சொல்லின் இலக்கணம்

 

மண்வெட்டியில் மண்ணை வெட்டுவது இரும்புத் தகடுதான். அதில் உள்ள மரப்பிடி மண்ணை வெட்டவில்லை.ஆனால், மரப்பிடி இல்லாமல் மண்ணை வெட்ட முடியுமா? முடியாது. ஆகவே, மண்வெட்டியில் இரும்புத்தகடும் வேண்டும், மரப்பிடியும் வேண்டும். பயன் இல்லாதது என்று அந்த மரப் பிடியை விடக்கூடாது. சொற்களிலும் அதேபோல் பொருள் உள்ள சொற்களும் உண்டு; பொருள் இல்லாத சொற்களும் உண்டு. பொருள் இல்லாத சொற்கள் என்று சிலவற்றை நீக்கிவிட்டால் நன்றாகப் பேசவும் முடியாது; எழுதவும் முடியாது. மொழி பயன் இல்லாமல் போகும். உதாரணம் பாருங்கள்; 'அண்ணன் தம்பியைக் கண்டான்' என்பது ஒரு வாக்கியம். அந்த வாக்கியத்தில் மூன்று சொற்கள் உள்ளன.அண்ணன், தம்பி, கண்டான் என்பவை அந்த மூன்று சொற்கள். அந்த மூன்று சொற்களுக்கும் பொருள் உண்டு. ஆனால், 'தம்பியை' என்பதில் உள்ள '' என்பது என்ன? அதற்குப் பொருள் உண்டா? '' என்றால் யானையா, பூனையா? பெயரா? வினையா? ஒன்றும் சொல்ல முடியாது. அப்படியானால் பயன் இல்லாதது என்று அதை விட்டுவிடலாமா? அதுவும் முடியாது, விட்டுவிட்டால்,'அண்ணன் தம்பி கண்டான்' என்று சொல்லவேண்டும். அப்படிச் சொல்லும்போது,யார் யாரைக் கண்டார் என்பது தெரியவில்லை. பேசியும் பயன் இல்லாமல் போகிறது: எழுதியும் பயன் இல்லாமல் போகிறது. ஆகவே, இன்னது என்று தெரியாத அந்த '' கட்டாயம் வேண்டியதாக இருக்கிறது. இதுவும் ஒரு சொல்தான். இதுபோன்ற எத்தனையோ சொற்கள் மொழிக்குப் பயன்படுகின்றன. இவற்றை எல்லாம் இடைச்சொல் என்று சொல்வார்கள். இவற்றைக் கற்றுக்கொடுக்கும் பாடம் இலக்கணம் என்று சொல்லப்படும்.

ஆனால், இலக்கணம் என்ற பெயரைக் கேட்டால், உங்களில் பலர் பயப்படுகிறீர்கள். இலக்கணத்தைப் பற்றிக் கேட்டாலும் பயப்பட வேண்டியதில்லை; கண்டாலும் பயப்படவேண்டியதில்லை. அது நம்மை ஒன்றும் செய்யாது. முன்னோர்கள் இப்படிப் பேசினார்கள், இப்படி எழுதினார்கள் என்று நமக்குத் தெரிவிப்பது இலக்கணம். ஆகவே, அதைத் தெரிந்துகொண்டால் நல்லதுதானே? வீட்டின் எதிரில் பெண் ஒருத்தி கோலம் போடுகிறாள். அவள் தன் கையில் இருக்கும் மாவை அவசரக் கோலமாக அள்ளித் தெளிக்கவில்லை. முன்னமே எண்ணிக்கொண்டு, திட்டமிட்டு, அங்கங்கே புள்ளிகளை வைத்து, பிறகு வளைவுவளைவாகக் கோடுகளை இழுக்கிறாள். அதன் பிறகு பார்த்தால், கோலம் அழகாகத் தெரிகிறது. முன்னமே திட்டம் இட்டுப் பழகாவிட்டால், அவளால் என்ன செய்ய முடியும்? கொண்டுவந்த மாவைக் கண்டபடி கொட்டிவிட்டுப் போகவேண்டியதுதான், கோலம் போடுவதற்கு எப்படித் திட்டம் பயன்படுகிறதோ, அதேபோல் சொற்களைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இலக்கணம் பயன்படுகிறது. ஆனால், இலக்கணம் வேண்டுமே என்று கவலைப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. மற்றவர்களைப்போல் பேசியும் எழுதியும் பழகிவிட்டால் இலக்கணம் தானே வந்துவிடும். கோலம் போடுகிற பெண் எப்படிப் போடுவது என்று கவலையோடு நிற்பதில்லை. மற்றவர்கள் போடுவதைப் பார்க்கிறாள்.அவர்களைப் போல் தானும் போடுகிறாள். முதலில் கொஞ்சம் தடுமாறுகிறாள். பிறகு, பழகப் பழகத் திறமை பெற்று விடுகிறாள். அதன்பிறகு, அவள் அறியாமலே அவளுடைய கை மாவை எடுத்து அழகான கோலங்களைப் போட்டுவிடுகிறது. அதுபோலவே, நீங்களும் நன்றாகப் பேசவும் எழுதவும் பழகிவிட்டால் உங்களை அறியாமலே இலக்கணத்தில் வல்லவர்கள் ஆகிவிடுவீர்கள்.

இன்னொன்று சொல்கிறேன். படித்தவர்களுக்குத்தான் இலக்கணம் தெரியும் என்று நீங்க்ள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. படிக்காத மக்களூம் பேசுகிறார்கள் அல்லவா? ஆகவே, அவர்களுக்கும் இலக்கணம் தெரியும். "அண்ணனும் தம்பியும் வந்தான்" என்று படிக்காதவர்கள் யாராவது பேசுகிறார்களா? "அண்ணனும் தம்பியும் வந்தார்கள்" என்றுதான் அவர்களூம் பேசுகிறார்கள். "நாளைக்கு வந்தேன்","நேற்று வருவேன்" என்று படிக்காதவர்களிடம் சொல்லிப் பாருங்கள். அவர்கள் சிரிப்பார்கள். "மரம் விழுந்தான்", அவர்கள் வந்தது என்று சொல்லிப் பாருங்கள். "உங்களுக்குத் தமிழே தெரியவில்லை" என்று சொல்லிவிடுவார்கள். திணை, பால், எண், இடம் முதலான இலக்கணங்கள் உங்களுக்கு மட்டும் தெரியும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் நீங்கள் பிழையாகப் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், இலக்கணத்தில் சில பகுதிகள், படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு நன்றாகத் தெரியும். இலக்கணம் அறிந்தவர்கள் சைக்கில் விடுகின்றவர்களைப் போன்றவர்கள் சைக்கில் செய்கின்றவர்களைவிடச் சைக்கில் விடுகின்றவர்களுக்கு அதனுடைய அருமை பெருமைகள் நன்றாகத் தெரியும். உதாரணம் சொல்லட்டுமா? படித்தவர்களில் சில பேர் எழுதும்போது, "அப்போது ஒருவள் வந்தாள்" என்று எழுதுகிறார்கள். 'ஒருவள்' என்னும் சொல், தமிழில் இல்லாத சொல்; தவறான சொல். நாட்டுப்புறத்து மக்கள் யாரும் 'ஒருவள்' என்று பேசவே மாட்டார்கள். இது படித்தவர்கள் சிலர் செய்யும் தவறு. உதாரணம் இன்னொன்று பாருங்கள், படிக்காதவர்கள் பேசும் போது,'முயற்சி செய்கிறான்' என்றுதான் பேசுகிறார்கள். படித்தவர்கள் சிலர் பேசும்போதும் எழுதும்போதும் 'முயற்சிக்கிறான்' என்று குறிப்பிடுகிறார்கள். அதுவும் தமிழுக்கு ஒத்துவராத பிழையான சொல்தான். இப்படி எத்தனையோ உதாரணம் சொல்லலாம்.

"படிக்காதவர்களுக்கும் இலக்கணம் தெரிகிறதே, அது எப்படி?" என்று நீங்கள் கேட்கலாம். பலரும் பேசிப் பேசி, இந்தச் சொல்லை இன்ன இடத்தில் இப்படித்தான் வழங்கவேண்டும் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டு விடுகின்றது. அந்தச் சொற்களைப் பேசக் கற்றுக்கொள்ளும்போதே, அவற்றின் அமைப்பும் மனத்தில் பதிந்துவிடுகின்றது. அந்த அமைப்புத்தான் இயற்கையான இலக்கணம். 'அவர்கள்' என்னும் சொல் பலரைக் குறிக்கின்றது. அதோடு வினைச்சொல்லைச் சேர்க்கும்போது, பலரை உணர்த்தும் வினைச்சொல்லையே சேர்க்கிறார்கள். அதனால்தான் 'அவர்கள் வந்தது' என்று சொல்லாமல்,'அவர்கள் வந்தார்கள்' என்று சொல்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தெளிவுபடுத்துவதற்குத்தான் இலக்கணம் எழுதியிருக்கிறார்கள். திணை, பால், எண், இடம், வேற்றுமை, காலம், முற்று, எச்சம், எழுவாய், பயனிலை முதலான பெயர்களைவைத்துச் சொற்களின் இலக்கணத்தை ஆராய்கின்றார்கள். எழுவாயின் திணைபால், பயனிலையின் திணை பாலோடு ஒத்திருக்கவேண்டும் என்றும், இன்ன வேற்றுமை உருபு இப்படி முடியவேண்டும் என்றும், எச்சம் இவ்வாறு முற்றோடும் பெயரோடும் முடியவேண்டும் என்றும் பலவாறு விரிவாக எழுதியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் கற்றுக்கொண்டால் நல்லதுதான். சைக்கில் ந்ன்றாக ஓட்டக் கற்றுக் கொண்டவன், சைக்கில் எப்படிச் செய்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான் அல்லவா? அதுபோல், நீங்கள் பேசியும் எழுதியும் பழகிய தமிழ்ச்சொறகள் என்ன இலக்கணத்தோடு அமைந்திருக்கின்றன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுங்கள். ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணம் ஒவ்வொரு வகையாக இருக்கும்.மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது எவ்வளவோ வேடிக்கையான உண்மைகள் எல்லாம் தோனறும்.

அவைகள் இருக்கட்டும். குழந்தைகள் பேசுகிற பேச்சையும் நாம் பேசுகிற பேச்சையும் ஒப்பிட்டுப்பாருஙகள். நாம் 'எனக்கு' என்று சொல்கிறோம். குழந்தை 'நானுக்கு' என்று சொலகிறது. நாம் 'உனக்கு' என்று சொல்வதை குழந்தை 'நீக்கு' என்று சொல்கிறது. அதே குழந்தை வளர்ந்த பிறகு, நானுக்கு நீக்கு முதலான சொற்கள் தவறானவை என்று தெரிந்து கொள்கிறது. மற்றவர்கள் 'எனக்கு, உனக்கு' என்று பேசுவதைக் கவனிக்கிறது. தன்னைத்தானே திருத்திக்கொள்கிறது.பிறகு, நம்மைப் போலவே 'எனக்கு, உனக்கு' என்று தவறு இல்லாமல் பேசுகிறது.அந்தத் தவறு எப்படித் திருந்தியது? இலக்கணம் படித்து அதனால் திருந்த வில்லை. மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு அவர்களைப் போல் பேசி மதிப்புப் பெற வேண்டும் என்ற ஆசையால் திருந்தியது. சின்ன குழந்தை தலைமயிரைச் சரியாக வாரிக்கொள்வ தில்லை. முகத்தையும் நன்றாகக் கழுவிக்கொள்வ தில்லை. ஆனால் வளர்ந்த பிறகு, மற்றவர்கள் ஒழுங்காக அழகுபடுத்திக்கொள்வதைப் பார்த்துத் தானும் தலைமயிரை வாரிக்கொள்கிறது; முகத்தையும் அழகு படுத்திக் கொள்கிறது. மற்றவர்களைப் போல் ஒழுங்காக, மதிப்போடு வாழவேண்டும் என்ற பழகிய தமிழ்ச் சொற்கள் என்ன இலக்கணத்தோடு அமைந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுங்கள். ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணம் ஒவ்வொருவகையாக இருக்கும். மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது எவ்வளவோ வேடிக்கையான உண்மைகள் எல்லாம் தோன்றும்.

அவைகள் இருக்கட்டும். குழந்தைகள் பேசுகிற பேச்சையும் நாம் பேசுகிற பேச்சையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம்'எனக்கு' என்று சொல்கிறோம். குழந்தை' நானுக்கு' என்று சொல்கிறது. நாம் 'உனக்கு' என்று சொல்வதைக் குழந்தை'நீக்கு' என்று சொல்கிறது. அதே குழந்தை வளர்ந்த பிறகு, 'நானுக்கு' 'நீக்கு' முதலான சொற்கள் தவறானவை என்று தெரிந்துகொள்கிறது. மற்றவர்கள் 'எனக்கு, உனக்கு' என்று பேசுவதைக் கவனிக்கிறது. தன்னைத் தானே திருத்திக்கொள்கிறது. பிறகு, நம்மைப் போலவே 'எனக்கு, உனக்கு' என்று தவறு இல்லாமல் பேசுகிறது. அந்தத் தவறு எப்படித் திருந்தியது? இலக்கணம் படித்து அதனால் திருந்தவில்லை. மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு அவர்களைப் போல் பேசி மதிப்புப் பெறவேண்டும் என்ற ஆசையால் திருந்தியது. சின்ன குழந்தை தலை மயிரைச் சரியாக வாரிக்கொள்வ தில்லை. முகத்தையும் நன்றாகக் கழுவிக்கொள்வ தில்லை. ஆனால், வளர்ந்த பிறகு, மற்றவர்கள் ஒழுங்காக அழகுபடுத்திக்கொள்வதைப் பார்த்துத் தானும் தலைமயிரை வாரிக்கொள்கிறது; முகத்தையும் அழகு படுத்திக்கொள்கிறது. மற்றவர்களைப் போல் ஒழுங்காக, மதிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசைதான் அதற்குக் காரணம். சொற்களைப் பேசும்போதும், இந்த ஆசைதான் திருத்தமாகப் பேசச் செய்கிறது. அதனால்தான் சொற்களின் இலக்கணம் மக்களுக்கு இயல்பாகத் தெரிந்ததாகி விடுகிறது.

சொற்களின் இலக்கணத்தைப் பொறுத்த வரையில், இன்னொன்று கவனிக்கவேண்டும். குழந்தைகளின் பேச்சில் தவறு உண்டு என்றும்,வளர்ந்த மக்களின் பேச்சில் தவறு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அவர்-அவர்க்கு,இவர்-இவர்க்கு, தாய்-தாய்க்கு என்பவை போல, நீ-நீக்கு, நான்- நானுக்கு என்று சொல்லவேண்டும். அதுதான் பொருத்தம். குழந்தை ஒன்று பேசும்போது பிழை கண்டு பிடிக்கிறோம். உனக்கு,எனக்கு என்று சொல்லித் திருத்துகிறோம். உண்மையாகப் பார்த்தால், உனக்கு,எனக்கு என்ற சொற்கள் தவறாக மாறிவிட்ட சொற்கள் என்பதை உணரலாம். ஆஙகில நாட்டிலும் 'கோ' (go), பய்(buy) முதலான சொற்களின் இறந்த காலமாக வெண்ட் (went), பாட்(bought) என்று சொல்லாமல் கோய்ட்(goed), பய்ட்(buyed) என்று ஆங்கிலேயக் குழந்தைகள் பேசுகின்றனவாம். வளர்ந்த மக்கள் பேசும் வெண்ட்,பாட் என்னும் சொற்கள் ஒழுங்கு இல்லாமல் தோன்றியபோதிலும், அவை களையே குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்.' செல்வாக்கு உள்ளவர்கள் பேசும் சொறகளே சொற்கள். கஜக்கோல்,படி முதலியவை போலச் சொற்களின் இலக்கணத்தை அளந்து தரக்கூடிய பொதுவான கருவி ஒன்று இல்லை. இங்கே, பெரும்பாலோர் இட்டதே சட்டம்.அதைத்தான்மரபு' என்று சொல்கிறார்கள். இது இலக்கணத்தில் ஒரு முக்கியமான பகுதி. நாய்க்கன்று, பசுக்குட்டி என்று சொல்லாமல் நாய்க்குட்டி, பசுங்கன்று என்று சொல்லியாகவேண்டும்.

இப்படிச் சொற்களின் இலக்கணத்தில் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டியவை உள்ளன. ஆனால் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. கற்றவர்கள் பேசுவதைப் பார்த்துப் பேசுங்கள்; கற்றவர்கள் எழுதுவதைப் பார்த்து எழுதுங்கள். உங்களை அறியாமலே இலக்கணம் உங்கள் மனத்தில் பதிந்துவிடும்.

 

  மு.வரதராசன் படைப்புக்கள் சிலவற்றை பார்வையிட

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)