அகத்தி
கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)
இற்றைக்கு
இருநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும்
இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார்
என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான
‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும்
இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் அகத்தி
பற்றி என்ன சொல்கிறது.......
அகத்தியினிலைபேதிக்கா மவ்விலை பூவே பிஞ்சு
மிகத்தினஞ் சமைத்தே யுண்டால் வெறிப்பயித் தியங்க ளோடு
திகைத்திடுங் கிறுகி றுப்புத் தீர்த்திடுங் குளிர்ச்சியுண்டாம்
பகுத்திடா விதன்ப ழுப்பா நசியஞ்செய் பயித்தி யம்போம்
இதன் பொருள்: அகத்தியிலைக்குப்
பேதி உண்டாகும். அகத்தியிலை,பூ,இளம்பிஞ்சு என்பவற்றைச் சமைத்து உண்டால்
மூளைக்கோளாறு, பித்தம்,தலைச்சுற்று என்பன தீரும். உடலில் உஷ்ணம்
குறைந்து குளிர்ச்சி உண்டாகும்.
மேலதிகவிபரம்: வெய்யிலில் அலைந்து
திரிவதாலும் தேனீர்,கோப்பி என்பவற்றை அளவுக்கு மீறி அருந்துவதாலும்
ஏற்படக்கூடிய பித்தச் சூட்டை அகத்திக்கீரை தணிக்கக்கூடியது.வாரத்துக்கு
ஒருமுறை தவறாமல் அகத்திக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால் தேகச்
சூடு குறையும். கண்கள் குளிர்ச்சி அடையும்.
மலச்சிக்கல் உள்ளோரும் அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை உண்பது நல்லது.
அல்ஸர் (ulcer)
எனப்படும் குடற்புண்ணுக்கு அகத்திக்கீரையும் சின்னவெங்காயமும்
சேர்த்துத் தயாரிக்கப்படும் சூப் சிறந்த மருந்தாகும். வெங்காயம்
50 கிராம்மற்றும்
மிளகு, சீரகம், உள்ளி, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை என்பவற்றுடன்
இரண்டு கைப்பிடி அளவு அகத்தியிலை சேர்த்து இரண்டு கப்
தண்ணீர்விட்டுக்கொதிக்கவைத்து எடுத்த சூப்பை கிழமைக்கு மூன்று நாள்
குடித்துவரக் குடற்புண் சுகமாகும்.
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க தொண்டைப்புண்
ஆறும்.அகத்திமரத்தின் பட்டைசாற்றைத் தேனுடன் கலந்து வாய்ப்புண்ணுக்கு
மருந்தாகக் கொள்வர்.
அகத்தி இலைச்சாற்றை நெற்றியில் பூசி சிலநிமிடங்களின் பின்னர்
வேதுபிடிக்க தலைவலி குணமாகும்.
தேமலுக்கு அகத்தியிலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி பின்னர் இலையை
நன்கு அரைத்துப் பூசிவந்தால் தேமல் மறையும்.
அகத்தியிலையும்
மருதாணி இலையும் சம அளவில் எடுத்து அரைத்து கால்வெடிப்புகளில்
பற்றுப்போட வெடிப்புகள் மாறும்.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய ‘வெள்ளைபடுதல்’ எனப்படும் பிரச்சனைக்கு அகத்தி
இலை சிறந்தாக மருந்தாகும். அகத்தி இலைகளைப் பாலில் போட்டு
பாலைக்கொதிக்கவைக்கவேண்டும். இலைகளுடன் சேர்ந்த இந்தப்பாலில் உறைமோர்
விட்டு இலைகளுடன் சேர்த்து அதனைத்தயிராக்கவேண்டும். இந்தத்தயிரை நன்கு
அடித்து மோராக்க வேண்டும். ஒருநாளைக்கு இரண்டு தடவைகள் இந்த மோரைக்
குடித்துவந்தால் வெள்ளைபடுதல் என்னும் வியாதி விரைவில் குணமாகும்.
அகத்திக்கீரையில் கல்சியம் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள்
செறிந்து காணப்படுகின்றன. எலும்புகளுக்குப் பலம் அளிக்கக்கூடிய நல்ல
சத்துணவாக இது உள்ளது.
அகத்திக்கீரை சமைக்கும்போது உள்ளியையும் சேர்த்துக்கொள்வதன்மூலம் வாய்வு
ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.
வாரம் ஒருமுறை அகத்தியை உணவில் சேர்த்துகொண்டால் போதும். தொடர்ந்து
அகத்திகீரையைச் சாப்பிட்டுவந்தால் சொறி சிரங்கு என்பன தோன்ற
வாய்ப்புண்டு.
‘அகத்திக்கீரை அகற்றிடும் மருந்தை’ என்பது
ஒரு மருத்துவப் பழமொழி.
மருந்தின் வீரியத்தை அல்லது அதன் செயல்திறனைப் பெரிதும்
பாதிக்கக்கூடியது அகத்திக்கீரை என்று கூறப்படுகிறது. பல்வேறு
நோய்களுக்காக மருந்து எடுப்போர் அகத்திக்கீரையைத்தவிர்ப்பது நல்லது.
அவ்வாறு சாப்பிட விரும்புவோர் குடும்பவைத்தியரிடம் ஆலோசனை
பெற்றுக்கொள்வது மிக மிக அவசியம்.
‘அகத்தி ஆயிரங்காய் காய்த்தாலும் புறத்தி
புறத்தியே’ என்பது ஒரு பழமொழி.அகத்தியிலையைச் சமையலுக்கு
எடுத்துக்கொள்ளும் நம்மவர்கள் அகத்திமரத்திலே ஆயிரம்காய்கள் காய்த்துத்
தொங்கினாலும் அவற்றைத் தொடுவதில்லை. அகத்திக்காய் கறிசமைக்க உதவாது.
அகத்தியிலைமற்றும் பூ என்பன சமையலுக்குசேர்த்துக் கொள்ளப்பட்டாலும்
அகத்திக்காய் புறத்திதான். உறவினர் ஒருசிலரே இருந்தாலும் ஆபத்தென்றால்
ஓடிவந்து உதவுவது அவர்கள்தான். பிறத்தியார் ஆயிரம் பேர் இருந்தாலும்
அவர்கள் உதவிக்கு வரப்போவதில்லை.இதனை விளக்க எழுந்ததுதான் இந்தப்பழமொழி
என்கிறார்கள். நம்மவர்கள் பெரும்பாலும் வீட்டு வளவுக்கு உள்ளே அகத்தி
மரத்தை நட்டு வளர்ப்பதில்லை என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
உடம்பினுள்ளே இருக்கும் தீயை (உஷ்ணத்தை) அகற்றுவதால் இதற்கு அகத்தீ (அகம்
+ தீ) என்ற பெயர் வந்ததாக ஒருசிலர் கூறுவர். அகத்தியமுனிவருக்கும்
இந்தமூலிகைக்கும் ஒரு தொடர்பைக் கற்பித்து இதன் பெயருக்கான காரணத்தை
விளக்குவர் வேறுசிலர்.
Humming bird tree என்பது இதன்
ஆங்கிலப்பெயர்.
Sesbania grandiflora (L.) POIRETஎன்பது
அகத்தியின் தாவரவியல் பெயர்.
|