ஐந்து தலைமுறை நாயகர்களோடு ஆட்சி செய்த மனோரமா ஆச்சி முனைவர் இரா.செல்வி ஆச்சி என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் தாய் மற்றும் பாட்டி என்பதாகும். ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் தாயாக, பாட்டியாக விளங்கிய மனோரமா ஆச்சியின் பூதவுடல் மறைந்து விட்டது. ஆனால் அவர் தான் நடித்த படங்கள் மூலமும் பாடல்கள் மூலமும் ஆண்டாண்டு காலம் வாழ்வார். மனித குலத்தைச் சிரிக்கவைத்துக் கொண்டுதான் இருப்பார். ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் அவர் ஒரு குலவிளக்கு. அணையா விளக்கு. மகழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சி அடுத்தவரை மகிழவைத்துப் பார்ப்பதுதான். கடினமாகப் பாடுபட்டுக் களைத்து வரும் மக்கள் ஏதேனும் ஒரு சினிமா பார்ப்பார்கள். நகைச்சுவை காட்சியில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். மனம் உற்சாகம் அடையும.; வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர்கள் நோய் தீர்க்கும் மருத்துவர்கள் ஆவார்கள் அத்தகைய மருத்துவர்களில் தலைமை மருத்துவச்சியாகத் திகழ்பவர்தான் மனோரமா ஆச்சி அவர்கள். மனோரமா ஆச்சிக்குள் எத்தனை எத்தனை வாழ்வியல் போராட்டங்கள் இருந்ததோ? நான் வீட்டை விட்டுப் படப்பிடிப்பிற்குச் செல்கையில் வீட்டை மறந்துவிடுவேன். என் கவனம் எல்லாம் என் நடிப்பில்தான் இருக்கும் என்று பலமுறை அவர் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டிகளில் கூறியிருக்கிறார். 1300 படங்கள். 5 தலைமுறை நடிகர்களோடு நடித்தவர் என்னும் போது எங்கே சரியாக ஓய்வெடுத்திருப்பார்? சரியாகத் தூங்கியிருப்பார்? திரை உலகில் அரசியாக இருந்தார் என்பதை விட அவரை கடுமையாகப் பாடுபட்ட பாட்டாளி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். சமூகம் தந்தை வழி சமூகம் என்பதால் கதாநாயகனை மையப்படுத்திதான் பெரும்பான்மையான திரைக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. கதா நாயகியை மையப்படுத்தி எடுக்கும் படங்கள் மிகக் குறைவுதான். பெரும்பான்மையான படங்களில் கதாநாயகனுக்குக் காதலியாகவோ மனைவியாகவோ வரும் கதாநாயகிகள் வெறும் அழகுப் பதுமைகளாகவோ அழுதவிழி பாவைகளாகவோதான் வந்து போவார்கள்;. 50 60 களில் வெளிவந்த பல படங்களில் நகைச் சுவை வேடத்தில் நடிக்கும் பெண்கள் ஆங்கில மோகம் கொண்டவர்களாக மாதர் சங்க தலைவிளாகச் சித்திரிக்கப்பட்டிரிப்பார்கள். பெண் உரிமை பேசுபவர்கள் வீட்டுக்கு அடங்கமாட்டார்கள். கணவன் பேச்சை கேட்க மாட்டார்கள் என்பதாக நகைச்சுவை காட்சிகள் இடம் பெறும். மனைவியிடம் அடிவாங்கும் கணவனாக ஆண் நகைச்சுவை நடிகர் இடம் பெறுவார். படம் பார்க்கும் இரசிகர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள். மனோரமா ஆச்சியும் காதலனாக அல்லது கணவனாக வரும் சோ, நாகேஷ் தேங்காய் சீனிவாசன் போன்ற ஆண் நகைச்சுவை நடிகர்களை எதிர்த்துப் பேசுபவராக அடிக்க கை ஓங்குபராக நடிப்பார். இத்தகைய நகைச் சுவை காட்சிகள் கொண்டு சினிமாக்காரர்கள் பெண் உரிமை பேசும் பெண்கள் குடும்பப் பொறுப்பற்றவர்கள் என்று வலியுறுத்துவார்கள். இத்தகைய படங்களில் மனோரமா ஏன் நடித்தார் என்று கேள்வி கேட்க முடியாது. திரைக்கதை எழுதியவர்களையும் இயக்கியவர்களையும்தான் கேட்க வேண்டும் ஆனால் நல்ல முற்போக்குச் சிந்தனையோடு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மனோரமா ஆச்சிக்குச் சமூகப் பொறுப்புமிக்க கதாப்பாத்திரங்கள் தரப்பட்டிருக்கும். மனோரமா ஆச்சி பல படங்களில் பெண் உரிமைக்குக் குரல் எழுப்பியவராக, தீண்டாமைக்குச் சவுக்கடி கொடுப்பவராக, அநீதிகளைக் கொண்டு பொங்கி எழுபவராக நடித்திருக்கிறார். இதை இரசிகர்கள் நன்கு அறிவர். விதி என்ற படத்தில் பெண்ணை வஞ்சித்த வாலிபனை (மோகனை) மனோரமா ஆச்சி 'அவன் ஹயரும் இல்லை லோயரும் இல்லை லோபர்' என்பார். அந்த வசனத்தில் நகைச்சுவை வெளிப்பட்டாலும் நடை முறை ஆணாதிக்க வாலிபர்களுக்கு நல்ல சாட்டை அடியே எனலாம். தலைவிக்குத் தூது போகும் தோழியாகக் குறிசொல்பவளாக, மடிசார்மாமியாக, மீனவர் குடி பெண்ணாக, பூம்பூம் மாட்டுக்காரப் பெண்ணாக, தாழ்ந்த குலத்துப் பெண்ணாக என அவர் ஏற்று நடித்த பெண்பாத்திரங்களை வைத்து ஒரு பெண்ணிய ஆய்வே நிகழ்த்தலாம். சினிமாத்துறை சார்ந்த பல நூல்களில் ஆண் ஹீரோக்கள் குறித்துதான் நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. பெண் நடிகைகளின் ஆளுமை குறித்த நூல்கள் மிகக் குறைவே. மனோரமா அவர்களின் ஆளுமை குறித்து இங்கும் அங்குமாகச் செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை போதாது. வாழ்நாள் எல்லாம் நடித்துச் சாதனை கண்ட சரித்திர நாயகி. செந்தமிழ், சென்னைத் தமிழ,; கொங்குத் தமிழ் என எல்லா வட்டாரத் தமிழிலும் வசனங்கள் பேசி அசத்திய தமிழரசி. அவர் நடித்த 1300 படங்களில் அவர் நடிப்பின் வழியே வெளிப்பட்ட கருத்தியல்கள எவை? எவை? சமூக மாற்றம் குறித்த சிந்தனைகள் எவை? எவை? இவற்றை எல்லாம் முழுமையாகத் தொகுத்து நூலாக்கம் செய்வது கலை இலக்கியத் திறனாய்வாளர்களின் கடமையாகின்றது. நான் நேரில் பார்க்க விரும்பிய நடிகைகள் இருவர். ஒருவர் மனோரமா ஆச்சி. இன்னொருவர் கோவை சரளா. இவ்விருவரின் நகைச்சுவை நடிப்புகள்தாம் என்னுள் ஆதிக்கம் செலுத்துகிறது. வகுப்பறையில் நான் நகைச்சுவை உணர்வோடுதான் பாடம் எடுப்பேன். மாணவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். மாணவர் அருகே நின்று கொண்டு நாடகப் பாங்கிலும் நகைச்சுவை உணர்வுடனும் பாடம் எடுக்க ஆரம்பித்தால் எத்தகைய கடினமான பாடத்தையும் மாணவர்கள் எளிமையாக விளங்கிக் கொள்கின்றார்கள். என் மாணவர்கள் பாடம் முடித்து வெளியே வரும்போது அம்மா உங்களுக்குக் கோபமே வராதா? என்று கேட்பார்கள். ஆய்வு மாணவர்களை மட்டும் தார்மீகக் கோபத்தோடு திட்டுவேன். அவர்கள் அமைதியாகத் திட்டு வாங்கிக் கொண்டு போவார்கள். அதன்பின் இப்படித் திட்டியிருக்கக் கூடாது என்று வருந்துவேன். மறுநாள் அதற்காக வருந்துவேன். அம்மா உங்கள் மனது எங்களுக்குத் தெரியாதா? என்பார்கள். மனோரமா அவரகளிடம் இருந்து எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்றும் சிரித்த முகத்துடன் இருப்பது. மனோரமா ஆச்சியை ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் பார்த்து ஆட்டோகிராப்பில் கை எழுத்து வாங்க விரும்பினேன். ஒரு முறை நம் தெக்குப்பாளைய கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. மனோரமா ஆச்சியும் வந்துள்ளாராம். நாளை அவருக்கான படப்பிடிப்பு என்று என் அம்மா போனில் சொன்னார். ஞாயிறு விடுமுறைதானே அவசியம் ஆச்சியைப்பார்த்து விடவேண்டும் என்று மகளிர் விடுதியிலிருந்து அதிகாலையில் கிளம்பிப்போனேன். படப்பிடிப்பு நடந்து கொண்டுதான் இருந்தது. மனோரமா எப்ப வருவார் என்று தெரியவில்லை. மனோரமா நடிக்க வேண்டிய காட்சி இன்று இல்லை என்றதும் பெரும் ஏமாற்றத்தோடு விடுதி திரும்பிவிட்டேன். இது நடந்து இரண்டு மூன்று வருடம் கழிந்திருக்கும். எனக்குத் தெரிந்த திருச்சியை சேர்ந்த கவிஞர் திரு மணமேடு குருநாதன் ஐயா அவர்களுக்கு என் குறும்படம் விசியமாகப் போன் செய்தேன். நான் சென்னையில் ஆச்சிவீட்டில் இருக்கின்றேன் என்றார். அவரிடம் நான் 'ஐயா ஆச்சியிடம் போனிலேனும் பேசிக்கொள்கிறேனே. அவரிடம் பேச உதவி செய்வீர்களா? என்றேன். சரிப்பா என்று சொல்லிவிட்டு, எனக்குத் தெரிந்த பேராசிரியை. பெயர் செல்வி. எழுத்தாளர். சிறுகதை ஆசிரியர.;ஒரு குறும்படம் இயக்கித் தயாரித்துள்ளார். உங்களிடம் பேச விரும்புகின்றார் என்று என்னைப்பற்றி ஐயா சொல்ல அப்படியா? என்று ஆச்சி போனை வாங்கிப் பேச ஆரம்பித்தார். 'செல்வி ! எப்படிம்மா இருக்கே? நீ இன்னும் பெரிய எழுத்தாளரா குறும்பட இயக்குநராக உயரவேண்டும் என்று வாழ்த்தினார். பலநாள் பழகியவர் போல் அவர் பேச நான் வியந்தேன். இதை வைத்து 'ஆச்சியோடு ஒரு பேச்சு' என்று ஒரு சிறு கதையும் எழுதி வைத்திருக்கிறேன். அவரோடு பேசியதை என் சகப் பேராசிரியர்கள் எனது மாணவர்கள் என எல்லோரிடமும் வலிய கூறி பெருமை கொண்டேன். மனோரமா ஆச்சி அவர்களிடம் பேச வைத்த கவிஞர் மணமேடு குருநாதன் ஐயா அவர்களுக்கு நன்றி கூறவேண்டும். நலம் விசாரித்து ஆசிர்வாதம் வழங்கிய மனோரமா ஆச்சியின் அந்தத் தாய்மைக் குரல் என்னுள் இன்றும் இனிமையாய் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனோரமா ஆச்சியின் இறப்பு தமிழகம் மட்டுமன்றி உலகம் எங்கிலும் வாழும் தமிழினத்தையும் திரைப்படத் துறையினரையும் கலை இலக்கியவாதிகளையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக கலைஞர்களும் அரசியல் தலைவர்களும் மனோரமா ஆச்சியின் சாதனைகளைக் கூறி இனி அவரிடத்தை யாரும் நிரப்பமுடியாது என்றார்கள். பெண் சிவாஜி என்றார்கள். மனோரமாவின் பெயரில் விருது வழங்க வேண்டும் என்றார்கள். இவற்றை யாரும் மறுக்கவே மாட்டார்கள். ஆனால் மனோரமாவின் நடிப்பு குறித்த திறனாய்வுகள் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகியவை குறித்து ஆய்வுகள் இனிதான் மேற்கொள்ளபடும் எனத்தெரிகின்றது. இது வரை வெளிவந்த திறைத்துறை சார்ந்த பல நூல்கள் கதாநாயகன் கதாநாயகி பாத்திரங்களுக்கு முதன்மை தந்து விமர்சிக்கப்பட்ட நூல்களாகவே இருக்கின்றன. மனோரமா ஆட்சி தொலைக்காட்சி வானொலிகளுக்கு அளித்த பேட்டிகள் நேயர்களுக்கு அவர் தந்த பதில்கள் யாவற்றையும் தொகுத்தும் திறனாய்ந்தும் நூல்கள் பல வெளியிட கலை இலக்கிய ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் முன்வரவேண்டும். இது மனோரமா ஆச்சி என்ற சரித்திர நாயகியின் சகல பரிணாமத்தையும் உணர்த்தும் ஆவணமாக விளங்கும். நகைச்சுவையுடன் வெளிப்பட்ட விதி படத்தில் மனோரமா பேசிய வசனம் சிரிப்பை வரவைக்கவில்லை. மாறாக கோபத்தை ஏற்படுத்தின. படத்தில் மனோரமா ஆட்சி தட்டச்சு பயிற்சி நிலையம் நடத்துவார் பூர்ணிமாவை காதலிப்பதற்காக மோகன் அப்பிற்சி நிலையத்தில் சேர்ந்து அவரை வலிய காதலித்து விடுவார் நான் எங்கே அவளை காதலித்து ஏமாற்றினேன் என்பார். மனோரமா பாதிக்கப்பட்ட பூர்ணிமாக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார். மோகனைத் திட்டும் போது ' அவன் ஹயரும் இல்லை லோயரும் இல்லை லோபர்' என்பார். இந்த வசனம் நகைச் சுவை வசனம் என்றாலும் ஆணாதிக்கத்தின் அராஜகத்தை வன்மையாக விமர்சனம் செய்த வசனமாக விளங்கியது. சில படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளைக் காண்கையில் மனோரமா ஆச்சி நடித்திருக்க வேண்டாம் என எண்ணவும் தோன்றும் ராசாத்தி ரோஜாகிளி என்ற படத்தில் மனோரமா வில்லியாக நடித்திருப்பார். நடிகர் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு பேயாக வருவார். அச்சுறுத்துவார். சாராயம் கேட்பார். மனோரமா சாராயக் கடை சென்று வாங்கி வரும் காட்சி மிகுந்த நகை சுவை காட்சிதான். ஆனால் சிரிதும் யாதார்த்தம் இல்லாத இது போன்ற கதைகளில் மனோரமா நடிக்க மறுத்திருக்க வேண்டும் எனத்தோன்றியது. மனோரமா ஆட்சி ஏற்று நடிக்காத கதாப்பாத்திரங்கள் ஏதும் இல்லை. அவர் நடித்த 1300 படங்களையும் பாரத்தால்தான் நாம் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களைச் சரியாக ஆராயமுடியும். இதற்குச் சாத்தியமே இல்லை. மடிசார் மாமி மீனவர் குடி பெண் பூம்பூம் மாட்டுக்கார பெண் குறி செல்லும் பெண் கவுண்டர் இனப்பெண் சலவை தொழிலாளி பெண் அருந்ததி இனத்தை சார்ந்த பெண் முதிர் கன்னி எனச் சகல தரப்புப் பெண்களின் உணர்வுகளைத் தமது நடிப்பால் பிரதிபலித்திருக்கும் மனோரமா ஆட்சி சமூக அக்கறை கொண்டவர் சாதிமதவெறி கொண்டு அலையும் சமூகத்தைத் திருத்துவதாகப்பல படங்கள். படங்களின் பெயர் நினைவில் இல்லாததால் சுட்டிக்காட்ட முடியவில்லை. சினிமாக்களை விரும்பிப் பார்ப்பவர்கள் இதை நன்கறிவார்கள். கிழக்கு வாசல் சின்ன தம்பி இது நம்ப ஆளு ஜென்டில் மேன் சின்ன கவுண்டர் போன்ற படங்களில் ஏற்று நடித்த அம்மா பாத்திரங்கள் சமூக சீர்த்திருத்தத்தை உணர்த்தி நிற்பவையே. 5 தலைமுறையாக நடித்த மனோரமா எங்கே சரியாக ஓய்வெடுத்திருப்பார் உறங்கியிருப்பார். இப்போது பூத உடலை விட்டுப் புகழ் உடம்பில் வாழ்கிறார். அவரது கடின உழைப்பும் மனோதிடமும் அனைத்துத்துறை பெண்களுக்கும் உந்து சக்தி ஆகும்.
முனைவர் இரா.செல்வி
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பூசாகோ கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641014
தமிழ்நாடு, இந்தியா
நன்றி: தி டிடெக்டிவ் ரிப்போர்ட் (ஜனவரி 16-31-2016)
|