பிரம்ம
ராக்ஷஸ்
நித்தியத்துவத்திற்கு
ஆசைப்பட்டு,
இடர்ப்பட்டு
அழிவுற்றவர்களின்
கடைசி
எச்சரிக்கையாக
இருந்தது
அவன்
கதை.
அவன்
பொன்னை
விரும்பவில்லை.
பொருளை
விரும்பவில்லை.
போகத்தை
விரும்பவில்லை.
மனக்
கோடியில்
உருவம்
பெறாது
வைகறைபோல்
எழும்
ஆசை
எண்ணங்களைத்
துருவியறியவே
ஆசைப்பட்டான்.
மரணத்தால்
முற்றுப்புள்ளி
பெறாது,
ஆராய்ச்சியின்
நுனிக்
கொழுந்து
வளர
வேண்டுமென்ற
நினைப்பினால்
அவன்
ஏற்றுக்
கொண்ட
சிலுவை
அது.
அன்று
முதல்
- ஆம்,
அது
நடந்து
வெகுகாலமாகிவிட்டது -
இன்றுவரை,
ஆசைகள்
உந்த,
அழிவு
அவனைக்
கைவிட,
மரணம்
என்ற
விழிப்பற்ற
ஒரு
சொப்பனாவஸ்தை
போல
மூல
காரணங்களாலும்
நியதிகளாலும்
எற்றுண்டு,
ஜடத்திற்கும்
அதற்கு
வேறான
பொருளுக்கும்
உண்டான
இடைவெளியில்
அவன்
அலைந்து
திரிந்தான்.
ஆசை
அவியவில்லை;
ஆராய்ச்சி
அவிந்து
மடிந்து,
நியதியையிழந்து,
விபரீதத்தின்
தீவிர
கதியில்
சென்றது.
அவன்
இப்பொழுது
வேண்டுவது
முன்பு
விரும்பித்
துருவிய
இடைவெளி
ஆராய்ச்சியன்று;
சாதாரணமான
மரணம்.
உடல்
இருந்தால்
அல்லவா
மரணம்
கிட்டும்!
ஜடமற்ற
இத்திரிசங்கு
நிலையில்
சமூகத்தில்
அடிபட்டு
நசுங்கியவர்கள்
ஆசைப்படும்
மோட்ச
சாம்ராஜ்யம்
போல
மரண
லட்சியம்
அவனுக்கு
நெடுந்
தூரமாயிற்று.
அவன்
அப்பொழுது
நின்ற
இடம்,
அப்புறத்து
அண்டமன்று;
கிரக
கோளங்கள்
சுழலும்
வெளியன்று;
அது
பூலோகந்தான்.
அவனுடைய
வாசஸ்தலமாயிருந்த
குகையின்
பலிபீடத்தில்
அவனுடைய
ஆசையின்
நிலைக்களமான
பழைய
தேகம்,
துகள்களாகச்
சிதைவுபட்டுக்
கிடந்தது.
ஜடத்திலே
வெறும்
ஆகர்ஷண
சக்திபோல்,
சூட்சுமமான
உருவற்ற
கம்பிபோல்,
பார்வைக்குத்
தென்படாத
ஒளிரேகைபோல்
அவ்வுடல்
அவனுக்குக்
காட்சியளித்து
வந்தது.
உலகத்தைப்
பதனமாகப்
பாதுகாக்க
அமைந்த
ஏழு
சஞ்சி
போன்ற
லோகங்களிலே
எங்கு
வேண்டுமானாலும்
அவன்
அலையலாம்.
ஆனால்,
அவற்றைத்
தாண்டி
இடைவெளியிலே
செல்ல
அவனுக்குச்
சக்தியில்லை,
நியதியில்லை.
அவன்
அப்பொழுது
நின்ற
இடம்
ஜடத்தின்
சூட்சும
ரூபங்களான
வாயுக்களும்
செல்லக்கூடாத,
வெறும்
சக்திகளே
முட்டி
மோதிச்
சஞ்சரிக்கின்ற
உலக
கோளத்தின்
மிகவும்
சூட்சுமமான
ஏழாவது
சஞ்சி.
அவ்விடத்திலே
அவனுக்கு
வெகு
நேரம்
நிற்க
முடியாது.
ஆனால்,
சூட்சும
உடலின்
இயற்கையினால்
அடிக்கடி
அங்கு
உந்தித்
தள்ளப்படுவான்.
சக்திகள்,
பிரளயம்
போலக்
கோஷித்து,
உருண்டு
புரண்டு,
சிறிய
வித்துப்போல்
நடுமையத்தில்
கிடக்கும்
ஜடத்திற்கு
உயிர்
அணுக்களை
மிகுந்த
வேகத்தில்
தள்ளும்.
அவ்விடத்திலே,
சக்தி
அலைகள்,
நினைவு
பிறந்து
மடியும்
கால
எல்லைக்குள்,
இடைவழித்
தேகத்தைக்
குழப்பி
நசுக்கி,
புதிய
சக்திகளை
அவனது
சூட்சும
தேகத்தில்
ஊட்டி
உள்ளே
பூமியை
நோக்கித்
தள்ளிவிடும்.
புதிய
சக்தியூட்டப்பட்ட
அவனது
சரீரம்
ஜட
தாதுக்கள்
பாசிபோல்
உற்பத்தியாகி
உரம்பெற்று,
கீழ்
நோக்கியிறங்கும்
இடைச்
சஞ்சிகளில்
நின்று,
செக்கச்செவேலென்று
எங்கும்
பரந்து,
நினைவின்
எல்லைக்
கோடாகக்
கிடக்கும்
கிரக
கோளங்களின்
வானப்
பாதைகளை
நோக்கும்.
அவனது
உருவம்
சூட்சும
உருவம்.
அதாவது
ஆசையின்
வடிவத்தை
ஏற்கும்
உருவம்.
அவன்
தனது
பழைய
ஜீவியத்தில்
எந்த
அம்சத்தைப்
பற்றி
நினைக்கிறானோ,
அச்சமயத்தில்
முன்
அவனது
பூத
உடல்
பெற்றிருந்த
வடிவத்தைச்
சூட்சும
தேகம்
இப்பொழுது
பெறும்.
பூதவுடலிலே
பார்ப்பதும்,
கேட்பதும்,
உண்பதும்,
வெளிப்படுத்துவதும்
முதலிய
காரியங்களைத்
தனிப்பட்ட
கருவிகள்
செய்தன.
இப்பொழுது
அவனுக்கு
உடல்
முழுவதுமே
வாய்.
அவன்
பார்வைகள்
வெளியே
எட்டினாலும்
ஆசைகள்
பூமியை
நோக்கி
இழுத்தன.
ஆசையின்
ரேகைகள்
அவனைப்
பலிபீடத்தை
நோக்கியிழுத்தன!
அவன்
அன்று
பூதவுடலை
நீங்கி
வெளிப்பட்டதும்,
இவ்வுலகத்தைப்
பாதுகாக்கும்
ஏழு
சஞ்சிகள்போல்
உள்ளிருக்கும்
வஸ்துவின்
விடுதலைக்குத்
தடையாக
ஏழு
இருப்பதையும்
உணர்ந்தான்.
ஒன்றைக்
கடந்தால்
மற்ற
ஆறையும்
இறுகப்
பிடித்ததுபோல்
ஒன்றவைத்து,
ஏழையும்
நீக்கிப்
பாயவேண்டும்.
இப்பொழுது
ஒன்றைவிட்டுப்
பிரிந்ததினால்,
போக்கின்படியாகக்
கிடைக்கும்
மரணத்தால்
விழிப்பையும்
இழந்து,
சொப்பனாவஸ்தை
போன்ற
இந்த
இடைநிலையில்
கட்டுப்பட
வேண்டியதாயிற்று.
ஆசைகள்
மெதுவாக
மரணத்தை
நோக்கித்
திரும்பின.
பழைய
நிலைகள்
படிப்படியாகப்
பரிணமித்து
அவனையே
விழுங்கிப்
பூமியை
நோக்கித்
தள்ளின.
பலீபீடத்தில்
வந்து
விழுந்தான்.
அவனே
பிரம்ம
ராக்ஷஸ்!
2
குறிஞ்சிப்பாடியின்
பக்கத்திலே
சூரங்காடு
பெரிய
மலைப்பிரதேசம்.
காலத்
தேவனின்
தங்கைகள்
போன்ற
பாறைகள்
இயற்கையின்
செழிப்பான
கானகம்
என்ற
அந்தப்புரத்திலே
மறைந்து
கிடந்தன.
சூரங்காடு,
மனிதர்கள்
பலத்திற்கு
நிலைக்களமாக
விளங்குவது.
அங்கே
இருப்பது
என்னவென்று
ஒருவருக்கும்
தெரியாது.
குறிஞ்சிப்பாடியின்
சமூகத்தின்
திவலை
ஒன்று
எப்பொழுதோ
நெடுங்காலத்திற்கு
முன்பு
அதில்
சென்றது
-
திரும்பவில்லை;
குறிஞ்சிப்பாடியினர்
பிறகு
அத்திசையில்
செல்வதில்லை.
சூரங்காட்டில்
கொடிய
மிருகங்கள்
கிடையா.
விஷக்
கிருமிகள்
கிடையா.
அது
நிசப்தமும்
இயற்கைத்
தேவியும்
கலக்குமிடமாம்.
சப்த
கன்னிகைகள்
திரிவார்களாம்.
மனிதர்கள்
போனால்
திரும்ப
மாட்டார்கள்.
இது
குறிஞ்சிப்பாடியினரின்
எழுதாக்
கிளவி.
இந்த
வேத
வித்திற்குக்
குறிஞ்சிப்பாடியில்
தோன்றும்
மகான்கள்
அடிக்கடி
பாஷ்யம்
விரித்து
அதை
ஒரு
பெரும்
சமுதாயக்
கட்டுப்பாடாக்கினர்.
அக்காலத்திலே,
குறிஞ்சிப்பாடியின்
சமூகத்திலே
தோன்றி,
அதன்
வளர்ச்சிக்கும்
பிரபலத்திற்கும்
பாடுபட்டவன்
நன்னய
பட்டன்
என்ற
வாலிபன்.
குறிஞ்சிப்பாடியில்
குறுகிய
ஆசைகளைப்
பலப்படுத்தி
வளர்ப்பதே
அவனுக்கு
ஒரு
மகத்தான
சேவையாகப்
பட்டது.
போரிலே
மரணத்தை
நேருக்கு
நேராகப்
பார்த்தவன்.
குறிஞ்சிப்பாடிச்
சமூகத்தின்
விஷப்
பூச்சிகளைச்
சித்திரவதை
செய்து,
மரணக்
கதவை
மெதுவாகத்
திறந்து,
அதன்
உளைச்சலிலே
பயத்தைப்
போக்கியவன்.
அவனுக்கு
மரணம்
பயத்தைத்
தரவில்லை.
விதியின்
விசித்திர
கதிக்கு
அளவுகோல்
உண்டா?
நன்னய
பட்டனுக்கு
மரணத்தின்
பயத்தை
அறிவிக்க
மூல
சக்திகள்
நினைத்தன
போலும்.
அவன்
மனைவி
பெண்
குழந்தையைப்
பெற்றுக்கொடுத்து
அந்த
உளைப்பிலே
உயிர்
நீத்தாள்.
அன்று,
நன்னய
பட்டன்
மரணத்திற்கு
எத்தனையோ
ரூபங்கள்
உண்டு
என்று
அறிந்தான்.
அதற்கப்புறம்
மூன்று
வருஷங்கள்,
வெங்காயச்
சருகுபோல்
உதிர்ந்துவிட்டன.
அந்த
மூன்று
வருஷங்களும்
நன்னய
பட்டனுக்கு
சமூகத்தின்
குறுகிய
கால
அளவுகோலைக்
கடந்து
வேறு
உலகத்தில்
யாத்திரை
செய்வதாயிருந்தன.
அவன்
சக்திகளின்
பௌருஷத்தின்
எல்லையை
நாடினான்.
ஒரு
நாள்,
அந்தி
மயங்கும்
சமயம்,
குறிஞ்சிப்பாடி
இருவரை
இழந்தது.
காலம்
என்ற
அரங்கில்
சரித்திரம்
மீண்டும்
ஒரு
முறை
பழையபடி
நடித்தது.
நன்னய
பட்டன்
திசையறியாமல்
சென்றான்.
பசியறியாமற்
சென்றான்.
கைக்குழந்தையின் -
மூன்று
வயதுக்
குழந்தையின் -
சிறு
தேவைகள்
அவனுக்குப்
பூத
உடம்பின்
தேவைகளை
இடித்துக்
கூறும்
அளவுகோலாயின.
அதன்
பசியைச்
சாந்திசெய்யும்
பொறுப்பு
இல்லாவிட்டால்
அவனிடம்
பசியின்
ஆதிக்கம்
தலைகாட்டியிராது.
அவன்
அன்று
ஆசைப்பட்டது
எல்லாம்
மரணத்தினின்றும்
தப்புவதற்கு
வழி.
ஏன்
மரணத்தினின்றும்
தப்பவேண்டுமென்று
அவனிடம்
யாராவது
கேட்டிருந்தால்
அவனால்
காரணம்
கூறியிருக்க
முடியாது.
ஆனால்,
பயம்
என்று
ஒப்புக்
கொண்டிருக்க
மாட்டான்.
மரணத்தை
வெல்வதே
-
காலத்தின்
போக்கைத்
தடைசெய்வதே -
ஆண்மை
என்று
பதில்
சொல்லியிருப்பான்.
பேதை!
மரணம்
என்பது
இல்லாவிடில்
நரகம்
என்பது
எப்படித்
தெரியும்!
அப்பொழுது
அவனது
சிறு
மனம்
குறிஞ்சிப்பாடிக்கு
மேல்
விரிந்து,
அகில
லோகத்தையும்
கட்டி
ஆள்வதற்கான
மூல
சக்திகளின்
சூட்சுமக்
கயிற்றைக்
கைக்குள்
அடக்க
வேண்டும்
என்று
அறிவுகெட்ட
ஆசையால்
கட்டுண்டது.
இருண்டு
நெடுநேரமாகியும்
நடந்துகொண்டேயிருந்தான்.
கையில்
குழந்தை,
ஆசையற்று,
ஆனால்
வித்துக்களான
தேவையில்
மட்டும்
நிலைக்கும்
மனநிலையில்
கட்டுண்டு,
நித்தியத்துவத்திற்கும்
மரணப்
பாதையின்
சுழலுக்கும்
மத்தியிலுள்ள
பிளவுக்
கோட்டின்
எல்லை
வெளியான
இடைவெளியில்
நின்று
உறங்கியது.
குறிஞ்சிப்பாடியின்
வேதம்
பொய்யாகும்
நிலையை
நன்னய
பட்டன்
நிதரிசனமாகக்
கண்டான்.
நெடுநேரம்
நடந்த
களைப்பு,
இருளின்
கருவைப்
போன்ற
ஒரு
குகை
வாயிலில்
சிறிது
உட்கார
வைத்தது.
உறக்கத்தை
அறியாத
கண்கள்
குகைக்குள்
துருவின.
அந்தக்
குகைதான்
பிரம்ம
ராக்ஷஸாகத்
தவிக்கும்
ஒரு
பழைய
மனிதனுடைய
ஆசையின்
பயங்கரமான
பலிபீடம்.
வெகு
காலமாக
அப்பாதையிலே
யாரும்
வரவில்லை.
மனித
தைரியத்தின்
உச்ச
ஸ்தானமாக
இருந்த
அந்தக்
குகையின்
வாசலில்
நன்னய
பட்டன்
உட்கார்ந்ததும்
குழந்தை
வீரிட்டு
அலறத்
தொடங்கியது.
குழந்தையைத்
தேற்றிப்
பார்த்தான்;
எவ்வளவோ
தந்திரங்களைச்
செய்து
பார்த்தான்.
குழந்தையின்
அலறல்
நிற்கவில்லை.
அதைத்
தோளில்
சாத்திக்கொண்டு,
முதுகைத்
தட்டிக்
கொடுத்த
வண்ணம்
எழுந்து
உலாவி
அங்குமிங்குமாக
நடக்கத்
தொடங்கினான்.
குகையின்
வாசலைவிட்டு
அகன்று
செல்லும்
பொழுது
குழந்தையின்
அழுகை
படிப்படியாக
ஓய்ந்தது.
ஆனால்,
திரும்பிக்
குகையை
அணுகியதுதான்
தாமதம்,
குழந்தையின்
குரல்
உச்சஸ்தாயியை
எட்டியது.
இரண்டு
மூன்று
முறை
இப்படிப்
பரீட்சித்த
பிறகு,
இந்த
அதிசயமான
செயல்
குகையில்
என்ன
இருக்கிறது
என்று
பார்க்க
அவனுள்
ஆசையை
எழுப்பியது.
மரத்தடியில்
சற்று
நேரம்
இருந்து
குழந்தையை
உறங்க
வைத்து
விட்டு,
எழுந்து,
குகையை
நோக்கி
நடக்கலானான்.
காற்றற்று,
அசைவில்லாது
நிற்கும்
மரங்களிடையே
ஒரு
துயரம்
பொதிந்த
பெருமூச்சு
எழுந்தது.
சற்று
நின்று,
சுற்றுமுற்றும்
கவனித்தான்.
அவனைத்
தவிர
வேறு
யார்
இருக்கப்
போகிறார்கள்?
குகை
வாயிலின்
பக்கம்
போனதும்
தேக
மாத்யந்தமும்
காரணமற்றுக்
குலுங்கியது.
மயிர்க்கால்கள்
திடீரென்று
குளிர்ந்த
காற்றை
ஏற்றதுபோல்
விறைத்து
நின்றன.
நன்னய
பட்டன்
உள்ளத்தில்
இயற்கைக்கு
மாறான
இக்குறிகளினால்
ஆச்சரியம்
தோன்றியது.
குகை
வாயிலைக்
கடந்து
உள்ளே
சென்று,
அவன்
இருள்
திரையில்
மறைந்தான்.
உள்ளே
சென்றதும்
நன்னய
பட்டனுக்குப்
புதிய
சக்தி
பிறந்தது.
என்றுமில்லாதபடி
அவன்
மூளை,
தீவிரமாக
விவரிக்க
முடியாத
எண்ணங்களில்
விழுந்து,
அவற்றைத்
தாங்கச்
சக்தியற்று,
புயலில்
அகப்பட்ட
சிறு
படகுபோலத்
தத்தளிக்கிறது.
நெஞ்சுறுதி
என்ற
சுங்கான்,
மனத்தின்
அறிவு
கெட்ட
வேகத்தைக்
கட்டுமீறிப்
போகாது
காத்ததினால்
நிரந்தரமான
பைத்தியம்
பிடிக்காது
தப்பினான்.
இருட்டிலே,
இருட்டின்
நடுமையம்
போல்
ஏதோ
ஒன்று
தெரிந்தது.
சிறிது
சிறிதாக
மனித
உருவம்
போல்
வடிவெடுத்தது.
பின்னர்
இருளில்
மங்கியது.
இதைப்
பார்த்தவண்ணமாகவேயிருந்தான்
நன்னய
பட்டன்.
அதைத்
தவிர
மற்ற
யாவும்
மறந்து
போயின.
அதைப்
பார்த்துக்
கொண்டிருக்க
இருக்க,
இரத்தத்திற்குப்
பதிலாக
வேறு
ஒரு
புதிய
திரவப்
பொருள்
புரண்டு
புரண்டு
ஓடுவது
போல்
சிறு
வலியுடன்
கூடிய
இன்பத்தைக்
கொடுத்தது.
மனத்திலே,
குகை
மறைந்து
வேறு
ஓர்
உலகம்
தென்பட்டது.
ஜடத்திலே
தோன்றாத
விபரீதமான
பிராண
சக்திகள்,
பேரலை
வீசி
எல்லையற்ற
சமுத்திரம்போல்
கோஷித்தன.
அந்தச்
சக்திக்
கடலின்
திசை
முகட்டிலே
ஒளிச்
சர்ப்பங்கள்
விளையாடித்
திரிந்தன.
இதன்
ஒலிதானா
அந்தக்
கோர
கர்ஜனைகள்!
நன்னய
பட்டனின்
பார்வை
மங்கியது.
மேகப்
படலம்
போல்
ஏதோ
ஒன்று
கண்களை
மறைந்தது.
இருட்டையும்
நிசப்தத்தையும்
தவிர
அவன்
இந்திரியங்கள்
வேறொன்றையும்
உணரவில்லை.
எத்தனை
காலம்
கழிந்ததோ
அவனுக்கு
உணர்வில்லை.
மந்திரத்தால்
கட்டுண்டு,
பின்னர்
அதிலிருந்து
விலகிய
சர்ப்பம்
போல்
எழுந்து
நடந்தான்.
கால்கள்
தள்ளாடின.
குகையின்
வெளியில்
வருவதற்குள்
அவனுக்குப்
பெரிய
பாடாகிவிட்டது.
இவ்வளவும்
ஒரு
வினாடியில்
நடந்தேறியது
என்று
சொன்னால்
நன்னய
பட்டன்
நம்பமாட்டான்.
அவன்
குழந்தையின்
பக்கம்
வந்து
தரையிலேயே
சோர்ந்து
படுத்தான்.
மனிதனது
பலவீனமெல்லாம்
இயற்கைத்
தாயின்
மடியிலே
ஒருங்கே
தஞ்சம்
புகுந்ததுபோல
ஆசை
வித்தின்
ஆரம்ப
வடிவமான
குழந்தையின்
பக்கத்தில்
கிடந்தான்.
கானகத்திலும்
இருள்
மயங்கி
மடிய,
வைகறை
பிறந்தது.
குகைக்கு
மேல்
முகட்டுச்
சரிவில்
நின்ற
மாமரக்
கொம்பின்
கொழுந்துகளில்
பொன்
முலாம்
பூசப்பட்டிருந்தது.
நன்னய
பட்டன்
எழுந்தான்.
அவனுக்கு
முன்பே
குழந்தை
எழுந்து
தவழ்ந்து
விளையாடிக்
கொண்டிருந்தது.
சூரங்காட்டிலே
பசி
தீர்த்துக்கொள்ள
என்று
நெடுந்தூரம்
அலைய
வேண்டியதில்லை.
மா,
பலா,
முதலியவை
சாதாரணமாக
வளர்ந்து
கிடக்கும்.
பாறைக்
குடைவுகளிலே
குளிர்ந்த
சுனையூற்றுக்களும்
ஏராளம்.
3
ஆசை
அவனை
மறுபடியும்
குகைக்குள்
இழுத்தது.
குழந்தையை
மரத்தடியில்
வைத்துவிட்டு
உள்ளே
சென்றான்.
குகையின்
இருள்
திரண்ட
ஓரத்திலே
கருங்கற்
படுக்கை
போன்ற
ஒரு
பாறை.
சுற்றிலும்,
யாரோ
ரசவாதியொருவன்
எப்பொழுதோ
அங்கிருந்து
ஆராய்ச்சி
நடத்தியதுபோல்
மட்பாண்டங்களும்
குடுவைகளும்
ஓரத்திலே
வரிசையாக
அடுக்கப்பட்டும்,
உறி
கட்டித்
தொங்கவிடப்பட்டும்
கிடந்தன.
இவ்வாறு
அடுக்கடுக்காய்க்
கிடந்த
மனித
வாசத்தின்
அறிகுறிகளுக்கிடையில்
ஒரு
பொருள்
அவன்
கவனத்தை
இழுத்தது.
அந்தக்
கருங்கற்
பாறைப்
படுக்கையிலே
ஒரு
எலும்புக்கூடு
கிடந்தது.
நன்னய
பட்டன்
பயம்
என்பதை
அறியாதவன்.
மரணத்தையும்
பச்சை
ரத்தப்
பிரவாகத்தோடு
தெரியும்
மண்டையோடுகளையும்
அவன்
கண்டு
அஞ்சியவனல்லன்.
ஆனால்,
அவனுக்கு
அதை
நெருங்க
நெருங்க,
முந்திய
நாள்
இரவு
இருட்டிலே
குகைக்குள்
நுழைந்த
சமயம்
ஏற்பட்ட,
விவரிக்க
முடியாத,
உள்ளத்தை
விறைத்துப்
போகச்செய்யும்,
உணர்ச்சிகள்
தோன்றலாயின.
ஆனால்
அவன்
ஒன்றையும்
பொருட்படுத்தாது
நெருங்கினான்.
அப்பொழுது
குகையின்
எந்த
இடைவெளியிலிருந்தோ
ஒரு
சிறு
சூரிய
கிரணம்
வந்து
எலும்புக்கூட்டின்
வலக்
கண்
குழியில்
விழுந்தது.
நன்னய
பட்டன்,
முன்னால்
ஓர்
அடியெடுத்து
வைக்க
முடியாது,
கட்டுண்ட
சர்ப்பம்
போல
நின்று,
வெளிச்சம்
விழுந்த
மண்டையோட்டில்
இருக்கும்
கண்குழியை
நோக்கினான்.
அதில்
ஒரு
புழு
நெளிவது
போலத்
தோன்றியது.
அது
புழுவா?
அன்று.
ஒரு
சிறிய
கருவண்டு
மெதுவாக
வெளியேறி,
ஒளி
ஏணியில்
ஏறிச்
செல்வதுபோல்
சிறகை
விரித்து
ரீங்காரமிட்ட
வண்ணம்
பறந்து
சென்று
முகட்டிலிருந்த
இடைவெளியில்
மறைந்தது.
மறைந்ததுதான்
தாமதம்!
அந்தத்
துவாரத்திற்கு
வெளியே
அண்ட
கோளமே
இற்றுவிழும்படியாகக்
காதைச்
செவிடாக்கும்
இடிச்
சிரிப்பு!
அது
அந்த
அமைதியின்
நிலையமான
சூரங்காட்டையே
ஒரு
குலுக்குக்
குலுக்கியது.
நன்னய
பட்டன்
உடல்
வியர்த்தது.
அவனது
பூதவுடல்
கட்டுக்
கடங்காது
நடுங்கியது;
ஆனால்,
கண்கள்
மட்டிலும்
பயப்பிராந்தியில்
அறிவை
இழக்கவில்லை.
அசாதாரண
விவகாரத்தில்
தூண்டப்பட்டு
உண்மையை
அறியத்
தாவுகிறது
என்பதை
உணர்த்தும்
பாவனையில்
எலும்புக்கூடு
கிடக்கும்
இடத்தையும்
வண்டு
மறைந்த
திசையையும்
ஒருங்கே
கவனித்தான்.
வெடிபடச்
செய்த
சிரிப்பு
மங்கியதும்
சூரிய
கிரணம்
மறைந்தது.
அசாதாரணமாக
அமைதி
பிறந்தது.
நன்னய
பட்டன்
குகையைச்
சுற்றிப்
பார்க்கத்
தொடங்கினான்.
கற்பாறைப்
படுக்கைக்கு
மறுபக்கம்
குகையின்
ஒரு
சுவர்.
அதன்
மேல்
இருளிலும்
தெரியக்கூடிய
ஒளித்
திராவகத்தால்
சிவப்பாக
எழுதப்பட்டது
போன்ற
யந்திரம்.
அதன்
ஒரு
பாகத்தில்
தாமரைப்பூ
ஒன்று
செதுக்கப்பட்டிருந்தது.
தாமரை
மலரின்
இதழ்கள்
எலும்புக்
கூட்டின்
மார்பகத்துக்கு
நேராக
இரண்டடி
உயரத்தில்
சுவரின்
மேல்
இருந்தன.
கற்பலகையில்,
எலும்புக்கூட்டிற்கும்
சுவருக்கும்
உள்ள
ஒரு
சிறு
இடைவெளியில்,
சுவரில்
இருப்பதைப்
போலவே
யந்திரம்
செதுக்கப்பட்டு
அதன்
மையத்திலும்
ஒரு
செந்தாமரைப்
புஷ்பம்
செதுக்கப்பட்டிருந்தது.
கற்பலகையில்
வரையப்பட்ட
யந்திரம்
இருளில்
பொன்னிறமாக
மின்னியது.
தாமரை
மலர்
வெண்மையான
பளிங்கினால்
செய்து
பொருத்தப்பட்டதுபோல்
இருந்தது.
நன்னய
பட்டன்
அதன்மீது
கையை
வைத்துத்
தடவிப்
பார்த்தான்.
அது
தனியாகச்
செதுக்கிப்
பாறையில்
பொருத்தப்படாத
விசித்திரமாக
இருந்தது.
அது
எப்படி
அமைக்கப்பட்டது?
எலும்புக்குக்கூடு
ஆறடி
நீளம்.
உயிருடன்
இருந்தபொழுது
அம்மனிதன்
ராக்ஷஸன்
போல
இருந்திருக்க
வேண்டும்
என்பதில்
சந்தேகம்
இல்லை.
இவ்வாறு
நினைத்துக்கொள்ளவே,
நன்னய
பட்டன்
வேறு
பக்கமாகத்
தலையை
நிமிர்த்தி
நோக்கினான்.
என்ன
ஆச்சரியம்!
ஒரு
பிரம்மாண்டமான
முதலை
வாயைத்
திறந்து
கொண்டு
அந்தரத்தில்
தொங்கியது.
இருட்டில்
தோன்றும்
மயக்கமா?
இல்லை!
இல்லை!
இரண்டு
சரடுகள்
வளையங்கள்
போல்
உயரேயிருந்து
தொங்கவிடப்பட்டு,
அவற்றின்
உடே
இம்முதலை
புகுத்தப்பட்டு,
உயரத்தில்
தொங்கிக்
கொண்டிருந்தது.
இருட்டின்
கூற்றால்
முதலில்
சரடு
தொங்குவது
தெரியவில்லை
நன்னய
பட்டனுக்கு.
மெதுவாக
அதை
யணுகினான்.
இருட்டில்
கால்
இடறியது.
ஜோதியாக
ஒரு
திரவ
பதார்த்தம்
உருண்ட
பானையிலிருந்து
வழிந்தோடியது.
அதன்
பளபளப்பு,
கருங்கல்
தளத்தைத்
தங்க
மெருகிட்டதுமல்லாது
குகையையே
சிறிது
பிரகாசமடையச்
செய்தது.
லாவகமாகப்
பலிபீடத்தின்
மீது
ஒரு
காலை
வைத்து
ஏறி
நின்று,
அவன்
முதலையின்
வாயை
நோக்கினான்.
கண்கள்
ஒளி
வீசின;
வாய்
கத்தியால்
வெட்டிவைத்த
சதைக்
கூறுபோல்
தெரிந்தது.
ஆனால்
அதன்மீது
சலனம்
இல்லை,
உயிர்
இல்லை.
முதலையின்
திறந்த
வாயில்
ஓலைச்
சுவடிகள்
போல்
கட்டுகட்டாக
என்னவோ
இருந்தன.
நன்னய
பட்டன்
அவற்றையெடுத்தான்.
ஓலைச்
சுவடிகள்
போலில்லாமல்
அவை
மிகவும்
கனமாக
இருந்தன.
அவற்றை
அப்படியே
சுமந்துகொண்டு
குகைக்கு
வெளியே
வந்தான்.
அச்சமயத்தில்தான்
நன்னய
பட்டனுக்குப் 'பூலோகத்தில்
இருக்கிறோம்'
என்ற
உணர்வு
ஏற்பட்டது.
அத்தனை
நேரம்,
ஜன்னி
கண்ட
நிலையில்,
உள்ளுக்குள்
போராடும்
பயத்தை
அமுக்கி
அந்தக்
குகை
இரகசியங்களைத்
துருவிக்
கொண்டிருந்தான்.
குழந்தை,
ஒரு
மர
நிழலில்
தவழ்ந்து
விளையாடிக்கொண்டு
சிறிது
தூரத்தில்
இரை
பொறுக்கும்
மைனாவைப்
பார்த்துச்
சிரித்துக்
கொண்டிருந்தது.
நன்னய
பட்டனுக்கு
சுயப்
பிரக்ஞையாக -
அதாவது,
ஓடித்திரியும்
எண்ணக்
கோணல்களிலிருந்து
யதார்த்த
உலகத்திற்குக்
கொண்டு
வரும்
ஒரு
துருவ
நட்சத்திரமாக -
அக்குழந்தை
இருந்தது.
அதைத்
தூக்கி
வைத்துக்
கொண்டு
கையிலிருந்து
ஓலைச்
சுவடியை
அவிழ்த்தான்.
வெளிச்சத்தில்
பிடித்து
ஏடு
ஏடாக
வாசித்தான்.
முதலில்
அவனது
கவனம்
அந்தச்
சுவடிகளின்
விசித்திரமான
குணத்திலேயே
தங்கியது.
அப்பொழுதுதான்
கருக்கிலிருந்து
நறுக்கித்
திருத்தப்பட்ட
பனை
ஓலை
மாதிரியே
காணப்பட்டது.
இளம்
பச்சைகூட
மாறவில்லை.
ஓலையின்
ஓடும்
மெல்லிய
நரம்புகள்
கூட
வெள்ளையாகத்
தென்பட்டன.
ஆனால்
ஓலைதான்
உலோகம்
போல்
கெட்டியாகவும்
கனமாகவும்
இருந்தது.
அதில்
எழுத்துப்
பள்ளங்களில்
சிறிது
பளபளப்பு
இருந்தது.
இதென்ன
விசித்திரமான
ஓலை
என்பது
பிடிபடாமல்
உள்ளிருக்கும்
வாசகத்தை
உரக்கப்
படிக்க
ஆரம்பித்தான்:
...
காலத்தின்
கதியைத்
தடைசெய்யும்
உண்மையைக்
கண்டு
பிடித்துவிட்டேன்.
ஆமாம்,
அது
மட்டிலுமா?
வெறும்
ஜடத்தை,
மூலப்
பிரகிருதிகளை,
பிராண
பக்திகொண்டு
துடிக்கும்
உயிர்க்கோளங்களாக
மாற்றுந்
திறமை
படைத்துவிட்டேன்.
நான்
தான்
பிரம்மா!
சேதன
அசேதனங்கள்
எல்லாம்
எனது
அறமே!
நானே
நான்!
நான்
நானே...
இவ்வாறு
சில
ஏடுகள்,
முழுதும்
தறிகெட்ட
மூளையின்
ஓட்டம்
போல்
வார்த்தைக்
குப்பையால்
நிறைக்கப்பட்டிருந்தன.
நன்னய
பட்டனுக்கு
இந்தக்
கொந்தளித்துச்
செல்லும்
லிபிகளின்
அர்த்தம்
புரியவில்லை.
மூளை
சுழன்றது!
பின்னர்:
இவ்வளவு
தூரம்
உனக்குப்
பொறுமையிருக்கிறதா!
இனிமேல்
என்
இரகசியத்தைக்
கேள்!
பிரபஞ்ச
இரகசியத்தை
அறிய
எங்கெல்லாம்
சென்றேன்,
தெரியுமா?
மிசிர
தேசம்
வரை.
அக
புராணம்
வழிகாட்டியது!
செமிராமிஸ்,
காலத்தின்
கதியை
நிறுத்தும்
வித்தையைக்
கற்பித்தான்.
உண்மையில்
ஒரு
படி
அது!
அதற்கு
மேல்
எத்தனை!
மூளை
குழம்பாது
நீ
என்னுடன்
வருவாயா?
அப்படியானால்...
குகைக்குள்
மூலையில்
தொங்குகிறதே
முதலைக்
கூடு,
அது
ஒடிந்து
மண்ணாகி
மண்ணுடன்
சேராதபடி
செய்தவன்
அவன்
தான்.
அதை
இப்பொழுதும்
உயிருடன்
எழுந்து
நடமாடச்
செய்யலாம்.
அதை
யார்
அறிவித்தான்
என்று
உனக்குச்
சொல்ல
வேண்டுமா?
அதைத்தான்
சொல்ல
மாட்டேன்.
அது
உனக்குத்
தெரியலாகாது.
வேண்டுமானால்
உண்மையைப்
பரிசோதித்துப்
பார்.
மூலையில்
நீ
கொட்டிவிட்டாயே
அந்த
ஜீவ
ரசம்,
அதை
ஒரு
துளி
எடுத்து,
உன்
இரத்தத்தில்
கலந்து,
அதன்
மூக்கில்
பிடி!
அப்புறம்
பார்!
எனது
எலும்புக்
கூட்டிற்கு
உடலளித்துப்
பின்னர்
என்
உயிரை
அதில்
பெய்ய
வேண்டும்.
அப்பொழுதுதான்
நான்
உனக்கு
இரகசியங்களை
விளக்கமாகச்
சொல்லமுடியும்...
இவ்வாறு
வாசித்துக்
கொண்டிருந்த
நன்னய
பட்டனுக்குக்
கண்
பிதுங்குவது
போலிருந்தது.
என்ன!
ஓலை
வெறும்
ஓலை.
அதிலிருந்த
ஓர்
எழுத்தைக்
கூடக்
காணவில்லை.
அவ்வளவும்
மறைந்து,
வெறும்
தகடுகளாக,
மங்கி
மறையும்
சூரிய
ஒளியில்
சுவடிகள்
மின்னின.
வாசித்ததெல்லாம்
உண்மையா
அல்லது
வெறும்
சித்தப்
பிரமையா?
அவன்
சொன்னதைப்
பரீட்சித்துப்
பார்த்தால்?
நன்னய
பட்டன்
மறுபடியும்
குகையினுள்
சென்றான்.
குகையிலிருந்த
சூரியக்கத்தியால்
விரலில்
சிறிது
நறுக்கி
இரத்தமெடுத்து
மின்னிக்கொண்டிருந்த
ஜீவ
ரசத்தில்
கலந்தான்.
குகை
முழுவதிலும்
சுகமான
ஒரு
பரிமள
கந்தம்
பரவியது.
அவனுடைய
உடலையும்
உள்ளத்தையும்
மோக
லாகிரியில்
தள்ளியது.
மெதுவாக
முதலைக்
கூட்டை
எடுத்துக்
கீழே
வைத்து,
அதன்
மூக்கில்
இந்த
வாசனைக்
கலவையைப்
பிடித்தான்.
சிறிது
நேரம்
ஒன்றும்
நிகழவில்லை.
பின்னர்,
ஒளியிழந்து
மங்கி
ஒரே
நிலையில்
நின்ற
முதலையின்
கண்களில்
சிறிது
பச்சை
ஒளி
வீசியது.
மெதுவாக
அதன்
உடல்
அசைந்தது.
திறந்தபடியே
இருந்த
வாய்
மெதுவாக
மூடியது.
முதலை
அவனை
நோக்கி
நகர
ஆரம்பித்து
விட்டது.
அதே
சமயம்
'களுக்'
என்ற
ஒரு
பெண்ணின்
சிரிப்பு.
ஏறிட்டுப்
பார்த்தான்
நன்னய
பட்டன்.
எதிரே
குகை
வாயிலில்
தவழுந்
தனது
குழந்தையின்
முன்னால்
அழகின்
வரம்பைச்
சிதற
அடித்து,
பிறந்த
மேனியில்
நிற்கும்
ஒரு
பெண்
உருவம்
குழந்தையை
நோக்கிச்
சிரித்தவண்ணம்
நின்றது!
என்ன
அழகு!
அப்பெண்ணின்
நீண்டு
சுருண்ட
கறுத்த
தலைமயிர்
இரு
வகிடாக
அவளது
உடலழகை
அப்படியே
முழங்கால்
வரை
மறைத்தது.
நன்னய
பட்டன்
ஸ்தம்பித்து
அவளையே
நோக்கிய
வண்ணம்
நின்றான்.
வைத்த
கண்
எடுக்க
முடியாதபடி
அப்படியே
நின்றான்.
"பயப்படாமல்
அவள்
திரும்பும்பொழுது
கவனி!
பின்பு
உன்
வேலை!"
என்றது
அவன்
காதருகில்
ஒரு
குரல்.
அதற்கு
என்ன
கம்பீரம்,
என்ன
அதிகாரத்
தோரணை!
அப்பெண்ணோ,
நெடுநேரம்
குழந்தையையே
நோக்கி
நின்று
சிரித்துக்
கொண்டிருந்தாள்.
குழந்தையைத்
தன்னிடம்
வரும்படி
சமிக்ஞை
செய்தாள்.
குழந்தை
அசையவில்லை.
நெடுநேரம்
முயன்றும்
குழந்தை
அசையவில்லை.
மெதுவாக
அவள்
குழந்தையை
ஏறிட்டுப்
பார்த்தவண்ணமே,
பின்னிட்டு
நடந்து
வந்தாள்.
அப்பொழுதும்
குழந்தை
அசையவில்லை...
ஆனால்
குழந்தையின்
உடல்
அவ்விடத்திலேயே
கட்டுண்டு
கிடப்பதுபோல்
பட்டது
நன்னய
பட்டனுக்கு!
ஏனென்றால்
அப்படித்
தவித்தது
குழந்தை
அவ்வுருவத்தினிடம்
செல்ல!
பின்னாகவே
அடியெடுத்துவைத்துச்
சென்ற
அப்பெண்ணுருவத்தின்
முகத்தில்
சடக்கென்று
ஒரு
மாறுதல்
ஏற்பட்டது.
கோபம்
தணலாகத்
தீப்பொறி
பறக்க,
முகம்
கோரமாகச்
சுருங்கி
நிமிர்ந்தது.
மேலுதட்டின்
அடியிலிருந்து
புறப்பட்டன
இரண்டு
மெல்லிய
கோரப்
பற்கள்!
மின்வெட்டுப்
போல்
திரும்பியது
அவ்வுருவம்.
அவ்வளவுதான்!
என்ன
கோரம்!
பின்புறம்
வெறும்
எலும்புக்கூடு!
மண்டையோட்டின்
கீழ்ப்பாகத்திலிருந்து
தொங்கியது
ஒரு
சிறு
சடை!
நன்னய
பட்டன்!
நன்னய
பட்டனா
அவன்?
அவன்
முகமும்
உடலும்
ஏன்
இக்கோர
உருப்பெற்றுவிட்டன!
கையில்
நீண்ட
நகம்;
தேகத்தில்
சடை
மயிர்,
வாயில்
வச்சிர
தந்தம்,
உதடுகள்
நெஞ்சுவரை
தொங்குகின்றன!
பேய்ப்
பாய்ச்சலில்
சென்று,
மறையும்
ஒரு
பெண்ணுருவின்
சடையைப்
பிடித்துத்
திரும்பி,
குகையுள்
மறைந்தான்.
வெளியே
என்ன
ஆச்சரியம்!
குமுறும்
இடியும்
மின்னலும்
எங்கிருந்தோ
வந்து
குவிந்தன.
குகைக்குள்ளே
பேயுருவத்தில்
நடமாடுகிறான்
நன்னய
பட்டன்.
பலிபீடத்தின்
மீது
இருவரும்
எலும்புக்கூட்டின்
உட்கலசங்களில்
சுருண்டு
உலர்ந்திருந்த
குடல்,
ஈரல்,
இருதயம்
இவற்றை
எடுத்து
வைத்துக்
களிமண்ணால்
சேர்த்துப்
பிணித்துக்
கொண்டிருக்கிறான்.
வெளியே
மழையற்று,
மின்னல்கள்
பிரபஞ்சத்தின்
கேலிச்
சிரிப்பைப்
போல்
கெக்கலித்துக்
கொண்டிருக்கின்றன.
அந்த
உருவத்தின்
தலைமாட்டில்
குழந்தை
சுய
அறிவு
இழந்தது
போல்
பிரக்ஞையற்று,
விழித்த
கண்
திறந்தபடி
உட்கார்த்தி
வைக்கப்பட்டிருக்கிறது.
நன்னய
பட்டன்
அதன்
இதயத்துடன்
பெண்
உருவிடமிருந்து
பிடுங்கிய
சடையைக்
கட்டி,
அதன்
மற்றொரு
மூலையை
உருவத்தின்
நாபியில்
சேர்க்கிறான்.
அவனது
நாக்கு
மட்டிலும்
சாதாராணமாகத்
தொங்குகிறது.
மெதுவாகப்
பலிபீடத்தின்
தாமரைக்
குமிழ்களில்
செப்புக்
கம்பிகளைப்
பின்னி,
அவற்றைப்
பலிபீடத்தின்
மீது
வைத்து
வளர்த்தப்பட்டிருக்கும்
உருவத்தின்
கை,
கால்,
தலை,
இவற்றுடன்
சுற்றி,
குகைக்கு
வெளியே
கொண்டுவந்து
ஓர்
உயரமான
மேட்டில்
ஈசான
திக்கு
நோக்கி
யந்திரம்
போல
வளைத்துப்
பதிக்கிறான்.
"உம்!
உஷார்!
ஜீவ
சத்தைக்
கண்களில்
தடவு!"
என்றது
ஒரு
குரல்.
நன்னய
பட்டன்
அவ்வாறே
தடவினான்.
"கிட்ட
நிற்காதே!
விலகி
நில்!"
என்றது
நில்.
'சட்டச்
சடசடா!'
என்று
ஆரம்பித்துப்
புரண்டு
வெடித்தது
ஒரு
பேரிடி.
மின்னல்
வீச்சு,
கம்பிகள்
வழியாகப்
பாய்ந்து
குகை
முழுதும்
ஒரே
பிரகாசமாக்கிக்
கண்ணைப்
பறித்தது.
"தொட்டுப்
பார்!"
என்றது
அக்குரல்
மறுபடியும்.
நன்னய
பட்டன்
அணுகினான்.
பலிபீடத்தின்
மீதிருந்த
உருவத்தைத்
தொட்டான்!
என்ன
ஆச்சரியம்!
வெறும்
களிமண்,
சதைக்
கோளமாக
மாறிவிட்டது!
"அதன்
நாபியிலும்
இதயத்திலும்
ஜீவ
ரசத்தைத்
தடவு!"
நன்னய
பட்டன்
அப்படியே
செய்தான்.
மறுபடியும்
ஏற்பட்டது
மின்னலும்
இடியும்.
"உணர்வு
ஏற்பட்டுவிட்டது.
தொட்டுப்
பார்!
இதயம்
அடித்துக்
கொள்ளும்.
இனி
உயிர்தான்
பாக்கி!
குழந்தையை
அவன்
முகத்தில்
படுக்க
வை!"
நன்னய
பட்டன்
அப்படியே
செய்தான்.
இதற்குள்
அவனது
கோர
உருவத்தில்
செம்பாதி
மறைந்துவிட்டது.
"முதலில்
அந்த
மூலையில்
இருக்கும்
மருந்தைக்
கையில்
தடவி,
உருவத்தின்
கைகளை
உன்
இரண்டு
கைகளாலும்
பிடித்துக்
கொண்டு
முதலையின்
முதுகில்
நில்!
ஒரு
கையை
எடுத்தால்
உன்
உயிர்
போவது
நிச்சயம்.
ஜீவ
ரசத்தை
எடுத்து
இருவர்
மீதும்
கொட்டிவிட்டு
நான்
சொன்னதுபோல்
செய்!"
என்றது
அக்குரல்.
நன்னய
பட்டன்
யந்திரம்
போல
அவற்றைச்
செய்து
முடித்தான்.
"உருவத்தின்
கண்களையே
பார்!
வேறு
பக்கம்
திரும்பாதே!"
மறுபடியும்
இடிஇடிக்க
ஆரம்பித்தது!
கோர
இடி,
சமுத்திர
அலை
போல்
தனது
உள்ளுணர்வைத்
தாக்கி
உடலில்
தங்கொணா
வேகத்தில்
புரளுவதை
அறிந்தான்.
உருவத்தின்
மீது
வைத்த
கண்
மாறவில்லை.
உருவத்தின்
கண்கள்
மெதுவாக
அசைகின்றன.
அதன்
நெற்றியில்
சிறு
வியர்வை
துளிர்க்கிறது.
கண்கள்
மெதுவாகத்
திறக்கின்றன.
அச்சமயம்
'களுக்'கென்று
பெண்ணின்
சிரிப்புக்
குரல்.
மறுபடியும்
அதே
உருவமா!
பார்க்கவேண்டுமென்ற
ஆசை
மறுபடியும்
அதன்
உருவப்
பிரமையில்
சென்று
லயித்தது.
மெதுவாகக்
கண்ணைத்
திருப்பினான்.
அப்பேயுருவம்
மெதுவாகப்
பலிபீடத்தை
அணுகி,
சடையை
எடுக்க
முயன்றது.
கட்டளையை
மறந்து
அதைத்
தட்டக்
கையெடுத்தான்!
"எடுக்காதே!"
என்ற
அதிகாரத்
தொனியுள்ள
குரல்!
உருகிய
பிழம்புகள்
பாதங்கள்
வழியாக
இதயத்தை
நோக்கிப்
பாய்வது
போல்
ஒரு
சிறு
வினாடி
நினைத்தான்.
அவ்வளவுதான்:
மற்றொரு
பேரிடி!
நீட்டின
கையை
மடக்க
முடியவில்லை.
ஒரு
கணத்தில்
மூன்று
எலும்புக்கூடுகள்தான்
பலி
பீடத்தின்
மீது
கிடந்தன!
ஏக்கமான
பெருமூச்சு
குகையினின்று
வெளிப்பட்டு
வானவெளியில்
மறைந்தது.
இன்னும்
எத்தனை
காலம்!...
|