காஞ்சனை

 

அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள்.

இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? "அட சட்!" என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள் மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால், அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்?

உடனே விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர் பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா? நாமும் நம் இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா? சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது.

சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி 'டொடக்' என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை. நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன் போலும்! நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா? உள்ளங்கையில் கொட்டி வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்.

சீ! என்ன நாற்றம்! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது? குமட்டல் எடுக்க, புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து, வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.

துர்நாற்றம் தாங்க முடியவில்லை, உடல் அழுகி, நாற்றம் எடுத்துப் போன பிணம் போல; என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம் வருகிறதோ? ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே! கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு மறைந்துவிட்டன. என்ன அதிசயம்! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக் கிடக்கிறதோ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது. எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன்.

தும்மல் என் மனைவியை எழுப்பிவிட்டது. "என்ன, இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை? மணி என்ன?" என்று கொட்டாவி விட்டாள்.

மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு நிமிஷம் ஆயிற்று.

என்ன அதிசயம்! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப் பக்கத்தில் ஏற்றி வைப்பது.

"உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை தெரியுதா?" என்று கேட்டேன்.

"ஒண்ணும் இல்லியே" என்றாள்.

சற்று நேரம் மோந்து பார்த்துவிட்டு, "ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது; எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள்" என்றாள்.

விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன். நட்சத்திர வெளிச்சந்தான்.

லேசாக வீட்டிலிருந்த ஜன்னல், வாசல், கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம் நிச்சப்தம். பூகம்பமோ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள சோலைகளுக்கு அப்பால் மறைந்தது.

துர்நாற்றமும் வாசனையும் அடியோடு மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்.

நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.

"ராத்திரி பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்?" என்று என் சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். 'ஐக்கிய நாடுகளின் ஜரூர் மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்' அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.

"அது உன் சமையல் விமரிசையால் வந்த வினை" என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன்.

"உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய? எல்லாம் நீங்கள் எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.

நானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.

அப்போது ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, "அம்மா, தாயே!" என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.

நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.

"உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?" என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.

"வேலை கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி குடம்மா" என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.

"நான் வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!" என்றாள்.

"அது போதாதா அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?" என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.

"என்ன, நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே" என்றாள் என் மனைவி.

"சீ! உனக்கு என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?" என்றேன்.

வெளியில் நின்ற பிச்சைக்காரி 'களுக்' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது.

"முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ இப்படி உள்ளே வாம்மா" என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா? மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா! எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது!

என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள் வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள். மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா? என்னவோ படுஆபத்து என்றுதான் என் மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள் பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி நடமாடின. இது என்ன மாயப்பிரமை!

தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக் கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி 'களுக்' 'களுக்' என்ற சப்தம் கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது, சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.

சாயந்தரம் இருக்கும்; கருக்கல் நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான் இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன். அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.

"நீ எங்கெல்லாமோ சுத்தி அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு" என்றாள் என் மனைவி.

"ஆமாம். நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே, காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?" என்றாள்.

"சொல்லேன்; என்ன கதை?" என்று கேட்டாள் என் மனைவி.

"அஞ்சுநூறு வருச மாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.

"இது அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு? அந்தக் குருவுக்கு..."

என்ன அதிசயம்! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா? கையிலிருப்பது 'சரித்திர சாசனங்கள்' என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், 'அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச் செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.

திடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.

"உன் பெயர் என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே" என்று மனைவி கேட்பது எனது செவிப்புலனுக்கு எட்டியது.

"காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன! ஏதோ ஒரு பேரு" என்றாள் பிச்சைக்காரி.

என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு வரம்பு உண்டா?

நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக் கொண்டிருந்தனர்.

வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக் கொண்டு நுழைந்த என்னை, "பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன உங்களுக்காம்?" என்ற பாணம் எதிரேற்றது.

காஞ்சனை என்று சொல்லிக் கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும் சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது? அவளை எப்படிக் காப்பாற்றுவது?

சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில் படுத்துக் கொண்டாள்.

நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை மூட முடியவில்லை. எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ? இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று எதிர்பார்த்தது.

எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது.

பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை.

எங்கோ கதவு கிரீச்சிட்டது.

திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின.

நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை.

என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது.

அவளுடையதுதானா?

எழுந்து குனிந்து கவனித்தேன். நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.

கீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம்!

போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன்.

ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.

மெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது.

கால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின.

திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?

விடுவிடு என்று மாடிக்குச் சென்றேன்.

அங்கே அமைதி.

பழைய அமைதி.

மனம் தெளியவில்லை.

மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன்.

மனித நடமாட்டம் இல்லை.

எங்கோ ஒரு நாய் மட்டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.

பிரம்மாண்டமான வௌவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.

வெளியே பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது என்று நிதானத்துக்கு வந்தேன்.

ஆனால் கீழே!

மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

கீழே இறங்கினேன்.

தைரியமாகச் செல்ல முடியவில்லை.

அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, "என்ன, தூக்கம் வரவில்லையா?" என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.

அப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.

நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.

"என்ன, வரவரத்தான், இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது!" என்று என் மனைவி எழுப்பினாள்.

இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?

தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா? அதே மாதிரிதான் இதுவும், என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், "ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?" என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?

இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ? சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ? அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.

இன்றைப் பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.

இரவு படுக்கப் போகும்போது என் மனைவி, "காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்" என்று கூறிவிட்டாள். எனக்கு மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.

இது என்ன சூழ்ச்சி!

இன்று தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று தீர்மானித்தேன்.

"என்ன படுக்கலியா?" என்றாள் என் மனைவி.

"எனக்கு உறக்கம் வரவில்லை" என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித் தைத்து வாங்கியது.

"உங்கள் இஷ்டம்" என்று திரும்பிப் படுத்தாள். அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா?

நானும் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போனேன்.

சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச் சாய்த்தேன்.

பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.

இதென்ன வாசனை!

பக்கத்தில் படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள் ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை ஒன்றுதான் புரிந்தது.

சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை எழுப்பி உருட்டினேன்.

பிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். "ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி இருந்தது" என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.

கழுத்தைக் கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.

"பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு படுத்திருப்பாய்" என்று மனமறிந்து பொய் சொன்னேன்.

அவள் உடம்பு நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள். அதே சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.

கர்ணகடூரமான குரலில் ஏதோ ஒரு பாட்டு.

அதிகாரத் தோரணையிலே, "காஞ்சனை! காஞ்சனை!" என்ற குரல்.

என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல்! கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன.

அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு அமைதி.

நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.

நடுத்தெருவில் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு!

"இங்கே வா" என்று சமிக்ஞை செய்தான்.

நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.

போகும்போது காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.

தெருவிற்குப் போனேன்.

"அம்மா நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு. அம்மாவை எளுப்பாதே" என்றான்.

விபூதி சுட்டது.

நான் அதைக் கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா! எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கிறதே!

மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.

காலையில் காப்பி கொடுக்கும்போது, "இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!" என்றாள் என் மனைவி. இதற்கு என்ன பதில் சொல்ல?

 

(முற்றும்)

 

  பொருளடக்கம்

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)