சொல்லின் இசை


முதன்முதலில்
மனிதர்கள் பேசினார்களா, பாடினார்களா? முதன்முதலில் பேசினார்கள் என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். அதன் பிறகு பாடக்கற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்வீர்கள். ஆனால் உண்மை அது அல்ல. நீங்கள் பேசக் கற்றுக்கொண்டு நெடுங்காலம் ஆனபிறகுதான் பாடக்கற்றுக்கொள்கிறீர்கள். அதனால் பழங்காலத்து மனிதர்களும் அப்படியே முதலில் பேசவும் பிறகு பாடவும் கற்றுக்கொண் டிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள். அது அவ்வளவு பொருத்தம் அல்ல. பாடுவது என்றால், இராகமும் தாளமும் அமைத்து, இசை இலக்கணப்படி பாடுவது மட்டும்் அல்ல. மனம் போனபடி ஒலியை நீட்டி, ஆனால் இனிமையாக, உருக்கமாகப் பாடினால் போதும். அதுவும் பாட்டுத்தானே? நாட்டுப்புறங்களில் காட்டிலும் மேட்டிலும் ஓடி உழைக்கும் சிறு பிள்ளைகள் மனம் போனபடி நீட்டி நீட்டிப் பாடுகிறார்கள். அவற்றை எல்லாம் பாட்டு அல்ல என்று சொல்லிவிட முடியுமா? இசை இலக்கணம் தெரியாத காரணத்தால், பாட்டும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. குயிலுக்கு இசை இலக்கணம் தெரியாது. ஆனால் அதன் ஒலியைப் பாட்டு என்றுதானே சொல்கிறார்கள்.

இந்தக் கருத்தோடு பார்த்தால், உங்களுக்கும் இயற்கையாகப் பாட்டுத் தெரியும் என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் திருத்தமாகப் பேசியதற்கு முன்னமே பாடியிருக்கிறீர்கள். நீங்கள் மூன்று நான்கு வயதுக் குழந்தையாய் இருந்தபோது, உங்கள் அம்மாவிடம்போய், ஏதாவது வேண்டும் என்று கேட்டீர்கள். அப்போது "அம்மா, கொடு" என்று புத்தகத்தில் படிப்பதுபோல் கேட்கவில்லை. கைகால் ஆட்டிக்கொண்டும், கொஞ்சி அழுதுகொண்டும், சொற்களை நீட்டி நீட்டி, 'அம்மா அஅ, கொடூ உஉ' என்று கேட்டீர்கள். அவை எல்லாம் பாட்டுத்தான். இப்போது அந்தப் பாட்டை எல்லாம் மறந்துவிட்டீர்கள். பேசுவதிலே அக்கரையாக ஈடுபட்டிருக்கிறீர்கள். அதனால் பாட்டை மறந்துவிட்டீர்கள். மிகப் பழங்காலத்து மக்களும் அப்படித்தான். அவர்களும் சொற்களை நீட்டி நீட்டிப் பாட்டுப்போல் ஒலித்துக் கொண்டிருந்தார்கள். நாகரிகம் வளர்ந்தபிறகு, அந்த வழக்கத்தை விட்டுவிட்டு, ஒலிகளை அளவோடு நிறுத்திப் பேசத் தொடங்கினார்கள்.

ஆனாலும் இசையை அடியோடு துறந்துவிட மனிதனால் முடியவில்லை. காரணம் என்ன? மனிதனுடைய செவி ஒழுங்கான நயமான ஒலியைக் கேட்க விரும்புகிறது. அதற்குக் காரணம் மனிதனுடைய உடம்பே. உடம்பில் இரத்த ஓட்டம், நுரையீரலின் வேலை, இதயத்தின் தொழில் முதலிய எல்லாம் ஒருவகை ஒழுங்குமுறையோடு நடைபெறுகின்றன. அதனால் செவி நரம்புகளும் ஒழுங்கான ஒலியைக் கேட்கவே விரும்புகின்றன. ஆகையால், இசையில் பயிற்சி இல்லாதவர்களும் ஒழுங்கான ஒலிகளால் அமைந்த சொற்களைக் கேட்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட சொற்களையே பேசவும் விரும்புகிறார்கள்.

உதாரணம் பாருங்கள். நாம் பல வாக்கியங்களைப் பழமொழிகள் என்று சொல்கிறோம். 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்','கிட்டாதாயின் வெட்டென மற', 'யானைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒருகாலம்', 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' முதலான பழமொழிகளை எண்ணிப் பாருங்கள். என்னென்னவோ கற்றுக்கொண்டு மறந்துவிடுகிறோம். ஆனால் மறக்க வேண்டும் ந்ன்று நாமாகப் பாடுபட்டாலும் இந்தப் பழமொழிகளை மறக்க முடியவில்லை. காரணம் தெரியுமா? இந்தச் சொற்களில் உள்ள இசைதான் காரணம். ஒருவகை ஒலி நயமாக ஒழுங்காகத் திரும்பி வருகின்றது. இந்தப் பழமொழிகளை நீங்களே சொல்லிப் பாருங்கள். ஒழுங்கான ஒலிமுறை அமைந்திருக்கிறது அல்லவா? இதைத்தான் சொற்களின் இசை என்று சொல்லவேண்டும். இந்தச் சொற்களின் இசைதான் இவற்றை மறக்காமல் இருக்கச் செய்கிறது. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் பல சொற்கள் இப்படி இசையோடு அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சொற்களிலும் இப்படிப் பல உண்டு.

இப்படிப்பட்ட சொற்களில் வேண்டும் என்றே இசையை யாரும் அமைக்கவில்லை. பேசும் மக்களின் செவியும் வாயும் தம்மை அறியாமல் இப்படிச் சொற்களில் இசையை அமைத்துவிடுகின்றன. உதாரணமாகப் பாருங்கள்:'அல்ல' என்பது ஒரு சொல். 'இல்லை'என்பது மற்றொரு சொல். இலக்கணப்படி பார்த்தால், 'இல்லை' என்னும் சொல் 'இல்ல' என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் 'இல்லை' என்று மாறி அமைந்திருக்கிறது. "அல்ல" என்னும் சொல் 'அல்லை' என்று மாறவில்லை.காரணம் என்ன? 'அல்ல' என்னும் சொல்லில் முன்னும் பின்னும் ''-ஒலி இருக்கிறது. அதனால் ஒலி ஒத்துப் போகிறது. 'இல்ல' என்று சொன்னால், சொல் முதலில் ''-யும் முடிவில் ''-வும் இருப்பதால் ஒத்துப் போவதில்லை. அதனால், கடைசியில் உள்ள '', ''யாக மாறிவிட்டது. ''-யும் ''-யும் ஒத்துப்போகும் ஒலிகள். அதனால், 'இல்ல'என்று சொல்வதைவிட,'இல்லை' என்று சொல்வது இனிமையாயிருக்கிறது. இதுபோலவே எத்தனையோ சொற்கள் இனிய ஒலி வேண்டும் என்று மாறி அமைந்திருக்கின்றன.

'அது' என்பது பெயர்ச்சொல். 'கு' என்பது, உருபு. 'அது+கு' = 'அதுக்கு' என்று ஆகவேண்டும். ஆனால், இடையிலே ஓர் ஒலியைச் சேர்த்து 'அதற்கு' என்று சொல்லுகிறோம். நாம்+கு=நாம்கு என்று சொல்லாமல்,நம்கு என்றும் சொல்லாமல், நமக்கு என்று சொல்கிறோம். அப்படியே, யான்கு, நீகு என்று ஒலிக்காமல், எனக்கு, உனக்கு என்று ஒலிக்கிறோம். மரம்+=மரமை, குளம்+கு=குளக்கு என்று யாரும் ஒலிப்பதில்லை. மரத்தை, குளத்திற்கு என்று இடையிலே ஒலிகள் சேர்த்து வழங்குகிறார்கள் இனிய ஒலியாக ஒலிக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக்கொண்டு இவ்வாறு சொற்களில் சில ஒலிகள் சேர்க்கப்படுகின்றன. இவைகளைச் சாரியைகள் என்று இலக்கணம் கற்றவர்கள் சொல்வார்கள். சொற்களில் இசை பொருந்த வேண்டும் என்று முன்னோர்கள் செய்த முயற்சியை இவற்றில் பாருங்கள்.

இப்படிப்பட்ட முயற்சி தமிழ்மொழியில் மட்டும் அல்ல, ஏறக்குறைய எல்லா மொழிகளிலுமே உண்டு. தெலுங்கு மொழியில் சொற்கள் எல்லாம் இனிமையான இசையை உடையவை என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் அந்த மொழி தேன்போன்றமொழி, தேனுகு, தெனுகு, தெலுங்கு என்று பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள். தமிழர்களாகிய நாமும் நம் தாய்மொழியைப் பற்றி இப்படித்தான் சொல்கிறோம். தமிழ் என்றாலே இனிமை என்று பொருள் கூறுகிறோம். ஏறக்குறைய எல்லா மொழியாரும் இப்படியே தம்தம் மொழியைப் பாராட்டிக்கொள்கிறார்கள்.

நாட்டுக்கு நாடு இசை வேறு வேறாக இருக்கிறது. இசைக் கருவிகளும் வேறு வேறாக உள்ளன. எவ்வளவு வேற்றுமை இருந்தபோதிலும் எல்லாம் இசைதான். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் ஒழுங்கான ஒலி அமைந்திருக்கிறது. தமிழர்களுக்கு விருப்பமானது புல்லாங்குழல் இசை. மேற்கு நாட்டார்க்கு விருப்பமானது பியானோ இசை. மேற்கு நாட்டார்க்கு விருப்பமானது பியானோ இசை. பியானோ இல்லையே என்று தமிழர்கள் வருந்தவேண்டிய தில்லை. குழல் இல்லையே என்று மேற்கு நாட்டார்கள் வருந்த வேண்டியதும் இல்லை. அதுபோலவே, ஒவ்வொரு மொழிக்கும் தனிச்சிறப்பாக ஒவ்வொருவகை இனிமை அமைந்திருக்கிறது. தமிழ்ச் சொற்களிலும் அப்படிப்பட்ட தனி இனிமை இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் 'ஓட்' என்று சொல்கிறார்கள். தமிழர்கள் அதை 'ஓட்டு' என்றுதான் சொல்கிறார்கள். தமிழில் பல சொற்கள் இப்படி '' என்று முடிகின்றன. ஆங்கிலச்சொற்கள் அப்படி முடிவதில்லை. ஆங்கிலத்தில் உள்ள எண்ணுப் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள். ஒன் (one), போர் (four), பைவ் (five), சிக்ஸ் (six), செவன் (seven), எய்ட் (eight), நைன் (nine), டென் (ten) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். இவை மெய்யெழுத்தில் முடிகின்றன. தமிழில் உள்ள எண்ணுப் பெயர்களைப் பாருங்கள். எல்லாம் '' என்று முடிகின்றன. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து - இவற்றில் இசை அமைப்பதற்காகவே இந்த '' ஒலி பயன்படுகிறது. தெலுங்கிலே இந்த ஒலி இன்னும் மிகுதியாகப் பயன்படுகிறது. கன்னு, மேமு, வாரு, வீரு, வாருலு, நேனு, மீரு, ஒகரு, இத்தரு முதலாக ஏறக்குறைய எல்லாச் சொற்களிலும் '' ஒலி சேர்த்து நயமாக ஒலிக்கிறார்கள்.

இதுபோல் எத்தனையோ வழிகளில் சொற்கள் இனிய ஒலி பெற்று வழங்குகின்றன. 'வருபார்கள்' 'உண்வார்கள்' என்று நாம் சொல்கிறோமா? இல்லை. 'வருவார்கள், உண்பார்கள்' என்று சொல்கிறோம். சில இடங்களில் '' ஒலி சேர்க்காமல், '' சேர்க்கிறோம்; வருவார், செய்வார், போவார் என்பவைபோல. வேறு இடங்களில் '' ஒலி சேர்க்காமல், '' ஒலி சேர்க்கிறோம்; உண்பார், தின்பார், இருப்பார், உடுப்பார் என்பவைபோல. செல் - சென்றார்கள், நில் - நின்றார்கள் என்று சொல்கிறோம். ஆனால் வில் - வின்றார்கள் என்று சொல்வதில்லை. விற்றார்கள் என்று சொல்கிறோம். போடு - போட்டார்கள் என்று சொல்கிறோம்; ஆனால் ஓடு - ஓட்டார்கள் என்று சொல்வதில்லை; ஓடினார்கள் என்று சொல்கிறோம். செய் - செய்தார்கள் என்று சொல்கிறோம். ஆனால், உண் - உண்தார்கள், தின் - திந்தார்கள் என்று சொல்வதில்லை; உண்டார்கள், தின்றார்கள் என்று சொல்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான சொற்களை எடுத்து எண்ணிப் பார்த்தால், இனிய ஒலி வேண்டும் என்ற காரணத்தால் சொற்கள் வெவ்வேறு வகையாய் அமைந்திருக்கின்றன என்பது தெரியும்.

இதுவரையில், பேச்சு வழக்கில் உள்ள சொற்களைப் பார்த்தோம். இசையோடு அமைந்த பாட்டுக்களைப் பார்ப்போமானால், சொற்களில் உள்ள இசை நயம் மிகமிகத் தெளிவாக விளங்கும். "செந்தமிழ் நாடென்ற போதினிலே - இன்பத் - தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் - தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு - சக்தி பிறக்குது மூச்சினிலே": போதினிலே - காதினிலே ; பேச்சினிலே - மூச்சினிலே: இந்தச் சொற்களில் உள்ள இசையைக் கேளுங்கள."கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக": இந்தக் குறளின் சொற்களில் உள்ள இசையையும் கவனியுங்கள். வந்த ஒலியே திரும்பத் திரும்ப வந்து ஒழுங்காக அமையும்போது தானாகவே இசை பிறக்கிறது. இப்படிப்பட்ட இசை நம்மை அறியாமலே நாம் பேசும் சொற்களில் அமைந்திருக்கிறது. இதைத்தான் சொல்லின் இசை என்று சொல்கிறோம்.

 

  மு.வரதராசன் படைப்புக்கள் சிலவற்றை பார்வையிட

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)