நீற்றுப்பூசணி (கலியாணப்பூசணி)
கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)
இற்றைக்கு
இருநூறு வருடங்களுக்கு
முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத
மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர்
ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம்
உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின்
குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல்
நீற்றுப்பூசணி (கலியாணப்பூசணி)யைப்பற்றி என்ன சொல்கிறது.......
நீற்றுப் பூசனிக்காய் செய்யு நிறைகுண மலசலம் போம்
மாற்றிடும் கயமே பித்த மருத்தீடு காய்ச்சல் தாகம்
போற்றுறு சரீர நோய்கள் போமேனி திடமே யேறும்
வேற்றுமை யில்லா வாத மிகு முண்ண வினிதா மன்றே.
- பதார்த்த சூடாமணி
இதன்பொருள்: நீற்றுப்பூசணிக்கு
மலசலம் ஒழுங்காகக் கழியும். கயரோகம் பித்தம் மருத்தீடு காய்ச்சல் தாகம்
போன்ற சரீர நோய்கள் தீரும். உடல் வலிமை பெறும். வாதக்குணங்கள்
அதிகரிக்கும். உண்பதற்கு இனியதாகும்.
மேலதிகவிபரம்:
பல்வேறு சத்துக்கள் நிறைந்த நீற்றுப்பூசணிக்காயில் தயமின் எனப்படும்
வைட்டமின் B1, நியசின் எனப்படும்
வட்டமின் B3, வைட்டமின் C
என்பவற்றுடன் பொட்டாசியம் கல்சியம் என்னும் கனியுப்புக்களும் கூடிதலாக
உள்ளன. தொண்ணூற்றாறு சதவீதம் தண்ணீரைக்கொண்ட இந்தக்காய்
உடல்நிறையைக்குறைக்க உதவும் காய்கறிகளின் பட்டியலில் இடம்பெறுகிறது.
காரத்தன்மை உடைய நீற்றுப்பூசனிக்காய் வயிற்றில் கூடுதலாகச்சுரக்கும்
அமிலத்தைச் சமநிலைப்படுத்துவதால் நெஞ்செரிவு மற்றும் குடற்புண்
(peptic ulcer)
ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. நீற்றுப்பூசணிக்காய்ச்சாறு
குடற்புண்ணுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
நீரிழிவு நோயாளர் சாப்பிடக்கூடிய காய்கறிகளுள் நீற்றுப்பூசணியும்
ஒன்றாகும்.
சிறுநீரகக்கல் உள்ளிட்ட சிறுநீர்த்தொகுதி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும்
ஆஸ்த்மா போன்ற சுவாசத்தொகுதி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும்
நீற்றுப்பூசணி மருந்தாகப் பயன்படுகிறது. குடற்புழுக்களை அகற்ற
நீற்றுப்பூசணியின் விதைகள் பயன்படுகின்றன.
நீற்றுப்பூசணியின் தோலும் விதைகளும் எரிக்கப்படுவதன்மூலம் பெறப்படும்
சாம்பலைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்துக்கொள்வது
கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பொடுகை அகற்றவும் செய்கிறது.
நீற்றிப்பூசணியின் கடினமான தோலை அகற்றிவிட்டு சிறுசிறு
துண்டுகளாகவெட்டிச் சமைக்கவேண்டும். கூடுதல்நேரம் அவியவிட்டால்
நீற்றுப்பூசணி நீரில் கரைந்துவிடும்.
முழுநீற்றுப்பூசணிக்காய் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படாமலேயே
நீண்டகாலம் பழுதடையாமல் இருக்கக்கூடியது.
கண்ணூறு நாவூறு படாமல் இருப்பதற்காக நீற்றுப்பூசணியைப் புதிதாகக்
கட்டப்பெற்ற வீடு மற்றும் கட்டடத்தின் வெளிப்புறத்தில்
கட்டித்தொங்கவிடும் வழக்கம் இந்துமக்களிடம் உள்ளது. இந்தக்காய்
மனிதத்தலை வடிவில் இருப்பதும் நீண்டநாள் பழுதடையாமல் இருப்பதும்
இதற்குக்காரணமாகலாம்.
சாம்பல் பூசணி, கல்யாணப்பூசணி, வெண்பூசணி என்பன
நீற்றுப்பூசணியைக்குறிக்கும் வேறு தமிழ்ப்பெயர்கள்.
Ash-gourd
என்பது நீற்றுப்பூசணியின் ஆங்கிலப் பெயர்.
Benincasa hispida
(Thunb.) Cogn. என்பது
நீற்றுப்பூசணியின் தாவரவியற்பெயர்.
கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)
|