சாருமதி:

பெயர்: க.யோகநாதன்
புனைபெயர்: சாருமதி
பிறந்த இடம்: மூளாய், யாழ்ப்பாணம்
(26.10.1947 – 28.09.1998)

படைப்பாற்றல்:  கவிதை, கட்டுரை

இவர் பற்றி:
  • ஆரம்பக் கல்வியை வண்ணார்ப்பண்ணை நாவலர் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி( தற்போதைய இந்துக் கல்லூரி) ஆகியவற்றில் கற்றார். 1960 களில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த வசந்தம் என்ற சஞ்சிகையில் இவரது முதலாவது படைப்பு வெளியானது. கம்யூனிசக் கட்சி ஈடுபாட்டுடன் மாக்சிச லெனினிச சித்தாந்தங்கலளை உள்வாங்கியதாக இவரது எழுத்துக்கள் பரிணமித்தன. அப்போது இக்கொள்கைகளை ஆதரித்து வெளிவந்த மனிதன், செம்மலர்,  தேசாபிமானி முதலான சஞ்சிகைகளில் தீவிரமாக எழுதினார்.
    90 களின் ஆரம்பத்தில் வயல் என்ற சஞ்சிகையை நடத்திவந்தார். மக்கள் இலக்கிய செல்நெறியை சிதையாதவகையில் முன்னெடுப்பதிலும் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுகின்ற பணியினை இச் சஞ்சிகை சிறப்பாகவே ஆற்றி வந்துள்ளது. 6 இதழ்களே வெளிவந்த போதும் மக்கள் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான பங்களிப்பினை நல்கியுள்ளது. சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இலக்கிய கர்த்தாக்களின் படங்களைக் கொண்டு அலங்கரிக்கின்ற மரபினை தமிழகத்தில் 'சாந்தி' சரவஸ்தி போன்ற இதழ்கள் தோற்றுவித்தன. சாருமதியை ஆசிரியராக கொண்டு வெளிவந்த வயல் சஞ்சிகையும் இப்போக்கினை பின்பற்றியிருந்தன. சாருமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆசிரியராக கடமையாற்றியமையால் அமர்ந்த கருத்துக்களை முன்னெடுத்து செல்வதில் கூடிய கரிசனை காட்டினார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று பழமை பேணுவதே இலக்கிய கல்வியெனப் போதித்து வந்த பண்டிதர்களிடையே சாருமதியின் சமூகம் சார்ந்த பார்வை மாணவர்களிடையே புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தது. மாணவர்களுக்கு கலை இலக்கியம் சம்பந்தமான குறிப்புகள், புத்தகங்கள் என்பவற்றினை கொடுத்து உதவியதுடன் பின்னேரங்களில் மாணவர்கள் நண்பர்களுடன் கூடி கலந்துரையாடலை மேற்கொள்வதும் இவரது முக்கிய செயற்பாடுகளின் ஒன்றாக அமைந்திருந்தது. சாருமதியின் கட்டுரைகள் வயல், பூவரசு சஞ்சிகைகளில் தலைக்காட்டும். பழந்தமிழ் இலக்கிய பரிட்சயமும் நவீன இலக்கிய நோக்கும் சாருமதியில் ஆழமாகவே வேரூண்றியிருந்தது. சாருமதி அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், ஆற்றிய சொற்பொழிவுகள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்பன தொகுக்கப்பட்டு வெளியிடப்படல் அவசியமான ஒன்றாகும். இவை சாருமதி குறித்து முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு உதவும்.




Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).