நித்திய கல்யாணி

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

'நீரின்றி அமையாது உலகு' என்பது போல, பூவின்றி ஒரு நாளும் அமையாது நித்திய கல்யாணி. நள்ளிரவில் ஒரு பூ உதிர்ந்தால்கூட, உடனே இன்னொன்று அதற்கு ஈடாக மலர்ந்துவிடும் குணம் கொண்டது. அதனால்தான் நித்தியமும்(தினமும்) பூத்துக்குலுங்கும் கல்யாணி (திருமணப்பெண்) என்று இதன் பெயர் அமைந்தது.வெண்மை நிறத்தோடும், ரோஜா பூ நிறத்தோடும் விளையும் ஒரு குறுஞ்செடிதான் இந்த நித்திய கல்யாணி. இது பெரும்பாலும் இடுகாட்டில் (சுடுகாட்டில்) காணப்பெறுவதால் இதற்கு இடுகாட்டுமல்லி என்று பெயரிட்டு அழைப்பர். இன்றைக்கு நவீன மருத்துவர்களால் ரேடியேஷன் என்ற பெயரில் சுட்டுப் போட்டும், சர்ஜரி என்ற பெயரில் வெட்டிப் போட்டும் தீர்க்க இயலாத புற்றுநோய்க்கு நித்திய கல்யாணி ஓர் உன்னதமான மருந்து.ஓர் இடம் விட்டு இன்னொரு இடத்துக்குப் பற்றிப்பரவிச் செல்வது புற்றுநோயின் சிறப்பம்சம் ஆகும். மேலும் உடல் உறுப்புகளைப் பாதிப்பதோடு தாங்க முடியாத வலியையும் வேதனையையும் தருவது புற்றுநோய்.

இன்றைக்கும் இதன் வலியைத் தணிக்க மருத்துவம் கண்டபாடில்லை. போதை மருந்துகளே பல இடங்களில் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட கொடிய நோயைப் போக்கும் தன்மையுடையது நித்திய கல்யாணி.ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயை வேரறுக்கக் கூடியது இம்மூலிகை.நித்திய கல்யாணியை 'குப்பை வேளை' என்றும் அழைப்பது வழக்கம்.
Catharanthes roseus என்பது இதன் தாவரப்பெயர் ஆகும். மேற்கிந்திய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட நித்திய கல்யாணி ஆங்கிலத்தில் Madagascar periwinkle என்று அழைக்கப்படுகிறது. 'சதம் புஷ்பா' என்பது இதன் வடமொழிப் பெயராகும்.

நூற்றுக்கும் மேலான மருத்துவ வேதிப்பொருட்களை உள்ளடக்கியது நித்திய கல்யாணி. இதில் உள்ள
Vincamine எனும் வேதிப்பொருள் ரத்த நாளங்களைத் தளர்த்தும் வல்லமை உடையது. இதனால் குருதி அடைத்தல், மார்பக நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள் தவிர்க்கப் பெறுகின்றன.

அனைத்துக்கும் மேலாக நித்திய கல்யாணியில் செரிந்து விளங்கும்
Vinblastine  மற்றும் Vincristine ஆகிய வேதிப்பொருட்கள் புற்றுநோயைப் போக்கத்தக்க வலிமையுள்ள மருந்தாக விளங்குகிறது. ரத்தத் தட்டணுக்கள் குறைபாட்டைப் போக்குவதற்கு 'வின்கிரிஸ்டின்', 'வின்ப்ளேஸ்ட்டின்' ஆகிய வேதிப்பொருட்கள் மருந்தாகிப் பயன் தருகின்றன. ரத்த சிவப்பணுக்களின் சிதைவினை தடுத்து உயிர் காக்கும் மருந்தாகவும் இது விளங்குகிறது.விதைப்பையில் ஏற்படும் புற்று, சிறுநீர்ப்பையில் ஏற்படும் புற்று, மார்பகப்புற்று, நுரையீரல் புற்று மற்றும் 'லிம்ப்போசைட்ஸ்' எனும் ரத்த வெள்ளை அணுக்களைப் பாதிக்கும் செல்கள் ஆகியவற்றுக்கும் இந்த வேதிப்பொருட்கள் மருந்தாகின்றன. நித்திய கல்யாணியில் இருந்து பெறப்படும் 'வின்கிரிஸ்டின்' பல கூட்டு மருந்துகளோடு 'லுக்கேமியா' எனும் ரத்தப்புற்று நோய்க்கும், குழந்தைகளைப் பாதிக்கும் புற்றுக்கட்டிகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நித்திய கல்யாணியின் மருத்துவப் பயன்கள்:

  • வரலாற்றுக் காலந்தொட்டு நித்திய கல்யாணியைப் பல்வேறு நோய்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் இதை சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
     

  • இந்தியாவில் இதன் இலைச்சாற்றை எடுத்து வண்டு கடிகளுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்துவது உண்டு.
     

  • ஹவாய் தீவு மக்கள் நித்திய கல்யாணி இலையினை வதக்கி பசையாகச் செய்து ரத்தக் கசிவை நிறுத்தப் பயன்படுத்துவர். சீன மக்கள் இதை வற்றச் செய்யும் மருந்தாகவும், நீர்ப்பெருக்கியாகவும் இருமல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
     

  • மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் நித்திய கல்யாணியை நுரையீரல் தொற்றுக்கும் சளிக்கும் மருந்தாகப் பயன்படுத்துவர்.
     

  • கியூபா, போர்ட்டோரிக்கா, ஜமைக்கா போன்ற தீவுகளில் நித்திய கல்யாணியிலிருந்து கண் தொற்று நோயைப் போக்குவதற்காகவும், கண்களில் ஏற்படும் எரிச்சலைத் தணிப்பதற்காகவும் குறிப்பாகப்பச்சிளங் குழந்தைகளின் கண் நோய்களுக்கும் மருந்துகள் செய்து பயன்படுத்துகின்றனர்.
     

  • நித்திய கல்யாணியை ஆப்பிரிக்க நாடுகளில் அதிக மாதவிலக்குப் போக்கு மற்றும் முடக்குவாதம் ஆகிய நோய்களைத் தீர்க்கப் பயன்படுத்துகின்றனர்.
     

  • பஹாமியர்கள் நித்திய கல்யாணி பூக்களை ஆஸ்துமா நோய்க்குப் பயன்படுத்துகின்றனர். மொரீஷிய மக்கள் நித்திய கல்யாணி இலையைப் பசியின்மைக்கும், செரிமானமின்மைக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
     

  • வியட்நாம் நாட்டினர் சர்க்கரை நோய்க்கும், மலேரியா காய்ச்சலுக்கும் நிவாரணியாகப் பயன்படுத்துகின்றனர்.
     

  • மேலும் பல நாட்டு மக்கள் நித்திய கல்யாணியை காசநோய், உயர் ரத்த அழுத்த நோய் வலியுடன் கூடிய மாதவிலக்கு ஆகிய நோய்களைப் போக்குவதற்கும் பயன்படுத்துகின்றனர்.


நித்திய கல்யாணியில் உள்ள மருத்துவப் பொருட்கள்: விஞ்ஞானிகளுக்கும் மருத்துவ வல்லுனர்களுக்கும் மிகவும் வியப்பைத் தருவதாக அமைந்துள்ள மூலிகைகளுள் ஒன்று நித்திய கல்யாணி எனில் மிகையாகாது.

நித்திய கல்யாணியில் எழுபதுக்கும் மேற்பட்ட மருத்துவ வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர்.
Leurosin, Catharanthine, Tetrahydro alstonin, Vindoline போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைத் தணிக்கக் கூடியதாகவும், புற்றுநோய்க்கு அருமருந்தாகவும் விளங்குகின்றன.

நித்திய கல்யாணியிலிருந்து பெறப்படும் 'வின்கிரிஸ்டின்'
80 விழுக்காடு நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்ததாக அதாவது நான்கு பங்கு திறனுள்ளதாக விளங்குகிறது.

நித்திய கல்யாணி மருந்தாகும் விதம்:

  • நித்திய கல்யாணி இலைச்சாறு இரண்டொரு தேக்கரண்டி எடுத்து வெருகடி மஞ்சள் சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் சர்க்கரை நோய் தணியும். பேதியும் நிற்கும்.
     

  • நித்திய கல்யாணி செடியின் வேர்ப்பகுதியை எடுத்து சுத்திகரித்து மிளகு, சீரகம் இரண்டையும் வெருகடி அளவு எடுத்து அதனுடன் 10 கிராம் நித்திய கல்யாணி வேரையும் சேர்த்து நீர் விட்டு தீநீராய்க் காய்ச்சி பருகுவதால் பல் வலி, உடல் வலி ஆகியன போகும்.
     

  • நித்திய கல்யாணி பூக்கள் 10 இலைகள், 5 மாதுளை தோல் 10 கிராம் அளவு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு, அரை டம்ளராகச் சுருங்கக் காய்ச்சி உடன் தேவையான சுவைக்குத் தேன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட அதிக ரத்தப்போக்குடன்கூடிய மாதவிலக்கு குணமாகும்.
     

  • நித்திய கல்யாணி இலைகள் ஐந்து உடன் வெருகடி அளவு சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து அரை டம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து பாதியைக் காலையிலும், மீதியை இரவு படுக்கப் போகும் முன்னும் சாப்பிட்டு வர தொண்டைக்கட்டு, நுரையீரல் தொற்று ஆகியனவிரைவில் குணமாகும்.
     

  • நித்திய கல்யாணி இலை ஐந்தோடு வெருகடி அளவு சீரகம் சேர்த்து தீநீராக்கிப் போதிய இனிப்பு சேர்த்து பருகி வர ரத்த ஓட்டம் சீர்பெறும். இதனால் மன அழுத்தம், தலைவலி, மயக்கம் ஆகியன குணமாகும்.
     

  • நித்திய கல்யாணி செடியின் துளிர் இலைகள் ஐந்தாறு எடுத்து சிறிது சுக்கு, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை அருந்தி வர வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு ஆகியன குணமாகும்.
     

  • நித்திய கல்யாணி பூக்கள் 10 எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும்.
     

  • நித்திய கல்யாணி பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ கண் நோய்கள் குணமாகும். இதைக் கொண்டு ஆறாதப் புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.
     

  • நித்திய கல்யாணி பூக்கள் 10 முதல் 15 எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தேன் சேர்த்துப் பருகி வர எவ்வகைப் புற்றுநோயும் விலகும்.


நித்திய கல்யாணி பூவுக்கு இவ்வளவு மகத்துவ, மருத்துவ குணங்கள் உள்ளன என இப்போது தெரிந்து கொண்டோம். இதை ஒவ்வொரு இல்லத்திலும் வைத்திருந்தால் பெரும்பாலும் மருத்துவமனை என்பதே நமக்குத் தேவைப்படாது என்பது திண்ணம்.





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்