நீலாவணன்:

பெயர்: கே. சின்னத்துரை
பிறந்த இடம்: நீலாவனை, மட்டக்களப்பு
(31.06.1931)
புனைபெயர்கள்: நீலா – சின்னத்துரை, நீலவண்ணன், எழில்காந்தன், இராமபாணன், சின்னான் கவிராயர், வேதாந்தி

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, காவியம். கட:டுரை, விருத்தாந்த சித்திரம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • வழி - 1976
  • ஒத்திகை
  • ஒட்டுறவு

நாவல்:

  • வேளாண்மை - 1982

விருதுகள்:

  • வழி – கவிதைத் தொகுப்பு - இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - 1976

இவர் பற்றி:

  •  ஈழத்து கவிஞர்களுள் முக்கியமானவர். பிரபல ஈழத்து கவிஞர்களான மஹாகவி, முருகையன் ஆகியவர்களது சமகாலத்தவர். சித்தாயுள்வேத வைத்தியர் திரு கேசகபிள்ளை, திருமதி கே.தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். பிறந்த ஊரின் மீது கொண்ட பற்றுக்காரணமாக 'நீலாவணன் என்ற புனைபெயரில் எழுதிவந்தார். ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்தவர். சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதைகள் எழுதத் தொடங்கியவர். 1948 இல் எழுதத் தொடங்கிய நீலாவணன் சுதந்திரன் பத்திரிகையில் எழுதிய 'பிராயச்சித்தம்' என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். இவரது முதல்கவிதை சுதந்திரன் பத்திரிகையில் 'ஓடி வருவதென்னேரமோ?' என்னும் தலைப்பில் வெளியானது. கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்து பல இலக்கியப் பணிகள் புரிந்தார். கவி அரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவு விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுத்தாளர் சந்திப்புகள் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கத்தால் இவரின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டன. 1962 இல் நடத்தப்பட்ட இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, 'மழைக்கை' கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கம் நடாத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகவும். இலக்கிய நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துள்ள பசுமை நினைவுகளாகவும் மிளிர்கின்றன. 'மழைக்கை' கவிதை நாடகம் கிழக்கிலே முதல்முதல் மேடையேறிய கவிதை நாடகம். இதில் நீலாவணன் குந்திதேவியின் பாத்திரமேற்று நடித்தார். 'பாடும் மீன்' இதழை ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். இவருடைய கவிதைகள் ஓசைநயம் துள்ளும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இன்பம் தரும் லயம். தாளமும் அமைந்த சந்தக் கவிதைகளை ஆக்கினார். நளவெண்பா பாடிய புலவன் புகளேந்தியின் பெயர் தமிழுலகில் 'வெண்பாவிற்புகழேந்தி' என்று நிலைத்துவிட்டது போல் - ஈழத்து இலக்கிய உலகில் 'வெண்பாவிற் பெரியதம்பி' என்று புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை பேர் பெற்றது போல் 'சந்தக்கவிதைக்கு நீலாவணன்' என்ற சங்கதியும் எழுத்துலகில் நிலைத்து நிற்கும். வேகமும், தீவிரமும், முன்கோபமும் இவர் இயல்பான குணங்களெனினும் மனிதநேயப் பண்பும், நகைச்சுவை உணர்வும் நீல்hவணனிடம் நிறைந்திருந்தன. மட்டக்களப்பில் வழங்கும் கிராமிச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்கள் நீலாவணன் தன் கவிதைகளில் பதிவுசெய்துள்ளார். மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய் விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக்கூடியவை. நீலாவணனுடன் நெருக்கமாயிருந்த ஏனைய சமகால இலக்கிய நண்பர்களாக எஸ்.பொன்னுத்துரை, இளம்பிறை எம்.ஏ.றஃமான், அண்ணல், இலங்கையர்கோன், ராஜபாரதி, மண்டூர் சோமசுந்தரப்பிள்ளை, வ.அ.இராசரத்தினம், கனக செந்திநாதன், ஏ.ஜே.கனகரத்னா, மஹாகவி ஆகியோர் இருந்துள்ளனர். 11.01.1975 இல் இயற்கை எய்தினார்.