பொன்னாங்காணி

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)


இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் பொன்னாங்காணியைப்பற்றி என்ன சொல்கிறது.......
 

அதிகமாம் பொன்னாங்காணிக் கரோசிநீர்க் கடுப்புப் பித்தம்
முதிர் சலரோகங் கண்ணோய் மூலம்பீ நிசங்க யம்போம்
குதியினில் வாதமோடு கொடியபீ லிகையும் போகும்
மதுரமா முண்ணக் காந்தன் மாறிடுங் குளிர்ச்சிகண்டாய்


இதன் பொருள்: நீர்க்கடுப்பு பித்தம் சலரோகம் கண்ணோய் மூலவியாதி பீனிசம்கபம் குதிவாதம் என்பனதீரும். உண்பதற்கு சுவையானது. இதனை உணவிற் சேர்த்துக்கொண்டால் உடற்சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

மேலதிகவிபரம்: பொன்னாங்காணியைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் கண்பார்வை நலமாகும். இந்தக்கீரையை நீராவியில் அவித்து சிறிதளவு நெய்யுடன் தொடர்ந்து
45 நாட்கள் சாப்பிட்டுவந்தால் பல்வேறு கண்வியாதிகள் குணமாகும்.

ஒரு லீட்டர் பொன்னாங்காணிச் சாற்றுடன் கால் லீட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சவேண்டும். இந்தக்கலவை கால் லீட்டராக வற்றியவுடன் அந்தத்தைலத்தை எடுத்துத் தலையில் தேய்த்துவரகண்பார்வை கூர்மை அடையும். ஞாபகசக்தியும் அதிகரிக்கும்.

பொன்னாங்காணி மூலவியாதி உடையோருக்கும் மருந்தாகப் பயன்படும். பொன்னாங்காணி இலைகளுடன் உள்ளி மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் சூப் மூலவியாதிக்காரருக்கு நல்லது. அல்லது பொன்னாங்காணிச் சாற்றுடன் சம அளவு கரட்சாறும் சிறிதளவு இந்துப்பும்
(rock salt) சேர்த்துக் குடித்துவரலாம்.

நீரிழிவு நோயாளர்க்கும் பொன்னாங்காணி சிறந்த உணவாகும். உணவு உண்டபின் இரத்தத்தில் அதிகரிக்கும் குளுக்கோசின் அளவை
(post prandial glucose level) பொன்னாங்காணி குறைப்பதாக சமீபத்தைய ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன.

Water amaranth, Sessile joyweed என்பன பொன்னாங்காணியின் ஆங்கிலப் பெயர்கள். Mukunawanna என்பது இதன் சிங்களமொழிப்பெயர். Alternanthera sessilis (L.) R.BR.EX DC. என்பது இதன் தாவரவியல் பெயர்.


 

 

sivakad@gmail.com