அதிமதுரம் Licorice (Liquorice)

கலாநிதி பால.சிவகடாட்சம்

அதிமதுரம் பித்தம் அகற்றுமே அம்புவியில்
கொதியதொருவெட்டைதனைக்கூட்டுமே-மதியாமல்
பித்தவெட்டைபோக்குமே பேருலகில் மானிடர்க்கு
சித்தர்நிலை நிறுத்தும் செப்பு


இதன் பொருள்: அதிமதுரம் பித்தத்தினால் ஏற்படும் வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்தும். இரத்தக்கொதிப்பைக்கூட்டும்.




மேலதிக விபரம்: சுவாசக்குழாயின் சளியமென்சவ்வுகளைச் சீர்செய்து சளியச்சுரப்பை ஊக்குவிப்பதன் மூலம் வரட்டு இருமலைக் குணமாக்கும். வயிற்றுப்புண், நெஞ்செரிவு என்பவற்றுக்கான மருந்துகளிலும் அதிமதுரம் சேர்க்கப் படுகின்றது. வாய்ப்புண் தொண்டைப்புண் என்பவற்றைச் சீர்செய்யும்.

அதிமதுரத்தில்
24% ‘கிளிசெறைஸின்’ (glycyrrhizin) என்னும் இரசாயனம் உள்ளது. இந்த இரசாயன மருந்துப்பொருள் வேறுபல பக்க விளைவுகளை ஏற்படுத்துமாதலால் இந்த ‘கிளிசெறைஸின்’ நீக்கப்பட்ட அதிமதுரத் தயாரிப்புகளை (deglycyrrhizinated licorice-DGL) இன்று சில மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

தொண்டை நோவு, தொண்டைக்கரகரப்பு அல்லது வரட்டு இருமல் இருக்கும்போது 
1கிராம் முதல் 5 கிராம் வரையிலான அதிமதுரவேர்த்தூளில் குடிநீர் காய்ச்சிக்குடிக்கவும் அல்லது ஒரு துண்டு வேரை வாயில் போட்டும் சுவைக்கலாம். ஒருநாளைக்கு மூன்று தடவைகள்.

அதிமதுரப்பொடியை நீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசிகஞ்சியுடன் அதிமதுரம் ஊறிய நீரைக்கலந்து குடித்துவந்தால் குடல்புண்
(peptic ulcer) குணமாகும்.

குடல்புண்ணுக்கு கிளிசிறசின் நீக்கப்பட்ட அதிமதுரச்சாறு ஒருநாளைக்கு மூன்று தடவைகள் எடுக்கலாம்.

அதிமதுரத்தை தொடர்ந்து ஒரு கிழமைக்குமேல் பயன்படுத்தல் கூடாது. குழந்தைகளுக்கு அதிமதுரக்குடிநீர் கொடுக்கவே கூடாது.

உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் பொட்டாசியம் பற்றாக்குறை, கடுமையான ஈரல் வியாதிகள் உள்ளவர்கள் அதிமதுரத்தைப் பயன்படுத்தல் கூடாது.

சிறுநீர்க்கழிவை ஊக்குவிக்கும் மருந்துகளினால்
(thiazide diuretics) ஏற்படும் நீரிழப்பை அதிமதுரம் மேலும் அதிகரிக்க வைக்கும்.

Licorice (Liquorice) என்பது அதிமதுரத்தின் ஆங்கிலப்பெயர்.
Glycyrrhiza glabra L என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்

[இலங்கையிலும் தமிழகத்திலும் அதிமதுரத்துக்குப் பதிலாக வெள்ளைக் குன்றுமணி
(Abrus precatorius L, white variety) என்னும் செடியின் வேரை ‘நாட்டுஅதிமதுரம்’ என்னும் பெயரில் ஆயுர்வேத மருந்துக்கடைகளில் விற்கின்கின்றார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் உண்மையான அதிமதுரத்தில் உள்ள இரசாயனமான ‘கிளிசெறைஸின்’ சற்றுக்குறைந்த அளவில் குன்றிமணியிலும் காணப்படுவதுதான்.]
 






 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்