மார்க்கம் தமிழ்
அமைப்பினர் நடத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா
ஆனந்தன்
24-01-2018
மார்க்கம்
தமிழ் அமைப்பினரால் ஜனவரி மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை நடாத்தப்பட்ட
தமிழ் மரபுத் திங்கள் விழா மார்க்கம் மாவட்ட உயர் பாடசாலையில் (Markham
District High School) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அரசியல்
பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத்தினர், மாணவர்கள், பொது மக்கள்
ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு கனடிய தேசியகீதம், தமிழ் மொழி
வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய வழக்கமான அம்சங்களின் பின்னர் நிகழ்ச்சிகள்
ஆரம்பமாயின. தமிழர் கலாசாரத்தைக் குறிக்கும் வகையில் மேடையில் பொங்கல்
பொங்கிவருவது போன்று அலங்கரித்திருந்தார்கள். அன்று நடைபெற்ற
நிகழ்சிகளும் தமிழ் மரபையும், தமிழர் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக
அமைந்திருந்தன.
விழாவில் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டவர்களில் மார்க்கம்
நகர (Oak Ridges)) ஓக் ரிட்ஜஸ் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும்,
ஒன்ராறியோ மாகாண சமூக கலாசார சேவை அமைச்சராகவும் இருக்கும் Helena
Jaczek (ஹெலனா ஜஸக்) தமிழர் மரபுத்திங்கள் விழாவில் கலந்து கொள்வது
மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி தமிழர்களின் கலாசாரம் பற்றி உயரிய தன்
கருத்தையும்; தெரிவித்தார்.
மார்க்கம் நகர உதவி மேயர் (Deputy Mayor) பிரதேச உறுப்பினர் நிர்மலா
ஆர்ம்ஸ்ரோங் ஆகியோர் மாணவர் நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்த்ததுடன்
அவர்களின் திறமைகளைப் பாராட்டிப் பேசினார்கள். தான் இவ்வகை
நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கு பற்றுவதாகவும், குழந்தைகளின் முன்னேற்றம்
சிறப்பானதாக உள்ளதாகவும் தெரிவித்தார். மார்க்கம் தமிழ் அமைப்பின்
தலைவர் யுவனிதா நாதன் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும், தமிழ்
மரபுரிமைச் சங்கத்தின் (Tamil Heritage Society) தலைவர் மோகன் றெமிசியர்
அதன் செயற்திட்டங்கள் பற்றியும் கூறினார்.
அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் தரமானதாகவும், மக்களின் பாராட்டைப்
பெற்றதாகவும் அமைந்திருந்தன. பொங்கல் நடனம், கரகம், அறுவடை நடனம்,
தமிழ்ப்பூங்கா மாணவிகள் வழங்கிய நடனம், கலைக்கோவில் மாணவிகளின் நடனம்,
மாணவிகளின் பாட்டு நிகழ்ச்சிகள் யாவும் பார்வையாளர்களை
மகிழ்ச்சிப்படுத்தின. அண்ணாமலை வளாக யோகா விரிவுரையாளர் ஜெயரஜீன்,
ஜெயவிசாலி செய்து காட்டிய சூரிய வணக்கம் சபையோரைக் கவர்ந்தது.
முக்கிய நிகழ்வாக ரொறன்ரோ பெரும்பாக 42ஆம் வட்டார் Rouge River
நகரசபையின் உறுப்பினரும் தமிழ் மரபுரிமைச் சங்கத்தை ஆரம்பித்து கடந்த
வருடம் வரை சிறப்பாக நடாத்தி வந்த நீதன் சண்முகராஜாவைக் கௌரவிக்கும்
நிகழ்வு இடம் பெற்றது.
தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் சேவை செய்தவரான நீதன் சண் தன்
உரையில் தமிழ் மரபுரிமைச் சங்கம் தொடங்கிய விதம் பற்றியும் அது
படிப்படியாக மார்க்கம் நகரசபையில், மாநகரசபை உறுப்பினர் லோகன் கணபதியின்
முயற்சியில் அங்கீகரிக்கப்பட்டு, பின் ஹரி ஆனந்தசங்கரியின் முயற்சியால்
கனடியப் பாராளுமன்றத்திலும் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில்
தமிழர்களின் ஒரு பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருவது பற்றி
சிறப்பித்துக் கூறினார்.
ருக்சன் பரா, ஷமின் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
மார்க்கம் தமிழ் அமைப்பின் தலைவர் யுவனிதா நாதன் மற்றும்
அங்கத்தவர்களின் பெரும் ஒத்துழைப்பும் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்புற
நடைபெற உதவியது.
மோகன் மானிக்ஸ் நன்றியுரை நிகழ்த்தினார். மார்க்கம் நகருக்கு இந்த
அமைப்பினரின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும். மேன்மேலும் பல
முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|