கடைசியாக ஒரு வழிகாட்டி


     
பல்கலைக் கழக ரிஜிஸ்திரார் ஆபீசில் அவள் தெரிந்து கொண்ட தகவல் கவலையளிக்கப் போதுமானதாக இருந்தது. எதிர்காலமே இருண்டு போகும்போல் இருந்தது. விளக்கடியில் தேங்கி நிற்கும் இருட்டைப் போல ஒவ்வொரு பேராசிரியரிடமும் தேங்கியிருந்த விருப்பு வெறுப்புக்களும் பழிவாங்கும் மனப்பான்மையும், சுயசாதி அபிமானமும் பயங்கரமாயிருந்தன; அநாகரிகமாகவும் இருந்தன.

     
இப்போதைய இந்த வெள்ளத்தில் எதிர் நீச்சலிட்டுக் கரை சேர முடியுமா என்று பல போராட்டங்களை நடத்தியிருந்த அவளுக்கே மலைப்பாயிருந்தது. இத்தனை விருப்பு வெறுப்புக்களுக்கும், சூதுவாதுகளுக்கும், கள்ளம் கபடுகளுக்கும், குரோத விரோத மனப்பான்மைகளுக்கும் நடுவே கல்வி எப்படி வளர முடியும் என்று அவளுக்கே சந்தேகமாகக் கூட இருந்தது. அரசாங்கமே அங்கீகரித்திருந்த வகுப்புவாதப் பிரதிநிதித்துவ முறைகளைத் தவிர, ஒவ்வொரு பேராசிரியரும் தனியே தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப ஒரு பிரதிநிதித்துவ முறையை வைத்துக் கொண்டிருந்தார்.

     "
அந்தப் புரொபஸரா? அவருக்கு இன்ன இன்ன ஆட்களுக்குக் 'கெய்டாக' இருக்கப் பிடிக்காது. ஏதாவது சாக்கு போக்குச் சொல்லித் தட்டிக் கழித்து விடுவார்" என்று ஒருவரைப் பற்றிச் சொன்னார்கள்.

     "
இவரா? ஒவ்வொரு ஸ்டேஜிலும் ரிஸர்ச் ஸ்டூடண்டைப் பணம் கேட்பார். கொடுத்து மீறுவது கடினம்."

     "
அவரா? ஆபத்தான பேர்வழி. பெண்கள் அவரிடம் போவது நல்லதில்லை. ஒரு மாதிரி சபலபுத்திக்காரர்."

     
அவள் ஆராய்ச்சி செய்ய இருந்த துறையில் 'கெய்டு' ஆகப் பல்கலைக் கழகம் அங்கீகரித்திருந்த பேராசிரியர்களின் எண்ணிக்கையே நாலு ஐந்து தான் இருந்தது. அவள் முழுநேர மாணவியாக கற்க விரும்பியதால் பல்கலைக்கழகம் 'ரிஸர்ச் சென்ட்ட'ராக அங்கீகரித்திருக்கக் கூடிய ஒரு கல்வி நிறுவனத்தில் அங்கீகாரம் பெற்ற வழிகாட்டியாகக் கூடிய ஒரு பேராசிரியரைக் 'கெய்டா'கக கொண்டுதான் அந்த ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

     
இந்த நிபந்தனைகளாலும், படிக்கிற நாளில் பல்வேறு மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டு போதுமான அளவு கெட்ட பெயர் எடுத்திருந்ததாலும் அவளுக்கு இடமும், 'கெய்டும்' கிடைப்பது சிரமமாக இருந்தது. சில இடங்களில் உள்ள சிரமங்களைச் சொல்லி மற்றவர்கள் அவளைப் பயமுறுத்தினார்கள். ஆக உயர் கல்வியும் ஆராய்ச்சித் துறைகளும் எல்லாம் பயத்துக்கும் பயமுறுத்தல்களுக்கும் நடுவே இருந்தன.

     
அவளைப் போல் புதுமைப் பெண்ணாக வளர்ந்து விட்ட ஓர் இளம்பெண்ணுக்கு மற்றெல்லாத் தகுதிகளும் இருந்தும் கூட ஆராய்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட ஓர் வழிகாட்டி கிடைக்கவில்லை. இடமும் அகப்படவில்லை.

     "
சுகுணா, நீ கல்லூரி நாட்களில் மறியல், போராட்டம் என்று நிறையச் செய்துவிட்டாய். சில பேராசிரியர்களைக் கூட விரோதித்துக் கொண்டுவிட்டாய். அதனால் தான் இப்போது இந்தச் சிரமம் எல்லாம். அடங்கிய பெண்ணாகக் கல்லூரி நாட்களைக் கழித்திருந்தால் இந்தச் சிரமமெல்லாம் இப்போது உனக்கு ஏற்படாது" என்றாள் சுகுணாவின் தோழி ரத்னா.

     "
தெரியாமல் சொல்கிறாய் ரத்னா! அடங்கிய பெண்ணாக இருந்திருந்தால் நான் படித்து மேலே வந்திருக்கவே முடியாது. போராடுகிறவர்களுக்கு மட்டுமே, இந்த உலகம். பயப்படுகிற உலகத்தில் தான் இன்று நாமும் வாழ்கிறோம்."

     
இதற்கு ரத்னாவால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை. தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும், உதவுகிற குணமும் இல்லாதவர்கள் தாம் கல்வித்துறையில் பெரிய பெரிய பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். நிறையப் பேர் நன்றாகப் படிக்க வேண்டும், பட்டங்கள் பெற வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, நிறையப் பேர் படிக்க வேண்டாம், பட்டங்கள் பெற வேண்டாம் என்று நினைக்கிற மனப்பான்மையே பல ஆசிரியர்களிடம் இருந்தது.

     
புரொபஸர் ரத்னவேல்ராஜ் என்பவரிடம் ஒதுக்கப்பட்டிருந்த 'கோட்டா'வில ஓர் இடம் மீதமிருக்கிறது என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் போனாள் சுகுணா.

 வியர்வை ஆறாக ஓடுகிற கடுமையான கோடைக் காலத்திலும் சூட், கோட், டை உட்பட அணிந்து, பைப் புகைத்துக் கொண்டிருந்தார் அவர். கறுப்புத் துரையாகக் காட்சி அளித்தார்.

     சுகுணாவின் நேரத்தில் ஒரு மணிக்குமேல் எடுத்துக் கொண்டு விட்ட அவர், தாம் ஆக்ஸ்போர்டில் படிக்கப் போனது, வந்தது, எல்லாவற்றையும் விவரித்துவிட்டு, அவளுடைய ஆராய்ச்சி பற்றி யோசித்து முடிவு செய்து பிறகு சொல்வதாக நழுவி விட்டார். நாசுக்காக அவள் என்ன சாதி என்றறியும் முயற்சியிலும் இறங்கினார் அவர்.

     அடுத்து அவள் பார்த்த மனிதர் டாக்டர் தாமஸ். அவர் தம்மிடம் இருந்த ஒரே இடத்தை யாரோ மந்திரி சிபாரிசு செய்த ஒரு மாணவருக்காகப் பதிவு செய்துவிட்டதாகவும், தம்மைத் தேடியலைந்து இனி அவள் நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை என்றும் கூறி முகத்தில் அடித்தது போல் மறுத்துவிட்டார்.

     மூன்றாம் மனிதராக அவள் சந்தித்தவர் இளைஞரான டாக்டர் வீரபத்திரன்.

     "இதோ பார் அம்மா! நான் கூடியவரை பெண்களை ரிஸர்ச் ஸ்டூடண்ட்ஸா எடுத்துக் கொள்ள வேண்டாம்னு கொள்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் கொஞ்ச வயசுக்காரன். திருமணமாகாதவன்; பெண்களுக்குக் 'கெய்டா' இருந்தா வீண் கதை கட்டி விட்டுடுவாங்க. மனம் விட்டுச் சொல்றதுக்காக நீங்க வருத்தப்படக் கூடாது. மன்னிக்க வேணும், ஸாரி" என்று பயந்து ஒதுங்கினார் வீரபத்திரன்.

     அடுத்துப் பார்த்த புரொபஸர் கனி என்பவரும் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிக் கத்தரித்து அனுப்பிவிட்டார்.

     இந்தப் பேராசிரியர்கள் எல்லாரும் நவநாகரிகமாக உடை அணிந்திருந்தார்கள். ஆனால் இவர்கள் மனம் மிகவும் அநாகரிகமாக இருப்பதை அவள் உணர்ந்தாள். இவர்கள் மிக அழகாக ஆங்கிலம் பேசினார்கள். ஆனால் ஆங்கிலேயர்களிடம் உள்ள தாராள மனமும், பெருந்தன்மையும் கிஞ்சித்தும் இவர்களிடம் இல்லை. ஆங்கில நடை பாவனைகளும் குறுகிய இந்திய மனமுமாக இவர்கள் உலவினார்கள்.

     சுகுணாவுக்குப் படிப்பிலேயே வெறுப்பு வந்துவிட்டது. பி.எச்.டி.யே வேண்டாமென்று கூட விரக்தி ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களுக்கு ஆராய்ச்சி செய்ய வாய்ப்பில்லை. விருப்பமும் தகுதியும் அற்றவர்கள் மீது ஆராய்ச்சிகள் திணிக்கப்படுகின்றன. ஆராய்ச்சி துறைகளையும் ஆராய்ச்சிக்கு வழிகாட்ட வேண்டிய பேராசிரியர்களையும், அவர்களின் ஊழல்களையும் பற்றியே ஒரு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டும் போல இருந்தது. ஆனால் எந்தப் பல்கலைக்கழகமும் அப்படி ஓர் ஆராய்ச்சியை ஏற்று அதற்குப் பட்டம் வழங்கத் தயாராயிராது.

     ஏமாற்றமும், விரக்தியோடு கூடிய கசப்பு உணர்ச்சியுமாக அவள் ஆராய்ச்சி செய்யும் எண்ணத்தையே கைவிட்டு விட்டு, ஏதாவது குமாஸ்தா வேலைக்குப் போய்த் தொலைக்கலாம் என்று இருந்த போது, கடைசியாக விசாரிப்பதற்கு இன்னும் ஒரே ஒருவர் மீதமிருப்பது தெரிய வந்தது. பெரிய நம்பிக்கை ஒன்றும் இல்லை. அதையும் பார்த்து விடலாம் என்றுதான் தேடிப் போனாள்.

     "பொன்மலர்க் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்று மறுபடி அங்கேயே யூ.ஸி.ஜீ. ஆராய்ச்சிப் பேராசிரியராக இருந்த ஒரு வயதானவரிடம் யாருமே இன்னும் ரிஜிஸ்தர் செய்து கொள்ளவில்லை. காரணம், அந்தப் பேராசிரியர் 'ஸ்டிரிக்ட் டிஸிப்ளினேரியன்'. நிரம்பக் கர்நாடகமான ஆள். பத்தாம் பசலி ஆசாமி என்று நிறைய மாணவர்கள் போகப் பயப்படுகிறார்கள். 'மெத்தடாலஜி டெஸ்ட்' முடிவதற்குள்ளேயே கசக்கிப் பிழிந்து விடுவாராம்" என்று தோழி ரத்னா வந்து சொன்னதிலிருந்துதான் அந்தத் தகவலே சுகுணாவுக்குத் தெரிந்தது.

     "அந்த மனிதரின் பேர் என்னடி ரத்னா?" என்று சுகுணா கேட்டதற்கு, "பேர் நினைவு இல்லை. ஏதோ பழங்காலப் பேர், மறந்து போச்சு. கடைசியிலே நாயுடூன்னு முடியும். ஆனால் கண்டுபிடிக்கிறது ரொம்பச் சுலபம். அந்த டிபார்ட்மெண்ட்டிலே அவர் ஒருத்தர்தான் யூ.ஸி.ஜீ. புரொபஸராம். எல்லாரும் டாக்டர் நாயுடூன்னுதான் கூப்பிடுவாங்க."

  புறநகரில் அவர் குடியிருக்கும் வீட்டு விலாசத்தையும் ரத்னாவே குறித்துக் கொடுத்திருந்தாள்.

     கடைசியாக முயன்று பார்த்து விடலாம் என்று சுகுணா டாக்டர் நாயுடுவைத் தேடிப் போனாள். அமைந்தகரைக்கும் அப்பால் கோயம்பேடு போகிற வழியில் ஒரு தென்னந்தோப்பிற்கு நடுவில் இருந்தது. அந்தப் பழங்கால வீடு. வீடே கோயில்போல் இருந்தது. முகப்புக் கதவின் மர நிலைப்படியில் நாமமும் இருபுறமும் சங்கு சக்கரமும் இருந்தன. டாக்டர் சந்தான கிருஷ்ணநாயுடு எம்.., பி.எச்.டி. என்று சிறிய பிளாஸ்டிக் போர்டும் இருந்தது.

     முன் திண்ணையில் பட்டையாக நாமம் தீட்டிக் கொண்டு காதில் சங்கு சக்கரக் கடுக்கன் அணிந்த கிழவர் ஒருவர் கிழிந்து போன காஞ்சீபுரம் பழுக்காக்கரை வேஷ்டி ஒன்றை ஊசி நூலில் கவனமாகத் தைத்துக் கொண்டிருந்தார்.

     பக்கத்தில் தடிமனாக நாலாயிர திவ்யப் பிரபந்தம் என அட்டையில் அச்சிட்ட பெரிய புத்தகம் ஒன்று கிடந்தது.

     இதைப் பார்த்ததும், கல்லூரி நாட்களில் நாமம் விபூதிப் பட்டை அணிந்த பேராசிரியர்களைத் தானும் சக மாணவ மாணவிகளும் விதவிதமாகக் கிண்டல் செய்திருப்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் நாமம் போட்ட ஹிஸ்டரி புரொபஸர் ஒருவர் கலந்து கொண்ட வரலாற்றுக் கழகத் தொடக்க விழாவில் அவளும் சக மாணவர்களில் ரௌடிகளான சிலரும் அழுகிய தக்காளி, முட்டைகளை எறிந்து கலாட்டா செய்திருந்தனர். பஞ்சாங்கக்காரர்கள் போலவும் புரோகிதர்கள் போலவும் தோற்றமளித்த சில பழங்கால ஆசிரியர்களை வகுப்புக்களில் கிண்டல் செய்த சம்பவங்களும், "புரோகிதரா, புரொபஸரா?" என்று சுவர்களில் எழுதி வைத்ததும் நினைவுக்கு வந்தன.

     "யாரும்மா? என்ன வேணும்?" பழைய வேஷ்டி தைத்துக் கொண்டிருந்த நாமக்காரக் கிழவர் அவளை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார்.

     சுகுணா சிந்தனை கலைந்து இந்த உலகிற்கு வந்தாள்.

     "புரொபஸர் சந்தானகிருஷ்ண நாயுடு அவர்களைப் பார்க்கவேணும்" என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

     "திண்ணையில் உட்கார் அம்மா."

     அந்தக் கிழவருக்கு ஆங்கிலத்தில் பேச வராததால் தான் தமது ஆங்கில வினாவுக்கு தமிழில் பதில் சொல்கிறார் என அவளாக நினைத்துக் கொண்டாள். கிழவர் புரொபஸரின் அண்ணாவாகவோ, தந்தையாகவோ இருக்க வேண்டும் என்பது அவள் அநுமானம்.

     நாமக்காரக் கிழவர் உள்ளே எழுந்து போனார். அவள் திண்ணையில் உட்கார்ந்தாள்.

     உபதேச ரத்னமாலை, நித்யாநு சந்தானம், திவ்யார்த்த தீபிகை என்று சமய நூல்களாகத் திண்ணையில் அடுக்கியிருந்தன. ஒரு வர்த்தகத் துறைப் படிப்பின் பேராசிரியர் வீட்டு முகப்பில் ஒரே சமய சம்பந்தமான புத்தகங்களாக இருந்ததைக் கண்டு அவளுக்கு என்னவோ போல் இருந்தது. இதற்கு முன்னால் அவள் தேடிச் சென்றிருந்த டாக்டர் ரத்னவேல் ராஜ், தாமஸ், கனி ஆகிய பேராசிரியர்கள் வீட்டில் புதியவையாக வந்துள்ள பொருளாதார நூல்கள் போன்றவற்றைத் தான் கண்டிருந்தாள். இங்கோ எல்லாமே கோவிந்த நாம சங்கீர்த்தனமாகவே இருந்தன. வேஷ்டி தைத்துக் கொண்டிருந்த கிழவரின் புத்தகங்களாக இருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் அவள்.

     பத்து நிமிஷங்கள் ஆயின.

     "என்ன காரியமாக வந்தாய் அம்மா?"

     குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வேஷ்டி தைத்துக் கொண்டிருந்த அதே கிழவர் தாம் இப்போது ஒரு கதர் அரைக் கைப் பனியனோடு மீண்டும் எதிரே வந்து உட்கார்ந்திருந்தார்.

     "புரொபஸரைப் பார்க்க முடியுமா?" என்று ஆங்கிலத்திலேயே மீண்டும் கேட்டாள்.

 "நான் தான் அம்மா. வந்த காரியத்தைச் சொல்லு." கிழவர் சிரித்துக் கொண்டே இதைக் கூறினார்.

     தான் ஆங்கிலத்திலேயே பேச அவர் தமிழிலேயே பதில் சொல்வது அவளுக்கு உறைத்தது. மறுபடி ஆங்கிலத்தில் தொடங்கி உதட்டைக் கடித்துக் கொண்டு நடுவே 'ஸாரி ஸார்' போட்டு ஆங்கிலத்தை முறித்து மீண்டும் தமிழில் பேச முயன்றாள் அவள்.

     "என் பெயர் சுகுணா. முதல் வகுப்பில் டிஸ்டிங்ஷனோட போஸ்ட் கிராஜுவேட். 'ரிஸர்ச்'சுக்கு ஒரு 'கெய்டு'க்காக அலையறேன். நீங்க தான் பெரிய மனசு பண்ணணும்."

     "எந்த வருஷம் எம்.. முடிச்சே? எந்தக் காலேஜ்?"

     வருஷத்தையும், படித்த காலேஜின் பெயரையும் கூறினாள் அவள்.

     "வம்பு தும்புக்குப் பெயர் போன காலேஜ் ஆச்சே அது?"

     அவள் இதற்குப் பதில் சொல்லவில்லை.

     "அந்தக் காலேஜிலே பசங்க படிக்கிறதை விடப் போராடறத்துக்கும், ஊர்வலம் போறதுக்குமே வருஷம் பூராச் செலவழிஞ்சு போயிடுமே!"

     இதற்கும் அவள் பதிலே கூறவில்லை.

     "உங்களுக்கு எல்லாம் யாரு புரொபஸரா இருந்தா?"

     "கண்ணபிரான் ஸார் தான் புரொபஸர்."

     "அவன் நல்ல படிப்பாளி. பாவம்! அந்தக் காலேஜிலே போய் மாட்டிக் கொண்டான்."

     இதற்கும் அவள் பதில் எதுவும் கூறவில்லை.

     "என்கிட்டக் கட்டுப்பாடு பார்க்கிற குணம் அதிகம். நீயோ 'கட்டுப்பாடு கிலோ என்ன விலை' என்று கேட்கிற காலேஜிலே படிச்சு வந்திருக்கே. ஒரு வருஷத்திலே 'மெத்தடாலஜி' முடிக்கணும். அப்புறம் நிறைய 'லைப்ரரி ரெஃபரன்ஸுக்கு அலையணும். சிரமப்பட்டு உழைச்சுப் படிக்கணும். இதுக்கெல்லாம் சம்மதமானால் சொல்லு. இப்பவே உனக்குக் 'கெய்டா' இருக்கச் சம்மதிச்சு யூனிவர்ஸிடி ஃபாரத்துலே கையெழுத்துப் போட்டுத் தரேன்."

     "நீங்க சொல்றபடி கேக்கறேன் ஸார்."

     "ரிஜிஸ்டிரேஷன் ஃபாரம் இருக்கா? கொண்டு வ்ந்திருக்கிறாயா?"

     அவள் அடக்க ஒடுக்கத்தோடு கைப்பையைத் திறந்து ஃபாரத்தைத் தேடி எடுத்து அவரிடம் அளித்தாள்.

     அவர், 'ஸ்ரீமதே ராமாநுஜாய நம:' என்று கூறிக் கண்களை மூடி ஒரு நிமிஷம் தியானிப்பது போல் செய்துவிட்டு, அவளுடைய பி.எச்.டி. ரிஜிஸ்திரேஷன் ஃபாரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அவள் சாதி சமய கோத்திர விசாரணையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் இறங்கவில்லை.

     'மூன்றாவது உலகநாடுகளின் வளமும் பொருளாதார வளர்ச்சியும்' என்று அவள் கொடுத்திருந்த ஆராய்ச்சித் தலைப்புத் தொடர்பாக நடுவே அவர் இரண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் பேசியபோது அவரது அந்த ஆங்கில உச்சரிப்பும் கம்பீரமும் அவளை மெய்சிலிர்க்கச் செய்தன. 'இவ்வளவு பிரமாதமாக ஆங்கிலம் பேசக்கூடிய இவரா இதுவரை தமிழிலேயே பேசினார்?' என்றெண்ணி வியந்தாள் சுகுணா.


     "ரிஸோர்ஸஸ் அண்ட் டெவலப் மெண்ட் ஆஃப் தேர்ட்வோர்ல்ட் கண்ட்ரீஸ் என்கிற தலைப்பை இன்னும் சுருங்கிய எல்லைக்குக் கொண்டு வர வேண்டும்" என்று அவரே யோசனையும் கூறினார்.

     "நீ நாளைக்குக் காலையில் காலேஜுக்கு வா. பிரின்ஸீபாலிடமும் ஒரு கையெழுத்து வாங்கிக்கணும். அப்புறம் ஃபாரத்தை யூனிவர்ஸிடிக்கு அனுப்பணும். அதுக்கு முன்னாலே தலைப்பைப்பத்தி நாம் விவாதிச்சு முடிவு பண்ணிக்கலாம்."

     "சரி ஸார். நாளைக்கு வரேன்." அவரை வணங்கிவிட்டு மீண்டும் நன்றி கூறிய பின், புறப்பட்டாள் சுகுணா.

     கம்பீரமான ஆங்கிலேயரின் உடையில் தமிழ்நாட்டு மனத்தோடு கூடிய குறுகிய உள்ளம் படைத்த பல பேராசிரியர்களையே நேற்று வரை அவள் சந்தித்து ஏமாந்து போயிருந்தாள். அவர்கள் தாராளமாக ஆங்கிலம் பேசிவிட்டுக் காரியத்தில் மட்டும் தமிழர்களாக நடந்து கொண்டார்கள். நாயுடுவோ தமிழில்தான் பேசினார். ஆனால் செயலில் ஆங்கிலேயராக நடந்து கொண்டார்.

     இன்று கடைசியாகத் தமிழ்நாட்டு உடையில், ஆங்கிலேயர்களின் தாராள மனமுள்ள ஒரு பேராசிரியரை அவள் சந்தித்து விட்டாள். தனக்குச் சுலபமாக ஒரு வழிகாட்டி - கெய்டு - கிடைத்துவிட்டார் என்பதை நம்புவதே கடினமாக இருந்தது அவளுக்கு.

     நவநாகரிகமான உடைக்குள்ளே நுழைந்திருக்கும் அநாகரிகமான பல பத்தாம் பசலி மனிதர்களை விட, அநாகரிகமான பத்தாம் பசலி உடையில் ஒளிந்திருக்கும் நவநாகரிகமான மனிதர் ஒருவரை எதிர்பாராத வகையில் வழிகாட்டியாக அடைந்ததைத் தன் பாக்கியம் என்றே கருதினாள் சுகுணா.

 

- நா.பார்த்தசாரதி