ராஜதந்திரிகள்
அந்த
விருந்து
அதற்காகத்தான்
ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
ஏற்பாடு
செய்து
அழைத்தவருக்கு
நோக்கம்
இருந்தது.
அழைப்பை
ஏற்று
வந்தவருக்கும்
அது
இலைமறை
காயாகப்
புரிந்துதான்
இருந்தது.
இவருக்கு
அவரிடமிருந்து
ஓர்
இரகசியம்
தெரிந்தாக
வேண்டும்.
அவருக்கு
அந்த
இரகசியம்
இவருக்குத்
தெரியாமல்
காப்பாற்றியாக
வேண்டும்.
இவருடைய
அழைப்பின்
பேரில்
அவர்
வந்திருந்தார்.
சில
ராஜதந்திரக்
காரணங்களுக்காக
அந்த
விருந்தை
இவருடைய
வீட்டிலோ,
தூதரகத்திலோ
தர
முடியாமலிருந்தது.
அவருக்கும்
இவருடைய
வீட்டுக்கோ
தூதரகத்திற்கோ
வரமுடியாத
தர்மசங்கடம்
இருந்தது.
ஆனால்
இருவரும்
சந்திக்க
ஏற்பாடாகி
விட்டது.
இருவரும்
தூதராக
வேலைகளுக்கு
வந்திருந்த
நாடு
பல
ஆயிரம்
மைல்களுக்கு
இப்பால்
இருந்தது.
பல
ஆயிரம்
மைல்களுக்கு
அப்பால்
இந்த
இரு
தூதர்களுடைய
நாடுகளும்
அண்டை
நாடுகள்.
இவர்கள்
இன்று
இருப்பதோ
மற்றொரு
பெரிய
வல்லரசு
நாடு.
அவருடைய
நாடு
வேறு
ஒரு
பெரிய
நாட்டுடன்
அணு
ஆயுத
உடன்படிக்கையோ
அல்லது
'நியூகிளியர்
அம்பர்லா'
போன்ற
ஓர்
ஏற்பாடோ
செய்து
கொள்ளப்
போவதாக
-
அல்லது
ஏற்கெனவே
செய்து
கொண்டு
விட்டதாக
ஓர்
இரகசியத்
தகவல்.
எந்த
நாட்டுடன்
அப்படி
ஒப்பந்தம்
அல்லது
பாதுகாப்பு
ஏற்பாடு
உண்டாகி
இருப்பதாகச்
சொல்லப்பட்டதோ
அந்த
நாட்டில்
தான்
அதன்
தலைநகரில்
இவர்கள்
இருவரும்
தங்கள்
தங்கள்
நாடுகளின்
சார்பில்
தூதர்களாக
இருந்து
வந்தார்கள்.
தலைநகரிலிருந்து
நூறு
மைல்
தள்ளி
இருந்த
ஓர்
ஆடம்பரமான
பீச்
ஹோட்டலில்
லக்சுரி
சூட்
ஒன்றில்
அந்த
விருந்து
ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
வேறு
யாரும்
அழைக்கப்படவில்லை.
விருந்து,
இன்ஃபார்மல்,
ஃபிரண்ட்லி
என்றெல்லாம்
பரஸ்பரம்
வர்ணித்துக்
கொள்ளப்பட்டன.
தங்கள்,
தங்கள்
தூதரகங்களுக்கும்
இந்த
விருந்துக்கும்
சம்பந்தமில்லை
-
இது
பிரைவேட்
-
பியூர்லி
-
பிரைவேட்
-
வீ
எண்ட்
கர்ட்டிஸீ
-
என்றெல்லாம்
இளகிய
வார்த்தைகள்
பயன்படுத்தப்பட்டன.
நெகிழ்ந்த
தொடர்கள்
உபயோகப்படுத்தப்
பெற்றன.
விருந்தைத்
தொடங்கும்
போது
"யுவர்
இன்பர்மேஷன்
கேன்
எலோன்
பிரேக்
த
ஐஸ்"
என்ற
இரகசியக்
கேபிள்
இவருடைய
கோட்
உள்
பாக்கெட்டில்
இருந்தது.
"நோ
ஹாம்...
அட்டெண்ட்
வித்
டைட்
லிப்ஸ்"
என்ற
கேபிள்
அவருடைய
கோட்
உள்பாக்கெட்டில்
இருந்தது.
இருவருடைய
நலனுக்காகவும்
இருவருடைய
குடும்பங்களின்
நலனுக்காகவும்
குடிப்பதாக
'சியர்ஸ்'
சொல்லிக்
கொண்டாயிற்று.
ஆரம்ப
உபசாரங்கள்
முடிந்தன.
முதல்
ரவுண்ட்
முடிகிறவரை
லேடஸ்ட்
ப்ளூ
பிலிம்
-
நாட்டில்
எந்தப்
பெண்ணுடைய
'அங்க
அசைவுகள்'
அழகியவை
-
எந்த
ஸெண்ட்
ரொம்ப
வாசனை
-
என்று
இப்படி
இருந்தது
பேச்சு.
வேறு
திசையில்
திரும்பவே
இல்லை,
திரும்ப
மறுத்தது,
சண்டித்தனம்
பண்ணியது.
இரண்டாவது
ரவுண்டில்
நியூகிளியர்
சயின்ஸில்
நோபல்
பரிசு
பெற்ற
நபரைப்
பற்றி
மெல்லப்
பிரஸ்தாபித்து
நிறுத்தினார்
இவர்.
அப்படியே
அந்தச்
சிறு
நூலேணியில்
ஏறி
'நியூகிளியர்
அம்பர்லா'
வரையில்
போய்விடலாம்
என்பது
இவரது
நோக்கமாயிருந்தது.
அவரும்
விடவில்லை,
சுதாரித்தார்.
"யு
நோ...
பேஸிகலி
ஐ
யாம்
எ
லிட்டரரி
மேன்...
ஐ
யாம்
நாட்
இன்ட்ரஸ்டட்
இன்
ஸயின்ஸ்."
"மே
பி
பட்
நௌ
எ
டேய்ஸ்
ஸயின்ஸ்
டிசைட்ஸ்
எவ்வரிதிங்..."
"டிட்
யூ
ரீட்
ஜான்
கீமென்ஸ்
லேடஸ்ட்
புக்
ஆன்
எக்ஸிஸ்டென்ஷியலிஸம்?"
இதற்குப்
பதில்
சொல்லாமல்
டேபிளில்
இருந்த
சீஸ்
கட்டிகளில்
ஒன்றை
எடுத்து
வாயில்
போட்டுக்
கொண்டு, "நீங்கள்
டேனிஷ்
சீஸ்
சாப்பிட்டிருக்கிறீர்களா?
சீஸ்
என்றால்
அதைத்தான்
சொல்ல
வேண்டும்"
என்றார்
அவர்.
"எனக்கு
சீஸ்
அதிகம்
பிடிக்காதே,
நான்
எப்படி
இதற்குப்
பதில்
சொல்ல
முடியும்?"
-இரண்டாவது
பாட்டில்
திறக்கப்பட்டது.
இவருடைய
முயற்சிக்கான
நுனி
கூட
இன்னும்
இவருக்குக்
கிடைக்கவில்லை.
மாலையில்
கடற்கரை
பீச்
அம்பர்லாவின்
கீழ்
இருவரும்
அமர்ந்தனர்.
இவர்
நம்பிக்கை
இழக்காமல்
மீண்டும்
ஆரம்பித்தார்.
"இப்போது
நாம்
இருவரும்
சேர்ந்து
அமர்ந்திருக்க
இந்தக்
குடை
பயன்படுவது
போல்
நாடுகள்
சேர்ந்து
பாதுகாப்பாக
அமரவும் 'குடை
ஏற்பாடு'
தேவைப்படலாம்
அல்லவா?"
அவர்
இதற்குப்
பதிலே
சொல்லவில்லை.
ஓரிரு
நிமிஷ
இடைவெளிக்குப்
பின், "ஆப்பிள்
உற்பத்தி
மிகுதியால்
மலைமலையாகக்
குவிந்து
போயிற்றாம்.
மார்க்கெட்டில்
விலை
குறையாமலிருக்க -
அப்படிக்
குவிந்த
ஆப்பிள்
மலைகளைக்
கடலில்
கொண்டு
போய்த்
தள்ளிச்
சமாளிக்கிறார்களாம்"
என்று
வேறு
எதையோ
ஆரம்பித்தார்
அவர்.
"அணு
ஆயுத
ஏற்பாடுகளையும்,
அணு
ஆயுதம்
மூலமான
தற்காப்புத்
தேடலையும்
உலகிலிருந்து
ஒழித்தாலொழிய
நாடுகள்
சமாதானமாகவும்
பயமின்றியும்
வாழ
முடியாது"
என்றார்
இவர்.
ஒரு 'ஸிப்'
குடித்துவிட்டு
அவர்
கேட்டார்.
"ஹரே
கிருஷ்ணா
மூவ்மெண்ட்
ரஷ்யாவுக்குள்
கூட
நுழைந்துவிட்டது
பார்த்தீர்களா?"
மீண்டும்
ஒரு
சீஸ்
துண்டை
எடுத்துவாயில்
போட்டுக்
கொண்டு
அது
கரைந்து
முடிந்ததும், "ராணுவக்கூட்டு
ஏற்பாடுகள்
இரண்டாவது
உலக
மகாயுத்த
நாளில்
பயன்பட்டது
போல்
இப்போதெல்லாம்
பயன்படுவதில்லை.
கூட்டு
ஏற்பாடுகளே
பரஸ்பரம்
ஏமாற்றிக்
கொள்ளத்தான்
பயன்படுகின்றன"
என்று
மெதுவாகத்
தொற்றினார்
இவர்.
அவர்
பதில்
உடனே
வந்தது.
"என்
தந்தை
இரண்டாவது
உலக
யுத்தத்தில்
இராணுவ
வீரராகப்
பணியாற்றியவர்.
நிறையச்
சொல்லியிருக்கிறார்."
"இரண்டு
பக்கத்து
நாடுகளே
தங்களுக்குள்
நேசமாகவும்
சகஜபாவத்துடனும்
இருந்துவிட
முடியாமலும்,
கூடாமலும்
வல்லரசுகள்
இரகசியமாகத்
தலையிட்டு
அவற்றில்
ஒரு
நாட்டைத்
தன்
ராணுவ
ஆதரவு
வலையில்
சிக்க
வைக்கிறது.
இதனால்
உருவாகும்
டென்ஷன்
உலக
சமாதானத்தையே
பாதிக்கிறது."
"ஆமாம்!
உலக
சமாதானம்
என்பது
மந்திரம்
போல்
அடிக்கடி
உச்சரிக்கப்படும்
ஓர்
அழகிய
வார்த்தை."
ஏதடா
கொஞ்சம்
பிடி
கொடுக்கிறானே
என்ற
நம்பிக்கையுடன்,
"மந்திரங்கள்
எல்லாமே
பயன்
கருதி -
பயனை
உடனே
எதிர்பார்த்தே
உச்சரிக்கப்படுகின்றன."
"இருக்கலாம்.
பட்...
ஐ
நெவர்
பிலீவ்
வேர்ட்
டெகரேஷன்.
டெகரேடட்
வேர்ட்ஸ்
வில்
ஸெர்வ்
நோ
பர்ப்பஸ்ஸ்."
"சமாதானம்
என்பதோ -
உலக
சமாதானம்
என்பதோ
ஓர்
அலங்கரிக்கப்பட்ட
வார்த்தையில்லை.
அழகு
ஊட்டப்பட்ட
சொற்றொடரும்
இல்லை."
"செயல்
ரீதியாகக்
காண்பிக்க
வேண்டிய
பலவற்றை
அலங்கரிக்கப்பட்ட
சொற்றொடர்களால்
பேசியே
தீர்த்துக்
கொண்டிருப்பது
உலகில்
ஒரு
வழக்கமாகவே
ஆகியிருக்கிறது."
"அந்த
வழக்கத்தை
நாமாவது
போக்க
முற்பட
வேண்டாமா?"
"வழக்கங்கள்
இயல்பாகப்
போகும் -
வரும்.
நாமாகப்
போக்க
முடியாது."
இதோடு
ஒரு
சுற்றுப்
பேச்சுவார்த்தை
முடிந்து
விட்டது.
இவரால்
ஒன்றும்
தெரிந்து
கொள்ள
முடியவில்லை.
அவர்
களைப்பாயிருப்பதாகச்
சொல்லித்
தூங்கப்
போய்
விட்டார்.
மறுநாள்
காலையில் 'ஏர்
பொல்யூஷன்'
பற்றி
பேச்சை
ஆரம்பித்தார்
அவர்.
அது
பல்வேறு 'பொல்யூஷன்கள்'
பற்றி
வளர்ந்து
கிளை
பரப்பி
முடிந்தது.
பகலில்
கடற்கரையில் 'சன்பாத்'
எடுத்தார்கள்.
அப்போதும் 'ஐஸ்
பிரேக்'
ஆகவில்லை.
இவருக்குத்
தெரிய
வேண்டியது
தெரியவில்லை.
அவர்
தெரிவிக்க
விரும்பாததைத்
தெரிவிக்க
நேரவே
இல்லை.
அன்று
மாலையில்
இருவருமே
ஹெட்
குவார்ட்டர்ஸுக்குத்
திரும்பி
ஆக
வேண்டும்.
மறுநாள்
இருவரது
தூதரகங்களுக்கும்
வாரத்தின்
முதல்
வேலை
நாள்.
அவரவர்
தலைநகரங்களிலிருந்து
'டிப்ளமேடிக்
பேக்'
கனமாக
வந்து
குவிந்திருக்கும்.
லக்சுரி
சூட்டுக்கும்
பீச்
ரெஸ்டாரெண்டுக்கும்
பில்
ஸெட்டில்
பண்ண
வேண்டிய
நேரம்
வந்தது.
இவர்
கிட்டத்தட்ட
ஆறாயிரம்
டாலர்
கொடுத்துக்
கணக்குத்
தீர்த்தார்.
அவர்
இவருக்குச்
சம்பிரதாயமாக
நன்றி
கூறிவிட்டு
அடுத்த 'வீக்
எண்ட்'டிற்குத்
தம்
பங்காக
எழுபது
மைல்
தொலைவிலுள்ள
ஒரு
ஹில்
ஸ்டேஷனுக்கு
அழைப்பு
விடுத்தார்.
இவர்
ஒப்புக்
கொண்டார்.
ஒப்புக்
கொள்ளாமல்
தவிர்க்க
முடியாது.
மரியாதையில்லை.
அடுத்த
வாரம்
நிமிஷமாக
ஓடிவிட்டது. 'வீக்
எண்ட்'டும்
வந்தது. 'எமரால்ட்
ஹில்ஸ்'
ட்ரிப்
ஆரம்பமாயிற்று.
வழக்கம்
போல்
இருவர்
நலனுக்காகவும்
டோஸ்ட்
கூறி
இருவரும்
சியர்ஸ்
பரிமாறிச்
சிரிப்புக்களையும்
பரிமாறிக்
கொண்டு
பேச
ஆரம்பித்தால்
பேச்சு
கார்டனிங்,
பாட்னி,
ப்ளோரா
அண்ட்
பௌனா
ஆகியவற்றைச்
சுற்றி
சுற்றியே
வந்தது.
இருவரும்
அந்த
மலைநகரின்
கதகதப்பான
ஸெண்ட்ரல்
ஹீட்டிங்
உள்ள
அறையில்
மரம்
செடி
கொடிகள்,
பூக்கள்
ஆகியவற்றில்
சிக்கித்
திணறினார்கள்.
இரண்டாவது
ரவுண்ட்
டிரிங்ஸ்
கூட
உருப்படியான 'உளவு'
விவகாரத்தைத்
தரவில்லை.
கிரீக்
மித்தாலஜீ,
அக்ரோ
போலிஸ்
ஆகியவற்றைப்
பற்றியே
பேச்சு
வளர்ந்தது.
மூன்றாவது 'ரவுண்டில்'
'ஸ்காட்ச்'
விஸ்கியின்
விசேஷ
குணம்
ஓட்காவுக்கு
வருமா
இல்லையா
என்பது
பற்றிய
விவாதத்திலேயே
சுகமாகக்
கழிந்துவிட்டது.
ஏழாயிரத்து
முந்நூறு
டாலர்
ஐம்பது
செண்ட்ஸுக்குப்
பில்
வந்தது.
அவர்
முகமலர்ச்சியோடு
கொடுத்தார்.
இவர்
நன்றி
கூறிவிட்டு
அடுத்த 'ஹோஸ்ட்'
ஆகத்
தாம்
இருக்கப்
போவதை
அறிவித்து
இடமும்
குறிப்பிட்டார்.
அவரும்
முக
மலர்ச்சியோடு
ஒப்புக்
கொண்டார். 'அம்பர்லா'
பற்றி
மட்டும்
ஒரு
சிறு
நுனி
கூடப்
புலப்படவில்லை.
இரு
ஏழை
நாடுகளின்
சிக்கனமான
அந்நியச்
செலாவணியில்
இன்னும்
எவ்வளவு
ஆயிரம்
இரகசியத்தை
அறியவும்
அறிய
விடாமல்
காக்கவும்
செலவிட
வேண்டுமோ
தெரியவில்லை.
"விண்டர்
கண்டின்யூஸ்.
ஸம்மர்
எலோன்
கேன்
பிரேக்
த
ஐஸ்"
என்ற 'கோட்
வேர்ட்'
டெலக்ஸைத்
தலைமை
அகத்துக்கு
அனுப்பிவிட்டு
அடுத்த 'வீக்
எண்ட்'டை
எதிர்பார்த்தார்
அவர்.
- நா.பார்த்தசாரதி
|