ரோஜா
சித்த மருத்துவர் சக்தி
சுப்பிரமணியன்
இதம் தரும் நிறம், கொள்ளை கொள்ளும் அழகு, வசீகர நறுமணம் என எண்ணற்ற
நற்குணங்களைக் கொண்டது ரோஜா என்பது தெரியும்தான். அதேபோல் உள்ளத்தையும்,
உடலையும் வாட்டும் நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும் திறன் கொண்டது ரோஜா
என்பது தெரியுமா?
இறைவனுக்குச் சூட்டி மகிழ்வதற்கும், மனிதர் சூடிக் களிப்பதற்கும்
மட்டுமேயானவை அல்ல மலர்கள். மனிதர்கள் ஆரோக்கிய வாழ்வை அடைந்து,
நீண்டநாள் இவ்வுலகில் வாழ்வதற்கும் மலர்கள் ஆதாரமானவை என்பதை நாம்
அறிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மருத்துவகுணம்மிக்க மலர்களில்
ஒன்றுதான் ரோஜா.
ரோஜா என்கிற பெயர் லத்தீன் மொழியான பிரான்ஸ் மொழியிலிருந்து பிறந்தது
ஆகும். தமிழில் பன்னீர்ப்பூக்கள் என்றும், சிற்றாமரை என்றும் சொல்வர்.
சுழளய உநவெகைழடயை என்று தாவரவியலில் குறிப்பிடுகிறார்கள். வடமொழியில்
சதபத்திரி, தேவ தாருண, சாருகேஷரா, லாக்ஷா, கந்தாத்யா என்று பல பெயர்கள்
உண்டு.
Rose, Persian rose, Cabbage rose
என்று ஆங்கிலத்திலும் பல பெயர்களால்
அழைக்கிறார்கள்.
குறுஞ்செடியாகவும் குத்துச்செடியாகவும், கொடி போல் படரும் இனமாகவும்
ரோஜாவை நம்மால் அறிய முடிகிறது. ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ரோஜா, சிறு
செடி முதல் சுமார் ஏழு மீட்டர் (21
அடி உயரம்) அளவு வரை கொடியாகப் படர்ந்தும் வளர்வதுண்டு.
ரோஜாவின் மருத்துவ குணம் பலருக்கும் தெரியாது என்பதால் அழகுக்காகவும்,
வாசனைக்காகவுமே பொதுவாக பயிர் செய்யப்படுகிறது. கி.மு
500 ஆண்டுகளுக்கு
முன்பே சீனா, பெர்ஷியா, மத்திய தரைக்கடல் நாடுகளில் பயிரிடப்பட்ட
பாரம்பரியமும், பெருமையும் ரோஜாவுக்கு உண்டு.வெண்மை, இளஞ்சிவப்பு,
கருஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, பல வண்ணக்கலப்பு கொண்டது ரோஜா.
இந்த மலர்களைக் கொண்டு ரோஜா எண்ணெய், ரோஜா அத்தர், பன்னீர் (ரோஸ் வாட்டர்)
ஆகியன தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. சாதாரணமாக இரண்டாயிரம்
பூக்களைக் கொண்டு ஒரு கிராம் ரோஜா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது என்பது
ஆச்சரியமான செய்தி.
ரோஜா இதழ்கள் அல்லது ரோஜா மொட்டுகள் தேநீரோடு சேர்த்துக் காய்ச்சிக்
குடிப்பதுண்டு. ரோஜா இதழ்கள் உண்பதற்காகவும், நாம் உண்ணும் உணவுக்கு
மணமூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ரோஜா வைட்டமின் சி சத்தை
மிகுதியாகத் தன்னுள் அடக்கியுள்ளது.
வயிறு சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கும் அது பயன்படுத்தப்படுகிறது.
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் ரோஜா வல்லமையுள்ளது என்று
நவீன ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. ரோஜாவின் மருத்துவப்
பாரம்பரியம் பன்னெடுங்காலமாக சீன தேசத்தில் ரோஜா வயிற்றுப்போக்கை
கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
19-ம் நூற்றாண்டில் ரோஜாவில் மிக உபயோகமான எண்ணெய் சத்து இருப்பதாகக்
கண்டறியப்பட்டது. ரோஜாவைக் காய்ச்சி வடித்தல் மூலமாக எண்ணெய் பெறப்பட்டு
அரோமா தெரபி எனப்படும் நறுமணச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும்
வழக்கமும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
1930-ம் ஆண்டு ரோஜாவில் அபரிமிதமான ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்
சியும் இருப்பதாகவும் கண்டறிந்தனர். ரோஜாவை உள்ளுக்குள் மருந்தாக
உபயோகப்படுத்துவதால் சளி, இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்க
இயலும் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
ரோஜாவை உடலுக்கும் உள்ளத்துக்கும் சிறந்த மருந்தாகவே உலக அளவில் ரோஜாவை
மதிக்கின்றனர். சில பழங்குடி இனத்தவர் ரோஜாச்செடியின் வேரைச் சிதைத்து
சூடாக்கி வீக்கத்தைக் குறைக்க ஒத்தடம் கொடுக்கின்றனர். ரோஜாவை
நீரிட்டுக் காய்ச்சி வயிற்றுவலி, பேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும்,
அதன் ஆவியை நுகர்வதால் மூக்கிலிருந்து வரும் ரத்த ஒழுக்கைக்
கட்டுப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். ரோஜாவின் விதைகளை தசைவலியைப்
போக்கப் பயன்படுத்துகின்றனர்.
ரோஜாவின் மருத்துவ குணங்கள்:
-
ரோஜா மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது.
-
வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை வாய்ந்தது, நுண் கிருமிகளை
ஒழிக்கவல்லது, புண்களை ஆற்றக்கூடியது, குருதியைப் பெருக்குவது, ஜீரண
சக்தியைத் தூண்டக்கூடியது, சளியை அகற்றக்கூடியது, பித்த நீரைப்
பெருக்கக்கூடியது, சிறுநீரகத்துக்கு வலிமை தரவல்லது, மாதவிலக்கை
முறைப்படுத்தக்கூடியது.
-
ஒரு கப் ரோஸ் தேநீர் செய்து குடிப்பதால் சுமார்
1000 மி.கி.,
வைட்டமின் 'சி' சத்து கிடைப்பதாகவும், ஒருவர் அன்றாடம்
2000 மி.கி.
வைட்டமின் 'சி' சத்து உட்கொள்வதால் புற்றுநோய் செல்கள்
கட்டுப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
-
ஜப்பானியர்கள் ரோஜாவை
சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுத்துகின்றனர்.
ரோஜாப்பூ பற்றிய அகத்தியர் பாடல் சிற்றா மரைப்பூவால் சேர்த்தமலக் கட்டுவிடும் ஒற்றவெப்பு தாகமதி ஓக்காளஞ் - சற்றுவிடா மூல பிரிவுரத்த மூத்திரம் வயிற்றிசிவும் ஞாலம்விட் டேகும் நவில்.
- அகத்தியர் குணபாடம்.
சிற்றாமரை என்றழைக்கப்படும் ரோஜாப் பூவால் வயிற்றில் சேர்ந்து இறுகித்
துன்பம் தரும் மலம் கரைந்து வெளியாகும். வெப்பு நோய் எனப்படும் கடும்
உஷ்ண நோயைக் கண்டிக்கும். தாகத்தை தணிக்கும். ஆசன வாயில் மிகுந்த
எரிச்சலைத் தரும் மூலநோய் கட்டுப்படும். சிறுநீரில் எரிச்சலோடு ரத்தம்
வெளிப்படுவது குணமாகும். வயிற்றை இழுத்துப் பிடித்தாற்போல் வலிக்கும்
துன்பம் விலகும். தன்னை உபயோகப்படுத்துவோர் அனைவருக்கும் நோய் நீக்கும்
என்பது மேற்கண்ட அகத்தியர் பாடலின் பொருளாகும்.
ரோஜாவின் மருத்துவப் பயன்கள்:
-
ரோஜாவில் வைட்டமின் சி, பி, இ மற்றும்
கே போன்றவையும், ஆர்கானிக் அமிலங்கள், டேனின், பெக்டின் போன்ற
சத்துக்களும் அடங்கி உள்ளன.
-
ரோஜாப்பூ உடலிலுள்ள நச்சுக்களையும்
அதிக சூட்டையும் தணிக்கும் திறன் கொண்டது.
-
தொண்டைப்புண், தொண்டைக்கட்டு,
மூக்கில் நீர் ஒழுகுதல், சுவாசப் பாதை அடைப்பு ஆகியவற்றை ரோஜா
குணமாக்கும்.
-
நுரையீரல் மற்றும் இதயத்தில்
கிருமித்தாக்கத்தால் ஆளாகித் துன்பப்படுபவர்களுக்கு நல்ல தீர்வாக
ரோஜா அமைகிறது.
-
ரோஜாவை தேநீராகக் காய்ச்சிக்
குடிப்பதால் ஜீரணப்பாதையில் ஏற்பட்ட தொற்றுக் கிருமிகள்
அழிக்கப்பட்டு, நம் உடலுக்குத் தேவையான நன்மை செய்யும்
பாக்டீரியாக்கள் உருவாகும்.
-
உடலில் சேர்ந்த தேவையற்ற நீரை
வெளித்தள்ள சிறுநீரகத்துக்கு உதவி செய்கிறது ரோஜா.
-
சீதபேதி, காலரா, டைபாய்டு நோய்களுக்கு
ஆச்சரியம் மிக்க மருந்தாக ரோஜா விளங்குகிறது.
-
அனைத்து விதமான ஈரல் கோளாறுகளுக்கும்
ரோஜா நல்ல மருந்தாகும்.
-
ரோஜாவை உள்ளுக்கு எவ்விதத்தில்
எடுத்துக் கொண்டாலும் ஈரல், பித்தப்பை ஆகியன சுத்தமாகி நன்கு
இயங்கும்.
-
ரோஜா இதழ்களைத் தேநீராகக் காய்ச்சிக்
குடிப்பதால் கருப்பைப் கோளாறுகள் சரியாவதுடன் மாதவிடாய்க் காலத்தில்
அதிகமான வலி, அதிகமான ரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம்
கிடைக்கும்.
-
தவறிய மாதவிலக்குக்கும், குழந்தைப்
பேறின்மைக்கும் ரோஜா அற்புதமான பலனைத் தரும்.
ரோஜா மருந்தாகப் பயன்படும் விதம்
-
ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களைச்
சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் அவற்றை
இட்ட, ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு கொதிக்கவைத்துக் கொள்ளுங்கள்.
கொதிநீரை எடுத்து வடிகட்டி பாதி அளவு தீநீரோடு இனிப்பு சேர்த்து
காலையும், மாலையிலும் குடித்து வர மலச்சிக்கல் விலகும். சிறுநீர்ச்
சுருக்கு குணமாகும். மூலச்சூடும் தணியும்.
-
250 கிராம் அளவு ரோஜா இதழ்களை எடுத்து
சுத்தம் செய்து, சற்று வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன்
150 மி.லி., தேனை ஊற்றி நன்றாக உறவாடும்படிக் கலந்துகொள்ள வேண்டும்.
அதனை சூரிய ஒளி படும்படி ஒரு வாரம் வெயிலில் வைத்துப் பின் அந்தி
சந்தி என இருவேளையும் தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்த, சீதபேதி
வயிற்றுக்கடுப்பு ஆகியன குணமாகும். இதை குல்கந்து என்னும் பெயரால்
சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பர்.
-
ரோஜா இதழைத் தீநீர் செய்து
வைத்துக்கொண்டு ஏற்கெனவே வறுத்து ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி
வைத்திருந்த காட்டு சீரகத்தை நனைத்து முகர்ந்து வர தும்மல் விரையில்
அடங்கும்.
-
ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை
எடுத்து சுத்திகரித்து அம்மியில் இட்டு மைய அரைத்து ஒரு டம்ளர் அளவு
கெட்டித் தயிரில் போட்டுக் கலந்து தினந்தோறும் காலை வேளையில் மூன்று
நாட்கள் குடித்து வர சீதபேதி குணமாகும்.
-
காய்ந்த ரோஜாப்பூ, பயத்தம்பருப்பு,
சிறிது பூலாங்கிழங்கு ஆகியவற்றை அரைத்து உடலுக்குத் தேய்த்து
குளித்து வர வியர்வை நாற்றம் போவதோடு உடல் பொலிவு பெறும்.
-
ஒரு கோப்பையில் அடங்கும்
ரோஜாப்பூவில், 60 ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் 'சி' சத்து
உள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இனி, ரோஜாவை
அழகுப் பொருளாக மட்டுமே பார்க்க மாட்டோம்தானே?!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|