1. மகோதைக் கரையிலே ...

 

பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பெளர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பது போல் வனப்பு நிறைந்ததாயிருந்தது. கடலை ஆண்மையாகவும், நதியைப் பெண்மையாகவும் கற்பனை செய்யும் எண்ணத்தைக் கூட அந்தச் சங்கமத்துறையே படைத்துக் கொடுத்தது.

அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு அப்பால் பொன்வானியாற்றின் கரையோரமாகவே சென்றால் சேரநாட்டின் வீரத் தலைநகரமாகிய கொடுங்கோளுரை அடைந்து விடலாம். கரையோரமாகத் தென்மேற்கே பத்து நாழிகைப் பயணத்தில் வஞ்சிமாநகரம் இருந்தது. கொடுங்கோளுரை ஒட்டிக் கடலோரமாகவே இருந்த முசிறியில் இரண்டு மூன்று நாட்களாகப் பரபரப்பூட்டும் பயங்கரச் செய்தியொன்று பரவிப் பொது மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மேற்குக் கடலின் கொடிய கொள்ளைக்காரனாகிய கடம்பர் குறுநில மன்னன் ஆந்தைக் கண்ணன் முசிறியைக் கொள்ளையிடப் போகிறான் என்ற செய்திதான் காட்டுத் தீ போலப் பரவிக் கொண்டிருந்தது. பெரு மன்னராகிய கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவ வேந்தர் ஊரிலிருந்தால் கவலை இல்லை. அவரும் பெரும் படைகளோடு இமயத்திற்கும் குயிலாலுவத்திற்கும் சென்றிருந்தார். கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்தில் கூட அதிகமான படைவீரர்கள் இல்லை. முசிறியிலிருந்த போர்க்கலங்களையும், கடற்படையையும் கொண்டு ஆந்தைக் கண்ணனை எதிர்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. மகோதைக் கரையின் இருபது காத துரமும் இதைப் பற்றியே பேச்சாக இருந்தது. கொடுங்கோளுர்க் கோட்டையின் நாற்பக்கத்து வாயில்களையும் கூட அடைத்துவிட்டார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைவாக்கப்பட்டன. குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளைய சேரர் இளங்கோ அடிகள் அரச காரியங்களில் ஆலோசனை கூறும் வழக்கமின்மையால் அவரையும் அணுகிக் கேட்க முடியாமலிருந்தது.

கொடுங்கோளுர்க் கோட்டைப் பாதுகாப்புப் படைத் தலைவன் குமரன் நம்பிக்கு நிலைமையை எப்படி எதிர் கொள்வதென்ற சிந்தனை எழுந்தது. மகோதைக் கரையின் இருபது காததுரத்தில் பேரியாறு பொன்வானி, அயிரை போன்ற பல நதிமுகத்துவாரங்கள் அங்கங்கே இருந்ததனால் ஒவ்வொரு முகத்துவாரத்திற்கும் பாதுகாப்பு அவசியமென்று தோன்றியது. முகத்துவாரங்களின் வழியாகக் கொள்ளைக்காரர்களின் படகுகளோ, கப்பல்களோ உள்ளே புக முடியுமானால் குட்ட நாட்டு நகரங்கள் எல்லாவற்றையுமே சூறையாடிவிட முடியும். பொன்னும் மணியும், முத்தும் பவளமும் நிறைந்த மகோதைக்கரை நகரங்களின் கதி என்ன ஆகுமோ என்ற பீதி எங்கும் பரவத் தொடங்கியிருந்தது.

சேனைத்தலைவனும் பெரும்படைநாயகனும் ஆகிய வில்லவன் கோதை மாமன்னரோடு வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருந்தான். வஞ்சிமாநகரத்தின் அரண்மனையான கனக மாளிகைக் கோட்டத்தில் அமைச்சர் அழும்பில்வேள் மட்டுமே இருந்தார். செய்தி கனக மாளிகையை எட்டுவதற்கும் அதிகநேரம் ஆகவில்லை. ஆந்தைக் கண்ணன் மகோதைக் கரைநகரங்களைக் கொள்ளையிட இருக்கிறானென்ற செய்தி - மெய்யாயிருந்தாலும் பொய்யாகவே பரப்பப்பட்டிருந்தாலும் அமைச்சர் அழும்பில்வேள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியவராய் இருந்தார். கொடுங்கோளுர்க் குமரனை உடனே தலைநகருக்கு அழைத்து வருமாறு தம்முடைய அந்தரங்க ஒற்றர்களாகிய வலியனையும் பூழியனையும் அனுப்பி வைத்தார் அழும்பில்வேள். கொடுங்கோளூர் படைக்கோட்டத் தலைவனாகிய குமரன் இளம்பருவத்தினன் - போர் முறைகளிலும் எதிரிகளை முறியடிக்கும் தந்திரங்களிலும் வில்லவன் கோதையைப்போல அவ்வளவு வல்லவன் இல்லை என்றாலும் பேரழகன். குமரனுடைய கம்பீரமே தனி மீசை அரும்பத் தொடங்கும் பருவத்து இளைஞர்களின் மேல் அழும்பில்வேளுக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. முதுமையையும் அரசதந்திர நெறிகளையுமே பெரிதாக மதிக்கிறவர் அவர். என்றாலும் இப்போது கொடுங்கோளுர்க் குமரன் என்ற மீசை அரும்பும் பருவத்து இளைஞனைக் கொண்டுதான் தம் காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு. எதைக் கொண்டு எந்தக் காரியத்தை எப்போது சாதிக்கலாமோ அதைக்கொண்டு அந்தக் காரியத்தை அப்போது சாதிக்க வேண்டும் என்பது அழும்பில்வேளின் முடிவு. சிறிய கருவிகளைக் கொண்டும் பெரிய காரியங்களைச் சாதிக்கலாம். பெரிய கருவிகளைக் கொண்டுதான் பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டுமென்பதில்லை. எப்படிச் சாதித்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம் - என்று கவனிக்கிறவர் அவர் எதனால் சாதிக்கிறோம் என்ற காரணமோ, காரியம் நிறைவேறியபின் பயனற்றதானாலும் ஆகிவிடலாம் என்றும் பல சமயங்களில் அவர் கூறுவதுண்டு. அரச தந்திரச் சிந்தனைகளில் சேரநாடு முழுவதும் தேடினாலும் அழும்பில்வேளுக்கு இணையானவர்கள் கிடையாது என்று முடிவாகி யிருந்தது. அத்தகைய அரசியல் வல்லவர் பேரரசரும் பெரும்படைத் தலைவரும் ஊரிலில்லாத இச்சமயத்தில் கொடுங்கோளுர்க் குமரனை அழைத்துவரப் பணித்திருந்தார் என்றால் அதில் ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டுமென்றே தோன்றியது. மகோதைக் கரையில் கொடுங்கோளுரிலிருந்து ஆடகமாடம் வரையில் கடற் கொள்ளைக் காரர்களையும் அவர்கள் தலைவனான ஆந்தைக் கண்ணனையும் பற்றிய பயம் நிறைந்திருக்கிற சமயத்தில் அதற்குத்தக்க தீர்திறனாகக் கொடுங்கோளுர்க் குமரனை அழும்பில்வேள் தேர்ந்தெடுப்பார் என்பது பலர் எதிர்பாராத ஒன்று. வேளாவிக்கோ மாளிகையிலும், கனகமாளிகைச் சுற்றுப் புறங்களிலும் வஞ்சிமாநகர அரச கரும வட்டங்களிலும் இச் செய்தி வியப்பையே அளித்தது.

மகோதைக் கரை என்று அழைக்கப்பட்டுவந்த மேற்குக் கடற்கரை நகரங்களும், சிற்றுார்களும் பேரூர்களும் எக்காலத்திலும் - கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் குறும்பர்கள் தொல்லையை அறிந்திருப்பினும் பேரரசர் தலைநகரில் இல்லாத காலமென்ற காரணத்தில் எங்கும் பரபரப்பு அதிகமாயிருந்தது. நதிகளின் முகத்துவாரங்களிலும் கரையோரத்துக் கடற்பகுதிகளிலும் அதிகமான படகுகளும் மரக்கலங்களும், நாவாய்களும் போக்குவரவு இருக்கும். இப்போது சில நாட்களாக அந்தக் கலகலப்பான கடற்பகுதிகளும் முகத்துவாரங்களும் எதையோ எதிர்ப்பார்த்துச் சூழ்ந்துவிட்ட பயங்கரத்துடனும், தனிமையுடனும் காட்சியளித்தன. வெறிச்சோடிப் போயிருந்த கடற்கரைப் பகுதிகளும், முகத்துவாரப் பகுதிகளும் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தன.

அமைச்சர் அழும்பில்வேளின் ஆணைபெற்றுக் கொடுங்கோளுர்க் குமரனை அழைத்து வருவதற்காகச் சென்ற வலியனும் பூழியனும் கடற்கரைப் பகுதிகளிலும் முகத்துவாரங்களிலும் ஏற்பட்டிருந்த இந்த மாறுதல்களை எல்லாம் கவனித்தார்கள். வஞ்சிமாநகரையும் கொடுங்கோளுரையும் இணைத்த சாலை மிகவும் அழகானது. இருமருங்கிலும் அடர்ந்து செறிந்த பசுமையான மரங்கள் அணிவகுத்தாற்போல் அழகுற அமைந்திருந்தன. வலியனுக்கும் பூழியனுக்கும் அத்தகைய சாலையில் குதிரையில் செல்வதே சுகமாக இருந்தது. ஆயினும் எங்கும் நிலவிய சூழ்நிலை மட்டும் மனநிறைவு தருவதாக இல்லை. யானைப்பாகர் சிலர் மட்டும் தங்களுடைய முகபடாமணிந்த யானைகளோடு சாலையில் குறுக்கிட்டார்கள். நீண்ட கொம்புகளோடு முகபடாம் அணிந்த யானைகள் தங்களுடைய மணிகள் அளவாக விட்டு விட்டு ஒலிக்கும்படி சாலையில் செல்வதே கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. வலியனும் பூழியனும் புரவிகளில் பயணம் செய்தார்கள். பயணத்தின்போது இருவரும் பல செய்திகளைப் பேசிக்கொண்டே பயணம் செய்தார்கள்.

கொடுமை மிகுந்த கொள்ளைக்கூட்டத் தலைவனாகிய ஆந்தைக்கண்ணனையும் அவன் ஆட்களையும் வெல்வதற்குக் கொடுங்கோளுர்க் குமரனின் சாமர்த்தியமே போதுமென்று நம்புகிறாயா நீ?”- என்று பூழியனைக் கேட்டான் வலியன்.

கொடுங்கோளுர்க் குமரன் - இதுவரை - பெண்களின் புன்னகையைத் தவிர வேறெதையும் வெற்றிக்கொண்டு பழக்கப்படவில்லை என்று மறுமொழி கூறினான் பூழியன். 

ஆனாலும் எல்லாம் தெரிந்தவராகிய அமைச்சர் பெருமானே நம் குமரனை எதிர்பார்க்கிறார் என்றால் அதில் ஏதோ சிறப்பிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.”

அப்படியும் இருக்கலாம். ஆனால் பெரும் படைத் தலைவரும், பேரரசரும் வடதிசைப் படையெடுப்பு மேற்கொண்டு சென்றிருக்கிற இச்சமயத்தில் கொடுங்கோளுர்க் குமரனையும் விட்டால் வேறு யார்தான் இங்கு இருக்கிறார்கள்?”

அதற்குச் சொல்லவில்லை ! பொதுவாக நம் அமைச்சர் பெருமானுக்கு விடலைப் பருவத்து இளைஞர்கள் மேல் அதிகமாக நம்பிக்கைகள் கிடையாது.”

எல்லாச் சமயத்திலும் எல்லோரையுமே நம்பாமல் இருந்துவிட முடியாது அல்லவா? அப்புறம் ஆந்தைக்கண்ணன் பாடு கொண்டாட்டமாகி விடுமே?”

பேசிக் கொண்டே கொடுங்கோளுர்ச் சாலையில் விரைந்தார்கள் அமைச்சரின் அந்தரங்கத் துரதர்கள். அவர்கள் கொடுங்கோளுரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஊர் அமைதியடைந்திருந்தது. இயல்பாகவே அமைதியடைகிற நேரமென்று சொல்லிவிடுவதற்கும் இல்லை. மகோதைக்கரை நெடுகிலும் பரவியிருந்த ஆந்தைக்கண்ணன் பயம் கொடுங்கோளுரில் மட்டும் குறைந்துவிடுமா என்ன? கொடுங்கோளுர்க் கோட்டை வாயில்கள் அவர்கள் சென்ற வேளையில் அடைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பக்கமாக இருந்த பெருங்கதவுகளிலே மட்டும் திட்டிவாசல் சிறிதளவு திறந்திருந்தது. உள்ளே போய்த் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமல் வாயிலிலேயே உண்மை தெரிந்தது. கொடுங்கோளுர்க் குமரன் படைக் கோட்டத்திலுள்ளே இல்லையென்று வலியனுக்கும் பூழியனுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது. என்ன செய்வதென்று இருவரும் திகைத்தனர். நிலைமையோ அவசரமாக இருந்தது.

-----------

 2. கொடுங்கோளுர்க் குமரன்

 

குமரன்படைக் கோட்டத்தில் இல்லையென்றறிந்த வலியனும், பூழியனும், அருகில் கோட்டை மதிற்புறத்திலிருந்த பூந்தோட்டம் ஒன்றில் நுழைந்தனர். பேசிக் கொண்டே அந்தப் பூந்தோட்டத்தில் சுற்றிச்சுற்றி வந்த அவர்கள் மிக அழகாகக் கட்டப்பட்டிருந்த ஒரு செய்குன்றின் அருகே வந்ததும் அங்கே வியப்புக்குரிய காட்சி ஒன்றைக் கண்டார்கள். அவர்கள் எந்தக் கொடுங்கோளுர்க் குமரனைத் தேடி வந்தார்களோ அந்தக் குமரனே அங்கு பேரழகியான இளம் பெண் ஒருத்தியோடு அமர்ந்து கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான். வலியனும் பூழியனும் அருகிலிருந்த புதரொன்றில் மறைந்து நின்று கவனிக்கலானார்கள். 

நாடு முழுவதும் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பயம் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத் தலைவர் எத்தகைய காரிய்த்தில் ஈடுபட்டிருக்கிறார் பார்த்தாயா?”

விவரம் தெரியாமல் பேசுகிறாயே பூழியா! உலகில் ஏற்படும் காதல் நிகழ்ச்சிகளே பெரும்பாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் தோன்றுவதாகச் சொல்கிறார்கள்...”

என்ன இருந்தாலும் நம் குமரன் நம்பிக்கு வாய்த்த காதலியைப் போல் இத்தனை பேரழகி உலகில் வேறெங்குமே இருக்க முடியாது.”

அப்படியானால் கொடுங்கோளுர்ப் படைக்கோட்டப் பாதுகாப்பைவிட இந்தக் காரியத்தை நம் குமரன் நம்பி செம்மையாச் செய்யமுடியுமென்று சொல்!”

கோட்டைவிடுகிறவர்கள் அதாவது ஒரு பெண்ணிடம் தங்கள் சொந்த மனத்தையே கோட்டை விடுகிறவர்கள் எங்காவது கோட்டையைப் பாதுகாக்க முடியுமா?”

பொறு ! அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்ளுகிறார்கள், கேட்போம்.”

காதலர்கள் இருவரும் பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்பது பாவம்.”

பாவமோ, புண்ணியமோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது.இந்தப் பேச்சை ஒட்டுக் கேட்டால்தான் நாம் அமைச்சர் பெருமானிடம் திரும்பிச் சென்று ஏதாவது விவரங்கள் கூற முடியும்...”

இதை எல்லாம் அமைச்சர் பெருமானிடம் கூறினால் அவருக்குக் கொடுங்கோளுர்க் குமரன் மேலிருக்கிற சிறிதளவு நம்பிக்கையும்கூடப் போய்விடும் பாவம் !”

விளைவுகளைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அமைச்சர் பெருமானின் அந்தரங்க ஒற்றர்கள் என்ற முறையிலே எது நம் கடமையோ அதை நாம் செய்தாக வேண்டும்.”

அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து கொடுங்கோளூரிலேயே பெரிய இரத்தின வணிகர் ஒருவருடைய மகள் அவளென்று தெரிகிறது.”

உற்றுக்கேட்டால் இன்னும் பல உண்மைகள் தெரியலாம். பொறுத்திருந்து கேட்போம். குமரன் நம்பியும் அவன் காதலியும் இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின் நாமும் வேறு வழியாக இங்கிருந்து வெளியேறி - அப்போதுதான் புதிதாக வருகிறவர்கள்போல் கோட்டையில் போய்க் குமரன் நம்பியைச் சந்திப்போம் என்று அவர்கள் இருவரும் தீர்மானம் செய்து கொண்டார்கள். இப்படியெல்லாம் இவர்கள் நின்று கவனிப்பதை அறியாத குமரன் நம்பி தன் காதலியிடம் உருகி உருகிப் பேசிக் கொண்டிருந்தான். 

பெண்ணே இன்று எத்தகைய சூழ்நிலையில் இங்கு நான் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன் தெரியுமா? மகோதைக் கரை முழுவதும் கடற்கொள்ளைக்காரர்களைப் பற்றிய அச்சம் பரவியிருக்கிறது. பேரரசரோ, பெரும்படைத் தலைவரோ, தலைநகரில் இல்லை. கொள்ளைக்காரர்கள் பயத்தைத் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு அமைச்சர் அழும்பில்வேளிடமிருந்து எந்த வினாடியில் எனக்குத் தகவல் வருமென்று சொல்ல முடியாது.”

எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் உங்களை ஒரு நாள் ஒரு வேளையாவது சந்திக்காவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது.”

வீரர்களைக் காதலிப்பவர்கள் இவ்வளவு கோழைகளாக இருக்கக் கூடாது பெண்ணே!”

கோழைத்தனமும் மனம் நெகிழ்ந்து பெருகும் உண்மை அன்பும் எந்த இடத்தில் எந்த அளவுகோலால் வேறுபடுகின்றன என்பதை இன்னும் நீங்கள் உணரவில்லை என்று தெரிகிறது...”

தெரியாமலென்ன? நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் அமைச்சருடைய கட்டளையையோ என் பதவிக்கான கடமைகளையோ நான் புறக்கணிக்க முடியாதவனாக இருக்கிறேன். எந்த ஆபத்தான சூழ்நிலையிலும் என் கைகள் விரைந்து பாதுகாக்க வேண்டிய அழகுச் செல்வம் நீதான் என்பதை நான் உணர்கிறேன். ஆயினும் நடு நடுவே என்னுடைய பதவிக் கடமைகள் என்னால் பாதுகாக்கப்பட வேண்டிய மகோதைக்கரை முழுமையையும் எனக்கு நினைவு படுத்துகின்றன.”

அதனால் என்ன? உங்கள் பிரியத்திற்குரியவள் என்ற முறையில் தனிப்பட்ட பாதுகாப்பை அடையவில்லையானாலும் உங்களுடைய பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட மகோதைக் கரையிலிருப்பவள் என்ற முறையிலாவது அது எனக்குக் கிடைக்குமல்லவா?” என்று கூறி அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு எத்தகைய ஆண்மையையும் பிடிவாதம் உள்ளவனையும் மயக்கிவிட முடிந்ததாக இருந்தது.

உனக்கு அமுதவல்லி என்று பெயர் சூட்டியவர்களை மறுமுறையும் பாராட்ட வேண்டும் பெண்ணே! அமுதத்தின் அரிய தன்மை உன் புன்னகையிலும் நிறைந்திருக்கிறது. அமுதம் தேவர்களைச் சாவின்றி நித்திய இளமையோடு வாழ வைக்கிறது என்கிறார்கள். உன் புன்னகையோ - என்னைப் போன்ற மனிதனையே நித்திய இளமையோடு வாழ வைத்துவிடும் போலிருக்கிறதே?...”

திடீரென்று என்னை அளவுக்கு அதிகமாகப் புகழத் தொடங்கிவிட்டீர்களே? ” 

ஒரு பெண்ணை ஓர் ஆண்மகன் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாமென்று இலக்கியத்திலேயே இடமளித்து நலம் பாராட்டலென்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.”

பார்த்தீர்களா? அதில் கூட ஆண்களுக்குத்தான் அதிக உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. பெண்களைத்தான் கவனிப்பார் இல்லை !”

ஏன் இல்லை? அதற்குத்தான் ஆண்கள் இருக்கிறார்களே? நாங்கள் புகழுவதற்காகவும் நலம் பாராட்டுவதற்காகவும் தானே நீங்கள் எல்லாம் அழகாகப் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று கொடுங்கோளுர்க் குமரன் நம்பி கூறியபோது அமுதவல்லியின் முகத்தில் நாணம் விளையாடியது. சிறிது நேர உல்லாச உரையாடலுக்குப்பின் அவர்கள் பிரியவேண்டிய வேளை வந்தது.

நாளைக்கு இதே வேளையில் இங்குவர மறந்து விடாதே! ஊரெல்லாம் ஆந்தைக்கண்ணன் பயமாயிருக்கிறதே என்று பேசாமல் இருந்து என்னை ஏமாற்றிவிடாதே. உன் தந்தையார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார். எங்கே இரத்தினங்களையெல்லாம் ஆந்தைக்கண்ணன் வாரிக்கொண்டு போய்விடுவானோ என்று அவருக்குக் குடல் நடுங்கும். உன்தந்தை தன்னிடமுள்ள எல்லா இரத்தினத்தைப்பற்றியும் கவலைப்படட்டும். ஆனால் ஒரே ஒர் இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படுவதை விட்டு விடலாம்.”

எந்த இரத்தினத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள்?”

புரியவில்லையா? இதோ என் எதிரே நின்று பேசிக் கொண்டிருக்குமிந்த அழகு இரத்தினத்தைப் பற்றித்தான் சொல்லுகிறேன் - என்று அவள் பூங்கரத்தைப் பற்றினான் குமரன். பின்பு மெல்லிய குரலில் அவள் செவியருகே நெருங்கிக் கூறலானான்: “என்னைப் பொறுத்தவரை அவர் பெற்றிருக்கும் இரத்தினங்களில் உயர்ந்ததும் விலை மதிப்பற்றததும் இதுதான்.”

அதிகம் புகழ வேண்டாம். நான் நாளைக்கு அவசியம் வருகிறேன் - என்று நாணமும் மென்மையும் இழைந்த நளினக் குரலில் கூறியபடி அவனிடமிருந்து தன் கரங்களை விடுவித்துக்கொண்டாள் அமுதவல்லி. அவள் செல்லும் வழியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவனாகப் படைக் கோட்டத்துப் பாதையில் நடந்தான் குமரன். அவனுடைய நெடி துயர்ந்த தோற்றத்திற்கும் இளமை மிடுக்கு நிறைந்த அந்த வீர கம்பீர நடைக்கும் பொருத்தமாக இருந்தது. சிங்க ஏறு பார்ப்பது போல் அந்த எடுப்பான பார்வையே அவனுக்குப் பெருமிதமளித்தது. அவன் படைக் கோட்டத்திற்குள் நுழையும் போதே வஞ்சிமா நகரிலிருந்து அமைச்சரின் தூதர்கள் வந்திருக்கும் செய்தியைக் காவலர்கள் அறிவித்து விட்டார்கள். அந்தத் தூதர்கள் எங்கே சென்றிருக்கிறார்கள் என்று உடனே அறியத் துடித்தான். 

சிறது நேரத்தில் மறுபடியும் தங்களை வந்து காண்பதாகக் கூறிச் சென்றார்கள் - என்றான் கோட்டை வாயிற்காவலன். தூதுவர்கள் வந்த நேரத்தில் தான் படைக்கோட்டத்தில் இல்லாமற் போய்விட்டோமே என்ற கழிவிரக்கமும், அவர்கள் வரவை மீண்டும் எதிர்பார்க்கும் ஆவலுமாகக் காத்திருந்தான். வலியனும் பூழியனும் சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தார்கள். அவர்களை முகமன் கூறி வரவேற்றான் குமரன். “அமைச்சர் பெருமான் தங்களை கையோடு தலைநகருக்கு அழைத்து வரச்சொல்லியிருக்கிறார் என்று தூதுவர் இருவரும் ஏககாலத்தில் கூறியபொழுது குமரனுக்கு ஒன்றுமே ஒடவில்லை. அந்த அகாலத்தில் அவர்களோடு தலைநகருக்குப் புறப்பட்டால் அமுதவல்லிக்குத் தகவல் தெரியாது போய்விடுமே என்று கவலைப்பட்டான் அவன். ‘மறுநாள் தான் கொடுங்கோளுருக்கு எப்போது திரும்பமுடியுமென்று தெரியாததனால் அநாவசியமாக அவள் பூந்தோட்டத்திற்குத் தேடி வந்து அலைவாளே? தான் தலைநகருக்குப் பயணமாவதை எப்படி அவளுக்கு அறிவிப்பது?’ - என்று வருந்தினான்.

நீங்கள் இருவரும் விரைந்து சென்று என் வரவை அமைச்சர் பெருமானுக்கு உரைப்பதற்குள் நான் பின் தொடர்ந்து வந்து விடுகிறேன் என்றான் குமரன். அதைக் கேட்டு வலியனும் பூழியனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பொருள் பொதிந்த புன்னகை புரிந்தனர். அப்படியே செய்வதாகவும் கூறிவிட்டுப் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் கொடுங்கோளூர் நகரெல்லையைக்கூடக் கடந்திருக்கமாட்டார்கள். அதற்குள் பயங்கரமான செய்தியொன்று கடற்கரைப் பக்கமிருந்து படைக்கோட்டத்துக்கு வந்துவிட்டது.

--------------

 3. ஆந்தைக் கண்ணன்

 

மேற்கே கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவில் தீப் பந்தங்களோடு கூடிய கொள்ளைக்காரர்களின் படகுகள் தெரிவதாகக் கடற்கரைப் பாதுகாப்புப் படையினர் வந்து தெரிவித்தபோது கொடுங்கோளுரில் பரபரப்பு அதிகமாகி விட்டது. அந்த நிலையில் குமரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அமைச்சர் பெருமானுடைய அழைப்பை ஏற்று உடனே வஞ்சிமாநகரம் செல்வதா அல்லது கொடுங்கோளூரிலேயே தங்கிக் கடற்கரையிலும் முகத்துவாரத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகமாக்குவதா? எதைச் செய்வது என்று சிந்தித்து மனம் குழம்பினான் அவன்.

அமைச்சருடைய கட்டளையை அலட்சியம் செய்தது போலவோ, புறக்கணித்தது போலவோ, விட்டுவிடுவதும் ஆபத்தில் வந்து முடியும் என்பது அவனுக்குத் தெரியும். அமைச்சர் பெருமானைச் சந்தித்துவிட்டு இரவோடிரவாகத் திரும்பிவிடலாமென்று அவன் எண்ணினான். படைக் கோட்டத்திலிருந்த வீரர்களையெல்லாம் ஒன்று சேர்த்து உடனே செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வஞ்சிமாநகர் புறப்பட்டான் அவன். புறப்படுவதற்கு முன் எப்படியாவது அமுதவல்லியைச் சந்திக்க வேண்டும் என்று அவன் முயன்ற முயற்சி வீணாகிவிட்டது. அந்த அகாலத்தில் இரத்தின வணிகருடைய மாளிகையைத் தேடிச் சென்று அவளைக் காண்பது முடியாத காரியம். தான் வஞ்சிமாநகர் புறப்படுகிற செய்தியையும் அவளறியச் செய்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.

முகத்துவாரத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் கொள்ளை மரக்கலங்கள் நெருங்கிவிட்டதாகத் தகவல் பரவிக் கொண் டிருந்தது. எனவே தலைநகருக்குப் புறப்படுவதற்கு முன் கொடுங்கோளுர்க் கடற்கரைக்குச் சென்று நிலைமையை நேரில் கண்டறிய வேண்டுமென்று தோன்றியது குமரனுக்கு. அவன் தலைநகருக்குப் புறப்பட்ட பயணத்தின் போதே போகிற வழியில் கடற்கரைப் பக்கமாகத் திரும்பினான். வாத்தியங்களின் ஒலிகளும், கீதங்களும் கேட்கும் கலகலப்பான கொடுங்கோளூர் வீதிகள் அன்று இருண்டு கிடந்தன. எங்கும் வெறிச்சோடிப் போயிருந்தது. கடற்கரை ஓரத்துச் சோலைகளும், மணல் வெளிகளும்கூட ஆளரவமற்று இருந்தன. கொடுங்கோளுர்ச் சேரமான் படைக்கோட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஆங்காங்கே புதர்களில் மறைந்து காவல் புரிந்த வண்ணம் இருந்தனர்.

படைக்கோட்டத் தலைவனான குமரனைப் பார்த்ததும் அவர்களில் சிலர் ஓடி வந்து வணக்கம் செலுத்தினர். கடலில் தொலை தூரத்தில் செம்புள்ளிகளாகத் தீப்பந்தங்கள் எரியும் மரக்கலங்கள் இருளில் மிதந்து வரும் ஒரு நகரம் போல் தெரிந்தன. பயந்த மனப்பான்மையோடு பார்ப்பவர்களுக்குக் கொள்ளிவாய்ப் பூதங்களே வாழும் பயங்கரமான தீவு ஒன்று மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருவது போல் தோன்றியது. அப்போது அந்தக் கொள்ளை மரக்கலங்கள் இருந்த இடத்தில் இருந்து கரையை நெருங்க எவ்வளவு காலமும் என்னென்ன முயற்சிகளும் தேவை என்பனவற்றையும் அனுமானம் செய்து தான் கரையிலே செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒப்பு நோக்கிச் சிந்தித்த பின்புதான் தலைநகருக்குப் போய்விட்டு வர அவகாசம் இருப்பதைத் தெளிந்தான் குமரன். கொடுங்கோளுரிலிருந்து வஞ்சிமாநகரத்துக்குப் பயணம் செய்யும் வேளையில் வாயு வேகமாகிப் பறக்கும் புரவி மீது அமர்ந்திருந்தாலும் மனம் அமைதி இழந்திருந்தது. சேர நாட்டுப் பேரமைச்சர் அழும்பில்வேள் என்ன கட்டளையிடுவாரோ - எவ்வெவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்வாரோ என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டே சென்றபடியினால் பயணத்தில் நினைவு அழுந்தியிருக்கவில்லை. முன்னால் சென்ற தூதர்களான வலியனும் பூழியனும் அமைச்சர் பெருமானிடம் என்ன கூறியிருப்பார்களோ என்ற தயக்கமும் அச்சமும் கூடக் குமரனிடம் இருந்தது. பேரரசரும் பெரும்படைத் தலைவரும் கோநகரிலிருக்கும் சமயமாயிருந்தால் இப்படி அமைச்சர் பெருமான் தன் வரைக்கும் கீழிறங்கிக் கட்டளையிடத் துணிந்திருக்கமாட்டார் என்பதைக் குமரன் உணர்ந்துதான் இருந்தான். 

வஞ்சிமாநகரம் நெருங்க நெருங்க அவன் கவலை அதிகரித்தது. கோட்டை கொத்தளங்களும் மாடமாளிகைகளும், கூட கோபுரங்களுமாக இரவின் விளக்கொளி விநோதங்களோடு வஞ்சிமாநகரம் தென்படலாயிற்று. வேளாவிக்கோ மாளிகையில் வந்து அமைச்சர் அழும்பில்வேளைச் சந்திக்குமாறு அவருடைய ஒற்றர்களும் தூதுவர்களுமான வலியனும் பூழியனும் கூறிவிட்டுச் சென்றிருந்ததை நினைவு கூர்ந்தபடியே நகருக்குள் நுழைந்தான் குமரன். தலைநகரத்தின் வீதிகள் திருவிழாக்கோலம் பூண்டவைபோல் தோன்றின. பேரரசர் தலைநகரத்தை விட்டுப் பல காத துரம் சென்றிருக்கும்போதே இப்படியென்றால் அவர் கோநகரில் இருந்தால் நகரம் இன்னும் எத்துணை மங்கலமாக இருக்கும் என்பதை எண்ணிக் கற்பனை செய்து பார்த்தான் குமரன். ஒளிமயமான இரத்தின வணிகர் வீதி, முத்துவணிகர் வீதி, பொன் வணிகர் வீதி முதலியவற்றைக் கடந்து பூக்களும் சந்தனமும், பிற வாசனைப் பொருட்களும் விற்கும் வீதியில் அமுதவல்லியை நினைவு கூர்ந்து வேளாளர் தெருக்களையும், அந்தணர் தெருக்களையும் கண்டபின் அரச வீதிகளில் புகுந்தான் குமரன். அரசவீதியின் நீளமும் அகலமும் இரு மருங்கிலும் நிரம்பியுள்ள - நிமிர்ந்து பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும் கட்டிடங்களும் குமரனை மருட்டின.

எங்கும் அகிற்புகை வாசனை, மாடங்களில் எல்லாம் விதவிதமான விளக்கொளிகள், அங்கங்கே மணியோசைகள், இனிய மங்கல வாத்தியங்களின் ஒலிகள், வேளாவிக்கோ மாளிகையும் அரண்மனையாகிய கனக மாளிகையும் அருகருகே இருந்தன. இரவு நேரமாக இருந்துங்கூட அரச கம்பீரம் நிறைந்த அந்த மாளிகைகளின் முன்றிலுக்கு வந்தவுடன் குமரனுக்கு மலைப்புத் தட்டியது. இரவில் யாரும் அடையாளம் கண்டு தன்னிடம் பேசவர வாய்ப்பில்லாத அந்த இடத்தில்கூட கட்டிடங்களின் பெருமிதத் தோற்றத்திற்கு முன் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தான் அவன்.

வேளாவிக்கோ மாளிகைக்குச் செல்லுமுன் பல அரங்க மேடைகளையும், அத்தாணி மண்டபங்களையும், வேத்தியல் நடனசாலைகளையும், பூங்காக்களையும், வாவிகளையும் கடந்து செல்லவேண்டியிருந்தது. கனக மாளிகையாகிய அரண்மனைப் பகுதிக்கும், வேளாவிக்கோ மாளிகைக்கும் இடையே அடர்ந்த மரத்தோட்டம் இருந்தது. அந்த மரக் கூட்டங்களுக்கு அப்பால் முகில்கள் மறைத்த வெண்மதிபோல் அழகிய வேளாவிக்கோ மாளிகை தெரிந்தது. வேளாவிக்கோ மாளிகையருகில் சிறிது தொலைவில் பேரரசரின் வசந்த மாளிகையாகப் பயன்படும் இலவந்திகை வெள்ளிமாடம் அமைந்திருந்தது. சேர அரசர்களோ, அமைச்சர் பெருமக்களோ தேர்ந்தெடுத்த காரியங்களை மட்டுமே வேளாவிக்கோ மாளிகையில் வைத்துப் பேசுவது வழக்கம். ஆந்தைக்கண்ணனின் கொள்ளைக் கூட்டத்தை ஒடுக்குவது பற்றித் தன்னிடம் பேசுவதற்கு அமைச்சர் வேளாவிக்கோ மாளிகையைத் தேர்ந்தெடுத்ததிவிருந்தே அதன் இன்றியமையாமையைக் குமரனும் உணர்ந்து கொண்டிருந்தான். வேளாவிக்கோ மாளிகைக்கு இதற்கு முன்பு எப்போதும் தனியாக அவன் வர நேர்ந்ததில்லை. பெரும்படைத்தலைவர் வில்லவன் கோதையோடு சேர்ந்து இரண்டொருமுறை வந்திருக்கிறான். வில்லவன் கோதை பேரரசருடன் குயிலாலுவத்துக்குச் சென்றிருந்ததனால் முதன்முதலாகத் தனியே வேளாவிக்கோமாளிகை என்னும் அரசதந்திரக் கட்டிடத்திற்குள் புகுந்து அமைச்சரை எதிர்கொள்ளும் வாய்ப்புக் குமரனுக்கு ஏற்பட்டிருந்தது. அமைச்சர் அழும்பில்வேள் அரச தந்திரப் பேச்சுக்களிலும் விவாதங்களிலும் வல்லவன் என்பதையும் குமரன் அறிவான். ஆனால் அவரை எண்ணி அவன் ஒரேயடியாக அஞ்சிவிடவில்லை. வேளாவிக்கோ மாளிகையை நெருங்கி அதன் முன்றிலில் புரவியை நிறுத்திவிட்டு உள்ளே போகிறவரை அவன் மனம் பரபரப்பாயிருந்தது. மாளிகை வாசலில் கொடுங்கோளூருக்குத் துதுவந்து திரும்பிய அமைச்சரின் ஒற்றர்கள் குமரனை எதிர்கொண்டார்கள். அவர்கள் தெரிவித்த செய்தி குமரனுக்கு ஓரளவு ஏமாற்றத்தை அளித்தது.

ஐயா ! இப்போது அகாலமாகிவிட்டது. தங்களை அமைச்சர்பெருமான் நாளை வைகரையில் சந்தித்துப் பேசுவார். அதுவரை இந்த வேளாவிக்கோமாளிகையில் உள்ள விருந்தினர் பகுதியில் தங்கள் விருப்பப்படி களைப்பாறலாம் என்றார்கள் அமைச்சரின் தூதர்கள். அமைச்சர் தன்னை வரச்சொல்லியிருந்த அவசர உணர்வு குமரனுடைய மனத்தில் தளர்ந்துவிட்டது. ஒற்றர்களான வலியனும் பூழியனுமோ, “ஆந்தைக்கண்ணன் கொடுங்கோளூர்க்கரையை நெருங்கி விட்டானாமே? கணக்கற்ற கொள்ளைக்காரர்களும், மரக்கலங்களும் உடன் வந்திருப்பதாகப் பேசிக் கொள்கிறார்களே? உண்மையா?” என்று கொள்ளைக் காரர் வரவு பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களிடமே இதையெல்லாம் பற்றிப் பேசலாமா கூடாதா என்ற தயக்கம் மேலிட்டு குமரன் மெளனமாக இருக்க வேண்டியதாயிற்று. வேளாவிக்கோ மாளிகை நடைமுறை களைப் பற்றியும், அமைச்சர் அழும்பில்வேள் மனிதர்களைப் பரீட்சை செய்து தேறும் விதங்களைப் பற்றியும் கொடுங்கோளுர்க் குமரன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். ‘தன்னிடம் பேசவேண்டிய செய்திகளைத் தனது ஏவலாளர்களிடமே பேசி முடித்துவிடுகிற ஒரு படைத் தலைவனைப் பற்றி அமைச்சர் அழும்பில்வேள் என்ன நினைப்பார்?’ என்பதை எண்ணியே அவன் நடுங்கவேண்டியவனாக இருந்தான். அவர்களோ அவனை மேலும் மேலும் சோதனை செய்தார்கள்.

கொடுங்கோளுர் ஆந்தைக்கண்ணன் கையில் சிக்கிற்றானால் அதன்பின் சேரநாடே ஒன்றுமில்லை என்றாகிவிடும். எப்பாடுபட்டாவது முதலில் கொடுங்கோளுரைக் காப்பாற்றி விட வேண்டும். அதன் பெருட்டுத்தான் அமைச்சர் பெருமான் எங்கள் இருவரையும் அவ்வளவு அவசரமாக அனுப்பினார் - என்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்கள். அதற்கெல்லாம் பிடிகொடுத்துப் பதில் கூறாத குமரன், “இவ்வளவு அவசரமாக என்னை வரவழைத்த அமைச்சர் பெருமான் இரவிலேயே எனக்கான கட்டளையை இட்டு என்னைக் கொடுங்கோளூருக்கு அனுப்பியிருப்பாரானால் மிகவும் நல்லதாகியிருக்கும். நான் அதிக நேரம் இங்கே தங்கத் தங்கக் கொடுங்கோளூர் நிலைமையைப் பற்றிய கவலைதான் என் மனத்தில் அதிகமாகிறது - என்று மட்டும் பலமுறை அவர்களிடம் வற்புறுத்தி வினவினான். அதற்கு அவர்கள் கூறிய பதிலைக் கேட்டு அவன் திடுக்கிட்டான். ‘தங்களைப் போலவே கவலை மிகுந்து கொடுங்கோளூர் நிலைமையை அறிந்து வர அமைச்சர் பெருமானே அங்கே சென்றிருக்க நியாயமிருக்கிறதல்லவா?’ - என்று சிரித்துக் கொண்டே குமரனைக் கேட்டார்கள் அவர்கள். ‘விளையாட்டாக அப்படி அவர்கள் கூறுகிறார்களா? அல்லது தன்னை ஆழம் பார்க்கிறார்களா என்று புரியாமல் திகைத்தான் குமரன். “பேரமைச்சருக்குக் கொடுங்கோளுர் வரவேண்டுமென்ற உத்தேசம் இருந்திருக்குமானால் அடியேன் அங்கேயே அமைச்சர் பெருமானை எதிர்கொண்டு சந்தித்திருப்பேனே?” என்று தேவைக்கு அதிகமான விநயத்துடனேயே - அவர்களைக் கேட்டான். உடனே அவர்கள் பேச்சு வேறு விதத்தில் மாறிவிட்டது.

ஐயா படைத்தலைவரே ! அமைச்சர் பெருமான் எங்கே போயிருக்கிறார் என்று எங்களுக்கு உறுதியாக எதுவும் தெரியாது. தாமாகவே எங்கோ சென்று உண்மை கண்டறியும் நகர் பரிசோதனை நோக்குடன் அவர் புறப்பட்டுப் போயிருக்கிறார். எப்போதுமே உடனிருப்பவர்களாகிய எங்களைக்கூட உடன் அழைத்துச் செல்லவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். நாங்கள், அவர் கொடுங்கோளுருக்குச் சென்றிருக்கலாமோ என்று ஓர் அநுமானத்தில் கூறினோமே அன்றி உறுதி கூறவில்லை. ஒருவேளை அவர் வேறெங்காவது சென்றாலும் சென்றிருக்கலாம் என்று அந்தப் பேச்சுக்குத் தனிச்சிறப்பு அளிக்காமல் அதைப் பொதுவாக்கி விட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு மேலும் குழப்பம் அடைந்தான் குமரன். அந்த விநாடியில் ஆந்தைக்கண்ணனைவிடக் கொடியவர்களாகத் தோன்றினார்கள் அவர்கள். மேலும் அதிக நேரம் வேளாவிக்கோ மாளிகை முன்றிலிலேயே அவர்களிடம் பேச்சை வளர்த்துக் கொண்டிராமல் தங்குவதற்காக விருந்தினர் பகுதிக்குச் சென்றான் குமரன். கவலை நிரம்பிய மனநிலையும், உறக்கம் வராத சூழ்நிலையுமாகக் கழிந்த அந்த இரவில் பலமுறை அவன் அமுதவல்வியை நினைவு கூர்ந்தான். அவளைநினைத்த சுவட்டோடு ஆந்தைக்கண்ணனின் கொள்ளை மரக்கலங்கள் கொடுங்கோளுரை நெருங்கி முகத்துவாரத்தில் புகுந்திருந்தால் என்னென்ன பயங்கரங்கள் விளையும் என்று விருப்பமில்லாமலே மனத்தினுள் ஒரு கற்பனை வளர்ந்து கிளைத்தது.

--------------

 4. அமைச்சர் கூறிய செய்தி

 

மறுநாள் வைகரையில் நீராடிக் காலை வேளையில் காத்திருந்த குமரனை அமைச்சரின் தூதுவர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். கம்பீரமான தோற்றமும் எதிரே வந்து நிற்பவர்களை ஊடுருவிப் பார்க்கும் கண்களுமாக அமைச்சர் அழும்பில்வேள் பார்வையில் பட்டதுமே குமரன் அவருக்குப் பொருத்தமான வார்த்தைகளைப் பொருத்தமான இடத்தில் பதில் தரவேண்டிய எச்சரிக்கையைத் தன் மனத்திற்கு அளித்தான். வேளாவிக்கோ மாளிகையின் நடு மண்டபத்தில் அங்கும் இங்குமாக உலாவிக்கொண்டே சிந்தித்துக் கொண்டிருந்த அழும்பில்வேள் அதே நிலையில்தான் குமரனை வரவேற்றார்.

படைத் தலைவரை ஓர் இரவு தாமதிக்க வைத்து விட்டேன். ஒரு வேளை கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத் தலைவருக்கு என்மேல் சிறிது கோபம் கூட உண்டாகியிருக்கும் போல் தோன்றுகிறது......”

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மதியூகியான தாங்கள் எதை உடனே செய்ய வேண்டும், எதைச் சிறிது தாமதித்துச் செய்யலாம் என்பதை என்னைவிட நன்கு அறிந்திருப்பீர்கள்.”

இதைக் கேட்டு பதில் ஒன்றும் கூறாமல் அவன் முகத்தையே சில விநாடிகள் மெளனமாகக் கூர்ந்து நோக்கினார் அவர். அவனுடைய அந்தப் புகழ்ச்சி விநயத்தின் அடியாகப் பிறந்த உண்மைப் புகழ்ச்சியா? அல்லது வஞ்சப் புகழ்ச்சியா என்று கொடுங்கோளுர்க் குமரனின் கண்களில் தேடினார். அவர் பின்பு சுபாவமாகக் கேட்கிறவர்போல் அவனைக் கேட்கலானார்:-

நம்முடைய தூதுவர்கள் கொடுங்கோளுருக்கு வந்திருந்த சமயத்தில் நீயும்கூடப் படைக் கோட்டத்தில் இல்லை போலிருக்கிறது.”

ஆம்! பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகச் சென்றிருந்தேன்.”

என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளோ?” - இதற்கு மறு மொழி கூறுவதற்குச் சொற்கள் கிடைக்காமல் குமரனுக்கு நாக்குழறியது. அவனுடைய அந்தப் பலவீனத்தை மேலும் தொடர்ந்து தாக்காமல், “அதனால் என்ன குமரா? பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தக்க சமயம் பார்த்துக் கவனித்து செயல்பட வேண்டியது உன் கடமைதானே?” என்று அந்தப் பேச்சையும் சுபாவமாகத் திருப்பினார். அடுத்தாற்போல அவர் கேட்ட கேள்விதான் பெருஞ் சந்தேகத்தைக் கிளரச் செய்வதாயிருந்தது.

ஆமாம் ! உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் குமரா I கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திற்கு அருகே ஓர் அழகிய பூந்தோட்டம் உண்டல்லவா?”

ஆம் ! உண்டு....”

அந்தப் பூந்தோட்டம் முன்போலவே இப்போதும் செழிப்பாயிருக்கிறதா? கொடுங்கோளுர் நகரத்தில் எனக்கு மிகவும் விருப்பமான இடம், இயற்கையழகு கொழிக்கும் அந்தப் பூந்தோட்டம்தான்.”

இப்போது மறுமொழி கூற நாக்குழறியது அவனுக்கு. 

என் வயதுக்கும் முதுமைக்கும் இப்படிப்பட்ட அழகிய பூங்காக்களில் பிரியம் வைப்பது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்று உனக்குத் தோன்றலாம் குமரா ! பூங்காக்களையும், பொழில்களையும் உன் போன்ற மீசை அரும்பும் பருவத்து வாலிபப் பிள்ளைகள்தான் நன்றாக அநுபவிக்க முடியும் என்றாலும் என் போன்ற முதியவர்களுக்கு இயற்கையழகின் மேலுள்ள பிரியம் ஒருநாளும் போய் விடுவதில்லை.”

அந்தப் பூங்காவைப் பற்றி அவருடைய பேச்சு வளர வளர அவனுடைய பயம் அதிகமாகியது. பேச்சு எங்கே எப்படி வந்து முடியும் என்பதை அவனால் கணிக்க முடியாமல் இருந்தது. தன்னை வரச்சொல்லியிருந்த காரியங்களை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக இப்படிப்பூங்காவைப் பற்றி பேசத் தொடங்கி விட்டார் என்பது புரியாமல் தவித்தான். எதற்காகச் சுற்றி வளைத்து அந்தப் பேச்சை இழுக்கிறார் என்பது புரிந்தது போலவும் இருந்தது. அதே சமயத்தில் அவர் ஒருவித உள்ளர்த்தமும் இல்லாமல் சுபாவமாகப் பேசுவது போலவும் இருந்தது. எனவே தடுமாற்றம் தெரியாதபடி அவருக்கு முன் நிற்க இயலாமல் தவித்தான் அவன். அவரோ பேச்சை மீண்டும் இயல்பாகத் திருப்பினார்.

எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் அத்தகைய அழகிய பூங்காக்களும், பொழில்களும், வாவிகளும், நீரோடைகளும் நிறைந்த கொடுங்கோளூர் நகரத்தை நாம் உயிரைக் கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். கொடுங்கோளூர் நகரில்தான் சேர நாட்டிலேயே புகழ்பெற்ற இரத்தின வணிகர்களெல்லாரும் இருக்கிறார்கள். இந்தச் சேரநாட்டிலேயே அழகான பெண்களும் கொடுங்கோளுரில்தான் இருக்கிறார்கள். அது மட்டும் அன்று குமரன் நம்பி ! உன்னைப் போல் வாளிப்பான உடற்கட்டுள்ள சுந்தர வாலிபர்களும் கூடக் கொடுங்கோளுரில்தான் இருக்கிறார்கள் என்று கூறி நிறுத்திவிட்டு அந்த வார்த்தைகள் கொடுங்கோளுர்க் குமரன் நம்பியை எந்த அளவுக்கு நிலை தடுமாற வைத்திருக்கின்றன என்று கவனிக்கத் தொடங்கினார் அழும்பில்வேள். அவருடைய சொற்களைத் தாங்குவதைக் காட்டிலும் பார்வையைத் தாங்குவதைக் கடுமையாக உணர்ந்தான் குமரன் நம்பி.

அமைச்சர் பெருமானுக்கு என்ன காரணத்தினாலோ இன்று என்மேல் அளவுகடந்த கருணை பிறந்திருக்கிறது. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து புகழுவதைக் கேட்டு வெட்கமாக இருக்கிறது.”

பொதுவாக வீரர்கள் எதற்கும் வெட்கப்படக் கூடாதென்று சொல்லுவார்கள். வீரர்கள் நாணமும் வெட்கமும் படக் கூடாதென்றால் வீரர்களுக்கெல்லாம் தலைவனாகிய படைத்தலைவன் நிச்சயமாக வெட்கப்படக் கூடாது.”

அமைச்சர் பெருமான் என்னைக் கூப்பிட்டனுப்பிய கட்டளையை அறிந்து கொள்ள மிகமிக ஆவலாயிருக்கிறேன்.” 

அதை நான் சொல்லித்தான் இனி நீ அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லையே? கொள்ளைக் கூட்டத்தாரிடம் இருந்து மகோதைக் கரை நகரங்களைக் காக்கவேண்டும். நேற்றிரவு நான் இங்கிருந்து கொடுங்கோளுர்வரை மாறு வேடத்தில் நகர் பரிசோதனைக்காகச் சென்று வந்தேன். உன்னை இங்கே வரச் சொல்லிவிட்டு - உனக்குத் தெரியாமல் நான் கொடுங்கோளுர் சென்றதற்காக நீ என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். நான் அனுப்பியிருந்த துரதர்களோடு கூடவே நீயும் வந்திருந்தால் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டேன் நான். விநாடிக்கு விநாடி கொடுங்கோளுரைப் பற்றிக் கவலைப் படும்படியான செய்திகள் வந்துகொண்டே இருந்தன. அதற்கேற்றார்போல் நீயும் அங்கிருந்து வராமற்போகவே எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலைநகரிலிருந்து கொடுங்கோளுருக்கு வரும் பெருஞ்சாலையில் நான் செல்லவில்லையாதலால் உன்னையும் இடை வழியில் சந்திக்க வாய்ப்பில்லை. கொடுங்கோளுருக்கு நான் போயிருந்த போது கேள்விப்பட்ட ஒரு செய்தி என்னைப் பெருங் கலக்கத்துக்கு ஆளாக்கிவிட்டுவிட்டது-”

அப்படி என்ன பரபரப்பான செய்தி அது? நேற்று முன்னிரவில்தானே நானும் அங்கிருந்து புறப்பட்டேன்? எந்தச் செய்தியையும் நான் கேள்விப்படவில்லையே?”

என்ன செய்வது? நீ அங்கிருந்து புறப்பட்டபோது அப்படிப்பட்ட செய்தி எதைப்பற்றியும் நீ கேள்விப்பட நேரவில்லை; நான் போயிருந்தபோது கேள்விப்பட நேர்ந்து விட்டது.”

என்ன நடந்தது கொடுங்கோளுரில்?" “பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை ! சேர நாட்டிலேயே அழகான பெண்கள் கொடுங்கோளுரில்தான் இருக்கிறார்கள் என்று கூறிப் பெருமைப்பட்டேனே?”

ஆம்! பெருமைப்பட்டீர்கள். அதற்கும் கொடுங்கோளுரில் நேற்றிரவு நடைபெற்ற சம்பவத்திற்கும் என்ன தொடர்பு?”

தொடர்பு இருப்பதனால்தான் சொல்கிறேன் குமரன் நம்பி! கொடுங்கோளூரிலேயே அழகிற் சிறந்த பெண்ணொருத்தியைக் கடற்கொள்ளைக்காரர்கள் கொண்டுபோய்விட்டார்கள் ! அதை. நினைக்கும்போதுதான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது.”

அப்படி ஒன்றும் நடந்திருப்பதற்கே சாத்தியமில்லையே? ஏனென்றால் நான் அங்கிருந்து புறப்படும்போதே கொள்ளை மரக்கலங்கள் கடலில் வெகுதுரத்தில் அல்லவா இருந்தன?”

என்ன நடந்தது? எப்படி அந்தப் பெண்ணைச் சிறைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்பதே ஒருவருக்கும் தெரியவில்லை. கடற்கரைப் பக்கமாக உலாவப் போனவளைக் காணவில்லை என்று இரத்தின வணிகர் மனம் குமுறிக் கொண்டிருக்கிறார்.”

என்ன? இரத்தின வணிகரா?”

ஆம்! கொடுங்கோளுரிலேயே பெரிய இரத்தின வணிகரின் மகளான அமுதவல்லியைத்தான் காணவில்லை. கடற் கொள்ளைக்காரர்களான ஆந்தைக்கண்ணனின் ஆட்கள்தான் சிறைப் பிடித்துக்கொண்டு போயிருக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள்.”

என்ற அலறல் குமரனின் வாயில் சொல்லாக ஒலிக்கத் தொடங்கித் தடைப்பட்டது. அவன் முகத்திலிருந்த தடுமாற்றத்தைக் கவனித்த அமைச்சர் பெருமான், “ஏன் இவ்வளவு பதற்றமடைகிறாய்? உனக்குக் கொடுங்கோளுர் ரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைத் தெரியுமோ?” என்று கேட்டுவிட்டு அவன் நிலையைக் கூர்ந்து கவனிக்கலானார் அமைச்சர்.

-----------

 5. குமரனின் சீற்றம்

 

'கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகள் அமுதவல்லியைக் கொள்ளைக்காரர்கள் சிறைப்படுத்தி விட்டார்கள்என்ற செய்தியை அழும்பில்வேள் கூறியபோது குமரனால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. அவன் முகத்தில் கோபம் தெரிந்தது. மீசை துடி துடித்தது. கண்களில் கிளர்ச்சி தோன்றியது. அவனுக்குப் புரியாதபடி தான் அவனை நன்றாகப் புரிந்து கொள்வதற்கு அந்த விநாடிகளைப் பயன்படுத்திக் கொண்டார் அமைச்சர் அழும்பில்வேள்.

உடனே என்னைக் கொடுங்கோளுருக்கு அனுப்ப அமைச்சர் பெருமான் மனமிசைய வேண்டும். இத்தகைய அக்கிரமங்கள் கொடுங்கோளுரில் நடப்பதை என்னால் ஒரு கணமும் பொறுக்க முடியாது என்று அவன் குமுறியதைக் கூட அழும்பில்வேள் தெளிவான நிதானத்துடன் ஆராய்ந்தார்.

இரத்தின வணிகரின் மகள் அமுதவல்லியை நீ ஏற்கெனவே அறிந்திருப்பாய் போலிருக்கிறது குமரா !”

......”

அழும்பில்வேளின் கேள்விக்கு மறுமொழி ஏதும் கூறாமல் தலை குனிந்தான் குமரன். மேலும் அவனை விடாமல் கேள்விகளால் துளைக்கலானார் அழும்பில்வேள். அவனோ அவருடைய எல்லாக் கேள்விகளையும் செவிமடுத்தபின், “அறிந்தவர்களோ, அறியாதவர்களோ - யாருக்குத் துன்பம் நேர்ந்தாலும் கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தின் தலைவன் என்ற முறையில் என் கடமையை நான் செய்தாக வேண்டும். அதற்கான கட்டளையை எனக்கு அளியுங்கள் அமைச்சர் பெருமானே !” என்றான் குமரன். இவ்வாறு கூறியபின் அழும்பில்வேள் மேலும் அவனைச் சோதிக்க விரும்பவில்லை.

கடற் கொள்ளைக்காரர்களின் படையெடுப்பிலிருந்து கொடுங்கோளுரைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளைச் செய்யுமாறு இப்போது உனக்குக் கட்டளை இடுகிறேன். உனக்கு உதவியாயிருக்கவும் செய்திகளை அவ்வப்போது நாம் அறியச் செய்யவும் இந்த மாளிகையின் ஊழியர்களான வலியனும் பூழியனும் உன்னுடன் கொடுங்கோளூர் வருவார்கள். அவர்களையும் உடனழைத்துக்கொண்டு நீ கொடுங்கோளுருக்குப் புறப்படலாம் என்று கட்டளையிட்டார் அமைச்சர்.

குமரன் எதற்காகவோ தயங்கி நின்றான். அமைச்சர் அழும்பில்வேளை அந்த விநாடியில் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னோடு வலியனையும் பூழியனையும் எதற்காகக் கொடுங்கோளுருக்கு அனுப்புகிறார் என்பதே அவனுக்குச் சந்தேக மூட்டியது. வேளாவிக்கோ மாளிகைக்குச் சேரநாட்டின் அரசதந்திர மாளிகை என்று மற்றொரு பெயர் உண்டு. மாளிகையில் உருவாகிற முடிவுகளுக்கும், பின்னால் ஏதாவதொரு அரச தந்திர நோக்கம் நிச்சயமாக இருக்கும் என்பதை அவன் அறிவான். தன்னை நிதானம் செய்து கொண்டு அமைச்சர் பெருமானிடம் மறுபடி பேச அவனுக்குச் சில விநாடிகள் பிடித்தன.

ஐயா ! கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திலுள்ள வீரர்களையும் கடற்படையினரையும் துணைக் கொண்டே ஆக வேண்டிய பாதுகாப்புக் காரியங்களை நான் கவனித்துக் கொள்ள முடியும். தங்களுக்கு எப்போதும் உறுதுணையாயிருக்கும் ஊழியர்களை என்னோடு அனுப்பினால் தாங்கள் சிரமப்பட வேண்டியிருக்குமோ?”

அப்படி ஒன்றும் சிரமமில்லை ! என் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் உன்னோடு துணைவராமல் இங்கு தங்கினால்தான் கொடுங்கோளுர்ச் செய்திகள் தெரியாமல் நான் சிரமப்படுவேன். அந்தச் சிரமம், சற்றுமுன் கொடுங்கோளூர் இரத்தின வணிகரின் மகள் கடற்கொள்ளைக்காரர்களால் கடத்திக் கொண்டு போகப்பட்டாள் என்ற செய்தியைக் கேட்டவுடன் நீ அடைந்த சிரமத்தைப் போலிருக்கும் என்று கூறிவிட்டுப் புன்னகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தார் அமைச்சர். அவர் மனத்தில் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு பேசுகிறாரென்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அந்த நிலையில் அவரோடு அதிகம் பேசி விவாதிக்க விரும்பவில்லை அவன். ஆனால், குமரனின் மனத்திலோ சீற்றம் பொங்கிக் கொண்டிருந்தது.

அமுதவல்லி சிறைப்பட்டாள் என்றறிந்ததனால் வந்த சீற்றத்தை அமைச்சரின் உரையாடல்கள் வேறு அதிகமாக்கின. ஆனாலும், தன் சினம் வெளியே தெரியாமல் அடக்கிக் கொண்டு அவருக்குப் பணிந்தான் அவன். உடனே அவன் அங்கிருந்து கொடுங்கோளுருக்குப் புறப்பட விரும்பியதற்குக் காரணம், கடற்கொள்ளைக்காரர்களை எதிர்த்து அடக்கும் நோக்கம் ஒன்றுமட்டுமல்ல, வேளாவிக்கோ மாளிகையிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறிவிடவேண்டும் என்பதும் ஒரு நோக்கமாயிருந்தது. எத்தனை பெரிய தீரனாக இருந்தாலும் வேளாவிக்கோ மாளிகைக்குள் நுழைந்துவிட்டால் அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். பிறர்மேல் கோபம் வருவதற்குப் பதில் தனக்குத் தன்மேலேயே ஒரு கையாலாகாத கோபம் வரும். இதனால் எல்லாம்தான் குமரனுக்கு அங்கிருந்து விரைவில் வெளியேற வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

நண்பகலில் குமரன் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து புறப்பட முடிந்தது. அமைச்சர் பெருமானின் கட்டளைப்படி வலியனும் பூழியனும் கூட உடன் வந்தார்கள். வஞ்சிமா நகர எல்லையைக் கடக்கிறவரை புரவிகளை விரைவாகச் செலுத்திக் கொண்டு போகமுடியவில்லை. அரசவீதிகளும் வாணிகப் பெருந் தெருக்களும் கலகலப்பாயிருந்தன. நகர எல்லையைக் கடந்ததும் கொடுங்கோளுருக்குச் செல்லும் சாலையில் விரைந்து செல்ல முடிந்தது. வழியில் எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் கொடுங்கோளுர் நிலையைப்பற்றி அவர்கள் கேட்டறிந்தார்கள். கொடுங்கோளூர் முழுவதும் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பயம் பரவியிருப்பதாக வழிப்போக்கர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. வழிப்போக்கர்கள் சிலரிடம் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைப் பற்றிக் கேட்டான் குமரன்நம்பி. கொடுங்கோளூர் நகரிலும் அந்தப் பெண்காணாமற் போய்விட்ட செய்தி பரபரப்பை உண்டு பண்ணியிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். குமரன் இவ்வாறு வழியிடை எதிர்ப்பட்டவர்களை விசாரித்த போதெல்லாம் வலியனும் பூழியனும் உள்ளூர நகைத்துக் கொண்டார்கள். “அந்த ஆந்தைக்கண்ணனையும் அவன் குலத்தினரையும் பூண்டோடு வேரறுப்பேன் என்று வஞ்சினம் கூறினான் குமரன். தலைநகருக்கும் கொடுங்கோளுருக்கும் இடைப்பட்ட சிற்றுார்களிலும் அம்பலங்களிலும் கூடப் பயமும் பரபரப்பும் பரவியிருந்தன.

கதிரவன் மலைவாயில் விழுவதற்கு முன்னதாகவே அவர்கள் கொடுங்கோளூரை அடைந்து விட்டார்கள். படைக் கோட்டத்தில் இருந்த வீரர்கள் யாவரும் பொன்வானியாற்று முகத்துவாரத்திலும் கடற்கரையோரப் பகுதிகளிலும் காவலுக்கு அனுப்பப்பட்டிருந்ததனால் கோட்டத்தில் வீரர்கள் அதிகமாக இல்லை. இரண்டொரு காவலர்களும் மிகச்சில வீரர்களுமே இருந்தனர். அவர்களைக் கேட்டபோதும்கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகள் அமுதவல்லி காணாமற்போனது உண்மையே - என்று தெரிவித்தார்கள். அதே சமயத்தில் இன்னோர் உண்மையோடு முரண்படுவதாகவும் இருந்தது இந்தச் செய்தி.

கடலில் கொள்ளைக்காரர்களின் மரக்கலங்கள் முதல் நாள் மாலை எந்த இடத்தில் நின்றிருந்தனவோ அந்த இடத்திலிருந்து முன்னேறவோ, பின் வாங்கவோ இல்லை என்று கூறினார்கள். அமுதவல்லி காணாமற் போய்விட்டாள் என்ற செய்தியும் கொள்ளை மரக்கலங்கள் கடலில் அதே இடத்தில்தான் இருக்கின்றன என்பதையும் இணைத்துப் பார்த்தபோது ஒன்றோடொன்று பொருந்தவில்லை. ஆனால் சிந்திப்பதற்கு ஒரு காரணமும் இருந்தது. முகத்துவாரத்திலிருந்து நகருக்குள் வர ஏற்றபடி பொன்வானியாற்றின் கால்வாய் ஒன்று இரத்தின வணிகரின் மாளிகைப் புறக்கடையை ஒட்டிச் செல்கிறது. அந்தக் கால்வாய் வழியே சிறு மரக்கலங்கள், பாய்மரப் படகுகள் ஊருக்குள் போக்கு வரவு உண்டு என்பதை நினைவு கூர்ந்தான் குமரன்.

ஒருகணம் இரத்தின வணிகளின் மாளிகைக்கே நேரே சென்று நிலைகளை அறியலாமா என்று தோன்றியது அவனுக்கு. அடுத்த கணம் அப்படிச் செய்யப் புகுவது சரியில்லை என்று தோன்றியது. அமைச்சர் பெருமானால் தன்னோடு அனுப்பப்பட்டிருக்கும் வலியனும் பூழியனும் தான் எங்கு சென்றாலும் உடன் வருவார்கள் என்பதும் அவன் அப்படிச் செல்வதற்கு ஒரு தடையாயிருந்தது. மேலும் கொடுங்கோளுர் நகரம் முழுவதுமே கடற் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பரபரப்பில் ஆழ்ந்திருக்கும் போது படைக்கோட்டத்துத் தலைவனாகிய தான் இரத்தின வணிகருடைய மாளிகையை மட்டும் தேடிச் செல்வது பலருக்குச் சந்தேகங்களை உண்டாக்கக்கூடும் என்றும் அவனால் உணர முடிந்தது.

அந்த வேளையில் அவனுக்கு உண்டாகிய சீற்றம் உடனே செயலாற்ற முடியாத சீற்றமாக இருந்தது. எப்படியும் அன்றிரவு தேர்ந்தெடுத்த வீரர்கள் சிலரோடு படகில் கொள்ளை மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைவதென்று திட்டமிட்டான் அவன். கடம்பர்கள் என்னும் கொள்ளைக்காரர் கூட்டத்தை நிர்மூலமாக்கிவிடவேண்டும் என்னும் அளவிற்கு அவனுள் ஆத்திரம் நிறைந்திருந்தது. எங்கும் பயமும் பரபரப்பும் நிறைந்திருந்த சூழ்நிலையில் கொடுங்கோளுர் நகரமே உறங்கும் நள்ளிரவு வேளையில் கடற் பிரவேசம் செய்வதென்று தீர்மானித்தான் குமரன் நம்பி, வலியனையும் பூழியனையும் கூட இயன்றவரை தவிர்க்க விரும்பினான் அவன். அதனால் அவர்கள் உறங்கியபின்தன் குழுவினருடன் பொன்வானிக் கால்வாய் வழியே படகில் புறப்படவேண்டுமென்பது அவன் திட்டம்.

அதே கால்வாய் வழியாக நாம் புறப்படுகிற வேளையில் கொள்ளை மரக்கலத்தைச் சேர்ந்தவர்கள் கடலிலிருந்து நகருக்குள் வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது?”- என்று வினவினான் குமரனின் வீரர் குழுவில் ஒருவன். அதற்குக் குமரன் மறுமொழி கூறினான்.

இத்தகைய கடற்போரில் வெல்லும் நுணுக்கங்களை நம் பேரரசரும் கடற்பிறக்கோட்டியவர் என்ற சிறப்பு அடைமொழி பெற்றவருமான மாமன்னர் செங்குட்டுவர் நமக்குப் பழக்கியிருக்கிறார் என்றாலும் இரவுவேளையில் நாம் முன்னெச்சரிக்கையாகவே செல்லவேண்டும்.”

ஆம்; இத்தகைய பலக்குறைவான வேளைகளில் புத்தியைவிட யுக்தியையே அதிகம் பயன்படுத்தவேண்டும் என்றான் குமரன்.

-------------

 6. நள்ளிரவில் நிகழ்ந்தது

 

கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திற்கு அருகிலிருந்த பொன்வானியாற்றுக் கிளைக் கால்வாயிலிருந்து நள்ளிரவு வேளையில் அந்தப் படகு புறப்பட்டது. படகில் கொடுங்கோளுர் குமரன் நம்பியும் அவனுக்கு அந்தரங்கமானவர்களாகிய படைக் கோட்டத்து வீரர்கள் மூவரும் இருந்தனர். அமைச்சர் அழும்பில்வேளின் ஊழியர்களாகிய வலியனும் பூழியனும் படைக்கோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தெரியாமலே குமரன் புறப்பட்டிருந்தான். முகத்துவாரத்தை நெருங்குகிறவரை அந்தக் கால்வாயின் இருபுறமும் அடர்ந்த சோலைகள் இருந்தன. இயல்பாக இருண்டிருந்த சூழலை இந்தச் சோலைகள் மேலும் இருளாக்கியிருந்தன. எனவே பிறரறியாமற் செல்வதற்கு அந்தச் சூழ்நிலை மிகவும் துணை செய்தது.

நடுக்கடலுக்குள் அவர்களுடைய படகு சென்றபோது அலைகள் அதிகமாயிருந்தன. கடலில் கடம்பர்களும் ஆந்தைக் கண்ணனும் மரக்கலங்களை நிறுத்தியிருந்த இடமோ ஒன்றரை நாழிகைப் பயணத்துக்குரிய தொலைவு இருக்குமென்று தோன்றியது. கடலில் அந்தப் பகுதியினருகே ஒரு சிறு தீவும் அமைந்திருந்தது. படகில் போய்க்கொண்டிருக்கும் போதே என்ன செய்வது என்பது பற்றிக் குமரன் நம்பி திட்டமிடத் தொடங்கினான். அவன் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் சிந்திக்கத் தொடங்குகிறான் என்பதறிந்த நண்பர்கள் மகிழ்ந்தனர்.

இந்த அகாலத்தில் ஆந்தைக்கண்ணன் உட்பட எல்லாக் கொள்ளைக்காரர்களும் தத்தம் மரக்கலங்களில் இருப்பார்களா? அல்லது கலங்களிலிருந்து இறங்கித் தீவில் ஒய்வு கொண்டிருப்பார்களா? தீவில் இருப்பார்களானால் நாம் கலங்களில் நுழையலாம். கலங்களில் இருப்பார்களானால் நாம் தீவில் துழையலாம். இவர்கள் சிறைப்பிடித்து வந்த இரத்தின வணிகளின் மகளை எங்கே தங்க வைத்திருக்கிறார்களென்பதும் நமக்குத் தெரியவேண்டும் - என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினான் அவன். மெல்ல மெல்ல அவர்கள் படகு கொள்ளை மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியை நெருங்கியது. தீவில் ஒதுங்கியிருந்த ஒரு பகுதியில் இறங்கிச் சுற்றுச் சூழல்களை அறிந்த பின் மேலே என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதென்று முடிவு செய்தான் குமரன்.

அவர்களுடைய படகு தீவருகே ஒதுங்கியபோது தீவு அமைதியாயிருந்தது. கரும்பூதங்களைப்போல் அடர்ந்த மரங்கள் தென்பட்டன. நால்வரும் படகைக் கரையருகே இழுத்து அது உட்கடலுக்கு நகர்ந்து விடாமல் மரத்துடன் இறுக்கிக் கயிற்றால் பிணைத்தபின் தீவுக்குள் சென்றனர். தீவில் - கொள்ளைக் காரர்கள் யாரும் தங்கியிருப்பதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. தீவோரமாக நிறுத்தியிருந்த மரக்கலங்களில் எந்த மரக்கலத்தில் கொள்ளைக்காரர்கள் தலைவனாகிய ஆந்தைக் கண்ணன் தங்கியிருப்பான் என்று அநுமானம் செய்ய முனைந்தான் குமரன். முதலில் அது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. நேரம் செல்லச் செல்ல கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. இறுதியில் குமரனே தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு அதை மற்றவர்களுக்கு விவரித்தான்.

நண்பர்களே ! நீங்கள் யாவரும் இங்கேயே தங்கியிருக்க வேண்டும் நான் திரும்பி வருகிறவரை கண்டிப்பாக இங்கிருந்து அசையக் கூடாது. நான் திரும்புவதற்குத் தாமதமானால் நீங்களாகவே எனக்கு ஏதேனும் அபாயமென்று கற்பனை செய்து கொள்ளவும் வேண்டியதில்லை. படகைமட்டும் நான் கொண்டு செல்வேன். அடையாளமாக நான்-உங்களை இருக்கச் சொல்கிற இடத்திலேயே நீங்கள் இருக்கவேண்டியது மிகமிக அவசியம். ஏனெனில் நான் எந்த அவசரத்தில் திரும்பி வந்தாலும் நீங்கள் உடனே என்னோடு புறப்பட ஆயத்தமாயிருக்க வேண்டும். திரும்பி வந்து நான் தீவில் இறங்கி உங்களைத் தேடும்படி ஆகிவிடக் கூடாது.”

அவன் கூறியபடியே ஆயத்தமாயிருக்க அவர்கள் இணங்கினர். குமரன் படகில் புறப்பட்டான். அந்தக் கொள்ளை மரக்கலங்களுக்கிடையே செல்வது மிகவும் கடினமாயிருந்தது. சில மரக்கலங்களில் உருவிய வாளுடன் கடம்பர்கள் காவலுக்கு நின்றார்கள். இன்னும் சில மரக்கலங்கள் அமைதியடைந்திருந்தன. தான் அந்த நிலையில் அப்போது மிகமிக அபாயமான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் குமரன் ஒவ்வொரு கணமும் உணர்ந்தான். கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களுக்கு இடையேதான் படகில் செல்வதை அவர்களில் யாராவது பார்த்து விட்டால் என்ன ஆகும் என்பதை நினைக்கத் தொடங்கிய போதே பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது.

படகு செலுத்திச் செல்லும்போதும் கவனமாக செலுத்திச் செல்லவேண்டியிருந்தது. இருளின் மிகுதியினால் வழி தெரியாமலோ கவனக்குறைவாகவோ பெரு மரக்கலங்களில் எங்காவது தன் படகு இடித்தோ, மோதியோ, ஓசை எழுந்தால் - உடனே பாய்ந்தோடி வரும் முரட்டுக் கடம்பர்களிடம் தான் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதையும் நன்கு உணர்ந்து, தன் விழிப்போடு இருந்தான் குமரன். ஒன்றும் புரியாமல் புதிர் போலிருந்த பல மரக்கலங்களின் பக்கங்களில் நுழைந்து திரும்பி வந்த பின்நன்கு அலங்கரிக்கப்பட்டதும் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாக வேறுபட்டுத் தோற்றமளித்ததும், மிகப் பெரியதுமான ஒரு மரக்கலம் தெரிந்தது. அதன் உச்சியில் கபாலமும் கொடுவாளுமாகப் பறந்த கடம்பர்களின் குரூரமான கொடி, மேல் தளத்தில் நாட்டியிருந்த தீப்பந்த ஒளியில் மங்கலாகத் தெரிந்தது. எல்லா மரக்கலங்களிலுமே கடம்பர்களின் கொடி பறந்தது என்றாலும் இந்தப் பெரிய மரக் கலத்தில் - மிகப் பெரியதாகவும் அதிக உயரத்திலும் பறந்து கொண்டிருந்தது. தளத்தில் காவலர்களும் நின்று கொண்டிருந்தனர். குமரன் தனக்குள் சிந்தித்தான். 

சூழ்நிலைகளையும் தோற்றத்தையும் கொண்டு ஆராயுமிடத்து இதுதான் ஆந்தைக்கண்ணனின் மரக்கலமாக இருக்க வேண்டும். இந்த மரக்கலத்தில் ஏறிப் பார்ப்பதற்கு மட்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என் ஆருயிர்க் காதலி அமுதவல்லி எங்கே சிறைப்பட்டிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.’

மேலே என்ன செய்யலாம்? என்ன செய்தால் நான் நினைத்தது கைகூடும்?’ - என்றெண்ணியபடியே அந்தப் பெரு மரக்கலத்தின் நான்கு பக்கத்துச் சூழ்நிலைகளையும் கணித்தறிவதற்காக வலம் வருவதுபோல் படகில் ஒருமுறை சுற்றி வந்தான்.

மரக்கலத்தின் ஒரு பகுதியில் வலிமையான கயிற்று ஏணி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கடற்பரப்பிலிருந்து மரக்கலத்தின் மேல்தளத்திற்கு ஏறிச் செல்வதற்கு அதுதான் ஒரே வழி என்பதை அவனால் உய்த்துணர முடிந்தது. ஆனாலும் அப்படிக் கயிற்றேணி வழியாக ஏறிச் செல்வதற்கு முன், மற்ற மரக்கலங்களில் காவலுக்காகத் தளத்தில் நிற்பவர்களுக்குத் தான் கயிற்றேணியில் ஏறும் காட்சி தெரியுமா? அந்தக் காட்சியினால் அவர்கள் கவரப்படுவார்களா என்பதைச் சிந்திக்க வேண்டியிருந்தது.

நல்லவேளையாகக் கயிற்றேணி தொங்கிய பகுதிக்கு நேர் எதிரே பார்வையிலிருந்த மரக்கலத்தின் தளத்தில் தீப்பந்தங்களோடு காவலுக்கு நின்ற வீரர்கள் அப்போதுதான் பந்தங்களை அவித்துவிட்டு உறங்கப் போகத் தொடங்கியிருந்தார்கள். அதைத் தவிர மற்ற மரக்கலங்களுக்குக் காட்சி தெரியாதபடி ஆந்தைக்கண்ணனின் கலமே மறைத்துவிடும் என்று தெரிந்தது.

தான் வந்திருந்த சிறு படகை ஆந்தைக்கண்ணனின் மரக் கலத்தோடு பிணைத்துவிட்டு கயிற்றேணியில் ஏறுவதற்குத் தொடங்கினான் குமரன். காற்றினால் ஒரு தொல்லை ஏற்பட்டது. அவன் மரக்கலத்தோடு பிணைத்த படகு - காற்றில் மரக் கலத்தோடு உறாயத் தொடங்கியதனால் ஏற்பட்ட ஒசை - வேறு மரக்கலங்களுக்கு எட்டி யாராவது அதைக் கவனிக்க நேரிடுமோ என்று தயங்கினான் குமரன்.

கடல் அலைகளின் ஒசையில் அந்த ஓசை பெரிதாகக் கேட்காததினாலோ அல்லது அப்படி ஒரு சப்தம் பல மரக் கலங்கள் அருகருகே நிறுத்தியிருக்கும் கடற் பகுதியில் இயல் பாகவே உண்டாகும் என்று பிறர் எல்லாம் கருதிவிட்டதினாலோ, குமரனுக்கு ஒர் அபாயமும் ஏற்பட அந்த ஓசை ஏதுவாகவில்லை. கயிற்றேணியில் அடிக்கடி ஏறிப் பழக்கமில்லாத காரணத்தால் விரைவாக ஏற முடியவில்லை. அந்த மன நிலையில் இருந்த பதற்றமும், பழக்கமில்லாத கயிற்றேணியில் ஏறும் காரியமும் சேர்ந்து குமரனை விரைவாக இயங்க முடியாமற் செய்தன. செய்தலும், சுழல்தலுமாகிய நிலையில் கயிற்றேணியைத் தாங்கி மெல்ல மெல்ல மேலேறிய வேளையில் மேலே கப்பவின் மரச் சட்டங்களாகிய தளத்தில் யாரோ நடந்து செல்லும் காலடியோசை கேட்கவே கயிற்றேணியோடு பக்கவாட்டில் ஒண்டிக்கொள்ள வேண்டியதாயிற்று. 

இவ்வாறு நீண்ட நேரம் முயன்று மேல்தளத்தை அடைந்தான் குமரன். மேல் தளத்திலிருந்து படிகளில் இறங்கி உள்ளே மரக் கலத்தின் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் அந்தப் படி இறங்குகிற வழியில் உருவிய வாளுடன் கடம்பன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் கண்ணயர்கிறவரை குமரன் நம்பி காத்திருந்தான்படிகளில் இறங்கும்போது யாராவது எதிரே வந்தால் என்ன செய்வது?’ என்பதையெல்லாம் சிந்திக்க நேரமோ வாய்ப்போ இல்லை. மரக்கலத்தின் உட்பக்கத்தில் ஒவ்வொரு தடுப்பாகத் தடுக்கப்பட்டிருந்த அறைகளில் எதிலாவது கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளும் தன் ஆருயிர்க் காதலியுமாகிய அமுதவல்லி சிறை வைக்கப்பட்டிருப்பாளா என்று கண்டுபிடிப்பதே அவனுடைய முதன்மை நோக்க மாயிருந்தது.

படியிறங்கியதும் முதற் கூடத்தில் பூதம் படுத்து உறங்குவது போல் பெருங்குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான் ஆந்தைக்கண்ணன். அந்த மாமிச மலையின் அருகே மதுக்குடங்கள் கவிழ்ந்து கிடந்தன. விகாரமாகக் கால் பரப்பி வீழ்ந்து கிடக்கும் அந்தக் கொள்ளையர் தலைவனைப் பார்ப்பதற்கே பயமாகவும் அரு வருப்பாகவும் இருந்தது. கொள்ளையடிக்கிற பொருள்களையும், பொன், மணி, முத்து முதலியவற்றையும் பாதுகாப்பாக நிறைத்து வைக்கிற பகுதிகளையும் அந்த மரக்கலத்தினுள்ளே சுற்றிப் பார்த்தான் குமரன்நம்பி பலநாள் முற்றுகைக்குரிய உணவுப்பொருள்களும், ஏற்பாடுகளும் அந்த மரக்கலத்தில் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் அமுதவல்லியைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. வேறு சில மரக்கலங்களிலும் அவன் ஏறி இறங்கினான். ஒரு பெரிய முற்றுகைக்கும், கொள்ளையிடலுக்கும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளுடனும் அந்தக் கலங்கள் வந்திருப்பது விநாடிக்கு விநாடி உறுதிப்பட்டது. அவன் மனதில் ஆள் வலிமையும், ஆயுதங்களின் வலிமையும் கூட அவர்களிடம் மிகுதியாய் இருப்பதை அவன் அங்கே தெளிவாகக் கண்டுணர்ந்தான். ஒற்றறிவதற்காக ஏறி இறங்கிய மரக்கலம் ஒன்றில் காவலுக்கிருந்த கொள்ளை வீரர்கள் இருவருடைய உரையாடலை அவன் ஒட்டுக் கேட்க நேர்ந்தது.

இந்த முற்றுகையினால் நமக்குப் பெரும் பயன் வரப் போகிறது. நல்ல வாய்ப்பு இது. சேர வேந்தர் செங்குட்டுவர் வட திசையில் குயிலாலுவம் வரை படைத் தலைவர்களுடனும், சேர சைன்யத்தின் பெரும்பான்மையான வீரர்களுடனும் படையெடுத்துச் சென்றிருக்கிறார். கொடுங்கோளூரிலோ வஞ்சிமா நகரத்திலோ வீரர்கள் அதிகமில்லை. இந்த இரண்டு பெருநகரங்களிலும் உள்ள செல்வங்களைக் கொள்ளையிட இதைவிடப் பொன்னான சமயம் நம் தலைவருக்கு வாய்க்காது என்றான் முதற் கடம்பன்.

ஆம்! நேற்றிரவுகூட நம்மவர்களிற் சிலர் கடலிலிருந்து பொன்வானியாற்று முகத்துவாரத்தின் வழியே கொடுங்கோளுரின் நிலையை ஒற்றறிவதற்காகச் சென்று வந்தார்களாமே? எப்படி இருக்கிறது நிலைமை?” என்று முதல்வனைக் கேட்டான் இரண்டாங் கடம்பன்.

இந்த இடத்தில் குமரன்நம்பியின் புலன்கள் கூர்ந்து ஒன்றாகி அந்தப் பேச்சை உற்றுக் கேட்டன. அப்படி பொன்வானி முகத்துவாரத்தின் வழியே ஒற்றறியச் சென்ற கடம்பர் குழுவினரால்தான் அமுதவல்லி சிறைப்பட்டிருக்க வேண்டு மென்று அவனால் யூகிக்க முடிந்தது.

--------------

 7. குமரன்நம்பியின் திட்டம்

 

அன்று நள்ளிரவில் உடன் வந்த வீரர்களை நடுக்கடல் தீவில் காத்திருக்கச் செய்துவிட்டுக் கடம்பர்களின் கொள்ளை மரக் கலங்களில் புகுந்து உளவறியச் சென்ற குமரன்நம்பி திரும்பி வரத் தாமதமான ஒவ்வொரு விநாடியும் காத்திருந்த கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத்து வீரர்கள் கணக்கற்ற சந்தேக நினைவுகளால் குழப்பமடையலானார்கள். ஒரு வேளை குமரன் நம்பி கடம்பர்களின் கையில் சிக்கிச் சிறைப்பட்டு விட்டானோ என்ற சந்தேகமும் இடையிடையே மனத்தில் தோன்றி அவர்களை பயமுறுத்தியது. நல்ல வேளையாக மேலும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்காமல் குமரன் நம்பி திரும்பி வந்து சேர்ந்தான்.

வந்ததும் வராததுமாக, “உடனே வந்தது போலவே கரைக்குத் திரும்பி விடுவோம்! கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திற்குச் சென்று மற்றவற்றைச் சிந்திப்போம் என்று அவர்களை விரைவு படுத்தினான் குமரன் நம்பி அவன் அவ்வாறு விரைவு படுத்துவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமென்று உணர்ந்தவர்களாக அவர்களும் உடனே அவனோடு படகேறிப் புறப்பட்டனர். படகு கடலின் அலைகள் நிறைந்த பகுதியை எல்லாம் கடந்து பொன்வானி முகத்துவாரத்தை அடைகின்றவரை அவர்கள் ஒருவரோடொருவர் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.

கரை சேர்ந்தபின் விடிவதற்குக் கொஞ்ச நேரமே இருந்தது. குமரன்நம்பி உட்பட யாவருமே சோர்வடைந்திருந்தார்கள். பேசி முடிவு செய்ய வேண்டியவற்றைக் காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு அப்போது தோன்றியது. உறங்குகின்ற மனநிலை யாருக்குமே இல்லை என்றாலும் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியிருந்தது. மறுநாள் பொழுது புலர்ந்தது. படைக்கோட்டத்து வீரர்கள் கலந்து பேசினார்கள். குமரன் நம்பியின் மனம் கொள்ளைக் காரர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அமுதவல்லியின் நிலை என்னவோ, ஏதோ என்பதைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தாலும் வீரர்களிடையே அவன் சில திட்டங்களைக் கூறலானான்.

பலமுறை நம்முடைய பெருமன்னர் செங்குட்டுவரால் ஓட ஓட விரட்டப்பட்டிருக்கும் இந்தக் கொடிய கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர்கள் மறுபடி சமயம் பார்த்து முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் மன்னரும் சேர நாட்டுப் பெரும் படைகளும் வடக்கே படையெடுத்துச் சென்றிருப்பதை அறிந்தே கொள்ளைக்காரக் கடம்பர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். கொடுங்கோளுர்ப்படைக் கோட்டத்திலோ நாம் சிலர்தான் இருக்கிறோம். தலைநகரில் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து தம்மை வந்து சந்திக்கும்படி அமைச்சர் அழும்பில்வேள் எனக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்த்து வந்தேன். கடற்கரையிலும், பொன்வானி முகத்துவாரத்திலும் கொடுங்கோளூர் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு என்னை அமைச்சர் பெருமான் வேண்டிக் கொண்டிருக்கிறார். மேலும்...”என்று சொல்லிக் கொண்டே வந்த குமரன் நம்பி தயங்கிப் பேச்சை நிறுத்தினான்.

மேலும் என்ன?...ஏன் சொல்ல வந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்?” என்று வினவினான் படைக் கோட்டத்தைச் சேர்ந்த வீரனொருவன். ஆனால் குமரன் நம்பியோ தன் தயக்கத்தை தொடர விட்டவனாக மேலும் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் சொல்வதற்கிருந்த செய்தியோ கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி காணாமற்போனதைப் பற்றியது. அதைத் தானே படை வீரர்களிடம் தன் வாய்மொழியினால் சொல்லி விவரிப்பதற்கு அவன் மனம் வேதனைப்பட்டது. என்ன காரணத்தினாலோ இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி கொடுங்கோளுரில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கும் என்பதை அவன் மனம் நம்ப மறுத்தது.

ஆனால் கொடுங்கோளுர் நகரெங்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததையும், அதை அதே இரவில் நகர் பரிசோதனைக்காக வந்திருந்த அமைச்சர் அழும்பில்வேள் அறிந்து சென்றதையும் பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இரத்தின வணிகர் வீட்டில் தானே நேரிற்சென்று இச்செய்திபற்றி அறிய குமரன்நம்பி கூசினான். ஆனால் இரத்தின வணிகரின் வீட்டிலும் அதற்குரிய சோகம் பரவியிருப்பதாகவே மற்றவர்கள் மூலம் அவன் கேள்விப்பட்டறிய முடிந்தது. இப்போது வீரர்கள் திரும்பத் திரும்ப அவனைக் கேள்விகளால் துளைக்கத் தொடங்கினர். எனவே அவன் தன் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைக் கூற வேண்டியதாயிற்று. கப்பலில் கடம்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டதிலிருந்து அமுதவல்லி காணாமற் போன இரவில் அவர்கள் பொன்வானி முகத்துவாரத்தின் வழி வந்து திரும்பியிருக்கிறார்கள் என்றே தெரிந்தது. தான் கொள்ளைக் கப்பலில் ஒட்டுக்கேட்டறிந்த செய்தியைக் கூறாமலே, “அமுதவல்லி கொள்ளைக்காரர்களான கடம்பர்களிடம் சிறைப்பட்டிருப்பது சாத்தியமென உங்களுக்குத் தோன்றுகிறதா?” என்று தன் நண்பர்களான படைக்கோட்டத்து வீரர்களிடம் கேட்டான் குமரன் நம்பி. 

சாத்தியமென்று தோன்றவில்லைதான் படைத்தலைவரே. ஆனால் சாத்தியமில்லை என்றும் எப்படி மறுப்பது?” என்றே அவர்களிடமிருந்து மறுமொழி கிடைத்தது.

அதன்பின் அந்த வினாவுக்கு விடை காண்பதை விடுத்து முற்றுகையிட்டிருக்கும் கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை விரட்டியடிப்பது எவ்வாறு என்பதையும் அவர்களிடமிருந்த இரத்தின் வணிகரின் மகள் அமுதவல்லியை மீட்பது எவ்வாறு என்பதைப் பற்றியுமே படைக்கோட்டத்து வீரர்களோடு அவன் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தது. பல கொள்ளைமரக் கலங்களில் முற்றுகையிட்டிருக்கும் எண்ணிக்கை நிறைந்து முரட்டுக் கொள்ளைக்காரர்களோடு சில வீரர்களைக் கொண்டு மட்டுமே நேருக்கு நேர் எதிர்ப்பதென்பது சாத்தியமில்லை. ஆகவே சாதுர்யத்தால் எதிரிகளை மடக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதை குமரன் நம்பி நன்கு உணர்ந்திருந்தான்.

திடீரென்று இருந்தாற்போலிருந்து நண்பர்களிடம் விநோதமான வேண்டுகோளை விடுத்தான்.

சேர நாட்டு அரச முத்திரையாகிய விற்கொடி இலச்சினையோடு கூடிய புத்தம் புதுக் கொடித் திரைச்சீலைகள் சில நூறு இப்போது உடனே வேண்டும். நமது சூழ்ச்சியை அவை மூலமே தொடங்க முடியுமென்று தோன்றுகிறது.”

படைத் தலைவரே! உங்கள் வேண்டுகோள் விநோதமாக இருக்கிறது. வலிமையான ஆட்கள் இருந்தாலே கொடியவர்களான கடம்பர்களை வெற்றி கொள்வது அருமை. நீங்களோ சேர நாட்டுக் கொடிச் சீலைகளைக் கொண்டே அவர்களை வென்றுவிட நினைக்கிறீர்கள் என்று சந்தேகமும் தயக்கமுமாக ஒரு வீரனிட்மிருந்து படைத் தலைவன் குமரன் நம்பிக்கு மறுமொழி கிடைத்தது.

குமரன் நம்பி அதைக்கேட்டு மனந்தளரவோ தயங்கவோ செய்யாமல் சிரித்த முகத்துடனேயே அந்த வீரனுக்கு மறுமொழி கூறலானான். “மரத்தை நோக்கிக் கற்களை எறிவோம். கற்களால் மாங்காய்கள் உதிருமானால் நமக்குப் பயன்தானே? காய்கள் விழாவிட்டால் நமக்கென்ன? மறுபடி வேறு கற்களை எறிவோம். அரச தந்திரச் சூழ்ச்சிகள் யாவுமே இப்படித்தான். நாம் நினைக்கிறபடியே தான் முடியவேண்டும் என்று திட்டமிட இயலாது. ஆனால் நாம் நினைக்கிறபடியேதான் முடியவேண்டுமென்ற திட நம்பிக்கையுடனேயே செயலைத் தொடங்க வேண்டும். அதில் எள்ளளவும் தளர்ச்சியிருக்கக் கூடாது.”

மாங்காய்கள் விழுவதற்குப் பதிலாக நாம் எறிந்த கற்களே நம்மேல் திரும்பி விழுவதுபோல் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது?” என ஒரு வீரன் கேட்டான்.

"தீவினைவசத்தால் சிலருக்கு அப்படியும் சிலசமயங்களில் கேடுகள் நேரலாம். ஆனால் எப்படி நேருமென்பதே நம் எண்ணமாக முன் நிற்குமானால் நாம் எதையுமே துணிந்து செய்வதற்கு உரியவர்களாக முடியாது.” 

குமரன்நம்பியின் இந்த மறுமொழிக்குப் பின் வீரர்கள் யாரும் அவனை எதுவும் வினாவத் துணியவில்லை. சேர நாட்டு விற்கொடிச் சீலைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு வீரர்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குமரன் நம்பி தன் மனத்தினுள் திட்டம் வகுக்கத் தலைப்பட்டான். கடம்பர்களை ஒடுக்கி ஒழிக்க அவன் மனத்தில் இரண்டு காரணங்களால் இப்போது அவன் சபதம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டுக் கடமையைத் தவிர அன்புக் கடமையும் இதில் இருந்தது. அவனுடைய ஆளுயிர்க் காதவியைத் தேடும் கடமையும் இதில் கலந்திருந்ததனால் சபதத்துக்கு உறுதி அதிகமாகி இருந்தது. அவனுடைய திட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவேற அந்த நாள் முழுதும் ஆயிற்று. அன்றிரவு மீண்டும் அவர்கள் கலந்து பேசித் திட்டமிடுவதில் கழிந்தது. அடுத்த நாள் இரவு மீண்டும் பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கடலிற் சென்று கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை அடைய வேண்டும் என்றும் தங்கள் சூழ்ச்சிகளைச் செயலாக்கிக் கடம்பர்களை முறியடிக்க வேண்டுமென்றும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். புத்தம்புதிய திரைச்சீலைகளில் எழுதப்பட்ட சேரர்களின் விற்கொடிகள் சில நூறு ஆயத்தமாகி இருந்தன. அடுத்த நாள் பகற்பொழுது முழுதும் ஒய்வாக இருந்தார்கள் அவர்கள். இரவில் உறக்கமின்றி கழிக்க வேண்டியிருந்ததால் குமரன் நம்பியும் படைக் கோட்டத்து வீரர்களும், அன்று பகற் பொழுதில் களைப்பாற வேண்டியிருந்தது.

-------------

 8. மரக்கலங்கள் எங்கே?

 

குமரன் நம்பியும் அவன் நண்பர்களான படைக் கோட்டத்து வீரர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அடுத்த நாள் இரவும் வந்தது. பொன்வானி முகத்துவாரத்தில் அவர்கள் புறப்பட்டுச் செல்வதற்குப் படகுகள் வரிசை வரிசையாகக் காத்திருந்தன. படகுகளைப் படைக் கோட்டத்து வீரர்களே செலுத்திக் கொண்டு போவதில் சில இடையூறுகள் இருந்தன. ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்தவுடன் படகுகளில் இருக்கும் வீரர்கள் தாங்கள் எந்தக் காரியத்தைச் செய்ய வந்தார்களோ அந்தக் காரியத்தைச் செய்வதற்காகப் படகுகளிலிருந்து நீங்கிச் சென்றால் அவர்கள் மறுபடி திரும்பி வருகிறவரை உரிய இடத்திலே, தப்பித் திரும்பிச் செல்வதற்குப் படகுகள் நிறுத்தப் பட்டிருக்க வேண்டுமென்று கருதிப் பொறுப்பு வாய்ந்த படகோட்டிகளை உடன் அழைத்துச் செல்ல ஏற்பாடாகி இருந்தது அன்றைக்கு. 

மேலும் அன்றிரவு அவர்கள் திட்டமிட்டிருந்த சூழ்ச்சியைப் போய் நிறைவேற்றுவதற்கும், நிறைவேற்றி விட்டுத் திரும்பி வருவதற்கும் - சந்தர்ப்ப வேகத்தையும், அவசரத்தையும் உணர்ந்து அதற்கேற்றபடி படகைச் செலுத்துவதற்கும் அவசியம் இருந்தது. அதனால் கடலில் எந்த நிலையிலும் படகு செலுத்துவதில் சூரர்களான படகோட்டிகள் சிலரை முன் கூட்டியே துணைக்கு ஏற்பாடு செய்திருந்தான் குமரன் நம்பி. படகுகள் நடுச் சாமத்திற்குக் கடலுக்குள் செல்ல வேண்டுமென்பது ஏற்பாடு. அதற்குமுன் குமரன் நம்பியும் படைக்கோட்டத்து வீரர்களும் பொன்வானிக்கரைப் படகுத் துறையில் கூடி விட்டார்கள். அந்த இருளில் தீப் பந்தங்களின் ஒளியில் மரங்கள் அடர்ந்து அமைதி நிறைந்த பொன்வானிக் கரையில் மனிதர்கள் கூடி நிற்பது ஏதோ அசாதாரணமான காரியங்கள் நிகழப்போகின்றன என்பதை அறிவிப்பது போலிருந்தது. ஒவ்வொரு படைக்கோட்டத்து வீரனின் முகத்திலும் கண்களிலும் செய்யப்போகிற காரியத்தைப் பற்றிய கவலையும் கடமையுணர்வும் ஒளிர்ந்தன. குமரன் நம்பி அவர்களிடம் தன் ஏற்பாட்டை விளக்கினான். 

வீரர்களே! உங்களிடம் நம்முடைய சேரநாட்டு வில் இலச்சினைக் கொடிகள் சில தரப்பட்டுள்ளன. அந்தக் கொடிச் சீலைகளை இடுப்புப் பட்டைகளிலும் மார்க்கச்சைகளிலும் நான்காக மடித்து மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். பொன்வானி முகத்துவாரத்திலிருந்து கடலில் புறப்படும் போது படகுகள் ஒரு குறிப்பிட்ட வியூகத்தில் தனித்தனியே விலகிச் செலுத்தப்பட வேண்டும். எல்லாப் படகுகளும் சேர்ந்தார்போல் அணிவகுத்துச் செல்வதால் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தாலும் நேர்ந்துவிடும். பொன்வானி முகத்துவாரத்தைக் கடந்து பெருங்கடலுக்குள் நம் படகுகள் புகுவதற்கு முன் படகுகளில் உள்ளோர் தங்கள் தீப்பந்தங்களை அணைத்துவிடவேண்டும். மறுபடி அவை நமக்குத் தேவையானால் கொள்ளை மரக்கலங்கள் முற்றுகையிட்டுள்ள கடற்பகுதியை அடுத்திருக்கும் சிறு தீவை அடைந்ததும் அவற்றை எரியும்படி ஏற்றிக் கொள்ளலாம். அங்கும் கூட அவற்றை ஏற்றி எரியச் செய்வது அபாயத்தையே தரலாம். கொள்ளை மரக்கலங்களின் தளங்களில் காவலுக்கு நிற்கிற கடம்பர்கள் யாராவது தீவில் தீப் பந்தங்கள் எரிவதால் கவனம் கவரப்பட்டு நம்மைக் கண்டுபிடிக்க ஏதுவாகி விடக்கூடாது. அப்படி ஆனால் நாம் போகிற காரியம் எதுவோ அதைச் செய்ய முடியாமல் போய்விடும். இனி நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பதைக் கவனிக்கலாம். தீவை அடைந்ததும், படகுகளைத் துணைகொண்டு தனித்தனியே கொள்ளை மரக்கலங்களை நெருங்கவேண்டும். நம்மிடமிருக்கும் சேர நாட்டுக் கொடிகளை வந்திருக்கும் கொள்ளை மரக்கலங்களில் - பாதி எண்ணிக்கையுள்ளவற்றில்-பாய்மரக் கம்பங்களில் ஏறி - அங்கிருக்கும் கொள்ளைக்காரக் கடம்பர்களின் கொடியை அகற்றி விட்டு அதற்குப் பதிலாகக் கட்டிவிட வேண்டும். அப்படிக் கொடிகளை மாற்றிக் கட்டும்போதும் கொள்ளையர்களின் எல்லாமரக்கலங்களிலும் கட்டிவிடக்கூடாது. அவ்வாறு கட்டினால் ஒருவேளை நமது நோக்கமே பாழானாலும் ஆகிவிடலாம். கவனமாக அரைவாசி மரக்கலங்களின் கொடி மரங்களில் நம் கொடிகளை ஏற்றி மாற்றிவிட்டு மீதி அரை வாசி மரக்கலங்களில் கடம்பர்களின் கொடிகளே பறக்கும்படி விட்டுவிட வேண்டும்.” 

இந்த இடத்தில் குமரன் நம்பியின் பேச்சில் குறுக்கிட்டு வீரனொருவன் கேள்வி கேட்டான். 

அவ்வாறு சில கொடிகளை மட்டும் மாற்றிவிட்டுச் சில கொடிகளை அப்படியே விடுவதனால் நம்முடைய எந்த நோக்கம் நிறைவேறும்?” 

"கடம்பர்களே தங்களுக்குள் ஒருவர்மேல் ஒருவர் சந்தேகப்பட்டு அடித்துக்கொண்டு சாவார்கள். சூழ்ச்சிகளில் இது மித்திர பேதமாகும்.” 

இந்த மித்திரபேதம் நாம் திட்டமிடுகிறபடி மித்திர பேதமாகாமல் அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கொடிகளை மாற்றியது பிறர் சூழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுவார்களானால் என்ன ஆகும்?” 

பெரும்பாலும் இந்த மித்திர பேதம் பலிக்குமென்று நம்பித்தான் தொடங்குகிறோம் விடிந்ததும் அருகருகே நிற்கும் கப்பல்களில் மாற்றார் கொடிகளைப் பார்த்தால் அந்தக் கப்பல்களைத் தாக்கத் தோன்றுவதுதான் இயல்பு என்றான் குமரன் நம்பி. 

படைக்கோட்டத்து வீரர்கள் அதற்கு மேலும் தங்கள் தலைவனைக் கேள்வி கேட்டு விவாதிக்க விரும்பவில்லை. எல்லாரும் புறப்பட்டனர். இருளில் படகுகள் விரைந்தன. படகுகள் நதி முகத்துவாரத்தைக் கடந்து பெருங்கடலில் துழைந்ததும் முதல் வேலையாக எல்லோரும் தீப்பந்தங்களை அனைத்துவிட்டார்கள். கொள்ளை மரக்கலங்கள் முற்றுகை யிட்டிருந்த நடுக்கடல் தீவை நோக்கி கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்து வீரர்களின் படகுகள் விரைந்து செல்லத் தொடங்கின. குமரன் நம்பியின் படகு தலைமை தாங்கிக் செல்வதுபோல் முன்னால் சென்றது. ஆனால் கடலில் மேலே செல்லச் செல்லல குமரன் நம்பியின் மனத்தில் குழப்பம் அதிகமாகியது. தான் வழிதவறிவிட்டோமா அல்லது இருளில் கடம்பர்களது மரக்கலங்கள் நிற்பது தெரியவில்லையா என்பது புரியாமல் திகைத்தான் அவன்! 

நடுக்கடல் தீவை நெருங்க நெருங்க அவன் சந்தேகம் அதிகமாகியது. பார்வை எட்டுகிற தொலை வந்ததும் அவன் சந்தேகம் தீர்ந்துவிட்டது. கடம்பர்களின் மரக்கலங்களில் ஒன்றுகூட முதல்நாள் நின்றதுபோல் அந்தத் தீவை ஒட்டி நிற்கவில்லை. தீவு சூனியமாயிருந்தது. கரையிலும் மனித சஞ்சாரமே இல்லை. இப்போது குமரன் நம்பியின் நிலை இரண்டுங்கெட்ட தன்மையில் ஆகிவிட்டது. ‘கடம்பர்கள் தங்கள் மரக்கல முற்றுகையை இரவோடிரவாக இடம் மாற்றிவிட்டார்கள் என்று முடிவு செய்வதா? அல்லது மரக் கலங்களைத் தீவின் மறுபக்க மறைவில் நிறுத்திவிட்டுக் கலங்களில் இருந்தவர்கள் மட்டும் - தீவில் இறங்கி எதிரிகளைத் திடுமென்று தாக்க மறைந்திருக்கிறார்களா? ஒன்றும் புரியவில்லையே?’ என்று மருண்டான் குமரன் நம்பி. தீவை நெருங்கிக் கரையை அணுகவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது. மரக்கலங்களும் கொள்ளைக்காரர்களும் எங்கே மாயமாக மறைந்து போனார்கள் என்பதும் மர்மமாயிருந்தது. ஒன்றும் செய்யத் தோன்றாமல் எல்லாப் படகுகளையும் நடுக் கடலிலேயே நிற்கச் செய்வதற்குரிய ஏற்பாட்டை மேற்கொண்டான் அவன். 

என்ன ஆயிற்று? நேற்று இரவும், அதற்கு முந்திய தினமும் மலைமலையாக இந்த இடத்தில் நின்ற கொள்ளை மரக் கலங்களைத் திடீரென்று காணவில்லையே?” என்று திகைப்போடு தங்கள் படைத்தலைவனை நோக்கினார்கள் உடனிருந்த வீரர்கள். கடம்பர்கள் முரட்டு இனத்தவராயினும் கடற்கொள்ளைக்காரர்களுக்கே உரிய சூழ்ச்சிகள் யாவும் நிறைந்தவர்கள். மறைவதுபோல் மறைந்து தோன்ற மாட்டார்கள் என்று நம்பியிருக்கிற வேளையில் திடீரென்று வதைக்கும் கொடிய காரியத்தை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. படகுகளோடு பின் வாங்குவதே நல்லதென்று குமரனுக்குத் தோன்றியது. எல்லாப் படகுகளையும் பின்வாங்கும்படி ஆணையிடும் எண்ணத்தோடு அவன் ஏதோ கட்டளையிட வாய் திறந்தபோது, உடனிருந்த வீரன் ஒருவன்அதோ, அதோ!” என்று வேறோர் திசையைச் சுட்டிக் காட்டினான். எல்லார் கண்களும் ஆவலோடு அத்திசையில் திரும்பின.

-------------

 9. கடம்பர் சூழ்ச்சி

 

உடனிருந்த வீரன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த குமரன் நம்பி திடுக்கிட்டான். கடம்பர்கள் இன்ன இடத்தில் இவ்வளவு கப்பல்களோடு முற்றுகை இட்டிருக்கிறார்கள் என்பதாக முந்தைய தினங்களில் நேரில் கண்டறிந்து உறுதி செய்த திட்டமெல்லாம் பொய்யாகும்படி அவர்கள் வேறொரு திசையில் முன்னேறி நகரத்தை ஒட்டிய கடற்பகுதிக்குச் சென்றிருப்பது தெரியவந்தது. எதிர்பாராத விதமாகக் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட இந்த உண்மை அதிர்ச்சியை அளிப்பதாய் இருந்தது. தன்னுடைய முன்னேற்பாடும் திட்டங்களும் இப்போது காலங் கடந்தவையாயும் பயனற்றவையாயும் ஆகிவிட்டதை அவன் உணர்ந்தான். சுற்றி இருந்த அனைவர் முகத்திலும் கலவரம் தெரிவதையும் - கலக்கம் படர்வதையும் அவன் உணர்ந்தான்.

இரவு முழுவதும் கண்விழித்து நுணுக்கமாகவும் அரச தந்திரத்தோடும் செய்த ஏற்பாடுகள் எல்லாம் வீணாகிவிட்டன என்றெண்ணும்போது வேதனையாய் இருந்தது. கடற் கொள்ளைக்காரர்களுடைய முற்றுகையைத் தகர்த்துத் தன் ஆருயிர்க் காதலியும் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகளுமாகிய அமுதவல்லியைச் சிறைமீட்டு - வேளாவிக்கோ மாளிகை என்னும் அரச தந்திரக்கூடத்தில் அமைச்சர் அழும்பில்வேளை வெற்றிப் பெருமிதத்தோடு சந்திக்கலாம் என்ற எண்ணத்திலிருந்த அவனுக்கு இந்த ஏமாற்றம் அதிர்ச்சியை அளிப்பதாயிருந்தது. இனி உடனடியாக என்ன செய்வது என்பதை அவன் விரைந்து முடிவு செய்யவேண்டிய நிலையில் இருந்தான். விடிவதற்குள் ஏதேனும் செய்ய வேண்டும் அல்லது கரையடைவதற்கும் திரும்புவதற்கும் முயற்சியாவது மேற்கொள்ள வேண்டும். விடிந்தால் உட்புறக் கடலின் நெடுந்தொலைவில் இருக்கும் இவர்கள் படகுகள் கரையை ஒட்டி இருக்கும் கடம்பர்களுக்கு மிகவும் தெளிவாகத் தென்படலாம். அதனால் அவர்களே இவர்களைக் கரையடைய விடாமல் வழிமறிக்கவும் நேரிடலாம்.

என்ன செய்வது?’ - என்று சிந்தனைக் குரியதாக இருந்தது. உடன் வந்தவர்களில் படகோட்டிகளைத் தவிர மற்றவர்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்ய விரும்பினான் குமரன் நம்பி.

கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை வளைத்து விரட்டுவதற்கு எதுவும் செய்யாமல் இப்படியே இருளோடு இருளாகக் கரைதிரும்புவோமானால் இரண்டு இரவுகள் அயராது கண் விழித்துப் பாடுபட்டது வீணாகிவிடும். மறுபடியும் நாளை நாம் திட்டமிடுவதற்குள் எது-எது எப்படி எப்படி இருக்குமோ? இப்போதே நாம் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் கடம்பர்கள் மகோதைக் கரையை நெருங்கிய முறையில் தங்கள் முற்றுகையை மாற்றிக் கொண்டார்கள். ஆகவே வந்தது வந்துவிட்டோம், முடிந்ததைச் செய்ய முயன்று பார்க்கலாமா? உங்கள் கருத்து என்ன? இதில் எந்த அளவு நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் திட்டமாயிருக்கிறீர்கள்?” - என்று அவர்களை நன்கு உணர்வதற்காக வினவினான் குமரன் நம்பி.

படைத் தலைவர் எப்படிக் கட்டளையிடுகிறாரோ அப்படிச் செய்ய சித்தமாயிருக்கிறோம் என்றார்கள் அவர்கள். உடனே எல்லாருமாகச் சேர்ந்து விரைந்த முடிவு ஒன்றிற்கு வந்தனர்.

கடம்பர்கள் அப்போது கடலில் தங்கள் மரக்கலங்களை நிறுத்தியிருந்த இடம் மகோதைக் கரையிலே பொன்வானி முகத்துவாரத்துக்கு அருகில் இருந்தாலும் விடிவதற்குள் இருளோடு இருளாக அந்த இடத்திற்கே சென்று அவர்களையும் அவர்களுடைய கலங்களையும் வளைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சூழ்ச்சியை நிறைவேற்றி முடிப்பது என்ற உறுதி பிறந்த பின் படகுகள் மறுபடி விரைந்தன. மகோதைக் கரையிலே கொள்ளை மரக் கலங்கள் நின்ற திசையைநோக்கி இந்தப் படகுகள் விரைந்த போது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மித்திரபேத சூழ்ச்சியே இவர்கள் மனதில் நிறைந்திருந்தது.

ஆனால் காரிய அவசரத்திலும், திடீரென்று எதிரிகளின் கலங்கள் இடம் மாறியிருந்ததைக் கண்டதிலும் பரபரப்பு அடைந்திருந்த அவர்கள் சிலவற்றை நிதானமாகச் சிந்திக்கத் தவறியிருந்தார்கள். தீப்பந்தங்களை எல்லாம் அணைத்திருந்ததனாலும், கொள்ளை மரக்கலங்கள் நின்றிருந்த பகுதி சற்றே தொலைவிலிருந்ததனாலும் அருகில் நெருங்கிய பின்புதான் சில உண்மைகள் அவர்களுக்குப் புரியவரலாயின. கடம்பர்களின் தலைவனான ஆந்தைக்கண்ணன் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தான் என்பது அருகில் நெருங்க நெருங்கத்தான் தெரிந்தது.

கொள்ளை மரக்கலங்களில் உள்ளவர்கள் யாவரும் விழிப்போடிருந்தனர். கலங்களெல்லாவற்றையும் வட்டவடிவில் சக்கரவியூகமாக ஒரு கோட்டைபோல் நிறுத்தியிருந்தனர். நடுவில் நீர் இடைவெளிபட மரக்கலங்களையே வட்டவடிவாக நிறுத்தி ஒரு கடற்கோட்டை கட்டினாற்போல் செய்து ஒவ்வொரு தளத்திலும் வீரர்கள் காவலுக்கு வேறு நின்றார்கள். நடுக்கடலில் இருந்தவரை எப்படியானாலும் கரையை நெருங்கிய பின்பு பாதுகாப்பு அவசியம் என்று எண்ணியதுபோல் ஏற்பாடுகளைச் செய்திருந்தான் ஆந்தைக்கண்ணன். அதனால் இவர்கள் நிலைமை திருப்பத்திற்குள்ளாகியது.

கடவில் ஓர் எல்லைவரை எதிரிகளின் முற்றுகைப் பகுதியை நெருங்கிய பின்பே இவற்றை எல்லாம் குமரன் நம்பியும் உடனிருந்த நண்பர்களும் அநுமானித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மறுபடி வந்த வழியே திரும்புவதற்கு முடியாது. வந்தது வரட்டும் என்று அவர்கள் துணிய வேண்டியிருந்தது. கடம்பர்களின் மரக்கலங்களாகிய கடற்கோட்டையை தெருங்க நெருங்க விளைவுகள் வேறுவிதமாக மாறத் தொடங்கின. ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே இவர்கள் வந்து கொண்டிருப்பதைக் கப்பலில் இருந்தவர்கள் பார்த்து விட்டார்கள் போலும், அதன் விளைவாக கொள்ளைக்காரர்கள் படகுகளில் காத்திருந்து வளைக்கத் தொடங்கினார்கள். திடீரென்று முற்றிலும் எதிர்பாராத விதமாகச் சூழ்நிலை மாறுதல் அடைந்தது. குமரன் நம்பியும் அவனோடு வந்தவர்களும் கடம்பர்களின் மரக்கலங்களை வளைப்பதற்குப் பதில் - அவர்களுடைய சிறு படகுகளை - ஆயத்தமாகக் காத்திருந்த கடம்பர்கள் தங்கள் படகுகள் மூலம் வளைத்துப் பிடித்தனர். குமரன் நம்பியும், நண்பர்களும் எப்படித் தப்புவது என்று யோசிப்பதற்குக்கூட வாய்ப்பில்லாத நெருக்கத்தில் திடீரென்று கடம்பர்களிடம் சிக்கினார்கள்.

குமரன் நம்பி முதலியவர்களுடைய கரங்கள் முறுக்கேறிய தாழங்கயிறுகளால் பிணிக்கப்பட்டன. அவர்கள் ஏறிவந்த படகுகளும் கடம்பர்களால் கைப்பற்றிக்கொள்ளப்பெற்று, அவர்களுடைய மிகப்பெரிய மரக்கலங்களோடு பிணைத்து மிதக்கவிடப்பட்டன.

குமரன் நம்பியும் அவனோடு சிறைப்பிடிக்கப்பட்டவர்களும் ஆந்தைக்கண்ணனின் கப்பல் தளத்திலே கொண்டுபோய் நிறுத்தப்பட்டார்கள். வாயில் கள் நாற்றமும், உருண்டு உருண்டு விழிக்கும் குரூரமான ஆந்தைக்கண்களோடு கூடிய முகமும், பூதாகாரமான உயர்ந்த தோற்றமுமாக அந்தக் கொள்ளைக்காரர் தலைவன் அவர்களுக்குத் தோற்றமளித்தான். அவனைக் கண்டபோது கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்தவர்களது நெஞ்சுதிக் திக் என்று அடித்துக்கொண்டது. அவனோ பாதி கிறங்கிய விழிகளுடன் தளத்தில் வந்து நின்று ஏதோ புழுப் பூச்சிகளைப் பார்ப்பதுபோல் அவர்களைப் பார்க்கலானான். யாரையுமே கருணை நோக்கோடு பார்க்க இயலாதபடி பிறவி இயல்பிலேயே கொடூரமாக அந்தக் கண்களைப் படைத்திருக்க வேண்டும் கடவுள். அந்தப் பேருருவம் வந்துநின்ற விதத்திலேயே கப்பலின் தளம் அதிர்ந்தது. இவர்களைப் பார்த்துக் குரூரமாக ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்தான் அவன்.

இவர்கள் சேரநாட்டுக் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்து வீரர்கள். நமது மரக்கலங்களை நோக்கிப் படகுகளில் வந்தார்கள், கைப்பற்றினோம் என்பதாக ஒரு கொள்ளைக்காரக் கடம்பன் தங்கள் தலைவனான ஆந்தைக்கண்ணனிடம் இவர்களைப்பற்றி எடுத்துக் கூறினான்.

தெரிகிறது ! தெரிகிறது ! இன்றுள்ள சூழ்நிலையில் இவ்வளவு குறைந்த தொகையுள்ள வீரர்கள் சேரநாட்டிலிருந்துதான் வந்திருக்க முடியுமென்று நன்றாகத் தெரிகிறது. பாவம், சேர நாட்டுப் படை முழுவதும் வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருக்கிறதுபோல் தோன்றுகிறது; நாம் கொடுத்து வைத்தவர்கள். இந்த வேளை நமக்குத்தான் நன்மையாகவும் சாதகமாகவும் வாய்த்திருக்கிறது. கொடுங்கோளுரையும் வஞ்சிமாநகரையும் ஏன் மகோதைக் கரையிலுள்ள செழிப்பு வாய்ந்த எல்லா நகரங்களையும் - நாம் கொள்ளையிடுவதற்கு இதைவிட வாய்ப்பான நேரம் வேறு கிடைக்க முடியாது. இரத்தின வணிகர்களையும், முத்து வணிகர்களையும் தேடிப் பிடித்துக் கொள்ளையிட வேண்டும் என்று கேட்க அருவருப்பான கடுங்குரலில் முழங்கினான் ஆந்தைக்கண்ணன்.

குமரன் நம்பி மனம் கொதிக்கப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நின்றான். அவனோடு உடனிருந்த சேரநாட்டு வீரர்கள் தங்கள் தலைவனான அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனோ எதுவுமே பேசவில்லை. உள்ளே பலவிதமான சிந்தனைகளால் அவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது. வேளாவிக்கோ மாளிகையின் நடுக்கூடத்தில் வைத்து அமைச்சர் அழும்பில்வேள் தன்னிடம் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் அவன். அவ்வளவு திட்டமும் இப்போது இந்த விநாடியில் பாழாகிவிட்டதை உணர்ந்து அவன் மனம் கொதித்தது.

அந்த இரவில் தங்களிடம் சிறைப்பட்டு விட்ட குமரன் நம்பி முதலிய கொடுங்கோளுர் வீரர்களைக் கப்பலின் கீழ்த்தளத்து இருளில் கொண்டுபோய் அடைத்தார்கள் கடம்பர்கள். அதிலிருந்து எப்படித் தப்புவது என்ற வழியே தோன்றாமல் சேர நாட்டு வீரர்கள் இருளில் தவித்தார்கள். அவர்களுடைய மனத்தில் கடம்பர்கள் தங்களிடம் அகப்பட்டுக் கொண்டவர்களை எப்படி எப்படி எல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தவை எல்லாம் நினைவுக்கு வந்து பயமுறுத்தின.

குமரனுடைய உள்ளத்திலே எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் ஒரு சிறு நம்பிக்கையும் மின்னி மின்னி மறைந்தது. கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி கடம்பர்களால் சிறைப்படுத்தப்பட்டிருந்தால் இதே மரக்கலத்திலோ, அல்லது இங்குள்ள வேறு மரக்கலங்களிலோ தேடி இருப்பிடம் அறிய முயலலாம் என்பதுதான் அந்த நம்பிக்கையாயிருந்தது. மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவர்கள் மறுபடியும் கப்பலின் தளத்தில் ஆந்தைக்கண்ணனுக்கு முன்பு கொண்டு போய் நிறுத்தப்பட்டார்கள். அவர்களில் குமரன் நம்பியின் தோற்றத்தைக் கொண்டும், மற்றவர்கள் அடிக்கடி அவன் முகக் குறிப்பையே எதிர்பார்த்ததில் இருந்தும், அவன்தான் குழுவின் தலைவன் என ஆந்தைக்கண்ணனால் அநுமானிக்க முடிந்தது. எனவே அவன் சேர நாட்டு நிலைபற்றியும், கொடுங்கோளூர் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியுள்ளன என்பது பற்றியும் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். குமரன் நம்பி அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மறுமொழி கூறாமல் மெளனம் சாதிக்கவே ஆந்தைக்கண்ணனின் விழிகளில் சீற்றம் பன்மடங்காகியது.

கடம்பர்களிடம் சிறைப்பட்டவர்கள் உயிரோடு மீண்டு செல்ல நேர்ந்ததில்லை என்று நீ கேள்விப்பட்டிருப்பாய் !”

ஆம் ! அதே கடம்பர்களை எங்களுடைய பேரரசர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவர் பலமுறை ஓட ஓட விரட்டியிருக்கிறார் என்பதையும் சேர்த்துதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

இருக்கலாம் இளைஞனே ! ஆனால் அதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்குவதற்குத்தான் இப்போது சமயம் பார்த்து வந்து இந்த மகோதைக் கரையை முற்றுகையிட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதே-” என இடி முழக்கம் போன்ற கடுமையான குரலில் குமரன் நம்பிக்கு மறுமொழி கூறிவிட்டுக் கடகடவென அரக்கச் சிரிப்புச் சிரித்தான் ஆந்தைக்கண்ணன். பேச்சோடு பேச்சாக அவனிடம் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கொடுங்கோளுரில் இருந்து சிறைப்பிடித்து வந்த கொடுமையைக் கடிந்து குமுறலாமா என்றெண்ணி அப்படி எண்ணிய சுவட்டோடு அதை அடக்கிக் கொண்டான். ஒரு வேளை அமுதவல்வி அங்கே சிறைப்பட்டிருப்பாளேயாகில் தான் குமுறுவது காரணமாகவே ஆந்தைக் கண்ணன் அவளைத் தன்னோடு சேர்த்து உணர்ந்து - அவள் தன்னைச் சேர்ந்தவளே என்ற கருத்தினாலேயே - அவன் அவளைக் கொடுமைப்படுத்தக் கூடுமோ என அஞ்சி அந்த எண்ணத்தைக் குமரன் நம்பி கைவிட்டான். “நாளை இரவில் உங்கள் கொடுங்கோளுர் நகரைச் சூறையாடுவோம். அப்படி உங்கள் அருமையான நகரம் சூறையாடப்படுவதை நீங்களும் இதே கப்பலின் மேல் தளத்திலிருந்து காணலாம். உங்களை இந்தக் கப்பலின் பாய் மரங்களிலும் சட்டங்களிலும் கட்டி வைத்துவிடுவோம்...”

ஒருநாளும் இது நடை பெறப்போவதில்லை.”

நிச்சயமாக நாளை நடைபெறப் போகிறது! அதை நீயும் பார்க்கத்தான் போகிறாய் இளைஞனே!” என்று தன்னுடைய ஒரு கையில் இன்னொரு கைவிரல்களை மடக்கி ஓங்கிக் குத்தியபடியே கூறினான் ஆந்தைக்கண்ணன். ஒவ்வொரு தடவை பேசி முடிக்கும் போதும் அவன் பற்களை நறநறவென்று கடித்து ஓசை எழுப்புவது கேட்கக் கோரமாக இருந்தது.

----------------

 10. ஒரே ஒர் இரவு

 

கடம்பர்களிடமிருந்து எப்படித் தப்புவது என்ற சிந்தனை குமரன் நம்பியை வாட்டியது. காலமும் அதிகமில்லை. ஒரு பகலும் ஓர் இரவுமே மீதமிருந்தன. என்ன செய்வது எப்படித் தப்புவது என்ற சிந்தனைக்கு விடையாக ஓர் உபாயமும் தோன்றவில்லை. அடுத்த நாள் இரவில் கொடுங்கோளூரைச் சூறையாடிக் கப்பல்களில் வாரிக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் தங்களைச் சூழ நடந்து கொண்டிருப்பதை அவர்களே அங்கு கண்டார்கள். பல முறை சேர மாமன்னர் செங்குட்டுவரிடம் தோற்ற தோல்விகளுக்கெல்லாம் பழி வாங்குவது போல் இம்முறை அறவே கொள்ளையடித்துக் கொண்டு போகும் எண்ணத்துடன் ஆந்தைக் கண்ணன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது யாவருக்கும் புரிந்தது.

குமரன் நம்பிக்கோ சிறைபட்ட வேதனையைப்போலவே பிறிதோர் வேதனையும் உள்ளத்தை வாட்டிக் கொண்டிருந்தது.

இந்தக் கப்பல்களில் ஏதோ ஒன்றில் அமுத வல்லி சிறைப்பட்டிருந்தும் அவள் எங்கே எப்படிச் சிறைப்பட்டிருக்கிறாள்? அவளை எவ்வாறு விடுவிப்பது?’ என்ற கவலைகள் அவனை வாட்டின. நகரத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டிய கவலைகள் ஒரு பக்கம் என்றால் இதயத்தைக் கவர்ந்தவளைத் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டிய கவலைகள் மற்றொரு பக்கம் சூழ்ந்தன. கடம்பர்களின் கட்டுக்காவலோ மிக அதிகமாகவும் கடுமையாகவும் இருந்தன. தப்புவதற்கான வழிகள் அரிதாயிருந்தன.

பகலில் அவர்களுக்கு முறையாக உணவு கூட வழங்கப்படவில்லை. நாற்றிசையும் கடல் நீரைத் தவிர உதவிக்கு வருவார் யாரும் தென்படாத நிலையில் இரவை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருந்தான் குமரன் நம்பி. அவனுடைய பயமெல்லாம் அமைச்சர் அழும்பிள்வேள் தன்னைப் பக்குவ மடையாத விடலைப்பிள்ளை என்று கூறும்படி வாய்ப்பளித்து விடலாகாதே என்பதுதான். 

அவர்கள் கொடுங்கோளுரில் இருந்து கொண்டு வந்திருந்த படகுகளை எல்லாம் ஆந்தைக்கண்ணன் கைப்பற்றிக் கொண்டதோடு மட்டும் அன்றிப் படகோட்டிகளையும் சிறை படுத்திவிட்டான். குமரன் நம்பி முதலிய வீரர்களை ஒரு மரக் கலத்திலும், இவர்களுக்குப் படகோட்டி வந்தவர்களை வேறொரு மரக்கலத்திலுமாகப் பிரித்துப் பிரித்துச் சிறை வைத்திருந்ததனால் ஒருவரோடொருவர் சந்திக்கவும் வாய்ப்பின்றி இருந்தது. 

நேரம் ஆகஆகத் தப்பிக்கவும்-திரும்பவும் முடியுமென்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. கதிரவன் மறைகின்ற நேரமும் நெருங்கியது. கடம்பர்களின் கொள்ளை மரக் கலங்களில் மறுநாள் கொடுங்கோளூர் நகரைக் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடுகள் தீவரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லோரும் தப்ப முடியாவிட்டாலும் யாராவது ஒரிருவர் தப்பினாலும் போதும் என்ற குறைந்த நம்பிக்கையையும் நிறைவேற்றிக் கொள்ள வழி தெரியவில்லை அவர்களுக்கு. எதைச் செய்வதாயிருந்தாலும் அந்த இரவுக்குள் செய்து முடித்துவிடவேண்டும். முன்னெச்சரிக்கையாக நகருக்குள் ஒருவர் செல்ல முடிந்தாலும் பொன்வானி முகத்துவாரக் காவல் படையையும், மகோதைக்கரை கடற் படையையும் கட்டுப்பாடாக எதிர் நிறுத்திக் கடம்பர்களை முறியடிக்கலாம் என்று குமரன் நம்பிக்குத் தோன்றியது. ஆனால் வழிதான் பிறக்கவில்லை. முன்னிரவும் வந்தது. மறுபடி ஆந்தைக்கண்ணன் கோரமான ஏளனச்சிரிப்புடன் அவர்கள் முன் வந்தான். 

உங்களில் சிலர் உயிர் பிழைக்கலாம்! ஆனால் அதற்கும் நிபந்தனை உண்டு. பொன்வானியாற்றின் முகத்துவாரத்திற்குள் நுழைவதற்கும்-நகரில் செல்வங்களைக் கொள்ளையிடுவதற்கும் எங்களுக்கு வழிகாட்டியுதவுகிறவர்களுக்கு - நாங்கள் உயிர்ப் பிச்சையும் கொள்ளையில் சிறிது பங்கும் தரலாம். ஆனால் அப்படி எங்களை நம்ப வைத்து நடித்துவிட்டு நடுவிலே காலை வாரிவிடுகிறவர்களைச் சித்திரவதை செய்வதற்கும் தயங்க மாட்டோம் என்று கூறினான் அவன். 

அவனுடைய அந்தப் பேச்சைக் கேட்டு ஒருவர் முகத்திலாவது மலர்ச்சி ஏற்படவில்லை. மாறாக வெறுப்புடன் ஏறிட்டுப் பார்த்தார்கள் அவர்கள். ஆனால் இதென்ன? 

அவர்கள் கண் காணவே முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து ஆந்தைக்கண்ணனுக்கு வரவேற்புக் கிடைத்தது. அந்த வரவேற்பை அளித்தவன் தலைவனே ஆயினும் அவனை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் துச்சமாகவும், ஆத்திரமாகவும் உறுத்துப் பார்த்தார்கள் மற்ற வீரர்கள். அவர்கள் மனங்கள் குமுறின. 

ஆம்! கொடுங்கோளுர்ப்படைக்கோட்டத்துத் தலைவனாகிய குமரன் நம்பிதான், அந்தக் கொடுந் துரோகத்தைப் புரியவும் ஆந்தைக்கண்ணனுக்கு நகரைக் கொள்ளையிடுவதில் உதவி புரியவும் முன்வருவதுபோல் முகமலர்ந்திருந்தான். 

ஒருவனுடைய உதவியை நாடும்போது கைகளைப் பிணித்துச் சிறைவைத்துக்கொண்டு நாடுவது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா? ஒருவேளை நீங்கள் பிணித்திருக்கிற கைகளினால் உங்களுக்கே உதவி வேண்டுமானால் அப்படிச் செய்வது அழகாயிராதே?” என்று குமரன்நம்பி புன்முறுவலோடு தானாகவே வலுவில் ஆந்தைக் கண்ணனோடு பேச்சுக் கொடுத்தது மற்றவர்களுக்கு ஒரு சிறிதும் பிடிக்கவில்லை. 

கேவலம் உயிரையும் வாழ்வின் ஆசைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பொறுப்பு வாய்ந்த கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தலைவன் இவ்வளவு இழிவான காரியத்தைச் செய்ய முன் வருவான் என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர்கள் நம்பியும் ஆக வேண்டியிருந்தது. 

குரூரமான அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆந்தைக்கண்ணனை - அணுகி ஓர் அடிமையைவிடப் பணிவாகவும் குழைவாகவும் பேசத் தொடங்கிவிட்டான் குமரன்நம்பி. 

உங்களுக்குத் தேவையான உதவியை நான் செய்ய முடியும். ஆனால் அதற்கு நீங்கள் என்னை முழுமையாக நம்ப வேண்டும். நாளைக் காலையில் நீங்கள் நகரில் கொள்ளையிட வருகிறீர்கள் என்றால் இன்றிரவே நகரத்தை அதற்கு ஏற்றபடி உங்களுக்கு ஒரு தடையுமின்றிச் செய்துவைக்க என்னால் முடியும். ஆனால் என்ன இருந்தாலும் நான் அப்படி செய்து வைக்கிறேன் என்று சொல்கிற வார்த்தையை மட்டுமே நம்பி என்னைத் தனியாக என்னுடைய நகரத்துக்குள் அனுப்பி வைக்கும் நம்பிக்கை உங்களுக்கு வராது. எனவே என்னோடு நான் உங்களுக்குத் துரோகம் செய்து விடாமல் எனது வாக்குறுதியைக் காக்கிறேனா இல்லையா என்று கண்காணிக்க என்னைவிட வவியவர்களான கடம்பர்கள் சிலரையும் உடன் அனுப்பி வைத்தால்கூட நான் மறுக்க மாட்டேன். அவர்களையும் உடனழைத்துச் சென்று நகரத்தில் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நீக்கி உங்கள் வருகைக்கு வாய்ப்பாக வைத்திருப்பேன். அப்படி நான் செய்யத் தவறினால் என்னோடு உடன் வருகிற உங்கள் ஆட்களிடமே என்னைக் கொன்று போடுமாறு ஆணையிட்டு அனுப்புங்கள் என்று குமரன் நம்பியே ஆந்தைக்கண்ணனிடம் உருகியபோது உடனிருந்த சேர நாட்டு வீரர்களுக்கு அந்தப் பச்சைத் துரோகத்தைக் கண் முன்னே கண்டு இரத்தம் கொதித்தது. ‘சீ! இவனும் ஒரு ஆண்மகனா?’ என்று குமரன் நம்பியை இழிவாக எண்ணினர் அவர்கள். 

அதே சமயத்தில் ஆந்தைக்கண்ணனும் குமரன் நம்பியின் திடீர் மனமாற்றத்தை உடனே நம்பிவிடவில்லை என்று தெரிந்தது. 

துரோகம் செய்ய முன்வருகிறவர்களை அவர்கள் நண்பர்களும் நம்பக்கூடாது, விரோதிகளும் நம்பக்கூடாது என்பார்கள். அதனால்தான் உன்னை நம்ப முடியவில்லை இளைஞனே?” என்று கூறி அவன் முகத்தையே கூர்ந்து கவனிக்கலானான் ஆந்தைக்கண்ணன். அவனுடைய உருளும் விழிகள் குமரனைத் துளைத்தன. 

என்னை முற்றிலும் நம்பவேண்டாம்! உங்கள் ஆட்களையும் உடன் அனுப்புங்கள் என்றுதானே நானும் கூறுகிறேன் என்றான் குமரன். 

இதில் நயவஞ்சகம் ஏதுமில்லையே?” என்று மறுபடியும் மிரட்டினான் ஆந்தைக் கண்ணன். 

உங்களை எதிர்த்து யாராலும் நயவஞ்சகம் புரிய முடியாது என்று ஆந்தைக்கண்ணனைப் புகழ்ந்து மறுமொழி கூறினான் குமரன். ஆந்தைக்கண்ணனின் முகத்தில் நம்பிக்கை ஒளி படரலாயிற்று.

----------------

 11. அமைச்சரின் சிந்தனைகள்

 

இரவோடிரவாகக் கடலுக்குள் சென்ற குமரன் நம்பியுடன் உடன் துணைசென்றவர்களும் திரும்பவில்லை என்பதோடு கொள்ளைக்காரர்களின் மரக்கலங்கள் கொடுங்கோளுரை நெருங்கிவிட்டன என்பதும் அமைச்சர் அழும்பில்வேளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. உடனே அவர் அதிகப் பரபரப்படைந்து விடவில்லை என்றாலும் வேளாவிக்கோ மாளிகையில் ஓர் மந்திராலோசனை நிகழ்த்தினார். 

குமரன் நம்பியும் அவனுடைய கொடுங்கோளுர் படைக் கோட்டத்து வீரர்களும் கொள்ளைக்காரர் முற்றுகையை முறியடிக்கத் தவறினால் அடுத்து என்ன ஏற்பாடு செய்வதென்று இப்போது நாம் சிந்திக்க வேண்டும்?” என்று அமைச்சர் கூறியபோது சேரநாட்டு அரசவையோடு பெருந்தொடர்புடைய வஞ்சிமாநகரத்து மூதறிஞர் சிலர் குமரன் நம்பியின் குறைந்த ஆற்றலையும் இளம் பருவத்தையும் குறைவாக மதிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்தார்கள். முற்றுகையிலிருந்து சேரநாட்டுக் கடற்கரை நகரங்களை மீட்கும் பொறுப்பைக் குமரன்நம்பியைப் போன்ற ஓர் இளைஞனிடம் ஒப்படைத்தது தவறு என்று கூட அவர்களில் சிலர் கருதுவதாகத் தெரிந்தது.

பெரும்வீரரும் பெரும்படைத் தலைவரும் மாமன்னரோடு வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் குமரன்நம்பியைத் தவிர வேறெவரும் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் எல்லாக் காரியங்களையும் வயது முதிர்ந்தவர்களே நிறைவேற்றித் தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில காரியங்களை வயது முதிர்ந்தவர்களைவிட இளைஞர்கள் ஆர்வத்தோடு நிறைவேற்றித் தரமுடியும். இது அப்படிப்பட்ட காரியமோ இல்லையோ? நான் இதை அப்படிப் பட்ட காரியமாக ஆக்கியே குமரன் நம்பியை அனுப்பி வைத்திருக்கிறேன் என்றார் அழும்பில்வேள்.

மந்திராலோசனையில் கலந்து கொண்டிருந்த மற்றவர்களுக்கு இது பிடிக்கவுமில்லை, புரியவுமில்லை. ஆனால் வேளாவிக்கோ மாளிகை எல்லையில் இருந்துகொண்டு அழும்பில்வேளை எதிர்த்துப் பேசவும் அவர்கள் அஞ்சினார்கள். அழும்பில்வேளோ முற்றுகையை நீக்குவதற்கு குமரன்நம்பியைவிட வேறு தகுதியான ஆளில்லை என்றே வாதித்தார். தலைநகரப் பாதுகாப்பிற்கென்று இருந்த சில வீரர்களும், கொடுங்கோளுருக்கு அனுப்பப் பெற்றனர். வேளாவிக்கோ மாளிகை என்ற அரசதந்திரக் கட்டிடம் இதற்குமுன் இவ்வளவு பரபரப்பை அடைந்ததே கிடையாது.

அந்த மாளிகையின் தூண்கள் கட்டிடத்தை மட்டும் தாங்கி நிற்பதில்லை. மாபெரும் அரசதந்திர நிகழ்ச்சிகளையும் அதிராமல் தாங்கி நின்றிருக்கிறது. சேர நாட்டின் பெரிய பெரிய அரசியல் முடிவுகள் எல்லாம் இந்த அரசதந்திர மாளிகையில்தான் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அழும்பில்வேள் வஞ்சிமாநகரத்தின் முதியவர்களோடு மந்திராலோசனை முடித்து அவர்களை எல்லாம் விடைகொடுத்து அனுப்பி விட்டாலும் தமக்குள் தவிர்க்கமுடியாத சிந்தனையில் ஆழ்ந்தார். இந்தப் பொறுப்பை கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவனான குமரன் நம்பி எந்த அளவு நிறைவேற்றியிருக்கிறான் அல்லது நிறைவேற்றவில்லை என்பதை அவரால் இன்னும் கணித்தறிய முடியாமலிருந்தது.

சொந்தமாகவே பரபரப்புக் காண்பிக்க ஏற்ற காரணம் தெளிவாகவே கூறப்பட்டிருந்தும் அதை அவன் விரைந்து நிறைவேற்றினானா இல்லையா என்பது தெரியவில்லை. மகோதைக் கரையில் கொடுங்கோளுரிலிருந்தும், முசிறியிலிருந்தும் ஒவ்வொரு விநாடியும் செய்திகளை எதிர்பார்த்த வண்ணம் விழித்திருந்தார் அழும்பில்வேள். வலியனும் பூழியனும் அவருக்கு உறுதுணையாக உடனிருந்தனரென்றாலாவது சிறிது ஆறுதலாயிருக்கும். அவர்களையும் குமரனோடு கொடுங்கோளுர் அனுப்பியாயிற்று. கொடுங்கோளுரிலிருந்து அவர்கள் கடைசியாக அமைச்சர் பெருமானுக்கு அனுப்பிய செய்தி: குமரன் முதலில் ஒருமுறை நிலைமையறிவதற்காகக் கடலுக்குள் சென்றுவந்தது தவிர மீண்டும் சில வீரர்களோடு கடம்பர் மரக்கலங்கள் உள்ள கடற்பகுதிக்குப் போயிருக்கிறான். போன இடத்தில் அவனுக்கும் அவனுடன் சென்றவர்களுக்கும் என்ன நேர்ந்ததென்றே இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒரு மாறுதல் மட்டும் மாகோதைக் கரை மக்கள் யாவரும் வெளிப்படையாகக் காணும்படி நேர்ந்திருக்கிறது. முன்பு கடலில் வெகுதொலைவில் ஒரு தீவினருகே நின்றிருந்த கடம்பர் மரக்கலங்கள் இப்போது கொடுங்கோளுருக்கும், முசிறிக்கும் மிக மிக அருகே நெருங்கியிருக்கின்றன. இந்தச் செய்தியைத் தம்முடைய அந்தரங்க ஊழியர்களாகிய வலியனும் பூழியனும் அனுப்பியிருந்ததனால் ஒரு வார்த்தையும் மிகையாகவோ, குறைவாகவோ இருக்குமென்று தோன்றவில்லை. 

குமரன் தன்னுடன் சென்றவர்களோடு கடம்பர்களிடம் பிடிபட்டிருப்பானோ?’ என்ற சந்தேகமும் அவர் மனத்தில் இருந்தது. தலைநகரத்தில் பேரரசரும், படைத் தலைவரும், பிறரும் உள்ள நேரமாயிருந்தால் அமைச்சர் அழும்பில்வேன் மிக மிக இன்றியமையாத இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு இப்படிக் குமரன் நம்பியைப் போன்ற ஓர் இளைஞனை நம்பி அனுப்பியிருக்க மாட்டார். ஆனால் யாரும் தலைநகரில் இல்லாத நிலையை எண்ணி இருப்பவர்களைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. 

எனவேதான் குமரன் நம்பியையும் நம்பி அந்தப் பாதுகாப்பில் அவனுடைய சொந்தக் காதலியே முதலில் பாதிக்கப்பட்டிருப்பதையும் அவன் கவனத்துக்குக் கொண்டு வந்து - அதன் பின் அவனிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அனுப்பி யிருந்தார் அமைச்சர். பொதுக்காரியமாக உள்ள ஒன்றை ஆற்றவேண்டியவனிடம் அதை அவனுடைய சொந்தக் காரியமாகவும் மாற்றி ஒப்படைக்கும்போது அதற்கு இரட்டைப் பொறுப்பு வந்து விடுகிறது. குமரன் நம்பியும் அன்று வேளாவிக்கோ மாளிகையில் தன்னைச் சந்தித்தபோது அத்தகைய பொறுப்போடும், உணர்ச்சி வேகத்தோடும்தான் திரும்பிச் சென்றிருந்தான் என்பதை அனுமானித்திருந்தார் அவர். அந்த அனுமானம் பொய்யாகாதென்றாலும் போர்க்களச் சூழ்நிலையில் மனிதர்களை மீறியும் காரியங்கள் நடைபெற முடியும்-என்றும் எண்ண முடிந்தது. 

குமரனைப்பற்றிய எந்தச் செய்தியும் தெரியவில்லை என்று தெரியவந்ததும், ‘கொள்ளை மரக்கலங்களை வளைத்துப் பிடித்துத் தாக்கவேண்டும் என்பதையும் துரத்த வேண்டும் என்பதையும்விட அந்த மரக்கலங்களில் ஏதாவதொன்றில் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி சிறைப்பட்டிருப்பதாகக் கருதி அவளை முதலில் மீட்பதே தன் கடமை என்ற எண்ணத்தில் செயல்பட்டு அதன் காரணமாகவே குமரன் அகப்பட்டுக்கொண்டிருப்பானோ - என்றும் உய்த்துணர முடிந்தது அமைச்சரால். ஆனாலும் அவர் அயர்ந்து விடவில்லை. நம்பிக்கையோடு வேளாவிக்கோ மாளிகையிலிருந்த வேறொரு வீரன் மூலம் - கொடுங்கோளுருக்குக் கட்டளைகளை அனுப்பினார். 

குமரனும் அவனோடு சென்றவர்களும் திரும்பவில்லை என்பதற்காகக் கலங்கவேண்டாம். எந்தச் சமயத்தில் மகோதைக் கரையில் எந்தப் பகுதியிலிருந்து - கடம்பர்களின் மரக்கலங்கள் நகரத்தைக் கொள்ளையிட நெருங்கினாலும் அந்தப் பகுதியின் கரைப்பகுதியில் எல்லாவிதங்களிலும் எதிர்த்துத் தாக்கவும், தடுக்கவும் ஆயத்தமாக இருக்குமாறு - செய்திகள் தெரிவிக்கப் பட்டிருந்தன. கொள்ளைக்காரர்கள் மகோதைக்கரை நகரங்களில் ஊடுருவதற்குக் காரணமான இடங்களாகப் பெரும்பாலும் பொன்வானி, ஆயிரை பேரியாறு போன்ற ஆறுகளின் முகத்துவாரங்களே பயன்படக் கூடுமாதலால் அந்த முகத்துவாரங்களில் காவலையும் கட்டுத் திட்டத்தையும், விழிப்பாகச் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்திருந்தும், வேளாவிக்கோ மாளிகையிலிருந்த அமைச்சர் அழும்பில்வேளுக்கு மன நிம்மதியில்லை. உள்ளம் ஒரு விநாடிகூட விடுபடாத சிந்தனைகளில் மூழ்கியிருந்தது. 

கொடுங்கோளுருக்கு உடன் சென்ற பூழியனும் வலியனும் அங்கே படைக் கோட்டத்தில் இருப்பதால் சமயோசிதமாக ஏதாவது செய்து அவர்கள் நகரத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. நல்ல வேளையாக எல்லா நிலையிலும், எல்லாச் சமயங்களிலும் குமரன் நம்பியோடு உடன் செல்வதே தங்கள் கடமை என்று எண்ணி அந்த இருவரும் கடம்பர் மரக்கலங்கள் இருந்த கடற்பகுதிக்குச் சென்று அகப்பட்டுக் கொண்டு விடவில்லை என்பது அமைச்சருக்கு நம்பிக்கை அளித்தது. அவர்களும் கடற்பகுதிக்குச் சென்று குமரனைப்போல் திரும்பாமலிருந்தால் தமக்குச் செய்தி தெரியவும், தாம் செய்திகளைத் தெரிவிக்கவும், கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தில் நம்பிக்கை வாய்ந்த மனிதர்களே இல்லாமல் போயிருப்பார்கள் என்பதை அமைச்சரும் உணர்ந்துதான் இருந்தார். அமைச்சர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் கடம்பர் மரக்கலங்களில் இருந்த குமரனும் அவனுடன் சென்றவர்களும் என்ன ஆனார்கள் என்பதை இனிமேல் கவனிக்கலாம்.

--------------

 12. குமரன் திரும்புகிறான்

 

தங்கள் தலைவனாகிய கொடுங்கோளுர் குமரன் நம்பி ஆந்தைக்கண்ணனுக்கு விட்டுக் கொடுத்து அப்படித் திடீரென்று மனம் மாறியதைச் சிறைப்பட்டிருந்த சேரநாட்டு வீரர்கள் யாருமே விரும்பவில்லை. 

என்னை உங்கள் வீரர்களோடு பொன்வானி முகத்துவாரத்திற்கு அனுப்புங்கள் வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன் என்று குமரன் நம்பியே ஆந்தைக்கண்ணனிடம் முகமலர்ச்சியுடனே வேண்டியபோது யாராலும் அதை நம்பமுடியவில்லை. முதலில் ஆந்தைக்கண்ணனே அதை நம்பவில்லை. குமரனோடு வந்திருந்த சேர நாட்டு வீரர்களே அவனுடைய இந்தச் சொற்களைக் கேட்டு அவனை வெறுப்பு உமிழப் பார்த்ததையும், காறித் துப்பியதையும் கண்ட ஆந்தைக் கண்ணன், இவன் இனத்து வீரர்களே இதற்காக இவனை வெறுப்பதால் இந்தத் துரோகத்தை உயிருக்குப் பயந்து கொண்டு இவன் உண்மையில்தான் செய்ய முன்வருகிறான் போலும் என்று தன் மனத்துக்குள் நினைத்தான். எந்த எதிரியை அவனுடன் உள்ள அவன் இனத்தவரே வெறுப்பதாகக் தெரிகிறதோ அந்த எதிரியைத் தனக்கு நண்பனாக்கிக் கொள்ள முடியும் என்ற முடிவுக்கு ஆந்தைக்கண்ணன் வந்த பின் அவன் குமரனைத் தன் இனத்தவராகிய கடம்பர்களோடு பொன்வானி முகத்துவாரத்திற்கு நிலைமை அறிந்து வர அனுப்பி வைப்பது என்று முடிவு செய்து கொண்டுவிட்டான். 

உன் இனத்தவருக்குத் துணிந்து இப்படி துரோகம் செய்ய முன்வருகிற நீ அடுத்த விநாடியே எனக்கும் துரோகம் செய்யத் துணியமாட்டாயே?” என்பதுபோல் ஒரு வினாவை இரண்டு மூன்று முறை குமரனிடம் ஆந்தைக்கண்ணன் வினவினான். 

என்றாலும் குமரனைத் தன் காரியத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதென்ற தீர்மானம் ஆந்தைக்கண்ணனின் அந்தரங்கத்தில் ஏற்பட்டுவிட்டது. குமரனோடு சேர்த்து சிறைப் பட்ட மற்ற வீரர்களை வைத்துக்கொண்டு குமரனை மட்டுமே தன் ஆட்களோடு ஆற்று முகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஆந்தைக்கண்ணன் செய்யலானான். 

ஆந்தைக்கண்ணனின் மாபெரும் கொள்ளை மரக்கலத்தின் அருகே சிறு படகு ஒன்றும் வந்து நின்றது. சுற்றிலும் படகில் தன் ஆட்களாகிய முரட்டுக் கடம்பர்களை அமரச் செய்து நடுவே குமரனை இருக்கச் செய்யவேண்டும் என்று நினைத்தான் ஆந்தைக்கண்ணன். குமரனின் காது கேட்கவே தன் ஆட்களிடம் அவ்வாறு கூறவும் செய்தான். 

இந்தப் படைத்தலைவன் உங்களோடு வருகிறான் என்பதற்காக இவனையே முற்றிலும் நம்பிவிடாதீர்கள். பொன் வானி முகத்துவாரத்தை நெருங்கியதும் இவனை உடன்வைத்துக் கொண்டு என்னென்ன நிலைமைகளை அறிந்து கொள்ள முடியுமோ அதை மட்டுமே அறிந்து வாருங்கள். முகத்துவாரத்தின் வழியே கரைப் பகுதியில் அதிகமாக உள்ளே நுழைந்து விடவும் கூடாது. அப்படிச் செய்தால் ஒருவேளை நீங்களே இங்கே திரும்பி வரமுடியாத நிலைமைகள் ஏற்பட்டாலும் ஏற்பட்டு விடலாம்என ஆந்தைக்கண்ணன் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்ட போது அந்தக் கட்டளையின் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு சொல்லின் பொருளையும், பொருளுக்குப் பின்னிருந்த தொனியையும், அதற்குப் பின்னாலிருந்த அரச தந்திரக் குறிப்புகளையும் குமரன் நம்பி கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான். 

கடம்பர்களே! நாம் கொடுத்து வைத்தவர்கள், ஏனென்றால் நமது முற்றுகையைக் கரையிலிருந்து எதிர்த்து முறியடிக்க வேண்டிய சேரநாட்டு கொடுங்கோளுர்க் கோட்டையின் படைத் தலைவனே நமக்குத் துணையாக கரைவரை வரப்போகிறான் என்பது எவ்வளவு பெரிய உதவி என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். வீரர்களில் யாராவது உயிருக்குப் பயந்து அல்லது பொன்னை, பொருளை தயந்து துரோகிகளாக மாறுவார்கள். நாமோ ஒரு கட்டத்தின் தலைவனே துரோகியாக மாறி நமக்கு உதவிபுரிய முன்வருமாறு சந்தர்ப்பத்தை உண்டாக்கிவிட்டோம் என்று கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் கூறியபோது, அதைக் கேட்டுத் தனக்குள் நகைத்துக் கொண்டான் குமரன் நம்பி. 

குமரன் நம்பியோடு உடனிருந்தவர்களோ வெறுப்பையும் கடந்து இப்படியும் ஒரு பச்சைத் துரோகம் உண்டா? என்று வெறுக்கும் எல்லையிலிருந்து விரக்தி எல்லைக்குப் போய் நினைக்கத் தொடங்கியிருந்தார்கள். 

அவர்களுடைய வெறுப்பையோ, விரக்தியையோ பொருட்படுத்தாமல் கடம்பர்களோடு ஆற்று முகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டான். போகும்போது தன்னுடன் வந்த சேர வீரர்களை நோக்கி, ‘போர்க்களத்திலும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் குறிப்பறிதல் மிக மிக அவசியம் என்று கூறிய வாக்கியத்துக்கு என்ன அர்த்தம் எனப் புரிந்து கொள்ள முயன்றனர். குமரன் நம்பி அந்த வாக்கியத்தை எதற்காக என்ன பொருளில் தங்களை நோக்கி கூறிவிட்டுச் சென்றான் என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது. 

கரையை நோக்கிப் புறப்படுவதற்கு முன் குமரன் நம்பி வேண்டிக் கொண்டிருந்தபடி அவனுடைய கைகளைப் பிணித் திருந்த கட்டுக்களை அவிழ்த்து விடுமாறு ஆந்தைக்கண்ணன் கட்டளையிட்டான், கட்டளையிட்டவன் குமரனிடம் எச்சரித்தான். 

உன் உதவியை நாடுகிற சமயத்தில் கைகளைப் பிணித்துச் சிறை வைத்துக் கொண்டு நாடக்கூடாதென்று சற்று முன் நீ கூறினாய்! அதனால் உன் கட்டுக்களை அவிழ்க்கச் செய்து விட்டேன். இந்த நிலையை நீ தவறாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றால் உயிரோடு தப்பமாட்டாய் என்பதை மட்டும் நினைவு வைத்துக்கொண்டால் போதும்.” 

"நான்தான் அப்பொழுதே கூறினேனே கடம்பர் தலைவரே! உங்களை எதிர்த்து யாராலும் நயவஞ்சகம் புரிய முடியாதென்பது எனக்குத் தெரியாதா என்ன? எதைச் செய்ய வேண்டுமோ அதை நான் அவசியம் செய்வேன் என்ற நம்பிக்கையோடு என்னை அனுப்புங்கள் என்றான் குமரன் நம்பி. 

படகு கரையை நோக்கிப் புறப்பட்டது. குமரன் நம்பியைக் கட்டவிழ்த்து விட்டு விட்டாலும் படகில் அவனைச் சுற்றி வாளேந்திய முரட்டுக் கடம்பர்கள் அமர்ந்து கொண்டார்கள். அவர்களோ எண்ணிக்கையில் ஐவர். அவனோ ஒருவன். அவர்களிடம் கருவிகளும் படைக்கலங்களும் இருந்தன. அவனோ வெறுங்கையனாக ஆக்கப்பட்டிருந்தான். கரை நெருங்க குமரன் நம்பியின் சிந்தனை விரைவாக வேலை செய்தது. கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களிலேயே சிறைப்பட்டுத் தங்கிவிட்ட தன் நண்பர்கள் வேறு தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களே என்ற கவலையும் அவன் மனத்தில் இருந்தது. 

கரைக்கு அருகில் வந்ததும் படகில் அவனைச் சூழ இருந்த கடம்பர்கள் அவனைச் சுற்றி நெருக்கமாக வலை பின்னினாற் போல இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தார்கள். அவனிடம் கேள்விகளையும் கேட்கத் தொடங்கினார்கள். 

முகத்துவாரத்தை ஒட்டியோ, கரை ஓரத்திலோ எங்கும் சேரநாட்டுப் படைவீரர்கள் ஆயுதங்களோடு மறைந்திருப்பார்களோ? உள்ளதைக் கூறு. எங்களிடம் எதையாவது மறைத்துப் பொய் கூறினாயோ உன் உயிர்தான் போகும்...” 

சேர நாட்டில் இப்போது வீரர்கள் இருந்தால்தானே மறைந்திருந்து உங்களைத் தாக்க முடியும்? சேர நாட்டில்தான் இப்போது வீரர்களே இல்லையே? எல்லா வீரர்களும் வடக்கே குயிலாலுவப் படையெடுப்பில் அல்லவா இருக்கிறார்கள்?” என்று குமரன் நம்பி அவர்களுக்கு மறுமொழி கூறினான். 

ஆற்றுமுகத்திலிருந்து நகரத்திற்குள் போகும் நீர் வழியின் இருபுறமும் ஒரே மரஞ் செடி கொடிகளாகப் பசும் புதர் அடர்ந்திருக்கும் அல்லவா?” 

ஆமாம்! அடர்ந்திருக்கும் 

அந்தப் புதர்களிடையே ஆற்றுக்கால் வழியே படகில் நாம் சென்று திரும்ப இடையூறு எதுவும் கிடையாதே?” “ஏன் இப்படி அடிக்கடி ஐயப்படுகிறீர்கள்? ஆற்றின் இரு புறமும் பசுமை செழித்து அடர்ந்திருப்பது நல்ல வளத்தின் காரணமாகத்தானேயன்றி வீரர்கள் மறைந்திருந்து தாக்குவதற்காக அன்று.” 

அதற்காக சொல்ல வரவில்லை. சேரநாட்டில் மிகக் குறைந்த வீரர்கள்தான் இருப்பதாக நீயே கூறியதால் தந்திரமான வழிகளில் அன்றி வேறு விதங்களில் அவர்கள் பகைவர்களை எதிர்த்துச் சமர் புரிய முடியாது. தந்திரமாகச் சமர் புரியும் வழிகளில் இதுவும் ஒன்று. இருபுறமும் நெருங்கிய மரக்கூட்டங்களிடையே உள்ள பொன்வானியாற்றுக் கால் வழியே நாம் போகிறபோது நம்மை வளைக்க முடியுமென்று தான் இதைக் கேட்டோம். இதற்கு நீ சொல்லும் மறுமொழியிலிருந்துதான் நாம் உள்ளே எவ்வளவு துரம் போகலாம் அல்லது போகக்கூடாது என்பதைப்பற்றி ஒரு முடிவு செய்யலாம்.” 

என்னை நம்பி நான் எவ்வளவு தூரம் உங்களை அழைத்துச் செல்கிறேனோ அவ்வளவு தூரம் நீங்கள் பயமின்றி வரலாம்.” 

குமரன் இவ்வாறு கூறும்போது அவர்கள் சென்ற படகு பொன்வானி முகத்துவாரத்திற்குள் நுழைந்திருந்தது. கடம்பர்கள் குமரனின் முகத்தையே வைத்தவிழி வாங்காமல் நோக்கினர். அவன் உண்மையாகவே தங்களுக்கு எல்லாவற்றையும் காண்பிக்க அழைத்துக்கொண்டு போகிறானா அல்லது ஏமாற்றுகிறானா என்பதில் இன்னும் அவர்களுக்குச் சந்தேகம் தீரவில்லை. 

பெருமரக்கலங்களை கரையிலிருந்து சிறிது தொலைவில் ஆழமான கடற்பகுதியிலேயே நிறுத்தி வைத்துவிட்டுச் சிறு சிறு படகுகளில் பொன்வானி, ஆயிரை, பேரியாறு மூலம் சேரநாட்டு நகரங்களில் அங்கங்கே கொள்ளையிட நுழைந்தால் எங்களை எதிர்க்கப்போதுமான வீரர்கள் இருக்கிறார்களா அல்லது எங்கள் நோக்கம் ஈடேறுமா என்று குமரனிடமே மறுபடியும் கேட்டான் ஒரு கடம்பன். 

எதிரியின் படைத்தலைவன் தங்களிடம் தற்காலிகமாகச் சிறைப்பட்டிருக்கும் வேளையில் அவனிடமே இந்தக் கேள்விகளைக் கேட்பது எந்த அளவு உறுதியானது எந்த அளவு ஆபத்தானது என்பதைக் கூடப் புரியாத மனநிலையோடு அவர்கள் கேள்வி கேட்பதைக்கண்டு குமரனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் தன் உள்ளுணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்குத் தைரியமும் நம்பிக்கையும் ஊட்டிக்கொண்டே சென்றான் அவன். பொன்வானி முகத்துவாரத்தின் நெடுந்துாரம் கரைக்குள்ளே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர். இன்னும் சிறிது உள்ளே சென்றால் கொடுங்கோளூர் நகரமே வந்து விடும் என்ற நிலைமைக்கு முன்னேறிச் சென்று விட்டார்கள். 

உள்ளே செல்லச் செல்ல நிலைமைகளை நீங்கள் இன்னும் நன்றாக அறியலாம் - என்று குமரன் புன்முறுவலோடு அவர்களுக்குக் கூறினான்! புதர் அடர்ந்திருந்த ஓரிடம் வந்ததும் படகு மேலே போவதை விரும்பாமல் அங்கேயே நிறுத்தி விட்டார்கள் கடம்பர்கள். 

ஆற்றின் இருபுறமும் வீரர்கள் யாரும் மறைந்திருக்கவில்லை என்பது உறுதியானால்தான் இந்த இடத்திற்கு மேலே நாம் போகலாம் என்றார்கள் அவர்கள். 

என்னை அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அதை நான் செய்கிறேன் - என்றான் குமரன். 

நீயே ஒரு விநாடி கரையில் இறங்கிப் பார்த்துச் சொல்! வீரர்கள் யாராவது தென்பட்டால் படைத்தலைவன் என்ற - முறையில் அவர்களை திரும்பப்போகச்சொல்லி விடலாம். தாங்களே இறங்கிப் புதர்களில் தேடினால் வீரர்கள் மறைந்திருப்பார்களாயின் அவர்களுக்கும் எங்களுக்கும் கைகலப்பு மூளும் 

இறங்கிப் பார்ப்பதில் எனக்கு மறுப்பு ஒன்றும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் நீங்கள் என்னை நம்பவேண்டும். இறங்கிப் பார்ப்பதற்குப் பதில் நான் தப்பி ஓடி விடுவேனோ என்ற என்மேலேயே உங்களுக்குச் சந்தேகம் வந்துவிடக் கூடாதல்லவா?” 

இதைக் கேட்டதும் படகிலிருந்த கடம்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். குமரன் அவ்வாறு வெளிப்படையாகத் தன்னுடைய மனத்திலிருந்ததைக் கேட்டதே அவர்களுடைய சந்தேகத்தைத் தணித்துவிட்டிருந்தது. அவர்கள் அவனைக் கரையிறங்கிப் புதர்களில் வீரர்கள் மறைந்திருக்கிறார்களா என்பதைப் பார்க்கச் சொன்னார்கள். அவ்வாறு அவர்கள் முதன் முறை கூறியபோது அவன் வாளா இருந்து விட்டான். மூன்றாவது முறையும் வற்புறுத்தியபோது படகை ஒதுக்கச் சொல்லிக் கரையில் மெல்ல இறங்கினான். 

இவ்வாறு தயங்கித் தயங்கி அந்தக் காரியத்தை அவன் செய்ததினால் அவனுக்குத் தங்களிடமிருந்து தப்பி ஓடும் எண்ணம் இல்லை என்பது போல் அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் கையிலே உருவி வைத்தபடி இருந்த கொடுவாள்கள் இன்னும் அப்படியே இருந்தன. கரையிறங்கிய குமரன் புதரில் மெல்ல மெல்ல மறைந்தான். சில விநாடிகள் அவன் தென்படவில்லை. கால் நாழிகைக்குப்பின் மறுபடியும் புதர் சலசலத்தது. குமரன் திரும்பினான். குமரன் மட்டுமல்ல, அவனுக்குப்பின் ஒவ்வொருவராகப் பல சேர வீரர்களும் வந்தனர்.

----------------

 13. ஒற்றன் ஒருவன்

 

ஒசைப்படாமல் குமரன் தன் பின்னே அழைத்து வந்த ஐம்பது சேர நாட்டு வீரர்களும் புதர்களிலிருந்து அந்தப் படகை வியூகமாக வளைத்ததுபோல் பல்வேறு திசைகளிலிருந்து வெளிப்பட்டனர். திடீரென்று இப்படி ஒரு நிலைமையை எதிர்பாராத கடம்பர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. உருவிய வாள்களோடு கரையில் குதித்தனர். முதலில் குமரன் மேல் பாய்ந்து அவனைக் குத்திக் கொல்வது அவர்கள் முயற்சியாய் இருந்தது. சேர வீரர்களில் பலர் வில்லும் அம்பும்கூட வைத்திருந்ததனால் புதர்களில் பல்வேறு கோணங்களிலிருந்து கடம்பர்கள் மேல் அம்புமழை பொழியலாயிற்று. அந்த அம்பு மழையினிடையேயிருந்து தப்பிக் குமரனைக் கொல்ல அவர்களால் முடியவில்லை. 

அதற்கு நேர்மாறாகக் குமரனோடு படகில் வந்த முரட்டுக் கடம்பர்களில் மூவர் இறந்து போயினர். இருவர் கொடுங்கோளுர் வீரர்களிடம் சிறைப்பட்டார்கள். அவர்கள் வந்த படகு சேர நாட்டு வீரர்களால் கைப்பற்றப்பட்டது. இறந்தவர்களின் சடலங்களை அந்தப் படகில் போட்டுக் கரையோரமாக அதைக் கொண்டுபோய் மிதக்க விட்டுவிடுமாறு தன்ஆட்களுக்குக் கட்டளையிட்டான் குமரன்நம்பி அப்படியே செய்யப்பட்டது. உடனே மகோதைக்கரை நகரங்களுக்குக் கடல் வழியே சிறு மரக்கலங்களிலோ, படகுகளிலோ உள் நுழையும் மூன்றே வழிகளான ஆயிரை, பொன்வானி, பேரியாறு ஆகியவற்றின் வழிகளை வில் அம்புகளோடு கூடிய வீரர்கள் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடம்பர்களின் ஒரே பலம் கடல்தான். மரக் கலங்களில் இருந்தபடியே போர் புரியவோ, கடற்கொள்ளைகள் செய்யவோ, அவர்களுக்குத் தெரிந்த அளவு தரையில் எதிர்ப்பவர்களை முறையாக எதிர்கொண்டு போர் செய்ய அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய ஒரே பலம் கடலும் மரக்கலங்களும்தான். தரை என்பது அவர்களுடைய பலவீனமான களம் என்பதைக் குமரன் நம்பி மிக நன்கு அறிந்திருந்தான். 

சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு கடம்பர்களைக் கொடுங்கோளுர் கோட்டையின் உள்ளே பத்திரமான அறை ஒன்றில் அடைத்தபோது, ‘உள்ளே செல்லச் செல்ல நிலைமைகளை நீங்கள் இன்னும் நன்றாக அறியலாம் என்று முன்பு அவர்களிடம் கூறியிருந்த ஒரு வாக்கியத்தையே வேறு அர்த்தம் தொனிக்கும் படி இப்போது திரும்பவும் கூறிவிட்டு ஏளனமாக நகைத்தான் குமரன் நம்பி. 

கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்தில் அமைச்சர் அழும்பில்வேளால் அனுப்பப்பட்டுத் தங்கியிருந்த வலியனும் பூழியனும் குமரன் நம்பியை அவன் மிகவும் சாமர்த்தியமாகக் கடம்பர்களிடமிருந்து தப்பிவந்ததற்காகப் பாராட்டினார்கள். அந்த விவரங்களை உடனே ஒரு வீரன் மூலமாகத் தலை நகரிலுள்ள வேளாவிக்கோ மாளிகைக்குச் சொல்லி அனுப்பினார்கள். அதன் பின்பும் அவர்கள் இருவரும் குமரன் நம்பியிடம் பேசும்போதெல்லாம் ஒரு செய்தியை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அதை ஏன் அவர்கள் அவ்வளவு தூரம் தன்னிடம் வற்புறுத்துகிறார்கள் என்பதைக் குமரன் நம்பியாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்செயலாக வற்புறுத்துகிறார்களா? அல்லது ஏதாவதொரு அர்த்தத்தோடு எதையாவது புரிந்துகொண்டு வற்புறுத்துகிறார்களா என்பதை அவனால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. 

படைத்தலைவர் கடம்பர்களின் கொள்ளை மரக்கலத்திலிருந்து அவர்கள் துணையுடனேயே தப்பி வந்தது சாமர்த்தியமான காரியம்தான் என்றாலும் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்கிறவரை நாம் பெருமைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை- என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்- என்று அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களாகிய அவர்கள் தன்னிடம் அடிக்கடி கூறி வந்ததன் பின்புலத்தில் என்ன சிந்தனை மூலமாக இருக்கிறதென்பதை அறிய முயன்றான் குமரன் நம்பி. 

ஆனால் அதே சமயத்தில் அவர்கள் அப்படி அடிக்கொரு முறை இரத்தின வணிகர் மகளும் தன் ஆருயிர்க் காதலியும் ஆகிய அமுதவல்லியை நினைவூட்டிக் கொண்டிருந்ததில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சியும் இருந்தது. கடம்பர்களை எப்படியும் முறியடித்து அவளை மீட்கவேண்டுமென்ற ஆவலும் துணிவும் உறுதிப்பட அவர்களுடைய வார்த்தைகள் துணைசெய்கின்றன என்ற முறையில் அவற்றை அவன் விரும்பினான், வரவேற்றான். 

அடுத்து அவனுடைய சிந்தனை ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டிருக்கும் மற்றவர்களை எப்படி விடுவிப்பது என்பதில் சென்றது. தன்னிடம் சிக்கியிருக்கும் கடம்பர்கள் இருவரைக் கொண்டு அவர்களிடம் சிக்கியிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள் இருவரையும் எப்படி மீட்பது என்று சூழ்ச்சிகளை ஒவ்வொன்றாகச் சிந்திக்கலானான் குமரன் நம்பி. ஏற்கெனவே கடம்பர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள் தான் திரும்பி வரும்போது தன்னுடைய சூழ்ச்சி நோக்கத்தை விளங்கிக் கொள்ளாமல் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தான் உயிர்தப்புவதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு கடம்பர்களுக்குக் கொடுங்கோளுரைக் காட்டிக் கொடுப்பதற்காகப் புறப்பட்டு விட்டதாக அவர்கள் நினைத்து விட்டது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. 

அவர்கள் அனைவரையும் சாமர்த்தியமாகக் கடம்பர்களிடமிருந்து மீட்கிறவரை எதுவுமே மேலே செய்வதற்கு இல்லை என்பதையும் குமரன் தம்பி உணர்ந்தான். அந்த வீரர்களை மீட்பதற்குமுன் முற்றுகை இட்டிருக்கும் கடம்பர் மரக் கலங்களைத் தாக்கவும் முடியாது. அல்லது கடம்பர்களே கொடுங்கோளுரை நெருங்கினாலும்கூட அவர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள் தப்பிவிட முடியாது. நகருக்குள் கரையை நெருங்கி வந்துவிட்டால் இங்குள்ள நிலைமையையும் நான் தப்பிவிட்டேன் என்பதையும் ஆந்தைக் கண்ணன் அறிய நேரிடும். அதை அவன் அறிய நேர்ந்ததும் அவனுக்கு ஏற்படுகிற முதற் கடுங்கோபத்துக்குப் பலியாகிறவர்கள் அவனிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங் கோளுர் வீரர்களாகத்தான் இருப்பார்கள் என்பது நிச்சயம். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு முன் கொடுங்கோளூர் வீரர்களை அங்கிருந்து காப்பாற்றிவிடவேண்டும் என்பதில் குமரன் நம்பி அதிகக் கவனமாயிருந்தான். அதற்காகவும் அவன் ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டியிருந்தது. 

தன்னிடம் சிறைப்பட்டிருக்கிற கடம்பர்களில் ஒருவனிடமிருந்து ஆந்தைக்கண்ணனுக்கு அவன் தானாகவே எழுதுவது போல் ஒர் ஒலை எழுதிவாங்க வேண்டியிருந்தது. அந்த ஒலையில்வழிகளைக் காட்டுவதற்காகச் சேர நாட்டு வீரர்களின் துணையோடு-மூன்று படகுகளில் நம் கடம்பர்களையும் சேர்த்து இன்றிரவு பொன்வானி முகத்துவாரத்தின் வழியே நகருக்குள் அனுப்பவும். இங்கு யாவும் நமக்கு உறுதியான நன்னிலையிலுள்ளன. இந்த ஒலையைக் கொண்டு வருபவன் ஒரு செவிட்டு ஊமை, குமரன் நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறார். இந்த ஒலையைக் கொண்டு வருபவன் மேலும் என்மேலும் தாங்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காக - இதை நாங்கள் இங்கு வந்த அதே படகில் அனுப்புகிறேன் - என்று எழுதி ஆந்தைக்கண்ணனுக்கு ஓர் ஊமையிடமோ அல்லது ஊமைபோல் நடிக்க முடிந்தவனிடமோ கொடுத்து, அன்று கடம்பர்களின் பிணங்களோடு கடற்கரையில் மிதக்கவிட்ட படகில் பிணங்களை நீக்கிவிட்டு அவனை அனுப்புவதென்று திட்டமிட்டான் குமரன் நம்பி.

இந்தத் திட்டம் நிறைவேறுவது அவன் கையில் மட்டுமில்லை. எழுதுகிற ஒலையில் சிறையிலிருக்கும் கடம்பர்களில் யாராவது ஒருவனுடைய கைச்சாத்துக் கிடைக்க வேண்டும். இல்லா விட்டால் ஆந்தைக்கண்ணன் அதை நம்புவது அரிதென்பது குமரனுக்குத் தெரியும். ஒற்று வேலைகளில் - போர்க் காலங்களில் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துக்குப் பயன்படுவதற்காக ஊமைகள் போலவும் செவிடர்கள் போலவும் நடித்துப் பகைவரை ஏமாற்றி இரகசியங்களை அறிந்து வருவதற்குச் சிலர் இருந்தனர். அவர்களில் ஒருவருடைய உதவியை இப்போது நாடுவது என்று குமரன்நம்பி முடிவு செய்து கொண்டான். 

கடம்பர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களை மீட்பதோடு - அந்த வீரர்களோடு கடம்பர்களில் பலரையும் பொன்வானி முகத்துவாரத்துக்கு வரவழைத்துக் கொன்றுவிட்டால், ஆந்தைக்கண்ணனின் முற்றுகை பேரளவில் வலிமை குன்றியதாகப் போய்விடும். தன்வசமுள்ள வீரர்களின் வலிமை குறையக் குறைய ஆந்தைக்கண்ணனின் முற்றுகை தோல்வியை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அல்லது அவன் தன்னுடைய கொள்ளை மரக்கலங்களோடு மேலும் சில நாட்கள் தாமதித்தால் கூட நல்லதுதான் என்றெண்ணினான் குமரன் நம்பி. முற்றுகை நீடிக்க நீடிக்கக் குயிலாலுவத்திற்குச் சென்றிருக்கும் பெரும்படையோடு பெருமன்னர் திரும்பி வருகிற சமயமும் நெருங்கிவிடலாம். படைகளின் வரவோடு மன்னரும் திரும்பிவிட்டால் பின்பு ஆந்தைக்கண்ணனை ஓட ஓட விரட்டலாம். 

ஆனாலும் அந்த வழியைவிட முதலில் சிந்தித்த வழியே நல்லது என்றெண்ணினான் அவன். ஒலை எழுதப்பட்டது. கடம்பர்களில் சிறைப்பட்டிருந்த இருவரும் அந்த ஒலையிற் கைச்சாத்திட மறுத்தனர். நீண்ட நேரம் சித்திரவதை செய்து வதைத்தபின் ஒருவன் கைச்சாத்திட இனங்கினான். அதற்குப் பின் மற்றொருவனையும் எவ்வளவோ கொடுமைப் படுத்தி வற்புறுத்தியும் பயனில்லாமல் போயிற்று. அதற்கப்புறம் படைக் கோட்டத்து ஒற்றர்களில் தன்னந்தனியே செவிட்டூமைப்போல நடித்து ஆந்தைக்கண்ணனைச் சந்திக்கப் போவதற்கு ஒரு தீரனைத் தேட வேண்டியிருந்தது. சூழ்நிலையை எண்ணி ஆந்தைக்கண்ணனிடம் சென்றால், உயிருக்கு ஆபத்தாகுமே என்ற நடுக்கத்தினால் பலர் அஞ்சினார்கள். குமரன் நம்பியின் நீண்ட உறுதிமொழிகளுக்குப் பின் ஒர் இளம்பருவத்து ஒற்றன் அந்த வேலையைச் செய்ய முன் வந்தான்.

-------------

 14. கடம்பன் ஏமாறினான்

 

கடலுக்குள் சென்று ஆந்தைக்கண்ணனைச் சந்திக்க முன்வந்த ஒற்றனுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் தானே அருகிலிருந்து கவனித்துச் செய்தான் குமரன் நம்பி. 

எப்படியெப்படி எல்லாமோ ஆந்தைக்கண்ணன் உன்னைச் சோதனை செய்வான். முதலில் செவிட்டூமையாக நீ நடித்தால் கடைசிவரை அப்படியே நடித்துவிட வேண்டும். அவ்வாறின்றி அவன் திடீரென்று ஏதாவது இரைய அதைக் காதில் வாங்கிய வேகத்தில் ஊமையாக நடிக்க வேண்டியதை மறந்து உணர்ச்சி வசப்பட்டு மறுமொழி பேசிவிடக்கூடாது. 

நீ கொண்டுபோகிற ஒலையிலேயே இந்த ஒலை கொண்டு வருகிறவன் செவிட்டூமை என்று குறிப்பிட்டிருப்பதனால் நீ கவனமாயிருக்க வேண்டும். அங்கே ஆந்தைக்கண்ணனுடைய மரக்கலத்தில் சிறைப்பட்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்த உடனே உணர்ச்சிவசப்பட்டு நீ எதையாவது பேசிவிடக் கூடாது. நீ தூதனாக வந்திருக்கிறாய் என்று தெரிந்தால் நம்மவர்கள் உன்னை நிச்சயமாக ஆந்தைக்கண்ணனிடம் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். நீயும் பிறர் புரிந்து கொள்ளாதவாறு நம்மவர்களுக்கு நீ அவர்களுக்கு உதவி, அவர்களை மீட்டுக் கொண்டு போக வந்திருப்பதாகவே ஏதேனும் சைகை காட்ட முடியுமானால் நல்லது. அந்தச் சைகையை ஆந்தைக்கண்ணன் பார்த்து விடக்கூடாது. பார்த்தால் அவனுக்கு உன்மேலேயே சந்தேகம் வந்து உன்னைக் கண்டம் - துண்டமாக வெட்டிப் போட்டு விடுவான். கவனமாகப் போய்வா - என்று கூறித் துதுவனை வழியனுப்பி வைத்தான் அவன். துதுவனோ புறப்படு முன்பாகத் திடீரென்று வேறெரு கேள்வி கேட்டான். 

ஐயா எனக்கொரு சந்தேகம். இந்த ஒலையை நான் ஆந்தைக் கண்ணனிடம் கொடுத்தவுடன் நீங்கள் நினைப்பது போல அவன் என்னையும், சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளுர் வீரர்களையும் துணையாகச் சில கடம்பர்களையும் இங்கே அனுப்பி வைக்காமல் எல்லா வீரர்களுடனும் தானே புறப்பட்டுவிட்டால் என்ன செய்வது? 

அப்படி நடக்காது, அநேகமாக ஒலையில் எழுதியிருக்கிறபடிதான் அவன் செய்வான். செய்யாமல் அவனே எல்லாரோடும் புறப்பட்டு வருவானாயினும் கவலை இல்லை. அப்படி வரும் போது - நம்மவரும், நீயுமுள்ள படகுகள் பொன்வானியாறு வழியே முன்னால் வருமாறு கவனித்துக்கொள். நானும் வீரர்களும் பொன்வானியாற்றின் இரு மருங்கிலுமுள்ள புதர்களில், மறைந்திருப்போம். எங்களுடைய சாதுரியமான போரினால் உங்களை மீட்டுக் கடம்பர்களை அழிப்போம். ஆந்தைக்கண்ணன் வராமல் ஒலையில் எழுதியிருக்கிறபடி கடம்பர்களையும் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களையும் மட்டுமே உன்னோடு அனுப்பி வைப்பானாயின் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. உங்களோடு வரும் கடம்பர்களைப் பொன்வானி முகத்துவார வழியிலேயே கொன்றோ, சிறைப்பிடித்தோ உங்களனைவரையும் அவர்களிடமிருந்து மீட்டு விடுவோம்.” 

எல்லாம் நல்லது. ஆனால் என்னைத் திருப்பி அனுப்பாமல் அங்கே வைத்துக்கொண்டு, கடம்பர்களையும் கொடுங்கோளூர் வீரர்களையும் மட்டும் படகுகளில், அனுப்பிவிட்டால் என்ன செய்வது?” 

செய்வதென்ன? எப்படியேனும் சாமர்த்தியமாகத் தப்ப முயற்சி செய்தே ஆகவேண்டும்.” 

அதுவும் முடியாது. - நான் ஊமையும் செவிடுமாகவே இறுதிவரை நடிக்கவேண்டும் எனச் சொன்னான். 

ஆந்தைக்கண்ணன் ஒலையைப் படித்து - உடன் அதைக் கொண்டு வந்தவனையும் சிறைப்பிடித்து - ஏற்கெனவே சிறைப் பட்டிருந்த பிற கொடுங்கோளுர் வீரர்களோடு வைத்துக் கொண்டு உண்மை நிலையை அறிவதற்காகக் கடம்பர்களில் ஒரு நூறு பேரைப் பொன்வானி முகத்துவாரத்திற்கு அனுப்பினாலும் அனுப்பிவிடலாம். அப்படி அவன் செய்துவிடுவானேயாகில் குமரன் எதற்காக இதைத் திட்டமிட்டுச் செய்தானோ அந்த ஏற்பாடுகள் அனைத்தும் வீணாகிவிடும். ஆனாலும் எதை எதிர் கொள்ளவும் துணிந்திருக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு தான் அவன் இருந்தான். 

இதற்கிடையே அவன் இடுகிற ஒவ்வொரு திட்டத்தையும் செய்கிற ஒவ்வோர் ஏற்பாட்டையும் அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களாகிய வலியனும் பூழியனும் அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். கவனிப்பதெல்லாம் நடைபெறுவன பற்றிய செய்திகளை அமைச்சருக்கு அனுப்பவதற்குத்தான் என்பதைக் குமரன் நம்பி விளங்கிக் கொண்டான். 

ஒவ்வொன்றாகச் சிந்தித்துக்கொண்டே வரும்போது, புதிதாக வேறொரு கவலையும் அவனுக்கு உண்டாகியது. கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடலிலுள்ள தங்கள் கொள்ளை மரக்கலங்களில் ஏதாவது ஒன்றில் கடம்பர்கள் சிறை வைத்திருப்பார்களானால் அவளையும் அதிலிருந்து அந்தரங்கமாக விடுவித்தாக வேண்டும். எல்லாக் கடம்பர்களும் ஒரேயடியாக ஆந்தைக்கண்ணனோடு சிறுசிறு படகுகளில் பொன்வானி முகத்துக்கு வந்துவிடுவார்களேயானால் கடலில் அவர்கள் கலங்கள் தனியாயிருக்கும். இரண்டு மூன்று சேரநாட்டு வீரர்களோடு தானோ வேறு யாரோ, அவர்கள் கலங்களை தேடிப் - போனால் அமுதவல்லியை மீட்டிக்கொண்டு வந்துவிடலாமென்று தோன்றியது. ஆனால் கொடுத்தனுப்பியிருக்கும் ஓலைக்கு எதிர் விளைவாக ஆந்தைக்கண்ணன் என்ன செய்யப் போகிறான் என்பதைப் பொறுத்தே மேற்கொண்டு எதையும் திட்டமிடலாம் போலத் தோன்றியது. எக்காரணத்தைக் கொண்டாவது கடம்பர்கள் அஞ்சிக் கடலில் பின்வாங்குவார்களேயானால் அவர்கள் தங்கள் மரக்கலங்களைத் திருப்பிக்கொண்டுதான் விரைந்து ஓடுவார்கள். அப்படி ஓடும்போது - மரக்கலங்களில் ஏதாவது ஒன்றினுள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் அமுதவல்லியும் கலத்தோடு போக நேரிடும். அப்படி நேருவதற்குள் முந்திக்கொண்டு விடவேண்டும். 

இவ்வளவு அரும்பாடுபட்டும் இறுதியில் என் உயிர்க் காதலியை நான் இழந்துவிடக் கூடாது என்று நினைத்தான் குமரன் நம்பி. ஆந்தைக்கண்ணனுடைய எதிர்விளைவு எப்படியானாலும் அதற்கேற்பத் திட்டங்களை நினைத்துவைத்துக் கொண்டபின் அவனும் பொன்வானி முகத்துவாரத்துக்குச் சென்று பதுங்கி இருந்தான். நேரம் ஆக ஆகக் கவலை அதிகமாகியது. நடுஇரவும் கடந்தது. முகத்துவாரத்தில் படகுகள் எவையுமே தென்படவில்லை. தாங்கள் எதிர்பார்க்கிற நேரத்தை விட்டு விட்டு எல்லாரும் அயர்ந்தபின் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று வந்து தாக்கலாமென்ற எண்ணத்தில் ஆந்தைக் கண்ணன் தாமதம் செய்கிறானோ என்றும் தோன்றியது. குமரன் நம்பியைப் போலவே போர் நிலை அறிந்து வேளாவிக்கோ மாளிகைக்கு உடனுக்குடன் அறிவிப்பதற்காக அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களும் பொன்வானி முகத்துவாரத்துப் புதர்களில் பதுங்கியிருந்தனர். குமரன் பதுங்கியுருப்பதை அவர்களும், அவர்கள் பதுங்கியிருப்பதை குமரனும் முதலில் கவனிக்கவில்லை என்றாலும் சிறிது நேரத்தில் இருசாராருமே சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. முதலில் வலியன் தான் குமரன் நம்பியிடம் பேசினான்:- 

கடம்பர்களிடமிருந்து தப்பி வந்ததற்காகவும் படைத் தலைவருக்குத் தமது மனம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்குமாறு கூறியனுப்பியிருக்கிறார் நம் அமைச்சர் பெருமான் 

இதில் என்னைப் பாராட்டுவதற்கு எதுவும் இல்லை! சந்தர்ப்பம் ஒத்துழைக்காமல் போயிருந்தால் நானே தப்பியிருக்க முடியாது. நான் தப்பி வந்துவிட்டாலும் என்னோடு சேர்ந்து சிறைப்பட்ட கொடுங்கோளுர் வீரர்கள் இன்னும் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களிலேதான் சிறைப்பட்டு வாடியிருக்கிறார்கள். அவர்களை இனியும் காலதாமதமின்றி மீட்கவேண்டும். இல்லாவிட்டால் என் உயிருக்கு ஆசைப்பட்டு நான் மட்டும் தப்பி விட்டேன் என்பதாக எண்ணி அவர்கள் மனங்குமுற நேரிடும். இந்த நிலைகள் எல்லாம் தெளிவாக வேளாவிக்கோமாளிகைக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றனவோ இல்லையோ, எனக்குத் தெரியாது!’ என்று குமரன் நம்பி கூறியவுடனே அவனுக்கு மறுமொழி கூறாமல் வலியனும் பூழியனும் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

சிறிது நேர மெளனத்துக்குப் பின் குமரன் நம்பியை நோக்கிகொடுங்கோளுர் வீரர்களையும் காப்பாற்றவேண்டும், இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியையும் தேடிப் பிடித்துக் காப்பாற்றி மீட்டு வரவேண்டும் என்பதை அதற்குள் மறந்துவிட்டீர்களா, படைத்தலைவரே?” என்று அவர்கள் இருவரும் கேட்டனர். 

குமரன்நம்பி உடனே சிறிதும் தயங்காமல்ஒரு வேளை நான் மறந்துவிட்டாலும், கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைப்பற்றி எனக்கே அடிக்கடி நினைவூட்டுவதற்கு நீங்களிருவரும் இருக்கும்போது நான் ஏன் கவலைப் படவேண்டும் என்று குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே கூறினான். படைக்கோட்டத்துத் தலைவனான அவன் அவ்வாறு கூறியதை அவர்களும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஒரு பேச்சுக்காக இப்படி மறுமொழி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறோம் படைத் தலைவரே உண்மையில் உங்கள் இதயம் இவற்றை எல்லாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா, என்ன?” பதிலுக்கு வினவினார்கள் அவர்கள். 

அதற்குப்பின் குமரன் நம்பி அவர்களிடம் எதுவும் பேச வில்லை. கீழ்த்திசை வெளுத்து விடிந்துவிடுமோ என்று பயப்படுமளவுக்கு நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. போனவனோ, படகுகளோ ஏன் இன்னும் திரும்பவில்லை என்று குமரன் நம்பிக்குச் சந்தேகம் தட்டியது. ஒலையை எடுத்துச் சென்ற செவிட்டூமை என்ன ஆனான், அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதது கவலைக்கிடமாக இருந்தது. அந்த வேளையில் பொன்வானி முகத்தில் துடுப்புகள் நீரை அளையும் ஒலி தொலைவில் மெல்லக் கேட்கலாயிற்று. எல்லாரும் செவிகளைத் தீட்டிக்கொண்டு கேட்கலாயினர். புதரில் மறைந்திருந்த வீரர்களை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் இருக்குமாறு வேண்டினான் குமரன் நம்பி.

--------------

 15. நம்பியின் நாடகம்

 

பொன்வானிக்கரையின் இருமருங்கும் புதர்களில் மறைந்திருந்த சேர நாட்டு வீரர்கள் முகத்துவாரத்திற்குள் முன்னேறும் படகைப் பார்த்ததும் - என்ன செய்வதென்று குமரன் நம்பியின் சைகையை எதிர்பார்த்திருந்தார்கள். 

படகில் வருகிறவர்களில் கடம்பர்களை மட்டும் தனியே பிரித்துத் தாக்குவதோ, அம்பு செலுத்துவதோ சாத்தியமென்று தோன்றவில்லை. அப்படியே ஒவ்வொருவராகத் தேடிக் குறிவைத்துக் கடம்பர்கள்மேல் அம்பு செலுத்திவிடலாம் என்றாலோ அதன் விளைவாக உடனிருக்கும் கொடுங்கோளுர் வீரர்களுக்குக் கடம்பர்களிடமிருந்து என்னென்ன கெடுதல்கள் உடனே உண்டாகுமோ என்ற தயக்கமும் இருந்தது. 

இந்த நிலையில் தயக்கத்துடன் கூடிய விநாடிகள் நகர்ந்து கொண்டிருந்தன. படகும் நெருங்கிக் கொண்டிருந்தது. முடிந்தவரை சாதுர்யமாக நிலைமையை எதிர்கொள்ள விரும்பினான் குமரன் நம்பி. 

படகிலுள்ள கடம்பர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. கொடுங்கோளுர் வீரர்களிடம் ஆயுதங்கள் எதுவுமே இல்லை. கடம்பர்களிடம் சிறைப்பட்டவர்கள் என்ற முறையில்தான் இன்னும் கொடுங்கோளூர் வீரர்கள் இருந்தனர். 

தான் கடலுக்குள் அனுப்பியிருந்தசெவிட்டூமை ஒற்றன் - படகில் திரும்பி வரவில்லை என்பதையும் குமரன் நம்பி கவனித்திருந்தான். படகிலிருந்த கொடுங்கோளுர் வீரர்களைச் சூழ்ந்து முரட்டுக் கடம்பர்கள் ஆயுதங்களோடு அமர்ந்திருந்ததனால், அவர்களை எதிர்த்துத் தாக்கவோ, எவரையும் தாக்காமலே கொடுங்கோளூர் வீரர்களை மட்டும் மீட்கவோ முடியாமலிருந்தது. படகிலிருந்த கடம்பர்களின் கண்களிலும், முகத்திலும் தெளிவான தீவிரமான நம்பிக்கை எதுவும் தெரியவில்லை. 

செவிட்டூமை - ஒற்றனை நம்பாமல் அவனைத் தன்னிடமே வைத்துக்கொண்டு, கொடுங்கோளூர் வீரர்களை அனுப்புவது போல் அனுப்பி அவர்களுக்குக் காவலாகக் கடம்பர்களையும் சேர்த்து அனுப்பியிருப்பதால் - ஆந்தைக்கண்ணன் முழு நம்பிக்கையோடு எதையும் செய்யவில்லை என்று குமரன் நம்பியால் அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. 

தன்னால் அனுப்பப்பட்டசெவிட்டூமை ஒற்றனை எப்போது ஆந்தைக்கண்ணன் திருப்பி அனுப்பவில்லையோ அப்போதே அந்த ஒற்றனை அவன் முழுமையாக நம்பவில்லை என்பதையும் - ஒற்றனின் ஒலையில் இருந்த செய்தியையும் முழுமையாக நம்பவில்லை என்பதையும் உய்த்துணர முடிந்தது. 

கொடுங்கோளூர் வீரர்களையும் உடன் வைத்துக்கொண்டு படகில் பொன்வானி முகத்துவாரத்தின் வழியே முன்னேறும் அந்த வேளையில் கடம்பர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முயன்று கொண்டிருந்தான் கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன். 

வழிகளைக் காட்டுவதற்காகச் சேரநாட்டு வீரர்களின் துணைகளோடு நம் படைகளைச் சேர்ந்த கடம்பர்களையும் சேர்த்து இன்றிரவு பொன்வானியாற்று முகத்துவாரத்தின் வழியே நகருக்குள் அனுப்பவும். இங்கு யாவும் நமக்கு உறுதியான நன்னிலையில் உள்ளன. இந்த ஓலையைக்கொண்டு வருபவன் ஒரு செவிட்டூமை. குமரன்நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறார். இந்த ஓலையைக்கொண்டு வருபவன் மேலும் என் மேலும் தாங்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காக இதை நாங்கள் இங்கு வந்த அதே படகில் அனுப்புகிறேன்- என்றுதான் அனுப்பியிருந்த ஓலையின் செய்தியை மீண்டும் நினைவு கூர்ந்தான். 

படகில் உள்ளே வந்து கொண்டிருப்பவர்கள் தங்களைக் குமரன் நம்பி எதிர்கொண்டு வரவேற்பான் என்று எதிர்பார்க்கவும் கூடும். 

அதே வேளையில் படகில் உடன்வரும் சேரநாட்டு வீரர்களோ ஒன்றுமே தெளிவாகப் புரியாமல் தயங்கவும் கூடும். குமரன் நம்பியே பொன்வானி முகத்துவாரத்தில் எதிர்கொண்டு வரவேற்பான் என்று எதிர்பார்த்தபடியே படகில் வரும் ஆந்தைக் கண்ணனின் வீரர்களுக்கு யாருமே தங்களை எதிர்கொள்ளாத இந்த நிலை வியப்பைத் தராமல் போகாது. 

தாங்கள் கரைசேரப் போவதையோ, கடம்பர்களின் கைகளிலே சிக்கி அழியப்போவதையோ - எதையுமே நிர்ணயிக்க முடியாமல் படகில் உடன் வரும் கொடுங்கோளுர் வீரர்களும் மனம் குழம்பிப்போய் குமரன்நம்பியின் மேற் கோபமாயிருப்பார்கள். 

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் படகில் வருகிற கடம்பர்களை அழிக்கவும் உடன்வருகிற கொடுங்கோளுர் வீரர்களை அழியாமல் காப்பாற்றிக் கரை சேர்த்து மீட்கவும் ஒரே சமயத்தில் முயல வேண்டிய நிலையில் இருந்தான் அவன். 

தீவிரமாக அவன் இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த சமயத்தில் வலியனும் பூழியனும் அருகில் வந்து ஏதோ பேச்சுக் கொடுத்தார்கள். உள்ளுற அவர்கள் இருவர் மேலும் அவனுக்குத் தாங்க முடியாத கோபம் ஏற்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் இருந்தது. 

நாம் இங்கிருந்து அனுப்பிய செவிட்டூமை ஒற்றன் இன்னும் திரும்பி வரவில்லை. அந்த ஒற்றனை மட்டும் ஆந்தைக் கண்ணன் ஏன் திருப்பி அனுப்பவில்லை என்பது உங்களுக்கு சந்தேகத்தை அளிக்கவில்லையா படைத்தலைவரே!” - என்று பரபரப்படைந்து வினவினான் வலியன். 

ஒற்றன் ஏன் திரும்பி வரவில்லை என்று கவலைப்படுவதை விட வந்திருப்பவர்களில் நமக்கு வேண்டியவர்களை எப்படிக் காப்பாற்றிக் கரை சேர்ப்பது என்பதைப்பற்றிக் கவலைப்படுவது பயனுள்ளதாக இருக்கும். நேரமாகிறது. பொழுது நன்றாக விடிந்து விட்டது. படகு உள்ளே வரவர இங்கு நிலவும் மயான அமைதியைப் பார்த்து அவர்கள் மனத்தில் சந்தேகம் அதிகமாகுமே தவிரக் குறையப் போவதில்லை. படகிலுள்ள ஆந்தைக்கண்ணனின் வீரர்களைத் தவிர நம்முடைய வீரர்களுக்கும் சந்தேகம் உண்டாவதை இனிமேல் தவிர்க்க முடியாது. எனவே நிலைமையைத் தந்திரமாக எதிர்கொண்டு என்னென்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறேன் நான் - என்று வலியனுக்கு குமரன் நம்பி கூறிய பதிலில் அவனுடைய கோபமும் மெல்ல ஒலித்தது. 

அதற்காகக் கேட்கவில்லை படைத்தலைவரே அமைச்சர் பெருமான் இங்கு நிகழும் நிகழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பார். அவருக்குச் செய்தி சொல்லி அனுப்பவே உங்கள் உள்ளக்கிடக்கையை வினாவினோம் என்று சிறிது தணிவான குரலிலேயே பதில் கூறினான் பூழியன். 

அவர்கள் இருவரும் இவ்வாறு அடிக்கடி அமைச்சர் பெருமானின் பெயரை நினைவூட்டிக்கொண்டிருப்பதையும் குமரன் நம்பி விரும்பவில்லை. ஆனால் மறுமொழி எதுவும் கூறாமல் மேலே ஆகவேண்டிய காரியத்தைச் செயற்படுத்தலானான் அவன். இதே அமைதியைத் தொடரவிட்டால் ஒன்று படகில் வரும் கடம்பர்கள் சேரநாட்டு வீரர்களையும் திரும்ப அழைத்துக்கொண்டு வந்த வழியே மீண்டும் சென்று விடுவார்கள். அல்லது-தங்களுக்கு ஏற்பட்ட வெறுப்பினாலும் உடனிருக்கும் கொடுங்கோளுர் வீரர்களைத் துன்புறுத்தத் தொடங்குவார்கள். இந்த இரண்டு விளைவுகளுமோ அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றோ ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால் உடனடியாகச் செயல்படவேண்டும். சிறிது நேரத் தாமதம்கூட விளைவை மாற்றிவிடும். 

மின்னல் நேரத்தில் குமரன் நம்பியின் உள்ளத்தில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. தானும் சில வீரர்களும் எதிர்ப்பட்டு - முகத் துவாரத்தில் வந்து கொண்டிருக்கும் கடம்பர்களின் படகை - அவர்களுடைய சதிக்குத் துணையாகிற விதத்தில் வரவேற்பது போல வரவேற்று கரையிறக்குவதென்றும் கரையிறங்கியதுமே கடம்பர்களை மட்டும் சிறைபிடிப்பதென்றும் முடிவு செய்து கொண்டான் அவன். இந்த முடிவுக்கு உடன்துணை வருவதற்கு ஏற்ற வீரர்கள் பலரை அருகிலேயே புதர்களில் மறைந்திருக்கச் செய்வதென்றும் தீர்மானித்துக் கொண்டான். இதில் ஒரு தொல்லையும் இருந்தது. படகை எதிர்கொண்டு கடம்பர்களைத் தான் அவர்களுக்கு வேண்டியவன்போல் நடித்து வரவேற்றுக் கொண்டிருக்கையில் படகிலிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள்-தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது என்றும் தயங்கினான் குமரன் நம்பி இந்தத் தயக்கமும் சிறிது நேரம் தான் இருந்தது. 

குமரன்நம்பியின் மனம் துணிந்து விட்டது. அந்த நாடகத்தை நடித்தே தீர வேண்டிய நிலையில், தான் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னுடன் வரவேண்டிய வீரர்களுக்கும் வலியன், பூழியன் ஆகியோருக்கும் திட்டத்தை விளக்கிவிட்டுச் செயலில் இறங்கினான் குமரன் நம்பி. 

அவனும் அவனுடன் அந்த வஞ்சக நாடகத்தில் நடிக்க இருந்த வீரர்களும் புதர்களிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றினர். 

குமரன் நம்பி முன்னால் நடந்து சென்று கரையில் நின்ற படியே படகை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். “வரவேண்டும் வரவேண்டும் நண்பர்களே ஆந்தைக்கண்ணரின் திட்டத்துக்கு நன்றியோடு உதவிசெய்ய நாம் சேர்ந்து பாடுபடுவோம். இன்னும் சிறிது நேரத்தில் இந்தக் கொடுங்கோளூர்- கடம்பர் வசமாகி விடும் என்று இரைந்த குரலில் அவன் படகை நோக்கிக் கத்திய போது படகிலிருந்த கடம்பர்களில் முகத்தில் மலர்ச்சியும், கொடுங்கோளூர் வீரர்களின் முகத்திலே சீற்றமும் தோன்றலாயின. அதைக் குமரன் நம்பியும் கவனிக்கத் தவறவில்லை. 

படகு கரையை நெருங்கிற்று. ஒவ்வொருவராகத் தயங்கியபடியே கரையில் இறங்கினர். 

கடம்பர்களை ஒர் ஒரமாகவும், ஆந்தைக்கண்ணனின் கப்பலிலிருந்து சிறை மீண்டுவந்த கொடுங்கோளுர் வீரர்களை ஒர் ஒரமாகவும் கரையில் பிரித்து நிறுத்தினான் குமரன் நம்பி. அப்படி இருசாராரையும் பிரித்து நிறுத்துவது கடம்பர்களின் மனத்தில் உடனடியாக எந்தவிதமான சந்தேகத்தையும் உண்டாக்கிவிடக் கூடாதே என்று கருதி, “இந்தச் சேரவீரர்கள் நம்மிடம் சிறைப்பட்டவர்கள். ஆகையால் இவர்களைத் தனியே பிரித்து பாதுகாக்கவேண்டும் பாருங்கள்! இப்போது இவர்களை என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? இவர்கள் தப்பி ஓடாமல் இவர்களைப் பிடித்துக் கட்டிப்போடவும் என் ஆட்களை நம்மைச் சுற்றிலும் ஆயுதபாணிகளாக மறைந்திருக்கச் செய்திருக்கிறேன். அவர்களை இதோ இந்த விநாடியே கைதட்டி அழைத்துவரச் செய்கிறேன்! அவர்கள் வந்து அடக்கினால்தான் இவர்களுடைய கொழுப்பு ஒடுங்கும் என்று கூறியபடியே இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டி ஒலிஎழுப்பினான் குமரன் நம்பி. 

அடுத்த விநாடியே அந்த ஒலியின் விளைவாகச் சுற்றிலும் இருந்த புதர்களிவிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கோளுர் வீரர்கள் திரண்டோடி வந்தனர். அப்படி ஓடி வந்தவர்கள் முற்றிலும் எதிர்பாராத வண்ணம் கடம்பர்கள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி விரைந்து அவர்களை வளைத்துக் கொண்டார்கள். 

கடம்பர்களோ புதர்களிலிருந்து வரும் சேர வீரர்கள் தங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை என்ற எண்ணத்தில் எந்த விதமான முன் எச்சரிக்கையுமின்றி நின்று கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு தாக்குதலை எதிர்பாராத கடம்பர்கள் அனைவரும் கொடுங்கோளுர் வீரர்களிடம் சிறைப்பட நேர்ந்தது. 

எப்படி என் தந்திரம்? உங்களை ஆபத்தின்றி மீட்கவே இப்படி ஒரு தந்திரம் செய்தேன் என்று கூறியபடியே புன் முறுவல் பூத்த முகத்தோடு ஆந்தைக்கண்ணனிடமிருந்து சிறைமீண்டு வந்த தன் நண்பர்களை நெருங்கினான் படைக் கோட்டத் தலைவன் குமரன் நம்பி. 

இப்படி ஒரு திருப்பம் இதில் நிகழுமென்பதை நாங்களே கூட நம்பமுடியாதபடி செய்து விட்டீர்களே? எங்களைப் பொருத்தருள வேண்டும் படைத் தலைவரே ஆந்தைக் கண்ணனுடைய மரக்கலத்தில் இருந்து நீங்கள் தப்பிவந்த விநாடியிலிருந்து இந்த விநாடி வரை எங்கள் மனத்திலிருந்த சந்தேகங்கள் யாவும் இப்போதுதான் நீங்கின படைத்தலைவரே! உங்கள் தந்திரங்களை அப்போதே புரிந்துகொள்ளாமற் போனதற்காக நாங்கள் பெரிதும் வருந்துகிறோம் என்று அவர்கள் குமரன் நம்பியிடம் மன்னிப்புக் கேட்கலானார்கள். 

குமரன் நம்பியோ அவர்களில் ஒவ்வொருவரையும் தனித் தனியாகப் பெயர் சொல்லி அழைத்து அன்புடனும் கருணையுடனும் உரையாடலானான். 

அவர்களும் அவனை அன்புடன் எதிர்கொண்டனர்.

--------------

 16. மீண்டும் வேளாவிக்கோ மாளிகை

 

சிறைப்பட்ட கடம்பர்களைச் சிறையிலடைத்தும், சிறை மீட்கப்பட்ட சேர வீரர்களுக்கு உண்டாட்டு நிகழ்த்தியும் கொண்டாடிக் கொண்டிருந்த குமரன் நம்பி மறுநாள் படை வீரர்களுடன் கடலிற் புகுந்து ஆந்தைக்கண்ணனை வளைக்கத் திட்டமிட்டிருந்தான். 

கடம்பர்களில் பலரைச் சாதுரியமாகப் பொன்வானி முகத்துவாரத்திற்கு அழைத்துச் சிறைபிடித்து விட்டாலும், குமரன் நம்பியின் முதன்மையான நோக்கம் என்னவோ இன்னும் நிறைவேறாமலேயே இருந்தது. ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டுவிட்ட இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்பதே அவனுடைய நோக்கமாயிருந்தும் அந்த உயிர் நோக்கம் இந்த விநாடிவரை நிறைவேறவே இல்லை. அதற்கான வழித்துறைகளைச் சிந்தித்துச் சிந்தித்து முடிவில் ஆந்தைக்கண்ணன் மேல் படையெடுத்து அவனுடைய மரக்கலங்களை மறித்துச் சோதனையிடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான். 

ஆனால் அதற்கு முன்பே இரத்தின வணிகர் வீட்டிலும் இரத்தின வணிகர் வீதியிலும் அவன் அந்தரங்கமாக அறிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் இருந்தன. அவற்றை அறிவதற்கு அவன் முயன்றான். காலதாமதத்தால் வரும் விளைவுகளையும் அவன் சிந்தித்து வைத்திருந்தான். இந்த வேளையில் மீண்டும் உடனே வஞ்சிமாநகரத்துக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அமைச்சர் அழும்பில்வேள் அழைத்து விட்டார். 

மீண்டும் வேளாவிக்கோ மாளிகையில் நுழைவதற்குரிய தைரியத்தை அவன் தன்னுள் நிரப்பிக்கொள்ள வேண்டியிருந்தது. அமைச்சர் அழும்பில்வேளை சந்தித்துச் செல்வதாயிருந்தால் - அதுவரை ஆந்தைக்கண்ணனை வளைப்பதற்காகக் கடலுக்குள் செல்வதைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும். அப்படித் தள்ளி வைப்பதனால் - தான் ஆந்தைக்கண்ணனை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் நேருமுன் ஆந்தைக் கண்ணனே பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கொடுங்கோளுரையும் தன்னையும் தேடிவரக்கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாதே என்ற பயமும் அவனுக்கு இருந்தது. 

அமைச்சரின் கட்டளையை அறவே மறுத்து ஒதுக்கவும் துணிவில்லை. தன்னுடனேயே சுற்றிக் கொண்டிருந்து மகா மண்டலேசுவரருக்கு இணையான அமைச்சருக்கு அடிக்கடி கொடுங்கோளுர் நிலைமைகளைச் சொல்லிவரும் வலியன், பூழியன் ஆகிய இருவர் மேலும் அவனது சினம் திரும்பியது. சினம் கொண்டு அவர்களை அவனால் ஒன்றும் செய்துவிட முடியாது. என்றாலும், அமைச்சர் அழைத்தனுப்பக் காரணமான ஏதாவதொரு செய்தி கொடுங்கோளுரிலிருந்து வேளாவிக்கோ மாளிகைக்கு வந்திருக்க முடியுமானால் அது வலியனாலும் பூழியனாலும்தான் வந்திருக்க முடியுமென்பதைக் குமரன் நம்பி அநுமானித்துத் தெரிந்துக்கொள்ள முடிந்தது. எவ்வளவுக் கெவ்வளவு விரைவாக வேளாவிக்கோ மாளிகைக்குச் சென்று திரும்புகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு விரைவாக மற்றக் காரியங்களைக் கவனிக்கலாம் என்று தோன்றவே உடனே அவன் வஞ்சிமாநகரத்துக்குப் பயணம் புறப்பட்டான். 

அந்தப் புரவிப் பயணத்தைத் தொடங்கும்போது முன்மாலை நேரம். முன்னிரவு நேரத்திற்குள் அமைச்சரைக்கண்டு பேசிவிட்டு நள்ளிரவுக்குள் மீண்டும் கொடுங்கோளுருக்குத் திரும்ப எண்ணியிருந்தான் அவன் என்ன காரணத்தினாலோ அவன் கொடுங்கோளுருக்குப் புரவிப் பயணம் புறப்பட்ட வேளையில் - அமைச்சர் பெருமானின் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் உடன் புறப்படாமல் கொடுங்கோளூரிலேயே தங்கி விட்டார்கள். இது வேறு குமரன் நம்பியின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கியது. 

தன்னை வேளாவிக்கோ மாளிகைக்கு அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் மட்டும் கொடுங்கோளுரில் தங்குவதன் மர்மம் என்னவென்பதைத் தன்னால் ஆனமட்டும் சிந்தித்துப் புரிந்துகொள்ள முயன்றான் குமரன் நம்பி. முடியாத காரியமாகப் போயிற்று அது. 

கொடுங்கோளுரையும் - கோநகரமான வஞ்சிமா நகரத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இயல்பைமீறிய அமைதி நிலவியது. இயல்பான வழக்கமான போக்குவரவோ மக்கள் நடமாட்டமோ அந்தச் சாலையில் இல்லை. அந்த அமைதி புதியதாகவும் பெரியதாகவும் இருந்தது. ஏதோ ஒரு பயம், அல்லது இயல்பற்றநிலை நாடு முழுமையும் பற்றி ஆட்டிக் கொண்டிருப்பதை அவன் உணர முடிந்தது. ஒரு வகையில் அந்த அமைதி அவனுக்குப் பயன்பட்டது. புரவியை மிக வேகமாகச் செலுத்திக் கோநகரத்தைக் குறுகிய நேரத்தில் அடைவதற்கு அந்த அமைதி உதவுவதாக இருந்தது. 

வேளாவிக்கோ மாளிகை நெருங்க நெருங்க - அந்த அரசதந்திர மாளிகையை அணுகும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் தயக்கமும், மனப்பதற்றமும் இன்றும் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டன. 

வேளாவிக்கோ மாளிகைக்கு அதற்கு முந்திய முறை செல்ல நேர்ந்த சூழ்நிலையையும் இன்று செல்கிற சூழ்நிலையையும் சேர்த்து நினைத்தபோது சென்றமுறையைவிட இந்த முறை அது இன்னும் சூழ்ச்சியும் அந்தரங்கங்களும் அதிகமாகிவிட்ட இடம் போல் மனத்திற்குள் ஒரு பிரமை ஏற்பட்டது. 

தோட்டத்தில் புகுந்து புரவியைக் கட்டிவிட்டு அவன் அந்த மாளிகையில் நுழையும்போது மேல்வானத்தில் மாலையைப் போலவே அவன் மனமும் குழம்பிக் கலங்கிப்போய்த்தான் இருந்தது. 

அரண்மனையின் மற்ற பகுதிகளில் அந்தி விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கீதசாலைகளில் மகளிர் முணுமுணுக்கும் இனிய பண்ணொலிகள் அரண்மனை அந்தப்புரப் பகுதியிலிருந்து வேளாவிக்கோ மாளிகைச் சுவர் வரை எதிரொலித்தது. அதற்கப்பால் அந்த அரசதந்திர மாளிகைக்குள்ளே நுழைய அஞ்சுவதுபோல் வந்த வழியே திரும்பிவிடுவது போல் தோன்றியது குமரன் நம்பிக்கு. 

அமைச்சரை அணுக இசைமுதலிய நளின கலைகளுக்குக்கூட அச்சம் போலிருக்கிறது. வேளாவிக்கோ மாளிகையை நெருங்க மனிதர்கள் பயப்படுவார்கள் என்றால் இசையின் ஒலிகூடப் பயப் படுவதுபோல் அல்லவா தெரிகிறது - என்று தனக்குத்தானே நினைத்துப் பார்த்தபோது குமரன் நம்பியின் இதழ்களிலே புன்னகை தவழ்ந்து மறையத் தவறவில்லை. 

மாளிகையின் கூடத்தில் அமைச்சரைச் சந்திப்பதற்காக அவன் நுழையவேண்டிய கூடத்தில் மட்டும் இரண்டு காவலர்கள் வேலேந்தியபடி நின்றார்கள். அமைச்சரிடம் தன் வரவைத் தெரிவிக்குமாறு அவர்களில் ஒருவனிடம் குமரன் நம்பி வேண்டினான். ஆனால் காவலன் கூறிய மறுமொழி அவனைத் திகைக்க வைப்பதாக இருந்தது. 

அமைச்சர் பெருமான் இப்போது மாளிகையில் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். தாங்கள் அதுவரை காத்திருக்க வேண்டுமென்பது கட்டளை ” - இதைக் கேட்டுக் குமரன் நம்பி ஆத்திரமடைந்தாலும் -தன் ஆத்திரத்தை அவனால் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமலிருந்தது. 

ஒவ்வொருமுறையும் அமைச்சர் அழும்பிள்வேள் தன்னைத் தேடி வருகிறவனுக்குத் தாழ்வுமனப்பான்மை உண்டாகும் படியாக இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பதை அவன் வெறுத்தான். தேடி வருகிற எதிராளியைச் சந்திக்கும் முன்பே அவனுடைய அகங்காரத்தை வெற்றிக்கொண்டு விடுவதுதான் தேர்ந்த அரசதந்திரக்காரர்களுடைய முறையோ என்று அவனுள் ஒரு சந்தேகம் எழலாயிற்று.

அவன் அமைச்சர் பெருமானைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் கோபத்தோடு வருகிறான். வந்த வேகத்தில் தன்னுடைய அகங்காரத்தை இழக்கிறான். அப்படி அகங்காரத்தை இழந்த மறுகணமே அவரைச் சந்திக்க நேரிடுகிறது. அவரோ அவன் மனத்தில் தாழ்வு மனப்பான்மை கிளறும்படி செய்து விடுகிறார். தாழ்வு மனப்பான்மையோ அவனுடைய அகங்காரத்தை அவனே மறந்துப்போகும்படி செய்துவிடுகிறது. இன்றும் அதே நிலையில்தான் அவன் இருந்தான். அவர் வருகிற வரை தோட்டத்தில் உலாவிக்கொண்டிருக்கலாம் என்று அவன் புறப்பட்டபோது அவனை அவ்வாறு செய்யவிடாமல் அவரே வந்துவிட்டார். அவரைத் திடீரென்று எதிரே பார்த்தவுடன் அவனுக்கு கையும் காலும் ஒடவில்லை. அந்தக் கம்பீரத் தோற்றத்தை எதிர்கொள்வது கடினமாயிருந்தது. அவருக்கு வணக்கம் செலுத்தி வரவேற்ற சுவட்டோடு - உடன் உள்ளே சென்றான் குமரன் நம்பி. 

கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன் இந்தச் சில நாட்களில் அரசியல் சாகஸங்களில் தேர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. கடம்பர்களின் தலைவனையே ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்த திறமையைப் பாராட்ட வேண்டியதுதான் என்று அவர் தொடங்கியபோது அவனுக்கு மறுமொழி எதுவும் கூறுவதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை. அவன் வாளா நின்றான். 

மெளனமாக இதைப் பார்த்தபடி அமைச்சர் அழும்பில்வேள், உலாவி வரத் தொடங்கினார். உலாவிக்கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு திருமுக ஒலையை எடுத்து, “இந்த ஒலை இன்று காலையில் எனக்குக் கிடைத்தது. படைமுகத்திலிருந்து வந்திருக்கிறது. இதைக் கவனித்தால் நீ செய்ய வேண்டிய காரியங்களில் உனக்கு எவ்வளவு விரைவு தேவையென்று உடனே புரியும்.” 

ஒலையை நான் கவனிக்கும்படி என்ன இருக்கப்போகிறது அமைச்சர் பெருமானே! கட்டளை இடவேண்டியதை நீங்களே இடலாம்.” 

கட்டளையை நான் இடாவிட்டாலும் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்று படைத்தலைவனுக்கு ஆவல் இருக்காதா என்ன?” 

நாட்டைக்காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாட்டில் அமுதவல்லியைக் காப்பதும் ஒரு சிறு கடமையே தவிர அமுதவல்லியைக் காப்பதே என் நோக்கமாயிருக்க முடியாது. நான் தங்கள் கட்டளையைச் செய்யக் கடமைப் பட்டவன். எனக்குக் கட்டளையிடுங்கள்...” என்று அவன் குழைந்ததைப் பார்த்து அமைச்சர் அழும்பில் வேள் அவனையே உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் அவனை ஊடுருவின.

------------

 17. அமுதவல்லியைத் தேடி..

.

நீண்ட நேரம் அவன்முகத்தையே உற்றுப் பார்த்துவிட்டு பின்பு ஒலையை அவனுக்குப் படித்துக் காட்டினார் அமைச்சர் அழும்பில் வேள். ஒலையிலிருந்து குயிலாலுவப் போரில் சேரநாட்டுப் படைகளுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருப்பதாகவும் - விரைவில் மன்னரும், படைகளும் தலைநகருக்குத் திரும்பக்கூடும் என்றும் தெரிந்தது. 

இந்தச் செய்தியை எனக்கு அறிவிப்பதற்காகவா இவ்வளவு விரைந்து என்னை வரவழைத்தீர்கள்? இதைத் தாங்கள் அறிய வேண்டியது அவசியந்தான். நான் அறிந்து ஆகப்போவது என்ன?” என்று குமரன் நம்பி வினாவியபோது அமைச்சர் அழும்பில்வேள் மறுமொழி ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்தார். 

இந்தப் புன்முறுவல் படைத்தலைவனின் சினத்தைக் கிளறச் செய்தது. கொடுங்கோளுரில் தான் விரைந்து செய்ய வேண்டிய பணிகள் இருக்கும்போது - தன்னைக் காரணமின்றி வஞ்சிமா நகரத்திற்கு வரவழைத்த அமைச்சர் பெருமான் மேல் கோபம் கோபமாகவந்தது அவனுக்கு. அவனுடைய அந்த நேரத்து மனநிலையை உணர்ந்தவர்போல் அமைச்சர் கூறத் தொடங்கினார்.

இந்த விநாடியில் உன் மனம் என்மேல் எவ்வளவு ஆத்திரம் கொண்டிருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன் குமரா ! பேரரசரும் படைத்தலைவர்களும் திரும்பி வருவதற்குள்ளாவது கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து நகரத்தைக் காப்பாற்றி வெற்றிவாகை சூட வேண்டும். உன் வெற்றிச் செய்தியை மன்னருக்குத் தெரிவிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடு. யாருடைய துணையுமின்றிக் கொடுங்கோளுர் படைக்கோட்டத் தலைவனே கடற்கொள்ளைகாரர்களைத் துரத்தினான் என்ற பெருமையை நீ அடைய வேண்டும். அழகுச் செல்வமாகிய அமுதவல்லியை மீட்க வேண்டும் என்பதையும் மறந்துவிடாதே என்று மிக நிதானமாக அவர்மீண்டும் வற்புறுத்தியபோது, அவன் உள்ளத்தில் அவர் மீதிருந்த சினம் சற்றே தணிந்தது. 

அமுதவல்லிக்கும் தனக்கும் இடையேயுள்ள தொடர்பு தெரிந்து அவர் அவ்வாறு வற்புறுத்துகிறாரா அல்லது இயல்பாகவே வற்புறுத்துகிறாரா என்று புரியாமல் தயங்கினான் அவன். உள்ளத்திலிருக்கும் நினைவு எதுவோ அதையே அவரும் வற்புறுத்தவே அவனுடைய உற்சாகம் அதிகமாகியது. அமைச்சர் பெருமானுக்கு முன்னால் சூளுரை கூறவும் துணிந்துவிட்டான் அவன். 

பெருமன்னரும் படைத்தலைவர்களும் குயிலாலுவத்தை வென்று வாகை குடித் திரும்புவதற்கு முன்னர் கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களை வென்று வாகை சூடுவேன் என இன்று இந்த விநாடியில் சேரநாட்டின் மிகச் சிறந்த மதியூகியும், அரசதந்திர வித்தகரும் ஆகிய தங்கள் முன் சூளுரைக்கிறேன். நான் வெற்றி வாகை சூடுவேன் என்று கூறும் இந்த உறுதியிலேயே இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்பேன் என்ற உறுதியும் அடங்கியிருக்கிறது. தாங்கள் இனியாவது என்னை நம்பி விடைகொடுக்க வேண்டும். பல விதங்களில் கரையோரத்து மரக்கலத்தில் தங்கியிருக்கும் ஆந்தைக்கண்ணனின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டிருக்கிறேன். ஆகவே, இனி ஒவ்வொரு விநாடியும் நான் கொடுங்கோளூரின் எச்சரிக்கையோடு காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் தங்கள் அழைப்பைப் பொருட்படுத்தியே வந்தேன்.” 

நீ பொருட்படுத்தும் அளவிற்குப் பொறுப்புள்ளவன் என்பதாலேயே நானும் உன்னைக் கூப்பிட்டேன். மாமன்னர் வடதிசையிலிருந்து திரும்பு முன் கடம்பர் கடல் முற்றுகையைத் தீர்த்துவிடவேண்டும். மீண்டும் அதை வற்புறுத்துகிறேன் என்றார் அமைச்சர். 

அவருக்கு மீண்டும் அந்த உறுதிமொழியை அளித்து விட்டுப் புறப்பட்டான் குமரன். இதை வற்புறுத்துவதற்காக மீண்டும் அவர் தன்னை வேளாவிக்கோ மாளிகைக்கு அலைய வைத்ததை அவன் வெறுத்தாலும், ‘மன்னர் வடதிசையிலிருந்து திரும்புவதற்கு முன் போரை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று விரும்பும் அவருடைய அந்தரங்க விருப்பத்தை மனமாரப் போற்றினான் குமரன். கடம்பர்களைப் பொருத்தவரை கடமைக்காகப் போராட வேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்தது. கடைசியாக அமுதவல்லியைச் சந்தித்த வேளையையும், பேசிய பேச்சையும் நினைவு கூர்ந்தான் அவன். 

நாளைக்கு இதே வேளையில் இங்குவர மறந்துவிடாதே அமுதவல்லி! ஊரெல்லாம் ஆந்தைக்கண்ணனைப் பற்றிய பயமாயிருக்கிறதே என்று பேசாமல் இருந்து என்னை ஏமாற்றி விடாதே. உன் தந்தையார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார் எங்கே தம்முடைய இரத்தினங்களை எல்லாம் ஆந்தைக்கண்ணன் வாரிக்கட்டிக்கொண்டு போய்விடுவானோ என்று அவருக்குக் குடல் நடுங்கும். உன் தந்தை தன்னிடமுள்ள எல்லா இரத்தினங்களைப் பற்றியும் கவலைப்படட்டும். ஆனால், ஒரே ஒரு விலை மதிப்பற்ற இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படுவதை விட்டுவிடலாம் என்று கூறிவிட்டு, ‘நீதான் அந்த விலைமதிப்பற்ற இரத்தினம் அமுதவல்லி!’ என்று தான் அவளைப் புகழ்ந்துரைத்ததையும் வஞ்சிமாமநகரத்திலிருந்து கொடுங்கோளுருக்குத் திரும்பிக் கொண்டிருந்த இந்த வேளையில் நினைவு கூர்ந்தான் படைத் தலைவன் குமரன் நம்பி. 

அமுதவல்லியின் வசீகரமான முகமும், எழில் நிறைந்த புன்சிரிப்பும், பருகும் விழிச்சுடர்களும் நினைவு வந்து அவனை உருக்கின. இரவின் குளிர்ந்த காற்றும், சாலையின் தனிமையான சூழலும் அவன் உள்ளத்தை நெகிழச் செய்தன. அந்த நெகிழ்ச்சியில் மனதுக்கினியவளின் நினைவே பெருகியது. வழியெல்லாம் அந்த நினைவின் இனிமையிலேயே கடந்தான் அவன். கொடுங்கோளுரை அடையும்போது நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது. படைக் கோட்டத்தில் வாயிற்காப்போரைத் தவிர வேறொருவரும் இல்லை. வீரர்கள் அனைவரும் பொன்வானியாற்று முகத்திலேயே காத்திருப்பதாகத் தெரிய வந்தது. அமைச்சரின் அந்தரங்க ஊழியர்களாகிய வலியனும் பூழியனும் கூடப் படைக்கோட்டத்தில் இல்லை. அவர்களும் கூட உறக்கத்தைக் கெடுத்துக்கொண்டு ஆற்று முகத்திற்குச் சென்றிருப்பதாகக் காவல் வீரர்கள் கூறினார்கள். 

குமரனும் உடனே ஆற்று முகத்திற்கு விரைந்தான். வீரர்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் முகமலர்ந்தனர். தலைவன் அமைச்சரிடம் இருந்து அறிந்து வந்த செய்தியைப் பற்றித் தங்களுக்கு ஏதேனும் கூறுவானோ என்ற எண்ணமும் ஆர்வமும் படைவீரர்களுக்கு இருந்தது. ஆனால் அத்தகைய ஆர்வம் எதுவுமே இல்லாமல் நிதானமாக இருந்த இருவரும் அக்கூட்டத்தில் விருப்பு வெறுப்பற்றுக் காணப்பட்டனர். அவர்களே வலியனும் பூழியனும் ஆவார்கள். அமைச்சர் குமரனை எதற்காகக் கூப்பிட்டனுப்பினார் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவர்கள் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. 

அது குமரனுக்கே வியப்பையும் திகைப்பையும் அளிக்கக் கூடியதாயிருந்தது. ஏனைய வீரர்களிடமும் அமைச்சரைச் சந்திக்கச் சென்றது பற்றி அவன் எதுவும் கூறவில்லை. ‘முற்றுகையை விரைவில் முறியடிக்க வேண்டும் என்பதை பொதுவாகக் கூறினார் என்று தெரிவித்துவிட்டு மேலே ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினான் குமரன் நம்பி விடிவதற்குள் கடம்பர்கள் படகுகள் மூலம் - ஆற்று முகத்துக்கு வரலாமென்று குமரனின் அநுமானத்திற்குத் தோன்றியது. அப்படி அவர்கள் வந்தால் உடனே அவர்களை எதிர்த்து அழிப்பதற்கும் சிறைப்பிடிப்பதற்கும் வேண்டிய ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்யத் தொடங்கினான் அவன். 

முற்றுகையிலிருக்கும் பெரும்பாலான கடம்பர்களை - அவர்களுடைய கப்பல்களுக்குச் சென்றே அழிக்க முயல்வதோ, எதிர்க்க முயல்வதோ ஆபத்தான காரியம் என்பதால் அவர்களை அணி அணியாகப் பொன்வானி முகத்துவாரத்திற்கு வரச் செய்து அழிக்கவோ சிறைப்பிடிக்கவோ செய்ய வேண்டும் என்று கருதினான் குமரன் நம்பி. அவன் எதிர்பார்த்தபடி நிகழுமானால் முற்றுகையில் இருக்கும் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களில் ஆள்பலம் படிப்படியாகக் குறையும். ஆள்பலம் குறையக் குறைய அந்தக் கப்பல்கள் வலிமையற்றவையாக நேரிடும். கப்பல்கள் வலிமையற்றவையாகிவிட்ட பின் - குமரன் தன் வீரர்களுடன் கடலில் புகுந்து கொள்ளை மரக்கலங்களைக் கைப்பற்றி - அவற்றில் ஏதாவதொன்றில் சிறைவைக்கப் பெற்றிருப்பதாகக் கருதும் அமுதவல்லியை மீட்கலாம். அமுதவல்லியை மீட்பதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைப் படைத் தலைவன் நன்கு அறிந்திருந்தான். 

எனவே அவன் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக முனைந்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. பின்னிரவு நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் மூன்று பெரிய படகுகளில் கடம்பர்கள் ஆயுதபாணிகளாகப் பொன்வானியாற்று முகத்துவாரத்தில் நுழைந்தார்கள். மறைந்திருந்த கொடுங்கோளூர் வீரர்களை ஏற்கெனவே இதை எதிர்பார்த்து எச்சரிக்கையாக இருக்கச் செய்ததனால் - உடனே தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ய முடிந்தது. 

படகுகளில் வந்துகொண்டிருந்தவர்கள் - புதர்களில் கொடுங்கோளூர் வீரர்கள் மறைந்திருந்ததை எதிர்பார்த்திருக்க முடியாத தனால் சிதறி நிலை குலைந்தனர். அந்த அகால வேளையில் கடம்பர்கள் இதை முற்றிலும் எதிர்நோக்கி இருக்கவில்லை. ஒரு படகு ஆற்றில் கவிழ்ந்தது. சிலர் இறந்தனர். நீந்திக் கரையேறியவர்களை கொடுங்கோளுர் வீரர்கள் உடனே சிறைப் பிடித்தனர். ஆற்று முகத்துவாரத்து வழியே நீந்திக் கடலுக்குள் போய்த் தப்பிவிடலாமென்று புறப்பட்ட சில கடம்பர்களையும் நீரில் குதித்து மறித்துச் சிறைப்பிடித்தார்கள் கொடுங்கோளூர் வீரர்கள். 

விடிவதற்குள் அந்த முகத்துவாரத்துப் போர் முடிந்துவிட்டது. கடம்பர்களில் இறந்தவர்கள் தவிர எஞ்சியோரைச் சிறைப்பிடித்தாயிற்று. 

இனி அமுதவல்லியைத் தேடிப் புறப்படவேண்டியதுதான் என்று தனக்குள் சிந்தித்தான் குமரன் நம்பி. படகுகள் ஆயத்தமாயின. கொடுங்கோளூர் வீரர்கள் யாவரையும் படகுகளில் அணியணியாகப் பிரித்து அமரச்செய்தான் தலைவன். கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்கள் முற்றுகையிட்டிருந்த கடற் பகுதியை நாலா திசைகளிலிருந்தும் வளைத்துக் கொண்டு ஒரே சமயத்தில் தாக்க வேண்டுமென்று தன் வீரர்களுக்குக் கூறியிருந்தான் படைத் தலைவன். கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களில் ஒன்றுகூடத் தப்பிச் சென்று விடாமல் எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு தாக்க வேண்டு மென்பதும் யாவருக்கும் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. தாக்குதல் முடிந்ததும் ஒவ்வொரு கொள்ளை மரக்கலத்தையும் சோதனையிட்டுத் தேடவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. 

எல்லா இடங்களுக்கும் துரத்தித் துரத்தி உடன் வந்த அமைச்சர் அழும்பில் வேளின் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் என்ன காரணத்தினாலோ கடலுக்குள் படகுகள் புறப்பட்டபோது மட்டும் மெல்ல நழுவி விலகிச் சென்று விட்டார்கள். 

கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களைத் தானும் தன் நண்பர்களும் வளைத்துத் தாக்கக் செல்வதை அவர்கள் ஏன் அவ்வளவு அக்கறையாகக் கவனிக்க வரவில்லை என்பது குமரன் நம்பிக்கு ஓரளவு ஐயப்பாட்டை உண்டாக்கியது. அமுதவல்லியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது அமைச்சர் மூலமும், அவருடைய அந்தரங்க ஊழியர்கள் மூலமுமே அதிகமாக வற்புறுத்தப்பட்டிருக்க அதைச் செயற்படுத்தும்போது, அவ்வூழியர்கள் காணாததுபோல விலகிச் சென்று விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தான் குமரன் நம்பி. 

ஆனால், தனியே அதை மட்டுமே சிந்தித்துப் பார்க்கவும் அப்போது அவனுக்கு வாய்ப்பில்லை. ஒரு பெரிய கடல் முற்றுகையைத் தளர்த்தி எதிரிகளின் மரக்கலங்களில் புகுந்து சோதனையிட வேண்டிய காரியத்துக்காக விரைந்து கொண்டிருந்தான் அவன். அந்த நிலையில் அழும்பில்வேளின் அந்தரங்க ஊழியர்களான அவர்கள் இருவரும் ஏன் தங்களைப் பின் தொடரவில்லை என்பதைப் பற்றியே கவலைப்பட முடியாமலிருந்ததற்காக அதிகம் வருத்தப்படாமல் தன் செயல்களைக் கவனித்துச் செய்யலானான் கொடுங்கோளூர்ப்படைக் கோட்டத் தலைவன்.

-------------

 18. கடம்பர் மரக்கலங்களில்

 

திட்டமிட்டபடியும் எந்தெந்தத் திசைகளிலிருந்து எப்படித் தாக்குவது என்று வகுத்துக் கொண்டபடியும்-கொடுங்கோளூர்ப் படை வீரர்கள் படகுகளில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நல்ல வேளையாகக் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்கள் எல்லாம் இன்னும் முன்னிருந்த இடத்திலேயே இருந்தன. எந்த மரக்கலமும் எண்ணிக்கையில் குறையவில்லை என்பது படைத் தலைவனுக்குத் திருப்தியளித்தது. பொதுவாகக் கடம்பர்களின் கொள்ளையிடும் முறை எப்படியென்றால், கொள்ளையிட்ட பொருள்களுடனும் - சிறைப்பிடித்த, பகைவர் நாட்டு ஆடவர், மகளிருடனும் கூடிய மரக்கலம் கொள்ளையும் போரும் முடிவடைவதற்கு முன்பே சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று பத்திரமாக துறையையடையும்படி கடத்தப்பட்டுவிடும். ஆனால் என்ன காரணத்தினாலோ இம்முறை முதலில் எத்தனை கொள்ளை மரக்கலங்கள் துறைக்கு வந்தனவோ அத்தனை மரக் கலங்களுமே அப்படியே இருந்தன.

முதல் நாள் அந்த மரக்கலங்களில் ஒற்றறிவதற்காகச் சென்றபோது ஒரு காரியத்துக்காக அவற்றை எண்ணிக் கணக்கிட்டு வைத்துக்கொண்டான் குமரன் நம்பி. இப்போதும் அந்த மரக்கலங்கள் அப்படியே இருந்தன. ஒரு வேளை கடம்பர்கள் தங்களுடைய தோல்வியைப் பற்றித் தாங்களே இன்னும் சரியாக அறியவில்லையோ என்று தோன்றியது படைத் தலைவனுக்கு. அவர்கள் எந்த விநாடியிலும் தங்கள் கொள்ளை மரக்கலங்களோடு திரும்பி ஓடலாமென்ற கருத்தில்தான் தன்னுடைய வீரர்களையும், படகுகளையும் வில்லம்புகளோடும் வேறு பல படைக்கலங்களோடும் கடம்பர் கலங்களை நான்கு புறமும் வளைக்குமாறு வகுத்துக் கொண்டு முன்னேறினான் அவன். 

முதல் நாள் இரவு முழுவதும் பொன்வானி ஆற்றுமுகப் புதரில் மறைந்திருந்தும் கடம்பர்களை எதிர்த்துப் போரிட்டுக் களைத்திருந்தாலும் படை வீரர்களோ, தலைவனோ ஒய்ந்து விடவில்லை. கடம்பர் கொள்ளை மரக்கலங்களைக் சூறையாடப் போகிறோம் என்ற உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அருகில் நெருங்குகிறவரை கடம்பர் மரக்கலங்கள் அமைதியாயிருந்தன. சுற்றி வளைத்துக்கொண்டதும் கடம்பர்களும் ஒன்று சேர்ந்து தம் மரக்கலங்களின் மேல் தளங்களின் வில்லம்புகளோடு தோன்றினார்கள். போர் மூண்டது. குமரன் நம்பி எதிர்பார்த்தது போல் மரக்கலங்களில் மீதமிருந்த கடம்பர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. 

ஆயினும் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களாக இருந்தும், அந்தக் கடம்பர்கள் கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்த்துத் தாக்கினார்கள். போர் சிறிது நேரம் நீடித்தது. முடிவில் கடற் கொள்ளைக்காரர்களால் எதிர்த்து நிற்க முடியாமல் போகவே, அவர்கள் தங்கள் தங்கள் மரக்கலங்களில் ஓடி ஒளிந்தார்கள். 

அதுதான் சமயமென்று - புறத்தே அந்த மரக்கலங்களை வளைத்து முற்றுகையை நீக்கவோ, தளர்த்தவோ செய்யாமல் அப்படியே நீடிக்க விட்டுவிட்டுத் தானும் சில தேர்ந்தெடுத்த வீரர்களுமாக ஒவ்வொரு மரக்கலத்தையும் சோதனையிட்டுப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான் குமரன் நம்பி. 

அவன் சென்ற முதல் மரக்கலத்திலேயே முற்றிலும் எதிர்பார்த்திராத உதவி ஒன்று அவனுக்குக் கிட்டியது. அவனால் முன்பு அனுப்பப்பட்டிருந்த செவிட்டூமை ஒற்றன் ஒருவன் அந்த மரக்கலத்தின் பாய்மரத்தில் கட்டிப்போடப் பெற்றுச் சிறை வைக்கப்பட்டிருந்தான். அவனை விடுவித்துக் காப்பாற்றியதோடு, மரக்கலங்களில் சோதனையிடுவதற்கு உதவி செய்யுமாறு வேண்டினான் குமரன் நம்பி. 

முதன் முதலாக ஊமை வேடத்தைத் துறந்து முக மலர்ச்சியோடு படைத் தலைவனிடம் பேசத் தொடங்கினான் விடுவிக்கப்பட்ட வீரன். 

ஆந்தைக்கண்ணனுடைய மரக்கலத்தில்தான் அமுதவல்லி சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் ஒவ்வொரு மரக்கலமாகச் சோதனையிடத் தொடங்கினான் அவன். 

அப்படிச் சோதனையிடத் தொடங்கியபோது சிவ மரக்கலங்களின் கீழறைகளில் பதுங்கியிருந்த கடம்பர்கள் சிலர் சிறைப்பட்டனர். 

முதல் கொள்ளை மரக்கலத்தை அணு - அணுவாகச் சோதனையிட்டு முடித்ததும் குமரன் நம்பிக்கு ஒரு யோசனை தோன்றியது. 

குற்றுயிரும் குலையுயிருமாய்க் களத்தில் காயப்பட்டவர்களை விட்டுவிடும் வழக்கப்படி கடற்போரில் காயமுற்ற வீரர்களும் ஏனையோரும் - அவர்கள் தலைவனான ஆந்தைக்கண்ணனும் தப்பி ஓடுவதற்கு ஒரு மரக்கலத்தைத் திருப்பி அளித்துவிட்டு மற்றைய மரக்கலங்களைச் சோதனையிட்டபின் நெருப்புக்கிரையாக்கி விடலாம் என்றெண்ணினான் அவன். 

எல்லா மரக்கலங்களோடும் கடம்பர்களைத் தப்பவிட்டால்- மறுமுறை மிக விரைவிலேயே அவர்கள் படையெடுத்து வருவார்கள் என்பது உறுதி எல்லாக் கடம்பர்களையும் அவர்கள் தலைவனான ஆந்தைக்கண்ணன் உட்படச் சிறைப்பிடித்துக் கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தில் கொண்டுபோய் அடைப்பது என்பதும் சாத்தியமான காரியமே இல்லை. அப்படிச் செய்வது அரசதந்திரமும் ஆகாது. 

கடம்பர்களைக் கொடுங்கோளுரில் அதிகமாகச் சிறை வைப்பது கொடுங்கோளுர் நகரத்திற்கே பிற்காலத்தில் கெடுதலாக முடியக் கூடியது. கடலில் கொள்ளைக்குப் போனவர்கள் திரும்பி வரவில்லை என்றால் அங்கங்கே பன்னிராயிரம் முந்நீர்ப் பழந்தீவுகளில் இருக்கும் எல்லாக் கடம்பர்களும் ஒன்றுகூடிப் பலநூறு மரக்கலங்களில் கொடுங்கோளூரை நோக்கிப் புறப்பட்டு விடுவார்கள். 

எனவே பெருமன்னர் செங்குட்டுவரும் கடம்பர்களை அவ்வப் போது அடக்கித் துரத்துவது வழக்கமே ஒழியக் கூண்டோடு சிறைப் பிடிப்பது வழக்கமில்லை. 

அந்த முறையில்தான் இப்போது குமரன் நம்பியும் செயற்பட விரும்பினான். 

எனவே முதலில் சோதனைசெய்து முடித்த மரக்கலத்தை - அப்படியே ஆந்தைக்கண்ணன் முதலியவர்கள் தப்பி ஓடுவதற்குக் கொடுத்துவிடலாம் என்பது குமரன் நம்பியின் எண்ணமாயிருந்தது.

சிறைப்பட்ட கடம்பர்களையும் அவர்களுடைய தலைவனான ஆந்தைக்கண்ணனையும் இங்கு அழைத்து வாருங்கள் என்று தன் வீரர்களுக்கு அவன் கட்டளையிட்டான். 

ஆந்தைக்கண்ணன் கைகள் பிணிக்கப்பட்டுத் தன் எதிரே கொண்டுவரப் பட்டபோதுநீ கொடுங்கோளுரிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டுவந்த இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை எந்தக் கப்பவில் அடைத்து வைத்திருக்கிறாய் என்பதை மறைக்காமல் உடனே சொல்லிவிடுவது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்று அவனை நோக்கிச் சீறினான் குமரன் நம்பி. 

இந்த வினாவைச் செவிமடுத்ததும் ஆந்தைக்கண்ணனின் உருண்டை விழிகளில் கனல் பறந்தது. 

என்ன உளறல் இது படைத்தலைவரே? கொடுங்கோளுருக்குள் வருவதற்கு முன்பே எங்கள் கதி இப்படி ஆகிவிட்டது. நாங்களாவது இரத்தின வணிகர் மகளைச் சிறைப்பிடிப்பதாவது நாங்களல்லவா இப்போது உங்களிடம் சிறைப்பட்டுத் தவிக்கிறோம்? அப்படியிருக்கும்போது படைத்தலைவர் கூறும் செய்திகள் புதுமையாக அல்லவா இருக்கின்றன?” என்று கொதிப்போடு கூறினான் அவன். 

ஆனாலும் குமரன் நம்பிக்கு அவன் கூறியதில் உடனே நம்பிக்கை உண்டாகவில்லை. மீண்டும் இரைந்து கூப்பாடு போட்டான். “கடம்பர்கள் கொள்ளையடிப்பார்கள் என்றுதான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன். இப்போதோ அவர்கள் பொய் சொல்லுவார்கள் என்றும் தெரிகிறது.” 

கோழைகள்தான் பொய்களைச் சொல்லுவார்கள். கடம்பர்கள் என்றுமே கோழைகளாக இருந்ததில்லை. உங்கள் கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் விலை மதிப்பற்ற இரத்தினங்களையும் முத்துக்களையும் மணிகளையும் அவைகள் நிறைந்திருக்கும் வணிகக் கிடங்குகளையும் கொள்ளையடிக்கும் ஆசை எங்களுக்கு உண்டு அதை நீங்களும் அறிவீர்கள், உலகமே அறியும். ஆனால் நீங்கள் ஏதோ புதுக்கதையை அல்லவா சொல்லுகிறீர்கள்? கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளை நாங்கள் சிறைப்பிடித்து வந்திருப்பதாக நீங்கள் கூறுவது விநோதமாக அல்லவா இருக்கிறது! அப்படி ஒரு வணிகரின் மகளைச் சிறைப்பிடித்து எங்களுக்கு என்ன ஆகவேண்டும்?” என்று ஆந்தைக்கண்ணனும் பிடிவாதமாக மறுத்துக் கூறினான். 

அவன் வார்த்தைகளை நம்புவதைவிட எல்லா மரக்கலங்களையும் சோதித்துப் பார்த்துவிடுவதே நல்லதென்று ஆந்தைக் கண்ணனும் அவன் ஆட்களும் நின்றுகொண்டிருந்த மரக் கலத்தை முதலிலேயே சோதனை செய்துவிட்ட காரணத்தால் வேறு மரக்கலங்களை குமரன் நம்பியும் அவன் ஆட்களும் சோதனையிடத் தொடங்கினார்கள். 

நிதானமாகவும் பொறுமையாகவும், ஒரு மரக்கலம் விடாமல் தேடித் துளைத்துப் பார்த்தும்-அமுதவல்லியைக் காணவில்லை. கடம்பர்கள் பொன்வானி முகத்துவாரத்தின் வழியாக நகருக்குள் வந்து அமுதவல்லியைச் சிறைப்பிடித்துக்கொண்டு போயிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய கொள்ளை மரக்கலங்களில் ஏதாவது ஒன்றில்தான் வைத்திருக்க வேண்டும். இத்தனைமரக்கலங்களில் எதிலும் அவள் இல்லை என்றவுடன் குமரன் நம்பியின் மனத்தில் சந்தேகம் எழுந்தது. 

அமைச்சர் அழும்பில்வேளும் அவருடைய அந்தரங்க ஒற்றர்களும் எதற்காக இப்படி ஒரு பொய்யைத் தன்னிடம் கூறினார்கள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

உண்மையில் அப்படியே ஆந்தைக்கண்ணன் அமுதவல்லியைச் சிறைப்படித்திருந்தாலும் இப்போது, தான் அவன் பயன் படுத்துவதற்கென்று கொடுத்திருக்கும் அந்த ஒரே ஒரு மரக்கலத்தின் மூலமாகத்தான் அவளைத் தன்னுடைய தீவுக்குக் கொண்டு போகமுடியும். அவனுடைய கூட்டமோ இப்போது மிகமிகச் சிறிதாகிச் சிறைப்பட்டு விட்டது. அந்தக் கூட்டத்திலும் பெண்கள் யாருமே இல்லை. இருந்தாலும் அவர்களைக் குமரன் நம்பி அறியாமல் இப்போது ஆந்தைக்கண்ணன் திருப்பி அழைத்துச் செல்ல வாய்ப்பே இல்லை. எனவே ஏதோ ஒரு காரணத்திற்காக அமைச்சர் அழும்பில்வேளும், அவருடைய அந்தரங்க ஒற்றர்களும் தன்னிடம் உண்மையை மாற்றியோ திரித்தோ கூறியிருக்க வேண்டுமென்று குமரன் நம்பிக்குத் தோன்றியது. 

குமரன் நம்பி - ஆந்தைக்கண்ணனையும், அவனுடனிருந்தவர்களையும் ஒரே ஒரு மரக்கலத்துடன் விட்டுவிட்டு ஏனைய மரக்கலங்களுக்குத் தீ வைக்க ஏற்பாடு செய்தான். தீயும் வைக்கப்பட்டது. அதைவிடக் கடுங்கோபத்தீயுடன் கொடுங்கோளுருக்குத் திரும்பினான். 

மறுநாள் - அமைச்சர் அழும்பில் வேளைக் காண வேளாவிக்கோ மாளிகைக்குச் சென்றான்.

-----------

 19. குமரனின் கோபம்

 

கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களைத் துரத்தியதோடு மட்டுமின்றி அவர்களுடைய ஒரேஒரு மரக்கலத்தைத் தவிர ஏனைய மரக்கலங்கள் அனைத்தையும் நெருப்பிட்டு அழித்த குமரன் கொடுங்கோளுரும் சேரநாட்டுக் கடற்கரை நகரங்களும் அந்த வெற்றிப் பெருமிதத்தில் ஆழந்திருக்கும்போது தான் மட்டும் தீர்க்க முடியாத கடுங்கோபத்தோடு - வேளாவிக்கோ மாளிகையை நோக்கி விரைந்தான். 

அமைச்சர் அழும்பில்வேள் தன்னை ஏமாற்றி விட்டார் என்ற எண்ணம் அவன் மனத்தைக் கொதிப்படையச் செய்திருந்தது. கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன் என்ற முறையில் அமைச்சரின் கட்டளைகளை நிறைவேற்றக் கடமைப் பட்டவன் அவன். 

எந்தக் கட்டளையையும் நேரடியாக அவர் அவனுக்கு இட்டிருக்கலாம். அப்படி இட்டிருந்தாலே அவன் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவன். 

ஆனால் அவர் இப்படிச் சுற்றி வளைத்துக் கூறித் தன்னை ஏமாற்றியதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமைச்சர் அழும்பில் வேள் கடற்கொள்ளைக்காரர்களின் முற்றுகையைக் காண்பித்து எவ்வளவோ பரபரப்புக் காட்டினாலும் - அந்த வெற்றியை வாங்கிக்கொடுத்த முயற்சியும் சாதுரியமும் தன்னுடையவையே என்பதைக் குமரன்நம்பி நன்கு உணர்ந்திருந்தான். 

எனவேதான் அவனுக்கு அமைச்சர் அழும்பில்வேள் மேல் பொறுத்துக்கொள்ள முடியாத கோபம் வந்தது. 

வேளாவிக்கோமாளிகையைவிட உலகம் பரந்தது-விரிந்தது என்ற உணர்வை அமைச்சருக்கு உண்டாக்கிக் காட்டவேண்டும் போலத் துடி துடிப்பாக இருந்தது அவனுக்கு. 

அழும்பில்வேளின் மேலும், வேளாவிக்கோ மாளிகையின் கட்டளைகள் மேலும் அவனுக்கு நம்பிக்கையும் பயபக்தியும் உண்டுதான். 

ஆனால் அதற்காக அமைச்சரிடமும் வேளாவிக்கோ மாளிகையிடமும் ஏமாந்துபோகிற அளவு தாழ்ந்துவிட விரும்பவில்லை அவன். 

தலைநகரிலும் கொடுங்கோளுரிலும் படைகள் குறைவாக இருந்த சமயத்தில் மிகவும் கடுமையான கடற்கொள்ளைக்காரர் முற்றுகையை மீட்டு நாட்டுக்கு வெற்றி தேடிக்கொடுத்திருக்கிறான் அவன். அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஏமாற்றுகிற எந்தக் காரியங்களையும் இப்போது அவன் பொருட்படுத்த முடியாது. 

வேளாவிக்கோமாளிகையை அவன் அடைந்தபோது இன்றும் அமைச்சரை உடனே சந்திக்க முடியவில்லை. வடதிசைக் குயிலாலுவப் போரில் வெற்றிபெற்றுப் பெரும்படையுடன் வஞ்சிமா நகருக்குத் திரும்ப வந்து கொண்டிருக்கும் பேரரசர் செங்குட்டுவரையும், பெரும் படைத் தலைவனான வில்லவன் கோதையையும் சிறப்பாக வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மந்திரச் சுற்றத்தினருடன் கலந்து பேசிக் கொண்டிருந்தார் அமைச்சர் அழும்பில்வேள். 

நாட்டுக்கும், கடற்கரையோர நகரங்களுக்கும் உடனடியான ஆபத்தினைத் தரவல்ல கடற்கொள்ளைக்காரர்களை விரட்டியடித்து வெற்றிவாகை சூடிக்கொண்டு வந்திருக்கும் தன்னை ஏனென்று கேட்கவோ எதிர்கொண்டு வரவேற்கவோ மனிதர்களில்லை என்பதை அவன் அப்போது உணர்ந்தான். 

அந்த உணர்வு அவன் மனத்தைப் புண்படுத்தினாலும் அழும்பில்வேளைச் சந்தித்த பின்பே கொடுங்கோளுர் திரும்புவது என்று பொறுமையோடு காத்திருந்தான் அவன். 

கடம்பர்களை இதற்குமுன் பலமுறை வென்றவர்கள் யாவரும் இவ்வளவு குறுகிய காலத்தில் குறுகிய படை வசதிகளின் துணை கொண்டு வென்றதே இல்லை. 

பெருமன்னர் செங்குட்டுவர் கோநகரில் இல்லாத சமயத்தில் இத்தகைய வெற்றிச் செயலை அவன் புரிந்திருக்கிறான் என்பது இன்னும் சிறப்பான காரியம். அந்தச் சிறப்பான காரியத்துக்காகக் கொடுங்கோளுரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அவனைக் கொண்டாடக் காத்திருந்தும் - அவன் அவைகளை எல்லாம் விட்டுவிட்டு வஞ்சிமா நகரத்தின் வேளாவிக்கோ மாளிகையில் அமைச்சர் அழும்பில்வேளைத் தேடி வந்திருந்தான். 

தோற்றோடிய கடம்பர்களையோ ஆந்தைக்கண்ணனையோ சந்தேகிக்க ஒன்றுமில்லை என்றும் தோன்றியது. அமைச்சரோ அவருடைய அந்தரங்க ஊழியர்களோ கூறியபடி கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை ஆந்தைக் கண்ணன் சிறைப்பிடித்து வைத்திருக்க முடியுமானால் - அவனுடைய மரக்கலங்கள் அனைத்தையும் கைப்பற்றித் தான் சோதனையிட்டபோது அவள் கிடைத்திருக்க வேண்டும். அப்படியில்லாததால்தான் அமைச்சர் அழும்பில்வேளின் மேல் அவனுடைய கோபமெல்லாம் திரும்பியது. 

ஆந்தைக் கண்ணன் கூறியதிலிருந்து - அவனோ அவனுடைய ஆட்களோ - கொடுங்கோளுருக்குள் வந்து எதையும் கடத்த முடியவில்லை என்று தெரிந்தது. 

ஆகவே அமுதவல்லியை அவனோ அவனுடைய ஆட்களோ சிறைப்பிடித்திருக்க வழியேயில்லை. சிறைப்பிடித்துவிட்டு தன்னிடம் மறைக்கவோ, பொய் சொல்லவோ கடம்பர்களால் முடியாது என்பதும் குமரன் நம்பிக்குத் தெரிந்தது. 

கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து நகரத்தை மீட்கத் தன்னை முதன் முதலாக அமைச்சர் கூப்பிட்டனுப்பியபோது வேளாவிக்கோ மாளிகைக்கு வந்ததிலிருந்த இந்த விநாடிவரை நிகழ்ந்தவற்றை ஒன்றுவிடாமல் சிந்திக்கத் தொடங்கினான் குமரன் நம்பி. 

முதன் முதலாக அவரைச் சந்தித்தவுடன் கடற்கொள்ளைக் காரர்களின் கடல் முற்றுகையைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல், கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத்திற்கு அருகிலுள்ள பூந்தோட்டத்தைப்பற்றி அமைச்சர் தன்னிடம் விசாரித்ததை நினைவு கூர்ந்தான் அவன். அப்படி அவர் தன்னை விசாரித்த நாளைக்கு முந்தியநாள் மாலை வேளையில்தான் அதே பூந்தோட்டத்தில் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததை அறிந்து அவர் அவ்வாறு கேட்டாரா என்றறிய முடியாமல் - அப்போது தனக்கு ஒருவிதமான மனக் கலக்கம் ஏற்பட்டதையும் நினைவு கூர்ந்தான் அவன். 

திடீரென்று அவர் அந்தப்பூங்காவைப்பற்றிக் கேட்டதும் தான் நாக் குழறிப்போய் அவருக்கு மறுமொழி கூறமுடியாமல் திகைத்த வேளையில், ‘என் வயதுக்கும் முதுமைக்கும் இப்படிப்பட்ட அழகிய பூங்காக்களில் பிரியம் வைப்பது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்று உனக்குத் தோன்றலாம் குமரா! பூங்காக்களையும் பொழில்களையும் உன்போன்ற மீசை அரும்பும் பருவத்து வாலிபப் பிள்ளைகள்தான் நன்றாக அநுபவிக்க முடியு மென்றாலும் என்போன்ற முதியவர்களுக்கு இயற்கையழகின் மேலுள்ள பிரியம் ஒருநாளும் போய்விடுவதில்லை என்று அவனை நோக்கி விஷமமாகச் சிரித்துக் கொண்டே மேலும் வினாவினார் அவர். 

முன்நிற்கும் படைக்கோட்டத்துக் கடமைகளை மறந்துவிட்டு அதற்குப் பக்கத்திலுள்ள மலர்ப்பொழிவில் தான் அமுதவல்வியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததை அறிந்து வைத்துக் கொண்டுதான் அவர் இப்படித் தன்னிடம் அங்கதமாகப் பேசுகிறாரோ என்ற அச்சம் அன்று அவனைப் பிடித்தாட்டியது. 

அந்த அச்சத்துடனும் பதற்றத்துடனுமே அன்று அவருக்கு மறுமொழிகளைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். இன்றோ அவன் வந்திருக்கும் நிலைமை முற்றிலுமே வேறானது. 

முன்பு கோநகருக்கு வந்த வேளைகளில் எல்லாம் - வேளாவிக்கோ மாளிகையின் மேலும் அமைச்சர் அழும்பில்வேளின் மேலும் இனம் புரியாத அச்சமும், பிரமிப்பும், மலைப்பும் அவனுள் நிரம்பியிருந்தன. 

இன்றோ அமைச்சர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற ஆத்திரம் மட்டுமே அவனுள் நிரம்பியிருந்தது. ஆத்திரத்தில் அச்சம், பிரமிப்பு, மலைப்பு ஆகிய பிற உணர்வுகள் யாவும் அடிபட்டுப் போய்விட்டிருந்தன. 

வேளாவிக்கோ மாளிகை அவனை அச்சுறுத்தவில்லை; ஆத்திரமூட்டியது. அங்கே வந்தவுடனே அவன் அமைச்சரைச் சந்திக்க முடியவில்லை என்பது ஆத்திரத்தை மேலும் மேலும் வளர்ப்பதற்குக் காரணமாக அமைந்ததே தவிரக் குறைக்க வில்லை. அவன் இவ்வாறு வேளாவிக்கோ மாளிகையின் தலை வாயிலில் ஆத்திரத்தோடு உலாவிக் கொண்டிருந்த வேளையில் வேளை தெரியாமல் வலியனும் பூழியனும் அவனைச் சந்திக்க வந்து சேர்ந்தார்கள். முறைக்காக அவனைப் பாராட்டவும் செய்தனர். 

எங்கள் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் படைத் தலைவரே! கடற் கொள்ளைக்காரர்களை இவ்வளவு விரைவில் வெற்றி கொண்டு மீண்ட தங்கள் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று அவர்கள் இருவரும் பாராட்டத் தொடங்கியபோது அந்தப் பாராட்டைப் புறக்கணித்தாற்போல் அலட்சியமாயிருந்து விட்டான் குமரன் நம்பி, வலியனும் பூழியனும் இந்த அலட்சியத்தை எதிர்பார்க்கவில்லை. 

திறமையைப் பாராட்டுகிறவர்கள் எந்த அளவுக்கு மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் சில வேளைகளில் பாராட்டுக்களைக்கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்று படைத் தலைவன் தன் வார்த்தைகளால் அவர்களைச் சாடினான். 

அவர்களுக்கு அவனுடைய ஆத்திரத்தின் காரணம் புரிய வில்லை. மேலே அவனுடன் தொடர்ந்து உரையாட விரும்பவில்லை. ஆதலால் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். 

சீற்றமடைந்த சினவேங்கையைப்போல் அவன் மட்டுமே தனியாக வேளாவிக்கோ மாளிகை முன்றில் உலாவத் தொடங்கியிருந்தான்.

------------

 20. மன்னர் வருகிறார்

 

நீண்ட நேரம் வேளாவிக்கோ மாளிகை முன்றிலே நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து எங்காவது சிறிது நேரம் உட்காரலாம் என்று குமரன் நம்பி நினைத்தபோது அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாக அமைச்சர் அழும்பில்வேளே அங்கு வந்து விட்டார். 

படைத் தலைவனுக்கு எல்லா மங்கலங்களும் நிறையுமாக ! பெருமன்னரும் பெரும்படைத் தலைவரும், படைகளும் கோநகரில் இல்லாத வேளையில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்திலுள்ள மிகச் சில வீரர்களைக் கொண்டே கடற் கொள்ளைக்காரர்களின் முற்றுகையை முறியடித்த உன் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த வெற்றி தந்திரமான வெற்றி, சாமர்த்தியமான வெற்றி என்று வாய் நிறையப் பாராட்டிக் கொண்டே அவனருகில் வந்த அமைச்சர் தன்னுடைய பாராட்டுக்கள் அவன் முகத்தில் எந்தவிதமான மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்காததைக் கண்டு திகைத்தார். 

ஆயினும் திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல்மாமன்னரும், படைத்தலைவர் வில்லவன் கோதையும் படைகளும் குயிலாலுவப் போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். நீலமலையில் தற்சமயம் அவர்கள் பாடியிறங்கியிருப்பதாகத் தெரிகிறது. அநேகமாக இன்னும் இரண்டு நாள் பயணத்தில் அவர்கள் இங்கே கோநகருக்கு வந்துவிடக்கூடும்! மாமன்னர் செங்குட்டுவரையும், படைத் தலைவரையும் சேரநாட்டுப் படைவீரர்களையும் வெற்றி வீரர்களாக வரவேற்க நம் நகரம் விழாக் கோலம் பூணப் போகிறது என்று வேறு திசைக்குப் பேச்சை மாற்றினார். 

அதைக்கேட்டும் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன் அதிகம் பேசாமல், “அரசர் பெருமானும் படைகளும் வெற்றிவாகை குடிக் கோநகருக்குத் திரும்புகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன் அமைச்சரே!” என்று மட்டும் அளவாக மறுமொழி கூறினான். 

மன்னரின் வடதிசைப் படையெடுப்பு ஒன்றை மட்டும் இல்லை, எங்கும் படையெடுக்காமலே கடம்பர்களை நீ வென்ற வெற்றியையும் சேர்த்தே நாம் இங்கே கொண்டாடவேண்டும் குமரா! இப்போது நாம் கொண்டாட வேண்டிய வெற்றிகள் ஒன்றல்ல குமரா இரண்டு வெற்றிகளையுமே நாம் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் கூறியபோது, 

நான் பெற்றதும் ஒரு வெற்றி என நீங்கள் கொண்டாட முன் வந்திருப்பது தங்கள் கருணையைக் காண்பிக்கிறது அமைச்சரே!” என்று வேகமாக உடன் மறுமொழி கூறினான் குமரன் நம்பி. தந்திரமான அவனுடைய இந்த விநயத்தின் பொருள் அவருக்கு உடனே விளங்கவில்லை. 

ஏன் அப்படிச் சொல்கிறாய் குமரா?” என்று அவன் கண்களில் மின்னும் உணர்ச்சி ரேகைகளைக் கவனித்தபடியே அவனைக் கேட்டார் அமைச்சர் அழும்பில்வேள். 

குமரன் நம்பியோ ஆத்திரத்தின் காரணமாகக் கட்டுப்பாடற்ற மனநிலையில் இருந்தான் அப்போது. எனவே அவனாலும் அமைச்சரை எதிர்கொண்டு பொருத்தமான மறுமொழி கூறிவிட முடியவில்லை. 

சிறிது நேரம் ஒருவர் மனநிலையை ஒருவர் எடைபோடும் முயற்சியில் மெளனமாகக் கழிந்தது. அந்த விரும்பத்தகாத மெளனத்திற்குப்பின் குமரனே பேசினான். 

கடம்பர்களை வென்று துரத்திய பெருமை எனக்கே உரியதா அல்லது அமைச்சர் பெருமானுக்குரியதா என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இந்த வெற்றியில் நான் ஒரு சாதுரியமான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறேனேயல்லாமல் - நம்பிக்கைக்குரிய படைத் தலைவனாகவோ வெற்றிக்குரிய வீரனாகவோ பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. ஒருவனை நம்பிக்கையோடு போற்றுவது வேறு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் வெற்றி பெற்றபின் பாராட்டுவது வேறு.” 

இப்படியெல்லாம் நீயாக நினைத்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் குமரா?” 

இல்லை! நிச்சயமாக இதில் கற்பனை எதுவுமே இல்லை. நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து இதை நான் அனுமானிக்கிறேனேயொழிய கற்பனை எதுவும் செய்யவில்லை.” 

எந்த அளவு கற்பனை? எந்த அளவு அநுமானம் என்பதைப் படைத் தலைவனாகிய நீயே கூறிவிட்டால் நல்லது குமரா 

அமைச்சர் பெருமானே! கேள்வியிலும் மறுபடி தந்திரம் வேண்டாம். வெளிப்படையாகவே கேளுங்கள்; போதும். கற்பனை எதுவும் இல்லை, அநுமானம் மட்டுமே உண்டு என்று கூறிய பின்பும், “எந்தளவு கற்பனை? எந்தளவு அநுமானம்? என்று நீங்கள் கேட்பது என்னைப் பொறியில் சிக்க வைக்கச் செய்யும் முயற்சியாக இருக்கிறது என்பதை இந்தக் கணத்தில் நான் உணர்கிறேன்.” 

மிகவும் நல்லது படைத்தலைவா! கற்பனைக்கும் அநுமானத்துக்கும் என்ன வேறுபாடு என்பதையாவது நீ அறிவாய் அல்லவா?” 

 

அதை அறிவதற்கு நான் தத்துவ ஞானியோ, தர்க்க சாத்திர வல்லுநனோ இல்லை. நான் ஒரு வெறும் படைவீரன். படை வீரனுக்குத் தர்க்க சாத்திரத்தில் அதுமானத்திற்கும், கற்பனைக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமென்று தாங்கள் கருதுவீர்களாயின் அவற்றை தெரிந்து வைத்திராதது என் குற்றமென்றே நான் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு நான் செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா அமைச்சரே?”

நான் எதையுமே உன்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை குமரா! காரணங்களை வைத்து முடிவு செய்வது அதுமானம். காரணங்கள் இல்லாமலே முடிவு செய்வது கற்பனை. என்னைப் பற்றி நீ செய்திருக்கும் முடிவுகள்அநுமானங்களாகற்பனைகளா என்பதை இப்போது நீ தெளிவு செய்துவிட இயலும் என்றெண்ணுகிறேன். ஏனென்றால், கற்பனைக்கும் அநுமானத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நானே கூறி முடித்துவிட்டேன்.” 

நீங்கள் கூறியபடியே வைத்துக் கொண்டாலும் உங்களைப் பற்றிய என் முடிவுகள் அநுமானங்கள்தான் அமைச்சரே!” என்று அவன் உறுதியாக மறுமொழி கூறினான். பேச்சு ஒரு கடுமையான திருப்பத்தை அடைந்திருந்தது. அமைச்சரும் தளர்ந்து விடவில்லை. 

உள்ளே போய்ப் பேசலாம் வா- என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார் அமைச்சர். 

அந்த வேளாவிக்கோ மாளிகையின் உள்ளே சென்று எதை விவாதித்தாலும் அது அமைச்சருக்குச் சாதகமாக முடியுமென்ற உணர்வு ஒன்று குமரனுக்கு உள்ளுற இருந்தது. 

முதலில் அவன் தயங்கியும் அவர் வற்புறுத்தி உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார். குமரனாலும் அந்த மாளிகைக்குள் சென்றவுடன் மனத்தில் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையையும் பிரமையையும் தவிர்க்க முடியவில்லை.

---------

 21. வெற்றி மங்கலம்

 

வேளாவிக்கோ மாளிகைக்குள்ளேயே படைத்தலைவன் குமரன் நம்பியை அழைத்துச் சென்றவுடன் அமைச்சர் அழும்பில்வேள் தெளிவான குரலில் அவனிடம் வினாவினார். 

கடற் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களைத் துரத்திக் கொடுங்கோளுரையும், சேர நாட்டுக் கடற்கரை நகரங்களையும் காப்பாற்றுமாறு, உனக்கு நான் கட்டளையிட்டதில் எந்த இடத்தில் எந்த விதத்தில் தந்திரம் இருக்குமென்று நீ அநுமானித்தாய்? உன்னை நான் கருவியாக மட்டுமே பயன் படுத்திக் கொண்டேன் என்று நீ எவ்வாறு கூறமுடியும்?” 

தக்க காரணங்களோடு கூற முடியுமாயினும் - உங்களுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறுமுன் உங்களை நான் சில கேள்விகள் கேட்க வேண்டும். அதற்கு வாய்ப்பளிப்பீர்கள் அல்லவா?” என்று அமைச்சரைப் பதிலுக்கு வினாவினான் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன். 

அமைச்சர் அழும்பில்வேள் சில கணங்கள் தயங்கிய பின், “என்னை கேள்விகள் கேட்க உனக்கு உரிமையில்லை என்று நான் கூறமுடியாது. உன் கேள்விகளை நீ இப்போதே என்னைக் கேட்கலாம் என்றார். 

உடனே அங்கு நிலவிய அமைதியைத் தொடர்ந்து அந்த அமைதியைக் கிழிப்பது போன்ற உரத்த குரலில் குமரன் நம்பி பேசலானான்: 

மகோதைக் கரையில் கடற்கொள்ளைக்காரர்களின் பயம் அதிகமாகியதும் முதன்முறையாக நீங்கள் என்னை இதே வேளாவிக்கோ மாளிகைக்கு அழைத்து அனுப்பினர்களே, அப்போது இங்கே நம்மிருவருக்கும் இடையே நிகழ்ந்த சில உரையாடல்களை இன்று மீண்டும் நினைவூட்ட வேண்டிய நிலையிலிருக்கிறேன்.” “கொடுங்கோளூரிலேயே அழகிற் சிறந்த பெண்ணொருத்தியைக் கடற் கொள்ளைக்காரர்கள் கொண்டுபோய் விட்டார்கள். அதை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறி அன்றைக்கு இருந்தாற் போலிருந்து என்னைப் பரபரப்படையச் செய்தீர்கள். 

அப்படி ஒன்றும் நடந்திருப்பதற்கே சாத்தியமில்லையே? ஏனென்றால் நான் அங்கிருந்து புறப்படும்போதே கொள்ளை மரக்கலங்கள் கடலில் வெகுதூரத்தில் அல்லவா இருந்தன?” என்று பரபரப்போடு உங்களைக் கேட்டேன் நான். 

என்ன நடந்தது? எப்படி அந்தப் பெண்ணைச் சிறைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்றே தெரியவில்லை. கடற் கரைப் பக்கமாக உலாவச்சென்ற இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் பிடித்துக் கொண்டு போய் விட்டதாக நகர் முழுவதும் பரபரப்பாக இருக்கிறது என்று உறுதியாகக் கூறினிர்கள் நீங்கள்.”

ஆம்! நான் அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள்ளேயே பதற்ற மடைந்த உன் வாயிலிருந்து '' வென்ற அலறல் வெளிப்பட்டது. அதையும் நான் கவனித்தேன். ஏன் இவ்வளவு பதற்றமடைகிறாய் குமரா? உனக்குக் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைத் தெரியுமா? என்று கூட நான் கேட்டேன்.” 

ஆம்! நீங்கள் என்னைக் கேட்டீர்கள். ஆனால் என்னிடம் அப்போது நீங்கள் கூறியதில் ஒன்றுமட்டும் பொய். கொடுங் கோளுர் நகருக்குள் கடம்பர்கள் வரவும் இல்லை, யாரையும் கடத்திக்கொண்டு போகவும் இல்லை. அப்படி எல்லாம் ஏதோ நடந்ததாக நீங்கள் என்னிடம் ஏன் கூறினர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. கடம்பர்களை நான் வென்று அவர்கள் மரக்கலங்களைச் சோதனையிட்டதில் யாருமே அவர்களிடம் சிறைப்பட்டிருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். நீங்களோ அப்படி ஒரு செய்தியைக்கூறி என் ஆவலைத் தூண்டினீர்கள். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பதை நான் அறியவேண்டும் என்றான் குமரன். 

முதலில் மறுமொழி கூறாமல் அவன் முகத்தை நோக்கிப் புன்முறுவல் பூத்தார் அமைச்சர் அழும்பில்வேள், பின்பு மெல்ல அவனை ஒரு கேள்வி கேட்டார். 

உண்மையிலேயே நான் கூறிய செய்தி உன் ஆவலையும் பரபரப்பையும் தூண்டியது அல்லவா?” 

ஆம்! ஏன் அவ்வாறு தூண்ட முயன்றீர்கள் என்பதுதான் இப்போது என் கேள்வியாக இருக்கிறது?” 

உன் கேள்விக்கு மறுமொழி கூற இயலாத நிலையிலிருக்கிறேன் குமரா! ஆனால் ஒன்று மட்டும் நினைவு வைத்துக்கொள்; ஒரு நாட்டை ஆபத்தான சமயங்களில் காப்பதற்கு வேண்டிய அரசதந்திர முறைகளில் எதை வேண்டுமானாலும் அதன் அமைச்சர் மேற்கொள்ளலாம்.” 

பொய்யைப் போன்ற ஒன்றைக் கூறுவதுகூட அரசதந்திர முறைகளில் அடங்கும் என்று இப்போதுதான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன் அமைச்சரே!” 

எதைப் பொய்யென்று சொல்கிறாய் நீ 

கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் சிறைப்பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது பொய்யென்கிறேன்.” 

பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது உண்மையே. கடம்பர்கள்தான் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று நான் உறுதியாக எதுவும் கூறவில்லையே? கடம்பர்களே அதைச் செய்திருக்கலாம் என்பது என் அநுமானமாக இருந்தது.” 

அநுமானமான ஒரு செய்தியைக் கூறி அரசதந்திர முறைகளில் தேர்ந்த ஒர் அமைச்சர் ஒரு படைத் தலைவனிடம் என்ன பயனை எதிர்பார்த்துவிடமுடியும் என்பதுதான் தெரியவில்லை.” 

எதிர்பார்த்த பயன் எனக்குக் கிடைத்துத்தான் இருக்கிறது குமரா! கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் சிறைப் பிடித்துக்கொண்டு போனார்கள் என்று கூறியதால்தான் என்னால் இந்த வெற்றியையே அடைய முடிந்தது.”

இப்படி நீங்கள் கூறுவதன் குறிப்பு என்னவென்று தெரியவில்லையே?” 

இப்போதே தெளிவாக உனக்குத் தெரியத்தான் வேண்டுமென்றால் அதைச் சொல்லுவதற்கு நான் தயங்க வேண்டிய அவசியமில்லை. படைத் தலைவனாகிய உனக்கு இந்தப் போரில் வெற்றி கிடைத்ததற்குக் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியும் ஒரு காரணம் என்பதை நீ என்னிடம் மறுக்க முடியுமா? 

.....” 

அமைச்சருக்கு மறுமொழி கூறமுடியாமல் தயங்கிக் தலைகுனிந்து - முகத்தில் நாணம் கவிழ்ந்து சிவக்க நின்றான் படைத்தலைவன். 

எந்த எல்லையில் நிற்கும்போது அவன் மிகவும் பலவீனமானவனோ அந்த எல்லையில் அவனைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அமைச்சர். அதோடு விட்டுவிடவில்லை, அவர் மேலும் தொடர்ந்தார்:

கடம்பர்களின் கடல் முற்றுகையைத் தகர்ப்பதற்கான ஏற்பாடுகளைக் கலந்து பேசுவதற்காக முதன்முதலாகப் படைத் தலைவன் இங்கு அழைக்கப்பட்டபோது - கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளிடம் தான் விடைபெற்றுக்கொண்டு வந்தான். அந்த அழகிய பெண்ணிடம் சென்று தன்னுடைய வெற்றிப் பெருமிதத்தைப் பங்கிட்டுக்கொள்ள முடியவில்லையே என்ற காரணத்தினால்தான் படைத் தலைவனுக்கு என்மேல் கோபம் வருகிறது. கோபம் தவிர்க்க முடியாததுதான். 

உன் தந்தை தான் குவித்து வைத்திருக்கும் எல்லா இரத்தினங்களையும் பற்றிக் கவலைப்படலாம். ஆனால் இந்த இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படவேண்டிய அவசியமில்லை - என்று படைத்தலைவன் அன்றைக்கு விடைபெறுமுன் அமுதவல்லிக்கு அபயமும் பாதுகாப்பையும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிப்பதற்கு - அமைச்சர் மற்றொரு தந்திரம் செய்தால் அது எப்படித் தவறாகும்? 

........” 

இப்போதும் படைத் தலைவன் மறுமொழி எதுவும் கூறமுடியாமல் தயங்கியே நின்றான். மெல்ல மெல்ல அந்த வேளாவிக்கோ மாளிகை பெரிதாகி அங்காய்த்து வாய் விரித்துத் தன்னை விழுங்கிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தான் அவன். தன்னைப்பற்றி அமைச்சருக்கு இவ்வளவு தூரம் தெரிந்திருக்க முடியுமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. 

பேரரசர் இங்கு திரும்பி வெற்றி மங்கலம் கொண்டாடுகிறவரை இங்கே கோநகரத்தில் தங்கி இரு. வெற்றி மங்கல விழாவில் உனக்குப் பரிசளித்துப் பாராட்டப் போகிறேன் - என்று தன் எதிரே தயங்கித் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்த படைத் தலைவனை நோக்கிக் கம்பீரமான குரவில் கட்டளையிட்டார் அமைச்சர் அழும்பில்வேள். 

அப்போது அவரை எதிர்த்தோ மறுத்தோ பேசும் மனத் துணிவு அவனுக்கு இல்லை. அரசதந்திர மாளிகையாகிய அந்த வேளாவிக்கோ மாளிகை இந்த முறையும் அவனை வெற்றி கொண்டு விழுங்கி விட்டது. பேரரசரையும் சந்திப்பதற்கு வாய்ப்பாக இருக்குமென்ற காரணத்தினால் படைத் தலைவன் குமரன் நம்பி கோநகரில் மேலும் சில நாட்கள் தங்கினான். தானும் அமுதவல்லியும், பூம் பொழிலில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்தின் பின்புறத்தில் சந்தித்ததும் உரையாடியதும் எப்படி அமைச்சருக்குத் தெரிந்தன என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் மனம் மறுகினான் அவன். அமைச்சரின் அரசதந்திர விழிப்பார்வையானது கோநகரின் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து நாடு முழுவதும் பார்க்கவும், அறியவும், உணரவும் ஆற்றல் பெற்றிருப்பதை அந்த விநாடியில் அவன் தெரிந்து கொள்ள முடிந்தது. இம்முறையும் வேளாவிக்கோ மாளிகை அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையையே தந்தது.

----------

 22. படைத்தலைவனுக்குப் பரிசு

 

படைத்தலைவன் கடம்பர்களை வெற்றி கொண்டு துரத்திய பின் அமைச்சர் அழும்பில்வேளின் மேல் தீராத கோபத்துடன் வேளாவிக்கோ மாளிகைக்கு வந்தபின் இரண்டு நாட்கள் கழிந்து விட்டன. மூன்றாவது நாள் வைகரையில் வஞ்சிமாநகர் பரிபூரணமான விழாக்கோலம் பூண்டிருந்தது. தோரணங்கள் நிறைந்த வீதி வாரணம் பீடுநடைபோடும் பெருந்தெருக்கள், வெற்றி மங்கலம் பாடவல்ல புலவர்களும், பாணர்களும், பாடினிகளும், கூத்தர்களும், விறலியர்களும், தெருக்கள்தோறும் கூடியிருந்தனர். கீத சாலைகளில் கீதங்களின் ஒலிகள், வேள்விச் சாலைகளில் வேத முழக்கங்கள் எல்லாம் நிறைந்திருந்தன. 

நகரம் எங்கும் பூக்களின் நறுமணம். இசைகளின் இன்னொலி, நடன மகளிர் காற்சிலம்புகளின் கிண்கிணி நாதம், இவையே நிறைந்து பொங்கின. மங்கலவேளையில் வடதிசைக் குயிலாலுவத்திலிருந்து கோநகர் திரும்பிய பேரரசர் செங்குட்டுவரும் பெரும் படைத் தலைவர் வில்லவன் கோதையும் சேர நாட்டுப் படை வீரர்கள் பின் தொடர்ந்துவர நகருக்குள் துழைந்தனர். நகர மக்கள் வீதிதோறும் மன்னரையும் படைத் தலைவரையும் வாழ்த்திய வாழ்த்தொலி விண்ணதிர ஒலித்தது. மாடங்களிலிருந்தெல்லாம் மன்னர்மீதும் படைத் தலைவர் மீதும் படைகள் மீதும் பூமாரி பொழிந்தது. அரண்மனை முன்றில் பெருந்தோப் பெண்டிரும், அந்தப்புர மகளிரும் மலர்தூவி மங்கல தீபம் ஏத்தி ஆரத்தி சுற்றிக்கொட்டி அரசர் பெருமானை வரவேற்றனர். 

அமைச்சர் அழும்பில்வேளைக் கட்டித் தழுவிக்கொண்டார் அரசர். அரண்மனை ஐம்பெருங் குழுவினர், ஆயத்தார் முகத்தில் எல்லாம் அரசர் கோநகர் திரும்பிய மகிழ்ச்சி தெரிந்தது. எங்கும் மலர்ந்த முகங்களே தெரிந்தன. அரசரிடம் கொடுங்கோளுர்ப் படைத்தலைவன் குமரன் நம்பியை அழைத்துச் சென்று அவன் சாதனையை வியந்து கூறிய அமைச்சர் அழும்பின்வேள், 

இந்தச் சாதனைக்கு ஈடாக நான் அளிக்க இருக்கும் பரிசை மாலையில் அரண்மனைக் கொலுமண்டபத்தில் நிகழ இருக்கும் வெற்றி மங்கல விழாவில் அரசர் பெருமானே இந்த இளம் படைத் தலைவனுக்கு அளிக்கவேண்டும் - என்றும் அரசரை வேண்டிக் கொண்டார். 

அவசியம் செய்கிறேன்! இளைஞர்களுக்குப் பரிசளிப்பதென்பது எப்போதும் எனக்கு விருப்பமான செயலே என்று அரசரும் மகிழ்ச்சியோடு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்கினார். இவை எல்லாம் கொடுங்கோளுர்ப் படைத் தலைவனுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அவனுடைய உள் மனத்தில் ஒரு கவலையும் இருந்தது. தன் உயிருக்குயிரான அமுதவல்லி என்ன ஆனாள் என்பதை அறியமுடியாத வேதனை அவன் மனத்தை வாட்டியது. 

அதை யாரிடமும் வெளியிட்டுப் பேசவும் வாய்ப்பில்லை. பேரரசருடைய வடதிசை வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கோநகரின் அரச வைபவக் கோலாகலங்களின் இடையே அவனுடைய சிறிய மனவேதனையைப் பகிர்த்து கொள்ள அவனுக்கு யாருமே கிடைக்க முடியாதுதான். 

காதலுக்கும் அதன் சுகதுக்கங்களுக்கும் அந்த உணர்வை ஆள்பவர்கள்தான் சொந்தக்காரர்கள். இன்னொருவனுடைய துணையை அதற்கு நாட முடியாது போலும் என்றெண்ணி அந்த உணர்வுகளைத் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டான் படைத் தலைவன். 

பேரரசர் வெற்றி வாகையோடு நகர்ப் பிரவேசம் செய்த தினத்தன்று மாலையில் அரண்மனைக் கொலு மண்டபத்தில் வெற்றி மங்கலவிழா நிகழ்ந்தது. புலவர்கள் பேரரசருடைய வெற்றியைப் புகழ்ந்து பாடிப் பரிசில்கள் பெற்றனர். 

பாணர்களும், பாடினிகளும் அரசருடைய வெற்றியை இசைத்துப் பரிசில் பெற்றனர். கூத்தர்களும், விறலியர்களும் அரசர் பெருமானுடைய வெற்றியை ஆடிக்களித்து மகிழ்ந்தனர். அந்த ஆட்டத்துக்கு வெகுமதியாகப் பரிசும் பெற்றனர். 

இறுதியாகப் படை வெற்றிக்குத் துணையாக இருந்த வீரர்களுக்கும் படையணித் தலைவர்களுக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டன. 

இறுதியாக அமைச்சர் அழும்பில்வேள் முன்வந்துகொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன் குமரன் நம்பி, கடற் கொள்ளைக்காரர்களை வென்ற வெற்றிக்காக ஈடு இணையற்ற பரிசுப்பொருளைப்பெற இப்போது வருமாறு அழைக்கிறேன் என்று கூறியவுடன் குமரன் நம்பி தயங்கித் தயங்கி அடக்க ஒடுக்கமாக நடந்து முன் வந்தான். 

அமைச்சர் அரசவையின் உள்ளே நுழையும் வாயிற்புறத்தில் நின்ற ஒரு பணிப் பெண்ணை நோக்கி ஏதோ சைகை செய்தார். 

அவள் ஒரு விநாடி உள்ளே மறைந்தாள். அடுத்த விநாடி அந்தப் பணிப்பெண் அழைத்துவந்து நிறுத்தியவளைப் பார்த்த போது குமரன்நம்பியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆம்! கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி தான் சர்வாலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அவன் முன் கொணர்ந்து நிறுத்தப்பட்டாள். 

சபையில் ஒரே மகிழ்ச்சிக் கூப்பாடு ஆரவாரம், சிரிப்பொலி எல்லாம் அடங்க நீண்ட நேரமாயிற்று. அமைதி நிலவியவுடன் மறுபடி அமைச்சர் அழும்பில்வேளின் குரல் சபையில் ஒலிக்கத் தொடங்கியது:- 

இந்தப் பெண் அமுதவல்லியை கொடுங்கோளுர்ப் படைத் தலைவன் குமரன் நம்பிக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு பேரரசர் சார்பில் இரத்தின வணிகருக்குக் கட்டளையிடுகிறேன் என்று அமைச்சர் கூறியவுடன், அதே அவையில் வணிகர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்த இரத்தின வணிகர் எழுந்து வந்து மலர்ந்த முகத்தோடு, “அமைச்சர் கூறியவாறு செய்ய எனது பூரண சம்மதத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் - என்று இணங்கினார். 

அந்த வேளையில் அமைச்சர் அழும்பில்வேள் கொலு மண்டபத்து மேடையிலிருந்து இறங்கிவந்து குமரன் நம்பியின் காதருகில் நெருங்கி, “இப்போது உண்மையைச் சொல்லி விடுகிறேன் குமரா! இவளை யாரும் எங்கும் சிறைப்பிடித்துக் கொண்டு போகவில்லை. என்னுடைய வேண்டுகோளின்படி கொடுங்கோளுர் இரத்தின வணிகர் இவளைத் தம் வீட்டிலேயே சிறை வைத்திருந்தார் என்பதுதான் உண்மை. நீ முதன் முதலாக இங்கே வஞ்சிமாநகரத்துக்கு வேளாவிக்கோ மாளிகையில் என்னைக் காணத் தேடி வந்திருந்த தினத்தன்று இரவு நான் உன்னை இங்கே காக்க வைத்துவிட்டுக் கொடுங்கோளுருக்குப் போயிருந்தது இந்தச் சூழச்சிக்காகத்தான். இப்படி ஒரு சூழ்ச்சி செய்து காரியத்தைச் சாதித்துக்கொண்டதற்காக என்னை மன்னித்துவிடு. இவளைக் கடம்பர்கள் சிறைப்பிடித்துப் போனதாக உன்னிடம் நான் பொய் கூறியிராவிடில் இவ்வளவு விரைவில் வெற்றி கிடைத்திருக்காது என்பதை நீயும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வாய் என்றார். 

கொடுங்கோளுர்ப் படைத் தலைவன் இதைக் கேட்டு அமைச்சர் மேல் கோபப்படவில்லை. 

அந்த ஒரு விநாடியில் வஞ்சிமாநகரம் முழுவதுமே ஒரு பெரிய வேளாவிக்கோ மாளிகையாகிவிட்டதுபோல் தோன்றியது அவனுக்கு. 

அவன் கடைக்கண்ணால் அமுதவல்லியின் முகத்தை நோக்க முயன்றான். அவள் புன்முறுவல் பூத்து அந்தப் பார்வையை வரவேற்றாள். 

இந்தப் புன்முறுவலுக்காக எதையும் பொறுத்துக் கொள்ளலாம் என்று அவள் காதருகே மெல்லிய குரலில் கூறினான் படைத் தலைவன். 

அப்போது அவர்கள் இருவர் தலையிலும் யாரோ பூமாரி பொழிந்தார்கள். திரும்பிப் பார்த்த படைத்தலைவன் அமைச்சர் சிரித்துக் கொண்டே பூக்களுடன் அருகில் நிற்பதைக் கண்டான். 

அமைச்சருக்கு என் சொந்த வீரத்திலும் திறமையிலும் நம்பிக்கை இல்லை. இவளைக் கடம்பர்கள் சிறைப் பிடித்ததாகக் கூறினால்தான் எனக்கு வீரமே பிறக்குமென்று முடிவு கட்டிவிட்டீர்கள் போலிருக்கிறது என்றான் குமரன். 

உண்மையே அதுதான் குமரா! வீரம் என்றுமே காதலின் மறுபுறமாகத்தான் இருக்கிறது. சீதை சிறைப்படவில்லை யானால் இராமன் வீரனாக நேர்ந்திருக்காது அல்லவா?” - என்று அமைச்சர் அவனுக்கு மறுமொழி கூறியபோது அவை முழுவதும் சிரிப்பொலியால் பொங்கியது. அந்தச் சிரிப்பு வெள்ளத்தில் குமரனும் அமுதவல்லியும் சேர்ந்து நகைத்த சிரிப்பின் ஒலியும் கலந்துதான் இருக்கவேண்டும்.

 

( நிறைவுற்றது )

 

நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள் சிலவற்றைப் பார்க்க

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)