தீபம் நா. பார்த்தசாரதியின்

மணிபல்லவம் (சரித்திர நாவல்)

பாகம் 3 (வெற்றிக்கொடி)

 

உள்ளடக்கம்:      

1. புதிய பூம்புகார்  

2. அறிவுப் போர்க்களம்    

3. வன்னி மன்றம்   

4. புகழ் வெள்ளம்    

5. இருண்ட சமயம் 

6. திருவிழாக் கூட்டம்         

7. பூக்களும் பேசின!           

8. நச்சுப் பாம்புகள்              

9. தொழுத கையுள்ளும்.. 

10. ஆத்ம தரிசனம்

11. உத்தம நாயகன்             

12. குறுகிய பார்வை           

13. உள்ளக்கனலும் நெல்லிக்கனியும்  

14. கற்பூர நறுமணம்

15. மலையோடு வாதம்

16. அகங்கார தகனம்

17. நிலவில் பிறந்த நினைவுகள்

18. சொல் இல்லாத உணர்வுகள்

19. சுந்தர மணித் தோள்கள்

20. புதிய மனமும் பழைய உறவுகளும்

21. மயானத்தில் நடந்தது

22. நள்ளிரவில் ஒரு நாடகம்

23. நல்லவர் பெற்ற நாணம்

24. இணையில்லா வெற்றி

25. வாழ்க்கைப் பயணம்

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

வெற்றிக்கொடி

 

கலந்து நிறைவடைய வேண்டிய கடலைச் சார்வதற்கு முன்னால் தமக்கெனத் தனிப்பெயரும் தனித் தனித் துறைகளும் ஓட்டமும் கொண்டு அலைந்துவரும் ஆறுகளைப்போல உணர்ந்திருப்பதற்கும் உணர வேண்டிய நிறைவுக்கும் நடுவிலுள்ள இடைவெளி தான் மனித வாழ்க்கை. பாயும் நதிகள் கடலோடு கலந்து நிறைந்த பின் தனிப் பெயரும் இல்லை துறையும் இல்லை. நிறைவுக்கு அளவும் இல்லை. எழுவாயாகிய தொடங்குமிடமும் இல்லை. இறுவா யாகிய முடியுமிடமும் இல்லை. குறைவைத் துணைக் கொண்டு நிறைவை அளக்க இயலுமோ? பின்னமும், சிதைவும் உடையதனைக் கொண்டு பின்னமும் சிதைவும் இல்லாத முழுமையை அளப்பது எப்படி? கணிப்பதுதான் எப்படி?

தனியே பிரித்துப் பார்த்தால் ஒன்றாகி விடுவதும், ஒன்றாக்கிப் பார்த்தால் தனியே பிரிந்து விடுவதுமாக இந்த உலகத்தில்தான் எத்துணைத் தத்துவங்கள்! நீர் இல்லாத வெறுங்குடத்தில் வெறுமை என்று சுட்டிச் சொல்லப்படுவதும் ஆகாயமே. குடம் உடைந்து போனால் உடைகிறவரை குடத்துள்ளே இருந்த சிறு வெளியும் பெருவெளியாகி ஆகாயத்தில் கலந்துவிடுகிறது. ஓடுகின்ற ஆற்று நீரிலும், எரிகின்ற தீபத்திலும், பாயும் தண்ணிரும். எரியும் சுடரும் ஒன்றாகவே தெரிந்தாலும், அத்தந்த வினாடிகளில் பாய்வதும் எரிவதுமான நீரும் சுடரும் வேறு வேறுதான். உயிரியக்கமும், இப்படிப் புடை பெயர்வது தெரியாமல் மாறிக் கொண்டிருப்பதுதான் என்பதை ஞானப்பசி தீர்ந்தவனாகத் திருநாங்கூர்ப் பூம்பொழிலிலிருந்து புறப்பட்டு காவிரிப் பூம்பட்டினத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது இளங்குமரன் நினைத்தான். அதிகாலைப் பூவைப்போல் இப்போது அவன் மனம் தூயதாக இருந்தது. கூர்மையான ஊசியின் முனையிற் மிகச் சிறிய கடுகும் தங்கி நிற்க முடியாதது போல ஞானத் தெளிவினாலே துணுகிச் சிந்திக்கப் பழகியிருந்த அவன் மனத்தில் சிறிது எண்ணங்களும் குறுகிய ஆசைகளும் தங்க இடமின்றி நழுவி முன்பு உடல் வலிமையோடு பார்த்த உலகத்துக்கும், இன்று மனவலிமையோடு பார்க்கிற உலகத்துக்கும் நடுவேதான் எவ்வளவு வேறுபாடுகள்! அந்த வலிமையோடு பார்த்த உலகத்தில் தானே எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்ற தன் ஆணவமே மிகுந்து தோன்றியது. இந்த வலிமையோடு பார்க்கிற உலகத்தில் தானும் எல்லாவற்றையும் வளர்க்கவும் வாழ்விக்கவும் முடியும் என்று தோன்றுகிறது. உலகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற எல்லாருடைய துன்பங்களும் நீங்கிச் சமமான மகிழ்ச்சி எங்கும் பரவ வேண்டுமென்று இதயத்தில் எல்லையற்ற கருணை பொங்குகிறது. எல்லையற்ற அனுதாபம் பெருகுகிறது. தன் முதுகு நிறையச் சுமையைத் தாங்கிக் கொண்டு நடக்கிறவன் அந்தச் சுமையால் கூனிக் குறுகி நடப்பதைப்போல் ஆசைகள் கனத்து அழுத்தும்போது அறிவும் தயங்கி மந்தமடைவதுண்டு. வினையின் நீங்கி விளங்கிய அறிவினால் மனத்தில் ஆசைச் சுமைகளேயின்றிக் குறைத்துக் கொண்டு புறப்பட்டிருந்த இளங்குமரன் பூம்பொழிலின் வாயிற்புறம் விசாகை தன்னை வாழ்த்திய விதத்தை நினைத்துக் கொண்டான். ‘இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும் என்று அவன் வலக் கரத்தில் தாங்கியிருந்த ஞானக்கொடியைக் காண்பித்து வாழ்த்தியிருந்தாள் அவள்.

விசாகையின் வாழ்த்தை நினைத்துக் கொண்டு தன் கையிலிருந்த கொடியைத் தானே உற்றுப் பார்க்கிறான் இளங்குமரன். ஞானத்தின் ஒளிக்கு அடையாளம் போல் ஒரு தீபம், சில ஏடுகள் - இவை அந்தக் கொடியில் இலங்கும் உருவங்களாய் வரையப் பெற்றிருக்கின்றன. எது வெற்றி? எது தோல்வி: ஓர் எல்லையில் நின்று பார்க்கும்போது வெற்றியாகத் தெரிவது, மற்றோர் எல்லையில் நின்று பார்த்தால் தோல்வியாகத் தெரி கிறதே! மனிதர்களின் நியதிப்படி பார்த்தால் தங்கள் மனம் நினைத்தது நினைத்தவாறே, விரும்பியது விரும்பிய வண்ணமே விளைந்தால் அது வெற்றி, அல்லாதது தோல்வி. ஒரு விளைவை வெற்றியாகவும் தோல்வியாகவும் எடுத்துக் கொள்வது அந்த விளைவை அனுபவிக்கும் மனப்பக்குவத்தைப் பொறுத்ததுதான்.

காவிரிப்பூம்பட்டினத்தை நெருங்க நெருங்கச் சாலைகளில் கூட்டம் நிறைந்திருந்தது. நீலநாகமறவர் தேரை மெல்லச் செலுத்தினார். தீபாலங்காரங்களும் வாண வேடிக்கைகளுமாக எதிரே மாபெரும் கோநகரம் தெரிந்தது. கடல் அலைகளின் ஓசையோடு இந்திரவிழா ஆரவாரங்களும் கேட்டன. நகரத்தின் ஒளி அலங் காரங்கள் நீர்ப்பரப்பில் பிரதிபலித்து மேலும் அழகு உண்டாக்கிக் கொண்டிருந்தன. இனிமையான இசை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. பூம்புகாரின் எல்லைக்குத் தேர் வந்ததும் இளங்குமரன் தன் மனத்தில் ஒரு சங்கல்பம் செய்யத் தொடங்கினான்:

இந்த ஆரவாரங்களுக்கு நடுவே என் அறிவைக் காப்பாற்று. இந்த வேகத்துக்கு நடுவே எனக்கு நிதானத்தைக் கொடு. இந்தக் கூட்டத்துக்கு நடுவே என்னுடைய தியானத்துக்குத் தனிமையைக் கொடு. தேன் பாத்திரத்துள் சுவைப்பதற்கு இறங்கும் வண்டு அதனுள்ளேயே மூழ்கி மாண்டு போவது போல் கண்ணுக்கினியனவும் செவிக்கினியனவும் நாவுக்கினியனவும் வாசனைக்கு இனியனவும் ஆகிய சுவை வெள்ளங்களில் மூழ்கி அழிந்து விடாமல் நீந்திக் கரையேறுகிற ஆற்றலை எனக்குக் கொடு. நினைவின் அருவங்களாகிய கனவுகளிலிருந்து என் மனம் விலகி நிற்கட்டும். மெய்யொளியை மறைக்கும் பொய்யொளிகளை என் கண்கள் காணக் கூசட்டும். வெற்றுரைகளைக் கேட்காமல் என் செவிகள் மூடிக் கொள்ளட்டும். வெற்றுரைகளைப் பேசாமல் என் நா அடங்கட்டும்.’

தங்கள் தேர் செல்லும் வழியின் இரு புறமும் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் தேருக்குள்ளே நோக்கிக் கை கூப்பி வணங்குவதையும் முகம் மலர்வதையும் நீலநாக மறவர் பார்த்துக் கொண்டே குதிரைகளைச் செலுத்தினார். தாமே அடிக்கடி பின்புறம் திரும்பி இளங்குமரனைப் பார்த்தார் அவர். பவழச் செஞ்சுடர் மேனியும் பன்மடங்கு பெருகிய அழகோடு காந்தி திகழும் கனிந்த முகமண்டலமுமாகக் கொடியேந்தி நிற்கும் குமரக்கடவுளைப் போலத் தேரில் நின்று கொண்டிருந்தான் இளங்குமரன். பிறரால் வணங்கப்படும் தன்மை அல்லது பிறரை வணங்குவிக்கும் தன்மை எதுவோ அது அவன் தோற்றத்திலேயே இரண்டறக் கலந்திருந்தது. புனிதமான சகல சக்திகளும் வாய்ந்த இளந்துறவியொருவனை வணங்குவதாக நினைந்து அவனை வணங்கினார்கள் வழிப் பயணம் செய்த மக்கள்.

அவன் பயணம் செய்த தேர் ஆலமுற்றத்தில் வந்து நின்றபோது, அவனுடைய வாழ்க்கைத்தேர் மூன்றாவது பருவத்தில் வந்து நின்றது. வலது பாதத்தை முன் வைத்து கீழே இறங்கினான் இளங்குமரன். கடற்காற்றிலே அவன் கரத்திலிருந்த கொடி அசைந்தாடியது. மேலே வாகை மரத்திலிருந்து தற்செயலாக உதிர்ந்த பூக்கள் அந்தக் கொடியின் மேலே விழுந்தன.

இந்தப் பூக்கள் போரைத் தொடங்கும் முன்பே உனது கொடிக்கு வெற்றிவாகை சூடுகின்றன என்றார் நீலநாக மறவர்.

இந்த விநாடியில் இங்கே உதிர்ந்த இதே பூக்களை மானசீகமாக எடுத்துக் கொண்டு போய் என் குருவின் பாதங்களில் உதிர்க்கிறேன் நான் - என்று சொல்லி வணங்கினான் இளங்குமரன், அவன் கண்கள் குருவின் உருவத்தை பாவனை புரிய மூடின.

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

1. புதிய பூம்புகார்

 

அவ்வளவு காலம் திருநாங்கூரில் இருந்த பின் இன்று மறுபடியும் வந்து பார்க்கிறபோது காவிரிப்பூம்பட்டினம் முன்பிருந்ததைக் காட்டிலும் பெரிய நகரமாக வளர்ந்திருந்தது போல் காட்சியளித்தது இளங்குமரனுக்கு. நீலநாக மறவருடைய படைக்கலச் சாலையில் அன்று மாணவர்களாக இருந்த பலர் இன்று பயிற்சி முடிந்து வெளியேறி யிருந்தார்கள். இன்று புதிய மாணவர்கள் வந்தி ருந்தார்கள். படைக்கலச் சாலையில் அன்று செடிகளாயிருந்த மாங்கன்றுகள் இன்று மாமரங்களாகிப் பூத்திருந்தன. ஆலமுற்றத்து மரத்தில் ஏற்கனவே இருந்த எண்ணற்ற வீழ்துகள் தவிர இன்னும் புதிய வீழ்துகள் மண்ணில் இறங்கி ஊன்றிக் கொண்டிருந்தன. படைக்கலச் சாலையின் தோட்டத்தில் அன்று சின்னஞ்சிறு குட்டிகளாகத் தாவித் திரிந்து கொண்டிருந்த மான்கள் இன்று கொம்பு கிளைபடரக் குட்டிகள் துணைபடரத் தோன்றின.

அவனுடைய மனத்தைப் போலவே உலகமும் வளர்ந்திருந்தது. மாறியிருந்தது. ஒரு பக்கத்தில் கொல்லர்கள் பழைய வேல்களுக்குத் துரு நீக்கியும் புது வேல்களை வார்த்தும் - பணி புரிந்து கொண்டிருந்தார்கள். அவற்றைப் பார்த்தவுடன் வேலையும் பெண்ணின் விழியையும் ஒப்பிட்டுக் கூறிய நீலநாகமறவர் தனக்கு அறிவுரை சொல்லிய நாளை நினைத்துக் கொண்டான் இளங்குமரன்.

படைக்கலச் சாலையில் நீலநாக மறவருடைய இருக்கையில் தன்னுடைய ஓவியம் இருப்பதைக் கண்டு அது அங்கே எப்படி வந்தது என்று அவன் வியந்தபோது நீலநாகமறவரே அது படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சியை அவனுக்குக் கூறினார்:

நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் நீ திருநாங்கூருக்குப் போய்ச் சேர்ந்திருந்தாய். இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு வந்தவர்கள் உன்னைக் கொலை செய்யும் நோக்கத்தோடு தேடி வந்ததாக அந்த ஓவியன் எனக்குச் சொன்னான் என்றார் நீலநாகமறவர். அதைக் கேட்டு அவன் அதிர்ச்சி கொள்ளவில்லை. பழைய நாட்களாயிருந்தால், “என்னைக் கொலை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்களா?” என்று திமிரோடு எண்ணியிருக்கும் அவன் மனம். இன்றோ, ‘நான் என்றால் எனது உடல் அன்று. நான் என்பது எனது ஆன்மா. ஆன்மாவை எவராலும் கொலை செய்ய முடியாது என்று சிந்தித்தது அவன் மனம்.

இளங்குமரன் இந்திரவிழாவின் முதல் நாளாகிய அன்று மாலை படைக்கலச் சாலையை சேர்ந்த பெரிய யானை ஒன்றில் ஏறிக் கொண்டு வாதிடுவதற்காக உயர்த்திய கொடியுடனே புறப்பட்டபோது அவனால் வெற்றி கொள்ள முடியாத வாதத்தையும் முல்லையையும் உடன் கொண்டு வாயிலில் வந்து வழி மறித்தார் வீரசோழிய வளநாடுடையார்.

நலமாக இருக்கிறீர்களா ஐயா? உங்களோடு கதக்கண்ணன் வரவில்லையா?” என்று புன்முறுவல் பூத்தவாறு விசாரித்த அவனை நோக்கிச் சீறினார் அவர்.

 

நலத்துக்கென்ன கேடு? சாகாததுதான் பெரிய குறை தம்பீ! நீ இன்னும் சிறிது காலம் என்னையும், இந்தப் பெண்ணையும் ஏமாற்றிக் கொண்டு திரிந்தால் அந்தக் குறையும் தீர்ந்துவிடும்.”

அந்தக் கிழவர் தன்மேல் பெருங்கோபத்தோடு வந்திருக்கிறார் என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. நிர்விகாரமான நோக்குடன் அவன் பக்கத்தில் நின்ற முல்லையைப் பார்த்தான். அவள் வளர்ந்து நிறைந்திருந்தாள். அவன் பார்வையில் நாணிக்குழைந்து முல்லை தலைகுனிந்தாள். இளஞ்சூரியனின் ஒளியோடு திகழும் இளங்குமரன் முகத்தையும் கண்களையும் காணக்கூசின அவள் கண்கள். உலகில் உள்ள அறிவின் பரிசுத்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிரே யானை மேல் அமர்ந்திருக்கக் காண்பதுபோல் அவளுக்குப் பயமாகவும் இருந்தது. இப்போது கொடியை ஏந்திக் கொண்டிருக்கும் அவனுடைய இதே கையில் எத்தனையோ புண்களுக்குத் தன் கைகளால் மருந்து தடவி ஆற்றிய நாட்களை நினைத்துக் கொண்டாள் முல்லை. இந்தக் கைகளையும் தோளையும் தொடுவது விளையாட்டாக இருந்த காலம் போய், தொட நினைப்பது தயக்கத்துக்குரிய காரியமாகி விட்ட நிலையில் தான் இருப்பதை அவள் உணர்ந்தாள்.

வளநாடுடையார் முன்பிருந்ததை விடத் தளர்ந் திருந்தார். தலை நாணற் பூவைப்போல் நரை கண்டு வெளுத்திருந்தது. ஆயினும் எரிந்தாலும் போகாத சந்தனக் கட்டையின் மணம்போல் குடி வழி வந்த வீரக்களை சுருங்கிய முகத்தில் இன்னும் ஒடுங்காமல் விரிந்து தெரிந்தது. சண்டைக்குக் கொடி கட்டிக் கொண்டு வந்து நிற்கும் அவரிடம் இளங்குமரன் அமைதியான முறையில் பேசினான்.

ஐயா! பட்டி மண்டபத்தில் சமயவாதம் புரிவதற் காக நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த நகரத்தில் பல நாட்டு அறிவாளிகள் சந்தித்துப் போரிடுவதற்கு இந்திரவிழா நாட்கள்தாம் வாய்ப்பு ஏற்படுத்துகின்றன. நம்முடைய சொந்த விவாதத்தை என்றைக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமே? நானும் குருகுல வாசம் முடிந்து காவிரிப்பூம்பட்டினத்துக்கே திரும்பி விட்டேன். இனிமேல் நாம் சந்தித்துக் கொள்வதும் அரிய காரியம் இல்லையே...”

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை தம்பீ! அந்தத் திருநாங்கூர்க் கிழவனும் இந்த ஆலமுற்றத்து மனிதனும் சேர்ந்து உன்னைச் சரியான பித்தனாக மாற்றியிருக்கிறார்கள். உன்னிடம் மிக முக்கியமான செய்தியொன்று பேச வேண்டும்.இந்திரவிழா முடிந்ததும் ஒரு நாள் தனியாக வந்து சேர் என்று வேண்டா வெறுப் புடன் கூறிவிட்டு முல்லையோடு திரும்பிச் சென்றார் வளநாடுடையார். ஆலமுற்றத்துக் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, தான் வந்திருப்பது தெரிந்து தந்தையும் மகளும் படைக்கலச் சாலைக்குள்ளும் வந்து சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் வரவைப் பற்றி அதுமானம் செய்தான் இளங்குமரன்.

 

யானையைச் செலுத்திக் கொண்டு இரண்டு மூன்று வீதிகளைக் கடந்து நாளங்காடியை நோக்கித் திரும்பிய போது அவனுடைய பழைய நண்பர்கள் சிலர் கை கோர்த்தபடி எதிரே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இப்போது அவர்கள் யாவரும் வளர்ந்து உடற்கட்டும் பெற்றிருந்தனர்.

அவர்கள் தன்னை அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்ற நினைப்போடு யானையின் நடையை மெதுவாக்கி நிற்கச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவர்கள் அவனை யாரோ பெரிய ஞானி என்ற வழக்கமான மதிப்புக்காக உற்றுப் பாராமல் மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு முன்னே நடந்து சென்றார்கள். அவனுக்கு அவர்கள் எல்லாரையும் எல்லாவற்றையும் நினைவிருந்தது. அவனை அவர்கள் எல்லாருக்கும் நினைவில்லை. அவன் மாறியிருந்தான். எதிரே வருகிறவர்கள் செலுத்திய வணக்கங்களையும் மதிப்புகளையும் தன் குருவின் பிரதிநிதியாயிருந்து அவர்கள் சார்பில் வாங்கி அவற்றை அவருக்கே அனுப்பி வைக்கப் பட்டதாகப் பாவித்துக் கொண்டு சென்றான் அவன்.

தெருத் திருப்பங்களிலும், நான்கு வீதிகள் சந்திக்கும் சதுக்கங்களிலும் இளைஞர்கள் பலப்பரீட்சை செய்து கொள்வதற்காகக் கிடந்த இளவட்டக் கற்களைக் கண்ட போது மனத்துக்குள் சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.

யானை நாளங்காடியை அடைந்தபோது வானில் நிலா எழுந்தது. ஒரு கையில் மதுக் கலயத்தையும் இன்னொரு கையில் இளம் பருவத்தினளான ஆடல் மகள் ஒருத்தியையும் பற்றிக் கொண்டிருந்த களி மகன் ஒருவன் வந்து இளங்குமரனை வளைத்துக் கொண்டான்.

இந்த உலகம் பொய். உயிர்கள் பொய். இதை எவரும் படைக்கவில்லை. மதுவினால் உண்டாகும் மயக்கம் போலப் பஞ்ச பூதங்களின் மயக்கம் இது. இதற்குக் காரணமும் இல்லை. காரணனும் இல்லை என்று மது வெறியில் உளறிய அந்தப் பூதவாதிக்குப் பதில் சொல்லாமல் சிரித்தான், இளங்குமரன். இந்திர நீலம்போல் இருண்ட கூந்தலும், வெறியிற் சிவந்த கண் களுமாக அந்தக் களிமகனின் பிடியிலிருந்த கணிகைப் பெண், “நீ என் அன்பனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தோற்றாய்!” என்று இளங்குமரனை நோக்கிக் கைகொட்டிச் சிரித்தாள்.

தன் உணர்வோடு பேசாதவர்களுடைய வாதத்தைச் செவிமடுத்து மறுப்பதுதான் தோல்வி. உங்கள் வாதத்துக்கு நான் மறுமொழி கூறாமலிருப்பதனாலேயே நீங்கள் எனக்குத் தோற்றீர்கள் என்று எண்ணிச் சிரித்துக் கொண்டே மேலே சென்றான் இளங்குமரன். அந்தப் பெண்ணும், களிமகனும் முகத்தைக் கோணிக் கொண்டு அவனுக்கும் அவன் அமர்ந்திருந்த யானைக்கும் அழகு காண்பித்துச் சிரித்தார்கள். இப்படி விடரும், தூர்த்தருமான களிமக்கள் பலர் நாளங்காடியில் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம்தான். இந்திரவிழா நாட்களில் இந்தக் கீழ் மக்களைச் சாதாரண நாட்களிலும் அதிகமாகக் காணலாம்.

 

நாளங்காடியிற் முன்பு ஒரு காலத்தில் தன்னை நிற்கச் செய்து மணிமார்பன் என்ற பாண்டிய நாட்டு ஓவியன் சித்திரம் தீட்டிய மரத்தருகில் வந்ததும், அந்த நினைவால் கவரப்பட்டு அங்கே யானையை ஒரு கணம் நிறுத்தினான் இளங்குமரன். அன்றிருந்தது போலவே அந்த மரத்தில் முல்லைக்கொடி புதராகப் படர்ந்திருந்தது. அதன் கீழே ஓர் அழகிய இளைஞன் மனைவியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

யானை அருகே வந்து நின்றதும் பயந்தாற்போல் எழுந்தார்கள் அவர்கள். அப்படி எழுந்தபோது அந்த இளைஞனின் முகத்தை நன்றாகப் பார்த்த இளங்குமரன். சற்றே வியப்புடன்மணிமார்பா - என்று மெல்லக் கூப்பிட்டான். திகைப்போடு அண்ணாந்து பார்த்தனர் அந்த இளைஞனும் அவன் மனைவியும். இளைஞனுக்கு யானை மேலிருந்த இளங்குமரனைப் புரிந்து கொள்ளச் சிறிது நேரமாயிற்று. புரிந்ததும் அவன் ஆவல் மேலிட்டவனாகப் பேசலானான்: “ஐயா! வணங்குகிறேன். இவள் என் மனைவி. ஊர் திரும்பிய சில நாட்களில் எனக்குத் திருமணமாகிவிட்டது. மனைவியோடு மீண்டும் இந்திரவிழாப் பார்க்க இங்கே வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் பழைய நினைவுகள் எல்லாம் எழுந்தன. அந்தப் பழைய கதையைத்தான் இப்போது இவளிடம் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் எப்படியோ மாறிவிட்டீர்களே! முதலில் எனக்கு அடையாளமே தெரியவில்லை. இவ்வளவு குறிப்பாக நம் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது யார் என்று பார்த்தால் நீங்கள் யானைமேல் உட்கார்ந்திருக்கிறீர்கள்.”

சித்திரக்காரனுக்குக் கூடப் பழகிய முகம் மறப்பதுண்டோ, மணிமார்பா? பார்த்த முகங்களையெல்லாம் நினைவிலும் கண்ணிலும் பதிய வைத்துக் கொள்கிற கலை அல்லவா உங்களுடையது.”

மறந்தது என் தவறு இல்லை ஐயா, இவள் வந்த பின்புதான் இப்படி ஆகிவிட்டது. தன் முகத்தைத் தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில் தங்காமல் செய்து விட்டாள் இந்தப் பொல்லாத பெண் - என்று மனைவியை வம்புக்கு இழுத்தான் மணிமார்பன். அந்தப் பெண்ணின் அழகிய கன்னங்களில் நாண ரேகைகள் நளினமாக ஓடின. இளங்குமரன் சிரித்தபடி மணிமார்பனை மேலும் கேட்டான்:

மறுபடியும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு பயப்படாமல் இந்த நகரத்துக்குள் நுழையும் தைரியம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது அப்பனே?”

இவளுடைய கண்களிலிருந்து என்று மனைவியைச் சுட்டிக் காண்பித்தான் மணிமார்பன். சித்திரக்காரனுக்கென்றே பிறந்த எழிலோவியம் போன்ற அந்தப் பாண்டி நாட்டுப் பெண் மேலும் நாணமடைந்தாள்.

 

இவரை வணங்க வேண்டும். பெண்ணே! ‘உன் பெயருக்குப் பொருத்தமாக மார்பில் மணிமாலை அணியச் செய்கிறேன் -என்று இந்த மனிதர் அன்றைக்கு என்னை வாழ்த்திய வாழ்த்துக்கள்தாம் எனக்கு இன்று இந்த வாழ்வை அளித்திருக்கின்றன என்று தன் மனைவியிடம் உணர்ச்சி பொங்கக் கூறினான் மணிமார்பன். அந்தப் பெண் தரை மண் தோய வீழ்ந்து இளங்குமரனை வணங்கினாள். மணிமார்பனும் சேர்ந்து வணங்கினான். கொடியைச் சற்றே இடக்கரத்துக்கு மாற்றிக் கொண்டு யானை மேலிருந்தே அவர்களை வாழ்த்தினான் இளங்குமரன். வாழ்த்திவிட்டு வாழ்த்திய கையை அப்படியே வைத்துக் கொண்டு, “என்னுடைய மனத்திலும் உடம்பிலும் சத்துவ குணமும், சத்துவ குணத்துக்குரிய தூய இரத்தமும் ஓடாத காலத்தில் இதே கையினால் உன்னை ஒரு முறை அறைந்தனுப்பியிருக்கிறேன். மணிமார்பா! அதை நீ மறந்து என்னை மன்னித்திருப்பாய் அல்லவா?” என்று கேட்டான் இளங்குமரன்.

பழைய புண்ணைக் கீறாதீர்கள். அது முன்பே ஆறிவிட்டது என்று கைகூப்பினான் ஓவியன். அந்த இளங் காதலர்களுடைய மகிழ்ச்சி உரையாடலைத் தான் தலையிட்டு அழித்திட விரும்பாமல் மேலே புறப்பட்டான் இளங்குமரன்.

அப்போது, “ஐயா! இந்திரவிழா முடிந்து ஊருக்குப் போவதற்குள் நானும் என் மனைவியும் ஆலமுற்றத்துக்கு ஒருநாள் வருகிறோம். அந்தப் பெரியவர் அன்று என்னைக் காப்பாற்றித் தக்க வழித்துணையோடு பாண்டிய நாட்டுக்கு அனுப்பியிராவிட்டால் இன்று நான் இப்படி மங்கல வாழ்வு வாழ முடிந்திராது. அவரையும் பார்த்து வணங்க வேண்டும் என்றான் மணிமார்பன்.

ஆகா, அவசியம் வாருங்கள் என்று கூறிவிட்டு யானையைச் செலுத்திக் கொண்டு சென்றான் இளங்குமரன். பூதச் சதுக்கத்துக்கு எதிரே வந்தபோது கூட்டத்தின் நெருக்கடியினால் ஒரு தேரும் அவனுடைய யானையும் ஒன்றிற்கொன்று விலகி வழிவிட முடியாமல் எதிரெதிரே நின்றன. நெருக்கடி தீரட்டும் என்று சிறிது நேரம் காத்திருந்தான் அவன். வழி விலகலாம் என்ற நிலை ஏற்பட்ட பின்பும் எதிரேயிருந்த தேர் விலகாமல் நிற்பதைக் கண்டு அதிலிருந்தவர்களைப் பார்த்தான் இளங்குமரன். அதிலிருந்தவர்கள் தேரை நிறுத்திக்கொண்டு தன்னைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை யாரென்று இன்னும் நன்றாகப் பார்த்தான். அவர்கள் யாரென்று விளங்கிக் கொண்டுகூட அவன் மனம் அமைதி யிழக்கவில்லை. முகம் மலர்ச்சி இழக்கவில்லை.

வழியை விடுகிறீர்களா? போக வேண்டும்?” என்றான் இளங்குமரன்.

நன்றாகப் போகலாமே! உங்கள் வழியை நாங்கள் ஒன்றும் இடுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லையே?”

 

இந்தப் பதிலைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான். “இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் பிறர் வழியை மறித்துக் கொண்டிருப்பது உங்களுக்கே தெரியும். ஆனால் உங்களுக்குத்தான் ஒரு கண் இல்லையே?”

இதைக் கேட்டுக் கீழே தேரின் முன்புறம் நின்று கொண்டிருந்த நகைவேழம்பரின் ஒரு கண்ணும், பின்புறமிருந்த பெருநிதிச் செல்வரின் இரண்டு கண்களும் சினத்தால் சிவந்தன

--------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

2. அறிவுப் போர்க்களம்

 

இடையீடின்றி நெருங்கி வளர்நத பசும் புல்வெளியில் பால் குடம் சரிந்தது போல் நாளங்காடியின் அடர்ந்த மரக் கூட்டங்களுக்குள்ளே நிலவு கதிர் பரப்பிக் கொண்டிருந்தது. எதிர்ப் பக்கத்தே வழியை மறித்தாற் போல் நின்ற தேரிலிருந்து தன்னைச் சினத்தோடு நோக்கிய நகைவேழம்பரையும் பெருநிதிச் செல்வரையும் சிரித்துக் கொண்டே பார்த்தான் இளங்குமரன். அந்தப் பார்வையும் சில கணங்கள்தான். அதன் பின் கூட்டம் விலகி வழி ஏற்பட்டிருந்த வேறு பக்கமாக யானையைத் திருப்பிச் செலுத்திக் கொண்டு சென்றான் அவன். நாளங்காடியில் இன்று சந்தித்த இந்த இருவரும் அவனுடைய மனத்தில் கடுமையான வெறுப்புக்கும் குரோதத்துக்கும் உரியவர்களாக இருந்த காலமும் உண்டு. இன்றோ அவனுடைய மனத்திற்குள் எவர் மேலும் வெறுப் பில்லை; எவர் மேலும் குரோதமில்லை. உருவுடன் கூடிய ஆசைகளும் உருவமற்ற ஆசைகளும் எதுவுமே இல்லை. மேலே மிக உயர்ந்த வானப் பரப்பில் பறக்கும் பறவை சிறகுகளைத் தவிர வேறெந்தப் பாரமும் இல்லாமல் பறந்து செல்வது போல் அவனுடைய நினைவுகளின் போக்குக் கீழேயிருந்து மிக உயரமான இடத்தில் மிக உயரமான மார்க்கத்தில் சென்றது. விருப்பு வெறுப்புக்களில் சாயாத நிலையான மனத்தைச்சமசித்தத்துவம் என்று கூறியிருந்தார் நாங்கூர் அடிகள். சமசித்தத்துவத்தை அடைய முயன்று கொண்டிருந்தான் இளங்குமரன். அப்படிப்பட்ட சித்தத்தோடு பார்க்கிற போது உலகமே விசித்திரம்தான்.

சாயவும் கோணவும் செய்யாமல் ஒருநிலைப்பட்ட மனத்தோடு இன்னதைக் காணலாம், இன்னதைக் காணக் கூடாது என்ற சம்பிரதாய எல்லைகளையும் கடந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரிவன எல்லாம் அநுதாபத்துக்கும், பரிதாபத்துக்கும் உரியனவாகவே தென்படுகின்றன. துன்பப்படுகிறவர்கள், இன்பப்படுகிறவர்கள், துன்பமும் இன்பமும் கலந்து படுகிறவர்கள் எல்லாரும் இந்த உலகத்தில் நெஞ்சில் சுகமோ, துக்கமோ எதையோ சுமந்து கொண்டு திரிகிறார்கள். உடம்பையும் பொருட் சுமைகளையும், தேரிலோ, குதிரையிலோ பிறரிடம் கொடுத்தோ சுமக்கச் செய்வது போலச் சுமக்கச் செய்ய முடியாதது நெஞ்சின் சுமை. நினைப்பதைச் சொல்ல இயலாமல் சுமப்பதைத் தவிர்க்க முடியாமல் குழந்தையின் துன்பம் போல் தனக்குற்றதைச் சொல்ல மொழியின்றிச் சொன்னாலும் அவற்றுக்கு உணர்த்தும் ஆற்றலின்றித் தவிப்பது ஒப்ப இந்திர விழாக் கூட்டத்தில் தெரிந்த முகங்களில் எல்லாம் தான் இரங்குவதற்கான ஏதோ ஒர் உணர்வைத் தேடிக் கொண்டிருந்தான் இளங்குமரன். சுகத்தைச் சுமந்தால் என்ன? துக்கத்தைச் சுமந்தால் என்ன? சுமை என்னவோ சுமைதானே? சுமைக்கு உள்ளடங்கிய பொருள் உப்பானாலும் வெல்லமானாலும், சுமக்கிறவனுக்குக் கனமான சுமையாவது போலத்தானே நினைவுகளும்? உப்புச் சுமையை விட வெல்லச் சுமை அதிகமாகக் கனத்தாலும் கனக்கலாம்.

மதுவிலிருந்து பிறக்கும் மயக்கம் போல ஐம்பெரும் பூதங்களின் மயக்கமே இந்த உலகம் என்று வெறியுடன் கூறிக் கொண்டு வந்த அந்தக் களிமகனிலிருந்து, கனல் பொறி பறக்கும் பார்வையால் தன்னை எரித்துவிடுவது போலப் பார்த்த நகைவேழம்பர், பெருநிதிச் செல்வர் வரை எல்லாருடைய நெஞ்சிலும் சுமை இருப்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று. ஆசையாக இருக்கிறவரை அதுவே ஒரு சுமை. ஆசை நிறைவேறி விட்டால்நிறைவேறி விட்டது என்று நினைத்து நினைத்துப் பூரிக்கும் திருப்தியே ஒரு சுமை. எண்ணியது நிறைவேறா விட்டால் நிராசையும், அதனால் ஏமாற்றம் உண்டாவதும் சுமையே. ஆகாயத்தில் பறக்கும் பறவையைப் போல நெஞ்சில் சுகதுக்கச் சுமையில்லாத நாங்கூர் அடிகளைப் போன்றவர்களே உயர்ந்த நினைவுகளில் சஞ்சரிக்க முடிகிறதென்று எண்ணினான் இளங்குமரன். அவருடன் பழகிய பயனாலே தனக்கும் அந்த நிலை ஒரளவு வந்ததெனவும் நம்பினான்.

இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்த மனத்தோடு யானையைச் செலுத்திக்கொண்டு நான்கு பெரிய வீதிகள் சந்திக்கும் நாளங்காடிச் சதுக்கத்துக்கு வந்திருந்தான் அவன். அந்த இடத்தில் அவன் வெற்றி கொள்ள வேண்டிய போர்க்களம் காத்திருந்தது. அங்கே பல்வேறு சமயங்களைச் சேர்ந்த அறிஞர்கள் பிறரை வாதத்துக்கு அழைக்கும் கோலத்தில் கொடி கட்டிக் கொண்டு கூடி யிருந்தார்கள். எங்கும் அறிவொளிரும் கண்கள். சுவடிகள் நிறைந்த கைகள். எதிர்த்து வாதம் புரிவதற்காக மற்றவர்களை அழைக்கும் கொடிகள். வாதிடுபவர்களின் திறமையைக் காண்பதற்காகக் கூடியிருந்தவர்களின் முகங்களில் எல்லையில்லாத ஆர்வம் தெரிந்தது. யானையிலிருந்து கீழிறங்கி கொடியும் கையுமாக, அந்த ஞான வீதிக்குள் நுழைந்தான் இளங்குமரன். அங்கிருந்த வயது மூத்த அறிஞர்களுக்கு நடுவே பேரெழில் நம்பியாகிய இளைஞன் ஒருவன் கொடி ஏந்திய கையினனாக நுழைந்தவுடன் கூடியிருந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொது மக்களுக்கு ஆர்வம் பெருகிற்று. இனிமேல் இங்கே சுவையான நிகழ்ச்சிகளைக் காணப்போகிறோம் என்பது போன்ற உற்சாகமும் அவர்களுக்கு உண்டாயிற்று.

 

இந்தப் பெரிய உலகம் முழுவதும் படைப்புக்கு முழு முதற் காரணனாகிய தேவன் ஒருவன் இட்ட முட்டை. படைப்புக்கு நல்வினை தீவினைகள் காரணமில்லை; தேவன் ஆணை ஒன்றே போதும் என்று தனது கொடிக்குக் கீழே நின்று இரைந்து கூவிக் கொண்டிருந்த ஒரு பிரமவாதிக்கு முன்னால் போய் நின்றான் இளங்குமரன்.

ஒளிமயமான உடலோடு கந்தருவருலகத்து இளைஞன் ஒருவன் போல எதிரே வந்து கொடியை ஊன்றிக் கொண்டு நிற்கும் இளங்குமரனைக் கண்டவுடன், அந்தப் பிரமவாதி தான் திரும்பத் திரும்பக் கூறிக் கொண் டிருந்தவற்றை நிறுத்திவிட்டு அவனை உற்றுப் பார்த்தார். அவருடைய பார்வையைக் கண்டு இளங்குமரன் புன்னகை பூத்தான்.

உச்சந் தலையில் இருந்து உள்ளங் கால் வரை தேடுவதுபோல என்னிடம் எதைப் பார்க்கிறீர்கள், ஐயா?”

எதையா? பார்க்க வேண்டியதைத்தான் பார்க்கிறேன். நீயோ இளம் பிள்ளையாகத் தோன்றுகிறாய். காற்றாடியைப் பறக்கவிட்டு மகிழ வேண்டிய கைகளில் கரையில்லாத ஞானத்தின் சின்னமாகிய இந்தக் கொடியை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறாய். என்னைக் காட்டிலும் குறைந்த அறிவுள்ளவர்களோடு நான் வாதிடுவது ஏகதேசம்* என்னும் தருக்கக் குற்றமாகி விடுமே?”

வாதி - பிரதிவாதி இருவரில் ஒருவரது பலக்குறைவு

ஞானத்தின் நிறைவையோ குறைவையோ தோற்றத்திலிருந்தும் பருவத்திலிருந்துமே தெரிந்து கொண்டுவிட முடியுமா? முடியுமானால் காட்சியைத் தவிர மற்ற அளவைகள் எல்லாம் பொய்யாகி விடுமே? காட்சியே அளவையும் துணிவும் ஆனால் எனக்கு நீங்கள் சொன்ன அதே தருக்கக் குற்றத்தை உங்களுக்கும் நான் சொல்லலாமே. ஊன்றுகோலை ஊன்றித் தொண்டு கிழவராய்த் தள்ளாடி நடக்க வேண்டிய முதிய வயதிலே தளர்ந்த கைகளில் கொடியோடு நிற்கிறீர்களே? ஊக்கமும் உற்சாகமும் கற்ற நூல்களின் எந்தப் பகுதியிலும் எந்த விநாடியிலும் மனத்தை இணைத்து கொள்ள முடிந்த ஞாபகமும் உள்ள இளைஞனாகிய நான், மூப்பினால் இவற்றையெல்லாம் இழந்திருக்கும் உங்களோடு வாதம் புரிய விரும்புவதும் ஏகதேசம் என்னும் தருக்கக்குற்றம் ஆகுமே. பசுவின்கால் குளம்பைக் காட்டிலும் அதற்குப் பின்னால் முளைத்த கொம்பு வலியதாவதுபோல் முன் தோன்றியதனினும் பின்தோன்றியது வலிமையுடையதென்னும் நியாயமும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே...?”

இதைக் கேட்டபின் கண்களை அகலவிரித்து இளங்குமரனை வியப்போடு பார்த்தார் அந்தப் பிரமவாதி. ‘யாரோ சிறுபிள்ளை, தன்னை வம்புக்கு இழுக்க வந்திருக்கிறான் என்று நினைத்ததற்கு முற்றிலும் மாறாக எதிரே நிற்பவன் பழுத்த ஞானமும் தருக்க நியாய வழிகளில் நல்ல தேர்ச்சியும் உள்ளவன் என்று அறிந்ததும் தன்னுடன் அறிவுப் போரிட வந்திருப்பவன் தனக்குச் சரியான எதிரிதான் என்ற நிறைவோடு அவர் வாதிட முன் வந்தார்.

 

பால் தயிராவது போலப் பிரமமே உலகமாகத் திரிந்து ஆக்கம் பெற்றிருக்கிறது. உயிர்களுக்கு நல்வினை, தீவினை இரண்டும் முதல்வனாகிய இறைவன் ஆணையினால் வருமென்பது பொருந்தாது. உலகத்து மக்கள் ஒன்றைச் செய்வதற்குக் கருவியும், துணைக் கருவிகளும் வேண்டி நிற்றல் போல இறைவனுக்கு இவ்வுலகைப் படைக்கும் காலத்தில் துணைக் கருவிகள் வேண்டியதில்லை. வேண்டும் என்றால் முழு முதலாகிய இறைவனின் சுதந்திரத்திற்கு அது இழிவாகும் அல்லவா?” என்று பரிணாம விவாதத்தைத் தொடங்கினார் பிரமவாதி.

நீங்கள் கூறுவது பொருந்தாது. இருவினைகள் துணைக் கருவிகளாகவே அமையும். பிறவி வினையினால் வந்தது, வினைக்கு விளைவாகியது. நல்வினைக்குப் பயன் இன்பம்; தீவினைக்குப் பயன் துன்பம். பயன்களை நுகர்வதற்குப் பிறந்தே ஆக வேண்டும். பழத்தினுள் அடங்கிய வித்துக்கள் மீண்டும் முளைப்பது போல வினைகள் பழுத்த பின் பயன் தோன்றுவது தவறாது. புனருற்பவமாகிய மறுபிறப்பில் வினைவித்துக்கள் முளைக்கும். ஒரு நகரத்து அரசன் தன் நகரத்தைக் காப்பதற்குக் காவலர்களை நியமிப்பதுபோல இறைவனுடைய நியமனம் பெற்று இரு வினைகள் ஆணை நடத்தும். ஆகையினால் உங்களுடைய பரிணாம வாதத்துக்குப் பொருள் இல்லை. எந்தவிதமான பயனும் இல்லை.”

நல்லது! அப்படியானால் நீ இதற்குப் பதில் சொல்! வினைகள் உண்டு என்பதற்கும் அவை உயிர்க்குப் பயனாகத் தொடரும் என்பதற்கும் அவை முதல்வன் ஆணையால் நடக்கும் என்பதற்கும் சான்று என்ன? உள்ள பொருளானால் அப்பொருள் தோன்ற வேண்டும். வினைகளுக்குத் தோற்றம் ஏது?”

தோற்றமற்றவையெல்லாம் இல்லாப் பொருள்கள் என்பது உங்களுடைய முடிவானால் இந்த உலகமாகிய முட்டையை இட்டவனாக நீர் கூறும் தேவன் தோன்றாமையின் இல்லாதவனாவான். இல்லாப் பொருள்கள் எல்லாம் தோற்றமுடையனவும் அல்ல, தோன்றாப் பொருள்களெல்லாம் இல்லாதனவும் அல்ல. உள்ளதாவதொரு பொருளை மறுப்பதற்கே இல்லை என்னும் சொல் பயன்படும். ஆகையினால் நீர் இல்லையென்று மறுப்பதனாலேயே அது உள்ளதாகின்றது. பொருள் தோன்றிய பின்பே அதற்குக் குணந்தோன்றும் என்பது தருக்க நூல் முடிவாதலால்வினைகள் இல்லையென அவற்றுக்கு இன்மையாகிய குணத்தை நீர் கற்பிக்கத் தொடங்கியதனாலே அதற்கு முன்பே அவை உள்ளனவாகக் கருதி உடன்பட்டீர். முற்பிறவியில் சேர்த்த வினைகளில் அப்போதே நுகர்ந்தவை போக எஞ்சிய வினைகள்சஞ்சிதம் எனப் பெயர் பெறும்.

 

ஆசைப்பட்டு அடைந்த இன்பமும் இன்பப்பட்டு அடைந்த ஆசைகளுமாக விருப்பம் அடங்காமல் வளர்வதைப் போலத் துன்பப்படுவதனால் பெற்ற ஆசைகளும் ஆசைப்படுவதனால் பெற்ற துன்பங்களுமாக வினைகள் உயிருக்குப் பயனாகத் தொடரும் இயல்பின. சூதாடுகிறவர்கள் சூதில் பொருளை இழக்க இழக்க, இழந்தவற்றைப் பெறுவதற்காக மேலும் அவ்விளையாட்டின் மேல் பெருங்காதல் கொள்வர். இழந்தவற்றைப் பெற்ற பின்பும் மேலும் மேலும் பெறுகிற ஆசையால் காதல் பெருகும். ஆகவே சூதாடுகிறவர்களுக்குத் தோற்றுத் துன்பப்படுகிற போதும் ஆசை; வென்று இன்பப்படுகிற போதும் ஆசையே. ஆசையாகிய துன்பமும், துன்பமாகிய ஆசையும் மாறி மாறி நிலவும் சூதாடுமிடம்போல உயிர்கள் ஏதாவதொரு வினை எஞ்சி நிற்கும் படியே தொடரும்.

 

இழத்தொறு உம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழந்தொறுஉம் காதற்று உயிர்

 

என்ற ஆன்றோர் வாக்கை நீரும் கேள்விப்பட்டது உண்டு அல்லவா? காந்தத்துக்கு நேராக இரும்பைப் பிடிக்கும் போது அந்தக் காந்தமே இரும்பை வலித்து இழுத்துக் கொள்ளுதல் போல இறைவன் துகர்வித்தலாலே வினைப் பயனை உயிர்கள் நுகரும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்...”

என்று இளங்குமரன் கூறி விளக்கியபோதில் மேலே அவனிடம் என்ன கேட்பது என்று தோன்றாமல் தடு மாறினார் அந்தப் பிரமவாதி. அவர் தலை குனிந்தார். ஏதேதோ சுவடிகளைப் புரட்டினார். மீண்டும் சுவடிகளைக் காட்டிவிட்டு நிமிர்ந்தார். ஏதோ கேட்கத் தொடங்கிவிட்டுக் கேள்வியை முடிக்காமலே மறுபடி தலைகுனிந்தார். அப்போது குனிந்த அவருடைய தலை மீண்டும் நிமிரவே இல்லை. சுற்றிலும் கூடியிருந்த பெரு மக்களிடமிருந்து நாவலோ நாவல் என வெற்றிக் குரல் முழக்கம் எழுந்தது. அந்த முழக்கம் மேலே எழுந்து ஒலிக்கத் தொடங்கிய அதே நேரத்தில் அவருடைய கொடி கீழே விழுந்தது.

இளங்குமரன் அந்த வெற்றியின் செருக்கில் தன் மனம் கனத்துப் போகாமல் குருவை தியானித்துக் கொண்டு சுற்றிலும் ஒலித்த வாழ்த்தொலிகளைக் கேட்பதிலும் உணர்வதிலும், உதாசீனனாகி மேலே நடந்தான்.

உலகத்துப் பொருள்களின் பொதுத்தன்மை, சிறப்புத் தன்மை, கூட்டத்தன்மை ஆகியவற்றை விவரித்துக் கொண்டேவைசேடிகன் ஒருவன் இளங்குமரனுக்கு முன்னால் வந்து தன்னுடைய கொடியை நட்டான். காது செவிடுபடும்படி உரத்த குரலில் பேசினான் அவன். .

 

பொருள்களிலே நீர், ஒலி, ஊறு, உருவம், சுவை ஆகிய நான்கு குணங்களை உடையது. தீ ஒலி, ஊறு, உருவம் ஆகிய மூன்று குணங்களை உடையது. காற்று, ஒலி, ஊறு ஆகிய இரண்டே குணங்களை உடையது. ஆகாயம் ஓசைக் குணம் ஒன்றே உடையது என்று செவிகளைத் துளைக்கிறாற் போன்ற பெருங்குரலில் ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பக் கத்தினான் அந்த வைசேடிகன். அவனைப் பார்த்து, “இப்போது இந்தக் கணமே ஆகாயம் தனது ஓசைக் குணத்தை இழந்து விட்டது, ஐயா!” என்று சொல்லி மெல்லச் சிரித்தான் இளங்குமரன். “ஏன்? எப்படி இழந்தது?” என்று வைசேடிகன் வெகுண்டு கேட்டபோது, “ஆகாயத்தின் ஓசைக் குணம் அவ்வளவும் இப்போது உங்களுக்கே வந்துவிட்டது. இல்லாவிட்டால் இவ்வளவு பலமாகக் கத்துவீர்களா?” என்று நிதானமாகச் சொல்லிக் கூட்டத்தில் சிரிப்பலைகளை எழச் செய்தான் இளங்குமரன்.

-----------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

3. வன்னி மன்றம்

 

இந்திரவிழாவின் காரணமாக அறிஞர்கள் ஒன்று கூடியிருந்த நாளங்காடிச் சதுக்கத்தில் தன்னை எதிர்ப்பவரைத் தலைகுனியச் செய்யும் இணையில்லாத ஞானத்தோடு இளங்குமரன் சமயவாதம் புரிந்து கொண்டிருந்த இதே சமயத்தில் பூம்புகாரின் வேறொரு பகுதியில் அவனை அழித்து ஒழிப்பதற்குச் சமயத்தைத் தேடி வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இரண்டு மனிதர்கள்.

புறநகரில் சக்கரவாளக் கோட்டத்து மதிலருகே நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் தாங்களிருவரும் ஏறி வந்திருந்த தேரை நிறுத்திவிட்டுப் பேசியவாறே நடந்து கொண்டிருந்தார்கள். பூதம் நின்ற வாயிலில் மேல் நோக்கி வானளாவ நிற்கும் பூதச் சிலையின் தலையிலே சூட்டினாற்போல் நிலவின் ஒளி பரவிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் அவர்கள் இருவரையும் தவிர வேறு மனித சஞ்சாரமே இல்லை. நகரமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மாபெரும் திருவிழா தொடங்கியிருக்கும் போது சுடுகாட்டுக் கோட்டத்துக்குப் போகிற பாதையில் வேறு யார்தான் வருவார்கள்?

பெருநிதிச் செல்வர் ஆத்திரம் அடைந்தாற் போன்ற கண்டிப்பான குரலில் நகைவேழம்பரிடம் பேசிக் கொண்டு வந்தார்.

உலகத்தையெல்லாம் ஏமாற்றுகிற சாமர்த்தியத்தை வைத்துக் கொண்டு நீரே சில சமயங்களில் பிறரிடம் ஏமாந்து விடுகிறீர் நகைவேழம்பரே! இந்தப் பிள்ளையாண்டான் துறவியாகி எங்கோ கண்காணாத நாடுகளுக்குச் சென்றுவிட்டதாகக் கூறினிரே. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் இப்படிக் கொடி சுமந்த தோற்றத்தோடு யானைமேல் அமர்ந்து இவன் இங்கே வருவானென்று நீர் எதிர்பார்க்கவில்லையோ? சாதுரியமாக வாழ விரும்புகிறவன் தங்களுடைய வழிகளில் வேண்டாதவர்களுடைய குறுக்கீட்டை எந்தக் கணத்திலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உமக்கும் எனக்கும், நிர்ப்பயமான வாழ்க்கை சாகின்ற வரையில் இருக்க முடியாது. பயமுறுத்தி வாழ வழி செய்து கொண்டவர்கள் பயந்து பயந்து வாழ்வது தான் நியதி. பிறரை அலற அலற, அழ அழப் பயமுறுத்திய நாட்களை நீரும் மறந்திருக்க மாட்டீர்; நானும் மறக்கவில்லை. உம்முடைய திறமையை யெல்லாம் செலவழித்து இரண்டு முறை இந்தப் பிள்ளையாண்டானைக் கொலை செய்ய முயன்றீர். முடியவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே இந்திர விழாவின் முதல்நாள் இரவில் சம்பாபதி வனத்தில் இவனையும் இவன் வளர்ப்புத் தந்தையையும் சேர்த்து அழித்துவிடுவதற்காக முரட்டு நாகர்கள் இருவரை ஏவினோம். முடியவில்லை. பின்பு இவனும் இவனை வளர்த்த அருட்செல்வரும் தங்கியிருந்த தவச்சாலைக்குத் தீ வைக்க ஏற்பாடு செய்தோம். அந்த ஏற்பாட்டிலும் அருட்செல்வ முனிதான் எரிந்து சாம்பலானார். இந்தப் பிள்ளை அப்போது தவச் சாலையில் இல்லாததால் தப்பிவிட்டான். இவன் சாகாமல் வளர்ந்து நமக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பது தான் தெய்வ சித்தம் போலி ருக்கிறது!” என்று பெருநிதிச் செல்வர் கூறியதைக் கேட்டு நகைவேழம்பர் சிரித்தார்.

தெய்வ சித்தம் என்று ஒன்று இருப்பதாக நம்புகிற அளவு நீங்கள் தளர்ந்து விட்டீர்களே. நம் சித்தபடி இவ்வளவும் நடந்திருப்பதைக் கண்ட பின்பும் உங்களுக்கு எப்படி இந்தப் பிரமை ஏற்பட்டது? எல்லா ரகசியமும் தெரிந்த அந்தக் கிழட்டு முனிவனே மண்ணோடு மண்ணாகிப் போனபின் இந்தப் பிள்ளையாண்டானைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே? முன்பாவது நாலுபேரை அடித்துத் தள்ளுகிற வலிமை இவன் உடம்பில் இருந்தது. இப்போது வெறும் ஏட்டுச் சுரைக் காயாகி விட்டான். தெய்வமில்லை, சித்தமுமில்லை. எல்லாம் நாம் ஆசைப்படுகிற விதமே நடக்கிறது. நடத்துகிறோம், இனியும் நடக்கும்.”

அப்படித் தடையில்லாமல் நடப்பதனால் தான் எனக்குப் பயமாயிருக்கிறது, நகைவேழம்பரே! யாருக்கும் தெரியாத நேரம் என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்டு திருடினாலும் திருடனுக்குத் தன் செயலில் அதிகமான பயம்தான்! நீடித்து நிலைக்க வேண்டிய காரியத்துக்கு ஒரு தடையும் இல்லாமல் போவதே பெரிய தடை என்பார்கள். நிற்கவும் நிலைக்கவும் ஆசைப்படுகிற காரியத்துக்குத் தடையின்மையே அவலட்சணம். யாரும் சந்தேகப்படாமல் இருப்பதைப் பார்த்தே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. யாரும் எதிர்த்து வராமல் இருப்பதே எனக்குப் பெரிய எதிர்ப்பாகப்படுகிறது. யாரும் பயமுறுத்தாமல் இருப்பதே எனக்குப் பெரிய பயத்தைத் தருகிறது. போதாத குறைக்கு இந்தப் பிள்ளையாண்டானுக்கு நீலநாக மறவருடைய ஆதரவு வேறு இருக்கிறது. வீட்டுக்குள் அடைத்து விட்டதனால் என் மகள் சுரமஞ்சரியின் ஆதரவு இனி இவனுக்குக் கிடைக்க வழியில்லை.”

 

ஒருவேளை வானவல்லியின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று ஒரு வார்த்தைக்காகச் சொல்கிறவர் போலச் சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். பெருநிதிச்செல்வர் கடுமையாக அதனை மறுத்தார்.

அது ஒருகாலும் சாத்தியமில்லை, நகை வேழம்பரே!”

சாத்தியமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எவனுடைய கண்களில் தன்னுடைய ஆசைகள் பிறவாமல் பிறருடைய ஆசைகளைப் பிறப்பிக்கும் ஆற்றல் நிறைந்திருக்கிறதோ அவனுடைய கண்களின் முன் பெண்கள் நிறையிழத்தலைத் தவிர்க்க இயலாது! இந்தப் பிள்ளையின் கண்கள் அத்தகையவை...” என்றார் நகைவேழம்பர்.

இருவருக்கும் வேண்டாத வழியிலிருந்து அந்தப் பேச்சைத் திருப்பினார் பெருநிதிச் செல்வர். “இப்படிப் பார்த்தாலும் இன்னும் இந்தப் பிள்ளையை அழிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. அதை வற்புறுத்தத்தான் இவ்வளவு சொன்னேன் நகைவேழம்பரே!”

அழிப்பது பெரிய காரியமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த முயற்சியின் அருகில் போகும் போது எப்படியோ நான் தோற்றுவிடுகிறேன். கடைசியாக இவனை அழிக்கும் எண்ணத்துடன் இவனது ஓவியத்தைப் பலரிடம் கொடுத்தனுப்பிய போதும் இப்படியேதான் ஆயிற்று. ஆலமுற்றத்து முரடனிடம் நான் அடி வாங்கிக் கொண்டு வந்ததுதான் மீதம்.”

அதெல்லாம் பழைய கதை. இப்போது என்ன செய்யப் போகிறீர் என்று சொல்லும்.”

இதற்குச் சிறிது நேரம் மறுமொழி கூறாமல் இருந்தார் நகைவேழம்பர். அவர் ஏதோ சிந்திப்பது போலிருந்தது.

உமக்குக்கூட இப்படிச் செயல்களுக்கு எல்லாம் யோசனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதா?”

யோசனை ஒன்றுமில்லை. இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று திட்டமிட்டேன். தேர் இங்கேயே நிற்கட்டும். வாருங்கள் நடந்தே உட்பக்கம் போய் வரலாம். இந்தக் காரியத்தைப்பைரவி மூலமாகச் செய்தால் நினைத்தபடி முடியும். இப்போது போனால் சுடுகாட்டுக் கோட்டத்தில் வன்னி மன்றத்தின் அருகே அவளைச் சந்திக்கலாம் என்றார் நகை வேழம்பர்.

பைரவி என்ற பெயரைக் கேட்டதும் பெருநிதிச் செல்வரின் முகம் பயத்தினால் இருண்டது.

 

பைரவியா, அந்தப் பைசாசத்தையா இப்போது பார்க்க வேண்டுமென்கிறீர்கள்?” என்று தயங்கினார் பெருநிதிச் செல்வர்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுபோல் இருந்தால் ஒன்றும் முடியாது. இந்த அகாலத்தில் சுடுகாட்டுக் கோட்டத்தைக் கடந்து போகக் கூசுகிறீர்கள். நீங்கள் கூசினால் கூசிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.”

நான் ஒன்றும் கூசவில்லை. இதோ வருகிறேன். புறப்படுங்கள் என்று உறுதியானதொரு தீர்மானத்துக்கு வந்தவரைப்போல முன்னால் நடந்தார் பெருநிதிச் செல்வர். நகைவேழம்பரும் தொடர்ந்தார். சக்கரவாளக் கோட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நீண்ட தொலைவு நடந்துபோன பின் அடர்ந்த வன்னிமரங்கள் நிறைந்த ஓரிடத்தை அடைந்ததும் இருவரும் நின்றார்கள். அங்கே சுற்றிலும் கபாலங்கள் கிடந்தன. அருவருக்கத்தக்க முடை நாற்றம் வீசியது. சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த கொள்ளித் தீயில் எலும்புகளும் கபாலங்களும் அச்சுறுத்தும் விதத்தில் தெரிந்தன. வன்னிமரங்களின் கீழே அங்கங்கே கபாலிகர்கள் தனியாகவும் கூட்டமாகவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வெறிக் கூப் பாடுகள் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருந்தன. மயானத்தின் கோரச் சூழ்நிலை நிலவிய அந்தப் பகுதியின் ஒருமூலையில் தரையோடுதரையாகத் தாழ்ந்து முள் நிறைந்த கொடிகளால் குடிசையைப் போலப் படர விட்டிருந்த வன்னி மரப்பந்தல் ஒன்றின் வாயிலருகே சென்றுபைரவி - என்று விநயமாகக் குரல் கொடுத்தார் நகைவேழம்பர். முதலில் உள்ளேயிருந்து மறுமொழி இல்லை. பின்பு முன்னிலும் உரத்த குரலில் அதே பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார் அவர். பாய்ந்து வெளியே வரும் அவசரத்தில் வன்னி முட்கள் கீறிய குருதி சாம்பர் பூசிய உடலில் செந்நிறம் காட்டிடக் கையிலிருந்த கபாலம் பயத்தைக் காட்டிட முரட் டுப் பேய்ப் பெண் ஒருத்தி வந்து நின்றாள். அந்தக் கபாலிகப் பெண்ணுக்கு முன் பெருநிதிச் செல்வர் மெய் நடுங்கி நிற்க நகைவேழம்பர் சிரித்தபடியே சுபாவமாகப் பேசுவதற்குத் தொடங்கினார். “நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறோம் பைரவி! வந்திருக்கிற காரியமும் அவசியமானதுதான்.”

அது இரண்டு பேரும் சேர்ந்து வந்திருப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே என்று சொல்லிக் கோரமாகச் சிரித்தாள் பைரவி.

---------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

4. புகழ் வெள்ளம்

 

வாழ்நாளெல்லாம் அறிவுப்போரிலேயே செலவிட்டு வெற்றிமேல் வெற்றிபெற்ற பெரு மக்கள் ஒவ்வொருவராகத் தனக்குத் தோற்பதைப் பார்த்தபோது இளங்குமரனுக்குத் தயக்கமாக இருந்தது. வெற்றியை மெய்யின் வெற்றியாகவும் தோல்வியைப் பொய்யின் தோல்வியாகவும் நினைத்து மனம் விகாரமடையாமல் காத்துக் கொண்டான். வாதத்தில் அவன் வென்று முன் னேற முன்னேறநாவலோ நாவல்என வெற்றி முழக்கமிடும் புகழ்க் குரல்கள் மிகுந்து ஒலித்தன. கண்களை அகல விழித்து அவனையே தெய்வீக ஆற்றலாகக் கருதிப் பார்க்கும் முகங்கள் அதிகமாயின. பார்க்கிற கண்களில் எல்லாம் பார்க்கப்படுகிற கண்களின் மேல் பக்தி பிறந்தது.

அலை அலையாகப் புரண்டு வரும் இந்தப் புகழ் வெள்ளத்தில் நான் நிற்க வேண்டிய எல்லையில் கால்களும் என் மனம் நிற்க வேண்டிய எல்லையில் நினைவுகளும் தரித்து நிற்க முடியாமல் மிதந்து போகும் படி ஆகிவிடக் கூடாது. எல்லையற்ற இந்தப் புகழைப் பார்க்கும்போது எனக்குப் பயமாயிருக்கிறது. படிப்பினால் அழிந்த ஆணவத்தைப் படிப்பின் பயனாகப் பெற்றால், மறுபடியும் அதை எப்படி அழிக்க முடியும். புகழை உணர்வதற்கும், உணர்ந்ததை நினைத்து அநுபவிப்பதற்கும் மனத்தில் பழகியும், பழக்கியும், புகழுக்கே அடிமையாகிவிடாமல் நான் விழிப்பாயிருக்க வேண்டும். புகழில் அழிந்தால் நான் விரைவாக மூப்படைந்துவிடுவேனோ என்று நடுங்குகிறேன். புகழில் மிதந்தாலோ நான் சோம்பற் குணமுடையவனாகி விடுவேனோ என்று அஞ்சுகிறேன். புகழ் என்னுடைய முயற்சிகளை ஒடுக்கிவிடலாம். என் மனம் இலக்கு வைத் திருக்கின்ற குறிக்கோள்களை மறைத்துப் பொய்யான இலக்குகளையும் காட்டிவிடலாம்...

புகழ் வெள்ளத்தின் அலைகளே! சூழ்ந்திருப்பவர் முகங்களிலும் கண்களிலும் என்னை நோக்கி மலரும் பிரசித்திகளே! பிரதாபங்களே! நான் நிறுவிய உண்மைகளைப் போய்ச் சார்ந்து கொள்ளுங்கள்? என்னை விட்டு விடுங்கள் என்று, புகழில் மனம் நனைந்து போகாமல் ஆணவத்துக்குக் காரணமான நினைவுகளை விலக்கி விட்டு அவன் நடந்தபோது அவன் விலக்கிய ஆணவங்களே ஓருருவம் ஆனாற் போன்று எதிரே வந்து அவனை வாதத்துக்கு அழைத்தான் ஓர் இளைஞன். அந்த இளைஞனுடைய உருவமும் அவன் பேசிய சொற்களும் நின்ற நிலையுமே இளங்குமரனைத் தடுத்து நிறுத்தின. அவனுடைய தோற்றத்தைப் போலவே சொற்களும் அழகாயிருந்தன.

உயிர் என்றும் ஆன்மா என்றும் தனியாக எதுவும் இல்லை. என்னுடைய உடம்பே உயிர். அதுவே ஆன்மா. நான் இளைத்தேன். நான் பருத்தேன். நான் கறுத்தேன் - என் உடம்பைச் சுட்டிக் காட்டியே குணங்களும், தொழில் நிகழ்ச்சிகளும் கூறப்படுகின்றன. எனவே தேகமே ஆன்மா என்று நான் கூறுகிறேன். இந்த முடிவை நீ எப்படி மறுக்க இயலும்?” - இப்படித் திமிரோடு பேசினான் அந்த இளைஞன்.

அந்த இளைஞனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான் இளங்குமரன்: “தம்பீ! உன்னுடைய முடிவே உன் கருத்துக்குப் பெரிய மறுப்பாக இருக்கிறதே, நான் வேறு மறுக்க வேண்டுமா? நீ எந்தக் கருத்தைச் சொல்வதற்குத் துணிகிறாயோ, அந்தக் கருத்துக்கே மாறான முடிவைத் தருகிறது உன்னுடைய சித்தாந்தம். இப்படி வாதத்தைத் தொடங்குவதேஅவ சித்தாந்தம் என்னும் தருக்கக் குற்றம். ஆனாலும் கேள். உன்னையும் உன் உடம்பையும் இணைத்து வார்த்தையால் கூற வேண்டுமானால் நீ எப்படிக் கூறுவாய்?”

இது என்ன கேள்வி? ‘எனது உடம்பு என்று கூறுவேன், அல்லதுஎன்னுடைய உடம்பு என்று கூறுவேன் என்றான் அந்த இளைஞன்.

கூறுவாய் அல்லவா? நீயே உடம்பாகவும் உடம்பே ஆன்மாகவும் இருப்பாயானால் என் உடைய - உடம்பு என்று ஏன் உடைமையும் உடையவனும் வேறாக இருப்பதைத் தொடர்புபடுத்திக் கூறுவது போல் பேசுகிறாய்? உன் பேச்சிலிருந்தே உயிர் வேறு உடம்பு வேறு என்பது தெரிகிறதே? உடையவனையும் உடைமையையும் சம்பந்தப்படுத்துகிற தொடர்பு இரண்டு வகை யானது. உடையவனிலிருந்து பிரித்தால் தனித்தும் இயங்குகிற உடைமை, பிரித்தால் தனித்தும் இயங்காத உடைமை என்பனவே அவை. ‘எனது உடம்பு என்கிறாய். இதில் உன்னையும் உடம்பையும் தனித்தனியாகப் பிரிக்க இயலாது. எனது வீடு என்று சொல்கிறாய். இதில் உன்னையும் வீட்டையும் தனித்தனியே பிரிக்க இயலும். பிரிக்க முடியாமல் தன்னோடு தானாகவே இணைந்த சம்பந்தத்துக்குத் தற்கிழமை என்றும், பிரிக்க முடிந்த சம்பந்தத்துக்குப் பிறிதின் கிழமை என்றும் பெயர். உடம்போடு ஆன்மாவுக்கு உள்ள சம்பந்தம் தற்கிழமை. இதே நீயே உன்னுடைய சொற்களால் ஒப்புக்கொண்டவன் ஆகிறாய் தம்பீ! சாருவாக மதத்தில் மிக இளம் பருவமாகிய இந்த வய திலேயே உனக்குப் பெரும் பற்று ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. இளமையில் உன்னைக் கவர்வன வெல்லாம் என்றும் உன்னைக் கவர முடியும் என்று நினைக்காதே. சாருவாகர்கள் அழகிய சொற்களை மட்டுமே காதலிக்கிறார்கள். சொற்களுக்கு அப்பால் அவற்றின் பயனாக உள்ளவற்றைப் பற்றி அவர்கள் நினைப்பதே இல்லை. இரண்டு சொற்களில் விளக்க வேண்டிய கருத்தை இருபது சொற்களால் அடுக்கி விளக்குவது வாதமுறைக்கு முரண்பாடான பிழைகளில் ஒன்று. தேவைக்கு அதிகமான சொற்களைக் கொண்டு எந்தப் பொருளை வற்புறுத்த முயல்கிறாயோ அந்தப் பொருள் அப்படி வற்புறுத்துவதனாலேயே நைந்து போகும். எல்லையை மீறி உண்டாகும் பலமே ஒரு பலவீனம். அதிகமாக முறுக்கப்பட்ட கயிறு அதனாலேயே அறுந்து போவதைப் பார்த்திருப்பாய். ‘சொற் பல்குதல் என்பது தருக்கத்தில் குற்றம். அந்தக் குற்றத்தை உன் போன்ற சாருவாகர்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள்.”

இவற்றையெல்லாம் கேட்டதும் அந்தப் பிள்ளை எவ்வளவு வேகமாக எதிர்த்து வந்து நின்றானோ அவ்வளவு வேகமாகத் துவண்டு போனான். “தம்பீ! நிறைவடையாத அறிவுக்குப்புல்லறிவு என்று பெயரிட்டிருக்கிறார்கள். புல்லறிவினால் ஏற்படுகிற ஆண்மை உறுதியானது என்று நம்பி அதையே வாதத்துக்குப் பலமாகக் கொண்டு வாதிடுவதற்கு வரக் கூடாது. மேட்டு நிலத்தில் உள்ள முற்றாத இளம் புல்லைக் கிழட்டுப் பசு மேய்ந்தது போல் நிறைவடையாத நுகர்ச்சியால் வந்த புல்லறிவாண்மை வாதத்துக்குப் பயன் படாது என்று போவதற்கு முன் அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினான் இளங்குமரன்.

அந்தக் கூட்டத்தில் இப்போது இளங்குமரனுக்கு முன்னால் வந்து நிற்பதற்கே பயப்படுகிறவர்கள் அதிகமானார்கள். இவன் ஞானத்தை நிறைத்துக் கொள்வதற்கான நூல்களை மட்டும் கற்றுக் கொண்டு வரவில்லை. மற்றவர்களை வெல்வதற்கான தவவலிமையையும் சேர்த்துப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறான். இவனுக்கு முன்னால் நிற்கும் போதே நம்மடைய கல்வி குறைபாடு உடையதாக நமக்குத் தோன்றுகிறதே என்று தயங்கினார்கள். வைதிக சாத்திரங்களாகிய மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் ஆகிய ஆறு தரிசனங்களிலும் வல்லவர்கள் பலர் அந்தக் கூட்டத்தில் இருப்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று. ‘நீருட் கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாவதைப் போல நூல்களைக் கற்றிருந்தும் அவற்றில் மனம் தோயாத காரணத்தால்தான் அவர்களெல்லாம் மலைத்து நிற்கின்றார்களென்று அவனுக்குப் புரிந்தது. எதிரே வந்து தன்முன் கொடியை நடுவதற்கு இன்னும் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்றான் அவன். யாரும் வருவதாகத் தோன்றவில்லை. இரவு வளர்ந்து நேரமாகிவிட்ட படியால் கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நெருங்கி நின்ற பெருங்கூட்டம் கலைந்ததனால் இளங்குமரன் தனது யானையை நிறுத்திவிட்டு வந்த இடத்துக்குப் போவதற்கு வழியில்லை. தேரும் சிவிகையும் குதிரைகளுமாக முந்திக் கொண்டு விரைந்த அந்தக் கூட்டத்தில் இருந்தாற்போல் இருந்து பரிதாப கரமான துயரக்குரல் ஒன்று எழுந்தது. கூட்டத்தில் மிக அருகிலிருந்து எழுந்த அந்தக் குரலை கேட்டு இளங்குமரன் திரும்பினான். கண் பார்வை மங்கி முதுகு கூன் விழுந்து மூதாட்டி ஒருத்தி கூட்டத்தில் திணறிக் கொண்டிருந்தாள். ஊன்றுகோலையே கண்ணாகக் கொண்டு நடந்து கொண்டிருந்த அவள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தினால் நெருக்குண்டு தடுமாறி விழுந்தாள். ஏதோ ஒரு பல்லக்கின் முன் பக்கத்துக் கொம்பைச் சுமந்து கொண்டு வந்த யவனன் ஒருவன் கீழே குனிந்து பாராததனால் கவனக் குறைவாய் அந்த மூதாட்டியை மிதிப்பதற்கிருந்தான்.

அவளைக் கைதூக்கி நடத்திக் கொண்டுபோய் நேரான வழியில் விடுவதற்காக இளங்குமரன் ஓடினான். அந்த முதுமகள் விழுந்த இடத்திலிருந்தவர்களே அதற்குள் அவளைத் துரக்கி விட்டிருக்கலாம், ஏனோ செய்யவில்லை. மிதிப்பதற்கிருந்த பல்லக்குத் தூக்கிக் கூட கீழே பார்த்துவிட்டு அருவருப்போடு துள்ளி விலகுவதையும் இளங்குமரன் கண்டான். சுற்றிலும் இருந்தவர்கள் கூசி விலகுவதையும், கீழே விழுந்திருப்பவளைப் பார்த்து ஏதோ இரைவதையும் கவனித்து இன்னும் வேகமாக நடந்து அவளை அணுகினான் அவன். அருகிற் போனதும் மற்றவர்கள் அவனைத் தடுத்தார்கள்.

 

தொடாதீர்கள், அவளுக்குப் பெரு நோய் என்று பல குரல்கள் இளங்குமரனை எச்சரித்தன. தன் உடம்பின் அழகால் தானே பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஓர் உதவி செய்ய நேர்ந்திருந்தால் அவன் பயந்து பின் வாங்கியிருப்பானோ, என்னவோ? இப்போது அப்படிப் பயந்து பின்வாங்கவில்லை. கையை முன் விரித்துக் குனிந்தான் அவன். அப்படிக் குனிந்தபோது, “ஐயோ! வேண்டாம். கீழே கிடக்கிறவள் உங்களைப் பெற்ற தாயாக இருந்தாலும் தீண்டத்தகாத நோய் இது என்று இனிய குரல் ஒன்று மேலே பல்லக்கிலிருந்து ஒலித்தது. ஒரு விநாடி அந்தக் குரலுக்குரியவளைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தான் இளங்குமரன். பார்த்தபோது பார்க்கப்பட்ட முகத்தினால் தானே சிறிது வியப்பு அடைவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. சுரமஞ்சரியா என்று அவன் நாவிலிருந்து மிகவும் மெல்ல ஒலித்த பெயர் அவளுக்குக் கூடக் கேட்டுவிட்டது போலிருக்கிறது. “சுரமஞ்சரி இல்லை. அவளுடைய சகோதரி வானவல்லி என்று அந்தப் பெண் மறுமொழி கூறினாள். அப்படி மறுமொழி கூறும்போது அவள் முகத்தில் பயத்தின் நிழல் படிந்து மறைவதைக் காண முடிந்தது. அந்த உணர்ச்சி நிழலில் அவள் வேறு எதையோ மறைத்துக் கொள்ள முயல்வது தெரிந்தது. இளங்குமரன் சிரித்துவிட்டு அவளை நோக்கி சொன்னான்:

அம்மணி! நீங்கள் இதைப் பெருநோய் என்று சொல்லிப் பயப்படுகிறீர்கள். பயப்படுத்துகிறீர்கள்! இதை விடக் கடுமையான பெருநோய் ஒன்று இருக்கிறது. அதை உங்களுக்குச் சொல்லட்டுமா? பிறருடைய துன்பத்தைக் கண்டு மனம் இரங்காமல் தன்னுடைய கெளரவத்தையே நினைத்துக் கூசுகிற மனத்தில், அந்தக் கூச்சம்தான் பயங்கரமான பெருநோய். நெடிய வார்த்தைகளைச் சொல்லிப் பிறரை ஏவியும் கட்டளையிட்டும் ஆள்வதையோ, வேகமாகத் தேரிலும் சிவிகை யிலும் ஏறிப்போவதையோ தான் செல்வத்தின் இலட்சணங்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் செல்வமாக நினைப்பது துன்பப்படுகிறவர்கள் மேல் உண்டாகிற அதுதாபத்தையும் உதவி செய்யும் ஆவலையும்தான். மனத்தை அரித்தெடுக்கின்றதனால் ஆசைதான்பெருநோய் என்கிறேன் நான். என் கண்களுக்கு முன்னால் இந்தப் பிரபஞ்சத்தில் என்னிலிருந்து அந்நியமாகவும் அயலாகவும் தெரிகிற எல்லா உயிர்களும் எந்தக் கணமும் சிறிது கூடத் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்று - மற்றவர்களுக்குத் துன்பம் வரக்கூடாது என்பதற்காக எனக்குள்ளேயே நான் மனப்பூர்வமாக அஞ்சி அநுதாபப்படுகிற உணர்வு தான் பெரிய செல்வமென நம்புகிறேன். பெற்ற தாயாயிருந்தாலும் தீண்டத் தகாத நோய் இது என்று பயமுறுத்துகிறீர்கள். நான் இந்த உலகத்தை இப்போது பார்க்கிற பார்வையில் எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன். எல்லாத் தாய்களிலும் பெண்ணைக் காண்கிறேனில்லை. எல்லாப் பெண்களிலும் என் தாயைக் காண்கிறேன். என் தாய்மையையே உணர்கிறேன்...”

 

அவனுடைய தத்துவத்தை இதற்கு மேல் கேட்க விருப்பமில்லாதது போல் அந்த அழகிய முகம் பல்லக்குக்குள் மறைந்தது. உடனே பட்டுத் திரையும் விழுந்து பல்லக்கை மூடியது.

உலகத்திலேயே அதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சியைத் தரக்கூடிய காரியம் வேறொன்று இல்லாதது போல் சிரத்தையோடு அந்த மூதாட்டியைத் தொட்டுத் தூக்கி ஊன்றுகோலைக் கையில் எடுத்துக் கொடுத்துச் சிறிது தொலைவு தழுவினாற் போலத் தாங்கி நடத்திக் கொண்டு போய், நெருக்கமில்லாத வழியில் அனுப்பி விட்டுத் திரும்பினான் இளங்குமரன். திரும்புமுன் அந்த முதுமகள் கூறிய நன்றியுரை இன்னும் தன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருப்பதாக உணர்ந்தான் இளங்குமரன்.

பழுத்துத் தளர்ந்த பாகற் பழம்போல் இமைகள் தொங்கிப் பார்வையை மறைக்கிறதப்பா. நீ யாராயிருந்தாலும் உன்னை ஒருமுறை கண்குளிரப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் பார்க்க முடியவில்லை. என்னால் உன்னுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லையானாலும் அகத்தைப் பார்க்க முடிகிறது. பிறர்மேல் கருணை கொள்வதையே பெரு நிதியாகக் கருதும் நெஞ்சுக்கு உரியவன் எப்படி இருக்க முடியுமென்று நினைத்து நினைத்து - அந்த நினைப்பு களையே கோடுகளாக இழுத்து என் நெஞ்சில் உன் உருவத்தை எழுதிப் பார்க்கிறேன். அப்படி எழுதிப் பார்க்கும்போது சாந்தம் திகழும் கண்களை அகல விழித்து அவற்றில் பெருகும் கருணையையே அழகாகக் கொண்டும் நித்திய செளந்தரியத்தின் எல்லைகளாய் இரண்டு கைகளை நீட்டிக் கொண்டும் நீ உருவாகி நிற்கிறாய்!” என்று அந்த முதுமகள் நாத் தழுதழுக்கச் சொல்லியபோது அவளுடைய சொற்களில் மனமும் உணர்வுகளும் குழைந்து பரிவு பெருக நின்றான் இளங்குமரன். அவளுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டு மென்று அவன் நினைத்ததும் சொல்ல வரவில்லை. அவள் பேசியதைக் கேட்ட பின்பு அவனுக்குப் பேசவே வரவில்லை.

அந்த முதுமகள் நிறைய கற்றவளாய் இருக்க வேண்டுமென்று அவளுடைய சொற்களிலிருந்து புரிந்தது. அவளுடைய சொற்களுக்குப் பின் தன்னுடைய சொல் லாமையே - மெளனமே மதிப்பு நிறைந்ததென்று எண்ணிக் கொண்டு யானை நின்ற இடத்துக்குத் திரும்பி நடந்தான் அவன்.

அவ்வாறு நடக்கும்போது தன்னுடைய பழைய சொற்களையே மறுபடியும் நினைத்துக் கொண்டான். எல்லாருடைய தாய்களிலும் என்னுடைய தாய் இருக்கிறாள். என்னுடைய தாயாரைத் தெரிந்து கொள்கிற வரை எல்லாப் பெண்களையும் தாயாகவே பார்க்கிறேன் நான், தாயாகவே உணர்கிறேன்.

இன்று இந்த மூதாட்டிக்கு உதவினோம் என்று திரும்பத் திரும்ப நினைத்து இப்படி நினைப்பதாலேயே மனத்தில் கர்வச் சுமை ஏறிவிடுமோ என்ற பயத்தை உணர்ந்தவனாக யானைமேல் ஏறினான் இளங்குமரன்.

 

மீண்டும் புகழில் நனைந்து விடாமலும், மிதந்து விடாமலும் தன்னைத் தன் நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற விழிப்பு அவனுக்கு ஏற்பட்டது.

 

---------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

5. இருண்ட சமயம்

 

மறுபடியும் நாளைக்கு இந்த அறிவுப் போர்க்களத்தில் வந்து எதிரிகளைச் சந்திக்கலாம். இன்று இவ்வளவில் திரும்புவோம் என்ற தீர்மானத்தோடு யானையை ஆலமுற்றத்து வழியில் செலுத்துவதற்கு இருந்தான் இளங்குமரன். அப்போது அவனுடைய யானைக்கு முன்னால் கபாலிகப் பெண் ஒருத்தி வந்து நின்றாள். பொது இடங்களில் இப்படித் துணிந்து புறப்பட்டு வந்து பழகும் வழக்கம் இல்லாத கபாலிக சமயத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை எதிரே கண்டதும் இளங்குமரன் சிறிது திகைப்படைந்தான். சம்பாபதி வனத்திலும் சக்கரவாளக் கோட்டத்தைச் சுற்றியிருந்த காடுகளிலும் விடலைப் பிள்ளையாய் நண்பர்களோடு சுற்றித் திரிந்த காலத்தில் அவன் கபாலிகர்களை நிறையப் பார்த்திருக்கிறான். அந்தச் சமயங்களில் எல்லாம் எலும்பு மதம் என்றும் மண்டையோட்டு மதம் என்றும் அவனும் நண்பர்களும் வேடிக்கையாகச் சொல்லி அந்தச் சமயத்தைப் பற்றி எள்ளி நகையாடுவதும் உண்டு.

இப்போது அதே மண்டையோட்டு மதத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி எதிரே வந்து நிற்கிறாள்.

உங்களுக்கு என்ன வேண்டும் அம்மணீ? இந்த நாளங்காடிச் சதுக்கத்திலும், இதன் அழகிய சுற்றுப் புறங்களிலும் நீங்கள் விரும்புகிற விதமான பொருள்களில் எதுவும் கிடைக்க வழியில்லையே? எலும்புகளும், சுடலைச் சாம்பலும் இல்லாத இடத்துக்குக்கூட நீங்கள் வருவதுண்டோ?” என்று அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன்.

அவன் தங்கள் சமயத்துக் கொள்கைகளை இகழ்ந்தாற் போன்ற தொனியில் பேசியதால் சிறிதே சினம் கொண்டவளாகி அவனை உறுத்துப் பார்த்தாள் அவள்.

நாங்கள் எங்கும் வருவோம். பயப்படுவதற்கு நாங்கள் கோழைகள் அல்ல. கொடிய வீரத்தையே சிவமாகக் காண்கிற எங்களால் எந்த இடத்திலும் நாங்கள் விரும்பியவாறு சென்று செயற்பட முடியும்.”

 

அம்மணீ! நீங்கள் எப்போதும் பயப்படுவதில்லை; ஆனால் உங்களைப் பார்க்கிறவர்கள் பயப்படாத நேரமும் இல்லை. ‘எந்த இடத்திலும் நாங்கள் விரும்பிய சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ள முடியுமென்று கூறினீர்களே - அது மட்டும் மறுக்க முடியாத உண்மை என்று நானும் ஒப்புக் கொள்கிறேன், அம்மணீ! இவ்வளவு நேரம் வரை இந்திரவிழாக் கோலம் பூண்டு மங்கல வினை நிகழும் வீடுபோலத் தோன்றிக் கொண்டிருந்த இந்த இடத்தில் நீங்கள் ஒருவர் வந்து நின்றவுடனேயே மயானத்தின் சூழ்நிலை உண்டாகி விட்டது பாருங்களேன்! இதிலிருந்தே நீங்கள் சொல்லியது மெய்யென்று தெரிந்து கொள்ள முடிகிறதே என்று நகை விளைக்கும் சொற்களாலேயே அவளை வாதில் நலியச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவளோ, அவனிடம் வேறு வேண்டுகோள் விடுத்தாள்:

நானே உன்னை வாதுக்கு அழைக்க வரவில்லை, அழைத்துக் கொண்டு போவதற்குத்தான் வந்தேன்.”

எங்கே அழைத்துக் கொண்டு போக வந்தீர்கள்? ‘அழைத்துக் கொண்டு என்று நீங்கள் சொற்களை உச்சரித்த போதுஅழைத்துக் கொன்று என்பதுபோல் அல்லவா என் செவிகளில் ஒலித்தது. கபாலிகர்கள் அசைவர்களாயிற்றே? அதனால்தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது, அம்மணீ.”

இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் ஒன்றுமில்லை. இந்த நகரத்திலேயே மிகவும் குறைவானவர்கள் நாங்கள்? சக்கரவாளக் கோட்டத்தில் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள வன்னி மரங்களின் நிழலிலேயே எங்கள் உலகம் அடங்கிப் போய்விடுகிறது. அதற்கு இப்பால் அகநகரிலும் புறநகரிலுமகாகப் பரவிக் கிடக்கும் இந்தப் பட்டினத்தின் விதவிதமான வாழ்க்கை வளங்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது.”

அகநகரிலும் புறநகரிலும் வாழ்ந்தவர்கள் தலையெல்லாம் உங்கள் கையிலிருக்கும்போது நீங்கள் கவலைப்படுவானேன்?”

எதைச் சொல்கிறாய் நீ?”

இறந்தபின் இந்தப் பட்டினத்தின் மக்கள் அத்தனை பேருடைய கபாலங்களையும் நீங்கள்தானே ஆளுகிறீர்கள்?”

இகழ்ச்சியை வளர்க்காதே, தம்பீ! வன்னி மன்றத்தில் எங்கள் குரு காத்துக் கொண்டிருப்பார். நீ உடனே என்னுடன் அங்கு வந்து அவரோடு வாதம் புரிய வேண்டும்.”

இந்த நள்ளிரவில்தான் வாதம் புரிய வேண்டுமா? நாளைக்குப் பகலில் வரலாமென்று பார்க்கிறேன். எல்லா வாதங்களும் நடைபெறும் இந்த இடத்துக்கே உங்கள் குரு வந்தாலும் நல்லதுதான். அவர் என்னைச் சந்திப்பதோடு மற்றவர்களையும் சந்தித்து வாதிடலாம்.”

 

அது சாத்தியமில்லை, அப்பனே! எங்கள் குரு வயது மூத்தவர்; எங்கும் வர இயலாதவர். நள்ளிரவுக்குப் பின்புதானே எங்களுடைய உலகமே உதயமாகிறது. பகலில் வாதம் புரிய வந்து என்ன பயன்?”

உண்மைதான், அம்மணி! உங்கள் சமயமே இருண்ட சமயத்தில்தான் தன் செயல் முறைகளைத் தொடங்குகிறது.”

அதனால்தான் இந்த இருண்ட சமயத்தில் உன்னை வந்து அழைக்கிறேன். யார் வந்து வாதுக்கு அழைத்தாலும் மறுக்காமல் வருவதுதான் மெய்யாகவே ஞானபலம் பெற்றவனுக்கு இலட்சணம். ஞானிக்கு இருள் என்ன? ஒளி என்ன? உன்னுடைய மனத்தில் தைரியமிருந்தால் என்னோடு வா. இல்லையானால் முடியாதென்று சொல்!”

இதைக் கேட்டு இளங்குமரன் யானை மேலிருந்து கீழே இறங்கினான்.

அழைத்துச் செல்லுங்கள் வருகிறேன் என்றான் அவன்.

அந்த முரட்டுக் காபாலிக நங்கை பிசாசு போல் முன் நடந்தாள். பூதகிக்கு அருகில் கண்ணபிரான் சென்றது போல் கொடியேந்திய கையினனாக இளங்குமரன் அவள் நடந்த வழியே தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அவள் தன்னை அழைத்துச் சென்ற சக்கரவாளக் கோட்டத்து வழிகள் ஒரு காலத்தில் தான் பழகிய வழிகள் என்பதை நினைத்துக் கொண்டே சென்றான் அவன். இருந்தாற்போல் இருந்து எதையோ நிறுத்திக் கொண்டு கேட்பவள் போல் அவள் நடப்பதை நிறுத்தி விட்டு அவனை நோக்கித் திரும்பி, “நீ கபாலிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறாய் அப்பனே?” என்று கேட்டாள். இளங்குமரன் பதில் சொல்லாமல் நின்றான்.

அதற்குள் நீ ஊமையாகி விட்டாயா? எனக்குப் பதில் சொல்! உன்னைத்தான் கேட்கிறேன் நான். கபாலிகர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

இப்போது உங்களுடைய குருவோடு வாதம் புரிவதற்கு என்னை அழைத்துச் செல்கிறீர்களா? நீங்களே என்னோடு வாதம் புரிய விரும்புகிறீர்களா?”

நானும் சிறிது வாதம் புரிவதற்கு ஆசைப்படுகிறேன் என்றுதான் வைத்துக் கொள்ளேன். கபாலிகர்களைப் பற்றி உன் கருத்து என்ன?”

அதுதான் சொன்னேனே! ‘இருண்ட சமயத்தில் தான் எங்கள் உலகம் உதயமாகிறது என்று நீங்கள் கூறிய சொற்களே உங்களுக்கு உரிய இலட்சணம். எல்லாருடைய நினைவுகளும் - எல்லாச் சமயத்தாருடைய நினைவுகளும் மயானத்தில் போய் அழி கின்றன. ஆனால் கபாலிகர்களாகிய உங்களுடைய நினைவுகளோ மயானத்திலிருந்துதான் பிறக்கின்றன. வாழ்ந்து அழிகிறவர்களிடையே அழித்து வாழப் பார்க்கிற இலட்சியம் உங்களுடைய சமயத்துக்கு வாய்த்திருக்கிறது.”

 

எங்கே, இன்னொரு தரம் அதையே சொல்.”

வாழ்ந்து அழிகிறவர்களிடையே அழித்து வாழ முயல்வது உங்கள் இலட்சியம்.”

அந்த இலட்சியத்தை இப்போது நான் நிறைவேற்றலாம் என்று பார்க்கிறேன் அப்பனே!” இப்படிக் கூறியவாறே வெறிநகையில் பயங்கர ஒலி அந்தச் சக்கரவாளத்துக் காடு எங்கும் எதிரொலிக்கப் பேய்த் தோற்றமாகிய விசுவரூபமெடுத்தாற் போல அந்தக் கபாலிகை வாளை ஓங்கிக்கொண்டு சூறாவளியாக மாறி அவன் மேல் பாய்ந்தாள்.

வாதம் புரிவதற்கு அழைத்து வந்தீர்களா? இப்படி வதம் புரிவதற்கு அழைத்து வந்தீர்களா?” என்று சற்றே விலகி நின்றுகொண்டு நிதானமாகக் கேட்டான் இளங்குமரன்.

கபாலிகர்களாகிய எங்களுக்கு வாதம், வதம் இரண்டுமே ஒன்றுதான் என்று முன்னிலும் கடுமையான வெறியோடு அந்தப் பூதகி அவன்மேற் பாய்ந்த போது பின்னாலிருந்து கற்குன்றுகள் விழுந்ததுபோல இரண்டு கைகள் அவளுடைய பிடரியில் விழுந்து அவள் கழுத்தை அழுத்தி நெரிக்கத் தொடங்கின. அந்தப் பிடியைத் தாங்க முடியாமல் அவளுக்கு விழியும் நாக்கும் பிதுங்கின. சுடுகாட்டு நரி ஊளையிடுவதைப் போல் கோரமான வேதனைக் குரல் அவள் தொண்டையிலிருந்து புறப்பட்டது.

---------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

6. திருவிழாக் கூட்டம்

 

நாளங்காடியில் நெருங்கி நின்ற பெருங்கூட்டம் கலைந்தபோது யவனர் சுமந்து நின்ற அந்தப் பல்லக்கும் மெல்ல நகர்ந்தது. ஆனால் பல்லக்குக்கு உள்ளேயிருந்தவர்களின் சிந்தனை மட்டும் அந்த இடத்தை விட்டுச் சிறிதும் நகரவே இல்லை. கூட்டத்தில் தடுமாறி விழுந்த கிழவியைக் கண்டதும் அவளைத் தூக்கி விடுவதற்காக அதிராமல், பதறாமல், பூ உதிர்வது போல் அவன் நடந்த நிதான நடையையும், புன்னகையுடனே தலை நிமிர்ந்து மனத்தை அரித்தெடுக்கின்றதனால் ஆசைதான் பெருநோய் - என்று எண்ணத்திலே தைக்கும்படி வார்த்தைகளைச் சொல்லிய துணிவையும் நினைத்து நினைத்து, நினைவு அந்த இடத்திலிருந்து நகராதபோது பல்லக்கு மட்டும் நகர்ந்து முன்னேறிச் சென்றது. அதுவரை உட்கார்ந்திருந்த தோழி வாய்திறந்து மெல்லக் கேட்டாள்:

 

அது ஏனம்மா அப்படிப் பொய் சொன்னிர்கள்? ‘சுரமஞ்சரியா என்று அவர் கேட்டபோது இவ்வளவு நீண்டகால இடைவெளிக்குப் பின் முதல் முறையாக அவரைச் சந்திக்கிற நீங்கள் ஆர்வத்தை மறைக்காமல்ஆம் என்று ஒப்புக் கொண்டிருக்கலாமே? எதற்காக வானவல்லியின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே மறைத்துக் கொண்டீர்கள்...?”

மாளிகையிலிருந்து வெளியேறி வருவதற்கே வாய்ப்பில்லாமல் என்னைத் தந்தையார் சிறை வைத்திருக்கிறார் என்பதை அதற்குள் மறந்துவிட்டாயா? இந்திர விழாவின் முதல்நாளாகிய இன்றைக்கு நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் ஆசையை அடக்க முடியாமல் அங்கே வானவல்லியைச் சுரமஞ்சரியாக நடிக்கச் செய்துவிட்டு இங்கே நான் வானவல்லியாக நடிப்பதாய் ஒப்புக்கொண்டு புறப்பட்டதைக் கூடவா அதற்குள் மறந்துவிட்டாய்?” என்று இரகசியம் பேசு கிறாற் போன்ற மெல்லிய குரலில் கேட்டாள் சுரமஞ்சரி.

ஒன்றும் மறக்கவில்லை. மறப்பதற்கு எனக்குப் பித்துப் பிடித்துவிட்டதா? என்ன? நான் சுரமஞ்சரி தான் என்று நீங்கள் அவரிடம் ஒப்புக் கொள்வதனால் உங்கள் இரகசியம் ஒன்றும் வெளியாகிவிடப் போவதில்லையே? இவ்வளவு காலத்துக்குப் பின்பும் உங்களை நினைவு வைத்துக்கொண்டு கேட்டவரிடம் ஏமாற்றமளிக்கும் மறுமொழியை நீங்கள் கூறியிருக்க வேண்டாமே என்றுதான் சொன்னேன், அம்மா.”

என்னுடைய மறுமொழி அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் என்றா நீ நினைக்கிறாய்?. அப்படி நீ நினைப்பதாயிருந்தால் உன்னைப் போல் உலகம் தெரியாதவள் வேறு யாரும் இருக்க முடியாது. எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன். எல்லாத் தாய்களிலும் பெண்ணைக் காண்கிறேனில்லை என்று நெகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிற மனிதரிடத்தில்நான்தான் சுரமஞ்சரி - என்பதைச் சொல்வதனால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது?”

பயன் விளைய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமா? பெரு நோய்க்காரியான அந்தக் கிழவியைத் தொட வேண்டாமென்று நீங்களாகத்தானே வலுவில் அவரை எச்சரித்தீர்கள். என்ன பயனை எதிர்பார்த்து அந்த எச்சரிக்கையைச் செய்தீர்கள், அம்மா?”

வசந்தமாலையின் இந்தக் கேள்விக்குச் சுரமஞ்சரியால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் நாணித் தலைகுனிந்தாள்.

ஒரு பயனையும் எதிர்பார்த்து எச்சரிக்கை செய்யவில்லை. ஏதோ மனத்தில் தோன்றியது, செய்தேன் என்று வெட்கத்தினால் ஒடுங்கிய குரலில் அவளிடமிருந்து பேச்சுப் பிறந்தது.

 

ஏதோ தோன்றியதென்று சொல்லிவிட்டுத் தோன்றியிருப்பதை உங்களுக்குள்ளேயே அந்தரங்கமாக வைத்துக்கொள்ள முயல்கிறீர்களே? ஏதோ தோன்றியதென்றுதான் காமன் கோவிலை வலம் வந்தீர்கள். ஏதோ தோன்றியதென்றுதான் அன்றைக்கு அந்த ஓவியனிடத்தில் மடல் எழுதிக் கொடுத்து அனுப்பினர்கள். ஏதோ தோன்றியதென்றுதானே முதன் முதலாக அவரைச் சந்தித்த இந்திர விழாவின்போது மணிமாலையைக் கழற்றிப் பரிசளிக்கத் துணிந்தீர்கள். இப்படியே அவரைப் பார்க்கும்போதும் நினைக்கும் போதும் உங்களுக்கு ஏதோ தோன்றிக்கொண்டே இருக்கிறது.”

இதைக் கேட்டு சுரமஞ்சரி சிரித்தாள். அவளுடைய கண்களில் மென்மையான உணர்வுகளின் சாயல்கள் மாறி மாறித் தோன்றின. வெளிப்படலாமா வேண்டாமா என்று தயங்குவது போல் இதழ்களில் ஏதோ ஒரு கனிவு நிறைந்து நின்று தயங்கியது.

நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன் அம்மா! பூமியின் வறட்சியைத் தணிப்பதற்காக மேகங்கள் கனியும் வானத்தைப்போல் உங்கள் வதனத்திலே எதற்காகவோ நளினமான உணர்வுகள் கணிகின்றனவே! நீங்கள் இந்தச் சில விநாடிகளில் அதிகமான அழகைப் பெற்றுவிட்டாற் போல் தோன்றுகிறீர்கள், அம்மா! நான் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இதோ என் தலைக்கு மேல் பல்லக்கிற் பதித்திருக்கும் கண்ணாடியில் நீங்களே உங்களுடைய முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

சுரமஞ்சரி தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். வசந்தமாலை கூறியது மெய்தான், தன் முகத்தில் மலர்ச்சி உண்டாகியிருப்பதைச் சுரமஞ்சரி தானே உணர்ந்தாள். தனக்கு அந்த மலர்ச்சியைத் தந்தவனைப் பற்றி அவளுடைய சிந்தனைகள் படர்ந்தன. இப்போது கொடிபோல் இளைத்திருந்த அவன் தோற்றமும், தீயில் உருகி ஓடும் மாற்றுக் குறையாத பொன்னின் நிறமும், படிப்பினால் ஒளி பெற்றிருக்கும் முகமும் கண்களும் அவள் நினைவில் ஒவ்வொன்றாகத் தோன்றின. ஒவ்வொரு புள்ளியாக வைத்துக் கொண்டு இறுதியில் எல்லாப் புள்ளிகளையும் கோடுகளால் இணைத்துக் கோலமாக்குவதுபோல அவனுடைய தனித்தனி அழகுகளையும் தனித்தனிச் சிறப்புகளையும் ஒவ்வொன்றாக எண்ணிக் கூட்டி மனதுக்குள்ளேயே அந்த ஆண்மைக் கோலத்தை வரைந்து பார்த்தாள் அவள். நாளுக்கு நாள் அவன் தன்னிடமிருந்து நீண்ட தொலைவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை எண்ணியபோது துக்கத்தினால் நெஞ்சை அடைத்தது. கண்களில் நீர் நெகிழ்ந்தது. மனத்தை அடைத்த துக்கத்தை வார்த்தைகள் வெளிக் கொணர முடியவில்லை. நினைத்தாள் - சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல் இந்திரவிழாவின் முதல்நாள் ஒன்றில் மற்போரில் வென்ற வீரனாக அவனைச் சந்திக்க நேர்ந்ததையும் இன்று மீண்டும் சொற்போரில் வெல்லும் வீரனாகச் சந்திப்பதையும், இந்த இரண்டு சந்திப்புக்களுக்கும் நடுவில் எப்போதோ ஒரு கணத்தில் தன் மனத்தையே அவன் வெற்றி கொண்டதையும் அதன்பின் கணம் கணமாகத் தன் மனமே அவனுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருவதையும் - சேர்த்து நினைத்தாள் சுரமஞ்சரி. முதற் பார்வையிலேயே தன் கண்களில் நிறைந்து கொண்ட அந்தச் சுந்தர மணித் தோள்களை நினைத்தபோது அவள் நெட்டுயிர்த்தாள்.

மழையும் புயலுமாகக் கழிந்த ஏதோ ஓர் இரவில் கடலின் நடுவே கப்பல் கரப்புத் தீவில் நான் சாய்ந்து கொள்வதற்கு அணையாக நீண்ட கை இது. இந்த அழகிய கைகள் உதவி செய்வதற்கு மட்டுமே முன் விரிகின்றன. அன்புடன் தழுவிக்கொள்ள நீள்வதில்லையே என்று எண்ணி எண்ணி நான் பெருமூச்சு விடுவதுதான் கண்ட பயன். துன்பப்படுகிறவர்களின் துன்பத்தைக் களை வதற்காக விரைந்து முன் நீளும் இந்தக் கைகள் அன்பு செலுத்துகிறவளுடைய அன்பை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் ஏன் தயங்குகின்றனவோ? உடம்பெல்லாம் அழுகி நாறும் பெருநோய் பிடித்த கிழவியைத் தீண்டுவதற்கும் கூசாத கைகள் தன்னையே நினைத்துத் தனக்காக ஏங்கிக்கொண்டும் தவித்துக் கொண்டுமிருக்கும் பெண்ணுக்கு முன்னால் மட்டும் ஏன் துவண்டு போய் விடுகின்றனவோ? ‘துன்பப்படுகிறவர்களுக்கு உதவும் அது தாபத்தையே செல்வமாக நினைக்கிறேன் என்கிறாரே. நான் இவரையே எண்ணி ஏங்கித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேனே. எனக்கு இவரிடமிருந்து என்ன அநுதாபம் கிடைத்தது? எதிர்பார்க்கிற இடத்திலிருந்து கிடைக்க வேண்டிய அன்பைப் பெற முடியாமல் வேதனைப்படுகிற என்னுடைய காதலும் ஒரு துன்பந் தானே?’

தனக்குள் தானே சுரமஞ்சரி இப்படி நினைத்துக் கொண்டிருந்தபோது பல்லக்கின் திரையை விலக்கி வெளியில் பார்த்துக் கொண்டிருந்த வசந்தமாலை, “அம்மா! அம்மா! அதோ அங்கே பாருங்கள் என்று பரபரப்போடு கூறிக் கவனத்தை வெளிப்புறமாகத் திரும்பினாள். சுரமஞ்சரி வெளியே தலை நீட்டிப் பார்த்தாள். கூட்டத்தில் ஓவியன் மணிமார்பனும் ஓர் அழகிய இளம் பெண்ணும் கைகோர்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

நெடுங்காலத்துக்குப் பின் அவனைக் கண்ட ஆவலை அடக்க முடியாமல்வசந்தமாலை! மணிமார்பனைக் கூப்பிடடி. அவரைப் பற்றிய விவரங்களை யெல்லாம் மணிமார்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றாள் சுரமஞ்சரி, வசந்தமாலை கூப்பிடுவதற்குள் மணிமார்பனும் அவனுடன் சென்ற பெண்ணும் கூட்டத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். வசந்தமாலைஐயா ஓவியரே!” என்று விளித்த குரல் கூட்டத்திலிருந்த வேறு பலரைப் பல்லக்கின் பக்கமாகத் திரும்பிப் பார்க்கச் செய்ததைத் தவிர வேறு ஒரு பயனும் விளையவில்லை. வசந்தமாலை ஏமாற்றத்தோடு சுரமஞ்சரியிடம் அலுத்துக் கொண்டாள்:

எப்போதுமே திழவிழாக் கூட்டத்தில் இந்தத் தொல்லைதான். நாம் யாரையோ அழைத்தால் வேறு யாரோ திரும்பிப் பார்க்கிறார்கள்.”

 

வாழ்க்கையே திருவிழாக் கூட்டத்தில் அழைப்பது போல்தான் இருக்கிறதடி வசந்தமாலை! நாம் யாரை அழைக்கிறோமோ அவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. யாருடைய செவிகளில் கேட்க வேண்டும் என்பதற்காக நம்முடைய இதயத்திலிருந்து ஆசையும் நாவிலிருந்து சொற்களும் பிறக்கின்றனவோ, அவருடைய செவி களுக்கு அவை எட்டுவதே இல்லை. யாரை நினைத்தோ கூவுகிறோம். நினைவுக்குக் காரணமாகாத யாரோ பதிலுக்குத் திரும்பிப் பார்க்கிறார்கள். யாருக்காகவோ கண் திறக்கிறோம். ஆனால் திறந்த கண்களுக்கு முன்னால் வேறு யாரோ தென்படுகிறார்கள். என்ன உலகமோ? என்ன வாழ்க்கையோ? எல்லாமே சாரமில்லாமல் தெரிகிறதடீ!” என்று தன் தலைவி கூறியபோது அவளுடைய வார்த்தைகள் இதயத்தின் ஆழத்தில் குவிந்து கிடக்கும் சோகத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து கொட்டுவதை வசந்தமாலை உணர்ந்தாள்.

மாளிகையிலிருந்து வெளியேற முடியாமல் இத்தனை காலம் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் இதே வார்த்தைகளைத்தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இன்று வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றிப் பார்க்கும் போதும் இதே வார்த்தைகளையே சொல்லுகிறீர்களே?”

அடி அசடே! உடம்பைக் கட்டிப் போடுவதுதான் சிறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? மனம் விரும்புவதையும் நினைப்பதையும் அடைய முடியாமையே ஒரு சிறைதான்.” இப்படிக் கூறித் துயரத்தைத் தவிர வேறெந்த உணர்வையும் காட்டாத வறட்சியான தொரு நகை புரிந்தாள் சுரமஞ்சரி. தலைவியின் மனம் அளவற்று நொந்து போயிருப்பது தோழிக்குப் புரிந்தது. அவள் பேச்சைத் திருப்பி வேறு வழிக்குக் கொண்டு போனாள்: “விரைவில் மாளிகைக்குத் திரும்பிவிடுவது நல்லதம்மா! உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும்கூட இந்தப் பக்கமாகத்தான் தேரில் புறப்பட்டு வந்திருக்கிறார்களாம். எங்கேயாவது அவர்கள் பார்வையில் நாமிருவரும் தென்பட்டால் வம்பு வந்து சேரும் என்று தலைவியிடம் மெல்லக் கூறிவிட்டு வெளியே பல்லக்குத் தூக்குகிறவர்களுக்குக் கேட்கிறபடி இரைந்த குரலில் வேகமாகச் செல்வதற்கான கட்டளையை இட்டாள் வசந்தமாலை. பல்லக்குத் தூக்குகிறவர்கள் நடையைத் துரிதமாக்கிக் கொண்டு முன்னேறினார்கள்.

இந்திர விழா முடிவதற்குள் மணிமார்பனை எப்படியும் சந்தித்துவிட முயற்சி செய்ய வேண்டுமடி, வசந்தமாலை.”

முயற்சி செய்வதைப் பற்றித் தடையில்லை. ஆனால் முயற்சி நிறைவேறுவதும், நிறைவேறாமற் போவதும் நம் கையில் இல்லை.”

எதற்கும் முயன்று பார்க்கலாமே! இந்திர விழா முடிவதற்குள் இன்னும் ஒருநாள் வானவல்லி சுரமஞ்சரியாகவும் சுரமஞ்சரி வானவல்லியாகவும் நடித்தால் போயிற்று?”

 

நம்முடைய சாமர்த்தியத்தை நகைவேழம்பரும் உங்கள் தந்தையாரும் புரிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ செய்யாதவரை எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் அம்மா! திருவிழாக் கூட்டத்தில் நடப்பது போல நாம் சிறிதும் எதிர்பாராமல் அவர்கள் இருவரும் நம் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டால் எல்லாம் சீரழிந்து போகுமே?” என்று பயத்தோடு பதில் சொன்னாள் வசந்தமாலை.

-------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

7. பூக்களும் பேசின!

 

தன் கழுத்தை நெரிக்கும் வலிய கைகளின் பிடியில் சிக்குண்டு அந்தக் கபாலிகை விகாரமாகக் கூக்குரலிட்ட மரண ஒலம் சக்கரவாளத்தைச் சூழ்ந்திருந்த காடெல்லாம் எதிரொலித்தது. இளங்குமரன் வியப்படைந்து பார்த்தான். கபாலிகைக்குப் பின்புறம் நீலநாகமறவருடைய முகம் தெரிந்தது. அவள் கழுத்தை இறுக்கும் கரங்கள் அவருடையவை என்று கண்டான்.

ஐயா! விட்டுவிடுங்கள்... பாவம்... இவள் நமக்கு என்ன கொடுமையைச் செய்வதற்கிருந்தாளோ அந்தக் கொடுமையையே இவளுக்கு நாம் செய்து பழி சுமக்க வேண்டாம் என்றான் இளங்குமரன்.

கொலை வெறி பிடித்த பேய் மகளே! இனி இத்தகைய செயலைச் செய்யவும் நினைக்காதே. செய்ய நினைத்தாயோ நீ செய்ய நினைத்தது உனக்கே செய்யப்படும். இதோ இப்படி ஒரு விநாடி என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போய்த் தொலை...” என்று இடி முழக்கக் குரலில் எச்சரித்துவிட்டுக் கீழே தள்ளுவது போலக் கைகளின் பிடியிலிருந்து அவளை உதறினார் நீலநாக மறவர்!

நிலைகுலைந்து விழுந்த பைரவி எழுந்து ஓடுவதற்கு முன்னால் தன்னை ஒடுக்கிய பெருவலிமை எது என்று காண்பவள் போல் ஒருகணம் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக நின்ற அந்தக் கம்பீர ஆகிருதியைப் பார்த்தாளோ இல்லையோ, அலறி யடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓட்டமெடுத்தாள் அவள்.

ஒடிப் போய்விடு!... மறுபடி திரும்பிப் பார்த்தாயோ எல்லாக் கபாலங்களுக்கும் நடுவே உன்னுடைய கபாலமும் கிடக்கும் - நீலநாகருடைய இந்த வார்த்தைகள் அவளை இன்னும் வேகமாக விரட்டின. குதிகால் பிடரியில் படுகிறாற்போல் ஓடி மறைந்தாள் கபாலிகை.

 

நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று இளங்குமரன் தன்னைக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இடியிடித்து ஓய்ந்ததெனப் பெரியதாய்ச் சிரித்தார் நீலநாக மறவர். அவரிடம் மேலும் கூறினான் இளங் குமரன்:

என் மனத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று சிறிதும் சந்தேகமே உண்டாகவில்லை, ஐயா! ஏதோ இவள் வந்து சொன்னாள், நம்பிவிட்டேன். சுடுகாட்டுக் கோட்டத்தில் வன்னி மன்றத்தின் அருகே தன்னுடைய குரு காத்துக் கொண்டிருப்பதாகவும், அவருடனே சமயவாதம் புரிவதற்கு நான் வரவேண்டும் என்றும் அழைத்தாள். உடனே புறப்பட்டு விட்டேன்.”

நீ புறப்பட்டது தவறில்லை, இளங்குமரா! அறிவின் முடிந்த எல்லை கருணை. பிறர் மேல் இரக்கம், எவ்வளவு தீயவுண்மை பொதிந்ததாயிருந்தாலும் நல்லதாகவே பாவித்தல் இவைதாம். ஆனால் சூழ்ச்சியின் முடிந்த எல்லையோ சந்தேகம் மட்டும்தான். நீயும் நானும் இப்போது வேறு எல்லைகளில் வந்து நிற்கிறோம், நீ ஞானத்தையே வீரமாகக் கொண்டு ஞானவீரனாக வந்து நிற்கிறாய். நான் எப்போதும் போல் வீரத்தையும் ஞானமாகவே கொண்டு நிற்கிறேன். எதையும் எதிர் மறையாக எண்ணிப் பார்த்துவிட்டுப் பின்புதான் உடன்பாடாக எண்ணிப் பார்க்க வேண்டுமென்பது வீரனின் சிந்தனைச் சூழ்ச்சிகளில் முதன்மையானது. உடன்பாடாகவே எண்ணிப் பார்ப்பது ஞானியின் பாவனை. கொடியும் கையுமாக யானைமேல் ஏறிக் கொண்டு நீ படைக்கலச் சாலையிலிருந்து புறப்பட்ட சிறிது நாழிகைக் கெல்லாம் நானும் உன்னைப் பின்தொடர்ந்து புறப் பட்டேன் என்பது உனக்குத் தெரியாது. நாளங்காடியில் நீ நின்ற இடங்களிலும் சென்ற இடங்களிலும் மறைந்து மறைந்து, தோன்றாத் துணையாக உன்னைப் பின் தொடர்ந்தேனென்பதும் உனக்குத் தெரிந்திருக்க முடியாது. நீ எதையும் சத்தியமாகவே உடன்பட்டுப் பாவனை செய்து கொண்டிருப்பதால் அங்கிருந்து புறப்படுகிறபோது சமயவாதம் புரியப் போவதையும் வேறுபட்ட கருத்துடைய அறிஞர்களைச் சந்திக்கப் போவதையும் மட்டும்தான் நினைத்துக் கொண்டு. புறப்பட்டாய். நானோ உன்னுடைய பகைவர்கள், உன்னைக் கொல்ல நினைத்துத் திரிந்து கொண்டிருப்பவர்கள், எல்லாரையும் எண்ணிப் பின் தொடர்ந்தேன். நீ உன்னுடைய அறிவுக்குப் பகைவர்களாக எதிரே வந்து கொடி நடப் போகிறவர்களை மட்டும் எதிர்பார்த்து வந்தாய். நானோ உன்னுடைய உயிருக்குப் பகைவர்களை எதிர்பார்த்தும், எதிர்த்துப் பார்க்கவும் வந்தேன். நீ பிரமவாதியைச் சொற்களால் மடக்கி வென்றதையும் சாருவாகனனின் செருக்கை வேரோடு சாய்த்து வென்றதையும், ‘கருணைதான் செல்வம் என்று அந்தப் பல்லக்குச் செல்லக் குமரிக்குப் பதில் சொல்லிவிட்டுக் கீழே விழுந்த முதுமகளைத் தூக்கி வழியனுப்பியதையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த நான் கடைசியில் இந்தக் கபாலிகையின் பொய்யான வேண்டுகோளுக்கு நீ செவி சாய்த்தபோது தான் மகிழ்வதை நிறுத்திக் கொண்டு சந்தேகப்படத் தொடங்கினேன். இவள் உன்னிடம் பேசிய விதமும், அந்த அகாலத்தில் வன்னி மன்றத்துக்கு அழைத்த முறையும் எனக்குச் சந்தேகமூட்டின. நீ இவளோடு புறப்பட்டால் நானும் பின்தொடர்வதென்று முடிவு செய்தேன். அப்படியே நடந்தது.”

ஐயா! எதிர்மறையாக எண்ணிப் பார்ப்பதற்கும் சந்தேகப்படுவதற்கும் எனக்குத் தோன்றவே இல்லையே? கையைக் கூப்பி வணங்கினாற் போன்ற மதிப்போடு இவள் கூப்பிட்டவுடனே மெய்யென்று நம்பிவிட்டேன்.”

ஞானம் உலகத்தை நம்பிக்கை மயமாகவும் கருணை மயமாகவும் பார்ப்பதற்கு உன்னைப் பழக்கியிருப்பது நல்லதுதான். ஆனால் கையை ஓங்கிக்கொண்டு அறைய வருகிற பகைவர்களைக் காட்டிலும் கைகூப்பிக் கொண்டு மனம் கூசாமல் வருகிற பகைவர்கள் பயங்கர மானவர்கள். உலகத்தில் கையைக் கூப்பிக்கொண்டு நண்பர்போல் வரும் பகைவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ‘தொழுத கை உள்ளும் படை நடுங்கும் ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து என்று படித்திருப்பாயே?”

படித்திருக்கிறேன். ஆனால் அது அரச தந்திரிகளுக்கும் மதி அமைச்சர்களுக்கும் சொன்ன உண்மை அல்லவா?”

ஒவ்வொரு மனமும் ஓர் அரசுதான். அது அரச தந்திரமும் அமைச்சும் இருந்தால் மனத்தையும் மனோ ராச்சியத்தையும் அற்புதமாக ஆளலாம்.”

எல்லாவற்றையும் விட வேண்டுமென்று நான் கற்று வந்திருக்க, எல்லாவற்றையும் ஆள்வதற்கு நீங்கள் வழி சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஐயா!” என்றான் இளங்குமரன்.

இதைக்கேட்டு நீலநாக மறவர் புன்னகை புரிந்தார். “ஒன்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் மற்றொன்றை விட முடியுமா, இளங்குமரா? கவலையில்லாமல் உன்னுடைய அறிவுப் போராட்டத்தை நடத்து. அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண். வேறு பாதுகாப்பு அவசியமில்லை. ஆனால் கண்ணுக்கு அழகாயிருக்கிறதென்று மற்றவர்கள் புகழும் மையைக் கண்ணே கண்டு அநுபவிக்க முடியாதது போல அறிஞனுக்கும் மயக்கங்கள் வருவதுண்டு. இதுபோல் உயிர் போகிற ஆபத்துக்களும் அப்படி மயங்கி வரும். இன்று நீ இந்தக் கபாலிகையிடம் சிக்கிக்கொண்டதற்கும் அப்படிப் பிறழ்ந்த அநுமானம்தான் காரணம்! இந்த நகரத்து எல்லைக்குள் நான் ஒருவன் உயிரோடு இருக்கிற வரை உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. வா, போகலாம் என்று அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். இருவரும் யானைமேல் ஏறிக்கொண்டு படைக்கலச் சாலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது பின்னிரவு தொடங்கும் நேரமாகியிருந்தது. மேகங்களே இல்லாத தெளிந்த வானத்தில் ஆலமுற்றத்துக் கோவிலுக்கு அப்பால் முழுநிலா அற்புதமாகத் தோன்றிக் கொண்டிருந்தது. வானில் ஊர்ந்து திரிந்து வந்து அலுத்ததுபோல் அந்தப் பின்னிரவு நிலாவில் சற்றே ஒளிமங்கியுமிருந்தது.

 

ஏமாற்றத்தால் அன்று யாரிடமோ சாவதற்கிருந்த தன் உயிரைக் காத்த திருவருளை எண்ணி ஆலமுற்றத்தை நோக்கிக் கைகூப்பி வணங்கினான் இளங்குமரன். அந்த நேரத்துக்குப் பின்பும் நீலநாக மறவர் சில நாழிகைகள் உறங்கினார். இளங்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. கண்களை மூடியபடி அன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்தவாறே படுத்திருந்தான் அவன். விடிகிற நேரம் நெருங்கியது.

ஆலமுற்றத்து மரத்தில் காகங்கள் கரைந்தன. எங்கோ கோழி ஒன்று விடிகாலைக் குரல் எழுப்பியது. விடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாழிகைகள் இருக்கும் என்று தோன்றியது. அப்போது நீலநாக மறவர் அவனை எழுப்பி அழைத்துக் கொண்டு ஆலமுற்றத்துக் கடற்கரை ஓரமாக உலாவப் புறப்பட்டுவிட்டார். கரையோரத்து நெய்தற் கழிமுகங்களில் பூத்திருந்த தாழம்பூக்களின் நறுமணம் வெள்ளமாய்ப் பரவிக் கொண்டிருந்தது. “பூக்களுக்கு மணம்தான் பாஷை, மணம்தான் அர்த்தம். மணம்தான் இலக்கணம். மணம்தான் கவி, மணம்தான் அலங்காரம் என்று பூம்பொழிலில் குருகுல வாசம் செய்த காலத்தில் திருநாங்கூர் அடிகள் அடிக்கடி கூறிய வாக்கியங்களை இன்றும் இளங்குமரன் நினைவு கூர்ந்தான். திருநாங்கூரில் இருந்தபோது அடிகளும் இதேபோல வைகறையில் அவனை அழைத்துக்கொண்டு உலாவப் புறப்பட்டு விடுவார். அப்படிப் பனிபுலராக் காலையில் அடிகளோடு புறப்பட்டுப் போகும்போது இப்படி எத்தனை எத்தனையோ அழகிய சிந்தனைகள் அவரிடமிருந்து பூத்து அவன் செவிகளில் உதிர்ந்திருக்கின்றன.

தாழம்பூக்களின் மணத்தை உணர்ந்தபோது அவனுக்கு ஏதேதோ பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. அந்த நினைவுகளும் புதரில் பூத்த தாழம்பூக்களைப் போலப் பூத்திருக்கும் இடம் தெரியாமல் மணத்தையே பாஷையாகக் கொண்டு அவனிடம் பேசின.

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

8. நச்சுப் பாம்புகள்

 

போது நள்ளிரவையும் கடந்து விட்டது. வெறி ஒடுங்கிச் சோர்வு மிகுந்ததால் வன்னிமன்றத்தில் கபாலிகர்களும் உறங்கிப் போய்விட்டார்கள். மரக்கிளைகள் ஆடி உராயும் மர்மச் சப்தமும் காற்று சுழித்துச் சுழித்து வீசும் ஒசையும் இடை இடையே - அந்த ஒசைகளைக் கலைத்துக் கொண்டு ஆந்தையும், கோட்டானும் அலறுகிற விகாரமும், கூகை குழறும் குரலும் சேர்ந்து வன்னி மன்றத்துக்குக் கணம் கணமாகப் பயங்கரச் சூழ்நிலையைப் படைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தன. தொடங்கினால் முடிவதற்குச் சிறிது நேரமாகும்படி நீண்டு இழுபட்டுக் கேட்கும் நரியின் ஊளைக் குரல்வேறு. ஆண்டலை என்னும் பிணம் தின்னிப் பறவைகள் உயரமும் தோற்றமுமாக ஆள் நடந்து வருவது போலப் பறவை உடலும் மனிதத் தலைபோன்ற சிரமும் கொண்டு சுற்றித் திரிந்தன. இரவில் நெருப்புக் கனிகளாகத் தோன்றும் அவற்றின் கண்கள் காண்பதற்கு அச்ச மூட்டுவனவாயிருந்தன.

இந்தச் சூழ்நிலையில் நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் பைரவியின் குடிசை வாயிலில் காத்துக் கொண்டிருந்தார்கள். பைரவி இன்னும் திரும்பவில்லை. பெருநிதிச் செல்வருக்குப் பயத்தினால் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கைகள் எதையும் செய்யாம லிருக்கும் போதே நடுங்கின. மெளனமாக இருக்கும் போது பேசிக் கொண்டிருந்தால் பயம் தீரும் போலவும், பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சை நிறுத்திவிட்டு மெளனமானால் பயம் தீரும் போலவும் மாறி மாறிப் பேசியும், பேசாமலும் பயந்து கொண்டே இருந்தார் அவர்.

இப்படிப்பட்ட செயல்களுக்குப் பைரவிதான் முற்றும் பொருத்தமானவள். அவளை இத்தகைய செயலுக்கு அனுப்பினால் நிச்சயமாக வெற்றியை எதிர்பார்க்கலாம். அவளுடைய கைகளுக்கு முடியாத காரிய மென்று எதுவும் இல்லை என்று நகைவேழம்பர் புகழ் பாடிக் கொண்டிருந்த போதே பைரவி அலறிப் புடைத்தவாறு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கி இரைத்துக் கொண்டு நின்றாள். பதற்றத்தில் நிகழ்ந்ததைத் தொடர்பாகச் சொல்ல வர வில்லை அவளுக்கு. தயங்கித் தயங்கி ஏதோ சொன்னாள். சொல்லில் தெளிவில்லை. சொல்லப்பட்டவற்றிலும் துணிவில்லை. சொற்களை முழுமையின்றி அரற்றினாள்.

கொடுமையே வடிவான அவளும் தோற்றுப் போய் வந்தாள் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. “நிற்கவும் நிலைக்கவும் வேண்டிய காரியத்துக்குத் தடையின்மையே பெரிய அவலட்சணம் என்று சற்று முன் கூறினீர்களல்லவா அந்த அவலட்சணம் ஏற்பட்டுவிடாமல் தடை நேர்ந்துவிட்டது என்று குத்தலாகச் சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். இதைக் கேட்டுப் பெருநிதிச் செல்வருக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது. “என் சித்தப்படியே எல்லாம் நடக்கிறதென்று வீறாப்பு பேசினர்களே! உங்கள் சித்தப்படி, இதுவும் நடப்பது தானே?” என்று நகைவேழம்பரைப் பதிலுக்குச் சாடினார் அவர். இருவரும் ஒருவரையொருவர் சொற்களால் சாடிக்கொண்டே திரும்பினார்கள். சக்கர வாளத்தைக் கடந்து மதிற்சுவருக்கு இப்பால் பூதம் நின்ற வாயிலுக்கு வெளிப்புறம் அவர்களிருவரும் வந்தபோது எங்கிருந்தோ ஒர் ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தது.

 

ஆந்தை ஒற்றைக்குரல் கொடுக்கிறது. நல்ல சகுனம்தான். இன்று தோல்வி அடைந்து விட்டாலும் நம் முயற்சிக்கு என்றாவது வெற்றி கிடைக்கும் என்று தேரில் ஏறிக்கொண்டே சொன்னார் நகைவேழம்பர்.

உமக்குப் பட்சி சாத்திரம் கூடத் தெரியுமோ நகைவேழம்பரே - பெருநிதிச் செல்வர் இயல்பாக இப்படி வினாவுகிறாரா, ஏளனம் செய்யும் குரலில் வினாவுகிறாரா என்பைதப் புரிந்து கொள்ள முயன்று சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் திகைத்தார் நகைவேழம்பர். பின்பு திகைப்பு நீங்கியவராக ஆகா! பட்சி சாத்திரம் மட்டுமில்லை. பட்சிகளுக்கு வலை விரிக்கும் சாத்திரமும் தெரியும். ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தால் சாவு என்று பொருள். நாம் யாரைக் கொல்ல முயன்று கொண்டிருக்கிறோமோ அவனுக்குச் சாவு நெருங்குகிறது என்பதைத்தான் இந்த ஆந்தை சொல்கிறது என்றார்.

நீர் விளக்கம் சொல்வது போல் அல்லாமல் ஆந்தையின் குரலைக் கேட்ட உமக்கோ, எனக்கோ அது சகுனம் சொல்லியிருந்தால்...”

சொல்லியிருந்தால் இந்தக் கணமே அந்த ஆந்தைக்குச் சாவு என்று பொருள். சகுனங்களை நமக்கு ஏற்றாற்போல் இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிரச் சகுனங்களுக்கு ஏற்றாற்போல் நாம் மாற்றிக்கொண்டு வேதனைப்படலாமோ...?”

ஓகோ! எதையும் உமக்கு ஏற்றாற்போல வளைத்து மாற்றிப் பார்க்கிறவரா நீர்...?”

பெருநிதிச் செல்வரின் இந்தக் கேள்விக்கு நகைவேழம்பரிடமிருந்து மறுமொழியில்லை. அவர் விழிப்படைந்தார். தேர் விரைந்து போய்க் கொண்டிருந்தது. அமைதியான அந்த நேரத்தில் தேர்ச் சக்கரங்களின் ஒசையே எங்கும் பரவி நிறைவது போல் அதுவே பெரிய ஒசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்றதும் ஒரு தாழம் புதரருகே புற்றுக்களின் நடுவே மகுடி வாசித்துக் கொண்டிருந்த பாம்புப் பிடாரன் ஒருவனை அவர்கள் கண்டார்கள். தேரிலிருந்தபடியே நிலவொளியில் அந்த நாகரினத்துப் பாம்பாட்டி மகுடி வாசிப்பதை அவர்கள் கண்டுகொண்டே செல்ல முடிந்தது. இந்த இடத்திலிருந்து தேர் சிறிது தொலைவு சென்றபின் எதையோ அவசரமாக நினைத்துக் கொண்டவர் போல் தேரை மறுபடியும் திருப்பி அதே இடத்துக்குச் செலுத்தினார் நகைவேழம்பர். எதற்காகத் தேர் திருப்பப்படுகிறது என்பதைப் பெருநிதிச் செல்வரிடமும் கூறவில்லை. தம்மிடம் கூறாமலே தேர் திருப்பப்படுவதைக் கண்டு அவர் பயமும் திகைப்பும் ஒருங்கு அடைந்தாலும், பயத்தைச் சற்றே மறைத்துக் கொண்டு திகைப்பு மட்டும் வெளிப்படுகிற குரலில், “ஏன்? எதற்காகத் தேரைத் திருப்புகிறீர்கள் நகைவேழம்பரே! வன்னி மன்றத்தில் எதையாவது மறந்து வைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.

அவருடைய கேள்விக்குப் பதில் கூறாமல் குதிரைகளை விரட்டியடித்துக் கொண்டு போனார் நகைவேழம்பர். நாகர் இனத்துப் பாம்புப் பிடாரன் மகுடி வாசித்துக் கொண்டிருந்த புற்றருகே போய்த் தேர் நின்றது. அதற்குள் குதிரைகளுக்கு வாயில் நுரை தள்ளியிருந்தது. அவ்வளவு வேகத்தில் விரட்டியிருந்தார் அவர். அந்த இடத்துக்கு வந்ததும் தாம் தேரிலிருந்து முதலில் கீழே குதித்து நின்றுகொண்டுஇறங்கி வாருங்கள்! இவனிடத்தில் ஒரு காரியம் இருக்கிறது என்று பாம்பாட்டியைச் சுட்டிக் காண்பித்துப் பெருநிதிச் செல்வரை அழைத்தார் நகைவேழம்பர். ‘எதற்காகத் தேரைத் திருப்புகிறாய் என்று நான் கேட்டபோது என்னை மதித்துப் பதில் சொல்லாத இவனுடைய அழைப்பை மதித்து நான் ஏன் கீழே இறங்க வேண்டும் என்று நினைத்தவராய்ச் சில கணங்கள் நகைவேழம்பருடைய வார்த்தைகளையே கேட்காதவர் போலத் தேரிலேயே இருந்தார் பெருநிதிச் செல்வர். பின்பு நகைவேழம்பரைப் போலக் கொடுமையானவர்களை நேருக்கு நேர் அலட்சியம் செய்வது சமயோசிதமாகாது என்று தமக்குத்தாமே உணர்ந்தவராகத் தேரிலிருந்து கீழே இறங்கினார்.

இவனுடைய மகுடி ஒசையால் இந்தப் பகுதியில் மூலைக்கு மூலை நாகங்கள் புறப்பட்டு ஊர்ந்து கொண்டிருக்குமே? இங்கு எதற்காகத் தரையில் இறங்க வேண்டுமென்கிறீர்கள்? தாழம் புதரும், புற்றுக்களும், பிடாரனும் பார்த்தாலே பயமாக இருக்கிறதே...?” என்று வார்த்தைகளை நீட்டி இழுத்த பெருநிதிச் செல்வரை ஏறிட்டுப் பார்த்தார் நகைவேழம்பர். விஷமமாகச் சிரித்துக்கொண்டே பார்த்தார். பார்த்துவிட்டுப் பதறாத குரலில் உள்ளர்த்தமாகப் பல செய்திகளையெல்லாம் நிறைத்து நிறுத்திய வார்த்தைகளால் சுருக்கமாக ஒரு கேள்வி கேட்டார்.

பயப்படுகிற எதையும் நீங்கள் செய்வதே இல்லையோ?”

பெருநிதிச் செல்வர் இதைக் கேட்டு அப்படியே வெலவெலத்துப் போனார். இந்தக் கேள்வியின் மூலமாக நகைவேழம்பர் எதை நினைவுபடுத்துகிறார் என்று பழைய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கவும் முயன்றார். எதையும் நினைவுபடுத்துகிறாற் போலவும் இல்லை. எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் குத்திக் காட்டுவது போலவும் இருந்தது. எல்லாவற்றிலும் பயங்கரமான ஏதோ ஒன்றை மட்டும் நினைவுறுத்துவது போலவும் இருந்தது. இந்தக் கேள்வியைக் கேட்கிறபோது நகைவேழம்பரின் பேச்சும் வன்மையாகவே இருந்தது. மனத்தில் ஏதேதோ அதிர்ச்சிகள் பேசிட, வாய் ஒன்றும் பேசாமல் நகைவேழம்பரைப் பின்பற்றிப் பாம்புப் பிடாரன் இருந்த இடத்துக்கு நடந்தார் பெருநிதிச் செல்வர். கொடி கொடியாய்க் கிளை விட்டு வளர்ந்திருந்த அந்தப் புற்றுக்களின் நுனித் துவாரங்களைப் பார்த்தவாறே கவனம் கலையாமல் மகுடி ஊதிக் கொண்டிருந்தான் அந்த முரட்டுப் பிடாரன். தனக்குப் பின்னால் மிக அருகில் யாரோ இருவர் வந்து நிற்பதை அறிந்து கொண்டானாயினும் அவன் திரும்பிப் பார்க்க வில்லை. பயத்தினால் புற்று நுனிகளெல்லாம் பெருநிதிச் செல்வருக்குச் சர்ப்பங்களாகவே தோன்றின. நெருப்பில் காட்டிய தருப்பைப் புல்லின் அழலோடிய துணிகளைப் போல் செக்கச் செவேலெனப் பிளந்த நாக்குகள் நெளிய ஒரு படம் புற்றிலிருந்து வெளி வந்து தெரிந்தது. பெரு நிதிச் செல்வர் பயந்து பதுங்கி நகைவேழம்பரைத் தழுவிக் கட்டிக்கொள்வதுபோல அவரோடு அவராக ஒண்டினார். சாதிக்காயின் மேல் நரம்போடிப் படர்ந்த சாதிப் பத்திரிபோல் நச்சு நாவுகள் நெளியப் புற்றுத் துளையிலிருந்து பொங்கி ஒழுகிப் பெருகி வழியும் கருமையாய் ஒரு பெரிய கருநாகம் வெளிவந்தது. மகுடியை ஒரு கையாலேயே வாசித்துக் கொண்டு மற்றொரு கையால் சர்ப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த வேரைப் பிடித்தான் பிடாரன். தரையில் அவனைச் சுற்றிலும் பாம்பைச் சிறைப் பிடித்து அடைத்துக் கொண்டு போகும் பேழைகள் கிடந்தன. பயத்தின் மிகுதியால் நகைவேழம்பரையும் இழுத்துக் கொண்டு பின்னுக்கு நகர்ந்தார் பெருநிதிச் செல்வர்.

கூடை போலப் பிரம்பினால் நெருக்கமாய்ப் பின்னிய வட்டப் பேழையில் சாமர்த்தியமாக அந்தச் சர்ப்பத்தை அடைத்து மூடி அதன்மேலே சிறு கல் ஒன்றையும் தூக்கி வைத்தான் பிடாரன். பின்பு விலகி நிற்கும்படி அவர்களுக்குச் சொல்லிவிட்டு மேலும் மகுடி ஊதலானான். புற்றில் இன்னொரு படம் தெரிந்தது. தொடர்ந்து வேறு வேறாக அடுத்த இரண்டு துவாரங்களிலும் படங்கள் தெரிந்தன. பிடாரன் சாதுரியமாய் வேலை செய்தான். அவனிடம் மீதமிருந்த பேழைகளும் நிரம்பின. கிடைத்த பாம்புகளையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டு அவன் மகுடியை நிறுத்திவிட்டு எழுந்தான். நகைவேழம்பர் அவனைப் பற்றி அவனிடமே விசாரித்தார். இந்திர விழாவில் வேடிக்கை விளை யாட்டுக்கள் செய்து பாம்பாட்டிக் காட்ட வந்திருப் பதாகவும் அது தன் தொழில் என்றும் அவன் சொன்னான். நகைவேழம்பர் அவனிடமே மேலும் கேட்டார். “இந்த நச்சுப் பாம்புகளை எப்படிப் பொது இடங்களில் வைத்து ஆட்டுவாய்? இவற்றைக் கண்டாலே மக்கள் பயப்படுவார்களே?”

ஆட்டுவதற்குக் கொண்டு போகும் முன்பே நச்சுப் பல்லைப் பிடுங்கி விடுவோம் ஐயா! பிடுங்கா விட்டாலும் இவற்றை ஆட்டும் வேர் எங்களிடம் உண்டு என்றான் பிடாரன். நகைவேழம்பர் மிக அருகில் சென்று குழைவான குரலில் அவனிடம் வேண்டினார்:

நீ எங்களுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்...”

என்ன செய்ய வேண்டும் ஐயா?”

நீ உன் பாம்புப் பேழைகளுடன் எங்களோடு எங்கள் தேரில் வரவேண்டும்..” என்றார் நகைவேழம்பர்.

பிடாரன் எதற்காகவோ தயங்கினான்.

இந்திர விழாவின் எல்லா நாட்களிலும் சேர்த்து நீ எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாத்தியத்தை விட அதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பைச் சில நாழிகைகளிலேயே உனக்கு நான் ஏற்படுத்தித் தர முடியும்.”

பாம்புகளைச் சிறைப்படுத்திய தைரியசாலி ஆசைக்குச் சிறைப்பட்டான். நச்சுப் பாம்புகளே தன்னை தீண்டாமல் பிடித்தவன் ஆசைப் பாம்புக்குக் கடிபட்டான். “ஐயையோ! தேரிலா? பாம்புப் பேழைகளும் இவனும் வந்தால் நாம் எப்படிப் போவது?” என்று பதறிய பெருநிதிச் செல்வரின் காதருகே சென்று. மந்திரம் போட்டது போல ஏதோ சொன்னார் நகைவேழம்பர். அவ்வளவுதான். பெருநிதிச் செல்வர் முகம் மலரச் சம்மதம் தந்துவிட்டார். பாம்புப் பிடாரன் பேழைகளும் தானுமாகத் தேரின் பின் பக்கத்துச் சட்டத்தில் ஏறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். பேழைகளைக் கவனமாகப் பற்றிக் கொள்ளும்படி அவனை எச்சரித்துவிட்டு நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் தங்கள் இடங்களில் ஏறிக்கொண்டனர். தேர் பட்டினப் பாக்கத்துக்கு விரைந்தது.

மாளிகைக்குத் திரும்பியதும் பெருநிதிச் செல்வரை மட்டும் உறங்குவதற்கு அனுப்பிவிட்டுப் பிடாரனை அழைத்துக் கொண்டு தம் பகுதிக்குச் சென்ற நகைவேழம்பர் பணியாட்களை எழுப்பி மாளிகைத் தோட் டத்திலிருந்தும் வெளியேயுள்ள பூங்காக்களிலிருந்தும் குவியல் குவியலாகப் பூக்களைக் கொண்டு வரச் செய்தார். பூக்கள் குவிந்தன. பொழுதும் புலர்ந்தது.

 

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

9. தொழுத கையுள்ளும்...

 

பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் பூக்கள் குவிந்து பொழுது விரிந்து கொண்டிந்த இதே வேளையில்தான் இளங்குமரன் ஆலமுற்றத்துக் கடல் ஓரமாக நீலநாக மறவருடன் நடந்து கொண்டிருந்தான். அங்கே நெய்தல் நிலத்துக் கழி முகங்களில் மலர்ந்திருந்த தாழம்பூக்களின் மணத்தை நுகர்ந்தபோது, இந்தத் தாழம்பூக்களின் மணத்தையே நான் அடிக்கடி உணர நேர்கிறதே என்று நினைத்துத் தனக்குத்தானே மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன். உலகத்துப் பூக்களிலும் அவற்றின் மணத்திலும் நாங்கூர் அடிகள் தெய்வத்தையே பார்க்கிறார். நானோஇவ்வளவு நாள் கற்ற பின்னும் பழைய மனிதர்களையும் பழைய உறவுகளையும் பழைய நினைவுகளையும் தவிர வேறெதையும் இவற்றின் மணத்தில் காண முடிய வில்லையே என்று எண்ணியபோது இளங்குமரனுக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. வாசனையின் வழியே மனம் போகக் கூடாதென்பதைத்தான் அவன் கற்றிருந்த தத்துவங்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தன. அவனோ கால்கள் நடந்த வழி மனமும், மனம் நடந்த வழியே கால்களும் செல்லாமல் இரண்டும் வேறு வேறு வழிகளுக்கு முரண்டிக் கொண்டு போகிற வேதனையை இன்று அதிகாலையில் உணர்ந்தான். நீராடித் தூய்மை பெற்றுத் திரும்பிய போது மனமும் கால்களும் ஒரே வழியில் நடக்கும் ஒருமை நிலையோடு அவன் நீலநாகமறவருடன் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தான். புனலாடிக் குளிர்ந்த உடம்பினாலும் தியானத்தினாலும் மனம் தூய நினைவுகளிலும் மூழ்கியிருந்தது. பழைய கலக்கம் இல்லை.

 

அவர்களை எதிர்பார்த்து அப்போது ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவியும் படைக்கலச் சாலையில் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். நீலநாகமறவர் மணிமார்பனைக் கண்டதுமே அடையாளம் புரிந்து கொண்டார்.

பாண்டிய நாட்டுப் பிள்ளையாண்டானா? எப்பொழுது வந்தாய்?” என்று அன்போடு அவனை விசாரித்தார் நீலநாகமறவர். மனைவியோடு இந்திர விழாக் காண வந்திருப்பதை இவரிடம் கூறினான் மணிமார்பன். “எங்கே தங்கியிருக்கிறாய் தம்பீ?” என்று மேலும் கேட்டார் அவர். இலவந்திகைச் சோலையின் மதிற்புறத்தில் உள்ள ஓர் அறக்கோட்டத்தில் தங்கியிருப்பதாகக் கூறினான் அவன். அதைக் கேட்டதும் அவர் முகம் கலக்கத்தைக் காட்டியது.

இந்த ஊரில் உனக்குப் பழைய பகைவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டிருந்தும் நீ இப்படியெல்லாம் பொது இடங்களில் தங்கலாமா? முன்பாவது நீ தனிக்கட்டை, இப்போது உன்னைப் பற்றி கவலைப்படவும் நீ கவலைப்படவும், இந்தப் பெண்ணும் இருக்கிறாளே, முதலிலேயே இங்கு வந்து தங்கியிருக்கக் கூடாதோ? இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இலவந்திகைச் சோலைக்குப் போய் உங்கள் பொருள் களையெல்லாம் எடுத்துக் கொண்டு இன்று மாலைக்குள் இருவரும் இங்கே வந்துவிடுங்கள். இந்திர விழா முடிந்து ஊர் திரும்புகிற வரை இங்கேயே தங்கலாம் என்றார் நீலநாகமறவர். அப்படியே செய்வதாக இணங்கினான் மணிமார்பன். சிறிது நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்து விட்டு இளங்குமரனும், நீலநாகரும் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர்.

செய்யவேண்டிய வழிபாடுகளையும் நியமங்களையும் முடித்துக் கொண்டு அன்று காலையிலேயே சமய வாதத்துக்குப் புறப்பட்டு விட்டான் இளங்குமரன்! புறப்படும்போது நீலநாகர் எச்சரித்தார்: “நேற்றைய அனுபவத்தை மறந்துவிடாதே, கவனமாக நடந்து கொள். ஒவ்வொரு விநாடியும் நான் உனக்குத் துணையாயிருப்பதென்பது இயலாத காரியம். நான் ஒரு விநாடி சோர்ந்திருந்தால் அந்த ஒரு விநாடியைப் பயன்படுத்திக்கொண்டு உன் பகைவர்கள் உனக்கு எவ்வளவோ செய்துவிடலாம்.”

இதைக்கேட்டு இளங்குமரன் மெல்லச் சிரித்தான். “அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண் என்று நீங்கள்தானே நேற்றுக் கூறினிர்கள்! அதை நம்பித்தான் தனியே போகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். இன்று நடந்தே புறப்பட்டுச் செல்வதென்று தனக்குள் நினைத்திருந்தபடியே செய்தான் அவன்.

வேடிக்கை, விளையாடல், கலை, களிப்பு என்று இந்திர விழாக் கூட்டம் பலவிதமான நுகர்ச்சிகளில் சிதறியிருந்தாலும் அறிவில் இன்பம் காணுகிற கூட்டம் நாளங்காடியில் ஒரு மூலையிலிருந்த அந்த அறிவுப் போர்க்களத்தில் கூடியிருந்தது. இந்திர விழாவின் இரண்டாவது நாட் காலையாகிய அன்று பூத சதுக்கத்தில் படையலிடுவோர், பாடுகிடப்போர் கூட்டம் மிகுதியாயிருந்தது. அதனால் நேரம் காலையாயினும் சமயவாதிகளைச் சுற்றிலும் கூடக் கூட்டம் அதிகமாயிருந்தது. இளங்குமரன் அந்தக் கூட்டத்தில் நுழைந்து தன் கொடியை ஊன்றியபோது கூடியிருந்தவர்களிடம் பெரிதும் ஆர்வம் பிறந்தது. அவர்களிற் பலர் முதல்நாள் அவனுடைய வாதத்தில் திறமை கண்டதின் காரணமாக இன்றும் இதைக் காணலாம் என்னும் ஆவலால் வந்தவர்கள். கூட்டத்தில் ஒரு பகுதியினர் இளங்குமரன் உள்ளே நுழைந்து கொடி ஊன்றியதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவனை வரவேற்றதிலிருந்தே அந்த ஆர்வம் புலப்பட்டது. அன்றைக்கு இளங்குமரனுக்கு வாய்த்த முதல் எதிரி ஒரு சாங்கியனாக அமைந்தான். தத்துவங்களில் மிகவும் வல்லவனாகிய அந்தச் சாங்கியன் மிடுக்காக நடந்து சிரித்துக் கொண்டே இளங்குமரனுக்கு எதிரில் வந்து தன் கொடியை நட்டான். அவனுடைய சிரிப்புநீ என் தத்துவங்களுக்கு முன்னால் வெறும் சிறுபிள்ளை. உன்னை வெல்வதற்கென்று எனக்குத் தனி முயற்சி எதுவும் வேண்டியதேயில்லை என்று இளங்குமரனை எள்ளி நகையாடுகிற விதத்தில் தெரிந்தது. சாங்கியன் கூர்மையான அம்பைக் குறிவைத்து எய்வது போல் தன் முதல் கேள்வியைத் தொடுத்தான்: “உலகம் உள்ள பொருளாகச் சொல்லப்பட்டது. தானே தோன்றி தானே அழியப்போகிற உலகத்துக்கு முதற் காரணமே போதுமே? நிமித்த காரணமாக ஒரு செய்பவன் எதற்கு?” இந்தக் கேள்வியிலும் அவன் தோற்றத்தில் இருந்தாற் போலவே மிடுக்கு இருந்தது. இளங்குமரன் தெளிவான முறையில் அவனுக்கு மறுமொழி தந்தான்: “செய்வோர் இல்லாமல் வினை செய்யப்படுவது முடியுமோ? செய்பவன் செய்து உண்டாக்கிய பின்பு தானே பொருள் உள்ளதாகும்? உத்தேசம் பண்ணிக் கொள்ளாமல் இலக்கணம் பண்ணுவது தருக்கத்தில் குற்றமல்லவா? நான்மலடியீன்ற மகன் என்பதுபோல் உத்தேசமும் இல்லாமல் இலக்கணமும் இல்லாமல் வீணான வார்த்தைகளைச் சொல்கிறீர்களே? உள்ளதை உள்ளதென்று உணரும் அறிவுக்கு உபலத்தி என்று பெயர். இல்லதை இல்லதென்று உணரும் அறிவுக்கு அநுபலத்தி என்று பெயர். கண்முன் தெரிகிற உலகத்தை உபலத்தியாக உணரும் நாம் அதற்குச் செய்தவன் உண்டு என உணருவதே நியாயம். செய்யப்பட்ட பொருள் உபலத்தியாகும்போது செய்தவன் மட்டும் அநுபலத்தியாவது எப்படிப் பொருந்தும்? பொருந்துமானால்வாக்கிய பேதம் என்னும் குற்றமுடைய பேச்சை நீங்கள் பேசுகிறீர்கள். கவிகள் அலங்காரத்துக்காக வாக்கிய பேதம் செய்யலாம். தருக்கத்தில் சிறு சொல்லுக்கும் மதிப்பு அதிகம். நெருப்புக் காய்வது போல் நெருங்காமலும் விலகாமலும் சொல்லை அளவாகத் தொடுத்து வாதிடவேண்டும். ஒளியைக் கண்டு உணர்வது உபலத்தி. இருளைக் கண்டு உணர்வது அநுபலத்தி. ஆலம்பழத்தின் அளவுள்ள சிறு நெருப்பைக் கொண்டு ஏழு எட்டு வேள்விக் குழிகளில் பெருநெருப்பை வார்க்க முடிவதுபோல் தருக்கத்தில் சிறு சொல்லுக்கும் பெரும்பயன் விளைய வேண்டும். சிறியதில் இருந்து பெரியவற்றைப் பயனாக விளைத்துக் காட்ட வேண்டும்.”

இதைக் கேட்டுச் சாங்கியன் சிறிதும் அயரவில்லை. தனது அடுத்த கேள்வியைத் தொடுத்தான். “நீர் தன் மேல் உருண்டு அலைந்து ஆடினாலும் நான் பற்றின்றித் தாங்கி இருக்கும் தாமரை இலைபோல் புத்தி ஐம்பொறிகள் வழியாக நுகர்ச்சியை ஏற்றுக் கொள்ளும், புத்திக்கும் அப்பால் வேறொருவன் எதற்கு?”

 

உமது கேள்வி நன்றாயிருக்கிறது. அழகாகப் பதில் சொல்ல முடியாதவர்கள் கேள்விகளையாவது அழகாகக் கேட்க முடியும். சாங்கியராக இருந்த நீர் அறிந்தது அழகாகக் கேள்வி கேட்கும் அறிவு ஒன்றுதான் போலி ருக்கிறது. ஆன்மா ஒன்றித்து நின்று காட்டாவிடின் புத்தியும் ஐம்பொறிகளும் நுகரமாட்டா என்பதை நீர் தெரிந்து கொள்ளவில்லையா? உமக்குக் கண்கள் இருக்கின்றன. அவற்றுக்குப் பார்க்கும் ஆற்றலும் இருக்கிறது. ஆயினும் செறிந்து மண்டிய இருளில் உம்முடைய கண்களால் ஏன் எதையும் பார்க்க முடிவதில்லை? கண்களும், பார்க்க ஆற்றலும் தவிர உம்முடைய விழிகளையும் - கானும் ஆற்றலையும் நீர் காணவேண்டிய பொருளோடு ஒன்றிப்பதற்கு அவற்றின் வேறாகிய ஒளியும் வேண்டுமா, இல்லையா?”

மேலே என்ன கேட்பதென்று தயங்கிய சாங்கியன் விழித்தான். ஆனால் இன்னும் ஏதோ கேட்பதற்கு அவனுடைய உதடுகள் மட்டும் துடித்தன. அதற்குள் கூட்டத்தில் இளங்குமரனைப் புகழும் வெற்றிக் குரல்கள் முழங்கத் தொடங்கிவிட்டன. கொடியும், மிடுக்கான பார்வையோடு கூடிய முகமும் தாழத் திரும்பி நடந்தான் சாங்கியன்.

அப்போது கூட்டத்தில் ஏதோ பரபரப்பு ஏற்பட்டது. யாரோ வழி விலகிக்கொண்டு உள்ளே வருவதற்கு முயல்வது போலத் தோன்றியது. இளங்குமரன் பார்த்தான். இரண்டு மூன்று பெண்களும் அவர்களுக்குப் பின்னால் பெரிய கூடையைச் சுமந்து கொண்டு யவனப் பணியாளன் ஒருவனும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாரென அவனுக்குத் தெரிந்தது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைப் பெண்கள். ஒரேவிதமான கோலத்தில் விளங்கிய இருவரில் ஒருத்தி சுரமஞ்சரியாகவும், இன்னொருத்தி வானவல்லியாகவும் இருக்க வேண்டும் என்று அவன் அதுமானித்தான். மூன்றாவதாகக் கடைசியில் வந்தாள் வசந்தமாலை,

அவர்களுடைய அழகு அலங்கார ஒளியினாலும் அவர்கள் பரவவிட்ட மணத்தினாலும் கூட்டமே அவர்கள் பக்கம் கவரப்பட்டது. இளங்குமரன் மட்டும் சலனமின்றி நின்றான். மூன்று பெண்களும் அவனுக்கு மிக அருகில் வந்து தலை தாழ்த்தி அவனை வணங் கினார்கள். மூவரிலும் முதலில் நின்ற பெண் வணங்கிய படியே நிமிர்ந்துஎன்னைத் தெரியவில்லையா? நான் தான் சுரமஞ்சரி என்று மெல்லச் சொன்னாள். சலனமின்றி நின்ற இளங்குமரன், “நேற்று நீங்கள் வானவல்லியாக இருந்தது மெய்யா? இன்று நீங்கள் சுரமஞ்சரியாக இருப்பது மெய்யா? இரண்டில் எது மெய்?” என்று பதறாமல் கேட்டான்.

 

-------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

10. ஆத்ம தரிசனம்

 

அந்தப் பெருங்கூட்டத்தின் இடையே அப்படி ஒரு சூழ்நிலையில் இளங்குமரனிடமிருந்து சுரமஞ்சரி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நேற்று மாலை இதே நாளங்காடியில் தன்னைக் கண்டுசுரமஞ்சரியா?’ என்று கேட்டபோது, ‘நான் சுரமஞ்சரி இல்லை. அவள் சகோதரி வானவல்லி என்று தான் கூறியிருந்த பொய் அவன் மனத்தில் சிறிதும் சந்தேகத்தை உண்டாக்கியிராது என்றே அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவன் ஒன்றை மெய்யென்று உணர்வதால் ஏற்படுகிற மகிழ்ச்சியையோ பொய்யென்று உணர்வதால் ஏற்படுகிற காழ்ப்பையோ முகத்தில் தெரிய விடுகிற சாமானிய இளைஞனாக இப்போது இல்லை என்பதை நினைத்தபோது நேற்று அவனை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு தானே ஏமாந்து போயிருப்பது அவளுக்கு இன்று விளங்கியது.

கேள்வியைக் கேட்டவன் பதறாமல் கேட்டுவிட்டுச் சலனமின்றி நின்று கொண்டிருந்தாலும் கேட்கப்பட்டவளால் அப்படிப் பதறாமல் நிற்க முடியவில்லை. சந்தனக் கல்லில் அரைத்த சந்தனம் சரிவு சரிவாய் இழைத்து மடிந்தாற்போல் அவள் முகம் சுருங்கியது. வாட்டமும் கண்டது. ஆனால் அந்த வாட்டமும் பதற்றமும் தன்னிடம் நீடிக்க விடவில்லை அவள். எதிரே படிப்பினாலும் தவத்தினாலும் இளைத்து வெளுத்துத் தூய்மையால் செழித்து அவன் நிற்கும் தோற்றம் என்ன மறுமொழி கூறுவதென்ற திகைப்பை அவளுக்கு உண்டாக்கினாலும் மெல்லிய குரலில் அவள் பேசினாள்:

மன்னிக்க வேண்டும். நேற்றிருந்த சூழ்நிலையில் நான் எதை எப்படி மாற்றிக் கூறியிருந்தாலும் அதை இன்று மறந்து விடுங்கள். நேற்று நிகழ்ந்ததைப் பற்றி இன்று பேச்சு எதற்கு? நேற்றைக்கு நானும் வசந்த மாலையும் இங்கு வந்திருந்த சூழ்நிலை வேறு. இன்றைக்கு நாங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கிற சூழ்நிலை வேறு. இப்போது இந்த இடத்தில் அந்த வேறுபாட்டை விளக்கிக் கூற முடியாமல் இருப்பதற்காக அருள்கூர்ந்து எங்களைப் பொருத்தருள வேண்டும் என்று அவள் கனி இதழ்களில் இருந்து வார்த்தைகள் பிறந்தபோது இளங்குமரனுடைய இதழ்களில் நிர்விகாரமான் புன்னகை ஒன்று அரும்பியது.

நேற்று நிகழ்ந்ததை இன்று பேசக்கூடாது. ஆனால்என்னைத் தெரியவில்லையா?’ என்று நீங்கள் பேச்சைத் தொடங்கியதே தவறாயிற்றே அம்மணீ! ‘தெரிய வில்லையா?’ என்று நீங்கள் கேட்டதனால்தான், ‘உங்களை எப்படித் தெரிந்துகொள்வது? நேற்றுத் தெரிந்தது போலவா, இன்று தெரிவது போலவா?’ என்று நானும் கேட்க நேர்ந்தது.”

 

நீங்கள் கேட்க நேர்ந்ததைப் பற்றி மகிழ்ச்சி. இன்று தெரிவது போலவே என்றும் நான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பது தான் என் விருப்பம். யாருக்கு எப்படித் தோன்றினாலும் உங்களுக்கு நான் சுரமஞ்சரி யாகவே தெரிய வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.”

உங்கள் விருப்பம் அப்படி இருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் சித்திரங்களிலும், சிலைகளிலும், மகாகவிகளின் காப்பியங்களிலும்தான் இன்றுள்ளது போன்ற குணத்தை என்றும் காண முடிந்த வகையைச் சேர்ந்த உத்தம மனிதர்களைப் பார்க்க முடிகிறது. வாழ்வில் கண்முன் காண்கிற மனிதர்களின் குணம் என்னவோ மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தீ சுடுமியல்பை உடையது. நீர் குளிர்ந்தே இருப்பது என இயற்கைப் பொருள்களின் பொதுக் குணத்தை உறுதிப் படுத்திச் சொல்ல முடிந்தாற்போல மனிதர்களுடைய குணத்தை எப்படி உறுதிப் படுத்திச் சொல்ல முடியும்? அந்தந்த விநாடிகளின் நினைவுகளே அந்தந்த விநாடி களுக்குரிய குணங்களாகவும் சத்தியங்களாகவும் கொண்டு எந்த விநாடியில் இருந்தது சொந்தக் குணமென்று தெரியாமல், எந்த விநாடியில் எண்ணியது எல்லா விநாடிகளுக்கும் சத்தியம் என்றும் தெரியாமல் வாழ்கிறவர்களுக்கு நிலையான குணம் இது என்று எதைச் சொல்வது?”

இப்பொழுது கூறிய வார்த்தைகள் யாருக்காகவோ?”

தனியாக யாருக்கென்று சொல்வது? உனக்காக, உங்களுக்காக, எனக்காக, எல்லாருக்காகவும்தான். ஓடுகின்ற ஆற்று நீர் போல் சென்ற கணத்தில் இங்கு நின்றது அடுத்து கணத்தில் எங்கு நிற்பதெனத் தெரியாத தாய் எங்கும் நில்லாமல் ஓடிக்கொண்டே எல்லா இடத்திலும் நிற்பது போல் தெரிவதனால் குணம் ஓர் இயக்கம். இயக்கமில்லாத நிலையான சத்துவ குணத்தை அருட்கவிகளின் தெய்வீகமான காப்பியங்களில் வரும் உத்தமமான பாத்திரங்களிடம்தான் காண முடியும். மனம் சத்துவ குணமே நிரம்பியதாகும் போது உலகம் சுகரூபமாகவும், இராஜச குணமே நிரம்பியதாகும் போது அதே உலகமே துக்க ரூபமாகவும், தாமத குணமே நிரம்பியதாகும் போது மோக ரூபமாகவும் தெரிகிறது. ஒரு சமயம் சுகமாய்த் தோன்றியது மற்றொரு சமயம் துக்கமாகவும், துக்கமாகத் தோன்றியது சுகமாகவும், மனத்துக்கும் அங்கு நிற்கும் குண நிலைக்கும் ஏற்ப மாறித் தோன்றுவதை எப்படி வரையறுக்க முடியும்?”

வரையறைகளையும் இலக்கணங்களையும் பற்றி நீங்கள் என்னிடம் பேசுவதைப் பார்த்தால் என்னையும் உங்களோடு வாதிட வந்தவளாக நினைத்துக் கொண்டு விட்டதாகத் தெரிகிறது. நானும், என்னோடு வந்திருப்பவர்களும் உங்களை வாதுக்கு அழைக்க வரவில்லை. வணங்கிச் செல்வதற்கே வந்தோம்.”

அப்படியா? மற்றவர்கள் என்னை வணங்குவதையும் சேர்த்து என்னால் வணங்கப்படுகிறவர்களுக்குப் பாவனையால் அனுப்பிவிடுகிறவன் நான். இப்படி வணக்கங்களையும் கூட ஏற்று மகிழ முடியாதவனைத் தேடி வந்து வணங்குவதில் உங்களுக்கு என்ன தான் சுகம் கிடைக்கப் போகிறது?”

 

உலகத்தில் சுகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமோ? தொடர்ந்து துக்கமும், வெறுப்பும், அலட்சியமும் கிடைக்கிற இடத்தில் வந்து நிற்கும்போது அங்கே சுகம் கிடைக்காதென்று உணர்ந்திருந்தும் மனம் அந்த அவநம்பிக்கையிலே தான் சுகம் ஒளிந்திருப்பது போல துரத்திக் கொண்டு வந்து நிறுத்துகிறதே...?”

சுரமஞ்சரி இந்தச் சொற்களைச் சொல்லும்போது அவள் விழிகளில் நீர் சுழன்று ஈரம் மின்னுவதை இளங்குமரன் கண்டும் அமைதியாகவே நின்றான். நன்றாக நிமிர்ந்து அதுவரை இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைத் தானும் பார்த்தான் அவன். சுரமஞ்சரி நெகிழ்ந்த குரலில் மேலும் கூறலானாள்.

இன்று நாங்களாக வரவில்லை. எங்கள் தந்தையாருடைய வேண்டுகோளின்படி இங்கே உங்களைத் தேடி வந்தோம்.”

உங்கள் தந்தையார் என்ன வேண்டுகோள் விடுத்தார்?”

“‘நாளங்காடியில் யாரோ ஓர் இளைஞர் காண்போர் வியந்து வணங்கும்படி அழகாக வாதிடுகிறார். அவரை இந்த நகரத்து அறிவுடைப் பெருமக்கள் எல்லோரும் போற்றுகிறார்கள். புண்ணிய சீலராகிய அந்த இளைஞரை வணங்கி வாழ்த்துப் பெறுவது பெரும் பேறு எனக் கருதுகிறார்கள். நீங்களும் இன்று போய் அவர் பாதங்களில் பூக்களைக் குவித்து வணங்கி வாழ்த்துப் பெற்று வாருங்கள் என்று எங்கள் தந்தையார் எங்களிடம் கூறியனுப்பினார்.”

உங்கள் தந்தையார் பிறரை வணங்கவும் விரும்புவது உண்டு போலும். மற்றவர்களை வணக்குவித்து மகிழ்கிறவர்களால் வணங்கி மகிழவும் முடியுமோ, அம்மணீ?”

இளங்குமரனின் இந்தக் கேள்வி தனக்குக் கொடுக்கப்பட்ட சூடு என்பதைச் சுரமஞ்சரி உணர்ந்தாலும் இதற்குப் பதில் கூறாமல், பின்புறம் சற்றே விலகி நின்ற யவனப் பணியாளனிடமிருந்து பூக்கூடையை வாங்குவதற்காகத் தன் பூங்கரங்களை வளைகள் குலுங்க நீட்டினாள். கூடியிருந்தவர்கள் அந்தப் பெரிய பூக்கூடையைப் பார்த்து வியப்பில் மூழ்கினார்கள், அடடா! எவ்வளவு பெரிய பூக்கூடை இது!

இவ்வளவு பெரிய கூடை நிறையப் பூக்களைக் கொண்டு வந்திருக்கிறவர்களுக்கு இந்த இளைஞர்மேல் எவ்வளவு மதிப்பு இருக்க வேண்டும்!“ என்று கூட்டத்தில் யாரோ வியந்த குரல் இளங்குமரனுடைய செவிகளில் இலேசாக ஒலித்தது. பக்தியின் அளவைப் பூக்களின் அளவால் கணக்கிடும் பேதமையை எண்ணி மனதுக்குள் சிரிக்கும் உணர்வு பிறந்தது அவனுக்கு. பட்டினப் பாக்கத்துப் பெருமாளிகைச் செல்வர் தன்னை நேற்று நாளங்காடி வழியில் தேரிலிருந்தபடியே சந்தித்ததையும் தான் போக வழியில்லாமல் மறித்ததையும் நினைத்து இன்று அவரே தன்னை வணங்கி வருமாறு கூறிப் பெண்களைப் பூக்கூடையுடன் அனுப்பியிருப்பதைத்தான் எப்படி நம்புவது என்றும் நினைத்துச் சிலகணங்கள் சிந்தனையில் சந்தேகங்கள் பட இருந்தான் இளங்குமரன். ‘உலகம் முழுவதும் சத்தியமும் நம்பிக்கையுமே நிறைந்திருப்பதாகப் பாவித்த ஞானம் நினைவில் மேல் நின்ற காரணத்தால் நீரில் எழுதினவை போல் அந்தக் கீழான சந்தேகங்கள் மிக விரைவில் அவன் மனத்திலிருந்து அகன்று பழக்கப்பட்டு இருந்த சத்துவ குணமே விஞ்சி நின்றது. அதனால் மகா கவிகளின் காவியங்களில் பிறந்த உத்தம குணமே நிறைந்த உன்னதமான கதாபாத்திரங்கள் என்று அவன் சற்றுமுன் சுரமஞ்சரியிடம் கூறியிருந்தாற்போலத் தானே ஓர் உத்தம கதாபாத்திரமாகி நின்றான். அவளுடைய கைகளும் பூக்களும் குவிந்து வணங்கப் போவதை எதிர்பார்த்தும் அந்த மென்மையான வணக்கத்தில் விருப்போ வெறுப்போ இல்லாமல் உதாசீனனாகக் கண்களை மூடித் தன் ஆசிரியரை நினைத்துத் தியானத்தில் மூழ்கினான்.

ஆனால் பூக்கூடைக்குக் கைகளை நீட்டிய சுரமஞ்சரியிடம் பணியாளன் கூடையை தர மறுத்தான்:

நீங்கள் விலகி இருங்களம்மா! இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கித் திறந்து பூக்களைக் கொட்டுவதற்கு உங்களால் முடியுமா? நானே கூடையைத் திறந்து பூக்களை இவர் பாதங்களில் படைக்கிறேன் என்று பணிவான குரலில் கூறிவிட்டுத் தானே கூடையோடு முன் வந்து இளங்குமரனை நெருங்கினான் பணியாளன்.

நீ பூக்கூடையைக் கொடு! நான்தான் இவர் பாதங்களில் பூக்களைப் படைக்க வேண்டும். புண்ணியத்தையெல்லாம் நீ பெற்றுக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயா அது முடியாது என்று வேடிக்கையாகவும் பிடிவாதமாகவும் கூறிப் பணியாளனை மறித்து சுரமஞ்சரி கூடையைப் பிடித்தாள். அவன் உடனே சற்றுப் பயந்து பதறினாற்போன்ற குரலில், “வேண்டாம் அம்மா! விட்டுவிடுங்கள் என்று சொல்லிக் கூடையை இறுகப் பற்றிக் கொண்டான். அவள் அவன் கூறியபடி கேட்காமல் கூடையைத் தன் பக்கமே இழுத்தாள்.

உயரமும் அகலமுமான அந்தப் பெரிய பூக்குடலையை இருவரும் மாறி மாறித் தம் பக்கம் இழுத்ததனால் குடலையே இருவருக்கும் மாறி பொதுவில் கீழே விழுந்து சரிந்தது. பூக்கள் சிதறின. அவ்வளவில் யாரும் எதிர்பாராத குடல்நடுக்கும் காட்சியொன்றைக் கூடியிருந்தவர்கள் கண்டார்கள்.

! இதென்ன? சரிந்த பூக்களோடு குடலைக்குள்ளிருந்து கருநாகம் ஒன்று சீறிக்கொண்டு வருகிறதே! கரி பூசிய அரசிலை போல அதன் படம் இளங்குமரனின் பாதங்களுக்கு மேலே உயர்கிறதே! ஐயோ!

கூட்டம் நிலைகெட்டு ஓடியது. சுரமஞ்சரி ஒன்றும் புரியாமல்வீலென்று அலறிப் பின்வாங்கினாள். பூக்களின் அடியிலிருந்து முடிவற்ற நீளமாய்க் கருமை பெருகிவரச் சர்ப்பம் தன் முழு உருவமும் தெரிய வெளியேறிப் பொன் மெருகிட்டாற் போன்ற அவன் பாதங்களில் நெளிந்து படத்தைத் தூக்கிக் கொண்டு நின்றது. சுரமஞ்சரி பயங்கரமாக அலறிவிட்டு மூர்ச்சையாகித் தான் நின்ற இடத்திலேயே மயங்கிச் சுருண்டு விழுந்தாள்.

இந்த உலக நினைவே இல்லாதவனாகி இளங்குமரன் சிலையாய் நின்றான். அவனுடைய கண்கள் மூடிய நிலை மாறாமல் அப்படியேயிருந்தன. பிளந்த நுனி நாக்குகள் இரண்டும் அக்கினிக் கொழுந்தாய் நெளியஎன் நஞ்சையெல்லாம் இந்த அழகிய பாதங்களில் அர்ப்பணம் செய்துவிட்டு நான் தூய்மை யடைந்து விடட்டுமா?’ என்பது போல் படந்தூக்கி நின்றது நாகம். யாருடைய பாதங்களில் அந்தப் படம் நின்றதோ? அவன் மனத்தில் வேறொரு படம் அதாவது அவனை இப்படி ஆக்கிய ஞான குருவின் படம் நின்றது.

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

11. உத்தம நாயகன்

 

நெஞ்சுக்குள்ளேயே கிடைத்த குரு தரிசனத்தை முடித்துக்கொண்டு அவன் கண்களைத் திறந்தபோது அங்கே அவனெதிரில் நீலதாகமறவர் நின்று கொண்டிருந்தார். அவர் கைகளில் ஒரு கருநாகம் படத்தோடு சேர்த்து இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. கீழே சுரமஞ்சரி மயங்கி விழுந்து கிடந்தாள். சுற்றிலும் கூட்டத்தினர் மிரண்ட கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தச் சர்ப்பத்தைக் கீழே எறிந்து படத்தை மிதித்துக் கொண்டு நின்றார் நீலநாகமறவர். “தொழுத கையுள்ளும் படையொடுங்கும் என்று நேற்று நான் கூறியிருந்ததை இவ்வளவு விரைவில் நீ மறந்துவிடுவாயென்று நான் நினைக்கவில்லை இளங்குமரா! இந்தச் சமயத்தில் நான் இங்கு வந்து சேர்ந்திருக்கவில்லையானால் இதற்குள் நீ பாம்பு கடித்து இறந்துபோயிருப்பாய் என்று சினத்தோடு அவனைக் கடிந்து கொண்டார் நீலநாகர். அதற்குள் வானவல்லியும், வசந்தமாலையும் ஓடிவந்து சுரமஞ்சரியின் மயக்கத்தைத் தெளிவித்திருந்தார்கள். அவர்களோடு வந்திருந்த யவனப் பணியாளனை மட்டும் காணவில்லை. அவன் எங்கோ ஒடிப் போயிருந்தான்.

கூடியிருந்த கூட்டத்தினரும் நீலநாகரும் அந்தப் பெண்களைச் சுட்டெரித்து விடுவது போலப் பார்த்தார்கள்; முணுமுணுத்தார்கள். “இவள் பெரிய வஞ்சகப் பெண் பேய்! இல்லாவிட்டால் இவர் மேல் பெரும் பக்தியுள்ளவளைப் போல் நடித்துப் பூக்குடலைக்குள் பாம்பை மறைத்துக் கொண்டு வந்து இவரைக் கொலை செய்ய முயலுவாளா? என்ன அநியாயம்? பூம்புகார் நகரம் எவ்வளவோ கெட்டுப் போய்விட்டது ஐயா! ஒரு பாவமுமறியாத இந்த இளைஞரைக் கொன்று இவளுக்கு என்னதான் ஆகப்போகிறதோ?” என்று கூட்டத்திலிருந்து தன்னைப் பற்றிப் பலவிதமாக எழுந்த குரல்களைக் கேட்டுச் சுரமஞ்சரி நெருப்பைக் கொட்டினாற்போல் துடித்தாள். இளங்குமரனோ புன்முறுவல் மாறாத முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எனக்கு ஒரு பாவமும் தெரியாது, ஐயா! எங்கள் தந்தை கூறியபடி மலரிட்டு வணங்க வந்தேன்...” என்று தொடங்கி உணர்ச்சிகரமாக நெகிழ்ந்து வாய்விட்டு அழுதுகொண்டே ஏதோ சொல்ல வந்த சுரமஞ்சரியை நோக்கி இடி முழக்கக் குரலில் தூற்றிப் பழித்துவிட்டு வெறும் பழிப்பால் மட்டும் அடக்க முடியாத சினத்தில் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றிக் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து அவள்மேல் எறியப் பாய்ந்தார் நீலநாகமறவர். அவ்வளவுதான்! அந்தப் பெரிய கூட்டத்துக்கு உணர்ச்சித் தீயை மூட்டிவிட்டாற் போல் ஆயிற்று அவர் செயல். எல்லாரும் அவரவர்களுக்குத் தோன்றியபடி கல்லையும், கட்டையையும் எடுத்து எறியத் துணிந்து விட்டார்கள். தாங்கள் உயிர் பிழைத்துப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பப் போவதில்லை என்று அந்த மூன்று பெண்களும் உணர்வு செத்து உயிர் மட்டும் சாகாமல் மருண்டு நின்றபோது ஒரு விந்தை நிகழ்ந்ததைக் கண்டார்கள். யாரும் எதிர்பாராதவிதமாகஎல்லாவற்றையும் இந்த உடம்பில் எறியுங்கள்!” என்று இளங்குமரன் அவர்களுக்கு அருகில் வந்து முன்புறம் நின்றுகொண்டான். அவர்களை நோக்கி எறியப் பெற்றுப் பாய்ந்து வந்த சில கற்கள் அவன்மேல் விழுந்தன. அடுத்த கணம் கூட்டத்தினரும், நீலநாகரும் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் திகைத்து நின்றார்கள். கற்கள் அவர்கள் கைகளிலிருந்து நழுவின.

வேறு பூக்களை நம்பாமல் என்னையே உயிர்ப் பூவாக உங்கள் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன் என்று கண்ணிர் மல்க இளங்குமரன் பாதங்களில் வீழ்ந்தாள் சுரமஞ்சரி. நீலநாகர் புயலாக மாறினார்; இடியாக இடித்தார்: “விலகிப் போ. உனக்கு அந்தப் பாதங்களை வணங்குவதற்கு என்ன தகுதி இருக்கிறது ? குடலைக்குள் நாகப்பாம்பைக் கொணர்ந்தது போல உன் இதயத்தில் நீ என்னென்ன நச்சு எண்ணங்களை அடைத்துக் கொண்டு வந்திருக்கிறாயோ?” என்று இரைந்து கத்திக் கொண்டே ஓடி வந்து அவளை அவன் பாதங்களிலிருந்து அவர் விலக்க முயன்றபோது அவள் தானாகவே விலகுவதற்காக நிமிர்ந்தாள். அப்படி அவள் விலக நிமிர்ந்தபோது கல்லெறிபட்டு இளங்குமரன் நெற்றியில் காயமாயிருந்த இடத்திலிருந்து இரத்தத்துளி ஒன்று சிவப்பு இரத்தின மணிபோல் உருண்டு சரிந்து நழுவி, அவளுடைய நெற்றியில் திலக மிட்டாற் போல் உதிர்ந்தது. அவனுடைய அந்த நெற்றிக் காயத்தைத் தன் கைகளால் தானே துடைக்க வேண்டு மென்று சுரமஞ்சரியின் இதயம் தவித்தது.

உத்தம குணமே நிறைந்து சத்திய தரிசனம் தரும் உன்னதமான மனிதர்களைக் காவியங்களில்தான் காண முடியும் என்று நீங்கள் கூறியது தவறு. இதோ வாழ்விலேயே என் கண்முன் உங்களை அப்படி உத்தமராக நான் காண்கிறேனே!” என்று அவனிடம் சொல்வதற்கு அவள் நாவு துடித்தது, ஆனால் சொல்வதற்கு வேண்டிய வார்த்தைகள் வரவில்லையே, அவள் தவித்தாள்.

 

இதென்ன அநியாயமடி, வசந்தமாலை? பூக்கூடையில் பாம்பு எப்படி வந்தது?” என்று பேயறைந்தாற்போல் அரண்டுபோய் நின்று கொண்டிருந்த வானவல்லி வசந்தமாலையின் காதருகே மெல்லக் கேட்டாள்.

ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது, அம்மா. யார் செய்ததென்றுதான் சொல்ல முடியவில்லை. நான் இதை அப்போதே நினைத்தேன். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் உங்கள் தந்தையார், இங்கே போய் வருமாறு நம்மை அனுப்பிய போதே இதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே முணுமுணுத்தாள் வசந்தமாலை.

இடது கையை நெற்றிக் காயத்தின் மேல் வைத்து அடைத்துக் கொண்டு, புன்னகை குன்றாத மலர்ச்சி முகமெங்கும் முன்போலவே இலங்க இளங்குமரன் சுரமஞ்சரியைப் பார்த்தான். மெல்ல வலது கையை உயர்த்திச் செந்தாமரைப் பூவின் உள் இதழ் போன்ற அகங்கையை அசைத்து நீங்கள் போகலாமே என்று குறிப்பைப் புலப்படுத்தினான். அவள் அதைப் புரிந்து கொண்டாலும் தயங்கி நின்றாள். கண்களிலும் இதழ்களிலும் எதையோ பேசவேண்டுமென்ற உணர்வும் தயங்கி நின்றது.

நான்... நான்... ஒரு பாவமும் அறியாதவள்... இப்படி யாரோ சூது செய்திருக்கிறார்கள்... என்னை மறுபடியும் மன்னிக்க வேண்டும் - அவள் சொற்களைக் குழறினாள். தண்ணிரில் நனைந்த புதிய பட்டுப்போல் முழுமை தோயாமல் சொற்களைப் பேசியது அவள் சோகம். அவன் நன்றாக வாய்விட்டுச் சிரித்தான். நீண்ட நாட்களுக்குப் பின் இன்று தான் முதன் முறையாக இப்படிச் சிரிக்கிறான் அவன்.

நான் இதைக் குற்றமாக எடுத்துக் கொண்டு வேதனைப் பட்டால்தானே உங்களை மன்னிக்கலாம். நான் இதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லையே?”

நீங்கள் மகாகவிகளுக்கும் உத்தம நாயகனாகக் காவியங்களில் வாழவேண்டிய பேராண்மையாளர். அதனால் எதையும் பிறர் குற்றமாக எடுத்துக்கொள் வதில்லை. ஆனால் நான் சாதாரணப் பெண். நான் செய்தது குற்றமென்று என் மனமே உறுத்துகிறது.”

இதற்கு அவனிடமிருந்து பதிலே இல்லை. மெளனம் தான் நிலவியது. சிரித்துக்கொண்டே பழையபடி அவளை நோக்கி கையை அசைத்தான் அவன்.

சுரமஞ்சரி கூட்டத்தினரின் வசை மொழிகளைச் செவிகளில் நிரப்பிக்கொண்டு பல்லக்குத் தூக்கிகள் காத்துக் கொண்டிருந்த இடத்துக்கு நடைப் பிணமாகச் சென்றாள். வசந்தமாலையும் வானவல்லியும் பின் தொடர்ந்தனர். கூட்டத்தில் சிலர் அவர்களைக் கண்டு வெறுப்புடனே வேறு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு காறியுமிழ்ந்தனர். கைகளைச் சொடுக்கி முறித்தனர்.

 

இப்படிக் கெட்ட குணம் படைத்த பெண்களை ஏழு செங்கல் தலையிட்டுக் கழுதை மேலேற்றிப் பூம்புகார்த் துறைமுகத்துக்கு எதிரேயுள்ள வெள்ளிடை மன்றத்தைச் சுற்றிவரச் செய்ய வேண்டும் என்று அந்த ஊர் வழக்கமான தண்டனையை அவர்களும் கேட்கும் படி இரைந்து கத்தினான் கூட்டத்தில் ஒருவன். கலகலப்பிலிருந்து விலகிப் பல்லக்கின் அருகில் வந்ததும் சுரமஞ்சரி சூறாவளியானாள்.

அடி வானவல்லி! இந்தப் பல்லக்கு பரிவாரம் எடுபிடியாட்கள் பொன்னும் மணியுமாக மின்னும் அணிகலன்கள் எல்லாவற்றையும் இடித்து நொறுக்கிக் கொண்டுபோய் நேர்கிழக்கே கடலில் கொட்டுங்கள்! என்னை விட்டுவிடுங்கள். இந்தப் பல்லக்கு நரகத்துக்குப் போகும் வாகனம். நான் இதில் ஏறி வர மாட்டேன். இந்தா! எப்போதோ செய்த பாவங்களைப் போல் என் உடம்பைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பொன்னரிமாலை, மின்னிடை ஒட்டியாணம் முன் கை வளையல்கள் எல்லாவற்றையும் கொண்டுபோ, என் தந்தையாகிய கொடும்பாவியிடம் கொடு என்று வெறியோடு அறைகூவியவளாய்த் தன் உடம்பில் அங்கங்கே இருந்த அணிகலன்களைத் தாறுமாறாகக் கழற்றிப் பல்லக்கில் எறியலானாள் சுரமஞ்சரி. “அம்மா! அம்மா! இதென்ன காரியம்? பொது இடத்தில் எல்லாரும் காண இப்படி?” என்று தன்னைத் தடுக்க முன்வந்த வசந்தமாலையைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

12. குறுகிய பார்வை

 

இந்திர விழாவின் இரண்டாவது நாள் காலையில் நாளங்காடியில் இவ்வளவு நிகழ்ச்சிகளும் பரபரப்பாக! நிகழ்ந்து கொண்டிருந்தபோது இவற்றுக்குக் காரணமான இருவரோ பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையிலிருந்தே வெளியேறாமல் தங்களுக்குள் அந்தரங்கமாகப் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வெயில் குறைவாக இருந்த அந்தக் காலை நேரத்தில் மேக மூட்டத்தினால் கவிந்திருந்த வானத்தின் கீழே பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையின் ஏழாவது மாடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள் பெருநிதிச் செல்வரும், நகைவேழம்பரும். தாங்கள் நின்று கொண்டிருந்த உயரத்திலிருந்து பார்த்தபோது கடல், காவிரிப் பூம்பட்டின நகர் ஆகியவற்றின் தோற்றம் கீழே அவர்களுக்கு மிகத் தாழ்ந்து தெரிந்தது. தொலைவில் நீலநிறம் கன்றிப் பாளம்பாளமாக மின்னும் கடல் அலைகள் வரை நீண்டு படரும் பார்வையைத் திருப்பிக் கொண்டு பக்கத்தில் நின்ற நகைவேழம்பரைப் பார்த்துக் கேட்டார் பெருநிதிச் செல்வர்:

 

சமய நூல்களின் முடிந்த பயன் மோட்சத்துக்குப் போவதுதானே? அந்தப் பயன் இதற்குள் அவனுக்குக் கிடைத்திருக்கும். பூக்குடலைக்குள் சிறைப்பட்டுக் கிடந்த கருநாகம் குடலை கவிழ்ந்ததும் சீறிக்கொண்டு பாய்ந்தி ருக்கும். நாம் எதிர்பார்த்த காரியத்தையும் தவறாமல் செய்திருக்கும்.”

ஆனால் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போனவனைத் தவிர மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். பாவம்! உங்கள் பெண் சுரமஞ்சரி நன்றாக ஏமாந்து போயிருப்பாள். தன் மனத்தைக் கவர்ந்தவனுடைய பாதங்களில் மலர்களைக் குவிக்கப் போவதாய் எண்ணிக் கொண்டு சென்றிருப்பாள்.”

எல்லாம் உங்களுடைய சூழ்ச்சிப் பயன்தான் நகை வேழம்பரே. அழிப்பதற்கும் கெடுப்பதற்கும் பாழாக்குவதற்கும் வேண்டிய சிந்தனைகளை நயமாக உருவாக்கிச் சொல்வதில் உங்களுக்கு இணைதான் இல்லவே இல்லையே?” என்று பெருநிதிச்செல்வர் கூறிய வார்த்தைகளில் பாராட்டோடு சிறிது குத்தலும் இருப்பதை நகைவேழம்பர் உணர்ந்தார். அதாவது, ‘உன்னை வைத்து ஆதரித்து வளர்த்துக் கொண்டு வரும் என்னைக் கவிழ்க்க வேண்டுமென்று உனக்குத் தோன்றினால்கூட அதற்கும் இப்படி ஏதாவது நயமான சூழ்ச்சியைச் செய்வதற்கு நீ தயங்கமாட்டாய் என்று அவருடைய வார்த்தைகளில் தனக்கும் ஒரு தொனி இருப்பதை நகைவேழம்பரால் ஊடுருவிக் காணமுடிந்தது.

சூழ்ச்சிகளைக் கேட்பதற்கும், செயலாக்குவதற்கும் உங்களைப்போல் துணிந்த கட்டைகள் இருக்கும்போது நான் சொல்லிக் கொடுப்பதுதானா பெரிய காரியம்?” என்று தொனிப் பொருள் உள்ளடங்குகிற விதத்திலேயே பதிலும் கூறினார் நகைவேழம்பர். ‘துணிந்த கட்டை என்ற பதச் சேர்க்கைக்கு மட்டும்துணிவில்லாத கட்டை என்கிற குறிப்புக் கொடுத்து ஒலித்தாற் போலிருந்தது.

தங்கள் இருவருக்கும் இடையே உரையாடல் தொடங்கியதும் தொடர்வதும் விரும்பத்தக்க வழியில் அமைந்ததாகப் படாததனால் பேச்சை நிறுத்திக் கொண்டு மறுபடியும் பார்வையைத் தொலைவில் கடல் அலைகள் வரை படர விட்டார் பெருநிதிச் செல்வர். ஆனால் நகைவேழம்பர் அவரை அப்படியே விடவில்லை. உரையாடலைத் தொடர்வதன் மூலமாக அவருடைய கவனத்தை மறுபடியும் தம் பக்கமாகத் திருப்பினார்.

இப்போது செய்திருக்கும் சூழ்ச்சியில் இரண்டு வகையிலும் பயன் உண்டு. யார் கடியுண்டு சாக வேண்டுமென்று பாம்பை மலர்களில் சிறை செய்து அனுப்பினோமோ, அவனைக் கடிக்காமலே அது அடிபட்டு இறந்து போனாலும், வேறு ஒரு பயன் நாம் நினைத்தது போல் விளையும். அந்தப் பயல் உங்கள் புதல்வி சுரமஞ்சரியை இனிமேல் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான். சுரமஞ்சரி மிகக் கொடியவள் என்று இந்த நிக்ழ்ச்சி அவனை எண்ணச் செய்யும்.”

 

எப்படிச் செய்யுமோ? எப்படிச் செய்யாமற் போகுமோ? பாம்போடு விளையாடுவது என்று கேள்விப் பட்ட தில்லையா? என்ன நடந்ததென்று முடிவாகத் தெரிகிற வரை என் நெஞ்சு அடித்துக் கொண்டுதான் இருக்கும். அந்தப் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போன யவனத் தடியனிடம் நன்றாகச் சொல்லியிருக்கிறீரோ இல்லையோ? அயர்ந்து மறந்து குடலையை அவன் இந்தப் பெண்களில் யார் கையிலாவது கொடுத்துத் தொலைக்காமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை...”

எதை எதிர்பார்த்துச் செய்கிறோமோ அதுவே நடக்குமென்று பிடிவாதமாக நம்புவதோடு சிந்தனையை நிறுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மேலும் ஒருபடி அதிகமாகப் போய்இப்படியும் இது நடக்கலாமே?’ என்று நினைத்தாலே வம்புதான். வேறு வேறு கோணங்களில் மாறிச் சிந்திக்கும் போது கவலையும் பயமும்தான் அதிகமாகும். அதிகமாகச் சிந்தனை செய்தால் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியம் உண்டாகும்.”

இது நீர் அடிக்கடி சொல்கிற வார்த்தைதான் நகைவேழம்பரே, ஆனால் எதை எதிர்பார்த்துச் செய்கிறோமோ அதுவே நடக்கும் என்று எதிர்பார்த்து இரண்டு மூன்று முறை ஏமாந்து விட்டோம் நாம்! சுடுகாட்டுக் கோட்டத்து பேய்மகளாகிய பைரவியே எதிர்பார்த்ததைச் செய்ய முடியாமல் அலறிக் கொண்டு ஓடி வந்ததை அதற்குள் மறந்து போய்விட்டீரா?” என்றார் பெருநிதிச் செல்வர்.

மேகமூட்டம் கலைந்து மேல்மாடத்தில் வெயில் பரந்தது. நகைவேழபர் மறுமொழி கூறாமல் இருந்தார். தொலைவில் கடல் அலைகள் வெள்ளியம் உருகினாற் போல நன்றாக மின்னின. நகரத்தின் நாற்புறமும் மரங்களிலும் மன்றங்களிலும் சிறு வீடுகளிலும், பெரு மாளிகைகளிலும், அரண்மனைகளிலும் ஆலயங்களிலும் இந்திர விழாவுக்காக ஏற்றிய கொடிகள் வெயிலில் பட்டொளி வீசின. தனித்தன்மை தெரியாமல் கலப்புற்ற பலவகை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. கண்களுக்கு எட்டின. தொலைவில் தென்பட்ட நாளங்காடி மரக் கூட்டத்தின் மேற்பரப்பைப் பார்த்தபோது அவற்றின் கீழேயிருந்து பாம்பு கடிக்கப் பெற்று அலறும் இளைஞன் ஒருவனுடைய குரல் பெரிதாய் எழுந்து ஒலித்தது. நகரத்தின் நான்கு காதமும் பரவுவது போன்ற பிரமையை உணர்ந்தார் பெருநிதிச் செல்வர். நாளங்காடியில் ஒலிக்கின்ற குரல் அந்த மரக்கூட்டத்தைக் கடந்து இவ்வளவு தொலைவுக்குக் கேட்காதென்று நிச்சயமாகத் தெரிந்திருந்தும் அப்படிக் கேட்பது போல அவர் நினைத்துப் பார்க்க விரும்பியதாலோ அல்லது செய்த கொடுமையின் பயத்தினாலோ அந்தப் பிரமை உண்டாக்கியது. பூம்புகார் நகரத்திலேயே உயரமானநிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம் என்ற சதுக்கத்தின் தூண், நகர் பரப்பின் ஒரு பகுதியில் தனியாகத் தெரிந்தது. இன்னொரு பக்கம் தரை வழியாகப் பூம்புகாருக்கு வருவோர் நுழையும் கட்டளை வாயில் தொலைவில் தோன்றியது. ‘இந்த இடத்துக்கு உள்ளே இனிமேல் சோழ நாட்டுக் கோபுரத்தின் கட்டளைக்கு உட்படுகிறீர்கள் என்று வருகிறவர்களுக்கு எல்லாம் தன் பெயராலேயே சொல்லுவது போலக் கட்டளை வாயில் என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தது அது. வேறு எதைப் பேசி நகைவேழம்பரோடு உரையாடலை வளர்ப்ப தென்று தோன்றாமல் முன்பு பார்த்துக் கொண்டிருந்த திசையிலிருந்து திரும்பி நெடுந்துண் நின்ற மன்றத்தையும், வெளிப் பக்கம் போகிறவனுக்கு அந்தக் கோநகரத்தின் கட்டளைகள் முடிகிற இடமாகவும், உள்ளே வருகிறவனுக்கு அதே கட்டளைகள் தொடங்கு கிற இடமாகவும் இருந்த கட்டளை வாயிலையும் மாறிமாறிப் பார்த்தார் பெருநிதிச் செல்வர்.

உண்மைகள் எல்லாம் வெளிப்படுமானால் இவ்வளவு உயரமான மாளிகையின் மேலிருந்து இந்த அழகிய நகரத்தைப் பார்க்க முடியாதவனாகப் போய் விடுவேன் நான் என்று ஒருகணம் நினைக்க, வேண்டாததும், நினைத்தாற் கசப்புத் தருவதுமான ஞாபகம் ஒன்று தன்னைப் பற்றியே அவருக்கு உண்டாயிற்று. மேல்மாடத்திலிருந்து கீழே இறங்கிப் போனாலொழிய அந்த ஞாபகத்தை மறக்க முடியாது போலிருந்தது. கண்ணுக்கு முன்னால் தென்படும் விரிவான காட்சி களிலிருந்து பார்வையைக் குலுக்கிக் கொண்டு விரிவாக எதுவும் தென்படாத இடமாகத் தேடி மாளிகையின் கீழ்ப்பகுதிக்குப் போய்விட்டால் நிம்மதியாக இருக்கலாமென எண்ணினார். பூனை கண்ணை மூடிக்கொள்வது போல் மனத்தில் எண்ணமாய் இறுகியிருந்த புற்றுக்களை உடைத்துக் கொண்டு கிளர்ந்த பழைய பாவ உணர்வுகளை ஒளித்து வைக்க ஏதோ ஓர் இருள் அந்தச் சமயத்தில் அவருக்குத் தேவையாக இருந்தது. பார்வையையும் பார்க்கப் படுகிறவற்றையும் குறுக்கிக் கொண்டு விட்டாலே அந்த இருள் கிடைக்கும் என்று நம்பியவராய், “வெப்பம் மிகுதியாகிவிட்டது. கீழே போகலாம், வாருங்கள் என்று நகைவேழம்பரையும் அழைத்துக் கொண்டு படிகளில் இறங்கினார் பெருநிதிச் செல்வர். அப்படி இறங்கிக் கீழே செல்லும் சமயத்தில் சுடுகாட்டுக் கோட்டத்திலிருந்து திரும்பிக் கொண் டிருக்கும்போது நகைவேழம்பர் தன்னைக் கேட்ட கேள்வியொன்றை மீண்டும் நினைவு கூர்ந்தார் அவர்.

பயப்படுகிற எதையுமே நீங்கள் செய்வது இல்லையோ?’

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஒற்றைக்கண் கொலைகாரன் இதைச் சொல்லியதன் மூலமாகத் தனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்பினான் என்ற சந்தேகம் மீண்டும் வந்தது. தன்னுடைய வாழ்க்கை இரகசியம் மட்டுமல்லாமல் வேறு பல இரகசியங்களையும் இந்தக் கேள்வி அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அந்த இரகசியங்களில் பெரும் பகுதி அவரைப் போலவே நகைவேழம்பருக்குத் தெரிந்தவை என்பதனால்தான் கேள்வியினால் ஞாபகப்படுத்தப் பெறுகிறபயங்கர நிகழ்ச்சி - எதுவாக இருக்குமென்று அவர் சந்தேகப் பட்டார். நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் கீழே இறங்கி, மாளிகையின் முன்பகுதிக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போன யவனப் பணியாளன் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து அவர்களுக்கு முன்னால் நின்றான்.

நெஞ்சு வேகமாக அடித்துக் கொள்ள மனமும், கை கால்களும் நடுங்கிப் பதற, “போன காரியம் என்ன ஆயிற்று என்று அவனைக் கேட்டார் பெருநிதிச் செலவர். அவன் நாளங்காடியில் நடந்ததை எல்லாம் சொன்னான். சுரமஞ்சரி, வானவல்லி முதலியவர்கள் பூக்குடலை கீழே விழுந்ததும் ஏற்பட்ட பரபரப்பிலேயே அந்தப் பணியாளன் ஒடிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாலும், அவன் அதற்கு அப்புறமும் நடந்தவற்றை அங்கிருந்து கவனித்துவிட்டே வந்திருந்தான். பூக்குடலையுடன் அங்கே போனதிலிருந்து சுரமஞ்சரி பல்லக்கின் அருகே வந்து தன் அணிகலன்களைக் கழற்றி எறிந்து, ‘மாளிகைக்கு வரமாட்டேன் என்று இப்போது முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது வரை எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னான் யவனப் பணியாளன்.

பாம்பாட்டிக்குக் கொடுத்தனுப்பிய பொற்கழஞ்சுகள் தண்டமாகப் போனதுதான் கண்ட பயன் என்று நகைவேழம்பருக்கு உறைக்கிறாற்போல அவரைப் பார்த்துச் சினத்தோடு இரைந்து சொன்னார் பெருநிதிச் செல்வர்.

நான் என்ன செய்வேன்? எல்லா இடத்திலும் அந்த ஆலமுற்றத்து முரடன் உதவிக்கு வந்து நின்று காரியத்தைக் கெடுக்கிறானே!” என்று பதிலுக்குச் சீறினார் நகைவேழம்பர். “தேரில் குதிரையைப் பூட்டிக் கொண்டு வாரும். அந்தப் பெண் எதையாவது உளறி, அங்கே நாளங்காடிக் கூட்டத்தில் என் மானத்தைக் கப்பலேற்றி வைக்கப் போகிறாள். உடனே போய் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு வரலாம் என்று அப்போது நாளங்காடிக்குப் போவதற்குப் பறந்தார் பெருநிதிச் செல்வர். அவர் அவசரப் படுத்தியதற்குச் செவி சாய்த்தும் அவசரம் அடையாதது போல - அதே சமயத்தில் அந்தக் கட்டளையை மறுக்கவும் துணியாதவராக நகைவேழம்பர், தனது இயல்பான நடையிலேயே தேரில் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு வருவதற்காகச் சென்றார். வந்து நிற்கும் பணியாளனுக்கு முன்னால் அவர் இப்படி அலட்சியமாக நடந்து கொண்டது பெருநிதிச் செல்வரைத் திகைக்கச் செய்தது.

-------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

13. உள்ளக்கனலும் நெல்லிக்கனியும்

 

கெட்ட கனவு கண்டதுபோல் இவ்வளவும் நடந்து முடிந்ததும் சுரமஞ்சரி முதலியவர்கள் பல்லக்கை நோக்கிச் சென்ற பின்னர் கூட்டத்தில் இருந்தவர்கள் இளங்குமரனை மிக அருகில் நெருங்கி மொய்த்துக் கொண்டு விட்டார்கள். நெற்றிப் பொருத்தில் இரத்தம் கசிய நின்று கொண்டிருந்த அவன் நீலநாக மறவர் மேல் சாய்ந்தாற்போல் இருந்தான். அன்று காலை படைக்கலச் சாலையிலிருந்து நாளங்காடிக்குப் புறப் பட்டபோது தண்ணீரும் பருகாத வெறும் வயிற்றோடு புறப்பட்டிருந்தான் அவன். பசிச் சோர்வும் சேர்ந்து கொண்டது. நெற்றியில் இரத்தம் கசிவதைத் தமது மேலாடையால் துடைத்து விட்டார் நீலநாகமறவர். கூட்டமே இளங்குமரனுக்காக அலமந்தது, பரிந்தது, பதறியது.

 

பாவீ! இத்துணைப் பொறுமை ஆகுமாடா உனக்கு? இவ்வளவு கெட்ட எண்ணத்தோடு வந்தவர்களைச் சுகமாகத் திரும்பிப் போக விட்டுவிட்டாயே? அப்படியே கழுத்தை முறித்துப் போட்டிருக்க வேண்டாமா?” என்று அவன் மேலுள்ள அன்பை அவனுக்கு வேண்டாதது செய்தவர்களிடம் வைரம் பாராட்டுவது மூலமாகக் காட்டிக் குமுறிக் கொண் டிருந்தார் நீலநாக மறவர்.

சில நாழிகைக்கு முன் இளங்குமரனோடு சமய வாதம் புரிந்து தோற்ற சாங்கியன் கூட இப்போது அநுதாபம் பொங்க அருகில் நின்றான். அவன் நீலநாகரைப் பார்த்துச் சொல்லலானான்:

ஐயா! ஒளிமயமான இந்த அழகிய இளைஞரோ ஓர் அதிசய புருடர். அதுதான் சான்றாண்மை. ‘எல்லா உயிரும் இரங்கத்தக்கவை. எந்த உயிரையும் கொல்லக் கூட்டாது என்பதுதான் தவம். ஆனால் பிறர் தீமையை வாய் திறந்து சொல்வதும் கூடக் கொலை போன்றதென்று தயங்கும் தயக்கமே சான்றாண்மை. தவத்தைக் காட்டிலும் உயர்ந்ததான அந்தச் சான்றாண்மையையே இவரிடம் பார்க்கிறேன். பிறருடைய உடம்பைப் புண்ணாக்குவது மட்டும் உயிர்க்கொலை என்று நினைப்பதற்கும் அப்பால் போய்ப் பிறருடைய மனத்தைப் புண்ணாக்குவதும் கொலை என்று கருதி வார்த்தைகளைச் சொல்லும்போதும் கடுமையைத் தவிர்த்து விரதம் காக்கிறவர்களான சான்றோர்களின் சாயலை இந்தச் சுந்தர இளைஞரிடம் காண்கிறேன் என்று இளங் குமரனைப் புகழ்ந்து சாங்கியன் இந்த வார்த்தைகளைக் கூறியபோதுஆகா! ஆகா!’ என்ற குரல்கள் சுற்றியிருந்தவர்களிடமிருந்து உருக்கமாக எழுந்து ஒலித்தன!

கண்களில் விழிகள் சொருகுவதும், திறப்பதுமாக இளங்குமரன் நீலநாகமறவரின் மார்பில் முன்னிலும் தளர்ந்து சாய்ந்தான். உயரமும் பருமனும் இறுகி வைரம் பாய்ந்த அந்த முரட்டு உடலில் ஒளிமயமான இளங்குமரன் சரிந்த காட்சி மலை முகட்டில் மின்னல் சரிந்து நெளிவது போல் தோன்றியது.

ஐயோ பசி மயக்கம் போலிருக்கிறது என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பதறினார்கள். “விலகி நில்லுங்கள். காற்றுப் பட்டாலே தெளிவு வரும் என்றார் நீலநாகர். கூட்டம் விலகியது. காற்று வந்தது. ஆனால் தெளிவு வரவில்லை. அப்போது தற்செயலாக பூத சதுக்கத்தில் படையலிடுவதற்குத் தன் மகள் முல்லையோடு வந்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வீரசோழிய வளநாடுடையார் யாரிடமோ அரைகுறையாக இந்தச் செய்தியைக் கேள்வியுற்றுப் பதறிப் போய் ஓடிவந்தார். அவரோடு அவர் மகள் முல்லையும் வந்தாள். கேள்விப்பட்ட செய்தி அரைகுறையானது என்றாலும் மனத்தில் சந்தேகங்களுடனும், துடிப்புடனும் பறந்து பதறித் தவித்துக் கொண்டே வந்திருந்தார்கள் முல்லையும் வளநாடுடையாரும். இதற்குள் கூட்டத்தில் யாரோ ஒருவர் பக்கத்தில் இருந்த ஒரு முதிய முனிவரிடமிருந்து தண்ணீர்க் கமண்டலத்தை வாங்கி வந்து இளங்குமரன் முகத்தில் தெளித்தார். பொற் பேழையில் வெண்முத்துக்களாக நீர்த்துளிகள் அந்த நெற்றியில் உருண்டன. அதில் சில துளிகள் காயம்பட்ட இடத்து இரத்தத்தைக் கலந்துகொண்டு மாணிக்கங்களாகவும் உருண்டன.

எதிரே நெஞ்சம் பதற நினைவுகள் பதற நின்ற முல்லையின் வலது கை அந்தக் காயத்தை நோக்கி உயர்ந்து தீண்டுவதற்கும் நெருங்கி விட்ட விநாடியில் அவனுக்குத் தெளிவு வந்து கண்களை மலர்த்தி முன்னால் பார்த்ததனால் அவளுடைய கை பின்வாங்கி விட்டது. தேவருலகத்துக் கற்பகப் பூவைத் திருட்டுத் தனமாகப் பறிக்க உயர்ந்த மனிதக் கையை அந்தப் பூவே கற்பக மரத்துக்குச் சொந்தக்காரனின் கண்கள் போலத் தோன்றிப் பயமுறுத்திப் பின்வாங்கச் செய்யும் பிரமையைப் போல் இளங்குமரனின் நெற்றியைத் தீண்டும் ஆசையும், தீண்டலாமா என்ற பயமுமாகப் பின்னால் நகர்ந்தாள் முல்லை.

என்ன ஐயா இது? நான் கேள்விப்பட்டது மெய் தானா? தருமத்திற்கும் நியாயத்திற்கும் பெயர் பெற்ற சோழர் கோநகரத்தில் கூட இப்படி அநியாயங்கள் நடக்குமா? இந்தக் கொடுமை செய்தவர்களைப் புடைத்து உண்ணாமல் பூதசதுக்கத்துப் பூதங்கள் ஏன் இன்னும் தங்கள் கைகளில் பாசக் கயிற்றை வைத்துக் கொண்டு வீணுக்கு உட்கார்ந்திருக்கின்றன? கொடுமைகள் அதிகமாகிவிடும் போது தெய்வங்கள் கூடச் சோம்பி இருந்து விடுகின்றனவோ?” என்று கொதித்தார் வளநாடுடையார்.

மனிதர்களே சோம்பிப் போயிருந்துவிட்டு அதற்குச் சான்றாண்மை என்று பெயர் சூட்டிப் பெருமையும் கொண்டாடுகிறபோது தெய்வம், என்ன செய்யும் ஐயா?” என்று அதே கொதிப்போடு பதில் சொன்னார் நீலநாகர். ஆத்திரத்தில் அவர் சான்றாண்மையையே சோம்பலாகச் சொல்வதைக் கேட்டுப் பக்கத்தில் நின்ற சாங்கியன் மெல்லச் சிரித்துக் கொண்டான்.

முல்லையின் கைகளில் இருந்த தட்டில் கனிகளைப் பார்த்துவிட்டு, “இதிலிருந்து ஏதாவது பழங்களைக் கொடுத்து அவரை உண்ணச் சொல்லுங்களேன் அம்மணீ! பசி மயக்கமாவது தணியும் என்றான் சாங்கியன். அப்படியே தட்டோடு கனிகளை இளங்குமரனுக்கு முன்னால் நீட்டி, “எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள் முல்லை. அப்போதும் இளங்குமரனின் முகத்தை நேரே ஏறிட்டுப் பார்க்கும் தெம்பு அவளிடம் இல்லை. ‘என்னைப் பார் என்று துாண்டும் ஆசையும்பார்க்காதே என்ற பயமுறுத்தலும் சேர்ந்தே அவன் கண்களில் இருப்பதுபோல உணர்ந்தாள் அவள். அந்தக் கண்களின் அழகு அவளை அவன் முகம் பார்ப்பதற்குத் தூண்டியது. தூய்மை பார்க்க விடாமல் அவளைப் பயமுறுத்திப் பின்னால் நகரச் செய்தது.

எங்கோ பார்த்தாற்போல் அவனையே பார்க்க முயன்றவளாய்க் கனிகளை அவனுக்குமுன் நீட்டினாள் முல்லை. எல்லாக் கனிகளையும் பார்த்துவிட்டுத் தட்டின் ஒரு மூலையிலிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை மட்டும் எடுத்துக்கொண்டு போதுமே என்ற பாவனையில் கையசைத்தான் இளங்குமரன்.

 

இன்னும் எடுத்துக்கொள். காலையிலிருந்து தண்ணீர் கூடப் பருகவில்லையே நீ என்றார் நீலநாகர். முல்லை மறுபடியும் தட்டை அவன் அருகில் நீட்டினாள். அவன் சிரித்தபடியே மறுத்துவிட்டான்.

மனம் நிறைந்திருக்கிற சமயங்களில் வயிறு நிறையாதது ஒரு குறையாகத் தெரிவதில்லை ஐயா! இந்த நகரத்தில் உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்தின் கரைகளிலும் பசித்து கிடப்பவர்களைப் பற்றி நினைத்து நினைத்து என் பசியை நான் மறந்துபோன நாட்கள் பல. உலகத்தில் மற்றவர்களுடைய பசிகளையெல்லாம் உணர முடியுமானால் ஒவ்வொரு நியாயமான மனிதனுக்கும் தன் பசி மறந்துதான் போய்விடும் அப்படி மறந்து போவதற்கு விசாகையின் மனம் வேண்டுமே என்று இளங்குமரன் சொல்லிக் கொண்டே வந்த போது சொல்லுவதைச் சில கணங்களுக்கு நிறுத்திக் கொண்டு விசாகையின் முகத்தை மன நினைவுக்குக் கொண்டுவர முயன்றான்.

அவனுடைய மனக்கண்ணில் உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் கண்களில் நீரைச் சுமந்துகொண்டு அட்சய பாத்திரமும் கையுமாக விசாகை தோன்றினாள். நாவில் நெல்லிக்கனியின் சுவையும், நெஞ்சில் விசாகையைப் பற்றிய நிர்மலமான நினைவுகளும் புரள நின்றான் இளங்குமரன்.

போகலாம் வா! நீ திருநாங்கூரிலேயே மேலும் சிறிது காலம் இருந்தால் கூட நல்லதுதான். இங்கே உன்னை அழித்து விட முயல்கிறவர்கள் இன்னும் ஊக்கத்தோடு முனைந்து திரிகிறார்கள். ஓவியன் மணிமார்பன் முன்பு என்னிடம் கூறியது பொய்யல்ல என்று அவ்வளவு நேரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த எதையோ வெளியிடுகிறவர் போலப் பேசினார் நீலநாக மறவர்.

ஐயா! ஒரு காலத்தில் என்னுடைய உடல் வலிமைக்கு எதிரிகளாக வருகிறவர்களையே நான் தேடினேன். அப்போது அவர்கள் மிகக் குறைவாகத்தான் எனக்குக் கிடைத்தார்கள். இப்போதோ நான் ஞான வீரர்களையே எதிரிகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்பு என்னிடம் வந்திருக்க வேண்டியவர்கள் பலர் இப்போது வந்து தொல்லை கொடுக்கிறார்கள் என்று இளங்குமரன், நீலநாகர் வளநாடுடையார் இருவரையும் பார்த்துச் சொல்லிவிட்டு ஊன்றியிருந்த ஞானக் கொடியைக் கையிலெடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

 

--------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

14. கற்பூர நறுமணம்

 

இப்போது ஞான வீரர்களையே எதிரிகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்பு நான் உடல் வலிமையை நம்பிக்கொண் டிருந்த காலத்தில் எதிரிகளாக வந்திருக்க வேண்டியவர்கள் பலர் இப்போது வந்து தொல்லை கொடுக்கிறார்கள் - என்று சொல்லிவிட்டு வளநாடுடையார், நீலநாகர் ஆகியோரோடு இளங்குமரன் புறப்பட முற்பட்ட சமயத்தில் சிறிதும் எதிர்பாராத சந்திப்பொன்று அங்கே நிகழ்ந்தது.

எதிரே வருகிறவர்கள் எல்லாம் எதிரிகளானால் இதோ உங்களுக்கு ஒரு புது எதிரி என்று கூறிக் கொண்டே விசாகை அவனுக்கு முன்னால் தோன்றினாள். இளங்குமரன் முகம் மலர்ந்து வியப்புடன் அவளைப் பார்த்தான். ‘என்ன அற்புதம்! சில விநாடி களுக்கு முன்னால்தானே இவளை நினைத்தேன்? மனக் கண்களுக்குத் தோன்றியவள் உடனே புறக்கண்களுக்கும் தோன்றுகிறாளே! திருநங்கூரிலிருந்து இவள் எப்போது இங்கே வந்தாள்?’ என்று எண்ணிக் கொண்டே எதிரே நடந்து வரும் விசாகைக்குத் தன் பார்வையே வணக்கத்தை சுமந்து செல்லும் விதத்தில் நோக்கினான் இளங்குமரன்.

இவ்வளவு பரிசுத்தத்தைத் தாங்கிக்கொள்ள இந்த உலகத்தில் இடமில்லை, இடமில்லை என்பது போல்இந்த மண்ணுக்குத் தகுதியில்லை, தகுதியில்லை என்பது போல் ஒதுங்கி நடந்து கால்களை அதிர ஊன்றாமல் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தாள் விசாகை. பூமாலை சரிந்து நழுவுகிறாற் போல் மண்ணிற் பதியாது மிதக்கும் நடை அது. தெளிந்த நீரில் பால் கலப்பது போல் அவள் வந்ததுமே அந்த இடத்தில் பிரகாசம் பரவியது. ‘இந்த மண்ணில் ஊன்றி நடக்க மாட்டேன் - என்பது போலவும், பிரவாகத்தில் மிதக்கும் பூவைப் போலவும், விசாகை வருகிற தூய்மையிலேயே மனம் தோய நின்றான் இளங்குமரன். ‘இரும்பில் தோன்றும் துரு இரும்பையே அழித்து விடுவது போலச் சஞ்சலம் மன உறுதியை அழித்துவிடும்- என்று விசாகை என்றோ தனக்குக் கூறிய சொற்களை இப்போது நினைத்துக் கொண்டான் அவன். அப்படிச் சஞ்சலம் எனக்கு ஏற்படும் போதெல்லாம் இவள் எதிரே தோன்றுகிறாளே என எண்ணியவனாக, “திருநாங்கூரிலிருந்து எப்பொழுது புறப்பட்டீர்கள், அம்மையாரே? சிறிது நேரத்திற்கு முன்னால்தான் உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்களே வந்து விட்டீர்கள் என்று கேட்டான் இளங்குமரன்.

இங்கு நான் வந்த நேரம் நல்ல நேரமில்லை போலும்! நீங்கள் காயமுற்ற நெற்றியும் கலங்கிய கண்களுமாக எங்கோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே?” என்றாள் விசாகை.

காயம் பட்டதும், கலங்கியதும் உண்மை. ஆனால் உங்கள் முகத்தைப் பார்த்ததும் என்னுடைய கலக்கங்கள் அழிந்து பழைய தெளிவை நான் உணர்கிறேன் என்றான் இளங்குமரன்.

 

அங்கே அட்சய பாத்திரத்தோடு வந்த விசாகையைக் கண்டதும் வளநாடுடையாரும், முல்லையும் என்ன நினைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. படைக்கலச்சாலைக்கு வந்து அப்புறம் சந்திப்பதாகக் கூறி நீலநாக மறவரிடமும், இளங்குமரனிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார்கள் அவர்கள்.

விசாகை, தான் அன்று அதிகாலையில்தான் திருநாங்கூரிலிருந்து புறப்பட்டதாகவும், இந்திரவிழா முடிகிறவரை காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கப் போவதாகவும் கூறினாள். ஒதுங்கி நின்றிருந்த நீலநாகர் அன்போடு அருகில் வந்து, “சுகமாய் இருக்கிறாயா, அம்மா?” என்று விசாகையை விசாரித்தார்.

எல்லாரும் சுகமாயிருக்கிறவரை என்னுடைய சுகத்துக்கு ஒரு குறையும் இல்லை ஐயா?” என்று அவரை நோக்கிக் கைகூப்பினாள் அவள்.

நீயும் எங்களோடு வந்து ஆலமுற்றத்திலேயே தங்கிக் கொள்ளலாமே அம்மா! திருநாங்கூர்ப் பூம்பொழிலிலிருந்து யார் வந்தாலும் இங்கே ஆலமுற்றத்து விருந்தாளிகளாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்றார் நீலநாகர். விசாகை புன்னகை பூத்தாள்.

இல்லை ஐயா! இந்த நகரத்தில் எங்கள் சமயத்தாருக்கு உரிய இந்திர விகாரம் என்னும் பெளத்தப் பள்ளியில் நான் போய்த் தங்கிக் கொள்வேன். நாளைக்குக் காலையில் மீண்டும் உங்கள் இருவரையும் நாளங்காடியில் இதே இடத்தில் சமயவாதிகளின் கூட்டத்துக்கு நடுவே சந்திப்பேன். இப்போது எனக்கு விடை கொடுங்கள் என்று வணங்கினாள் விசாகை. அன்று காலையில் நாளங்காடியில் இளங்குமரனுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றி விசாகையிடம் சொல்லலாமென நினைத்திருந்த நீலநாகர் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அவரும் இளங்குமரனும் அவளுக்கு விடை கொடுத்தனுப்பினார்கள்.

காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்ததும் வராததுமாக அந்தத் துன்பச் செய்திகளை அவள் அறிய வேண்டாமென்றே நீலநாகர் அவளிடம் இவற்றைக் கூறாமல் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். விசாகை விரைவாக விடைபெற்றுக் கொண்டதற்குக் காரணமும் இப்படிப்பட்டதுதான். இளங்குமரனும் நீலநாகரும் ஏதோ கவலை நிறைந்த சூழ்நிலையில் இருப்பதாக அவள் அநுமானம் செய்து கொள்ள முடிந்ததனால் அவர்களைத் தனியே விட்டுவிட்டுப் புறப்படுவதுதான் நல்லதென்று புறப்பட்டிருந்தாள் அவள்.

புறப்படு தம்பீ! இந்தக் கோலத்தோடு இன்னும் இங்கே நிற்க வேண்டாம். இப்படிக் கலகலப்பான பொது இடங்களுக்கு அதிகமாக வந்து பழகுவதை விரும்பாத என்னை நீதான் உன் பாதுகாப்புக்காக இங்கே அடிக்கடி வரச் செய்கிறாய். நேற்று உன் பொருட்டு இங்கே வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். இன்றைக்கு வரவேண்டா மென்று நினைத்திருந்தேன் உன்னைத் தனியே இங்கு அனுப்பிய பின் எனக்கு மனம் கேட்கவில்லை. பிள்ளைப் பூச்சி குடைவதுபோல் மனத்தில் ஏதோ வேதனை குடைந்தது. சிறிது நேரத்தில் நானும் புறப்பட்டு வந்துவிட்டேன். தெய்வ சித்தம் எவ்வளவு பெரிய உயிர் உதவிக்காக என்னை இங்கே புறப்படுவதற்குத் தூண்டியிருக்கிறது, பார்த்தாயா? நான் வந்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்கும், என்று நினைவை நிகழாததோடு இணைத்துப் பார்த்தால் உடல் சிலிர்க்கிறது தம்பீ!”

வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா. நம் கைகளில் என்ன ஐயா இருக்கிறது? விதிக்கு ஊழ் என்று தமிழில் பெயரிட்டிருக்கிறார்கன். ஊழ் என்றால் வரிசை, முறை என்று பொருள். செய்த வினைகளை நிறுத்தி நிறுத்து நிறுவைக்கு நோந்தபடி பயன்கள் வரிசையாக வருவதற்கு எவ்வளவு பொருத்தமாகப் பெயர் அமைந்திருக்கிறது, பார்த்தீர்களா?” என்றான் இளங்குமரன். முன்பு அவனைத் தழுவினாற்போல் அவனருகில் நடக்கிற இந்தச் சமயத்திலும் அவன் உடம்பிலிருந்து கற்பூரத்தின் நறுமணம் கமழ்வதுபோல் நீலநாகர் உணர்ந்தார்.

இப்படிப் பேசியவாறே இவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, செவிகளில் மகர குண்டலங்கள் அசைய மார்பில் புலமையைப் பாராட்டி மன்னர்கள் அளித்த இரத்தின கண்டிகைகள் ஒளிரத் தங்கநிறப் பட்டு ஒரு தோளைத் தழுவினாற் போலச் சரிந்த இலங்கப் பிராகிருத மொழியிலும் பாலி, வடமொழிகளிலும், வல்லவரான பண்டிதர் ஒருவர் எதிரே வந்து இளங்குமரனின் கையிலிருந்து ஞானக் கொடியைப் பார்த்து விட்டுப் பசி கொண்டிருந்த சிங்கம் கண்முன் இரை கண்டாற் போன்ற ஆவலோடு நின்றார். அவர் வலக் கையில் ஏட்டுச் சுவடிகள் இருந்தன.

கம்பீரமான தோற்றமும் தோலாலும் சதையாலும் மட்டுமின்றி அறிவாலும் மிகுந்து தோன்றிய ஒளியும் அழகும் கொண்டு அந்தப் பெரும் புலவர் வந்து நின்றதும் இளங்குமரன் அவரை வணங்கினான். அவ்வாறு வணங்கும்போதுஇவருடைய அறிவுக்கு என் வணக்கமும் அகம்பாவத்துக்கு என் அநுதாபமும் உரியனவாகுக என்று மனத்தில் இரண்டையும் நினைத்துக் கொண்டே அவன் வணங்கினான். அந்த வணக்கத்துக்குப் பதில் வணக்கமும் செலுத்தாமல்என்னடா சிறுபிள்ளையே என்கிற விதத்தில் சிரித்தது ஞான சிம்மம். “நெற்றியில் இரத்தக் காயமும் மனத்தில் கலக்கமுமாகப் பசித்துத் தளர்ந்து இருக்கிறாயே! இப்போது எதற்கு வம்பு? இவரிடம் நாளைக்குச் சந்தித்து வாதிடலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்படு. இன்று காலைப் போதுக்கு இத்தனை வம்புகள் போதும் என்று இளங்குமரனின் காதருகில் மெல்லச் சொன்னார் நீலநாகமறவர்.

ஐயா! நீங்கள் கூறுவது நல்லதானாலும் இப்போது இந்தப் புலவரை நான் அலட்சியம் செய்வதற்கில்லை. நோயாளிக்கு மருந்தளித்து அந்த நோயைப் போக்க வேண்டிய மருத்துவன் நோய் கண்ட போதெல்லாம் நோய் கண்ட இடமெல்லாம் தயங்காமல் உதவுவதில் தான் தொழிலால் கிடைக்கிற மெய்யான மன நிறைவு அவனுக்கு உண்டு. அறிவும் மருந்தைப் போன்றதுதான். இப்போது இந்தப் புலவருக்கு வந்திருப்பது அகங்கார நோய், இதை நேர் எதிரே கண்டு உணர்ந்த பின்பும் இவரை இந்த நோயோடு இப்படியே நலியவிட்டு நான் மேலே செல்வது நல்லதன்று. ஞானத்தை அடக்கி வைத்துக் கொள்ளாமல் மலர்ந்த பூவைப்போல் எல்லார்க்கும் நுகரப் பயன்பட்டுக் கற்பூரம் போல மணந்துகொண்டே பிரகாசிக்க வேண்டும் என்று மெல்லிய குரலில் நீலநாகருக்குச் சொல்லிவிட்டு எதிரே நின்றவரை அதுதாபத்தோடு பார்த்துக் கொண்டேபுலவர் பெருந்தகையே! உங்கள் போரைத் தொடங்கலாம் என்றான் இளங்குமரன்.

முன்பு அவன் சரீரத்திலிருந்து உணர்ந்த கற்பூர நறுமணத்தை இப்போது அவன் சொற்களிலிருந்தும் உணர்வது போன்ற பிரமையை நீலநாகர் அடைந்தார்.

 

----------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

15. மலையோடு வாதம்

 

அவனை அழைத்த முதற் சொல்லிலேயே ஏளனம் ஒலிக்க அலட்சியமாக அழைத்தது அந்த அறிவுச் சிங்கம்.

குழந்தாய்! ஒன்று இரண்டு மூன்று எனப்படும் எண்கள் எண்ணுவதற்கு மட்டும் பயன்படும் குறிகளா? அல்லது அவைகள் குணங்களாதலும் உண்டா?”

ஐயா! எண்கள், ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணுவதற்குரிய குணத்தைப் பெற்றுப் பொருள்களை எண்ணும் தொழிலைச் செய்யும்போது குறியீடுகள். ஒருமை, இருமை, மும்மை என எண்ணும் தன்மையாகிய மூலப் பண்பாகவே நிற்கும்போது குணங்கள். எண்ணுவதைக் குணமாகச் சொல்லும்போது சங்கை என்று சொல்கிறார்கள் தருக்க நூலார். அணியாகச் சொல்கிறார்கள் அலங்கார நூலார், கருவிகளாகச் சொல்கிறார்கள் கணித நூலார். எண்களில் ஒருமைதான் அழிவில்லாதது என்பது தருக்க நூல்களின் முடிவு. ஒருமைக்குமேல் யாவும் எல்லையற்றவை. எல்லையற்றவை யாவையோ அவை அளக்க முடியாதவை. ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணத் தொடங்கி ஒவ்வொன்றாக வளர்ந்து வளர்த்துக் கொண்டு போய் எண்ணும் ஆற்றல் இறுதியாகச் சோர்ந்து முடங்கிய முடிவான மூலைக்குக்கோடி என்று பெயரிட்டு விட்டுத் தளர்ந்து போனார்கள். தெரு முடிகிற இடத்திற்குத் தெருக்கோடி என்று பெயர் சொல்கிறாற்போல் எண் முடிகிற இடத்துக்கும் கோடி என்று பெயர். ஒருமை, அல்லாதது எல்லாம் பன்மை என்பது எங்கள் தமிழ் வழக்கு. ஒருமை, இருமை பன்மை என்பது வடமொழி வழக்கு. எண்களில் ஒன்றுதான் நித்தியம். ஏனையவை அநித்தியம் என்ற கருத்து காத்தியாயனர், தொல்காப்பியர், பாடியகாரர் எல்லோருக்கும் உடன்பாடு. பதினொன்று என்பதை ஒன்றை மிகுதியாக உடைய பத்து என்றும், முப்பத்தி ஒன்று என்பதை ஒன்றை மிகுதியாக உடைய முப்பது என்றும் காத்தி யாயனர், தொல்காப்பியர் ஆகியோர் பிரிப்பர். எண்ணால் அளக்க முடியாதவற்றை அளப்பதற்குத் தான் தருக்கத்தில் பரிமாணம் என்று மற்றொரு குணம் வகுத்தார்கள். ஒன்று, இரண்டு, என எண்ணி அளக்க முடியாமல் நுண்மை பெருமை, குறுமை, நெடுமை எனக் கருதியே அளக்க முடிந்தவற்றை பரிமாணத்தால் அளக்க வேண்டும்.”

நல்லது! நீயும் ஏதோ விவரங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறாய். இதோ, இந்தக் கேள்விக்குப் பதில் சொல். ஒருமை அல்லாதன எல்லாம் பன்மை என்பது தவிர ஒருமையிலும் பன்மை உண்டோ?”

உண்டு! ஒன்றில் இரண்டு அரைப் பகுதிகளும் நான்கு கால் பகுதிகளும், எட்டு அரைக்கால் பகுதிகளும் கூறுபடுத்தினால் இன்னும் பல பகுதிகளும் அடங்கியிருக்கின்றன. ஒருமையிலும் பின்ன வகையால் பன்மை காணலாம். ஆனால் பின்னப்படும்போது பொருளின் குணம் சிதையுமாதலால் முறைப்படி அவற்றைப் பன்மை என ஒப்புக்கொள்ள இயலாது. குணம் பொருளுக்கு உரியதாகச் சொல்லப்பட்டது. ஒன்றாயிருந்த பொருள் இரண்டாகவும், நான்காகவும், எட்டாகவும் சிதைந்தபின் அவற்றை எண் என்னும் குணத்தால் அளப்பது நியாயமாகாது ஐயா! தருக்கத்தில் பொருள் சொல்லி பின்புதான் குணம் சொல்லியிருக்கிறார்கள்.”

பக்கத்தில் நின்ற நீலநாகருக்கு ஒரே ஆச்சரியம். ‘இந்தப் பிள்ளையை நாங்கூர் அடிகள் மறுபிறவி எடுக்கச் செய்து அனுப்பினாற்போல அறிவின் அவதாரமாய் ஆக்கி அனுப்பிவிட்டாரே!’ என்று எண்ணி எண்ணி வியந்தார் அவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் மாமரத்துக் காய்களின் சாயலைக் கீழே நீர்ப்பரப்பில் பார்த்துக் கொண்டே குறி தவறாமல் இளங்குமரன் அம்பெய்து வீழ்த்திய நாளில், ‘குறி தவறாமல் பார்க்கும் கண்களுக்கு வில்லாற்றல் வளர்வதைப்போல் குறி தவறாமல் நினைத்து நினைத்து அடைய வேண்டிய இலட்சியம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதற்கருகில் போய்விடுகிற மனம் உடையவனுக்குத் தவத்தினால் சித்திகள் எல்லாம் கிடைக்கும். அந்தத் தவம் இந்தப் பிள்ளையிடம் இருக்கிறது என்று இளங்குமரனைக் காண்பித்து மற்ற மாணவர்களுக்கு முன்னால் தான் அவனைப் புகழ்ந்த வார்த்தைகள் இன்று தன் முன்னாலேயே நிதரிசனமாக அர்த்தம் பெற்று விளங்குவதை நீலநாகர் உணர்ந்தார்.

அந்தப் பன்மொழிப்புலவர் தமது தோளிலிருந்து வழுகி நழுவும் பட்டுப் போர்வையையும், மனத்திலிருந்து வழுகி நழுவப் பார்த்த அகம்பாவத்தையும் இவ்வளவு விரைவாக விட்டுவிடத் துணியாமல் ஒரே சமயத்தில் இழுத்து நிறுத்திப் போர்த்திக் கொண்டவராக மேலும் இளங்குமரனைக் கேட்டார்.

 

பாகதமும், பாலியும், தெய்வ மொழியும் உலகமெல்லாம் புகழ்பெற்றிருக்கின்றன. வேங்கடத்துக்கும் குமரிக்கும் நடுவிலுள்ள சிறிது நிலப்பகுதியில் மட்டும் தானே உங்கள் தமிழ் வழங்குகிறது! பெளத்த சமய கிரந்தங்கள் பாலியில் மிகுதியாயிருக்கின்றன. தரிசனங்கள் தெய்வமொழியில் இருக்கின்றன. இப்படியெல்லாம் இருக்கும்போது தமிழ் மொழிக்கென்று தனியாக எழுத்து, இலக்கணம் எல்லாம் எதற்கு? பாலி வடிவிலோ, தெய்வ மொழி உருவிலோ, தமிழையும் எழுதிவிட்டால் என்ன?”

சுவாமி! என்னிடம் இந்தக் கீழ்மை நிறைந்த கேள்வியைக் கேட்பதற்காகத் தெய்வங்கள் உங்களை மன்னிக்க வேண்டும் என்று உங்கள் அறியாமைக்காக உங்கள் பொருட்டு நான் பிரார்த்தனை செய்கிறேன். எழுத்து என்பது சப்தத்தின் ஆடை. அது இல்லா விட்டால் சப்தம் நிர்வாணமாக நிற்கும். ஒவ்வொரு மொழிக்கும் அதன் எழுத்துக்கள் ஆடை, அவற்றை நீக்குவது மானபங்கம் செய்வதற்கு ஒப்பானது, அகத்தியரும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த எழுத்துக்களைத் தங்கள் தெய்வக் கைகளால் எழுத்தாணி பிடித்து எழுதினார்களோ அந்த எழுத்துக்கள் கண்ணில் தெரிவதாலேயே இன்றும் என் கண்கள் சூரிய ஒளியில் குளித்தது போல் புனிதமடைகின்றன. இந்த நகரின் ஆலமுற்றத்துக் கோவிலில் இருக்கிற தெய்வ பிம்பம் எப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்டு வணங்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறையின் பக்தியையும் வணக்கத்தையும் ஏற்றுத் தாங்கிக் கொண்டு தன் தெய்வ சக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறதோ, அப்படியே தமிழும் பல கோடித் தலைமுறைகளின் பழக்கத்தில் எழுத்தும் சொல்லுமாக வணங்கப்பட்டு, வணங்கப்பட்டு மந்திரமாக நிறைமொழியாக வளர்ந்து நிற்கிறது! அதன் எழுத்துக்களை மாற்றலாமென்று நினைப்பதே பல தலைமுறைகளாக வணங்கப்பட்டு வரும் தெய்வ பிம்பத்தைக் கோவிலுக்குள்ளிலிருந்து வெளியே எடுத்து எறிய நினைப்பதற்கு ஒப்பாகும்.”

இளங்குமரன் எவ்வளவோ சான்றாண்மையையும் சம்சித்தத்துவத்தையும் பெற்றிருந்தும் அந்த வட தேசத்துப் புலவரின் இந்தக் கேள்விக்கு இப்படி மறு மொழி கூறியபோது சற்றே கண்கள் சிவந்து முகம் சிவந்து உதடுகள் துடித்திட உணர்ச்சி வசப்பட்டு விட்டான்.

கோபப்படாதே குழந்தாய்! வாதம் செய்கிறவன் சுயமாக உணர்ச்சி வயப்பட்டால் அந்தக் கணமே வாதத்துக்குரிய விஷயம் உணர்ச்சியிழந்து போகும் என்பது தருக்கத்தின் முறைகளில் ஒன்றல்லவா? வாதி தன்பலம் காட்டினால் வாதம் பலமில்லாதது என்றாகிவிடும். இப்போது உன்னை வேறொரு கேள்வி கேட்கிறேன். இதிகாச நாயகர்களாகிய இராமன், தருமன், கண்ணன், இவர்களைக் காவியக் குணங்களுக்காக வணங்குகிறாயா? அற்புதச் செயல்களைச் செய்தவர்கள் என்பதற்காக வணங்குகிறாயா?”

 

அற்புத செயல்களைச் செய்கிறவர்கள் வணங்கத் தகுதியுடையவர்களானால் இதோ இந்த நாளங்காடியில் இந்திரவிழாக் கூட்டத்திலே வயிற்றுப் பிழைப்புக்காகத் கண் கட்டி வித்தை காட்டிக் கொண்டிருக்கும் சாதாரண மாந்திரீகர்களையும் வித்தைக்காரர்களையும் கூட நான் வணங்க வேண்டியிருக்கும். வியாசரும், வான்மீகியும் காவியக் குணங்களால் தூய்மையாய் வரைந்து நம்முன் நிறுத்தும் நாகர்கள் சுயமாகவே தங்களுக்குள்ள தெய்வீக ஆற்றலையும் பெற்றுப் பால் வைத்திருந்த பேழையில் தேன் வைத்திருந்த பேழை கவிழ்ந்தாற்போல் இரட்டைச் சுவைகள் இணைந்து தேர்ந்த தெய்வங்களாய்த் தோன்றுகிறார்கள். ஆனால் பாமரர்களுக்குக் கதை சொல்லும் பெளராணிகர்களுடைய இராமனை என்னால் வணங்க முடியவில்லை. வியப்பதற்கு மட்டும்தான் முடிகிறது. காவியத்தில் வருகிற இராமன் வில்லை ஒடிப்பதற்கு ஒரு கணத்தில் நூற்றுள் ஒரு பங்கு நேரம்கூட ஆகவில்லை என்று கவி சொல்கிறார். வில்லை எடுத்ததையே காண முடிந்ததாகவும் ஒடித்ததைக் கேட்க மட்டுந்தான் முடிந்ததாகவும் கூறிய கவியைக் கற்கும்போது ஒடிப்பதற்கு ஆகிய நேரத்தை உணரவும் முடியவில்லை, உணரவும் முடியாத சிறிய அணு அளவு நேரம் அது என்று எண்ணி அதைச் செய்த காவிய நாயகனை என்னால் வணங்க முடிகிறது. பெளராணிகருடைய இராமனோ வில்லை ஒடிப்பதற்கே மூன்று நாள் ஆகிறது. முடிசூட்டு விழாவுக்காகக் கதை கேட்பவர்களிடமிருந்து பெளராணிகருக்குக் கிடைக்க வேண்டிய கணையாழியும் பிறவும் செய்யப் பெற்று வருகிறவரை அவருடைய இராமன் தாமச ராமனாய் வில்லைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒடித்துக் கொண்டே இருக்கிறான். காவிய குணங்களைப் பெற்ற தெய்வ கணங்களாக இருப்பதனால்தான் இதிகாச நாயகர்களை அவர்களுடைய காவிய குணங்களுக் காகவேபாவிகம் என்று பெயர். அவை எல்லார்க்கும் பொதுவான ஞான நிதி. அவை எந்த ஒரு தனிக் காவிய கருத்தாவுக்கும் தனிச் சொத்து இல்லை. பாரதத்தில் தருமன் வந்தபின் தருமம் செய்கிற மனிதனைக் காவிய நாயகனாக வைத்து யாருமே காவியம் செய்யலாகாதென வாதிடுவது பேதைமை.”

எதிரே மகர குண்டலங்கள் அசைய, மணிமாலை சுடர் விரிக்க நின்றவருடைய கண்களில் நீர் மல்கிற்று. அவருடைய கம்பீரமான உடல் நடுங்குவதையும், சிலிர்ப்பு அடைவதையும் பார்த்து இளங்குமரனுக்கும் நீலநாகருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் வியப்புடனேயே அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் வியப்பானதொரு காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.

----------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

16. அகங்கார தகனம்

 

இளங்குமரனும் நீலநாகரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எதிரே குன்றுபோல் நின்று கொண்டிருந்தவருடைய கைகளில் இருந்து ஏடுகள் நழுவி மண்ணில் வீழ்ந்தன. பூகம்பம் நிகழ்கிற காலத்து மரம் போல் அவர் உடல் ஆடியது. நடுங்கும் கைகளால் தம் செவிகளில் இருந்த குண்டலங்களை ஒவ்வொன்றாகக் கழற்றினார். அவர் மார்பில் மின்னிய இரத்தின கண்டிகைகளையும் கழற்றினார். தோளில் பொன் மின்னலாய்ச் சரிந்து மடிந்து வழிந்து கொண்டிருந்த பட்டுப் பீதாம்பரத்தை எடுத்து மடித்து அதன்மேல் குண்டலங்களையும், இரத்தின கண்டிகைகளையும் வைத்துக் கொண்டு கீழே குனிந்து...

அவர் செய்கையைப் புரிந்துகொள்ள முடியாமல் இளங்குமரன் பயந்து பின்னுக்கு நகர்ந்து கொண்டான். நீலநாகர் திகைத்து விலகினார்.

அறிவு மலையாகிய அந்தப் பன்மொழிப் புலவர் இளங்குமரனுக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்.

சுவாமி இதென்ன் காரியம்?” என்று பதறினான் இளங்குமரன். அந்தப் பெரும் புலவருடைய கண்களிலிருந்து நீரும், நாவிலிருந்து சொற்களும் நெகிழ்ந்தன:

என் பெயர் முகுந்த பட்டர். இன்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் காசியிலிருந்து புறப்பட்டு ஒவ்வோர் அரச சபையாகப் போய்த் தங்கி அந்தந்த நாட்டு அறிவாளிகளுடன் வாதம் புரிந்து வாகை சூடினேன். கடைசியாக இந்த ஆண்டு இந்திர விழாவின் போது இங்கு வந்தேன்...” என்று தம் கதையைத் தொடங்கினார் முகுந்த பட்டர். இப்படிக் கண்களில் நீர் மல்க ஒவ்வொரு சொல்லாக அவர் நாவிலிருந்து கழன்றபோது சொற்களோடு சொற்களாக இன்னும் ஏதோ ஓருணர்வும் அவர் மனத்திலிருந்து கழன்று கொண்டிருந்தது. அவர் பேசினார்:

கலிங்க தேசத்திலும், உச்சயினியிலும், அயோத்தியிலும், குயிலாலுவத்திலும், விதர்ப்ப நாட்டிலும், பாஞ்சால தேசத்திலும் வெற்றிக்கொடி நாட்டிப் பலப்பல ஞானிகளுக்கு நான் குருவானேன். அந்தந்த தேசத்து அரசர்கள் மனமுவந்து புகழுரைகளும், பொற்கடகங்களும், மகர குண்டலங்களும், இரத்தின கண்டிகைகளும், பட்டுப் பீதாம்பரங்களும் அளித்து இந்தச் சரீரம் நிறைய அகம்பாவங்களைப் பூட்டிவிட்டார்கள். எத்தனையோ விதத்தில் முயன்றும் என் அகங்காரத்தை என்னாலேயே அடக்க முடியவில்லை. உண்ணும் உணவுகளைக் குறைத்து உடற் கொழுப்பையும் குறைத்து உடலை வாட்டிப் பார்த்தேன். தெய்வ பக்தியை வளர்த்துக் கொண்டு இறுமாப்பை அடக்க முயன்றேன். என்னைப் பிடித்த அகங்காரமோ மருந்தினால் தீராத பெரு நோயாய் வதைத்தது. காய்ந்த தருப்பைப் புதரில் பற்றிய நெருப்பைப் போல்... மூங்கில் உரசி மூங்கிலே எரிவது போல் என்னுள்ளே உண்டான அகம்பாவத்தால் நானே எரிந்து எரிந்து சிவப்பாகிக் கொண்டிருக்கிறேன். ‘தயைகூர்ந்து என் அறிவுக் கொழுப்பை அடக்கி என்னுள் எரியும் அகம்பாவ நெருப்பை அவித்து யாராவது என் இதயத்தைக் குளிர வைக்க மாட்டார்களா? என்று இந்தப் பத்து ஆண்டுகளாக அதைச் செய்யவல்ல மேதைகளைத் தேடித் திரிந்தேன். கால் போன போக்கில் வந்த தேச தேசாந்தரங்களில் எல்லாம் திரிந்தேன். நேற்று அதிகாலையில் இந்த நகரத்தை அடைந்து காவிரியில் நீராடிவிட்டு நான் நிமிர்ந்த போது கரை மேலுள்ள மரத்திலிருந்து நல்ல சகுனம் போல் பூக்கள் என் தலையில் உதிர்ந்தன. என்னுடைய அகம்பாவத்தை அழித்து என்னைத் தடுத்தாட் கொள்ளப் போகிற ஞானம் இந்தக் காவிரியின் கரையில் எங்கோ இருக்கிறது என்று என் மனம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியால் துள்ளியது. என்னுள்ளே தகித்துக் கொண்டிருக்கும் நெருப்பு விரைவில் தணிய வேண்டுமே என்ற தவிப்பில் இன்று இங்கே உன்னோடு வாதத்தைத் தொடங்கிய சில நாழிகைகளில் பொருத்தம் இல்லாமல் கேள்விகளையெல்லாம் கூட நான் உன்னிடம் கேட்க முற்பட்டு விட்டேன். அப்படிக் கேட்டதற்கு அந்தரங்கமான காரணம் எப்படியாவது நான் உனக்குத் தோற்றுப் போக வேண்டுமே என்ற என் ஆசைதான். ஆனால் பொருத்தமில்லாமல் நான் கேட்க முற்பட்ட கேள்விகளுக்குக்கூட நீ அழகான மறுமொழி கூறினாய். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் காசியில் கங்கைக் கரையிலிருந்து புறப்பட்டபோது என்னுடைய இலட்சியம் எதுவாயிருந்ததோ அது இன்று காவிரிக்கரையில் வந்து நிறைவேறியது. தெய்வகுமாரா! அருள்கூர்ந்து உன் பாதகமலங்களை ஒருமுறை வணங்கி என்னுடைய இந்த ஐசுவரியங்களை அவற்றில் படைக்க எனக்கு அனுமதி கொடு...”

முகுந்தபட்டர் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவராய் இப்படி அவனை வணங்குவதற்குக் கெஞ்சிக் கொண்டிருந்தபோது நீலநாகர் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார்.

இந்த முகுந்தபட்டர் இப்போதுதானே இவ்வளவு விவரமும் சொல்கிறார்! இளங்குமரன் இவரை எதிரே பார்த்தவுடனேயேஇந்தப் புலவருக்கு வந்திருப்பது அகங்கார நோய். இதை நேர் எதிரே கண்டு உணர்ந்த பின்னும் இவரை இந்த நோயோடு இப்படியே நலிய விட்டுவிட்டு நான் மேலே செல்வது நல்லதன்று என்று தீர்க்க தரிசனம் போலச் சொல்லி விட்டானே! அவ்வாறு சொல்ல அவனால் எப்படி முடிந்தது என்று நினைந்து நினைந்து அந்த நினைப்புக்கு ஒரு முடிவும் தெரியாமல் பக்தி மலரும் கண்களால் இளங்குமரனைப் பார்க்கலானார் நீலநாகமறவர்.

ஆனால், அவனோ ஒன்றும் அறியாத குழந்தை போலக் காலடியில் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் முகுந்தபட்டரையும், பக்கத்தில் நின்றுகொண்டு கண்கள் மலர வியந்து தன்னையே நோக்கும் நீலநாகரையும் மாறிமாறிப் பார்த்தான்.

முகுந்தபட்டர் அவன் விழிகளை நிமிர்ந்து பார்த்து இறைஞ்சினார்.

 

என்னை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்!”

 

சுவாமி! நீங்கள் நிறைகுடம்! உங்களை அங்கீகரித்துக்கொள்ள நான் யார்! நோயுற்றவன் ஒருவன் அடர்ந்த காட்டு வழியாக நடந்தபோது தற்செயலாய் அவன் உடம்பில் உராய்ந்த செடி ஒன்று உயரிய மருந்துச் செடியாக இருந்து, அந்த நோயைச் சில நாட்களில் தணித்தாற்போல, இந்த நிகழ்ச்சியை நீங்கள் தற்செயலாக எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய நான் உங்கள் அகம்பாவத்தைத் தணித்ததாக எண்ணிக் கொள்ளக்கூடாது. இது தன் போக்கில் நேர்ந்ததே ஒழிய என்னால் உங்களுக்கு நேரப்பட்டது அன்று. காட்டில் நடந்துபோன மனிதனுடைய நோயைத் தீர்க்க வேண்டு மென்ற கருத்து அவன்மேல் உராய்ந்த பச்சிலைக்கு இல்லை. பச்சிலையை உராய்ந்தவனுடைய கருத்திலும்அதனால் நோய் தீரும் என்ற ஞாபகமும் நோக்கமும் இல்லை. இன்ன இடத்தில் இன்ன சமயத்தில் இன்ன பொருளால் இன்னது நேரவேண்டுமென்ற தெய்வ சித்தம்தான். இதில் காரணம், காரியம், கருத்து, கருமம், எல்லாம். அதற்குமேலே நினைக்க ஒன்றும் இல்லை.”

நீ இப்போது கூறியது தான் மெய்யான ஞானம்! ஆனால், நானோ நீ இப்போது சொல்வதற்கு நேர் மாறாக நினைத்து நினைத்து இந்தப் பத்து ஆண்டுகளாக அறிவு மதம் பிடித்து அலைந்து விட்டேன். நான் நினைத்துப் பெருமைப் படும்படியாக இந்த உலகத்தில் என்னுடைய அறிவைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற ஒரே எண்ணம் தான் என் மனத்தில் இன்றுவரை நிலைத்திருந்தது.”

செருக்கு எப்படி ஏற்படுகிறது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை ஐயா! அதிக அறியாமையிலும் செருக்குப் பிறக்கிறது! அதிக அறிவிலும் செருக்குப் பிறக்கிறது! புயல் காற்றில் சிறிய அகல்விளக்கை அணைந்துவிடாமல் காக்க முயல்வதுபோல் இந்த உலகத்தில் மனிதன் தன் இதயத்தைச் செருக்கு இல்லாமல் காப்பது எவ்வளவு அருமையான காரியமாயிருக்கிறது. பார்த்தீர்களா? அறிவு வரம் பெற்று மற்றவர்களை அழிக்க முயன்றால் தானே அழிந்துபோக வேண்டியதாகத்தான் நேரும் என்று ஒவ்வொரு அறிவாளியும் ஒவ்வொரு கணமும் தனக்குள் நினைத்துத் தன்னைத்தானே அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பஸ்மாசுரனுடைய கதையாகத்தான் முடியும். நம்முடைய தத்துவ குணம் தான் நம் மனத்துக்கு அங்குசம். மனத்தில் மதம் பிடிக்கும்போது அடக்கப் பயன்படும் ஆயுதமும் அதுதான்.”

அந்த ஞானம் இன்றுதான் எனக்குக் கிடைத்தது. அது கிடைக்கக் காரணமாக இருந்த நீ இவற்றையெல்லாம் என் காணிக்கைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

இப்படிக் கூறிக்கொண்டே அவர் தன் பாதங்களில் இடுவதற்கு முற்பட்ட அணிகலன்களைப் பார்த்து இளங்குமரன் சிரித்தான்.

எந்தெந்த அணிகலன்கள் உங்களுடைய உடம்பில் கர்வத்தீயை எரிய விட்டனவோ, அவற்றையே இப்போது என் பாதங்களில் இடுகிறீர்களே?”

 

உன் சக்தி பெரிது. அதை இவற்றினாலும் எரிக்க முடியாது. நீ தெளிந்தவன். வீங்கவும், ஏங்கவும் விடாமல் மனத்தைக் காக்கத் தெரிந்தவன்.”

இருக்கலாம்! ஆனால் இவை எனக்குத் தேவையில்லை. யாராவது ஏழைகளைத் தேடி இவற்றைக் தானமாக அளியுங்கள். எனக்கு வேண்டாம்.”

அப்படிச் சொல்லக்கூடாது. குரு தட்சிணையாகவாவது...”

யார் யாருக்கு குரு? தாங்கள் எங்கே? நான் எங்கே? இந்த உலகத்தில் இல்லாப் பிழையும் பொல்லாப் பிழையும், எல்லாப் பிழையும் செய்து, நோயும் வறுமையும் கொண்டு ஏழையாக இருக்கிறவர்கள்தாம் என்னுடைய குருவும் வணங்குகிற குருக்கள். அவர்களுடைய பசியிலிருந்துதான் என்னுடைய சிந்தனைகள் பிறந்து வளர்ந்தன. அவர்களுடைய துக்கங்களிலிருந்துதான் என்னுடைய ஞானம் பிறந்தது. இன்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே நகரத்தில் இந்திர விகாரம் என்ற பெளத்த மடத்தின் வாயிலில் வயது முதிர்ந்த துறவி ஒருவரிடம் பேசியபோதுதான் என் மனமே அகங்கார இருள் நீங்கி ஒளி பெற்றது. அருள்கூர்ந்து உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்திலும் நோயும் பசியுமாகக் கிடப்பவர்களைத் தேடிப் போய் இந்த அணிகலன்களை அளித்து மகிழுங்கள். என் வழியை எனக்கு விடுங்கள். என்னுடைய இவ் வழியில் பொன் கிடந்தாலும், மண் கிடந்தாலும், ஓடு கிடந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதான்? இது மண், இது பொன் என்று பிரித்து வேறுபாடு உணர்கிற காலத்தை நான் இழந்துவிட்டேன். தயை கூர்ந்து என் வழியை எனக்கு விடுங்கள்.”

முகுந்தபட்டர் தலை நிமிர்ந்து நன்றாக இளங்குமரனின் முகத்தைப் பார்த்தார். தம் கண்களின் அந்தப் பார்வையாலேயே ஐம்புலனும், எட்டு அங்கமும் தோய அவனை வணங்குகிறாற் போன்ற பாவனையின் சாயலைச் சுமந்தவராக வணங்கினார் அவர். இளங்குமரன், மதம் அடங்கப்பெற்ற அந்த அறிவுமேதையைப் பதிலுக்கு வணங்கிவிட்டு விடை பெற்றான். நீலநாகர் வியப்பும் திகைப்பும், மெல்ல மெல்ல நீங்கியவராக அவனைப் பின்தொடர்ந்தார்.

---------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

17. நிலவில் பிறந்த நினைவுகள்

 

பூக்கூடையைச் சுமந்து சென்ற யவனப் பணியாளன் திரும்பி வந்து கூறிய செய்திகளைக் கேட்டுப் பதற்றமடைந்தவராய் நகைவேழம்பரோடு தேரில் நாளங்காடிக்கு விரைந்து கொண்டிருந்தார் பெருநிதிச் செல்வர். அப்படி வேகமாகத் தேரில் போய்க் கொண்டிருக்கும்போது அவருடைய உடம்பு மட்டுமின்றி நினைவுகளும் மனமும் கூடப் பதறின, நடுங்கின. திரும்பி வந்த யவனப் பணியாளன் கூறிய செய்திகளிலிருந்து சுரமஞ்சரி தன்மேல் கடுஞ் சிற்றம் கொண்டிருக்க வேண்டும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவருக்குப் புரிந்தது. நகைவேழம்பர் கூறியதுபோல் இந்தச் சூழ்ச்சியால் தாங்கள் நினைத்த பயன் விளையாவிட்டாலும் சுரமஞ்சரியைப் பற்றி இளங்குமரன் மிகக் கேவலமாக எண்ணும்படியான சூழ்நிலை உருவாயிருக்கும்.

இவர்களுடைய பழக்கமும், உறவும் சிதைவதற்கு இந்த நிகழ்ச்சியே போதும். ஆனால் இதன் காரணமாக என் மகள் சுரமஞ்சரிக்கு என் மேலும் நகைவேழம்பர் மேலும் பெருங்கோபம் மூண்டிருக்கும். ஏற்கெனவே அவளுக்கு எங்கள் மேல் இருந்த சந்தேகம் இன்று பெருகி வளர்ந்திருக்கும். அந்த ஆத்திரத்தினால் பெருங் கூட்டம் கூடியிருக்கிற நாளங்காடி நாற்சந்தியில் என் கெளரவமும் பெருமையும், பாழ்பட்டுப் போகும்படி எதையாவது சொல்லிவிட்ப் போகிறாளே என்று எண்ணித் தேர்ச் சக்கரங்களைவிட வேகமாக உருண்டு கொண்டிருக்கும் பதறிய நினைவுகளோடு போய்க் கொண்டிருந்தார் அவர். இந்தச் சந்தேகங்களையும் பதற்றங்களையும் தேரில் உடன் வந்து கொண்டிருந்த நகைவேழம்பரிடம் மனம் விட்டுப் பேசலாம் என்றால் சற்றுமுன் அவருக்கு ஏற்றபட்டிருந்த பிணக்கினால் அவர் பேசுவதற்கே விருப்பமில்லாதவர் போல வேறு புறம் பார்த்துக் கொண்டிருந்தார். பல்லக்கின் பின்புறச் சட்டத்தில் பணிவாக முழந்தாளிட்டு உட்கார்ந்து கொண்டிருந்த யவன ஊழியனிடம் பேசலாமென்று மனம் தவித்தாலும் இதையெல்லாம் அவனைப் போன்ற ஊழியனிடம் பேசுவது கெளரவக் குறைவு என்ற எண்ணம் குறுக்கிட்டுத் தடுத்தது. எல்லா ஆத்திரத்தையும் சேர்த்துத் தேரோட்டியிடம் காண்பித்தார் அவர். “இதென்ன ? ஆமை ஊர்வதுபோல் தேரைச் செலுத்துகிறாயே, குதிரைகளை விரட்டு, என் பொறுமையைச் சோதிக்காதே.” தேரோட்டி சாட்டையைச் சொடுக்கினான். குதிரைகள் தாவிப் பாய்ந்தன. நாளங்காடி நெருங்க நெருங்கப் பயத்தினால் அவர் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. அவர்களுடைய தேர் நாளங்காடியை அடைந்து குறிப்பிட்ட இடத்தினை அணுகி நின்றபோது ஆத்திரத்தின் பிரதிபிம்பமாகப் பெண்மையின் ஊழிக் காலம் போல சுரமஞ்சரி அங்கிருந்த கோலத்தை அவரே தம் கண்களால் கண்டு அஞ்சினார். அப்போது அவளுக்கு முன்னால் கீழே இறங்கிப்போய் நிற்க வேண்டுமென்று நினைப்பதற்கே பயமாக இருந்தது அவருக்கு. தலைவிரி கோலமாக நகைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டுத் திமிறிக்கொண்டு ஓட முயலும் சுரமஞ்சரியை வானவல்லியும், வசந்தமாலையும் பக்கத்துக்குப் பக்கம் கைகளைப் பற்றித் தடுத்துக் கொண்டு நின்றார்கள். பல்லக்கிலும் தரையிலுமாக அவள் கழற்றிச் சிதறிய அணிகலன்கள் கிடந்தன. வெறி கொண்டவள் போல எதையோ சொல்லிக் கூக் குரலிட்டுக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி.

இது நரகத்துக்குப் போகும் வாகனம். நான் இதில் ஏறிவரமாட்டேன் என்று பல்லக்கைச் சுட்டிக் காட்டித் திரும்பத் திரும்பக் கத்தினாள் அவள். நிலைமையின் பயங்கரம் அவருக்குப் புரிந்தது. தானோ, நகைவேழம்பரோ அப்போது அவளுக்கு முன்னால் போய் நிற்பதால் நல்ல விளைவு எதுவும் ஏற்படாதென்று உறுதியாகத் தோன்றியது அவருக்கு. கெளரவத்தைக் காப் பாற்றிக் கொள்வதற்காக அவளைச் சமாதானப்படுத்தப் போய் அதனாலேயே அந்தக் கெளரவம் நாற்சந்தியில் சிதறும்படி ஆகிவிடக் கூடாதே - என்று மனத்தில் முன்னெச்சரிக்கை ஒன்றும் எழுந்தது.

பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தாதே! தேரைச் சற்று ஒதுக்குப்புறமாகவே விலக்கி நிறுத்து என்று தேரோட்டிக்கு உத்தரவிட்டார் அவர். தேர் ஒதுக்கி நிறுத்தப்பட்டது.

மீண்டும் தேரோட்டிக்குக் கட்டளையிட்டார் அவர். “நீ போய் வானவல்லியை மட்டும் இங்கே அழைத்து வா... நான் வந்திருப்பதை எல்லாரும் கேட்கும்படி சொல்லாமல் வானவல்லிக்கு மட்டும் குறிப்பினாற் புலப்படுத்திவிட்டு அவளைக் கூப்பிடு.”

தேரோட்டி அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்குச் சென்றான். மெளனம் கலக்கத்தைத் தவிர்க்கும் - என்பதற்கு மாறாக ஏதோ ஒரு கலக்கத்தைப் பிறப்பிப்பதற்குக் காரணமாகப் போகிற அசாதாரண மெளனத்தோடு தேரில் இருந்தார் நகைவேழம்பர், பட்டினப்பாக்கத்திலிருந்து புறப்பட்டது தொடங்கி அவருடைய இந்த மெளனத்தைக் கவனித்தவராய் இது என்ன விளைவுக்கு அடிகோலுமோ என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே வந்தார் பெருநிதிச் செல்வர். இப்போது, தேரோட்டியை அனுப்பிவிட்டுக் காத்திருந்த இந்தச் சில விநாடிகளிலும் நகைவேழம்பரிடம் இதே மெளனத்தையே கவனித்து அவர் உணர்ந்தார்.

இதற்குள் தேரோட்டி வானவல்லியையும் அழைத்துக் கொண்டு வந்து எதிரே நிற்கவே அவருடைய கவனம் முழுவதும் செய்ய வேண்டிய காரியத்தின் அவசரத்தில் திரும்பியது. வானவல்லியே தன்னை வெறுப்போடு பார்ப்பதைக் கண்டு அவளிடம் என்ன சொல்வதென்று தயங்கினார் அவர். நடந்த நிகழ்ச்சிகள் அவள் மனத்தை எவ்வளவு தூரம் பாதித்திருந்தால் செல்வத் தந்தையாகிய தன்னையும் இப்படி வெறுப்போடு பார்க்கும் துணிவை அவளுக்கு அளித்திருக்க வேண்டும் என எண்ணிப் பார்த்துக் கொண்டு பின்பு பேசினார்: "வானவல்லி! உன் முகத்தைப் பார்த்தால் சுரமஞ்சரியைவிட நீதான் அதிகமாகக் கோபம் அடைந்திருக்கிறாற் போல் தோன்றுகிறது. நடந்ததை யெல்லாம் உங்களோடு பூக்கூடை சுமந்து வந்த பணியாளன் எனக்குச் சொன்னான். என்னிடம் ஒரு தவறும் இல்லை. நமக்குப் பூக்களைக் கொண்டு வந்து கொடுத்தவர்கள் தாம் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். உலகத்தில் யாரையும் நம்ப முடியவில்லை அம்மா. யாருக்கு, எங்கே, எதன் மூலம் எதிரிகள் இருக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடிவதில்லை. சுரமஞ்சரியைக் காட்டிலும் உன் தந்தையிடம் உனக்கு அநுதாபம் அதிகமென்று நான் நம்பிக் கொண்டிருப்பதைப் பொய்யாக்கிவிடாதே, மகளே! எப்படியாவது நீயும், வசந்தமாலையுமாக முயன்று சுரமஞ்சரியைப் பல்லக்கில் ஏற்றி உட்காரச் செய்து மாளிகைக்கு அழைத்து வந்துவிடுங்கள். நம்முடைய குடும்பத்தின் பெருமையும், பீடும், இப்படி இந்த நாளங்காடி நாற்சந்தியில் சிதற வேண்டாம் என் அருமைப் பெண்ணே! உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இன்று இந்த விநாடியில் நீ என்னுடைய மானத்தைக் காப்பாற்றி உதவி செய் - பெருநிதிச் செல்வர் தம் மகள் வானவல்லியிடம் இவ்வாறு கூறி வேண்டிக் கொள்ளும்போது தேரோட்டியும், பணியாளனும் குறிப்பறிந்து விலகி நின்று கொண்டிருந்ததனால் நகைவேழம்பர் மட்டுமே மூன்றாம் மனிதராக இருந்து இவற்றைக் கேட்க நேர்ந்தது.

அன்று நடந்த நிகழ்ச்சியிலிருந்து தந்தையார் மேல் எவ்வளவோ சந்தேகங்களும், பயமும் ஏற்பட்டிருந்தாலும் அவர் இப்போது வேண்டிக்கொண்ட விதம் வானவல்லியின் மனத்தை குழையச் செய்துவிட்டது. வந்த போது இருந்த ஆத்திர வேகம் தணிந்தவளாய் அவள் அவரைக் கேட்டாள்:

இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள், அப்பா?”

செய்வதற்கு முடியாத எதையும் செய்யச் சொல்லவில்லை அம்மா. செய்ய முடிந்ததைத்தான் சொல்கிறேன். நீயும் வசந்தமாலையுமாகச் சேர்ந்து சுரமஞ்சரியை வலுவில் பிடித்துத் தூக்கியாவது பல்லக்கில் உட்கார்த்தி மாளிகைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும், வீட்டுக்கு வந்து அவள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஏசட்டும். நான் பொறுத்துக் கொள்வேன். குடிப்பெருமையை நடுத்தெருவில் விலை பேச விடக்கூடாது மகளே! உனக்குத் தெரியாததில்லை!” என்று குழைந்து பணிந்து வேண்டினார் பெருநிதிச் செல்வர்.

அவருடைய வேண்டுகோள் தன் மனத்தில் உறைத்துத் தான் அதை ஏற்றுக் கொண்டு இணங்கிச் செயல்படுத்தப் புறப்படுவது போல் திரும்பிச் சென்றாள் வானவல்லி. தம்முடைய தந்திரப் பேச்சுக்கு வெற்றி கிடைத்து விட்டது என்ற நம்பிக்கை பெருநிதிச் செல்வருக்கு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வசந்தமாலையும், வானவல்லியும் சுரமஞ்சரியைத் திமிர விடாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டு போய்ப் பல்லக்கில் ஏற்றும் காட்சியைத் தம் கண்களால் தாமே கண்ட பின்புதான் அவருக்கு முழு நம்பிக்கையும் வந்தது. சுரமஞ்சரி பல்லக்கிலிருந்து குதித்து விடாமல் மற்றப் பெண்கள் இருவரும் அவளைப் பிடித்துக் கொண்டதையும், கழற்றி எறியப்பட்டுக் கிடந்த அணிகலன்களை எல்லாம் பல்லக்குத்துக்கிகள் எடுத்துப் பல்லக்கினுள்ளேயிருந்த வானவல்லியிடம் பத்திரமாக அளித்ததையும் அதன்பின் பல்லக்கு அங்கிருந்து புறப்பட்டதையும் பார்த்துவிட்டுத்தான் பெருநிதிச் செல்வர் நிம்மதியடைந்தார். இவ்வளவும் நிகழ்வதை நகைவேழம்பரும் கண்டு கொண்டிருந்தாலும் அவர் மெளனமாகவே இருந்தார்.

பல்லக்கை முன்னால் சிறிது தொலைவு போக விட்ட பின் தேரைப் பின்னால் செலுத்திக் கொண்டு போகுமாறு தேரோட்டிக்கு உத்தரவிட்டார் பெருநிதிச் செல்வர். மாளிகையை அடையும்போது பிற்பகல் நேரமும் முடிந்திருந்தது. பல்லக்கைப் பின்தொடர்ந்து தேர் மாளிகைக்குப் போனதும் சுரமஞ்சரியையும், அவள் தோழியையும் மட்டும் தந்திரமாகத் தனியே அழைத்துப்போய் அவர்கள் வழக்கமாய்த் தங்கும் மாடத்துக்குள்ளேயே முன்போலச் சிறை வைத்தார் பெருநிதிச் செல்வர். தம்மை நேரில் அவள் காணும்படி விடாமலே இதைச் செய்தார் அவர். முன்பு இப்படி அவர் சிறை வைத்தபோது அவளும் அவள் தோழியும் குமுறியதுபோல் இப்போது குமுறவில்லை. சோர்ந்து துவண்டு அழுதபடியே தரையில் சாய்ந்து கிடந்தாள் சுரமஞ்சரி. வசந்தமாலைக்கு அந்த நிலையில் தன் தலைவியோடு பேசவே பயமாயிருந்தது. நேரம் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டேயிருந்தது.

மாலை முற்றி இருட்டியது. அந்த மாடமும் தீபமின்றி இருண்டிருந்தது. இருட்டே மெல்ல யாருக்காகவோ அழுவது போல் அந்த மாடத்தில் இருந்து விசும்பலும் அழுகையும் கேட்டுக் கொண்டே இருந்தன. பேச்சு மட்டும் இல்லை.

இன்னும் நேரமான பின் இரண்டாம் நாள் நிலா வானில் அந்த மாடத்துக்கு நேரே வந்து மிதந்தது. ஒரு கணம் தானே அந்த நிலாவாக மாறிக் கீழே மண்ணில் எங்கோ இருக்கும் இளங்குமரனின் முகத்தைத் தேடுவ தாகக் கற்பனை செய்துகொண்டாள் சுரமஞ்சரி. அந்தக் கற்பனையாலும் அழுகை நிற்கவில்லை. பல நாழிகை மெளனத்துக்குப்பின் அந்த மாடத்தில் வசந்தமாலையும் தன்னோடு சிறைப்பட்டிருப்பதை அப்போதுதான் நினைத்துக் கொண்டவள்போல் அவள் இருளில் எங்கோ இருப்பதாகப் பாவித்துக் கொண்டு கதி கலங்கச் செய்யும் ஒரு கேள்வியை அவளிடம் கேட்டாள் சுரமஞ்சரி. அந்தக் கேள்வியைச் செவியுற்ற வசந்தமாலைக்கும் பாதாதிகேச பரியந்தம் மயிர்க் கூச்செறிந்து நடுங்கியது.

தன் தலைவி, அந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்பதற்குக் காரணமாக அவள் மனத்தில் பெருகி முதிர்ந்திருந்த உணர்வு துணிவா, விரக்தியா, பயமா, சோகமா என்று புரிந்து கொள்ளவே இயலாமல் மயங்கினாள் வசந்தமாலை. தலைவியிடமிருந்து எந்த உணர்வை மூலமாகக் கொண்டு அந்தக் கேள்வி பிறந்திருந்தாலும் தோழிக்குப் பயம் ஒன்றே முடிவாக அதிலிருந்து ஏற்பட்டது.

-------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

18. சொல் இல்லாத உணர்வுகள்

 

அகன்ற வீதியில் சோழர் கோநகரத் தின் இராக் காவலர்கள் அளவாக அடிபெயர்த்து நடக்கும் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் இருளும் மௌனமுமே தங்களுக்குள் பரம இரகசியமாகக் கலந்து பேசிக் கொண்டு ஏதோ சதி செய்வது போலப் பயங்கர அமைதி நிலவியது. சுரமஞ்சரி தன் மாடத்தில் தன்னோடு இருளில் சிறை வைக்கப் பட்டிருந்த வசந்தமாலையைக் கேட்டாள்.

 

வசந்தமாலை! வாழ்வதில் எதுவும் சுகமாகத் தெரியவில்லையானால், சாவதில் அந்தச் சுகம் இருக்கலாமோ என்று எண்ணிச் சாகத் தவிக்கும் துடிப்பு உனக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதோ...?”

வசந்தமாலை திடுக்கிட்டாள். அப்பால் என்ன இருக்கிறதென்று புரிந்து கொள்ள முடியாது சுற்றிலும் மூடியிருந்த இருளைப் போலவே இந்தக் கேள்வியும் இருந்தது. இந்தக் கேள்வியில் நிரம்பியிருக்கும் வார்த்தைகளுக்கு என்ன பொருள், ஒரு பொருளும் அமையாமல் வார்த்தைகள் இருக்க முடியாது. சில சமயம் வார்த்தைகளிலே தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குக் கனமான பொருள் இருப்பதும் உண்டு. அப்படி ஏதோ ஒரு கனமான துயரம் தன் தலைவியின் சொற்களில் இருப்பதை மெல்ல மெல்ல உணர்ந்தாள் வசந்தமாலை. அழுகை ஒலியை அடையாளமாகக் கொண்டு இருளில் தலைவி இருந்த இடத்தை அநுமானம் செய்தவாறு வசந்தமாலை நெருங்கி வந்தாள். அருகில் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு மெல்லக் கேட்டாள்.

சாவதைப் பற்றிய நினைவு. உங்களுக்கு இப்போது எதற்காக அம்மா வந்தது?”

நைந்துபோன மனத்துக்கு எதை நினைப்பது, எதை நினையாமலிருப்பது என்ற எல்லைகளே இல்லையடி தோழி! ஒவ்வொரு விநாடியும் அணுஅணுவாகச் செத்துப்போய்க் கொண்டிருப்பதை விட ஒரேயடியாகச் சாவது சுகம்தானே? பூக்குடலையிலிருந்து புறப்பட்ட அந்தப் பாம்பு என்னைத் தீண்டியிருக்கக் கூடாதோ?” என்றாள் சுரமஞ்சரி.

வசந்தமாலை இப்போதும் தன் தலைவியிடம் பேசுவதற்குத் தகுதியான சொற்கள் தனக்குக் கிடைக்காமல் தவித்தாள். அவளுடைய அநுபவத்தில் பலமுறை இப்படிச் சொற்கள் கிடைக்காமல் தவிக்க நேர்ந்திருக்கிறது. எதிர்பாராத உணர்ச்சிகளை ஏற்று மறுமொழி கூறுவதற்குச் சொற்கள் துணை செய்யாமற் போய் நீந்தத் தெரியாதவள் வெள்ளத்தினிடையே குதித்தது போல் மயங்கினாள் அவள். ‘துக்கம், பயம், தவிப்பு, காதல், வேட்கை போன்ற சில உணர்ச்சிகளை முழுமையாகப் பேசுவதற்கு ஏற்ற முழுமையான மொழி ஒன்று உலகத்தில் இன்னும் ஏற்படவில்லை போலிருக்கிறது, தோழி!’ என்று தன் தலைவி எப்போதோ தன்னிடம் சொல்லியிருந்த வாக்கியத்தை நினைத்துக் கொண்டாள் வசந்தமாலை. அவளுடைய மெளனத்தைக் கலைத்துக் கொண்டு மீண்டும் சுரமஞ்சரியின் கேள்வி எழுந்தது.

என்னடி வசந்தமாலை? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய்?”

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, அம்மா. உங்களுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்வதற்கு என்னிடம் சொற்கள் இல்லை. அதற்குத் தகுந்த சொற்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ‘உணர்ச்சிகளைப் பரிபூரணமாக பேசுவதற்கென்று முழுமையான மொழி, எதுவும் உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை!’ என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே! அதைத்தான் இப்போது நான் உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.”

சில வெண்கல மணிகளுக்கு நடுவிலுள்ள நாவு அறுந்து போகும். அப்படி நாவறுந்த பின்பு அவற்றில் இருந்து நாதம் பிறவாது. உற்சாகம் அற்றுப்போன என் மனமும் இப்போது அப்படித்தான் நாக்கிழந்த மணியைப் போல இருக்கிறது. என்னுடைய வேட்கை சிறிது சிறிதாக வளர்ந்து தணியாத் தாகமாகியும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் ஏமாந்து நிற்கிற காரணத்தால் என் வேட்கை தீரவேண்டும் அல்லது நானே தீர்ந்து விட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தாயிற்றடி வசந்தமாலை?”

தன்னையே அழித்துக் கொள்ளத் துணியும் அளவுக்கு அப்படி ஒரு வேட்கையும் உண்டா அம்மா!”

உனக்குத் தெரியாதடி வசந்தமாலை! வேட்கை என்ற தமிழ்ச் சொல்லுக்குஎதை அநுபவிக்கத் தவிக்கிறோமோ அதை அடைந்தாலன்றித் தீராத உணர்வு என்று பொருள் விரியும். இரண்டு மனங்களுக்கு நடுவில் ஒன்றை மற்றொன்று தழுவ நெருங்கும் வேட்கைக்குஒருவர் ஒருவரை இன்றி அமையாமை என்று அகப் பொருள் நூல்களில் பதசாரம் சொல்லியிருக்கிறார்கள், தோழீ.”

எந்தப் பதத்துக்கு எந்த நூலில் எப்படிப் பொருள் சொல்லியிருந்தால் என்ன அம்மா? மனத்தில் முதிர்ந்து முற்றி முறுகியவைகளாகக் கன்றிப்போன உணர்ச்சி களின் ஆழத்தை அளப்பதற்கு ஒரு மொழியிலும் சரியான பதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீங்கள் பலமுறை சொல்லியதுதான் நிலைத்த உண்மையாக நிற்கும்போல் இருக்கிறது.”

வசந்தமாலை! இந்த வேட்கை முள் மனத்தில் தைத்த நாளிலிருந்து நான்தான் எல்லா வேதனைகளையும் பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்குக் காரணமானவர் என்னவோ இந்த வினாடிவரை ஒரே விதமாகத் தான் இருக்கிறார். எதற்கும் அடிமைப்படாத இரும்பு மனிதர்களைக்கூட அன்புக்கு அடிமைப்படுத்தலாம் என்று அறநூல் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், என்னுடைய மனத்தில் வேட்கையைப் பிறப்பித்தவராகவும், வேட்கையாகவும், வேட்கையைத் தீர்க்கும் மருந்தாகவும் - எல்லாமுமாகவும் அமைந்திருக்கிற சுந்தர இளைஞரோ, அன்பைக்கூடப் பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ளத் தயங்கும் அளவுக்குத் தன்மானம் உள்ளவராக இருக்கிறாரே! இன்றைக்கு நாளங்காடியில் நடந்த நிகழ்ச்சி அவருடைய தன்மானத்தில் கோபத்தையும் கலந்திருக்கும் - என் தந்தையாரின் சதிக்கு உடந்தையாக இருந்துகொண்டு நானே அவரைச் சூழ்ச்சியால் கொல்ல விரும்புகிறேன் என்றுகூட அவர் நினைத் திருக்கலாம்...”

நிச்சயமாக அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார் அம்மா! உங்கள் மனம் அளவற்றுக் கலங்கிப் போயிருக்கிற காரணத்தால் நீங்களாகவே அவருடைய குணத்தை மாற்றி மாற்றி நினைத்துக்கொண்டு வீணாக வருந்துகிறீர்கள். கோபதாபங்களுக்கு ஆட்படுகிற சிறிய மனிதராக அவர் இப்போது தோன்றவில்லை. அப்படி ஆட்படுகிறவராயிருந்தால் நாளங்காடிக் கூட்டத்தில் உங்கள் மேல் எறியப்பட்ட கற்களைத் தம் உடம்பில் தாமே தாங்கிக் கொண்டிருக்க மாட்டார் அவர். வேகமாக மலையுச்சிக்கு ஏறிச்சென்றவன் அதற்கு அப்பால் பயங்கரமான பள்ளத்தாக்கைத் தவிர வேறொன்றுமில்லை என்று அறிந்துகொண்டு மறுபடியும் சமநிலைக்கே திரும்பி வந்தாற் போல் உடல் வலிமையால் ஒரு காலத்தில் அகங்கார ஆடம்பர ஆணவங்களின் உச்சிக்குப் போய்விட்டு எளிமைக்குத் திரும்பிய அநுபவ ஞானியாகத்தான் இப்போது தோன்றுகிறாரம்மா அவர்! உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு இந்தக் கெடுதல் செய்தவர்கள் ஒருநாளும் நன்றாகயிருக்கமாட்டார்கள். அந்த நச்சுப்பாம்பு நாளங்காடியில் ஒருவரையும் தீண்டவில்லையானாலும் உங்கள் மனதில் அவருக்காக அவரையே பொருளாகக் கொண்டு பிறந்திருக்கும் வேட்கையைத் தீண்டி அதில் இழைந்திருக்கும் உறவினுள் நஞ்சைக் கலந்ததைப் போல ஆக்கிவிட்டது.”

வசந்தமாலை! அந்த உறவு பிறந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை அவரிடம் ஒரே தன்மையுடைய தாய் மாறாமலே இருக்கும் குணம் ஒன்றை நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன். என்னிட மிருந்து எதையும் ஏற்றுக் கொள்ளாமை என்ற குணம் தான் அது. அவர் யவனமல்லனை வெற்றிகொண்டு தோளில் முல்லை மாலை அசைய என் பல்லக்கெதிரே நின்றுகொண்டே நான் பரிசளித்த மணிமாலையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். பின்னொரு நாள் வெள்ளியை யுருக்கி வார்த்து நீட்டினாற் போன்ற வெண்தாழை மட லில் செம்பஞ்சுக் குழம்பையும் என் உள்ளத்து உணர்வின் நளினங்களையும் குழைத்துக் குழைத்து எழுத்துக்களாய்த் தீட்டி நான் எழுதிய மடலையும், மடலின் விருப்பத்தையும் சேர்த்தே ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

அதன்பின் புயலும் மழையுமாயிருந்த பயங்கர இரவு ஒன்றில் கப்பல் கரப்புத் தீவின் நடுவே என்னுடைய மனத்தின் மெல்லிய உணர்வுகளையே காணிக்கைகளாக ஏந்திக்கொண்டு நான் மலர்ந்து மணம் பரப்பி நின்ற போது ஏற்றுக்கொள்ள மறுத்தார். இப்படித் தொடர்ந்து மறுத்து கொண்டே இருப்பதற்கு எவ்வளவு நெஞ்சு உரம் வேண்டும் என்று நினைத்துப் பார்க்கும் போது அவருடைய அந்த மனவலிமைக்கு முன்னால் நானும் என்னுடைய வேட்கையும் அணுவாகத் தேய்ந்து சிறுத்துப் போய்விட்டதுபோல் தோன்றுகிறதடீ. ‘மனத்தை இடைவிடாமல் அரித்தெடுக்கின்ற காரணத்தினால் ஆசைதான் பெருநோய் என்று எனக்கு முன்பே நிமிர்ந்து நின்றுகொண்டு துணிவோடு சொல்கிற ஞான வீரரிடம் போய் என்னுடைய ஆசையை நான் சொல்வதற்கான வார்த்தைகள் எந்த மொழியிலாவது இருக்க முடியுமா என்பதுதான் இப்போது என் பயமாயிருக்கிறதடீ வசந்தமாலை!”

சுரமஞ்சரி ஒவ்வொரு சொல்லிலும் அழுகை தேங்கி நிற்க - ஒவ்வொரு சொல்லுமே தனித்தனியாகவும் வாக்கியமாகவும் பிரிந்தும் சேர்ந்தும் அழுவது போலவே பேசினாள். பக்கத்தில் இருளோடு இருளாக மண்டியிட்டு அமர்ந்திருந்த வசந்தமாலையிடமிருந்து தன்னுடைய இந்தப் பேச்சுக்குப் பதில் இல்லாமற் போகவே சுரமஞ்சரி பேச்சை நிறுத்தினாள்.

என்னடி வசந்தமாலை! நான் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறாயோ, இல்லையோ?”

...”

இந்தக் கேள்விக்கும் வசந்தமாலையிடமிருந்து பதில் இல்லாமற் போகவே சுரமஞ்சரி தன் முகத்தை வசந்தமாலையின் முகத்தருகே கொண்டு போய் மூச்சுக் காற்றோடு மூச்சுக் காற்றுக் கலக்க முடிந்த அண்மையில் தோழி அப்போது அந்த மாடத்தின் இருளில் எதை அப்படி உற்றுக் கவனிக்கிறாள் என்று துழாவினாள். தலைவியாகிய தன் பேச்சையும் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்துவிட்டு உற்றுக் கவனிக்கும் அளவுக்கு அப்படி முக்கியமாக வசந்தமாலையின் பார்வைக்கு என்ன கிடைத்திருக்க முடியும் என்ற சந்தேகத்தோடு தோழியின் பார்வை சென்ற திக்கிலேயே தன் பார்வையையும் பின்தொடரவிட்டாள் சுரமஞ்சரி. அப்படிச் சென்ற பார்வை தனக்கு இலக்காக வாய்ந்த இடத்தில் போய் நின்றதும் அங்கே தென்பட்ட காட்சியிலிருந்து பயமும் நடுக்கமும் பிறந்தன. வசந்தமாலைக்கு வாய் அடைத்துப்போன காரணம் இப்போது சுரமஞ்சரிக்கும் புரிந்தது. சுரமஞ்சரியும் வாய் அடைத்துப் போனாள். பேசும் முயற்சிக்காக நாக்குப் புரள மறுத்தது. கண்கள் நிலைகுத்தி இமைக்கவும் மறுத்தன.

பார்வை சென்ற திக்கிலே இருளின் நடுவில் அந்தரத்தில் தொங்கும் நெருப்புப் பொறிகளைப் போல் இரண்டு சிவப்பு இரத்தினங்கள் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தன. கறுப்பு உடம்பில் இரத்தம் வழிவது போல் செவ்வொளி விரிந்து இருளின் கடுமையைத் துளைத்துக் கொண்டு பாயும் ஆற்றல் வாய்ந்த அத்தகைய இரத்தினங்கள் அந்தப் பெரு மாளிகையில் தன் தந்தையாரின் ஊன்றுகோல் பிடியான யாளி முகத்தில் மட்டுமே உண்டென்பதைச் சுரமஞ்சரி நினைத்தாள், உணர்ந்தாள். அதன் விளைவாகப் பயந்தாள்.

-------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

19. சுந்தர மணித் தோள்கள்

 

ஆலமுற்றத்துப் படைக்கலச்சாலைக்குத் திரும்பி வந்த பின்னும் நெடுநேரம்வரை முகுந்தபட்டரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் இளங்குமரன். ‘அறிவின் மிகுதி காரணமாக மனத்தில் உண்டாகிற செருக்கை இழக்கக்கூடாது என்று எண்ணி எண்ணி அந்த இறுமாப்பையே வளர்த்து மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள ஆசைப்படும் அறிவாளிகளைத் தான் நேற்று வரை இந்த நாளங்காடியில் நான் சந்தித்தேன். தான் தனக்குப் பெருமையாக விரும்பி வளர்த்துக் கொண்ட அகங்காரமே ஒரு நிலைக்குமேல் தனக்கும் அடங்காதபடி மதமாகப் பெருகிவிடும்போது அதை அந்த விநாடி வரை வளர்த்து வந்தவன் பரிதாபத்துக்கு உரியவனாகி விடுகிறான். கல்வியின் மிகுதி காரணமாகவும் மனித மனத்தில் பெருமிதம் உண்டாகலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீரத்துக்குத்தான்பெருமிதம் என்பது மற்றொரு பெயர். பெருமிதமாவது மற்றவர்களினும் உயர்ந்துதான் பேரெல்லையில் நிற்றல். அறிவாளியாக இருப்பவன் பேரெல்லையில் நிற்பதை மற்றவர்கள் உணர்ந்து அவன் உயரத்தையும் தங்கள் தாழ்வையும் நினைத்து வியப்பதுதான் நியாயமான பெருமிதம். அப்படி இல்லாமல்நான் பேரெல்லையில் உயர்ந்து நிற்கிறேன் - என்று பெருமிதத்துக்குச் சொந்தக்காரனே தன்னை வியந்துகொள்ள முற்படும் போதுதான் பெருமிதம் மெல்ல மெல்லப் பெருமதமாக மாறுகிறது - என்று எண்ணியவனாக நெருப்புப் பிடித்த வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்தவரைப் போன்ற அகங்கார மதத்திலிருந்து விடுபடத் துடித்த முகுந்தபட்டரின் முகத்தை நினைவுக்குக் கொணர்ந்து வந்தபடியே சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.

மருள் மாலை நேரத்துக் கடற்காற்று ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் மரங்களையும், செடி கொடிகளையும் அவற்றின் காய், கனி, பூங்கொத்துக்களையும் ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தது. இளங்குமரன் படைக்கலச் சாலையின் தோட்டத்தில் நினைவுகள் வரிசையாய் அடுக்கும் மனநிலையோடு உலாவிக் கொண்டிருந்தான். மண்ணில் கூந்தலைப்போல் தரையில் சுருண்டு கொடியோடிப் பரந்து படர்ந்திருந்த அறுகம்புல் வெளியில் புள்ளி மான்கள் உலாவிக் கொண்டிருந்தன. அந்த மான்கள் தலை நிமிரும்போது தற்செயலாய் அவற்றின் கண்கள் மட்டும் தனியாக நகர்ந்து முன் வருவன போல் தோன்றும் அழகை இளங்குமரன் கண்டான். இன்னொரு புறம் இந்த மண்ணின் எண்ணற்ற அழகுகளைக் காண்பதற்காகவே தன் வண்ணத் தோகையெல்லாம் கண்ணாகி நின்றாற் போல் மயில் ஒன்று கலாபம் விரித்து ஆடிக் கொண்டு இருந்தது. ஆலமுற்றத்துக் கோயில் மதிலுக்கும் அப்பால் கடல் நீலநிறத்துக் கோல எழிற் கொள்ளையாக எல்லையற்றுப் பரந்து தெரிந்தது. தோட்டத்தில் உலாவிக் கொண்டே தன்போக்கில் நிமிர்ந்த இளங்குமரன் முல்லை தன்னை நோக்கி வருவதைக் கண்டு திகைத்து நின்றான். மாலையில் படைக்கலச் சாலைக்கு வந்து தன்னைக் காண்பதாகத் தன்னிடம் நாளங் காடியில் வளநாடுடையார் கூறியிருந்தது இப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. புறப்படும் போது வளநாடுடையாரும் அவர் மகளும் சேர்ந்து புறப்பட்டு வந்திருக்க வேண்டுமென்றும், வளநாடுடையார் நீலநாக மறவரோடு பேசச் சென்றபின் முல்லை தனியாகத் தன்னைத் தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வருகிறாள் என்றும் இளங்குமரன் இப்போது புரிந்து கொண்டான்.

 

முல்லை தொலைவில் வரும் தோற்றத்தைக் கொண்டே அன்று அவள் அதிகமான சிரத்தையோடு தன்னை அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்பதை இளங்குமரன் அறிந்து கொள்ள முடிந்தது. எதிரே தன்னை நோக்கி அவள் ஒவ்வொரு முறை சிலம்பு ஒலிக்கும் பாதங்களைப் பெயர்த்து வைக்கும் போதும் அப்படிப் பாதம் பெயர்த்து மிதித்து நடக்கின்ற மண்ணின்மேல் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டே நடந்து வருவதுபோல இருப்பதை இளங்குமரன் கண்டான். உடனே காரணமின்றியோ அல்லது காரணத்துடனோ அவனுக்கு விசாகையின் நடை நினைவுக்கு வந்தது. ‘இந்த மண்ணில் ஊன்றி நடக்கமாட்டேன் என்பதுபோல் பிரவாகத்தில் மிதக்கும் பூவாக நடந்து வரும் விசாகையையும், இந்த மண்ணில் ஒவ்வோர் அடி பெயர்த்து வைக்கும்போதும் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டு நடப்பதுபோல நடந்து வரும் முல்லையையும் ஒப்பிட்டு எண்ணி, அந்த எண்ணத்துக்கும், நிறுவைக்கும் மனத்துக்குள்ளிருந்து, கிடைக்கும் முடிவை அவன் பெறுவதற்குள்ளேயே முல்லை அவனுக்கு மிக அருகில் வந்துவிட்டாள்.

என் தந்தையும் நானும் வந்தோம். ஆலமுற்றத்துத் தாத்தாவும் தந்தையும் பேசிக்கொண்டே கடற்கரைப் பக்கமாகப் போய்விட்டார்கள். நான் மட்டும்...”

பலமில்லாதவன் வீசி எறிந்த கல் குறிவைத்த இலக்குக்கு முன்னாலேயே தளர்ந்து கீழே விழுந்து விடுவதைப் போல் முல்லையின் பேச்சும் தைரியமாகத் தொடங்கப்பட்டுத் தைரியம் நடுவிலேயே தளர்ந்து போனதால் இப்படித் தயங்கி நின்றது.

இளங்குமரன் அவள் முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தான். அவனுடைய பார்வையைத் தாங்கிக்கொள்வதற்கே பயமாயிருந்தது அவளுக்கு. அவனோ பார்வையோடு விட்டுவிடாமல் அவளைத் தன் வார்த்தைகளையும் தாங்கிக்கொள்ள வைத்தான்.

நீயும் கடற்கரைப் பக்கமாகப் போயிருக்கலாமே முல்லை! உனக்கு மட்டும் கடற்கரைக் காற்றின் மேல் திடீரென்று இவ்வளவு வெறுப்பு இன்றைக்கு எப்படி ஏற்பட்டது?”

முதன்மையான விருப்பமாக எதை விரும்பு கிறோமோ அதுவே கை நழுவிப் போகிறபோது இரண்டாம் பட்சமான எல்லாவற்றையும் வெறுக்க வேண்டியதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று இளங்குமரனுக்குப் பதில் சொல்லிவிட்டுத் தான் சிறிது தைரியமாகவே பேசிவிட்டதாக உள்ளூறப் பெருமையும் பட்டுக் கொண்டாள் முல்லை. நாளங்காடியில் அவனுக்கு நெல்லிக்கனியளிக்கும் போது பயந்தது போல அவன் முகத்தைப் பார்ப்பதற்குப் பயப்படாமல், இங்கே இப்போது தான் சற்றுத் துணிந்தே அவனுடன் பேசலாமென்று தோன்றியது அவளுக்கு. அவனும் துணிவாகவே அவளைக் கேட்டான்:

 

நீ முதன்மையாக விரும்பியது எது? இரண்டாம் பட்சமாக விரும்பியவை எவை? முதன்மையாக விரும்பியது ஏன் கிடைக்கவில்லை? அதற்காக இரண்டாம் பட்சமாக விரும்பியவற்றை நீ வெறுப்பானேன்? என்று தெரியாமல் நான் உன்னுடைய கேள்விக்கு மறுமொழி சொல்வது சாத்தியமில்லை முல்லை!” என்றான் இளங்குமரன்.

சாத்தியமிராதுதான். என்னுடைய இந்த இரண்டு கைகளாலும் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருடைய தோள்களில் புண்பட்ட போதெல்லாம் மருந்து தடவிக் காயத்தை ஆற்றினேன் நான். இப்போது இவ்வளவு காலத்துக்குப்பின் அந்தத் தோள்களில் காயம் பட்ட தழும்பும் தெரியவில்லை. அவை சுந்தரமணித் தோள்களாகப் பொன்நிறம் பெற்று மின்னுகின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்தத் தோள்களுக்கு மருந்திட்டு அவற்றைக் காத்தவளுடைய கைகளுக்கு இன்றுவரை அந்தத் தோள்கள் நன்றி மறந்தவையாகவே இருக்கின்றன என்பதை நினைப்பதுதான் எனக்குத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது ஐயா.”

முல்லை இப்படி இன்னும் குழந்தைத் தன்மை மாறாமல் தான் சொல்ல வந்த விஷயத்தைச் சிறு பிள்ளைக் கதை போலப் பின்னிப் பின்னிச் சொல்லியதைக் கேட்டு இளங்குமரன் மேலும் சிரித்தான்.

முல்லை! இன்று நீ யாரைக் குறை சொல்லுகிறாயோ அந்த மனிதன், மார்பிலும் தோளிலும் காயம் படுவதைக் கவிகள் விழுப்புண்கள் என்று கூறிப் புகழின் முத்திரைகளாகப் போற்றியிருக்கிறார்கள்; ஆகவேநீ இவற்றை மருந்திட்டு ஆற்ற வேண்டாம் என்று சொல்லி அந்த நாளிலேயே உனக்கு எச்சரிக்கை செய்தது உண்டா, இல்லையா? அன்று நீ அவன் தனக்கு மருந்திட வேண்டாமென்று மறுத்ததையும் பொருட் படுத்தாமல் அவனுக்கு மருந்திட்டுக் காயங்களை ஆற்றிவிட்டு இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு வந்து மறுபடியும் உன் சொற்களால் அதே மனிதனுடைய மனத்தைக் காயப்படுத்தலாமா? இது உனக்கு நியாயமா? அன்று ஆற்றிய காயத்துக்கு நீ இன்று வந்து பயனை எதிர்பார்ப்பதும் பண்பில்லையே? பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யும் காரியங்கள் உயர்ந்தவைகள் அல்லவே? அப்படிப் பயனை எதிர்பார்த்துச் செய்யும் நோன்புகளைச்சீல விரதங்கள் என்று பெயரிட்டுச் சமய நூல்கள் கூடக் குறைவாகத் தானே மதிப்பிடுகின்றன?”

நான் சமய நூல்களைப் படிக்கவில்லை. இந்த உலகத்தில் நான் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான். அந்த அன்பை உங்களோடு வாதிட்டுத் தோற்கவும் நான் விரும்பவில்லை.” நாளங்காடியில் சமயவாதிகளின் பெரிய பெரிய கேள்விகளையெல்லாம் அழகாகவும் ஆணித்தரமாகவும் கூறிய மறுமொழிகளின் மூலம் வென்ற இளங்குமரன் பேதமை ஒன்றைத் தவிர வேறெதுவும் கற்றறியாத முல்லை என்னும் இளம்பெண்ணுக்கு முன்னால் இப்போது தயங்கினான். திகைத்தான்.

 

இந்த உலகத்தில் நான் பகுத்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான்!’ என்று சொல்லிக்கொண்டே, கண்ணீரும் அழுகையும் பொங்க எதிரே வந்து நிற்கும் இந்தப் பெண்ணுக்கு இன்று நான் என்ன பதில் சொல்வது? என்று அவன் மனத்தில் பெரிதாய் ஒரு கேள்வி எழுந்தது.

அன்புக்குச் சமயம் ஏது? வாதம் ஏது? தர்க்கம் ஏது? எந்தப் பிரமாணத்தைச் சொல்லி அதை எப்படி மறுப்பது? எதிரே நிற்கும் முல்லையின் மனத்தைப் போலவே மேலே நிர்மலமாய்க் களங்கமற்றிருந்த ஆகாயத்தைப் பார்த்தான் இளங்குமரன். யாருக்குச் சொல்வதற்குப் பதில் கிடைக்காமல் அவன் ஆகாயத்தில் அதைத் தேடிக் கொண்டிருந்தானோ, அவள் தன்னுடைய சுந்தரமணித் தோள்களை, அவை தனக்குப் பதில்கள் என்பதுபோலப் பார்க்கலானாள். கடற்காற்று ஆனந்தமாக வீசிக்கொண்டிருந்தது. மயில் இன்னும் நன்றாகத் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. முல்லைக்கும் இளங்குமரனுக்கும் நடுவில் நின்ற குட்டிப் புள்ளிமான் ஒன்று தலைநிமிர்ந்து மை தீட்டினாற்போல் ஓரங்களில் கருமை மின்னும் தன் அழகிய நீள்விழிகளால் இருவரையும் மாறிமாறிப் பார்த்தது. குனிந்து அந்த மானின் கண்களைப் பார்த்த இளங்குமரன் முல்லையைப் பார்க்கவில்லையானாலும் அவள் கண்களிலும் அதே மருட்சி கலந்த அழகுதான் அப்போது இருக்குமென உணர்ந்தான்.

-------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

20. புதிய மனமும் பழைய உறவுகளும்

 

முல்லையின் முகத்தையும் அந்த முகத்திலிருந்து பருகுவது போன்ற ஆர்வத்தோடு தன்னை இமையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களையும் எதிரே நேருக்கு நேர் நிமிர்ந்து காணத் தயங்கியவனாகத் தங்கள் இருவருக்கும் நடுவில் நின்று கொண்டிருந்த மானின் கண்களை நோக்கியபடியே அவளோடு பேசினான் இளங்குமரன்.

முல்லை! பூக்களைப்போல சில பருவ காலங்களில் மலர்ந்து பொலிவதும் பின் வாடி உதிர்ந்து தளர்வதும் குறைவதும்தான் மனித உடம்பின் அழகு, கவர்ச்சி இவை எல்லாம். பூக்கள் பூப்பதற்குப் பருவம், நேரம் முதலியன காரணமாவதுபோல இந்த உடம்பில் அழகு பூக்கும் பருவங்களும் சில உண்டு. உடம்பை வாகனமாகக் கொண்டு இயங்கும் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அழகும் கவர்ச்சிகளும் பூத்துப் பொலிகின்ற பருவங்கள் மிகவும் குறுகியவை. பூக்களுக்கும், நேரத்திற்கும் சேர்த்துத் தமிழில் ஒரே சொல்லாக வாய்த்திருப்பதுபோது என்ற பதம். நேரத்தோடு மலரும் பண்பைக் குறிப்பதற்காகவே பூக்களுக்கும் போது என்று பெயரிட்டார்கள் போலிருக்கிறது, பவழமல்லிக்கை இரவிலேயே பூத்து விடுகிறது. தாமரை கதிரவனைப் பார்த்த பின்பே முகம் மலர்கிறது. குமுதப்பூ மாலையில்தான் மலர்கிறது. ஒவ்வொரு மலரும் தன்னுடைய போது தவறாமல் பூக்கும் இயல்பை நினைத்துக் கொண்டு பார்த்தால்தான் இரண்டு பொருளுக்கும் உரியதாக வாய்த்த போது என்ற சொல்லின் அழகு புரியும். சமயம் அறிந்து, இடம் அறிந்து, பொருத்தம் அறிந்து மலரும் அறிவின் மலர்ச்சியைப் பூக்களுக்கு இணை சொல்வது இதனால்தான் முல்லை! உன்னைப் போன்ற பெண்களுக்கோ ஆசை நேரும்போதுதான் அறிவும் மலர்கிறது. ஆசையைச் சொல்வதற்கு வேண்டிய சொற்களை மட்டும்தான் நீங்கள் தேடுகிறீர்கள்...”

அதை மறுப்பதற்குத் தேவையான அழகிய சொற்களைத் தேடாமலே தெரிந்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்...”

இப்படி வெடுக்கென்று உடனே அவனுக்குப் பதில் சொன்னாள் முல்லை. அவளுடைய சொற்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பிறந்ததைக் கண்டு இளங்குமரன் புன்முறுவல் பூத்தான். எதிரேயிருப்பவர் கூறிய கருத்து எதுவோ அதை உடனே மறுத்துவிட வேண்டுமென்ற அவசரமும் அவளுடைய இந்தச் சொற்களில் தொனித்தது. முல்லையின் மனத்தில் இப்போது இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டது. ‘பூக்களைப் போல் சில பருவ காலங்களில் மலர்ந்து பொலிவதும் பின்பு வாடி உதிர்ந்து தளர்வதும், குறைவதும்தான் மனித உடம்பின் அழகு, கவர்ச்சி இவை எல்லாம் என்று இளங்குமரன் கூறியது தன்னைப் பற்றியா, அவனைப் பற்றியா எனச் சந்தேகத்தை இரண்டு கூறாகப் பிரித்து மனத்தைக் குழப்பிக் கொண்டாள் அவள். இந்தச் சந்தேகத்தை அவனிடமே கேட்டுப் புரிந்து கொள்ளலாம் என்றால் இதை அவனிடம் எப்படிக் கேட்பது என்றும் அவள் விளங்கிக்கொள்ள முடியாமல் பயந்தாள்.

இளங்குமரனோ தன் எதிரே நிற்பவளுடைய பெண் இதயத்தின் எல்லா வேதனைகளையும் உணர்ந்திருந்தும் ஒன்றுமே உணராததுபோல இளநகை தயங்கும் முகத்தினனாக நின்றான். அவன் இதழ்களிலும் முகத்திலும் தோன்றிய அந்தப் புன்னகையும் கூட பிறருடைய வேதனைகளுக்கு இரங்கும் அருளாளன் ஒருவனுடைய கருணை நகையாகவே இலங்கிற்று.

இவர்கள் இரண்டு பேரும் இப்படிப் பேசத் தயங்கி நின்ற சமயத்தில் இந்தக் குழப்பத்திலிருந்து இரண்டு மனங்களையுமே விடுவிக்க வந்தாற்போல ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவியும் படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்தார்கள். இலவந்திகைச் சோலையில் வந்து தங்கியிருந்த ஓவியனைஇந்திர விழா முடிகிறவரை நீ படைக்கலச் சாலையிலே வந்து தங்கிக் கொள்ளலாம் என்று நீலநாக மறவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கித் தன் மனைவியோடு அப்போது அங்கு புறப்பட்டு வந்திருந்தான். முல்லையின் கேள்விகளுக்கும், ஆசைகளுக்கும் மறுமொழி சொல்லியும் சொல்லாமலும் இரண்டு விதமான நிலைகளுக்கு நடுவே தவித்துக் கொண்டிருந்த இளங்குமரனுக்கும் மணிமார்பனுடைய வரவு இப்போது நிறைந்த நிம்மதியை அளித்தது.

 

விலங்குகளை மாட்டிக் கொண்டு அவற்றால் பூட்டுண்டு கிடக்கும் கைகளே அவற்றைக் களைந்து கழற்ற முடியாமல் தவிக்கும்போது வேறு கைகள் வந்து கழற்றினாற் போலத் தன் மனத்தின் திண்மைகளை இளக்கும் நளினமான சூழ்நிலைகளோடு முல்லை எதிரே வந்து நின்றுகொண்டு ஒவ்வொரு வார்த்தை யாலும் தன்னை வளைத்து இறுக்கிச் சொல் விலங்கு பூட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மணிமார்பன் வந்து விடுவித்ததாகத் தோன்றியது, இளங்குமரனுக்கு. ஆனால் முல்லைக்கோ தன் மனத்தின் இரகசியங்களையெல்லாம், சொல்லித் தீர்த்துவிடுவதற்கிருந்த கட்டுக்காவலற்ற சுதந்திரமான சமயத்தில் திடீரென்று யாரோ வந்து தன் மனத்துக்கும் நாவுக்கும் விலங்கு பூட்டிவிட்டாற்போல் இருந்தது. அழகிய கண்களைத் திறந்து மருள மருளப் பார்க்கும் அந்தப் புள்ளிமானையொப்ப, இருந்தாற் போலிருந்து தானும் பேச முடியாதவளாகவே மாறி விட்டதாக உணர்ந்தாள் முல்லை. அவள் மனத்திலும் நாவிலும், நினைவாகவும் சொல்லாகவும் விளையாடிய தனிமை என்ற சுதந்திர உணர்வின் மேல் இப்போது கூச்சமும் பயமுமாகிய விலங்குகள் விழுந்து இறுக்கின.

ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவியும் அவர்களுக்கு மிக அருகில் வந்தார்கள்.

பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டாய் மணிமார்பா! இனிமேல் இந்திரவிழா முடிகிற வரையில் நீ இந்த நகரத்தில் கவலையில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பலாம் என்றான் இளங்குமரன்.

நான்கு பேரும் புல்தரையில் அமர்ந்து கொண்டார்கள். இங்கு உட்கார முல்லைக்கு விருப்பமில்லை என்றாலும் நீலநாக மறவரோடு போயிருக்கும் தன் தந்தை கடற்கரையிலிருந்து வந்தாலன்றித் தான் வீடு திரும்ப முடியாதென்ற காரணத்தால் வேண்டா வெறுப்பாக அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். புதுமணப் பொலிவு குன்றாமல் திருமணத்துக்குப் பின் இன்னும் அதிகமாயிருந்த பேரழகோடு அருகில் உட்கார்ந்திருந்த மணிமார்பனின் மனைவியைப் பார்த்தாள் முல்லை. அப்படி அவளைப் பார்த்தவுடன் இன்னதற்கு என்று புரியாத எதற்காகவோ தான் அவள்மேல் பொறாமைப் படுவதற்கு இடமிருக்கிறதென்று தோன்றியது முல்லைக்கு. இந்த உலகத்தில் அழகிய நாயகனை மணந்து கொண்டு வாழும் அழகிய பெண்ணாயிருக்கும் எவளைப் பார்த்தாலும் அவள் மேல் தான் பொறாமைப் பட வேண்டியது நியாந்தான் என்று நினைத்தாள் முல்லை. அவளுடைய மனக்குமுறல்களை முகமே கண்ணாடியாயிருந்து பிரதிபலித்தது. சிறிது நேரம் நால்வரும் என்ன பேசுவதென்றே தோன்றாமல் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமார்பன் அந்த மெளனத்தைக் கலைத்தான்.

 

ஐயா! இன்று பகலில் உங்கள் பூம்புகார் நகரத்தின் துறைமுகத்துக்கு அருகிலுள்ள வீதிகளையும் யவனப் பாடியின் வளம் மலிந்த கடைத் தெருக்களையும் என் மனைவியோடு சுற்றிப் பார்த்தேன். சென்ற முறை நான் இந்த நகரத்துக்கு வந்திருந்தபோது கூட இவ்வளவு விரிவாய் இந்த நகரத்தை நன்றாகச் சுற்றிப் பார்க்கவில்லை. அப்போது இங்கே எனக்கு ஏற்பட்ட துன்ப அநுபவங்களால் நான் இந்த அழகிய நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்குப் பதிலாக இங்கிருந்து எப்போது வெளியேறி என்னுடைய சொந்த ஊருக்குப் போவேனோ என்று முள்மேல் நிற்பதைப் போலத் தவித்துக் கொண்டிருந்தேன். இந்த முறை வந்த போதுதான் உங்கள் நகரத்தை ஒரு கலைஞனுடைய கண்களால் பார்த்து நான் அநுபவிக்க முடிந்தது. யவனர்கள் கடைத்தெருவில்தான் எத்தனை எத்தனை நுணுக்கமான பொருள்கள்! எங்கெங்கிருந்தோ கடல் கடந்து வந்து உங்கள் சோழ நாட்டு மண்ணில் பரவி விளங்கும் கலைகளைப் பார்த்தால் எனக்குத் திகைப்பே ஏற்படுகிறது. பாண்டி நாட்டின் தலைநகராகிய எங்கள் மதுரையில்கூட வேற்று நாட்டுக் கலைகளும் பண்பாடுகளும் இவ்வளவு அழகாக வேரூன்றவில்லை ஐயா!” என்று மணிமார்பன் வியந்து சொல்விக்கொண்டே வந்தபோது இளங்குமரன் அவன் பேச்சில் குறுக்கிட்டுச் சில வார்த்தைகள் சொன்னான்:

மணிமார்பா! உன்னுடைய கருத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் நான் மறுக்கிறேன். இந்த நகரத்திலுள்ள யவனப் பாடியின் செழிப்புமிக்க கடை வீதிகளையும் அங்கு மலிந்துள்ள பிறநாட்டுக் கலைகளின் வளத்தையும் பார்த்து நீ வியப்பது இயல்புதான். ஆனால் வேற்று நாட்டுக் கலைகள் இந்த நகரத்தில் வந்து வேரூன்றியிருப்பதாக நீ சொல்வதுதான் பிழை. நியாயமாகப் பார்த்தால் எந்தக் கலையும் தான் தோன்றிய மண்ணில் வேரூன்றுவதைப் போல் இன்னொரு நாட்டில் வேரூன்ற முடியுமா என்பது சந்தேகம்தான். மிக உன்னதமான தொரு கலை எந்த நாட்டிலும் போய்ப் பரவலாம். ஆனால் அதனுடைய ஆணிவேர் அது பிறந்த மண்ணில் தான் ஊன்றிக் கொண்டிருக்க முடியும் என்று பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.”

அந்தத் தத்துவம் எல்லாம் எனக்கு விளங்காது ஐயா! கிழக்குக் கடலின் தென்பகுதியில் நாவலந்தீவுக்கே நுழைவாயில் போல் அமைந்திருக்கிறபடியால் பூம்புகாரின் வீதிகளில் பல நாட்டுக் கலைவளத்தையும், மொழி வழக்கையும் காண முடிகிறது. எங்கள் மதுரை நகரம் தமிழகத்தின் நடுநகரமாக அமைந்து விட்டதனால் இதற்கு வாய்ப்பில்லை. மேலும் இந்திர விழாவைப் போல இவ்வளவு பெரிய விழா எதுவும் எங்கள் நகரத்தில் நடைபெறுவதில்லை. பங்குனி மாதத்தில் வில் விழா என்று ஒன்று நடைபெறும். காமனுக்காகக் கொண்டாடப்படுகிற அந்த விழாவில் மதுரை மாநகரத்து இளைஞர்களின் உற்சாகத்தை மட்டுமே காணலாம்...!”

 

காமனுக்கென்று தனியாக விழா எதற்கு மணிமார்பா? இளைஞர்களும் முதியவர்களுமாக உயிர் வாழும் மனிதர்களுடைய மனத்தில் ஆசைகள் அள வற்றுப் பொங்கும் ஒவ்வொரு விநாடியும் காமனுக்குத்தான் கொண்டாட்டம்! காமனுக்குத்தான் திருவிழா ஆசைகளின் முடிவுதான் காமதகனம். வைராக்கியம் வாய்ந்த மனம் இருந்தால் அந்த மனதுக்கு உரியவன் எவனோ அவன் ஒவ்வொரு விநாடியும் தன் மனத்தில் மேலெழுந்து நிற்கும் ஆசையைத் தன்னுடைய வைராக்கிய நெருப்பினால் தகனம் செய்துவிட்டு வெற்றிப் பார்வை பார்க்கலாம் என்று சிரித்தபடியே தத்துவம் சொன்னான் இளங்குமரன்.

அப்போது படைக்கலச் சாலையின் வாயிற் பக்கமிருந்து சிரிப்பும் ஆரவாரமுமாக நாலைந்து இளைஞர்களோடு கதக்கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான். அவர்கள் யாவரும் அருகில் வந்தபோதுதான் கதக் கண்ணனோடு உடனிருந்தவர்கள் தன்னுடைய பழைய பூம்புகார் நண்பர்கள் என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. அவர்களை எப்படி வரவேற்பது என்று அவன் அப்போது திகைக்க நேர்ந்தது.

கூட்டமாக ஆடவர்கள் வருவதைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் எழுந்து விலகி நின்று கொண்டார்கள். தன் தமையன் கதக்கண்ணனைப் பார்த்தவுடனே முல்லைக்கு ஒரு விதத்தில் ஆறுதல் பிறந்தது. நீலநாக மறவரோடு பேசிக்கொண்டே உலாவப் போயிருக்கும் தன் தந்தை திரும்பி வருவதற்குச் சிறிது தாமதமானால் தான் தன் அண்ணனோடு வீடு திரும்பி விடலாமென்று எண்ணிக் கொண்டாள் முல்லை. புதிய சிந்தனைகளோடு கூடிய தன் மனத்தைக் கொண்டு பழைய நண்பர்களிடம் எப்படி எதை உள்ளம் திறந்து பேச முடியுமென்ற தயக்கம் அப்போது இளங்குமரனுக்கு ஏற்பட்டது.

-----------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

21. மயானத்தில் நடந்தது

 

ஆலமுற்றத்துக் கடற்கரையில் நடந்தவாறே மிக முக்கியமான செய்திகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள் வளநாடுடையாரும் நீலநாக மறவரும். வளநாடுடையார் ஆத்திரமாக மீசை துடிதுடிக்கப் பேசலானார்.

ஒவ்வொரு கணமும் நீங்கள் அந்தப் பிள்ளைக்குக் காவலாயிருக்க வேண்டும் ஐயா! நாளங்காடியில் இன்று காலையில் நடந்த சூழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் இப்போதுகூட என் மனம் கொதிக்கிறது. நடந்தவற்றை ஒவ்வொன்றாக இணைத்துத் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணமாக ஏதோ ஒரு வலிமையான சூழ்ச்சி பின்னாலிருந்து இயங்குவதாகத் தெரிகிறது.”

 

வலிமையாவது சூழ்ச்சியாவது? ‘நான்தான் உன்னுடைய எதிரி!’ என்று நேர் எதிரே முன்னால் வந்து நின்றுகொண்டு கையை ஓங்குவதற்குத் துணிவில்லாத வலிமையும் ஒரு வலிமையா? சூழ்ச்சியை நாடி அதற்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டுதான் செயற்பட முடியுமென்று இருந்தால் அந்த வலிமைக்கு இதுவே பலவீனம் அல்லவா, வளநாடுடையாரே? தன் கைகளின்மேல் தனக்கே நம்பிக்கையில்லாமல் எவளோ ஒரு கபாலிகையின் கைகளில் அந்த வலிமை இருப்பதாக நம்பிக்கொண்டு அவளைத் தூண்டிவிடுகிற சுய பலமில்லாத எதிரியை என்ன செய்ய முடியும்?” என்று நீலநாகர் கேட்டதும் வளநாடுடையார் இந்தச் செய்தியில் தொடர்புபடுத்திக் கூறப்படும் கபாலிகை யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலினால் துண்டப் பெற்றவராக அவரை வினவினார்:

அது யார் ஐயா கபாலிகை?”

யாரா? அவள்தான் வளநாடுடையாரே, இந்தச் சூழ்ச்சி நாடகத்தின் புதிய கதாபாத்திரம் என்று தொடங்கி முன் நாள் இரவில் இளங்குமரனை ஏமாற்றி அழைத்துக் கொண்டுபோய் அந்தக் கபாலிகை சுடு காட்டுக் கோட்டத்துக்குப் போகிற வழியிலே வைத்து அவனைக் கொலை செய்ய முயன்றதையும் பின் தொடர்ந்து சென்றதால் தக்க சமயத்தில் உதவி அவனைக் காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்ததையும் வளநாடுடையாருக்கு விவரித்துச் சொன்னார் நீலநாகர்.

எப்படியோ, இந்த வைகாசி விசாகம் வரை இளங்குமரனைக் காப்பாற்றுங்கள். வைகாசி விசாகத்துக்கு முன்னால் இளங்குமரனை அழைத்துக் கொண்டு நான் மணிபல்லவத்துக்கு யாத்திரை போகத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு அப்பால் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு பிறந்துவிடும்.”

விடிவு எங்கிருந்து பிறக்கும்? இன்னதென்று புரியாமல் எங்கோ, எப்போதோ தொடங்கிய மூலமான துன்பம் புரிகிறவரை இதற்கு விடிவு இல்லை வளநாடுடையாரே!”

புண்ணிய பூமிகளை மிதித்து அந்த மண்ணின் மேல் நடப்பதனாலேயே தீயினில் தூசு, போலச் சில துன்பங்கள் விலகும் ஐயா! மணிபல்லவம் அப்படிப் பட்ட புண்ணிய பூமி என்று இளங்குமரனை தான் மணிபல்லவத்துக்கு அழைத்துச் செல்லும் அந்தரங்க நோக்கத்தை இந்தப் பொதுவான தத்துவத்தில் மறைத்துக் கொண்டு பேசினார் வளநாடுடையார்.

இப்போதுதான் நினைவு வருகிறது வளநாடுடையாரே. நான் இன்றிரவு தனியாகப் புறப்பட்டுப் போய் சுடுகாட்டுக் கோட்டத்தில் அறியவேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். நீங்கள் வந்து பேசிக்கொண்டிருந்ததில் அது மறந்துவிட்டது. வாருங்கள், உங்களைப் படைக்கலச்சாலையில் கொண்டுபோய் விட்டு விட்டுச் சிறிது நேரம் கழித்து நான் சக்கரவாளக் கோட்டத்துக்குப் புறப்பட வேண்டும்.”

 

செய்யுங்கள்! கபாலிகர்கள் முரட்டுக் குணம் கொண்டவர்கள். நயமாகவும் பயமாகவும் வார்த்தைகளைக் கூறி உண்மையை அறிய முயலுங்கள்.”

வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிறவர்கள் சான்றோர்கள் மட்டும்தான். கயவர்களையும் வெறும் முரடர்களையும் வார்த்தைகளால் கட்டுப்படுத்த முடியாது. கரும்பை அறைத்துப் பிழிவதுபோல் அறைந்து பிழிந்தால் தான் கயவர்களிடமிருந்து பயன் கொள்ள முடியும் வளநாடுடையாரே! சுடுகாட்டுக் கோட்டத்துக் கபாலிகையிடம் போய் நயமான வார்த்தைகளைப் பேசி இரகசியத்தை வரவழைக்க முடியாது. கயமை நிறைந்த மனிதர்களிடம் வாயால் பேசிப் பயனில்லை. கைகளால் பேசவேண்டும். அதைத்தான் இன்று செய்யப் போகிறேன். நான் என்று ஆவேசத்தோடு பேசினார் நீலநாக மறவர்.

பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் ஆலமுற்றத்துக் கடற்கரையிலிருந்து படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது இருட்டியிருந்தது. முல்லையைத் தம்மோடு அழைத்துக்கொண்டு இல்லத்துக்குத் திரும்பினார் வளநாடுடையார். மணிமார்பனும் அவன் மனைவியும் படைக்கலச் சாலையின் ஒரு பகுதியில் தங்கி ஓய்வு பெறச் சென்றார்கள். நீண்ட காலத்துக்குப் பின்பு முதல் தடவையாகச் சந்தித்த காரணத்தினால் கதக்கண்ணன் முதலிய நண்பர்கள் மட்டும் நெடுநேரமாகியும் பிரிந்து செல்வதற்கு மனமின்றி இளங்குமரனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். உரையாடலில் இளங்குமரனை நோக்கி அவர்கள் கூறிய வார்த்தைகள் அதிகமாகவும் அவர்களை நோக்கி இளங்குமரன் கூற நேர்ந்த வார்த்தைகள் குறைவாகவும் இருந்தன.

நிலா உச்சி வானத்துக்கு வந்திருந்தது. இளங்குமரனோடு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த குரல் ஒலிகளையும் மிக அருகில் இருந்த காரணத்தால் கடலின் அலை ஒசையையும் தவிரப் படைக்கலச் சாலையும் சுற்றியிருந்த தோட்டமும் அமைதியடைந்தாயிற்று. குறிப்பிட்ட இந்த அமைதியையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது போல் நீலநாகர் தமது இருக்கையிலிருந்து புறப்படுவதற்கு எழுந்தார். தலைப்பாகையைக் கழற்றி வைத்தார். மூலையில் குவித்திருந்த படைக்கலங்களின் குவியலில் இருந்து நீண்ட ஈட்டி ஒன்றை எடுத் துக் கொண்டு இரவில் தாம் அங்கிருந்து வெளியேறிச் செல்லுவது பிறரறியத் தெரியாமலிருப்பதற்காகத் தம்முடைய பாதக் குறடுகளையும் கழற்றிவிட்டு நடந்தார்.

இயல்பாகவே அவருடைய கால்களுக்கு வேகம் அதிகம். எஃகினால் செய்தவை போன்று நீண்டு வைரம் பாய்ந்த இறுகிய அந்தக் கால்களில் பாதக் குறடுகள் என்ற சிறிய சுமையும் இல்லாமற் போகவே இப்போது இன்னும் வேகமாக நடக்க முடிந்தது. முடியை மறைத்திருந்த தலைப்பாகையைக் கழற்றியிருந்ததால் உற்றுப் பார்த்தாலன்றி முதல் பார்வையிலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியாத தோற்றத்தோடு இப்போது விளங்கினார் அவர். நிலா ஒளியின் கீழே இருட்டு மலை ஒன்று தன் வலிமை சிதறாமல் விரைந்து பாய்வதுபோல சக்கரவாளக் கோட்டத்துப் பாதையில் அவர் சென்று கொண்டிருந்தார். அவருடைய வலது கரத்தில் அந்த ஈட்டியை அவர் பற்றியிருந்த அலட்சிய பாவத்திலேயேஇது எனக்கு ஓர் ஆயுதமல்ல; இதைப் பற்றியிருக்கும் வலிமை வாய்ந்த என் கைதான் எனக்கு இதைவிடப் பெரிய ஆயுதம் என்பது போன்ற திடமான எண்ணத்தின் உறுதி தெரிந்தது.

ஒரு கபாலிகை மட்டுமென்ன? இந்தச் சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்திலுள்ள கபாலிகர் குலத்தையே வேரோடு அழிக்க என்னுடைய ஒரு கை போதும் எனக்கு!’ - இப்படிப் பெருமிதமான நினைவுகள் அவருடைய மனத்திலும், கால்கள் கரடு முரடான மயானத்து மண்ணின் மேலும் புகுந்து நடந்து கொண்டி ருந்தன. உயிருடனிருப்பவர்களை மயானத்துக்குக் கொண்டு வரும் கூற்றுவனே தன் தொழில் சுதந்திரமாக நிகழ்கிற பூமியில் தற்பெருமையோடும் மதத்தோடும் புகுந்து நடக்கிறாற்போல் வீராப்போடு நடந்து போய்க் கொண்டிருந்தார் நீலநாகர். தன் எல்லையில் புகுந்து நடக்கிறபோது பொதுவாக மனிதர்களுக்குத் துணிவு மிகும் என்பார்கள். நீல நாகருக்கோ தம் எல்லை அல்லாத இடத்தில் புகும்போது துணிவு பெருகிய மன நிலையே இருக்கும்.

அடர்ந்து பின்னி முட்கொடி படர்ந்த வன்னி மரங்கள் தென்பட்டன. கபாலிகர்கள் வெறிக்குரல்கள் நெருங்கிக் கேட்டன. முடை நாற்றம் நாசியைத் துளைத்தது. ஆள் நடந்து வருகிற அரவத்தால் கலைந்த இரவுப் பறவைகளின் குரல் மேலே மரக் கிளை களிலிருந்து ஒலித்தது. கிழிந்த துணியால் போர்த்தியிருந்த ஊன் தொகுதியைப் போல வன்னி மரங்களின் அடர்த்திக்கிடையே அங்கங்கே நெருப்பு எரிவது துண்டு துண்டாகத் தெரிந்தது.

அந்த இடம் நெருங்கியதும் அன்று இளங்குமரனை ஏமாற்றி அழைத்துப் போய்க் கொல்ல முயன்ற கபாலிகையின் தோற்றத்தையும் முகத்தையும் நினைவுக்குக் கொண்டு வர முயன்றார் அவர். கரிய பாறை களுக்கிடையே வாய்ந்த குகையின் சிறிய வாயிலைப் போன்ற வன்னி மன்றத்துப் புதரின் வழியில் தம்முடைய உடம்பைக் குறுக்கிக் கொண்டு குனிந்து நுழைந்தார் நீலநாகர். தாங்கள் உபாசனை செய்து கொண்டிருக்கிற பயங்கரத் தெய்வமே திடீரென்று தங்களுக்கு எதிரே தோன்றினாற் போலிருந்தது, அங்கே மூலைக்கொருவராகத் திரிந்து கொண்டிருந்த கபாலிகர்களுக்கு வந்து நிற்கும் மனிதரின் ஆகிருதியையும் வலிமையையும் தோற்றத் திலேயே கண்டு உணர்ந்தவர்களாகப் பயந்தபடியே ஒவ்வொருவராக மெல்ல அருகில் வந்தார்கள். சிலர் அருகில் வராமல் விலகியே நின்றார்கள். அவர்களில் ஒருவனிடம் தாம் தேடி வந்தவளைப் பற்றிய அடையாளங்களைச் சொல்லிக் கேட்டார் நீலநாகர். அவரால் கேட்கப்பட்ட கபாலிகன் அவருக்கு உடனே மறுமொழி கூறாமல் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு கபாலிகனுடைய முகத்தைப் பார்த்தான். அவன் வேறொருவனுடைய முகத்தைப் பார்த்தான். நீலநாகர் பொறுமையிழந்தார். சீற்றம் அடைந்தார்.

 

அவள் எங்கேயிருக்கிறாள் என்று சொல். சொல்லப் பயமாயிருந்தால் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டு, இரண்டும் முடியாவிட்டால் உன் கழுத்தைக் காட்டு. அதை அப்படியே பனங்காய் பறிப்பது போலத் திருகிக் கீழே வைக்கிறேன் என்று நீலநாகர் சீறிய குரல் வன்னி மன்றத்தையே அதிரச் செய்தது.

முன்பு இயற்கையிலேயே பயமாயிருந்த அந்த இரண்டு கபாலிகர்களின் முகங்களும் இப்போது இன்னும் பயமாக மாறின. நீலநாகருடைய வலதுகை ஈட்டியைப் பிடித்திருந்த பிடி இறுகுவதைப் பார்த்த போது அவர்கள் பயம் அதிகமாகிப் பின்னுக்கு நகர்ந்தனர். ஓடவும் சித்தமாயினர்.

இதற்குள் பக்கத்தில் செடிகொடிகள் பின்னிப் புதரைப் போலிருந்ததொரு குடிசைக்குள்ளிருந்து பைரவியே தலையை நீட்டி எட்டிப் பார்ப்பதை நீலநாகர் கண்டுவிட்டார். அவளும் அவரைப் பார்த்து விட்டாள். முதற் பார்வையில் அவரை அவளுக்கு அடையாளம் புரியவில்லையாயினும், தன்னைக் கண்டவுடன் அடித்துக் கொல்ல வரும் வேங்கைப் புலி போல் அவர் ஈட்டியை ஓங்கிக்கொண்டு பாய்ந்து வருவதைக் கண்டு ஆள் யாரென்று இனம் புரிந்து கொண்டுவிட்டாள். தூக்கம் கலைந்து விழித்த அவள் கண்கள் இரத்தப் பழங்களாகச் சிவந்திருந்தன. நீலநாகரிடமிருந்து தப்புவதற்காக அந்த இடத்தின் பின்புறத்து வழியாக வன்னிப்புதரை நோக்கி விழுந்தடித்துக் கொண்டு ஓடத் தலைப்பட்டாள் பைரவி. இதே மனிதர் முன் தினத்தில் தன் கழுத்தைப் பற்றி விழி பிதுங்கிட நெரித்த வலி இன்னும் நினைவிலிருந்தது அவளுக்கு. அவள் ஓடிய போது புதரில் பசியெடுத்துக் காத்திருந்த நரி ஒன்று படுவேகமாகப் பாய்ந்து அவள் முழங்காலின் ஆடு சதையைக் கவ்வியது. வலி பொறுக்க முடியாத பைரவி குரூரமாக அலறினாள். நரியிடமிருந்து காலை விடுவித்துக் கொண்டு குருதி சிந்தியவாறே அவள் மேலும் ஓடினாள். நீலநாகரும் விடவில்லை. அவள் ஓடாமல் நின்றிருந்தால் எவ்வளவு கொதிப்படைந்திருப்பாரோ அதைப்போல் நான்கு மடங்கு கொதிப்போடு இப்போது அவளைத் துரத்திக்கொண்டு பாய்ந்தார்.

--------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

22. நள்ளிரவில் ஒரு நாடகம்

 

அந்தரத்தில் இருந்து தயங்கித் தயங்கிச் சிறிது சிறிதாக இருளில் உதிரும் நெருப்புத் துண்டங்களைப் போல் எதிரே தெரிந்து கொண்டிருந்த அந்தச் சிவப்பு இரத்தினங்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் சுரமஞ்சரியும் அவள் தோழியும். தந்தையின் கைப்பிடியிலுள்ள அந்த யாளி முகம் விநாடிக்கு விநாடி பெருகி விரிந்து அகலமும் நீளமுமாகிப் பூதாகாரமாக வளர்ந்து கவிந்துகொண்டு தன்னை அமுக்குவது போல் பயமாகியிருந்தது சுரமஞ்சரிக்கு.

 

தந்தை இரகசியமாக அங்கே வந்து இருளில் ஊன்றுகோலுடனே நின்றுகொண்டு தானும் வசந்த மாலையும் அதுவரை பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் கேட்டவாறே இருக்கிறார் - என்று உணர முற்படும்போது அந்த உணர்ச்சியால் தன் உடல் முழுவதும் கருந்தேள் விழுந்து ஊர்கிறாற் போலச் சிலிர்த்து நடுங்கினாள் அவள்.

தன் வார்த்தையும் தான் அதை ஒலித்த குரலும் நடுங்கிடவசந்தமாலை என்று மெல்ல அழைத்தாள் சுரமஞ்சரி. அந்த அழைப்புக்குப் பதில் குரல் கொடுக்காமலேபேச வேண்டாம் என்று சொல்வது போல் தன் வலக்கரத்தால் தலைவியின் பவழ மெல்லிதழ்களை இலேசாகப் பொத்தினாள் வசந்தமாலை. தோழியும் அப்போது மிகவும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தன் இதழ்களை மூடிய அவள் விரல்கள் நடுங்கிய விதத்திலிருந்து சுரமஞ்சரி புரிந்து கொள்ள முடிந்தது. அண்மைக் காலத்து நிகழ்ச்சிகளால் தன் தந்தையை விடை காண முடியாத விடுகதையாக நினைத்துப் பயப்பட வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு விநாடியும் அவளுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. யாருக்கும் அடிமையாகக் கூடாதென்று செல்வம் சேர்க்கத் தொடங்கியவர்கள் கடைசியில் அந்தச் செல்வத்துக்கே முழு அடிமையாகப் போய்விடுவதுதான் முடிவாகும் என்பதற்கு தன் தந்தையையே நிதரிசனமான உதாரணமாகக் கண்டாள் சுரமஞ்சரி. செல்வத்துக்கு அடுத்தாற் போல அவர் நகைவேழம்பருக்கும் சிறிது அடிமைப்பட்டிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. செல்வத்துக்கு அடிமைப்படுவதைப் போலவே இரகசியங்களுக்கு அடிமைப்படுவது பயங்கரமானதுதான். இரகசியங்களுக்கு அடிமைப்படுகிறவன் அதை உடையவனுக்கும் அடிமைப்பட வேண்டியதிருக்கும். ஒரே சம்யத்தில் இந்த இரண்டு வகையிலும் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்குத் தான் மகளாயிருப்பதை எண்ணியபோது அவளுக்குப் பயத்துடனே சிறிது பரிதவிப்பும் உண்டாயிற்று. செல்வத்தைக் குவிப்பதில் கவலையும் அக்கறையும் காட்டுவதற்கு அடுத்தபடியாக அதே அளவு கவலையும், அக்கறையும், நகைவேழம்பரோடு பழகுவதில் தன்னுடைய தந்தைக்கு இருக்கிறதென்பது அவளுக்குப் புரிந்தது. யாருடைய வாழ்வை வளர்த்து அதில் தானும் இரண்டறக் கலந்துவிட வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டி ருக்கிறாளோ அவருடைய வாழ்வையே அழித்துவிடத் தந்தை முயல்வதும் இலை மறை காய்போல் அவளுக்குப் புரிந்தது, அந்த விநாடி வரையில் தனக்குப் புரிந்திருக்கிற பயங்கரங்களை விட இனிமேல் புரிய வேண்டிய பயங்கரங்கள்தாம் அதிகமாக இருக்கும் போலச் சுரமஞ்சரியின் மனக்குரல் அவளுக்குச் சொல்லியது. இந்தக் கொடுமைகளை யெல்லாம் நினைத்த போது தான் அங்கிருந்து ஓடிப்போய்க் கடலில் விழுந்தாவது உயிரைப் போக்கிக் கொண்டு விட வேண்டும் போலத் தவிப்பு அடைந்தாள் அவள். அந்தத் தவிப்பின் விளைவு தோழி வசந்தமாலையிடம் ஒரு கேள்வியாகவும் பிறந்தது.

 

இப்போது தன் தந்தையே மறைவாக அங்கு வந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அந்தத் தவிப்பு மேலும் முறுகி வளர்ந்தது.

சுரமஞ்சரியின் கண்கள் அந்தச் சிவப்புப் புள்ளிகளையே பார்த்துக் கொண்டிருந்தன. அவை இருளில் அசையாமல் ஓரிடத்திலேயே இருப்பதைக் கண்டு அந்த இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு அப்போது அங்கே நிற்பவர் முன்னுக்கும் நகராமல், பின்னுக்கும் நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டுமென்று அநுமானம் செய்துகொண்டாள் சுரமஞ்சரி.

அவள் மனத்தில் அப்போது பலவிதமான சந்தேகங்கள் உண்டாயின. அந்தச் சந்தேகங்களில் இரண்டொன்றையாவது வசந்தமாலையின் காதருகே மெல்லக் கேட்கலாம் என்றால் தோழி, அந்த நிலையில் தன்னோடு பேசுவதற்கே பயப்படுவது போலிருந்தது. அரை நாழிகை போனதுக்குப் பின் தோழியே வலுவில் வந்து சுரமஞ்சரியின் காதருகே தன்னுடைய சந்தேகம் ஒன்றைக் கூறினாள்: “அம்மா இதோ தெரிகிறதே சிவப்பு இரத்தினங்களோடு கூடிய ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டு உங்கள் தந்தையார் இங்கு மறைந்து நிற்பதாக இதுவரை நீங்களும் நானும் நினைத்துக் கொண்டிருந்தது சாத்தியமில்லை. ஒரு காலைச் சாய்த்துக் கொண்டே அவரால் இவ்வளவு நேரம் அசையாமல் நிற்க முடியாது. கால் மாற்றி ஊன்றியிருந்தாரானால் அந்தச் சிறு ஒலியையும் ஊன்றுகோல் அசைவதையும் இதற்குள் நாம் கேட்டும் கண்டும் இருக்கலாம். ஊன்றுகோல் அசையாமல் தெரிவதனால் நிற்பது வேறு ஆளாக இருக்க வேண்டும்.”

தோழி சொல்வது நியாயம்தான் என்று சுரமஞ்சரிக்கும் தோன்றியது. அவள் தந்தையால் இவ்வளவு நேரமாகக் கால் மாற்றி ஊன்றிக் கொள்ளாமலோ, அசையாமலோ நிற்க முடியாது. அந்தப் பயங்கரமான விநாடிகளில் தன்னைவிட வசந்தமாலை சுய உணர்வோடு சிந்தித்திருக்கிறாள் என்பதை அவள் கூறிய நுணுக்கமான செய்தியிலிருந்து புரிந்துகொண்டாள் சுரமஞ்சரி. அங்கே தன் எதிரே இருளில் நின்று கொண்டிருப்பவர் தன்னுடைய தந்தை இல்லை என்ற அநுமானம் பெரும்பாலும் உறுதியானவுடன் அவர்களுக்குச் சற்றே தைரியம் வந்தது. உமிழ் நீரைக் கூட்டி விழுங்கி நாவை ஈரமாக்கிக் கொண்டுயார் அங்கே நிற்பது?” என்று இரைந்து கேட்டாள். அவள் கேட்ட சொற்கள் அந்த மாடத்தின் சுவர்களிலே எதிரொலித்து விட்டு அவளிடமே திரும்பி வந்தன. சிவப்பு இரத்தினங்கள் மின்னிய திசையிலிருந்து அந்த இரத்தினங்களின் செவ் வொளி மட்டும்தான் பளிரென்று பாய்ச்சியது போலப் பாய்ந்து வந்ததே தவிர, அவள் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை. எதிரொலிதான் இன்னும் சுழன்று சுழன்று மங்கிக் கொண்டிருந்தது. “யார் அது என்று இரண்டாவது கேள்வியாக வசந்தமாலை சினத்தோடு கேட்டாள். அதற்கும் எதிரொலிதான் விளைவாயிற்றே அன்றி மறுமொழி வரவில்லை. எலும்புக் குருத்துக்களில் சுடச்சுட ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போல இருவருடைய கால்களும் உதறலெடுத்து நடங்கின.

 

இந்திரவிழாவின் கலகலப்பில் திட்டமிட்டு இப்படி ஒரு பயங்கர நாடகம் நடத்த வேண்டும் என யார் முன் வந்திருக்க முடியும் என்று மனத்தைக் குழப்பிக் கொண்டார்கள் அவர்கள். நாடகம் என்று நினைத்தவுடனே நகைவேழம்பருடைய ஞாபகம் வந்தது சுரமஞ் சரிக்கு. அவர்தானே இந்த மாளிகைக்கு வந்து தந்தையாருடன் பழகுவதற்கு முன் மேடைகளிலும், வந்து பழகிய பின் வாழ்க்கையிலும் அற்புதமாக நடித்துக் கொண்டு வருகிறவர். ஒருவேளை அவரே தன் தந்தையாருடைய ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வந்து இந்த இருளில் நின்றபடி தங்களைப் பயமுறுத்துகிறாரோ என்றும் சுரமஞ்சரிக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. ஆனாலும் இப்படி நள்ளிரவில் பெண்கள் வாழும் பகுதியில் வந்து நிற்கிற அளவு நகைவேழம்பரும் துணிய மாட்டார் என்ற எண்ணம் பலமாக எழுந்து முன்னைய சந்தேகத்தை அடித்துவிட்டது.

ஒருவேளை வானவல்லி தந்தையாருடைய ஊன்று கோலை எடுத்துக் கொண்டு வந்து விளையாட்டுக்காகத் தங்களைப் பயமுறுத்துகிறாளோ என்று இறுதியாக நினைத்தாள் சுரமஞ்சரி. கையிலுள்ள வளையல்கள் ஒலிக்காமல் இவ்வளவு நேரம் ஊன்றுகோலைப் பற்றிக் கொண்டிருக்க அவளாலும் முடியாதென்று தோன்றவே இயல்புக்கு மிகுதியான தைரியத்தை வற்புறுத்தி ஏற்படுத்திக் கொண்டவளாக அந்த இரத்தினங்களின் ஒளியைக் குறி வைத்து நடந்தாள். பயத்தினாலும், செயற்கையான தைரியத்தினாலும் இந்த ஊன்று கோலை வைத்திருக்கும் கைகள் அதை இறுக்கிப் பற்றிக் கொண்டிருப்பதாகப் பாவித்துக் கொண்டு அதை இழுத்து வேகமாகப் பறித்தாள். ஒருவிதமான பிடிப்பும் இல்லாமல் செலவழித்த பலத்தைவிடக் குறைவான வலிமையில் இலகுவாகவே அந்த ஊன்றுகோல் அவள் கைக்கு வந்துவிடவே கீழே இடறி விழுந்துவிட இருந்தாள் அவள். நல்லவேளையாகப் பின்னால் வந்து நின்று கொண்டிருந்த வசந்தமாலை சுரமஞ்சரியை அப்படி விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டாள். எதிராளி தனக்கு மறுதலையாக இறுக்கிப் பிடித்திருப்பதாக நினைத்து வலிய இழுத்தபோது எந்த எதிராளியும் இன்றிப் பூக்கொய்வதுபோல எளிதாக ஊன்றுகோல் கைக்கு வந்துவிட்டதனால் அதற்காக அவள் செலவழித்த அதிக வலிமை அவளையே பின்னால் தள்ளிவிட இருந்தது.

இந்த ஊன்றுகோலை யாருமே பிடித்துக் கொண்டு இருக்கவில்லையடி!” - என்று சுரமஞ்சரி வியந்து கூறிய அதே சமயத்தில் பெருமாளிகையின் முன்புறம் வாயில் அருகே யாரோ யாரையோ பளிரென்று அறைகிற ஓசை கேட்டது. மாடத்தின் முன்பகுதியிலிருந்து பார்த்தால் கீழே யாரை யார் அறைந்தார் என்று தெரியுமாதலால் சுரமஞ்சரி, தன் கையிலிருந்த ஊன்றுகோலுடனும் தோழியுடனும் மேல் மாடத்திலிருந்தே அதைக் காண்பதற்காக முன்பக்கம் விரைந்தாள். விரைந்து போய்ப் பார்த்தவள் பெரிதும் வியப்பு அடைந்தாள்.

 

நள்ளிரவுக்கு மேலாகியும் அந்த அமைதியான நேரத்தில் பெருமாளிகையின் முன்புறத்தில் தன் தந்தையும் நகைவேழம்பரும் தனியாக நின்றுகொண்டு இருப்பதை அப்போது அவள் பார்த்தாள். இருவரில் யார்மேல் யாருக்குக் கோபம் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் யாரை அறைந்தார்கள் என்று அநுமானம் செய்துகொள்ள முடியவில்லை. ஆனால் இருவரும் நின்ற நிலை, நிற்கும் நேரம் ஆகியவை உறவுக்குரியதாகவும் படவில்லை. நாடகத்தில் நடிப்பவர்கள் ஒப்பனையைக் கலைத்ததும் நடித்தபோது இருந்த உறவுகள் மாறிவிடுகிறாற்போல் ஒரு விநாடிக்குப் பின் யாரால் யார் அப்படிப் பேயறை அறையப்பட்டார்கள் என்பதை இப்போது இருவர் முகங்களிலுமுள்ள உணர்வுகளைக் கொண்டு உய்த்துணர்வதற்கு இயலாமல் தவித்தாள் சுரமஞ்சரி. வெறுப்பும் ஏளனமுமாக, அவள் தன் தோழியிடம் கூறலானாள்:

தோழி! இவ்வளவு பெரிய பூம்புகார் நகரத்தில் எத்தனையோ நாடக அரங்குகள் இருக்கின்றனவே! அவற்றில் எதிலாவது இத்தனை அற்புதமாக நடிக்கிற திறமையை நீ பார்த்திருக்க முடியுமா? ஒரு விநாடி கோபம், மற்றொரு விநாடி நட்பு, ஒரு விநாடி குரோதம், மற்றொரு விநாடி உறவு என்று விநாடி நேரத்துக்குள் உணர்ச்சிகளை மாற்றிக் கொள்ளத் தொழிலில் பழக்கப்பட்ட வேழம்பர் மரபைச் சேர்ந்த நடிகர்களால்கூட முடியாதே! இங்கேயோ என் தந்தையும் நகைவேழம்பரும் ஒரே ஒரு விநாடிக்குள்ளே நூறாயிரம் உணர்ச்சிகளில் மாறி மாறித் தோய்கிறார்கள். மாறி மாறி நடிக்கிறார்கள், வாழ்கிறார்கள். செல்வத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்களுக்கும், இரகசியங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்களுக்கும் தங்கள் வாழ்க்கையே ஒரு நாடகம்தான் போல் இருக்கிறதடீ!” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

23. நல்லவர் பெற்ற நாணம்

 

பின்னால் துரத்திக்கொண்டு வருகிறவருடைய வலிமையை எண்ணித் தன் உயிருக்குப் பயந்து ஓடுகிற ஓட்டத்துக்கு இணை சொல்ல வேண்டுமானால் இந்த உலகத்தில் இப்படி இணை சொல்வதற்கு எதுவும் உப மானமாகக் கிடைப்பது மிகவும் அருமைதான். உயிரைப் பணயமாக வைத்து விளையாடுகிற எந்த விளையாட்டிலும் அதை விட அதிக மதிப்புள்ளதாகப் பணயம் வைப்பதற்கு வேறு உயர்ந்த பொருள் எதுவும் இருக்க முடியாதென்பது தேற்றமான உண்மை. முரட்டுக் காபாலிகையான பைரவியின் உயிர் அப்பொழுது அவளுடைய குதிகால்களில் மட்டும்தான் இருந்தது. கால்கள் ஓடுவதற்குப் பயன்படுகிறபோது அந்த ஓட்டத்திற்குத் தூண்டுதலாக இருக்கிற உயிர்த் துடிப்பு மெய்யானால் அப்போது பைரவியின் உயிர் உடம்பிலிருந்து கீழே நழுவி விழுவதுபோல் சிறிது சிறிதாக இறங்கிக் குதிகால்களுக்குத் தாழ்ந்து, அங்கு மட்டுமே பயன்பட்டு, அவளை வாயு வேகத்தில் ஓட வைத்துக் கொண்டு இருந்தது. இப்படி உவமை சொல்வதுகூடப் பொருந்துமோ பொருந்தாதோ அவள் ஓடிய வேகத்திற்கு அதுவே இணை.

அப்போது அவளைத் துரத்திக் கொண்டிருந்த நீலநாக மறவருக்கோ உயிர்க் குணமே வீரம்தான். அந்த உயிர்க் குணத்தின் முழுத் தன்மையும் ஓட்டம் என்ற ஒரே இயக்கமாகப் பொங்கினாற் போலப் பாய்ந்து பாய்ந்து துரத்திக் கொண்டிருந்தார் அவர். அந்த அரக்கியிடமிருந்து தான் தெரிந்து கொள்வதற்கு விரும்பும் இரகசியங்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் ஓடி ஓடிக் களைத்து அவளே மாண்டு போய் விடுவாளோ என்று சந்தேகப்படத் தொடங்கி விட்டார் நீலநாகமறவர். அவர் சில இரகசியங்களைக் கேட்டு அறிந்து கொள்வதற்காகத்தான் அவளைத் துரத்தினார். அவளோ தன் உயிரைத் தேடியே தன்னை அவர் துரத்துவதாக எண்ணிக் கொண்டு வேகமாக ஓடினாள்.

ஓடி ஓடி இறுதியில், பயந்து ஓடுகிறவளும் பயமுறுத்தி ஓட்டுகிறவரும் சக்கரவாளத்து வனம் முழுவதையும் கடந்து அதற்கப்பால் எதைக் கடந்து போகிறோம் என்ற உணர்வோ நினைப்போ இல்லாத சில இடங்களையும் கடந்து, கடைசியில் கடலோரமாக வந்து சேர்ந்திருந்தார்கள். துரத்தியவர், துரத்தப்பட்டவள் இருவருக்குமே மணற்பரப்புக்கு வந்ததும் ஓட்டத்தில் வேகம் குன்றியது. சுங்கப் பொருள் தண்டும் காவலர்களை ஏமாற்றி விட்டுக் கள்ளத்தனமாகப் பூம்புகாருக்குள் நுழைய முயலும் பிறநாட்டுப் பாய்மரக் கப்பல்களையும், வங்கம் எனப்படும் சிறு கப்பல்களையும் கண்காணித்துச் சிறைப்பிடிப்பதற்காக ஆள் நடமாட்டமற்ற அந்தக் கடற்பகுதி ஓரமாகக் காவலும், உயரமான கலங்கரை விளக்கும் அமைந்திருந்தது. கலங்கரை விளக்கின் உச்சி யிலிருந்த மாடத்தில் வேலேந்திய கையினனாக நின்று கெண்டிருந்த காவலன் கடற்பரப்பைக் கூர்ந்து நோக்கியவாறிருந்தான். தவம் செய்கிறவனுடைய நோக்கத்தைப் போல அவனுடைய முயற்சி ஒரே திசையில் சென்று கொண்டிருந்தது. தீ பெரிதாய் எரிவதற்காகக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நெருப்பு மூட்டப் பெற்றிருக்கும் காய்ந்த கட்டைகள் படர்ந்து கொழுந்துவிட்டுக் கொண்டிருந்தன.

தனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த பைரவி கலங்கரை விளக்கத்துப் படிகளில் தாவி ஏறுவதைப் பார்த்துத் திகைத்து நின்றார் நீலநாக மறவர். அப்படியே அவள் கழுத்தைக் குறிவைத்து ஈட்டியை வீசி அவளால் தீபத்தின் படிகளில் ஏறுவதற்கு முடியாமல் செய்து விடலாமா என்று தோன்றியது அவருக்கு. நினைப்பதற்கும், செயல்படுவதற்கும், நடுவே கணநேரமும் மந்தப்படுவதலை அறியாத அவர் கைகள் ஈட்டியையும் ஓங்கிவிட்டன. ஓங்கிய கைகள் செயல்படுவதற்கு முன்பாகவே, பின் விளைவைத் தீர்மானம் செய்த புத்தியின் நிதானம் அப்போது அவருக்குப் பயன்பட்டது. ஈட்டி பாய்ந்தவுடன் பைரவி அலறுவாள். அந்த அலறலைக் கேட்டுக் கலங்கரை விளக்கத்தின் உச்சி மாடத்தில் நிற்கிற காவலனின் கவனம் நிச்சயமாகத் தன் பக்கம் திரும்பும். அப்படி அவன் திரும்பினால் தான் குற்றவாளியாக மாறி அந்தக் காவலனுக்கு முன்னால் நிற்க நேரும். அந்தக் காவலன் தன்னுடைய படைக்கலச் சாலையில் பயிற்சி பெற்று வெளியேறிய வீரவேளிர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமற்ற திடநம்பிக்கையும் அவருக்கு இருந்தது. தம்மால் கற்பிக்கப்பட்ட மாணவனுக்கு முன் தாமே குற்றவாளியாகி நிற்கும் நிலையைப் போல் இழிவானது வேறு எதுவும் இருக்க முடியாது. பேராண்மையாளராகிய நீலநாக மறவர் அப்போது தாம் இருந்த நிலையை இந்தக் கோணத்தில் திருப்பி எண்ணிப் பார்த்த கணத்திலேயே வெட்கமடைந்தார். வல்லவராகிய அந்த நல்லவருக்கும் சிறிது நாணம் விளைந்தது. இலக்குத் தவறாமல் ஈட்டியை எறிந்து படியேறி ஓடும் பைரவியை அவர் வீழ்த்தியபின் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நிற்கும் காவலன் ஓடிவந்து அவரைப் பிடித்துக் கொண்டாலும், அவர் இன்னாரெனக் கண்டு தெரிந்து கொண்டதும் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவரிடம் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு பயபக்தியோடு கைகட்டி வாய் பொத்தித் தலை தாழ்ந்து நிற்பானானாலும், அதைச் செய்யவும் அவனுக்கு ஓர் சந்தர்ப்பம் அளிப்பானேன் என்று தயங்கி நாணினார் அவர். ஒடி வந்த வேகத்துக்குப் பொருத்தமில்லாமல் அந்த வேகம் நடுவிலேயே தயங்கி முறிந்து நின்ற நீலநாகர் பைரவியைத் துரத்திக் கொண்டு கலங்கரை விளக்கத்துப் படிகளில் ஏறாமல் வந்த வழியே மெல்லத் திரும்பி நடந்தார். ஈட்டியை எறியாமல் அவளைப் பின் தொடர்ந்து படியேறிப் பிடித்துவிடலாம் என்றாலோ அவள் அவருக்கு அகப்படாமல் கலங்கரை விளக்கத்துப் படிகளிலிருந்தே கடலில் குதித்துவிடவும் கூடும். அவள் கடலில் குதித்தாலும் அந்த ஒசையால் காவலனுடைய கவனம் கவரப்பட்டு அவன் கீழே நிற்கிற அவரைப் பார்க்கும்படிதான் நேரும். தன்னுடைய படைக்கலச் சாலையில் தான் ஒழுக்கமும் வீரமும் கற்பித்து உருவாக்கிய இளைஞன் ஒருவனே தன்னை எதிரே நிறுத்திக்கொண்டு, ‘நம் மதிப்பிற்குரிய ஆசிரியர் பிரான் இந்த அகாலத்தில் இப்படி யாரோ ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு இங்கே வந்தது ஏன்?’ என்று தன்னைப்பற்றி அவன் நினைப்பதும் மானக் குறைவு என்று அந்த ஞான வீரருக்கு அப்போது தோன்றியது. அப்படி அந்த மாணவன் தன்னைப்பற்றி நினைக்க நேர்ந்து விட்டாலோ, அல்லது தன் முகத்தை அருகில் வந்து காணுமுன் வாய் திறந்து சொல்லவே நேர்ந்து விட்டாலோ, அதற்குப்பின் தான் உயிர் வாழ்வது மானமில்லை என்று எண்ணினார் அவர். ‘தன்நிலையில் தாழாமை தாழும்படி நேர்ந்துவிட்டால் அப்புறம் உயிர் வாழாமை - என்று தான் நீலநாகர் தன் மனத்தில் மானத்தைப் பற்றி உறுதியானதொரு இலக்கணம் வகுத்துக் கொண்டிருந்தார். மானம் அழிந்து சிதறும் படியான சூழ்நிலையை அப்போது அங்கே விளையாட்டுக்காகவும் கூட உருவாக்கிப் பார்க்க விரும்பவில்லை அவர். இடமோ காவலும், கண்காணிப்பும் ஏற்படுத்திக் கொண்டு சுங்கம் தண்டுகிறவர்கள் பாதுகாக்கும் இடம். நேரமோ நடு இரவு. தன்னால் துரத்தப்படுகிறவளோ பெண். காவலுக்கு நிற்கிறவனோ தன் மாணவன். இவை எல்லாவற்றையும் தீரச் சிந்தித்துப் பார்த்த பின் பைரவியைத் துன்புறுத்தி இரகசியங்களைத் தெரிந்துகொள்ள முயல்வதைவிட அப்போது, தன் மானத்தைக் காத்துக்கொண்டு திரும்புவது புத்திசாலித் தனமான காரியமாகத் தோன்றியது அவருக்கு. மறைவிற் போய் நின்று, பைரவி கலங்கரை விளக்கப் படிகளில் உச்சிவரை ஏறுவதைப் பார்த்துக்கொண்டே அமைதியாகப் படைக்கலச் சாலைக்குத் திரும்பிவிட்டார் அவர். திட்டமும் ஒழுங்கும் நிறைந்த கட்டுப்பாடான வாழ்க்கைக்கு இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின் குறுக்கீடு நிலையான கெடுதல் என்பதை நீலநாக மறவர் நன்றாக உணர்ந்தார். நல்ல பசி நேரத்தில் கிடைக்கிற சத்துள்ள உணவைப்போல் இந்த உணர்வு ஏற்ற சமயத்திலே தம்முடைய மனத்துக்குக் கிடைத்ததற்காகத் தெய்வத்துக்கு அவர் நன்றியும் கூறினார்.

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

24. இணையில்லா வெற்றி

 

நீலநாக மறவர் பைரவியைத் துரத்திக் கொண்டு சென்றபோது, எவ்வளவு பரபரப்போடு சென்றாரோ அவ்வளவிற்குச் சிறிதும் குறைவில்லா நிதானத்தோடு படைக்கலச் சாலைக்குத் திரும்பியிருந்தார். அவர் படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது விடிவதற்குச் சில நாழிகைகளே இருந்தன. அந்த நேரத்தில் அந்தப் படைக்கலச் சாலையின் மகிழமரமும் பவழ மல்லிகையும் தங்களை வளர்த்து அரும்பிப் பூக்கச் செய்த மண்ணுக்கு அர்ச்சனை புரிந்துவிடுவன போலத் தத்தம் மலர்களை உதிர்த்திருந்தன. விடிவை நோக்கி ஓடுகிற நேரத்துக்கே உரிய இங்கிதமான குளிர்ச்சியும் பூக்களின் கன்னி கழியாத புது மணமும், இந்த உலகத்தில் நிரந்தரமாக நேர்ந்து நிலைத்துவிட்ட ஏதோ ஓர் அநியாயத்துக்காக நிரந்தரமாக ஓலமிட்டுக் கொண்டிருப்பது போன்ற கடல் அலைகளின் ஓசையும் சேர்ந்து இயற்கையின் சங்கேத சப்தங்களே மொழியாக மாறி வழங்கும் மெளனத் தீவு ஒன்றிற்கு வந்துவிட்டாற் போன்ற சூழ்நிலையை அடைந்தார் நீலநாகமறவர். இப்படிச் சூழ்நிலை இந்த வைகறை நேரத்தில் எல்லா நாளிலும் நிலவுமாயினும் அவருடைய இன்றைய மனநிலைக்கு இது முகவும் இதமாயிருந்தது. ஆழ்ந்த தூக்கமும் இல்லாமல் ஆழ்ந்த விழிப்பும் இல்லாமல், பூக்கள் உதிர்ந்திருந்த அந்த மரத்தடியிலேயே அமர்ந்து நடந்தவற்றை ஒவ்வொன்றாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் அவர்.

சுனைநீரில் மூழ்குவது போலக் காற்று உடம்பில் உராய்ந்து கொண்டிருந்தது. அன்று பைரவியைச் சந்தித்து இரகசியங்களை அறிய முடிந்திருந்தால் அவளிடமிருந்து அறிய முடிந்த இரகசியங்களுடன் படைக்கலச் சாலைக்குத் திரும்பி அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் ஓவியன் மணிமார்பனை எழுப்பி அவனையும் அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குச் செல்ல வேண்டுமென்று திட்ட மிட்டிருந்தார் நீலநாக மறவர். முதலில் இருந்தே திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. எல்லாம் வேறுவிதமாக மாறியிருந்தன. பெருந்தன்மையும் நல்லவர்களுக்கு இருந்தே தீரவேண்டிய நாணமும் சேர்ந்து தன்னுடைய தீர்மானங்களையெல்லாம் மாற்றி விட்டதை எண்ணிப் பார்த்து நெட்டுயிர்த்தார் அவர். மாலையில் வீரசோழிய வளநாடுடையார் தம்மிடம் கூறியிருந்த செய்தி இப்போது மீண்டும் நினைவு வந்தது அவருக்கு.

எப்படியோ இந்த வைகாசி விசாகம் வரை இளங்குமரனைக் காப்பாற்றுங்கள். வைகாசி விசாகத்துக்கு முன்னால் இளங்குமரனை அழைத்துக்கொண்டு மணிபல்லவத்துக்கு யாத்திரை போகத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு அப்பால் எல்லாத் துன்பங்களுக்கும் வழி பிறந்துவிடும் என்று வளநாடுடையார் கூறியது, பொதுவாக இருந்தபோதிலும் இந்தச் செய்திக்குள் அடங்கியிருக்கும் வேறு செய்தி ஒன்றும் இலைமறை காயாக நீலநாகருடைய சந்தேகத்தில் புலப்பட்டது. வீரசோழிய வளநாடுடையார் தன்னைச் சந்திக்க நேருகிறபோதெல்லாம் இளங்குமரனை மணிபல்லவத்துக்கு அழைத்துக்கொண்டு போவது பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கூர்ந்து உணர்ந்து அந்தச் செய்திக்கு ஏதோ ஒரு முக்கிய விளைவு இருக்க வேண்டுமென அநுமானித்துக் கொண்டிருந்தார் நீலநாகமறவர். இப்போது அந்த அநுமானமே மேலும் வலுப்பெற்றது. மகிழம், பவழமல்லிகை ஆகிய மரங்களின் கீழே இவ்வாறு சிந்தித்துக்கொண்டே மிகுதியான எண்ணங்களிலும் குறைவான உறக்கத்திலும் மூழ்கி இருந்த நீலநாகர் தாம் வழக்கமாகக் காலைக்கடன்களைத் தொடங்கும் நேரம் நெருங்கியதை உணர்ந்து உள்ளே போய் இளங்குமரனையும் எழுப்பி அழைத்துக் கொண்டு புறப்பட்டார். முதல் நாள் இரவு படைக்கலச் சாலைக்குத் தன்னைத் தேடிக்கொண்டு வந்த நண்பர்களிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த காரணத்தால் அப்போது இளங்குமரன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். களைப்பாகவும் இருந்தான். அதனால் அன்று பகலில் அவன் நாளங்காடிக்குச் செல்லவில்லை. அவன் தேடிக்கொண்டு போக வேண்டிய சமயவாதிகளின் கூட்டம் ஒன்று அவனையே தேடிக்கொண்டு, படைக்கலச் சாலைக்கு வந்திருந்தது. உறையூருக்கு அருகில் இருந்த சமதண்டம் என்ற ஊரிலிருந்து இந்திர விழாவுக்காக காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்திருந்த ஆசீவகர்களின் கூட்டம் ஒன்றை அவனோடு வாதிடுவதற்காக விசாகை அங்கே அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். விசாகை தனக்கு இருக்கும் ஞானத்தினால் தானே அந்த ஆசீவர்களை வென்றிருக்க முடியு மாயினும், அவர்களை வெற்றிகொள்ளும் பெருமையை இளங்குமரனுகே அளிக்க வேண்டுமென்று கருதியது போல அங்கே கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்தாள். இளங்குமரனை வாதத்தில் வென்றால், அந்த ஆண்டு பூம்புகாரின் இந்திரவிழாவில் கூடிய அத்தனை சமயவாதிகளையும் வென்றாற்போன்ற பெருமையை அடையலாம் என்ற ஆசையோடு வந்திருந்தனர். சமதண்டத்தைச் சேர்ந்த ஆசீவக அறிஞர்கள் பலரைத் தோற்கச் செய்த ஒருவனை வெல்வதில் இரண்டு விதமான நன்மைகள் உண்டு. வெற்றி வீரனான இளங் குமரனை வெல்வதினால் அவனால் ஏற்கெனவே வெற்றி கொள்ளப்பட்டவர்களையும் சேர்த்து வென்று விடும் பெருமையை எதிர்பார்த்தனர் சமதண்டத்தார்.

 

மேலைச் சோழ மண்டலத்தினரான சமதண்டத்து அறிஞர்களின் வாதத் திறமையைப் பற்றி இளங்குமரன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். எதிராளி பேசும் சொற்களில் ஒரு மாத்திரை மிகுந்து ஒலித்தாலும் குறைந்து ஒலித்தாலும், அந்த ஒலி மிகுதிக்கும் குறைவுக்கும் கூடக் காரணம் கற்பித்து வாதமிடும் நுணுகிய வாதத்திறமையுடைய சமதண்டத்து ஆசீர்வகர்கள் ஐம்பதின்மர் அவனிடம் வந்திருந்தனர். ‘இந்த ஐம்பது பேரும் வலுவில் தேடிக் கொண்டு வாதுக்குப் போவது அருமை. இன்றியமையாத காரணம் இருந்தால்தான் வாதத்துக்குரிய எதிராளியை அவர்கள் தாங்களே நேரில் தேடிக்கொண்டு வருவார்கள். அவர்கள் ஐம்பதின்மரையும் தனித்தனியே வாதிட்டு வெல்ல வேண்டும். அப்படி வெல்வதற்குக் குறைந்த பட்சம் நூறு நாட்களாவது செலவழியும் என்று இளங்குமரன் பலரிடம் பலமுறை கேள்விப்பட்டிருந்தான்.

இந்த ஐம்பது பேரறிஞர்களையும் இவர்களுடைய திறமையைப் பற்றிக் கேள்வியுற்றிருப்பதையும் எண்ணுகிறபோது என் மனத்தில் இப்போது தோன்றி விடுவதற்குப் பார்க்கிற ஆற்றாமையை நீக்கிக்கொள்ளும் வலிமையை உடனே எனக்கு அளியுங்கள் என்று நினைத்தபடியே தன் ஆசிரியரைத் தியானம் செய்து கொண்டான் இளங்குமரன். படைக்கலச் சாலையின் முற்றத்தில் அந்த அறிவுப் போர் தொடங்கியது. விசாகை, நீலநாகமறவர், மணிமார்பன் அவனுடைய மனைவி ஆகியவர்கள் இளங்குமரனோடு அருகில் நிற்கும் துணைகளாக இருந்தனர். ஆசீவகர்களின் தலைவர் தங்கள் சுமய நூலாகிய நவகதிர் என்னும் கிரந்தத்திலிருந்து சான்றுகளைக் கூறி வாதத்தைத் தொடங்கினார். இளங்குமரன் அவர் கூறுவனவற்றையெல்லாம் கவனித்துக் கேட்கலானான்.

இன்னவாறு இன்ன காரணத்தால் தோன்றுமென இல்லாமல் வானத்தில் இந்திர வில் தோன்றுவதுபோல் தோன்றிக் காரணமின்றி விளங்கும் மற்கலிதேவன் எங்கள் இறைவன். நில அணு, நீர் அணு, தீ அணு, காற்று அணு, உயிர் அணு என்னும் ஐந்து அணுக்களும் இவ்வுலகு நிகழ்வதற்கும் காரணமாக நாங்கள் கருதும் அணுக்கள். உள்ளது கெடாது. இல்லாதது தோன்றாது. எல்லாப் பொருள்களின் நிகழ்ச்சியும் ஆழ்தல், மிதத்தல் என்னும் இரு தொழிலில் அடங்கும் என்பதும் எங்கள் சமயத்தின் கருத்து.”

இவ்வாறு தொடங்கி நவகதிர் நூலிலிருந்து வேண்டிய மேற்கோள்களைச் சொல்லி தன்னுடைய வாதத்துக்குப் பூர்வபட்சமாக வலுவான தோற்றுவாய் செய்தார் ஆசீவக முதல்வர்.

ஐயா தாங்கள் கூறும் உவமை தங்களுடைய கருத்துக்கு அரண் தருவதாயில்லை. இந்திர வில்லாகிய வானவில் காரணமும் பிறப்பும் அற்றது என்று தாங்கள் கருதுவது பிழை. சூரிய கிரணங்கள் மேகபடலத்தில் படுவதால்தான் வானவில்லும் அதில் நிறங்களும் பிறக்கின்றன. எனவே தாங்கள் கூறும் காரணம் பிறழ்வுடையதாகிறது. பிறழ்வுடைய காரணம்அநைகாந்திகம் என்னும், தருக்கக் குற்றமாய் அடங்கும்...” என்று இவ்வாறு பல காரணங்களையும் சொல்லி நவகதிரின் முரண்பாடுகளை விளக்கினான் இளங்குமரன். அவனுக்கும் அவருக்கும் நிகழ்ந்த வாதம் மட்டும் முடியவே ஆறு நாட்கள் கழிந்தன. ஏழாவது நாள் சூரியோதயத்தில் அவர் இளங்குமரனுக்குத் தாம் தோற்றதாக ஒப்புக் கொண்டார்.

இளங்குமரன் அடுத்த மூன்று நாட்களில் அந்தக் கூட்டத்தில் மேலும் நான்கு ஆசீவகர்களை வென்றான். கருத்துக்களில் முரண்பாடு இருந்தாலும் சமதண்டத்தாருக்கு உரிய தருக்க ஞான நுணுக்கத்தால் வாதத்துக்குரியவற்றை வளர்த்து வளர்த்து இளங்குமரன் விரைவில் முழுவெற்றியும் பெற்றுவிட முடியாதபடி செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். நூற்றுக்கணக்கான போர் வீரர்களைத் தனியே எதிர்த்து நின்று வெற்றி கொள்ள முடிந்த இரும்பு மனிதரான நீலநாகமறவர் ஐம்பது முதிய அறிஞர்களை வெற்றி கொள்ள ஓர் இளம் அறிஞன் படுகிற துன்பத்தைக் கண்டு வியப்பு அடைந்தார். ஒவ்வோர் அறிஞனையும் நாட்கணக்கில் செலவழித்து வெற்றி கொள்ளும்படி நேர்ந்து வருவது அவருக்குத் திகைப்பை அளித்தது.

ஆசீவக வாதம் தொடங்கிப் பத்தாவது நாளும் வந்துவிட்டது. வாதம் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது.

எங்கள் இறைவனான மற்கலிதேவன் முழுதும் உணர்ந்து பேச்சின்றி மெளனமே உருவாயிருப்பவன் என்று அன்றைய வாதம் தொடங்கப்பட்டது.

பேச்சின்றி மெளனமாயிருக்கும் உங்கள் இறைவனே வாய்திறந்துநான் முழுதும் உணர்ந்தேன் என்று கூறியிருந்தாலொழிய அவன் முழுதும் உணர்ந்தவன் என்பதை நீங்கள் அறிந்திருக்க இயலாது. அவன் வாய் திறந்து அப்படிக் கூறியிருப்பானானால் அவன் மெளனமாயிருப்பான் என்று நீங்கள் கூறுகிற இலட்சணம் பொய்யாய் முடியும். முழுவதும் உணர்வதை அநுமானம் பண்ணிக் கொள்வதற்கு மெளனமாய் ஓசையின்றி இருப்பதே தன்மையானால் பேசாப் பருவத்துக் குழந்தைகளும் ஊமைகளும் மலையும் கல்லும் கட்டையும் முழுவதும் உணர்ந்தவை என்பதாக முடிவு செய்ய நேரிடும் என்று அந்த வாதத்தைச் சாதுரியமாக மறுத்தான் இளங்குமரன்.

இதற்கு அடுத்த பத்து நாட்களில்உள்ளது கெடாது இல்லாதது தோன்றாது என்னும் ஆசீவக தத்துவத்தை நிறுவ முயன்ற வாதத்தை மறுத்து வென்றான் இளங்குமரன். “விழுதாய் உறைந்துள்ள நெய் நெருப்புப் பட்ட போது கெட்டு இளகுதலும், நெய்யில் இல்லாத நெருப்பு வேள்விக் குழியில் நெய் பட்டபோது நெய்யால் வளர்ந்து தோன்றுதலும் காண்கிறோம். எனவே உள்ளது கெடாது, இல்லாதது தோன்றாது என்று கூறுவது எப்படிப் பொருந்தும்?” என்று தன் கருத்தை இளங்குமரன் நிறுவினான். உள்ளது கெடாது, இல்லாதது தோன்றாது என்னும் தத்துவத்தை மறுப்பதற்கு மட்டும் புத்தி பூர்வமாகவும், யுக்தி பூர்வமாகவும் இளங்குமரன் எத்தனையோ வாதங்களைச் செய்ய வேண்டியிருந்தது. கையாய்த் தோன்றிய வழி விரல்களாய்த் தோன்றாமையும், விரல்களாகத் தனித்தனியே பிரிந்து தோன்றிய வழிக் கையாய்த் தோன்றாமையும் - எனக் கைக்கே இரு நிலைமையும் உள்ளதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி இளங்குமரன் யுக்தி வாதம் புரிந்தான். மொழி எழுத்துக்களாகத் தனித்தனியே பிரிந்த போது சொல் ஆகாமையையும் சொல்லாய்க் கூடிய வழி எழுத்தாகாமையையும் விளக்கினான். ஆசீவகர்களுடைய பிடிவாதம் சிறிது சிறிதாகத் தளர்ந்தது.

சமதண்டத்திலிருந்து இந்திர விழாவுக்கு வந்திருந்த ஆசீவகர்கள் இந்திர விழா முடிந்த பின்னும் சில நாட்கள் வரை இளங்குமரனை விடவில்லை. சித்திரைத் திங்கள் முடிந்து வைகாசித் திங்களின் முதற்கிழமை வரை இளங்குமரன் அவர்களோடு செலவழிக்கும்படி ஆகிவிட்டது. அந்த ஐம்பது முதியவர்களையும் வென்று முடிக்கிறவரை படைக்கலச் சாலைக்கு அப்பால் இருந்த உலகத்தை இளங்குமரன் மறந்து போய்விட்டான் என்றே கூற வேண்டும். அவர்களை வாதத்தில் வெல்ல வேண்டுமென்கிற முயற்சி ஒன்றுதான் அப்போது அவனுடைய உலகமாயிருந்தது. நூற்றுக்கணக்கான நாட்கள் செலவழித்து வாதிட்டாலும் வெற்றி கொள்ள முடியாத சமதண்டத்து அறிஞர்களை மிகச் சில நாட்களிலேயே அவன் வென்ற பெருமையை உடனிருந்த விசாகை வெகுவாகப் பாராட்டினாள்.

இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும் என்று நான் அன்று வாழ்த்தியதின் பயனை இன்றுதான் கண்ணாரக் கண்டேன் ஐயா!” என்று ஆவல் பொங்கும் குரலில் விசாகையினிடமிருந்து இளங்குமரனை நோக்கிச் சொற்கள் பிறந்தன. இணையிலாத் தருக்க ஞானிகளாகிய சமதண்டத்து ஞான வீரர்களை வென்று விசாகையின் மனம் நிறைந்த வாழ்த்துக் களையும் ஏற்றுக் கொண்ட நல்ல நாளாகிய அன்று மாலையில் அவளோடு காவிரிப் பூம்பட்டினத்து இந்திர விகாரத்துக்குச் சென்று தன் வாழ்வு இப்படி மாறி அமைவதற்குக் காரணமாயிருந்த பழைய பெளத்த சமயத் துறவியைச் சந்தித்தான் இளங்குமரன்.

அவனை அடையாளம் புரிந்து கொண்டு புன்முறுவல் பூத்தார் அவர். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்பு தோற்றத்தால் மேலும் முதுமையடைந்திருந்த அந்தத் துறவியின் புன்முறுவல் மட்டும் மூப்படையாமல் பழைய அழகோடு - அறிவின் அழகோடு அன்றிருந்தாற் போலவே விளங்கிற்று. அன்பிலே குழைந்த குரலோடு அவர் அவனை நோக்கிக் கூறினார்:

நீதான் அப்பா மெய்யான ஞானி! ஒரு நல்ல உண்மை அதன் முழு ஆற்றலுடன் மனத்தில் உறைத்து அதைச் செயற்படுத்தத் தவிப்பதுதான் புத்தி என்பார்கள். ‘இப்படி உடம்பை மட்டும் மற்போற் வீரனைப் போல் வலிதாக்கிக் கொண்டு வந்து நின்று பயனில்லை. மனத்தை வலியதாக்கிக் கொண்டு வா என்று நான் என்றோ உன்னிடம் கூறியதைச் செயற்படுத்தி விட்டாய். என்னுடைய சொற்களைச் செயலாக்கிய உன் மானத்திற்கும் அதன் விளைவாகிய உன் ஞானத்திற்கும் இப்போது நான் தலை வணங்குகிறேன் அப்பா!”

 

இளங்குமரன் அவரைப் பதிலுக்கு வணங்கிவிட்டுச் சிறிது நேரத்து உரையாடலுக்குப் பின் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு படைக்கலச் சாலைக்குத் திரும்பினான். விசாகையும் அவனோடு திரும்பினாள். படைக்கலச்சாலையில் வளநாடுடையார் ஆவலோடும் அவசரத்தோடும் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் வந்திருக்கிற காரியம் முக்கியமானதென்று அவரிருந்த நிலைகண்டு அவனாலேயே புரிந்துகொள்ள முடிந்தது.

------------

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம்

25. வாழ்க்கைப் பயணம்

 

அவனைச் சந்திப்பதற்காகப் படைக்கலச் சாலையில் வந்து காத்திருந்த வீரசோழிய வளநாடுடையார் ஏதோ நிறையப் பேசுவதற்குச் சேர்த்துக் கொண்டு வந்திருப்பவர் போலத் தோன்றினார். அவர் வந்திருக்கிற வேகத்தையும், அந்த வேகத்தோடு இணைந்து தெரிந்த உறுதியையும் கண்டு, எதைச் சொல்ல வந்திருக்கிறாரோ அதைத் தோற்கவிட மாட்டார் என்று உணர்ந்து புன்னகை பூத்தான் இளங்குமரன். வந்திருப்பவர் இளங்குமரனோடு தனியாகப் பேசு வதற்காக வந்திருக்கிறார் என்பதை அங்கு நிலவிய குறிப்புக்களால் புரிந்துகொண்ட விசாகை அவர்களைத் தனிமையில் விடுத்துச் சென்றாள்.

இப்போது நீங்கள் நான் வெற்றி கொள்ள முடியாத ஏதோ ஒரு வாதத்தைக் கொண்டு இங்கு வந்திருப்பதாக என் உள்ளுணர்வு கூறுகிறது ஐயா!” என்று சொல்லிக் கொண்டே அவர் அருகில் போய் நின்றான் இளங்குமரன். அவர் சற்றே சிரித்தார். மிகுதியாகச் சிரித்துவிட்டால் தான் சொல்லுவதற்கு வந்திருக்கும் உறுதியான செய்தியை அந்தச் சிரிப்பே பலவீனப்படுத்தி விடுமோ என்று பயந்துகொண்டே அவர் சிரிப்பது போலிருந்தது.

தம்பீ! நான் இப்போது தொடங்க வந்திருக்கும் வாதத்துக்கு இரண்டு விதமான முடிவுகள் இல்லை. ஒரே முடிவுதான். இந்த வாதம் என் பக்கம் வெற்றியாக முடியுமா? உன்பக்கம் வெற்றியாக முடியுமா? என்ற ஐயத்துக்கு இடமே இல்லை. என் பக்கம்தான் வெற்றியாக முடிய வேண்டும் என்று நான் புறப்படும்போதே தீர்மானம் செய்துகொண்டு விட்டேன். அதை நீ மறுப்பதற்கில்லை.”

நல்லது, ஆனால் மாறுபாடும் வேறுபாடும் இல்லாமல் என்றும் ஒரேவிதமாக - ஒரே பக்கமாக முடியத்தக்க ஒருமை முடிவே உள்ள செய்திகள் வாதத்துக்குப் பொருளாகா என்பதை மறுமொழியாகக் கூறி உங்களை எடுத்த எடுப்பிலேயே நான் மறுத்து விடலாம் ஐயா! ‘நித்தியை காந்தபட்சம் எனப்படும் ஒருமை முடிவே உள்ள செய்திகளை இரு கூறாக்கி வாதிட முடியாது. ‘தண்ணீர் குளிர்ந்திருக்கும் என்றும்தீ சுடும் என்றும் வருகிற வாக்கியங்களை அவற்றிற்கு மாறாகத் தண்ணீர் சுடும், தீ குளிர்ந்திருக்கும் என வேறு முடிவும் காட்டிப் பிரதிவாதம் செய்தற்கில்லையே? நீங்கள் என்னிடம் கூற வந்திருக்கும் செய்தியும் அப்படி மறுப்பதற்கில்லாத ஒருமை முடிவே உள்ளதாயின் உடனே ஒப்புக்கொள்ளுவதைத் தவிர நான் வேறு மாற்றம் சொல்ல வழி ஏது?” என்றான் இளங்குமரன்.

ஆகா! நீ படித்திருக்கிற தருக்கத்தை இன்றைக்கு மட்டும் பாராட்டுகிறேன் தம்பீ! நான் கூறுவதை மறுக்காமல் நீ உடனே ஒப்புக் கொள்ளுவதற்கும் உன் படிப்பு இடந்தருகிறது என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படிப்பைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் வாதம் செய்வதற்கும் மாற்றம் சொல்லி மறுப்பதற்கும் இது பொருள் ஆகாது. இப்போது இங்கே நான் பேச வந்திருக்கும் செய்திக்குப் பொருள் வேறு எதுவும் அல்ல, உன்னுடைய வாழ்க்கைதான். அதற்கு ஒரே ஒரு முடிவுதான் உண்டு...”

தவறு ஐயா! ஒரே முடிவுதான் உண்டு என்பது என்னுடைய வாழ்க்கைக்கு மட்டும்தான் உண்மை என்பதில்லை. பொதுவாக எல்லாருடைய வாழ்க்கைக்கும் ஒரே முடிவுதான் உண்டு.”

நீ குதர்க்கம் பேசுகிறாய் தம்பீ?”

தர்க்கமல்லாததுதான் குதர்க்கம். இன்னொரு விதமாகக் கூறினால் தர்க்கம் ஆகாததும் குதர்க்கம். தர்க்கத்துக்குப் பொருளாகாத ஒரே முடிவுடைய செய்தியைத் தொடங்கியவன் நான் இல்லையே ஐயா?” என்று சிரித்தபடி நிதானமாக அவருக்குப் பதில் சொன்னான் இளங்குமரன். இதைக்கேட்டு, அதுவரை விளையாட்டாகப் பேசிக்கொண்டே வந்த வளநாடுடையார் சீற்றமடைந்தார். பேச்சில் சிறிது சினமும் கலந்தது.

நான் தர்க்கம் பேச வரவில்லை. உன் வாழ்க்கையைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன்.”

அப்படியானால் என் வாழ்க்கையே தர்க்கத்துக்குரிய பொருளாக இருந்ததாக முதலில் நீங்கள் எண்ணியிருக்க வேண்டும்.”

அப்படி நான் எண்ணியிருந்தாலும் அது பிழையில்லை தம்பி! ஆனால் மறுபடியும் ஒன்று சொல்கிறேன். இங்கே இந்தத் தர்க்கத்துக்கும் ஒரு முடிவுண்டு. நீ திருநாங்கூரில் போய்க் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் இதேபோல் ஒரு வைசாக பெளர்ணமிக்கு முன் உன்னைத் தேடிக்கொண்டு வந்ததும், அதன்பின்பு சென்ற திங்களில் நீண்டகாலத்துக்குப் பின் நீ இந்த நகரத்தில் காலடி வைத்து நுழைந்த முதல் நாளில் இதே படைக்கலச் சாலையின் வாயிலில் என் மகளும் நானும் உன்னைச் சந்தித்ததும் உனது வாழ்க்கைத் தர்க்கத்துக்கு முடிவு காணும் நோக்கத்தோடுதான்.”

 

 

உங்கள் நோக்கத்தைப் போற்றுகிறேன் ஐயா! ஆனால் அதற்காக இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”

செய்ய முடியாதது எதையும் நாங்கள் சொல்லவில்லை தம்பீ! நீலநாகரும் நானும் சொல்வதை நீ செய்ய வேண்டும். அது அவசியமானது, பயனுள்ளது...”

வாழ்க்கையில் பயனுள்ளவை, பயனில்லாதவை என்று எவற்றை எப்படிப் பிரிப்பது என்றே சில சமயங்களில் விளங்குவதில்லை ஐயா! பயனில்லாதவற்றைச் செய்த பின்பும்கூட அவை பயனில்லாதவை என்று புரிந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக நேர்ந்த பயன் அவற்றுக்கு இருப்பதாகப் படுகிறது. நீங்களும் நீலநாகரும் மூத்தவர்கள். என்னை நீங்கள் இப்போது என்ன செய்யச் சொல்லுகிறீர்களோ அதைச் செய்தவன் முடிவு எதுவாயிருந்தாலும் அதிலிருந்தும் ஏதாவதொரு அநுபவத்தின் ஞானம் எனக்குக் கிடைக்கத்தான் போகிறது. அதையும்தான் நான் இழப்பானேன்.”

இப்போது உனக்குக் கிடைக்கப் போகிற அநுபவம் இணையற்றது. உன்னைப் பற்றியது. அதை அறிவதற்கு இங்கிருந்து தெற்கே முப்பது யோசனை தூரம் கடற் பயணம் செய்ய வேண்டும். நெருங்கி வந்து கொண்டிருக்கிற வைகாசி பெளர்ணமி தினத்தன்று நாம் மணிபல்லவத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்.”

என்னைப் பற்றி அறிய நான் எனக்குள்ளேயே அல்லவா பயணம் செய்ய வேண்டும்? என்னைப் புரிந்து கொள்ள நானே முயல வேண்டுமானால் என் மனத்தின் நினைவுகளில் நான் பயணம் செய்வது மட்டும் போதாதோ?” என்று கேட்டான் இளங்குமரன்.

போதாது! நாளைக்கு நீ என்னோடு மணிபல்லவத்துக்குப் புறப்படுகிறாய். இதை நீலநாக மறவரிடமும் சொல்லிவிட்டேன். அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். தியானம் செய்வதற்கும், ஞானம் பெறுவதற்கும் நீ உன் மனத்துக்குள் நினைவுகளிலேயே பயணம் செய்யலாம். வாழ்க்கையை அறிந்துகொள்ள அப்படி நினைவுகளில் மட்டும் பயணம் செய்து பயனில்லை தம்பி?”

பயனின்மையிலும், இன்னதிலே இன்ன காரணத்தாலே பயனில்லை என்று பயனில்லான்மயைப் புரிந்து கொள்ளுவதாகிய ஒரு பயன் உண்டு என்று அப்போதே சொன்னேனே?” என்று சொல்லி மறுபடியும் புன்முறுவல் புரிந்தான் இளங்குமரன். அப்போது நீலநாகர் உட்புறமிருந்து அந்தப் பக்கமாக வந்து சேர்ந்தார். அவரும் இந்தத் திட்டத்துக்கு உடன்பாடென்பது இளங்குமரனுக்கு அந்தச் சமயத்தில் புரிந்தது.

இந்தப் பெரியவர் சொல்வதைக் கேட்டு இதன்படி வைசாக பெளர்ணமிக்குப் போய் வா தம்பி! இந்தப் பயணத்தில் உனக்கு நிறையப் பயனிருக்கிறது என்று வளநாடுடையாரைக் காண்பித்து இளங்குமரனிடம் சொன்னார் நீலநாகர். தன் சம்மதத்துக்கு அறிகுறியாக இருவரையும் வணங்கிவிட்டு அப்பால் சென்றான் இளங்குமரன். நீலநாகர் மகிழ்ச்சியோடு சென்றார். பயண ஏற்பாடுகளைக் கவனிக்க வளநாடுடையாரும் சென்றார்.

பூம்புகாரில் மறுநாள் பொழுது புலர்ந்தபோது பூம்புகார் துறைமுகத்திலிருந்து அவர்களுடைய பயணமும் தொடங்கியது. மணிபல்லவத் தீவைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலால் ஓவியன் மணிமார்பனும் அவர் மனைவியும்கூட அவர்களோடு அதே கப்பலில் புறப்பட இருந்தார்கள். பெளத்த மடத்தைச் சேர்ந்த இந்திர விகாரத்துத் துறவிகளுக்கென்றே புத்த பூர்ணிமைக்கு மணிபல்லவ யாத்திரை செய்வதற்குத் தனியாகச் சென்றுகொண்டிருந்த வேறொரு கப்பலில் விசாகையும் அன்றைக்கே புறப்பட்டிருந்தாள்.

நீலநாகர், முல்லை, கதக்கண்ணன் ஆகியோர் கப்பல் துறைக்கு வழியனுப்ப வந்திருந்தார்கள். வளநாடுடையாரும் இளங்குமரனும் புறப்படுகிற நேரம் நெருங்க நெருங்க இறுகிய மனம் படைத்தவரான நீலநாகரும் அந்தப் பிரிவில் தம் உள்ளம் குழைந்து நெகிழ்வதை உணர்ந்தார். இதே இளங்குமரனைப் பல ஆண்டுகள் திருநாங்கூரில் விட்டிருந்தபோது இந்த வேதனை அவருக்கு இல்லை. இப்போது இருந்தாற் போலிருந்து அவருடைய மனத்தில் ஏதோ ஓர் உணர்வு தவித்து உருகியது.

இளங்குமரன் கப்பலில் ஏறுமுன் அருகிற் சென்று அவரை வணங்கினான். “போய் வா! ஆலமுற்றத்தில் உடம்பின் வலிமையைக் கற்றுத் தெரிந்துகொண்டாய். மணிபல்லவத்தில் போய் உன்னைத் தெரிந்துகொண்டு வா!” என்று அன்பு நெகிழ்ந்த குரலில் அவனிடம் கூறி வாழ்த்தினார் நீலநாகர்.

இளங்குமரன் கப்பலில் ஏறுமுன் கடைசி விநாடி வரை அவனுடைய கண்களிலிருந்து எதையோ தன்னுடைய கண்களால் முல்லை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் எதிர்பார்த்தது அவளுக்குக் கிடைக்கவில்லை. கதக்கண்ணன் முதலியவர்களிடமெல்லாம் அருகில் சென்று விடை பெற்றுக் கொண்ட இளங்குமரன் முல்லைக்கு அருகில் வராமலே போய்க் கப்ப லில் ஏறிக்கொண்டு விட்டான். ஆனால் அதே நேரத்தில் அவள் சிறிதும் எதிர்பாராத விடைபெறுதல் ஒன்று அவளுக்குக் கிடைத்தது. ஓவியன் மணிமார்பனுடைய மனைவி முல்லையின் அருகில் வந்து அவளிடம் விடை பெற்றாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முல்லைக்கு. வெளிப்பட்ட அந்த ஆத்திரத்தைக் காண்பித்து கொள்ளாமல் மணிமார்பனின் மனைவிக்கு வேண்டா வெறுப்பாய் விடை கொடுத்தாள் முல்லை.

காலையிளங் கதிரவனின் பட்டொளி பட்டுப் பாய் மரம் மின்னிடக் கப்பல் நகர்ந்தது.

இளங்காற்றும் இளவெயிலும் சேர்ந்து நடுக்கடலில் பிரயாணம் செய்வதற்கு உற்சாகமான சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன. தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு பெரிய திருப்பமும் பூம்புகாரில் ஏதாவது ஒர் இந்திர விழா முடிந்த பின்போ அல்லது தொடங்கிய போதோ ஏற்பட்டிருப்பதை இப்போது நினைவு கூர்ந்தான் இளங்குமரன். அவனுக்கு நினைவு தெரிந்த பருவத்துக்குப் பின்பு வந்த முதல் இந்திர விழாவின் போதுதான் அருட்செல்வ முனிவர் அவனை நீலநாக மறவருடைய படைக்கலச் சாலையில் சேர்த்தார். அதற்குப் பின்பு சில ஆண்டுகள் கழித்து அவன் படைக்கலப் பயிற்சியெல்லாம் முடித்துவிட்டு முரட்டு இளைஞனாகத் திரிந்து கொண்டிருந்த போதுதான் சித்திரா பெளர்ணமி இரவில் சம்பாதி வனத்தில் அவனை யாரோ கொலை செய்ய முயன்றார்கள். திருநாங்கூருக்குச் சென்றபின் அங்கு ஞானப்பசி தீர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சில இந்திர விழாக்களைத் தன் அறிவு வேட்கையில் அவனே மறந்திருந்தான். அதன் பின்பு மீண்டும் அவன் பூம்புகாருக்குள் நுழைந்தபோது வந்த இந்த ஆண்டின் இந்திர விழாவோ அந்த மாபெரும் நகரத்துக்கு அவனை அறிவுச் செல்வனாக அறிமுகம் செய்து வைத்தது. அவனுடைய ஞானக்கொடி வெற்றிக் கொடியாக உயரவும் வாய்ப்பளித்தது. இந்திர விழா முடிந்ததும் இப்போது மற்றொரு திருப்பமாக மணிபல்லவ யாத்திரையும் வாய்த்தது.

இனி வரப்போகும் அடுத்த இந்திர விழாவைக் கற்பனை செய்துகொண்டே கதிரொளியில் மின்னிச் சரியும் அலைகளைப் பார்த்தான் இளங்குமரன். ஓவியனும் வளநாடுடையாரும் கப்பலில் அவன் அருகில் வந்து நின்றுகொண்டிருந்தார்கள். இளங்குமரன் தன்னுடைய நினைவுகள் கலைந்து அவர்கள் பக்கம் திரும்பினான்.

புறப்படும்போது நீ முல்லையிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை போல் இருக்கிறதே தம்பி!” என்று அந்த விநாடிவரை அவனிடம் கேட்பதற்குத் தவித்துக் கொண்டே கேட்கவும் கூசி அடக்கிக் கொண்டிருந்த ஒரு கேள்வியைத் துணிந்து கேட்டார் வளநாடுடையார்.

ஐயா! நீங்கள் கூறுவது வியப்புக்குரிய செய்தியாய் இருக்கிறது. நான் பேசாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்றும் இல்லை. என்னுடைய மெளனத்தை முல்லையோ நீங்களோ உங்கள்மேல் எனக்கிருக்கும் வெறுப்பை நான் காட்டுவதாக எடுத்துக்கொண்டு வேதனைப்படக் கூடாது. நான் முல்லையிடம் பேசியிருந்தால் அந்தப் பேச்சுக்கு எப்படித் தனியான அர்த்தம் இருக்க முடியாதோ அப்படியே பேசாமலிருந்ததற்கும் தனியான அர்த்தம் எதுவுமில்லை.”

நீ இப்படிச் சொல்லிப் பதில் பேச முடியாமல் என் வாயை அடக்கிவிடலாம். ஆனால் என்னுடைய பெண் நீ சொல்கிறாற்போல் நினைத்துக்கொண்டு போகவில்லை. நாம் புறப்படுகிற போது முல்லையின் முகம் எப்படி இருந்ததென்று. நான் பார்த்தேன். நீ பார்க்கவில்லை. ஒரு வேளை நீயும் பார்த்தி ருந்தால் அவள் மனநிலை உனக்குத் தெரிந்திருக்கும்.”

அதைக் கேட்டுத் தன்னையறியாமல் தான் யாரையோ புண்படுத்தியிருப்பதுபோல உணர்ந்து வருந்தினான் இளங்குமரன். இந்தப் புதிய வருத்தத்தோடு அவன் மறுபடி கரையைப் பார்க்க முயன்றபோது கரை வெகு தொலைவில் மங்கியிருந்தது. அதோடு சேர்ந்து யாருடைய முகமோ அப்படியே மங்கித் தோன்றுவது போலவும் இருந்தது. நெருங்கிப் பழகிய பிறருடைய துக்கங்களைக் கரையிலேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் இறங்கி முன்னேறுவதுதான் வாழ்க்கைப் பயணமோ? என்று எண்ணியபோது அந்த எண்ணத்தின் வடிவிலே இளங்குமரனின் மனச்சான்றே அவனைக் குத்திக் காட்டியது. பூம்புகாரின் கரைக்கும் தனக்கும் நடுவிலுள்ள தொலைவிலே தான் செய்த பயணத்தின் எல்லையெல்லாம் தன்னால் தனக்காகக் கரையில் விடப்பட்ட துக்கங்களின் பரந்த அளவாகத் தோன்றி யது அவனுக்கு.

கடவுளே! நான் எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் மெளனமாக இருந்து யாருடைய மனத்தையோ துன்புறுத்தியிருக்கிறேன்! இப்படி என்னை அறியாமல் யாரையும் துன்புறுத்தும் சந்தர்ப்பங்கள் கூட நான் பயணம் செய்யும் வாழ்க்கை வழியில் இனிமேல் நேராமலிருக்கட்டும்...” என்று இரு கண்களையும் மூடிச் சில விநாடிகள் இறைவனை எண்ணினான் இளங்குமரன். பயணம் தொடர்ந்தது. இப்போது கரை முற்றிலும் மங்கித் தொலைவில் நீண்ட பச்சைக் கோடாகச் சிறுத்துப்பின் தங்கிவிட்டது.

இளங்குமரன் என்னும் அழகிய அறிவு வாழ்க்கை தன்னுடைய வாழ்வு நாடகத்தின் மூன்றாவது பருவத்திலிருந்து அடுத்த மாறுதலுக்குப் புறப்பட்டது. கடலில் அலைகள் தாளமிட்டன. கரையில் முல்லை தன்னோடு உடனிருப்பவர்களுக்குத் தெரியாமல் தன் கண்ணிரை மறைத்து விடுவதற்கு அரிய முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவனுடைய வாழ்க்கைப் பயணத்திற்குத் தன்னுடைய கண்ணிரால் விடை கொடுத்தாள் அவள்.

 

(மூன்றாம் பருவம் முற்றும்)

 

 

மணிபல்லவம் - இரண்டாம் பாகம் மணிபல்லவம் - நான்காம் பாகம்

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)