3. புற்று

 

காலை வைத்தபிறகுதான் அது வழுக்கிய தினுசிலிருந்து, வந்தது ஆபத்து என்று உணர்ந்தான். உடனே காலை எடுத்து விட மூளையிலிருந்து காலுக்குத் தந்தி பறக்குமுன், புறங்காலில் அடி விழுந்துவிட்டது. ஒரு துள்ளுத் துள்ளிப் பத்தடி தூரம் அப்பால் போய் விழுந்தான். வயலில் அறுத்து விட்டிருந்த கதிரின் முளைகள் உடல் முழுவதும் முள்ளாய்க் குத்தின. அவன் மிதித்த விடத்திலிருந்து புஸ்ஸென ஒரு சீறல்! அவ்வளவுதான். விஷயம் மிஞ்சிவிட்டதென்று உணர்ந்தான்.

ஆனால் சமயபுத்தி ஓடிவிடவில்லை. அவசர அவசரமாய்ச் சட்டைப் பையில் தேடினான். விஷம் "கிர்ரென்று ஏறிக் கொண்டு வந்தது. எப்பொழுதும் கையுடன் இருக்கும் பேனாக் கத்தி இன்று ரயில்வே ஸ்டேஷனில் விட்டிருக்கும் கைப்பெட்டியில் மாட்டிக்கொண்டு விட்டது. உள்ளே நம்பிக்கைச் சுவரில் நாலு கற்கள் இடிந்தன. இருந்தும் கடுமையான சந்தர்ப்பங்களிலே உழன்று பழகியதால், அவ்வளவு சீக்கிரம் தன்னைத் தான் கைவிடத் தோன்றவில்லை. மறுபடியும் பைகளில் தீப்பெட்டியைத் தேடினான். கடித்த விடத்தைச் சுட்டு எரித்து விடலாம் என்று ஒரு எண்ணம். சிகரெட் பெட்டியிலிருந்து சிகரெட்டுகள் அந்தியிருட்டில் வெண்மையாய்ச் சிதறின; தீப்பெட்டியில் ஒரே ஒரு குச்சிதான் இருந்தது. சபித்துக் கொண்டு இருமுறைகள் கிழித்தான் இரண்டு பொறிகள்தாம் தெறித்தன. சுடர் உடனே குதிக்கவில்லை. மருந்து கிழிப்பதிலேயே உதிர்ந்துவிட்டது. உள்சுவர் தரைமட்டமாய் இடிந்தது. ஒடிப்போய் ஊரையும் பிடிக்க முடியாது; ரயிலடிக்கும் திரும்ப முடியாது. சமதூரத்தில், இரண்டுக்கும் வெகுதூரத்தில் மாட்டிக் கொண்டோம் எனக் கண்டுகொண்டான். விஷம் ஏறிக் கொண்டே வருகிறது.

எங்கேயிருக்கிறோம்?"- சுற்றுமுற்றும் நோக்கினான்.

"எங்கேயிருக்கிறோம்?"

"எங்கிருந்து வந்தோம்?"

"எதற்காக வந்தோம்?"

"எங்கே போகிறோம்?"

"இனி வரப்போவது என்ன?"

சில சமயங்களில் மனத்தில் ஒரு எண்ணம் எழுந்ததும், சமயமும் சம்பந்தமுமற்று, அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி, தாமே தம்மைத் தனித்தனித் தொடர்புகளுடன் பெருக்கிக்கொண்டு விடுகின்றன.

"எங்கிருந்து வந்தாய்"- திடீரென்று அவனுள்ளிருந்து ஏதோ பிரிந்து, எதிரில் நின்றுகொண்டு, அவன் கேள்வியை அவனையே திருப்பிக் கேட்பதை உணர்ந்தான். உடனே அவனுக்கிஷ்டத்துடனோ, இஷ்டமில்லாமலோ, அக்கேள்விக்குப் பதிலை அவனிடமிருந்து, அது பன்னிப் பன்னிக் கேட்கும் முறையிலேயே கட்டாயப்படுத்திற்று.

"எங்கிருந்து வந்தாய்?"

"புற்று! புற்று! புற்று!"-- ஒரே வார்த்தை அவன் கண்ணெதிரில் மாறிமாறிச் சுற்றி வந்தது. அதன் சப்தம் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது.

"புற்று! புற்று! புற்று! நீ புற்று! நான் புற்று! எல்லாம் புற்று! உலகமே புற்று புற்று, புற்று!" --

"அடே உன்னைப் புத்துக்குப் பால் வாத்துப் பெத்தேண்டா"-- இங்கு அவன் தாயின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டான். -

"அடே என் வயிறு திறந்த வேளை என்ன வேளையடா?"

 

சின்னப் பையனாயிருக்கையில், துஷ்டப் பையனா யிருக்கையில், கெட்ட சகவாசம் பண்ணிப்பண்ணி ஊர்ச் சண்டையை எல்லாம் இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகையில், அவன் தாய் கஷ்டம் தாங்காமல் இப்படிச் சலித்துக் கொள்வாள். இதைக் கேட்டுக் கேட்டு அலுத்து ஒருநாள், "எந்தப் புத்துக்குப் பால் வார்த்தாய், அம்மா?” என்று இடம் கேட்டுத் தெரிந்துகொண்டு-- என்ன ஆச்சரியம்தன்னையே சின்னப் பையனாய், இதே இடத்தில், அதோ மரத்தடியில் ஓங்கி வளர்ந்திருக்கும் புற்றை, அதற்குச் சற்றுத் தொலைவில் மேட்டு நிலத்தில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு சுவாரஸ்யமாய்க் கவனிப்பதைக் கண்ணெதிரில் கண்டான்! கிழிந்த அழுக்குச் சட்டையுடனும், அரை நிஜாருடனும், இடுப்பில் செருகிய கவணுடனும், முழங்கையை நிலத்தில் ஊன்றி, மோவாயைக் கையில் ஊன்றி, புற்றில் என்ன நேரப் போகிறதெனச் சுவாரஸ்யமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால் அவன் என்ன நினைத்தானோ, எதுவும் நேரவில்லை! ஒரே நிசப்தம்தான் நிலவியது. சுற்றுமுற்றும் வயல்களும், ஏரிக்கரை மேட்டில் இருபுறமும் பனை வரிசை களுக்கிடையில் ஒற்றையடிப் பாதையும், களத்துமேட்டில் வைக்கோற் போரும்......

கொஞ்ச நாழிகை காத்திருந்தான்; பிறகு கையும் காலும் சும்மாயிருக்கவில்லை. அதுவும் கையில் கவண் இருக்கையில்: உருண்டைக் கல்லாய் ஒன்று பார்த்துப் பொறுக்கி, குறிபார்த்து லேசாய் அடித்தான். மண் கொஞ்சம் உதிர்ந்தது. உள்ளிருந்து படத்தை விரித்துக்கொண்டு ஒரு தலை எட்டிப் பார்த்தது. கண்களில் சிந்தும் பச்சைக் குரூரத்தையும், அதன் பட்டை தீட்டிய அழகையும், பிளந்த நாக்கையும் கண்டு அதிசயித்து நின்றான். கொஞ்ச நேரம் அவனைச் சிந்தித்துவிட்டுத் தலையை உள்ளுக்கிழுத்துக்கொண்டது. ஆனால் அவன் இயற்கை சேஷ்டை போகவில்லை. இன்னொரு கல்லை விட்டெறிந்தான். சீறிக்கொண்டு அது எழுந்ததுதான் அவனுக்குத் தெரியும்; அங்கு பிடித்த ஓட்டம், வீட்டுக்கு வந்து, கதவைத் தடாலென்று சாத்தித் தாளிட்ட பிறகுதான் நின்றது. உடல் நாய்போல் இரைத்தது. அன்றைக்கு அவனுக்குச் சாதம்கூட வேண்டி யில்லை. துக்கத்தில்கூட உளறினான்.

பிறகு அடிக்கடி அல்லது அப்போதைக்கப்போது, அது அவன் கனவில் வந்துகொண்டிருந்தது. ஒரு சமயம் தவளையைப் பிடித்துக்கொண்டிருக்கும்; அல்லது ஆடிக்கொண்டிருக்கும் அல்லது உடம்பை முறுக்குப் போல் சுற்றிக் கொண்டு, ஒரு முழ உயரத்திற்குத் தலையை மாத்திரம் தூக்கி அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும். ஒவ்வொரு சமயம் அவனுடனேயே படுக்கையில் குளிருக்கடக்கமாய், ஒட்டிக்கொண்டு படுத்திருக்கும். அவன் கண்களிலோ, வாயிலோ முத்தமிட்டு, முகத்தை நக்குவது போலுமிருக்கும். திணறித் திணறி அதனின்று விடுபட முயன்று விழிக்கையில், உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்கும்.

ஆனால் காலை வெயில் உடலில் படவேண்டியதுதான்; மறுபடியும் மனத்தில் தைரியம் பிறந்து, பல்லைக்கூட விளக்காமல் விளையாட ஒடிப்போய்விடுவான். அவனுக்கு வீடு பிடிக்கவில்லை. சுற்றுமுற்றும் இருப்பவரையும் பிடிக்க வில்லை. முக்கியமாய் ஸ்திரீகளைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஒன்று அவனை ஒரே குழந்தையாகவே நடத்தினார்கள்; அல்லது எதற்குமே மதிக்கவில்லை. இப்பொழுது திடீரென ஒரு பழைய சம்பவம் அவன் கண்முன் நின்றது. செத்துக் கொண்டிருக்கையில்கூட, அதை மறுபடியும் மனத்திரையில் பார்க்கையில் சிரிப்பு வந்தது.

தன் வீட்டுக்கு நாலு வீடு தாண்டி ஒரு வீட்டில், அந்த வீட்டுப் பையனுடன் அவன் விளையாடிக்கொண்டிருந்தான். சவுக்காரக்கட்டியைத் தண்ணிரில் கரைத்து, துடைப்பக் குச்சியை அதில் தோய்த்து, மறு துணியில் ஊதி, கொப்புளங்கள் உண்டாக்கிக் களித்துக்கொண்டிருந்தான். அடிக்கடி கிணற் றுக்குப் போய், இன்னும் கொஞ்சம் சோப்பைக் கரைத்துக் கொண்டு திண்ணைக்கு வருவான். அந்தாத்து மாமா திண்ணையில் இன்னும் நான்கு நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அந்தாத்து மாமி, வாயிலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டு உள்ளிருந்து ஓடிவந்தாள். "ஐயோ என் வைரத்தோட்டைக் காணுமே!"-- மாமி உளறியடித்தாள். "ஐயோ பாவி என்ன பண்ணே?” உடனே கூட்டம் கூடி விட்டது.

"ஸ்னானம் பண்ணறதுக்காகக் கழட்டிக் கிணத்தடியிலே வச்சேன். தலையைத் துவட்டிண்டதும் மாட்டிக்கலாம்னு சமயலறைக்குப் போய்ப் புடவையை மாத்திண்டு வரத்துக் குள்ளேயே மாயமாய்ப் போயிடுத்தே, இதென்னடியம்மா அக்கிரமம்!"

"வாசக்கூட்டி எங்கே?"

"அவ அப்பவே போயிட்டாளே!"-- திடீரென்று அவள் பார்வை அவன்மேல் விழுந்தது. ஒரே பாய்ச்சலாய் அவன் மேல் பாய்ந்தாள். "இந்தக் குருக்களாத்துப் பையன்தான் கிணத்தடிக்குச் சும்மா வந்திண்டிருந்தான்--"

மாமா கண்களில் பொறி பறக்க அவன் பக்கம் திரும்பினார். "அட பயலே! நிஜத்தைச் சொல்லு!"

பையன் திகைத்தே போனான். "எனக்கொண்ணும் தெரியாதே--"

"அவன் இடுப்பு முண்டை அவிழுங்கள்- எங்கேயாவது மறைச்சு வச்சிருப்பான்-" -

"பேசாமெ ரெண்டு புளிய மலாறு கொண்டு வாருங்கள். முற்றத்தில் உலத்தியிருக்கே-- வீறுவீறுன்னு வீறினா, பையன் பேசாமெ தோட்டைக் கக்கறான்-- பாம்பு மாணிக்கத்தைக் கக்கறமாதிரி-" -

 

இதற்குள் ஒருவர் பிரியமாய், அவனை மடியில் வைத்துக் கொண்டு மிகவும் சாமர்த்தியமாய், "சொல்லுடா கண்ணா, எங்கிட்ட மாத்திரம் சொல்- பெப்பர்மிண்டு வாங்கித் தரேன். எங்கே ஒளிச்சு வச்சிருக்கே? உனக்கு என்னத்துக்கு அது? உனக்கு வேறே சாமான் எல்லாம் வாங்கித் தரேன்--"

"எனக்கு ஒண்னுந் தெரியாது- எனக்கு ஒண்ணுந் தெரியாதே-!" முள்ளிலை மாட்டிக்கொண்ட ஆட்டுக் குட்டியின் அபலைக் குரல் மாதிரியிருந்தது அவன் கத்தல். கண்கள் பயத்தால் சுழன்றன.

நகையைக் கெட்டுப் போக்கின மாமி, உடம்பெல்லாம் ஆட்டிக்கொண்டு ஆத்திரத்துடன் அவனிடம் வந்தாள். "ஒண்ணுமே தெரியாதாடா உனக்கு-- குழந்தைக்கு ஒண்ணு தெரியுமோ! வாயில் விரலை வச்சால் கடிக்கத் தெரியுமோ?" என்று சொல்லிக்கொண்டே, அவன் வாயில் விரலை வைத்தாள். அவ்வளவுதான் பையன் ஆத்திரத்துடன் விரலைக் கடித்துவிட்டான். அவனுள் உறங்கியிருந்த ஏதோ ஒரு உணர்ச்சியை அவள் அனாவசியமாய்த் தட்டியெழுப்பிவிடவே, அது உடனே அவனையும் மீறித் தன்னைத் திருப்தி செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டது.

அவன் முதுகில் அறைமேல் அறை விழுகிறது. முகத்தைக் கைகள் பிராண்டுகின்றன. கண் இமைகளில்கூட ஒரு நகம் பதிந்து எரிகின்றது. தலைமயிரை யாரோ பிடித்து உலுக்கு கின்றார்கள். இருந்தும் கடியை விடமாட்டேன் என்றான். வில் வீல் என்று கத்திக்கொண்டு, அவன் வாயில் கொடுத்த விரல் மேல் அவள் அங்கங்கள் முழுவதும் நெளிவதைக் காணக் காண, அவன் உடலில் ஒரு பயங்கர இன்பம் பரவியது.

கடைசியில் மிருக பலத்தில் அவனை அவளிடமிருந்து பிய்த்தெறிந்தார்கள்.

இந்தச் சமயத்தில் அந்த வீட்டு மாமா, தொப்பை குலுங்க, கையில் ஒரு கிண்ணத்துடன் உள்ளிருந்து ஓடி வந்தார். "ஏண்டி சமையலறையில் நெய்க்கிண்ணத்திலே போட்டுட்டு, கிணத்தடியிலே தேடினா அகப்படுமா? உன் சத்தம் தெரிஞ்சு ஒரு தடவை நான் போய்த் தேடினேன். தோட்டை வாங்கினவனுக்குன்னா அதன் கவலை! போட்டுக்கிறவளுக்கு என்ன?"

எல்லோரும் திருதிருவெனத் திருட்டுக்களை சொட்ட ஒருவரையொருவரும், அவனையும் பார்த்து விழித்தனர். குருக்கள் வீட்டுப் பையனாகையால், ஏழைப் பையனாகையால், அவனை இத்தனை அடி அடித்துவிட்டு, இத்தனை சொல் சொல்லிவிட்டு, இப்பொழுது என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனுக்குத் தாங்க முடியவில்லை. திடீரென்று மாமா முகத்தில் கொத்து எச்சிலைக் காறி உமிழ்ந்துவிட்டு, பீறிட்டு வரும் அழுகையுடன் வீட்டுக்கு ஒடியே வந்துவிட்டான். ஆனால் அங்கு மாத்திரம் எந்தக் கை அணைக்கிறது? மானம் போன ஆத்திரத்தில் அம்மா அவனை முதுகில் இரண்டு அறை வைத்து, அறையுள் தள்ளிக் கதவைச் சாத்தினாள்.

சாப்பாடுமில்லாமல், தூக்கமுமில்லாது, செய்யாத குற்றத்திற்குப் பட்ட அவமானத்தில் இரவு முழுவதும் பொருமிப் பொருமி, அவனுள் என்ன நேர்ந்ததோ, அன்று மறுநாள் முதல் மெய்யாகவே திருடத் தலைப்பட்டான்.

ஆத்திரத்துக்காகத் திருட்டு; முதலில் சின்னச் சின்னத் திருட்டு, சிங்காரத் திருட்டு, சாமான்களுக்காகத் திருட்டு, பிறகு திருட்டுக்காகத் திருட்டு, அந்தச் சமயத்து நெஞ்சுப் படபடப்பும், இரத்தம் உடலில் குதித்துப் பாயும் ஆனந்தத்திற்காகவும் திருட்டு!

போகப் போக வெறும் திருட்டுடன் அவன் பழக்கங்கள் நிற்கவில்லை. புதுப்புதுப் பழக்கங்கள்; புதுப்புது இன்பங்கள். இன்பத்தின் புதுமை, புதுமையின் இன்பம். அதுவும் பிறருக்கு இழைக்கும் துன்பத்தின் இன்பம். அவன் செய்கைகளால் பிறர் படும் சங்கடத்தைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அவர்கள் மேல் இருந்த கரிப்பு அதிகரித்துக் கொண்டுதான் போயிற்று. நாளடைவில் அவன் மார்புள் ஏதோ கனமாய் இறங்கி, பிறகு அங்கே கெட்டிப்படுவது போல்கூட அவனுக்குத் தோன்றியது. துளித்துளியாய், படிப்படியாகத்தான்--ஆனால் நிச்சயம்.

அவனை ஒருவராலும் அடக்க முடியவில்லை.

"ஐயோ, நீ எனக்கு ஒரே பிள்ளையடா! உங்கப்பாகூட இப்போ இல்லேடா என் பேரைக் கெடுக்காதேடா நான் கண் மூடுகிற வரையிலுமாவது சரியாய் இரேண்டா-- என்று கண்ணிர் வழிந்தோட, அம்மா மன்றாடுவாள். இருந்து இருந்து, தவங்கிடந்து ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றாலும், பையன் பிறந்த ராசி, குடும்பம் திடீரென க்ஷீண தசையடைந்துவிட்டது. கணவன், திடீரென ஜூரம் அடித்து, நடுத்தர வயதிலேயே காலமானார். இருக்கும்போதே வருவாய் வெகு சொற்பம். இருந்தும், பையனுக்கு வயது வந்ததும் மலையைப் பெயர்த்து விடப் போகிறான் எனும் அபார நம்பிக்கை. அதன் ஒரே தூண்டுதலில் படாத கஷ்டங்கள் எல்லாம் பட்டு, மானத்தையும் அவனையும் காப்பாற்றி வந்தாள். ஆனால் பையன் வழியோ தனி வழியாய்ப் போய்விட்டது. சுவாமி பாடே வேளா வேளைக்கு நைவேத்தியமில்லாமல், தகராறாய்ப் போய் விட்டது. பையன் சோற்று மூட்டையை மரக்கிளையில் எங்கேயாவது தொங்க விட்டுவிட்டு, சஹாக்களுடன் கூத்தடிக்கப் போய்விடுவான். வீட்டில் சாப்பாட்டுக்கு அந்த மூட்டை வந்தாக வேண்டும். தெய்வம் எப்பொழுது கண் திறக்குமோ என்றுகூட இல்லை-- பையனுக்கு வீட்டுப் பக்கம் எப்பொழுது மனந்திரும்புமோ என்று அம்மா, கண்ணில் உயிரை வைத்துக் கொண்டு, காத்துக் கிடப்பாள்.

அப்படியே அவன் இஷ்டப்பட்ட சமயத்தில் வீட்டுக்கு வந்தவனையும், கனிவாகவோ கண்டனமாகவோ ஒரு வார்த்தை கேட்டுவிட முடியுமா? அவன் சீறி விழுகையிலேயே நாடி ஒடுங்கிவிடும். "சுவாமி, நீதான் கண்ணைத் திறக்க வேண்டும்குழந்தையைக் கொடுத்தே- கூட அவனுக்குக் குணத்தைக் கொடு--"

மிடிவாயும், பிள்ளைக் கவலையும் பட்டுப் பட்டு, அவளுக்கு வயதுக்கு மீறிய கிழம் விழுந்துவிட்டது. இதைத் தவிர ஆசாரம், சீலம் எல்லாம் அதிகம். தானாய் நேரும் பட்டினிகள் தவிர, நாள் கிழமையென்று உபவாசம் இருப்பாள்-- எல்லாம் பிள்ளைக்காக பிள்ளைக்கு நல்ல புத்தி வரணும். பிள்ளைக்குக் கல்யாணம் ஆகணும். பிள்ளை குலம் வளரணும்:- ஆனால் அவள் சாமியை வேரோடு பிடுங்கப் பிடுங்க, அது அவள் விஷயத்தில் கடுமையாய்த்தானிருந்தது. தரித்திரம்தான் பிடுங்கியெடுத்தது. அப்பளமிட்டு, இலை தைத்து விற்கும் நிலையிலிருந்து மாறவே முடியவில்லை.

ஆனால் அவள் பையனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? எதை நம்பிக் கொடுப்பது? குணத்தையா, குடும்ப சம்ரக்ஷணையிலும் கெளரவத்திலும் இருக்கும் பொறுப்பிற்கா, படிப்புக்கா?

பையன் என்னவோ ராஜா மாதிரிதான் இருந்தான். ஒற்றை நாடித் தேகம் நெருப்புச் சிவப்பு நடை, நடையா யிருக்காது; ஏதோ காற்றில் மிதப்பது போலத்தான் இருக்கும். அதன் அழகு அவ்வளவு லாகவம். உடை பாவனைகள் எல்லாம் அப்படித்தான். கோவில் குருக்களாய் இருப்பதால், ‘கிராப்பு வைத்துக்கொள்ள முடியவில்லை. மயிரை நீளமாய் வளர்த்து மேல் நோக்கி வாரிவிட்டிருந்தான். கஞ்சிக்குலாட்டரியாயிருந்தாலும் நல்ல உடைதான் உடுத்துவான். கண்களின் ஒளி ஊடுருவும். அவனுடைய கத்திப் பார்வைக்குப் பயந்தே அண்டை வீட்டார் எல்லோரும் தங்கள் பெண்டிரை அடைகாத்து வந்தனர்.

அவன் தெருவழியே போகையில், பெண்கள், வீட்டு ஜன்னல் வழியே ஆசையுடன் திருட்டுப் பார்வை பார்ப்பார்கள். அதுவும் அவனுக்குத் தெரியும் தெரியாததுபோல், ஒரு அலட்சியப் புன்முறுவலுடன், மிதந்துகொண்டே போவான். இத்தனைக்கும் அவன் அவர்களை நாடிச் சுற்றியதில்லை. ஆனால் ஊரில் மற்றக் காலிகளைவிட அவனிடம்தான் பயந்தார்கள். அவனுக்கும் அவன் சஹாக்களுக்குமே வித்தியாச மிருந்தது. அவர்களுக்கே அவனிடம் ஒரு எல்லைக்கு மேல் நடுக்கந்தான். அவனிடம் ஒரு நெருங்க முடியாத தன்மையும், அடிப்படையான குரூரமும் இருந்தன. ஏதோ கத்தியோடு பழகுவது போல்தான்! அதை எவ்வளவு அன்போடு அனைத்தாலும் அதற்கு வெட்டத்தான் முடியும் அதன் இயல்பே அதுதான். அவனுக்கு அவனைப்பற்றியே அநாவசியமாய் இருந்தது. அவன் எதற்கும் தயாராய் இருந்தான். அதனால் அவன் மற்றக் காலிகளைவிட அபாயகரமானவனாய் இருந்தான். கருணை என்பதே அவனிடமில்லை.

அவன் தாயின் வேதனையோ, மற்றவர்கள் வேதனையோ, அவனை பாதித்த மாதிரி தெரியவில்லை. அவளுடைய முறையீடும், மற்றவரின் முறையீடும், ஏதோ பாறையின் மீது மோதும் அலைகளின் வியர்த்தமாய் இருக்கும். அசைந்து கூடக் கொடுக்காத அப்பாறையே போல, அவனுடைய மெளனமும் அச்சத்தை விளைவித்தது. தவறிழைத்தவனின் மெளனமாயிலாது, அது அலட்சியத்தின் மெளனமாயிருந்தது. மார்மேல் கையைக் கட்டிக்கொண்டு எங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பான். ஜலத்துள் அமுங்கிய குடம் போல், அவன் தன்னுள் மூழ்கிக் கிடப்பான்.

"என்னடா உன்கிட்டத்தானே சொல்றேன். இப்படிப் பண்ணலாமாடா?" என்று அவன் தாய் எரிந்து விழுந்தால், "ஊம்?- என்னம்மா சொல்றே?" என்று விழித்தெழுவான். அதுவரை என்ன யோசனை பண்ணிக்கொண்டிருந்தான் என்று கேட்டால், அவனுக்கே தெரியாது. முகத்தில் சுளிப்பு என்று இல்லாவிட்டாலும், அதில் சிரிப்பு என்றும் இல்லை.

ஆனால் எந்தப் புற்றுக்குப் பால் வார்த்து அவனைப் பெற்றெடுத்தாளோ, அப்புற்றின் வழி அவன் போகையில், அதைப் பார்க்கையில், எரிமலையின் சுண்டிய கற்குழம்பு தனக்குள் தளைப்பதுபோல் அவனுள் ஏதோ அசைந்து கொடுக்கும். கொஞ்ச நாழியாவது அங்கு நின்று அதைச் சிந்தியாமல் போக முடியவில்லை.

அப்புற்று முன்பைவிட இப்பொழுது மிகவும் வளர்ந்து விட்டது. உயரமும் அதிகம். சிறுசிறு மண் குன்றுத் தொடர்கள் ஓங்கி நின்றன. அவைகள் தாமே வளருந்தன்மைதான் என்ன? அவைகளின் உள் பக்கம் எப்படியிருக்கும்? எதுவரைதான் போகும்? அதன் உள் இருள் எவ்வளவு ஆச்சரியமானதாய் இருக்கும்? அந்த உள் இருளுடன் ஐக்கியமாய்விடின்--!

மண்டையை வெடித்துக்கொண்டு கிளம்ப முயன்றாலும், அதற்குமேல் இடமில்லாததால் யோசனை எட்ட மறுத்துவிடும். பெருமூச்செறிந்து திரும்புவான்.

போகப் போகக் குருக்கள் பையன் சமாசாரம் தாங்கக் கூடியதாயில்லை. திடீரென்று ஒரு நாள் ஒரு கூட்டம் திரண்டு அவன் வீட்டு வாயிலையடைந்தது. ஏக இரைச்சலுடன். அப்பொழுது அவன் வீட்டில் இல்லை. தாய்தான் இருந்தாள். அரவங்கேட்டு, அடுப்பங்கரையிலிருந்து கைச் சாமானோடு ஓடிவந்தாள். குழம்புக்குப் புளியைக் கரைத்துக்கொண்டிருந்தாள். கும்பலைப் பார்த்ததும் வயிற்றில் புளியைக் கரைத்தது. கூட்டத்தின் திரண்ட கோபாவேசத்தில், அவ்விடத்தில் ஆடிய காற்றே விறுவிறுத்தது.

ஆரவாரத்திலிருந்து ஒரு குரல் பிரிந்து வந்தது. அதன் சப்தம் அவள்மேல் மோதியது.

"பெரியம்மா- இனிமேல் உங்கள் பையன் கோவில் படி தாண்டினால், நாங்கள் காலை ஒடித்துப் போட்டு விடுவோம்உங்கள் பையனை நீங்கள் இனி பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு எங்களைக் குறை சொல்ல வேண்டாம்--"

"ஐயோ இப்போ என்ன நடந்துடுத்து?"

கையில் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு வாசற் குறட்டில், ஒண்டியாய் அவர்கள் எதிரில் நிற்கையில், அவளைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது.

"உங்கள் பையனும் இன்னும் நாலு சோம்பேறிகளுமாய்ச் சேர்ந்து, நேற்று ராத்திரி, எருவுக்காகக் கழனியில் மடக்கி விட்டிருந்த ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, ஏதோ வெங்காயம், வேர்க்கடலை, பலாக்கொட்டை சுடுவதுபோல், நடுவயலில் குழியை வெட்டி நெருப்பை மூட்டிச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டார்களாம். இந்த அக்கிரமம் எங்கே அடுக்கும்? பிராமணப் பிள்ளையாய்ப் பிறந்துவிட்டு இந்த மாதிரி பண்ணிப்பிட்டு, கோவிலில் மணியாட்ட வந்துவிட்டால், ஊர் உருப்பட்டுவிடுமா?”

அவளுக்கு உடல் பரபரத்தது. "இன்னிக்கு எனக்காச்சு, அவனுக்காச்சு. நான் கவனிச்சுக்கறேன். நானே உங்களுக்குச் சொல்கிறேன். அவனைக் கோவிலில் சேர்க்காதீர்கள். இன்றையிலிருந்து பூஜைக்கு வேறு ஏற்பாடு பண்ணிக்கொள்ளுங்கள்."

அவன் வீட்டுக்கு வருகையில் அவள் பூஜையில் உட்கார்ந்திருந்தாள். கட்டுக்கட்டாய் விபூதியணிந்து, துல்லியமான வெண்மையுடுத்தி, சிவப்பழமாய் மனையில் உட்கார்ந் திருந்தாள். எதிரே, கோலத்தின் மேல் பூஜை சம்புடம் இருந்தது.

"அடே! இங்கே வா-"

அவள் குரல் அவளுக்கே கணீரென்றது. அவன் மெளனமாய் வந்து நின்றான். புருவங்கள் வினாவில் நெரிந்தன. இடமே இருவரின் அந்தர பலத்தின் வேகத்தில் சிலிர்த்தது. இரு குஸ்திக்காரர்கள், தாக்குவதற்குமுன் ஒருவர் பலத்தையொருவர் வெறும் கண்ணோட்டத்திலேயே ஆராய்வதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

"இப்போ நான் பூஜையில் உட்கார்ந்திண்டிருக்கேன். அதனாலே என் வாயால் சொல்லக்கூட அஞ்சறேன். ஆனால் இன்னிக்கு உன்னைப்பத்தி நான் கேள்விப்பட்டது வாஸ்தவமா?"

அவன் முகம் சஞ்சலிக்கவில்லை; சிந்தனையில் ஆழ்ந்தது. அவனுடைய மெளனத்தால்தான் குழப்பம் உண்டாகியது. தன் மகனாயிருப்பினும் அவனை அறிய முடியாதது அவளுக்குப் பெருந்தோல்வியாயும் ஆத்திரமாயுமிருந்தது.

"நான் எதைக் குறிச்சுக் கேக்கறேன்னு புரியறதா?"

புன்னகை புரிந்தான். "புரியாமல் என்ன?"

"என்ன சொல்றே?"

"உனக்கு என்ன தோன்றுகிறது? இப்பொழுது அவன் தான் பூனை, அவள்தான் எலியாக அவன் திடீரென்று மாற்றியதும், அவள் தன்னை அடக்கிக்கொள்ள செய்யும் முயற்சிகள் எல்லாம் பறந்தன.

"அடே, இந்தச் சங்குப்பாலைக் கையிலே வெச்சுண்டு சொல்றேன்- நீ அழிஞ்சு போயிடுவே- என் வயிறு எரியக் காணாதே--"

அவன் குரலும் பதிலும் அமைதியாய்த்தானிருந்தன—“மற்றவர்கள் என்னை அழிக்கறதைவிட நானா அழிஞ்சு போறது மேல் இல்லையா? அதுவே ஒரு வைராக்கியந்தான், அம்மா-- அதற்கு ஒரு சத்தியமுண்டு-"

அம்மாவுக்கு உச்சி மண்டை இரத்தத்தில் முத்துக் கொதிகள் வந்தன. தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்தினாள்:

"அழிஞ்சேதான் போயிடுவே. நான்தான் சொல்றேனே."

"இப்போ என்னம்மா வந்துடுத்து? அழிஞ்சால்தான் இப்போ என்ன முழுகிப்போயிடுத்து? ஏன் இப்படி பிரமாதப்--"

"ஹா, பாவி! எண்ண பற்றே?-" அவள் கண்கள் பயங்கரத்தில் அகல விரிந்துவிட்டன. அவள் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அவள் கண்கள் அவன் கையைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அப்பொழுதுதான் அவனுக்கு என்ன செய்தோம் எனத் தெரிந்தது. பேசிக் கொண்டே பூஜை விளக்கில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தான்.

அவள் தன் வசமிழந்துவிட்டாள். அவள் எதிரில் திடீரென்று திரை கிழிந்து, அவளுக்கு மாத்திரம் தரிசனம் ஆவதுபோல், முகம் மாறியது. கன்னத்தில்பளீர் பளீர் என்று அறைந்துகொண்டாள். கண்கள் அமானுஷ்யமான ஒளியுடன் ஜொலித்தன.

"ஹே சுப்பிரமணியா! என்னை மன்னிச்சுடு-- நான் இவனைப் பெத்தேயிருக்கப்படாது! என்னத்தைப் பெத்தேன்னு இப்பொழுதுதான் கண்டேன்! நான் பெரும் பாவத்தைப் பண்ணிட்டேன்-- என்னை மன்னிச்சுக்கோ. மன்னிச்சுக்கோ-"

தடாலென்று அவள் கீழே விழுந்துவிட்டாள்.

அவன் சிரித்துக்கொண்டே புகையை ஊதிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

வீடு திரும்பும் வேளைக்கு அஸ்தமித்துவிட்டது. அவன் வீடே ஊருக்குக் கொஞ்சம் ஒதுக்கு மேட்டு நிலத்தில் இருந்தது. அதில் சாயந்தரம் திண்ணைப் புரையில் ஏற்றி வைக்கும் அகல் விளக்குச் சுடர் தொலைவிலேயே தெரியும். ஆனால் இன்று விளக்கு எரியவில்லை. அதுவே ஒரு ஆச்சரியமாய்த்தானிருந்தது. கிட்ட நெருங்க நெருங்க வீட்டின் தேக்க மெளனம் வாய்விட்டு அலறியது.

வெறுமெனச் சாத்தியிருந்த வாசற்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றதும் இருட்டில் ஏதோ கனமாய் அவன் மேல் உராய்ந்து ஆடியது. காலின் கீழ் ஏதோ தடுக்கியது. பிடரி குறுகுறுத்தது. சட்டென நெருப்புக்குச்சியைக் கிழித்தான்அம்மா ரேழி விட்டத்திலிருந்து கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தாள். காலடியில் ஒரு பித்தளை அடுக்கு உருண்டோடி யிருந்தது.

அப்பொழுதாவது கலங்கியதோ மனம் என அவனையுமறியாமல் தன்னை ஆராய்கையில், அதில் ஏதோ ஒர் எண்ணம் லேசாய் மின்வெட்டுப்போல் பாய்ந்து மறைந்தது.

"சே, இன்னுங் கொஞ்ச நாளிருந்தால் தானாகவே செத்துப்போயிருக்கலாமே!"

அன்றிரவே, அவ்வூர் மண்ணை உள்ளங்காலினின்றும் உதறிக்கொண்டு நடந்தான்.

"பிறகு எங்கே போனாய்?"

அவனின்றும் பிரிந்த அவனுக்கிடும் தீர்மானமான கேள்விக்குப் பணிவுடன் பதில் சொல்லிக்கொண்டு போனான்.

"போனேன், போய்க்கொண்டேயிருந்தேன். கையிலிருந்த ஒன்று அரைக் காசும் செலவழிந்து போயிற்று. திருடித் தின்னவாவது தோன்றிற்றே தவிர, பிச்சை கேட்க மனம் மானம் பார்த்தது. -

"மூன்று நாள் பட்டினி. கடைசியில் எங்கோ போய் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, பணங் கொடுக்காமல் நழுவப் பார்க்கையில், கல்லாப் பெட்டியிலிருந்து முதலாளி மலை போன்ற சரீரத்தைத் துக்கிக்கொண்டு எழுந்து வந்து கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டான். பிடி, இரும்புப் பிடியாய் இருந்தது. மரியாதையாய்ப் பணத்தை வெச்சிட்டுப்போ. இல்லாட்டா தின்னத்துக்குக் கூலியாக வேலை செஞ்சிட்டுப் போ. இரண்டு ஈடு உளுந்து இருக்கு, அரைச்சுக் கொடுத்துட்டுப் போ.. என்றான்.

"என்ன செய்வது? அரைத்துக் கொடுத்தேன். பிறகு அப்போதைக்கு வயிற்றுப் பாடு பெரும்பாடாயிருந்ததாலும், அவனுக்கும் ஒரு ஆள் வேண்டியிருந்ததாலும் அங்கேயே அது சாக்கில் வேலைக்கும் தங்கிவிட்டேன்.

"ஆனால் அவனிடம் நான் வகையாய் மாட்டிக் கொண்டேன். தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுந்து கொண்டிருப்பான். ஆட்களைப் பம்பரமாய்ச் சுழற்றி வேலை வாங்குவான். கடைக்கு மாத்திரம் முதலாளியில்லை அவன்; தொழிலிலேயே அவன் முதல்தான்! அவன் சமையலுக்கும் பட்சணங்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி. இங்கே கலியாணம் அங்கே பிறந்தநாள் இங்கே டீ பார்ட்டி, அங்கே விருந்து என்று எப்பொழுதுமே கிராக்கி, அப்போதெல்லாம், அவனோடு அவன் பரிவாரம்-- அதில் நானும்-- கரண்டி களையும், அண்டாக்களையும் தூக்கிக்கொண்டு போவோம்.

"கோட்டையடுப்பருகில் மணை போட்டு உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பண்ணுவான். வேலையெல்லாம் ஆனபிறகு அடுப்பிலிருந்து இறக்கும் சமயத்தில் ஒரோரு பதார்த்தத்திலும் ஒரு கரண்டி எடுத்து மூக்கண்டை கொண்டு போய்-- முகர்ந்துகூட அல்ல-- வெறுமென மூக்கண்டை கொண்டுபோய், பதஞ் சொல்லிச் சரிப்படுத்துவான். மெய்யாகவே அவன் கையில் ஜாலமிருந்தது. அவன் ஒரு சாமானைப் பக்குவம் பண்ணினபிறகு, அதைச் சமைத்தவனே பிரமிக்கும்படி, அதன் மதுரம் அதிகரித்திருக்கும்.

"ஆனால் கோபம் வந்தால் பேய்க்கு வருவது போல் தான்!"

"ஒரு சமயம் ஒரு உத்தியோகதஸ்தன் வீட்டுக்கு வேலைக்குப் போயிருந்தோம். ஏதோ அவனுக்குச் சம்பளமும் வேலையும் உயர்ந்ததற்காக, நண்பர்களுக்கு விருந்தாம்.

"அடுப்பு மிகவும் புகைந்தது என்று அதில் சட்டென ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றியதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, நேரே வந்து, சுழற்றி என்னைக் கன்னத்தில் விட்ட அறையின் வேகத்தில் தொலை துரத்தில் தொப்பென்று விழுந்தேன். அறையின் கனம் என்மேல் ஒரு வண்டி செங்கல் சரிந்தாற்போலிருந்தது.

"யார் வீட்டு சொத்துப் போச்சுன்னு பண்ணறே? அடுப்பு எரிய விடறானாம், விடறான்-- மடையன்!"

"பின்னாலிருந்துகளுக்கென்று சிரிப்பு ஒலித்தது. திரும்பிப் பார்த்தேன். அந்த வீட்டுக்காரரின் பெண் நின்று கொண்டிருந்தாள். இரட்டைப்பின்னல், உள்பாவாடை தெரியச் சல்லாப் புடைவை, தனி மேலாக்கு, ஸ்னோ, பவுடர், நாகரிகத்தின் மற்றச் சின்னங்களுடன்.

"மனிதன் அழிவதற்குக்கூட அவ்வளவு பயப்படவில்லை. அவமானப்படத்தான் அஞ்சுகிறான். அதுவும் பெண்ணெதிரில், அவமானத்திலும் அடி மயக்கத்திலும் கண்கள் இருண்டன. என் கண் எதிரில், என் ஊரில், வயற்புறத்தில், மரத்தடியில் புற்று எழுந்தது-- என்னுள் ஏதோ சீறி எழுந்தது.

"என்னடா முழிச்சுப் பாக்கறே. சுட்டெரிச்சுடறாப்போல! நல்ல பாம்புப் பார்வை! நீ பாம்பாயிருந்தால், உனக்கு ராஜா மூங்கில் தடி இருக்குன்னு தெரியுமா?"

"வஞ்சம் தீர்த்துக்கொள்ளவேண்டுமென்று அப்பொழுதே தோன்றிவிட்டது. சமையல் வேலை முடிந்துவிட்டது. சாப்பாட்டிற்குக் கொஞ்ச நேரமிருந்தது. காற்று வாங்கவும், குளிக்கவும், உடை மாற்றவும் பரிசாரகர்கள் வெளியே போனார்கள். ஆனால் நான் மாத்திரம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவமானம் தாங்காமல் மனம் புழுங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கேலிச் சிரிப்பு இன்னமும் காதில் ஒலித்தது.

"என்ன பண்ணறே, இருட்டிலே உட்கார்ந்துண்டு? உடுத்திக்கப் போகல்லே?"

 

"என் முதலாளிதான் கருவேப்பிலைக் கொத்தை அண்டா ரசத்தில் உருவி உதிர்த்துக்கொண்டு, ஏதோ சொன்னான். அவன் குரலில் இப்பொழுது கோபமில்லை.

"எந்தத் தொழிலிலும் ஒண்ணு தெரிஞ்சிக்கனும் தெரியா விட்டால் அதைக் கத்துக்கற வழியைப் பார்க்கணுமே தவிர, ஏமாத்தற வித்தை கூடாது. இன்னொண்ணு என்னன்னா, பண்ணின தவறுக்கு தண்டனையடைஞ்சப்புறம் அத்தோடு அது போச்சு. அப்புறம் மேல் காரியத்தை ஒட்டணும். நீ மாத்திரம் இந்தத் திருட்டு புத்தியையெல்லாம் விட்டுட்டுத் திருந்தறதாயிருந்தால், உன்னை நான்கல்லாப் பெட்டியில் உட்கார்த்தி வைப்பேன்- என் பெண்ணைக்கூடக் கொடுப்பேன்- போ, போ- சொக்காயையும் வேஷ்டியையும் மாத்திண்டு கோகர்ணத்தை எடு--"

"அவன் எப்பொழுதும் இப்படிப் பேசியதேயில்லை. நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவசர அவசரமாய் அங்கு விட்டுப் போனேன்.

"எனக்கு சமைக்க சரியாய்த் தெரியாவிட்டாலும், பரிமாற என் எஜமான் என்னை நன்றாய்ப் பழக்கியிருந்தான். ஏனெனில், நான் உருவாயிருப்பதாலும், சரியாய் உடுத்துவதாலும், பந்திக்கு எடுப்பாய் இருப்பேன். ஆகையால் அவன் பேருக்கும் எடுப்பாயிருந்தது. முக்கியமான சாமான்களைத் தூக்குவதற்கு நான்தான் முதலில் போயாக வேண்டும். மற்றவர்கள் இதைப்பற்றி அவனிடத்தில் அலுத்துக்கொண்டால், ‘அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது வியாபார சூட்சுமம். சரக்கு பாதி ஆள் பாதி- இது ரெண்டும் சேர்ந்தால்தான் முக்கியமாய் இந்தச் சமையல் தொழிலுக்கு ரஞ்சகம். இல்லாவிட்டால் இவன் சமையல் லட்சணத்துக்கும் கை வாசனைக்குமா இவனைக் கட்டிண்டு அழறேன்?’ என்பான்.

"ஆகவே நான் சாம்பார் எடுத்தேன், கூட்டெடுத்தேன், கறி எடுத்தேன், ரஸம் எடுத்தேன்."

"பந்தியில் அவளும் உட்கார்ந்திருந்தாள். அவள் இலைக்கு நான் வரும்போதெல்லாம் என்னைக் குறும்பாகப் பார்த்துக் கொண்டே சிரித்துக்கொண்டிருப்பாள். எனக்கு எரிச்சலா யிருந்தது. ‘இரு இரு மகளே-- என்று கருவிக்கொண்டே பாதாம்கீரை எடுத்தேன்.

"ஒவ்வொருவருக்கும் ஊற்றிக்கொண்டு வருகையில் அவர்கள் கையில் வைத்ததும் அவரவர் முகங்கள் விதவிதமாய் ஆச்சரியமும், அசடும் வழிய தூக்கிவாரிப் போட்டாற் போல் சவுங்கி, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சவுங்குவதைக் காண்கையில் உள்ளுற ஆனந்தம் பொங்கியது.

" Damm! இதென்ன பாயசம் உப்புக் கரிக்கிறது--‘ என்று வீட்டு எஜமான் கத்தினார். நேரே என் பார்வை, பின்னால் கை கட்டிக்கொண்டு பந்தி நடுவில் நின்றுகொண்டு மேற் பார்வை பார்த்துக்கொண்டிருக்கும் என் முதலாளிமேல் பாய்ந்தது. நான் அவனைப் பார்த்ததை அவள் பார்த்து விட்டாள். பக்கென்று அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்து விட்டாள். என் முதலாளி திகைத்து நின்றான்.

"சிரிப்பு என்ன வேண்டியிருக்கு-- பார்ட்டி குட்டிச் சுவராப் போச்சே-- சமையல்காரன் யார்?" என்று அவள் தகப்பனார் கர்ஜித்தார்.

"இதில் ஒரு நீதியிருக்கு, PaPa! ஒரு கரண்டி எண்ணெய் ஒரு படி உப்பில் கொண்டுபோய் விட்டுவிடும்-"

"இது என்ன புதிர்?"

அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "இல்லை; இது எனக்கும் இங்கே இன்னும் ரெண்டுபேருக்கும் தான் புரியும்-- அது ஒரு பெரிய தமாஷ்!" என்றாள்.

அவள் வார்த்தைகளின் அர்த்தம் என் எஜமான் மண்டையில் ஊறுகையில் அவன் முகம் மாவாய்ப் பிசைந்தது. ஒசைப்படாமல் நழுவினேன். எங்கள் விடுதிக்கு ஒடினேன். மறு சொக்காயையும் வேஷ்டியையும் அவசர அவசரமாய்க் கைப்பையில் திணித்தேன். அவன் கண்ணில் படுமுன் கிளம்பியாக வேண்டும்! பையைத் துக்கிக்கொண்டு திரும்புகையில் வாசற்படியில் நிழல் தட்டியது. அவள் நின்றுகொண்டிருந்தாள்!

"!"

-- நான் பின்னடைந்தேன். என்னை நோக்கி இரண்டடி வைத்தாள்:"

"எங்கே அவ்வளவு அவசரம்?"- அவள் வாயின் வார்ப்பே சிரிப்பா?

"வேடிக்கையை மெளனமாய் அநுபவிக்க முடியாமல், நீதான் புத்திசாலி மாதிரி, அர்த்தத்தையும் விளக்கிவிட்டதால் நான் மறுபடியும் என் எஜமானிடம் வேலை பார்க்க முடியாதபடிப் பண்ணிவிட்டாய். உன்னாலான உபகாரம்-"

"இதானே? என் வீட்டுக்கு ஒரு ஆள் தேவையாயிருக்கிறது. அப்பாகிட்டே சொல்லி உன்னை வைக்கச் சொல்லுகிறேன். ஒடிப்போய் விடாதே. இருந்தாலும் நீ பண்ணின வேலையை நினைக்க நினைக்கச் சிரிப்பு தாங்க முடியவில்லைஅடேயப்பா என்ன நெஞ்சுக் கனம் உனக்கு!--"

என் பையைப் பிடுங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே போனாள்.

நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். ஆனால் நான் அங்கு இல்லை. வயற்புறத்தில், மரத்தடியில், புற்றெதிரில் நின்று கொண்டிருந்தேன். புற்று நாகம் சட்டையுரித்துக் கொண்டிருந்தது. மினுமினுக்கும் புத்துடம்புடன் பழஞ்சட்டையினின்றும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அங்கு நான் கொஞ்சநாள் வேலை பார்த்தேன். வேலை யொன்றும் கிடையாது. செலவுக்கு மீறிய காசு கையில் இருந்ததும், செல்லப் பெண்ணும்தான் என்னை வேலையில் வைத்துக்கொண்ட காரணமேயன்றி, வேலைக்காக என்றல்ல. சுகமாய்க் காலத்தைக் கழித்தேன். நிறைய அவகாசமிருந்தது. என் இஷ்டப்படி வெளியில் சுற்றினேன்.

ஒரு தடவை தெருவில் போய்க்கொண்டிருக்கையில் என் மேலேயே ஏறிவிடுவதுபோல் என் பின்னால் ஒரு கார் வந்து "சடக் கென்று நின்றது. அவள் மாத்திரம் உட்கார்ந்து கொண் டிருந்தாள், சிரித்தவண்ணம். அவள்தான் ஒட்டிக்கொண் டிருந்தாள். அவள் மேலிருந்து வீசும் வாசனையில் எனக்கு மயக்கம்கூட உண்டாயிற்று. பென்ஸிலால் வெகு ஜாக்கிரதை யாகத் தீட்டியிருந்த புருவங்கள் வெகு ஒழுங்காய் வளைந் திருந்தன. உதடுகள் முகத்தில் முளைத்த இரத்தப் பூவாய்த்தானிருந்தன.

"ஏறி உட்கார்- பின்னால் இல்லை; இங்கே--கிட்ட!"

முழு வேகத்தில் பறந்தோம். கடைகளும், வீடுகளும் தூரத்தில் பங்களாக்களும், பிறகு வெறும் மரங்களும் வரிசை வரிசையாய் எங்கள் இருமருங்கிலும் பறந்தன. அந்தி சூரியன் வானத்தை இரத்த விளாறாக்கிக்கொண்டிருந்தான். அதைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சுற்று முற்றும் நோக்குகையில் நாங்கள் கடற்கரையில் ஒரு ஒதுக்கிடத்துக்கு வந்திருந்தோம்.

சட்டெனக் காரை நிறுத்தினாள். அப்படியே சற்று நேரம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள் புன்சிரிப்புடன்.

"உம்-- நீ நன்றாய்த்தானிருக்கிறாய்- இந்தச் சந்தனக் கலர் ஜிப்பா உனக்கு ஒத்துத்தானிருக்கிறது--"

எவ்வளவு உண்மையாயிருந்தாலும்கூட நேர்ப் புகழ்ச்சி, லஜ்ஜையைத்தான் உண்டாக்குகிறது. அதுவும் இம்மாதிரிப் புகழ்ச்சியால் அருவருப்புத்தான் தட்டுகிறது. நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே-“நேரமாய்விட்டாப்போலிருக்கிறதே,

திரும்பலாமா?--“ என்று கேட்டேன்.

சின்னக் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே, ‘இப்பத்தானே வந்தோம் என்ன அவசரம்? இந்த இடம் ஜோராயில்லே?’ என்று கேட்டுக்கொண்டே என்மேல் சாய்ந்தாள். அவள் குரல் வெறும் மூச்சாகவே ஒடுங்கிப் போயிற்று. உடுக்கு அடித்து ஆவேசத்தை வரவழைத்துக் கொள்பவன்போல இமைகள் அரைக்கண் மூடி விழிகளின் ஒளிமங்கிப் படலம் படர்ந்தது.

"ஒஹோ!"

நெட்டிபோல் கனமில்லாமல்தானிருந்தாள். கழுத்தில் இரட்டைவடச் சங்கிலிகள் இரண்டும், ஒரு வைரச் சங்கிலியும் மின்னின. ஒவ்வொரு கையிலும் இரண்டு ஜோடி தங்க வளையல்கள். அவைகளைத் தொட்டுக்கொண்டே நான்ஏது, கையின் அளவைவிடப் பெரிதாயிருக்கிறதே!’ என்றேன்.

சிரித்துக்கொண்டேஅதுதான் இப்பொழுது பாஷன் என்றாள் அவள். நான் அவள் பார்வையைச் சந்திக்காமலே, ‘உனக்கும் எனக்கும் அந்தஸ்தில் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியுமோ?--‘ என்றேன்.

"இருந்தால் என்ன?"

"அப்படியானால் உன் தகப்பனார் இப்படி உன்னையும் என்னையும் பார்க்கச் சம்மதிப்பாரா?"

"அதைப்பற்றி இப்போ என்ன?"

"அவ்வளவு லேசாய் ஒதுக்கிவிடற விஷயமா?"

"வங்கி வங்கியாய்க் கத்தரித்திருக்கும் நெற்றி மயிரை லேசாய் ஒதுக்கிக்கொண்டு, எங்கேயோ பார்த்துக்கொண்டுவாழ்க்கை ஒரு விளையாட்டு. நாளைய கவலை நாளை என்றாள்.

"இல்லை. விளையாடும் சமயத்தில் விளையாட்டு: வினையாயிருக்கும் சமயத்தில் வினை--"

"என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?

"என்னுடன் வந்துவிடு-"

தன் மூக்கில் விரலை வைத்தாள், கேலி ஆச்சரியத்துடன், ‘ஏது, உன் நெஞ்சுத் துணிச்சல் என்னைக்கூடத் திக்குமுக்காடச் செய்கிறது—‘ என்றாள்.

"ஏன் நீ ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? உன்னை வெறுமெனச் சோதித்துப் பார்த்தேன். உன் அந்தஸ்துக்கு ஒருநாளும் நான் குறைந்தவனல்ல. நீ நினைத்துக்கொண் டிருக்கிற மாதிரி நான் ஒன்றும் அன்னக் காவடி இல்லை. என் அண்ணன் ஜமீன்தார். நான் வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டேன். கோபம் தணிந்ததும் என் இடத்துக்கு நான் போக வேண்டியதுதானே!-"

"ஓஹோ! அதற்குமேல் பேச அவளுக்கு நா எழவில்லை.

"எங்கள் மேல் இருள் இறங்க ஆரம்பித்தது."

"அன்றிரவு நாங்கள் இருவரும், ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் போய்க் கொண்டிருந்தோம். தொலைதூரத்துக்கு டிக்கட் வாங்கிவிட்டேன்.

நான் வெகு நாழிகை எழுதிக்கொண்டிருந்தேன். தூக்கக் கலக்கத்துடன் கைகளை முறித்துக்கொண்டு என்னிடம் அவள் வந்தாள்.

என்ன எழுதுகிறாய்?’ என்றாள்.

உன் தகப்பனாருக்குக் கடிதம்-‘ என்றேன்.

அவள் திரும்பிப் படுத்துக்கொண்டு தூங்கிவிட்டாள். படுக்கையில் உறுத்துமென்றும், பொது ஜாக்கிரதைக்காகவும் நகைகளைக் கழற்றிப் பெட்டியில் வைத்துவிட்டாள். பெட்டிச் சாவி என்னிடமிருந்தது.

"கடிதத்தை முடித்ததும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். எனக்கு ஒரு பிரதி வைத்துக்கொள்ளாமல் போனேனே என்று கூடத் தோன்றியது. அவ்வளவு நன்றாய் அமைந்திருந்தது--"

-- "என்ன எழுதியிருந்தாய்?” என்று அவனின்றும் பிரிந்த அது கேட்டது.

"அது எப்பவோ நடந்தது; இப்பொழுது கேட்டால் எப்படித் தெரியும்?" என விசித்தான்.

"இல்லை. இப்பொழுதுதான் உனக்குத் தெரியாத தெல்லாம் தெரியும்-- புரியாததெல்லாம் புரியும். சொல்; உனக்கு வரும் வரும் பார்--

அது சொல்லியதுபோலவே அவன் படிக்கப் படிக்க, நெருப்பில் எழுதியதுபோல் எழுத்துக்கள் படர்ந்துகொண்டே போயின!

"அநேக ஆசீர்வாதம்; அல்லது நமஸ்காரம்-- அல்லது கடிதத்தை ஆரம்பிக்க எதுவோ, அது.

"நீ எவ்வளவு சாமர்த்தியசாலியாயிருப்பினும், எப்படியும் நீ என்னைவிட மூத்தவள்தான் என்று தோன்றுகிறது. உன் வயதை மறைக்க நீ படும் பாடும், நிரந்தர இளமையாக நீயே உனக்குத் தோன்றுவதற்காக, உன்னையே நீ ஏமாற்றிக் கொள்வதற்காக தனியாக நடையுடை பாவனைகளையும், திரிசங்கு சுவர்க்கத்தையும் நீ சிருஷ்டித்துக் கொள்வதிலிருந்து நீ உனக்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், உனக்கே தெரியும். அதில் உன்னுடைய செளகரியத்திற்காக எனக்குக் கொடுத் திருக்கும் அல்லது கொடுக்கப் பார்க்கும் வேஷமும் எனக்குத் தெரிகிறது.

மிருகங்கள் பசி வேளைக்கும், தற்காப்புக்கும்தான் ஒன்றை யொன்று அழித்துக் கொள்கின்றன. மற்றப் பொழுதில் ஒன்றை யொன்று, வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் குணம் அவைகளுக்குக் கிடையாது. இந்தக் கெட்ட குணம் மனித ஜன்மத்துக்குத்தான் இருக்கிறது. மன்னிக்க முடியாத குணம்.

"அன்றைக்குச் சமையலறையில் அடிபட்டு விழுந்திருக்கும் என்னைப் பார்த்து நீ சிரித்த பொழுதே நீ என்னை ஒரு புது பொம்மையாகக் கருதினாய் என்று கண்டுகொண்டேன். உடனே அந்த பொம்மை வேண்டுமென்று ஆசைப்பட்டாய், வாங்கவும் வாங்கினாய். உடனே அதையுடைத்து அதில் என்ன வேலைப்பாடுகள் இருக்கின்றன என்று ஆராய வேண்டும் என்றுகூட உனக்குத் தோன்றிவிட்டது. எல்லாமே உனக்கு விளையாட்டுத்தான்! இந்த பொம்மை உடைந்துபோனால் இன்னொரு பொம்மை .....

"விளையாட்டு பொம்மையாக எந்த ஆணும் மனமாறச் சம்மதியான். இதைவிடப் பெருந்தீங்கு பெண்கள் ஆண்களுக்கு இழைக்க முடியாது. கடைசியில் அது தங்களுக்கே இழைத்துக் கொள்ளும் தீங்காய்த்தான் முடிகிறது. நீ என்னுடன் விளையாடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் என்னைக் கருவியாய் உபயோகப்படுத்த நான் சம்மதியேன். என்னுள் ஏதோ ஒன்று அம்மாதிரி உடன்பட மறுக்கிறது. என் இயல்பிலேயே அது இல்லை. நானாக அழிந்தாலும் அழிவேனே தவிர, என்னைப் பிறர் அழிக்கவிடேன். எனக்கும் நீங்களெல்லாம் இல்லாத வேளையிலும் இருக்கும் வேளையிலும் கூப்பிடும் தெய்வத்துக்கும் கூட இதுதான் தகராறு: நாம் எல்லாம் தெய்வத்தின் கருவிகள் என்கிறார்கள். அதுதான் எனக்கு ஒப்பமாட்டேன் என்கிறது. தெய்வமேயானாலும் சரி, நல்லதற்கேயானாலும் சரி, அதுகூட என்னைக் கருவியாக்க என் மனம் இடங்கொடுக்க மாட்டேன் என்கிறது. நான் அதன் வழிக்குப் போகவில்லை; அதுவும் என் வழிக்கு வரவேண்டாம் என்பதுதான் என் சித்தாந்தம்."

"வாழ்க்கையே விளையாட்டு என்று எந்தச் சினிமா சம்பாஷணையையோ என்னிடம் உபயோகித்தாய் அல்லவா? சரி, இந்த விளையாட்டை இப்பொழுது கேள்.

"உன் நகைகள் எல்லாம் என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. டிக்கட்டுகளும் என்னிடமிருக்கின்றன! உன்னிடம் உன் அரைப்புடைவையைத் தவிர வேறு எதுவும் நான் வைக்கப்போவதில்லை. நீ திரும்பி விடுதான் போய்ச் சேருவாயோ, எங்கேதான் போவாயோ, எப்படித்தான் போவாயோ, அதில்தான் விளையாட்டு இருக்கிறது! இந்த விளையாட்டு உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் நீ இதிலிருந்து ஒன்றுதானே தெரிந்துகொள்வாய்! எந்த பொம்மையையும் அநாவசியமாய் உடைத்துப் பார்க்காதே. தவிட்டு பொம்மை என்று நீ நினைத்துக்கொண்டிருந்தாலும், நீயறியாத எஃகுச் சுருள்கள் அதனுள் இருந்து, நீ வகை தெரியாமல் சுழற்றுகையில் குதித்து உன் முகத்தில் அடித்து விடும்--"

கடிதத்தை மடித்து அவள் கண்ணும் கையும் உடனே படும் இடத்தில் வைத்தேன். நகைகளையும் பணப் பையையும் எடுத்துக்கொண்டு, பாக்கி சாமான்களை ஜன்னல் வழி வீசி எறிந்தேன். கை வளையல்கள் கழற்றச் சுலபமாய் வந்தன. வண்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. எட்டிப் பார்த்தேன். ஏதோ ஒரு சின்ன ஸ்டேஷனின் விளக்கு இரவில் மினுக்கியது. ஒருமுறை அவளிடம் சென்று முகத்தைக் குனிந்து பார்த்தேன்.

ஆழ்ந்த துக்கத்திலிருந்தாள். வாயோரத்தில் கொஞ்சம் எச்சில்கூட வழிந்திருந்தது. மேல் உதட்டோரத்தில் ஒரு மரு இருந்தது. மேல்பூச்சுக்களால் தெரியாமல் அவள் மறைத்திருந்த சாமர்த்தியத்தை அந்தச் சமயத்தில்கூட வியக்காமல் இருக்க முடியவில்லை. வண்டியிலிருந்து குதித்துவிட்டேன்.

"பிறகு அவள் எப்படியானாள் என்று எனக்குத் தெரியாது. அத்துடன் அவளை மறந்துபோனேன்."

 

"பிறகு என்ன நடந்தது?" என்று அவனின்று பிரிந்த அது கேட்டது. மார்பைப்பக் பக்கென்று அடைக்க ஆரம்பித்து விட்டது. இடுப்பு வரை உடல் செத்துவிட்டது அவனுக்கே தெரிந்தது. .

"பிறகு எங்கே போனாய்? சுருக்கச் சொல். உனக்கு நேரமில்லை- சுருக்கச் சொல்--"

"எங்கெங்கோ போனேன். என்னென்னவோ செய்தேன்; கடலையும் தாண்டினேன். எத்தனையோ பேர் எத்தனையோ விதமாய் என்னை ஏமாற்றினார்கள். அவர்களை பதிலுக்குப் பதில் அதைவிடக் கடுமையாக ஏமாற்றினேன்.

"ஒரு சமயம் ஒருவனுடன் கூட்டு வியாபாரம் செய்ய நேர்ந்தது. எனக்கு அரை ரூபாய்க்குக் கணக்கு ஏமாற்றினான். ஆத்திரத்தில் கடையையே இரவில் பற்றவைத்துவிட்டுப் போய் விட்டேன். காரிய நஷ்டத்தைவிட எண்ணத்தின் துரோகம்தான் தாங்கமாட்டேன் என்கிறது.

"ஆனால் எங்கு சென்றால் என்ன! தனிமை என்பது தனியாய்த்தானிருக்கிறது. நாளடைவில் கருமேகம் திரளுவது போல் திரண்டு பின்னாலேயே வந்து குரல்வளையைப் பிடித்துவிடுகிறது. மனிதன் தனது காரியங்களைச் செய்யும்படி அவனை இயக்கும் சக்திக்கு அலுப்பு இல்லாவிட்டாலும் காரியங்கள் அலுத்துவிடுகின்றன. அந்தச் சமயத்தில்தான் உலகம் எவ்வளவு பெரிதாயிருந்தபோதிலும், தனிமையின் சுவர்கள் நான்கு புறங்களிலும் முளைத்துத் திமிர்த்து நின்று, ஆள் திரும்பக்கூட இடம் இல்லாதபடி நெருக்குகின்றன. வாழ்க்கையை விட்டு எட்டி நின்றாலும் குமட்டுகின்றது. அத்துடன் இழைந்தாலும் குமட்டுகின்றது. அதில்தான் அதன் எதிர்பாராத தன்மையிருக்கிறது.

"பரமபத படத்தில் ஏணிகளிலெல்லாம் ஏறிவிட்டு, பெரிய பாம்பில் மாட்டிக்கொண்டு திடீரென்று அடிக்கட்டத்திற்கு வந்துவிட்டாற்போல் ஆகிவிட்டது. பழைய பாடங்களைத் திருப்புவதுபோல் சென்றுபோன நாட்களும், சம்பவங்களும் நான் சிந்திக்க நேராத சமயங்களில்கூடத் திரும்பத் திரும்ப நினைவில் முளைக்க ஆரம்பிக்கின்றன. நான் என்னுள் கலகலக்க ஆரம்பித்துவிட்டேன்.

திடீர் திடீர் என்று என் தாய் விட்டத்திலிருந்து தொங்கும் காட்சி என் கனவில் தோன்றித் தோன்றி மறைந்தது. என் சின்ன வயது விளையாட்டுகள், அடக்குவாரின்றித் திரிந்த அநுபவங்கள். பிறகு அப்புற்று--"

"!"

"இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. பாம்பு எல்லா வற்றையும் விழுங்கிவிட்டு, பிறகு தன் வாலைத் தானே கவ்விக் கொண்டு, தன்னையே விழுங்கப் பார்த்ததுபோல் நான் என்னையே விழுங்க ஆரம்பித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்."

"சொல், சொல், உன் கேள்விகளுக்கு நீயே பதில் கண்டுபிடி"

"ஒன்றுமே செய்யாமலிருத்தலின் பிரதிக்கிரியையும், எல்லாம் செய்தாலும் அக்காரியத்தின் பிரதிக்கிரியையின் பிரதிக்கிரியையும் கடைசியில் அதில்தான் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. பரமபத படத்தின் பெரிய பாம்பு. ஆகவே நான் ஊர் திரும்பினேன்."

"எதற்கு?" என்று அது கேட்டது.

புற்றைப் பார்க்க--"

"பிறகு.?-- தயங்காதே; நீ என்னிடம் மறைக்க முடியாது. உன்னை அறியாமல் உன்னுள்ளே நான் இருக்கிறேன். உன் காரியங்கள் அனைத்தையும் நான் கவனிக்கிறேன். உன் தூக்கத்தில் உன் நினைவு அற்று, நீ அசையும் ஒரு சிறு அசைவு முதல் என்னை ஊடுருவித்தான் செல்கிறது. ஆகையால் நீ இன்னும் எதற்காக வந்தாய் என்று சொல். நான் அடியெடுத்துக் கொடுக்கக் காத்திருக்க வேண்டாம்."

"ஊரில் ஒருத்தியி-ரு-ந்-தா-ள்- என்று மனமில்லாமல் மனம் முனகியது.

"! அப்படி வா வழிக்கு--"

விஷம் தொண்டை வரையில் ஏறிவிட்டதால், வார்த்தைகளும் மூச்சும் தங்கித் தங்கி வந்தன. ஆனால் அசுரத் தன்மையான திடத்துடன் நினைவை யிருத்திக்கொண்டான்.

"என் வீட்டுக்கெதிர் வீடுதான். என்னுடனே விளையாடி, என்னுடனே வளர்ந்தவள். கறுப்புத்தான். ஆனால் களை, வயதுக்கு மீறிய வளர்ச்சி ரொம்பத் துடி- ஆனால் வயது ஆக ஆக, எங்களிருவரிடையேயிருக்கும் பழக்கமும் குறைந்து, கடைசியில் அற்றும் போயிற்று. நானும் ஊருக்குப் பொல்லாதவனாய் விடவே- ஊர்ப் பெண்கள் அத்தனை பேரும் என்னைப் பொறுத்தவரையில், முகமூடிகள் ஆகி விட்டார்கள்.

"ஆனால் சில சமயங்களில் அவள் ஜன்னலிலிருந்து என்னைப் பார்ப்பாள். கண்களின் பேச்சை எப்படி விஸ்தரிப்பது!

"ஒருநாள், நான் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். குளக்கரையில் ஒரு அரசமரம். அதன் அடியில் ஒரு நாகப் பிரதிஷ்டை அவள் அதைச் சுற்றிக்கொண்டிருந்தாள். அங்கு ஒருவருமில்லை. அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.

"எனக்கு என்ன தோன்றிற்றோ, தெரியவில்லை. அப் பொழுது வெறும் வேடிக்கை எண்ணம்தான் என்று நினைக்கிறேன். இரண்டு தாவில் கரையேறி, அவள் எதிரில் போய் வழியை மறித்துக்கொண்டு நின்றேன். இடுப்பில் ஈரமுண்டு; புடைத்த மாரிலும் புஜங்களிலும் ஜலம் துளித்து நின்றது.

"தூக்கி வாரிப்போட்டாலும், யார் என்று கண்டதும் முகம் மலர்ந்தது. ஆனால் உடனே அடக்கிக்கொண்டு விட்டாள்."

"செளக்கியமா?" என்றேன்.

"செளக்கியந்தான். வழியை விடறையா?" என்றாள்.

"இத்தனை நாள் கழிச்சு இப்பத்தான் பார்க்கிறோம். அதற்குள் ஒடனுமா?"

"எனக்கு நேரமாச்சு: ஆத்தில் தேடுவாள்-"

"நான் சிரித்துக்கொண்டே அவள் கையை உரமாய்ப் பிடித்தேன். அவள் உடல்வெடவெடவென உதறிற்று--ஆனால் பயத்தாலா? பிடித்த கையின் விரல்கள், பாதாளக் கொலுசின் கொக்கிகள்போல் வளைந்தன-- ஆனால் பயத்தாலா? பிரதிஷ்டையிலிருந்து நாகம் என் கையையும் என் பிடியில் அவள் கையையும் பார்த்துக்கொண்டிருந்தது."

"உஷ்- என்னை விட்டுடுடா- விட்டுடுடா-"

"நான் சிரித்தேன். உன்னை என்ன, கடிச்சு முழுங்கிடுவேனா? ஆமாம், முழுங்கிவிடப் போகிறேன்!" என்றேன்.

"ஐயோ! என் பேரைக் கெடுக்காதேடா! என் குடியை அழிக்காதேடா-‘ என்று உளறிக்கொண்டே, திமிறிக்கொண்டு ஒடினாள். கொஞ்சதுரம் போய்த் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் பயந்தான்; வெறுப்பு இல்லை. என் சிரிப்பு எதிரொலித்தது. மறுபடியும் ஓடினாள். அவள் ஒடுவது வெகு அழகாயிருந்தது. அதற்கப்புறம் அவள் வழிக்கு நான் போக வில்லை. ஆனால் அவள் தீர்மானமாய் என்னை ஒதுக்கினாள். அவள் மனத்தில் இடம் கொடுத்துவிட்டாள் என்றாலும், அதற்குமேல் அவளுக்கு பயம்!

"பக்கத்தூரில் ஒரு பையனுக்கும் அவளுக்கும் கலியாணம் நடந்து, அவள் புக்ககம் போய்விட்டாள். பிறந்த வீடு கிட்ட இருப்பதால் அடிக்கடி வந்து போவாள். நான் ஊரைவிட்டுப் போவதற்குமுன் ஒரு குழந்தையைக் கூடப் பெற்றெடுத்து விட்டாள். அவள் மணவாழ்க்கை மிகச் சந்தோஷமாயிருந்தது என்று அவள் உடற் பொலிவிலும், முக மலர்ச்சியிலும் தெரிந்தது.

"இப்பொழுது திடீரென்று அவள் நினைவு வந்தது. எல்லாவற்றையும் விழுங்கியபிறகு அவள் ஒரு எட்டாப்பழமாய் எனக்குத் தோன்றினாள். உடனே அதைப் பறித்து ஆக வேண்டும் எனக்கு. அதனால் இங்கு வந்தேன்."

"எப்படிப் பறிப்பதாய் உன் எண்ணம்?"

"அதை இப்பொழுது எப்படிச் சொல்ல முடியும்? தனியாய்ச் சந்திக்க முயன்றிருப்பேன். அவள் சம்மதிக்கா விட்டால், அவள் கணவனுக்கெதிரில்உன்னை அன்று, குளக்கரையில் நாகப் பிரதிஷ்டைக்கெதிரில் கையைப் பிடித்தேனே. எப்படி?—‘ என்று கேட்டு, அவள் புருஷனுக்குச் சந்தேகத்தை உண்டாக்கியிருப்பேன். சமயத்துக்குத் தக்கவாறு நடந்துகொண்டிருப்பேன். இப்பொழுது எப்படிச் சொல்வது?”

"மொத்தத்தில் அவள் வாழ்க்கையைக் குலைத்திருப்பாய் அல்லவா?"

"ஆம்--" என்றான் வசியங் கண்டவன்போல். நினைவு மங்க ஆரம்பித்துவிட்டது.

"உன் செளகரியத்திற்காக, அவளைக் கெடுக்கவும் துணிந்தாய் அல்லவா?"

"ஆம்"

"அவளை உன் கருவியாய் உபயோகித்துக்கொள்ள எண்ணிவிட்டாய் அல்லவா?"

"ஆம்-"

"ஆகையால்தான், நீ அவளைக் கெடுக்குமுன், அதாவது நீ கெட்டுப் போகுமுன், உன்னை நான் என்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டேன்--"

அவனின்றும் பிரிந்த அது திடீரென்று பெரிதாக ஆரம்பித்தது.

"மகனே-- என்னிடம் நீ உண்மையை ஒப்புக்கொண்டாய். எங்கெங்கோ ஒடியாடிக் களைத்து வந்தாய். இனி நீ என்னிடம் இளைப்பாற வேண்டும்—“ அவன் மேல் இருள அது ஆரம்பித்தது.

"நீ யார்? யார் நீ?"

தப்பிப்போகும் நினைவின் முழுப்பலமும், அவன் உடலின் பலமும் அக்கடைசிக் கேள்வியில் பிரதிபலித்தன.

அது இதற்குள் அவனுக்கும் அதற்கும்கூட வித்தியாசம் தெரியாதய்டி வியாபித்துவிட்டது.

"நீ எங்கிருந்து வந்தாயோ, அங்கே திரும்பிப் போகும் இடம் என்று வைத்துக்கொள்ளேன். நீ பாம்பானால், உன்னை விழுங்கும் பெரிய பாம்பு என்றுதான் வைத்துக் கொள்ளேன். அல்லது கருடன் என்று வைத்துக்கொள்ளேன். எந்தப் புற்றின் இருளுடன் இழைந்துவிட வேண்டுமென்று நீ ஒரு சமயம் விரும்பினாயோ, அந்த இருள் என்று வைத்துக் கொள்ளேன். அல்லது, தன் குஞ்சுகளை அன்புடன் சிறகடியில் அணைக்கும் தாய்ப்பட்சி என்று வைத்துக்கொள்ளேன். அல்லது, நீ சொல்லியபடி, நீ உன்னை விழுங்கிய பிறகு, மிச்சம் இருக்கும் மீதி என்று வைத்துக்கொள்ளேன்!"

ஆலிங்கனத்தில் அவன்மேல் அது கவிழ்ந்தது.


 

  லா. ச. ராமாமிருதம் படைப்புக்கள் சிலவற்றை பார்வையிட

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)