தூதுவளை

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் தூதுவளை பற்றி என்ன சொல்கிறது.......

தூதுபத் திரியன்னத்தைத் தொலைக்கும்பூத் தாதுண்டாக்கும்
மேதகு காய்ச்சே டத்தை மீட்கும்வேர் மூன்று தோஷம்
சேதமாய்ப் போகச் செய்யும்


இதன் பொருள்: தூதுவளை உணவைச் சமிபாடு அடையவைக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும். நெஞ்சில் கட்டிய சளியை வெளியேற்றும். வேர் முத்தோஷங்களையும் விலக்கும்.

மேலதிகவிபரம்: முட்கள் நிறைந்த தண்டு உடைய ஏறுகொடி. இலைகளிலும் ஒரு சில முட்கள் காணப்படும். ஊதா நிறப்பூக்களும் பச்சைநிறக்காய்களும் சிவப்புநிறப்பழங்களும் உடையது.

இலை,காய்,பழம் அனைத்துமே சளிக்கட்டை அகற்றக் கூடியன. நுரையீரல் கோளாறுகளுக்குத் தூதுவளை மருந்தாகும்.மார்பில்சளிக்கட்டு இருமல் போன்றவற்றுக்கு தூதுவளை ரசம் அல்லது தூதுவளைக் குடிநீர் அருந்தலாம்.

தூதுவளை
15 கிராமுடன் 500 மில்லிலீட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து தண்ணீர் அரைவாசியாக வற்றியவுடன் குடிநீரை வடித்தெடுத்து அக்குடிநீரில் 30 முதல் 40 மில்லிலீட்டர் வரை ஒருநாளைக்கு மூன்று தடவைகள் குடித்துவர இருமல், இரைப்பு, சளியுடன்கூடிய காய்ச்சல் என்பன குணமாகும்.

தூதுவளங்காயை மோரில் ஊறவைத்துப் பின்னர் வற்றலாகக் காயவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும். குளிர்காலத்தில் இந்தவற்றலை எண்ணெயில் பொரித்து உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஆஸ்த்மாக் குணங்கள் குறையும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கித் துவையல் செய்து வாரத்துக்கு இருமுறை உணவில் சேர்த்துவர தாம்பத்ய உறவு மேம்படும் என்று கூறப்படுகிறது. இதன் பூவை உட்கொண்டாலும் ஆண்மை சக்தி பெருகும் என்று கூறப்படுகிறது.

தூதுவளைக்குப் புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. வாய்ப்புற்று, தொண்டைப்புற்று கருப்பைப்புற்று போன்றவற்றுக்கு தூதுவளை மருந்தாகப்பயன்படக்கூடும் என்பது ஒரு சில ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளது.

சுந்தரருக்குப் பிடித்த தூதுவளைக்கறி:

சோமாசி மாறன் என்பவர் அறுபத்து மூன்று சைவநாயன்மார்களுள் ஒருவர். இவர் ஒரு பிராமணர். இவருக்கு யாகம் செய்வதில் ஆர்வம் இருந்ததில் வியப்பில்லை. ஆனால் இவர் தமது யாகத்துக்கு சிவபெருமானே நேரில்வந்து அவிர்ப்பாகம் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுதான் ஆச்சரியம். தனது பக்திக்கு இரங்கி சிவபெருமான் நேரில் வருவார் என்பதில் இவருக்கு நம்பிக்கை இல்லை. அதேசமயம் சிவபெருமானின் பெரும்பக்தரும் தம்பிரான் தோழர் என்றழைக்கப்பட்டவருமான சுந்தரமூர்த்திநாயனார் அழைத்தால்சிவபிரான் நிச்சயம் வருவார் என்பதில் இவருக்குச்சந்தேகமே இல்லை. இவருக்கோ சுந்தரருடன் எவ்வித பழக்கமும் இல்லை. எனவே முதலில் சுந்தரரைத் தனது நண்பராக்கிக் கொள்ள விரும்பினார். சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தூதுவளைக்கீரை மிகவும் பிடித்த கறி என்பதை சுந்தரரின் மனைவியான பரவையார் மூலம் அறிந்துகொண்டார்.நாள்தோறும் தவறாமல் தூதுவளைக்கீரை பறித்து பரவையாரிடம் கொடுத்துவந்தார். பரவையாரும் அதைப்பக்குவமாய்ச் சமைத்து சுந்தரருக்குப் பரிமாறிவந்தார். ஒவ்வொரு நாளும் தூதுவளை எப்படி உனக்குக் கிடைக்கின்றது என்று ஒருநாள் பரவையாரிடம் கேட்டார் சுந்தரர். சோமாசி என்ற பிராமணர்தான் தூதுவளை கொண்டுவந்து தருகிறார் என்று பதிலளித்தார் பரவையார். இப்படித்தான் சோமாசிமாறனார் சுந்தரருக்கு நண்பரானார்.சிவபெருமானிடம் தூது போவதற்காக பெருமானின் நண்பரை வளைக்க உதவியதால் இந்தக்கீரைக்குத் தூதுவளை என்ற பெயர் ஏற்பட்டதாக ஒரு கதை உண்டு.

Purple fruited pea eggplant என்பது இதன் ஆங்கிலப்பெயர்.

Solanum trilobatum Lஎன்பது தூதுவளையின் தாவரவியல் பெயர்.