பத்து
நாட்கள்
இஸ்லாமபாத்
நகரம்
எட்டுப்
பிரிவுகளாக
அமைக்கப்பட்டது.
அதில்
எஃப்
பகுதியில்
வீடு
பிடிப்பது
மிகக்
கஷ்டம்.
அரசாங்க
உத்தியோகத்தர்களும்,
ராணுவ
அதிகாரிகளும்,
அரசியல்
செல்வாக்குள்ளவர்களும்
அங்கே
வீடு
கட்டி
வாழ்ந்தார்கள்.
எப்போதாவது
அந்தப்
பகுதியில்
வீடு
வாடகைக்கு
வரும்.
யாராவது
பெரிய
அரசாங்க
அதிகாரியை
பிடித்து
ஆறுமாதம்
காத்திருக்க
முடியுமானால்
ஒரு
வீடு
சில
வேளை
கிடைக்கலாம்.
அப்படித்தான்
எனக்கு
அந்த
வீடு
கிடைத்தது.
சுற்றிலும்
மரங்கள்
சூழ்ந்திருக்கும்
வீடு.
மாடியில்
நின்று
பார்த்தால்
ஒரு
நல்ல
நாளில்
மர்கலா
மலைச்
சிகரம்
தெரியும்.
வீதிகள்
ஒன்றையன்று
செங்குத்தாக
குறுக்கறுத்து
ஓடுவதால்
குடியிருப்புகள்
உயரத்தில்
நின்று
பார்க்கும்போது
நீள்சதுரங்களாகத்
தோற்றமளிக்கும்.
எங்கள்
வீதி
நெடுகலும்
நாவல்
மரங்களை
நட்டு
வைத்திருந்ததால்
அந்தப்
பிராந்தியம்
குளிர்மையாகவே
இருக்கும்.
சுற்றுச்சூழல்
மாசு
கிடையாது.
சுத்தமான
வீதிகள்.
ஆனால்
சந்தைகளும்
கடைகளும்
நகரின்
மையப்
பகுதியில்
தூரத்தில்
இருந்ததால்
சில
சங்கடங்களும்
இருந்தன.
ஒரு
நல்ல
வீட்டை
தேடிக்
கண்டுபிடிக்கும்போது
ஒன்றிருந்தால்
ஒன்று
கிடைக்காது
என்பது
எதிர்பார்த்ததுதான்.
சரியாக
மாலை
ஆறுமணியானதும்
சோக்கிதார்கள்
என்று
அழைக்கப்படும்
வாயிலோன்கள்
ஒவ்வொரு
வீடாக
வந்து
சேருவார்கள்.
அவர்கள்
கைகளில்
உருண்டையான
கம்பும்,
போர்வையும்,
இரவு
உணவுப்
பொதியும்,
சுட்டு
விளக்கும்
இருக்கும்.
ஒருவருக்கு
ஒருவர்
முகமன்
கூறி
விசாரிப்புகள்
நடந்தபிறகு
கூட்டமாக
தொழுவார்கள்.
பின்னர்
தனித்தனியாகவோ
கும்பலாகவோ
உட்கார்ந்து
சாப்பிடுவார்கள்.
நிமிர்த்தி
வைத்திருக்கும்
கயிற்றுக்
கட்டில்களை
சாய்த்துப்போட்டு
புகைபிடிப்பார்கள்.
வீட்டு
எசமானர்கள்
தூங்கப்போய்
சரியாக
ஐந்து
நிமிடம்
கழித்து
அவர்களும்
தூங்கிவிடுவார்கள்.
அடுத்தநாள்
காலை
வீட்டுக்காரர்கள்
எழும்ப
ஐந்து
நிமிடம்
முன்பாக
எழும்பி
தங்கள்
வீட்டுக்கு
புறப்பட்டு
போய்விடுவார்கள்.
எங்கள்
வீதியில்
ஒரு
பெட்டிக்கடை
இருந்தது.
எனக்கு
அந்த
வீதியில்
கிடைத்த
முதல்
நண்பன்
பெட்டிக்கடைக்காரன்தான்.
பெயர்
நவாஸ்.
காலை
ஆறுமணிக்கு
கடையை
திறந்தான்
என்றால்
இரவு
எட்டு
மணிக்குத்தான்
பூட்டுவான்.
வாரத்தில்
ஏழு
நாட்களும்
வியாபாரம்
நடக்கும்.
அவன்
இல்லாமல்
அந்த
வீதி
இயங்க
முடியாது.
காலை
நேரத்தில்
அவனிடம்
புதினப்பத்திரிகை,
பால்,
பாண்,
சிகரெட்,
பிளேட்
என்று
வாங்குவதற்காக
வீட்டுக்காரர்கள்
அவன்
கடையை
நோக்கி
வந்தபடி
இருப்பார்கள்.
நவாஸ்
சிரித்தபடி
வியாபாரத்தை
சுறுசுறுப்புடன்
கவனிப்பான்.
1960ல்
அயூப்கான்
இஸ்லாமபாத்
நகரத்தை
நிர்மாணித்தபோது
பாகிஸ்தானின்
தலைநகரத்தை
இஸ்லாமபாத்துக்கு
மாற்றினார்.
திட்டமிட்டு
நேர்த்தியாகக்
கட்டிய
நகரம்
என்றபடியால்
பச்சைப்பசேல்
என்ற
நெடிய
மரங்களும்
சுற்றியிருக்கும்
மலைகளும்
இதன்
அடையாளமாயின.
நகரத்தின்
தொடக்க
காலங்களிலேயே
நாவாஸின்
தகப்பன்
அந்த
பெட்டிகடையை
அங்கே
ஸ்தாபித்துக்கொண்டார்.
அவர்
நோய்வாய்ப்பட்டபோது
கடையை
ஏற்று
அன்றிலிருந்து
நடத்திக்கொண்டிருப்பதாக
நவாஸ்
ஒருநாள்
என்னிடம்
கூறினான்.
'எத்தனை
வருடங்கள்?'
என்றேன். 'எனக்கு
18
வயது
நடக்கும்போது
கடையை
எடுத்தேன்.
இப்பொழுது
முப்பத்தெட்டு
நடக்கிறது. 20
வருடங்கள்,
வருடத்துக்கு
365
நாட்களும்
வேலை.
இங்கே
குடியிருக்கும்
அத்தனை
பேரையும்
எனக்கு
தெரியும்.
அவர்கள்
பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள்
எல்லோரும்
இங்கேதான்
பிறந்தார்கள்.'
நவாசுடைய
கிராமம்
லைலாப்பூர்.
அது
இஸ்லாமபாத்தில்
இருந்து 160
மைல்
தூரத்தில்
இருந்தது.
அவனுடைய
வயதான
பெற்றோர்களை
அவன்
பார்க்கப்
போவதில்லை;
அவர்கள்தான்
வந்து
அவனை
பார்த்துவிட்டு
திரும்புவார்கள்.
வருடம்
முழுக்க
வேலை
செய்யும்
ஒருவன்
எப்படி
போகமுடியும்
என்று
என்னிடம்
கேட்பான். 'நவாஸ்,
நீ
ஏன்
மணமுடிக்கவில்லை?'
என்று
ஒருநாள்
கேட்டேன். 'ஏழைகள்
எடுத்தவுடன்
மணமுடிக்க
முடியாது.
பெண்ணுக்கு
பஃரி
கொடுப்பதற்கு
பணம்
சேர்க்கவேண்டுமே'
என்றான்.
அப்படிச்
சொல்லும்போதே
அவன்
கண்கள்
பெட்டிக்கடை
மரப்பலகைகளில்
ஒட்டி
வைத்திருந்த
பல
ஹிந்தி
நடிகைகளின்
படங்களை
ஒரு
வினாடி
பார்த்து
மீண்டன.
டிம்பிள்
கப்பாடியா,
நீத்து
சிங்,
பர்வீன்
பாபி,
பூஜா
பாட்,
சிறீதேவி,
நீலம்
என்று
அப்போது
பாகிஸ்தானில்
பிரபலமாயிருந்த
அத்தனை
நடிகைகளும்
அங்கே
வரிசையாக
அவனுக்காக
காத்திருந்தனர்.
'உன்னை
பெற்றோர்
பள்ளிக்கு
அனுப்பவில்லையா?'
என்றேன். 'ஏதோ
அனுப்பினார்கள்?
கொஞ்சம்
உருது
எழுத
வாசிக்கத்
தெரியும்.
கணக்கில்
கூட்டல்
கழித்தல்
மட்டும்
செய்வேன்.
பெருக்கல்
வராது.
என்
பெற்றோருக்கு
வசதி
கிடையாது.
சிறுவனாயிருந்தபோது
எங்கள்
வீட்டில்
கோழிக்கறி
சாப்பிட
வேண்டுமென்றால்
நான்
நோயில்
விழவேண்டும்;
அல்லது
கோழி
நோயில்
விழவேண்டும்.'
நாவல்
பழ
பருவத்தில்
வீதியில்
நாவல்
பழங்கள்
கொட்டும்
ஆனால்
அதை
பொறுக்குவதற்கு
சிறுவர்கள்தான்
இல்லை.
அந்தக்
வீதிக்
குழந்தைகள்
நாகரிகமானவர்கள்,
வீதியில்
விழுந்தவற்றை
பொறுக்குவற்கு
அவர்களுக்கு
அனுமதி
கிடையாது.
வெளியே
நின்று
வியாபாரத்தை
கவனிக்கும்
நவாஸின்
தலை
மேலே
நாளுக்கு
நூறு
பழங்கள்
விழும்.
அவனுடைய
வெள்ளை
நிற
சல்வார்
கமிஸ்
ஊதா
நிறமாக
மாறிவிடும்.
அந்தச்
சமயங்களில்
சூரிய
ஒளியில்
ஒரு
பஞ்சாபி
நடிகனைப்போல
சிவந்த
உடம்புடன்,
பின்னுக்கு
வாரி
இழுத்த
நீண்ட
தலைமுடியுடன்
பார்ப்பதற்கு
அவன்
அழகாகவே
தோற்றமளிப்பான்.
இப்படியான
நாவல்பழ
பருவத்தின்
போதுதான்
ஒருநாள்
நான்
என்
அலுவலகத்திலிருந்து
திரும்பியபோது
என்
வீட்டைக்
காணவில்லை.
வீதியின்
பெயர்ப்பலகையை
பார்த்தேன்.
பெயர்
சரியாக
இருந்தது.
அது
என்
வீதியேதான்,
ஆனால்
வீதியை
மூடி
பந்தல்
போட்டுவிட்டார்கள்.
நான்
காரை
வெளியே
நிறுத்திவிட்டு
என்ன
செய்யலாம்
என்று
யோசித்தபோது
என்னுடைய
முன்
வீட்டுக்காரர்,
ஓய்வுபெற்ற
ராணுவ
மேஜர்,
வேலைப்பாடுகள்
செய்து
முன்னுக்கு
வளைந்த
செருப்பை
அணிந்துகொண்டு,
கைத்தடியையும்
சுழற்றியவாறு
என்னிடம்
வந்தார்.
எனக்கு
நடுக்கம்
பிடித்தது.
ஆரம்பத்தில்
நான்
அடிக்கடி
மேஜருடன்
பேசியதுண்டு.
என்ன
ஒரு
கருத்தை
நான்
சொன்னாலும்
உடனே
ஓர்
எதிர்
கருத்தை
அவர்
முன்வைப்பார்.
அப்படியே
விவாதம்
நீளும்.
மறந்துபோயும்
பங்களதேஷ்
பாகிஸ்தான்
போரை
பற்றி
விவாதிக்கக்கூடாது.
அப்படியே
உணர்ச்சி
பொங்கி
நிலத்திலிருந்து
ஓர்
அடி
எழும்பிவிடுவார்.
நான்
அவர்
சொன்ன
கருத்துக்களை
எல்லாம்
முழுமையாக
ஒப்புக்கொண்ட
பின்னர்கூட
அவர்
விவாதத்தை
அரை
மணிநேரம்
தொடருவார்.
அவர்
ராணுவத்தில்
வேலை
செய்தவர்
என்பது
பார்த்தவுடனேயே
தெரிந்துவிடும்.
உயரமாக,
எக்கிய
வயிற்றுடன்
தோற்றமளிப்பார்.
முகம்
மட்டும்
அப்பொழுதுதான்
யாரையோ
கடித்துவிட்டு
வந்ததுபோல
இருக்கும்.
ஆனால்
அன்று
எப்படியோ
ஒரு
புன்னகையை
வரவழைத்தபடி
தன்னுடைய
மகனின்
திருமணத்துக்குத்தான்
அந்த
ஏற்பாடுகள்
என்று
கூறி
சிரமத்துக்கு
மன்னிப்பு
கேட்டார்.
காரை
வீதி
முனையிலே
விட்டுவிட்டு
வீட்டுக்கு
நடந்து
போகும்படி
வேண்டிக்கொண்டார்.
அப்பொழுது
பார்த்தால்
என்னைப்போல
அந்த
வீதியில்
குடியிருந்த
மற்றவர்களின்
கார்களும்
அங்கே
நிறுத்தப்பட்டிருந்தன.
கார்களைப்
பாதுகாப்பதற்காக
பிரத்தியேகமாக
ஒரு
காவலனையும்
அவர்
ஏற்பாடு
செய்திருந்தார்.
அடுத்தநாள்
காலை
இன்னொரு
அதிர்ச்சி
காத்திருந்தது.
பெட்டிக்கடையை
காணவில்லை.
அது
நின்ற
இடமும்
வெறுமையாக
இருந்தது.
நவாஸ்
எங்கே
என்றால்
பதில்
சொல்லத்
தயங்கினார்கள்.
அந்த
வீதி
குடியிருப்பாளர்களுக்கு
அன்று
பேப்பர்,
பாண்,
பால்,
சிகரெட்
ஒன்றுமே
கிடைக்கவில்லை.
நகர
மையத்துக்குத்தான்
அவர்கள்
போய்
வாங்கி
வரவேண்டும்.
பந்தல்
போடுவதற்கு
பெட்டிக்கடை
இடைஞ்சலாக
இருந்ததால்
அதை
அகற்றச்
சொல்லி
உத்தரவு
போட்டார்கள்.
நவாஸ்
இரண்டு
நாள்
அவகாசம்
கேட்டான்.
அவர்கள்
கொடுக்காமல்
கடையையும்
உடைத்து
அவனை
துரத்திவிட்டார்கள்
என்று
கேள்விப்பட்டேன்.
பாகிஸ்தானில்
உரையாடும்போது
சாதாரணமாக
உருதுவில்தான்
பேசுவார்கள்.
யாரையாவது
திட்டவேண்டும்போல
தோன்றினால்
பஞ்சாபியில்
மாறிவிடுவது
வழக்கம்.
ஏனென்றால்
பஞ்சாபி
திட்டுவதற்காக
உண்டாக்கப்பட்ட
மொழி.
அன்று
மேஜர்
பஞ்சாபியில்
திட்டினார்
என்பதுதான்
பெரிசாகப்
பேசப்பட்டது.
மணவீட்டு
அலங்காரங்கள்
பிரம்மாண்டமாக
இருந்தன.
விதம்விதமான
சாமியானாக்களும்,
வண்ண
விளக்குகளும்,
சரிகை
சோடனைகளும்
கண்களைக்
கூசவைத்தன.
லாகூரிலிருந்து
சிவப்பு
வெள்ளை
மஞ்சள்
வண்ண
ரோசாமலர்கள்
வந்து
குவிந்தன.
நாலு
நாள்
கொண்டாட்டம்
என்று
அறிவித்திருந்தார்கள்.
என்னுடைய
வீட்டு
மீட்டரில்
இருந்து
மின்சாரம்
கடன்வாங்கி
தூண்களிலும்
மரங்களிலும்
குழாய்கள்
கட்டி
சினிமா
பாடல்கள்
ஒலிபரப்பப்
பட்டன.
பாடல்கள்
அலறத்தொடங்கியதும்
வீடுகளில்
ஒருவரொடொருவர்
பேசுவதுகூட
தடைபட்டது. 24
மணிநேரமும்
அவை
ஒலித்தன.
அப்பொழுதுதான்
மாதுரி
தீட்சித்,
சஞ்சய்தத்
நடித்து
வெளியான
கல்நாயக்
படம்
வெற்றிகரமாக
இஸ்லாமபாத்
திரை
அரங்குகளில்
ஓடிக்கொண்டிருந்தது.
'சோளிகே
பீச்சே
க்யா
ஹை'
என்ற
பிரபலமான
ஹிந்தி
பாடலை 200
தடவை
வைத்துவிட்டார்கள்.
யாராவது
வந்து
சோளியை
திறந்து
காட்டினல்
ஒழிய
நிறுத்தமாட்டார்கள்
போலத்தோன்றியது.
என்னிடமிருந்து
கடன்
வாங்கிய
மின்சாரத்தில்தான்
இந்தப்
பாடல்
ஒலிக்கிறது,
இதை
எந்த
நிமிடத்திலும்
நிற்பாட்டும்
சக்தி
என்னிடமிருக்கிறது
என்று
நினைத்தபோது
எனக்கு
சிரிப்புத்தான்
வந்தது.
ஆனால்
இவ்வளவு
சங்கடங்களுக்கு
மத்தியிலும்
ஓர்
ஆறுதல்
இருந்தது.
மாலையானதும்
பெரிய
பெரிய
வெண்கல
தாம்பாளங்களில்
பலவிதமான
உணவு
வகைகள்
பரிமாறப்பட்டு
அவை
அலங்காரமான
வெள்ளிப்பேப்பரினால்
மூடப்பட்டு
அந்த
வீதியில்
உள்ள
அத்தனை
வீடுகளுக்கும்
அனுப்பிவைக்கப்பட்டன.
திருமணத்துக்காக
வீதியை
மூடிய
நாலு
நாட்களும்
விதவிதமான
தேர்ந்த
ருசியான
பதார்த்தங்கள்
மேஜரின்
சமையலறையிலிருந்து
எங்கள்
வீடுகளை
தேடி
வந்தன.
வீட்டுக்காரர்கள்
சமைப்பதை
நிறுத்திவிட்டார்கள்.
சோக்கிதார்கள்
தங்கள்
உணவுப்
பொதிகளை
மறந்தார்கள்.
திருமணத்துக்காக
நந்திக்கோட்டில்
இருந்து
தருவிக்கப்பட்ட
சிறப்பு
சமையல்காரர்களின்
சமையல்
வாழ்நாளுக்கும்
மறக்கமுடியாதது
என்பதில்
எங்களிடையே
கருத்து
வேற்றுமை
கிடையாது.
மணமகளை
வீட்டுக்கு
அழைத்துவந்த
அடுத்தநாள்
இரவு
பிரபல
கஜல்
பாடகர்
நுஸ்ரத்
பஃடே
அலிகான்
தன்
பரிவாரங்களுடன்
வந்தார்.
அவர்
பாடுவதற்கு
வரவில்லை;
மேஜருக்கு
வேண்டியவர்
என்று
சொன்னார்கள்.
ஆனாலும்
செய்தி
பரவிவிட்டது.
சனங்கள்
ஒவ்வொருவராக
வீதியில்
சேரத்தொடங்கினார்கள்.
மேஜர்
அவரை
ஒரேயொரு
பாடல்
பாடச்
சொல்லி
வேண்டிக்கொண்டார்.
நுஸ்ரத்
மணவிழாக்களில்
பாடமாட்டார்
என்பது
எல்லோருக்கும்
தெரியும்.
விதிவிலக்காக
நண்பரின்
வேண்டுகோளை
ஏற்று
ஒலிபெருக்கிகளை
அணைத்துவிட்டு
ஒரேயொரு
கஜல்
பாடல்
பாடினார்.
அவருடைய
கண்டத்தில்
இருந்து
புறப்பட்ட
கர்ஜனை
போன்ற
குரல்
அந்த
வீதியை
ஒரு
பனிமூட்டம்போல
மூடியது.
பாடல்
முடிந்த
பிறகு
எழும்பிய
கைதட்டல்
வெகுநேரம்
நீடித்தது.
எங்கள்
வீதியை
தாண்டி
பந்தலுக்கு
வெளியேயும்
ஆட்கள்
நிரம்பி
வழிந்தார்கள். 'இன்னும்
வேண்டும்'
என்று
அவர்கள்
கத்தினார்கள்.
எனக்கு
தில்லானா
மோகனாம்பாள்
படத்தில்
சிங்கப்பூர்
ஜமீன்தார்
மாளிகைக்கு
அரண்மனைக்கு
வெளியே
சண்முகசுந்தரம்
என்ற
சிவாஜி
கணேசன்
சனங்களுக்கு
நாதஸ்வரம்
வாசித்த
காட்சி
நினைவுக்கு
வந்தது.
ஐந்தாறு
நாட்கள்
கழித்து
பந்தலைப்
பிரித்தபோது
எங்கள்
வீதி
திடீரென்று
வேறு
வீதிபோல
ஆகிவிட்டது.
உடனேயே
எங்களால்
இயல்பு
நிலைக்கு
திரும்ப
முடியவில்லை.
என்னிடம்
மின்சாரம்
கடன்
வாங்கி
ஒலித்த
இசை
நின்றுவிட்டது.
இரைச்சலுக்கு
பழகிய
செவிகளால்
அமைதியை
எதிர்கொள்வது
சிரமமாகவிருந்தது.
வெண்கலத்
தாம்பாளங்களில்
சுவையான
உணவு
பரப்பி
வருவதும்
நின்று
போனது.
காலை
வேளைகளில்
ஒவ்வொரு
வீட்டுக்காரரும்
வெளியே
வந்து
பெட்டிக்கடை
நவாஸ்
வந்துவிட்டானா
என்று
எட்டிப்
பார்த்தார்கள்.
பத்து
நாட்களாக
அவன்
இல்லை.
சரியாக 11வது
நாள்
நான்
மேல்
மாடியில்
நின்று
பார்த்தபோது
புதிய
பெட்டிக்கடை
ஒன்று
திறந்திருந்தது.
நவாஸ்
ஒன்றுமே
நடக்காததுபோல
ஊதா
நிறமாகிவிட்ட
அவனுடைய
சல்வார்
கமிசை
அணிந்துகொண்டு,
வாரிய
நீண்ட
தலைமுடியுடன்,
ஒரு
கிளையினால்
பல்லை
தீட்டியபடி
நின்றான்.
நான்தான்
அன்று
அவனிடம்
சென்ற
முதல்
ஆள்.
தினசரிப்
பேப்பரும்,
பாணும்
வாங்கினேன்.
அவன்
இவ்வளவு
நாளும்
எங்கே
போனான்,
ஏன்
போனான்
என்ற
விவரங்கள்
பற்றி
என்னிடம்
வாய்
திறக்கவில்லை.
ஆனால்
அவன்
கேட்ட
முதல்
கேள்வி
விசித்திரமானது. 'சேர்,
பாஃடே
அலிகான்
பாடினாராமே,
உண்மையா?'
'அருமையான
இசை.
அரைமணி
நேரம்
நிறுத்தாமல்
பாடினார்'
என்றேன்.
அவன்
கண்கள்
ஏக்கமாக
மாறின. 'அப்படியா.
அவர்
என்னுடைய
ஊர்க்காரர்.
அவர்
குடித்த
தண்ணீரை
நான்
குடித்தேன்.
அவர்
சுவாசித்த
காற்றை
நான்
சுவாசித்தேன்.
அவர்
நடந்த
மண்ணில்
நான்
நடந்தேன்.
ஆனால்
அவருடைய
பாடலை
இன்றுவரை
நான்
நேரிலே
கேட்டதில்லை.'
அவனுடைய
குரலில்
பெருத்த
சோகமும்
ஏமாற்றமும்
தொனித்தன.
நவாஸ்
முகம்
கொடுத்து
பேசுவதாக
தெரியவில்லை.
கேட்ட
கேள்விகளுக்கு
கையிலே
பிடித்திருந்த
கிளையை
பார்த்தபடி
பதில்
சொன்னான்.
மணமுடித்த
மேஜர்
வீட்டு
பையனை
அவன்
தோளிலே
தூக்கிவைத்து
விளையாடியதை
என்னிடம்
சொல்லியிருந்தான்.
சரியாக
அந்த
நேரம்
பார்த்து
மேஜரின்
மகன்
நித்திரை
கலையாத
நிலையில்
அசைந்து
அசைந்து
வந்தான்.
நவாஸ்
பரபரப்பானான். 'சிகரெட்'
என்ற
ஒரு
வார்த்தை
மட்டுமே
இளைஞன்
வாயிலிருந்து
வந்தது.
ஒட்டகம்
படம்
போட்ட
சிகரெட்
பெட்டியை
எடுத்து
அந்த
ஒட்டகம்
போலவே
வளைந்துகொண்டு
நவாஸ்
நீட்டினான்.
இளைஞன்
கண்ணாடித்தாளை
ஒரு
சுழட்டில்
கிழித்து
சிகரெட்
ஒன்றை
எடுத்து
வாயில்
வைத்தான்.
லைட்டரினால்
நவாஸ்
அதை
பற்ற
வைத்தபோது
இளைஞன்
ஏதோ
முணுமுணுத்தான்.
எனக்கு
அப்போது
அமெரிக்காவை
தோற்றுவித்த
பிதாமகர்களில்
ஒருவரான
பெஞ்சமின்
பிராங்க்ளின்
கூறியது
நினைவுக்கு
வந்தது. 'தன்மானம்
வெளியேறிவிடுவதால்
ஏழைகள்
எப்பொழுதும்
வளைந்துதான்
காணப்படுவார்கள்.
எங்கேயாவது
வெறும்
சாக்குப்பை
நிமிர்ந்து
நிற்கமுடியுமா?'
பாணையும்
பத்திரிகையையும்
தூக்கிக்கொண்டு
நான்
வீட்டை
நோக்கி
நாவல்
பழங்களின்மேல்
நடந்து
சென்றேன்.
அன்றிரவு
படுக்கமுன்
தொலைக்காட்சியில்
டிஸ்கவரி
பார்த்தேன்.
குளிர்காலம்
தொடங்குவதற்கு
முன்னர்
கரிபோ
மான்கள்
வடதுருவப்
பகுதியிலிருந்து
தெற்காக
இடம்
பெயர்வதை
காட்டினார்கள்.
நிலம்
தெரியாதபடி
அவை
கூட்டம்
கூட்டமாக
நகர்ந்தன.
அப்பொழுது
தூரத்தில்
ஒரு
பாறையில்
ஒரேயரு
ஓநாய்
தன்
பாட்டுக்கு
உட்கார்ந்திருந்தது.
உடனே 30
லட்சம்
மான்களும்
ஒரு
திசையை
நோக்கி
தலைதெறிக்க
ஓடத்துவங்கின.
நிருபர் 'ஏன்
இவை
இப்படி
பாய்ந்து
பாய்ந்து
ஓடுகின்றன?'
என்று
கேட்டார்.
அதற்கு
விஞ்ஞானி
சொன்னார் 'அவற்றின்
மரபணுக்களில் 'பயப்படு'
என்ற
தகவல்
எழுதியிருக்கிறது'
என்று.
மனிதர்கள்
சிலரிலும்
இப்படியான
தகவல்கள்
மரபணுக்களில்
பதிந்து
கிடக்கும்
போலும்
என்று
யோசித்தபடி
நான்
அன்று
தூங்கிப்போனேன்.
வருடம்
தவறாமல் 365
நாட்கள்
வேலை
செய்த
நவாஸ்
அந்த
வருடம் 355
நாட்கள்
மட்டுமே
வேலைசெய்தான்.
நாவல்
பழ
பருவம்
போய்
குளிர்காலம்
தொடங்கியபோது
நவாஸ்
கடைக்கு
காலையில்
வரும்
கூட்டம்
குளிராடை
அணிந்து
வந்தது.
மாலை
நேரங்களில்
வீதியில்
நடை
பயின்றார்கள்.
புதுமணத்
தம்பதிகளையும்
சில
வேளைகளில்
காணக்கூடியாக
இருந்தது.
மணநாள்
அன்று
அந்தப்
பெண்ணை
நான்
நல்லாய்
பார்க்கவில்லை.
அவள்
மயில்
தோகை
விரிப்பதுபோல
தோள்களை
விரித்து
கவர்ச்சியாக
காட்சியளித்தாள்.
கராச்சியில்
இருந்து
வருவிக்கப்பட்ட
நாகரிகமான
பெண்.
அவள்
நெஞ்சை
முன்னேவிட்டு
பின்னால்
நடந்தாள்.
அவளுக்கு
பின்னால்
அவன்
நடந்தான்.
நீண்ட
இடைவெளிக்கு
பின்னர்
ஒரு
நாள்
காலை
அதிசயமாக
மேஜரும்
வீதியில்
தோன்றினார்.
தொளதொளத்த
மேலாடையை
பல்லினால்
கவ்விப்பிடித்தபடி
சல்வாரின்
கயிற்றை
இறுக்கி
கட்டியவாறு
அவர்
நாவாஸ்
கடையை
நோக்கி
நடந்தார்.
பிரசவக்கோடு
போல
ஒரு
கறுப்பு
தழும்பு
அவர்
வெள்ளை
உடலில்
விழுந்திருந்தது.
அவருடைய
தேகம்
ஓய்வு
பெற்றாலும்
வயிறு
முப்பதை
தாண்டவில்லை.
பங்களதேஷ்
போரில்
அவர்
பெரும்
சாகசம்
தெய்தார்
என்று
கேள்விப்பட்டிருந்தேன்.
அவருடைய
உச்சக்கட்ட
வீரப்பிரதாபம்
வேறு
ஒன்றும்
இல்லை.
சிறைபிடிக்கப்பட்ட
91,000
பாகிஸ்தானியர்களின்
பட்டியலில்
அவருடைய
பெயர்
இல்லை
என்பதுதான்.
பத்தடி
தூரத்திலேயே
மேஜரைக்
கண்ட
நவாஸ்
ஓர்
எலும்பில்லாத
பிராணிபோல
மாற்றமடைந்தான்.
தவழ்வதுபோல
அவரை
நோக்கி
ஓடினான்.
தையல்காரர்
ஊசியை
வாயிலே
வைத்துக்கொண்டு
பேசுவதுபோல
பல்லினால்
மேஜர்
எதையோ
சொல்ல
நவாஸ்
வயிற்றை
இரண்டாக
மடித்து
விழுந்து
சிரித்தான்.
போப்பாண்டவர்
கிரிகோரி 1582
ம்
ஆண்டு
அக்டோபர்
மாதத்தில்
பத்து
நாட்களை
உலக
காலண்டரில்
இருந்து
கிழித்தது
போல
இங்கேயும்
யாரோ
அந்த
வருடம்
பத்து
நாட்களை
அழித்துவிட்டார்கள்
என்று
நினைத்துக்கொண்டேன்.
END
-அ.முத்துலிங்கம்
amuttu@gmail.com

|