பாண்டிமாதேவி - மூன்றாம் பாகம்

3.1. நாளைக்கு நாண்மங்கலம்

கடலின் அடி மூலையும், தொடுவானமும் ஒன்று படுகிற இடத்தில் அளவும், பரப்புமற்ற பொன்னிறத்துப் பேரொளிப் பெருமலர் ஒன்று பல்லாயிரம் சோதிக் கதிர்களை நீட்டிக் கொண்டு மேலெழுந்தது! அந்த ஒளியின் எழுச்சியில் கடல் நீர் மாணிக்கக் குழம்பென மாறிச் செம்மை ஒளிர மின்னியது. அலைகள் கரையில் மோதும் ஒலியும், ஊழியர்கள் கப்பலை இழுத்து நங்கூரம் பாய்ச்சும் போது பாடும் ஒருவகைப் பாட்டின் கூட்டமான குரல்களும் கேட்டன. வைகறைக் காலத்தின் கீதமென்காற்று உடலைத் தழுவித் தண்மை பூசிச் சென்றது. கடற் பறவைகளின் குரல்களும் கேட்டன.

குமாரபாண்டியன் இராசசிம்மன் உறக்கம் கலைந்து புரண்டு படுத்தான். கண் இமைகள் கனத்துப் போய் விழிகளுக்குள் எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

"இளவரசே! எழுந்திருங்கள்; கரை வந்து விட்டது" என்று மெல்லத் தட்டி எழுப்பினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் கண்களைத் திறந்தான்.

அடடா! என்ன அற்புதமான காட்சி அவன் கண்களுக்கு முன் விரிகிறது! நீலக்கடல் முடியுமிடத்தில் தரைமேல் ஒரு பசுமைக் கடல் தென்படுகிறதே! கரைக்கு மேல் கண்பார்வை எட்டிப் பிடிக்கிற தொலைவு வரை அடர்த்தியான பசுமைக்காடு தெரிகிறது. கரைமேல் பிரயாணத்துக்கு ஏற்ற முறையில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு உயர்ந்த சாதிக் குதிரைகளோடு நாலைந்து வீரர்கள் நின்று கொண்டிருப்பதையும் இராசசிம்மன் பார்த்தான்.

"சக்கசேனாபதி! காசிப மன்னர் வரவில்லை போலிருக்கிறது! யாரோ வீரர்கள் தான் குதிரையோடு வந்து காத்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி இவ்வளவு கணக்காக நாம் இன்று வருவோமென்று தெரிந்து கொண்டார்கள்? நாம் இந்தத் துறையில் இறங்குவோமென்று இவர்களுக்கு எப்படித் தெரிந்தது!" என்று கேட்டான் குமாரபாண்டியன். 

"நான் இங்கிருந்து புறப்படும்போதே இரண்டு மூன்று நாட்களைக் குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒரு நாள் வருவதாகச் சொல்லிவிட்டுத்தான் இடையாற்று மங்கலத்துக்கு உங்களைச் சந்திக்க வந்தேன். எந்த இடத்தில் இறங்குவதென்று அப்போது நான் உறுதி செய்யாததால் மாதோட்டம், புத்தளம் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் குதிரைகளும் ஆட்களும் காத்திருக்குமாறு ஏற்பாடு செய்து விட்டு வந்தேன். காசிப மன்னர் இன்றைக்கு அனுராதபுரத்தில் இருப்பார். நாம் அனுராதபுரத்தில் அவரைச் சந்திக்கலாம். அடடா! உங்களிடம் நான் முன்பே சொல்ல மறந்து விட்டேனே! நாளைக்குக் காசிப மன்னரின் பிறந்த நாள். வெள்ளணி விழாவாகிய நாண்மங்கல திருநாளைக் கொண்டாட அனுராதபுரத்தில் பிரமாதமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும். தம்முடைய வெள்ளணி விழாவன்று பௌத்த பிட்சுக்களையெல்லாம் அவர்கள் இருப்பிடம் சென்று வணங்கி ஆசிபெற வேண்டுமென்பதால் தான் கோநகரமாகிய பொலன்னறுவையில் கொண்டாட வேண்டிய இவ்விழாவை அனுராதபுரத்துக்கு வந்து கொண்டாடுகிறார் அரசர்."

"சக்கசேனாபதி! அந்த ஒரு நாளிலாவது உள்ளும் புறமும் வெள்ளையாகத் தூய்மையோடு இருக்க எண்ணிப் பிறந்த நாளை வெள்ளணி விழாவாக அமைத்திருக்கும் நம் முன்னோர் மரபு எவ்வளவு அற்புதமானது பார்த்தீர்களா? 'வாழ்நாளெல்லாம், பொய்க்காக வாழ்ந்தாலும் அந்த ஒரு நாளாவது உண்மைக்காக வாழு' என்று அறிவுறுத்துவது போலல்லவா அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்" என்று சிரித்துக் கொண்டே கூறினான் இராசசிம்மன்.

"இளவரசே! தென்பாண்டி நாட்டுக்குரியவர் என்பதை நீங்கள் தமிழைப் பற்றிப் பேசும் போதெல்லாம் நிரூபித்து விடுகிறீர்கள். நேற்றுக் கப்பல் மேல் தளத்தில் நின்று கொண்டு பாடிய கவிதையோ உங்கள் நாவன்மையையும் எனக்குப் புரியவைத்துவிட்டது. உங்கள் கவித் திறனைப் பற்றி இதுவரை காசிப மன்னருக்குத் தெரியாது. தெரிந்தால் மிகவும் பெருமைப்படுவார்."

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கப்பல் முழுமையாக நங்கூரம் பாய்ச்சப்பட்டுக் கரையை அணுகியிருந்தது.

"இங்கிருந்து அனுராதபுரம் வரையில் நாம் குதிரையில்தான் போக வேண்டும். கடற்காய்ச்சலோடு உங்களால் குதிரைப் பயணம் செய்ய முடியுமா என்று தான் தயங்குகிறேன்" என்று கூறி, அருகில் நெருங்கிக் குமாரபாண்டியனின் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்தார், சக்கசேனாபதி.

"அது ஒன்றும் எனக்கு அவ்வளவு சிரமமான காரியமில்லை. பசுமையும், வனப்பும், குளிர்ச்சியும் நிறைந்த இந்தக் காட்டு வழியில் பயணம் செய்யும் போது கடற்காய்ச்சலையே மறந்து விடுவேன் நான். உங்கள் நாட்டின் வனங்களில் வழி நெடுகப் பௌத்த ஆலயங்களும், பிட்சுக்களின் சாதுசங்கங்களும் நிறைய இருக்குமே. அன்புள்ள இடங்களும், அன்பு நிறைந்த மனிதர்களும் இருக்கும் போது துன்பங்களை யாராவது பொருட்படுத்துவார்களா?"

"அப்படியானால் இறங்கி வாருங்கள். அதோ குதிரைகளை வைத்துக் கொண்டு நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். நாம் போகலாம்."

"நாம் போவது சரி, கப்பல் அறைக்குள் இருக்கும் பாண்டி நாட்டின் அரசுரிமைப் பொருள்களை முதலில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்பதை மறந்து விட்டீர்களா?"

"அதைப் பற்றித் தங்களுக்கு கவலையே வேண்டாம் இளவரசே! கப்பல் ஊழியர்களும், நம்மை வரவேற்க வந்திருக்கும் ஈழ நாட்டு வீரர்களும் அவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று அரண்மனையில் சேர்த்து விடுவார்கள். அதற்கு நான் சொல்லி ஏற்பாடு செய்து விடுகிறேன்" என்று சக்கசேனாபதி உறுதிமொழி கூறியதும் தான் குமாரபாண்டியனுக்கு மனச் சமாதானம் ஏற்பட்டது.

கப்பலிலிருந்து இறங்கி ஈழ நாட்டு மண்ணில் கால் வைக்கு முன் கடைசியாகத் திரும்பிப் பார்த்தான் இராசசிம்மன். கடந்து வந்த கடல் ஆர்ப்பரவம் செய்து கொண்டிருந்தது. திடீரென்று அந்தப் பெரிய கடல் முழுவதும் தன் தாய் வடித்த கண்ணீரோ என அவன் மனத்தில் ஒரு பிரமை எழுந்தது. துயரத்தை மனத்துக்குள்ளேயே அடக்கிக் கொண்டு மேல் தளத்திலிருந்து கீழே சென்று சக்கசேனாபதியுடன் கரையில் இறங்கினான்.

"சக்கசேனாபதி! இந்த இடத்தில் கடல்துறை மிக அழகாக இருக்கிறதே? இதற்கு முன் சில முறை உங்கள் நாட்டுக்கு வந்திருந்தும் இதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படவே இல்லையே!" என்று அந்தப் பகுதியின் அழகைப் பார்த்து வியந்து வினவினான் இராசசிம்மன்.

"இதுவரை பார்க்க வாய்ப்பில்லாமல் போனதால் தானே இப்போது உங்களால் இதைப் பார்த்து வியக்க முடிகிறது. இளவரசே! இந்தப் புத்தளம் துறைக்குப் பழமையான பெயர் 'தமனன் தோட்டம்' என்பதாகும். உங்கள் நாட்டில் கடற்கரைத் துறைகளெல்லாம் பாலைவனம் போல் மணல் வெளிகளாகவோ, வறண்ட பனைமரக் காடுகளாகவோ இருக்கின்றன. ஆனால் இங்கே கடற்கரையிலும் பசுமை வளம் இருக்கும் துறைகள் உண்டு. அதனால் தான் அவற்றை மா(ந்)தோட்டம், தமனன் தோட்டம் என்றெல்லாம் வளமாகப் பெயர் சூட்டி அழகாக அழைக்கின்றோம் நாங்கள்."

"ஏதேது? உங்கள் நாட்டு மண்ணுக்கு வந்து இறங்கியவுடன் தற்பெருமை பேசும் பண்பு உங்களைப் பற்றிக் கொண்டுவிட்டதே! உங்கள் இலங்கையை நீங்களே புகழத் தொடங்கிவிட்டீர்கள்!" என்று சக்கசேனாபதியை வம்புக்கு இழுத்தான் இராசசிம்மன். ஆனால் அவரோ பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார். "இளவரசே! செம்பவழத் தீவில் ஏதோ ஒரு சோழ நாட்டுக் கப்பலைப் பார்த்ததாக நீங்கள் கூறினீர்கள் அல்லவா? அந்தக் கப்பலைப் பற்றி எழும் சில சந்தேகங்கள் இன்னும் என் மனத்தில் நீங்காமல் இருந்து கொண்டே பயமுறுத்துகின்றன. எந்த வகையிலாவது சூழ்ச்சி செய்து உங்களைத் துன்புறுத்துவதற்கென்று சோழ நாட்டு ஆட்கள் அந்தக் கப்பலில் மறைவாகப் பின் தொடர்ந்து வருகிறார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, குமாரபாண்டியனின் முகத்தை உற்றுப் பார்த்தார் சக்கசேனாபதி. அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் இராசசிம்மன் திகைத்தான். அவன் முகத்தில் மருட்சியும், அச்சமும் தென்பட்டன. சக்கசேனாபதியால் அவ்வளவு சரியாக எப்படி அனுமானிக்க முடிந்தது என்றே அவன் வியந்தான். தான் தற்செயலாக அந்தச் சோழ நாட்டுக் கப்பலைப் பற்றிக் கூறியதை அவர் ஏன் இன்னும் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டு கவலைப்படுகிறார் என்பது தான் அவனுக்கு திகைப்பையளித்தது.

"சக்கசேனாபதி! அந்தக் கப்பல் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? நமக்கு இனிமேல் அதைப் பற்றிக் கவலை இல்லை. நாம் தான் வரவேண்டிய இடத்துக்குப் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோமே!" என்று அவரிடம் பதிலுக்குக் கேட்டான் அவன்.

"அப்படியல்ல, இளவரசே! எப்போது நம் பகைவர்களின் கப்பல் நம்முடைய வழிகளில் தென்பட்டு விட்டதோ, அப்போதே அது கடைசிவரை நம்மைப் பின் தொடரலாம் என்று நாம் சந்தேகப்பட வேண்டியதுதான். அந்த மாதிரிக் கப்பல்கள் எவையேனும் வந்தால் தடுத்து நிறுத்தி, அதிலிருக்கும் ஆட்களைச் சிறைபிடிக்குமாறு ஏற்பாடு செய்து விடுவதற்காகத்தான் உங்களைக் கேட்கிறேன். அந்தத் தடுப்பு ஏற்பாட்டை இப்போதே இங்கேயே செய்து விடுவேன் நான்."

"அந்த மாதிரி ஓர் ஏற்பாடு நீங்கள் செய்ய முடியுமானால் நல்லதுதான்" என்று அதற்கு ஒப்புக் கொண்டான் குமார பாண்டியன். உடனே சக்கசேனாபதி அங்கிருந்த கடல்துறை ஆட்களிடம், "நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த இடத்திலோ அல்லது மாதோட்டத்திலோ இறங்குவதற்காக இன்றிலிருந்து இன்னும் சில நாட்களுக்குள் தமிழ்நாட்டுக் கப்பல்கள் எவையேனும் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு எங்களுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். இந்தக் கட்டளை அவசரமும், அவசியமும் வாய்ந்தது. நினைவிருக்கட்டும்" என்று கண்டிப்பான குரலில் உத்தரவிட்டார். பின்பு குதிரைகளோடு காத்திருந்த ஈழ நாட்டு வீரர்களிடம் "நீங்களும் கப்பல் ஊழியர்களுமாகச் சேர்ந்து கப்பல் அறையில் இருக்கும் பாண்டிய நாட்டு அரசுரிமைப் பொருள்களைத் தக்க பாதுகாப்புடன் அரண்மனையில் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார். குமார பாண்டியனின் வரவை அனுராதபுரத்திலிருக்கும் காசிப மன்னருக்கு முன் சென்று அறிவிப்பதற்காக அவர்கள் இருவரும் புறப்படுவதற்கு முன்பே ஒரு வாலிப வீரன் குதிரையிற் பறந்தான்.

அங்கே பசுமையான தென்னை மரங்களுக்கு நடுவே மிகப் பெரிய தேங்காய் மூடியொன்றைக் குடுமியோடு தலைகீழாகக் கவிழ்த்தது போல் வெண்ணிறத்துடன் கூடிய பௌத்த விஹாரக் கட்டடம் ஒன்று தெரிந்தது. குதிரையில் ஏறிக்கொள்வதற்கு முன்னால் அந்த ஆலயத்துக்குப் போய்க் குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் புத்தர் பெருமானை வணங்கிவிட்டு வந்தார்கள்.

மொட்டைத் தலையும் ஒளி நிறைந்த மஞ்சள் நிற ஆடையுமாகக் காட்சியளித்த புத்தபிட்சு ஒருவர் அந்த ஆலயத்தில் இருந்தார். அவர்களை அன்புடன் வரவேற்று, "உங்களுடைய பிரயாணம் சுகம் நிறைந்ததாக இருக்கட்டும்" என்று புன்னகையோடு வாழ்த்துக் கூறி அனுப்பினார் அவர்.

குதிரைகள் புறப்பட்டன. வெயில் படாத காட்டில் விரைவாகச் செல்லவல்ல சாதிப் புரவிகளில் பயணம் செய்வது காற்றில் பறப்பது போல் இன்பமாக இருந்தது. நண்பகல் நேரத்துக்கு ஒரு காட்டுச் சிற்றூரில் இருந்த பிட்சுக்களின் சங்கம் ஒன்றில் தங்கி, நாட் கடன்களையும் உணவையும் முடித்துக் கொண்டனர். பழகிய மனிதருக்கே வழிகள் மறந்து போகக்கூடிய காடு அது! கொஞ்சம் வழி தவறி, இடம் தவறி நடுக்காட்டில் போய் மாட்டிக் கொண்டால் கூட்டம் கூட்டமாகத் திரியும் யானை மந்தைகளிடம் சிக்கித் திண்டாட வேண்டியதுதான்.

"இளவரசே! இருட்டுகிற சமயத்தில் எந்த ஊர் வருகிறதோ அங்கே தங்கிவிட்டு, மறுபடியும் காலையில் பயணத்தைத் தொடங்கி அரசருடைய வெள்ளணி விழாவுக்கு அனுராதபுரம் போய்விடுவோம். இந்தக் காடுகளில் இரவுப் பயணம் ஆபத்தானது!" என்றார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "கண்ட இடங்களில் தங்கித் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு கிடப்பதை விட இரவிலும் பயணம் செய்தால் சற்று முன்பாகவே போய் அரசருடைய நாண்மங்கலத்தில் கலந்து கொண்டு வெள்ளணிக் கோலத்தில் அவரைக் கண்டு மகிழலாம்" என்றான் அவன்.

"இரவில் தங்கி விடிவதற்கு ஐந்து நாழிகை இருக்கும் போது புறப்பட்டாலும் விழாவுக்கு நாம் போய்விட முடியும். இந்தப் பக்கத்துக் காடுகளின் நிலவரத்தை நன்கு தெரிந்து கொண்டு நான் சொல்கிறேன். என் வார்த்தையைத் தட்டாதீர்கள். இரவுப் பயணத்துக்கு இந்தக் காடு ஏற்றதில்லை" என்று மீண்டும் இராசசிம்மனைக் கெஞ்சினார் அவர். அவனோ 'இரவே போக வேண்டும்' என்று பிடிவாதமாக ஒற்றைக் காலில் நின்றான்.

அப்போது மாலை மயங்குகிற நேரம் ஆகியிருந்தது. ஆதிபுரம் என்ற ஊரைக் கடந்து வடகிழக்காக அனுராதபுரத்துக்குச் செல்லும் காட்டுப் பாதையில் அவர்களுடைய குதிரைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த பகுதி மிக மிக அடர்ந்த பயங்கரமான வனப் பகுதி. நாகராகப் பெருவனம் என்று வழங்கும் அந்த இருண்ட காட்டில் அவர்கள் புகுந்த போது கதிரவன் மறைந்தான். ஏற்கெனவே இருந்த இருள் பெருகிக் கனத்தது.

குமாரபாண்டியனின் பிடிவாதத்தை எண்ணி மனம் வருந்திய சக்கசேனாபதி, 'கருணை நிறைந்த எங்கள் புத்தர் பெருமானே! எங்களுக்கு ஒரு துன்பமும் நேராமல் காப்பாற்றுங்கள்' என்று மனத்தில் தியானம் செய்தவாறே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தார். காட்டில் அங்கங்கே பிரும்மாண்டமான புத்தர் சிலைகளையும், பௌத்த விஹாரங்களையும் கண்ட போதெல்லாம் திரும்பத் திரும்ப இந்த ஒரே தியானம் தான் ஈழ நாட்டுப் படைத்தலைவரின் மனத்தில் உண்டாயிற்று.

காட்டில் ஓரிடத்தில் பௌத்த விஹாரத்தில் விளக்கேற்றிக் கொண்டிருந்த புத்த பிட்சு ஒருவர் விளக்கோடு ஓடி வந்து அவர்கள் குதிரைகளை வழிமறித்து நிறுத்தினார். விளக்கோடு பதறிப் போய் ஓடி வந்த அவரைக் கண்டு என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவர்களும் குதிரைகளை நிறுத்தினார்கள். "பெரியவரே! நான் சொல்வதைக் கேளுங்கள். இந்த இருட்டில் பயணம் வேண்டாம். என்னோடு நீங்களும் இந்த இளைஞரும் இந்தப் பௌத்த விஹாரத்தில் தங்கிவிட்டு அதிகாலையில் போகலாம். நான் கூட அரசரின் வெள்ளணி விழாவைக் காண்பதற்காகக் காலையில் அனுராதபுரம் புறப்படலாமென்றிருக்கிறேன்" என்று சக்கசேனாபதியை நோக்கிச் சொன்னார் புத்த பிட்சு. சக்கசேனாபதி இராசசிம்மனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

"அடிகளே! உங்களுடைய அன்புக்கு நன்றி. பயத்தை நாங்கள் மறந்துவிட்டோம். எங்களுக்கு அவசரமாகப் போக வேண்டும். புதிய இடத்தில் இந்தக் காட்டுக் குளிரில் எங்களுக்கு உறக்கம் வரப் போவதில்லை. ஆகவே எங்களுக்கு விடை கொடுங்கள்" என்று இராசசிம்மனே முகத்திலடித்தாற் போல் மறுத்துப் பதில் சொல்லிவிட்டான்.

"உங்கள் விருப்பம் அதுவானால் சரி! மறுப்பதற்கு நான் யார்?" என்று வழியை விட்டு விலகி நின்று கொண்டார் புத்த பிட்சு. குதிரைகள் மீண்டும் ஓடின.

"இளவரசே! அந்தப் புத்த பிட்சு வலுவில் ஓடிவந்து கூறியதைக் கேட்டீர்களா? இந்தக் காடுகளைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள் யாரும் நம்முடைய பிரயாணத்தை அநுமதிக்க மாட்டார்கள்" என்றார் சக்கசேனாபதி. அதற்குக் குமாரபாண்டியன் மறுமொழி கூறவில்லை. அந்தச் சமயத்தில் தொலைவில் எங்கோ கூட்டமாக யானைகள் பிளிறும் ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது. மேலே தலையில் இடிக்கிறார் போல மரக்கிளைகள் பின்னிப் பிணைந்திருந்த ஒரு பகுதியில் தேர் வடம் போலப் பெரிய மலைப் பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்து அதைக் கண்டு கொண்டார் சக்கசேனாபதி. இராசசிம்மன் அதன் மேலே இடித்துக் கொள்கிறாற் போலக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போவதற்கு இருந்தான். நல்லவேளையாக சக்கசேனாபதி அவனைத் தடுத்து நிறுத்திக் குதிரையை விலக்கிச் செலுத்திக் கொண்டு போகச் செய்தார். வனத்தின் அந்த அடர்ந்த பகுதிக்குள் போகப் போகத்தான் தன்னுடைய துணிவு அசட்டுத்தனமானதென்று இராசசிம்மனுக்குப் புரிந்தது. அப்போதே சக்கசேனாபதி சொன்னதைக் கேட்டிருக்கலாமென்பதை அவன் உணரலானான். இரண்டாவதாக அந்தப் புத்த பிட்சு வந்து தடுத்த போதாவது கேட்டிருக்கலாமே என்று தன்னையே நொந்து கொள்ளும் நிலை அவனுக்கு ஏற்பட்டது. பயங்கரமான காட்டு மிருகங்களின் கூக்குரல்களெல்லாம் பாதைக்கு மிக அருகில் கேட்கத் தொடங்கின. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே குதிரைகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். இருள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்கவிடாமல் செய்தது. 'இளங்கன்று பயமறியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது. அப்போதே கண்டித்துச் சொல்லித் தடுக்காமல் உடன் புறப்பட்டது என் தவறு' என்று சக்கசேனாபதி சிறிது சினத்தோடு நினைத்தார். அவருடைய கண்களின் பார்வை கூர்மையாகி, எதிரே வழியையே உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தன.

'இன்னும் சிறிது தொலைவு சென்றால் தென் கிழக்கே விசிதபுரத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வரும் சாலையொன்று காட்டுச் சாலையோடு ஒன்று கூடும். அந்த இடத்துக்குப் போனதும் இளவரசரைக் கடுமையாகக் கண்டித்து விசிதபுரத்துக்குக் குறுக்கு வழியாக அழைத்துப் போய்விட வேண்டும்' என்று மனத்துக்குள் திட்டமிட்டிருந்தார் சக்கசேனாபதி. விசிதபுரத்தில் ஆயிரம் பிட்சுக்களை உறுப்பினர்களாகக் கொண்ட மகாபௌத்த சங்கம் ஒன்று உண்டு. அந்தச் சங்கத்தின் தலைவர் தத்துவசேன அடிகளைச் சக்கசேனாபதிக்கு நன்கு தெரியும். அங்கே தங்கிவிட்டு விடிந்ததும் அனுராதபுரப் பயணத்தைத் தொடரலாமென்பது அவர் திட்டமாயிருந்தது. ஆனால் அந்தத் திட்டப்படி எதுவும் நடைபெறவில்லை. முற்றிலும் வேறான பயங்கர நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

காட்டுச் சாலையும் விசிதபுரத்துச் சாலையும் சந்திக்கிற இடம் வந்த போது இடிமுழக்கம் போல் யானைகள் பிளிறும் ஒலிகளும், மரக்கிளைகள் முறிகிற சத்தமும் காடே கிடுகிடுக்கும்படி எழுந்தன.

"இளவரசே! குதிரையை நிறுத்துங்கள்..." என்று கூச்சலிட்டார் சக்கசேனாபதி. குதிரைகள் நின்றன. எதிரே வழி மறிக்கிறார்போல் பத்திருபது கருங்குன்றுகள் நீண்ட தந்தங்களை ஆட்டிக் கொண்டு நின்றன. அந்த யானைகளின் தந்தங்கள் அவ்வளவு இருட்டிலும் 'பளிச்'சென்று தெரிந்தன. சக்கசேனாபதி "பேசாமல் நான் செய்வது போல் செய்யுங்கள்" என்று இராசசிம்மனிடம் கூறிவிட்டுக் குதிரை மேல் எழுந்து நின்றார். அப்படி நின்றவுடன் மேலே தாழ்வாக இருந்த ஒரு மரக்கிளை அவர் கைகளுக்கு எட்டியது. அதைப் பற்றிக் கொண்டு மரத்தில் ஏறினார் அவர். இராசசிம்மனும் அதே வழியைப் பின்பற்றி அதே மரத்தில் ஏறினான். யானைகளின் மதம் மரக்கிளைகளைச் சாடிக் கொண்டிருந்தது. "உயிரைப்பற்றி உறுதியாக நம்புவதற்கில்லை. குலதெய்வங்களைத் தியானித்துக் கொள்ளுங்கள்! விதி இருந்தால் பிழைப்போம்" என்று நடுங்கும் குரலில் குமாரபாண்டியனுக்குச் சொன்னார் சக்கசேனாபதி. தங்கள் உயிர்களைப் பற்றி அவர்கள் நம்பிக்கையிழந்து விட்ட அந்தச் சமயத்தில் விசிதபுரத்துச் சாலையில் ஒரு பெரிய ஆச்சரியம் நிகழ்ந்தது.

-----------

 

3. 2. வெள்ளணி விழா

 

குமாரபாண்டியன் இராசசிம்மனும் சக்கசேனாபதியும் ஏறி உட்கார்ந்திருந்த மரக்கிளை பூகம்பம் ஏற்பட்டு ஆடுவது போல் ஆடியது! ஒரு யானைக் கூட்டமே சுற்றி மொய்த்துக் கொண்டு ஆட்டினால் மரம் பிழைக்குமா? அவர்கள் ஏறக்குறையத் தங்கள் உயிரின் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கிய சமயத்தில்தான் விசிதபுரத்துச் சாலையில் அந்த ஒளி உதயமாயிற்று.

கையில் தீப்பந்தங்களோடு ஒரே மாதிரி மஞ்சள் உடை அணிந்த பௌத்த மதத் துறவிகளின் பெருங்கூட்டமொன்று அந்தச் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்தது. ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு ஒலி வேறுபாடின்றி ஒரே விதமான தொனியில் அந்தத் துறவிகள் சேர்ந்து பாடிக் கொண்டு வந்த பௌத்த சமய சுலோகங்கள் அந்தக் காடு முழுவதும் சாந்தி உணர்வை அள்ளிப் பரப்புவது போலிருந்தது. 'அமைதி அமைதி' என்று பெருங் குரலெடுத்து முழங்கிய அந்த இனிமை முழக்கம் கருணை மயமாக ஒலித்தது. உயிரினங்களின் வெறித்தனங்களையெல்லாம் அடக்கிக் கட்டுப்படுத்தித் தன் வசமிழக்கச் செய்து முடிவற்ற பேரமைதியில் ஆழ்த்தும் ஆற்றல் அந்த இன்னொலியில் இருந்தது போலும். "ஐயோ! பாவம் இத்தனை பிட்சுக்களும் வந்து இந்த யானைக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு திண்டாடப் போகிறார்களே" என்று மெல்லிய குரலில் இராசசிம்மன் சக்கசேனாபதியின் காதருகில் சொன்னான். சக்கசேனாபதி அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"பார்த்துக் கொண்டே இருங்கள், என் சிரிப்பின் காரணம் உங்களுக்குப் புரியும்."

விளக்கொளியும், கீத ஒலியும், பிட்சுக்களின் கூட்டமும் அருகில் நெருங்க நெருங்க அங்கே ஓர் அற்புதமான மாறுதல் ஏற்பட்டது. யானைகளின் பிளிறல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து, முடிவில் ஒலியற்று ஓய்ந்தன. மரங்கள் ஆட்டப்படவில்லை; கிளைகள் முறிக்கப்பட வில்லை. ஒலி ஓசைகளையெல்லாம் அடக்கிக் கொண்டு நிற்கும் ஒரு பேரமைதி தானாகத் திடீரென்று அந்தக் காட்டின் மேல் கவிழ்வது போல் இருந்தது. குமாரபாண்டியன் வியப்புடன் கீழே பார்த்தான். மந்தை மந்தையாகச் சாலையை அடைத்துக் கொண்டு நின்ற யானைக் கூட்டம் மெதுவாக அடங்கி, ஒடுங்கி, விலகி, காட்டுக்குள் புகுந்து மறைவது தெரிந்தது. யானைகள் நடந்து போவதற்குரிய முரட்டுத் தனமும், கூப்பாடும் சிறிதாவது இருக்க வேண்டுமே! இருளில் வாயும், உணர்வுமில்லாத கருங்குன்றுகள் சில எதன் போக்கிலோ கவரப்பட்டு விலகிச் செல்வது போல் மெல்ல மறைந்தது யானைக் கூட்டம். புத்த பிட்சுக்கள் அந்த இடத்தை அணுகும் போது சாலை வெறிச்சோடித் தூய்மையாக இருந்தது.

"சக்கசேனாபதி! இது என்ன விந்தை?" என்று வியப்பு மேலிட்ட குரலில் கேட்டான் இராசசிம்மன்.

"விந்தையுமல்ல, தந்திரமுமல்ல! புலன் உணர்வுகளை வென்ற தூய்மைக்கு உயிர்களின் மரியாதை! அன்பும், கருணையும் நிறைந்த குரல்கள் ஆயிரக்கணக்கில் ஒலிக்கும் போது அந்த ஒலி வெள்ளத்தில் மிருகத் தன்மை தேய்ந்து நெகிழ்ந்து விடுகிறது. தவத்துக்கு மட்டுமே உள்ள வலிமை இது."

"ஆச்சரியமான நிகழ்ச்சி தான்!"

"இப்போதே நாமும் கீழே இறங்கி இந்தப் புத்த பிட்சுக்களைத் தொடர்ந்தே அனுராதபுரம் போய்விடுவது நல்லது. இவர்கள் கூட அரசருடைய நாண்மங்கலத்துகாக அனுராதபுரம் போகிறவர்களாகத் தான் இருக்க வேண்டும். வாருங்கள், இறங்கி விசாரிக்கலாம்" என்று சக்கசேனாபதியும், இராசசிம்மனும் கீழே இறங்கினார்கள். அவர்களுடைய குதிரைகள் மரத்தின் கீழிலிருந்து சிறிது தொலைவு தள்ளி மூலைக்கொன்றாக நின்று கொண்டிருந்தன. புத்தபிட்சுக்கள் அவர்களிருவரும் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் வந்துவிட்டனர். சாலையில் நெடுந்தூரத்துக்குத் தெரிந்த பிட்சுக்களின் வரிசையைப் பார்த்த போது ஆயிரம் பேருக்குக் குறையாமல் இருக்கும் போல் தோன்றியது.

"இளவரசே! இவர்கள் எல்லோரும் விசிதபுரத்து மகாபௌத்த சங்கத்தைச் சேர்ந்த பிட்சுக்கள். இதோ, கூட்டத்தில் எல்லோருக்கும் முன்னால் கையில் சுவடியோடு நடந்து வருகிறாரே, இவர் தான் மகாபௌத்த சங்கத்தின் தலைவர் தத்துவசேன அடிகள். வாருங்கள்...! உங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்" என்று குமாரபாண்டியனின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு பிட்சுக்களின் கூட்டத்துக்கு முன்னால் சென்றார் சக்கசேனாபதி.

மரத்தடி இருட்டிலிருந்து யாரோ இருவர் வேகமாகத் தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், சாலையில் முன்னேறிக் கொண்டிருந்த பிட்சுக்களின் கூட்டம் தயங்கி நின்றது. சக்கசேனாபதியும், குமாரபாண்டியனும் தத்துவசேன அடிகளுக்கு முன்னால் போய் வணங்கி நின்றார்கள்.

"நான் என் கண்களுக்கு முன்னால் காண்பது உண்மைதானா? விடிந்தால் அரசருடைய நாண்மங்கல விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டிய ஈழநாட்டுப் படைத்தலைவர் காட்டில் காட்சியளிக்கிறாரே?" என்று கலகலவென்று சிரித்தவாறே சக்கசேனாபதியை நோக்கிக் கேட்டார் பிட்சுக்களின் தலைவரான தத்துவசேன அடிகள்.

"அடிகளே! கடந்த சில நாட்களாகத் தென்பாண்டி நாட்டில் சுற்றிக் கொண்டு இருந்துவிட்டு இன்றுதான் இலங்கை மண்ணிலேயே கால் வைத்தேன். இதோ என் அருகே நிற்கும் இளைஞர் குமாரபாண்டியர் இராசசிம்மன் ஆவார்" என்று தொடங்கி, காட்டில் வந்து கொண்டிருக்கும் போது யானைகள் குறுக்கிட்டதால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் முதலானவற்றையும் கூறினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியனை அன்புடன் அருகில் அழைத்துத் தட்டிக் கொடுத்து ஆசி கூறினார் அடிகள். அவருடைய கருணை நிறைந்த மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போது அனுராதபுரத்துக் காட்டில் அங்கங்கே கண்ட புத்தர் சிலைகளின் முகங்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்ப்பது போலிருந்தது குமார பாண்டியனுக்கு.

"பரவாயில்லை! நீங்கள் இருவரும் விரும்பினால் எங்களுடனேயே அனுராதபுரத்துக்கு வரலாம். நாண்மங்கல விழாவுக்காக நாங்களும் அனுராதபுரம் தான் போகிறோம். கூட்டமாகப் போகும்போது வனவிலங்குகளின் தொல்லை இருக்காது!" என்று கூறிவிட்டுச் சிரித்தார் அவர். அந்தத் துறவியின் மலர்ந்த முகத்தில் சிரிப்புத் தோன்றி மறையும் அந்த ஒரு கணம் எதிரே இருந்து காண்பவர்களின் கண்களில் ஒரு புனிதமான ஒளியைக் காட்டி மறைத்தது. தூய வெள்ளை நிறத்துப் பூ ஒன்று மலர்ந்த வேகத்தில் மறைந்து விடுவது போன்றிருந்தது அந்தச் சிரிப்பு. இராசசிம்மன் கையில் இருந்த வலம்புரிச் சங்கைச் சற்று வியப்புடன் பார்த்தார் அடிகள்.

"இது நல்ல பயன்களைத் தரும் உயர்ந்த சாதி வலம்புரிச் சங்காயிற்றே? உங்களுக்கு எங்கே கிடைத்ததோ?" என்று குமாரபாண்டியனை நோக்கிக் கேட்டார் அவர். துறவிக்கு மறுமொழி சொல்லத் தயங்கிக் கொண்டே சக்கசேனாபதியின் முகத்தைப் பார்த்தான் அவன்.

"அடிகளே! குமாரபாண்டியர் இந்தச் சங்கின் மேல் மிகவும் ஆசைப்பட்டு இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளை வாரிக் கொடுத்து இதை வாங்கியிருக்கிறார்கள். யானைக் கூட்டத்துக்குப் பயந்து கொண்டு மரத்தில் ஏறும் போது கூட இதைக் கீழே போட்டுவிட்டு ஏற மனம் வரவில்லை இவருக்கு. இதையும் இடுப்பில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு ஏறினாரே பார்க்கலாம்!" என்று பிட்சுக்களின் தலைவருக்கு மறுமொழி கூறிவிட்டு ஓரக் கண்ணால் குறும்புத்தனமாகக் குமார பாண்டியனைப் பார்த்தார் சக்கசேனாபதி. இராசசிம்மன் அந்தப் பார்வைக்கு நாணி எங்கோ நோக்குவது போல் தலையைக் குனிந்தான். குதிரைகளை அவரவர் பக்கத்தில் நடத்திச் செலுத்திக் கொண்டே அவர்களும் பிட்சுக்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள். பிட்சுக்களின் பிரயாண காலத்தில் பாடிக் கொண்டு சென்ற கீதங்களை அவர்களும் சேர்ந்து பாடினார்கள். அருள் நிறைந்த மனிதர்களோடு நடந்து சென்ற அந்தப் பயணத்தில் பொழுது கழிந்ததே தெரியவில்லை.

கிழக்கு வெளுக்கத் தொடங்கும் புலர் காலை நேரத்தில் அவர்கள் அனுராதபுரத்துக்குள் நுழைந்தார்கள். அந்தப் பெரும் நகரம் தான் அன்றைக்கு வைகறையிலே எவ்வளவு கோலாகலமாக இருந்தது! எங்கு பார்த்தாலும் புதுமணல் பரப்பிய அலங்காரப் பந்தல்கள், வாழையும், பனையும், கமுகும், மாவிலையும் கட்டிய திருத்தோரணங்கள், செவிகள் நிறைய இடைவிடாமல் கேட்கும் மங்கல வாத்தியங்களின் இனிய ஒலிகள்; நகரம் முழுவதும் பூக்களின் நறுமணமும் அகிற்புகை வாசனையும் பரவின. தெருக்களெல்லாம் ஒரே கூட்டம். முகபடாம் அணிந்த யானைகள், நன்றாகச் சிங்காரம் செய்து கொண்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள், தாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையின் காரணமாக அவ்வளவு காட்சிகளும் சேர்ந்து கொண்டு அந்த ஊரை அன்றைக்குக் கந்தர்வ நகரமாக மாற்றியிருந்தன.

பௌத்த விஹாரங்களிலெல்லாம் ஒளிச் சுடர்கள் பூத்தது போல் தீபாலங்காரம் செய்திருந்தார்கள். பிட்சுக்களின் கீத ஒலிகள், 'அரசருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமாறு' வேண்டிக் கொண்டிருந்தன. தெரு ஓரங்களிலும் பௌத்த விஹாரங்களுக்கு அருகிலும் வண்ணக் காடுகள் முளைத்துப் படர்ந்து மலர்ந்தது போல் பூக்களை மலை மலையாகக் குவித்திருந்தார்கள். பொன் நிற உடலும், மின்னலென இடையும், புன்னகை இதழ்களும், அன்ன நடையுமாகத் தேவலோகத்து நாட்டிய சுந்தரிகளைப் போல் இளம் பெண்கள் இரண்டு உள்ளங் கைகளிலும் மலர்களை ஏந்திக் கொண்டு புத்தர் பெருமானை வழிபடச் சென்று கொண்டிருந்தார்கள்.

அக நகரத்துக்குள் நுழையும் எல்லை வந்தவுடனே பௌத்தத் துறவிகள் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். அவர்களுடைய மடம் புறநகரத்தில் இருந்ததால் அங்கே போய் நீராடல் முதலிய காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அதன் பின் அரசரைக் காண வருவதாகக் கூறிச் சென்றார் தத்துவசேன அடிகள். குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் தங்கள் குதிரைகளில் ஏறிக் கொண்டு அரசரைக் காண விரைந்தார்கள். வீதிகளில் கூட்டமாக இருந்தவர்களில் அடையாளம் புரிந்து கொண்டு சிலரும், புரிந்து கொள்ளாமற் சிலரும் குதிரைகளில் செல்லும் அவர்களை வியப்போடு ஏறிட்டு நோக்கினார்கள். நன்றாக ஒளி பரவாத அந்த மெல்லிருள் நேரத்தில் நகரத்தின் அலங்கார ஒளிகள் அங்கங்கே இருந்த ஏரிகளின் நீர்ப் பரப்பில் பிரதிபலித்தன. நகரின் கிழக்கே தொலைவில் மகிந்தலைக் குன்றத்தின் உச்சியில் பெரிதாக எரிந்து கொண்டிருந்த சோதியைக் காணும் போது குமாரபாண்டியனுக்கு ஏதேதோ முன் நினைவுகள் உண்டாயின. பழமையான காலத்தின் சுவடுகளும், கலைச் சுவடுகளும் படிந்த பௌத்த நாகரிகத்தின் கம்பீரத்தைக் காட்டும் அந்த நகரத்தின் வீதிகளில் குதிரையில் சென்ற போது சோர்வை விரட்டும் உற்சாகமும், சுறுசுறுப்பும் வந்து விட்டாற் போலிருந்தது இராசசிம்மனுக்கு.

அவர்களுடைய குதிரைகள் அரச மாளிகையின் அண்மையில் திரும்பிய போது முற்றிலும் யானைத் தந்தத்தினால் இழைத்துச் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அழகிய பல்லக்கு ஒன்று எதிரே வந்தது. பூம்பட்டுத் திரையை விலக்கிக் கொண்டு அந்தப் பல்லக்கிலிருந்து ஒரு செந்தாமரை முகம் வெண் முல்லைச் சிரிப்போடு கருங்குவளைக் கண்களை விழித்துக் குமாரபாண்டியனைப் பார்த்தது. "அடேடே! கனகமாலையல்லவா? நீ எப்போது இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்தாய்?" என்று பல்லக்கிலிருந்து தலை நீட்டிய அந்தப் பெண்ணை விசாரித்துக் கொண்டே குதிரையை நிறுத்திக் கீழே குதித்தான் இராசசிம்மன்.

 

"! இளவரசி பௌத்த விஹாரத்துக்கு வழிபாடு செய்வதற்குப் புறப்பட்டு விட்டாற் போலிருக்கிறது" என்று புன்சிரிப்புடன் அந்தப் பெண்ணை நோக்கிக் கூறியவாறே சக்கசேனாபதியும் கீழே இறங்கினார்.

காணும் கண்களை மயக்கி அறிவிழக்கச் செய்யும் அபூர்வ எழில் நிறைந்த அந்த இளம் பெண் மேட்டிலிருந்து பள்ளத்துக்குத் தாவும் புள்ளி மானைப் போல் பல்லக்கிலிருந்து துள்ளிக் குதித்துக் கீழே இறங்கினாள். அவள் கையில் ஒரு பூக்கூடை இருந்தது. பனித்துளி நீங்காத புது மலர்ச்சியோடு கூடிய தாமரைப் பூக்கள் அந்தக் கூடையில் நிறைந்திருந்தன. நிலவின் குளிர்ச்சியும், கதிரின் ஒளியும், பூவின் மலர்ச்சியும், கருவண்டின் துறுதுறுப்பும் பொருந்திய தன் காவிய நயனங்களால் தலையை ஒரு பக்கத்தில் நளினமாகச் சாய்த்துக் குமாரபாண்டியனை நோக்கி முறுவல் பூத்தாள் அந்தப் பெண். சிவந்த வாயிதழ்களுக்கு நடுவே வரிசையாக முல்லை மலர்ந்தது. அந்தச் சிரிப்பில், அந்தப் பார்வையில் இங்கிதமான நளினத் தலையசைப்பில் இளம் பெண்ணுக்கே உரிய நாணத்தின் கனிவு துடித்தது.

"சக்கசேனாபதி! காசிப மன்னரின் பெண் கனகமாலைதானா என் முன்னே நிற்கிறாள்? இவ்வளவு நாணமும், வெட்கமும் வாய் திறந்து பேச முடியாத கூச்சமும் இவளுக்கு எங்கிருந்து வந்தன?" என்று கேட்டான் குமாரபாண்டியன்.

"சேனாபதித் தாத்தா! குமாரபாண்டியருக்காக அரசர் அரண்மனையில் காத்துக் கொண்டிருக்கிறார். விரைவாக அவரை அழைத்துக் கொண்டு செல்லுங்கள்" என்று குமார பாண்டியனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு, பேச வெட்கப்படுகின்றவளைப் போல் சக்கசேனாபதியிடம் கூறினாள் கனகமாலை.

மதமதவென்று வளர்ந்து கனிந்து நிற்கும் அந்தப் பெண்மையின் செழிப்பு இராசசிம்மனின் கண்களைக் கூசச் செய்தது. தன் கையிலிருந்து பூக்கூடையை அவர்கள் இருவருடைய கையிலும் கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொண்டாள் அவள். கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் போது எதிரே தங்களுக்கு வேண்டிய மனிதர்களைச் சந்தித்தால் பூக்களை அவர்கள் கையில் கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொள்வது ஒரு மரியாதையான வழக்கம். குமார பாண்டியன் பூக்கூடையைக் கையிலே வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுப்பதற்குள் ஒரு குறும்பு செய்தான்.

"கனகமாலை! இந்த நாண நாடகங்களெல்லாம் என்னிடம் வேண்டாம்! நான் உனக்கு அந்நியனில்லை. என்னிடம் வாய் திறந்து பேசினாலொழிய கூடை திரும்பக் கிடைக்காது!" என்றான்.

"ஆகா! அதற்கென்ன? இப்போது பூக்கூடையைத் திருப்பிக் கொடுங்கள். கோவிலுக்குப் போய்விட்டு அரண்மனைக்குத் திரும்பியதும் உங்களிடம் வட்டியும் முதலுமாகப் பேசித் தீர்த்து விடுகிறேன்" என்று தலையைக் குனிந்து கொண்டு வெட்கத்தோடு பதில் கூறினாள் அவள். குமாரபாண்டியன் சிரித்துக் கொண்டே பூக்கூடையை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவள் துள்ளிக் குதித்துப் பல்லக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பல்லக்குப் புறப்பட்டது. அவர்கள் குதிரைகளும் அரச மாளிகையை நோக்கி முன்னேறின.

சக்கசேனாபதி இராசசிம்மனை நோக்கிக் கேட்டார். "இளவரசே, நீங்கள் முதன் முறையாக இலங்கைக்கு வந்திருந்த போது இந்தப் பெண்ணுக்குச் சிறிது காலம் தமிழ் இலக்கியங்களைக் கற்பித்தீர்களே நினைவிருக்கிறதா?"

"நன்றாக நினைவிருக்கிறது! ஆனால் இவ்வளவு மாறுதல்களை எதிர்பார்க்கவில்லை" என்றான் இராசசிம்மன்.

"பெண்கள் பருவ காலத்தில் கலியாண முருங்கை மரம் போல் மிக வேகமாக வளர்வது இயல்பு இளவரசே!" என்று கூறி நகைத்தார் சக்கசேனாபதி.

அரச மாளிகையின் வாசலில் காசிப மன்னர் பிறந்த நாளுக்குரிய வெள்ளணித் திருக்கோலத்துடன் அமைச்சர்கள் பிரதானிகள் புடை சூழ இராசசிம்மனைக் கோலாகலமாக வரவேற்றார். அவன் குதிரையிலிருந்து இறங்கியதுமே ஓடிவந்து அன்போடு அணைத்துத் தழுவிக் கொண்டார் ஈழ நாட்டு மன்னர். "இராசசிம்மா! நீ இன்று வந்தது மிகப் பொருத்தமான வரவு. என்னுடைய பாக்கியம்" என்று பெருமிதத்தோடு கூறினார். அவன் தங்குவதற்கான ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாகச் செய்யப் பட்டிருந்தன. அதன் பின் அன்று முழுவதும் குமாரபாண்டியனுக்குத் தன்னை நினைத்துப் பார்க்கவே நேரம் இல்லை. வெள்ளணி விழாவின் உற்சாகத்தில் மூழ்கிப் போனான் அவன். காசிப மன்னர் அனுராதபுர நகரத்திலுள்ள ஒவ்வொரு பௌத்த விஹாரத்துக்கும் அவனையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தார். கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் பிறந்த நாள் பரிசளிப்புகளை வழங்கினார். அந்த ஆரவாரங்களுக்கு நடுவே குமாரபாண்டியனுக்கு அவரிடம் அதிகம் பேச நேரமில்லை. அவருக்கும் குமாரபாண்டியனிடம் விரிவாக எதையும் விசாரித்துத் தெரிந்து கொள்ள அவகாசமில்லை. கனகமாலை இரண்டொரு முறை அவனைச் சந்தித்த போது புன்முறுவல் புரிந்தாள். இப்படியாகக் குமாரபாண்டியன் அந்த நாட்டில் கால் வைத்த முதல் நாள் உல்லாசமாகக் கழிந்தது.

--------------

 

3.3. கனகமாலையின் புன்னகை

 

இந்தக் கதையில் திடீரென்று எழிலோவியமாக வந்து தோன்றிக் குமாரபாண்டியனையும், நமது நேயர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் 'கனகமாலை' என்னும் பேரழகியைப் பற்றி இங்கே சிறிது விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

 

வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழைய ஈழநாடு மூன்று பெரும் பிரிவுகளாக இலங்கியது. தென் கிழக்குப் பகுதி 'உரோகண ரதம்' என்றும், நடுப்பகுதி 'மாயா ரதம்' என்றும், வடபகுதி 'இராச ரதம்' என்றும் பெயர் பெற்றிருந்தன. வடக்குப் பகுதியாகிய இராச ரத நாட்டில் தான் அனுராதபுரம், பொலன்னறுவை முதலிய கோநகரங்கள், கலைவளம் நிறைந்த ஊர்கள் எல்லாம் இருந்தன. தென்கீழ்ப்பகுதியாகிய உரோகண ரதத்திலிருந்து சிற்றரசன் ஒருவனின் புதல்வியைக் காசிப மன்னர் தம் இளமையில் காதலித்து மணம் புரிந்து கொண்டிருந்தார். அவளிடம் அவருக்குப் பிறந்த பெண் தான் கனகமாலை. காசிப மன்னரின் உள்ளத்தில் அந்தப் பெண்ணின் மேல் தனிப்பட்ட பாசமும் உரிமையும் உண்டு. அவருடைய செல்லப் பெண் கனகமாலை.

கனகமாலைக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த போதுதான் முதன்முறையாகக் குமாரபாண்டியன் இலங்கைக்கு வந்திருந்தான். அப்போது காசிப மன்னருடைய வேண்டுகோளின்படி சிறிது காலம் கனகமாலைக்குத் தமிழ் கற்பித்தான் அவன். கனகமாலைக்கு நினைவு மலராத பேதமைப் பருவம் அது. இரண்டாவது முறையும், அதன் பின்பும் அவன் ஈழ நாட்டுக்கு வந்த போது கனகமாலையைச் சந்திக்க முடியவில்லை. அப்போதெல்லாம் தன் தாயோடு கனகமாலை உரோகண தேசத்துக்குச் சென்று தங்கியிருந்ததால் குமாரபாண்டியன் அவளைக் காண முடியாமற் போயிற்று. மீண்டும் இப்போது பருவச் செழுமை கனிந்த கன்னியாக அவளைத் தன் முன் கண்ட போது அவனுக்கு அளவிலடங்காத வியப்பு ஏற்பட்டது. அவன் ஏறக்குறைய மனத்துக்குள்ளேயே மறந்து போய்விட்ட அழகிய உண்மை ஒன்று 'நான் வளமாக வளர்ந்து எழில் கனிந்து நிற்கிறேன்' என்று முன் வந்து நினைவூட்டுவது போலிருந்தது கனகமாலையை மீண்டும் சந்தித்தது. சிரிப்பும், விளையாட்டும், கேலியும், கும்மாளமுமாகப் பொலன்னறுவையின் அரண்மனையில் அந்தச் சிறுமிக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த பழைய நாட்களை நினைத்துப் பார்த்தான் அவன். அந்த நினைப்பு ஆறுதலாக, இனிமையாக, நிறைவுடையதாக அவன் மனத்தில் விளங்கியது. வெள்ளணி விழா முடிந்த மறுநாள் மாலையில்தான் இராசசிம்மனும், காசிப மன்னரும் தனியே சந்தித்து விரிவாகப் பேசுவதற்கு நேரம் வாய்த்தது. தென்பாண்டி நாட்டு நிலையை அவருக்கு விளக்கிச் சொன்னான் இராசசிம்மன். வடக்கேயிருந்து பகையரசர்கள் பாண்டி நாட்டின் மேல் படையெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவரிடம் குறிப்பிட்டான் அவன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அவர் கூறலானார்: "இராசசிம்மா இதுவரையில் நீ கூறியவற்றையெல்லாம் கேட்டேன். தென் பாண்டி நாட்டின் உண்மையான நிலை இப்போது எனக்குப் புரிகிறது. இம்மாதிரி பகைவர் படையெடுப்பு ஏற்படும் நிலை வந்து முடிவு எப்படி எப்படி ஆகுமோ என்று பயந்துதான் தென்பாண்டி நாட்டு அரசுரிமைப் பொருள்களையும் உங்களுடன் இங்கேயே எடுத்துக் கொண்டு வந்து விடும்படி சக்கசேனாபதியிடம் நான் கூறியனுப்பினேன். வெற்றியோ, தோல்வியோ விளைவு எப்படி இருந்தாலும், நாம் நம்முடைய பொருள்களைத் தற்காப்பாக வைத்துக் கொண்டு விட வேண்டும்." காசிப மன்னர் இப்படிக் கூறிக் கொண்டு வந்த போது குமாரபாண்டியன் குறுக்கிட்டுச் சொன்னான்: "என் உயிரினும் மேலான மதிப்புக்குரிய பொருளை நான் இன்னும் பாதுகாக்கவே இல்லை, காசிப மன்னரே! இந்தப் பொற் சிம்மாசனத்தையும், வீர வாளையும், சுந்தர முடியையும் பாதுகாப்பாக இங்கே கொண்டு வந்து விட்டதற்காக நான் பெருமைப் பட்டுக் கொள்வது பெரிதன்று; என் அன்னையைக் காப்பாற்ற வேண்டும், நான் பிறந்த குடியின் மானத்தையும் மதிப்பையும் காப்பாற்ற வேண்டும். அவைகளைக் காப்பாற்றிப் பாதுகாக்காத வரையில் நான் பெருமைப்படுவதற்கே தகுதியற்றவன்."

"உன் மனக்குறை எனக்குப் புரிகிறது, இராசசிம்மா! இப்போது சொல்கிற வார்த்தைதான். நீ என்னை உறுதியாக நம்பலாம். தென்பாண்டி நாட்டுக்கோ, உன் அன்னைக்கோ ஒரு சிறு துன்பம் பகையரசர்களால் ஏற்படுகிறதென்று தெரிந்தாலும் உனக்கு உதவியாகச் சக்கசேனாபதியின் தலைமையில் ஈழ மண்டலப் பெரும்படை முழுவதையும் கடல் கடந்து அனுப்பி வைப்பதற்கு நான் எந்த விநாடியும் சித்தமாக இருக்கிறேன். அதற்காக நீ கவலைப்படாதே!" என்று உறுதியான அழுத்தம் ஒலிக்கும் குரலில் காசிப மன்னர் மறுமொழி கூறிய போது குமாரபாண்டியனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அதன் பின் இடையாற்று மங்கலம் நம்பி, தளபதி வல்லாளதேவன் என்று தென்பாண்டி நாட்டு அரசியலில் தொடர்புடைய முக்கியமானவர்களையெல்லாம் பற்றிக் காசிப மன்னர் அவனிடம் விசாரித்தார். பேசிக் கொண்டிருக்கும் போது அவன் கையிலிருந்த வலம்புரிச் சங்கை அவரும் பார்த்தார். சிரித்துக் கொண்டே அதைப் பற்றி ஆவலுடன் விசாரித்தார். அதைக் கையில் வாங்கிப் பார்த்து வியந்தார். வருகிற வழியில் ஒரு தீவில் விலைக்கு வாங்கியது என்பதற்கு மேல் அதிகமாக அவரிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை அவன். அவரும் அதற்குமேல் அதைப் பற்றித் தூண்டிக் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது ஓட்டமும், நடையுமாகத் துள்ளிக் கொண்டு கனகமாலை அங்கு வந்தாள். தந்தை மட்டும்தான் அந்த இடத்தில் இருப்பாரென்ற எண்ணத்தில் சுதந்திரமாகத் துள்ளிக் குதித்து வந்த கனகமாலை, குமாரபாண்டியனும் அங்கிருந்ததைப் பார்த்தவுடன் வெட்கமடைந்தாள்.

"கனகமாலை! குமாரபாண்டியர் உனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததெல்லாம் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயா! எல்லோருக்கும் சாதாரணமாக ஆசிரியர்கள் தாம் கற்பிப்பதற்குக் கிடைப்பார்கள். உனக்கோ தமிழ் மொழி சுரக்கும் பாண்டி நாட்டு இளவரசே ஆசிரியராகக் கிடைத்தார். இவரை விட்டுவிடாதே, இன்னும் என்னென்ன கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமோ, அவ்வளவையும் இவர் இங்கிருக்கும் போதே கேட்டுத் தெரிந்து கொண்டு விடு" என்றார்.

 

"இந்தச் சில ஆண்டுகளுக்குள் நானே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி வளர்ந்து விட்டாளே, என் மாணவி! அந்த நாட்களில் நான் ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் ஒன்பது கேள்விகளைக் கேட்டுத் திணறச் செய்த உங்கள் பெண் இப்போது என் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கே வெட்கப்படுகிறாள்."

"இவரிடம் பேசுவதற்கு வெட்கமென்ன அம்மா? இவர் நம் வீட்டு மனிதர் மாதிரி. அந்த நாளில் தமிழ்ச் சுவடியும் கையுமாக நான் கூப்பிட்டாலும் என்னவென்று கேட்காமல் சதாகாலமும் இவரையே சுற்றிக் கொண்டிருப்பாய் நீ. இப்போது திடீரென்று என்ன வந்துவிட்டது உனக்கு? நீ கூடக் கலகலப்பாக இவரிடம் பழகாவிட்டால் இவருக்கு வந்த இடத்தில் எப்படித்தான் பொழுது போகும்?"

"சுத்தப் பொய், அப்பா! இவர் சொல்வதை நீங்கள் நம்பவே நம்பாதீர்கள். நான் ஒன்றும் இவரோடு பேச மாட்டேனென்று சொல்லவில்லை. பௌத்த விஹாரத்துக்கு வழிபாடு செய்யப் போய்க் கொண்டிருந்த போது இவரும் சேனாபதி தாத்தாவும் குதிரையில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போதே நடுத்தெருவில் நின்று கொண்டு இவரோடு எப்படி அப்பா பேச முடியும்? இவரானால் அங்கேயே தெருவில் நின்று கொண்டு என்னைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார்" என்று பொய்க் கோபத்தின் சாயல் திகழும் முகத்தோடு படபடப்பாக மறுமொழி கூறினாள்.

"! இப்போதுதான் உன்னைக் கனகமாலை என்று ஒப்புக் கொள்ள முடிகிறது. துடுக்குத்தனமான பேச்சும் சுறுசுறுப்பும் உள்ள பெண் திடீரென்று ஊமையாக நின்றால் யாருக்குத்தான் கோபம் வராது?" என்று அவளைப் பார்த்துக் கூறிவிட்டுச் சிரித்தான் இராசசிம்மன். கனகமாலைக்கு அவனுடைய முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் பார்க்க வேண்டுமென்று ஆசையாகவும் இருந்தது. இராசசிம்மனுக்குக் கனகமாலையிடம் ஏற்பட்ட கவர்ச்சியைக் காதல் என்று சொல்வதற்கில்லை. அது ஒருவகைக் கவிதைக் கவர்ச்சி. இராசசிம்மனுக்குச் சுவையான பாடல் கிடைத்தால் ஏற்படுகிற நிறைவு போல், கனகமாலையின் நளினப் புன்னகையில் அவன் காவியச் சுவையைக் கண்டான். தத்துவசேன அடிகளோடு உரையாடும் போதும், சக்கசேனாபதியோடு பேசும் போதும், காசிப மன்னரோடு பழகும் போதும் மரியாதையும், கௌரவமும் அவனைப் பொறுப்புள்ளவன் என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தன. ஆனால், கனகமாலையின் புன்னகை என்னும் கவிதையைச் சுவைக்க நேரும் போதெல்லாம் அவன் சிறு குழந்தையாகி, அந்தக் காவிய அழகில் மயங்கித் தன் பொறுப்புக்களையும் கவலைகளையும் மறந்து விடுகிறான். அந்த மறதி மயக்கம் அப்போதைய சூழ்நிலையில் அவனுக்குத் தேவையாக இருந்தது. அனுராதபுரத்துக்கு வந்த புதிதில் இரண்டொரு நாட்கள் தான் அவனும், கனகமாலையும் ஒருவரையொருவர் காணாமலும், பேசாமலும் நாணம் திரையிட்டிருந்தது. பின்பு அந்தப் பெண்ணாகவே வலுவில் கலகலப்போடு பழகத் தொடங்கி விட்டாள். பழையபடி தமிழ்ச் சுவடிகளும் கையுமாக அவனைச் சுற்றி வரத் தொடங்கினாள். அந்தக் கனவுக் கன்னிகையோடு மகிந்தலைக் குன்றின் உச்சி வரையில் ஏறிச் சுற்றினான். அனுராதபுரத்து ஏரிகளில் படகில் ஏறிக் கொண்டு மிதந்தான். சிம்மகிரிக்குகை ஓவியங்களைப் போய்ப் பார்த்தான்.

"நீங்கள் ஏன் எப்போதும் இந்தச் சங்கைக் கையில் வைத்துக் கொண்டே சுற்றுகிறீர்கள்?" என்று ஒரு நாள் கனகமாலையும் அவனைக் கேட்டு விட்டாள்.

"கனகமாலை! இந்தச் சங்கில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு இனிய நினைவு மறைந்திருக்கிறது. இது என் கையில் இல்லாவிட்டால் மனம் ஏழையாகி, நினைவுகள் சூனியமாகி விட்டது போல் ஒரு பெருங் குறைபாட்டை உணர்கிறேன் நான்" என்றான் உருக்கமாக.

வெள்ளணி விழா முடிந்த சில நாட்களில் அவர்கள் எல்லோரும் பொலன்னறுவைக்குப் பயணமானார்கள். அங்கே குமாரபாண்டியனின் நாட்கள் கனமாலைக்குத் தமிழ் கற்பிப்பதிலும், அவளுடைய அமுதத்தன்மை நிறைந்த காவியச் சிரிப்பில் தன் கவலைகளை மறந்து விடுவதிலும் கழிந்து கொண்டிருந்தன. வனங்களிலும், மலைகளிலும் அந்தக் கவிதைப் பெண்ணோடு சுற்றினான் அவன். அப்படிச் சுற்றுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஒரு நாள் மாலை கனகமாலையும், அவனும் ஒரு பௌத்த விஹாரத்துக்குப் போய் வழிபாடு செய்து விட்டு இருட்டுகிற நேரத்துக்கு அரண்மனைக்குத் திரும்பி வந்தார்கள். அப்படி வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கசேனாபதி அவசரமாக ஓடி வந்து, "இளவரசே! நான் அன்று 'தமனன் தோட்டத்து'க் கப்பல் துறை ஊழியர்களிடம் எச்சரித்துவிட்டு வந்தது நல்லதாகப் போயிற்று. நேற்றுத் தமிழ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றை அங்கே தடுத்து நிறுத்தியிருக்கிறார்களாம். அதில் சந்தேகப்படத்தக்க ஆட்களும் இருக்கிறார்களாம். தகவல் வந்திருக்கிறது" என்று இராசசிம்மனிடம் கூறினார்.

----------

 

3.4. கப்பல் கைப்பற்றப்பட்டது

 

செம்பவழத் தீவில் மதிவதனி என்ற பெண்ணிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட பின்பு சேந்தனும், குழல்வாய்மொழியும் அந்தப் பெண் தங்களிடம் கூறிய ஒரு முக்கியமான செய்தியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். கூத்தன் ஒன்றும் பேசாவிட்டாலும், அவர்கள் இருவரும் பேசுவதையெல்லாம் அருகிலிருந்து உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"அம்மணி! அந்தப் பெண் மதிவதனி கூறுவதைக் கேட்டதிலிருந்து எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஒரு இளைஞன் இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் கொடுத்துச் சங்கு வாங்கிக் கொண்டு சென்றதாக அவள் குறிப்பிட்டாள் அல்லவா? அப்படி வாங்கிச் சென்றவர் நம்முடைய இளவரசராக இருக்கலாமென்று நான் நினைக்கிறேன். குமாரபாண்டியருக்கு அப்படி ஒரு பண்பு உண்டு. அழகுணர்ச்சியும் கலை நுணுக்கமும் அவருக்கு அதிகம். ஒரு பொருள் அவருடைய மனத்துக்குப் பிடித்து விட்டதானால் அதன் விலை மதிப்பை எவ்வளவு உயர்வாக்கவும் அவர் தயாராகி விடுவார்!" என்று கப்பலில் போய்க் கொண்டிருக்கும் போது குழல்வாய்மொழியிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் சேந்தன்.

"நீங்கள் சொல்வது போலவே எனக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்த இளைஞர் எப்படி இருப்பாரென்று நீங்களும் நானும் அடையாளம் கேட்க ஆரம்பித்த உடனேயே அந்தப் பெண் வாயை மூடிக் கொண்டு போய்விட்டாளே!"

"அவள் சாமர்த்தியக்காரப் பெண் அம்மணீ! பிறருடைய வாயிலிருந்து இரகசியங்களை அறிந்து கொண்டு வருகிற திறமை எனக்கு அதிகம் என்று தங்கள் தந்தையாரிடம் நல்ல பெயர் வாங்கிய என்னையே ஏமாற்றிவிட்டாளே அந்தப் பெண்!" என்று சேந்தன் கூறிய போது பக்கத்தில் அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்த கூத்தன் சிரித்து விட்டான்.

"ஐயா! சாமர்த்தியசாலிகள், அறிவாளிகள் எல்லோரும் அனேகமாகப் பெண்பிள்ளைகளுக்கு முன்னால் ஏமாந்து போகிறவர்களாகத்தான் இருப்பார்கள்" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சேந்தன் அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு வருவதை எதிர்பார்க்கிறவனைப் போலப் பயந்து ஒதுங்கினான் அவன்.

"பொட்டைப் பயலே! வரவர உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. நாக்கு துளிர்த்து விட்டது. மட்டுமரியாதை இல்லாமலா பேசுகிறாய்?" என்று சேந்தன் கூப்பாடு போட்டான். "கூத்தா! நாங்கள் முக்கியமான செய்தி ஒன்றைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். சமயம் தெரியாமல் நீ ஏதாவது குறுக்கிட்டுப் பேசி நேரத்தை வீணாக்காதே" என்று குழல்வாய்மொழி கூத்தனைக் கடிந்து கொண்டாள். கூத்தன் அடங்கி நின்றான். அவளுடைய பேச்சு மேலே தொடர்ந்தது. சேந்தன் மிக மிக அந்தரங்கமானவற்றையெல்லாம் மகாமண்டலேசுவரரின் புதல்வியிடம் விவரிக்கலானான்.

"அம்மணி! விரைவாகவும், திட்டமிட்டுக் கொண்டு செய்ய வேண்டிய செயல்கள் இனிமேல் தான் நம்மை நெருங்குகின்றன. விழிஞத்துக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள தொலைவில் ஏறக்குறைய சரிபாதிக்கு மேல் கடந்து விட்டோம். மகாமண்டலேசுவரரும், மகாராணியாரும் ஒவ்வொரு நாளும் நாம் குமாரபாண்டியரை அழைத்துக் கொண்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இளவரசரை அழைத்து வருவதற்காக நாம் தான் அனுப்பப் பட்டிருக்கிறோம் என்ற விவரம் மகாராணியாருக்குத் தெரியாது. ஆனால் இளவரசரை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பது தம் பொறுப்பென்று உங்கள் தந்தை மகாராணியாருக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். இன்னொரு பரம இரகசியமான செய்தியையும் இப்போது நான் உங்களிடம் சொல்லப் போகிறேன். உங்கள் தந்தைக்கு இப்போது மறைமுகமாக எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். தளபதி வல்லாளதேவனுக்குக் காரணம் கூறமுடியாத ஒருவகை வெறுப்பு உங்கள் தந்தை மேல் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் தந்தையின் ஒவ்வொரு ஏற்பாடுகளையும் மறைமுகமாகத் தகர்த்து அவமானப்படுத்துவதற்குத் தளபதி முயற்சி செய்கிறான். இந்த முயற்சியில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனின் ஒத்துழைப்பும் மிக இரகசியமாகத் தளபதிக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அரண்மனையில் நடந்த கூட்டத்துக்குப் பின்பு கூற்றத் தலைவர்களும் உங்கள் தந்தை மேல் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். வேறொருவராயிருந்தால் இவ்வளவு எதிர்ப்புகளைத் தாங்கிக் கொண்டு இருக்கவே இயலாது, அம்மணி! என் மதிப்பிற்குரியவரும், உங்கள் தந்தையுமாகிய மகாமண்டலேசுவரரைப் பற்றி நினைக்கும் போது நான் கேள்விப்பட்டிருக்கும் விநோதமான பறவையைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகிறது. மேலைக் கடலின் தீவுகளில் நெடுந்தூரத்துக்கு அப்பாலுள்ள தேசங்களில் 'நெருப்புக் கோழி' என்ற பெயரில் விந்தையானதொரு தீப்பறவை இருக்கிறதாம். அது கங்குகங்காக நெருப்புத் துண்டுகளை விழுங்கினாலொழிய அதற்கு வயிறு நிறையாதாம். அந்தத் தீப்பறவையைப் போல் வெம்மையும் கொடுமையும் நிறைந்த எதிர்ப்புகளையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டுப் பசியாறி வளர்ந்து கொண்டிருக்கிறார் மகாமண்டலேசுவரர். உங்கள் தந்தை நம்மை இலங்கைக்கு அனுப்புகிற விவரம் தெரிந்திருந்தால், தளபதி அதைத் தடுக்கவும் ஏதாவது சூழ்ச்சி செய்திருப்பான். அரண்மனையில் நடக்கிற எந்த அந்தரங்கமான செய்தியும் தன் காதுக்கு எட்டச் செய்து கொள்கிற அளவுக்கு வசதியுள்ளவன் தளபதி."

"அது எந்த வசதியோ?" என்று குழல்வாய்மொழி இடைமறித்துக் கேட்டாள்.

"உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மணீ! தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு தங்கக இருக்கிறாள்; எமகாதகப் பெண் பிள்ளை அவள். 'மகாராணிக்குத் துணையாக அரண்மனையில் தங்கியிருக்கிறேன்' என்று பேர் செய்து கொண்டு, அரண்மனையில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் உளவறிந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்."

"பகவதி தானே? அந்தப் பெண்ணை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவள் இப்போது அவ்வளவு சாமர்த்தியக்காரியாகி விட்டாளா?" என்று குழல்வாய்மொழி நாராயணன் சேந்தனைக் கேட்ட போது கூத்தன் 'அச்' என்று இரைந்து ஒரு தும்மல் தும்மினான். சேந்தனும் குழல்வாய்மொழியும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு கூத்தனை ஒரு கணம் கூர்ந்து நோக்கினார்கள். கூத்தன் உடனே வேறு எங்கோ கவனிப்பது போல் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான். சேந்தன் குழல்வாய்மொழியின் காதருகே நெருங்கி, "அம்மணீ! ஊர் பேர் தெரியாத இந்தப் பயலைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நாம் இருவரும் எதையெதையோ ஒளிவு மறைவின்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். எனக்கு என்னவோ தொடக்கத்திலிருந்தே இவன் மேல் நம்பிக்கையில்லை" என்று மெல்லச் சொன்னான்.

 

"கூத்தா! இப்போது இங்கே உனக்கு ஒரு காரியமும் இல்லை. நீ மேல் தளத்தில் போய் இரு. உன் உதவி எதற்காவது தேவையானால் நான் உன்னைக் கூப்பிடுகிறேன்" என்று குழல்வாய்மொழி அவனுக்குக் கட்டளையிட்டாள். கூத்தன் அந்த இடத்திலிருந்து மேல் தளத்துக்குப் போக மனமில்லாதவனைப் போல் தயங்கித் தயங்கி நடந்து படியேறிச் சென்றான்.

"அம்மணி! இந்தப் பிள்ளையாண்டானால் நமக்குக் கெடுதல்கள் தான் வருமே ஒழிய நன்மையில்லை என்று என் மனத்தில் ஏதோ குறளி சொல்கிறது. நம்மை ஏமாற்றக் கூடிய மர்மமான அம்சம் ஏதோ ஒன்று இவனிடம் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஒரு வார்த்தை 'சரி' என்று சொல்லிவிட்டால் நாளைக்கே நடுவழியில் ஏதாவது ஒரு தீவில் இவனை இறக்கி விட்டுவிடுவேன். இவன் நம்மோடு இலங்கை வரை வந்து இறங்குவதில் எனக்குச் சம்மதமே இல்லை. நாம் போகிற காரியத்தின் இரகசியம் இவனால் வெளியாகவும் கூடும்" என்று சேந்தன் சொன்ன போது அதற்கு இணங்கி விடலாமா, வேண்டாமா என்று குழல்வாய்மொழி மனப் போராட்டத்துக்கிடமானாள். அந்தச் சமயத்தில் மேல் தளத்துக்கு ஏறுகிற படியின் திருப்பத்தில் அடக்கிக் கொள்ள முடியாமல் யாரோ தும்முகிற ஒலி கேட்டு சேந்தன் விரைவாக நடந்து போய்ப் பார்த்தான். கூத்தன் அந்த இடத்திலேயே திருப்பத்தின் முதல் படியில் நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சேந்தனுக்குக் கோபம் அளவின்றிப் பொங்கியது.

"பொட்டைப் பயலே! ஒட்டுக் கேட்டுக் கொண்டா நிற்கிறாய் இங்கே?" என்று அவன் இரையத் தொடங்கிய போது, தடதடவென்று படியேறி மேலே ஓடினான் கூத்தன். இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் குழல்வாய்மொழிக்குக் கூட மனம் மாறிவிட்டது. அந்தப் பிள்ளையின் மேல் அவளுக்கு உண்டாகியிருந்த சிறிது நல்ல எண்ணமும் போய் விட்டது.

"உங்கள் விருப்பம் போலவே கப்பலிலிருந்து இறக்கி விட்டு விடுங்கள். ஆனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அந்த வாலிபன் விழித்திருக்கும் போது கீழே இறக்கி விட நேர்ந்தால் அவனுடைய எதிர்ப்பையும் கலகம் முதலிய வம்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது காதும் காதும் வைத்தாற்போல் நம் ஆட்களிடம் சொல்லிப் படுக்கையோடு அப்படியே தூக்கி ஏதாவது ஒரு தீவில் வைத்துவிட ஏற்பாடு செய்யுங்கள்" என்றாள் குழல்வாய்மொழி. அன்றிரவே அதைச் செய்து விடுவதாக மகாமண்டலேசுவரரின் புதல்வியிடம் ஒப்புக் கொண்டான் சேந்தன். ஆனால் அன்றிரவு சேந்தனின் சூழ்ச்சி பலிக்காதபடி கூத்தன் தப்பித்துக் கொண்டான். கீழ்த்தளத்திலிருந்த குழல்வாய்மொழியின் அலங்கார அறைக்குள் படுத்துக் கொண்டு கதவையும் உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு விட்டான் அவன். குழல்வாய்மொழி முன்னதாகவே படுத்துத் தூங்கிவிட்டதால் அவளுக்கு இதொன்றும் தெரியாது. அறைக் கதவை இடித்துக் கூத்தனை வெளியேற்ற முயன்றால் குழல்வாய்மொழியின் தூக்கம் கெட்டுவிடுமோ என்பதற்காகச் சேந்தன் அன்றிரவு அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டான். மறுநாள் காலை கப்பல் இலங்கைக் கரையை நெருங்கிக் கொண்டிருந்த போது சேந்தன், குழல்வாய்மொழி, கூத்தன் யாருமே எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. கப்பல் மீகாமன் 'குய்யோ முறையோ'வென்று அலறிக் கொண்டு கீழ்த்தளத்துக்கு ஓடி வந்தான். சேந்தன், குழல்வாய்மொழி, கூத்தன் மூன்று பேரும் அங்கே இருந்தனர்.

"ஐயோ! கப்பலைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இந்த அநியாயத்தை வந்து பாருங்கள்" என்று மீகாமன் முறையிட்டான். பேச்சு சுவாரசியத்தில் ஈடுபட்டுப் போயிருந்த அந்த மூவரும் அப்போது தான் கப்பல் நின்று போயிருப்பதைக் கவனித்து உணர்ந்தார்கள். உடனே மாலுமியைப் பின் தொடர்ந்து குழல்வாய்மொழி உள்பட மூன்று பேரும் மேல் தளத்துக்கு ஏறி ஓடினார்கள்.

அந்தக் கப்பலைச் சுற்றிலும் ஐந்தாறு படகுகள் வழியை மறைப்பது போல வளைத்துக் கொண்டு நின்றன. அந்தப் படகுகளில் ஆயுதபாணிகளாக முரட்டு வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றத்திலிருந்தும், அந்தப் படகுகளில் கட்டியிருந்த சிறு சிறு கொடிகளிலிருந்தும் அந்த வீரர்கள் ஈழநாட்டுக் கடற்படையைச் சேர்ந்தவர்களென்று நாராயணன் சேந்தன் நிதானித்துப் புரிந்து கொண்டான்.

"அம்மணீ! ஏதோ சில காரணங்களுக்காகக் கப்பல்களைச் சோதனை செய்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களெல்லாம் ஈழநாட்டுக் கடற்படை வீரர்கள்" என்று பீதி கலந்த குரலில் குழல்வாய்மொழியிடம் சொன்னான் சேந்தன். குழல்வாய்மொழி கூத்தனை விசாரிக்கத் தொடங்கிவிட்டாள். "கூத்தா! ஈழ நாட்டு நடைமுறைகளும், கடற்பயணமும் எனக்கு நன்றாகத் தெரியுமென்று அப்போது பெருமையடித்துக் கொண்டாயே, இதெல்லாம் என்ன? நம்முடைய கப்பலை எதற்காக இந்த வீரர்கள் இப்படித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்? ஏன் ஊமையாக நிற்கிறாய்? பதில் சொல்லேன்."

கூத்தன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் 'திரு திரு'வென்று விழித்தான். அவனுக்குத் தெரிந்தால் தானே சொல்வதற்கு! ஆரம்பத்தில் கப்பலில் இடம் பிடிப்பதற்காக அளந்த பொய் இவ்வளவு தூரத்துக்குத் தன்னைப் பாதிக்குமென்று தெரிந்திருந்தால் அவன் அந்தப் பொய்யைச் சொல்லியிருக்கவே மாட்டான்.

"கப்பல் புறப்படும் போதே அபசகுனம் மாதிரி இந்தப் பயல் வந்து வம்பு பண்ணினான். அப்போதே இது மாதிரி ஏதாவது தொல்லை வருமென்று நான் நினைத்தேன்" என்று சேந்தன் படபடப்போடு கூத்தனை நோக்கிச் சீறினான். குழல்வாய்மொழி சினம் பொங்கப் பார்த்தாள். எல்லோருடைய கோபமும் கூத்தனின் மேல் திரும்பி அடிகள் உதைகளாக உருவெடுப்பதற்கு இருந்த சமயத்தில் அப்படி நடக்க விடாமல் ஈழ நாட்டு வீரர்களெல்லாம் கப்பலுக்குள் ஏறி வந்து கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.

"இந்தக் கப்பல் எங்கே இருந்து வருகிறது?" சேந்தனைப் பார்த்து அதிகார மிடுக்குடன் இப்படிக் கேட்டார்கள், கப்பலுக்குள் ஏறி வந்த கடற்படை வீரர்கள்!

 

கேள்விக்குப் பதில் சொல்லலாமா, வேண்டாமா என்ற பாவனையில் சேந்தன் குழல்வாய்மொழியின் முகத்தைப் பார்த்தான்; குழல்வாய்மொழி கூத்தனின் முகத்தைப் பார்த்தாள்; கூத்தன் கடலைப் பார்த்தன். இந்த மௌனம் கேள்வி கேட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.

"இந்தா, ஐயா! முன்குடுமிக்காரரே! உம்மைத்தான் கேட்கிறோம். பதில் சொல்லும்" என்று கடுமையான குரலில் மீண்டும் கேட்டார்கள் அவர்கள். சேந்தன் பதில் சொன்னான். "கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறது!"

"என்ன காரியமாக வருகிறதோ?"

"சொந்தக் காரியமாக."

"எங்களிடம் எதையும் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் வருத்தப்பட நேரிடும்."

"மறைப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை."

"அப்படியானால் நீங்கள் எல்லோரும் யார்? என்ன காரியமாக ஈழநாட்டுக்குப் புறப்பட்டீர்கள் என்பதையெல்லாம் உடனே கூறுங்கள்.

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மறுபடியும் குழல்வாய்மொழியின் முகத்தைப் பார்த்தான் சேந்தன். குழல்வாய்மொழி அந்த வீரர்களை நோக்கித் துணிவோடு கேட்டாள்: "நீங்கள் எங்களுடைய கப்பலைத் தடுத்து நிறுத்திக் கொண்டு எங்களை இவ்வாறு மிரட்டுவது அநாகரிகமாக அல்லவா இருக்கிறது? நாங்கள் யாராயிருந்தால் என்ன? நாங்கள் என்ன காரியமாக ஈழநாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பதை உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை!"

அவள் சினத்தோடு படபடப்பாக எதிர்வாதம் புரிந்ததைக் கேட்டதும் வீரர்கள் இன்னும் ஆத்திரம் அடைந்தனர்.

"எங்கள் மேல் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அம்மா! ஈழ மண்டலத்து மகா சேனாபதியின் உத்தரவுப்படி நாங்கள் இந்தக் கப்பலை இப்போது கைப்பற்றுகிறோம். எங்கள் கண்காணிப்பில் அப்படியே இந்தக் கப்பலைச் செலுத்திக் கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி விடுவோம். எங்கள் மகாசேனாபதி வந்து பரிசோதித்து விசாரணை செய்கிறவரை யாரும் இந்தக் கப்பலிலிருந்து கீழே இறங்க விடமாட்டோம்."

"கப்பலிலே சிறை வைத்துப் பார்ப்பதற்கு நாங்கள் கொள்ளையடித்து விட்டோ, கொலைக் குற்றம் செய்து விட்டோ இங்கு ஓடி வர வில்லையே?" என்று அமைதியாக நின்று கொண்டிருந்த கூத்தனும் கொதிப்படைந்து கேட்டான். அவர்கள் அந்தக் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. படகுகளையும் கப்பல்களையும் தங்கள் பொறுப்பில் செலுத்திக் கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நிறுத்தினார்கள். கப்பலைச் சுற்றிலும் யாரும் வெளியேற முடியாமல் வீரர்கள் காவல் நின்று கொண்டனர். கப்பல் பிடித்துக் கொண்டு வரப்பட்ட செய்தி உடனே ஈழநாட்டுப் படைத்தலைவனுக்கு அனுப்பப்பட்டது. குழல்வாய்மொழியும் சேந்தனும் மேல்தளத்தில் நின்று கூத்தனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

-----------

 

3.5. கூத்தன் தப்பினான்

 

யாரிடமோ காண்பிக்க வேண்டிய கோபதாபங்களையெல்லாம் தங்களுடன் அகப்பட்டுக் கொண்ட கூத்தனிடம் காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள் சேந்தனும் குழல்வாய்மொழியும். கூத்தன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தான். இன்னும் சில நாழிகைகளில் அவர்கள் பேசிப் பேசித் தன்னை உயிரோடு சித்திரவதை செய்து விடுவார்களோ என்று நினைத்து அஞ்சுகிற அளவுக்கு அவனைப் பாடாய்ப் படுத்திவிட்டார்கள். தன் 'குட்டு' வெளிப்பட்டு அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆகுமோ என்ற பயமும் கூத்தனுக்கு ஏற்பட்டு விட்டது. ஈழ மண்டலப் படைத் தலைவர் வந்து விசாரணை செய்யும் முன்பே குழல்வாய்மொழியும், சேந்தனும் தன்னை இன்னாரென்று புரிந்து கொள்ள நேர்ந்தால் தனக்கு அது பெருத்த அவமானமாகிவிடும் என்பதைக் 'கூத்தன்' உணர்ந்து கொண்டான். அப்படியில்லாமல் படைத்தலைவர் வந்து விசாரணை செய்த பின் அகப்பட்டுக் கொண்டாலும் அவமானம் தான். மேலும், முன்கூட்டியே அந்தக் கப்பலிலிருந்து தப்பிக் கரையேறினால் அதனால் 'கூத்தனுக்கு' எவ்வளவோ நன்மை உண்டு.

'கூத்தன்' நேரம் எப்போது வாய்க்கப் போகிறதென்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிந்தனை கூர்மையாகித் தப்பும் வழிகளை ஒவ்வொன்றாகச் சிந்தித்தது. சாத்திய அசாத்தியங்களை ஆராய்ந்தது. சற்றே அதிகமான துணிச்சலும் உண்டாகியிருந்தது. தப்புவதற்காக எப்படிப்பட்ட காரியத்தை வேண்டுமானாலும் செய்வதற்கு உறுதி பூண்டிருந்தான் அவன். நண்பகலில் உச்சி வெயில் கொடுமையாக இருந்தது. கரையிலிருந்த காட்டின் காற்றும், நீரின் குளிர்ச்சியும் அந்த வெம்மையைச் சிறிது தணிக்க முயன்றன. அப்போது கூத்தன் தப்புவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லோரும் உணவு உட்கொண்டு முடித்து சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு அல்லவா? சேந்தன் மேல்தளத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலேயே ஒரு பாய்மரக் கம்பத்தில் சாய்ந்து கொண்டு காலை நீட்டிக் கண்ணயர்ந்திருந்தான். குழல்வாய்மொழி கீழ்த் தளத்திலிருந்த தனது அறைக்குள் இருந்தாள். மற்றக் கப்பல் ஊழியர்கள் எல்லோரும் சேந்தனைப் போலவே மேல்தளத்தில் அயர்ந்து போய்க் கிடந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் தூங்காமல் உட்கார்ந்திருந்த ஆள் கூத்தன் ஒருவன் தான்.

 

ஒரு திடமான முடிவுடன் அவன் எழுந்தான். ஓசைப்படாமல் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்து, கீழ்த்தளத்துக்கு இறங்கிப் போனான். குழல்வாய்மொழியின் அறை திறந்துதான் இருந்தது. கூத்தனுக்கு உடம்பெங்கும் வியர்த்தது. ஒரு கையால் வாளின் நுனியைப் பற்றிக் கொண்டே ஓரமாக ஒதுங்கி நின்று மெதுவாகத் தலையை நீட்டி அறைக்குள் எட்டிப் பார்த்தான். குழல்வாய்மொழி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். கூத்தன் விருட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து கதவை உட்புறத்தில் தாழிட்டுக் கொண்டான். அந்த அறையில் ஒரு மூலையில் இருந்த பெரிய தந்தப் பெட்டியைத் திறந்தான். பெட்டிக்குள் மகாமண்டலேசுவரரின் அருமைக் குமாரிக்குச் சொந்தமான பட்டுப் புடவைகளும், மற்ற அலங்காரப் பொருள்களும் அடுக்கடுக்காக இருந்தன அவற்றில் ஒரு புடவையையும் பட்டுக் கவசமும் எடுத்துக் கொண்டு குழல்வாய் மொழியின் தூக்கம் கலைந்து அவள் எழுந்துவிடாமல் மெதுவாக நடந்து அதே அறையின் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் போய் மறைந்தான் கூத்தன்.

அவன் மறைந்த இடம் பெண்கள் கப்பலில் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக மறைவிடம் போல் பட்டுத் திரைகளால் தடுக்கப்பட்டிருந்த ஒதுக்கிடமாகும். அவன் அந்தத் திரை மறைவில் போன சிறிது நேரத்துக்கெல்லாம் தற்செயலாக விழித்துக் கொண்ட குழல்வாய்மொழி படுக்கையில் எழுந்திருந்து உட்கார்ந்து கொண்டாள். தான் காற்றுக்காகத் திறந்து வைத்துவிட்டுப் படுத்துக் கொண்ட அறைக் கதவை எப்போது யார் உட்புறம் வந்து தாழிட்டிருக்க முடியுமென்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டது. படுக்கையில் உட்கார்ந்தபடியே அறைக்குள் நான்கு பக்கமும் மேலோட்டமாகப் பார்த்து வேறு யாரும் தன் அறைக்குள் இல்லையென்று தீர்மானித்தாள் குழல்வாய்மொழி. ஆனால் அதே சமயம் தன்னுடைய 'கலிங்கங்'களும் (ஆடைகளும்) அலங்காரப் பொருள்களும் அடங்கிய தந்தப் பெட்டி திறந்து கிடந்ததைப் பார்த்தவுடன் அவளுடைய சந்தேகமும், பயமும் மேலும் வளர்ந்தன. அவள் முதுகுக்கு நேரே பின்புறம் தான் அந்த மறைவிடம் இருந்தது. எழுந்திருந்து வாசல் கதவைத் திறந்து சேந்தனையாவது, கூத்தனையாவது கூப்பிட்டு அறையை நன்றாகச் சுற்றிப் பார்க்கச் சொல்லலாமென்று நினைத்தாள் குழல்வாய்மொழி.

எழுந்திருப்பதற்காகப் படுக்கையிலிருந்து வலது காலை எடுத்து வைத்தாள் அவள். திடீரென்று பின்பக்கமிருந்து இரு மென்மையான கைகள் முரட்டுத்தனமாக அவள் வாயைப் பொத்தின. பயந்து வீறிட்டு ''வென்று கூக்குரலிட நினைத்தால் குழல்வாய்மொழி. முடியவில்லை. அவளது மென்மையான பொன்னிற உடல் பயத்தால் நடுங்கியது. கண்விழிகள் பிதுங்கின. தலையைச் சிரமப்பட்டுத் திருப்பிப் பின்புறம் பார்த்தாள். வனப்பே வடிவமாக ஒரு பெண் நின்று கொண்டு அவளை அந்தப் பாடு படுத்திக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் உடுத்தியிருந்த பட்டுப்புடவையையும், கச்சையையும் (மார்பணி) குழல்வாய்மொழி கவனித்தாள். அவை தன் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிந்தது. 'ஒரு பெண்ணுக்கா அவ்வளவு துணிவு? ஒரு பெண்ணின் கைகளுக்கா அந்த முரட்டுத்தனம்?' - பயத்துக்கும் நடுக்கத்துக்கும் ஊடே இப்படி ஒரு பெண்ணிடம் நடுங்கி நிற்கிறோமே என்ற ஆச்சரியமும் அவளை ஆட்கொண்டது.

அந்தப் பெண் ஒரு கையால் குழல்வாய்மொழியின் வாயைத் திறக்க முடியாதபடி அழுத்திப் பொத்திக் கொண்டே, இன்னொரு கையால் கூர்மையான வாளை அவள் முகத்துக்கு நேரே காட்டி, "இடையாற்று மங்கலத்து அழகியே! உன் பயம் அநாவசியமானது. கொஞ்சம் என் முகத்தையும், குரலையும் கவனித்துப் பார். நான் யாரென்பது தெரியும். உன் உயிருக்கோ, உடலுக்கோ என்னால் ஒரு துன்பமும் ஏற்படாது. ஆனால் நீ மட்டும் கூச்சல் போட்டு என்னைக் காட்டிக் கொடுக்க முயன்றாயோ, நான் எப்படி நடந்து கொள்வேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது" என்று கூறினாள். குழல்வாய்மொழி நன்றாகத் தலையைத் திருப்பி மருண்ட விழிகளால் அந்த முரட்டுப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கு அந்த உண்மை புரிவதற்குச் சில விநாடிகள் தேவைப்பட்டன. 'ஆகா! இந்தக் கீச்சுக் குரலும் அழகு முகமும் கூத்தனுடையவை அல்லவா? கூத்தன் ஆணா? பெண்ணா? இப்போது நான் காண்பது தான் அவனுடைய உண்மைக் கோலமா அல்லது காலை வரையில் கண்ட ஆண் கோலம் தான் உண்மையா?' என்று எண்ணி மனம் குழம்பினாள் குழல்வாய்மொழி. அவளுடைய நினைவுகள் தடுமாறின.

"இன்னும் நன்றாக உற்றுப் பார்த்தால் என்னை நீ தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் அம்மா! எந்த வல்லாள தேவனின் தங்கையைப் பற்றி நேற்று நீங்கள் சேந்தனிடம் மிக அலட்சியமாக விசாரித்தீர்களோ, அந்தப் பெண் பகவதிதான் இப்போது உங்களைப் பயமுறுத்திக் கொண்டு நிற்கிறாள்" என்று சிரித்துக் கொண்டே அந்தப் பெண் தன்னைப் பற்றிக் கூறிய போது குழல்வாய்மொழியின் கண்கள் ஆச்சரியத்தால் அகன்றன. பகவதி மேலும் பேசினாள்: "இன்னும் கேள்! நீயும் சேந்தனும் சந்திப்பதற்கு முன்பே நான் குமாரபாண்டியரைச் சந்தித்து விடுவேன். அப்படிச் சந்தித்தால் உங்கள் வரவைப் பற்றிச் சொல்கிறேன். என்னை இதே கப்பலில் பிரயாணம் செய்ய விட்டதற்காக நான் உனக்கு எவ்வளவோ நன்றி சொல்ல வேண்டியதிருக்க இப்படிக் கத்தியைக் காட்டிப் பயமுறுத்துகிறேனே என்று கோபிக்காதே. இப்போது செய்திருப்பது போல் உன் வாயை அடைக்காமல் விட்டிருந்தால் இந்தச் சமயத்தில் வியப்புமயமான உன் உள்ளத்து உணர்ச்சிகள் என்னை நோக்கி எவ்வாறு வார்த்தைகளாக வெளியேறுமோ? என்னென்ன கேள்விகள் என்னிடம் நீ கேட்பாயோ? எப்படி எப்படிச் சீறுவாயோ? அவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நான் இப்போது இந்தக் கப்பலிலிருந்து அவசரமாகத் தப்பிச் செல்லப் போகிறேன். இதோ இந்தக் கீழத்தளத்திலிருந்து கயிற்றைக் கட்டிக் கொண்டு பின்புறமாகக் கடலில் இறங்கிச் சிறிது தூரம் நீந்திக் கரை சேர்ந்து விடுவேன். அதற்குள் கூச்சல் போட்டு நீ என்னைக் காட்டிக் கொடுத்து விடலாமென்று நினைக்காதே! கூச்சல் போடவோ, நகரவோ முடியாமல் உன்னை இந்த அறையில் கட்டிப் போட்டு விட்டுத்தான் நான் புறப்படுவேன். 'ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்ள முடியுமா?' என்று என்னைப் பற்றிக் கேவலமாக நினைக்காதே! சந்தர்ப்பம் தான் காரணம், அம்மா. வாயை அடைக்காமலும் கத்தியைக் காட்டாமலும் இருந்தால் நீயே எனக்குப் பயப்பட மாட்டாய். அதனால் தான் நான் இப்படி நடந்து கொள்ள வேண்டியதாயிற்று."

இவ்வாறு சொல்லிக் கொண்டு குழல்வாய்மொழியைப் படுக்கையில் தள்ளிக் கட்டிலோடு கட்டிலாகக் கயிற்றினால் கட்டி விட்டாள் பகவதி. குழல்வாய்மொழியின் மென்மையான கொடியுடல் வீர ரத்தம் ஓடும் தளபதியின் தங்கையை எதிர்த்துத் திமிறிக் கொண்டு போராட முடியவில்லை. ஆகவே கட்டுண்டாள்.

அவள் கண் காணவே அறைக் கதவைத் திறந்து கொண்டு கப்பலின் பின்புறத்து வழியே கயிறு கட்டி இறங்கிக் கடலில் பாய்ந்து விட்டாள் பகவதி. கயிற்றைப் பிடித்துக் கொண்டு இறங்கு முன் கடைசியாக நிமிர்ந்து பார்த்து, "இடையாற்று மங்கலத்துப் பெண்ணே! நாராயணன் சேந்தன் வந்தால் 'கூத்தன் தன்னுடைய கூத்தை முடித்துக் கொண்டு போய் விட்டான்' என்று சொல்லிவிடு!" என்று பகவதி கூறிச் சென்ற சொற்கள் குழல்வாய்மொழியின் உள்ளத்தைக் கொதிக்க வைத்தன. 'ஏமாற்றப் பட்டோம்' என்று நினைக்கும் போது குழல்வாய்மொழிக்கு வேதனையாக இருந்தது.

கட்டிலோடு கட்டியிருந்த கட்டுகளை நெகிழ்க்க முயன்றாள்; முடியவில்லை. அரை நாழிகைக்குப் பின் சேந்தன் தூக்கம் கலைந்து எழுந்த சோர்வோடு கொட்டாவி விட்டுக் கொண்டே கீழ்த்தளத்துக்கு வந்தான். அங்கே குழல்வாய்மொழி இருந்த நிலையைப் பார்த்ததும் பெரியதாகக் கூக்குரலிட நா எழுந்தது அவனுக்கு. அதை வலுவில் அடக்கிக் கொண்டு, கட்டுகளை அவிழ்த்துத் தன் நினைவற்றுத் துவண்டு கிடந்த குழல்வாய்மொழிக்கு மூர்ச்சை தெளிவித்தான். நிதானமாக - ஆனால் கலவரமுற்ற மனத்தோடு "என்ன நடந்தது?" என்று அவளிடம் கேட்டான். அவள் 'கோ'வென்று வாய்விட்டுக் கதறி அழுதுவிட்டாள். அவள் அழுகையைத் தணித்து ஆறுதல் கூறி மெல்ல நடந்ததை அறிந்தான் சேந்தன். "கூத்தன் தன்னுடைய கூத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்" என்று அவள் அதைச் சொல்லி முடித்த போது, "எனக்கு அப்போதே தெரியும்!" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான் சேந்தன்.

---------

 

3.6. பொல்லாத மழைப் புயல்

 

சக்கசேனாபதி வந்து கூறிய செய்தியைக் கேட்டதும் குமாரபாண்டியனின் மனத்தில் உணர்ச்சியலைகள் மேலெழுந்து பொங்கின. 'தமனன் தோட்டத்து'த் துறையில் ஈழ நாட்டுக் கடற்படை வீரர்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் கப்பல் யாருடையதாக இருக்கும்? அதில் வந்திருப்பவர்கள் யாராயிருப்பார்கள்?' என்ற சந்தேகம் அவன் நினைவுகளை வளர்த்தது.

ஆனால், சக்கசேனாபதி அந்த நினைவுகளை வளர விடவில்லை. "நாளைக்கு அதிகாலையில் நாமிருவருமே தமனன் தோட்டத்துக்குப் போய்ப் பார்க்கலாம். நீங்கள் செம்பவழத் தீவில் கண்ட எதிரிகளின் கப்பலாக இருந்தால் அதிலிருப்பவர்களைக் கீழிறக்கி விசாரிக்கிற முறைப்படி விசாரிப்போம்" என்று கூறினார் அவர். அப்போது அவர்களுடன் அங்கிருந்த கனகமாலை "சேனாபதித் தாத்தா! நானும் நாளைக்கு உங்களோடு தமனன் தோட்டத்துக்கு வரப் போகிறேன். நீங்கள் மறுப்புச் சொல்லாமல் என்னையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும்!" என்று பிடிவாதம் பிடித்தாள்.

"ஐயோ, நீ கூட வருகிற சந்தர்ப்பமில்லை அம்மா இது! நாங்கள் ஒரு முக்கியமான காரியமாகப் போய்விட்டுத் திரும்பி விடுவோம்" என்று சேனாபதி அந்தப் பெண்ணின் விருப்பத்தை மறுத்தார். பின்பு சக்கசேனாபதியும் குமாரபாண்டியனும் காசிப மன்னரிடம் போய்ச் சொல்லிக் கொண்டார்கள்.

"இப்படி ஒரு கப்பல் உங்களை இரகசியமாகத் தொடர்ந்து பின்பற்றி வந்ததென்ற விவரத்தை இங்கு வந்ததுமே நீங்கள் என்னிடம் சொல்லியிருக்கலாமே! சொல்லாததனாலும் பரவாயில்லை. இப்போது உடனே போய் அந்தக் கப்பலைக் கவனியுங்கள். அதிலிருப்பவர்கள் குமாரபாண்டியனின் எதிரிகள் என்று சந்தேகப்படுவதற்கு ஏற்றவர்களாயிருந்தால் அவர்களைச் சிறைப்பிடித்து இங்கேயே கொண்டு வாருங்கள்" என்று கூறி, அவர்களுக்கு விடை கொடுத்தார் ஈழ நாட்டு மன்னர். பயணம் தொடங்குவதற்கு முன் நினைவாகத் தன் வலம்புரிச் சங்கை உடனெடுத்துக் கொண்டான் இராசசிம்மன்.

வைகறை மெல்லிருள் விலகுவதற்கு முன் அவர்கள் இருவரும் பொலன்னறுவையிலிருந்து புறப்பட்டார்கள். என்றுமில்லாதபடி அவர்களுக்கென்றே வாய்த்தது போல் அன்றைக்கு இயற்கைச் சூழ்நிலை மிக அற்புதமாக இருந்தது. மெல்லச் சுழன்று வீசும் குளிர்ந்த காற்றுடனே ஊசி ஒழுகுவது போல் சாரல் பெய்து கொண்டிருந்தது. வானம் பிறந்த மேனியாய்த் தனது நீலநிறத்தைத் திறந்து காட்டிக் கொண்டிராதபடி மேகச் சுருள்கள் திட்டுத் திட்டாக அடைந்திருந்தன. எல்லோருடைய கவனத்தையும் கவரத்தக்க மிகப் பெரிய காரியமொன்றைத் திடீரென்று செய்வதற்கு இருக்கிற மனிதன் மாதிரி, இயற்கை அமைந்து அடங்கித் தன் ஆற்றலை ஒன்றுபடுத்திக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

"இன்றைக்கு மாலைக்குள் பெருமழை வரலாம் போலிருக்கிறது!" என்று குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டே சொன்னார் சக்கசேனாபதி. இராசசிம்மன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். ஒரே மேகக் குழப்பம். அத்தனையும் கனிந்த சூல் கொண்ட கருமேகங்கள்.

 

பொலன்னறுவையிலிருந்து நேர் மேற்கே சென்றால் தமனன் தோட்டம் தான். அனுராதபுரத்துக்குச் செல்லாமல் சிம்மகிரி, விசிதபுரம் ஆகிய ஊர்களைக் கடந்து நேர்வழியாகவே பயணம் செய்வதென்று முடிவு செய்து கொண்டார்கள் அவர்கள். எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு வேக மிகுதி அவர்களுடைய குதிரைப் பயணத்தில் இருந்தது. இருவரும் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு செலுத்துவது போல் குதிரைகளைச் செலுத்தினர்.

"சக்கசேனாபதி! எனக்கென்னவோ நான் இங்கே அதிக நாட்கள் தங்கியிருக்க முடியுமென்று நம்பிக்கை ஏற்படவில்லை. எந்த விநாடியிலும் என்னைத் தேடிக் கொண்டு தென்பாண்டி நாட்டிலிருந்து ஆட்கள் வரலாம். விரைவாக நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்குமென்று என் மனத்தில் ஒரு தோற்றம் ஏற்படுகிறது" என்று போகும் போது இருந்தாற் போலிருந்து அவரிடம் கூறினான் இராசசிம்மன்.

"போர் ஏற்பட்டாலொழிய அவ்வளவு அவசரமாக உங்களைத் தேடிக் கொண்டு யாரும் வரப்போவதில்லை. தவிர, உங்களைத் தேடி வருவதற்கு நீங்கள் இங்கே தான் வந்திருக்கிறீர்கள் என்று யாருக்குத் தெரியும்? நீங்களாக எதையாவது மனத்தில் நினைத்துப் பதற்றமடையாதீர்கள், இளவரசே!" என்று அவர் அவனுக்குப் பதில் சொன்னார்.

அதைக் கேட்டு இராசசிம்மன் சிரித்தான். "காணாமல் போன நான் எங்கே சென்றிருப்பேன் என்று அனுமானிக்க முடியாத அளவுக்குத் தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரும், என் அன்னையும், தளபதியும் சிந்தனை குன்றியவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் அங்கில்லையென்றால் இங்கேதான் இருப்பேனென்று அவர்கள் மிக எளிதாகத் தெரிந்து கொள்ளுவார்கள்" என்று இராசசிம்மன் கூறிய போது சக்கசேனாபதி அதைக் கவனித்துக் காதில் வாங்கிக் கொள்ளாமல், கலக்கம் நிறைந்த பார்வையால் வானவெளியை நிமிர்ந்து பார்த்தார். "இன்றைக்கு நம்முடைய பயணம் நடுவழியில் எங்கேயாவது தடைப்படத்தான் போகிறது. வானம் இருக்கிற சீரைப் பார்த்தால் தன் ஆத்திரத்தை யெல்லாம் கொட்டித் தீர்த்துக் கொள்ளப் போகிற மாதிரி இருக்கிறது" என்று கவலை நிறைந்த குரலில் கூறினார். "மழை வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு நாம் யார்? ஈழ நாட்டுப் படைத் தலைவரும், பாண்டி நாட்டு இளவரசனும் பயணம் செய்கிறார்களென்றால் மழை கூட அவர்களுக்குப் பயப்பட வேண்டுமென்கிற அவசியம் உண்டா?" என்று சற்றே வேடிக்கையாகச் சக்கசேனாபதியை நோக்கிச் சொன்னான் குமாரபாண்டியன். கவலை நிழல் படியத் தொடங்கியிருந்த அவர் முகத்தில் அந்த வேடிக்கைப் பேச்சு கூட மலர்ச்சியை உண்டாக்கவில்லை.

 

சூரிய ஒளியே உறைக்காத மேக மூட்டம் உச்சிப் போது கழிந்து சில நாழிகைகளான பின்னும் நீடித்தது. அதனால் அந்திக்கு இன்னும் நெடுநேரம் மீதமிருந்த போதும் அப்போது இருட்டத் தொடங்கிவிட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இரவு நேரத்தில் தங்குவதற்குப் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டால் மழையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியிராதென்று சக்கசேனாபதி நினைத்திருந்தார்.

ஆனால் மழை அவருடைய நினைவை முந்திக் கொண்டு வந்து விட்டது. தனி மழையாக வரவில்லை. பயங்கரமான காற்றும், மழையும் ஒன்று சேர்ந்து கொண்டன. அந்தச் சமயத்தில் நடுக்காட்டில் கடல் போலப் பரந்து தேங்கிக் கிடந்த ஓர் ஏரியை ஒட்டி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பாளம் பாளமாக யாரோ சீவி எறிவது போல் அலைமோதியது. ஏரியின் நான்கு புறமும் காது செவிடுபடுகிறாற் போல் ஒரே பிரளயப் பேரொலியில் மூழ்கி விட்டனவா? காற்றுக் கடவுளுக்கும் மழைக் கடவுளுக்கும் போர் மூண்டு விட்டதா இடி ஓசையும், காட்டு மரங்கள் முறிந்து விழும் ஓசையும், காற்றொலியிலும் மழை ஒலியிலும் கலந்து சிறிதாகி ஒலித்தன. ஊழிக் காற்று, ஊழி மழை என்றெல்லாம் சொல்லுவார்களே அவையிரண்டும் ஒரே சமயத்தில் ஊழி எல்லையைக் காண ஆசைப்பட்டு விட்டவை போலக் கிளர்ந்து எழுந்து விட்டன என்று சொல்லத்தக்க நிலை.

ஏரியின் இக்கரையில் அவர்களுடைய வழிமேல் ஒரு பௌத்தப் பள்ளியும், அருகில் உயரமான பெரிய புத்தர் சிலையும் தெரிந்தன.

"இளவரசே! வேறு வழியில்லை. இங்கே தங்கிவிட வேண்டியதுதான். இந்த இடம் ஏரி நீர்ப்பரப்பைக் காட்டிலும் மேட்டுப் பாங்கானது. இதே வழி போகப் போக தாழ்ந்து பள்ளமான நிலத்தில் செல்கிறது. இந்தக் காற்றிலும், மழையிலும் எப்படி ஆகுமோ? இப்படியே தங்குவது தான் நல்லது" என்றார் சக்கசேனாபதி.

இந்தத் தீர்மானத்துக்கு வருவதற்குள் அவர்கள் இருவருடைய உடல்களும் தெப்பமாக நனைந்து விட்டன. இருவரும் தங்கள் குதிரைகளை விரட்டிக் கொண்டு போய் அந்தப் பௌத்தப் பள்ளிக்கு முன்பாக நிறுத்தினார்கள். ஆள் புழக்கமில்லாத காரணத்தால் கட்டடம் இருண்டு பாழடைந்திருந்தது.

"மழைக்கும் புயலுக்கும் பயந்து கொண்டு நடு வழியில் தங்கி நாம் ஆர அமரப் போய்ச் சேருவதற்குள் தமனன் தோட்டத்தில் பிடிபட்ட கப்பலும் ஆட்களும் தப்பிப் போனால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை" என்று சொல்லிக் கொண்டே குதிரையிலிருந்து இறங்கிக் கட்டடத்துக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன்.

"அப்படித் தப்ப விட்டு விடுவதற்கு ஈழ நாட்டுக் கடற்படை வீரர்கள் முட்டாள்கள் அல்லர்!" என்று பதில் கூறிக் கொண்டே அவனைப் பின்பற்றி உள்ளே சென்றார் சக்கசேனாபதி.

ஈர ஆடையோடு சோர்ந்து போய் ஓரிடத்தில் உட்காருவதற்காகக் குனிந்த குமாரபாண்டியன் ஒருவிதமாகப் பயங்கலந்த கூப்பாட்டோடு அந்த இடத்திலிருந்து துள்ளித் தாவினான்.

 

"என்ன? ஏன் இவ்வளவு பயம்" என்று அந்த இடத்தில் சிறிது குனிந்து பார்த்த சக்கசேனாபதியும் முதலில் மலைத்துப் பின் வாங்கினார். அடுத்த கணம் துணிவாக முன் சென்று கயிற்றைப் புரட்டி இழுப்பது போல் எதையோ சரசரவென்று பிடித்து இழுத்தார். ஓங்கிச் சுழற்றி வீசி எறிந்தார்.

பளபளவென்று நெளிந்து கருமை மின்னும் அந்தப் பொருள் போய் விழுந்த இடத்தில் சீறி எழுந்து படத்தைத் தூக்கியது! அப்பப்பா! எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! அவர் வீசி எறிந்தது ஒரு கருநாகம்!

"சக்கசேனாபதி! உங்களுடைய துணிவு ஈடு சொல்ல முடியாதது. எனக்கானால் நீங்கள் அதன் வாலைப் பிடித்து இழுத்த போது குடல் நடுங்கியது" என்று அவரைப் பார்த்து வியந்து கூறினான் இராசசிம்மன்.

ஓங்கிய படத்தைத் தரையில் அடித்துவிட்டுப் புதரில் புகுந்து மறைந்தது அது.

"ஐயோ! வேண்டவே வேண்டாம். மழையில் நனைந்து துன்புற்றாலும் சரி. மேலே பயணத்தைத் தொடரலாம். இந்தக் கட்டடத்தில் தங்கிக் கடிபட வேண்டாம். அந்தக் கருநாகத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு இந்த மண்டபம் முழுவதிலும் பாம்பு இருக்கும் போலத் தோன்றுகிறது" என்றான் குமாரபாண்டியன்.

"அதெல்லாம் வீண் பிரமை. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த இடத்தை விட்டு நகர்வது நடவாத காரியம்" என்று சக்கசேனாபதி உறுதியாகக் கூறினார். குமாரபாண்டியன் அந்த இடத்தில் உட்காருவதற்கே பயமும் அருவருப்பும் அடைகிறவனைப் போல் ஒதுங்கி நின்றான்.

"அதோ! இன்னும் யாரோ நமக்குத் துணையாக இதே கட்டடத்தில் தங்குவதற்கு ஓடி வருகிறார், பாருங்கள்" என்று வெளியே கையை நீட்டிக் காண்பித்தார் சக்கசேனாபதி. நடுத்தர வயது மதிக்கத்தக்க தோற்றமுள்ள புத்தபிட்சு ஒருவர் ஓடி வந்து கட்டடத்துக்குள் நுழைந்தார்.

"அடிகளே! இந்த மழையிலும், காற்றிலும் ஏன் இப்படித் துன்பப்பட்டுக் கொண்டு ஓடி வருகிறீர்கள்? ஏரிக்கு அக்கரையில் இருக்கிற தவப்பள்ளியிலேயே தங்கியிருக்கலாமே! இப்போது ஏரிக்கரையோரமாக நடந்து வழியைக் கடப்பதே பயப்பட வேண்டிய செய்தியாயிற்றே?" என்று அனுதாபத்தோடு வந்தவரை விசாரித்தார் சக்கசேனாபதி.

மொட்டைத் தலையில் வழிந்த தண்ணீரைத் துடைத்துக் கொண்டே பதில் சொன்னார் பிட்சு: "அப்படித்தான் செய்ய நினைத்தேன், ஐயா! யாரோ ஒரு சிறு பெண்பிள்ளைக்கு இரக்கப்படப் போக இந்தக் கதிக்கு வர நேர்ந்தது. நிமிர நிமிர தண்ணீரோடு அலை பாய்ந்து கொண்டிருக்கிற ஏரிக்கரையில் சிறு வயதுப் பெண் ஒருத்தி வழி தெரியாமல் தயங்கி நின்று கொண்டிருந்தாள். எனக்குப் பரிதாபமாக இருந்தது. 'எங்கே அம்மா போக வேண்டும்?' என்று கேட்டேன். 'எனக்கு இந்த நாட்டு அரசரின் அரண்மனைக்குப் போக வேண்டும்' என்று துணிச்சலோடு சொன்னாள் அவள். நடுக்காட்டில் நின்று கொண்டு அரண்மனைக்குப் போக ஆசைப்படும் அந்தப் பெண் பைத்தியமோ என்று எனக்குத் தோன்றியது.

"மழையும் காற்றுமாக வருகிறது. பக்கத்திலிருக்கிற தவப்பள்ளியில் போய்த் தங்கிவிட்டுக் காலையில் அரண்மனைக்குப் புறப்படு அம்மா! நானுன் உன்னோடு கூட அரண்மனைக்கு வருகிறேன் என்றேன். அந்தப் பாவிப் பெண் என்னைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டு காட்டுப் பாதையில் மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடக் கூடாதே என்று அவளையுமறியாமல் பின் தொடர்ந்தேன். நான் பின்பற்றுவதை அவள் கண்டு கொண்டாள். என்னைப் பற்றி வேறு விதமாக நினைத்துக் கொண்டு எங்கோ ஓடி மறைந்து விட்டாள். இவ்வளவு தொலைவு வந்த பின் அக்கரையிலுள்ள தவப்பள்ளிக்குப் போக வேண்டாமென்றுதான் இங்கே ஒண்டிக் கொள்ள வந்தேன்" என்று அவர் கூறி முடித்ததும், "ஐயோ பாவம்! அந்தப் பெண் இந்தப் பக்கமாக வந்தால் நாம் மூன்று பேருமாகச் சமாதானப்படுத்தி யாரென்று விசாரிக்கலாமே?" என்று அநுதாபத்தோடு சொன்னார்கள் சக்கசேனாபதியும் இராசசிம்மனும்.

"அவளைப் பார்த்தால் வெகு தொலைவிலிருந்து வந்த வேற்று நாட்டுப் பெண் மாதிரி இருந்தது. அதனால் தான் நான் உதவி செய்யப் போனேன். அந்த முரட்டுத் துணிச்சல்காரி என் மேலேயே சந்தேகப்பட்டு விட்டாள்" என்று கூறிக் கொண்டே இருண்ட மூலை ஒன்றில் சாய்ந்து கொள்ளப் போனார் புத்தபிட்சு.

கருநாகம் இருந்த செய்தியைச் சொல்லி அவரை எச்சரித்தார்கள் அவர்கள். பிட்சு சிரித்தார். "நாமாக ஏற்படுத்திக் கொள்கிற பயங்கள் தான் வாழ்க்கையின் துன்பத்தை வளர்ப்பன. தூங்கும் போது என் உடல் பற்றிய நினைவு எனக்கு உரிமை இல்லை. ஆகவே நான் பாம்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அது என்னைத் தீண்டும் உரிமை பெற்றிருந்தால் அதைத் தடுக்க நான் யார்?" என்று கணீரென்று பதில் சொன்னார் அவர். கால் நாழிகைக்குப் பின் பிட்சு நன்றாகத் தூங்கும் குறட்டை ஒலி கேட்டது. இருந்த பாம்பு போன பின்பு இல்லாத பாம்பை நினைத்துத் தூங்காமல் விழித்திருந்த அவர்கள் இருவருக்கும் அவர் மேல் பொறாமையாக இருந்தது. அவ்வளவு தூய்மையான துறவி மேல் சந்தேகப்பட்ட பெண்ணை மனத்தில் சபித்தார்கள் அவர்கள். மழையும் தணியவில்லை, காற்றும் தணியவில்லை. எங்கோ ஒரு மூலையில் ஏரி உடைத்துக் கொண்டு தண்ணீர் பாய்கிற ஓசையை அவர்கள் கேட்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் பயங்கர ஓலமும் எழுந்தது. சக்கசேனாபதி பிட்சுவை எழுப்பி அந்த ஓலத்தைக் கேட்கச் சொன்னார். சிறிது நேரம் உற்றுக் கேட்ட பிட்சு, "அவளுடைய குரல் போலத்தான் இருக்கிறது" என்று தீர்மானமாகச் சொன்னார்.

--------------

3.7. இருளில் எழுந்த ஓலம்

 

"பிட்சுவையும் கூட்டிக் கொண்டு வாருங்கள். மூன்று பேருமாக ஓடிப் போய்ப் பார்க்கலாம். அந்த அறியாப் பெண் எங்கே தவிக்கிறாளோ?" என்று இராசசிம்மன் சக்கசேனாபதியைத் துரிதப்படுத்தினான். அத்தனை ஓசைகளுக்குமிடையே அந்தப் பெண் குரலின் ஓலம் இன்னும் அவர்கள் செவிகளில் விழுந்து கொண்டு தான் இருந்தது.

"ஓர் உயிரைக் காப்பாற்ற உதவும் திருப்பணியில் இந்த ஏழையின் உடல் எந்த விதத்திலானாலும் தன்னை இழக்கத் தயாராயிருக்கிறது" என்று கூறிக் கொண்டு தாமாகவே எழுந்து வந்தார் புத்த பிட்சு. அந்த மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மூன்று பேரும் சிறிது தூரம் ஓடிப் போய் தேடிப் பார்த்தார்கள். அதற்கு மேல் ஓடுவதற்குப் பாதையே இல்லை. ஏரி உடைப்பெடுத்துக் குறுக்கே பாய்ந்து கொண்டிருந்தது. "இனி நம்மால் ஆவது ஒன்றுமில்லை. அவளுக்கு வகுத்த வினைப்பயனின்படி ஆகும்" என்று சொல்லிக் கொண்டே திரும்பி நடந்தார் பிட்சு. அவர்களும் திரும்பி நடந்தார்கள். பிட்சு மறுபடியும் நிம்மதியாகத் தூங்கினார். பாம்புப் பயத்தை மறந்து சக்கசேனாபதி கூடத் தூங்கத் தொடங்கி விட்டார். தண்ணீரைத் தாங்குகிற பளிங்குக் கிண்ணம் மாதிரி உணர்ச்சிகளை உணர்ந்தும் அவற்றுக்கு இரையாகாமல் வாழ இந்த இரண்டு வயதான மனிதர்களும் எங்கே தான் கற்றார்களோ என்று விழித்திருந்த இராசசிம்மன் எண்ணி வியந்தான். அந்தப் பெண்ணின் ஓலம் நின்று விட்டாலும் கேட்டுக் கொண்டே இருப்பதாக விழித்திருந்த அவன் செவிகளுக்குப் பிரமை உண்டாயிற்று. காற்றிலும், மழையிலும், இருளிலும் அந்தக் காட்டுக் கட்டடத்தில் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் மேல் தானாகவே ஒரு வெறுப்பு உண்டாயிற்று அவனுக்கு.

'மழை பெய்த ஈர மண்ணில், அனுபவமில்லாத சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாகக் கீறி வைத்த அரைகுறைச் சித்திரங்கள் மாதிரி இருக்கிறது இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை. வாழ்வின் உணர்ச்சிகளில் ஒன்றிலாவது முழுமையின் ஆழத்தைப் பார்க்கவில்லையே! பொறுப்பில், வீரத்தில், வெற்றியில் - எதிலும் முழுமை தெரியவில்லையே. அன்பு அல்ல காதல்; காதலும் அல்ல பாசம். இவற்றில் கூட முழுமையாக வாழவில்லை நான். எத்தனை நாட்களை இப்படிக் கழிக்க முடியும்? கல்பகோடிக் காலம் வாழ வேண்டாம். ஒரு திங்கட் காலம் வாழ்ந்தாலும் ஏதாவதொரு உணர்ச்சியில் முழுமையாகத் தோய்ந்து வாழ வேண்டும். ஊழியூழியாக வாழ்வதை விட இந்தச் சிறிது காலத்து முழுமை உயர்ந்தது, பெரியது, இணையற்றது.'

முழுமையைப் பற்றி நினைத்த போது அவனுக்கு மதிவதனியின் நினைவு வந்தது. இடுப்பில் இடைக் கச்சத்துடன் சேர்த்துப் பிணைத்துக் கொண்டிருந்த சிறிய பட்டுப் பையைத் திறந்தான். இருளிலும் தன் நிறத்தையும், ஒளியையும் தனியே காட்டும் அந்தப் பொன்னிற வலம்புரிச் சங்கை எடுத்தான். பித்தன் செய்வது போல் கண்களில் ஒற்றிக் கொண்டான். கைவிரல்களால் வருடியவாறு மடியில் வைத்துக் கொண்டான். கப்பலில் தான் பாடிய கவிதை நினைவு வந்தது அவனுக்கு. உணர்ச்சித் துடிப்பைச் சொற்களின் நளினமாக்கிய விந்தையை நினைத்த போது மட்டும் மனத்தில் முழுமை தோன்றுவது போலிருந்தது அவனுக்கு. அரசாட்சியையும் வெற்றி தோல்விகளையும் எண்ணிப் பார்த்த போது அவன் உணர்ச்சிகளில் முழுமை தோன்றவில்லை.

'அருமை அன்னையும் மகாமண்டலேசுவரரும் தன்னிடமிருந்து எதிர்பார்த்த கடமைகளை நினைத்த போது அவற்றில் முழுமை தோன்றவில்லை. ஏனென்றால் அந்தக் கடமைகளை அவன் இன்னும் நிறைவேற்றவேயில்லை. இடையாற்று மங்கலத்தின் அழகிய சூழ்நிலையில் குழல்வாய்மொழி என்ற பெண்ணோடு பழகிய பழக்கத்தை நினைக்கும் போது முழுமை ஏற்படவில்லை. மதிவதனி என்ற பெண்ணைச் சந்திக்க நேராமலிருந்திருந்தால் ஒரு வேளை இடையாற்று மங்கலத்து அழகியாவது, கனகமாலை என்ற பேரெழில் நங்கையாவது அவனைக் கவர்ந்திருக்கலாமோ என்னவோ? வெள்ளத்தில் பழைய தண்ணீர் அடித்துக் கொண்டு போகப் படுகிற மாதிரி அவன் மனத்தின் அரைகுறை நினைவுகளையெல்லாம் 'மதிவதனி' என்ற முழுமை இழுத்துக் கொண்டு விட்டதா? அல்லது அந்த முழுமையில் அவன் மூழ்கி விட்டானா? பார்க்கப் போனால் முழுமையான வாழ்வு என்பதுதான் என்ன? என்னைப் போல் அரச குடும்பத்தில் பிறந்தவனுக்குப் போர்களும், அவற்றில் வெற்றி வாகை சூடுவதும் தான் முழுமையான வாழ்வு என்று அரசியல் அறம் சொல்லலாம். அப்படிச் சொல்லுவது இதற்கு இலக்கணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டும் எனக்கு முழுமையான வாழ்வாகத் தோன்றவில்லையே? முழுமையாவது மண்ணாங்கட்டியாவது? அரசனாகப் பிறந்தாலென்ன ஆண்டியாகத் தோன்றினாலென்ன? பிறப்பது மண்ணில்தானே வாழ்வதும் மனிதனாகத்தானே! மனிதனுடைய வாழ்க்கை, அது ஒரு ஓட்டைப் பானை. ஒரு பக்கம் முழுமை கண்டால் இன்னொரு பக்கமாக ஒழுகி விடுகிறதே! ஒன்றை நிறைவாக அனுபவித்தால் இன்னொன்றை இழக்க வேண்டியதுதான். நிறைவு, முழுமையெல்லாம் அமர வாழ்க்கையில் தான் உண்டு போலிருக்கிறது. தேனீக்களை விரட்டாமல் தேனடையிலுள்ள தேனைக் குடிக்க முடியுமா? வாழ்விலுள்ள துன்பங்களைப் போக்காமல், குறைகளை நீக்காமல் முழுமையும் நிறைவும் காண்பது எங்கே?

'அறத்தையும், அன்பையும், கருணையையும் கொண்டே வாழ்ந்து விட என் தாய்க்கு ஆசை. அறிவையும், சூழ்ச்சியையும் கொண்டே வாழ்ந்து விட மகாமண்டலேசுவரருக்கு ஆசை. படைகளையும், போர்க்களங்களையும், உடல் வன்மையையும் கொண்டே வாழ்ந்துவிட வல்லாளதேவனுக்கு ஆசை. இந்த ஆசைகள் தான் முழுமையான வாழ்வா? குழல்வாய்மொழி என்ற பெண்ணுக்குக் கூட என்னையும் எனது அரச போக ஆடம்பரங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையிருக்கிறது. என்னுடைய பதவியும், பெருமையும், தகுதியும் தெரியாமலே என் மேல் அன்பு செலுத்தவும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு என் மேல் இருக்கும் அன்போ எனக்கு அவள் மேலிருக்கும் அன்போதான் முழுமையானதா?

 

'எது முழுமை? எது நிறைவு? அழியாதது எது? பரிபூரணமான வாழ்வு எது? என்னைப் போன்று பெரிய அரச மரபின் வழித் தோன்றலாக வந்த ஓர் இளைஞனுக்கு அது எப்படிக் கிடைக்கும்?' என்று இப்படி உருக்கமான பல நினைவுகளை மனத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தான் இராசசிம்மன்.

பொழுது விடிவதற்குச் சிறிது நேரத்துக்கு முன் சக்கசேனாபதியும் புத்தபிட்சுவும் தூக்கம் விழித்து எழுந்திருந்த போது வாசற்படியில் சாய்ந்து உட்கார்ந்தவாறே இராசசிம்மன் கண்ணயர்ந்திருப்பதைக் கண்டனர். அவன் மடியில் சிறிய குழந்தை ஒன்று படுத்துத் தூங்குவது போல் அந்தச் சங்கு கிடப்பதைப் பார்த்துச் சக்கசேனாபதி சிரித்துக் கொண்டார்.

முதல் நாள் காற்றும், மழையும் ஓய்ந்து போயிருந்தன. எனினும், அந்த மழையும் புயலும் உண்டாக்கிய சீரழிவுகளும் அலங்கோலங்களும் கண்பார்வை சென்ற இடமெல்லாம் தெரிந்தன. வானம் அழுக்கு நீக்கி வெளுத்து விரித்த நீலத்துணி போல் வெளிவாங்கியிருந்தது. அவர்களுடைய குதிரைகள் நனைந்து நிறங்கலைந்த மேனியோடு கட்டடத்துக்கு அருகில் ஒண்டிக் கொண்டு நின்றன. குமாரபாண்டியனைத் தொட்டு எழுப்புவதற்காக அருகில் சென்றார் சக்கசேனாபதி. ஆழ்ந்த தூக்கமில்லாமல் கண்களை மூடிச் சோர்ந்து உட்கார்ந்திருந்ததால் அவருடைய காலடி ஓசையைக் கேட்டே விழித்துக் கொண்டான் அவன். சங்கை எடுத்துப் பட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான். சக்கசேனாபதியைப் பார்த்து, "அடடா! பொழுது விடியப் போகிறது போலிருக்கிறது. நாம் புறப்படலாமா? நண்பகலுக்குள் எப்படியும் தமனன் தோட்டத்தில் இருக்க வேண்டும் நாம்" என்றான்.

"அவசரப்படாதீர்கள், இளவரசே! நேற்று மழையிலும் காற்றிலும் மரங்கள் ஒடிந்து பாதையெல்லாம் சீர்கெட்டிருக்கிறது. ஏரி உடைப்பினால் வேறு வழிகள் அழிந்திருக்கலாம். முதலில் சிறிது தொலைவு சுற்றித் திரிந்து பாதைகளைச் சரிபார்த்துக் கொண்டு வருவோம்" என்றார் சக்கசேனாபதி.

"தம்பி! பெரியவர் சொல்கிறபடி கேள். நிதானமாகப் பாதையைப் பார்த்துக் கொண்டு புறப்படுவதுதான் நல்லது! அவசரம் வேண்டாம். நானும் உங்களோடு தான் வரப் போகிறேன்" என்று புத்தபிட்சுவும் கூறினார்.

குதிரைகளை அங்கேயே விட்டு விட்டு மூவரும் வழிகளைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். பெரிய பெரிய மரங்களெல்லாம் வேரொடு சாய்ந்திருந்தன. அங்கங்கே தண்ணீர் தேங்கி வழியெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது. ஏரி உடைத்துக் கொண்டு பாய்ந்தோடிய நீர்ப்பிரவாகம் சில இடங்களில் பாதையைப் பயங்கரமாக அறுத்துக் குடைந்திருந்தது. காற்றும் மழையும் கொண்ட கோபத்திற்கு ஆளாகி அந்தக் காட்டின் அமைதியான அழகு தாறுமாறாகித் தோற்றமளித்தது.

 

"கண்ணுக்குத் தெரிகிற காட்சிகளைப் பார்த்தால் நேற்றிரவு அந்தப் பெண் உயிர் பிழைத்திருக்க முடியுமென்று என்னால் நம்பமுடியவில்லை. பாவம்! அவள் தலையில் எழுதியிருந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது" என்று புத்தபிட்சு பரிதாபமான குரலில் கூறினார். அவர் தம் வார்த்தையைச் சொல்லி முடிக்கவும், "அதோ பாருங்கள் அடிகளே! யாரோ விழுந்து கிடக்கிறாற் போலிருக்கிறது" என்று முகத்தில் பயமும், வியப்பும் படரச் சக்கசேனாபதி ஒரு புதரைக் கைநீட்டிக் காட்டிக் கூச்சலிடவும் சரியாக இருந்தது. முதல் நாளிரவு தண்ணீர் பாய்ந்து ஓடிய அடையாளம் அங்கே தெரிந்தது. மரக்கிளைகளின் முறிவுகளும் செடி கொடித் தூர்களும் அடர்ந்து பின்னிக் கிடந்த புதரில் தண்ணீர் இழுத்து வந்து செருகினாற் போல் அந்த உடல் கிடந்தது. தோற்றத்திலிருந்து பெண்ணுடல்தான் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

"அந்தப் பாவிப் பெண்ணாகத்தான் இருக்கும். நேற்று நான் எவ்வளவு ஆதரவோடு அவளிடம் பேசினேன். எப்படியாவது அவளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் என் உள்ளத்தில் உறுதியாயிருந்தது. ஆனால் புத்த பகவான் திருவுள்ளம் வேறாயிருந்திருக்கிறது. அடப் பாவமே! நேற்றே நான் சொல்லியபடி கேட்டிருந்தால் இப்படி ஆகியிருக்காதே! வாருங்கள் போய்ப் பார்க்கலாம்" என்று முன்னால் ஓடினார் புத்தபிட்சு. இராசசிம்மனும், சக்கசேனாபதியும் அவருக்குப் பின்னால் ஓடினார்கள். பிட்சு அந்தப் பெண்ணின் உடைகளைச் சரி செய்துவிட்டு, "அவள் தான் ஐயா! அநியாயமாகச் செத்துத் தொலைத்திருக்கிறாள்!" என்று கூறிக் கொண்டே, அந்த உடலைப் புதருக்குள்ளிருந்து வெளியே தூக்கி வந்து முகம் தெரியும்படி தரையில் கிடத்தினார். சக்கசேனாபதியின் விழிகளில் அநுதாபம் மின்னியது.

கண்களில் சந்தேகமும் பீதியும் மிளிரக் கொஞ்சம் கீழே குனிந்து அந்த முகத்தை உற்றுப் பார்த்தான் இராசசிம்மன். அவன் முகம் பயத்தால் வெளிறி வாய் கோணியது. அடுத்த கணம் அவன் வாயிலிருந்து வெளியேறிய ஒரு பெயர் அந்தக் காடு முழுவதும் எதிரொலித்து அலறிக் கொண்டிருந்தது.

---------

 

3.8. ஒரு துயர நிகழ்ச்சி

 

வெள்ளத்திலும், புயலிலும் சிக்கிக் கொண்டு மீளும் வழி தெரியாமல் இறந்து போன அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்துக் குமாரபாண்டியன் பெயர் சொல்லி அலறியதைக் கண்டதும் சக்கசேனாபதிக்கும் புத்தபிட்சுவுக்கும் அடக்க முடியாத வியப்பு ஏற்பட்டது.

 

முகத்தைப் பார்த்து இனங்கண்டு கொண்டதும் அவன் வாயிலிருந்து அலறலாக ஒலித்தது அந்த ஒரே ஒரு வார்த்தைதான். அதன் பின் அவன் வாயிலிருந்து வார்த்தையே பிறக்கவில்லை. விழிகள் விரிய முகத்தில் மலைப்பும், பீதியும் தெரிய, வாய் பேசும் ஆற்றல் இழந்து விட்டது போல் அப்படியே அசையாமல் நின்றான் அவன்.

"இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா? இவள் யார்?" என்று ஒரே சமயத்தில் சக்கசேனாபதியும் பிட்சுவும் அவனை நோக்கிக் கேட்டார்கள். சிறிது நேரம் அவர்கள் கேள்வியையே காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் மலைத்தது மலைத்தபடியே நின்ற இராசசிம்மன் பின்பு மெல்ல தலை நிமிர்ந்தான்.

"சக்கசேனாபதி! இது என்ன பரிதாபம்! தென்பாண்டி நாட்டிலிருந்து கடல் கடந்து வந்து இறங்கி இந்தப் பெண் தனியாக எப்படி இங்கே வந்தாள்? இவளுடைய விதி இங்கே வந்து முடிய வேண்டுமென்று தான் இருந்ததா?" என்று பரிதாபம் மிக்க குரலில் அவரை நோக்கிக் கூறினான்.

"இந்தப் பெண் யாரென்றே நீங்கள் இன்னும் எனக்குச் சொல்லவில்லையே?" என்று கேட்டார் அவர்.

"சந்தேகமேயில்லை! இவள் தென்பாண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் தங்கை! பகவதி என்று பெயர்! இவள் எப்படி எதற்காக யாருடைய உதவியால் இங்கே வந்தாள் என்பதல்லவா எனக்குப் புதிராக இருக்கிறது. எப்படியானாலும் இந்த அவலக் காட்சி என் நெஞ்சை உருக்குகிறது. இந்த வயதில் இந்தப் பெண்ணுக்கு இப்படி ஏற்பட்டிருக்க வேண்டாம்" என்று நா தழுதழுக்கக் கூறிவிட்டுக் கண்களில் திரண்ட நீரைத் துடைத்துக் கொண்டான் குமாரபாண்டியன்.

"இளவரசே! நீங்கள் பிழையாக அனுமானம் செய்கிறீர்கள். இவள் அந்தப் பெண்ணாக இருப்பாளென்று என்னால் நம்பமுடியவில்லை. அவளாவது, தென்பாண்டி நாட்டிலிருந்து இங்கே ஓடி வருகிறதாவது. தளபதியின் தங்கை மாதிரியே முக அமைப்பும், தோற்றமுமுள்ள யாரோ ஒரு பெண்ணாக இருப்பாள் இவள்" என்றார் சக்கசேனாபதி.

"எனக்கும் அப்படிச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்மை மதர்ப்பும் பெண்மை நளினமும் கலந்த அழகு முகம் அந்தப் பெண்ணுடையது போலவே இருக்கிறதே!" என்று இராசசிம்மன் கூறிய போது, 'சாவும், நோவும் கூடத் தனக்கு வேண்டியவர்களுக்கு வந்தால் தான் மனிதனுக்கு அனுதாபப்பட முடிகிறது. வேண்டாத, முன் பின் தெரியாதவருக்காக அனுதாபத்தைக் கூட அநாவசிய செலவு செய்ய மனிதன் தயாராயில்லை' என்று மனத்துக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டார் பிட்சு.

 

"நான் சொல்வதை நம்புங்கள். இது நிச்சயமாகத் தளபதியின் தங்கையாக இருக்க முடியாது. தோற்றத்திலுள்ள ஒற்றுமையே உங்கள் கண்களை ஏமாற்றுகிறது. கவலையை விடுங்கள்" என்று சக்கசேனாபதி உறுதியாகக் கூறினார்.

"நீங்கள் சொல்கிற மாதிரி இருந்தால் நல்லதுதான். ஆனால் நமக்காக அப்படி இருக்குமா? இந்தப் பாவிப் பெண் நேற்றிரவு அடிகள் சொன்னதைக் கேட்டு அவரோடு வந்திருக்கக் கூடாதோ? இப்படி உயிர் விடவா அடிகள் மேல் சந்தேகப்பட்டு மழையிலும் புயலிலும் திண்டாடினாள்? ஐயோ! விதியின் கொடுமையே!" என்று புத்த பிட்சுவிடம் பிரலாபித்தான் இராசசிம்மன். "துயரம் பொதுவானது, யாராயிருந்தாலும் மனம் வருந்திக் கலங்க வேண்டிய இளமைச் சாவு இது. ஆனாலும் நம் கையில் என்ன இருக்கிறது? நாம் துன்பங்களைக் காணவும், நுகரவும், உண்டாக்கவுமே பிறந்தவர்கள். வெறும் மனிதர்கள்" என்று உணர்ச்சி கொந்தளிக்கும் சொற்களால் இராசசிம்மனுக்கு ஆறுதல் கூறினார் பிட்சு.

"நாம் என்ன செய்யலாம்? நேற்றிரவு அவ்வளவு மழையிலும் காற்றிலும் இந்தப் பெண்ணின் ஓலம் கேட்டதும் நம் உயிர்களைக் கூடப் பொருட்படுத்திப் பயப்படாமல் எழுந்து உதவ ஓடி வந்தோம். தண்ணீர் உடைப்பு நம்மைத் தடுத்து விட்டதே. புத்திசாலிப் பெண்ணாயிருந்தால் பிட்சு கூப்பிட்ட போதே இக்கரைக்கு வந்திருக்க வேண்டும். பாவம், விதி முடிகிற சமயத்தில் அறிவு கூட நல்லது கெட்டதைப் பகுத்துணராமல் பிறழ்ந்து விடுகிறதே! இல்லையானால் கள்ளங்கபடமறியாத இந்த அடிகளைப் பற்றி ஐயமுற்றுப் பயந்திருப்பாளா இவள்?" என்று சக்கசேனாபதியும் சோகத்தோடு சொன்னார்.

ஆறுதல்களையும் மீறி இறந்து கிடக்கும் அந்தப் பெண்ணுடல் பகவதியினுடையதுதான் என்று குமாரபாண்டியனின் மனம் உறுதியாக எண்ணியது. ஆனால் அதைத் திடப்படுத்திக் கொள்ள இன்னும் சரியான சான்று இருந்தால் சந்தேகம் தீர்ந்து விடும். 'தளபதி வல்லாளதேவனின் தங்கையை நன்றாகப் பார்த்துப் பழக்கப்பட்டு அடையாளம் சொல்லக் கூடிய ஒருவர் இருந்தால் அவள் தானா என்பதை இப்போதே உறுதிப் படுத்திக் கொண்டு விடலாம். ஆனால் அவன் ஒருவனைத் தவிர அவளை அடையாளம் தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே?'

இராசசிம்மன் மனத்தின் உணர்ச்சிப் பரப்பெல்லாம் சோகம் கவ்விட, மேலே என்ன நினைப்பதென்று தோன்றாமல் மயங்கி நின்றான்.

"சக்கசேனாபதி! எனக்குத் தெரிந்த பெண்களுக்குள்ளே வல்லாளதேவனின் தங்கைக்கு ஒரு தனிக் குணம் உண்டு. பெண்ணின் அழகும், ஆணின் நெஞ்சு உரமும் கொண்டவள் பகவதி. ஒரு பெரிய வீரனின் தங்கை என்று சொல்வதற்கு ஏற்ற எல்லா இலட்சணங்களும் பகவதியிடம் உண்டு" என்று கண்களில் நீர் மல்க அவன் கூறினான்.

 

"நீங்கள் மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்து கிடப்பது அந்தப் பெண்ணாக இருக்க முடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது. நாம் இந்த விவரத்தைத் தமனன் தோட்டத்தில் விசாரித்து உறுதி செய்து கொள்ளலாம். இவள் பகவதியாயிருக்கும் பட்சத்தில் தமனன் தோட்டத் துறையில் வந்து இறங்கினால் தான் இந்தப் பாதையாகப் புறப்பட்டிருக்க முடியும். இந்தப் பெண்ணை அடையாளம் சொல்லி, 'இவள் எப்போது, யாருடன் எந்தக் கப்பலில் வந்து இறங்கினாள்' என்று கப்பல் துறை ஊழியர்களிடம் விசாரிப்போம். அந்த விசாரிப்புக்குக் கூட அவசியமில்லை. ஏனென்றால் இவள் பகவதியாயிருந்து கப்பலில் தென்பாண்டி நாட்டிலிருந்து வந்திருந்தால் தமனன் தோட்டத் துறையிலேயே கப்பலை விட்டுக் கீழிறங்க முடியாமல் நம் வீரர்கள் சிறைப்பிடித்து நிறுத்தியிருப்பார்கள். நான் தான் கப்பலைத் தடுத்து நிறுத்தும்படி கண்டிப்பான கட்டளையிட்டு வந்திருக்கிறேனே. நேற்றைக்கு முன் தினம் இரவு தமனன் தோட்டத்திலிருந்து எனக்கு வந்த தகவலிலிருந்து ஒரே ஒரு கப்பல் தான் பிடிபட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கப்பலில் வந்திருந்தால் இந்தப் பெண்ணை இறங்கி வர விட்டிருக்க மாட்டார்களே!" என்று சக்கசேனாபதி விளக்கமாகச் சொன்ன போது, அவர் சொல்கிற படியே இருக்கலாமென்று இராசசிம்மனுக்கும் தோன்றியது.

'ஒரே மாதிரி முக அமைப்பும், தோற்றமும் உள்ள பெண்கள் வேறு இடங்களில் இருக்க முடியும். இறந்து கிடக்கும் பெண் பகவதியைப் போன்ற தோற்றமுடைய வேறொருத்தியாகவும் இருக்கலாம்' என்று நினைத்து மன அமைதி அடைய முயன்றான். மனத்தின் வேதனையும், குழப்பமும், பிடிவாதமாகத் தணிவதற்கு மறுத்தன. சலனமில்லாத முகபாவத்தோடு நின்று கொண்டிருந்தவர் புத்த பிட்சு ஒருவர் தான். 'நன்றாகப் பழுத்த பழங்களெல்லாம் உதிராமல் இருக்கும் போது காற்றின் கொடுமையால் பிஞ்சுகளும், காய்களும் மரத்திலிருந்து உதிர்ந்து விடுவது போல் தோல் சுருங்கி நரை திரை மூப்பு கண்டவர்களுக்கெல்லாம் வராத சாவு இளைஞர்களுக்கு வந்து விடுகிறது. அவரவர்களுக்கென்று அளந்து வகுத்த நாட்களுக்கு மேல் யாரும் வாழப் போவதில்லை' என்று உலக நியாயங்களை எண்ணிப் பார்த்துக் கலக்கத்தைத் தவிர்த்தவர் அவர் ஒருவர் தாம்.

"இந்தச் சோக முடிவை எண்ணிக் கலங்கி இப்படியே நின்று கொண்டிருந்தால் செயலும், பயனும் நிறைந்த நம் நேரம் கடந்து போய்விடும். நாம் தமனன் தோட்டம் போக வேண்டுமே!" என்று தங்கள் காரியத்தை நினைவுபடுத்தினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் குனிந்த தலை நிமிராமல் நீண்ட பெருமூச்சு விட்டான்.

"இனியும் இப்படியே செயலிழந்து கவலைப்பட்டு நிற்பதில் பயனில்லை. வாருங்கள்! யாராயிருந்தாலும் இறந்து கிடக்கும் இந்தப் பெண் கொழுந்து நம்முடைய பரிதாபத்துக்கும் இரக்கத்துக்கும் உரியவள். செய்ய வேண்டியதைச் செய்து விட்டு நம் வழிகளில் நாம் நடப்போம்" என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் ஓடி அரித்திருந்த ஒரு பள்ளத்தில் அந்தப் பெண்ணின் உடலை எடுத்து இட்டார் புத்தபிட்சு. சக்கசேனாபதியும் அவருமாக இரு பக்கங்களிலும் உட்கார்ந்து கைகளால் மண்ணைத் தள்ளிக் குழியை மூட ஆரம்பித்தார்கள். மண்ணோடு அவர்கள் கண்ணீரும் குழியில் சிந்தியது. புதரில் மலர்ந்திருந்த காட்டுப் பூக்கள் சிலவற்றைக் கை நிறையப் பறித்துக் கொண்டு வந்து அந்தக் குழிக்குள் சொரிந்து விட்டு முகத்தை மூடிக் கொண்டு விசும்பினான் இராசசிம்மன்.

"தம்பீ! உணர்ச்சியை அடக்கு. நீ முகத்தை மூடிக் கொண்டு அழுவதைப் பார்த்தால் இவள் நீ நினைக்கிற பெண்ணென்றே உன் மனம் நம்பிவிட்டதாகத் தெரிகின்றது. மண்ணைச் சொரிந்தாலும், மலரைச் சொரிந்தாலும் வேறுபாடு தெரியாத நிலையை இந்தப் பெண் அடைந்து விட்டாள். உன் அனுதாபத்துக்குரிய உயிர் இப்போது இந்த உடம்பில் இல்லை. இது எலும்புச் சட்டம் வேய்ந்து நரம்பு நூலிட்டுத் தைத்த தோல் பை. இந்தக் கரிய கூந்தலும், நீல நெடுங் கண்களும், கோலப் புருவமும், காலக்கனலெரியில் அழியும் மாயங்கள். இந்தப் பெரியவர் அடிக்கடி உன்னை 'இளவரசே' என்று கூப்பிடுவதிலிருந்து நீ ஓர் அரசகுமாரனென்று தெரிகிறது. ஆளுங்குடியிற் பிறந்தவனுக்கு இறுகிய மனம் வேண்டுமென்று அரசியல் நூல்கள் சொல்லும். நீயோ துன்பங்களைக் கண்டபோதெல்லாம் இப்படி நெகிழ்ந்து விடுவாய் போலிருக்கிறது. உன் மனத்தில் நான் சொல்லும் உரைகளைப் பதித்துக் கொள்ளப்பா" என்று குழியில் மண்ணைத் தள்ளிக் கொண்டே கூறினார் புத்த பிட்சு. அப்போது,

 

"நீல நிறத்தனவாய் நெய்யணிந்து போதவிழ்ந்து
கோலங்
குயின்ற குழல்வாழி நெஞ்சே!
கோலங்
குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்
காலக்
கனலெரியில் வேம்வாழி நெஞ்சே
காலக்
கனலெரியில் வேவன கண்டாலும்
சால
மயங்குவ தென் வாழி நெஞ்சே..."

 

என்று அவர் 'கையறு நிலையாக' (ஒருவர் மரணத்துக்கு வருந்திப் பாடும் பாட்டு) பாடிய பாட்டு தன் நெஞ்சுக்கென்றே பாடியது போல் தோன்றியது இராசசிம்மனுக்கு.

குழியை மண் மூடிக் கொண்டது. உடம்பு மறைந்தது. எங்கோ சிறிது தூரம் நடந்து போய் ஒரு சிறு அரசங் கன்றை வேரோடு பிடுங்கி வந்து அந்த இடத்தில் ஊன்றினார் புத்த பிட்சு. பக்கத்தில் தேங்கியிருந்த தண்ணீரையும் வாரி இறைத்தார். பின்பு தலை நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்துச் சொன்னார்: "நாம் போகலாம். ஓர் உயிரின் கதையை மண்ணுக்குள் பத்திரப் படுத்தி விட்டோம். இதற்கு முன்னும் இப்படி எத்தனையோ உயிர்களின் கதைகளை மண் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ? மண்ணுக்கு ஒன்றும் புதிதில்லை."

மூன்று பேரும் மௌனமாகத் திரும்பி நடந்தார்கள். இரவு தங்கியிருந்த கட்டடத்தின் வாயிற்படிக்குப் பக்கத்தில் போன போது முதல் நாளிரவு உறக்கம் வராமல் அந்தப் படியில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப் பற்றித் தான் பைத்தியக்காரத்தனமாகச் சிந்தித்த சிந்தனைகள் இராசசிம்மனுக்கு நினைவுக்கு வந்தன. 'முழுமையாம் முழுமை! எங்கே இருக்கிறது அது?'

"உங்கள் இருவருக்கும் குதிரைகள் இருக்கின்றன. நான் நடந்து போக வேண்டியவன். எனக்கு விடை கொடுங்கள்" என்று அந்த இடத்துக்கு வந்ததும் புத்தபிட்சு விடை பெற்றுக் கொண்டார். பிரிந்து போகும் போது மீண்டும் அவர் இராசசிம்மன் முகத்தைப் பார்த்து, "தம்பீ! கவலையை விடு. நீ அரசகுமாரன்; ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்லும் போரில் கூடக் கலங்காமலிருக்க வேண்டியது உனக்கு அறம். இந்த ஓர் உயிருக்காகவே இப்படி மயங்கிச் சோர்கிறாயே? போ! உன் காரியத்தைப் பார்க்கக் கிளம்பு!" என்றார்.

சிறிது நேரத்தில் மழையாலும், காற்றாலும் சிதைந்த காட்டு வழியில் அவர்கள் குதிரைப் பயணம் தொடங்கியது. 'காலக் கனலெரியில் வேம் வாழி நெஞ்சே' என்ற புத்த பிட்சுவின் சொற்கள் மனத்தாளத்திலிருந்து நீங்காமல் ஒலிக் கூத்தாட சிந்தனை கவியும் மனத்தோடே சென்றான் குமாரபாண்டியன்.

நடுவழியில் நிகழ்ந்த அந்தத் துயர நிகழ்ச்சி பொலன்னறுவையிலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது. புத்த பிட்சுவின் வார்த்தைகள், வாழ்க்கையின் முழுமையைப் பற்றி அவன் முதல் நாள் நினைத்த அதே நினைவுகளை வேறொரு விதத்தில் அவனுக்குத் திருப்பிக் கூறுவன போல் ஒலித்தன.

அந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான் அவன். இந்தச் சோக நிகழ்ச்சியை உண்டாக்குவதற்கென்றே நேற்று மழையும், காற்றும் வந்தனவா? இந்தச் சோகத்தை எதிர்பார்த்தே நேற்றிரவு அவன் மனத்தில் வாழ்வின் முழுமையைப் பற்றிய அந்தத் தோற்றங்கள் உண்டாயினவா? ஒன்றும் புரியவில்லை. அப்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர் போல் சக்கசேனாபதியும் பேசாமல் உடன் வந்து கொண்டிருந்தார்.

அவர்களிருவரும் தமனன் தோட்டத்துக் கப்பல் துறையை அடைவதற்குச் சிறிது தொலைவு இருக்கும் போதே ஈழ நாட்டுக் கப்பற்படை வீரர்கள் சிலர் எதிரே வந்து அவர்களைச் சந்தித்து விட்டனர். அவர்களைச் சந்தித்த உடனே ஆவலோடு, "நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கும் கப்பலில் வந்திருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? இந்த ஒரு கப்பலைத் தவிர வேறு ஏதாவது கப்பல் வந்ததா? இந்தச் சில நாட்களில் யாராவது ஓர் இளம் பெண் கப்பலில் வந்து இறங்கித் தனியாக இந்தக் காட்டு வழியில் புறப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று எத்தனை சந்தேகங்கள் தன் மனத்தில் இருந்தனவோ அத்தனைக்கும் சேர்த்துக் கேள்விகளைக் கேட்டார் சக்கசேனாபதி.

"இந்தச் சில நாட்களுக்குள் இங்கு வந்ததே இப்போது பிடிபட்டுள்ள ஒரே கப்பல்தான். கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறதென்று அறிந்தோம். அதில் ஒரு முன்குடுமிக்கார மனிதரும், ஓர் இளம் பெண்ணும், இன்னொரு இளைஞனும் ஆக மூன்று பேர்கள் வந்தார்கள். ஆனால் கப்பலில் பிடிபட்ட தினத்தன்று மாலை அந்த இளைஞன் மட்டும் காணாமல் போய்விட்டான்" என்று கடற்படை வீரர்கள் பிடிபட்ட கப்பலின் நிலைமையை விவரித்து மறுமொழி கூறினர்.

----------


3.9. அவசரப் பயணம்

 

பாதி வழியில் எதிர்கொண்டு சந்தித்த தமனன் தோட்டத்துக் கடற்படை வீரர்கள் கூறிய செய்தியிலிருந்து இறந்த பெண் கப்பலில் வந்து இறங்கியவளாக இருக்க முடியாதென்று தெரிந்தது. அவ்வளவில் தாற்காலிகமான திருப்தி ஒன்று ஏற்பட்டது இராசசிம்மனுக்கு. 'கப்பலில் வந்த மூன்று பேர்களில் ஒரே ஓர் இளைஞன் தான் காணாமற் போய்விட்டானென்று இவர்கள் கூறுகிறார்கள். எனவே பகவதி இந்த கப்பலில் வந்து இறங்கியிருக்க முடியாது' என்று தன் மனத்தை ஆற்றிக் கொண்டு, "சக்கசேனாபதி! என்னைத் துன்புறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு, என் பகைவர்கள் அனுப்பிய முரட்டு ஒற்றர்கள் சிலர், பிடிபட்டிருக்கும் இந்தக் கப்பலில் வந்திருக்கலாம் என்று நீங்களும் நானும் வந்து பார்த்தோம். ஆனால் கப்பல் விழிஞத்திலிருந்து வந்தது என்றும் அதில் ஏற்கெனவே தப்பிச் சென்ற இளைஞனைத் தவிர ஒரு முன்குடுமிக்காரரும், இளம் பெண்ணொருத்தியும் இருக்கிறார்களென்றும் இவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் யாராயிருக்கலாம் என்பதை இப்போதே நான் கூறிவிட முடியும்" என்று அவரிடம் சொன்னான் இராசசிம்மன்.

"முடியுமானால் சொல்லுங்கள், பார்க்கலாம். யார் அவர்கள்?" என்று அவர் அவனைக் கேட்டார்.

"வேறு யாராயிருக்க முடியும்? மகாமண்டலேசுவரர்தான் தம் பெண்ணையும் நாராயணன் சேந்தனையும் அனுப்பியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது."

"அவர் அவ்வாறு அனுப்புவதற்கு இப்போது என்ன அவசியம் வந்து விட்டது?"

"எனக்கு ஏதாவது அந்தரங்கமான செய்தியை அவர் சொல்லி அனுப்பியிருக்கலாம் அல்லவா?"

 

"அவரிடம் தங்கியிருப்பது போல் இருந்து அவரையும் ஏமாற்றி விட்டு அரசுரிமைப் பொருள்களையும் சொல்லாமல் கடத்திக் கொண்டு என்னோடு இங்கு ஓடி வந்திருக்கிறீர்கள் நீங்கள். இவ்வளவு அவமதிப்பாக நடந்து கொண்ட பின்பும் உங்களைத் தேடிக் கடல் கடந்து தம் பெண்ணையும், அந்தரங்க ஒற்றனையும் அவர் எப்படி அனுப்புவார்?"

"எல்லா மனித உணர்ச்சிகளையும் அளவிடுவது போல் மகாமண்டலேசுவரருடைய உணர்ச்சிகளையும் சாதாரணமாக அளவிட முயல்கிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு இப்படித் தோன்றுகிறது சக்கசேனாபதி."

"அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இளவரசே! முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏறக்குறைய தீர்ந்து விட்டது. இந்தத் துறையில் நாம் வந்து இறங்கிச் சென்ற நாளுக்குப் பின் எந்தக் கப்பலிலும் வல்லாளதேவனின் தங்கை பகவதி வந்து இறங்கிச் சென்றதாக யாரும் அடையாளம் கூறவில்லை. அதனால் நேற்றிரவு காட்டில் இறந்த பெண்ணைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட்டு அழுதது வீண் மனப்பிரமை தான். உருவ ஒற்றுமை உங்கள் கண்களை ஏமாற்றிவிட்டது."

"இல்லை, சக்கசேனாபதி! நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் இப்போதைக்கு அதை நான் தீர்மானிப்பதற்கு இயலாது. இறந்தது அந்தப் பெண்ணில்லை என்பதை அங்கே சென்று அவளை உயிருடன் பார்த்தாலொழிய நான் நம்பமாட்டேன்" என்ற இராசசிம்மன் அப்போதும் பிடிவாதமாகத்தான் அவருக்குப் பதில் கூறினான்.

தமனன் தோட்டத்துக் கப்பல் துறை நெருங்க, நெருங்க அவர்கள் இருவருடைய மனத்திலும் ஆவல் அடித்துக் கொண்டது.

அவர்களுடைய குதிரைகளுக்குப் பக்கத்திலேயே அடக்கமாகக் கடற்படை வீரர்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

"பிடிபட்ட கப்பலிலிருந்து யாரோ ஓர் இளம் பிள்ளை மட்டும் தப்பி விட்டதாகக் கூறுகிறீர்களே! நீங்கள் ஏன் அவ்வளவு கவனக் குறைவாக நடந்து கொண்டீர்கள்? உங்களுக்குத் தெரியாமால் அவன் எப்படித் தப்பினான்?" என்று அந்த வீரர்களிடம் கடுமையான குரலில் கேட்டார் சக்கசேனாபதி.

"அதை எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. கப்பல் பிடிபட்ட அன்று நடுப்பகலில் அந்த இளைஞன் கீழ்த்தளத்திலுள்ள அறைக்குப் போனான். அதன் பின் அவனை நாங்கள் காணவேயில்லை. முன்குடுமிக்காரரிடமும் அந்தப் பெண்ணிடமும் விசாரித்ததில், 'அந்த இளைஞன் கப்பலிலிருந்து தப்பிச் சென்று விட்டான்' என்றும், எப்படித் தப்பினான், எங்கே போனான் என்பது தங்களுக்குத் தெரியாதென்றும் அவர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் முடிந்த வரையில் தேடிப் பார்த்தோம். அந்த இளைஞன் அகப்படவேயில்லை" என்று கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் கூறினர்.

 

"முன் குடுமிக்காரரும், அந்தப் பெண்ணுமே அவனை உங்களுக்குத் தெரியாமல் தப்பச் செய்துவிட்டு உங்களிடம் ஒன்றும் தெரியாதது போல் நடித்திருக்கிறார்களென்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் உங்கள் பாதுகாப்புக் குறைவுதான் காரணம்."

"அப்படியிருப்பதற்கில்லை, மகாசேனாபதி! ஏனென்றால் முன்குடுமிக்காரரும் அந்தப் பெண்ணும் தப்பிச் சென்ற இளைஞன் மேல் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த இளைஞனைப் பற்றித் தங்களுக்குள் வெறுப்பாகவும், கேவலமாகவும் பேசிக் கொள்கிறார்கள். அவன் அவர்களுக்கு வேண்டியவனாக இருக்க முடியாது."

"இவர்கள் சொல்வதைக் கேட்டால் எல்லாம் ஒரே புதிராக அல்லவா இருக்கிறது?" என்றான் அதுவரையில் குறுக்கிட்டுப் பேசாமல் அமைதியாகக் குதிரையைச் செலுத்தி வந்த குமாரபாண்டியன்.

தமனன் தோட்டம் வந்தது. எதிரே கடலும், நிறுத்தப் பட்டிருந்த அந்தக் கப்பலும், துறையும் தெரிந்தன.

"நேற்று மழையால் இந்தப் பகுதியில் ஒன்றும் அழிவு நேரவில்லையா?"

"இங்கே கப்பலின் பாய்களையெல்லாம் இறக்கி, நங்கூரத்தை வன்மையாகக் கட்டி வைத்தோம். அதனால் ஒன்றும் அழிவு இல்லை" என்று ஊழியர்களிடமிருந்து அவருக்கு மறுமொழி கிடைத்தது.

"சக்கசேனாபதி! அதோ பாருங்கள். நான் அனுமானித்துக் கூறியபடிதான் நடந்திருக்கிறது. நாராயணன் சேந்தனும், குழல்வாய்மொழியும் தான் வந்திருக்கிறார்கள். கப்பல் மேல்தளத்தில் நிற்கிறார்கள் பாருங்கள்..." என்று வியப்போடு சுட்டிக் காட்டினான் குமாரபாண்டியன். அவர் பார்த்தார். தங்கள் இளவரசனைக் கண்ட மகிழ்ச்சியோடு முகம் மலரக் கப்பல் மேல்தளத்தில் நின்றார்கள் சேந்தனும் குழல்வாய்மொழியும். சக்கசேனாபதிக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. குமாரபாண்டியனின் பகைவர்களால் அனுப்பப் பெற்றவர்கள் அந்தக் கப்பலில் வந்திருக்கலாமென்று எதிர்பார்த்த அவருக்கு உண்மையிலேயே வந்திருப்பவர்களைப் பார்த்தவுடன் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் உண்டாகவில்லை.

குதிரையை விட்டு இறங்கியதும் சக்கசேனாபதியையும் முந்திக் கொண்டு குமாரபாண்டியன் ஓட்டமும் நடையுமாகக் கப்பலை நோக்கிச் சென்றான். ஆவலின் உள்ளத் துடிப்பும், கால்களின் வேகமும் போட்டியிடும் நடை அது.

"அடடா! நான் எவ்வளவு பாக்கியசாலி... மகாமண்டலேசுவரரின் அருமைப் புதல்வியும் அந்தரங்க ஒற்றரும் சேர்ந்து என்னைப் பார்க்கக் கடல் கடந்து வந்திருக்கிறார்களே?... வரவேண்டும்... வர வேண்டும்..." என்று புன்னகை செய்து கொண்டே அவர்களுடன் போய் மேல் தளத்தில் நின்றான் இராசசிம்மன்.

 

குழல்வாய்மொழியும் சேந்தனும் மரியாதை செய்து வரவேற்கிற பாவனையில் வணங்கினர். குழல்வாய்மொழி பேசவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். அவன் இடையாற்று மங்கலத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் வந்து விட்டதற்காகத் தன் மேல் கோபம் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தான் இராசசிம்மன். அந்தப் பெண்மைத்தனமான பொய்க் கோபம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தச் சமயத்தில் சேந்தன் அருகில் வந்து கூறலானான்: "குமார பாண்டியருக்கு மிக அவசரமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். இங்கேயிருக்கும் கடற்படை வீரர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் அநியாயமாக எங்களைத் தடுத்து நிறுத்தித் தாமதமாக்கி விட்டார்கள். நாங்கள் உங்களைத் தேடி வந்த காரியம் மிக முக்கியமானது. அவசியத்தோடு கூடிய அவசரம் நிறைந்தது. மகாமண்டலேசுவரர் எங்களை அனுப்புவதற்கு முன் இந்த அவசரத்தை மிகவும் வற்புறுத்தியிருக்கிறார்."

சேந்தன் இராசசிம்மனிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது சக்கசேனாபதியும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் நாராயணன் சேந்தன் பேச்சை நிறுத்தி விட்டான். குழல்வாய்மொழி மருண்டு நின்றாள்.

"நான் எதிரிகளின் கப்பல் ஒன்றை நினைத்து இந்தக் கட்டளை இட்டிருந்தேன். இவர்கள் விவரம் தெரியாத குறையினால் உங்கள் கப்பலைத் தடுத்து நிறுத்தி, அநாவசியமாக உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து விட்டார்கள். நீங்கள் இருவரும் தயவு செய்து மன்னிக்க வேண்டும்" என்று வந்து நின்றவுடன் சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் மன்னிப்புக் கேட்டார் அவர். மன்னிப்புக் கேட்டவருக்குக் கேட்கப்பட்ட இருவருமே பதில் எதுவும் சொல்லவில்லை.

இரண்டு மூன்று விநாடிகள் அமைதியில் கரைந்தன. "சேந்தா, மகாமண்டலேசுவரர் ஏதோ அவசரமான செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறாரென்றாயே! அதை இன்னும் நீ எனக்குச் சொல்லவே இல்லையே?" என்று அந்த அமைதியைக் கலைத்து இராசசிம்மன் கேட்டான்.

"மன்னியுங்கள், அதை உங்களிடம் கூறுவதற்கு நீங்கள் என்னோடு இப்படிக் கொஞ்சம் தனியே வரவேண்டும்." சேந்தனின் இந்த சொற்களைக் கேட்டு இராசசிம்மன் சிறிது தயங்கினான். சக்கசேனாபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

"போய் வாருங்கள்! எனக்குப் பிறருடைய இரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் அக்கறை கிடையாது. நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்" என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

 

சேந்தன் குமாரபாண்டியன் பின் தொடரக் கீழ்த் தளத்துக்கு இறங்கிக் குழல்வாய்மொழியின் அறைக்குள் போனான். குழல்வாய்மொழியும், அவர்கள் இருவருக்குப் பின்னால் சென்றாள். அவர்களை கப்பல் அறை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் சேந்தன். சேந்தனின் இந்தச் செயல் இராசசிம்மனைத் திகைக்க வைத்தது. குழல்வாய்மொழிக்கு முகத்தில் அடித்தாற் போல் இருந்தது.

"என்னுடைய அறைக்குள் நான் நுழைவதை நீங்கள் யார் தடுப்பதற்கு?" என்று சிவந்த உதடுகள் துடிக்க ஆத்திரத்தோடு சேந்தனைக் கேட்டாள் குழல்வாய்மொழி.

"இது உங்களுடைய அறை தான் என்பதில் சந்தேகமில்லை, அம்மணி! ஆனால் இப்போது நாங்கள் பேச வேண்டிய செய்தி எங்களுடையது" என்று அழுத்தமாகக் கூறிவிட்டுத் தானும் உள்ளே போய்க் கொண்டு, கதவை உட்பக்கம் தாழிட்டுக் கொண்டான் சேந்தன்.

முகத்தில் அறைந்தது போல், 'படீ'ரென்று அடைபட்ட கதவுக்கெதிரே நின்ற குழல்வாய்மொழியின் அழகிய முகத்தில் கோபம் விளையாடியது.

'நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக் கூடாது என்ற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது' என்று ஆத்திரந் தீரத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள். கோபத்தில் இரண்டு கைவிரல்களையும் சேர்த்து நெரித்துச் சொடுக்கிக் கொண்டே வேகமாக மேல் தளத்துக்கு ஏறிப் போனாள் குழல்வாய்மொழி. அங்கே சக்கசேனாபதி நின்று கொண்டிருந்தார். வேறொரு பக்கமாகப் பாய்மரத்தில் சாய்ந்தபடி அவளும் போய் நின்று கொண்டாள்.

"அம்மா! நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உண்மையை எனக்குத் தெரிவித்து விட்டால் நல்லது. இதே கப்பலில் உங்களோடு யாரோ ஓர் இளைஞனும் வந்தானாமே? இப்போது அவன் எங்கே தப்பி ஓடினான்? அவனாகத் தப்பியிருந்தாலும், நீங்களாகத் தப்பவிட்டிருந்தாலும் நடந்ததை மறைக்காமல் என்னிடம் கூறிவிடுங்கள். அந்த வாலிபன் யாரென்பதையும் எனக்குச் சொல்லிவிடுங்கள்" என்று சக்கசேனாபதி குழல்வாய்மொழியிடம் கேட்டார்.

"எனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் அந்தக் குட்டை மனிதரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது அவர் தான் இங்கே சர்வாதிகாரி!" என்று எரிச்சலோடு பதில் சொன்னாள் அவள். அதே சமயத்தில் சேந்தன் பின் தொடர இராசசிம்மன் அங்கே வந்தான். அவன் முகம் இருண்டிருந்தது.

"சக்கசேனாபதி! மிக அவசரமான சூழ்நிலை என்னை இப்பொழுது அழைக்கிறது. நான் உடனே இதே கப்பலில் தாய்நாடு திரும்பப் போகிறேன். காசிப மன்னர் எனக்கு வாக்களித்தபடி இன்னும் எட்டு நாட்களுக்குள் ஈழத்துப் படையோடு உங்களை எனக்கு உதவியாக அனுப்புவார்" என்று பதற்றத்தோடு கூறினான் இராசசிம்மன்.

---------

3.10. பயங்கர உண்மை

 

இராசசிம்மன் பதற்றத்தோடு 'இப்போதே தாய்நாடு திரும்பப் போகிறேன்' என்று கூறியதைக் கேட்டதுமே சக்கசேனாபதிக்கு நிலைமை புரிந்து விட்டது. 'தென்பாண்டி நாட்டில் பகைவர் படையெடுப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது போலும்' என்பதை அவரால் உணர முடிந்தது.

சேந்தன் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த தன்னுடைய கப்பல் ஊழியர்களையும் மாலுமிகளையும் கூப்பிட்டு, "பாய் மரங்களைச் சரி செய்து பாய்களை விரியுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தயாராகட்டும்" என்று இரைந்து உத்தரவுகள் போட ஆரம்பித்தான். சக்கசேனாபதி இராசசிம்மனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார்.

"வந்ததும் வராததுமாக இப்படி உடனே திரும்பிப் போகிறேனே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். என் தாயையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டுமானால் நான் போய்த்தான் ஆக வேண்டும். நெருக்கடியான சமயம் இது. காசிப மன்னரிடம் சொல்லுங்கள் அவருடைய படை உதவி தேவை. அதற்கு நீங்கள் தலைமை தாங்கி வந்தால் தான் எனக்கு நம்பிக்கை பிறக்கும். இருக்கிற நிலைமையைக் கேள்விப்பட்டால் நான் போவதற்குள்ளேயே அங்கே போர் மூண்டு விடுமோ என்று பயமாயிருக்கிறது" என்று அவரிடம் உணர்ச்சிகரமாக வேண்டிக் கொண்டான் அவன். அதைக் கேட்டுக் கொண்டு அவர் கூறினார், "இளவரசே! காசிப மன்னர் கூட நீங்கள் சொல்லாமலும் விடைபெற்றுக் கொள்ளாமலும் திரும்பிச் செல்வதை மன்னித்து விடுவார். ஆனால் அந்தப் பெண் கனகமாலைதான் நான் திரும்பிச் சென்றதும், என்னைக் கேள்விகளைக் கேட்டுத் திணற அடிக்கப் போகிறாள். குறும்புக்காரப் பெண்ணாயிற்றே அவள்!"

"கனகமாலையிடமும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். பிழைத்துக் கிடந்தால் எல்லோரும் எல்லோரையும் மறுபடியும் சந்திப்போம்" என்று சொல்லும் போதே குரல் தழுதழுத்துக் கண்களில் ஈரம் கசிந்து விட்டது இராசசிம்மனுக்கு.

கப்பல் புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக சேந்தன் வந்து தெரிவித்தான். சக்கசேனாபதி குமார பாண்டியனின் காதருகில் ஏதோ சொல்லிச் சற்று ஒதுக்குப் புறமாக ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு போனார். "இளவரசே! இவர்களோடு கப்பலில் வந்து தப்பி ஓடிப்போன வாலிபன் யாரென்று கொஞ்ச நேரத்துக்கு முன் இடையாற்று மங்கலத்து அம்மணியிடம் கேட்டேன். அது சேந்தனுக்குத் தான் தெரியுமென்று வெறுப்போடு பதில் சொல்லிவிட்டார்கள். நீங்கள் அது பற்றிச் சேந்தனிடம் கேட்டீர்களா?" என்று கேட்ட அவருக்கு, "நான் சேந்தனைக் கேட்ட முதல் கேள்வியே அதுதான். ஆனால் அவன் அந்த வாலிபனைப் பற்றிய இரகசியத்தைக் கப்பலில் போகும் போது விரிவாகச் சொல்வதாகக் கூறிவிட்டான். அந்த வாலிபனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலை விடக் காட்டில் இறந்த பெண்ணைப் பற்றியே எனக்கு அதிகம் கவலையாயிருக்கிறது!" என்று குமாரபாண்டியன் பதில் சொன்னான்.

"சரி விடை தாருங்கள். இன்னும் சில நாட்களில் படையோடு வந்து விழிஞத்தில் சந்திக்கிறேன்" என்று கைகூப்பி வணங்கிவிட்டுச் சக்கசேனாபதி கப்பலிலிருந்து கீழே இறங்கினார். கப்பலின் நங்கூரக் கயிறுகள் அவிழ்க்கப்பட்டன. குழல்வாய்மொழி கோபத்தோடு ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதை இராசசிம்மான் பார்த்துக் கொண்டான்.

"கோபப்படுகிறவர்களெல்லாம் அதை என் மேலேயே செலுத்துவதென்று வைத்துக் கொண்டால் நான் ஒருவன் என்ன செய்ய முடியும்? குழல்வாய்மொழியின் கோபமில்லாத முகத்தையும், சிரிப்பையும் நான் பார்க்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றான் இராசசிம்மன். அதே நேரத்தில் கப்பல் துறையிலிருந்து மெதுவாக நகர்ந்தது.

எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டு நின்ற குழல்வாய்மொழி விருட்டென்று திரும்பினாள். அப்பப்பா! அந்த முகத்தில் தான் எவ்வளவு கோபம்?

"மகாமண்டலேசுவரருடைய கண் பார்வைக்குத் தான் ஆற்றல் அதிகம். இப்போது பார்த்தால் அவருடைய பெண்ணின் கண்கள் அதை விட அழுத்தமாகப் பார்க்கும் சக்தி வாய்ந்தவை என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது?"

"நினைப்பீர்கள்! நினைப்பீர்கள்! ஏன் நினைக்க மாட்டீர்கள்? துறவியைப் போல் வேடம் போட்டு வேண்டியதைத் திருடிக் கொண்டு சொல்லாமல் ஓடிப் போகிற இளவரசருக்கு எது வேண்டுமானாலும் நினைக்க முடியுமே? ஆண்களுக்கே வஞ்சகக் குணம் அதிகம். நெஞ்சு அழுத்தம் அதிகம். இல்லாவிட்டால் அந்தக் குட்டை மனிதர் என்னுடைய அறையிலேயே என்னை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டு, உங்களோடு இரகசியம் பேசுவதற்குத் துணிய முடியுமா? திடீரென்று இரகசிய விஷயங்களை அறியத் தகுதியற்ற மூன்றாவது பேராக மாறிவிட்டேன் போலிருக்கிறது நான்! அப்படித்தானே?"

"சேந்தன் செய்ததில் தவறென்ன குழல்வாய்மொழி! அரசாங்கக் காரியங்களைப் பேசும் போது பெண்கள் கூட இருப்பது நல்லதில்லை தானே?"

"அப்படியானால் என் தந்தை சேந்தனை மட்டுமே தனியாக இந்தக் கப்பலில் அனுப்பியிருக்கலாமே!"

"உண்மைதான்! நீ ஏன் வீணாக அலைய வேண்டும்?" என்று இராசசிம்மன் சொன்னதும் குழல்வாய்மொழியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே! குங்குமச் சிவப்பில் திளைத்த அந்த முகம் சினத்தின் எல்லை இதுதான் என்று சொல்வது போலிருந்தது.

 

"குழல்வாய்மொழி! இப்போது உன்னுடைய முகம் இந்தச் சங்கின் நிறத்தைப் போல் அழகாக இருக்கிறது" என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டே, தன் பட்டுப் பையிலிருந்து வலம்புரிச் சங்கை வெளியே எடுத்தான் குமாரபாண்டியன்.

அந்தச் சங்கை அவனுடைய கையில் பார்த்ததும் அவள் முகத்தில் கோபத்தின் சுவடு குன்றி வியப்பின் சாயல் படர்ந்தது. செம்பவழத் தீவில் வரும் போது சந்தித்த படகுக்காரப் பெண் கூறியதை நினைத்துக் கொண்டாள் அவள். அப்போது சேந்தனும் அங்கே வந்தான்.

"! செம்பவழத் தீவில் அந்தப் பெண் கூறிய போதே நினைத்தேன். இதை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியவர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகவே இருக்கிறது" என்று சேந்தன் கூறினான்.

இராசசிம்மனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் வருகிற வழியில் தாங்கள் செம்பவழத் தீவில் இறங்கியதையும், அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டு வந்ததையும் கூறினார்கள்.

"அவள் ஓர் அபூர்வமான பெண்1 ஒரு விதத்தில் நான் இப்போது உயிருடன் இருப்பதற்குக் கூட அவள் தான் காரணம். அவளை என்னால் மறக்கவே முடியாது" என்று குமாரபாண்டியன் மதிவதனியைப் பற்றி உருக்கமாகப் புனைந்து சொன்ன போது குழல்வாய்மொழியின் புருவங்கள் வளைந்து கண்கள் சுருங்கின.

'ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண்ணைப் பற்றி மனம் விட்டுப் புகழ்ந்து பேசுவதில் எவ்வளவு இடர்ப்பாடு இருக்கிறது?' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு வாய்த் துடிப்பை அடக்கினான் இராசசிம்மன்.

"குமாரபாண்டியருக்கு என்ன? எல்லாப் பெண்களும் அவருக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்ய முன் வருகிறார்கள்! தெரிந்தும், தெரியாமலும், சுய உருவிலும், மாறு வேடத்திலும் அவரைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். பெண்களின் உதவியை அமோகமாக பெறுகின்ற இந்த ஓர் அம்சத்தில் அவர் கொடுத்து வைத்தவர் தான்" என்று கண்களிலும், இதழ்களிலும் குறும்பு மிளிரக் குத்தலாகச் சொன்னாள் குழல்வாய்மொழி.

"எந்தப் பெண்ணும் நீ சொல்லுகிற மாதிரி மாறுவேடம் போட்டுக் கொண்டு எனக்கு உதவி செய்ய இதுவரை வரவில்லையே, குழல்வாய்மொழி! நீ உள்படச் சுய உருவுடன் தான் எனக்கு உதவி செய்திருக்கிறாய்!" என்று நகைத்தவாறே அவளுக்குப் பதில் சொன்னான்.

"ஏன் தங்களுக்கு மாறுவேடத்தில் அதிகப் பற்று உண்டென்று சமீபகாலத்து நிகழ்ச்சிகளால் தெரிய வருகிறதே" என்றான் சேந்தன். அவன் சொற்களை இடைமறித்துக் குழல்வாய்மொழி, "ஐயா, தென்பாண்டி நாட்டு இளவரசே! கொஞ்சம் நான் சொல்கிறபடி கேட்டு என்னோடு கீழ்த்தளத்து அறைக்கு வந்தீர்களானால் உங்களை ஆண் வேடத்தோடு சந்திக்க வருகிற பெண்களும் உண்டு என்பதற்குச் சரியானதொரு அடையாளம் என்னால் காட்டமுடியும்" என்று இராசசிம்மனை அறைகூவி அழைத்தாள். அவள் ஏதோ விளையாட்டுத் தனமான பொய்க் கோபத்தோடு அப்படிச் சொல்கிறாள் என்று எண்ணிக் கொண்டு, "ஆகா! நான் தாராளமாக உன்னோடு கீழ்த்தளத்து அறைக்கு வரத் தயாராயிருக்கிறேன்! கப்பல் விழிஞத்தை அடைகிற வரையில் நீயும் சேந்தனும் எதை எதைச் சொல்கிறீர்களோ அதையெல்லாம் அப்படியே கேட்டு விடுவதென்று இருக்கிறேன். விழிஞத்தை அடைந்து அரண்மனைக்குப் போன பின்பு தான் என் தாயாரும் மகாமண்டலேசுவரரும் சொல்கிறபடி கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கித் தளத்துக்குப் போவதற்காக நடந்தான் இராசசிம்மன். குழல்வாய்மொழியும், சேந்தனும் அவன் பின்னால் சென்றார்கள்.

"அம்மணி! சற்று முன் குமாரபாண்டியரிடம் தங்கள் தந்தையின் அவசரச் செய்தியைக் கூறுவதற்காக அழைத்துப் போனபோது தங்களை அறைக்குள் விடாமல் கதவைத் தாழிட்டதற்கு மன்னிக்க வேண்டும். தங்களை அவமானப்படுத்த வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. தங்கள் தந்தையின் கட்டளைக்கு மரியாதை செய்யவே அப்படிச் செய்தேன். தாம் கூறியனுப்பிய செய்தியை இளவரசரிடம் நான் சொல்லும் போது எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் உடனிருக்கலாகாதென்பது மகாமண்டலேசுவரரின் கட்டளை" என்று போகும் போது குழல்வாய்மொழியின் அருகில் நடந்து கொண்டே கூறினான் சேந்தன்.

குழல்வாய்மொழி அதற்கு ஒன்றும் பதிலே சொல்லவில்லை. வேகமாகத் தன் அறைக்குள் போய் ஆண்கள் அணிந்து கொள்ளக்கூடிய அங்கி, தலைப்பாகை முதலிய சில உடைகளை எடுத்துக் கொண்டு வந்து குமாரபாண்டியனுக்கு முன்னால் போட்டாள். சேந்தனும் அருகில் நின்றான்.

அவற்றைப் பார்த்து விட்டு, "இவை யாருடையவை?" என்று கேட்டான் இராசசிம்மன்.

"எங்கள் கப்பலில் எங்களுக்குத் தெரியாமல் மாறுவேடம் போட்டுக் கொண்டு ஏறிக் கடைசியில் எங்களையே ஏமாற்றி விட்டுப் போன ஒரு நயவஞ்சகப் பெண்ணினுடையவை இவை. அந்தப் பெண் இவ்வேடத்தில் உங்களைத்தான் தேடிக் கொண்டு வந்திருக்கிறாள். இதற்குள் உங்களைச் சந்தித்தாலும் சந்தித்திருப்பாள். என் வாயில் துணியைத் திணித்து என்னைக் கட்டிப் போட்டு விட்டுத் தப்பிப் போகும் போது அந்த நன்றி கெட்டவள் உங்களைச் சந்திப்பதற்குப் போவதாகத்தான் கூறினாள்" என்று சினம் பொங்கப் படபடப்போடு வார்த்தைகளை இறைத்தாள் மகாமண்டலேசுவரரின் பெண்.

"குமாரபாண்டியரே! தப்பிப்போன இளைஞனைப் பற்றி என்னிடம் தனியாகக் கேட்டீர்களல்லவா? அதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இந்த உடைகளில் தான் அந்த இரகசியம் இருக்கிறது" என்று சொல்லிவிட்டுச் சேந்தனும் சேர்ந்து கொண்டு சிரித்தான்.

 

"விளங்கும்படியாகத்தான் சொல்லுங்களேன்! நீங்கள் இரண்டு பேருமாக என் சிந்தனையைக் குழப்புகிறீர்களே? இந்த உடைகளை அணிந்திருந்தது யார்? இப்போது எங்கே?" என்று கேட்டான் இராசசிம்மன்.

"வேறு யாராயிருக்க முடியும்? தீரச் செயல்களையும் முரட்டுக் காரியங்களையும் வீரர்களின் உடன் பிறந்தவர்களால்தானே செய்ய முடியும்? தென்பாண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் அருமைத் தங்கை பகவதிதான் இந்த வேடத்தில் வந்து, இந்தக் கப்பலில் கூத்தன் என்று பெயர் பூண்டு நடமாடினாள். கப்பல் ஈழ நாட்டுக் கடற்படை வீரர்களிடம் பிடிபட்டதும் வேடத்தைக் கலைத்துவிட்டுத் தப்பி விட்டாள். அந்த வேடத்தைக் கலைத்த இரகசியம் எங்கள் இருவருக்கும் தான் தெரியும்."

இவ்வாறு சேந்தன் அப்போது சொல்லிக் கொண்டே வந்த போது குமாரபாண்டியனின் வாயிலிருந்து சோகக் குரல் ஒன்று எழுந்து ஒலித்தது. பொறியற்ற பாவை போல் சோர்ந்து கப்பலின் தளத்தில் வீழ்ந்து இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான் அவன். சேந்தனும் குழல்வாய்மொழியும் இராசசிம்மனின் நிலையைக் கண்டு பதறிப் போனார்கள்.

"என்ன? அந்தப் பெண் உங்களையும் சந்தித்து ஏதாவது ஏமாற்றி விட்டாளா? ஏன் இப்படிச் சோர்ந்து போய்த் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டீர்கள்? அல்லது கப்பல் செல்கிற வேகத்தில் மயக்கம் உண்டாகிறதா?" என்று கேட்டான்.

"ஐயோ! இதென்ன? இப்படி அல்லித் தண்டு மாதிரித் துவண்டு விழுகிறீர்கள்? உங்கள் உடம்புக்கு இருந்தாற் போல் இருந்து என்ன வந்து விட்டது?" என்று கூறிக் கொண்டே கீழே குனிந்து ஆதரவாகக் குமாரபாண்டியனின் உடம்பைத் தாங்கிக் கொண்டாள் குழல்வாய்மொழி.

குமாரபாண்டியன் விழிகள் இமையாமல் சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே தலையில் வைத்த கைகளை எடுக்காமல் நெடுநேரம் கிடந்தான்.

பின்பு நிதானமாக வாய் திறந்து அவர்கள் இருவரையும் பார்த்து ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னான்: "தமனன் தோட்டத்துக்கும் பொலன்னறுவைக்கும் இடையிலுள்ள காட்டில் மரணமென்று அந்தப் பெண்ணுக்கு விதி இருந்தது போலிருக்கிறது. பாவம்! இங்கிருந்து தப்பியோடி என்னைச் சந்திக்க வந்த வழியில் இயற்கையின் கூத்துக்குப் பலியாகி இறந்து போய் விட்டாள் அவள்!"

-----------

 

3.11. படைகள் புறப்பட்டன

 

வடதிசை மன்னர்களின் பெரும் படையை அணி வகுக்கவும், திட்டமிடவும், கொடும்பாளூரில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்து விட்டன. தெற்கேயுள்ள குழப்பமான நிலைகள் ஒவ்வொன்றாகத் தெரியத் தெரிய வடதிசையரசர்களின் மனத்திடம் அதிகமாயிற்று.

படையெடுப்புக்கு முன்னால் கடைசியாக அவர்களுக்குக் கிடைத்த செய்தி, 'மகாமண்டலேசுவரருக்கும், தென்பாண்டி நாட்டின் ஏனைய கூற்றத் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது' என்பது ஆகும்.

'இராசசிம்மன் அரசுரிமைப் பொருள்களைத் திருடிக் கொண்டு ஓடிப் போய்விட்டான். முத்துக்குளி விழாவில் குழப்பம் நடந்து விட்டது. மகாமண்டலேசுவரரைக் கூற்றத் தலைவர்கள் மதிக்கவில்லை. கரவந்தபுரத்துப் படையும், தங்கள் படையும் தவிர வேறு படையுதவி இதுவரையில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தரங்கமான பிணக்கு ஒன்று தளபதி வல்லாளதேவனுக்கும் மகாமண்டலேசுவரருக்கும் மனத்தளவில் இருக்கிறது' என்று இந்தச் செய்திகளெல்லாம் மொத்தமாகச் சேர்ந்து தங்களுடைய வெற்றிக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையைத் தென் திசையில் உண்டாக்கி வருவதாகச் சோழன் முதலிய ஐந்து வடதிசையரசர்களும் எண்ணினர்.

திட்டமிட்டிருந்தபடியே படைகளை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள் அவர்கள். சோழனும், கொடும்பாளூரானும் எதிர்பார்த்தது போல் தென் பாண்டி நாட்டுப் படைகள் மதுரைக்கோ, அதற்கு அப்பாற்பட்ட இடத்துக்கோ எதிர்கொண்டு வந்து தாக்கவில்லை. நெல்வேலிக் கோட்டத்துக்குள் புகுந்து தென்பாண்டி நாட்டு எல்லையை நெருங்குகிற வரையில் அவர்களுக்கு எதிர்ப்பே இல்லை.

ஆனால் வெள்ளூருக்கு அருகில் கரவந்தபுரத்துப் படை எதிர்த்து நின்றது. அதோடு சேர நாட்டுப் படை வீரர்களும் பெருவாரியான அளவில் தென்பட்டனர். வடதிசைப் படையை நடத்திக் கொண்டு வந்தவர்களுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. "ஓகோ! விட்டுப் பிடிக்கும் சூழ்ச்சியை மனத்திற் கொண்டு பாண்டி நாட்டு படைகள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றன. ஆனாலும் மகாமண்டலேசுவரர் கெட்டிக்காரர்தான். சேரநாட்டுப் படை உதவி இவர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது என்று நாம் நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே வந்து பார்த்தால் எதிர்த்து நிற்கும் படைகளில் அதிகமானவை சேரநாட்டிலிருந்து வந்திருக்கின்றன" என்று போர் ஆரம்பமாகு முன் களத்தில் நின்று கொண்டு தன் நண்பர்கள் நால்வரிடமும் கூறினான் சோழ மன்னன்.

"இன்னொரு செய்தியையும் நாம் கவனிக்க வேண்டும். இது வரையில் தளபதி வல்லாளதேவனும், அவன் பொறுப்பிலுள்ள படைகளும் களத்துக்கு வந்து சேரவில்லையென்று தெரிகிறது. இதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்!" என்றான் கொடும்பாளூர் மன்னன்.

 

அவன் கூறியது மெய்தான்! வடதிசைப் படைகளைத் தடுத்துப் போர் செய்வதற்காக நெல்வேலிக்கும் கரவந்தபுரத்துக்கும் இடையே எதிர்கொண்ட பாண்டியப் பெரும் படையில் தளபதி வல்லாளதேவன் தென்படவில்லை. கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தனும், சேர நாட்டிலிருந்து வந்து படையை நடத்திக் கொணர்ந்த படைத் தலைவன் ஒருவனும் தான் போர்க்களத்தில் பொறுப்பானவர்களாக முன்னால் நின்றார்கள். சேர நாட்டுப் படை பொதியமலை வழியாகக் கரவந்தபுரத்தில் வந்து பெரும்பெயர்ச்சாத்தனின் படையோடு சேர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு படைகளும் சந்தித்த இடத்தில் தாமதமின்றிப் போர் தொடங்கிவிட்டது. தளபதி வல்லாளதேவன் களத்தில் தென்படாததனால் அவன் எந்தக் கணத்திலும் வேறொரு திசையிலிருந்து படைகளுடன் வந்து தங்களைத் திடீர்த் தாக்குதலுக்கு ஆளாக்கலாமோ என்று வடதிசை மன்னர்களுக்கு உள்ளூர பயம் இருந்தது. எந்த விதத்தில் எத்திசையிலிருந்து திடீர்த் தாக்குதல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் தக்கபடி தங்கள் பெரும் படையைப் பிரித்து வகுத்துக் கொண்டு போரைச் செய்தனர் வடதிசை மன்னர்கள்.

அதே நிலையில் அதே இடத்தில் சில நாட்கள் போர் நீடித்தது. முதலில் இரு பக்கத்திலும் வெற்றி தோல்விகள் அதிகமின்றி மந்தமாக இருந்த போர் மூன்றாம் நாள் காலையில் நிலை மாறிவிட்டது. முதல் இரண்டு நாட்களிலும் தாக்குதலை நன்றாகச் சமாளித்த கரவந்தபுரத்துப் படை சற்றே தளர்ந்தது. சேரர் படை உடனிருந்தும் பயனின்றிப் பின் வாங்குகிற நிலைமை ஏற்படும் போலிருந்தது. பெரும்பெயர்ச்சாத்தன் நிலைமையின் நெருக்கடியை உடனே மகாமண்டலேசுவரருக்குச் சொல்லியனுப்பினான். பாவம்! மகாமண்டலேசுவரருக்கு உண்டாகியிருந்த வேறு நெருக்கடிகளைப் பற்றி அவனுக்குத் தெரியாதல்லவா? போர்க்களத்திலிருந்து பெரும்பெயர்ச்சாத்தன் அனுப்பிய அவசரத் தூதன் போய்ச் சேருவதற்கு முன் மகாமண்டலேசுவரரும், மற்றவர்களும் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதை முன்னாற் சென்று காணலாம்.

மனிதனுக்கு அறிவின் பலம் அதிகமாக ஆக தன் மேலுள்ள நம்பிக்கையும் சுயபலமும் குறைவன போல் ஒரு பயம் அந்தரங்கமாக உண்டாவது இயற்கை.

கூற்றத் தலைவர்களின் எதிர்ப்பால் தமக்கு எத்தகைய தொல்லைகள் விளையுமென்பதை மிகக் குறுகிய காலத்திலேயே மகாமண்டலேசுவரர் புரிந்து கொள்ள நேர்ந்தது.

"குமாரபாண்டியனும் திரும்பி வரவில்லை! கொடும்பாளூரில் வடதிசைப் படைகள் ஒன்று சேர்ந்து விட்டதாகத் தகவல் தெரிகிறது. நம்மிடம் இருக்கிற படைவீரர்களின் தொகை குறைவு. ஆகவே தென்பாண்டி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கிடைத்தவரை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு படையின் தொகையைப் பெருக்குவது உன் கடமை. எனவே என்னுடைய இந்தத் திருமுகத்தைப் படித்தவுடன் நீயே ஊர் ஊராகச் சென்று என் விருப்பத்தைச் சொல்லிப் புதிய படை வீரர்களைச் சேர்க்கவும்" என்று மகாமண்டலேசுவரர் கோட்டாற்றுப் படைத் தளத்திலிருந்த தளபதிக்கு ஓர் அவசரக் கட்டளை அனுப்பியிருந்தார். அதற்கு முதல் நாள் தான் அம்பலவன் வேளான் இடையாற்று மங்கலத்திலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, மகாமண்டலேசுவரரின் திகைப்பான உண்மையடங்கிய ஓலையையும் தந்து போயிருந்தான். அவற்றால் அவர் மீது பயமும், வெறுப்பும் தளபதிக்கு உண்டாகியிருந்தாலும், கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறு படைத் தலைவர்களில் சிலரையும் உடன் அழைத்துக் கொண்டு முக்கியமான ஊர்களில் சுற்றினான் அவன்.

மூன்று தினங்களுக்குப் பின் தளபதியிடமிருந்து மகாமண்டலேசுவரருக்குக் கீழ்க்கண்ட பதில் ஓலை வந்து சேர்ந்தது.

"தங்கள் கட்டளைப்படியே படைவீரர்களை சேர்ப்பதற்கு ஊர் ஊராகச் சென்று அலைந்தேன். அலைந்ததற்குப் பயனில்லை. தங்கள் பிரதேசமாகிய மருங்கூர்க் கூற்றம் ஒன்றில்தான் சில நூறு ஆட்கள் படையில் சேர்ந்தனர். மற்ற கூற்றங்களிலெல்லாம் படையிற் சேர முன்வரவில்லை. அங்கங்கே கூற்றத் தலைவர்களைச் சந்தித்துப் படைக்கு வீரர்கள் சேர்க்கும் முயற்சியில் எங்களோடு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டு தங்கள் கட்டளையைக் காண்பித்தேன். அவர்களில் எவரும் ஒத்துழைக்க இணங்கவில்லை. தங்கள் பகுதியிலிருந்து யாரும் போருக்கு ஆட்கள் சேர்க்க விருப்பமில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர். நான் திரும்பிவிட்டேன். தங்களுடைய அடுத்த கட்டளையை எதிர்பார்த்துக் கோட்டாற்றுப் படைகளோடு காத்திருக்கிறேன்." இந்தப் பதிலைக் கண்டு அவர் திகைக்கவில்லை. ஏனென்றால் தளபதியின் மேற்கண்ட பதில் கிடைக்கு முன்பே மகாமண்டலேசுவரர் வேறு ஒரு வகையிலும் படை உதவிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மகாராணி வானவன்மாதேவி கைப்படவே படை உதவி செய்யுமாறு வேண்டுதல் திருமுகம் ஒன்று எழுதி வாங்கி, அதை மிக அவசரமாகச் சேர நாட்டுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அவர் எதிர்பார்த்ததை விடச் சேர மன்னனிடமிருந்து மறுமொழி கிடைத்தது. தனக்கு உடல் நலமில்லாமையால் தானே நேரில் போரில் உதவி செய்ய வரமுடியவில்லை யென்றும், தன் படைகளைப் பொதிகை மலை வழியாகக் கரவந்தபுரத்துக் கோட்டைக்கு உடனே அனுப்பி வைப்பதாகவும் சேர மன்னன் தெரிவித்திருந்தான். அதன்படியே சேரர் படைகள் கரவந்தபுரத்துக்குப் புறப்பட்டு விட்டன.

உடனே மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தனுக்குச் சேரர் படை உதவி வருவதைக் குறிப்பிட்டு, எந்தக் கணத்தில் வடக்கேயிருந்து பகைவர் வந்தாலும் எதிர்க்கத் தயாராயிருக்குமாறு அறிவித்து ஒரு தூதனை அனுப்பினார்.

தென்பாண்டி நாட்டுப் படைகளையும் தளபதி வல்லாளதேவனையும் மட்டும் வடக்கு எல்லையில் எதிர்த் தாக்குதலுக்குப் போகவிடாமல் கோட்டாற்றிலேயே நிறுத்தி வைத்திருந்தார் அவர். அதற்கும் ஒரு காரணமிருந்தது. சேந்தனும் குழல்வாய்மொழியும் குமாரபாண்டியனுடன் விழிஞத்துக்கு வந்து சேரும் கப்பலை அவர் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதைப் பற்றி மகாராணியிடமும் கூறி அவருடைய ஆவலை வளர்த்து விட்டிருந்தார். குமாரபாண்டியன் வந்ததும், அவனைக் கலந்து கொண்டு கோட்டாற்றிலுள்ள படைகளையும், தளபதியையும் போர் முனைக்கு அனுப்பலாமென்பது மகாமண்டலேசுவரரின் நினைப்பாயிருந்தது. எந்த விநாடியில் குமாரபாண்டியன் கப்பல் தம் பெண்ணுடனும் சேந்தனுடனும் வந்து இறங்கினாலும் உடனே ஓடி வந்து அதைத் தமக்குத் தெரிவிப்பதற்காக விழிஞத்துக்கு ஆள் அனுப்பியிருந்தார் அவர். தளபதிக்குத் தெரியாமல் அவருடைய ஆள் விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தார் அவர். அவருக்குத் தெரியாமலே தன்னுடைய சார்பில் ஆபத்துதவிகள் தலைவனை விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தான் தளபதி. குமாரபாண்டியன், தம் மகளுடனும், சேந்தனுடனும் வந்து சேர வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். குமாரபாண்டியன் தன் தங்கை பகவதியோடு விழிஞத்தில் வந்து இறங்க வேண்டுமென்று வல்லாளதேவன் எதிர்பார்த்தான். அவர்கள் இருவருக்கும் அப்பால், ஒவ்வொரு கணமும் ஆசையும் பாசமும் துடிக்கத் தாய்மைப் பேராவலுடன் மகாராணியும் அந்த வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் வெள்ளூருக்கு அருகில் இரண்டு படைகளும் கைகலந்த செய்தி தெரிந்தது. நிலைமை அவ்வளவுக்கு முற்றிய பின்பும் கோட்டாற்றிலுள்ள சேனைகளையும், தளபதியையும் போர் முனைக்கு அனுப்பாமல் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று எண்ணித் தயங்கினார் மகாமண்டலேசுவரர். போர் தொடங்கிச் சில நாட்கள் கழிந்த பின்பும் குமாரபாண்டியன் வரவு பற்றி ஒன்றும் தெரியவில்லை. என்ன செய்வதென்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்த போது, போர் முனையிலிருந்து பெரும்பெயர்ச்சாத்தன் அனுப்பிய தூதன் அவசரமாக வந்து அபாய நிலையைத் தெரிவித்தான். அவன் தெரிவித்ததிலிருந்து வடதிசைப் படையை எதிர்க்கக் கரவந்தபுரத்து வீரர்களும், சேரநாட்டுப் படைகளும் காணவில்லை என்று தெரிந்தது. மகாமண்டலேசுவரரே நேரில் புறப்பட்டுக் கோட்டாற்றுப் படைத் தளத்துக்குப் போனார். அவசரமாகத் தளபதியைச் சந்தித்தார். போர் முனை நிலையைக் கூறினார்.

"தளபதி! படைகளை மட்டும் இப்போதே அவசரமாகக் கரவந்தபுரத்துக்கு அனுப்பு. நீ சிறிது பின் தங்கிப் போகலாம். எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்றார் மகாமண்டலேசுவரர். அவர் சொற்படியே தான் போகாமல், படைகளை மட்டும் அனுப்பிவிட்டு அவரைத் தனியே சந்தித்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தார்.

 

"குமாரபாண்டியர் வந்து உன்னை விசாரித்துத் தீர்ப்புக் கூறுகிற வரையில் போருக்குத் தளபதியாக நீ தலைமை தாங்கி நிற்க விட மாட்டேன் நான். நீ குற்றவாளி. என் ஆணையை மீறி எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல சதிக் குற்றங்களை நீ செய்திருக்கிறாய்" என்று திடீரென்று எரிமலை வெடித்தது போல் கடுங்குரலில் இரைந்தார் அவர். அறிவின் அடக்கத்தை மீறி அவர் ஆத்திரமாகப் பேசுவதை வல்லாளதேவன் அப்போதுதான் முதன்முறையாகக் கண்டான். அவனுடைய கண்களும் சினக் குறிப்பைக் காட்டின. அவன் முகத்தில் கோபம் படர்ந்தது.

---------

 

3.12. அறிவும் வீரமும்

 

படைகளைப் போர்முனைக்கு அனுப்பச் செய்கிறவரை தன்னிடம் கோபித்துக் கொள்ளாமல் தந்திரமாக நடந்து கொண்ட மகாமண்டலேசுவரர், காரியம் முடிந்ததும் அவ்வாறு கண்டிப்பும், கடுமையும் காட்டுவாரென்று தளபதி எதிர்பார்க்கவே இல்லை. பொங்கும் சினத்தோடு அவர் வாரி இறைத்த வரம்பு கடந்த ஆத்திரச் சொற்கள் அவனது இயற்கைக் குணமான முரட்டுத் தனத்தைக் கிளர்ந்தெழச் செய்தன. பழக்கப்படாத புதுப் பாகன் பயந்து கொண்டே பெரிய மத யானையை நெருங்குகிற மாதிரித் தயங்கும் மனத்தோடும், தயங்காமல் சிவந்து சினம் கனலும் கண்களோடும் மகாமண்டலேசுவரரைப் பார்த்தான் தளபதி. அந்தப் பார்வையைப் பொறுக்காமல் சீறினார் மகாமண்டலேசுவரர். "அப்படிப் பார்க்காதே, நீ. உன் கோபம் என்னை ஒன்றும் செய்து விட முடியாது. அன்று கன்னியாகுமரியிலிருந்து நீ இடையாற்று மங்கலத்துக்கு என்னைத் தேடிக் கொண்டு வந்த இரவிலிருந்து இந்த விநாடி வரை ஒவ்வொன்றாக எத்தனைத் தவறுகள் புரிந்திருக்கிறாய் என்று எண்ணிக் கொண்டே வந்திருக்கிறேன் நான். ஒழுக்கத்தையும், பண்பையும் போற்றி ஆளத் தெரியாத நீ படைகளை ஆளத் தகுதியற்றவன்."

"நிறுத்துங்கள். மகாமண்டலேசுவரர் என்ற பதவிக்கும் அறிவிக்கும் என் நெஞ்சம் செலுத்தி வந்த மரியாதையை நான் விட வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது. இந்தக் கணம் முதல் அந்த மகாமேதையை நான் ஒரு சாதாரண எதிரியாகப் பாவிக்க வேண்டியதுதான். நான் சாதாரண எதிரியாகப் பாவிக்கத்தக்க மனித உணர்ச்சிக்கு அவரும் ஆளாகி விட்டார்" என்று தளபதி அவர் முகத்தைத் துணிவுடன் நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கூறினான். அவன் வார்த்தைகள் அவருடைய கோபத்தை மேலும் தூண்டிவிட்டன.

 

"முட்டாள்களின் மரியாதையை அறிவாளிகள் எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை, தளபதி! என்னை எதிரியாக ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நீ பெரியவன் என்பதைக் கூட நான் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. ஓர் இரகசியத்தை நீ இந்தச் சமயத்தில் என்னிடமிருந்து தெரிந்து கொள். அறிவின் நுனி மிகவும் கூர்மையானது. நன்றாகத் தீட்டப்பட்ட கத்தியைப் போல் சந்தர்ப்பமும் வீசும் இலக்கும் கிடைத்தால் அதற்கு எதையும் குத்தி அழிக்க வலிமை உண்டு. சந்தர்ப்பமும் இலக்கும் தவறிவிட்டால் கை தவறி விழுந்து தானே கூரழியும் கத்தியைப் போல் தன்னையே அழித்துக் கொள்ள வேண்டியதுதான்."

தளபதியின் முகத்தில் கோப வெறி கூத்தாடியது. கைகள் எதற்காகவோ துடித்தன. முகம் முழுவதும் கருணைக் கலப்பற்ற கொடுமை மறம் வந்து குடி கொண்டிருந்தது. அவன் வெறியனாக மாறினான்.

"மகாமண்டலேசுவரரே! எனக்கு அறிவின் வலிமையைப் பற்றிய இரகசியம் தெரிய வேண்டியதே இல்லை. ஆனால் வீரத்தின் இரகசியம் இது தான் என்பதை இப்போதே உங்களுக்குத் தெரிவிக்கிறேன். தான் அழிவதாயிருப்பினும் அப்படி அழியுமுன் தன் எதிரியை முதலில் அழித்துத் தீர்ப்பது தான் வீரத்தின் வலிமை" என்று கூறிக் கொண்டே குபீரென்று வாளை உருவிக் கொண்டு அவர் மேல் பாய்ந்தான்.

அவன் நினைத்தது போல் அவர் பயந்து ஓடவோ, திடுக்கிட்டுக் கூச்சலிடவோ இல்லை. அவன் அப்படிச் செய்வான் என்பதை முன்பே எதிர்பார்த்தவர் போல் அசையாமல் நின்றார். அளப்பரிய ஆற்றல் நிறைந்த தம் கண்களை இமைக்காமல் குத்துவதற்கு வாளை ஓங்கிக் கொண்டு வரும் அவனையே பார்த்தார். சலனமும் அசைவுமற்ற சிலையாகி விட்டாரா அவர்? பின்னால் கட்டிக் கொண்ட கைகளை எடுக்காமல் மார்பை நிமிர்த்திக் கொண்டு நின்ற அந்தத் தோற்றத்தை நெருங்கி நெஞ்சுக்குக் குறிவைத்து வாளை ஓங்கிய போது தளபதியின் கை வெடவெடவென்று நடுங்கியது. மனமும் நடுங்கியது. கால்களும் நடுங்கின. நேர்கொண்டு பார்க்கும் அந்தக் கண்கள் இரண்டும் கணத்துக்குக் கணம் பெரியதாய்ப் பிரம்மாண்டமாய் அகன்று விரிந்து தன்மேற் கவிந்து தன்னை அமுக்குவது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு.

அந்தப் பிரமை ஏற்பட்ட அடுத்த விநாடி அவன் முகம் வெளிறியது. கண்கள் மருண்டன. உடல் நடுங்கி ஓய்ந்தது. கையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்தது. ஏதோ ஒரு பயம். காரணமற்ற பயம் அவனைத் தடுத்தது. ஒவ்வோர் அடியாக நகர்ந்து பின்வாங்கினான் அவன். என்ன செய்கிறோம் என்ற உணர்வேயின்றிப் பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் என்ற அகண்ட மா தோற்றம் அப்படியே நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது.

"தளபதி! ஏன் தயங்குகிறாய்? எதற்காகப் பின் வாங்குகிறாய்? என்னை அழித்து விடுவதற்கு இதைப் போல தனிமையான சந்தர்ப்பம் இனி வேறு எப்போது உனக்கு வசதியாகக் கிடைக்கப் போகிறது? இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்" என்று மகாமண்டலேசுவரர் வாய் திறந்து சொன்ன போது தளபதி அவருக்கு அருகிலேயே இல்லை. சிறிது தொலைவு தள்ளி ஒதுங்கிப் பயந்து நிற்பவன் போல் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் வியர்வை அரும்பி வழிந்தது. தெரியாமல் பாம்புப் புற்றை மிதித்து விட்டு இடறி விழுந்தவன் பயத்தோடு எழுந்து நிற்கிற மாதிரி நின்றான் வல்லாளதேவன்.

வானத்துக்கும் பூமிக்குமாக நிறுத்தி வைத்த சிலை போல் அசையாமல் நின்று கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் மெல்லக் கீழே குனிந்தார். நழுவி விழுந்து கிடந்த தளபதியின் வாளைக் கையில் எடுத்துக் கொண்டார். நிதானமாக அடியெடுத்து வைத்து நடந்தார். அவனை அணுகினார். ஒருவர் மூச்சுக் காற்றை மற்றொருவர் உணர முடிந்த அளவுக்கு நெருங்கி நின்று கொண்டார்.

"இந்தா, உன்னுடைய வாள்! இப்போது என் நெஞ்சுக் குழி உன் கைக்கு மிக அருகில் இருக்கிறது. பாய்வதற்கும், வாளை ஓங்குவதற்கும் வேண்டிய சிரமத்தைக் கூட உனக்கு நான் அளிக்கச் சித்தமாயில்லை. என்னை இந்த வாளால் கொன்று விடு. நான் அழிந்து போக வேண்டிய காலம் வந்து விட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில் நான் அழிவது உன்னைப் போலவே இன்னும் பல பேருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கழற்கால் மாறனாரும், அவரோடு சேர்ந்த கூற்றத் தலைவர்களும் என்னை இவ்வளவு சுலபமாகக் கொன்றதற்காக உன்னைப் பாராட்டுவார்கள். படையெடுத்து வந்திருக்கும் பகையரசர்கள் பெருமை கொள்வார்கள். என்னுடைய அறிவின் கூர்மைக்குப் பயந்து தங்களுடைய எண்ணற்ற பேராசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தெரியாமல் தயங்கிக் கொண்டிருக்கும் எத்தனை பேருக்குத் திருப்தியளிக்கும் தெரியுமா, இந்தக் கொலை?" அவருடைய சொற்களின் வேகத்தையும், கண்களின் கூர்மையான பார்வையையும் மிக அருகில் தாங்கிக் கொள்ள முடியாமல் தலை குனிந்தான் தளபதி.

"இவ்வளவுதானா உன் துணிவு! நீ உண்மை வீரன் இல்லை! உணர்ச்சியால் முரடன்! மனத்தால் கோழை! என்னை எதிரியாகக் கொள்வதற்கேற்ற தகுதியும், பெருமையும் கூட உனக்குக் கிடையாது. நீ சாமான்யமானவன்" என்று ஏளனமாகச் சொல்லிக் கொண்டே கையிலிருந்த வாளை அலட்சியத்தோடு சுழற்றி மூலையில் வீசியெறிந்து விட்டார் மகாமண்டலேசுவரர். வல்லாளதேவன் தலை நிமிரவே இல்லை.

"உன் உணர்ச்சிகளை என் சாமர்த்தியத்தினால் கிளறி வேடிக்கைப் பார்க்க விரும்பவில்லை நான். ஆயிரக்கணக்கான வீரர்களின் மதிப்புக்குரிய படைத்தலைவனே! நீ உண்மைக் குற்றவாளி. நான் உன்மேல் கொண்ட ஆத்திரம் நியாயமானது. நீ பதிலுக்கு ஆத்திரப்படுகிறாயே, அதுதான் நியாயமற்றது. என் மேல் அவ்வப்போது உனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் உன்னை என்னென்னவோ செய்யத் தூண்டியிருக்கின்றன. அறியாமையால் தாயின் ஒழுக்கத்தைப் பற்றியே சந்தேகப்படும் பேதைப் புதல்வனைப் போல நீ என்னைச் சந்தேகத்தோடு நோக்கி வந்திருக்கிறாய். உன்னுடைய சந்தேகங்களை இதுவரை மன்னித்து வந்திருக்கிறேன். நீ கடைசியாகச் செய்த தவறு, குமாரபாண்டியனைக் காண்பதற்காக உன் தங்கையை இரகசியமாக ஈழ நாட்டுக்கு அனுப்பியது. இவையெல்லாம் எனக்குத் தெரியாதென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். முகத்தின் கண்களால் முதுகுக்குப் பின் நடப்பதையும் உணர எனக்குத் தெரியும்."

"எல்லாம் தெரிந்த உங்களுக்கு நீங்களே செய்கிற சில தவறுகள் மட்டும் ஏன் தெரியவில்லையோ? நேற்று வரை தென்பாண்டி நாட்டின் படைகளைக் கட்டிக்காத்து அணி வகுத்தவன் நான். போருக்குப் பயிற்சி கொடுத்தவன் நான். இப்போது தீடீரென்று படைகளை முன்னால் அனுப்பிவிட்டு என்னைத் தனியே நிறுத்தி அவமானப் படுத்துகிறீர்கள். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்கிறீர்கள். குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூற வேண்டும் என்கிறீர்கள். விசாரித்துத் தீர்ப்புக் கூறுமளவிற்கு நான் என்ன தப்புச் செய்திருக்கிறேனென்று எனக்கே தெரியவில்லை." தலை குனிந்து நின்ற தளபதி வல்லாளதேவன் சற்றே நிமிர்ந்து அவரைக் கேட்டான்.

"தெரியவில்லையா? நீ செய்தவற்றில் எது ஒழுங்கு, எது தவறு என்று உன்னால் பகுத்துணர முடிந்தால்தானே உன் குற்றங்களை நீ தெரிந்து கொள்ள முடியும்! முதன் முதலாக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்திலிருந்து ஓடி வந்தாயே, அந்த இரவிலிருந்தே உன் தவறுகள் ஆரம்பமாகிவிட்டன. அரண்மனையில் உளவறிவதற்கு ஆபத்துதவிகள் தலைவனை உன் கையாளாகப் பயன்படுத்தினாய். இடையாற்று மங்கலத்தில் என் மாளிகையிலிருந்து இரவோடு இரவாக ஆயுதங்களைத் திருட ஏற்பாடு செய்தாய்! குமாரபாண்டியரை அழைத்து வர நான் ஒருவன் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதை நம்பாமல் நீ உன் தங்கையை அனுப்பினாய்."

"இதே வகையில் எனக்குத் தாங்களும் சில தவறுகளையும் குற்றங்களையும் செய்திருக்கிறீர்களென்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்."

"செய்திருக்கலாம் மறுக்கவில்லை. எனக்குப் பொறுப்புகள் அதிகம். என் நிர்வாகம் பெரியது. நான் உன்மேல் சந்தேகப்பட்டு உன்னைச் சோதனை செய்திருந்தால் அது நியாயமானது. படைகளைத் தவிர வேறெந்தப் பொறுப்பையும் பற்றிக் கவலைப்பட வேண்டாத நீ அநாவசியமான கவலைகளை உண்டாக்கிக் கொண்டு இப்படியெல்லாம் செய்தது மன்னிக்க முடியாத தவறு."

"நான் நினைத்தால் இன்னும் ஒரு பெரிய தவற்றையும் செய்ய முடியும். இப்போதே ஓடிப்போய் என் அதிகாரத்துக்கு அடங்கிய அத்தனை படைகளையும் போர் முனைக்குப் போகாமல் தடுத்து நிறுத்தி விட முடியும். மகாமண்டலேசுவரர் அப்போது என்னைக் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை."

"கனவிலும் அப்படி நினைக்காதே, தளபதி! உன்னால் அதைச் செய்ய முடியாது. நீ இப்போது என் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நிற்கும் சாதாரணக் குற்றவாளி. அகந்தையினால் உன் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசாதே!"

"முடிகிறதா இல்லையா என்று தான் பாருங்களேன்" எனத் தன்மானத்தோடு சொல்லிவிட்டு வெளியேறினான் அவன். பின்னால் அவர் சிரிக்கும் ஒலி அவனுடைய செவிக்கு எட்டியது. மகாமண்டலேசுவரரிடம் வீறாப்பாகப் பேசி வெளியே வந்த அவன், மேலே நகர முடியாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றான். வெளியே அந்த இடத்தைச் சுற்றிலும் இடையாற்று மங்கலத்து யவனக் காவல் வீரர்கள் உருவிய வாளுடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் தளபதி. மகாமண்டலேசுவரரின் முன்னேற்பாடு அவனுக்குப் புரிந்தது. எப்போது, எப்படி அந்த வீரர்களை அங்கே வரவழைத்துக் காவல் போட்டாரென்று அநுமானிக்கவே முடியாதபடி அவ்வளவு சாதுரியமாகச் செய்திருந்தார்.

"ஓகோ! புரிகிறது..." என்று கடுமையாகக் கூறிக் கொண்டே பின்னால் சிரித்தவாறு நின்ற மகாமண்டலேசுவரரைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

"வேறொன்றுமில்லை, தளபதி! உன் அதிகாரத்துக்குட்பட்ட படைக் கோட்டத்திலேயே உன்னைச் சிறை வைத்துப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. அதை நிறைவேற்றிக் கொண்டேன்" என்றார் அவர்.

"இது கேவலமான சூழ்ச்சி!"

"இருக்கட்டுமே. அப்படியே பார்த்தாலும், நீ செய்த காரியங்களை விடக் கேவலமானதில்லை இது. குமாரபாண்டியர் வருகிற நாளாயிற்று. நான் விழிஞத்தில் போய் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அவர் வந்ததும் இங்கே அழைத்து வருகிறேன். அதுவரையில் உன் நிலை இதுதான்" என்று சிறிதும் இரக்கமின்றிச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் மகாமண்டலேசுவரர். கூண்டிலடைபட்ட புலிபோல் வெகுண்டு நின்றான் தளபதி வல்லாளதேவன். போர்க்களத்தில் படைகளை ஆண்டு போர் புரிய வேண்டிய நல்ல சமயத்தில் அநாதையைப் போல் தனியே நிறுத்திக் காவலில் வைக்கப்பட்ட சூழ்ச்சியை எண்ணிக் குமுறினான் அவன்.

மகாமண்டலேசுவரரோ தளபதி என்ற வீரப் புலியைச் சாமர்த்தியமாகச் சிறைப்படுத்திவிட்ட பெருமிதத்தோடு மகாராணியைச் சந்திப்பதற்காக அரண்மனைக்குச் சென்றார். நாடு முழுவதும் வெள்ளூரில் நடந்து கொண்டிருக்கும் போரின் முடிவு என்ன ஆகுமோ என்ற பயமும், கலவரமும் நிலவிக் கொண்டிருந்தன. நாட்டின் வடக்கு எல்லையில் மாபெரும் போர் நடந்து கொண்டிருப்பதன் அறிகுறியாக அங்கங்கே வளமிகுந்த நாஞ்சில் நாட்டு ஊர்கள் களையிழந்து கலகலப்புக் குன்றிக் காணப்பட்டன. பண்டங்கள் விலையேறி விட்டன. எங்கிருந்தாலும் இந்தப் போர்க் காலத்தில் குமாரபாண்டியர் திரும்பி வந்து விடுவாரென்ற நம்பிக்கை நாட்டு மக்கள் எல்லோருக்கும் இருந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தான் கழற்கால் மாறனார் முதலிய கூற்றத் தலைவர்கள் மகாமண்டலேசுவரரைப் பற்றிய தீய செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

எல்லாக் குழப்பங்களுக்கும் மனத்தை ஈடுகொடுக்க முடியாமல் அரண்மனை அந்தப்புரமே கதியென்று கிடந்தார் மகாராணி. கருணையும், அன்பும் நிறைந்து சாந்தம் தளும்பும் அவருடைய மனத்துக்கு மகாமண்டலேசுவரருக்கு இருந்தது போல் துன்பங்களை விழுங்கிவிட்டு நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் இல்லை. உணர்ச்சிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்து விடும் மெல்லிய பெண் மனம் அவருடையது. "குமாரபாண்டியனை அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் தாங்கள் அவரைக் காணலாம்" என்று மகாமண்டலேசுவரர் கூறிய சில வார்த்தைகள் தாம் மகாராணியின் உயிரைத் தாங்கிக் கொண்டிருந்தன. அதுவும் அன்று மாலை கோட்டாற்றுப் பண்டிதர் வந்து சென்ற பின் மறுநாள் காலை தூண்டா மணிவிளக்கு அணைந்ததிலிருந்து மகாராணியின் மனம் நிம்மதியாகவே இல்லை. ஊமைக் குழப்பங்கள் மனத்தைச் செல்லரித்தன. குமாரபாண்டியனின் கப்பல் வந்ததும் தகவல் சொல்லி அனுப்புமாறு விழிஞத்தில் ஆள் நிறுத்தியிருந்தாலும் மகாராணியின் மனத்துக்கு உற்சாகமூட்டுவதற்காகத் தாமே அவரையும் அழைத்துக் கொண்டு விழிஞத்துக்குச் செல்லலாம் என்று மகாமண்டலேசுவரர் நினைத்தார். அதனால்தான் யாரும் அறியாமல் தளபதியைச் சிறைப்படுத்தி விட்டுத் தாம் மட்டும் அரண்மனைக்குப் புறப்பட்டார் அவர்.

மகாமண்டலேசுவரர் அரண்மனைக்கு வந்து சேர்ந்த போது காந்தளூர் மணியம்பலத்திலிருந்து பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர், விலாசினி ஆகியோர் ஏற்கெனவே அங்கு வந்திருப்பதைக் கண்டார். அவர்கள் எப்போது எதற்காக வந்தார்கள் என்று புவன மோகினியிடம் விசாரித்தார். மகாராணியே ஆள் அனுப்பி அவர்களை வரவழைத்திருப்பதாகப் புவன மோகினி தெரிவித்தாள். பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர் ஆகியோருக்கும் மகாமண்டலேசுவரருக்கும் எப்போதும் அவ்வளவு சுமுகமான உறவு இல்லை. காய்ந்த மண் பிண்டத்தோடு மற்றொரு காய்ந்த மண் பிண்டம் ஒட்டாத மாதிரி முற்றிய அறிவுக்கும் முதிர்ந்த அறிவுக்கும் இடையேயுள்ள பொறாமை அவர்களுக்குள் வெளியே தெரியாமல் இருந்து வந்தது. சந்திக்கும் போதோ, பழக நேரும் போதோ, அதைக் காட்டிக் கொள்ளாமல் நாகரிகமாக நடந்து கொண்டு விடுவார்கள். ஒருவர் காரியத்தில் மற்றொருவர் அநாவசியமாகத் தலையிட மாட்டார்கள். காந்தளூர் மணியம்பல நிர்வாகத்தில் மகாமண்டலேசுவரரோ, மகாமண்டலேசுவரருடைய நிர்வாகத்தில் அவர்களோ குறுக்கிடாமல் கண்ணியமாக நடந்து கொண்டு விடுவது வழக்கம்.

அன்றைக்கு அந்தச் சூழ்நிலையில் அவர்களை அங்கே எதிர்பார்க்கவில்லை அவர். சந்தித்த போது வெறுப்பதாகக் காட்டிக் கொள்ளவும் இல்லை. மகாராணியைச் சந்தித்துப் போர்க்கள நிலைமையையும் படை ஏற்பாடுகளையும் கூறிவிட்டு, 'விழிஞத்துக்குப் போகலாம்' என்பதையும் தெரிவித்தார். தளபதியைத் தடுத்து நிறுத்திக் காவல் வைத்ததை மட்டும் சொல்லவில்லை.

"ஆகா! இது என் வாழ்க்கையிலேயே நல்ல நாள். குமாரபாண்டியனை வரவேற்க நாம் எல்லோருமே விழிஞத்துக்குப் போகலாம். விழிஞத்தில் என் மகனை நான் சந்திக்காவிட்டால், அவன் நேரே போர்க்களத்துக்குப் போனாலும் போய் விடுவான். அப்புறம் போர் முடிகிற வரை எனக்கு அவனைச் சந்திக்க அவகாசமே இராது. கப்பல் எப்போது வந்தாலென்ன? இன்றே விழிஞத்தில் போய்க் காத்திருப்போம்" என்று மகாராணி மற்றவர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார். அவர்கள் உடன் வரவேண்டாம் என்று எண்ணியும் மகாமண்டலேசுவரரால் அதைத் தடுக்க முடியவில்லை.

---------

 

3.13. குமார பாண்டியன் வந்தான்

 

இறந்து போன பெண் பகவதிதான் என்ற உண்மையைத் தெரிந்து தாங்கிக் கொள்வது கடினமாயிருந்தது குமாரபாண்டியனுக்கு. ஏற்றுக் கொள்ள முடியாத அந்தத் துயர உண்மையிலிருந்து மீள வழியறியாது தவித்தான் அவன். கப்பல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தளத்தில் அவனருகே குழல்வாய்மொழியும் சேந்தனும் மௌனமே உருவாய்க் கன்னத்தில் கையூன்றி வீற்றிருந்தனர்.

"தளபதிக்கு முன்னால் எந்த முகத்தோடு போய் நிற்பேன்! இப்படி அநியாயமாக அந்தப் பெண் இறக்கும்படி நேர்ந்து விட்டதே? போரும், படையெடுப்பும் ஏற்பட்டுத் தளபதியின் ஊக்கமும் உற்சாகமும் நன்றாகப் பயன்பட வேண்டிய சமயத்தில் இந்தச் செய்தியைப் போய்ச் சொன்னால் அவனுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் மட்டும் கவனமாக இருந்திருந்தால் அந்தப் பெண் கப்பலிலிருந்து தப்பி ஓடி இப்படித் துர்மரணமடைந்திராமல் தவிர்த்திருக்க முடியும்" என்று சேந்தனையும் குழல்வாய்மொழியையும் நோக்கித் துக்கத்தோடு சொன்னான் இராசசிம்மன். துயர வேதனையினால் பேசும் போது தொண்டை தடுமாறி நா குழறியது அவனுக்கு.

"இளவரசே! நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களைக் கேட்டுக் கொண்டா அந்தப் பெண் இந்தக் காரியங்களைச் செய்தாள்? அவளுடைய முரட்டுத்தனம் அவளுக்கே அழிவைத் தேடிக் கொடுத்து விட்டது. விழிஞத்தில் அந்தப் பெண் ஆண் வேடத்தோடு வந்த போதே சந்தேகப்பட்டுக் கப்பலில் இடங்கொடுக்க மறுத்தேன் நான். மகாமண்டலேசுவரருடைய திருப்புதல்வியாரின் நல்ல மனத்தால் கப்பலில் இடம் பெற்றுத் தன் பெயர் கூத்தனென்று பொய் கூறி நடித்தாள் அந்தப் பெண். கப்பலில் பலமுறை என்னுடைய சந்தேகம் வலுத்தும், பேசாமல் அடக்கிக் கொண்டிருந்தேன் நான். கடைசியில் தனக்கு இடங்கொடுத்த இடையாற்று மங்கலத்து நங்கையிடமே கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப் போட்டு விட்டுத் தப்பியிருக்கிறாள் அவள். நாங்கள் ஒரு குற்றமும் அறியோம்" என்று அந்தச் சோகமயமான சந்தர்ப்பத்திலும் தெளிவாகப் பதில் சொன்னான் நாராயணன் சேந்தன்.

 

"நீங்கள் ஏன் வீணாக அவருக்குப் பதில் சொல்லிச் சிரமப் படுகிறீர்கள்? இப்போது அந்தப் பெண்ணுக்குப் பதிலாக நானே இறந்து போயிருந்தால் கூடக் குமாரபாண்டியர் இவ்வளவு துக்கப்பட மாட்டார். பொய்யும் வஞ்சகமும் நிறைந்தவளாயிருந்தாலும் அவள் கொடுத்து வைத்தவள். அதிர்ஷ்டக்காரி. இல்லாவிட்டால் குமார பாண்டியரை இவ்வளவு தூரம் அநுதாபத்துக்கு ஆளாக்க முடியுமா?" என்று சற்றே அசூயை தொனிக்கும் குரலில் சேந்தனை நோக்கிச் சொன்னாள் குழல்வாய்மொழி. இந்தச் சொற்களைக் கேட்டுச் சினமும் வெறுப்பும் அடைந்த இராசசிம்மன், "நீங்கள் இருவரும் பேசுகிற விதம் கொஞ்சம் கூட நன்றாயில்லை. அந்தப் பெண் பகவதி என்னதான் பொய்யாக நடந்து ஏமாற்றியிருக்கட்டுமே! அதற்காக இப்படியா ஈவிரக்கமின்றிப் பேசுவீர்கள்? உங்களுக்கு மனித மனத்துக்குரிய நெகிழ்ச்சியே இல்லையா? மரணத்துக்குப் பின்னும் பகைகளை மறந்து துக்கப்படத் தெரியாமல் இப்படியா விலகிப் பேசுவது?" என்று அவர்கள் இருவரையும் கடிந்து பேசினான்.

"குமார பாண்டியர் என்னை மன்னிக்க வேண்டும். நான் வெளிப்படையாக மனம் விட்டுக் கூறுகிறேன். நெஞ்சில் துக்கம் ஊறாமல் துக்கப்படுவது போல் நடிக்க எனக்குத் தெரியாது!" என்று வெடுக்கெனச் சொன்னாள் குழல்வாய்மொழி.

"குழல்வாய்மொழி! நீ கல்நெஞ்சுக்காரி."

"நீங்களும் சில சமயம் கல்நெஞ்சுக்காரராக இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்."

"போதும், நிறுத்து! இதற்கும் மேல் இப்போது உன்னுடன் நான் பேச விரும்பவில்லை."

"! தாராளமாக நிறுத்தி விடுகிறேன். எனக்குங்கூட விருப்பமில்லைதான்."

"உங்கள் இருவருடனும் இந்தக் கப்பலில் நான் புறப்பட்டதே தப்பு. அதை இப்போது உணர்கிறேன்" என்று வெறுப்போடு சொன்னான் இராசசிம்மன்.

"நீங்கள் எங்களுக்காகப் புறப்படவில்லை. உங்கள் சொந்த நாட்டையும் அருமைத் தாயையும் காப்பாற்றுவதற்காகப் புறப்பட்டிருக்கிறீர்கள்" என்றாள் குழல்வாய்மொழி.

அங்கேயிருந்து அவர்கள் இருவருடனும் மேலும் பேசிக் கொண்டிருப்பதை விரும்பாதவன் போல் விருட்டென்று எழுந்து மேல் தளத்துப் படிகளில் ஏறினான் குமாரபாண்டியன். அவன் கையில் எடுத்துச் சென்ற வலம்புரிச் சங்கை கடுப்புடன் நோக்கினாள் குழல்வாய்மொழி. சேந்தனும் வியப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். குமார பாண்டியனின் உருவம் மேல்தளத்துப் படிகளில் ஏறி மறைந்ததும் குழல்வாய்மொழி அவசரமாகச் சேந்தன் பக்கம் திரும்பினாள்.

 

"இடைவழியில் செம்பவழத் தீவு வராமல் கப்பலை வேறு மார்க்கமாக விலக்கிச் செலுத்திக் கொண்டு போகவேண்டுமென்று உடனே மீகாமனுக்கு இரகசியமாகத் தெரிவித்து விடுங்கள்." அவளுடைய குரலிலிருந்த உணர்ச்சிக் கொதிப்பைக் கண்டு சேந்தனே திகைத்துப் போனான்.

"அப்படியே தெரிவித்து விட்டு வருகிறேன், அம்மணி!" என்று உடனே மீகாமனைச் சந்திப்பதற்குச் சென்றான். குழல்வாய்மொழி ஆத்திரத்தோடு இரண்டு கைவிரல்களையும் சேர்த்துக் கோத்து முறித்துச் சொடுக்கினாள். விரல்கள் நெரிந்த ஒலி அவள் சினத்தை எல்லையிட்டுக் காட்டியது. தந்தைக்கு அறிவில் இறுமாப்பு என்றால் மகளுக்கு அன்பில் இறுமாப்பு. தான் உரிமை கொண்டாடி அனுபவிக்கும் அழகைத் தன்னைத் தவிர வேறொருவர் உரிமை கொண்டாட விடக்கூடாது. பிடிவாதத்திலும், இறுமாப்பிலும் அவள் தன் அருமைத் தந்தையைக் கொண்டிருந்தாள்.

"அம்மணி! கவலை வேண்டாம். கப்பல் செம்பவழத் தீவு வழியே போகாது" என்று சேந்தன் திரும்பி வந்து உறுதி கூறிய போதுதான் அவளுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. அதன் பின் அந்தப் பயணத்தின் போது குழல்வாய்மொழியும் இராசசிம்மனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. பயணம் தொடங்கிய மூன்றாம் நாள் மாலை, "போகிற வழியில் இந்தக் கப்பலைச் செம்பவழத் தீவில் சிறிது நேரம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று நாராயணன் சேந்தனை அழைத்துக் கூறினான் இராசசிம்மன்.

"குமார பாண்டியர் என்னை மன்னிக்க வேண்டும். செம்பவழத் தீவு கடந்து விட்டது. அவசரமாக விழிஞத்தை அடைய வேண்டுமென்பதற்காகக் கப்பலை வேறு வழியாக விலக்கிச் செலுத்திக் கொண்டு வந்து விட்டோம்" என்று கவலைப்படுவது போன்ற முகபாவத்தை வருவித்துக் கொண்டு சொன்னான் நாராயணன் சேந்தன்.

"நல்லது அப்படியானால் விழிஞத்தை எப்போது அடையலாம்?" என்று தன் மனவேதனையைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான் இராசசிம்மன்.

"வழக்கமாக ஆகிய நாட்களைக் காட்டிலும் இரண்டு நாட்கள் முன்னதாகவே போய்விடலாம்" என்று சேந்தனிடமிருந்து பதில் வந்தது. குமாரபாண்டியன், சேந்தன், குழல்வாய்மொழி ஆகிய இவர்கள் மூவரும் இப்படி அவசரமாகக் கப்பலில் வந்து கொண்டிருந்த இதே சமயத்தில் இவர்களை எதிர்பார்த்து விழிஞத்தில் காத்திருந்தவர்களின் நிலை என்ன என்று இனிமேல் கவனிக்கலாம்.

மகாராணி, பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர், விலாசினி ஆகிய எல்லோருடனும் விழிஞத்துக்குப் புறப்பட்டு வந்திருந்தார் மகாமண்டலேசுவரர். போர்க்களத்திலிருந்த வீரர்கள் எவரேனும் அவசரச் செய்தி கொண்டு வந்தால், அவர்கள் தம்மை விழிஞத்தில் வந்து சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டு அதன் பின்பே புறப்பட்டிருந்தார் அவர். கோட்டாற்றுப் பெரும்படைகளையெல்லாம் திரட்டி அனுப்பியிருப்பதால் உடனடியாகக் கவலைப்படும்படியான நிகழ்ச்சி எதுவும் போர்க்களத்தில் நடந்து விடாது என்ற நம்பிக்கை அவருக்கு உண்டாகியிருந்தது.

விழிஞத்துக்குப் போனதும் போகாததுமாக அவருடைய கண்கள் ஆபத்துதவிகள் தலைவன் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதைத் தான் தேடின. மகாராணி முதலியவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டுத் தாம் மட்டும் தனியே புறப்பட்டுத் துறைமுகப் பகுதிகளில் சுற்றினார் அவர். தளபதியின் ஏற்பாட்டால் ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் அங்கே எங்கேயாவது மறைந்து காத்திருப்பானென்று அவர் எதிர்பார்த்தார்.

அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. ஏற்றுமதிக்காகக் குவிக்கப்பட்டிருந்த மிளகுக் குவியல்களுக்கப்பால் ஒரு பெரிய சுரபுன்னை மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தான் குழைக்காதன். பூதாகாரமான தோற்றத்தையுடைய நாலைந்து யவனக் கப்பல் மாலுமிகள் குடித்து விட்டு மாமிச பர்வதங்கள் உருளுவன போல் அந்த மரத்தடியில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தனர். குழைக்காதனும் கொஞ்சம் யவனத்து மதுவைச் சுவைத்திருப்பான் போலவே தோன்றியது.

ஆனாலும் அவன் தன் நினைவிழந்து விடவில்லை. திடீரென்று மகாமண்டலேசுவரரைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். தள்ளாடிக் கொண்டே வணங்கினான். அந்த நிலையில் அவர் தன்னை கண்டு கொண்டாரே என்று நாணமடைந்தான்.

"ஓகோ! நீயும் பெருங்குடிமகனாகி (நிறைய குடிப்பவன்) விட்டாயா? பரவாயில்லை. கொஞ்சம் என் பின்னால் நடந்து வா... உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்" என்று மகாமண்டலேசுவரர் கூப்பிட்ட போது அவன் மறுக்காமல் அவர் பின்னால் அடக்கமாக நடந்து சென்றான். அப்படிச் சிறிது தொலைவு நடந்து சென்றதும் சற்றும் தளர்ச்சியில்லாத குரலில் அவனை நோக்கிக் கூறினார் அவர்: "நான் இப்போது படைத்தளத்தில் தளபதியைச் சந்தித்து விட்டுத்தான் வருகிறேன். உன்னை இங்கே அனுப்பியிருப்பதைப் பற்றியும் அவன் என்னிடம் சொன்னான். படைகளெல்லாம் போர் முனைக்கு அனுப்பியாயிற்று. புறப்படுகிற சமயத்தில் திடீரென்று உடல் நலங்குன்றிப் போய் வல்லாளதேவன் மட்டும் படைக்கோட்டத்திலேயே தங்கிவிட்டான், பாவம்! அதைக் கண்டு எனக்கே பரிதாபமாக இருந்தது. இடையாற்று மங்கலத்திலிருந்து என்னுடைய காவல் வீரர்கள் சிலரை வரவழைத்து ஒத்தாசைக்கு வைத்து விட்டு வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீயும் அங்கு போனால் உதவியாயிருக்கும். தளபதி எல்லா விவரமும் என்னிடம் சொன்னான். கப்பலில் அவன் தங்கை பகவதி வந்தால் அவளை நானே அங்கு அழைத்து வந்து விடுவேன். படைத்தளத்தைச் சுற்றிக் காவல் பலமாக இருக்கிறது. ஆனாலும் தளபதியைக் கவனித்துக் கொள்வதற்காக உன்னை மட்டும் உள்ளே விடச் சொல்லி நான் அனுமதி ஓலை எழுதித் தருகிறேன். நீ உடனே புறப்படு."

 

இதைக் கேட்டதும் குழைக்காதனுக்கு உடம்பு விதிர் விதிர்த்துப் போய்விட்டது. மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிவின் சிகரமென விளங்கிய மகாமண்டலேசுவரர் மட்டும் இந்தச் செய்தியைச் சொல்லியிராமல் வேறு யாரேனும் சொல்லியிருந்தால் அவன் சிறிதும் நம்பியிருக்க மாட்டான். தென்பாண்டி நாட்டு வீரத் தளபதி வல்லாளதேவனுக்கா உடல் நலம் சரியில்லை? எத்தனையோ போர்க்களங்களில் பெரும் படையுடன் சென்று பகைவர்களைப் புறம்கண்டு வெற்றி வாகை சூடிய வல்லாளதேவனுக்கா திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது? என்று பல கேள்விகள் அவன் உள்ளத்தில் எழுந்து பெரும் ஐயத்தை உண்டாக்கியிருக்கும். மகாமண்டலேசுவரரின் வாய்ச் சொல்லாகவே வருகின்ற விஷயம் எதுவாயினும் அதை நம்பித்தானேயாக வேண்டும்? இந்த நல்ல சமயத்திலா தளபதிக்கு உடல் நலமில்லாது போக வேண்டும்? என்று மனம் கலங்கினான் அவன்.

"இங்கே நின்று கொண்டிரு. இன்னும் சிறிது நேரத்தில் ஓலையை எழுதிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார் மகாமண்டலேசுவரர். அவன் அங்கே இருந்தான். சிறிது நேரத்தில் உறையிட்டு அரக்குப் பொறி வைத்த ஓலையோடு வந்தார் அவர். அதை அவனிடம் கொடுத்து விட்டு, "போய் வா! இந்த ஓலையைக் கொடுத்ததும் உன்னை உள்ளே அழைத்துப் போய் விட்டு விடுவார்கள்" என்றார். அவன் அவசரமாகப் புறப்பட்டான். வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு புன்னகை பூத்தார் மகாமண்டலேசுவரர்.

மகாமண்டலேசுவரருடைய ஓலையோடும், தளபதியின் உடல் நிலை எப்படியிருக்கிறதோ என்ற பயத்தோடும் அவசரமாகப் பயணம் செய்து கோட்டாற்றுக்குப் போய்க் கொண்டிருந்த மகரநெடுங்குழைக்காதனுக்கு இடைவழியில் என்ன சந்தேகம் உண்டாயிற்றோ தெரியவில்லை. மகாமண்டலேசுவரரின் ஓலையைப் பிரித்துப் படித்து விட்டான்.

'இந்த ஓலையைக் கொண்டு வரும் ஆபத்துதவிகள் தலைவனையும், தளபதியைச் செய்தது போலவே செய்யவும் - இப்படிக்கு மகாமண்டலேசுவரர்' என்ற ஓரே வாக்கியம் தான் அந்த ஓலையில் இருந்தது. ஆபத்துதவிகள் தலைவன் திகைத்தான். அவனுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. 'ஏதோ சூழ்ச்சிக்கு இரையாகப் போகிறாய்' என்று மனம் எச்சரித்தது. என்ன ஆனாலும் மகாமண்டலேசுவரர் சொற்படிக் கேட்பதில்லை என்ற மன உறுதியுடன் விழிஞத்துக்கே திரும்பி, அந்த ஓலையையும் கிழித்தெறிந்து விட்டான்.

----------

 

3.14. கல்லில் விழுந்த கௌரவம்

 

முதல் நாள் இரவிலிருந்தே விழிஞத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழை மறுநாள் காலை வரை நிற்கவே இல்லை. தேய்பிறைக் காலத்து இருட்டு முகில் மூட்டத்தின் கவிந்த நிலை. அதிகாலை மூன்றரை நாழிகைக்கு மேல் இருக்கலாம். அலைகள் பேய்த்தனமாகக் குமுறி வீசிக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் தெற்கேயிருந்து ஒரு கப்பல் துறைக்கு வந்து நின்றது. மழையில் நனையாமல் ஒதுங்கி நின்று கொண்டிருந்த சிலர் தீபங்களோடு ஓடிப்போய்க் கப்பலைப் பார்த்தனர். அப்படிப் பார்த்தவுடன் அவர்களிடமிருந்து ஆரவாரமும், மகிழ்ச்சியும் நிறைந்த குரல்கள் எழுந்தன. அமைதியில் ஆழ்ந்து ஆள் நடமாட்டம் இல்லாமலிருந்த அந்த நேரத்தில் அந்தக் கப்பலின் வருகையை எதிர்பார்த்தே அவர்கள் காத்திருந்தார்கள் போலிருக்கிறது. 'குமாரபாண்டியருடைய கப்பல் வந்துவிட்டது!' என்ற ஆனந்தமயமான வார்த்தைகள் அந்த இருளிலும் மழையிலும் ஒலித்தன. அவர்களில் சிலர் ஓடிப்போய்த் துறைமுகத்துக்கு அண்மையிலிருந்த விழிஞத்து அரச மாளிகையில் தங்கியிருந்த மகாமண்டலேசுவரர் முதலியவர்களிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். மகாமண்டலேசுவரர் மற்றவர்களை எழுப்பினார். மகாராணி, அதங்கோட்டாசிரியர், விலாசினி, பவழக்கனிவாயர் முதலியவர்கள் மகாமண்டலேசுவரரைப் பின் தொடர்ந்து சென்றனர். இருட்டையும் மழைக் குளிரையும் பொருட்படுத்தாமல் கப்பல் நின்று கொண்டிருக்கும் துறையை நோக்கி அவர்கள் கால்கள் விரைந்தன.

பகற்பொழுதில் மக்கள் கூட்டமும், பலமொழி பேசும் பல நாட்டு மக்களின் நாகரிகக் கலப்பும் வெள்ளமாக வழிந்து ஓடும் அந்தத் துறைமுகப் பகுதியில் அப்போது மழைத் தண்ணீர்தான் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. மழைத் தண்ணீரில் நனையாமல் சுங்கச் சாவடிக்குள் அடுக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகளின் ஓரமாக ஒன்றிப் படுத்திருந்த மனிதன் ஒருவன் மெல்ல எழுந்தான். மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் எந்தக் கப்பலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்களோ, அதே கப்பலை நோக்கி அவனும் இருளில் பதுங்கி நடந்தான். யாருடைய கண்களிலும் தான் தென்பட்டு விடாமல் நடந்து செல்ல வேண்டும் என்பது அவனுடைய நோக்கமாக இருக்கும் போலும். முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் வெளிச்சத்துக்காகப் பிடித்துச் செல்லப்பட்ட தீப்பந்தத்து ஒளி பின்னால் பதுங்கி நடந்தவனுடைய முகத்தில் படுகிறது. அப்போது அவன் முகத்தை நன்றாகக் காணமுடிகிறது.

! அது ஆபத்துதவிகள் தலைவனின் முகம் அல்லவா? தளபதிக்கு உடல் நலமில்லை என்று பொய் சொல்லி அவனை விழிஞத்திலிருந்து கிளப்பி விட்டார் மகாமண்டலேசுவரர். அவனோ நடுவழியிலேயே அவர் கொடுத்து அனுப்பிய ஓலையைப் பிரித்துப் பார்த்து, அதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு விழிஞத்துக்கே திரும்பியிருந்தான்.

 

'ஐயோ, பாவம்! தம்முடைய பெண்ணும், நாராயணன் சேந்தனும் குமாரபாண்டியரை அழைத்துக் கொண்டு இந்தக் கப்பலில் வந்திருப்பார்களென்று மகாமண்டலேசுவரர் கனவு காண்கிறார். நானும், தளபதியும் பகவதியை அனுப்பியிருக்கிற நோக்கம் இவருக்குத் தெரியாது போலும்' என்று நினைத்துக் கொண்டே அவர்களுக்குப் பின்னால் நடந்தான் மகரநெடுங்குழைக்காதன். மழை பெய்து சேறாகியிருந்த தரையில் இருளில் வழுக்கி விடாமல் கவனமாக நடக்க வேண்டியிருந்தது. முன்னால் சென்றவர்களும் நிதானமாகவே நடந்து சென்றதால், குழைக்காதனும் அதற்கேற்ப வேகத்தைக் குறைத்துக் கொண்டான். கப்பலிலிருந்து குமாரபாண்டியனும், பகவதியும் இறங்குவதையும், அதைக் கண்டு மகாமண்டலேசுவரரின் முகத்தில் ஏமாற்றம் படர்வதையும் ஒருங்கே காணப்போகிற ஆவல் அவன் மனத்தின் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது.

அந்த ஆவலுடன் அவன் சென்று கொண்டிருந்த போது இருட்டில் பின்புறமிருந்து ஒரு கை நீண்டு அவன் முகத்தைத் தொட்டது. சிறிதளவு பயமும், பெரும்பகுதி ஆத்திரமுமாகத் திடுக்கிட்டுத் திரும்பினான் ஆபத்துதவிகள் தலைவன். பின்னால் நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்தவுடன் அவனால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. மரியாதையும் திகைப்பும் முகத்தில் மிளிர, 'நீங்களா?' என்ற வினா அவன் வாயிலிருந்து மெல்ல வெளிப்பட்டது. மழையில் நனைந்த உடம்போடு தளபதி வல்லாளதேவன் அங்கே அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான்.

'இரையாதீர்கள், மெல்லப் பேசுங்கள்!' என்று சொல்லும் பாவனையில் உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்துக் காட்டினான் தளபதி வல்லாளதேவன்.

"படைகள் புறப்படுகிற சமயத்தில் உங்களுக்குத் திடீரென்று உடல் நலமில்லாமற் போய்விட்டதாகவும், நீங்கள் படைக்கோட்டத்திலேயே தங்கி விட்டதாகவும் அல்லவா மகாமண்டலேசுவரர் என்னிடம் சொன்னார்?" என்று குரலை மேலும் சிறிதாக்கிக் கொண்டு தன் துடிப்பை அடக்க முடியாமல் கேட்டான் குழைக்காதன்.

"எல்லா விவரமும் சொல்கிறேன். பொறுமையாக இருங்கள்" என்று மெல்லக் கூறிவிட்டுக் குழைக்காதனின் கைகளைப் பற்றி ஒரு மூலைக்கு இழுத்துக் கொண்டு சென்றான் தளபதி.

"மகாசேனாபதி! இப்போது நாம் இங்கே தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க அவகாசமில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த கப்பல் துறையில் வந்து நின்று விட்டது. மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் இளவரசரை வரவேற்பதற்காக அதோ முன்னால் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்" என்று பரபரப்போடு சொன்னான் மகரநெடுங்குழைக்காதன்.

 

"பரவாயில்லை, குழைக்காதரே! அவர்களெல்லாம் கப்பலிலிருந்து இறங்கி வருவதற்குள் நாமும் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். குமாரபாண்டியனோடு பகவதி உடன் வருவாளாகையினால் எல்லாம் அவள் கவனித்துக் கொள்வாள்."

"பகவதி கப்பலில் வருகிற விவரத்தைச் சொல்லி அவளையும் சேர்த்து அழைத்து வந்துவிட வேண்டுமென்று தாங்களே மகாமண்டலேசுவரரிடம் வேண்டிக் கொண்டீர்களாமே?"

"அவர் உங்களிடம் சொன்னாரா அப்படி?"

"சொல்லியது மட்டுமில்லை, உங்கள் உடல் நலனைக் கவனிப்பதற்காக நான் உடனே படைக்கோட்டத்துக்குப் போயாக வேண்டுமென்று என்னிடம் ஓர் ஓலை கொடுத்து இங்கிருந்து துரத்தினார். நானும் முதலில் அதை நம்பிப் புறப்பட்டு விட்டேன்..." என்று தொடங்கி, நடந்த விவரத்தைத் தளபதிக்குச் சொன்னான்.

"நீங்கள் செய்தது நல்லதாய்ப் போயிற்று. மகாமண்டலேசுவரர் கொடுத்த ஓலையை நம்பிப் படைக்கோட்டத்துக்கு வந்திருந்தால் என்னைப் போலவே நீங்களும் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பீர்கள். இடைவழியிலேயே அவருடைய ஓலையைக் கிழித்துப் போட்டு விட்டு விழிஞத்துக்கே திரும்பிய உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன் குழைக்காதரே! மகாமண்டலேசுவரர் பெரிய சூழ்ச்சி செய்து என்னை ஏமாற்றி விட்டார். நயமாகப் பேசி படைகளை முன்னால் அனுப்பச் செய்துவிட்டுத் தனியே என்னை அழைத்துக் கொண்டு போனார். நான் முட்டாள்தனமாய் அவரிடம் தனிமையில் மாட்டிக் கொண்டு விட்டேன். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்றும் என்னால் எவ்வளவோ தவறுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் எரிந்து விழுந்தார். நானும் என் ஆத்திரத்தை அவரிடம் காட்டினேன், பலிக்கவில்லை. தந்திரமாக என்னைப் படைக்கோட்டத்திலேயே சிறை வைத்துவிட்டு விழிஞத்துக்குப் புறப்பட்டார் அவர். அங்கே என்னை ஏமாற்றியது போதாதென்று இங்கே வந்து உங்களையும் ஏமாற்றியிருக்கிறாரென்று தெரிகிறது. இல்லாவிட்டால், படை புறப்படும் நேரத்தில் எனக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது என்று சொல்லி உங்களை அங்கே அனுப்பியிருப்பாரா? என்ன இருந்தாலும் பிறரை அஞ்சி நிற்கச் செய்யும் சூழ்ச்சித் திறமை அவரிடம் இருப்பது போல வேறு யாரிடமும் இருக்க முடியாது. நான் அவருக்கு எதிராகச் செய்த ஒவ்வொரு தவற்றையும் வரிசையாக எண்ணி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிறாரே அவர்! பகவதியை ஈழ நாட்டுக்கு அனுப்பியிருக்கும் இரகசியம் உங்களையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாதென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரோ அதை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவினால் அவரை வெல்ல நம்மால் முடியாது, குழைக்காதரே! ஆனால் எப்படியும் அந்த மலைச்சிகரத்தை வீழ்த்தியாக வேண்டும். அதைச் செய்வதற்காகத்தான் நான் தப்பி ஓடி வந்தேன். வலிமையான யவனக் காவல் வீரர்களை எனக்குக் காவல் போட்டிருந்தார் மகாமண்டலேசுவரர். என் சாமர்த்தியத்தையெல்லாம் பயன்படுத்தி என்னைக் காவல் செய்த வீரர்களை ஏமாற்றிவிட்டு இங்கு ஓடி வந்தேன். அவர் என்னை இவ்வளவு தூரத்துக்கு அவமானப்படுத்திய பின்பும் போர்க்களத்துக்குப் போய்ப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போர் செய்ய விருப்பமில்லை எனக்கு. நான் போருக்குத் தலைமை தாங்கலாமா, இல்லையா என்பதைக் குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்?" என்று ஆபத்துதவிகள் தலைவனிடம் தம் மனக் குமுறலை வெளியிட்டான் தளபதி வல்லாளதேவன். அதைக் கேட்டுவிட்டுக் குழைக்காதன் கூறினான்:

"மகாமண்டலேசுவரர் ஒருவரை மட்டும் மனத்தில் வைத்துக் கொண்டு தாங்கள் அப்படியெல்லாம் செய்து விடக் கூடாது. தங்கள் தங்கையார் மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சிகளையும், சர்வாதிகார மனப்பான்மையையும் குமாரபாண்டியரிடம் இதற்குள் விவரித்துச் சொல்லியிருக்கலாம். அதைக் கேட்டு குமாரபாண்டியரே மகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கை இழந்திருப்பார்."

"அப்படிச் சொல்வதற்கில்லை, குழைக்காதரே! குமார பாண்டியருடைய மனத்தை என் தங்கை பகவதி எவ்வளவுதான் மாற்றியிருந்தாலும் இங்கு வந்து இறங்கியவுடன் மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் சொல்கிறபடிதான் கேட்பார் அவர். ஆகவே, இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே காரியம் தான். மகாமண்டலேசுவரர் என்ற இறுமாப்பு சக்தியை ஒரேயடியாக வீழ்ச்சியுறச் செய்து விட வேண்டும்."

"முயன்று பார்க்கலாம். அதோ அவர்கள் கப்பலை நெருங்கி விட்டார்கள். வாருங்கள், நாமும் போகலாம், மற்றவற்றைப் பின்பு பேசிக் கொள்வோம்" என்று கூறித் தளபதியையும் கூட்டிக் கொண்டு துறையில் வந்து நின்ற கப்பலை நோக்கிச் சென்றான் குழைக்காதன்.

தளபதிக்கும், குழைக்காதனுக்கும் இருளும் மழையும் போதுமான அளவு மறைந்து செல்வதற்கு ஒத்துழைத்தன. கப்பல் நின்று கொண்டிருந்த துறைக்கு அருகில் ஒரு பாறை மறைவில் அவர்கள் இருவரும் மறைவாக நின்று கொண்டனர். அந்த இடத்தில் நின்று கொண்டு கப்பலிலிலிருந்து இறங்குபவர்களை அவர்கள் பார்க்க முடியும்! அங்கே பேசுகிற பேச்சையும் கேட்க முடியும். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மறைவிடம் அது.

கப்பலின் அருகே தீப்பந்தங்களின் ஒளியில் மகாராணி மகாமண்டலேசுவரர், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர், விலாசினி ஆகியோர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் மழைத் தூறலில் நனைந்து கொண்டு தான் நின்றார்கள். நங்கூரக் கயிறுகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தாலும் அலைக் குழப்பத்தால் கப்பல் ஆடிக் கொண்டிருந்தது.

 

அடடா! அப்போது மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில் தான் எத்தனை ஆவல் நிறைவு பொங்கி நிற்கிறது! கப்பலிலிருந்து இறங்கிவரும் வழியையே பார்த்து நிற்கும் அவருடைய கண்களில் தென்படும் புனிதமான உணர்ச்சி தாய்மைப் பாசத்துக்கே சொந்தமான உணர்ச்சியல்லவா? அந்த உணர்ச்சிச் சாயல் மூலமாக அவருடைய தூய உள்ளத்தில் அப்போது எத்தனை எண்ணங்கள் பொங்கி எழுந்தனவோ?

விலாசினி, அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயார் எல்லோருடைய முகங்களிலும் குமார பாண்டியரைக் காணப்போகும் ஆவல் நிலவியது. மகாமண்டலேசுவரருடைய முகம் ஒன்று மட்டுமே உணர்ச்சி நிழல் படியாமல் வழக்கம் போல் இயல்பாக இருந்தது. பக்கத்திலிருந்து படர்ந்த தீப்பந்தத்தின் ஒளிச் சாயலில் அவருடைய கூர்மையான மூக்கு, முகத்திலிருந்து நீண்ட சக்தி ஒன்றின் நுனி போல் பளபளத்தது. அவருடைய சக்தி வாய்ந்த கண்களும் கப்பலிலிருந்து இறங்கி வரும் மரப்படிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. ! அவர்கள் எதிர்பார்த்த இணையற்ற அந்த விநாடி இதோ வந்துவிட்டது. சேந்தனும், குழல்வாய்மொழியும் பின் தொடர குமார பாண்டியன் இறங்கி வந்தான். ஏனோ அவன் முகத்தில் சிறிது சோர்வு தென்பட்டது. சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் கூட அவ்வளவாக உற்சாகம் தென்படவில்லை. வரவேற்றவர்களிடம் இருந்த உற்சாகமும் பரபரப்பும் வரவேற்கப்பட்டவர்களிடம் இல்லை. குமாரபாண்டியன் கடைசிப் படியிலிருந்து இறங்கித் தென்பாண்டி நாட்டு மண்ணில் கால் வைத்தான். தீப்பந்த ஒளியில் அவன் அழகிய முகமும் வலது கையில் இருந்த வலம்புரிச் சங்கும் தெரிந்து மின்னின. யாரோ ஒரு கந்தர்வ உலகத்துச் சுந்தர இளைஞன் போல் எழிலார்ந்து காட்சியளித்தான் அவன். இறங்கியதும் கீழே நின்ற யாவரையும் வணங்கினான். அப்போது, "குழந்தாய்! வந்தாயா?" என்று ஒரு பாசம் நிறைந்த குரல் அவன் செவி வழிப் புகுந்து மனத்தின் இடமெல்லாம் நிறைந்து அவனைக் குழந்தையாக்கி விட்டது. அடுத்த விநாடி, "அம்மா!" என்ற சொல் அவன் நாவிலிருந்து உணர்ச்சி மயமாகக் கனிந்து குழைந்து தோன்றி ஒலித்தது. அந்த ஒலி எழுந்து அடங்குவதற்குள் தன் தாயின் கரங்களுக்கிடையே தழுவப்பட்டு நின்றான் அவன். தாய்மை என்ற பாற்கடலில் விழுந்து முழுகிப் பருகியும், நனைந்தும், உணர்ந்தும், தன்னை இழந்து அதிலேயே ஆழ்ந்து விட்டது போல் ஒரு பரவச நிலை. தங்கமே தசையாகத் திரண்டு நீண்டாற் போன்ற குமாரபாண்டியனின் அழகிய தோளில் மகாராணி வானவன்மாதேவியின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. தாயின் அந்தக் கண்ணீர் தன் உடம்பையும் உள்ளத்தையும் அழுக்கு நீக்கிப் பரிசுத்தமாக்கி விட்டது போல் ஒரு மகத்தான உணர்வு ஏற்பட்டது இராசசிம்மனுக்கு. பின்பு குழல்வாய்மொழியையும் அன்போடு தழுவி வரவேற்றார் மகாராணி.

தன் தந்தை அதங்கோட்டாசிரியரின் முதுகுக்குப் பின் வெட்கத்தோடு ஒன்றிக் கொண்டு நின்ற விலாசினி வியப்போடு பார்த்தாள். அவ்வளவு வயதான மகாராணி தம் மகனைக் கண்டதும் சிறு பிள்ளை போல் தழுவிக் கொண்டு கண்ணீர் சோர நின்ற காட்சி அவள் உள்ளத்தை உருக்கியது. 'குழந்தைத் தன்மை என்ற அபூர்வமான உணர்ச்சியை உலகத்துக்குக் கொடுத்துக் கொண்டு வருபவள் தாய். அதனால் தான் அந்தத் தன்மை தாயிடமிருந்தே சில சமயம் வெளிப்பட்டு விடுகிறது போலும்' என்று நினைத்து வியந்தார் அதங்கோட்டாசிரியர். மகாமண்டலேசுவரர் முதலியவர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்கினான் குமாரபாண்டியன்.

"இராசசிம்மா! நல்ல சமயத்தில் நீ தாய் நாட்டுக்கு வந்திருக்கிறாய். வடக்கே நம்முடைய எல்லையில் போர் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய வருகையால் நம் படைவீரர்கள் உற்சாகமும் அடையப் போகிறார்கள். சேர வீரர் படை உதவியும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இனி வெற்றி நம்முடையதாகத்தான் இருக்கும்" என்று அவனைச் சந்தித்து விட்ட மகிழ்ச்சியோடு கூறினார் மகாமண்டலேசுவரர். அவர் முகத்தை நேருக்கு நேர் நோக்க வெட்கினான் அவன். கீழே குனிந்து கொண்டு பார்த்தவாறு, "சுவாமி! படைக்கும், உதவிகளுக்கும் ஒன்றும் குறைவே இல்லை. ஈழ நாட்டுக் காசிப மன்னரின் படை கூட இன்னும் சில நாட்களில் நம் உதவிக்கு வரலாம்" என்றான் இராசசிம்மன்.

"உன்னுடைய முகத்தில் போரைப் பற்றிப் பேசும் போது ஆவேசம் ஏற்படவில்லையே? இந்தச் சோர்வும், சோகமும் எங்கிருந்து உன் முகத்தில் வந்து படிந்தனவோ?" என்று அவன் முகத்தை வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்துவிட்டுக் கேட்டார் மகாராணி. மகாராணி இவ்வாறு கேட்டதும் இராசசிம்மனுடைய முகத்தில் மேலும் சோகக் களை வந்து கவிந்தது. அவன் நெட்டுயிர்த்தான். அவனுடைய கண்கள் கலங்கின. எதையோ கூறுவதற்கு அவன் உதடுகள் தயங்கித் தயங்கித் துடித்தன.

அவன் என்ன கூறப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் எல்லோருடைய விழிகளும் அவனுடைய முகத்தையே உற்று நோக்கின. ஆனால் அவன் வாய் திறந்து பேசுவதற்கு முன் கண்களின் குறிப்பினாலேயே வேறு ஒரு பேச்சும் அங்கு நிகழ்ந்தது. பயந்து மிரளும் கண்களால் ஏதோ ஒரு குறிப்புத் தோன்றச் சேந்தன் முகத்தைப் பார்த்தாள் குழல்வாய்மொழி.

சேந்தன் மகாமண்டலேசுவரரைச் சிறிது தள்ளி அழைத்துக் கொண்டு போய் ஏதோ சொல்லிவிட்டு வந்தான். அதைக் கேட்டுவிட்டுத் திரும்பி வந்த மகாமண்டலேசுவரர், "குமாரபாண்டியரிடம் ஒரு விநாடி தனியாகப் பேச விரும்புகிறேன். இப்படிக் கொஞ்சம் என்னுடன் வரலாமா?" என்று பதறாத குரலில் தெளிவாகக் கூப்பிட்டார். குமாரபாண்டியன் மறுப்பின்றி அவருடன் சென்றான். கப்பல் துறைக்கு அருகேயிருந்த ஒரு பாறைக்குச் சமீபத்தில் போய் மகாமண்டலேசுவரரும் குமாரபாண்டியனும் நின்றனர். மகாமண்டலேசுவரர் இருளில் அவன் காதருகே ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்திச் சொன்னார்: "இராசசிம்மா! சற்று முன் நீ எல்லோரிடமும் சொல்லி விடுவதற்கு இருந்த சோகச் செய்தி என்னவென்று நான் இப்போதுதான் சேந்தனிடம் அறிந்து கொண்டேன். 'பகவதி இறந்து போனாள்' என்ற செய்தியை இன்னும் சிறிது காலத்துக்கு வெளியிடாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது. நான் வெளியிடச் சொல்கிறவரை அதை வெளியிடுவதில்லை என்று எனக்கு வாக்குத் தத்தம் செய்து கொடு."

இதைச் சொல்லிவிட்டு, வாக்குறுதியாக வலது கையை நீட்டினார் அவர். "சுவாமி! என்னைச் சோதிக்காதீர்கள். நீங்கள் மிகப் பெரியவர். எவ்வளவு பெரிய துக்கத்தையும் அங்கீகரித்துக் கொண்டு உணர்ச்சி வசப்படாமல் நிமிர்ந்து நிற்கிற தெம்பு உங்களுக்கு உண்டு. நான் அப்படி மறைத்துக் கொண்டு நிற்கும் உறுதியற்றவன். என்னை மன்னித்து விடுங்கள். அந்தப் பெண்ணின் துர்மரணத்தை என்னால் ஒளிக்க முடியாது. உங்கள் பெண்ணும் சேந்தனும் கூட அந்தத் துயர உண்மையை மறைத்துக் கொண்டு இருந்து விடுவார்கள். என்னால் முடியாதே!" என்று நாத் தழுதழுக்கச் சொன்னான் குமாரபாண்டியன்.

"நீ கட்டாயம் அதை மறைத்துத்தான் ஆக வேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் போரில் தென்பாண்டி நாடு வெற்றி பெற வேண்டுமென்றால், இந்த வாக்கை நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன் விருப்பம் போல் செய். இதற்கு மேல் உன்னைக் கெஞ்சிக் கொண்டிருக்க எனக்குத் தெரியாது." - ஒரு கணம் குமாரபாண்டியன் என்ன பதில் கூறுவதென்று தயங்கினான். அடுத்த விநாடி, "உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்" என்று அவருடைய வலது கையில் தன் வலது கையை வைத்துச் சத்தியம் செய்து கொடுத்தான். மகாமண்டலேசுவரர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

"சுவாமி! தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா?" என்று கேட்டான் இராசசிம்மன்.

"இல்லை! கோட்டாற்றுப் படைத் தளத்தில் தனியே சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன். இதைக் கேட்டு ஆச்சரியப்படாதே. இந்த உண்மையும் இப்போதைக்கு உன் மனத்தோடு இருக்கட்டும்."

"இதெல்லாம் என்ன விபரீதங்களோ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?"

"கவலைப்படாதே, இராசசிம்மா? எல்லாம் போகப் போக விளங்கும்."

அவர் இப்படிச் சொல்லி வாய் மூடவில்லை. அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை ஒட்டி அமைந்த பாறையின் மறுபுறமிருந்து தேங்காய் பருமனுக்கு ஒரு கல் 'விர்'ரென்று வீசி எறியப்பட்டுப் பறந்து வந்தது. அந்தக் கல் மகாமண்டலேசுவரரின் மகுடத்தில் விழுந்து அதைக் கீழே வீழ்த்தியது. குமாரபாண்டியன் வாளை உருவிக் கொண்டு ஓடினான். ஓசை கேட்டுச் சேந்தனும் ஓடி வந்தான்.

"நில்லுங்கள். மகுடம் தான் விழுந்தது. என் தலை இன்னும் இருக்கிறது!" என்று சிரித்துக் கொண்டே அவர்களைத் தடுத்து நிறுத்தினார் மகாமண்டலேசுவரர். பாறையின் மறுபுறத்திலிருந்து யாரோ இருவர் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது.

------------

 

3.15. ஒரு பிடி மண்

 

"சுவாமி! இதென்ன அநியாயம்? எவனோ அக்கிரமம் செய்து விட்டு ஓடுகிறான். அவனைப் பிடிக்கலாமென்றால் போகவிட மாட்டேன் என்கிறீர்கள்!" என்று இராசசிம்மனும் சேந்தனும் மகாமண்டலேசுவரரோடு மன்றாடிக் கொண்டிருந்த போது அவர் பதில் சொல்லாமல் இருட்டில் கீழே விழுந்த மகுடத்தைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார்.

"இந்த முடியை நானே ஒரு நாள் கீழே கழற்றி வைக்கத்தான் போகிறேன். அதற்குள் என் எதிரிகள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்களோ, தெரியவில்லை!" என்று அவர் கூறிய போது அதில் எத்தனையோ அர்த்தங்கள் தொனித்தன. அவர் இதைக் கூறிய போது அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமென்று சேந்தனுக்கும், இராசசிம்மனுக்கும் ஆசையாயிருந்தது. ஆனால் இருளில் முகம் தெரியவில்லை.

"வாருங்கள், போகலாம்!" என்று எதுவும் நடக்காதது போல் கூறியபடி அவர்கள் இருவரும் பின் தொடரக் கப்பலுக்கு அருகே வந்தார் அவர்.

"அது என்ன? அங்கே நீங்கள் போய்ப் பேசிக் கொண்டிருந்த இடத்தில் ஏதோ ஓசை கேட்டதே?" என்று மகாராணி வானவன்மாதேவியார் வினவினார்.

"ஒன்றுமில்லை! ஏதோ ஒரு கல் காலில் இடறியது. அதைத் தூக்கி எறிந்தேன்" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் குமாரபாண்டியனுடைய முகத்தையும் சேந்தனுடைய முகத்தையும் பார்த்தார் மகாமண்டலேசுவரர்.

அப்போது தூறிக் கொண்டிருந்த மழை நின்று போயிருந்தது. கப்பலிலிருந்து பொருள்களெல்லாம் இறக்கப்பட்டு விட்டன. "இங்கேயே நின்று கொண்டிருப்பானேன்? வாருங்கள் எல்லோரும் விழிஞத்து அரச மாளிகையில் போய்த் தங்கலாம்" என்று முன்னால் நடந்தார் மகாராணி. எல்லோரும் சென்றார்கள். விடிவதற்குச் சிறிது நேரமே இருந்தது. யாரும் உறங்கவில்லை. குழல்வாய்மொழியும் விலாசினியும் ஒரு மூலையில் உட்கார்ந்து மகாராணி வானவன்மாதேவியாரோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும், குமாரபாண்டியனுக்குக் காந்தளூர் மணியம்பலத்து நிலைகளைப் பற்றி விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வேறொரு மூலையில் சேந்தனும், மகாமண்டலேசுவரரும் இரகசியமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். விடிகிற நேரம் நெருங்க நெருங்கத் துறைமுகத்தில் வழக்கமான ஒலிகளும், கலகலப்பும், ஆள் நடமாட்டமும் அதிகமாயின.

 

இவர்களெல்லோரும் விழிஞத்து அரச மாளிகையில் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சமயத்தில் விழிஞத்தின் ஒதுக்குப்புறமான மற்றொரு பகுதியில் நடந்து கொண்டிருந்த மற்றொரு சம்பவத்தைக் கவனிக்கலாம். அந்த இடம் கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவு விலகியிருந்தது. செடி, கொடிகளும், பெயர் வேறுபாடு தெரியாத பலவகைக் காட்டு மரங்களும் அடர்ந்த பகுதி அது. பகற்போதிலேயே மயான அமைதி நிலவுகிற இடம் அது.

அங்கே குருதிக் கொழுந்துகள் போல் பூத்திருந்த ஒரு செவ்வரளிப் புதரின் கீழே தளபதி வல்லாளதேவனும், ஆபத்துதவிகள் தலைவனும் உட்கார்ந்திருந்தனர். தளபதி குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தான். அவன் கண்கள் கள்ளிப் பழங்களைப் போலச் சிவந்திருந்தன. குழைக்காதன் தளபதிக்கு ஏதோ ஆறுதல் கூறித் தேற்ற முயன்று கொண்டிருந்தான்.

"குழைக்காதரே! என் அருமைத் தங்கையின் முடிவு இப்படியா ஆக வேண்டும். அன்பையும், ஆதரவையும், செலுத்த எனக்கு இனிமேல் யார் இருக்கிறார்கள்? அவள் போன பின்பும் நான் இனி எதற்காக உயிர் வாழ வேண்டும்? கடல் கடந்து போய் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டு வரப்போகிறாள் என்று கனவு கண்டு கொண்டிருந்தேனே! அங்கே போய் உயிர் விடுவதற்காகவா அவளை அனுப்பினேன்?" என்று தளபதி அழுது புலம்பிய அவலக் குரல் மனித நடமாற்றமற்ற அந்தக் காட்டில் எதிரொலித்தது.

"மகாசேனாபதி! அந்தச் செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளம் எவ்வளவு கொதிப்படைந்திருக்கிறது, தெரியுமா? கப்பலிலிருந்து குமாரபாண்டியருடன் தங்கள் தங்கையார் இறங்குவாரென்று எவ்வளவு ஆவலோடு பாறை மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம் நாம்? மகாமண்டலேசுவரர் நாம் ஒளிந்திருந்த பாறைக்கு அருகில் வந்து குமாரபாண்டியரிடம் அந்த இரகசியத்தை வெளியிடக் கூடாதென்று கேட்டுக் கொண்ட போது தானே நமக்கே அந்த உண்மை தெரிந்தது? அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட கொதிப்பில் எவ்வளவு பெரிய கல்லைத் தூக்கி மகாமண்டலேசுவரர் மேல் வீசினேன்? அந்தப் பாழாய்ப் போன கல் அவர் மண்டையை உடைத்து நொறுக்கியிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். மகுடத்தைக் கீழே தள்ளியதோடு போய்விட்டதே!" என்று சோக வெடிப்பில் உண்டான கோபத்தோடு சொன்னான் குழைக்காதன்.

அதுகாறும் பொங்கி எழும் அழுகையோடு சோகத்தில் துவண்டு போய் வீற்றிருந்த மாவீரன் வல்லாளதேவன் திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் எழுந்து நின்றான். அழுகை ஓய்ந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். முகத்தில் வைரம் பாய்ந்த உணர்ச்சி ஒன்று கால்கொண்டு பரவியது. கண்களில் பழிவாங்கத் துடிக்கும் உணர்வொளி மின்னியது. முகம் சிவந்து, மீசையும் உதடுகளும் துடித்தன. ஆவேசமுற்ற வெறியாட்டக்காரன் போல் விறைப்பாக நின்று கொண்டு சூளுரைத்தான் அவன்.

 

"குழைக்காதரே! இந்தக் கணத்திலிருந்து நான் அயோக்கியனாக மாறப் போகிறேன். கடமை, நன்றி, நியாயம், அறம் இவைகளைப் பற்றி நான் இனிமேல் கவலைப்படப் போவதில்லை. கருணையும், அன்பும், எனக்கு இனிமேல் தேவையில்லை. அவைகளை நான் யார் மேல் செலுத்த முடியுமோ, அந்த அருமைச் சகோதரி போய்விட்டாள். என் ஒரே உறவு அழிந்து விட்டது. இல்லை! சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு விட்டது. என் உடன்பிறந்த இரத்தம் துடிக்கிறது. பறி கொடுத்த மனம் பதறுகிறது. இனி யாரும் எனக்கு வேண்டியவரில்லை. நான் இரத்தப் பசி மிகுந்த கோர ராட்சசனாக உருவெடுக்கப் போகிறேன். ஞானிக்குத் துன்பம் வந்தால் அதே மாதிரித் துன்பம் பிறருக்கு வராமல் காப்பான். முரடனுக்கு ஒரு துன்பம் வந்தால் ஆயிரம் பேருக்கு ஆயிரக்கணக்கான துன்பங்களை விளைவிப்பான். நான் முரடன். எனக்கு எதிரி மகாமண்டலேசுவரர் ஒருவர் மட்டும் இல்லை. மகாராணி, இளவரசர், அந்தக் குட்டைச் சேந்தன், மகாமண்டலேசுவரரின் பெண், இந்த நாடு, இந்தத் துன்பத்தை எனக்கு அளித்த எதிரிகளின் தலையாய விதி என்னும் எதிரி - எல்லோரையும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கப் போகிறேன் நான். என் தங்கைக்கு இல்லாத உயிரும் வாழ்வும் எவருக்கும் இல்லாமல் செய்து விடப் போகிறேன். என்னை இதுவரையில் தலை நிமிர முடியாமல் செய்து வந்த அறிவின் பரம்பரையைப் பூண்டோடு அழித்தே விடப் போகிறேன், பாருங்கள்!" என்று கூப்பாடு போட்டுக் கொண்டு கீழே குனிந்து வலது கையால் ஒரு பிடி மண்ணை அள்ளிக் காற்றில் தூவினான் தளபதி. குழைக்காதன் பயத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான். தளபதியின் வெறியை என்ன கூறி எப்படி ஆற்றுவதென்றே அவனுக்கு விளங்கவில்லை. மூட்டாத காலக்கடைத் தீயாக, ஊழி நெருப்பாக, உக்கிரமான கொதிப்பின் கம்பீர பிம்பமாக எழுந்து நின்றான் தளபதி.

"மகாசேனாபதி! இந்த அழிக்கும் வேலையில் நம்மோடு ஒத்துழைப்பதற்கு வேறு மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் சந்தித்து நம்மோடு சேர்த்துக் கொள்ளலாமோ?" என்று அருகில் நெருங்குவதற்குப் பயந்து கொண்டே மெதுவாகக் கேட்டான் குழைக்காதன்.

"யார் அவர்கள்?"

"கழற்கால் மாறனாரும் அவரைச் சேர்ந்தவர்களும்."

"எங்கே சந்திக்கலாம் அவர்களை?"

"பொன்மனைக்குப் போனால் அவர்களைச் சந்திக்கலாம்!"

"புறப்படுங்கள் பொன்மனைக்கு!"

தளபதி வேகமாக நடந்தான். குழைக்காதனும் பின்பற்றினான். காட்டு எல்லை கடந்து மக்கள் புழக்கம் மிகுந்த இடம் நெருங்கியதும் தங்கள் தோற்றங்களைப் பிறர் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள இயலாதபடி மாற்றிக் கொண்டு பொன்மலைக்கு விரைந்தனர் இருவரும். போது நன்றாக விடிந்து விட்டது. பகல் பவனி வரத் தொடங்கியிருந்தது அப்போது.

-------

 

3.16. 'வாகை சூடி வருக!'

 

விழிஞத்து அரச மாளிகையில் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தில் கடல் கடந்து பயணம் செய்த போது தனக்கும், சேந்தனுக்கும் ஏற்பட்ட அனுபவங்களையெல்லாம் மகாராணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் குழல்வாய்மொழி. பகவதி மாறுவேடத்தில் உடன் வந்தது, கப்பலிலிருந்து தப்பியோடி இலங்கைக் காட்டில் மாண்டது - ஆகிய சம்பவங்களை மட்டும் சொல்லாமல் தவிர்த்து விட்டாள் அவள். செம்பவழத் தீவைப் பற்றிச் சொன்னாள். ஆனால் மதிவதனியைப் பற்றிச் சொல்லவில்லை.

"பெண்ணே! இவ்வளவு அரும்பாடுபட்டுக் கடல் கடந்து சென்று என் குமாரனை அழைத்து வந்ததற்காக உனக்கும் சேந்தனுக்கும் நான் எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். எனக்குத் தெரிந்த பெண்களுக்குள் தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதி ஒருத்திதான் துணிவும், சாமர்த்தியமும் கொண்டு காரியங்களைச் சாதிக்கும் திறமை உள்ளவள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது பார்த்தால் நீ அவளை விடக் கெட்டிக்காரி என்று தெரிகிறது" எனக் குழல்வாய்மொழியைப் பாராட்டினார் மகாராணி. அவருடைய பாராட்டுரையில் பகவதியைப் பற்றிப் பேச்சு வந்த போது குழல்வாய்மொழியின் முகம் பயத்தால் வெளிறியது. உடல் மெல்ல நடுங்கியது. சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள் அவள்.

"தேவி! பகவதியை எங்கே காணவில்லை? நானும் என் தந்தையும் அரண்மனையிலிருந்து காந்தளூர் சென்றபின் அவளைச் சந்திக்கவேயில்லை. இப்போது அவள் எங்கே இருக்கிறாள்? நான் பார்த்து வெகுநாள் ஆயிற்று. பார்க்க வேண்டும் போல் ஆவலாயிருக்கிறது?" என்று அப்போது உடனிருந்த விலாசினி மகாராணியைக் கேட்கவே, குழல்வாய்மொழி தன் உணர்வின் பதற்றத்தை அடக்க இயலாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

"விலாசினி! நீங்களெல்லாம் ஊருக்குப் போன மறுநாள் காலையே அந்தப் பெண் பகவதியும் ஊருக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள் போலிருக்கிறது. மறுநாள் காலையிலிருந்து நான் அரண்மனையில் அவளைப் பார்க்கவில்லை. அவளுக்கு என்னிடம் என்ன கோபமோ தெரியவில்லை, போகும்போது சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டாள். கோட்டாற்றுப் படை மாளிகைக்குத் தன் தமையனோடு போய் இருப்பாளென்று நினைத்துக் கொண்டேன். மறுபடியும் தளபதியைச் சந்திக்கிற போது அந்தப் பெண்ணை வரச் சொல்லியனுப்ப நினைத்திருந்தேன். சந்தர்ப்பமே வாய்க்கவில்லை" என்று விலாசினிக்கு மறுமொழி கூறினார் மகாராணி.

"பகவதி உடனிருந்தால் பொழுது போவதே தெரியாது, தேவி! கலகலப்பான பெண்" என்று மேலும் கூறினாள் விலாசினி.

"ஆமாம்! நீங்கள் இரண்டு பேரும் என்னைத் தனியாகவிட்டு விட்டுப் போய்விட்டீர்கள். எனக்குத் தனியாக இருக்கவே பிடிக்கவில்லை. புவனமோகினியும் இல்லாமற் போயிருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்" என்று மகாராணிக்கும், விலாசினிக்கும் பேச்சு வளர்ந்தது. ஓர் உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டே தெரியாதது போல் நடிப்பது எவ்வளவு கடினமான காரியமென்பதை அப்போதுதான் குழல்வாய்மொழி உணர்ந்தாள்.

"குழல்வாய்மொழி! உன்னையும் பகவதியையும் போல் பெரிய சாமர்த்தியமெல்லாம் இதோ என்னருகில் உட்கார்ந்திருக்கும் இந்தப் பெண் விலாசினிக்குக் கிடையாது. மிகவும் அடக்கமான பெண் இவள். காந்தளூர் மணியம்பலத்தில் எத்தனை கலைகள் சொல்லிக் கொடுக்கிறார்களோ அவ்வளவிலும் தேர்ந்தவள். நன்றாக நாட்டியமாடுவாள்" என்று விலாசினியைப் பற்றிப் புகழ்ந்து கூறினார் மகாராணி. தங்கள் பேச்சில் கவனம் செலுத்தாமல் எங்கோ முகத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த குழல்வாய்மொழியின் கவனத்தை மீட்கவே மகாராணி இப்படிக் கூறினார். "தேவி! இடையாற்று மங்கலத்து நங்கைக்கு முன் என்னை இப்படியெல்லாம் புகழாதீர்கள். எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று விலாசினி கூறிய சொற்கள் இயல்பானவையா, தன்னைக் கேலி செய்யும் தொனியுடையவையா என்று குழல்வாய்மொழிக்கே சந்தேகமாக இருந்தது. அவர்கள் ஒன்றாக அமர்ந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரரும் சேந்தனும் அங்கே வந்தார்கள். மகாமண்டலேசுவரரைக் கண்டதும் மகாராணி உள்பட மூவரும் எழுந்து நின்றனர். மாளிகையின் மற்றோரிடத்தில், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயரோடு உரையாடிக் கொண்டிருந்த குமாரபாண்டியனும் அவர்களோடு மரியாதையாக மகாமண்டலேசுவரருக்கு அருகில் வந்து நின்றான்.

மகாமண்டலேசுவரரின் வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வரப் போகின்றன என்பதை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு நின்றார்கள். "பொழுது விடிந்து விட்டது. நீங்கள் எல்லோரும் அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். குமாரபாண்டியரையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். நானும் சேந்தனும் இடையாற்று மங்கலம் வரை போய்விட்டு அப்புறம் அரண்மனைக்கு வருகிறோம். நான், அரண்மனைக்கு வந்த பின் குமாரபாண்டியரைப் போர்க்களத்துக்கு அனுப்புகிறேன். அதற்கு முன் இலங்கையிலிருந்து வரவேண்டிய படைகளும் வந்து விடலாம்!" என்று கூறிக் கொண்டே வந்த மகாமண்டலேசுவரர், மாளிகை வாசலில் குதிரைகள் வந்து நிற்கிற ஒலியைச் செவியுற்றுப் பேச்சை நிறுத்தினார். அவர் கண்களும் ஏனையோர் கண்களும் வாயிற் பக்கமாகத் திரும்பின.

 

போர்க்களத்திலிருந்து செய்தி கொண்டு வரும் தென்பாண்டி நாட்டுப் படைவீரர் இருவர் அவசரமாகக் குதிரைகளிலிருந்து இறங்கி உள்ளே வந்தனர். அவர்கள் முகங்களில் பரபரப்பு தென்பட்டது. அவர்களில் ஒருவன் முன்னால் நடந்து வந்து மகாமண்டலேசுவரரைத் தலைதாழ்த்தி வணங்கிவிட்டு ஒரு திருமுக ஓலைச் சுருளை அவரிடம் அளித்தான். எல்லோருடைய முகங்களிலும் ஆர்வம் படர்ந்து நிற்க அவர் பிரித்துப் பார்த்தார்.

"மதிப்புக்குரிய மகாமண்டலேசுவரருக்குக் கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தன் போர்க்களத்துப் பாசறையிலிருந்து கொண்டு எழுதும் அவசர ஓலை! தாங்கள் கோட்டாற்றுத் தளத்திலிருந்து அனுப்பி வைத்த ஐந்நூறு பத்திப் படை வீரர்களும் இங்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் என்ன காரணமோ, தளபதி வல்லாளதேவனை மட்டும் தாங்கள் அனுப்பவில்லை. நம்மிடம் படைவீரர்கள் நிறைய இருந்தும், தலைமை தாங்கி நடத்த ஏற்ற தளபதிகள் இல்லை. நானும், சேர நாட்டிலிருந்து வந்திருக்கும் தளபதியும் ஆக இரண்டு பேரே இருக்கிறோம். நம்மை எதிர்க்கும் வடதிசைப் பெரும்படையிலோ, ஐந்து திறமை வாய்ந்த படைத் தலைவர்கள் இருக்கிறார்கள். சோழ மன்னனும், கொடும்பாளூரானும், கண்டன் அமுதனும், அரசூருடையானும், பரதூருடையானும் எவ்வளவு பெரிய படைத் தலைவர்கள் என்பது தங்களுக்குத் தெரியாததன்று. நம் கை சிறிது தளர்ந்தாலும் பகைவர்கள் வெள்ளூரைப் பிடித்துக் கொண்டு தெற்கே முன்னேறி விடுவார்கள்.

"நேற்று நடந்த போரில் சேர நாட்டிலிருந்து வந்துள்ள படைத்தலைவன் ஏராளமான விழுப்புண்கள் பெற்றுத் தளர்ந்து போயிருக்கிறான். இன்னும் ஐந்தாறு நாட்களுக்கு அவன் போர்க்களத்தில் நிற்க முடியாதபடி பலவீனமாக இருக்கிறான். எனவே இந்தத் தகவல் கண்டதும் தளபதி வல்லாளதேவனைக் களத்துக்கு அனுப்பி வைக்கவும். அவன் வந்து விட்டால் நம் படைகளுக்கும் புதிய ஊக்கம் பிறக்கும். நம் வீரர்கள் குமாரபாண்டியருடைய வரவையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தளபதியை அவசரமாக அனுப்பவும்.

இங்ஙனம்,

தங்கள் கட்டளை மேற்கொண்டு நடக்கும்

பெரும்பெயர்ச்சாத்தன்."

 

படித்து முடித்ததும் ஓலைச் சுருளைப் பத்திரமாகத் தம் கையில் சுருட்டி வைத்துக் கொண்டார் அவர். மகாராணியை நோக்கிக் கூறலானார்:

 

"தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். வந்ததும் வராததுமாகத் தங்கள் புதல்வரை இங்கிருந்தே போர்க்களத்துக்குப் போகச் சொல்லவேண்டிய அவசரம் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அரண்மனைக்குச் சென்று தங்கி நீண்ட நாள் பிரிவால் மனங் கலங்கியிருக்கும் தங்களை ஆற்றுவித்த பின்பு களத்துக்குப் புறப்படச் செய்யலாம் என்று நான் சற்று முன் கூறினேன். இப்போது ஏற்பாட்டை மாற்றி இங்கிருந்தே இளவரசரை அனுப்பப் போகிறேன். நம் படைகள் உற்சாகமின்றி இருக்கின்றனவாம். குமாரபாண்டியரைக் கண்டால் ஊக்கமும், உற்சாகமும் ஏற்படுமென்று கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் எழுதியிருக்கிறான்."

"மகாமண்டலேசுவரரே! இதில் மன்னிப்பதற்கு என்ன குற்றமிருக்கிறது! போர் செய்வதற்கும், தன் நாட்டைக் காப்பாற்றி முடிசூடிக் கொள்வதற்கும் தானே இவ்வளவு அரிய முயற்சி செய்து இராசசிம்மனை இலங்கையிலிருந்து அழைத்து வரச் செய்திருக்கிறீர்கள். மகனைக் கண்குளிரப் பார்த்து விட்டேன். நெடு நாட்களாக என் நெஞ்சை வாட்டிப் பிழிந்து கொண்டிருந்த தாய்மைத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன். இனி அவன் போரை முடித்துக் கொண்டு வெற்றி வாகை சூடித் திரும்புகிற வரை எவ்வளவு காலமானாலும் காத்திருப்பேன். தயவு செய்து அதுவரை உங்கள் பெண்ணையும், ஆசிரியர் மகள் விலாசினியையும் என்னோடு அரண்மனையில் வைத்துக் கொள்ள இருவரும் இணங்க வேண்டும். சிறு வயதுப் பெண்கள் இருவர் உடனிருந்தால் எனக்கு என் கவலைகளை மறந்து விட முடிகிறது" என்று மகாராணி முகத்தில் மலர்ச்சியோடு கூறினார்.

"மகாராணி! கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா யாராவது? என் மகள் விலாசினியும், மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியும் தங்களோடு அரண்மனையில் இருப்பதைப் பெரும் பாக்கியமாக ஒப்புக் கொள்வார்களென்பதில் ஐயமில்லை" என்றார் அதங்கோட்டாசிரியர்.

குமாரபாண்டியன் தாயின் அருகிற் சென்றான். குழல்வாய்மொழியும், விலாசினியும் விலகி நின்று கொண்டார்கள். மகாராணிக்குக் கண்கள் கலங்கின. "அம்மா! எனக்கு ஆசி கூறி விடையளியுங்கள். நான் வெற்றியோடு திரும்பி வருவேன். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்கள் மனத்தில் நிறைந்திருக்கும் எண்ணற்ற ஆசைகளை நிறைவேற்றுவேன். வெற்றியோடு திரும்பியவுடன் இலங்கையிலிருந்து நம்முடைய சுந்தர முடியையும், பொற்சிம்மாசனத்தையும், வீரவாளையும் காசிப மன்னர் கொடுத்தனுப்பி விடுவார். பின்பு எப்போதும் போல் இந்தத் தென் பாண்டிய மரபு வளர்ந்தோங்கச் செய்யும் பொறுப்பை மேற்கொள்வேன். மகாமண்டலேசுவரரும் நீங்களும் அவ்வப்போது எனக்குப் பயன்படும் அறிவுரைகளையெல்லாம் போர்க்களத்துக்குச் சொல்லி அனுப்ப வேண்டும். சிறிதும் தயக்கமில்லாத நிறைமனத்தோடு கண்கலங்காமல் என்னை அனுப்புங்கள், அம்மா!" அன்னையின் காலடியில் மண்டியிட்டு வணங்கினான் அவன்.

 

"போய் வா. வெறும் இராசசிம்மனாகத் திரும்பி வராதே! வெற்றி வீரன் இராசசிம்மனாக வாகை சூடி வா. பல்லூழிக் காலமாக இந்தத் தென் பாண்டி நாட்டைக் காத்துக் கொண்டு கடல் மருங்கே நின்று தவம் செய்யும் குமரித்தாய் உன்னைக் காத்து உனக்குத் துணை நின்று அருள் புரிவாள்." கண்களில் நீர் பனிக்கத் தொண்டை கரகரத்துக் குரல் ஒலி மழுங்க இந்தச் சொற்கள் மகாராணியின் வாயிலிருந்து வெளிவந்தன. இந்த வார்த்தைகள் செவியில் விழுந்த அதே சமயத்தில் அவன் பிடரியில் அன்னையின் கண்ணீர் முத்துகள் சில உதிர்ந்து சிதறின. இராசசிம்மன் எழுந்து மகாமண்டலேசுவரருக்கு அருகில் சென்றான்.

"சுவாமி! ஈழ நாட்டுச் சேனை சக்கசேனாபதியின் தலைமையில் வந்து சேர்ந்தால், அதை வெள்ளூர்ப் போர்க்களத்துக்கு அனுப்பி வையுங்கள். நான் இப்போதே புறப்படுகிறேன்" என்று கூறி முடிக்கு முன்னே, "அதெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்! நீ தாமதம் செய்யாமல் புறப்படு. இதோ இந்த வீரர்கள் உன்னை அழைத்துப் போகக் காத்திருக்கிறார்கள். நான் போர்க்களத்தில் இருக்கும் உனக்கு மிக முக்கியமான செய்தி ஏதாவது சொல்லி அனுப்ப வேண்டியிருந்தால் சேந்தனை அனுப்புவேன்! போய் வா... தோல்வியோடு திரும்பாமல் இருக்கத் தெய்வம் துணைபுரியட்டும்" என்று அவசரத்தோடு இடைமறித்துச் சொன்னார் மகாமண்டலேசுவரர். அவன் அதிகம் பேசிக் கொண்டிருப்பதை விரும்பாத மாதிரி அவசரப்படுத்தினார். ஆசிரியரையும், பவழக்கனிவாயரையும் வணங்கினான் அவன்.

"வெற்றியோடு திரும்பி வந்து தங்கள் பராந்தக பாண்டியர் போல் பெரும் புகழ் பெற்று வாழுங்கள்" என்று வாழ்த்தினார்கள் அவர்கள்.

"சேந்தா! இளவரசர் புறப்படுவதற்கு நல்ல குதிரை ஒன்று கொண்டு வா. இங்கே அரச மாளிகையில் யவனத்திலிருந்து வந்த உயர்தரமான குதிரைகள் நிறைய இருக்கும்!" என்று தம் ஒற்றனைத் துரத்தினார் மகாமண்டலேசுவரர். அதே மாளிகையின் பின்புறமிருந்த பரிமாளிகைக்கு ஓடிப்போய் ஒரு குதிரையை அவிழ்த்துக் கொண்டு வந்து நிறுத்தினான் சேந்தன்.

புறப்படுவதற்கு முன் கடைசியாக, "இதோ ஒரு விநாடியில் வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தான் மட்டும் தனியாக அந்த மாளிகையின் பின்புறத்துக் கதவைத் திறந்து கொண்டு சென்றான் இராசசிம்மன். அங்கே குதிரைகளை மேற்பார்த்துக் கொள்ளும் கிழவன் ஒருவன் இருந்தான்.

"பெரியவரே! நான் மறுபடியும் வந்து கேட்கிற வரை இந்தப் பொருளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று தன் வலம்புரிச் சங்கை அவரிடம் கொடுத்து விட்டுச் சென்றான் இராசசிம்மன்.

குதிரைகள் புறப்பட்டன. எல்லோரும் மாளிகை வாயில் வரை வந்து நின்று இளவரசரை வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மகாராணியும் மற்றவர்களும் அங்கிருந்து பல்லக்குகளில் அரண்மனைக்குக் கிளம்பி விட்டனர். சேந்தனும், மகாமண்டலேசுவரரும் மட்டுமே விழிஞத்து அரச மாளிகையில் எஞ்சியிருந்தனர். மகாமண்டலேசுவரர் சேந்தனை அனுப்பி விழிஞத்துக் கடல்துறை அதிகாரிகளை வரவழைத்தார். அவர்கள் வந்தனர்.

"அதிகாரிகளே! உங்களிடம் ஒரு பொறுப்பான காரியத்தை இப்போது ஒப்படைக்கப் போகிறேன். நாளை அல்லது நாளன்றைக்குள்ளாக ஈழ நாட்டுப் படைக் கப்பல்கள் சக்கசேனாபதியின் தலைமையில் இத்துறைக்கு வந்து சேரும். அப்போது நீங்கள் சக்கசேனாபதியைச் சந்தித்து, 'இராசசிம்மன், படைகளை இறக்கிக் கொண்டு உங்களை வெள்ளூர்ப் போர்க்களத்துக்கு நேரே வரச்சொல்லியிருக்கிறார்' என்று தெரிவித்து விட வேண்டும். இது முக்கியமான பொறுப்பு" என்று மகாமண்டலேசுவரர் கூறிய போது அந்த அதிகாரிகள் தலை வணங்கி ஒப்புக் கொண்டனர். அவர்களை அனுப்பிய பின் அவர் சேந்தன் பக்கம் திரும்பினார். "சுவாமி! இதுவரை மற்றவர்கள் உடனிருந்ததற்காகப் பொறுத்துக் கொண்டிருந்தேன். இனி என்னால் ஒரு கணம் கூட என் ஆத்திரத்தைத் தவிர்க்க முடியாது. நேற்றிரவு இளவரசருக்கு முன் தங்கள் முடியில் கல்லெறிந்து தங்களை அவமானப்படுத்தியவன் யார் என்று கண்டுபிடித்து அந்த முட்டாளின் மண்டையை உடைத்தால் தான் என் ஆத்திரம் தீரும். அப்போதே ஓடிப்போய்த் தடுத்துப் பிடித்திருப்பேன். நீங்கள் கூடாதென்று நிறுத்தி விட்டீர்கள்!" என்று ஆத்திரத்தோடு கூறினான் சேந்தன். மகாமண்டலேசுவரர் சிரித்தார்.

"சேந்தா, பொறு! எனக்கு அவர்கள் யாரென்பது தெரியும். இன்னும் சில நாட்கள் கழித்துப் பார். இப்படி இருட்டில் மறைந்து எறியாமல் நேரடியாகவே வந்து என் மேல் கல் எறிவார்கள் அவர்கள்" என்றார் அவர்.

அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவருடைய குரல் தொய்ந்து நைந்து ஒலிப்பதை நாராயணன் சேந்தன் உணர்ந்தான்.

"சுவாமி! எதற்கும் வருத்தப்படாத உங்களையும் வருந்தச் செய்து விட்டார்களே? அவர்கள் யாரென்று மட்டும் சொல்லுங்கள். இப்போதே போய்க் கழுத்தைத் திருகிக் கொண்டு வருகிறேன்" என்று துடிப்போடு சொன்னான் அவன்.

"கோபத்தை அடக்கிக் கொள்! என்னோடு புறப்படு. என்னுடைய அனுமானம் சரியாயிருந்தால் வாழ்க்கையிலேயே மகத்தான காரியம் ஒன்றை நாளைக்கு நான் செய்ய வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் நடக்க நடக்கப் பார்த்துக் கொண்டிரு! ஒன்றையும் கேட்காதே" என்று கூறிவிட்டுச் சேந்தனையும் உடன் அழைத்துக் கொண்டு விழிஞத்திலிருந்து புறப்பட்டார் அவர். அன்று இரவு நெடு நேரத்துக்குப் பின் அவர்கள் இருவரும் கோட்டாற்றுப் படைத் தளத்தை அடைந்தனர்.

 

அங்கே தூங்கி வழிந்து கொண்டிருந்த யவனக் காவல் வீரர்கள் எழுந்து வந்து தளபதி வல்லாளதேவன் தப்பிப் போய்விட்டானென்ற செய்தியை நடுங்கிக் கொண்டே சொன்னார்கள்.

"என் ஓலையோடு ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதன் இங்கு வந்தானா?" என்று கேட்டார் அவர். "வரவில்லை" என்ற பதில் அவர்களிடமிருந்து கிடைத்தது. "சேந்தா! இன்னுமா உனக்குச் சந்தேகம்? என் மேல் கல்லெறிந்துவிட்டு ஓடியவர்கள் யார் என்று இப்போது கூடவா உனக்குத் தெரியவில்லை?" என்று சேந்தனிடம் காதருகில் மெல்லச் சொன்னார் மகாமண்டலேசுவரர்.

"புரிகிறது, சுவாமி! கல்லெறிந்த கைகளை முறிக்க ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டும்."

மகாமண்டலேசுவரர் நகைத்தார். "அப்பனே! சூழ்ச்சிகளைக் கடந்த நிலையில் இப்போது நான் நிற்கின்றேன். வா, இடையாற்று மங்கலத்துக்குப் போகலாம். நீ எந்த நேரமும் எனக்கு அந்தரங்கமானவனல்லவா? புறப்படு" என்றார்.

-------

 

3.17. குமுறும் உணர்ச்சிகள்

 

பிறரிடம் சேர்க்க வேண்டிய செல்வங்களை அபகரித்து ஒளித்து வைத்துக் கொண்டு வாழ்கிறவன் கூட நிம்மதியாக இருந்து விட முடியும். ஆனால் பிறரிடம் சொல்ல வேண்டிய உண்மையை மறைத்து வைத்துக் கொண்டு அப்படி நிம்மதியாக இருந்து விட முடியுமா? உண்மை என்பது நெருப்பைப் போல் பரிசுத்தமானது. தன்னை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைச் சுட்டுக் கொண்டே இருக்கும் அது!

பகவதியின் மரணம் என்ற எதிர்பாராத உண்மைதான் மறைத்து வைக்கப்பட்ட உள்ளங்களைச் சுட்டுக் கொண்டே இருந்தது. குமார பாண்டியனுக்கு எப்போதுமே அவனுடைய அன்னையைப் போல் நெகிழ்ந்து இளகிவிடும் மனம் வாய்த்திருந்தது. இந்த நெகிழ்ச்சியே அரசியல் வாழ்க்கையில் அவனுடைய பலவீனங்களுக்குக் காரணமாக இருக்கலாம். அரசியல் நூல்கள் அரசனின் இலக்கணமாகக் கூறும் ஆண்மையின் கடுமையும், தன் கீழ்நிலையை எண்ணித் தனது பகைமையை அழித்து உயரக் கருதும் வைரம் பாய்ந்த கொதிப்பும் ஆரம்பம் முதல் அவனுக்கு இல்லாமல் போயின. தோற்றச் சாயலில் தந்தையைக் கொண்டிருந்த அவன், பண்பில் தாயைக் கொண்டு பிறந்திருந்தான். எதையும் மறைக்கத் தெரியாதவனாக யாரையும் கெடுக்க நினைக்காதவனாக இருந்தான் அவன். விரைவில் உணர்ச்சிகளுக்கு இலக்காகி அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் தன்மை அவனிடம் இருந்தது.

 

தங்கள் கப்பல் விழிஞத்தை அடைந்து கரையில் இறங்கிய சிறிது நேரத்துக்குள்ளேயே பகவதியின் மரணத்தைப் பற்றிச் சொல்லித் தன் துயர உணர்ச்சிகளை எல்லோரோடும் கலந்து கொண்டு விட வேண்டுமென்று துடித்தான் அவன். அவனோடு வந்த குழல்வாய்மொழியோ, சேந்தனோ அந்த உண்மை தெரிந்திருந்தும் அவனைப் போல் அதை வெளியிடுவதற்குத் துடிக்கவில்லை. அதை அப்போது வெளியிடக் கூடாதென்றே நினைத்தனர் அவர்கள் இருவரும். மகாராணி முதலியவர்களிடம் பகவதியின் மரணத்தைப் பற்றிச் சொல்லி விடுவதற்குக் குமாரபாண்டியனின் வாய் துடிப்போடு முனைந்ததைக் கவனித்து விட்டாள் குழல்வாய்மொழி. அதைச் சொல்லிவிடாமல் தடுக்க வேண்டும் என்ற குறிப்பைத் தன் கண் பார்வையாலே சேந்தனுக்குத் தெரிவித்தாள் அவள். உடனே மகாமண்டலேசுவரர் குமாரபாண்டியனைச் சிறிது தொலைவு விலக்கி அழைத்துக் கொண்டு போய், 'பகவதியின் மரணத்தைப் பற்றிய செய்தியைத் தாம் சொல்லுமுன் வெளியிடக் கூடாதென்று' வாக்குறுதி பெற்றுக் கொண்டு விட்டார். அந்த ஒரு வாக்குறுதி மட்டுமன்று. தளபதி வல்லாளதேவனைக் கோட்டாற்றுப் படைக் கோட்டத்திலேயே தாம் சிறை வைத்துவிட்ட திடுக்கிடும் செய்தியையும் அவனிடம் தெரிவித்து, அதையும் வெளியிடக் கூடாதென்று மற்றொரு வாக்குறுதியும் பெற்றுக் கொண்டார். மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு எவராக இருந்தாலும் அத்தகைய நெருக்கடியான சமயத்தில் குமார பாண்டியனிடமிருந்து அந்த இரண்டு வாக்குறுதிகளையும் பெற்று விடமுடியாது.

ஆனால் மழுங்காத கூர்மை பெற்ற அந்த அறிவின் செல்வர் எந்தெந்த விளைவுகளைத் தடுப்பதற்காக குமார பாண்டியனிடம் அந்த வாக்குறுதிகளைப் பெற்றாரோ, அந்த விளைவுகள் அப்போதே அங்கேயே அவருக்கருகில் நின்றன என்பது பின்புதான் அவருடைய அறிவுக்கே எட்டியது. தாமும், குமாரபாண்டியனும் எந்தப் பாறையருகில் நின்று பேச நேர்ந்ததோ, அதன் மறைவில் இருளில் தளபதியும், குழைக்காதனும் நின்றிருப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். மேலும் திடீரென்று தமது மகுடத்தில் கல் விழுந்த போது அந்த இடத்திலேயே அந்தக் கணத்திலேயே அப்படி எறிந்து விட்டு ஓடும் எதிரிகள் யார் என்று பிடித்துக் கொணர்ந்து பார்த்துத் தம்முடைய அவமானத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்பவில்லை அவர். அதனால் தான் பிடிப்பதற்காக ஓடிய சேந்தனையும், குமாரபாண்டியனையும் கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினார் அவர். ஊழி பெயரினும் தாம் பெயராத சான்றாண்மையோடு சிரித்துக் கொண்டே கீழே விழுந்த மகுடத்தை எடுத்துக் கொள்ள அவரால்தான் முடியும்; முடிந்தது. வெளியில் உணர்ச்சிகளைக் காட்டாமல் நடந்து கொண்டாலும் இதயத்துக்கும் இதயமான நுண்ணுணர்வின் பிறப்பிடத்தில் அந்தக் கல் விழுந்த நினைவு உரசிய போது ஒரு கனற்பொறி எழுந்தது. உள்ளே குமுறலும் வெளியே பரம சாந்தமுமாக நடந்து கொண்டார்.

 

'இத்தனை காலமாகக் கண்பார்வையையும், பேச்சையும் கொண்டு ஒரு தேசத்தையே ஆட்டி வைத்த என் அறிவின் கௌரவம் இந்தக் கல்லினால் விழுந்துவிட்டதா? ஏன் இப்படி என் மனம் கலங்குகிறது? எத்தனை தான் மேதையாக இருந்த போதிலும் நல்வினைப் பயன் தீர்கிற காலம் வரும்போது ஒரு மனிதனுடைய அறிவு பயனற்றுப் போகும் என்கிற மாதிரி நிலையில் வந்து விட்டேனோ நான்?' என அவருடைய மனத்தில் உணர்ச்சிகள் குமுறின. அப்போது இருளில் விளக்கு அணைந்ததும் பயந்து அழுகிற குழந்தையைப் போல் முதல் முதலாக அவருடைய மனம் தன்னையும் தன் வினைகளின் பயனையும் உள் முகமாகத் திரும்பிப் பார்த்தது. ஒரு தேசத்தையே மலைக்கச் செய்த அந்த அறிவு தனக்காகவும் சிறிது மலைத்தது. ஆனால் அதன் ஒரு சிறு சாயை கூட வெளியில் தெரிந்து கொள்ளுமாறு காட்டப்படவில்லை. இதுவரை பிறருடைய உணர்ச்சிகளைக் கலக்கி ஆழம் பார்த்த மனம் இப்போது உணர்ச்சிகளால் கலங்கியது.

குமாரபாண்டியனுடைய கப்பல் வந்த பின் நேர்ந்த நிகழ்ச்சிகள் ஒவ்வோர் உள்ளத்திலும் ஒவ்வோர் விதமான உணர்ச்சிகளைக் குமுறச் செய்திருந்தன. தெய்வத்துக்கும் மேலாக மதித்து, தான் பக்தி செலுத்திப் பணிபுரிந்து வந்த மகாமண்டலேசுவரரின் மேல் கல்லெறிந்து விட்டு ஓடியவர்களைப் பிடித்துக் கட்டி வைத்து உதைக்க முடியாமல் போய் விட்டதே என்று சேந்தன் கொதித்தான். சேந்தன் வீர வணக்கம் செய்யும் பிடிவாதக் குணமுடையவன். தன்னை முழுவதுமே ஒரே ஒரு மனிதருக்கு மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் அடிமையாக்கிக் கொண்டிருந்தான் அவன். காலஞ்சென்ற தன் தந்தைக்கும், முன்சிறையில் அறக்கோட்ட மணியக்காரனாக இருக்கும் தன் தமையனுக்கும் கூட இவ்வளவு அடங்கி ஒடுங்கிப் பணிவிடை புரிந்ததில்லை அவன். மகாராணி, குமாரபாண்டியன் ஆகியவர்களிடம் அவனுக்கு அன்பும், மரியாதையும் மட்டும் தான் இருந்தன. மகாமண்டலேசுவரர் என்ற ஒரே ஒரு மேதையிடம் தான் வசப்பட்டு மெய்யடிமையாகிக் கலந்திருந்தான். எவராலும் மாற்ற முடியாதபடி இந்த வீர வணக்கப் பண்பு அவனிடம் பதிந்து விட்டது. உலகம் முழுவதுமே மகாமண்டலேசுவரருக்கு எதிராகத் திரண்டு வந்தாலும் மூன்றரை முழ உயரமுள்ள அந்தக் குள்ளன் அவர் அருகில் மெய்க்காவலனாக நின்று கொண்டிருப்பான். மகாமண்டலேசுவரருடைய செல்லப் பெண் குழல்வாய்மொழிக்குக் கூட அவர் முகத்தை மட்டும் தான் பார்க்கத் தெரியும். ஆனால் சேந்தன் அவருடைய அகத்தையும் நெருங்கி உணர முடிந்தவன்.

அதனால் தான் மகாமண்டலேசுவரர் அவமானப்பட நேர்ந்ததைக் கண்டு அவன் உள்ளம் அவ்வளவு அதிகமாகக் குமுறியது. குமாரபாண்டியனும் அதைக் கண்டு மனம் கொதித்தானென்றாலும் அந்தக் கொதிப்பு எவ்வளவு வேகமாக உண்டாயிற்றோ, அவ்வளவு வேகமாகத் தணிந்து மறந்து மறைக்கப்பட்டு விட்டது அவன் மனத்தில். அதற்குக் காரணம் நினைப்பதற்கும் குமுறிக் கொதிப்பதற்கும் வேறு நிகழ்ச்சிகளும் இருந்தன. அவன் மனத்தில், பகவதியின் மரணம் என்ற உண்மையை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால், அத்துன்பமே போர்க்களத்துக்குப் போகிற வழியெல்லாம் அவன் மனத்தைச் சுட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு செய்தியும் அவன் மனத்தை உறுத்தியது. 'ஒருவருக்கும் தெரியாமல் தளபதியை மகாமண்டலேசுவரர் ஏன் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்?' என்று குழம்பும் நிலையும் குமாரபாண்டியனுக்கு இருந்தது. அவசரமாக விழிஞத்திலிருந்தே போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது இத்தனை மன உணர்ச்சிகளையும் எண்ணச் சுமைகளாகச் சுமந்து கொண்டு தான் புறப்பட்டான் அவன். ஆனால் போருக்குப் போகிறோம் என்ற உணர்வு பெரிதாகப் பெரிதாக இவை மங்கிவிட்டன.

மகாராணி வானவன்மாதேவியுடன் அரண்மனைக்குப் புறப்பட்ட குழல்வாய்மொழியின் மனத்திலும் உணர்ச்சிகள் குமுறின. மகாராணியும், விலாசினியும் பகவதியைப் பற்றிப் பேசிக் கொள்ளத் தொடங்கினால் அவளுக்கு உடனிருக்கவே முடியாது போல் ஒரு வேதனை ஏற்பட்டது. தெரிந்த உண்மையை வெளியிட முடியாமல் தவித்தாள். மகாராணியுடன் அரண்மனைக்கு வராமல் தந்தையோடு இடையாற்றுமங்கலம் போகலாமென்று நினைத்திருந்த அவளை மகாராணி தான் வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு வந்து விட்டாரே! இன்னொரு வருத்தமும் அவளுக்கு இருந்தது. கப்பலில் வரும் போது அவளிடம் கோபித்துக் கொண்டு பேசாமலிருந்த இளவரசர் விழிஞம் வந்த பின்னும் போருக்குப் புறப்பட்டுப் போகிறவரை ஒரு வார்த்தை கூடச் சுமுகமாகப் பேசவில்லை! போர்க்களத்துக்குப் புறப்படுகிற போது கண்குறிப்பாலாவது விடை பெற்றுக் கொள்வது போலத் தன்னைப் பார்ப்பாரென்று அவள் எதிர்பார்த்தாள். அதுவும் இல்லை. இளவரசரின் இந்தப் புறக்கணிப்பு அவள் மனத்தைப் புண்ணாக்கியிருந்தது. அரண்மனையில் மகாராணி, விலாசினி, புவன மோகினி என்று கலகலப்பாகப் பலருக்கு நடுவிலிருந்தாலும் குழல்வாய்மொழியின் மனம் எங்கோ இருந்தது. அரண்மனையில் தங்கியிருந்த போது ஒரு நாள் பேச்சுப் போக்கில் மகாராணி, "புவன மோகினி! கோட்டாற்றுக்கு யாரையாவது அனுப்பித் தளபதியின் மாளிகையில் பகவதி இருக்கிறாளா? என்று விசாரித்து அழைத்து வரச் சொல்லேன்" என்று கூறிய போது உடனிருந்த குழல்வாய்மொழி துணுக்குற்றாள். தன் உணர்ச்சியை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். இராசசிம்மனைப் பற்றியும், அவன் போரில் வெற்றி பெற்றுத் திரும்பப் போவதைப் பற்றியும், வெற்றியோடு வரும்போது அரண்மனையை எப்படி அலங்கரித்து, அவனை எவ்வாறு வரவேற்பது என்பதைப் பற்றியும் குதூகலமாக அவர்களோடு பேசினார் மகாராணி. அந்த மாதிரிப் பேச்சுகளிலெல்லாம் குழல்வாய்மொழியும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டாள். குழல்வாய்மொழியைப் பொறுத்த வரையில் 'விலாசினி' என்ற பெண் புதிராக இருந்தாள். அவ்வளவாக மனம் விட்டுப் பழகவில்லை. மகாராணி விலாசினியையும், புவன மோகினியையும் தன்னுடன் சமமாக வைத்துப் பழக விடுவதும், பேசுவதும் குழல்வாய்மொழிக்குப் பிடிக்கவில்லை. அவள் இடையாற்று மங்கலம் நம்பியின் பெண். அன்பைக் கூடத் தனக்கென்று தனி மரியாதையோடு எதிர்பார்த்தாள். இடையாற்று மங்கலம் என்ற அழகின் கனவில் இளவரசி போல் அறிவின் கர்வத்தோடு சுற்றித் திரிந்தவளுக்கு எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மகாராணியோடு அரண்மனையில் தானும் ஒருத்தியாக இருப்பது என்னவோ போலிருந்தது.

புவன மோகினியே மகாராணிக்காகப் பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வரக் கோட்டாற்றுக்குப் புறப்பட்ட போது குழல்வாய்மொழியின் பயம் அதிகமாயிற்று. எந்த வகையிலாவது மகாராணிக்கு உண்மை தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று மனம் புழுங்கினாள் அவள்.

'என் மனம் இந்த உண்மையை மறைப்பதற்காக ஏன் இப்படிப் பயப்படுகிறது? நான் அந்தப் பெண்ணைக் கொலையா செய்தேன்? திமிர் பிடித்தவள் தானாக ஓடிப்போய் இறந்தால் அதற்கு நான் என்ன செய்வேன்?' என்று நினைத்துத் தன் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றாள் அவள். ஆனாலும் ஏதோ பெரிய கேடுகளெல்லாம் அந்த மறைக்கப்பட்ட உண்மை மூலம் வர இருப்பது போல் உண்டாகும் பீதி அவளை மீறி வளர்ந்தது. யாரிடமும் சொல்லாமல் அரண்மனையை விட்டு இடையாற்று மங்கலத்திற்கு ஓடிப் போய் விடலாம் போலிருந்தது. ஒரு சமயம் மகாராணி அவளைக் கேட்டார்: "என்னோடு இருப்பதில் உனக்கு ஒரு கவலையும் இருக்கக் கூடாதம்மா! இந்த அரண்மனையை உங்கள் இடையாற்றுமங்கலம் மாளிகையைப் போல நினைத்துக் கொள். என்னை உன் தாய் மாதிரி எண்ணிக் கொள். வந்தது முதல் நீ திடீர் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாய் போலிருக்கிறது. உன் தந்தையைப் பிரிந்து என்னோடு இங்கு வந்து விட்டதால் வருத்தப்படுகிறாயா? இதற்கே இப்படி வருந்துகிற நீ அவ்வளவு நாட்கள் தந்தையைப் பிரிந்து இலங்கை வரை எப்படித்தான் போய் வந்தாயோ?"

மகாராணி இப்படிக் கேட்ட போது தன் உணர்ச்சிகள் அவருக்குத் தெரியுமாறு நடந்து கொண்டோமே என்று வெட்கப்பட்டாள் குழல்வாய்மொழி.

சிவிகையில் புறப்பட்டுத் தளபதியின் தங்கையைப் பற்றி விசாரித்து வருவதற்குக் கோட்டாறு சென்ற புவன மோகினி நள்ளிரவாகியும் அரண்மனை திரும்பவில்லை. மறுநாள் பொழுது விடிகிற நேரத்தில் பரபரப்பான நிலையில் அரண்மனைக்கு ஓடி வந்த புவன மோகினியைக் கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள்.

----------

 

3.18. வெள்ளூர்ப் போர்க்களம்

 

வெள்ளூர்ப் போர்க்களத்தில் இருந்த பாண்டியப் பெரும்படையும், அதற்கு உதவியாக வந்திருந்த சேர நாட்டுப் படையும், குமார பாண்டியனுடைய எதிர்பாராத திடீர் வருகையைக் கண்டு பெருமகிழ்ச்சி எய்தின. இளவரசனின் வரவு அவர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் துணிவையும் அளித்தது. அதே சமயத்தில் தளபதி வல்லாளதேவன் ஏன் இன்னும் வரவில்லை என்ற ஐயப்பாடும் எல்லோருடைய மனங்களிலும் உண்டாயிற்று. சாதாரண வீரர்கள் மனத்துக்குள்ளேயே அந்தச் சந்தேகத்தை அடக்கிக் கொண்டு விட்டார்கள். பெரும்பெயர்ச்சாத்தனும், அவனுக்கு அடுத்த நிலையிலிருந்த சிறு படையணித் தலைவர்களும் 'தளபதி ஏன் போர்க்களத்துக்கு வரவில்லை?' என்ற கேள்வியைக் குமாரபாண்டியனிடமே கேட்டு விடுவதற்குச் சமயத்தை எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் காலை விழிஞத்திலிருந்து புறப்பட்டிருந்த குமார பாண்டியனும் அவனுடன் வந்த வீரர்களும் மறுநாள் அதிகாலையில் வெள்ளூரை அடைந்து விட்டார்கள்.

அவர்கள் அங்கே சென்ற நேரம் பொருத்தமானது. அன்றைய நாட் போர் தொடங்குவதற்குச் சில நாழிகைகள் இருந்தன. இரு தரப்புப் படைகளும் களத்தில் இறங்கவில்லை. அவரவர்களுடைய பாசறையில் தங்கியிருந்தனர். அதனால் மகிழ்ச்சியோடு ஒன்று கூடி ஆரவாரம் செய்து குமாரபாண்டியனை வரவேற்பதற்கு வசதியாக இருந்தது. பாண்டியப் படைகளுக்கு நீண்ட தொலைவு பரந்திருந்த படைகளின் கூடாரங்களில் தனித் தனியே தங்கியிருந்த வேறு வேறு பிரிவைச் சேர்ந்த வீரர்களெல்லாரும் ஆவலோடு ஓடி வந்தனர். சிரித்த முகமும் இனிய பேச்சுமாகக் குதிரையிலிருந்து கீழே இறங்கி வந்த குமாரபாண்டியனைப் பார்த்த போது சில நாட்களாகத் தொடர்ந்து போர் செய்து களைத்திருந்த வருத்தமெல்லாம் போய்விட்டது போல் இருந்தது அவர்களுக்கு. குமாரபாண்டியனை வரவேற்கு முகமாக வாள்களையும், வேல்களையும் வலக் கரங்களால் உயர்த்திப் பிடித்து வாழ்த்தொலிகளை முழக்கினார்கள். முகத்தில் மலர்ச்சி நிறையத் தன் வீரர்களை நோக்கி ஆரவாரத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கையமர்த்தினான் இராசசிம்மன். பெரும்பெயர்ச்சாத்தனும், படையணித் தலைவர்களும் அவன் தங்குவதற்கு அமைத்திருந்த பாசறைப்பாடி வீட்டுக்கு அவனை அழைத்துச் சென்றனர். "இளவரசே! தளபதி இதுவரை ஏன் போர்க்களத்துக்கு வரவே இல்லை? என்ன காரணமென்று தெரியாமல் மனம் கலங்கிக் கொண்டிருக்கிறோம் நாங்கள்!" என்று எல்லோருடைய சார்பாகவும் கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் அந்தக் கேள்வியைக் கேட்ட போது, அதுவரை குமாரபாண்டியனுடைய முகத்தில் நிலவிக் கொண்டிருந்த மலர்ச்சி மங்கி மறைந்தது. அந்தக் கேள்விக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தயங்கிக் கொண்டே பெரும்பெயர்ச்சாத்தன் முதலியவர்களுடைய முகங்களை ஏறிட்டுப் பார்த்தான் அவன். மகாமண்டலேசுவரர் விழிஞத்துக் கடற்பாறைக்கருகில் தன்னிடம் தனிமையில் பெற்றுக் கொண்ட வாக்குறுதிகள் அவன் மனத்தில் தோன்றிப் பயமுறுத்தின. "கரவந்தபுரத்துக் குறுநில மன்னரே! நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வகையில் குறிப்பான பதிலை மட்டும் தான் இப்போது என்னால் கூற முடியும். அதற்கு மேல் என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள். தளபதி வல்லாளதேவன் எதிர்பாராத சில காரணங்களால் இந்தப் போரில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது. அதற்காகக் கவலைப்படாமல் நன்றாகப் போர் செய்து வெற்றியோடு திரும்ப வேண்டியது நம் கடமையாகும்" என்று பொதுவாகப் பதில் சொல்லித் தன்னை அவர்களுடைய சந்தேகச் சூறாவளியிலிருந்து மீட்டுக் கொண்டான் குமாரபாண்டியன்.

அவன் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் அதற்கு மேல் அதைப் பற்றி அவனிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ள முடியாது என்று மௌனமானான் பெரும்பெயர்ச்சாத்தன். 'தளபதி வரவில்லை. இனி வரவும் மாட்டார்' என்ற செய்தி மெல்ல மெல்ல எல்லாப் படை வீரர்களுக்கும் தெரிந்து ஓரளவு பரவியது. பின்பு அவர்களுடைய பேச்சு போர்க்களத்து நிலைகளைப் பற்றிச் சுற்றி வளர்ந்தது. அன்று வரையில் நடந்திருக்கும் போரில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வு விவரங்களைக் குமாரபாண்டியனுக்கு விவரித்துச் சொன்னார்கள் பெரும்பெயர்ச்சாத்தன் முதலியவர்கள். அதிகக் காயங்களை அடைந்து போர் செய்யும் ஆற்றல் குன்றி பாசறையில் படுத்த படுக்கையாக இருந்த சேர நாட்டுப் படைத் தலைவனைப் போய்ப் பார்த்து ஆறுதல் கூறினான் குமாரபாண்டியன். தன் தரப்புப் படைகளின் அணித் தலைவர்கள் எல்லோரையும் கலந்து சிந்தித்த பின் எதிர்த் தரப்புப் படைகளின் வலுவை முறியடிப்பதற்கு ஏற்ற விதத்தில் இரண்டு விதமாகப் படை வியூகத்தைப் பிரித்தான். கரவந்தபுரத்து வீரர்களும் சேர நாட்டு வீரர்களும் அடங்கிய கூட்டத்துக்குப் பெரும்பெயர்ச்சாத்தன் தலைவனானான். தென்பாண்டிப் படை வீரர்கள் அடங்கிய ஐந்நூறு பத்திச் சேனைக்கும் குமாரபாண்டியன் தானே தலைமை தாங்குவதென்று ஏற்பாடு செய்து கொண்டான். சக்கசேனாபதியும் ஈழ நாட்டுப் படைகளும் வந்தால், அப்படியே மூன்றாவது படைவியூகமாக அமைத்துக் கொள்ளலாம் என்பது அவன் தீர்மானமாயிருந்தது. எதிர்த் தரப்புப் படைகளோ ஐந்து வியூகங்களாக ஐம்பெரும் தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று குமாரபாண்டியன் பெரும்பெயர்ச்சாத்தனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். ஐந்து வியூகப் படைக்கும் மூன்று வியூகப் படைக்கும் ஏற்றத் தாழ்வு அதிகம் தான். ஆனாலும் போர்த் திறனும், சூழ்ச்சி வன்மையும் இருந்தால் மூன்று வியூகப் படை வீரர்களால் ஐந்து வியூகப் படை வீரர்களை ஏன் வெல்ல முடியாது? முடியும் என்றே நம்பினான் குமாரபாண்டியன்.

பயணம் வந்த அலுப்பையும் பொருட்படுத்தாமல் அன்றைக்குப் போரிலேயே தானும் களத்தில் தோன்றுவதென்று உறுதி செய்து கொண்டான் அவன். பாசறையிலேயே நாட்கடன்களை முடித்துக் கொண்டு போர்க்கோலம் பூண்டான். மார்பில் கவசங்களை அணிந்த போது பழைய போர்களின் நினைவுகளும், வெற்றி அனுபவங்களும் மனக்கண் முன் தோன்றின.

குமரித் தெய்வத்தையும், தன் அன்னையையும் நினைத்து கண் இமைகளை மூடித் தியானத்தோடு கைகூப்பி வணங்கினான். பட்டு உறை போர்த்த வட்டத் தட்டில் வைத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் மரியாதையோடும் பணிவோடும் அளித்த வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்ட போதே குமாரபாண்டியனின் கரங்கள் போர்த் துடிப்பை அடைந்து விட்டன. அவன் உடலிலும் உள்ளத்திலும் வீராவேச உணர்ச்சி பொங்கி நின்றது. பாசறைக்கு வெளியே நின்ற ஆயிரக்கணக்கான வீரர்கள் குமாரபாண்டியனைப் போர்க் கோலத்தில் காண்பதற்குக் காத்திருந்தார்கள்.

மிக உயரமான பட்டத்து யானையின் பிடரியில் அம்பாரி வைத்துப் பாசறை வாயிலில் கொணர்ந்து நிறுத்தியிருந்தான் பாகன். அரசவேழமாகிய அந்தப் பிரம்மாண்டமான யானையின் பொன் முகபடாம் வெயிலொளியில் மின்னிற்று. அதற்கப்பால் நூல் பிடித்து வரிசை நிறுத்தினாற் போல் குதிரைப் படைகளும், யானைப் படைகளும் அணிவகுத்து நின்றன. காலாட் படை வீரர்கள் பிடித்த வேள்களின் நுனிகள் கூரிய நேர்க்கோடு போல் வரிசை பிழையாமல் தெரிந்தன. அதற்கும் அப்பால் தேர்ப் படைகள் நின்றன. குமாரபாண்டியன் போர்க்கோலத்தோடு பாசறை வாசலில் வந்து நின்ற போது உற்சாக ஆரவாரம் திசை முகடுகளைத் துளைத்தது.

உடனிருந்த பெரும்பெயர்ச்சாத்தன் பட்டத்து யானையில் ஏறிக் கொள்ளுமாறு வேண்டினான். "எனக்கு ஒரு நல்ல குதிரை இருந்தால் போதுமே! போர்க்களத்தில் இந்த ஆடம்பரங்களெல்லாம் எதற்கு?" என்றான் குமார பாண்டியன்.

"இளவரசே! நாளைக்கு உங்கள் விருப்பம் போல் குதிரையோ, தேரோ எடுத்துக் கொள்ளலாம். இன்று நீங்கள் யானையில் தான் களத்துக்கு எழுந்தருள வேண்டும். தென்பாண்டிப் படைகளுக்குப் பொறுப்பான தலைமையில்லை என்றெண்ணி இறுமாந்து கிடக்கும் நம் பகைவர்களெல்லாம் நீங்கள் வந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைய வேண்டும். குதிரையோ, தேரோ வைத்துக் கொண்டால் உங்களை யானையின் மேற் பார்க்கிற மாதிரி அவ்வளவு நன்றாக அவர்களால் பார்க்க முடியாது. மேலும் உயரமான இடத்திலிருந்து தாங்கள் காட்சியளித்துக் கொண்டேயிருந்தால் தான் நம் வீரர்கள் பார்த்து உற்சாகம் அடைய முடியும்" என்று பெரும்பெயர்ச்சாத்தன் வேண்டிக் கொண்டான். குமாரபாண்டியனால் மறுக்க முடியவில்லை. யானை மேல் ஏறி அம்பாரியில் அமர்ந்து கொண்டான். மற்றப் படை முதன்மையாளர்கள் குதிரைகளில் ஆரோகணித்துச் சூழ்ந்தனர். போர் தொடங்குவதற்கு அறிகுறியான கருவிகள் முழங்கின. யானை மேல் அமர்ந்து களம் நோக்கிச் சென்ற போது குமாரபாண்டியனுடைய முகத்தில் வீரம் விரவிய ஒருவகை அழகின் கம்பீரம் தவழ்ந்தது. தென்பாண்டி வீரர்களின் ஊக்கம் அந்த முகத்தை அண்ணாந்து பார்க்கும் போதெல்லாம் நான்கு மடங்காகப் பெருகியது.

எதிர்ப்பக்கத்தில் வடதிசைப் பெரும் படையும் பெரு முழக்கங்களோடு களத்தை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ஒன்றோடொன்று குமுறிக் கலக்க வரும் இரண்டு கடல் விளிம்புகளெனப் பயங்கரமாகத் தோன்றியது. படைகளின் சங்கமம், வீரர்களின் குரல்கள், வாத்திய முழக்கங்கள், ஓடும் கரி, பரிகளின் ஓலம், தத்தம் தரப்பின் வாழ்த்து ஒலி - எல்லாமாகச் சேர்ந்து களம் பிரளய ஓசையின் நிலையை அடைந்தது. படைக் கடல்கள் ஒன்று கலந்தன. போர் தொடங்கி விட்டது. வழக்கம் போல் அலட்சியமாகப் பாசறைகளிலிருந்து திரும்பிப் போர்க்களத்துக்கு வந்த வடதிசை மன்னர்கள் ஐவரும் எதிர்ப்பக்கத்தில் யானை மேல் ஆரோகணம் செய்து வரும் குமாரபாண்டியன் இராசசிம்மனைக் கண்டு திகைத்தனர். மருண்ட கண்களால் சோழன் கொடும்பாளூரானைப் பார்க்க, அவன் கண்டன் அமுதனைப் பார்த்தான். கண்டன் அமுதன் அரசூருடையானைப் பார்க்க, அவன் பரதூருடையானைப் பார்த்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அந்தப் பார்வை, "இனி நாம் அலட்சியமாக இருப்பதற்கில்லை" என்று தங்களுக்குள் குறிப்பாலேயே பேசிக் கொள்வது போலிருந்தது. ஒரு கணம் தான் வியப்பு, திகைப்பு, எல்லாம். போர்க்களத்தின் பிரளயத்துக்கு நடுவே ஆச்சரியப்பட்டுக் கொண்டு நிற்க நேரம் ஏது? போரைக் கவனித்து அதில் ஈடுபட்டார்கள் அவர்கள். புதிய துணிவும், ஊக்கமும் பெற்ற காரணத்தால் அன்றைக்குப் போரில் தென் பாண்டிப் படைகளின் கைகள் தான் ஓங்கியிருந்தன. மறுநாளும் அதே நிலை. குமாரபாண்டியன் வந்த மூன்றாவது நாள் காலைப் போர் தொடங்குகிற சமயத்தில் சக்கசேனாபதியும் ஈழ நாட்டுப் படைகளும் வந்து சேர்ந்து கொண்டார்கள். வடதிசைப் படைத் தலைவர்களுக்கு அது இரண்டாவது அதிர்ச்சியாக அமைந்தது. கொதிப்போடு போர் செய்தனர் அவர்கள்.

தீவினை வயத்தால் அன்றைக்குப் போர் முடிந்தது. பாசறைக்குத் திரும்பும் போது குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும், அவர்களுடைய வீரர்களும் சோர்வும் துயரமுமாகத் திரும்பினர். காரணம்...? அன்று நடந்த போரில் கரவந்தபுரத்து அரசனும், மாவீரனுமாகிய பெரும்பெயர்ச்சாத்தன் மாண்டு போனான். எதிர்த் தரப்புப் படையிலிருந்த கீழைப்பழுவூர்க் கண்டன் அமுதன் குறி வைத்து எறிந்த வேல் பெரும்பெயர்ச்சாத்தனின் உயிரைக் குடித்தது. சக்கசேனாபதி தன் படைகளோடு வந்து சேர்ந்து கொண்டிருக்காவிட்டால், பெரும்பெயர்ச்சாத்தன் மரணத்துக்குப் பின் தன்னம்பிக்கையையே இழந்திருப்பான் குமாரபாண்டியன். பெரும்பெயர்ச்சாத்தனையடுத்து பாசறையில் படுத்த படுக்கையாக இருந்த சேர நாட்டுப் படைத்தலைவனும் உயிர் விட்டுவிட்டான். இந்த இரு அதிர்ச்சிகளிலிருந்தும் மீட்டுப் படைகளைத் தைரியப்படுத்துவதற்காக அன்று இரவு முழுவதும் குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் உறக்கமின்றி அலைந்து உழைத்தனர். வாட்டமடைந்திருந்த கரவந்தபுரத்து வீரர்களையும், சேர வீரர்களையும் ஊக்கமூட்டுவதற்காக பெரும்பாடுபட்டனர். சோர்வும், சோகமும் கொண்டிருந்த படை வீரர்களுடைய பாசறைக்குத் தானே நடந்து போய்த் தைரியம் கூறினான் இராசசிம்மன். இவ்வளவும் செய்த பின்பே கலக்கமில்லாமல் மறுநாள் விடிந்ததும் களத்திற் புகுந்து போர் செய்ய முடிந்தது அவர்களால். பெரும்பெயர்ச்சாத்தன் இறந்து போனதால் பழையபடி படைகள் இரண்டே வியூகங்களாகக் குறுக்கப்பட்டன. அப்போது சக்கசேனாபதியே அவனைக் கலங்க வைக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார். "தலைமையேற்கப் படைத் தலைவர்கள் இல்லையென்று ஏன் படை வியூகங்களைக் குறுக்குகிறீர்கள்? தளபதி வல்லாளதேவனை வரவழைத்து நெருக்கடியைத் தவிர்க்கலாமே?" என்று சக்கசேனாபதி கேட்டபோது, அவருக்கு மறுமொழி கூறும் வகையறியாது தயங்கினான் அவன்.

 

"சக்கசேனாபதி! அதைப் பற்றி இப்போது உங்களிடம் பேசும் சக்தியற்றவனாக இருக்கிறேன் நான். ஆனால் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சமயம் வரும் போது அந்தச் செய்தியை உங்களிடம் சொல்வேன். இப்போது என்னை விட்டுவிடுங்கள்" என்று பதில் கூறிய போது அவரிடம் ஏதோ ஒரு துயரமான வேண்டுகோளைக் கேட்பது போன்றிருந்தது அவன் குரல்.

சக்கசேனாபதிக்கும் அவனுக்கும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச்சு நடந்த அன்று இரவு நடுயாமத்தில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் பாண்டிப் படைகளின் பாசறைகள் இருந்த பகுதியில் திடீரென்று ஒரு பெருங் குழப்பம் உண்டாயிற்று. கூக்குரல்களும், கூட்டமுமாகச் சிலர் திடுதிடுவென ஓடுகிற ஓலியும், தீப்பந்த வெளிச்சமுமாகக் கலவரம் எழுந்தது. சக்கசேனாபதியும் குமாரபாண்டியனும் எழுந்து அது என்னவென்று பார்ப்பதற்காகச் சென்றனர்.

 

---------


3.19. ஊழிப் புன்னகை

 

மகாமண்டலேசுவரர் அந்த மாதிரித் தளர்ந்து பேசிச் சேந்தன் அதற்கு முன்பு கேட்டதில்லை. கம்பீரத்தின் சாயை குன்றி துயர அமைதியோடு கூடிய சாந்தம் நிலவுவதை அந்த முகமண்டலத்தில் அன்று தான் கண்டான் அவன். புரிந்து கொள்ள முடியாத புதிர்த்தன்மை நிறைந்த அந்தக் கண்களில் ஏக்கம் படர்வதை முதல் முதலாகச் சேந்தன் பார்த்தான். நிமிர்ந்து அகன்று நீண்டு மேடிட்டுப் படர்ந்த அவருடைய நெற்றியில் மேதா கர்வம் மறைந்து சுருக்கங்கள் தெரிந்தன. சேந்தன் மனத்தில் அதையெல்லாம் பார்த்துக் காரணமற்ற பயங்கள் கிளர்ந்தன.

"சுவாமி! இன்று தங்களுடைய பேச்சும் தோற்றமும் இதற்கு முன்பு நான் காணாத விதத்தில் இருக்கின்றனவே! என் மனம் எதை எதையோ நினைத்து அஞ்சுகிறதே!" - துணிவை வரவழைத்துக் கொண்டு அவரிடமே கேட்டான். அவன் இப்படிக் கேட்டதும் அவர் நேருக்கு நேர் திரும்பி அவனுடைய முகத்தைப் பார்த்தார்! மெல்லச் சிரித்தார். வாடிய பூவைக் காண்பது போல் மங்கித் தென்பட்டது அந்தச் சிரிப்பு. சேந்தன் பயபக்தியுடனே அந்த முகத்தையும், அந்தச் சிரிப்பையுமே பார்த்துக் கொண்டு நின்றான். மெல்ல நடந்து அருகில் வந்து தம் சொந்தக் குழந்தை ஒன்றைத் தடவிக் கொடுப்பது போல் அவன் முதுகை இரு கைகளாலும் வருடினார் அவர்.

"சேந்தா! உன்னைப் போல் என்னிடம் நன்றி விசுவாசங்களோடு உழைத்த மனிதர் வேறு யாருமில்லை. உன்னிடம் எந்த அந்தரங்கத்தையும் நான் மறைக்கக் கூடாது. ஆனாலும் இப்போது என்னிடம் எதுவும் கேட்காதே... பேசாமல் என்னுடன் இடையாற்று மங்கலத்துக்கு வா." இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கி ஈரம் கசிந்து பளபளப்பதை அவன் பார்த்து விட்டான். அதைப் பார்த்ததும் சேந்தனுடைய மனத்தை ஏதோ ஓர் அவல உணர்வு இறுக்கிப் பிழிந்தது. அழுகை வந்து விடும் போலிருந்தது. அரிய முயற்சியின் பேரில் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, அவரோடு இடையாற்று மங்கலம் சென்றான். இடைவழியிலுள்ள ஊர்களிலெல்லாம் போர்க்காலத்தில் நிலவும் பயமும், பரபரப்பும் நிலவிக் கொண்டிருந்தன. வேளாண்மைத் தொழில் சரியாக நடைபெறவில்லை. ஊர்கள் கலகலப்புக் குறைந்து காணப்பட்டன. பறளியாற்றில் நீர் குறைந்து காலால் நடந்து அக்கரை சேர்ந்து விடுமளவுக்கு ஆழமற்றிருந்தது. கரையோரத்து ஆலமரங்களில் இலைகள் பழுத்தும், உதிர்ந்தும் விகாரமாகத் தென்பட்டன. சோகமயமான பெரிய நிகழ்ச்சி ஒன்று வருவதற்கு முன் கூத்தரங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவையினரின் அமைதி போல இடையாற்று மங்கலம் தீவும், மகாமண்டலேசுவரர் மாளிகையும் நிசப்தமாயிருந்தன.

சேந்தனும் மகாமண்டலேசுவரரும் பறளியாற்றைக் கடந்து இடையாற்று மங்கலத்தை அடையும் போது நண்பகலாகிவிட்டது. வெயில் நன்றாய்க் காய்ந்து கொண்டிருந்தது. அம்பலவன் வேளானையும், இரண்டொரு காவல் வீரர்களையும் தவிர இடையாற்று மங்கலம் மாளிகையில் வேறு யாரும் இல்லை.

"சேந்தா! இப்போது இந்த இடம் மயானம் போல் அமைதியாயில்லை?" என்று ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே அவர் கேட்டார். அவன் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான். அந்தச் சமயத்தில் அம்பலவன் வேளான் வந்து அவர்களெதிரே வணங்கி நின்றான்.

"வேளான்! நீ உடனே அரண்மனைக்குப் புறப்பட்டுப் போ. அங்கே மகாராணியோடு குழல்வாய்மொழி தங்கியிருக்கிறாள். நான் அழைத்து வரச் சொன்னதாக உடனே அவளை அழைத்து வா" என்று மகாமண்டலேசுவரர் கட்டளையிட்டார். அவரே குழல்வாய்மொழியை மகாராணியோடு அரண்மனைக்கு அனுப்பிவிட்டு ஏன் இப்போது இவ்வளவு அவசரமாக அழைத்து வரச் சொல்கிறாரென்று விளங்காமல் சேந்தன் திகைத்தான். அவர் கட்டளை கிடைத்தவுடன் வேளான் புறப்பட்டு விட்டான். மகாமண்டலேசுவரர் சேந்தன் பின் தொடர, மாளிகைக்குள் போய் ஒவ்வோர் இடமாக அன்று தான் புதிதாகச் சுற்றிப் பார்ப்பவர் போல் சுற்றிப் பார்த்தார். நந்தவனத்துக்குப் போய் ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு மரமாக, ஒவ்வொரு கொடியாக நின்று நோக்கினார். அவருடைய நோக்கம் என்னவாக இருக்குமென்று சேந்தனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியாக இடையாற்று மங்கலம் மாளிகையில் மேல்மாடத்து நிலா முற்றத்தில் உயர்ந்த இடத்தில் ஏறி நான்கு புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அப்போதும் மகாமண்டலேசுவரர் சிறு குழந்தை மாதிரி கண்கலங்கி நிற்பதைச் சேந்தன் கண்டான். அவனால் பொறுக்க முடியவில்லை. சகலத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அந்த அரிய மலை கண்கலங்கி நிற்பதைக் காணப் பொறுக்காமல், "சுவாமி! மறுபடியும் இப்படிக் கேட்பதற்காக என்னை மன்னியுங்கள். உங்கள் செயல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று அழுகையின் சாயை பதிந்த குரலில் கேட்டான் சேந்தன். மெதுவாகத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்து முன் போலவே சிரித்தார் அவர். "சேந்தா! நீ மிகவும் நல்லவன்" என்று அவன் கேட்ட கேள்விக்குத் தொடர்பின்றிப் பதில் வந்தது அவரிடமிருந்து.

சிறிது நேரத்தில் இருவரும் நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கி வந்தனர். "சேந்தா நீ போய் நந்தவனத்திலிருந்து எத்தனை வகை மலர்கள் இருக்கின்றனவோ அவ்வளவையும் குடலை நிறைய கொய்து கொண்டு வா. நான் போய் நீராடி வருகிறேன்" என்று கூறிச் சேந்தனை நந்தவனத்திற்கு அனுப்பிவிட்டு பறளியாற்றை நோக்கி நடந்தார் மகாமண்டலேசுவரர். குழந்தைத்தனமாக வெகுநேரம் துளைந்து முங்கி முழுகி நீராடினார். ஈரம் புலராத ஆடையோடு இடையாற்று மங்கலம் மாளிகையிலிருந்த சிவன் கோயில் வாயிலுக்கு வந்தார். சேந்தன் குடலை நிறையப் பல நிறப் பூக்களோடு எதிரே வந்து நின்றான். அவற்றை வாங்கிக் கொண்டு ஆலயத்துக்குள் சென்றவர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. மேலாடையை அரையில் பயபக்தியோடு கட்டிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்து எட்டிப் பார்த்தான் சேந்தன். அங்கே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. சிவலிங்கத்திற்கு முன்னால் மகாமண்டலேசுவரர் தியானத்தில் அமர்ந்திருந்தார். சற்றே மூடிக் குவிந்திருந்த அவருடைய விழிப் பள்ளங்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தம் சிரத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த முடியைக் கழற்றி மலர்களோடு சிவலிங்கத்தின் பீடத்தில் இட்டிருந்தார் அவர். சேந்தன் அதைக் கண்டு மெய்யும், மனமும் குழைத்து உரோம புளகமெய்தி, கண்ணீரரும்ப நின்றான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ அவன்? தன்னை மறந்து நின்று கொண்டே இருந்தான்.

மகாமண்டலேசுவரர் தியானங் கலைந்து எழுந்து நின்றார். அப்போது தான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் அவருடைய முகத்தில் தெய்விகமானதொரு ஒளி மலர்ந்து இலங்கியது. அந்த ஒளியின் மலர்ச்சியில் அறிவின் அகங்காரம் எரிந்து சாம்பலாகி விட்டது போல் திருநீறு துலங்கியது நெற்றியில்.

"சேந்தா! மகாமண்டலேசுவரரை, அதோ அந்த இடத்தில் கழற்றி வைத்து விட்டேன். இனி என் தலையில் யாரும் கல்லெறிய மாட்டார்கள்" என்று சிவலிங்கத்தின் பீடத்தை சுட்டிக்காட்டிச் சொன்னார் அவர். அப்போது அவருடைய முகத்தில் மலர்ந்த சிரிப்பில் கருணை பூத்திருந்தது. சேந்தன் பேசும் உணர்விழந்து நின்றான்.

"என்னோடு வா!" என்று அவனைக் கைப்பற்றி அழைத்துச் சென்று சிவ ஆலயத்துக்கு முன் குறட்டில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டுத் தாமும் எதிரே உட்கார்ந்தார். அப்போது ஒளி மங்கி இருள் சூழ ஆரம்பித்திருந்த சமயம். காற்று இதமாகக் குளிர்ந்து வீசிக் கொண்டிருந்தது. சிவாலயத்துக்குள்ளிருந்து அகிற்புகையின் மணமும் மலர்களின் வாசனையும் கலந்து வெளிவந்து பரவின. அந்த அற்புதமான சூழலில் இடையாற்று மங்கலம் நம்பியின் குரல் சேந்தனை நோக்கி ஒலித்தது.

"சேந்தா, கேள்! நீயும் உன் மனமும் எந்தப் பேரறிவின் முன்னால் பணிந்து வீர வணக்கம் செலுத்தி வருகிறீர்களோ அந்த அறிவு இப்போது அழிந்து விட்டது. அல்லது தன்னை அழித்துக் கொண்டு விட்டது என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள். கயிற்றால் கட்டப்பட்டுக் கையும் காலும் ஆடும் மரப்பாவை கயிற்றின் இணைப்பறும் போது ஆட்டமற்றுப் போவது போலும் நம் வினைகளின் கழிவு காலத்தில் அறிவும் மனிதனுக்குப் பயன்படுவதில்லை. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள எனக்கு இத்தனை காலம் வாழ்ந்து பார்க்க வேண்டியிருந்தது, அப்பா! அறிவு அளவற்றுப் பெருகிக் கூர்மையாகும் போது அதை நமக்களிக்கும் தெய்வத்தை நோக்கிச் செலுத்தும் பக்தியாக மாற்றிக் கொண்டு விட வேண்டும். அதை நான் செய்யத் தவறி விட்டேன். கத்தியை நீட்டிப் பயமுறுத்தும் வழிப்பறியாளனைப் போல் என் அறிவைப் பிறர் அஞ்சும் கருவியாக்கினேன். அளவற்ற அறிவின் கூர்மைக்கு எதிரிகளும், பொறாமைப்படுபவர்களும் ஏற்படாமலிருக்க வேண்டுமானால் அதைப் பக்தியாக மாற்றிக் கொண்டு விட வேண்டும். நான் இறுமாந்து, செம்மாந்து திரிந்தேன். என் கண் பார்வையால் மனிதர்களை இயக்கினேன். நல்வினை துணை நின்ற வரையில் என் அறிவு பயன்பட்டது. தளபதியும், கழற்கால் மாறனாரும் என் மேல் அசூயைப் படத் தொடங்குகிற சமயத்திலேயே என் நல்வினையின் விளைவு குன்ற ஆரம்பித்து விட்டது.

"நான் சிறைப்படுத்தி வைத்த தளபதி தப்பி வந்தான். நான் தந்திரமாக அடக்க எண்ணிய ஆபத்துதவிகள் தலைவனோடு சேர்ந்து கொண்டான். நான் மறைக்க விரும்பிய பகவதியின் மரணத்தைத் தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனுமே கேட்டுத் தெரிந்து கொண்டு என் மேல் கல்லெறிந்து விட்டு ஓடினார்கள். உங்கள் கப்பலில் உங்களோடு தற்செயலாக மாறுவேடத்தில் வந்து தன் திமிரால் இறந்து போன பகவதி என் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டாளென்றே தளபதி நினைத்து விட்டான். என் நல்வினை கழிகிற காலம் வந்ததனால்தான் அவன் மனத்தில் இந்த நினைவு உண்டாயிற்று. இப்போது அவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களும் ஒன்று சேர்ந்து என்னை அழிக்க முயன்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். அதை எதிர்த்துச் சூழ்ச்சி செய்ய என் அறிவுக்கு இப்போது ஆற்றலில்லை. நல்வினைப் பயனை அது இழந்து விட்டது. ஒவ்வொருவருடைய அறிவுக்கும் 'ஆகூழ்' (வளர்ச்சி), 'போகூழ்' (அழிவு) என இரண்டு நிலைகளுண்டு. எனக்கு இப்போது போகூழ் நிலை. என் அறிவு இனிமேல் பயன்படாது. என் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கே பயப்படுகிறவர்கள், என் நெஞ்சுக்குக் குறிவைத்துக் கத்தியை ஓங்கவும், தலையில் கல்லெறியவும் துணிந்து விட்டார்களென்றால், என் அறிவு அவர்களைத் தடுக்கும் நல்வினைத் துணையை இழந்துவிட்டது என்றுதான் பொருள். அதன் விளைவாக இந்தத் தென்பாண்டி நாட்டுக்கே துன்பங்களை வளர்த்து விட்டேன் நான். பக்தியாக மாறாத காரணத்தால், ஞானமாகப் பழுக்காத இயல்பால் எத்தனை பிரிவினைச் சக்திகளை இங்கே உண்டாக்கிவிட்டது என் அறிவு? தளபதியின் முரட்டு வீரத்தைப் போலவே என் முரட்டு அறிவும் எவ்வளவு கெடுதலானதென்பதை இன்று உணர்கிறேன். ஆனால் இது காலங்கடந்த உணர்வு. மகாமண்டலேசுவரர் என்ற அந்தப் பதவியை ஏற்றுக் கொண்ட காலத்திலேயே எனக்கு இந்த உணர்வு இருந்திருந்தால் எவ்வளவோ பயன்பட்டிருக்கும். ஒழுக்கம், நேர்மை, 'அறிவின் அகந்தை அழியாத தெய்வபக்தி' இவற்றை வைத்துக் கொண்டிருந்தேன். இதுவரை இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவிலில் நான் செய்த அத்தனை வழிபாடும் அறிவின் ஆணவத்தோடு செய்தவை. ஏனென்றால் அந்த வழிபாடுகளின் போது நான் மனமுருகிக் கண்ணீர் சிந்தியதில்லை. இன்று செய்த வழிபாடுதான் உண்மையான வழிபாடு. இன்றைக்கு வடித்த கண்ணீரில் என் அறிவுக் கொழுப்பெல்லாம் கரைந்து விட்டது. அப்பா! ஒவ்வொரு தலைமுறைகளிலும் மனிதனுக்குக் காலங்கடந்து புத்தி வருவதால் தான் விதியின் வெற்றிகள் அதிகமாகிவிடுகின்றன. சேந்தா! நான் மறுபடியும் ஒரு பிறவி எடுத்தால் அறிவாளியாகப் பிறக்க மாட்டேன். பக்திமானாகப் பிறப்பேன். பாடியும், அழுதும், தொண்டு செய்தும் என்னை அழித்துக் கொண்டு இன்பம் காண்பேன்." இந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போது இடையாற்று மங்கலம் நம்பியின் குரலில் அழுகை குமுறிப் பாய்ந்தது. குரல் தழுதழுத்துப் பேச்சு தடைப்பட்டது. இரண்டு கன்னங்களிலும் கண்ணீர் முத்துகள் உருண்டு வடிந்தன.

அதுவரை சிலைபோல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த சேந்தன், வாய் திறந்தான். "சுவாமி! இந்த விநாடியே தாங்கள் உத்தரவு கொடுத்தால் தங்கள் எதிரிகளை அழித்தொழித்து விட என்னாலான முயற்சியைச் செய்கிறேன். தாங்கள் இப்படி நைந்து மனம் புண்பட்டுப் பேசுவது நன்றாகயில்லை!" இதைக் கேட்டு அவர் பலமாக வாய்விட்டுச் சிரித்தார். "சேந்தா! நீ நன்றியுள்ள ஊழியன். ஆனால், என் எதிரிகளால் என்னென்ன சீரழிவுகள் வரப் போகின்றன என்பதை நீ உடனிருந்து காணப் போவதில்லை! அதற்குள் ஒரு மாபெரும் சன்மானத்தை - நீ கனவிலும் எதிர்பார்த்திராத சன்மானத்தை உனக்குக் கொடுத்து, உன்னிடம் நான் பட்டிருக்கும் நன்றிக் கடனைத் தீர்த்து, உன்னை இங்கிருந்து அனுப்பி விடுவேன்" என்றார்.

"சுவாமி! அப்படியெல்லாம் சொல்லி என் மனத்தைப் புண்படுத்தாதீர்கள். நன்றியுமில்லை; கடனுமில்லை. இந்த உடல் உங்களுக்குச் சொந்தம். உங்களுக்கே உழைத்துச் சாவதற்குக் கடமைப்பட்டது" என்று உருக்கமாகச் சொன்னான் சேந்தன்.

"அதெல்லாமில்லை! நான் எதை உனக்குக் கொடுக்கிறேனோ அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனென்று சத்தியம் செய்து கொடு. இந்த நாட்டு மகாராணிக்கும் குமாரபாண்டியனுக்கும் கூட நான் இவ்வளவு நன்றிக் கடன் படவில்லை. ஆனால் உனக்குக் கடன் பட்டிருக்கிறேன் சேந்தா!" அவர் கூறியதைக் கேட்டுச் சேந்தன் தயங்கினான். அவர் சிரித்துக் கொண்டே மேலும் கூறினார்: "பார்த்தாயா? எனது நல்வினைப் பயன் தீர்கிற காலத்தில் நீ கூட நான் சொல்கிறபடி கேட்க மாட்டேனென்கிறாயே!"

"ஐயா! சுவாமி! அந்தக் குற்றத்தை என் மேல் சுமத்தாதீர்கள். நான் நீங்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் சொல்கிறபடியே கேட்கிறேன். இது சத்தியம்! இது சத்தியம்!" என்று கைகூப்பிச் சொன்னான் சேந்தன்.

"சிவன் கோவில் குறட்டில் உட்கார்ந்து என்னை வணங்கிக் கொண்டே நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உறுதிதானே? எந்தக் காரணத்துக்காகவும் நீ கொடுத்த சத்தியத்தை மீற மாட்டாயே?"

"என் மேல் இன்னும் சந்தேகமா சுவாமி?" என்று கூறிய அவனை விளக்கருகே கூட்டிக் கொண்டு போய், அவன் முகத்தை உற்றுப் பார்த்தார் அவர். சில விநாடிகள் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றவர், "சேந்தா உன் சத்தியத்தை நம்புகிறேன்" என்று தீர்மானமான குரலில் சொன்னார்.

"என் பாக்கியம்" என்றான் சேந்தன். "இப்போது கேட்டுக்கொள்! அதிர்ச்சியோ கூச்சமோ அடையாதே. நான் பட்ட நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்வதற்காக என் பெண் குழல்வாய்மொழியை உனக்குக் கொடுக்கப்போகிறேன்!"

"சுவாமி! அபசாரம்... என்ன வார்த்தை கூறினீர்கள்? மகாமண்டலேசுவரரின் செல்வப் புதல்வி எங்கே? இந்த அடிமை ஊழியன் எங்கே? நான் தகுதியற்றவன். குரூபி... மேலும் தங்கள் அருமைக் குமாரி அல்லும் பகலும் குமாரபாண்டியனின் நினைவிலேயே ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அலறிக் கொண்டே, நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் வீழ்ந்து பற்றிக் கொண்டான் நாராயணன் சேந்தன்.

"அவள் குமாரபாண்டியனைக் காதலிப்பதை நான் அறிவேன். ஆயினும் என் விருப்பம் அவளை நீ ஏற்க வேண்டும் என்பதுதான். இதை மாற்ற முடியாது. எழுந்திரு!" சிரித்தவாறே கூறினார். அந்தச் சிரிப்பு! அது ஊழிக் காலத்தின் புன்னகையா?

 

-----------


3.20. தீவினைப் பரவுகிறது

 

புவன மோகினி பேயறையப்பட்டு ஓடி வருகிறவளைப் போல் ஓடி வந்ததைக் கண்டவுடன் மகாராணி, குழல்வாய்மொழி, விலாசினி எல்லோரும் திகைப்போடு விரைந்து வந்து அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

 

"என்னம்மா? ஏன் இப்படி நிலைகெட்டுத் தடுமாறி ஓடி வருகிறாய்? என்ன நடந்தது?" என்று அந்தப் பெண்ணை நிறுத்தி நிதானப்படுத்தி விசாரித்தார்கள், பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும். பயந்து வெளிறிய கண் பார்வையால் தன்னைச் சூழ்ந்து நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தாள் புவன மோகினி. மகாராணியாரையும், விலாசினியையும் பார்த்து விட்டுக் குழல்வாய்மொழியின் மேல் அவள் பார்வை திரும்பிய போது அவள் கண்கள் சுருங்கி வெறுப்புப் படர முகம் சிறுத்தது. அவளைப் பார்க்க விருப்பம் இல்லாதவள் போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு விட்டாள் புவன மோகினி.

இதைக் கண்டு குழல்வாய்மொழியின் உள்ளம் அவமானப்பட்டு விட்டது போலக் கொதித்தது. புவன மோகினி என்ற சாதாரணமான வண்ணமகள் தன்னிடம் இப்படி நடந்து கொண்டாளே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு. 'பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வரப்போன புவன மோகினி உண்மையைத் தெரிந்து கொண்டு வந்து விட்டாளோ? அதனால்தான் என் முகத்தை இப்படி வெறுப்போடு பார்க்கிறாள் போலும்! ஐயோ, நான் ஏன் இந்தச் சமயத்தில் இங்கே இருக்க நேர்ந்தது? நான் மறைத்து வைத்த உண்மை என் முன்னாலேயே வெளிப்பட்டு என்னைத் தலைகுனிய வைக்க வேண்டுமா?' என்று மனத்துக்குள் எண்ணிப் பதற்றமடைந்தாள் குழல்வாய்மொழி.

"வண்ணமகளே! ஏன் இப்படிப் பதற்றமும் பயமும் அடைந்து வாய் பேசாமல் நிற்கிறாய்? நீ பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வரச் சென்ற இடத்தில் என்ன நடந்தது? சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்? சொல் அம்மா?" என்று மகாராணி புவன மோகினியைக் கேட்டார். புவன மோகினி வெறுப்பும் அச்சமும் கலந்த முகபாவத்தோடு மறுபடியும் குழல்வாய்மொழியை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்துவிட்டு பதில் சொல்லத் தயங்குவது போல் நின்றாள். இனிமேலும் தான் அங்கேயே நின்று கொண்டிருந்தால் வெளிப்படையாக அவமானப்பட்டுத் தலைகுனிய நேர்ந்து விடும் என்று அஞ்சினாள் குழல்வாய்மொழி.

"உள்பக்கம் போய்விட்டு இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்" என்று ஏதோ அவசர காரியமாகச் செல்கிறவளைப் போல் சொல்லிவிட்டு மெல்ல நழுவிச் சென்றாள் குழல்வாய்மொழி. முகத்திலோ, குரலிலோ, தான் அங்கிருந்து செல்வது மற்றவர்களுக்கு அநாகரிகமாகத் தோன்றிவிடுவதற்குரிய குறிப்பே காட்டாமல் சுபாவமாகச் சொல்கிறவளைப் போல் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு உட்புறமாகச் சென்றுவிட்டாள் அவள். சென்றுவிட்டாள் என்று முடித்துச் சொல்வது தவறு. செல்வது போல் போக்குக் காட்டிவிட்டு அருகேயிருந்த ஒரு கதவுக்குப் பின் மறைந்து நின்று கொண்டாள். புவன மோகினி என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்டு அறிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு இருக்குமல்லவா? செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு விநாடிக்கு விநாடி விரைவாகத் துடிக்கும் நெஞ்சத் துடிப்புடன் கதவு மறைவில் நின்றாள் அவள்.

 

"இன்னும் ஏன் அம்மா தயங்குகின்றாய்? இடையாற்று மங்கலத்துப் பெண் இருக்கும் போதுதான் அவள் முகத்தைப் பார்த்துப் பேசக் கூசி மருண்டு நின்றாய்? அவளோ உள்ளே போய்விட்டாள். பயப்படாமல் நீ சொல்ல வேண்டியதைச் சொல்லலாம்" என்று பவழக்கனிவாயர் புவன மோகினியைத் தூண்டிக் கேட்டார்.

"பெண்ணே! இன்னும் எங்கள் பொறுமையைச் சோதித்துக் கொண்டு நிற்காதே! சொல்" என்று மகாராணியும் தூண்டவே புவனமோகினி வாய் திறந்தாள்.

"அதை நான் எப்படிச் சொல்வேன், தேவி! சொல்வதற்கே நாக் கூசுகிறது எனக்கு. கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போகிற பாதையில் மகாமண்டலேசுவரருக்கு எதிராக கலவரங்களும் குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பெரியவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் பற்றி மிகக் கேவலமான முறையில் பேசிக் கொள்கிறார்கள். குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் ஈழத்துக்குப் பயணம் செய்த கப்பலில் பகவதியும் சென்றாளாம். மகாமண்டலேசுவரர் தம்முடைய சூழ்ச்சியால் அந்தப் பெண் பகவதியை ஈழ நாட்டிலிருந்து திரும்ப முடியாதபடி அங்கேயே இறக்கும்படி செய்துவிட்டாராம். தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்கு போகக்கூடாதென்று தடுத்துச் சிறைப்படுத்தினாராம். மகாமண்டலேசுவரருடைய காவலிலிருந்து தப்பித் தளபதியும் ஆபத்துதவிகள் தலைவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு பெரிய கலகக் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் முரட்டுக் கொள்ளைக் கூட்டத்தைப் போல் ஆயுதபாணிகளாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். நான் தப்பி ஓடி வரத் தெய்வம்தான் துணை புரிந்தது. போகிற வழியில் இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டேன். ஆனால், இவை எவ்வளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் பலர் கூறக்கேட்ட போது நம்பாமலும் இருக்க முடியவில்லை. இந்த நிலையில் கலக்கமுற்றுப் பதறி ஓடி வந்த போது கலகக்காரரிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் உயிர் பிழைத்து வரவேண்டுமே என்ற பயம் இங்கு வந்து சேர்கிற வரை என்னை விடவில்லை. ஒரு வழியாக அரண்மனைக்கு வந்து உங்களிடமே நடந்ததைக் கூறிவிட்டேன்." பேசி முடிப்பதற்குள் புவன மோகினிக்கு மூச்சு இரைத்தது. அச்சத்தினாலும் குழப்பமான மன நிலையினாலும் சொற்கள் தடைப்பட்டு உருக்குலைந்து வெளிவந்தன. அவள் அவ்வாறு பேசி நிறுத்திய பின் அங்கு ஒரு விதமான அமைதி நிலவியது.

அவள் சொல்லி முடித்த பின்பும் சிறிது நேரம் வரையும் மகாராணிக்கும் முதியவர்களுக்கும் அவளுடைய சொற்களில் நம்பிக்கை உண்டாகவே இல்லை. மகாராணி சோகம் தோய்ந்த குரலில் கூறலானார்:

 

"பவழக்கனிவாயரே! இதெல்லாம் உண்மையாயிருக்கு மென்றே என்னால் நம்பமுடியவில்லையே? பகவதி எப்போது இலங்கைக்குப் போனாள்? மகாமண்டலேசுவரர் ஏன் அவளைக் கொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்? தளபதிக்கும் அவருக்கும் அவ்வளவு பெரிய பகைமை இருப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே? இந்த மாதிரிச் செய்திகளையெல்லாம் மகாமண்டலேசுவரர் மேல் வெறுப்புக் கொண்ட கூற்றத் தலைவர்கள் யாராவது பொய்யாகத் திரித்து விட்டிருப்பார்களோ? இது என்ன கெட்ட காலம்? ஒரு பக்கத்தில் நாட்டின் எதிர்காலத்தையே முடிவு செய்து நிர்ணயிக்கும்படியான போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் இன்னொரு பக்கத்தில் இப்படி உள்நாட்டுக் குழப்பம் எழுந்தால் எவ்வளவு கேவலம்?"

"மகாராணி! நீங்கள் கூறுவது போல் எனக்கும் இதில் நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது. பகவதி ஈழ நாட்டில் போய் மரணமடைந்திருந்தால் குமாரபாண்டியருக்குத் தெரியாமலா போகும்? அவ்வளவேன்? நம்மோடு இங்கேயே தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியைக் கேட்டால் எல்லா விவரமும் தானே தெரிந்து விடுகிறது. எங்கே அந்தப் பெண்ணை உள்ளேயிருந்து இப்படிக் கொஞ்சம் கூப்பிட்டு அனுப்புங்களேன். உடனே விசாரித்து விடலாம்" என்று பவழக்கனிவாயர் கூறியவுடன், "இதோ நான் போய் உடனே இடையாற்று மங்கலத்து நங்கையை உள்ளேயிருந்து கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்" என்று விலாசினி சென்றாள். அப்போது அதங்கோட்டாசிரியர் கூறினார்: "மகாராணி! நம்பிக்கை உண்டாவதும், உண்டாகாததும் நம் எண்ணங்களின் அடிப்படையைப் பொறுத்தது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாது. வெளியில் இவ்வளவு பெரிய கலவரம் எழ வேண்டுமானால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் வேண்டும்."

"காரணம் இருக்கிறதோ இல்லையோ? இவையொன்றும் நல்ல காலத்துக்கு அறிகுறியாகத் தோன்றவில்லை. மனக்கலக்கம்தான் அதிகமாகிறது" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் மகாராணி. அந்தச் சமயத்தில் குழல்வாய்மொழியைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றிருந்த விலாசினி திரும்பி வந்தாள்.

"மகாராணி! இடையாற்று மங்கலத்து நங்கையைக் காணவில்லை. அநேகமாக அரண்மனையின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிப் பார்த்து விட்டேன். எங்கே போனாளென்று தெரியவில்லை" என்று திரும்பி வந்து விலாசினி கூறிய போது எல்லாரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

"உள்ளே சென்று வருகிறேன் என்று போனவள் அதற்குள் எங்கே சென்று விட முடியும்? நன்றாகத் தேடிப் பாருங்கள். அரண்மனைக்குள்ளே தான் எங்காவது இருப்பாள்!" என்றார் அதங்கோட்டாசிரியர். அவர்கள் இவ்வாறு திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அரண்மனையின் பிரதான வாயிலான பராந்தகப் பெருவாயிலைக் காக்கும் காவலர்களில் ஒருவன் அங்கு வந்து வணங்கி நின்றான். அவன் மகாராணியை நோக்கிக் கூறினான்:

"சற்று முன் இடையாற்று மங்கலத்திலிருந்து அம்பலவன் வேளான் என்ற படகோட்டி மகாமண்டலேசுவரரின் புதல்வியாரைச் சந்தித்து ஏதோ முக்கியமான செய்தி தெரிவிக்க வேண்டுமென அவசரமாக வந்தான்! நான் அவனை உள்ளே அனுப்புவதற்குத் தயங்கிக் கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரரின் திருப்புதல்வியாரே அந்தப் பக்கமாக வந்து விட்டார்கள். சந்தித்துப் பேசிக் கொண்டதும் அவசரமாக இடையாற்று மங்கலம் போவதாகத் தங்களிடம் கூறிவிடுமாறு என்னிடம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள் இடையாற்று மங்கலத்து நங்கை" என்று தெரிவித்துவிட்டுக் காவலன் போய்விட்டான்.

"மகாராணியாரைச் சந்தித்து விடைபெற்றுக் கொள்ளாமல் போவதற்கு அவ்வளவு அவசரமான காரியம் என்ன தான் வந்து விட்டதோ? இருந்தாலும் இடையாற்று மங்கலத்து நங்கைக்கு இவ்வளவு அலட்சியம் ஆகாது!" என்று உதட்டைக் கடித்துக் கொண்டு சொன்னாள் விலாசினி.

"பரவாயில்லை! அது அந்தப் பெண்ணின் சுபாவம். அதைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. புவன மோகினி வந்து தெரிவித்த செய்திகள் உண்மைதானா? என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கேட்டு என் மனம் ஒரேயடியாகக் கலங்கிப் போயிருக்கிறது. போர்க்களத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. இடையாற்று மங்கலத்துக்குச் சென்றுவிட்டுக் கூடிய விரைவில் அரண்மனைக்கு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்ற மகாமண்டலேசுவரரை இன்னும் காணோம்" என்று மகாராணி வானவன்மாதேவியார் கூறினார்.

"மகாராணிக்கு அந்தக் கவலை வேண்டாம். புவன மோகினி கூறியவை உண்மையா, இல்லையா என்பதை இன்று மாலைக்குள் நானும் அதங்கோட்டாசிரியர் பிரானும் விசாரித்துக் கூறிவிடுகிறோம்" என்று உறுதி தெரிவித்த பவழக்கனிவாயர் ஆசிரியரையும் அழைத்துக் கொண்டு அப்போதே வெளிக் கிளம்பினார். ஒரு நினைவிலும் மனம் பதியாமல் அவர்கள் உண்மையை விசாரித்துக் கொண்டு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் மகாராணி. விலாசினியும் புவன மோகினியும் உடனிருந்து ஆறுதல் தோன்றப் பேசிக் கொண்டிராவிட்டால் அன்றைய தினம் மகாராணிக்குத் தன் நினைவு தடுமாறிப் பித்துப் பிடித்திருக்கலாம். அந்த அளவுக்கு மனம் குழம்பியிருந்தது.

அந்தி மயங்கிய சிறிது நேரத்துக்குப் பின் பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் திரும்பி வந்தார்கள். அவர்கள் என்ன கூறப் போகிறார்களோ என்று அறியப் பதை பதைத்துக் கொண்டிருந்தது மகாராணியின் நெஞ்சம். திரும்பி வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ தென்படவில்லை. வாட்டமே மிகுந்திருந்தது.

 

"மகாராணி! காலையில் புவன மோகினி வந்து கூறியவற்றில் பொய் எதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும் மகாமண்டலேசுவரருக்கு எதிராகக் கலகம் விளைவிப்பதற்குப் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். கழற்கால் மாறனார் முதலிய கூற்றத் தலைவர்களும், தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும், இந்தக் கலகக் கூட்டத்துக்கு முதன்மையாளர்களாயிருக்கிறார்கள். தளபதியின் தங்கை ஈழ நாட்டில் இறந்தது உண்மைதானாம். அதற்கும், தளபதி போர்க் களத்துக்குப் போய்த் தலைமை தாங்கிப் போர் செய்ய முடியாமற் போனதற்கும் மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிதான் காரணமென்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள்.

"பொய்! முழுப் பொய்! நான் இவற்றை நம்பவே மாட்டேன். அவர் அப்பழுக்கற்ற நேர்மையாளர்" என்று ஆவேசமுற்றவர் போல் கூச்சலிட்டார் மகாராணி. மற்றவர்கள் அவரிடம் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்துப் போய்த் திகைத்து நின்றார்கள்.

மகாராணியே மீண்டும் பேசினார். "நான் இப்போதே இடையாற்று மங்கலத்துக்குப் புறப்பட்டுப் போகிறேன். அவரைப் பார்த்துக் கேட்கிறேன். அப்போதாவது உண்மை தெரிகிறதா, இல்லையா என்று பார்க்கிறேன்."

"எங்கும் கலகக்காரர்கள் ஆயுதங்களோடு திரிகிற இச்சமயத்தில் தாங்கள் தனியே இடையாற்று மங்கலம் புறப்படுவது கூடாது" என்று எல்லோருடைய குரல்களும் ஒன்றாக எழுந்து ஒலித்து மகாராணியைத் தடுத்தன. மகாராணி அதைக் கேட்கவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்ததும், புவன மோகினியை உடன் அழைத்துக் கொண்டு சிவிகையில் இடையாற்று மங்கலம் புறப்படுவதற்கு உறுதி செய்து கொண்டு விட்டார் அவர். அந்தப் பிடிவாதத்தை எப்படித் தடுப்பதென்று தெரியாமல் ஆசிரியரும், பவழக்கனிவாயரும், விலாசினியும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்களையெல்லாம் இதே நிலையில் விட்டு விட்டு மறுபடியும் போர்க்களத்துக்குச் சென்றால், அங்கே குமாரபாண்டியனின் நிலையைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விடலாம்.

நள்ளிரவில் படைவீரர்களின் பாசறைகள் இருந்த பகுதியில் கலவரமும் குழப்பமும் எழுந்ததாகச் சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? "படை வீரர்களுக்குள் ஏதாவதொரு சாதாரணமான தகராறு உண்டாயிருக்கலாம். அதை நாமிருவரும் போய் உடனே தீர்த்து விடலாம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து சென்ற குமார பாண்டியனும், சக்கசேனாபதியும் அங்கே போய்ப் பார்த்தவுடன் திடுக்கிட்டார்கள்.

படை வீரர்களல்லாத வெளி மனிதர்கள் பாசறைப் பகுதிகளில் வந்து வீரர்களைக் கூட்டம் கூட்டி ஏதேதோ கூறி மனத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த இடத்தை அணுகியவுடன் ஒரே எதிர்ப்புக் குரல்களாக எழும்பின.

 

"மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியமாட்டேன்" என்றது ஒரு குரல்.

"தளபதி வல்லாளதேவர் வராவிட்டால் நாளையிலிருந்து களத்தில் இறங்கிப் போர் செய்ய மாட்டோம்!" என்றது மற்றொரு குரல். தொடர்ந்து அதே இரண்டு எதிர்ப்பு வாக்கிய ஒலிகள் நூற்றுக்கணக்கில் பெருகி ஒலித்தன. எந்தக் காரியங்களுக்காகப் பயந்து மகாமண்டலேசுவரர் தன்னிடம் வாக்குறுதிகள் வாங்கினாரோ அவை பயனில்லாமற் போய்விட்டதைக் குமாரபாண்டியன் அந்த நள்ளிரவில் அங்கு கண்டான்.

-----------


3.21. பொருள்மொழிக் காஞ்சி

 

சேந்தன் மகாமண்டலேசுவரரின் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தான்; கதறினான். அழுது அலறினான். தொழுது புலம்பினான். "சுவாமி! நான் ஒரு வகையிலும் தங்கள் குமாரிக்குத் தகுதியற்றவன். அழகும், இளமையும் நிறைந்த தங்கள் பெண்ணின் இன்பக் கனவுகள் என்னால் சிதையக் கூடாது" என்றெல்லாம் அவன் கூறிய வார்த்தைகளை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

 

"அதிகம் பேசாதே! நீ எனக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய். நான் கொடுப்பதை வாங்கிக் கொண்டு தான் ஆகவேண்டும். என் பெண்ணின் கைகளை ஒரு நாட்டின் இளவரசனிடம் பிடித்துக் கொடுப்பதை விட உனக்குக் கொடுப்பதில் ஆயிரம் மடங்கு இன்பமடைகிறேன் நான். ஒரு காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று நான் தீர்மானித்துக் கொண்ட பின் மாற்றவே மாட்டேன்! எனக்காக நீ இன்று வரை அடிமை போல் உழைத்திருக்கிறாய். பொருளை வாரிக் கொடுத்து மட்டும் ஈடு செய்ய முடியாத நன்றி இது" என்றார் மகாமண்டலேசுவரர்.

சேந்தன் அதற்கு மேல் அவருடைய கட்டளையை மறுத்துப் பேசும் சக்தி இழந்தான். சிவன் கோவில் குறட்டில் ஒரு தூண்டில் கல்லோடு கல்லாகச் சமைந்து போய் உட்கார்ந்து விட்டான். தாங்கிக் கொள்ள முடியாத சோதனையைத் தாங்கிக் கொள்ள வேண்டுமென்றே அந்த இரவு அவன் வாழ்வில் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்த்ததா? தங்கத்துக்கு இரும்பால் பூண் பிடிக்கிறது போல் செல்வச் செருக்குடன் கூடிய இறுமாப்பு நிறைந்த குழல்வாய்மொழிக்குத் தான் தகுதியற்றவன் என்பது தோன்றித் தோன்றி நினைவு நெருப்பாக அவன் உள்ளத்தை வாட்டியது. 'செழிப்பும், கொழிப்புமாக உயர்ந்து நிற்கும் தங்கச் சிலை போன்ற குழல்வாய்மொழி எங்கே? நேற்று வரை அவளை இடையாற்று மங்கலத்து இளவரசியாகக் கருதி ஊழியனைப் போல் பணிபுரிந்த நான் எங்கே? அவளோ நானோ இப்படி ஒரு நினைவைக் கனவில் கூட நினைத்திருக்க முடியாதே! மகாமண்டலேசுவரர் ஏன் இப்படிப் பிடிவாதமாகச் சோதனை செய்கிறார்' என்று எண்ணியவாறே நெடுநேரம் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். இரவு நீண்டு வளர்ந்தது. சேந்தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு இருளில் எதிரே பார்த்தான். மகாமண்டலேசுவரர் உட்கார்ந்த இடத்திலேயே தூணில் சாய்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. மகுடத்தை எடுத்த பின் அன்று அந்த மனிதருடைய முகத்தில் அவ்வளவு அமைதி எவ்வாறு வந்து பொருந்தியதென்று வியந்தான் சேந்தன். அந்த ஒரே நாளில், ஒரு சில நாழிகைகளில் அவர் கிரங்கி இளைத்துத் தளர்ந்து விட்டது போல் அவருடைய தோற்றம் காட்சியளித்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த சிவன் கோவில் விளக்கின் மங்கலான ஒளியில் தூணில் சாய்ந்திருக்கும் அந்த அறிவு மலையை இமையாமல் பார்த்தான் அவருடைய அந்தரங்க ஊழியன். அவர் உணவே உட்கொள்ளவில்லை என்ற நினைவு அவனுக்கு ஏற்பட்டதும் பரபரப்போடு எழுந்து அருகிற் சென்று, "சுவாமி!" என்று மெல்லக் கூப்பிட்டான். அவர் கண் விழித்து, "என்ன வேண்டும், சேந்தா?" என்று புன்னகையோடு கேட்டார்.

"தாங்கள் சாப்பிட வேண்டும்."

"சேந்தா! நம்முடைய வள்ளுவர் பெருமான் இந்தச் சமயத்தில் நான் நினைத்துப் பார்ப்பதற்கென்றே ஓர் அழகான குறளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்."

"என்ன குறள் சுவாமி, அது?"

"'மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து'

என்பது தான் அப்பா அந்தக் குறள். இனிமேல் நான் சாப்பிடுகிற சாப்பாடு அடுத்த பிறவியில் இருக்கும். என்னைத் தொந்தரவு செய்யாதே. நீ போய்ப் பேசாமல் தூங்கு."

சேந்தன் இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் அழுதுவிட்டான்.

"அழாதே! நீ ஏன் அழுகிறாய்? ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு நடுவே தன் தாய்ப் பசுவை இனம் கண்டு அடையும் கன்றுக் குட்டி போல் வினைப் பயன் யாரையும் தவறவிடாது. மேலே வீசி எறியப்பட்ட பொருள் கீழே வீழ்ந்துதான் ஆக வேண்டும். இதுவரையில் நல்வினைகள் என்னை மேலே வீசி எறிந்திருந்தன. நான் உயர்ந்த நிலையில் இருந்தேன். இப்போது அவை கைவிட்டு விட்டன. அதனால் நான் வீழ்ந்து விட்டேன்."

"சுவாமி! இப்படியெல்லாம் பேசாதீர்கள். நீங்கள் பேசப் பேச எனக்கு அழுகை குமுறிக் கொண்டு வருகிறது."

"தான் அறியுமுன் உலகத்துக்குத் தன் அனுபவ உண்மைகளில் முடிந்தவற்றை மொழிந்து விட்டுப் போவது நம் தமிழ்நாட்டு மரபு அப்பா! அதைப் 'பொருள்மொழிக் காஞ்சி' என்பார்கள். இதுவரையில் நான் கூறியவற்றையெல்லாம் அப்படிப்பட்ட வகையில் ஏற்றுக் கொள். போ! நீ போய்த் தூங்கு! என்னைக் கொஞ்சம் தனிமையில் மூழ்க விடு."

சேந்தன் எழுந்து போனான். தூக்கம் வரக்கூடிய நிலையா அது? அத்தனை ஆண்டுகளாக அந்த மேதையின் நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை மனத்தில் அசை போட்டுக் கொண்டே தூண்டிலில் விழுந்து கிடந்தான் அவன். கண்ணீர், கோவில் குறட்டை ஈரமாக்கியது.

விடிந்தது. முதல் நாள் மாலை செய்தது போலவே பறளியாற்றில் போய் நெடுநேரம் நீராடிவிட்டு ஈர உடையோடு வந்தார் மகாமண்டலேசுவரர். பிறகு சிவன் கோவிலுள் போய்த் தியானத்தில் அமர்ந்தார். சேந்தனும் நீராடிவிட்டு அவருக்குப் பூக்கொண்டு வந்து கொடுத்தான். அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சேந்தனை ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். கொண்டு வந்து கொடுத்தான். ஏதோ எழுதத் தொடங்கினார்.

கதிரவன் மேற்கே சாய்கிற நேரத்துக்கு குழல்வாய்மொழியோடு அம்பலவன் வேளான் அங்கே வந்து சேர்ந்தான். வருகிற போது இருவருமே பெரிய அளவில் பதற்றமும் பரபரப்பும் அடைந்திருந்தனர்.

"சுவாமி! தளபதியும் கழற்கால்மாறனாரும், ஒரு பெரிய கலகக் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை நோக்கி வெறியோடு தாக்குவதற்கு ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் தங்கள் புதல்வியாரும் அவர்களிடம் அகப்படாமல் இங்கு வந்து சேர்ந்ததே தெய்வத்துணையால்தான்" என்று அம்பலவன் வேளான் கூறியதைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அதிர்ச்சியடைந்து விடவில்லை.

"நான் எதிர்பார்த்ததுதான். வரட்டும், விரைவாக வரட்டும்" என்று சர்வசாதாரணமாகப் புன்முறுவலோடு பதில் சொன்னார் அவர். "அப்பா மகாராணிக்குக் கூட இதெல்லாம் தெரிந்து விட்டது. புவன மோகினி என்ற பணிப் பெண் போய்ப் பார்த்துக் கொண்டு வந்து கூறினாள்" என்று குழல்வாய்மொழி சொன்னபோதும் வியப்படையவில்லை அவர்.

"பெண்ணே! உலகம் முழுவதும் தெரியட்டும். தெரிய வேண்டியதுதானே? மறைப்பதற்கு இனி என்ன இருக்கிறது? நான் இப்போது படுகிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! அதைப் போக்குவது உன் கையில் இருக்கிறது!" என்று தம் பெண்ணிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த சேந்தனையும், அம்பலவன் வேளானையும் சிறிது தொலைவு விலகிப் போய் இருக்குமாறு குறிப்புக் காட்டினார்; அவர்கள் சென்றார்கள்.

 

"நான் என்ன அப்பா செய்ய வேண்டும்!" என்று கேட்டாள் குழல்வாய்மொழி.

"எனக்காக நீ மகத்தான தியாகம் செய்ய வேண்டும் மகளே!"

குழல்வாய்மொழி கண்களில் நீர் அரும்ப மருண்டு தயங்கி நின்றாள். மகுடமிழந்து, கம்பீரமற்றுச் சாதாரண மனிதரைப் போல் சிவன் கோவிலில் கிடக்கும் தந்தையைக் கண்டு பிழையப் பிழியக் கண்ணீர்ச் சிந்தி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

"என்னம்மா அப்படி என்னைப் பார்க்கிறாய்? இந்த இரண்டு மூன்று நாட்களில் நான் இவ்வளவு இளைத்துப் போய்விட்டேனே என்று தானே பார்க்கிறாய்? போகட்டும்; என் இளைப்பைக் கண்டு நீ வருந்த வேண்டாம். நான் கேட்டதற்கு மறுமொழி சொல்!"

"நான் எதைத் தியாகம் செய்ய வேண்டும், அப்பா?" குழல்வாய்மொழியின் குரலில் துயரம் கரகரப்படைந்து ஒலி மங்கியது.

"நான் ஒரு மனிதனுக்குத் தவிர்க்க முடியாதபடி கடன்பட்டிருக்கின்றேன், மகளே! அந்தக் கடனை உன் தியாகத்தால் தீர்க்க வேண்டும். செல்வச் செருக்கோடு வளர்ந்து விட்ட உனக்கு மற்றவர்களை அதிகாரம் செய்யவும், ஆளவும் ஆட்படுத்தவும் தான் தெரியும். ஆனால் இன்று தொடங்கி நீ இன்னொருவருக்கு ஆட்பட்டு அடங்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னுடைய அறிவின் அகந்தை அழிந்து விட்டது. அது போலவே உன்னுடைய அன்பின் அகந்தையும் அழிய வேண்டியதுதான். செல்வம், செருக்கு, பிடிவாதம், முரண்டு இவற்றையெல்லாம் மறந்துவிட்டால்தான் நான் கூறுகிற தியாகத்தை நீ செய்ய முடியும் அம்மா?"

"உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன் அப்பா!"

"இப்போது சொன்ன வார்த்தை மெய்தானே மகளே? எனக்காக எதையும் செய்வாய் அல்லவா?"

தந்தையின் இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் குழல்வாய்மொழி விசும்பலோடு அழத் தொடங்கிவிட்டாள். "நான் எப்போது அப்பா உங்கள் சொல்லை மீறியிருக்கிறேன்? என்னைத் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே?" என்று அவள் அழுகைக்கிடையே கேட்ட போது அவர் சிரித்துக் கோண்டே சொன்னார்:

"அப்படியானால் கேள்! இந்தக் கணமே குமாரபாண்டியனைப் பற்றிய உன் கனவுகளை அழித்து விடு. தன் வாழ்நாளில் எனக்காகவே தன்னை அடிமையாக்கிக் கொண்டு உழைத்த இந்த நன்றியுள்ள மனிதன் சேந்தனை மணந்து கொண்டு அவனோடு செல்; இது என் கட்டளை?"

"அப்பா...!" என்று அலறினாள் குழல்வாய்மொழி. அதற்கு மேல் வார்த்தைகளே எழவில்லை அவளுக்கு. அப்படியே மின்னற்கொடி போல் சுருண்டு அவர் காலடியில் விழுந்தாள் அவள். 'கோ'வென்று கதறியழுத மகளின் தவிப்பு அவர் மனத்தை மாற்றவில்லை. "அப்பா என்னைக் கொன்று விடுங்கள். என்னால் இந்தத் தியாகத்தைச் செய்ய முடியாது" என்று அவள் கதறிய போது அவர் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துப் பேசுபவர் போல் அவளைத் தூக்கி நிறுத்தி முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசினார்.

"உன்னை ஏன் கொல்ல வேண்டும் அம்மா? என்னைக் கொன்று கொள்கிறேன் நான். சொன்ன வார்த்தையைக் கேட்காத ஒரு முரட்டுப் பெண்ணைப் பெற்றதற்காக என்னை நானே கொன்று கொள்கிறேன். தியாகம் செய்து புகழ் தேடிக் கொள்ளும் உயர்ந்த பண்புள்ள மகளை நான் பெறவில்லை போலிருக்கிறது. கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும்? நீ போ. உன் விருப்பம் போல வாழு!" என்று சொல்லிவிட்டு மேலாடையால் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடை தள்ளாடித் துவண்டது.

"நில்லுங்கள்."

நடந்து சென்றவர் நின்று திரும்பிப் பார்த்தார். குழல்வாய்மொழிதான் கூப்பிட்டிருந்தாள். அருகில் வந்து நின்று தந்தையின் முகத்தையே பார்த்தாள் அவள். விநாடிகள் உணர்ச்சிகளில் கரைந்து கொண்டிருந்தன. அவர் முகத்தையும் கண்களையும் பார்க்கப் பார்க்க அவள் மனத்தில் கல்லாக இருந்த ஏதோ ஓர் உணர்வின் இறுக்கம் இளகி நெகிழ்ந்தது. அடுத்த கணம் அழுக்குத் துடைக்கப்பட்ட கண்ணாடிபோல் அவள் முகபாவம் புனிதமானதொரு மாறுதல் அடைந்தது. கண்களில் உறுதியான ஒளி வந்து குடி கொண்டது.

"அப்பா! நான் சேந்தனை மணந்து கொள்கிறேன்" என்று திடமான குரலில் சொன்னாள் குழல்வாய்மொழி. அவர் ஆச்சரியத்தோடு முகமலர்ந்து அவளைப் பார்த்தார். அவளைச் சிறுகுழந்தை போல் கருதி அருகில் அழைத்துத் தழுவி உச்சிமோந்தார். "சேந்தா! இங்கே வா!" என்று உற்சாகத்தோடு அழைத்தார் அவர். சேந்தன் ஓடிவந்து வணங்கினான்.

"இந்தா! உன் மனைவியை அழைத்துக் கொண்டு போ! இருவரும் பறளியாற்றில் நீராடி வாருங்கள்..." பல நாட்கள் பழகிய காதலனை அணுகுவது போல் குழல்வாய்மொழி அவனை அணுகி வந்தாள். சேந்தன் கூசிப் பயந்து ஒதுங்க முயன்றான். அவள் விடவில்லை.

"ஒதுங்கினால் மட்டும் உறவு போகாது; வாருங்கள்!" குழல்வாய்மொழி துணிவாக அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போனாள். அந்தக் கை தன் மேல் பட்ட போது மலர்க்கொத்து ஒன்று தீண்டியது போன்ற உணர்வை அடைந்தான் சேந்தன். அவன் உடல் சிலிர்த்தது. வயிற்றுப் பசியுள்ள பிச்சைக்காரனுக்குப் பட்டுப் பீதாம்பரம் கிடைத்தது போல் அவன் எண்ணத்தில் தாழ்வு மனப்பான்மையும் கூச்சமும் உண்டாயின. குழல்வாய்மொழி கலகலப்பாகப் பேசிப் பழக முயன்றும் சேந்தன் கூசிக் கொண்டேயிருந்தான். அவளால் அவ்வளவு சுலபமாகத் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்ததென்று அவனுக்குப் புரியவே இல்லை.

 

இருவரும் நீராடி விட்டுச் சிவன் கோயில் அடைவதற்குள் இடையாற்று மங்கலம் தீவைச் சுற்றி ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று. கூட்டம் கூட்டமாக ஆயுதம் தாங்கிய முரட்டு மனிதர்கள் ஓடிவந்தார்கள். மரங்களெல்லாம் வெட்டப்படும் ஓசை காதைப் பிளந்தது. ஒரே கலகம், ஓலம் தான்; கலகக் கும்பல் தீவை நெருங்கிவிட்டது.

அந்த நேரத்தில் குழல்வாய்மொழியையும், சேந்தனையும் சிவன் கோவிலுக்குள் அழைத்துப் போய் மலர் தூவி ஆசி கூறினார் மகாமண்டலேசுவரர். பின்பு இருவரையும் வெளியே அழைத்து வந்தார். "இங்கிருந்து போய் எங்கேயாவது நன்றாக வாழுங்கள். அது போதும். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். கலகக் கூட்டம் வந்துவிட்டது. வேறு வழியாகத் தப்புங்கள்" என்று அவர்களை அவசரப்படுத்தினார் மகாமண்டலேசுவரர்.

"அப்பா! நீங்களும் எங்களோடு வந்து விடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்" என்றாள் குழல்வாய்மொழி.

"இல்லை! நான் வரப்போவதில்லை. நீங்கள் புறப்படுங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய் ஓர் ஓலையை எடுத்து வந்து சேந்தனிடம் கொடுத்தார். "சேந்தா, எப்போதாவது முடிந்தால் இந்த ஓலையை மகாராணியிடம் கொடுத்துவிடு" என்று சொன்னவர் இருவரையும் ஒருமுறை நன்றாகப் பார்த்து விட்டு விருட்டென்று சிவன் கோவிலுள் நுழைந்து கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். வெறித்தனமாக கூச்சல்களோடு ஆட்கள் ஓடிவரும் ஓசை மிக அருகில் கேட்டது.

சேந்தன் குழல்வாய்மொழியை இழுத்துக் கொண்டு ஓடினான். புதர்களிலும் மரக்கூட்டங்களின் அடர்த்தியிலும் பதுங்கிப் பதுங்கி ஆற்றைக் கடந்து இரவோடு இரவாக முன்சிறைக்குப் போகிற வழியில் நடந்தார்கள் அவர்கள்.

மகாமண்டலேசுவரர் சிவன் கோயில் கதவைத் திறந்து கொண்டு வந்த போது இடையாற்று மங்கலம் மாளிகை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அழகான நந்தவனமும், வசந்த மண்டபமும் சீரழிக்கப்பட்டிருந்தன. உருக்குலைந்து சீரழிந்து எரிந்து கொண்டிருக்கும் அந்தத் தீவைப் பார்த்துக் கொண்டே கோவில் குறட்டில் நின்ற மகாமண்டலேசுவரர் கால் தளர்ந்து போனதன் காரணமாக மெதுவாக உட்கார்ந்தார். தாகம் நெஞ்சை வறளச் செய்தது. தொண்டைக் குழியை ஏதோ அடைத்தது. கண்கள் விழி தெரியும்படி சொருகின. வாய் கோணியது. மெல்லச் சாய்ந்து படுத்துக் கொண்டார். பின்பு எழுந்திருக்கவேயில்லை. மறுநாள் காலையில் தளபதி வல்லாளதேவனும் கழற்கால் மாறனாரும் தற்செயலாக அங்கே வந்து அவருடைய சடலத்தைக் கண்டனர்.

 

"மனிதர் நம்மை முந்திக் கொண்டு விட்டார்!" என்று கூறிக் கொடுமையாகச் சிரித்தவாறே அந்த உடலைப் புரட்டித் தள்ளினான் தளபதி. பழி வாங்கி விட்ட பெருமிதம் அவனுக்கு!

அருணோதயத்தின் அழகை அனுபவித்துக் கொண்டே முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கோதை யாரோ வருகிற காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தாள்.

அவள் எதிரே நாராயணன் சேந்தனும் குழல்வாய்மொழியும் வந்து நின்று கொண்டிருந்தனர். கோதைக்கு மைத்துனனைக் கண்ட மகிழ்ச்சி பிடிபடவில்லை. "வாருங்கள், மைத்துனரே! ஓய்வாக வந்திருக்கிறீர்களே..." என்று ஆர்வத்தோடு வரவேற்றாள்.

"ஓய்வுதான்! நிரந்தரமான ஓய்வு - நெடுங்காலத்துக்கு ஓய்வு" என்று சிரித்துக் கொண்டே கூறினான் சேந்தன். அதற்குள் அண்டராதித்தனும் அங்கு வந்துவிட்டான். சேந்தனும் குழல்வாய்மொழியும் அண்டராதித்தனையும் கோதையையும் வணங்கி ஆசி பெற்று உள்ளே சென்றார்கள்.

---------

 

3.22. கலகக் கனல் மூண்டது

 

போர்க்களத்தில் அந்த இரவில் மூண்ட கலவரங்களை அடக்கி விட முயன்றனர் குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும். கலகம் அடங்கவில்லை. மேலும் மேலும் பெருகி வளர்ந்தது. கலகத்துக்குக் காரணமான செய்திகளைப் போர்க்களத்துப் பாசறைகளில் பரப்புவதற்கு வந்த வெளியாட்கள் எல்லோரையும் இருளில் சரியாகப் பார்க்க முடியவில்லையாயினும் அதில் முக்கியமான ஒருவனைக் குமாரபாண்டியன் பார்த்துவிட்டான். அவ்வாறு பார்க்கப்பட்டவன் வேறு யாருமில்லை, ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் தான்! ஆபத்துக் காலங்களில் நன்றியுணர்ச்சியோடு அரச குடும்பத்துக்கு உதவி புரிந்து பாதுகாக்க வேண்டிய அவன் இப்படிக் கலகக்காரனாக மாறியிருப்பதைக் கண்டு குமாரபாண்டியன் உள்ளம் கொதித்தான். கோட்டாற்றிலிருந்து வந்திருந்த தென்பாண்டிப் படைவீரர்களில் பெரும்பாலோர் பாசறைகளை விட்டு வெளியேறிக் கலகக்காரர்களோடு சேர்ந்து கொண்டு விட்டனர். குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தத் துரோகம் நடந்தது. சாம, தான, பேத, தண்ட முறைகளில் எதனாலும் அவர்களால் அதைத் தடுக்க இயலவில்லை.

"இளவரசே! காரியம் கை மீறிப் போய்விட்டது. பார்த்துக் கொண்டே சும்மாயிருப்பதில் பயனில்லை. உடனே தளபதியைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லி அரண்மனைக்கோ, மகாமண்டலேசுவரருக்கோ தூதனுப்புங்கள். தளபதி வந்துவிட்டால் இந்தக் கலகம் அடங்கிப் போகும்" என்றார் சக்கசேனாபதி.

"சக்கசேனாபதி! தளபதியைப் போர்க்களத்துக்கு வரவழைத்து விடுவது அவ்வளவு எளிய காரியமல்ல. அதில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன்."

"நீங்கள் சொல்லாவிட்டாலும் நானாகச் சிலவற்றைப் புரிந்து கொண்டேன், இளவரசே! மகாமண்டலேசுவரருக்கும் தளபதிக்கும் உள்ளூரப் பெரிய பகைமை ஏதோ இருக்க வேண்டும். தளபதி இந்தப் போரில் கலந்து கொள்ள முடியாமற் போனதற்குக் கூட மகாமண்டலேசுவரர் காரணமாயிருக்கலாம். அதனால் தான் இந்தக் கலகமே மூண்டிருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது."

"சக்கசேனாபதி! உங்களுக்குத் தெரிந்தது சிறு பகுதிதான். ஆனால் அவை சரியான அனுமானங்களே! அதற்கு மேற்பட்டவற்றைத் தெரிவிக்க ஆவல் இருந்தும் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்ட காரணத்தால் இயலாத நிலையில் இருக்கிறேன்."

"வேண்டாம்! அவற்றை தெரிந்து கொள்ளும் அவசியம் எனக்கு இப்போது இல்லை. ஆனால் இந்தக் கலகத்தைத் தடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். தளபதி எங்கேயிருந்தாலும் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு வரவழைக்கச் செய்யுங்கள்."

"நான் மகாமண்டலேசுவரருக்கும் என் அன்னைக்கும் இங்குள்ள நிலைமையை விவரித்து உடனே திருமுகங்கள் எழுதுகிறேன்."

"சொல்லிக் கொண்டே நிற்காதீர்கள், இளவரசே! உடனே உங்கள் பாசறையில் போய் அமர்ந்து எழுதத் தொடங்குங்கள். நான் இங்கே சிறிது நேரம் கவனித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி குமாரபாண்டியனைப் பாசறைக்கு அனுப்பி விட்டுத் தாம் மட்டும் தனியே இருளில் நடந்தார் சக்கசேனாபதி. கலகத்தின் காரணம் பற்றிக் குமாரபாண்டியர் தம்மிடம் கூறாமல் மறைக்கும் மர்மச் செய்திகள் எவையோ அவற்றைத் தெரிந்து கொண்டு விடவேண்டுமென்று கிளம்பி விட எண்ணினார். தமது தோற்றத்தைத் தென்பாண்டி நாட்டின் சாதாரணமான ஒரு படைவீரனின் தோற்றம் போல எளிமையாக்கிக் கொண்டு பாசறைகளைப் புறக்கணித்துக் கலகக்காரர்களோடு ஓடிப்போன பாண்டியப் படையைப் பின்பற்றி அவரும் சென்றார். தாமும் அவர்களில் ஒருவனைப் போலக் கலந்து கொண்டு அவர்களோடு பேச்சுக் கொடுத்துப் பார்த்ததிலேயே எல்லாக் காரணங்களும் அவருக்கு ஒருவாறு விளங்கிவிட்டன. குமாரபாண்டியர் சொல்லத் தயக்கியவற்றையும் அவர் தெரிந்து கொண்டார். எல்லாம் தெரிந்து கொண்டு திரும்பி வந்த அவர் நேரே குமாரபாண்டியனின் பாசறைக்குச் சென்றார். பாசறையில் தீப ஒளி எரிந்து கொண்டிருந்தது. மகாமண்டலேசுவரருக்கும் தன் தாய்க்கும் எழுத வேண்டிய திருமுக ஓலைகளை எழுதி விட்டுக் காத்திருந்தான் குமாரபாண்டியன்.

"வாருங்கள் சக்கசேனாபதி! நான் வந்து எழுத வேண்டிய அவசர ஓலைகளை எழுதிவிட்டு இவ்வளவு நேரமாக நீங்கள் வருவீர்களென்று விழித்துக் கொண்டு காத்திருக்கிறேன். அதற்குள் நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?" என்று தன்னை நோக்கிக் கேட்ட குமாரபாண்டியனின் முகத்தைச் சிரித்தவாறே கூர்ந்து பார்த்தார் சக்கசேனாபதி.

"சக்கசேனாபதி! இந்த நெருக்கடியான நிலைமையில் என் முகத்தைப் பார்த்தால் சிரிப்புக்கூட வருகிறதா உங்களுக்கு?"

"உங்கள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கவில்லை இளவரசே! சில முக்கியமான செய்திகளை இவ்வளவு நேர்ந்த பின்பும் என்னிடம் கூடச் சொல்லாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்."

"அப்படி எவற்றை நான் உங்களிடம் மறைத்தேன்?"

"சொல்லி விடட்டுமா?"

"நீங்கள் அவற்றைத் தேடித் தெரிந்து கொண்டிருந்தால் சொல்லித் தானே ஆக வேண்டும்?" என்று சோர்ந்த குரலில் சொன்னான் குமாரபாண்டியன்.

"மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சியில்தான் பகவதி ஈழ நாட்டில் இறந்து போனாளென்று கலகக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் அவருடைய சூழ்ச்சியால் படைகள் போருக்குப் புறப்படுகிற சமயத்தில் தளபதி மட்டும் இரகசியமாகச் சிறை வைக்கப்பட்டானாம். அதே போல் ஆபத்துதவிகள் தலைவனையும் சூழ்ச்சி செய்து சிறைப்படுத்த முயன்றாராமே அவர்? நீங்கள் கப்பலில் வந்து விழிஞத்தில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் உங்களைத் தனியே அழைத்துக் கொண்டு போய், 'பகவதியின் மரணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது' என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாராமே? தளபதியை இரகசியமாகச் சிறைப்படுத்தியிருக்கிற அந்தரங்கத்தையும் சொல்லி அதையும் யாரிடத்திலும் கூற வேண்டாமென்று உங்களிடம் கேட்டுக் கொண்டாராம். ஆனால், அதே சமயத்தில் இருளில் அதே இடத்தில் நின்று கொண்டு, காவலைத் தாண்டி தப்பி ஓடிவந்த தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும், நீங்களும் மகாமண்டலேசுவரரும் பேசியவற்றை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு கல்லைக் கூட மகாமண்டலேசுவரர் மேல் தூக்கி எறிந்தார்களாமே?" இவ்வாறு கூறிக் கொண்டே வந்த சக்கசேனாபதியை இடைமறித்து, "இவற்றையெல்லாம் இப்போது உங்களுக்கு யார் கூறினார்கள்?" என்று குமாரபாண்டியன் கேட்டான்.

"யாரும் என்னிடம் வந்து கூறவில்லை. கலகக்காரர்களுக்கு நடுவே போய்க் கலந்து கொண்டு அவற்றைத் தெரிந்து கொண்டேன்!" என்றார் சக்கசேனாபதி.

 

"தெரிந்து கொண்டவை இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?"

"நிறைய உண்டு! மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளையெல்லாம் தங்களிடம் கூறி தங்களை அழைத்து வருவதற்காகவே தன் தங்கை பகவதியை இலங்கைக்கு மாறு வேடத்தில் அனுப்பினானாம் தளபதி. அவள் தங்களோடு திரும்பி வரும் காட்சியைக் காணவே காவலிலிருந்து தப்பி விழிஞத்துக்கு ஓடி வந்து பார்த்தானாம். அவன் தங்கை இறந்த செய்தியைக் கேட்டவுடன் அவனுக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்பட்டதாம். போதாதக்குறைக்குத் தாங்களும் மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சிக்கு இணங்கி அவருக்கு வாக்குறுதிகள் கொடுத்தது அவனுக்குச் சினம் மூட்டியதாம். அவனும் ஆபத்துதவிகள் தலைவனும் போய்க் கழற்கால்மாறனாரைப் பார்த்தார்களாம். எல்லோருமாக ஒன்று சேர்ந்து முயன்று ஒரு பெரிய கலகக் கூட்டத்தைத் திரட்டினார்களாம். அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தளபதியும் கழற்கால் மாறனாரும் தலைமை தாங்கிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை வளைத்துத் தாக்குவதற்குப் போயிருக்கிறார்களாம். மற்றொரு பகுதியைத்தான் ஆபத்துதவிகள் தலைவன் இங்கே கூட்டிக் கொண்டு வந்து படை வீரர்களை மனம் மாற்றுவதற்கு முயன்றதை நாம் பார்த்தோமே?"

"சக்கசேனாபதி! தளபதியின் தங்கை இறந்து போனதற்கு மகாமண்டலேசுவரர் எந்த விதத்திலும் காரணமில்லை என்பது உங்களுக்கும் தெரியும்!"

"இப்போதுதான் உறுதியாகத் தெரியும். ஏனென்றால் நீங்கள் ஈழ நாட்டிலிருந்து கப்பலில் புறப்படுகிறவரை காட்டில் இறந்து போன பெண் பகவதியா, இல்லையா என்ற சந்தேகத்திலிந்து மீளவில்லையே. அதனால் எனக்கும் அது உறுதியாகத் தெரியாமற் போய்விட்டது, இளவரசே!"

"சக்கசேனாபதி! தமனன் தோட்டத்துத் துறையிலிருந்து கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் விசாரித்து இறந்த பெண் பகவதிதான் என்று நான் உறுதியாகத் தெரிந்து கொண்டு விட்டேன். அதனால் என் கடற்பயணம் முழுவதும் சோகத்திலேயே கழிந்தது. விழிஞத்தில் வந்து இறங்கியதும் அந்தத் துயர உண்மையை எல்லோரிடமும் சொல்லிக் கதறிவிட வேண்டுமென்றிருந்தேன். மகாமண்டலேசுவரர் வாய்ப்பூட்டுப் போட்டு விட்டார். அதன் காரணமாகத்தான் நீங்களாகத் தெரிந்து கொள்கிற வரையில் உங்களிடம் கூடச் சொல்ல முடியாமல் போயிற்று. இவ்வளவு பெரிய கலகங்களெல்லாம் அதன் மூலம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை!"

"நாம் எதிர்பார்க்கிறபடியே எல்லாம் நடந்தால் விதி என்று ஒன்று இல்லாமலே போய்விடும் இளவரசே!"

 

"பாசறையிலுள்ள படை வீரர்களை மனம் மாற்றிக் கலைத்துக் கொண்டு போகிற அளவுக்குத் தளபதி வல்லாளதேவன் கெட்டவனாக மாறுவானென்று நான் நினைக்கவே இல்லை!"

"எவ்வளவு நல்ல மனிதனையும் சந்தர்ப்பம் நன்றி கெட்டவனாக மாற்றலாம். அந்த ஒரு மனிதனுக்காக இத்தனை ஆயிரம் படை வீரர்களும் மனம் மாறுகிறார்களே! அதற்கென்ன காரணம் சொல்லுகிறீர்கள்?"

"விட்டுத் தள்ளுங்கள்! உங்களுடைய ஈழத்துப் படைகளும், கரவந்தபுரத்து வீரர்களும், சேரப் படைகளும் இருக்கின்றன. தென்பாண்டிப் படைகளில் சில பத்தி வீரர்கள் போரைப் புறக்கணித்து விட்டு ஓடுவதால் நமக்கு ஒன்றும் குறைந்து விடாது!"

"இப்படி அலட்சியமாகப் பேசுவதுதான் தவறு! ஆயிரமிருந்தாலும் சொந்தப் படைகளைப் பிரிந்து போகவிடுவது கூடாது. நீங்கள் எந்த வகையில் முயற்சி செய்வீர்களோ எனக்குத் தெரியாது. தளபதியையும் ஆபத்துதவிகள் தலைவனையும், அவர்களோடு சேர்ந்திருக்கும் கழற்கால் மாறனார் முதலியவர்களையும் நம்முடன் தழுவிக் கொள்ள வேண்டும். நம்முடைய இந்த உட்பகையை எதிர்த்தரப்பினர் தெரிந்து கொள்ள நேர்ந்தால் பின் இரண்டே நாட் போரில் அவர்கள் நம்மை வென்று விட முடியும்?"

"நீங்கள் சொல்வதெல்லாம் நியாயந்தான்! ஆனால் அவர்களைச் சமாதானப்படுத்தித் தழுவிக் கொள்வது எளிதில் முடிகிற காரியமல்லவே?"

"இளவரசே! நீங்களே நேரில் போனால் இரண்டு நல்ல காரியங்கள் முடியும். தளபதி வெறிபிடித்துப் போய் இடையாற்று மங்கலத்தைத் தாக்கச் சென்றிருக்கிறானாம். அதனால் மகாமண்டலேசுவரரும் நீங்களும் சேர்ந்தே தளபதியைச் சந்தித்துச் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்து வந்து விடலாம். நீங்கள், உங்களுடைய அன்னையார், மகாமண்டலேசுவரர் மூவருமாகச் சேர்ந்து சமாதானப்படுத்துகிற போது தளபதி ஒப்புக் கொள்வான்."

"நான் போய் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஒருவராகவே இரண்டு நாளைக்குப் போரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் போய் வர இரண்டு நாட்களாகலாம்."

"ஒருவாறு இரண்டு நாட்கள் சமாளித்துக் கொள்ள முடியும். நம் படைகளின் கை தளர்ந்து பின் வாங்க நேர்ந்தாலும் மூன்றாம் நாள் காலை நீங்கள் தளபதியோடும் படைகளோடும் வரவில்லையானால் முடிவுக்கு நான் பொறுப்பில்லை."

"பயங்கரமான நிபந்தனை விதிக்கிறீர்களே, சக்கசேனாபதி!"

 

"அதைத் தவிர வேறு வழியில்லை, இளவரசே! நீங்கள் தளபதியைச் சந்தித்து அழைத்து வரப் போகாவிட்டால் அதை விட விரைவிலேயே நாம் தோற்றுவிடுவோம்."

"இந்த வார்த்தையைச் சொல்லத்தான் இவ்வளவு படைகளோடு கடல் கடந்து வந்தீர்களோ? நீங்கள் எனக்கு அளிக்கும் நம்பிக்கை இதுதானா?"

"உங்கள் நாட்டின் உட்பகைக் குழப்பங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? புறப்பட்டுப் போய் உட்பகைக் கலகங்களைத் தவிர்த்து ஒற்றுமையை ஏற்பாடு செய்ய முயன்று பாருங்கள். ஏற்பாடு முடிந்தால் மூன்றாம் நாள் காலை பதினோரு நாழிகை வர என்னால் முடிந்த மட்டும் இந்தப் போர்க்களத்தைச் சமாளிக்கிறேன். அதற்குள் வர இயலாமற் போனால் பின்பு நீங்கள் இங்கு வரவே வேண்டாம். நானும் என்னோடு வந்த வீரர்களில் உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடிக் கப்பலேறி விடுவோம்!"

"நீங்கள் இப்படிச் சொல்வதற்கு என்ன அர்த்தம்?"

"அந்த அர்த்தத்தை வெளிப்படையாக வேறு சொல்ல வேண்டுமா? உங்களுக்குப் புரியவில்லையா?"

"புரிகிறதே! தோற்று விடுவேன் என்கிறீர்கள்."

"அதை ஏன் என் வாயாற் சொல்ல வேண்டும்? ஒரு வேளை நீங்கள் சமாதானப்படுத்தித் தளபதி வல்லாளதேவனை அழைத்து வந்தால் நமக்கே வெற்றியாக முடியலாம்!"

"சக்கசேனாபதி! அப்படியானால் மூன்றாம் நாள் காலை பதினோரு நாழிகை வரை இந்தப் போர்க்களத்தில் தோல்வி நிழல் நம் பக்கம் படர விடாமலிருக்கும்படிப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நீங்கள் ஏற்கிறீர்களா?"

"ஆகா! உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்."

"நான் உங்களை நம்பிப் போய்விட்டு வரலாமா?"

"தாராளமாகப் போய்வரலாம்!"

"யாரங்கே! என்னுடைய பிரயாணத்துக்குக் குதிரை கொண்டு வா!" என்று குமாரபாண்டியன் பாசறைக்குள்ளிருந்து தன் ஏவலனைக் கூவிக் கட்டளையிட்டான். குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவன் வெளியே வந்து ஏறிக் கொண்டான். "சக்கசேனாபதி! வருகிறேன். விதி இருந்தால் சந்தித்து வெற்றி பெறுவோம்" என்று பாசறை வாயிலில் நின்றவரிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு குதிரையைச் செலுத்தி இருளில் மறைந்தான் குமாரபாண்டியன்.

----------

 

3.23. மாதேவியின் கண்ணீர்

 

மகாமண்டலேசுவரரைப் பற்றி யார் சொல்லியும் அதை நம்பாமல் பொழுது விடிந்ததும் இடையாற்று மங்கலத்துக்குப் புறப்படுவதற்கிருந்த மகாராணி, அப்படிப் புறப்பட வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. பொறி கலங்க வைக்கும்படியான அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மகாராணி வானவன்மாதேவி மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பலவித மனக் குழப்பங்களாலும், முதல் நாளிரவு நன்றாக உறக்கம் வராததாலும், தளர்ந்து போயிருந்த அவருக்கு அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

'இடையாற்று மங்கலத்தையும், அதைச் சுற்றியுள்ள அழகான இடங்களையும், கலகக்காரர்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தி விட்டார்கள். முதல் நாள் இரவு முழுவதும் மகாமண்டலேசுவரர் யார் கையிலும் அகப்படவில்லையாம். காலையில் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவில் குறட்டில் அவர் இறந்து கிடப்பதைக் கண்டார்களாம்' என்று கேள்விப்பட்ட இந்தச் செய்திதான் மகாராணியை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டது.

புவன மோகினியும், விலாசினியும், மகாராணியின் உடலைத் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிந்து நினைவு வருவதற்கேற்ற சைத்தியோபசாரங்களைச் செய்தனர். பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு வந்த அரண்மனை மெய்க்காவற் படை ஒற்றனை மேலும் சில கேள்விகளைத் தூண்டிக் கேட்டார் பவழக்கனிவாயர்.

"நேற்று காலையில் தானே அந்தப் பெண் குழல்வாய்மொழி இங்கிருந்து புறப்பட்டு இடையாற்று மங்கலத்துக்குப் போனாள்? அவள் போய்ச் சேர்ந்தாளோ, இடைவழியிலேயே கலகக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டாளோ? அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே?" என்று பவழக்கனிவாயர் கேட்ட கேள்விக்கு ஒற்றன் கீழ்க்கண்டவாறு மறுமொழி கூறினான்.

"சுவாமி! மகாமண்டலேசுவரரின் புதல்வியும் அந்தரங்க ஒற்றன் நாராயணன் சேந்தனும் கலகக்காரர்கள் கையில் சிக்கவில்லையாம். அவர்களையும் எப்படியாவது பிடித்து விடுவதென்று கலகக்காரர்கள் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!" இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மகாராணியின் மூர்ச்சை தெளிந்தது. எழுந்து உட்கார்ந்து மிரள மிரள விழித்தார் அவர். சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்தார். தட்டுத் தடுமாறி எழுந்த பின்பு நீண்ட நேரம் அவர் அந்த அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை. "மனம் நொந்திருப்பவர்களைத் தனியே விடக் கூடாது! நீங்களும் போய் உடன் இருங்கள்" என்று புவன மோகினியையும் விலாசினியையும் அனுப்பினார் அதங்கோட்டாசிரியர். அந்தப் பெண்கள் இருவரும் மகாராணி வானவன்மாதேவியாரின் அறைக்குள் தயங்கித் தயங்கிச் சென்றார்கள்.

 

அறை நடுவே உட்கார்ந்து பச்சைக் குழந்தை போல விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் மகாராணி. அவர் மடியில் ஒரு பழைய ஓலை கிடந்தது. விலாசினியையும் புவன மோகினியையும் நிமிர்ந்து பார்த்து மகாராணியார் குறிப்புக் காட்டி அவர்களை உட்காரச் சொன்னார். கண்களைத் துடைத்துக் கொண்டு தன் மடியில் கிடந்த ஓலையை விலாசினியின் கையில் எடுத்துக் கொடுத்தார் மகாராணி. அவள் அதை வாங்கிக் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று கேட்பது போல் மகாராணியின் முகத்தைப் பார்த்தாள்.

"விலாசினி! இந்த ஓலையில் எழுதியிருக்கும் பாட்டைப் பற்றி உனக்கு நினைவிருக்கிறதா?" என்று அவர் அவளைக் கேட்டார். அந்த ஓலையிலிருந்த பாட்டை ஒரு முறை மனத்திற்குள் படித்துப் பார்த்துக் கொண்டே விலாசினி, "மகாராணி! இது முன்பு ஒருமுறை கோட்டாற்றுப் பண்டிதரிடம் தாங்கள் எழுதி வாங்கிக் கொண்ட பாட்டு அல்லவா? பகவதி இங்கே தங்கியிருக்கும் போது இந்தப் பாட்டைக் கொடுத்து அடிக்கடி அவளைப் பாடச் சொல்லிக் கேட்பீர்களே?" என்றாள். பகவதி என்ற பெயரைக் கேட்டவுடன் மறுபடியும் கண்ணீர் அரும்பியது மகாராணியின் கண்களில். "இப்போதும் அவள் பாடிக் கேட்க வேண்டும் போல் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பாவிப் பெண் கண்காணாத தேசத்தில் போய் மாண்டு போனதாகச் சொல்லுகிறார்களே, விலாசினி! நான் இப்போது சொல்லப் போகிற செய்தி இதற்கு முன்பு உனக்குத் தெரிந்திருக்காது. ஒரு நாள் இரவு மனவேதனை தாங்க முடியாமல் அரண்மனை நந்தவனத்திலிருந்த பாழுங்கிணற்றில் வீழ்ந்து என்னை மாய்த்துக் கொள்வதற்கு இருந்தேன். அப்போது அந்த நள்ளிரவில் என்னைக் கைப்பிடித்துத் தடுத்துக் காப்பாற்றியது யார் தெரியுமா? அந்தப் பெண் பகவதிதான். அவள் காப்பாற்றியிராவிட்டால் இன்று என்னை யார் உயிரோடு பார்க்க முடியும்? அவள் போய்விட்டாள். நான் இருக்கிறேன். அவளுடைய தமையன் வீராதி வீரனாகப் போர்க்களத்தில் நின்று போரிட வேண்டியதை மறந்து இந்தத் தென்பாண்டி நாட்டின் அறிவுச் செல்வரைக் கொன்று கலகமிடும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக மாறிவிட்டான். எவ்வளவு கேவலமான காரியம்? மகாமண்டலேசுவரர் இறந்து போய் விட்டார் என்று கேட்கும் போது என் உடல் பயத்தாலும், துக்கத்தாலும் நடுங்குகிறது, பெண்ணே! நேற்று நாமெல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்துக்கு ஓடிப் போனாளே குழல்வாய்மொழி, அவள் கதி என்ன ஆயிற்றோ? போர்க்களத்து நிலைமைகளைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. வடக்கே பகைவர்களோடு போர் செய்து கொண்டிருக்கிற சமயத்தில் நம்மோடு நாமே போரிட்டுக் கொள்ளும் இந்தக் கலகத்தைத் தளபதி ஏன் உண்டாக்கினானோ? தேசத் துரோகியாக மாறவேண்டுமென்று நன்றியை மறந்து துணிந்து விட்டானா வல்லாளதேவன்? இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா! கரிக் குப்பைக்கு நடுவில் வைரத்தைப் பார்ப்பது போல் இத்தனை துன்பத்துக்கும் நடுவில் இந்த ஒரு பாட்டை எடுத்துப் பார்த்தால் எனக்குச் சிறிது மெய்யுணர்வு உண்டாகிறது. கொஞ்சம் இதைப் படி, கேட்டு ஆறுதல் அடைகிறேன்" என்று சோகம் கனிந்த உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார் மகாராணி. விலாசினி படிக்கலானாள்:

 

"இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையும்
அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்
உளவென
நினையாதே செல்கதிக் கென்றுமென்றும்
விளைநிலம்
உழுவார்போல் வித்துநீர் செய்து கொள்மின்!"

 

பாட்டைக் கேட்டு விட்டு மகாராணி கூறலானார்:

 

"நிலையாத பொருள்களை நிலைப்பனவாக எண்ணி மயங்கியிருந்தால் இப்படித்தானே அந்தப் பொருள்கள் அழியும் போது துக்கப்பட வேண்டியிருக்கிறது? நிலையாததையெல்லாம் படைத்துவிட்டு நிலைத்திருப்பது எதுவோ அதை நினைக்கப் பழகிக் கொண்டிருந்தால் இப்போது என் மனம் இப்படிக் குமுறுமா? உணர்ச்சி நப்பாசைகளையும், எண்ண அழுக்குகளையும் வைத்துக் கொண்டே மெய்யுணர்வை இழந்து விட்டேனே? விலாசினி! துக்கத்தையும், ஏமாற்றங்களையும் அனுபவிக்க இந்தப் பாட்டின் அர்த்தம் கடல் போல் விரிவடைந்து கொண்டே போவது போல் ஒரு பிரமை உண்டாகிறது, பார்த்தாயா?" அந்தப் பாட்டைக் கேட்டு மகாராணி பேசிய வார்த்தைகளால் அவருடைய மனம் எந்த அளவுக்கு வேதனையும், விரக்தியும் அடைந்து போயிருக்கிறதென்பதையும் விலாசினி உணர்ந்தாள்.

அறை வாயிலில் அந்தச் சமயத்தில் ஒரு காவலன் அவசரமாக வந்து வணங்கி நின்றான். "தேவி! குமாரபாண்டியர் அவசரமாகப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். தங்களைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறார்" என்று அந்தக் காவலன் கூறியதும், விலாசினியும், புவன மோகினியும் விருட்டென எழுந்து அந்த இடத்திலிருந்து ஒதுங்கிச் சென்றனர். மகாராணியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கண்கள் அறை வாயிலை நோக்கிப் பதித்து நிலைத்தன.

வாட்டமடைந்த தோற்றத்தோடு பயணம் செய்து களைத்துக் கறுத்த முகத்தில் கவலையும் பரபரப்பும் தென்பட வேகமாக அறைக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன். அவனைக் கண்டதும் துயரம் பொங்க, "குழந்தாய்! இந்த நாட்டின் அறிவுச் செல்வரைப் பறி கொடுத்து விட்டோமே!" என்று கதறினார் மகாராணி.

 

"அம்மா! என்ன நடந்து விட்டது? நிதானமாகச் சொல்லுங்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் குழப்பங்களையும், கவலைகளையும் சுமந்து கொண்டு போர்க் களத்திலிருந்து இங்கே ஓடி வந்திருக்கிறேன். நீங்கள் எதையோ சொல்லிக் கதறுகிறீர்களே?" என்று அருகில் வந்து அமர்ந்து வினவினான் இராசசிம்மன்.

"சொல்லிக் கதறுவதற்கு இனி என்ன இருக்கிறது? இலங்கையில் உன்னைத் தேடி வந்த இடத்தில் பகவதி இறந்து போனாள் என்ற உண்மையை இங்கு வந்ததுமே நீ என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா? எல்லோருமாகச் சேர்ந்து அதை மறைத்தீர்கள். தளபதியைப் போர்க்களத்துக்கு வர விடாமல் செய்தீர்கள். அவற்றால் எத்தனை பெரிய உள்நாட்டுக் கலகம் எழுந்து விட்டது. மகாமண்டலேசுவரர் மாண்டு போனார். இடையாற்று மங்கலம் தீயுண்டு அழிந்து விட்டது. இன்னும் என்ன நடக்க வேண்டும் அப்பா? எல்லாவற்றையும் கேட்ட பின்பும் துக்கத்தையும் உயிரையும் தாங்கிக் கொண்டு சாக மாட்டாமல் உட்கார்ந்திருக்கிறேன் நான்" என்று தன் தாயின் வாயிலிருந்து மகாமண்டலேசுவரரின் மரணச் செய்தியைக் கேட்ட போது அப்படியே திக்பிரமை பிடித்துப் போய் அயர்ந்து கிடந்தான் இராசசிம்மன். பயமும் திகைப்பும் உண்டாக்கும் அந்தத் துயரச் செய்தி மனத்தில் உறைந்து நாவுக்குப் பேசும் ஆற்றல் உண்டாகச் சில கணங்கள் பிடித்தன அவனுக்கு. அவனால் அதை நம்புவதற்கே முடியவில்லை.

"அம்மா! மகாமண்டலேசுவரர் இறந்து விட்டார் என்று உண்மையாகவே சொல்கிறீர்களா அல்லது என்னைச் சோதனை புரிகிறீர்களா?"

"சோதனை நான் செய்யவில்லையப்பா! உன்னையும் என்னையும் இந்த தேசத்தையும் விதி சோதனை செய்கிறது. தெய்வம் சோதனை செய்கிறது. நம்பிக்கைகள் சோதனை செய்கின்றன" என்று சொல்லிக் கொண்டே குலுங்கக் குலுங்க அழுதார் மகாராணி.

"மகாராணி மனங் குழம்பிப் போயிருக்கிறார்கள். நடந்தவற்றை நாங்கள் சொல்கிறோம்" என்று அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் அங்கு வந்தார்கள். எல்லாவற்றையும் அவர்களிடம் கேட்டு அறிந்த போது அவனும் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனுக்கும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

"அம்மா! விழிஞத்தில் இறங்கியதும் பகவதியின் மரணத்தை யாருக்கும் கூற வேண்டாமென்று மகாமண்டலேசுவரர்தான் வாக்குறுதி வாங்கிக் கொண்டார். தளபதி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் செய்தியும் இரகசியமாக இருக்க வேண்டுமென்று அவர் தான் சொன்னாரம்மா! தளபதி சிறையிலிருந்து தப்பித் தங்கையின் மரணத்தைத் தெரிந்து கொண்டதுமல்லாமல் அதற்கு மகாமண்டலேசுவரர்தான் காரணமென்று தப்பாக அவர் மேல் வன்மம் கொண்டு விட்டான். அதன் விளைவுகள் இவ்வளவு கொடுமையாக முடியுமென்று நான் நினைக்கவே இல்லை. அம்மா! இங்கே தான் இப்படி என்றால் அங்கே போர்க்களத்திலும் புகுந்து கலகம் செய்து பாசறையிலுள்ள தென்பாண்டி வீரர்களையெல்லாம் மனம் மாற்றி இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். உங்களையும், மகாமண்டலேசுவரரையும் கலந்து கொண்டு தளபதி வல்லாளதேவனை எப்படியாவது சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லலாமென்று நான் ஓடி வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய பேரிடியை என் காதில் போடுகிறீர்கள். நான் என்ன தான் செய்யப் போகிறேனோ? இப்போதுள்ள படைகளை வைத்துக் கொண்டு இரண்டு நாள் போரைக் கூடச் சமாளிக்க முடியாதென்று சக்கசேனாபதி கையை விரித்து விட்டார்."

"போரைச் சமாளித்து வெற்றி பெற்றாலும் இனி என்ன பயம் மகனே? கடமையையும், நன்றியையும் போற்றி வந்த தூய வீரனாக இருந்த தளபதி கண்மூடித்தனமான வெறிச் செயலில் இறங்கிவிட்டான். கூற்றத் தலைவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டு விட்டார்கள். எவ்வளவோ சாமர்த்தியமாக இருந்த மகாமண்டலேசுவரரும் கெடுமதி நெருங்கியதாலோ என்னவோ, இப்படியெல்லாம் செய்து தம்மையும் அழித்துக் கொண்டு விட்டார். தளபதியைச் சிறைப்படுத்தியும், பகவதியின் மரணத்தை மறைத்தும் அவர் சூழ்ச்சிகள் செய்திராவிடில் இந்தக் கலகமே ஏற்பட்டிராது. அழியப் போகிற தீவினையின் விளைவு நெருங்கிவிட்டால் எவ்வளவு பெரிய அறிவாளிக்கும் நாணயம் தவறிவிடும் போலிருக்கிறதே!" என்று மகாராணி விரக்தியோடு மறுமொழி கூறினார்.

"அம்மா நீங்களும் இப்படி மனம் வெறுத்துப் பேசினால் நான் என்ன செய்வது? சேர நாட்டுப் படைத் தலைவனும், பெரும்பெயர்ச்சாத்தனும் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். கடல் கடந்து வந்த சக்கசேனாபதி இரவும் பகலும் நம் வெற்றிக்காக முயல்கிறார். இந்தச் சமயத்திலா தளர்வது? வாருங்கள்! நானும் நீங்களுமாகப் போயாவது தளபதியைக் கெஞ்சிப் பார்க்கலாம். அவன் மனம் இரங்காமலா போய்விடுவான்? அம்மா! எல்லாத் துன்பங்களையும் மறந்து புறப்படுங்களம்மா, கடைசியாக முயல்வோம்" என்று தாயின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சினான் இராசசிம்மன். மூன்றாம் நாள் காலை பதினொரு நாழிகைக்குள் தளபதியோடு போர்க்களத்துக்கு வரவில்லையானால் வெற்றியைப் பற்றி நினைப்பதற்கில்லை யென்று சக்கசேனாபதி கூறியனுப்பியிருந்த நிபந்தனையையும் தாயிடம் கூறி முறையிட்டான் அவன்.

அவனுக்குப் பதில் சொல்வதற்காக மகாராணி வாயைத் திறந்தார். அவர் பேசத் தொடங்குமுன் அரண்மனை வாயிலில் 'விடாதே! பிடி! கொல்லு' என்ற வெறிக் குரல்களோடு பலர் ஓடிவரும் ஓசையும் "ஐயோ! காப்பாற்றுங்கள்" என்று ஓர் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஓலமிட்டு அபயம் கோரும் அடைக்கலக் குரலும் எழுந்தன. அதைக் கேட்டு யாவரும் திடுக்கிட்டுத் திகைத்தனர். "இராசசிம்மா! ஓடு; அது என்னவென்று போய்ப் பார்!" என்று மகனைத் துரத்தினார் மகாராணி. இராசசிம்மன் உட்பட எல்லோருமே அந்தக் குழப்பம் என்னவென்று பார்ப்பதற்காக எழுந்து வாசற்புறம் ஓடினார்கள். மகாராணி, விலாசினி, புவன மோகினி ஆகிய பெண்கள் மட்டும் போகவில்லை.

 

அரண்மனையில் பராந்தகப் பெருவாயிலில் மூடு பல்லக்கு ஒன்று கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னால் உருவிய வாள்களும், வேல்களுமாக யாரோ சில முரட்டு மனிதர்கள் துரத்தி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். மூடு பல்லக்கு அருகிலிருந்து குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் அபயக் குரல் கொடுத்து அலறியவாறு உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். என்ன கூப்பாடு என்று பார்ப்பதற்காக வெளியே வந்த குமாரபாண்டியனும் மற்றவர்களும் இந்தக் காட்சியைக் கண்டு திகைப்பும் வியப்பும் அடைந்து மருண்டு போய் நின்றனர். இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.

பின்னால் துரத்தி வந்த கூட்டம் கணத்துக்குக் கணம் அதிகமாயிற்று. ஆயுதபாணிகளாகத் தாக்குவதற்கு ஓடி வருவது போல் வந்த அவர்களுடைய வெறித்தனமும் கூப்பாடுகளும் பெருகின. உள்ளே உட்கார்ந்திருந்த மகாராணி முதலியவர்களும் ஆவலை அடக்க முடியாமல் பார்ப்பதற்காக எழுந்து ஓடி வந்து விட்டார்கள். 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று அலறிக் கொண்டே ஓடி வந்த குழல்வாய்மொழியும், சேந்தனும் மகாராணியின் காலடியில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் இருவரும் பயந்து நடுங்கி முகத்தில் கொலையச்சம் பரவியது போல் தோற்றமளித்ததை எல்லோரும் கண்டனர். இருவரும் ஓயாமல் அழுதிருந்த சாயல் தெரிந்தது.

"தாயே! எங்களைக் கொல்ல ஓடிவருகிறார்கள். நீங்கள் தான் அடைக்கலம் அளித்துக் காப்பாற்ற வேண்டும்" என்று மகாராணியிடம் முறையிட்டுக் கதறினார்கள், குழல்வாய்மொழியும் சேந்தனும். எல்லோருக்கும் அவர்கள் நிலை ஒருவாறு புரிந்து விட்டது.

உடனே குமாரபாண்டியன் வாயிற்புறம் பார்த்தான். கலகக் கூட்டம் வரம்பு மீறிக் காவலைக் கடந்து உள்ளே நுழைய முயன்று கொண்டிருந்தது.

"காவலர்களே! பராந்தகப் பெருவாயிலை மூடிவிட்டு உட்புறம் கணைய மரங்களை முட்டுக் கொடுங்கள். கோட்டைக்குள் யாரும் நுழைய விடாதீர்கள்" என்று சிங்க முழக்கம் போன்ற குரலில் கட்டளையிட்டன் இராசசிம்மன். அடுத்த விநாடி ஒன்றரைப் பனை உயரமும் முக்காற்பனை அகலமும் உள்ள அந்தப் பிரம்மாண்டமான கதவுகள் மூடப்படும் ஒலி அரண்மனையையே அதிரச் செய்து கொண்டு எழுந்தது.

"குழல்வாய்மொழி! எங்களையெல்லாம் தவிக்க விட்டுப் போய் விட்டாரே அம்மா உன் தந்தை? அவர் இருந்த பெருமைக்கு இப்படியெல்லாம் ஆகுமென்று யாராவது எதிர்பார்த்தோமா?" என்று தணிக்க முடியாமல் கிளர்ந்தெழும் துக்கத்தோடு அந்தப் பெண்ணைத் தழுவிக் கொண்டு கதறினார் மகாராணி. குழல்வாய்மொழி குமுறிக் குமுறி அழுதாள்.

 

"தேவி! அவருடைய காலம் முடிந்து விட்டது. எங்களைத் தப்பி வாழச் செய்துவிட்டு அவர் போய்விட்டார். இரவோடு இரவாக இடையாற்று மங்கலத்திலிருந்து நாங்கள் இருவரும் முன்சிறைக்குப் போய்விட்டு இப்போது ஒரு முக்கிய காரியமாக வந்தோம். யாருக்கும் தெரியாமல் மூடு பல்லக்கில் வந்தோம். அரண்மனைக்கு அருகில் வந்த போது இந்தக் கலகக்காரர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு துரத்தத் தொடங்கி விட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பாற்றி அபயமளித்தீர்கள். தம்முடைய அந்திம நேரத்தில் மகாமண்டலேசுவரர் தங்களிடம் சேர்த்து விடச் சொல்லி ஓர் ஓலையை என்னிடம் அளித்துச் சென்றார்" என்று சொல்லிக் கொண்டே இடுப்பிலிருந்து அந்த ஓலையை எடுத்தான் சேந்தன். துக்கம் அவன் குரலையே மாற்றியிருந்தது.

---------

 

3.24. சிதைந்த கனவுகள்

 

அரண்மனைக் கோட்டைக் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. வெளிப்புறம் பராந்தகப் பெரு வாயிலுக்கு அப்பால் கலகக் கூட்டம் வெள்ளமெனப் பெருகிக் கொண்டிருந்தது. கலகக்காரர்களின் வெளிக் கூப்பாடுகள் பயங்கரமாக ஒலித்தன. சேந்தனையும், குழல்வாய்மொழியையும் வெளியே அனுப்பாவிட்டால் கதவை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்து விடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

இத்தகைய பயங்கரமான சூழ்நிலை வெளியே நிலவிக் கொண்டிருக்கும் போதுதான் சேந்தன் தான் கொண்டு வந்திருந்த மகாமண்டலேசுவரரின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுருளை விரித்து மகாராணியிடம் கொடுத்தான்.

"இராசசிம்மா! இதைப் படித்துச் சொல்" என்று குமாரபாண்டியனிடம் அதைக் கொடுத்தார் மகாராணி. துக்கம் அடைக்கும் நலிந்த குரலும், நீரரும்பும் கண்களுமாக அவர் அப்போது தோற்றமளித்த நிலை எல்லோருடைய உள்ளங்களையும் உருக்கியது. சேந்தனும் கண்கலங்கிப் போய் வாட்டத்தோடு காட்சியளித்தான். குழல்வாய்மொழி தலை நிமிரவே இல்லை. கண்கள் சிவந்து முகம் வீங்கி அழுதழுது சோகம் பதிந்த கோலத்தில் நின்றாள் அவள். மற்றவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியன் எல்லோரும் கேட்கும்படியாக மகாமண்டலேசுவரரின் இறுதித் திருமுக ஓலையை இரைந்து படித்தான்.

"அன்புக்கும், மதிப்புக்கும் உரிய மகாராணி வானவன்மாதேவிக்கு, இடையாற்று மங்கலம் நம்பி இறுதியாக எழுதும் திருமுகம். தேவி, இந்தத் திருமுக ஓலையை நீங்கள் படிக்கு முன் நான் இவ்வுலக வாழ்வினின்று விடைபெற்றுச் சென்று விடுவேன். என்னுடைய மரணத்துக்காக நீங்களோ, குமாரபாண்டியரோ சற்றேனும் வருந்த வேண்டியதில்லை. இந்த விநாடிக்குப் பின் இனி ஒரு கணம் வாழ்ந்தாலும் நானோ என் அறிவோ எதிலும் வெற்றி பெற முடியாது. தீபத்தில் எண்ணெய் வற்றியதும் திரியும், சுடருமே அழிந்து விடுகிற மாதிரி நல்வினைப் பயன் நீங்கியதும் எவ்வளவு பெரிய மனிதராயிருந்தாலும் அறிவும், முயற்சியும் பயன்படாது! அருள் கலக்காத முரட்டு அறிவுக்கு என்றாவது ஒருநாள் இந்தத் தோல்வி ஏற்படத்தான் செய்யும். தளபதி வல்லாளதேவன் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலே என்னென்னவோ செய்து விட்டான். அதைப் போல் இறுதியில் சில சமயம் நானும் அவனைப் புரிந்து கொள்ளாமல் என்னென்னவோ செய்து விட்டேன். அறிவும் வீரமும் பகைத்துக் கொண்டதால் ஒரு நாட்டுக்கு எவ்வளவு கெடுதல்கள்? எப்போதாவது முடிந்தால் ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் நீங்கள் தளபதிக்குத் தெளிவு செய்து விட வேண்டும். 'அவன் தங்கையின் மரணத்துக்கு நான் காரணமில்லை' என்பது தான் நீங்கள் அவனுக்குத் தெளிவு செய்ய வேண்டிய மெய். பெரிய காரியங்களை நிறைவேற்ற முடியாமல் இலட்சிய பங்கமும் மானக்கேடும் ஏற்பட்டால் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது நம் தமிழ்க் குலத்து மரபு. நானும் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோயில் குறட்டில் அமர்ந்து வடக்கு நோக்கி இந்த வாழ்வை முடித்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டேன். சாவு தீர்மானப்படிதான் வரவேண்டு மென்பதில்லையே? என் தீர்மானத்தை முந்திக் கொண்டு வந்தாலும் அதை வரவேற்க நான் தயங்க மாட்டேன்.

"இந்தக் கடைசி நேரத்தில் யாரும், எப்போதும், எதிர்பாராத ஒரு காரியத்தை நான் செய்யப் போகிறேன். இத்தனைக் காலமாக என்னிடம் உண்மையாக ஊழியம் செய்த நாராயணன் சேந்தனுக்கு என் மகள் குழல்வாய்மொழியை மணம் முடித்துக் கொடுத்து விடப் போகிறேன். இதை விடப் பெரிய நன்றி அவனுக்கு நான் வேறென்ன செய்ய முடியும்?..."

இரைந்த குரலில் படித்துக் கொண்டே வந்த குமார பாண்டியன் படிப்பதை நிறுத்தி விட்டுத் தலை நிமிர்ந்து சேந்தனையும், குழல்வாய்மொழியையும் மாறிமாறிப் பார்த்தான். அடாடா! அப்போது குமாரபாண்டியனின் முகத்தில்தான் எத்தனை விதமான உணர்ச்சிச் சாயல்கள் சங்கமமாகின்றன. அவனைப் போலவே மற்றவர்களுடைய பார்வையும் சேந்தன் மேலும் குழல்வாய்மொழியின் மேலும் தான் திரும்பிற்று. சேந்தனும், குழல்வாய்மொழியும் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டவர்களைப் போல் தலை நிமிராமலிருந்தார்கள். முகத்தில் உணர்ச்சிகளின் சூறாவளி தோன்றி விழிகள் சிவந்து போய்க் குழல்வாய்மொழியிடம் எதையோ கேட்டு விடுவதற்குத் துடித்தன குமாரபாண்டியனின் உதடுகள். அவளோ அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அந்தச் சமயத்தில், "மேலே படி" என்று மகாராணியின் தழுதழுத்த குரல் அவனைத் தூண்டியது. குமாரபாண்டியன் மேலே படிக்கலானான். முதற் பகுதியைப் படித்ததை விட இப்போது அவன் குரல் நைந்திருந்தது. "எனக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் குழல்வாய்மொழிக்கு இருக்கிற அகந்தையும், ஆணவமும் இந்தப் புதிய உறவு மூலம் அழிந்து விட வேண்டுமென்பது என் ஆசை. என் பெண்ணையும், சேந்தனையும் துன்பங்களும், பகைகளும் பெருகி வரும் சூழலில் தனியே ஒரு பாதுகாப்புமின்றி விட்டுச் செல்கிறேன். அவர்கள் வாழ வேண்டும். நாட்டில் எனக்கிருக்கும் எதிர்ப்பின் பகைமை அவர்களை அழிக்க முயலாமல் உங்களுக்கு அடைக்கலமாக அவர்களை அளிக்கிறேன். எப்படியாவது அவர்களை வாழவிடுங்கள். என்னுடைய அறிவின் பிடிவாதங்களால் இந்த நாட்டுக்கு விளைந்த துன்பங்களுக்காக என்னை மன்னியுங்கள். குமாரபாண்டியரையும் மன்னிக்கச் சொல்லுங்கள். 'மகாமண்டலேசுவரர்' என்ற மனிதரை ஒரு கெட்ட சொப்பனம் கண்டது போல் மறக்க முயலுங்கள்!"

குமாரபாண்டியன் அதைப் படித்து முடித்தான். மழை பெய்து ஓய்ந்தாற் போன்ற ஒரு வகை அமைதி அவர்களிடையே நிலவியது. அந்த அமைதிக்கு நேர்மாறாக வெளியே கலகக்காரர்களின் வெறியாட்டம் நடந்து கொண்டிருந்தது. பராந்தகப் பெருவாயிலை இடித்துத் தகர்த்து விட்டு உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

மகாமண்டலேசுவரரின் ஓலையைப் படித்து முடித்த பின் சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றார் மகாராணி. குழல்வாய்மொழியின் உள்ளம் எப்படி அந்த மணத்துக்கு உட்பட்டதென்று புரியாமல் மனங் குமுறி நின்றான் குமாரபாண்டியன். "இராசசிம்மா! வீரமும் வெற்றியும் அரியணையேறி ஆளும் திருவும் இன்னும் உனக்குக் கிடைக்கிற காலம் வரவில்லை போலிருக்கிறது! மகாமண்டலேசுவரரோ போய்விட்டார். அவருடைய இந்த ஓலையைப் படித்த பின் என் நம்பிக்கைகளே அழிந்து விட்டன போல் துயரமாயிருக்கிறது எனக்கு. தளபதி ஆகாதவனாகிவிட்டான். கூற்றத்தலைவர்களும் ஆகாதவர்களாகி விட்டார்கள். இனி யாரை நம்பி, எதை நம்பி நாம் வெற்றியை நினைக்க முடியும்? எனக்கு ஒரு வழியும் தோன்றவில்லை அப்பா! போ, உன்னால் முடியுமானால் இன்னும் சிறிது நேரத்துக்குள் இந்த அரண்மனையைக் கலகக்காரர் கையில் சிக்கிவிடாமல் காப்பாற்று. அதற்குள் நான் மகாமண்டலேசுவரரின் பெண்ணையும், அவள் கணவன் சேந்தனையும் இங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போய் விடுகிறேன்" என்று குமாரபாண்டியனை நோக்கி வேண்டிக் கொண்டார் மகாராணி.

"அம்மா! இப்படி ஒரேயடியாக நம்பிக்கையிழந்து பேசினால் என்ன செய்ய முடியும்? நாம் இருவரும் தளபதியையும் கூற்றத் தலைவர்களையும் சந்தித்துப் பேசிச் சமாதானப்படுத்தலாம்" என்றான் இராசசிம்மன்.

"மகனே! இந்த நாட்டின் வெற்றியைப் பற்றிக் கவலைப்பட்டால் என்னிடம் அடைக்கலம் அளிக்கப்பட்ட இவர்களை யார் காப்பாற்றுவது? இவர்களுக்கு அழிவு வராமல் வாழவைக்க வேண்டுமென்பது மகாமண்டலேசுவரருடைய கடைசி ஆசை. அதை நான் முதலில் நிறைவேற்றியாக வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்றிய பின் நாட்டைக் காப்பாற்ற வருகிறேன். நீ போய் நான் கூறியபடி வாயிற்புறத்துக் காவலை உறுதியாக்கு... நிற்காதே... உடனே செல்!" - மகாராணியின் குரலில் பரபரப்பு நிறைந்திருந்தது. கடைசியாக ஒருமுறை குழல்வாய்மொழியைப் பார்த்துவிட்டு நடந்தான் இராசசிம்மன். அவன் காவலை கெட்டிப் படுத்துவதற்காக பராந்தகப் பெருவாயிலுக்குச் சென்றதும், சேந்தனையும், குழல்வாய்மொழியையும் தழுவி அழைத்துக் கொண்டு தமது அந்தரங்க அறைக்குச் சென்றார் மகாராணி. புவன மோகினியைக் கூப்பிட்டு, "புவன மோகினி! இந்த அரண்மனைக் கருவூலத்திலுள்ள விலைமதிப்பற்ற உயர்ந்த ஆடையணிகலன்களையெல்லாம் தேர்ந்தெடுத்து இந்தப் பெண்ணை அலங்கரித்து வா" என்று சொல்லிக் குழல்வாய்மொழியை அவளுடன் ஆவலோடு அனுப்பினார்.

சேந்தன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அவனையும் பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்தி மணக்கோலம் பூண்டு வரச் செய்தார். பவழக்கனிவாயர், ஆசிரியர், விலாசினி எல்லோரையும் சூழ இருக்கச் செய்து குழல்வாய்மொழியையும் சேந்தனையும் மாலை மாற்றிக் கொள்ளுமாறு செய்து மணக்கோலம் கண்டு மகிழ்ந்தார். எல்லோருமாகச் சேர்ந்து மணமக்களுக்கு மங்கல வாழ்த்துக் கூறினார்கள். அந்தச் சமயத்தில் இராசசிம்மன் வேகமாகவும், பரபரப்பாகவும் அங்கே ஓடி வந்தான். அவன் முகத்தில் பயமும், குழப்பமும் தென்பட்டன.

"அம்மா! பராந்தகப் பெருவாயில் தகர்ந்து விட்டது. கலகக்காரர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள். இப்போதிருக்கிற வெறியையும் ஆவேசத்தையும் பார்த்தால் அவர்களைச் சமாதானப்படுத்த முடியாது போலிருக்கிறது. 'மகாமண்டலேசுவரரின் மகளையும் ஒற்றனையும் கொன்று பழிவாங்குவோம்' என்று கூச்சலிட்டுக் கொண்டு கொலை வெறியோடு ஓடி வருகிறார்கள். ஒரு விநாடி கூட இனிமேல் இங்கே தாமதிப்பதற்கில்லை. எப்படியாவது இவர்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று கலவரம் மிகுந்த குரலில் பதற்றத்தோடு கூறினான் குமாரபாண்டியன். குழல்வாய்மொழியை மணக்கோலத்தில் கண்ட போது அந்தக் குழம்பிய சூழ்நிலையிலும் ஏதோ சில மெல்லிய உணர்ச்சிகள் அவன் உள்ளத்தைக் கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவன் தன் மனத்தையும் கண்களையும் அடக்கிக் கொண்டான். ஏக்கத்தைப் பெருமூச்சாக வெளித் தள்ளினான். எங்கோ வெறித்து நோக்கியவாறு நின்ற மகாராணி அவனைப் பார்த்துக் கூறினார்:

"இராசசிம்மா! எல்லோரும் வெளியேறி விடலாம். உனக்கும் எனக்கும் இந்த அரண்மனையில் ஒரு வேலையும் இல்லை. உன்னுடைய எண்ணங்களும், என்னுடைய ஆசைகளும் நிறைவேறும் காலம் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. பாண்டியப் பேரரசின் பெருமையும், புகழும் பரவுவதற்குரிய நிலை உன் தந்தையின் காலத்துக்குப் பின் இல்லையோ என்னவோ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். கவலைப்பட்டுப் பயனில்லை. நீ போய் அந்தப்புரத்துக்குள் நுழையும் பிரதான வாயில்களை அடைத்து விட ஏற்பாடு செய். போர்க்காலங்களில் அரண்மனைப் பெண்கள் தப்பி வெளியேறுவதற்காக நந்தவனத்து நீராழி மண்டபத்துக்கருகிலிருந்து ஒரு சுரங்க வழி போகிறது. நீயும் வா! நாமெல்லோரும் அந்த வழியாக வெளியேறி விடலாம். சுசீந்திரத்துக்கு அருகிலுள்ள பாதிரித் தோட்டத்தில் கொண்டு போய்விடும் அந்த வழி. அங்கிருந்து பவழக்கனிவாயர் முதலியவர்களோடு சேந்தனையும் குழல்வாய்மொழியையும் பாதுகாப்பாக முன்சிறைக்கு அனுப்பி வைத்து விடலாம். அறக்கோட்டத்தில் போய்த் தங்கிக் கொண்டால் பின்பு அவர்கள் பாடு கவலையில்லை" என்று மகாராணி கூறிய போது சேந்தன் குறுக்கிட்டான்: "தேவி! எங்கள் இருவருக்காகவும் தாங்கள் துன்பப்படக்கூடாது. நாங்கள் முன்சிறையில் என் தமையனோடு போய்த் தங்கிவிட்டால் பின்பு எங்களுக்கு ஒரு குறையும் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கலகக்காரர்களின் பகைமையும், பழிவாங்கும் வெறியும் உள்ளவரை நாங்களும் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம்" என்று நாராயணன் சேந்தன் பணிவுடனும் குழைவுடனும் மேற்கண்டவாறு பேசினான்.

"எப்படியோ நன்றாக வாழவேண்டும் நீங்கள். அது மகாமண்டலேசுவரரின் கடைசி ஆசை. அதைக் காப்பாற்றுவதற்கும், நிறைவேற்றுவதற்கும் நான் கடமைப்பட்டவள். வாருங்கள், நாம் இங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. புவன மோகினி! நீ அந்தத் தீபத்தை எடுத்துக் கொள். சுரங்கப் பாதைக்குள் இருட்டு அதிகமாக இருக்கும்" என்று கூறிக் கொண்டே முன்னால் நடந்தார் மகாராணி. குமாரபாண்டியன் அந்தப்புரத்துக் கதவை அடைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய முகத்தைக் காண்பவர்களுக்கு உலகத்திலுள்ள நிராசையெல்லாம் அங்கே வந்து குடி கொண்டு விட்டது போல் தோன்றியது. போர்க்களத்தில் சக்கசேனாபதியிடம் வாக்களித்து விட்டு இரவோடு இரவாகக் கிளம்பியபோது அவன் மனத்தில் உருவாகி எழுந்து ஓங்கி நின்ற நம்பிக்கை மாளிகை இப்போது தரைமட்டமாகி விட்டதைப் போல் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. மகாமண்டலேசுவரரின் மரணம், குழல்வாய்மொழியின் வினோதமான திருமணம், கலகக் கூட்டத்தின் பழிவாங்கும் வெறி, மகாராணியின் அவநம்பிக்கை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நினைக்கும் போது தன்னுடைய இனிய கனவுகளில் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது போல் உணர்ந்தான் அவன். அன்றொரு நாள் மழையும், புயலும் வீசிய இரவில் ஈழ நாட்டுக் காட்டில் பாழ்மண்டபத்து இருளில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப் பற்றிச் சிந்தித்ததை மறுபடியும் நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன்.

அவர்கள் எல்லோரும் நந்தவனத்துக்குப் போய்ச் சுரங்கப்பாதை ஆரம்பிக்கிற இடத்தை அடைந்தனர். விதியைப் பின் தொடரும் பேதை மனிதனைப் போல் குமாரபாண்டியனும் அவர்களைப் பின்பற்றி அங்கே சென்றான். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே துக்கம் வடியும் குரலில் "செல்வா! உன் முன்னோர் மன்னாதிமன்னராக வாழ்ந்து இறந்த இந்த அரண்மனையை இறுதியாக ஒருமுறை பார்த்துக் கொள். இனி இந்த மாபெரும் அரண்மனை இருப்பதும், இல்லாததும் உனக்குக் கிடைப்பதும், கிடைக்காததும் விதியின் ஆணையைப் பொறுத்தது" என்றார் மகாராணி. இராசசிம்மன் நிமிர்ந்து பார்த்தான். கதவுகள் உடையும், சுவர்கள் இடிபடும் ஒலியுமாக அந்த அரச மாளிகை முடிவின் எல்லையில் இருந்தது. எல்லாரும் சுரங்க வழிக்குள் இறங்கிவிட்டனர். புவன மோகினி தீபத்தோடு முன்னால் சென்றாள். கடைசியாகக் குமாரபாண்டியனும் அதற்குள் இறங்கி மறைந்தான். ஊழ்வினையே சுரங்கமாகி வழிநடத்திச் செல்கிற மாதிரி ஒரு பொய்த் தோற்றம் உண்டாயிற்று.

எல்லோரும் சுரங்க வழியில் நடந்து செல்லும் போது ஓரிடத்தில் சேந்தன் விரைவாக நடந்து முன்சென்று விட்டதால் குழல்வாய்மொழி சற்றுப் பின் தங்கிச் சென்றாள். தளர்ந்து துவண்டு மென்னடையில் மெதுவாகச் சென்று அவளை நெருங்கினான் குமாரபாண்டியன். கொதிக்கும் மனத்துடன் ஏதோ ஒரு கேள்வியை அவளிடம் கேட்டு விடத் துடித்தான் அவன். ஆனால் குழல்வாய்மொழி அவனை அருகில் நெருங்கவிடவில்லை. அவன் விரைந்து வருவது கண்டு தான் முந்திக் கொண்டு சென்றுவிட்டாள். அப்படி அவள் நடையை வேகப்படுத்திக் கொண்டு முந்தின போது அவளுடைய கூந்தலிலிருந்து இரண்டு மல்லிகைப் பூக்கள் உதிர்ந்தன. அவளை நெருங்கி ஏதோ கேள்வி கேட்கும் துடிப்புடனே வந்த குமாரபாண்டியனின் காலடியில் அந்த மல்லிகைப் பூக்கள் மிதிப்பட்டதும் அப்படியே தயங்கி நின்றுவிட்டான். காலில் மிதிபட்ட பூக்களையும் முன்னால் விரைந்து சென்று சேந்தனை ஒட்டி நடக்கும் குழல்வாய்மொழியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றான் அவன். அவனுடைய மனத்துக்குள் ஏதோ ஒரு மெல்லிய உணர்வும் அப்படி மிதிபட்டு விட்டது போலிருந்தது. மிதிபட்ட பூக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே மேலே நடந்தான் குமாரபாண்டியன். சுரங்கப் பாதை முடிந்து வெளியேறுகிற வரையில் யாரோடும் யாரும் பேசிக் கொள்ளவில்லை.

சுசீந்திரம் பாதிரித் தோட்டம் வந்தது. மகாராணி குழல்வாய்மொழியையும், சேந்தனையும் கையைப் பற்றிப் பவழக்கனிவாயரிடம் ஒப்படைத்தார். "பவழக்கனிவாயரே! அதங்கோட்டாசிரியரே! இவர்களை முன்சிறை அறக்கோட்டத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கலைகளுக்கும், மணியம்பலத்துக்கும் என்றும் அழிவில்லை. நீங்கள் உள்ளவரை சேந்தனும், குழல்வாய்மொழியும் வாழ்வதைக் கண்டு வாழ்ந்து மகிழுங்கள்!" என்று மகாராணி கூறிய போது, "தேவி! தாங்களும் காந்தளூர் மணியம்பலத்தில் வந்து எங்களுடனே இருந்து விடலாமே!" என்றார் பவழக்கனிவாயர்.

"நான் இருக்க வேண்டிய இடத்தை நானே முடிவு செய்து கொண்டு விட்டேன். நீங்கள் போய் வாருங்கள்" என்று கண்டிப்பாகச் சொன்னார் மகாராணி. யாரும் மறுத்துப் பேச முடியவில்லை. மகாராணியையும், குமாரபாண்டியனையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு எல்லோரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். புவன மோகினி ஒருத்தி மட்டும் மகாராணியாரோடு இருந்து கொண்டாள்.

"மகனே! மேகத்தால் மறைக்கப்படும் சந்திரனைப் போல் இன்னும் சிறிது காலம் பாண்டி நாடு பகைவர் ஆட்சியில் தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. என்னைப் பிறந்த வீட்டில் - சேர நாட்டு வஞ்சமாநகரத்தில் கொண்டு போய்விட ஏற்பாடு செய். இந்தப் பெண் புவனமோகினி என்னோடு துணை வருவாள். எங்கு போய் என்ன செய்வாயோ? மறுபடியும் நீ ஆளாகி இந்த நாட்டை வென்று ஆள்வதற்கு வந்தால் அப்போது நான் உயிரோடு இருந்தால் நாம் மீண்டும் சந்திப்போம்" என்று மகாராணி கூறிய போது குமாரபாண்டியன் உணர்ச்சி வசப்பட்டுச் சிறு பிள்ளைபோல் அழுது விட்டான். வஞ்சிமாநகர் புறப்படு முன் தென்பாண்டி நாட்டுக் கோவில்களுக்கெல்லாம் கடைசியாக ஒரு முறை சென்று தரிசனம் செய்ய வேண்டுமென்று மகாராணி ஆசைப்பட்டார். அந்த ஆசையை நிறைவேற்ற இரண்டு நாட்கள் செலவழித்தான் குமாரபாண்டியன். மூன்றாம் நாள் காலை ஒரு பல்லக்கும் சுமப்பதற்கு ஆட்களும் தேடி மகாராணியையும், புவனமோகினியையும் ஏற்றி அனுப்பினான். அப்போது, "அம்மா! வஞ்சிமாநகரத்துக்கு இங்கிருந்து அதிக நாட்கள் பயணம் செய்ய வேண்டும். கவனமாகப் போய்ச் சேருங்கள். நான் போர்க்களத்துக்குப் போய் போரைக் கவனிக்கிறேன். நல்வினை இருந்தால் மறுபடியும் சந்திப்போம்!" என்று மனங் கலங்கிக் கூறினான்.

"இராசசிம்மா! உனக்கு என் பயணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம் - வஞ்சிமாநகரப் பயணத்தை விட நீண்ட வாழ்க்கைப் பயணத்தை நான் கண்டாயிற்று. இனிப் பயமில்லை. போய் வா! வெற்றியானால் வென்று வா. தோல்வியானால் எங்கேயாவது போய் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்" என்று அவன் மனக் கலக்கத்தைத் தேற்றி வாழ்த்திவிட்டு நிம்மதியாக வஞ்சிமாநகரத்துக்குப் புறப்பட்டார் மகாராணி. தாயைத் தன்னிடமிருந்து பிரிக்கும் அந்தப் பல்லக்குப் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற குமாரபாண்டியன் அதன் தோற்றம் கண் பார்வையிலிருந்து மறைந்ததும் கண்ணில் துளிர்த்த நீர் முத்துக்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினான். நான்கு புறமும் விழிகள் பார்க்க முடிந்த அளவு சுற்றிலும் பார்த்தான். மேலே வானத்தை அண்ணாந்து நோக்கினான். அந்தத் தென் பாண்டி நாடு, அதன் வளம், அதன் அழகு, அதன் செல்வங்கள், அதன் தெய்வத் திருக்கோவில்கள் எல்லாம் சூனியமாய்ப் பாழ் வெளியாய் ஒன்றுமற்ற பழம் பொய்களாகத் திடீரென்று மாறிவிட்டன போலிருந்தது. தன் பெருமையையும், புகழையும், இளவரசன் என்ற பதவியையும் மறந்து எவனோ ஒரு பேதை இளைஞன் போல் நடந்தான் அவன்.

-------

 

3.25. புதியதோர் பெரு வாழ்வு

 

மகாராணியை வஞ்சிமா நகரத்துக்குச் சிவிகை ஏற்றியனுப்பி விட்டு போர்க்களம் நோக்கிப் புறப்பட்ட குமாரபாண்டியன் நடு வழியிலேயே அந்தத் துன்பச் செய்தியைத் தெரிந்து கொண்டான். வேதனைப்படுகிற அளவு கூட அவன் உள்ளத்தில் அப்போது தெம்பில்லை. 'முதல் நாள் காலை பதினொரு நாழிகையளவில் வெள்ளூரை வடதிசைப் படைகள் கைப்பற்றி விட்டனவாம். சக்கசேனாபதியும் அவரோடு எஞ்சியிருந்த ஈழநாட்டு வீரர்களும் விழிஞத்துக்கு ஓடிக் கப்பலேறி விட்டார்களாம்' என்ற செய்திதான் அது. அதைத் தெரிந்து கொண்டவுடன், 'சக்கசேனாபதியின் மேல் குற்றமில்லை! அவர் என்ன செய்வார்? பாவம், பதினொரு நாழிகை வரை என்னை எதிர்பார்த்திருப்பார். நான் மட்டுமென்ன? நானும் போக வேண்டியதுதான். எனக்கு மட்டும் இங்கே என்ன வைத்திருக்கிறது? வெற்றியை நினைத்து வந்தேன். எல்லா வகையிலும் தோல்விதான் கிடைத்தது. பரவாயில்லை. இந்தப் பரந்த உலகத்தில் எங்கேயாவது ஒரு மூலையில் என் ஏக்கங்களையும் நிராசைகளையும் சுமந்து கொண்டு வாழ்வதற்கு இடமில்லாமலா போய்விடப் போகிறது? ஏக்கங்களும், நிராசைகளும், தோல்விகளும், அவநம்பிக்கைகளும் இருக்கின்றவரை நான் வெற்றியை எண்ணித் துடித்துக் கொண்டே இருப்பேன்!' என்று தனக்குத் தானே மெல்லச் சொல்லிக் கொண்டான். தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வேறு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் திரும்பி விழிஞத்துக்குப் புறப்பட்டான் அவன். சோர்வும், துயரமும் தன் மனத்திலிருந்து நீங்கித் தோல்விகளை மறந்து போக வேண்டுமானால் அப்படி மறக்கச் செய்வதற்குரிய ஏற்ற பரிபூரணமான உல்லாச நினைவு ஒன்று அப்போது அவனுக்குத் தேவைப்பட்டது. முழுமையும், செழுமையும் நிறைந்த அந்த உல்லாசம் தனக்குக் கிடைக்க முடியுமென்றே அவனுக்குத் தோன்றியது. கண்களை மெல்ல மூடி மனத்திலிருந்த மற்ற எண்ணக் குப்பைகளையெல்லாம் ஒதுக்கியெறிந்து நினைவை ஒருமைப்படுத்தி எதையோ நினைக்க முயன்றான் அவன்.

அடுத்த கணமே அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கொவ்வைச் செவ்வாயும் அதில் குமிண் சிரிப்புமாக மண்ணுலகத்துச் சூதுவாதுகள் பதியாத மதிவதனம் ஒன்று குமாரபாண்டியனின் உருவெளித் தோற்றத்தில் தெரிந்தது. 'காலம் காலமாய் வளர்ந்தோடும் நாட்களின் சுழற்சியைக் கணக்கிட்டுக் கொண்டு உங்களுக்காகவே தேய்ந்து ஓய்ந்து போய்க் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வந்து என் தவத்துக்கு வெற்றியைக் கொடுக்கப் போகிறீர்கள்?' - என்று அந்த அழகு முகத்தின் பவழ இதழ்கள் திறந்து தன் காதருகே மெல்ல வினவுவது போல் ஓர் உணர்ச்சிப் பிரமை அவனுக்கு ஏற்பட்டது. 'மின்னலில் ஒளியெடுத்து முகில்தனில் குழல் தொடுத்து' என்று அந்த மகா சௌந்தரியத்தை வியந்து அதனால் தூண்டப்பெற்றுத் தான் முன்பு பாடிய கவிதையை அவன் முணுமுணுத்தான். இவ்வாறாக விழிஞத்துக்குச் செல்லும் போது அவன் நடந்து செல்லவில்லை. மதிவதனி என்னும் இனிய நினைவுகளைத் தென்றல் காற்றின் அலைகளாக்கித் தன் உணர்வுகளை மிதக்கச் செய்து விரைந்தான். அந்த விரைவில் அவன் மனம் தாங்கிக் கொண்டிருந்த நினைவும், கனவும், உணர்வும் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் மதிவதனி என்னும் எழில்.

குமாரபாண்டியன் விழிஞத்தை அடையும் போது இரவு நீண்டு வளர்ந்திருந்தது. விழிஞத்து அரச மாளிகைக்குப் போய் அங்கிருந்த குதிரைக்காரக் கிழவனை எழுப்பி அவனிடம் இருந்து வலம்புரிச் சங்கைப் பெற்றுக் கொண்டு துறைமுகத்துக்குச் சென்றான் அவன். ஆள் நடமாட்டம் குறைந்திருந்த அந்த இரவு நேரத்தில் தன்னை இன்னாரென்று எவரும் அடையாளம் கண்டு கொள்ள விடாமல் ஒதுங்கித் தயங்கி நடந்தான் அவன். 'தென்பாண்டி நாட்டின் வளமும் பெருமையும் மிக்க ஒரே துறைமுகப் பட்டினமாக மேற்குக் கடற்கரையில் இலங்கும் அந்த நகரம் இன்னும் இரண்டொரு நாட்களில் வடதிசையரசர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு விடும். அதன் பின் எங்கு நோக்கினும் சோழர் புலிக்கொடி பறக்கும்! அதற்கப்புறம் சிறிது காலத்தில் அவ்வழகிய துறைமுக நகரம் ஒரு காலத்தில் பாண்டியர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்று பழங்கதை பேசுவதோடு நின்று போகும்' என்று இப்படியெல்லாம் நினைத்த போது குமாரபாண்டியனுக்கு மனம் கொதிக்கத்தான் செய்தது. துயரத்தோடு நடந்து போய்ப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஒரு யவனக் கப்பலில் ஏறினான் அவன். இருளாயிருந்தாலும் அவன் ஏறுவதைக் கப்பலின் தளத்திலிருந்து பார்த்து விட்ட மீகாமன் ஓடி வந்து ஏறக்கூடாதென்று விழிகளை உருட்டிக் கோபத்தோடு பார்த்துப் பயமுறுத்தினான்.

அவன் தடுப்பதன் குறிப்பைப் புரிந்து கொண்ட குமாரபாண்டியன் மெல்லச் சிரித்துக் கொண்டே தன் இரண்டு முன் கைகளையும் அழகு செய்திலங்கும் விலை மதிப்பற்ற பொற் கடகங்களைக் கழற்றி, "இந்தா, இதை வைத்துக் கொள்! என்னை இக் கப்பலில் பயணம் செய்ய விடு" என்று சொல்லிக் கொடுத்தான். அவற்றை வாங்கிக் கொண்டதும் கண்கள் வியப்பால் விரியக் குமாரபாண்டியனைப் பார்த்தான் அந்த மீகாமன். மரியாதையோடு விலகி நின்று ஏறிக் கொள்ள வழிவிட்டு வணங்கினான். குமாரபாண்டியன் கப்பலில் ஏறி அதிகம் ஒளி பரவாத ஓரிடம் தேடித் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும் போது, அந்த இருளில் விழிஞம் துறைமுகமும் அதற்கு அப்பால் பன்னெடுந் தொலைவு இரவால் மூடுண்டிருக்கும் தென்பாண்டி நாடும், தன்னைக் கைவிட்டு நீக்கி எங்கோ விலக்கி அனுப்புவது போல் அவனுக்கு ஓர் ஏக்கம் உண்டாயிற்று. அந்த ஏக்கம் சில சொற்களாக உருப்பெற்றது. நிராசையைச் சொற்களாக்கிக் கப்பலிலுள்ள மற்றவர்கள் காதில் விழுந்து விடாதபடி மெல்லத் தனக்குள் முணு முணுத்தான் அவன்.

 

'திருமுடியும் அரியணையும் பெருவீரத்
       
திருவாளும் நினைப்பொழியக்
கருதரிய தென்பாண்டி நிலம் மறந்து
       
கருணைமிகு தாய் மறந்து
சிறுதெரிவை
மதிவதனி சிரிப்பினுக்குச்
       
செயல்தோற்று நினைவலைந்து
பொருதுமனம் பிடித்திழுக்கப் பிடித்திழுக்கப்
       
போகின்றேன் போகின்றேன்.'

 

உணர்ச்சித் துடிப்பில் உருவான சொற்களைத் திரட்டி இப்படி முணுமுணுத்த போது இந்தச் சொற்களின் மூலம் தாய்த் திருநாடாகிய தென்பாண்டி நாட்டினிடமே விடைபெற்றுக் கொண்டு விட்டது போல் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. கப்பல் புறப்பட்டு விட்டது. செம்பவழத் தீவில் தன்னை இறக்கிவிடுமாறு மீகாமனிடம் போய்ச் சொல்லிவிட்டு மறுபடியும் அந்த இருண்ட மூலைக்கு வந்தான். தன்னிடமிருந்த வலம்புரிச் சங்கை மார்போடு சேர்த்துத் தழுவினாற் போல் வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்தான். அந்தக் கப்பலில் யாரோ ஏளனமாகச் சிரித்துக் கொண்டே பேசிய சில வார்த்தைகளை அவன் செவிகள் கேட்டன.

"மறுபடியும் தென்பாண்டி நாடு போரில் தோற்றுவிட்டதாம் ஐயா! தளபதியே பாண்டியப் பேரரசுக்கு எதிராக மாறிவிட்டானாம். எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் இறந்து விட்டாராம். மகாராணி வஞ்சிமா நகரத்துக்குத் தப்பிப் போய்விட்டாராம். அந்தப் பயந்தாங்கொள்ளி இளவரசன் இராசசிம்மன் எங்கோ போய்விட்டானாம்."

"தெரிந்த விஷயம் தானே ஐயா! யார் தோற்றாலென்ன? யார் வென்றாலென்ன? நம்முடைய கப்பல் விழிஞத்துக்கு வந்து போவது நிற்கப் போவதில்லை. பேச்சை விடுங்கள்!" என்று மீகாமன் அலட்சியமாகப் பதிலளித்ததையும் இருளில் முடங்கிப் படுத்திருந்த குமாரபாண்டியன் கேட்டான். அந்தச் சொற்கள் 'சுளீர் சுளீரெ'ன்று தன் நெஞ்சில் அறைவது போலிருந்தது அவனுக்கு. தென்பாண்டி நாடு, வெற்றி, தோல்வி, போர், இளவரசுப்பட்டம், மரபு எல்லாவற்றையும் பழங் கனவுகள் போல் மறந்து விடத் துடித்தது அவன் உள்ளம்.

'மறக்கத்தான் போகிறேன்! நாளைக்குச் செம்பவழத் தீவில் இறங்கி அந்த வெண்முத்துப் பற்களின் சிரிப்பைப் பார்த்த பின் எல்லாவற்றையும் மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கத்தான் போகிறேன்!' என்று வற்புறுத்தி நினைத்துக் கொண்டு மனச்சாந்தி பெற்று உறங்கினான் அவன். உறக்கமென்றால் தானாக உண்டாக்கிக் கொண்ட உறக்கம் தான் அது. அந்தப் போலி உறக்கத்திலும் நினைவுகளின் மூட்டத்திலுமாகக் கப்பலின் இரவுப் பயணத்தைக் கழித்து விட்டான் குமாரபாண்டியன். விடிந்ததும், "ஐயா! எழுந்திரு! இதோ செம்பவழத் தீவு வந்துவிட்டது" என்று மீகாமன் வந்து எழுப்பினான். கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீகாமனும் மற்றவர்களும் தன் முகத்தைப் பார்த்து விடாமல் மேலாடையால் தலையைப் போர்த்தியது போல் முக்காடிட்டுக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கினான் குமாரபாண்டியன். அவன் உள்ளம் இன்பக் கிளர்ச்சி கொண்டு பொங்கியது. அவலக் கவலைகளற்ற, வெற்றி தோல்விகள் இல்லாத ஒரு புதிய போக பூமியை மிதித்துக் கொண்டு நிற்பது போல் அவன் பாதங்கள் உணர்ந்தன. கவலையற்றுப் பொங்கும் உற்சாகத்துடன் வலம்புரிச் சங்கின் ஊதுவாயை இதழ்களில் வைத்து முழக்கினான் அவன். நீராடி எழுந்த கன்னிகை போல் வைகறையின் மலர்ச்சியில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு சோபித்தது. அந்தத் தீவின் கடைவீதித் திருப்பத்தில் நின்று கொண்டு கப்பல் வந்து நிற்பதையும், அதிலிருந்து ஒருவர் இறங்குவதையும் பார்த்தவாறு இருந்தாள் ஓர் இளம்பெண். குமாரபாண்டியனின் சங்கொலி அந்தப் பெண்ணின் செவிகளில் அமுதமாகப் பாய்ந்தது. அந்த ஒலியைக் கேட்ட மறுகணமே அவள் பேதைப் பருவத்துச் சிறுமிபோல் உற்சாகத்தோடு கடற்கரையை நோக்கி ஓடலானாள். அந்தப் பெண்ணின் ஓட்டம் காட்டில் தன் போக்கில் ஓடும் புள்ளிமானை நினைவு படுத்தியது. அவள் அவனை நெருங்கிவிட்டாள். சங்கநாதம் செய்து கொண்டு மணல் திடலில் நின்ற குமாரபாண்டியன் அவளைக் கண்டதும், "மதிவதனீ!" என்று கூவினான். அந்தக் கூவலில் தான் ஊழிஊழியாகத் தேங்கி நின்று சுமந்து போனது போன்ற அன்புத் துடிப்பின் தொனி எத்தனை உருக்கமாக ஒலிக்கிறது? அவள் வந்து அவனெதிரே நின்று பார்த்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தாள். முழு மதியைக் கறைதுடைத்தாற் போன்ற முகத்தில் மலர்ந்து அகன்ற கயல்விழிகளால் அவனைப் பருகிவிடுவது போல் நோக்கிய நோக்கம் பெயரவே இல்லை. கல்பகோடி காலம் பிரிந்து நின்று விரகதாபத்தில் நலிந்து அன்பு தாகத்தால் வாடிய காதலி போல் அவள் கண்கள் காட்சியளித்தன.

"மதிவதனி! நான் வந்து விட்டேன். இனி உன்னைப் பிரிந்து போகமாட்டேன். அன்றொரு நாள் நீ என் உயிரைக் காப்பாற்றினாய். உன்னைக் காப்பாற்றுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன்!" என்று கூறியவாறே அவள் அருகில் நெருங்கி அவளைத் தழுவிக் கொண்டான் குமாரபாண்டியன். அன்புப் பெருக்கில் பேச்செழாமல் வாய்மூடி நின்ற மதிவதனி "என் தவம் வெற்றி பெற்று விட்டது" என்று மெல்ல வாய்திறந்து நாக்குழறச் சொன்னாள்.

"வா, போகலாம்! நம்முடைய வாழ்க்கை இனி இந்தத் தீவின் எல்லைக்குள் ஆரம்பமாகிறது!" என்று அவளைத் தழுவி அணைத்தவாறே நடந்தான் குமாரபாண்டியன்.

அவளோடு அப்படி நடந்த போது அன்பையும் இன்பத்தையும் அனுபவித்துச் சுதந்திரமான எளிமையுடன் காதல் வாழ்வு வாழ்வதற்காகவே ஒரு புதிய பிறவி எடுத்திருப்பது போல் குமாரபாண்டியனுக்குத் தோன்றியது. கடல் அலைகளும், இளைஞாயிற்றின் மாணிக்கச் செங்கதிர்களும், காற்றும், வானமும், பூமியும் அந்தக் காதலர்களுக்கு நல்வரவு கூறுவது போல் அதியற்புதமானதொரு சூழ்நிலை அன்று காலையில் அந்தத் தீவில் நிலவியது. எல்லா இன்பமும் துய்த்துப் பல்லூழி காலம் வாழட்டுமென்று அந்தக் காதலர்களை வாழ்த்திவிட்டு வஞ்சிமா நகருக்குச் செல்வோம். நாம் மகாராணி வானவன்மாதேவியைப் பார்க்க வேண்டுமல்லவா?

தென்பாண்டி நாட்டை வடதிசை மன்னர்கள் கைப்பற்றிய பின் சோழப் பேரரசுக்குட்பட்ட நிலமாகிவிட்டது அது. தளபதியும், கழற்கால் மாறனாரும் கலகக் கூட்டத்தைக் கலைத்து விட்டு எங்கோ ஓடிப் போய்விட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நடந்து முடிந்து ஆறு திங்கட் காலம் கழிந்து விட்டது. சேந்தனும் குழல்வாய்மொழியும், அன்பு மயமான இல்லற வாழ்க்கையை முன்சிறையில் நடத்தி வருகிறார்கள். காந்தளூர் மணியம்பலத்தில் சோழ அரசின் ஆட்சிக்குட்பட்டு அதங்கோட்டாசிரியரும் பவழக்கனிவாயரும் எப்போதும் போல் தமிழ்ப்பணி புரிந்து வருகிறார்கள். அதங்கோட்டாசிரியர் விலாசினிக்குத் திருமணம் முடிப்பதற்காகத் தக்க மணமகனைத் தேடிக் கொண்டிருக்கிறார். தென்பாண்டி நாடு பழைய அமைதியும், வளமும் பெற்றுச் செழிப்பாக இருக்கிறது. இவ்வளவும் தெரிந்த பின், இனி வஞ்சிமாநகருக்குப் போனால் நம்முடைய உள்ளத்தை உருக்கும் உண்மை ஒன்றை தெரிந்து கொள்ள நேருகிறது. வஞ்சிமாநகரத்தின் கீழ்பால் ஊர்ப்புறத்தில் குணவாயிற் கோட்டமென்னும் தவப்பள்ளி ஒன்று நெடுங்காலமாக இருந்து வருகிறது. தூய தோற்றமும், அருளொளி திகழும் முகமும் கொண்ட துறவியர் பலர் அக்கோட்டத்தில் வசித்து வருகின்றனர். இதோ அக்கோட்டத்தினுள் நுழைந்து உள்ளே போகிறோம் நாம். திருக்குண வாயிலாகிய இத் தவச் சாலையின் வாயிலில் பிரம்மாண்டமான மரங்களின் நிழலில் இதோ ஆடவரும் பெண்டிருமாக எத்தனை துறவியர் வீற்றிருக்கின்றனர், பாருங்கள். மரங்கள் அடர்ந்த இம் முன் பகுதியைக் கடந்து உள்ளே செல்வோம். அதோ, தாமரைப்பூ வடிவமாக அமைந்த ஒரு பெரிய பளிங்கு மேடை! அதன் மேல் அமர்ந்திருக்கும் மூதாட்டியை நன்றாக உற்றுப் பார்த்தால் இன்னாரென்று தெரிந்து கொள்ளலாம். நன்றாகக் கூர்ந்து பாருங்கள்.

ஆம்! மகாராணி வானவன்மாதேவி அங்குத் தவக்கோலம் பூண்டு வீற்றிருக்கிறார். வேறோர் இளம் பெண்ணும் தவக்கோலத்தில் அவரருகே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருக்கிறாள். சற்று நெருங்கிப் பார்த்தால் அவளைப் புவன மோகினி என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். மகாராணி விழிகளை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அமைதியான இந்தச் சமயத்தில் அங்கு ஓர் ஆச்சரியம் நிகழ்கிறது. சீரழிந்து உருத் தெரியாது தோற்றம் மாறிப் போய் வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அங்கு ஓடி வருகிறார்கள். "தேவீ! எங்களை மன்னிக்க வேண்டும். எங்களுடைய வெறியால் எத்தனையோ கெடுதல்களைச் செய்துவிட்டோம். மகா பாவிகள் நாங்கள்" என்று கதறியவாறே ஓடி வந்து வணங்கினார்கள்! அவர்கள் கண்கள் கலங்கி அழுகை முட்டிக் கொண்டு வர இருந்தது. மகாராணி கண்களைத் திறந்து அவர்களைச் சிரித்துக் கொண்டே பார்த்தார். அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை. ஒரே சாந்தம் நிலவியது, " நீங்களா? உட்காருங்கள்" என்று அருளின் கனிவு நிறைந்த குரலில் கூறினார் அவர்.

"நாங்கள் பாவிகள், கெட்டவர்கள். உங்களுக்கு முன் உட்காரக் கொஞ்சமும் தகுதியற்றவர்கள்!"

"சந்தர்ப்பம் மனிதர்களைப் பாவிகளாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கலாம். இனியாவது நல்லதாக இருக்கட்டும். போய் நல்வினையைத் தேட முயலுங்கள் இந்த விசாலமான தவப்பள்ளியில் இன்னும் நிறைய இடம் இருக்கிறது. உங்களையும் உங்களைப் போல வர இருக்கும் இன்னும் எத்தனையோ பேரையும் இந்தத் திருக்குண வாயிலின் கதவுகள் எப்போதும் திறந்த வண்ணம் வரவேற்கக் காத்திருக்கின்றன" என்று புன்னகையோடு சொல்லிவிட்டு அவர்கள் பதிலை எதிர்பாராமல் மறுபடியும் கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் மகாராணி.

வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அந்தத் தவக்கோலத்தை வணங்கிவிட்டு அந்தக் குணவாயிற் கோட்டத்தின் உள்ளே சென்றனர். சில நாழிகைகளுக்குப் பின் அவர்களும் தவக்கோலத்தோடு வந்து அமர்ந்த போது தியானத்தில் ஆழ்ந்திருந்த மகாராணி கண் திறந்து பார்த்தார். அவர் வதனத்தில் அருள் நகை மலர்ந்தது. ஒரு கணம் தான்! மறுபடியும் அவர் விழிகள் மூடிக் கொண்டன. அப்போது அந்தப் பக்கமாகக் குணவாயிற் கோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த வஞ்சிமாநகரத்துப் பொதுமக்கள் சிலர் கீழ்க்கண்டவாறு தங்களுக்குள் உரையாடிக் கொண்டு சென்றது அவர் செவியிலும் விழுந்தது.

"அதோ பத்மப் பளிங்கு மேடையில் அருளொலி திகழ வீற்றிருக்கும் அந்தத் தவ மூதாட்டி யார் தெரியுமா?"

"யார்?"

"அவர் சேரநாட்டு மன்னன் மகளாய்ப் பிறந்து பாண்டி நாட்டு மன்னன் பராந்தகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பாண்டிமாதேவியாகப் பெருவாழ்வு வாழ்ந்தவர். இப்போது தவவாழ்வு வாழ்கிறார் இங்கே!"

இந்த உரையாடலைச் செவியுற்ற போது துன்பம் நிறைந்த முன் பிறவி ஒன்றை யாரோ நினைவுபடுத்தினாற் போலிருந்தது அவருக்கு. அவர் சிரித்துக் கொண்டார்.

'உலகம் உயிர்ப் பூக்களின் நந்தவனம்! அங்கே துன்பங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் நடுவாக நடந்து போய்விட வேண்டும்' என்று தியானத்துக்கு நடுவே நினைத்துக் கொண்டு மெய்யுணர்வில் மூழ்கினார் அவர். காலம் சுழன்று வளர்ந்து பெருகிக் கனத்து நீண்டு கொண்டே இருந்தது.



பாண்டிமாதேவி முற்றிற்று


பாண்டிமாதேவி - இரண்டாம் பாகம் நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள் சிலவற்றைப் பார்க்க


 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)