படபடப்பு

 

பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்களான ஸ்டேஷன்கள் பட்டணவாசிகளுக்கு மோக்ஷவாசல்களாக மாறியது. ஒவ்வொரு ரயில் வண்டியும் உயிர் பொதிந்த மூட்டை முடிச்சுக்களைத்தான் ஏற்றிச் சென்றன. ஒவ்வொருவரும் உயிரை பத்திரமான இடத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பித்துக் கொள்ள, சகல கஷ்டங்களையும் சகிக்கத் தயாராயிருந்தனர். சாலையில் பெட்ரோலும் நீராவி வசதியும் வருமுன் இருந்த சஞ்சார உலகம் காட்சியளித்தது. கூடை, முறம், குழந்தை குட்டிகள், கிழடு, நோய் நோஞ்சான், நகை நட்டு முதலிய சகல சுமைகளையும் தபால் வண்டிகள் என்ற இரட்டை மாட்டு வண்டிகள் பத்திரமாக, மெதுவாக வேற்றிடங்களுக்கு சுமந்து சென்று கொண்டிருந்தன. பெட்ரோல் கட்டுப்பாடு சிலரைக் கட்டுப்படுத்தவில்லை; மாட்டு வண்டிச் சாரைகளை விலக்கிக் கொண்டு மின்வெட்டி மறைவது போலவும், அரசியல் துறையில் சந்தர்ப்ப விசேஷத்தைத் தொத்தி முன்னேறுகிறவர் போலவும் அவர்கள் தோன்றி மறைந்தார்கள். 'நீர் எவ்வளவு வேகமாகத்தான் செல்லுமே; நான் வருகிற போதுதான் வந்து சேருவேனே; எப்படியும் நான் வந்துதான் சேரப் போகிறேனே' என்று சொல்லிக் கொண்டு இயங்கும் உலகம் போல, தபால் வண்டிகளும் தம் போக்கில், இலட்சியத்தை நோக்கி ஊர்ந்து செல்லும் மனித சமுதாயம் போல, மாட்டின் சதங்கையொலிக்கு ஏற்ப ஆற அமர முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

பூக்கடையும் ரவுண்டாணாவும் சைனா பஜாரும் அத்துவானமாயின. ஜனங்கள் ஆவேசமாக சிங்கப்பூர் வீழ்ந்து விட்டதை விவாதித்தார்கள். பிறகு ரங்கூன் விழுந்து விட்டதைத் தர்க்கித்தார்கள். பிறகு ஆபத்து, தற்காப்பு, ஜப்பான் நோக்கம், உலகயுத்தம், எல்லாவற்றையும் விவாதித்தார்கள். சென்னையில் வீடுகள் காலியாகிக் கொண்டே வந்தன. பிறகு ரயிலைச் சீந்துவாரும் குறைந்தது. டைபாய்ட் ஜுரம் கண்டவன் உடம்புச் சூடு பதிவுப்படம்போல, கவலையும் பரபரப்பும் மங்கியது; பிறகு உயர்ந்தது; பிறகு மங்கியது.

அபாய அறிவிப்புச் சங்கு ஊதும் பழக்கமும் அமலுக்கு வந்தது. முதலில் அபாய நீக்க சப்தமே சிலரை வெருள வைத்தது. அதைத் தொடர்ந்து ஊதும் அபாய அலமறல் என்ன வேடிக்கை பண்ணியிருக்கும் என்று சொல்ல வேண்டுமா? ஒத்திகைகள் இருட்டடிப்புகள் முதலில் வேடிக்கையாகி, அப்புறம் ஜனங்கள் மனசில் பதிந்து ஜனங்கள் வெகுசிரத்தையுடன் பின்பற்றும் சடங்காயிற்று.

தினசரி, பேப்பரில் படித்து, தர்க்கம் நடத்தி, பொழுது போக்குவதற்குச் சௌகரியமாக, சென்ற இரண்டு வருஷங்களாக இருந்து வந்த ஒன்று திடீரென்று நகரத்திற்குள்ளாகவே புகுந்துவிட்டது. அதாவது ராவணன் கண்ணால் காணுமுன் காதலித்த மாதிரி, நேரில் அனுபவிக்குமுன் மனசிற்குள் புகுந்துவிட்டது. அதிகாலையில் ஆற்றங் கரையில் நின்று கொண்டு, முதல் முழுக்கு போடும் வரை உலகெல்லாம் பரந்து கிடக்கும் குளிர் ஒருங்கே திரண்டு ஆற்றுப் பிரவாகமாக ஓடுவதாக நினைத்து உடல் நடுக்கம் கொள்வதுபோல, ஜனங்கள் நரம்பிலே எப்பொழுதும் ஒரு படபடப்பை கொடுத்து வந்தது. தூங்கும் போதும் நடக்கும்போதும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் போதும் கறி தாளிக்கும் போதும் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தார்கள். 'அதோ என்னமோ கேட்கிறதே' என்ற ஒரு பிரமை சிலர் மனசில் சாதாரணமாயிற்று. அபாயச்சங்குடன் நாயின் ஊளையும், ஜனங்களின் அமைதியும் குசுகுசுப் பேச்சும் விபரீதக் கலவைகளாயின. சென்னைக்கு அபாயமில்லை என்று சிலர் நம்பினார்கள்; சிலர் தாம் வெளியேறிய பின்பு முதல் குண்டு விழக்கூடும் என்று தம்முடைய பொருளாதார நிர்ப்பந்தத்தில் ஜப்பானிய போர்த்திட்டத்தைக் கட்டிப் போட்டார்கள்.

சாயங்காலமாகி விட்டால் அசுரனுக்குப் பலம் வருவது போல பீதிக்கு, பயத்துக்கு, உருவம், சக்தி, நோக்கம், விருப்பு வெறுப்பு யாவும் கூடிய ஒரு உயிர்ச்சொருபமாக நகரத்தில், நடமாடுகிறது. அலைமேலலையாக, இறங்கியும் தாழ்ந்தும் உயர்ந்தும் காதைத் தொலைத்து அலமறும் சங்கு அதற்கு பள்ளியெழுச்சி பாடுகிறது. நல்ல வெளிச்சத்தில் ஓடிப்பழகிய யந்திரங்கள் மோதிக் கொள்ளுகின்றன; கவிழ்ந்து விழுகின்றன. 'அம்மாடி' என்ற குரலுடன் ஒரு உயிர் கஷ்டச் சுமையை நொடியில் உதறித் தள்ளிவிட்டு ஓடிவிட்டது. கோடிகோடியாக வருஷக்கணக்காக உயிர்ப்பாரம் குறைக்கப்பட்டு வரும் காலத்தில் இந்தத் தனி உயிர் என்ன பிரமாதம்? இருட்டிலே வேற்றுலக சத்தம்போல, அகண்டமான, எல்லையற்ற இருள் வெளியிலே வேற்றுலகத்து மனிதர்பேசும் குரல்போல, தெருவிலே, இருளில் மறைந்து சிரித்து உற்சாகமற்ற, பீதி கலந்த வேடிக்கை பேசும் விடலைக்கும்பலின் கதம்பக்குரல் கேட்கிறது. கதவடைத்து கொலை செய்வார்கள்; மனக் கதவடைத்து மருட்செயல் புரிவார்கள். ஆனால் இப்போது, சாதாரண காரியம், வியாபாரம், பேச்சு, வியவகாரம் எல்லாம் இருட்டில் கதவடைத்து நடக்கிறது. கடைக்காரன் சாமான் கொடுக்கவில்லை. தன் மனசில் உள்ள குழப்பத்தை, நாடியில் ஓடும் படபடப்பைப் பகிர்ந்து கொள்ளுகிறான். தூரத்திலே நகரத்தின் ஜீவாதாரத் தேவைகளை முன்னிட்டு கடவுளைப் போல் தொண்டு புரியும் இரும்பு யந்திரங்களின் துடிதுடிப்புக்கூட ஜீவநாதமாகத் தென்படவில்லை. ஊரிலே களை குடியோடிப் போயிற்று. நட்சத்திரங்களும் நிர்மலமான வானமும் தூரத்தில் ஒலிக்கும் சமுத்திரமும் ஏன் இப்படி வேறு மாதிரியாகத் தோன்றவேண்டும். ஜனங்கள் அத்தனை பேரும் கோழைகளா? அவனிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப்பார் தெரியும். தனித்தனியாக ஒவ்வொருவனும் தீரன் தான். சமுதாய பீதி கவ்வியது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஏற்பட்ட இயற்கையின் கோளாறு அந்த இடத்திற்கு சற்றும் ஸ்னானப் பிரார்ப்தியே அற்ற மற்றொரு இடத்தில் அதிர்ச்சி காண்பிப்பது போல இருந்த ஒரு விஷயம் இப்போது உலகம் முழுவதையுமே கேந்திரஸ்தானமாகக் கொண்டு அசைக்க ஆரம்பித்துவிட்டது. ஜனங்கள் பார்த்தசாரதியை நம்பினார்கள்; பக்கத்து வட்டாரக் கடவுள்களை நம்பினார்கள். கடைசியில் இப்போது தங்கள் கால்களையே நம்ப ஆரம்பித்து விட்டார்கள். இதோ தொட்டிலில் கிடந்து காலை உதைத்துக் கொண்டு அழுகிறதே அதற்கும் இந்தப் படபடப்பு பற்றி விட்டது.

இராத்திரியும் வெகுநேரமாகிவிட்டது. பேப்பரில் இனிமேல் ஞாபகப்பிசகை முன்னிட்டு திரும்பிப் படிக்கிறதானால் ஒழிய, மற்றப்படி படிப்பதற்கு ஒன்றுமில்லை. நானும் சற்று கண்ணயர்ந்தேன். அன்று மப்பும் மந்தாரமுமாகச் சற்று சுகமாகத்தானிருந்தது. வெக்கைப் புழுக்கம் கிடையாது. வழி தவறி நுழைந்த அதிதிபோல காற்றும் சமயாசமயங்களில் வீட்டுக்குள் எட்டிப் பார்த்துச் சென்றது.

மனித சமுதாயத்திலே அதன் ஆரம்பம், வளர்ச்சி, நைந்து போன பிறகு அதற்கு ஏற்படும் ஸ்திரத்தன்மைபோல தூக்கமும் உடலயர்ச்சி முடிவில் ஆதிக்கம் கொள்ளும்வரை நிமிர்ந்தும் பணிந்தும் கொடுத்து, முடிவில் என்னையாண்டது. உலகிலே - மனிதனுக்கு உலகம் என்பது என்ன? பூகோள புஸ்தகத்தில் படிப்பதா? அல்லவே அல்ல. அனுபவ கிரந்தத்தில் படிப்பதேயாகும். அது இரண்டரைச் சதுர மைல் விஸ்தீரணமுள்ள ஓட்டப் பட்டியாக இருக்கலாம். அல்லது நியுயார்க் மாதிரி ஒரு சின்ன பிரபஞ்சமாக இருக்கலாம். அல்லது நாலு முழத்தொட்டிலாக இருக்கலாம். பக்குவத்துக்கு ஏற்றபடி அதுதான் உலகம். அந்த உலகத்தைத்தான் ஆதிசேஷன் தாங்குகிறான். சூரிய மண்டலத்தைச் சுற்றிவரும் உருண்டையான கிரஹகோளத்தையல்ல... அந்த உலகிலே, அனுபவத்தை வைத்துத்தான் அனுபவிக்க முடியாத, கூடாத ஒன்றை அனுமானிப்பது; அனுமானமும் பக்குவப் படியாகும். அந்த உலகத்திலே இருளோடு இருளாக இருட்டில் ஓடி மறையும் இரும்புத் தண்டவாளங்கள் போன்ற பழக்க வாசனை, வருங்காலம் என்ற ஒரு இருட்பிழம்பில் எவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை யாரறிவர்? முன் கூட்டி அறிந்துதான் லாபம் என்ன? நான் என்பது இனிமேல் இந்த நானாகவே இருக்குமா?...அதோ என்ன சப்தம், மெதுவாக எங்கோ ஊதுகுழல் மாதிரி தூரத்திலிருந்து வருவதால் காதில் இனிமையாக நுழைகிறதே! திடுக்கிட்டு உட்காருகிறேன். வேறொன்றுமல்ல, யாரோ ரசித்து அனுபவித்து ராக ஆலாபனத்துடன் கொட்டாவி விடுகிறானா? இல்லவே இல்லை.

படபடவென்று எழுந்து மொட்டை மாடிக்கு வந்தேன். வானத்தில் நட்சத்திரங்கள் வழக்கம் போல மினுக்கிக் கொண்டிருந்தன. ஆனால் என் சரகத்துக்கு அருகாமையில் உள்ள சங்கு அலமறுகிறது, உலகத்தின் விதியை நினைத்து அங்கலாய்த்துப் பிரலாபிப்பது போலிருந்தது அது அபாயத்தின் நெருக்கத்தை அறிவிக்கவில்லை. சமுதாயத்தின் வலுவை பிரலாபத்துடன் படபடப்போடு எழுப்புவது போல இருக்கிறது. நகரத்தின் மீது கவிந்து அமுக்கிக் கொண்டிருக்கும் படபடப்பு என்ற அரக்கன் தன் முழு சக்தியையும் நகரத்தின் மீது உபயோகிப்பதற்காக முக்கி முனங்கி உறுமித் திணறுவது போலிருக்கிறது.

என்னவானால் என்ன? அது அர்த்த ஜாமத்தில் எழுப்பி விட்டது. விடிவதற்கு எவ்வளவு நேரம் என்று பார்க்க உள்ளே வந்து கெடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன். அதற்கு ரேடியம் டயல். அது கொள்ளிக் கண் தீயுமிழ, ஏற்கனவே விடிந்துவிட்டது என உறுமியது. விடிந்துவிட்டது என்பதில் ஆசுவாசம்; நிம்மதி; அலமறலும் அடங்கியது. அப்புறம் ஒரு அமைதி... பிரலாபத்தின் விபரீத நாதத்தைவிட பயங்கரமாக இருந்தது அந்த அமைதி. மனசு நிதானப்படுவதற்காக வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு வெளிச்சம் போடாமல் உட்கார்ந்திருந்தேன். விரல்கள் சுண்ணாம்பு தடவி வெற்றிலை கிழித்து சீவல் பாக்கைக் கிரமப்படி தேடிக் கொண்டிருந்தாலும் காது விமானத்தின் ரீங்காரம் கேட்கிறதா என்று துழாவியது. வெற்றிலையும் புகையிலும் வாயில் அடக்கிக் கொண்ட பிற்பாடு மனசோட்டம் நிற்கவில்லை.

'நான் பார்த்தேன்' என்றது குரல்.

'அதற்குப் பிறகுதான் சங்கு ஊதினான்' என்று குறைப்பட்டுக் கொண்டது மற்றொரு குரல்.

'விமானமாவது கத்திரிக்காயாவது... நான் ஒன்றும் பார்க்கவில்லை, ஒரு நாழியாக வாசலில் வந்து நிற்கிறேன்' என்றது வேறு ஒரு குரல்.

'அப்படியானால் நம்ம பயணம் நாளைக்கு' என்றது மற்றொரு குரல்.

'விடியட்டும் மகளே...' என்று கேலி செய்தது முன் கேட்ட மற்றொரு குரல்...

வார்டன்களுடைய பிகில் சப்தம். இடைவிட்டு இடைகேட்டு இவர்களது வாதத்தில் தலையிட்டுத் தடுத்தது...யார் தடுத்தால் என்ன? ரசிப்பு அற்ற படபடப்பு துடிக்கும் கைத்த குரல்கள் தான் பேசுகின்றன. எங்கோ நடக்கும் விவகாரம் இங்கும் பவனி வருகிறது. வாசல் வழி வருவதைத் தாளிட்டுக் கொண்டால் தடுத்துக் கொள்ள முடியுமா? வெளிக்குரல்கள் எனது செவிப்புலனுக்கு எட்ட விலகிச் செல்வது போல பிரமை; அது படிப்படியாக மங்கிக் கொண்டு ஒரே ரீங்காரமாக அமுக்கியது.

நான் விழித்துப் பார்க்கும்போது விடிந்து வெகுநேரமாகி விட்டது. அபாய நீக்கச் சங்கு எப்போது ஊதினார்களோ தெரியாது.

வெளிக்குரல்கள் கேட்டன. அதிலே பழைய உயிர்ப்பற்ற படபடப்பு தொனித்தது.

  பொருளடக்கம்

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)