உள்ளி

கலாநிதி பால.சிவகடாட்சம்





''உள்ளிக்குப் பித்தம் ஓங்கிப்பெருகிவிடும்
கள்ளமுள்ள சேட்டுமத்தைக் கட்டறுக்கும்-மெள்ளவே
வாதம்தனைப்போக்கும் வாய்வுக்கிகிராணி ரத்த
சீதம் தனைப்போக்கும் செப்பு''


இதன் பொருள்: உள்ளி பித்தத்தைக்கூட்டிவிடும். நெஞ்சுச்சளி தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். வாதநோய் ஏற்படுவதைத் தவிர்க்கும். சமிபாட்டுக் கோளாறினால் ஏற்படும் மாந்தம் வயிற்றோட்டம் என்பவற்றைக் குணப்படுத்தும்.

மேலதிகவிபரம்: நல்ல கொலெஸ்ரறோலைப்
(HDL cholesterol)) பாதிக்காது கெட்ட கொலெஸ்ர றோலை (LDL cholesterol) மாத்திரம் குறைக்கும் குணம் உள்ளிக்கு உள்ளது. இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை சிறிதளவு குறைக்கவும் உள்ளி உதவுகின்றது. இதனால் உள்ளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு (heart attack) மற்றும் பக்கவாதம் (stroke) போன்ற வியாதிகள் தோன்றும் அபாயத்தை ஓரளவு குறைக்கமுடியும் என்று நம்பப்படுகிறது. இரசவர்க்கத்தில் 'உள்ளிக்குப் பித்தம் ஓங்கிப்பெருகிவிடும்' என்று கூறப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். அளவுக்கு அதிகமாக உள்ளியைச்சாப்பிடுவது ஓங்காளம், நெஞ்செரிவு, வயிறெரிவு என்பவற்றைத் தோற்றுவிக்கலாம்.

காதுவலியைக் குணப்படுத்துவதற்கு உள்ளி சிறந்த மருந்து என்பது பலரும் அறிந்த உண்மை. எனினும் இதற்கு உள்ளியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்துவைத்திருத்தல் அவசியம். மூன்று உள்ளிப்பூடுகளைச் சுத்தம்செய்து நசித்து எடுத்தபின் அவற்றை அரை கப்
(120 mL) சுத்தமான ஒலிவ் (olive) எண்ணெயில் இலேசான சூட்டில் இரண்டு நிமிடங்கள்வரை விடவேண்டும். பின்னர் எண்ணெயை மாத்திரம் வடித்து எடுத்து குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கவும். காதுவலி ஏற்படும்போது இந்த எண்ணெயில் சிறிதளவு எடுத்துச் சற்று சூடாக்கி ஒன்று அல்லது இரண்டு துளிகளை இளஞ் சூட்டுடன் காதுக்குள் விடவும்.

ஆயுள்வேத வைத்தியர்கள் ஒலிவ் எண்ணெய்க்குப் பதிலாகக் கடுகுஎண்ணெயைப்
(mustard oil) பயன்படுத்தி உள்ளித் தைலம் தயாரிக்கிறார்கள்.

இவர்களது முறைப்படி
5 அல்லது 6 உள்ளிப்பூடுகளை நசித்துஎடுத்து அவற்றை 4 தேக்கரண்டி (20 mL) கடுகெண்ணெயில் போடவேண்டும். இந்தக்கலவையை 5 தொடக்கம் 10 நிமிடங்கள்வரை இலேசான சூட்டில் உள்ளி பிறவுண்நிறம் அடையும்வரை விடவேண்டும். பின்னர் எண்ணெயை வடித்தெடுத்து ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்து வைக்கவேண்டும்.

வலி உள்ள காதுக்குள் ஒவ்வொரு துளியாக சில துளிகள் விட்டபின்
30 நிமிடங்களுக்குக் காதைப் பஞ்சினால் அடைத்துவைக்கவும். காதில் விடப்படும் சமயத்தில் எண்ணெய் அதிக சூடாகவோ குளிராகவோ இருத்தல் கூடாது. ஒரு நாளைக்கு இரு தடவைகள் வலி குறையும் வரை 2 அல்லது 3 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யலாம். இதற்கு மேலும் காதுவலி நீடித்தால் உடனடியாக வைத்தியரிடம் செல்லவும். காதில் சீழ் வடியும்போது இந்தச் சிகிச்சையைச் செய்யக்கூடாது.

உள்ளியை வெள்ளைப்பூடு அல்லது பூடு என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு.
Garlic என்பது உள்ளியின் ஆங்கிலப்பெயர்.

Allium sativum L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.
 

 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்