வெண்டிக்காய்
கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)
மத்திய
கிழக்கில் வட ஆபிரிக்காவின் நைல்நதிக்கரையைப் பிறப்பிடமாகக் கொண்டது
வெண்டிக்காய். தமிழத்தில் இதனை வெண்டைக்காய் என்பார்கள்.
கர்ப்பிணிப்பெண்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படும் காய்கறிவகைகளுள்
வெண்டிக்காயும் ஒன்று. கருத்தரித்து 4
தொடக்கம் 12 கிழமைகள் வரையிலான
கருவளர்ச்சிக்காலத்தில் தேவையான Folic
அமிலம் இதில் நிறைந்துள்ளது. புதுக்கலங்களை உருவாக்குதற்கும் அவற்றை
நிலைநிறுத்துவதற்கும் மிக அவசியமான வைட்டமின் E, C
என்பனவும் வெண்டிக்காயில் உள்ளது.
வெண்டிக்காயில்
உள்ள சளியமும் நார்ச்சத்தும் சிறுகுடலில் சீனி அகத்துறிஞ்சப்படுவதை
நெறிப்படுத்துவதன்மூலம் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை ஒழுங்கு
படுத்துகிறது. வெண்டிக்காய் நீரிழிவு நோயாளர்க்கும் நல்லது. இரண்டு
வெண்டிக்காய்களை எடுத்து அவற்றின் இருமுனைகளையும் வெட்டி அகற்றிவிட்டு
நடுப்பகுதியில் ஒரு சிறிய வெட்டு ஒன்றை ஏற்படுத்தவும். இரண்டு
துண்டுகளையும் ஒரு கோப்பை தண்ணீரில் போட்டு மூடி இரவுமுழுவதும்
ஊறவிடவும். காலையில் வெண்டிக்காய்த் துண்டுகளை எடுத்துவிட்டு அவை ஊறிய
தண்ணீரைக் குடிக்கவும். இதனைத் தொடர்ந்து செய்துவர இரண்டு கிழமைக்குள்
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு குறைவதைக் காணமுடியும் என்கிறார்கள்.
ஒருசிலருக்கு இதனைத்தொடர்ந்த் சில மாதங்கள் செய்துவந்தபின்னரே பலன்
தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. எந்தவித பக்கவிளைவும் இல்லாதபடியால்
இதனைத்தொடர்ந்து செய்வதால் ஒரு தீங்கும் ஏற்படப்போவதில்லை.
வெண்டிக்காயை வழக்கமாக உணவில் சேர்த்துவருவதன்மூலம் சிறுநீரகநோய்கள்
வராமல் தவிர்க்கமுடியும் என்றும் கூறப்படுகிறது.
நிரம்பிய நார்ச்சத்து உடைய வெண்டிக்காய் உணவுப்பாதையின் ஆரோக்கியத்தை
குறிப்பாகப் பெருங்குடலின் ஆரோக்கியத்தைப்பேண உதவுகின்றது.
பழந்தமிழ் இலக்கிய நூல்களிலோ மருத்துவநூல்களிலோ வெண்டிக்காய்
இடம்பெறவில்லை. இதன் பிறப்பிடமான எதியோப்பியாவில் இருந்து பிற்காலத்தில்
அரபு நாடுகளுக்கும் பின்னர் அங்கிருந்து இத்தியாவுக்கும்
கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் இதன் ஆங்கிலப்பெயர் lady’s- finger.
மேற்குலகநாடுகளில் இதன் பெயர் Okra.
பருத்திக்குடும்பத்தைச் (Malvaceae)
சேர்ந்தது வெண்டி.
Abelmoschus esculentus (L.) MOENCH
என்பது இதன் தாவரவியல் பெயர்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|