒவ்வொன்றையும், கொத்துக்கொத்தாயும், தன்னைத்தானே கொடுத்துக் கொள்ளும்.

மின்களின் வெள்ளிச் சுடரில்.

அகிலத்தின் ஸாயங்காலே அதன் பெருமூச்சில்

-இதோ! இதோ!- விளிம்பில் ஏதோ நிற்பது போலும் ஒரு விதமான விறுவிறுப்பு தந்திகண்டப் போகிறது.

"இதுதான் மோனத்தின் பாஷையா? அல்ல, அதன் ஆரம்பமா?"

முகம் காட்டவில்லை.

அங்கம் காட்டவில்லை.

முதுகு காட்டவில்லை.

உருவே தெரியவில்லை.

"காத்திருக்கிறேன்!"

குரல் கேட்கவில்லை. பேச்சு மட்டும் வெளிச்சம் தெரிகிறது.

என் தாதுக்களின் எதிர்த் தாவலில் இந்த விறுவிறுப்பு தெரிகிறது.

அன்றொரு நாள். அண்டை வீட்டில் ஏதோ விசேஷம், மாலை வேளை.

நான் மொட்டை மாடிக்கு ஏணி ஏற முயன்ற வேளை.

விருந்தாளி ஒருத்தி, நான் இங்கு இருப்பதாக அறிந்ததும், என்னைக் காண வந்தாள்.

என் தோட்டத்தில் (!) மேடையில் அமர்ந்து இருவரும் பேசினோம்.

சின்னப் பெண் .பதினெட்டு, இருபதுக்குமேல் இருக்காது. துருதுருவென்றிருந்தாள் கல்யாணமாகி ஒரு வருடமாகவில்லை. இப்பத்தான் சென்னைக்கு வந்திருக்காளாம்.

இதுவரை கல்கத்தாவில்தான் வளர்ந்தாளாம். அவளுக்குத் தமிழ் சரியாகப் பேச வரவில்லை.

ஆனால் படிக்க மட்டும் வரும்போல் இருக்கிறது.

`` calcutta may be dirty and all that. But I love it. I don't like Madras. ஆனால் நான் இங்கே வந்தாச்சு. மாறியாகணும் முழுக்க மாறுவேனா? I must change. my husband's house is now my home. my future life you know, can I change? wiłł I change completely?"

"Yes, I have read your stories. Not many, ரெண்டு line படிப்பேன். உடனே அந்த Feeling, Emotionsஇல் I was caught, very few people have done this to me, you are different, you know."

அவள் முகம் திடீரெனக் குங்குமமாகச் சிவந்து விட்டது. தன்னைத் தன் இரு கைகளாலும் இறுகத்தழுவிக்கொண்டாள். "Then you know, This thing happened.

நம்பினால் நம்புங்கள். நம்பாட்டிப் போங்கள். in between two lines your face appeared. you know, not this face, you know. Not what I see You as you are... No face as such. But certainly a face. certainly you. And I used to hold conversations with you. What conversation? I don't Know. But we talked and time passed into timelessness."

 

my God! இதுதான் மோனத்தின் பாஷையா? இது தான் மோனத்தின் உருவா? எதுவுமே இல்லை. ஆனால் எல்லாமே உண்டு. இந்த நிலையை யாரேனும் புரிந்து கொள்வீர்களா? மேலும்

 

43. மோனம் - II

 

எத்தனையோ இடையூறுகளினூடே, இந்த வாரம் ஒருநாள் மோனம்- என் போதாத முயற்சியிலும், சுவாரஸ்யமான அம்சங்கள் சில வெளிப்படுகின்றன.

முதலில், பேச்சு எத்தனையோ விஷயங்களில்- ஒரு தலையசைப்பு, ஒரு விழி அசைப்பு, ஒரு நெற்றிச் சுருக்கத்தில் போகும் சமயங்கள்- தேவையை இல்லை எனத் தெரிகிறது. பேசப் பேச, விஷயம் நீர்த்துப் போகப் போக, பேச்சுக்கென்றே பேச்சு என ஒரு விரஸமான இரைச்சல்தான் மிச்சம். உண்மையில் பேசவேதான் அப்படி என்ன விஷயம் இருக்கிறது? சிந்தித்துப் பார்க்கில் சந்தேகமாகத்தான் இருக்கிறது. அது அது அதனதன் அளவில் எனும் ஆரோக்கிய விதியில் பேச்சு எப்பவுமே பத்தியத்தில் இருப்பது நலம் என்றே தோன்றுகிறது.

மோனம் ஒரு இயற்கையான நிலை என்று ரமண வாக்கியமாகப் படித்த ஞாபகம். நாக்கும் வாயும் படைத்து, சுற்றி என்னைப்போல் மக்களையும் படைத்து, பேச்சையும் படைத்து, பேசாதே என்றால் யார் கேட்பர்?

ஆனால். பேச்சு அடங்கி, வாய்க்கு ஓய்வு கூடுகையில், முகத்தில் அமைதியில், ஒரு சிற்பியின் செதுக்கல் நேர்த்தியே ஏற்படுமோ?

மோனம் ஊற ஊறப் பேச்சில் மனம் குறைகிறது.

உண்மையிலேயே பேச என்ன இருக்கிறது?

சில நாட்களாகவே, இரண்டு செம்பருத்திச் செடிகளும், வெறி பிடித்தாற்போல, பூத்துத் தள்ளுகின்றன.

ரோஜாவுக்கு எங்கே போவேன்? இந்தச் செடிகளையும் நான் நடவில்லை.

இந்த வீட்டில் நான் கால் வைத்தபோது, இவைதாம் செஞ்சிரிப்புடன் என்னை வரவேற்றன.

பக்கத்து வீட்டுத் தோட்டத்திலிருந்து, இவ் வீட்டு ஜன்னல் வழி, ஜாதி மல்லி மணம் பந்தலினின்று மயக்கம் தரும் வேகத்தில் மோதுகிறது.

சொந்தம் கொண்டாடி யாரும் இந்த மணத்தை இங்கிருந்து பெயர்த்துக்கொண்டு போக முடியாது.

முகராதே என என் மூக்கையும் பிடிக்க முடியாது. மல்லி சிரிக்கிறது

 

நான் மணப்பது உனக்காகவும் இல்லை, என்னைச் சொந்தம் கொண்டாடும் அவனுக்காகவும் இல்லை.

எனக்காகவும் இல்லை.

பின் எதற்காக?

அதுதான் மோன *அப்ப்ம்ம்.

அடுத்து-

துரதிருஷ்டிக் குழாயின் மறு நுனியிலிருந்து பார்ப்பது போலும், சில சமயங்களில் சுற்றியிருப்பவை யெல்லாம், சுற்றத்தார் அடங்க, எல்லாமே எட்ட எட்ட- ஆம்,

இவைகள், இவர்கள் யாவுமே எனக்குத் தெரிந்தவை, தெரிந்தவர்தான். ஆனால், இவர்கள் யாவர்? இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்வி கிலேசத்தில் இல்லை. கோபத்தில் இல்லை, விரக்தியில் இல்லை, ஆனால்--ஒரு வியப்பு.

அப்படியானால், இப்போது என்னை இங்கே, எப்படிப் பிடித்துப் போட்டிருக்கிறது?

நாற்பத்திரண்டு.

அம்பாளுக்குப் பிரீதி, அவளுக்குச் சாத்தப் போவதை எண்ணுதல் ஆகாது.

சாஸ்திரமோ, வழக்கோ, அதன் வழி ஒரு நம்பிக்கை, அதன் அடிப்படை பயம், இப்படித் தடுத்தாலும் எண்ணுவது என் இச்சையில் இல்லையே! பூக்கள், தாம் பூக்கின்றன; ஆனால், அவைகளின் மலர்ச்சி என் சாதனை போல எண்ணுகிறேன்.

42, 43...

இவைகளைக் கொண்டு அவளை அலங்கரிப்பை விட, இவைகளைப் பறிப்பதில் ஒரு த்ரில்லே இருக்கிறது.

தேடித் தேடி........

காம்புக்கடியில் நாசூக்காக உள்ளங்கையைத் தாங்கிக் கொடுத்து, அடுத்து கொஞ்சம் நெகிழ்த்து, கட்டை விரலும், நடு விரலும் உபதேச முத்திரையில், காம்பின் மேல் நுனி சந்தித்து, 'கிள்ளினேன்' என்றால் சொல்லின் கொடுரம் சுள்ளென்று- செடியினின்று கழற்றி, எவர் ஸில்வர் குடலையில் போடுகிறேன் என்பதைவிட, விடுகிறேன்.

தேடித் தேடி.....

'மலர்ந்த பின் பூவைச் செடியில் விட்டு வைக்கலாகாது. அதற்காகச் செடியை ஒட்டவும் மொட்டை அடிக்கலாகாது.' -

இப்படியும் ஒரு சாஸ்திரம் பேசியாகிறது.

தேடித் தேடி. செடியின் அடர்த்தி நடுவில், என் பூவைக் காண்கையில் ஒரு தனிக் களிப்பு, இப்படி ஒவ்வொரு பூவும் ஒரு தனித் தரிசனம். .... ஹ் ஹா..! அகப்பட்டுக் கொண்டாயா? ஆம், அது பின்வாங்குகின்றாற் போல், ஒரு கூச்சம் ஒவ்வொரு சமயத்துக்கும் உணர்கிறேன். ஒவ்வொரு பறித்தலும் ஒவ்வொரு சமயம், தனித் தனி விதி.

பூப்பறிப்பா? வேட்டையா? அவனைத் தேடலிலிருந்து, அவனுக்குக் காணிக்கையாகும் இம் மலர்களைப் பறிப்பது உள்பட வாழ்க்கையிலே இந்த வேட்டை உறவு இல்லாத இடமே கிடையாதா?

சோக ஸுகா புஷ்ப ஹரணம்.

செந்துரைபோல் பூக்கள் குடலையில் பொங்கி உயர்கின்றன.

தேடித் தேடி....

The Hunter and the Hunted.

கைக்கு எட்டியும் எட்டா உயரத்தில் ஆசை காட்டும் ஒரு பூவைப் பறித்தே ஆக வேண்டும் என வந்துவிட்ட ரோசத்தில், குடலையைக் கிணற்றுச் சுவர்மேல் வைத்து விட்டு, அவசரமாகத் திரும்பின இசைகேடில் ஏனம் சாய்ந்து, நல்ல வேளை, கிணற்றுள் விழவில்லை. ஆனால் அத்தனை பூக்களும்-

ஒரு கணம் பிரமை பிடித்து நிற்கிறேன்.

So, இன்றைய பூஜை இப்படித்தானா?

கிணற்றுக்குள்ளிருந்து நீர் மட்டத்தில் மிதந்தபடி குலுங்கிக் குலுங்கிப் பூக்களின் மோனச் சிரிப்பு என்னுள் எதிரொலிக்கின்றது.

மோனத்தில் ஒன்று கண்டு பிடித்தேன்.

என் குரல் தாண்டி, இன்னொரு குரல் கேட்கிறது. அதுவும் என் குரல்தான். ஆனால், இது குகையினின்று கேட்கிறது.

இதயக் குகையின் இருளில் என்னுடைய திரவியங்கள், என்னிடமிருந்தே, மோனத்தின் பத்திரத்தில், மோனக் குரலின் பாராவில் காக்கப்படுகின்றன.

என் வாழ்நாள் முழுதும் சிறுகச் சிறுக, படிப்படியாக என் மூலம் சேர்ந்திருக்கும் என் பிறவியின் பெருமை;

என் ஆன்மாவின் பொன்வண்டு;

என் உயிர் நிலையின் புழுக்கள்;

என் நட்சத்திரத்தின் மின் மினி.

நான் குரலாகக் கேட்பது என் ஆன்மாவின் பொன் வண்டின் ரீங்காரமோ?

என் சேமிப்பு ஆயினும், இவை என் சொத்து அல்ல. அத்தனையும் மோனாம்பரம்.

 

Oh thou silence, my mistress eternal, eventual ultimate,

outside thy closed corridor I stand,

waiting to lay on thy threshold

The dark flower of my life

In all its being and existence

which is all I have got

in this my life.

 

மாலை அந்தியாக மாறிக்கொண்டே வருகிறது.

என்னை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, எப்பவோ எல்லோரும் கொலுப் பார்க்க, கொலுவுக்கு அழைக்கப் போய்விட்டனர்.

கூடத்தில் உட்கார்ந்தபடி, கொலுவுக்கு எதிரே- எனக்கு அம்மாவின் நினைப்பு வந்துவிட்டது. அம்மா எப்படிப் பாடுவாள்!

இந்நாளில் கொலுவுக்குப் யார் பாடுகிறார்கள்? டேப்தான் இருக்கிறதே!

அம்மாவின் குரல் புல்லாங்குழல் போன்றது. ஒரு திகட்டலான இனிமை.

ஒரு பக்கம் வெள்ளிச் சிறகு, மறு பக்கம் பொன் சிறகு கூடிய ஒரு பட்சி பறப்பது போன்ற குரல்.

போச்சு அந்த நாள் எல்லாம் தொண்டையை அடைக்கிறது. மூக்கு உறிஞ்சிற்று. நல்ல வேளை, யாரும் இல்லை.

'கி-றீ-ச்.' கேட் திறக்கிறது.

அடுத்த சில கணங்களில் வெளியிலிருளினின்று கூடத்தில் தோன்றினாள் என்றே சொல்ல வேண்டும். வாட்ட சாட்டமான உடல் வாகு.

'யாரும் இல்லையா?' என்று கேட்கும் சைகையில் கையை ஆட்டினாள். உருண்டை முகம், மேட்டு நெற்றி.

"யாரும் இல்லை என்ற பதிலில், என் மெளன விரதத்தில் கை விரித்தேன்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். விளக்கேற்றி வைக்கக் கூட நேரமில்லாமல் போய்விட்டார்கள்-- சுண்டல் தண்டலுக்கு, புடவைகளை வியக்க.

குத்து விளக்கடியில் கிடந்த தீப்பெட்டியை எடுத்துக் குச்சியைக் கிழித்து விளக்கேற்றினாள். சுடர் திரியில் குதித்ததும் நிழல்கள் வித விதமாக நர்த்தனம் புரிந்தன.

நானும் ஸ்விட்சைப் போட்டேன். ஆனால் current off கூடம் கர்ப்பக் கிரஹமாக...

என்னைத் தோளைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினாள். வாதாம் பருப்பைப் போன்ற மேட்டு விழிகள் என்னைத் துருவின. உக்ரமான முக வார்ப்படம் தான்.

என் காலில் விழுந்து, நெற்றி தரையில் இடிக்க, நமஸ்கரித்து, எழுந்துபோய், வெளியே மறைந்தாள்.

'க்ர்ர்ர்-றீ-ச்!'

புல்லரிப்பில், என் பலம் அனைத்தும் அவள் தன் நமஸ்காரத்தோடு வாங்கிக்கொண்டு போய் விட்டாற் போல், சாறு பிழிந்த சக்கையாக, நாற்காலியில் சாய்ந்தேன்.

 

விளக்கும் வந்தது. மோன அம்பரத்தினின்று பிதுங்கிய ஒரு தருணம்.

 

தருணத்தின் தருணி.

மோன தர்சினி.

இன்பமாயிருக்கிறது.

பயமாயிருக்கிறது.

சிந்தா நதி தீரே மோன விஹாரே.

 

44. மணல்

 

Rockfort Express குறிப்பிட்ட நேரத்துக்கு ஜங்ஷனை அடைந்துவிட்டது. கோபாலன் வந்திருக்கிறான்.அது நடையா,ஓட்டமா ? அதிலிருந்தே அவனை அடையாளம் கண்டு கொள்ளலாம். என்னிடமிருந்து பெட்டியையும் டெல்லிக் கூடையையும் பற்றிக்கொண்டான். நெற்றியில் உதிரி விபூதி, அவன் வராவிட்டால் என் பாடு கஷ்டம்,

திருச்சிக்கு நான் வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆச்சு.

 

கோபாலனைப் பற்றி உங்களுக்குக் கூடத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், என் கதைத் தொகுதி உத்தராயணம், கதைத் தலைப்பு 'அகிலா' காண்க.

அது கதையல்ல. கதை உருவில் அப்பட்டம்.

ஆட்டோ வீட்டுக்கெதிரே நின்றபோது, வாசலில் ப்ரேமா காத்துக்கொண்டிருந்தாள்.

"இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு!!" கோபாலன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான்.

கூடத்தில் ஒரு டைனிங் டேபிள், ஆறு நாற்காலிகள் கூடியிருக்கின்றன.

பல்லை விளக்கி விட்டு பின்னால் கைகட்டிய வண்ணம், சமையலறையுள் நுழைந்தேன்.

இங்கே ஒரு fridge, ஒரு grinder கூடியிருக்கின்றன.

ப்ரேமா காப்பி கலந்துகொண்டிருக்கிறாள்.

"என் அளவு தெரியுமோன்னோ? அளவு மட்டு, சர்க்கரை மட்டு, தெரியுமோன்னோ?"

ப்ரேமா புன்னகை புரிகிறாள்.

ஆனால், அவன் கலவையில் எனக்கு இரண்டுமே சற்றுக் கூடத்தான். என் வாசற்படி தாண்டினாலே இது தான் எனக்கு எங்கேயுமே Trouble. நிறையைக் கொடுத்தால் பிரியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"இந்த வயதில் அட்ஜஸ்ட் பண்ணிண்டு போறதை விட்டுட்டு, எல்லாத்திலும் குங்குமப்பூத் தராசு எடை பிடிவாதம் பிடிச்சால் எத்தனை நாள் நடக்கும்?"

எல்லாமே நடந்த வரைக்கும்தான். வாழ்க்கையே அநித்யமாயிருக்கையில்……

ஆனால், இப்பத்தான் எதிர்பார்ப்பு கூட குங்குமப்பூத் தராசு எடை நுணுக்கத்தில் கூட.

சின்னச் சின்ன எடை. ஆனால், என்ன என்ன வித்யாசம் !

எடைகளை அனுபவிக்கத்தானே, என் நினைப்பில் இந்த யாத்திரை!

காசிக்குப் போகும் நோக்கத்தில், வீட்டுப் படி விட்டு இறங்கி நடக்கும் மூன்று அடிகளிலேயே, காசிக்குப் போன பலன் கிட்டிவிடுவதாக ஒரு வசனம்.

பெற்றோரை மூன்று சுற்றுச் சுற்றியதால் பூப்பிரதட்சணம் செய்து பழத்தைப் பிள்ளையார் அடித்துவிட்டதாகக் கதை.

என் யாத்திரையும் இப்படித்தான்.

 

கோபாலன் மெனக்கெட்டு என்னிடம் வருகிறான்.

"ஆபீசுக்குக் கிளம்பறேன். சுருக்க வந்தால் மணி அஞ்சு, நேரமானால் ஏழு."

அது என்ன நடையா? ஓட்டமா?

என்னையறியாமல், ஓடும் ஜலத்தில் குடம் மெதுவாக அமிழ்வதுபோல், சிந்தனையில் அமிழ்கிறேன்.

இதுபோல், அம்மாவிடம் நான் சொல்லிக்கொண்டு போன பின்னர், இப்பத்தான்.... இருபது வருடங்கள் ஆகியிருக்குமா?

அம்மாவே போயாச்சு. கண் ஈரத்தைக் கோபத்துடன் கசக்குகிறேன்.

சின்னச் சொல்தான். ஆனால், அதற்கு இவ்வளவு சக்தியா? 'நான் ஒரு பொட்டு' எனும் தன்னுணர்வில் இத்தனை பலம் ஊறலா?

சிந்தா மணியின் இன்ப ஓசைக்குச் சரியாக

இதய சூரியன் புறப்பாடு.

Word magic.

"எங்கே போகிறேன், எப்ப திரும்புவேன், எனக்கே தெரியாது.

வாசலில் வந்து உட்கார்ந்துகொண்டு விட்டதால் நான் வந்துவிட மாட்டேன்.

எலெக்ட்ரிக் ட்ரெயின் கடைசி வண்டி 11:45P.M."

யாரிடமும் குறிப்பாயில்லாமல், காற்றுக்கு உரக்க Standing Instructions.

பட்டறைச் சுத்தியால் தட்டித் தட்டை ஆக்கி ஆகிறது. ஆனால், என்ன கர்ண கொடுரம்!

இதுவும் Word magic தான். Word-black magic.

நான் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருக்கையில், வாசல் அறைக்குக் கம்மென்று மணம் எட்டுகிறது.

என்னத்தை நெய்யில் வறுத்தாகிறது?

ப்ரேமா புன்னகை புரிகிறாள். "ஒண்ணுமில்லே. சேமியா, பாயஸம் பண்ணலாம்னு இருக்கேன்."

"ஏன், இன்னிக்கு ஏதேனும் விசேஷமா ?" உண்மையிலேயே எனக்குத் திகைப்பு.

"நீங்கள் பெரியவா வந்திருக்கும் விசேஷம்தான்!"

சின்ன அதிர்ச்சியில், சோபாவில் சாய்கிறேன். "ஆமாம், எனக்கு இன்று-அக்டோபர் முப்பது-- என் பிறந்த நாள் என்று உனக்கு எப்படித் தெரியும் ?"

 

"அப்படியா?" அவள் கண்கள் அலாதி சந்தோஷத்தில் விரிகின்றன. "நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணுகிறேன்."

ஆசீர்வதிக்கக்கூட எழவில்லை. நாரின் தழுதழுப்பு. பூச்செண்டு அடி. அகஸ்மாத்துள் ஒளிந்து கொண்டிருக்கும் தருணத்தின் புன்னகை.

ஆகவே எழுபது. ஆச்சர்யக் குறிக்கு ஏதுமில்லை. ஆயினும் அறியாத ப்ரதேசத்தில் ஏதோ கோட்டை, மதில், ஸ்தூபிகளின் முகடுகள், அடர்ந்த பனிப் படலத்தினூடே எழுவது போன்று, அம்மா கையைப் பிடித்துக் கொள்ளணும் போன்று, ஏதோ அச்சம் தோன்றுகிறது.

எழுபதின் வாசற்படியை மிதித்துவிட்டதால், நான் சரித்திரத்தைப் படைத்து விடவில்லை. வயதுக்கும் சரித்திரம் படைப்பதற்கும் சம்பந்தமில்லை.

எழுபது? ஹூம். மரத்தின் வயதை, அதன் சுழிகளைக் கொண்டு நிர்ணயிப்பதாம்.

என் சுழிகளை எண்ணினால், என்வரை எழுநூறு. A man is old as he feels.

போன வருடம் ஹோசூர் போயிருந்தபோது, ஒரு பெரியவரைப் பார்த்தேன்-- சந்திக்கவில்லை. நூற்று ஐந்தாம். அப்படி ஒன்றும் ஒடுங்கிவிடவில்லை. சதா வெய்யிலில் குளிர் காய்ந்து கொண்டிருப்பார்.

நான் என் பிரயாணத்தில் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், கண்ணன், அவன் கடிதவாக்கில் எழுதியிருந்தான். அவர் இறந்துவிட்டாராம்.

சேதி கண்டதும் ஸன்னமான, ஆனால் கத்திக் கூர்மையில், ஒரு 'சில்' மூச்சு என்மேல் வீசிற்று. பயணத்தினால் என்று அல்ல. ஆனால் எனக்குப் பழக்கப் படாத காற்று. இதுவரை பார்த்திராத ப்ரதேசத்தில் ஏதோ கோட்டை, மதில், ஸ்தூபிகளின் முகடு உயரத்தினின்று வருகிறதா?

என் உடன் பிறந்த நாள், ஸ்டான்லியில், கொஞ்ச காலம் கிடந்தாள்.

நோயாளிகள் வருகிறார்கள், இருக்கிறார்கள், போகிறார்கள்.

ஒரு சமயம், பக்கத்துப் படுக்கையில் ஒரு முஸ்லிம் மாது சேர்ந்தாள். வெளிப் பார்வைக்கு அவள் நோய் தெரியவில்லை. நீண்ட தண்டில் ஆடும் மலர் போன்று மெலிந்த உடல். தும்பை நரைக் கூந்தலின் ஃப்ரேம் ஆன பனிவெள்ளையில் முகம். வயதாகிவிட்ட "ஸ்நோ ஒய்ட்'.

நடக்கவில்லை. படுக்கையிலேயே இருந்தாள். சில சமயங்கள் உட்கார்ந்து, சில சமயங்கள் சாய்ந்தபடி. ஆனால், கீழே இறங்கவில்லை.

மாலை வேளையில் வெளியாரைப் பார்க்க விடும் நேரத்தில் அவள் படுக்கையை ஒரு கூட்டமே சூழ்ந்தது. ஆண்கள், பெண்டிர், குழந்தைகள். அந்தச் சமயங்களில் அவள் முகம் தனி ஒளி அடைந்தது. அவர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டு ஜாலியாகவே இருந்தன. அவளுடைய தோற்றத்தில் பொதுவாகவே, நளினம் கலந்த ஒரு மேட்டிமை மிளிர்ந்தது.

ஒரு குடும்பமும் அதன் சீமாட்டியும்.

ஒரு நாள் காலை, அவள் பல் விளக்க எழுந்திருக்கவில்லை. நர்ஸ் சொல்லி அனுப்பித்து, டாக்டர் வந்து பரிசோதித்து, வீட்டுக்குத் தகவல் அனுப்பித்து, அவளுடைய உறவினர் படுக்கையைச் சுற்றிக் கூடி-

அவளுக்கு வாயடைத்து விட்டது.

அவளுடைய பிள்ளை- மூத்தவரா, மூணாமவரா, தெரியவில்லை- கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, அவர் கையைத் தன் இரு கைகளிடையே பொத்திக்கொண்டு, சுற்றம் புடைசூழ-

"ஒரு குடும்பமும் அதன் சீமாட்டியும்."

மோனத்தின் வண்ணத்தில் திட்டிய ஒவியம்.

வார்டு பூராவே மெளனம் இறங்கிவிட்டது.

பிள்ளைமேல் வைத்த கண் வைத்தபடி, புன்னகை உறைந்தபடி. அன்புடன், Gentle ஆக, இருந்தாற் போலிருந்து, அவர் அவள்மேல் குனிந்து கண் இமைகளை மூடினார்.

லைகூட ஒரு பக்கமாகச் சாயவில்லை. மூச்சின் கேவல்கூட இல்லை.

புறா எப்போது பறந்தது, தெரியவில்லை.

பூஜையில், விளக்கிலிருந்து புஷ்பம் உதிர்ந்தாற்போல.

பின்னால் தெரிய வந்தது. தனிப்பட்ட முறையில் அவளுக்கு நோய் ஏதுமில்லை. வயதாகி, முடிவின் நெருங்கலை உணர்ந்த பின், வீட்டில், பட்டணத்துச் சந்தடியில், தக்க வசதியின்மையால், அமைதியுடன் உயிர் நீக்கவே ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறாள்.

எழுபது, நூற்று ஐந்து, எழுநூறு, மஹா போதி மரம், கி.பி., கி.மு., யுகம், வயது என்று மணலை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருக்க, எத்தனை நாள் வாழ்ந்தாலும், எத்தனை ஆயுசைக் கடன் வாங்கினாலும் போதாது.

"மணலை எண்ணுவதற்குப் பதிலாக,

குழந்தாய், உன் வீட்டைக் கட்டி விளையாடு.

கோட்டை, மதில், அகழி, ஸ்தூபிகள்.

காற்றின் பொறாமை, உன்னுடையே பிறந்த உன் நாசத்தன்மை

 

உன் மணல் வீட்டைக் கலைத்து அழிக்கையில் உன் முதல் துயரத்தை அறி.

உன் மணல் நீ கண்ட மகிழ்ச்சியே உன் மேல் திரும்பிவிடும் துரோகத்தை உணர்.

உன் சத்தியத்தின் பட்டுக் கயிற்றை முறுக்கேற்றவே துயரங்களும், துரோகங்களும் இருக்கின்றன."

பயமாயிருக்கே! இது ஆசீர்வாதமா, எச்சரிக்கையா, கொக்கரிப்பா, தெரியவில்லையே!

"தெரியவில்லையா? பயப்படாதே. பயப்படுவதால் என்ன பயன் ?

மணல் வீடுகள் அநித்தியமாயிருக்கலாம். ஆனால் அவைகள் இருந்தவரை, அவைகளில் நீ கண்ட அழகின் நினைப்பை நான்கூட அழிக்க முடியாது.

குழந்தாய், என்ன முழிக்கிறே? இன்னும் நான் யார் தெரியவில்லையா?

நீ விட்டுப் போகும் அடிச்சுவடுகளைத் தாங்கும் மணல்."

சிந்தா நதியில் ஒரு சாரலின் பெருமூச்சு.

 

45. FIDO

 

சிற்றப்பாவுக்குக் கலியாணமான புதுசு. சேப்பாக்கத்தில் வாலாஜா ரோடுக்கெதிரே ஒரு சந்தில்- சந்துமில்லை தெருவுமில்லை- குடியிருந்தோம்.

தேனிலவுதான் கட்டுப்படி ஆகாது. புதுத் தம்பதிகளைக் கொஞ்ச காலமேனும் தனிக் குடித்தனத்தில் விட்டு வைக்கலாகாதா? அதுகூடக் கட்டுப்படி ஆகவில்லை. என்னையும் என் தம்பியையும் சிற்றப்பா தலையில் கட்டியாச்சு.

சிற்றப்பாவுக்குத் தீராக் கடமைப்பட்டவனாவேன்.

தன் முழு நேர வேலை தவிர, சிற்றப்பா இரண்டு இடங்களில் பார்ட்-டைம் பார்த்து வந்தார். உழைப்புக்குச் சிற்றப்பா ராக்ஷஸன். அம்மாடி! அவர் மாதிரி எங்களால் முடியவே முடியாது. நடுத்தரக் குடும்பத்தின் கடின திசை ஓயாத திசை.

காலி நெருப்புப் பெட்டியை நிமித்தி வைத்தாற்போல், எங்கள் வீடு, கீழே சின்னக் கூடம். ஒட்டினாற்போல் அதைவிடச் சின்னச் சமையலறை, இந்த விஸ்தாரத்துக்கு மொட்டை மாடி (படிக்கட்டோடு) இருந்ததோ, மணத்தோம். அங்கே பாதி இடத்துக்குச் சிற்றப்பா பந்தல் போட்டுக்கொண்டார்.

கூடத்தில் இரண்டு பேர் கூட வந்தால் தோளோடு தோள் இடிக்காமல் திரும்ப முடியாது.

 

ஈதெல்லாம் பின்னோக்கில் கதை சொல்லத்தான் சுவாரஸ்யம். நிகழ் நேரத்தில் சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது, இம்சை... வாழ் முறையில் திடீர்த் திடீரென, விலக்க முடியாதபடி, நேருக்கு நேர் நெருக்கத்தில், முகத்துக்கு முகம் 'க்ளோஸப்' நேர்ந்தபடி, வளைய வந்து பாருங்கள்- உள்ளூர டென்ஷன் கட்டுவதற்கு வேறு காரணமே வேண்டாம்.

இந்த மஹாலுக்குள், ஒரு நாள், சிற்றப்பா ஒரு நாய்க்குட்டியைக் கொண்டு வந்தார், வளர்ப்பதற்கு. 'பார்ட்-டைம்' செய்யுமிடத்தில் கொடுத்தானாம்.

என்னதான் புது ஜோடி ஆனாலும், மணாளனே மங்கையின் பாக்யமாக நினைக்கும் புதுக் கறுக்கு இன்னும் அழியவில்லை ஆனாலும், சிந்திக்கு இந்த அத்தியாயம் பிடிக்கவில்லை. "இருக்கும் இடம், பிழைப்பு நமக்கே திண்டாட்டமாக இருக்கையில் இந்த நாய் ஒன்று தான் குறைச்சலா?" என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால், அவரா கேட்பார்: எதிர்ப்பு என்றால் முரண்ட லுக்கு இன்னும் குஷியாச்சு.

"இதென்ன ஜாதி தெரியுமா?"

"எனக்குத் தெரிய வேண்டாம். திருப்பிக் கொடுத்துங்கோ. இல்லே, தெருவில் விட்டுடுங்கோ."

"ஓஹோ, அதுக்குள் அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டியா? I am the Law here. நாய் இங்கேதான் இருக்கப் போறது. பிடிக்காதவா இங்கே விட்டுப் போயிடலாம். மனுஷாளைக் காட்டிலும் நாய் நன்றியுள்ள பிராணின்னு சும்மாவா சொன்னான் ?"

நாய்க் குட்டியை முழங்கை வளைவில் அனைத்துக் கொண்டு போய்விட்டார். திரும்பிச் சில சாமான்களோடு வந்தார். நாய்க்குக் கழுத்துப் பட்டை, ஒரு தோல் வார், ஒரு ஸாஸர், ஒரு குட்டிப் பாய்த் தடுக்கு. இத்யாதி.

கூடத்தில் ஒரு மூலையில் நாய்க் குட்டியை ஏளப் பண்ணியாகி விட்டது. Fido இப்போ வீட்டுக்கு இளவரசு.

Fidoவின் அழகு பற்றிச் சந்தேகமேயில்லை. உடல் பூரா வெள்ளைச் சடைகளினூடே, பொத்தான் கருவிழிகள், புத்திசாலித் தனத்துடன் பளபளவெனப் ப்ரகாசித்தன. சற்று நேரம் அதனால் அசைவற்று இருக்க முடிந்தால் பொம்மையோடு பொம்மையாக நவராத்ரிக் கொலுவில் வைத்தால் எப்படி இருக்கும்! அதனால் அப்படி ஒரு கணம் கூட இருக்க முடியாதே! துருதுருவென்று அலைவதும், எகிறிக் குதிப்பதும், குரைப்பதும் - Smart fellow - பூக் குழந்தை.

கூடத்தில் எங்களுக்குக் கலம் போட்டவுடன், சம அந்தஸ்தில் அதற்கு லாஸ்ரில் பால் ஊற்றியாகும். அண்ணனுக்குப் புளிச்ச பழையது தகரார். ஆனால், தம்பிக்குப் பால் சோறு. அது சோறு சாப்பிட முடியுமா? பூக் குழந்தை.

 

"நீங்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறேள், நாங்கள் சாப்பிடுகிறோம். இந்த நாய்க்குட்டி நமக்குக் கட்டுப்படியாகிற சமாச்சாரமா" சித்தி கெஞ்சிப் பார்த்தாள், மிஞ்சிப் பார்த்தாள். எங்களைப் பொருட்படுத்தாமல், எங்கள் எதிரில், கொஞ்சியும் பார்த்தாள். ஊஹூம்.

"உங்களுக்கு உழைத்துப் போடுகிற மாதிரி, அதற்கும் உழைத்துவிட்டுப் போகிறேன். எப்படியும் உங்களைப் போல் அது நன்றி கெட்டதில்லை."

கழுத்துப் பட்டை தளர இருந்தால், சில சமயங்களில் கழற்றிக்கொண்டு, எங்கள் கலத்தில் வாய் வைக்க வந்து விடும். என்னதான் எழுத்தாளனாலும், வாய் வைத்து வந்துவிடும் என்று சொல்ல அருவருப்பாயிருக்கே ! ஆனால், அது தான் நடந்தது.

தவிர, கூடம் முழுக்க அது பண்ணின அசூயையை எடுத்தெறிவது யார்? 'நான்தான். நீங்கள்தான் பெரிய மனுஷாளாச்சே!' என்று சிற்றப்பா மாரைத் தட்டிக் கொண்டாலும், உழைக்கப் பன்னிரண்டு மணி நேரம் அவருக்குப் போதவில்லையே! காலையில் சைக்கிளில் போனால், சாப்பாட்டுக்குச் சில நிமிஷங்கள் எட்டிப் பார்த்துவிட்டு, ராத்திரி திரும்பும்போதுதான் கணக்கு. சிற்றப்பாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கிடையாது.

நேரம் கிடைத்த சமயத்தில், குளிப்பாட்டலில் ஒரு வாரத்து அழுக்கு களைந்து சிற்றப்பாவின் கைகளினிடையினின்று சடைகள் தும்பை வெளுப்பில் வெளிப்படுகையில், அது மிக்க அழகுதான்- ஈரத்தை உதறியபடி குரைத்துக்கொண்டு, கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஒடுகையில், Fido செல்லக் கண்ணுதான்.

நாளடைவில் பலம் ஊறி, பூநிலை தாண்டிப் பாலிலிருந்து பிஸ்கட் கட்டத்துக்கு வந்தபின், அதிகத் தொந்தரவு இல்லே. எப்படியோ, ஒரு நாளைக்கு ஒரு வேளையேனும், சிற்றப்பா தன் நேரத்தில் திருடி, Fido வை வாக்கிங் அழைத்துச் செல்லத் தலைப்பட்ட பின், அதனின்று வெளிப்பட்ட பல அழகுகளில் எங்கள் எல்லாருக்குமே, சித்தி உள்பட, அதன்மேல் பரிவு பொங்கிற்று.

Fido இனி வெறும் பாலிலும் பிஸ்கட்டிலும் இருக்க முடியாது. கண்டிப்பாக அதற்கு இன்னும் திடமான உணவு தேவை. வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், இருக்கும் கீக்கிடத்தில் இதோ ஒரு புதுப் பிரச்சனை.

எப்படித்தான் சிற்றப்பாவுக்கு அப்படி ஒரு குட்டி இரும்பு அடுப்பு, அதற்கேற்ற குட்டி மண் சட்டி கிடைத்ததோ? எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் பகிரங்கமாகத் தெரியும், ஈரம் கசிந்த ஒரு காகிதப் பொட்டலத்தை மறைத்துக்கொண்டு, மாடிக்குப் போய்விட்டார். ஆனால் நாங்களே காய்ச்ச இப்போ தயாராகிவிட்டோம். Fido, Such a likeable fellow.

கஷ்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், தென்புக்கு இது இருந்ததே! Fido, little brother.

சிற்றப்பா, Fido, நான், என் தம்பி, வாக்கிங் புறப்பட்டோம். ஊரோசை அடங்கிவிட்டது. நிலா பட்டை வீறிற்று. Fidoவை அதன் வாரினின்று கழற்றி ஆகி விட்டது. இஷ்டப்படி ஒடியாடித் திரிந்து அதன் ராஜ்யத்தை அனுபவித்துக்கொண்டிருந்தது.

வழியெல்லாம் சிற்றப்பா புத்தி சொல்லிய வண்ணமாக இருந்தார்.

"இதோ பார், நீ ஷார்ட்ஹாண்ட், 'பிராக்டீஸ்', பண்றது போதாது. முதல் 'அட்டெம்ப்ட்' 'டக்' அடிச்சிட்டே. நீ பாஸ் பண்ணியிருந்தால் இப்போ உத்தியோகமே ஏதேனும் கிடைச்சிருக்கும். குடும்பம் தத்தளிக்கிற தத்தளிப்பிலே, என்ன நேரம், பணம் வேஸ்ட்! எடுத்தவுடன் ஆபீஸர் வேலைக்குத்தான் போவேன் என்றால் முடியுமா?"

நான் ஒரு பாவத்தையும் அறியேன். ஒன்றும் சொன்னதுமில்லை. நினைத்ததுமில்லை.

"கதை எழுதுறையாம் கதை, என்னடா எழுதறே? சன்மானம்னு எனக்குக் கொடுக்காட்டாப் போறே, கண்ணிலேயேனும் காட்டக் கூடாதா?"

"கொடுத்தால்தானே சித்தப்பா?"

"அதென்னடா அப்படி ஒசிக் கதை. அச்சில் பேரைக் கண்டால் போதும்னு அலையறையாக்கும்! எப்படியானும் போ. யூ ஆர் வேஸ்டிங் யுவர் டைம். கதையெழுதினால் சன்மானம் வர வேண்டும். வந்தால் தினம் ஒரு கதையேனும் எழுத வேண்டாமா? படிப் படியா ஏறி விற்பனை பண்ணப் பார்க்க வேண்டும். அலுக்காமல் ஒரு தடவைக் கிரண்டு தடவை போய் என்னாச்சுன்னு கேக்கணும். என்னத்தைப் பண்ணப் போறையோ? ஒரு Interest ஐயேனும் ஒழுங்கா கடைசிவரை பற்ற வேண்டும். கதையெழுதி நம் நாட்டில் பிழைச்சவன் யார்-, Fido, come here!"

எதிர்ச் சாரியில் என்னத்தையோ முகர்ந்துகொண்டிருந்தது, அதட்டலைக் கேட்டதும், குறுக்கே பாய்ந்து ஒடி வருவதற்கும், வாலாஜா ரோடு, Bells ரோடாக மாறும் திருப்பத்திலிருந்து 'பூம்! பூம்!'

எச்சரிக்க நேரமில்லை. எங்களுக்கு வாய் அடைத்து விட்டது. Fido வந்த வழியே திரும்ப முயன்றது அவ்வளவுதான்.

நான் கண்ணை மூடிக்கொண்டு விட்டேன். முழங்கால்களுக்கு கீழே கிடுகிடு. ஒரே உதறல், கார் நிற்கக்கூடவில்லை. சிட்டாய்ப் பறந்தது. சிற்றப்பா அதைத் துரத்த முயன்று திரும்பி வந்தார்.

மலர்ச்சியில் சிலிர்த்துக்கொண்ட ஒரு பெரிய மல்லிப் பூப்பந்தைச் சுற்றி, மூவரும் மெளனமாக நின்றோம். இப்பத்தான் இரண்டு நொடிக்கு முன் என்ன உத்வேகம், உற்சாகம், உயிரின் ததும்பல்!

இப்போ என்ன செய்வது? சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று காப்பதா? முடிகிற காரியமா?

 

இங்கே எங்கே நடு ரோட்டில் புதைப்பது? அதற்கு என்ன வசதி எங்களுக்கு இருக்கிறது?

எந்நேரம் இப்படி நின்றோமோ? பெருமூச்செறிந்து சிற்றப்பா Fido வைத் தூக்கி எதிரே corporation தொட்டி யில் போட்டுவிட்டு முன் நடக்க, சில அடிகள் தங்கி, நாங்கள் பின் தொடர்ந்தோம்.

இதுதான் வாழ்க்கை, Fidoவாக இருந்தால் என்ன, நாங்களாக இருந்தால் என்ன? பயன் தீர்ந்த பிறகு எங்கள் கதையும் இப்படித்தான். இப்படி நினைக்க எனக்கு வயது வந்துவிட்டது.

பயமாயிருந்தது. சிவாவின் கையைத் துணைக்கு என் கை நாடிற்று.

சிந்தா நதியில் ஒரு கலங்கல்!

 

 

46. தருணம்

 

சொல்லுக்கும் எனக்கும் ஐம்பது வருட சகவாசத்தில், எங்கள் உறவின் தன்மை இன்னும் எனக்குப் பிடிபட்ட பாடில்லை. ஆனால், என்னைக் காட்டிலும் அதற்குத் தெரியும்.

சொல் என்கையில், என் சொல் வெறும் வாய் வார்த்தை, எழுத்து மட்டில் அடங்கவில்லை. வாய் எனும் சத்தம், எழுத்து எனும் வரைகோடு, பூ!

கண்ணோடு கண்ணோக்கின் வாய்ச்சொல் என்ன பயன் எனும் உன்னத காடாக்ஷத்தை, கம்யூனிகேஷனின் உச்ச கட்டத்தைத் தேடும் உயிர்த் தாதுவைச் சொல்லுகிறேன்.

பொடிக் கற்களுடன் கலந்து, குந்து மணிகள் பூமியில் இறைந்து கிடக்கின்றன. ஒரு பக்கம் சிவப்பு: மறு பக்கம் கறுப்பு. இரண்டையெடுத்து மண் பிள்ளையார் விழிகளில் பதித்ததும், உயிரின் உக்கிரம் வந்தாச்சு. படிக்க முடிந்தால் கடாக்ஷத்தையும் பார். மண் பொம்மையும், குந்துமணியும், ஒன்றுக்கொன்று ஊட்டம். அதுவே பிள்ளையார். சொல்லுக்கும் பொருளுக்கும் இதுவேதான் உறவு.

சொற்கள் வெறும் உமியாகி விடுவதோ, கத்தியையிட்ட உறையாக மாறுவதோ, பிரயோகத்தைப் பொறுத்தது. சமயானிகி தகுமாட்ட.

உடல்மேல் சதை போலும், பொருள் மேல் படர்ந்து கொண்டு, பொருளை அடக்கிய சொல்.

 

என் குடும்பப் பரம்பரையில் தமிழ் மணம் உண்டு. என் பாட்டனார் தமிழ்ப் பண்டிதர். வரகவி. அவருக்குப் பதினாறு வயதில், பிள்ளையர் அவர் வாயில் கற்கண்டு போட்ட மாதிரி கனாக் கண்டு விழித்ததும், பாட ஆரம்பித்து விட்டார்.

அவருடைய தங்கை, என் தாயைப் பெற்றவள், நன்னூல், நைடதம் பயின்றவள். வரமாக அவரும் தன் பாட்டில் அமைந்திருக்கும் இலக்கணம் பற்றி, அண்ணன் தங்கையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம்.

என் பாட்டனார் உடன் பிறந்தோர் எழுவர், ஆக எண்மரும் கம்ப ராமாயணத்தை அலசு அலசென்று அலசி அதினின்றே மேற்கோள்கள் காட்டி விபரீத எதிர்வாதம் பேசுவார்களாம்.

அவர்களுக்கு முன்னால் என் கொள்ளுப்பாட்டி- என் பாட்டனாரின் தாயாரிடம் ஒரு மண்டலம் எங்கள் குலதெய்வம் அம்பாள் விளையாடினாளாம். ஏதேதோ அற்புதங்கள் நிகழ்ந்தனவாம். எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியின் வாயிலிருந்து திடீரென வேதம், வியாகர்ணம், தர்க்கம், மீமாம்ஸம், தத்துவம் புறப்பட்டனவாம். கற்றறிந்த பண்டிதர்கள் எங்கெங்கிருந்தோ வந்து வியப்புறுவதுடன் விளக்கங்களை கேட்டு அறிந்து போவார்களாம். அந்த நாற்பத்து ஐந்து நாட்களும் பாட்டி ஒரு பருக்கைக் கூடச் சாப்பிடவில்லை; பட்டினியாம்.

இதற்கு மூலமும் காரணமும் கேட்டால், மனோ தத்துவ நிபுணர்கள் ஹிஸ்டீரியா என்பார்கள். அல்லது ether உடன் சம்பந்தப்படுத்தலாம். அல்லது, எல்லாம் சொல்லக் கேள்விதானே என்று சூள் கொட்டலாம். காதில் பூ எல்லாம். சரி சரி....

எனக்கும் சொல்லுக்கும் இந்த ஐம்பது வருட உறவில் ஆங்காங்கே சில சமயங்களில் அது பட்டாசுத் திரி ஆனால், அல்லது ஆடுவதாக நான் நினைத்துக்கொண்டால், அல்லது அப்படி ஆசைப்பட்டால், ஏதோவிட்ட குறை, தொட்ட குறை என்று சொல்லிக்கொள்ளலாம் அல்லவா? இத்தனையுமே வேண்டாமய்யா! அவர்கள் வழி வந்த எச்சம் நான். அதனாலேயே நான் எழுதத் தொடங்கிய நாளிலிருந்தே என் சுபாவத்திலேயே சொல்லைத் தேடல் இருந்திருக்கிறதென்று இப்போது உணர்கிறேன். சொல் என்றால் என் சொந்த பாஷை தமிழில் மட்டும் அல்ல. எனக்குத் தெரிந்த மறு பாஷை ஆங்கிலம் மட்டுமல்ல,

என் சொல் எனும் என் கதி

வாழ, எத்தனையோ கதிகள் பிடிக்க வேண்டியிருக்கிறது.

குடும்பத்துக்கு என் கடமையின் கதி.

ஊர் மெச்சப் பால் குடிக்கும் வழி சொல்லும் கதி,

 

ஈச்ச மரத்தடியில் பால் குடித்துப் பேர் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கதி.

ஊர் தெரிய ஒரு கதி.

உள்ளுர ஒரு கதி.

இத்தனைக்கும் அப்பால் என்னை இழுத்துச் செல்லும்

தனிக் கதி,

அதுவே என் விதி. என் சொல்லின் கதி,

என் Ego.

சொல் எனும் நான், என் தன்மை, என் பொருள், என் தேடல், என் ஆரம்பம், என் முடிவு, என் மறு பிறவி, என்னைப் புதுப்பிப்பு, என் தருணம்.

குழந்தை பூமியில் விழுகையில், தாயின் வலியில் அவள் வீறல் கொச்சை,

குழந்தையின் அழுகை கொச்சை.

குழந்தை, பாலின் இடம் தேடிக் கண்டு சுவைக்கும் சமயம், அதனின்று வெளிப்படும் சத்தங்கள் கொச்சை. தாய், தன் பரிவு தாங்காமல், குழந்தையைக் கொஞ்சும் சமயம் அவர்களிடமிருந்து வெளிப்படும் குழறல்கள் கொச்சை.

ஆணும் பெண்ணும் தழுவுகையில், அவர்கள் முத்தத்தின் எச்சிலில் கொழ கொழத்து வரும் சொற்கள் கொச்சை. கணவனையோ, குழந்தையையோ பறிகொடுத்தவளின் நாபி வீறல் கொச்சை.

நியாய கோபத்தின் கர்ஜனை கொச்சை.

தரிசன பரவசத்தின் விக்கல் கொச்சை.

கொச்சையே சொல்தான்.

-! இங்கே தருணம் என்று ஒரு சொல் புகுந்து கொண்டது கண்டீரோ?

தருணம் என்பது, நிமிஷம் என்றும், நொடியென்றும், விரலின் சொடுக்கென்றும் நேரத்தின் அளவு அல்ல.

சத்தியத்தின் நித்தியத்துவத்தினின்று ஒரு உகுப்பு, உகுப்பின் சத்தமற்ற சொட சொடப்பு.

'தருண்யை நம:'- லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இப்படி ஒரு அர்ச்சனை வருகிறது.

தருணம்: சித்திரத்தின் கண் விழிப்பு:

கல்லின் சிரக் கம்பம்

 

சொல்லின் சக்தி.

சொல்: தருணத்தின் விந்து.

ஒன்றுக்கொன்று சாஹஸம்.

தருணத்தை நீடித்துத் தாங்க முடியாது.

சொல் ஒன்று கிட்டிடில் அது என் பாக்கியம். தேவர் பந்தியில் ராகு திருட்டுத்தனமாக உட்கார்ந்தாற் போல் அமுதத்தை விழுங்கிவிட்டேன். சொல்லே, என்னைக் கொல், ஆனால் என்னை அழிக்க முடியாதே!

புலி புலியெனக் கிலி. நிஜமாகவே புலி. இதுதான் சொல்லின் உறவோ?

சிந்தா நதி ஆழத்துள் தலை மூழ்கி ஒரு தரிசனம்.

 

47. ஒரு வைரம்

 

சி.என். கே. ரோடில் வசித்துக்கொண்டிருக்கையில் வாசலில் ஜாப் டைப்பிங் பலகை தொங்க விட்டிருந்தேன். இந்தப் பலகை தொங்கிற்றே ஒழிய, நோக்கம் உருப்படியாக நிறைவேறவில்லை. நல்ல 'ஷகரி'ல் இருக்க வேண்டும். அல்லது ஓரிரண்டு வக்கீல்களுடன் பழக்கம் தொடர்ந்து வேண்டும். அல்லது நான் வெளியே போய்ப் பேரம் பிடித்து வர வேண்டும். அதற்கு நேரமில்லை, சாமர்த்தியமுமில்லை. காலை 9.30 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால், திரும்புவது மாலை 6-க்குக் குறைவதில்லை. நான் என்ன ஜாப் பண்ணி, வருமானத்தைக் கூட்டுவது, குடும்பத்தில் பொருளாதாரம் அப்போது நெருக்கடியான நிலைமை.

ஒரு நாள், காலை வேளை. ஒரு சேட்ஜி அவசரமாக வந்தார்.

"இந்தப் பத்திரம் ஆவணும்."

"ஆபீஸுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். இன்னி சாயந்திரம்...."

"நோ, நோ, அவஷரம் அவஷரம்- இப்பவே-"

மேட்டரைப் புரட்டிப் பார்த்தேன். நிறையப் பக்கங்கள். சபலம் அடித்துக் கொண்டது. ஆபீஸுக்கு 'டோக்கர்' கொடுத்துவிட வேண்டியதுதான். மானேஜர் எரிந்து விழுவான். அது நாளை 'ஷமாச்சாரம்.'

"நம் வீடு இதோ பெல்ஸ் ரோட் டர்னிங்தான். 'டைப்'பைக் கொண்டு வந்துடுங்கோ, அங்கேயே ஷெய்யலாம்."

 

எவன் எழுதிக் கொடுத்தான் ? வக்கீலா, டாக்டரா? என் தலையெழுத்து மாதிரி! ஆயிரத்தெட்டுச் சந்தேகங்கள் எழுத்தைப்பற்றி அல்ல, பத்திரத்தின் விஷயம் பற்றி. பல இடங்களில் நானே பாஷையை சமயோசிதத்ததில் இட்டு நிரப்பி, முதலில் ரஃப் ஒன்று தயார் பண்ணி, பிறகு முறையாக ஸ்டாம்ப் பேப்பரில் ஏற்றுவதற்குள் மணி இரண்டாகி விட்டது

ஐயா உண்மையிலேயே சந்தோஷமாகிவிட்டார். அந்தக் காலத்து ராஜாக்கள், "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கிறமாதிரி- என்னா வேணும்?

என்ன கேட்கலாம்? ஆள் மிரண்டுவிட்டால்? என் தயக்கத்தைக் கண்டு- "பரவாயில்லே. இஷ்டம் கேளுங்கோ:"

"பத்து ரூபாய்." எனக்குக் கொஞ்சம் திணறிற்றோ? அவர் பதிலே பேசவில்லை. டக் கென்று சேஃபைத் திறந்து மொட மொடவென்று ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொண்டுவந்து என்னிட்ம் கொடுத்துவிட்டு சேஃபை மூடினார். திறந்திருந்த நேரத்துக்கு குங்குமப்பூ வாசனை 'கும்.'

பகவன் தாஸும் நானும் இப்படித்தான் பரிச்சயமானோம்.

அவருக்கு எம்ப்ராய்டரி பிஸினஸ். சொந்த வீடு. மாடியில் வாசம். கீழே அலுவலகம். இரண்டு பெரிய ஹால்களில் மூன்று பெரிய தறிகளில் ஏழெட்டு ஆட்கள் மெளனமாக வேலை செய்தனர். செய்துகொண்டே இருந்தனர். தங்க ஜரிகை, வெள்ளி ஜரிகை, ஜிகினாப் பொட்டுகள், அதிலேயே சின்னச் சின்ன வண்டுகள், வர்ண நூல்கள் தையலில், அற்புதமான பூக்கள், அன்னப் பக்ஷிகள், முதுகைக் கோதிக்கொள்ளும் புறாக்கள், மயில்கள், கோலங்கள், புடவையின் ஓரங்களில், தலைப்பில், புடவை பூரா உருவெடுத்தன. அத்தனையும் கை வேலை, பொறுமையும் அர்ப்பணமும் வாங்கும் வேலை. இதில் இறங்கினவர்கள் பின்னர் மற்றெதற்கும் உபயோகமில்லை. பரம்பரை வாசனையும் இருக்கும் போல் தோன்றுகிறது. தறிமேல் குனிந்தே, முதுகு கூனி, கண்ணும் மங்கி விடும். அதுபற்றிச் சேட்டுக்கு என்ன? கொள்ளை பிஸினெஸ்.

பல தர வயதில், உடல் வாகில்- அனேகமாக அவர் ஜாதிப் பெண்டிர்தான்- கார்களில் வந்து, புடவைகளுடன் இறங்குவார்கள். சில சமயங்களில், வரவேற்பறையில்- ஆபீஸ் அறையும் அதுதான். சோபாக்கள் நிரம்பி வழியும். பகவன்தாஸ், ஆளே அப்போது மாறிவிடுவதுபோல் தோன்றும். என்ன சிரிப்பு, முகத்தில் என்ன டால், இடுப்புவரை குனிந்து, வந்தவர்கள் பேச்சுக்கு என்ன கவனம், என்ன அந்த மரியாதை! அவர்களும் "தாதா! தாதா!' என்று அவரை மொய்த்துக்கொள் வார்கள். பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தின் நடுவே கிழட்டுக் கிருஷ்ணன்.

மாலையில் வேலையாட்கள் அறை வாசலில் குழுமி நிற்பார்கள்.

வஹாப், மொய்தீன், சின்னக்கண்ணுர- நவாப் தோரணைதான். ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு முலு முலுவென, சுள்ளெறும்பு ஊர்வது போன்ற தன் (ஸிந்தி) பாஷையில் (லக்கம் உள்பட) குறித்துக்கொண்டு, பட்டுவாடா பண்ணுவார்.

இப்படியா ஒரு கணக்கன்? தொகை ரூ.17.31 கணக்கானால், அந்த ஒரு பைசாவை எப்படியேனும் தேடிக் கண்டுபிடித்து அப்போது ஒரு பைசா நாணயம் அமலில் இருந்தது- கணக்கைத் தீர்ப்பார்.

மாடியில், உண்மையான செல்வம் படைத்தவர்களின் அலக்ஷியத்தில், உடைமைகள் கவர்ச்சியான அலங்கோலத்தில் கிடக்கும். ஒரு சமயம், கட்டிலில் கிடந்த ஒரு சால்வையைத் தடவியபடி, "என்ன முன்னுறு நானூறு இருக்குமா?" என்று கேட்டான்.

புன்னகை புரிந்தார்.

"பத்து வர்ஷமாச்சு வாங்கி, அப்போ ஆயிரம் ரூபா. இப்ப என்னவோ? இப்ப இந்த க்வாலிட்டி கிடையாது."

அப்போதிலிருந்து, இதுபோன்ற அசட்டுக் கேள்விகளைக் கேட்பதை நிறுத்திக் கொண்டேன் (அங்கு மட்டுமல்ல.) இதுவே ஒரு பாடம்.

சமையல்காரன், வேலைக்காரன், நர்ஸ்.

மாடியில் இளவரசு.

கீழே அடிக்கஞ்சன்.

பகவன்தாஸ்-க்கு வருடம் பூரா ஆஸ்துமா. படுக்கை அறையில் எங்கு பார்த்தாலும் மருந்து சீசாக்கள், ஊசி மருந்துகள், மாத்திரைகள், தூக்க மாத்திரை சீசாக்கள், டானிக்குகள் (ப்ராந்தி), ஸானடோஜன் எல்லாம் சிதறிய படிதான். மாதத்தில் பாதி நாள் குளியல் தேறினால் அதிகம். மிச்சத்துக்கு சந்தன். அத்தர்.

ஒரு சமயம் அட்டாக் வந்து பார்த்தேன். சமயத்தில் நர்ஸ் இல்லை. அம்மாடியோவ்! காட்டுப் பூனை ஊளையில் விலாவில் கட்டியிழுப்பும், அந்த விழிகள் வெளியே கொட்டிவிடும்போல் பிதுங்கலும் மடிமேல் தலையணையைப் போட்டுக்கொண்டு, அதன்மேல் கவிழ்ந்து கொண்டு அந்தத் தவிப்பும், உடல் பூரா வேர்வையில் ஜலகண்டம்.

அவசரமாக ஸ்டோவ்வை மூட்டி, கோதுமைத் தவிடை வறுத்து (நல்ல வேளை, என் வீட்டில் இருந்தது. அது என்ன காரணமோ?) முதுகிலும் மார்பிலும் ஒற்றினேன். இதற்கு உடனே ஹிதம் தரும்படி, புகை பிடிக்க ஒரு சூரணம் இருக்கிறது (சித்தா? யுனானி), இது, நல்ல வேளை, மனுஷனிடமே இருந்தது. ஆவன செய்ததும் சுபம் கழன்று, கரண்டு தொண்டைக்கு வருவது தெரிந்தது. துப்பும் பேஸின்? -ஹூம். சமயத்துக்கு ஊசியும் தட்டானோடு இதுவும் உருண்டோடிப் போய் விட்டது. நான் என் வசத்தில் இல்லை. கையை நீட்டினேன். தயங்கினார். .

 

"ஸ்பிட், மேன், யூ ஃபூல்!" எனக்கு ஏன் இந்தக் கோபாவேசம்?

கொண்டுபோய் எறிந்துவிட்டு (ஐயே!) கையைப் பாத்ரூமில் எட்டுத் தரம் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு வந்தேன். என்னவேணுமானாலும் ஆகட்டும். குட்டு நத்திங் மோர்.

அவர் அவஸ்தை தணிய ஆரம்பித்துவிட்டது. காட்டுப் பூனை சிறுகச் சிறுக வாபஸ், மூச்சு இயல்புக்கு, ஒரு வழியாக, மீளத் தலைப்பட்டது. இப்போ ஆயாசம்தான்.

எழுந்து அணைத்துக்கொண்டார். "மிஸ்டர் ராமா! யு ஆர் மை பிரதர்!"

என்னை விடுவித்துக்கொள்ள முயன்றேன். முடியவில்லை. எங்கிருந்து இந்த இரும்புப் பிடி?

"யு ஆர் மை பிரதர், மிஸ்டர் ராமா!"

இதனால் பகவன்தாஸ், தன் பிஸினெஸ்ஸில் பாதி, வீட்டில் பாதி எனக்கு எழுதிவிட்டார் என்று யாரேனும் நினைத்தால்- அதெல்லாம் டி.வி.யில் (சினிமா படுத்து விட்டதாம்!).

வீட்டில் கீழே நடு முற்றத்திலிருந்து வளர்ந்த வேப்ப மரம் மாடியில் ஜமக்காளம் விரித்தாற்போல், விருதாவாய்க் கொட்டிக்கொண்டிருந்த வேப்பம் பூவைக் கூட 'எடுத்துக்கொண்டு போ' என்று அவருக்குச் சொல்லத் தோன்றாது.

(வேப்பம் பூவை நெய்யில் பொன்னாக வறுத்து, சொற்ப உப்புக் கூட்டி, சாதத்தில் கலந்து இரண்டு கவளம்- வாயுவுக்கு நல்லது. (எனக்கு) வாய்க்கு பஹு ருசி!).

நானும் கேட்க மாட்டேன்.

"நாங்கள் பார்ட்டிஷனுக்கு முன்னால் ஸிந்திலிருந்து இங்கு வந்தோம். எனக்கு இருபது வயசுலே கண்ணாலம். அடுத்த வர்ஷமே. ஷம்ஷாரம் செத்துப் போச்சி. டெலிவரி, குளந்தை, அதுவும் பத்து நாளுல டைய்ட்."

எழுந்து சென்று ஸேஃபைத் திறந்து (குங்குமப்பூ மணம் - கும்!), லாக்கரைத் திறந்து, எதையோ எடுத்துக் கொண்டு, மறக்காமல் மூடிவிட்டு என்னிடம் வந்தார்.

கலர் கொடுத்த, ஒரு குழந்தையின் போட்டோ. ஒரே தவப்பிஞ்சு. குருத்தை ஊதிச் செடியாக்க முயன்ற பரிதாபகரமான கழைக்கூத்து முயற்சி. எந்தப் பின்னணியுமின்றிக் குழந்தை அந்தரத்தில் தொங்கிற்று. இன்னும் விளக்குப் பார்வை நிலைக்கவில்லை. இல்லை. ஒரேயடியாக நிலைத்துவிட்டதா? லேசாக அருவருப்பு தட்டிற்று முகத்தை அவசரத்துடன் சரிபடுத்திக்கொண்டேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. பார்வை போட்டோவில் பதிந்திருந்தது. அவர் முகத்திலிருந்து பத்து வருடங்கள் உதிர்ந்திருந்தன.

 

"லுக் மிஸ்டர் ராமா, புருஷன் இறந்துபோனால் ஒயிப் மறு கண்ணாலம் கூடாது. ‘திலக்' அழிக்கணும், வளையல் உடைக்கணும், வெள்ளை ஸாரி. இப்படியெல்லாம் ரூல் இருக்குதே-- இப்போ நடக்கறதை நான் சொல்லலே- பெண் ஜாதி டைய்ட் ஆனால், ஹஸ்பெண்டுக்கு எந்த ரூலும் கிடையாதா? அது என்னா ஒஸ்தி? இது என்னுடைய ஆக்யுமெண்ட். ஆனால் யாரும் ஒப்புக்க மாட்டாங்க. எத்தினியோ ஆஃபர் வந்திருச்சி. ரெஃப்யூஸ்ட், நாங்க ரொம்ப ரெஸ்பெக்டபிள், வெல்த்தி ஃபேமிலி. ஒரு டைம் வைர வியாபாரம் செஞ்சிட்டிருந்தோம்."

நீளமாகவே தமிழ் பேசிவிட்டார். சமயம் வந்தால், பாஷையும் வருகிறது.

"யு லவ் யுவர் ஒய்ப் ஸோ மச்?"

" டோன்ட் நோ. எனக்கு அப்படி ஒரு நியாயம் பட்டது. என்னை சேஞ்ச் பண்ண முடியல்லே."

உள்ளிருந்து ஒரு ஆள் வந்து, ஜிகினாப் பொட்டு வேலைக்குக் கேட்டான். தராசில் நிறுத்துக் கொடுத்தார்.

"ராமா, ஐயம்க்ளீன். அன்னிலேருந்து இப்போ வரைக்கி நான் எவ்ளோ சுத்தம்னு எனக்குத் தெரியும். நோ. நான் யாருக்கும் ஜவாப் சொல்ல வேணாம். உங்களிடம் சொல்றேன். என்னைப் பத்தி என்ன பேரெல்லாம் காட்டியாவுதுன்னு எனக்குத் தெரியும். டோன்ட் கேர். என் பிஸினெஸ் நேச்சர் அப்படி, லேடீஸோடே தான் எனக்கு பிஸினெஸ்."

வாய் விட்டுச் சிரித்தார். முத்து வரிசை (கட்டின பல்).

இந்தப் பிரதிக்ஞை தவிர, பகவன்தாஸ் ஒன்றும் துறவி வாழ்க்கை நடத்தவில்லை. எல்லாம் தி பெஸ்ட் தான். ஆடை, மேக் அப், எதிலும்.

ஒருநாள் கூட மட்டன் இல்லாமல் முடியாது.

உண்ணுவது என்னவோ உள்ளங்கை அகலத்துக்கு இரண்டு சப்பாத்திதான்.

தினம் அவர் இனத்திலிருந்து எத்தனையோ அழைப்புகள் வரும். முண்டான், நிக்கா, வரவேற்பு, ஹாவன்--எங்கும் போக மாட்டார். அவர் கை எப்போதும் தூக்கியிருக்க வேண்டும்! "யாரிடமும் எதுவும் கேட்டும் வாங்க மாட்டேன். அவங்க கொடுத்தாலும் வாங்கமாட்டேன்."

ஒரு சமயம் அவருக்காக எதையோ தேடி, ஒரு டப்பாவைத் திறந்தால், அதில் ஒரு மைசூர்ப்பாகுக் கட்டியும், மிக்ஸ்சரும், உளுத்துக்கொண்டிருந்தன. நான் தீபாவவளிக்கு என் வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்தது. அவர் கொடுத்த ஹல்வாப் பெட்டிக்கு முன்னால் முடிந்த எதிர் மரியாதை!

கோபப்பட்டு என்ன செய்வது? இதற்கெல்லாம் வெட்டிக்கொள்ள முடியுமா?

 

நான் மாம்பலத்துக்கு குடி போன பிறகு, என்னால் தினம் அவர் விருப்பப்படி ஆஜர் கொடுக்க முடியவில்லை. ஏதோ மாதம் ஒரு முறை .

அப்புறம் உத்யோக ரீதியில் என்னை வெளியூர் மாற்றினதும், நாலு வருடங்கள் அறவே விட்டுப் போயிற்று. அவருக்கும் கடிதம்போடும் பழக்கம் இல்லை. எனக்கும் இல்லை.

வேலையிலிருந்து ஒய்வு பெற்றதும், அம்பத்தூருக்கு நேரே வந்துவிட்டேன். எவ்வளவோ விஷயங்களுக்கு அம்பத்தூரும் சென்னைக்கு வெளியூர் போலத்தான்.

எனக்கும் வயது உட்கார்ந்து கொண்டிருக்கிறதா? கூடவே உடல் நலிவுகள், இனி அவைகளின் ஓங்கல் தானே!.

ஒருநாள் ஒரு ஆள் என்னைத் தேடிக்கொண்டு பிற்பகல் கொட்டுகிற மழையில் வந்தான். "உங்கள் வீட்டைக் கண்டு பிடிக்கிறதுக்குள் . திரும்பிப் போயிடலாம்னே நெனச்சேன். ஆனால் நர்ஸ் அம்மா சும்மா விட மாட்டாங்க."

சீட்டைக் கொடுத்தான்.

நான் போகவில்லை. ஏனோ தெரியவில்லை. பகவன்தாஸை அந்த நிலையில் பார்க்க மனம் இடம் கொடுக்க வில்லை.

தக்கை போன்று லேசாக வற்றிய உடல். குள்ளம் தான். குட்டையாக வெட்டிய ஸ்ம்மர் க்ராப். வெள்ளைக் குர்தா, வெள்ளை பைஜாமா. உடம்பில் எப்பவும் ததும்பிய ஒரு சுறுசுறுப்பின் நடமாட்டத்தில் பாதரக்ஷை "சரக் சரக்"

இந்த உருவமே நினைப்பில் நின்றுகொண்டிருக்கட்டும். வைரம் பாய்ந்த அந்த மனுஷனை வேறெப்படியும் பார்க்க, நினைக்க நான் விரும்பவில்லை.

சிந்தா நதியின் அடி மணலில் தோன்றித் தெரிந்து உடனேயே புதைந்துபோன ஒரு வைரம்.

 

48. அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?

 

ஆங்கரை.

இங்கு வந்து எத்தனை நாட்களாயின. பதினைந்து வருடங்கள்!

லால்குடிக்கு வந்தாலும் இங்கு வர ஏனோ நேரமுமில்லை. காலும் வருவதில்லை. நடக்கவா செய்கிறோம்? பஸ்தானே!

 

சந்தானம்: மாமா, கடைசியாக நீங்கள் இந்த வீட்டுக்கு வந்துபோன சமயத்தை மறக்கவே மாட்டேன். தற்செயலாக வந்தீர்கள், நீங்கள் பட்டணத்துக்கு அவசரமாகத் திரும்பும் வழியில்.

அம்மாவை, இதோ, இங்கே இதே இடத்தில்தான் கிடத்தியிருந்தது. கடைசி சுவாசம் கட்டியிழுத்துண்டிருந்தது.

சித்திப் பாட்டி, அதான் உங்களுக்கு ஜானகிப் பெரியம்மா, அழுதாள். 'பார்த்தியா ராமாமிருதம், யாரும் சொல்லாமலே உன்னை இங்கே சமயத்துக்கு இழுத்துடுத்து! சொந்தம் விட்டுப் போமாடா? சுந்தராவே அழைச்சுத்தான் நீ வந்தையோ என்னவோ? நெனப்பு தப்பறதுக்கு முன்னால் உன் பேரைச் சொல்லிண்டிருந்தா.'

நீங்கள் கொண்டு வந்திருந்த பிரசாதம், பெருந்திரு அபிஷேக தீர்த்தத்தை அம்மா வாயில் ஊற்றினாள். கடை வாயில் வழியாமல் உள்ளே போயிடுத்து.

நீங்கள் இருந்து பார்த்துட்டு அம்மா காலைத் தொட்டு கண்ணில் ஒத்திண்டு போயிட்டேள். அதுபற்றி ஒண்ணுமில்லே. உங்களுக்கு முன்னே பின்னே தெரியுமா? ஆபீஸ் ஜோலியா திருச்சிக்கு வந்த நேரத்தில் உங்கள் ஊருக்கு வந்திருக்கேள். கூடவே எங்களையும் எட்டிப் பார்த்திருக்கேள். ஆனால் சமயத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தேளே, அந்த ஆச்சரியம் எனக்கு ஒயலே மாமா. இந்தத் தடவை நீங்கள் தங்கி இருந்துட்டுத்தான் போகணும். சொல்லிட்டேன்."

சாகும் தறுவாயின் கடைசி நினைப்பாகத் தங்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

இது போல முன்னும் பின்னும் இன்னும் இடங்களில் நேர்ந்திருக்கிறது.

அதனாலேயே குற்றம் செய்துவிட்டதுபோல் நெஞ்சில் உறுததில்.

இந்தப் பதவிக்கு நான் லாயக்கா?

இந்தத் தடவை நான் லால்குடி வந்தே நாலு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. முதலில் செலவு. இந்த ஒற்றைக் கண் பார்வையுடன் எங்கே தைரியமாகக் கிளம்புவது? பயம், தயக்கம், ஆயிரத் திட்டம், யோசனை ஒரு வருடமாக எனக்குள் நடக்கின்றன. எப்படியோ, இதோ, இங்கே இருக்கிறேன்.

சந்தானம் வீட்டில் மின்சாரம் கிடையாது. இரண்டு வீடு தாண்டி, அவன் சோதரி வேப்பிலை வீட்டிலும் இல்லை. மண்ணெண்ணெய் விளக்குதான்.

ஆகவே, அந்தி விழுந்ததும், இந்த இரண்டு வீடுகளிலும் மட்டும் பண்டை நாள் என் பையல் பருவத்தின் கிராமத்துக் களை அப்படியே வழிகிறது.

முதன் முதலாக, என் ஆறு வயதில் அண்ணா கையைப் பிடித்துக்கொண்டு-- அப்பாவை அப்படித்தான் அழைப்போம்-- எப்படிப் பார்த்தேனோ, அப்படியே, அன்றுபோல் இன்றும், பெருந்திரு இங்கேயே நின்று கொண்டிருக்கிறாள். மூலவர் பின் எப்படி இருப்பாள்? எனக்குத் தெரியவில்லையா? ஆனால் இப்போது என்னால் நேரே நிற்க முடியவில்லை. ரொம்ப நாள் முன்னாலேயே இடுப்பொடிஞ்ச மாடு என்று பேர் வாங்கியாச்சு. இப்போ கேட்கணுமா? எனக்குக் கால் வலிப்பதால், வருடாதி வருடமாக நின்று கொண்டிக்கிறாளே, இவளுக்கு வலிக்கல்லியா என்று தோன்றுகிறது.

இது என் சளைப்புத்தான்.

சிவராஜ குருக்கள் இல்லை. அவர் பிள்ளை கணேசன் தான் இப்போ.

ஒருமையில் எழுந்த விளிப்பைச் சிரமத்துடன் மாற்றிக் கொள்கிறேன். எனக்காகவே, கற்பூர ஆரத்தியை அவள் முகத்துக்கு நெருக்கத்தில் காட்டுகிறார். இந்த வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கக்கூடும். ஆனால் ஸ்தானம் எப்படி!

எண்ணெய்ப் பசையின் பளபளப்பில், கற்பூரச் சுடராட்டத்தில், அவள் புன்முறுவல் ஒளி வீசுகிறது. இத்தருணத்தில் இரண்டு வித நினைப்புகள் என்னைச் சேர்ந்தாற்போல் அழுத்துகின்றன.

எனக்கு ஆறு வயதில், அண்ணா கையைப் பிடித்துக் கொண்டு, இவளை என் முதல் தரிசனத்தின்போது, அண்ணா: "இவள்தான்டா, இந்தக் கோவில்தான்டா, நமக்கிருக்கும் சொத்து" .

இந்த உரிமையை, என் மூதாதையர் அவரவர் தனித் தனித் தன்மையில் கொண்டாடி, இவளை எத்தனை முறை தரிசித்திருப்பார்!

என் கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பாட்டியும், அவர்கள் மண வாழ்க்கையில், ஒரு தினம் தவறாமல், அறுபது வருடங்களாக, கோவிலில் அர்த்த ஜாம தரிசனம் பண்ணிவிட்டு- அந்நாள் அந்த வேளை அசல் 12 மணி, அப்புறம்தான் ஆகாரமாம் (அது கஞ்சியோ, கூழோ, சோறோ, பழையதோ, பட்டினியோ-- குடும்ப திசை அப்படி).

"நீ கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும், அடியே பாவி, நீதாண்டி கதி!" என்று திட்டிக் கொண்டேனும் அவள் காலை இறுகப் பற்றிக்கொண்டிருந்தார்கள்.

(தராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?)

என் தாத்தா இயற்றிய ஒரு பாட்டின் பல்லவி.

அறுபது வருடங்கள், ஒருநாள் விடாது.

நாலு வருடங்கள் கழித்து, இப்பவா, அப்புறமா என்று மீன மேஷம் பார்க்கிறவனாக, நாலாவது தலை முறை நான் ஆகிவிட்டேன். உன் சன்னிதானத்தில் வெட்கத்தில் குன்றிப் போகிறேன். என் விழியோரங்கள் தஹிக்கின்றன.

 

தீபாராதனை ஒளியில், உன் விழிகளில் அன்றுபோல் இன்றும், அன்றுக்கும் முன் அவர்களுக்குக் காட்டினதே போல், என்றும் மாறாக் கருணையின் ததும்பலே, உன் கோபத்தினும் எனக்கு விதிக்கக்கூடிய கொடிய தண்டனை.

இதோ விழிகளினின்று வழிய ஆரம்பித்து விட்ட இந்தச் சரங்களை எட்டாத உன் பாதங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். இவைகளுக்குக் கூட எனக்கு உரிமையில்லை. இவை என் மூதாதையரின் கண்ணிர்ச் சரங்கள். என் வழி உனக்குச் சூட்டுகிறார்கள்.

தேவி! இதற்குக் கூடக் காரணம் நீதான் என்று சொல்வேன். ஜீவனோபாயம் காரணமாக அண்ணாவின் நாளிலிருந்தே குடும்பத்தைக் கலைத்து நானா இடங்களில் சிதறி விட்டாய்.

உலகமே உனக்குச் சீட்டுக்கட்டு. எங்களை சுட்டிக் காட்டித் கொள்வதில், இந்தக் குடும்பத்தின் உதாரணத்தில், நான் உலகத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.

நீ உலகத்தை ஆள்வதே இப்படித்தானே!

சீட்டை கலை.

புதுசு புதிதாக வழங்கு.

ஆடி ஆடிப் பழசானதும், உனக்கென்ன,

இன்னொரு புதுக் கட்டை ஆட்டத்தில் தூக்கி யெறிகிறாய்.

ஆனால் பயணம் என்னவோ ஒன்றுதான். அன்று முதல் இன்று வரை அதேதான்.

வாழ்க்கை, விதி, லீலா.

என்ன வேனுமானாலும் அழை.

எல்லாம் உயிரின் மறுபெயர்.

ஒருநாள் நடுப் பிள்ளையாண்டான் ஒன்று சொன்னான்.

"அப்பா, காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தன் ரீதிப்படியே பின் சந்ததியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமல்ல, நியாயமுமல்ல, இயற்கைக்கே விரோதம், அப்படியே இருந்திருந்தால் மின்சாரம் கிடைத்திருக்குமா, டிரெய்னேஜ் உண்டா, ரயில், ஏரோப்ளேன், அணுசக்தி, பைபாஸ் ஸர்ஜரி, சினிமா, டி.வி. இன்னும் வரப்போவது எது எதுவோ, அத்தனையும் உண்டா? தற்சமயத்துக்குச் சந்திர மண்டலம் கொல்லைப் புறமாகி விட்டது. எதையுமே நிறுத்தி வைப்பதற்கில்லை. நிறுத்தி வைக்க முடியாத சூழ் நிலைக்கு ஏற்றபடி மனித ரஸாயனமும் மாறிக்கொண்டு தானிருக்கும். மாற்றம் தான் உயிரின் வழி. முன்னேற்றத்தின் தைரியம்.

 

"இத்தனைக்கும் நடுவில் ஹிரோஷிமா, பூகம்பம், சமுத்திரம் கரை புரண்டது, எரிமலையின் கக்கல், ஹோல்ஸேல் கணக்கில் அல்வாத், துண்டாய் உயிர் விழுங்கல், பூமியின் நிலப்பாகமே நகர்ந்துகொண்டிருக் கிறது. இவையெல்லாமே முன்னேற்றத்தைச் சேர்ந்தது. வேர் விட்டுப்போன விருக்ஷத்தில் ஒரு விழுதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு, நீ என்னைப் பிடித்துக்கொண்டு தொங்கு என்றால், அது நடக்கிற காரியமா?"

சிரிக்கிறான். கேலி இந்தச் சந்ததியின் பாஷை.

ஆனால், வார்த்தை யென்று கொண்டால், சிந்திக்கத் தக்கதே.

இந்த நிலைக்கும் சாக்ஷியாக, புராண காலமாக நின்ற இடத்தில் நின்றபடி, உதட்டோரங்களில் குழிந்த புன்முறுவலால் அகிலத்தை ஆட்சி புரிந்துகொண்டு -

அவள் நிற்கிறாள்.

------------

 

 

  லா. ச. ராமாமிருதம் படைப்புக்கள் சிலவற்றை பார்வையிட

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)