கருப்புத் தங்கம் மிளகு
பேராசிரியர் கே. ராஜு
ஒரு
காலத்தில் தங்கத்திற்கு ஈடான மதிப்புமிக்க பொருளாக மிளகு கருதப்பட்டது.
உலகில் மிக அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்ட நறுமணப் பொருளாகவும் அது
இருந்தது. தென்னிந்தியாவின் மலபார் கடற்கரையோரம்
4000 ஆண்டுகளுக்கு
முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மிளகு நறுமணப் பொருட்களில் மிகப் பழமையானது.
ஆனால் கி.மு. 1000
ஆண்டுவாக்கில்தான் அது பயிரிட்டு வளர்க்கப்படும் பொருளாக மாறியது. கி.மு.
4000
ஆண்டிலேயே கிரேக்கர்கள் மிளகைப் பற்றி அறிந்திருந்தாலும் மிக விலை
உயர்ந்த பொருளாக இருந்ததால் பணக்காரர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த
முடிந்தது! மலேசியாவிலும் தென் தாய்லாந்திலும் மிளகு பயிரிடப்பட்டாலும்
மத்திய காலம் முடியும் வரை மிளகின் முக்கியமான பிறப்பிடமாக இந்தியாவே
இருந்தது. தென்னிந்தியாவில் பரவலாக அது பயிரிடப்பட்டது. தற்போது
வியட்நாம், இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மிளகை அதிகம் உற்பத்தி
செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன. அதன் கவர்ந்திழுக்கும்
வாசனைக்காகவும் மருத்துவ குணத்திற்காகவும் மிளகு பல்லாண்டுகளாகவே
பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உலகம் முழுதும் எல்லாவிதமான சமையல்
முறைகளிலும் சேர்க்கப்படும் நறுமணப் பொருட்களில் மிளகுக்கு ஒரு தனி இடம்
எப்போதுமே உண்டு. நவீன சமையலிலும் மிளகும் உப்பும் நீக்கமற
நிறைந்திருப்பதைப் பார்க்கலாம்.
பல நறுமணப் பொருட்களைப் போல மிளகும் பாரம்பரியமான மருத்துவமுறையிலும்
ஆயுர்வேத முறையிலும் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது. அதன்
செரிமானத்தை மேம்படுத்தும் திறன் அதியற்புதமானது. சுவை அரும்புகளைத்
தூண்டுவதன் மூலம் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பதை மிளகு அதிகரிக்கிறது.
அதன் காரணமாக உணவு இரைப்பையை அடைந்ததும் அது விரைவாக ஜீரணமாவது
எளிதாகிறது. மிளகின் எதிர்விஷத்தன்மை
(antioxidant) குணங்கள்
மூலிகங்களால் (free radicals)
ஏற்படக்கூடிய சேதாரங்களைத் தடுத்து இதயம்,
கல்லீரல் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. மிளகு
சேர்க்கப்பட்ட அனைத்து உணவு வகைளும் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை
அகற்றுவதற்கு உதவுகின்றன. அது மட்டுமல்ல.. பல் வலி, பல் தேய்மானம், காது
வலி, காங்க்ரீன் எனப்படும் புண், ஹெர்னியா, பூச்சிக் கடியினால் வரும்
புண்கள் போன்றவற்றைக் குணப்படுத்தவல்லது மிளகு. மிளகு அல்லது மிளகு
சேர்ந்த பொருட்களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி,
கீல்வாதம், மூட்டுவலி போன்ற வலிகளிலிருந்தும் தொண்டைக் கட்டு, சைனஸ்
பாதிப்பு, வாயுத் தொல்லை, இருமல், ஜலதோஷம் போன்ற பாதிப்புகளிலிருந்தும்
நிவாரணம் கிடைக்கிறது. வாய், குடல் பகுதிகள், ஜீரண உறுப்புகள், சிறுநீர்
பாதை ஆகிய உறுப்புகள் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படும்போது மிளகு
சிகிச்சை பலனளிக்கிறது. படை போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தவும்
புற்று நோய்க் கட்டிகளில் உள்ள புற்று நோய் செல்கள் பெருகாமல்
தடுக்கவும் மிளகு பயன்படுகிறது. புறஊதாக் கதிர்களின் அளவு
அதிகரிக்கும்போது தோல் புற்று நோய் உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது. இதைத்
தடுக்கும் பாதுகாப்பு அரணாக மிளகு பயன்படுகிறது. மிளகு எண்ணெய் உடல்
உறுப்புகளைப் பாதுகாக்கக் கூடியது. முதுமையின் காரணமாக ஏற்படும்
பார்வைக் குறைபாடு, தோல் சுருங்குவது, தசைகள் தேய்மானம், எலும்பு
இணைப்புகளில் பலவீனம், நரம்பியல் கோளாறுகள், நினைவாற்றல் குறைபாடு,
வயிற்றுப் போக்கு, சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள், உறக்கமின்மை,
பூச்சிகள் கடிப்பதால் வரும் பிரச்சனைகள் போன்ற எண்ணற்ற உடல்
பாதிப்புகளுக்கு மிளகு ஓர் அருமருந்தாகப் பயன்படுகிறது.
-
உடலில் வரும் சிறுசிறு கோளாறுகளுக்கு
ஆங்கிலமருந்துக் கடையில் போய் மருந்து, மாத்திரைகள் வாங்கி
உட்கொள்வது நம் வழக்கமாகிவிட்டது. பாட்டி வைத்தியம்
என்றழைக்கப்பட்ட நமது பாரம்பரிய மருத்துவத்தில் மிளகு, சீரகம்,
வெந்தயம், துளசி, வேப்பிலை, கருவேப்பிலை, மஞ்சள், தூதுவளை,
சித்தரத்தை போன்ற பொருட்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த
முக்கியத்துவத்தை மீட்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
aasiriyan11@gmail.com
|