4. எழுத்தின் பிறப்பு

 

முதலென்றும் நடுவென்றும் முடிவென்றும் அளவின் வரையற்று, முன் பின் இனி எனக் காலத்தின் வரையற்று, அங்கு இங்கு என இடத்தின் எல்லையற்று, அப்படி இப்படி எனும் இயல்பும், உண்டு இல்லை எனும் இயங்குதலுமில்லாது, உருவின்றி, பிரிவின்றி, ஏகமாய், உயிர் என்று பிறக்கு முன்னர், உலகம் உற்பவிக்கு முன்னர்---

எங்கும் பிரம்ம மயம்.

பிறகு

வானம், வானத்தின் முழு நீலம், பூமி, புனல், புல், பூண்டு, செடி கொடி -

பரம், பல்வேறு விதமாய்ப் பரிணமிக்கும் பல்வேறு உருவங்கள் உண்டாயின.

பின்னர்--

உயிர்:

ஒன்று இரண்டாயிற்று. ஏகமாய்த் துலங்கிய பிரம்மம், சக்தியும் சிவனுமாய்ப் பிரிந்தது; அவள், அவன்.

பிரம்ம ஐக்கியத்தினின்று சக்தி வெளிப்பட்டதும், அவள் வீசிய ஒளியையும் ஒயிலையும் கண்டு, சிவன் திகைத்தான். கேவலம், நரனின் நாறும் வாயால் எடுத்துரைக்கும் அழகல்ல அது. தரையளவு புரளும் மயிரும், அக்கருணையொழுகும் விழியும், தீட்டிய மூக்கும், புன்னகையிலேயே படிந்த வாயின் வார்ப்பும், இளமையின் மனங்கமழும் உடலும், துடி நடையும், ஒடி இடையும். பக்குவநிலையின் பரிபூரணத்தை ஒருவாறு அதுமானிக்க முடியுமேயன்றி வார்த்தையால் வரையறுக்க முடியாது.

கனவொழுகும் கண்களுடன் இடையிடையே சிவத்தைத் திரும்பி நோக்கியபடி, தன்னைச் சுற்றி விளங்கும் சிருஷ்டியை வியந்த வண்ணம் சக்தி நடந்தாள். அவளை வியந்தவண்ணம் சிவன் அவளைத் தொடர்ந்தான். சக்தியின் சாயல் பட்ட இடமெல்லாம் உணர்வும் உயிரும் பெற்று மலர்ந்தது. செடி கொடிகள்மேல் அவள் பார்வை சென்றதும், இலைகள் ஆடின. பூக்கள் கட்டின. அவள் கண்கள் வியப்புடன் வானோக்கியதும், வர்ணங்கள் பிறந்து வானவில் அமைந்தது. தென்றல் அவள் கன்னத்தை வருடியது. அவள் கனத்தைத் தரை தாங்கியதும், அதன் கடினம் குழைந்து அடிகள் புதைந்தவிடத்தில் ரேகை படிந்த சுவடுகள் எழும்பின.

இம்மாதிரி நடை பழகிய பின்னர், சக்தி ஒரு தென்னை மரத்தடியில், அதன் கீழே அதன் மட்டைகள் தொட்டுக் கொண்டு தண்ணிர், அடிமணல் பளபளக்க, ஒடும் ஒர் ஒடையருகில் களைப்புற்றவள்போல் சாய்ந்தாள். அவள் அருகில் சிவன், காணாததைக் காணும் பரவச பயத்துடன் பதுங்கினான். அவள் அழகைப் பருகப் பருக, அவனுள் அடைபட்டுத் திணறும் அன்பு வெள்ளம் புரண்டு, பொங்கி, மடையுடைந்து, உள்ள எழுச்சி வேகம் மீறி, வாய்வழி வெளிப்பட்டது. உலகத்தின் முதலொலி பிறந்தது. உணர்ச்சியின் உருவே ஒலியாகும். அன்பே சிவம்.

இவ்வன்பு வெள்ளத்தின் உடைப்பில் சிவன் வாயினின்று உதிர்ந்த நாத விசித்திரங்களை என்னென்று சொல்வது? இச்சமயம் பிரணவம், வேதம், கீதம் இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் உதித்தனவோ? தன்னைப் புகழ்ந்தவாறு சிவன் இழைக்கும் இன்பத்தில் சக்தி இழைந்தாள். தன்னருகில் தோளை உராய்ந்து தொங்கிய ஒரு மட்டையில் ஒர் ஒலையை நகத்தால் கீறியவண்ணம் அவள் தன்னை இழந்தாள். உவகையில் அவள் அழகு பன்மடங்கு பூரித்தது.

உலகமே தன்னை மறந்த இந்தத் தனிநிலையின் வேளை எந்நேரம் நிலைத்ததோ?-- ஒரு வண்டு அதைக் கலைத்தது. ஆனந்தத் தேனைக் குடித்துவிட்டு ரீங்காரித்துக்கொண்டே வந்து, சக்தியின் கன்னத்தில் மோதியது. அக்குறுகுறுப்பில் அவள் தோள் அசைந்து, மயிர் சரிந்தது; ஓடை நீரில் தோய்ந்து அமிழ்ந்து கனத்தது. அக்கணம் அவள் தலையை இழுக்கவே, அவள் திரும்பி தன் நிழலை, தன் அதி அற்புதமான அழகின் நிழலைக் கண்டுவிட்டாள். தான் என்னும் செருக்குப் பிறந்து, அக்கணமே அவளுள் புகுந்தது. தன்னால் தானே எல்லாம்? சிவன் தொழுவதும் தன்னைத்தானே? தானில்லாவிடில் எல்லாம் சூன்யம்தானே!--துள்ளியெழுந்து கையைக் கொட்டிக்கலகலவென நகைத்துக்கொண்டே சக்தி ஓடி மறைந்தாள். அவ்வினிய சிரிப்பில் கக்கிய விஷம், சிவத்தின் உடலையும் உள்ளத்தையும் ஒர் உலுக்கு உலுக்கியது. தன் லயிப்பில், என்ன நடந்ததென்றும் அறியாது, திகைப்புடன் அவளைக் கூவிக் கொண்டே சிவன் தொடர்ந்தான்.

அன்று ஆரம்பமாகிய அவ்வேட்டையில் அவள் அடைந்த ஆனந்தம் அவளுக்குத்தான் அற்புதம். எட்டியும் எட்டாது நின்று இல்லாத சங்கடமெல்லாம் இழைத்தாள் அவள். அவள் வெறி-- நகை அவன் முகத்தில் புகைந்து விஷம் கக்கியது. அவன் துரத்தத் துரத்த அவள் கொடுரம் கொந்தளித்தது. அவன் உயிர் துடிதுடித்தது.

இப்பொழுது அவன் வாயினின்றும் செயலினின்றும் எழுந்த ஒசைகள் சரியாயில்லை. ஆசையின் தோல்வியால் இதயத்தினின்று எழுந்த அனல் மூச்சில் புயல் கிளம்பி மண்ணும் விண்ணும் சுழன்றன. குலைந்த ஆண்மையின் கோபத்தில் தொண்டையிலிருந்து வீரிட்ட அலறலில் வானம் மின்னல் வெட்டியது: பூமி அதிர்ந்து அங்கங்கே வெடித்தது: துயரந்தாளாது கண்ணில் துளித்த அழல் நீரில், மழை தாரை தாரையாய்ச் சொரிந்தது. உலகம் இருண்டது. மரங்களை அலைத்துக் காற்று குலுங்கி அழுதது. இத்தனைக்கு மிடையில் இக்குழப்பத்தைக் கிழித்துக்கொண்டு அவள் ஏளனச் சிரிப்பு ஒலித்தது.

வேடனை நோக்கி விலங்கு நகைக்கும் இவ்வேட்டை எவ்வளவு காலம் நடந்ததோ? சிவனுக்கு உடலும் உள்ளமும் தளர்ந்துவிட்டன. அயர்வு ஆளை அழுத்தியது. பார்வை மங்கியது. தள்ளாடித் தள்ளாடி வந்து ஒரு தென்னை மரத்தடியில் அதன் மட்டைகள் தொட்டுக்கொண்டு, அடி மணல் பளபளக்க ஒடும் ஒர் ஒடையருகில், உருண்டு மல்லாந்து விழுந்தான். வானத்தில் முழு நீலம், எங்கும் மாலையசதியின் அமைதி மனத்துயரை அழுது தீர்க்கவும் உடலில் சக்தியில்லை. நிலைகுலைந்த பார்வை, முகத்தைக் குறுகுறுத்துக் கொண்டு தொங்கும் தென்னை மட்டைமேல் ஓடி, அதில் ஒன்றிரண்டு பழுப்பு ஒலைகளின் மேலிருந்த கீறல்களில் பதிந்தது.

பெண்மையின் சிறு குறும்பில் சக்தி கீறிய கீறல்கள் அவை! அவள் குணம் கோளாறு படுமுன், அவளும் தானும் திளைத்திருந்த ஆனந்த நிலையின் அடையாளம்.

ஐயோ! அந்த ஆனந்தத்தை அநுபவிப்பானேன்! அதற்கடுத்து இரண்டாய்ப் பிரியாது நின்ற நிலையில் நின்றிருந்தால்- ஆம், துன்பமும் இன்பமும் அற்ற நிராமயம் தான் சரி- கலைந்து குலைந்ததெலாம் ஒருங்கல் வேண்டும்.

மனமும் உடலும் மறுபடியும் திடங்கொண்டன. தீர்மானச் சித்தத்துடன் சிவன் எழுந்து தவத்தில் அமர்ந்தான். மனப் புயலை அடக்கியதும், எண்ண அலைகள் குலைய ஆரம்பித்தன. நினைவை ஒரே வழியில் நிறுத்தி, தன்னைத்தான் சிந்தித்து, தன்னில்தான் ஆழ்ந்தான். நினைவு செத்ததும் நிம்மதி தெளிந்தது. இம்மோன நிலையில் களிப்பின் வெறியுமில்லை, துன்பத்தின் துடிப்புமில்லை. புண்ணில் தைலமிட்டது போன்றிருந்தது இவ்வமைதி.

தன்னைத் தேடி வரும் சிவனைக் காணாது, தன்னழகை இன்னும் பதின்மடங்கு அதிகரித்துக்கொண்டு வந்தாள் சக்தி, வந்து, நீரோடையருகில் யோகத்தில் வீற்றிருக்கும் மூர்த்தியைக் கண்டாள். இனிய வார்த்தைகளையும், மனதைச் சோரங் கொள்ளும் செய்கைகளையும் காட்டி அவரை எழுப்ப முயன்றாள். அவள் பிரயத்தனங்களெல்லாம் பாறையில் மோதும் அலைகளின் வியர்த்தமாயின. நச்சுக் கக்கும் அவள் நகையின் கவர்ச்சி குலைந்தது. அவள் மோகவலையின் பின்னல்கள் பீத்தலாயின. அவரைச் சுற்றிச் சுற்றி நடமாடி வந்தாள். குறுமுலையழுந்த அவர் தோள்களைத் தழுவினாள். அவர் கண்கள் மெல்ல மலர்ந்து அவளை நோக்கின.

தன்னுள் தானே நிறைந்து, தானே எல்லாமாய்த் தெளிந்த ஆண்மையின் அசாத்திய சக்தியை அந்தக் கண்களுள் அவள் கண்டாள். அதில் தன் வலிமையின் எல்லையையும் முதன் முதலாய்க் கண்டாள். அவள் ஆணவம் ஒடுங்கி அடங்கியது. அறிவு தெளிந்தது. கடைசியில் சக்தியும் சிவத்தின் வயத்தளானாள்.

பிறகு பகவானானவர் தன் தோல்வியின் அடையாளமாகவோ என்னவோ, ஆணையும் பெண்ணையும் படைத்து அவர்களுக்கென்று வாழ்க்கையையும் பிறப்பித்தார். பிறகு தான் பெருக்கிய ஒலியின் உருவாய், சக்தி ஒலையில் கீறிய கீறல்களை ஆதாரமாய்க் கொண்டு எழுத்தை எழுதினார்.

எழுத்து பிறந்த கதை இதுதான்.  

 

 

  லா. ச. ராமாமிருதம் படைப்புக்கள் சிலவற்றை பார்வையிட

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)