குற்றியலுகரத் தூரம்

அனலை ஆறு இராசேந்திரம்



மிழ் எழுத்துக்கள் ஒலித்து நிற்கும் நேரத்தைப் பண்டைத் தமிழறிஞர்கள் மாத்திரை என்னும் அளவுகொண்டு கணக்கிட்டனர். இயல்பாகக் கண்ணிமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரம் மாத்திரை எனப்படும். இதன்படி தமிழ் நெடுங் கணக்கில், குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரையும் நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரையும் மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரையும் ஆய்தம் அரை மாத்திரையும் பெறும் என அவர்கள் குறித்துப் போந்தனர்.

ஆயினும் சில எழுத்துக்கள் சொற்களில் அவை அமைந்து நிற்கும் இடத்தைப் பொறுத்து, தமக்குரிய மாத்திரையிற் குறைந்தொலிப்பதையும் அவர்கள் கண்டனர். குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பவற்றை இத்தகு எழுத்துக்களாகத் தமிழிலக்கணம் வகைப்படுத்திக் காட்டுகிறது.

இவற்றில், ''குற்றியலுகரம் என்பது தனிக்குறில் எழுத்தல்லாத மற்றைய எழுத்துக்களின் பின்னே மொழியின் இறுதியில் வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் ஆகும்''

'நெடிலோ டாய்தம் முயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம்
அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே!.

                                                                                     
(சூத்.9)

என்று குற்றியலுகரம் பிறக்கும் இடங்களை நன்னூல் சொல்லும்.

குற்றியலுகரம் என்பது குறுமை
10 இயல் 10 உகரம் எனப் பிரிந்து (தனக்கேயுரிய இயல்பான மாத்திரையிற்) குறுகி ஒலிக்கும் உகரம் எனப் பொருள் தரும். இதன்படி கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு முற்றியலுகரங்களும் மேற்சொன்ன விதிக்குட்பட்டு வருங்காற் குற்றியலுகரங்களாகின்றன. இந்நாளிற் குற்றியலுகரப் பயன்பாடு மிகமிக அரிதாகி விட்டது. இலக்கணம்; கற்ற பெரும்புலவர்கள் கூட குற்றியலுகர உச்சிரிப்பைப் பேணுதல் செய்யாதாயினர். சென்னை இராச்சியம் என்னும் பெயர் தமிழ்நாடு அரசு எனப் பெயர் மாற்றப்பட்ட போது ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதனை எழுதுவதிற் கருத்து வேறுபாடு எழுந்தது. தமிழ், ஆங்கிலப் பெரும் புலமை மிக்கவரான மூதறிஞர் இராசாசி அவர்கள் ஆங்கில மரபுக்கேற்பவும் அதன் குற்றியலுகரப் பண்பு கருதியும் Tamilnaad என்று எழுதப்பட வேண்டும் என முதலமைச்சராயிருந்த அண்ணாவைக் கேட்டுக் கொண்டார் - சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் அதன் தற்கால உச்சரிப்புக் கேற்ப Tamilnaadu என்று எழுதப்பட வேண்டும் என்று வாதாடினார், ஈற்றில் அண்ணா அவர்கள் இராசாசி அவர்களின் வேண்டுகோளைப் புறந்தள்ளி ம.பொ.சி அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். தமிழ் இலக்கணம் கூறும் குற்றியலுகர உச்சரிப்பு முறையினைப் பேணி நின்ற இராசாசி கோரிக்கை புறந் தள்ளப்பட்டமை தமிழின் துறைபோன அறிஞர்களான அண்ணா, ம.பொ.சி. ஆகியோர் குற்றியலுகரப் பயன்பாடு வழக்கொழிந்தமை கருதி, அதன் பேணுகை வேண்டியதன்று எனக் கொண்டதே யாகும்.

இன்று குற்றியலுகரக் கோட்பாடு வெண்பாக்களின் இறுதிச் சீர் அமைப்பில் மாத்திரம் தமிழ்வாணர்களாற் பயன்படுத்தப்படுகிறது. இறுதிச் சீர் 'பட்டு' என அமையுங்காள் உகரம் குறுகி 'பட்ட்' என ஒலித்து நிற்பதாலேயே யாப்புக்கிணங்க அது ஓரசைச் சீராகக் கொள்ளப்படுகிறது என்பது கவனிக்கத் தக்கதாகும்.

காசு என்னும் தமிழ்ச்சொல் அதற்கான ஆங்கிலச் சொல் (
cash என்பது) போலவும் கொக்கு என்பது, ஆண் பறவையைக் குறிக்கும் (cock என்னும்) ஆங்கில சொல் போலவும் உச்சரிக்கப்பட வேண்டும். கட்டு, cut என்றவாறும் ஒத்து oath என்றவாறும் உச்சரிப்புப் பெறும். இவ்வாறு உச்சரிக்கப் படுங்கால் உகரம் முற்றாகத் தன் ஒலிப்பை இழந்து விடுவதில்லை. அரை மாத்திரை அளவில் அது ஒலித்து நிற்கும் என இலக்கண நூலார் கூறுவர். பராக்கு என்னும் குற்றியலுகரம் பராக்க்... என உச்சரிக்கப் படுங்கால் உகரம் ஒலிப்பதை நாமே அறியலாம். ஆங்கிலச் சொற்களில் ஒன்றிரண்டு எழுத்துக்கள் தம் ஒலிப்பை முற்றாக இழந்து அமைதி (silent) பெறுகின்றன. தமிழிற் குற்றியலுகரம் அமைதி பெறாது குறுகி ஒலிக்கிறது. இதனாற்றான், அது குற்றியலுகரம் என்னும் பெயர் பெற்றது என்பதை முன்னர்ச் சொன்னோம். ஈற்றயல் எழுத்தைக் கொண்டு குற்றியலுகரம் ஆறுவகையினதாகப் பிரிக்கப்படும். Philip, Smith, French என்னும் சொற்களை உச்சரிப்புக்கேற்ப பிலிப், சிமித், பிரெஞ் என எழுதுவதற்கு ப், த், ஞ் என்னும் மெய்கள் மொழியிறுதியில் வாரா என்னும் இலக்கணக் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. இலக்கண வழுவின்றியும் உச்சரிப்பில் மாற்றமின்றியும் இருத்தற்பொருட்டே பிலிப்பு, சிமித்து, பிரெஞ்சு என குற்றியலுகர மொழியிறுதி கொடுத்து எழுதும் வழக்கம் தமிழில் உண்டானது.

இத்தோடு, குற்றியலுகரம் பற்றிய சிந்தனையை நிறுத்தி, எடுத்துக் கொண்ட கவிதைக்கு வருவோம்.

துடியந்தனுக்கும் சகுந்தலைக்கும் திருமணம் நிகழ்ந்தாயிற்று. தன் கண்களினும் மேலாய்க் கருதிக் காத்த மகளைக் கணவனுடன் அவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கட்டம் கண்ணுவ முனிவரை நெருங்கியது. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவராகிய அவர், செல்லும் இடத்தில் நோவும் நோயும் இலாது மகள் அனைத்து வளங்களும் பெற்றுச் சிறப்புற வாழ வேண்டும் என்று நாளும் வாழ்த்தும் நம் தாய்மார் நிலையில் மனம் இறங்கி நின்றார்.

மகள் செல்ல வேண்டிய வழியின் தன்மையை எண்ணினார் முனிவர். ஆளைச் சுட்டெரிக்கும் மணல் வழியூடு சகுந்தலை நடக்க வேண்டியிருந்தது. கண்ணுக் கெட்டாத் தூரம் வரை நீண்டு பரந்து, வெட்ட வெளியென வெறிச்சோடிக் கிடந்த அம்மணற் பரப்பில் அவள் மேனியைச் சுடும் வெம்மையைப் போக்கி, தண்மை அளிக்கத் தக்க இயற்கை நலங்கள் எவையுமே காணப்படவில்லை. தாகத்திற்குக் கைகளால் மொண்டு நீர் அருந்திட சுனை ஒன்று கூட வழியில் இல்லாதிருந்தது.

கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளித்து உளத்திற்கு நலம் செய்யும் காட்சிகளோ இன்னொலியோ அங்கு கிடையாதனவாயிருந்தன.

இதனால், 'ஏதம் யாதுமின்றிக் கணவன் இருப்பிடம் சென்றுசேரும் வரை அவளுக்கு அனைத்து நலங்களும் ஏற்பட வேண்டும்' என்று முனிவர் ஆணை செய்வாராயினார்.

'சகுந்தலை செல்லும் வழிக்கண் பெருமரங்கள் மிகுந்து நிழல் செய்வனவாகட்டும்! வெப்பம் தகிக்கும் மணல் அவள் மெல்லடிகளுக்கு தாமரைப் பூவின் பொன்னிற இதழ்கள்போல் இதம் செய்யட்டும்! தூய வாவிகளில் நீர்ப்பூக்கள் மலர்வனவாக! தென்றல் காற்று நன்றே வீசுக! கண்ணுக்கினிய ஆடல் தரும் மயிலும் காதினுக்கினிய இசை தரும் குயிலும் அவளுக்கு வழித்துணையாகட்டும்! அவள் செல்ல வேண்டிய தூரம் ஆறுவகையாக பிரிக்கப்படும் குற்றியலுகரம் போல் அமையட்டும்!

மங்கையிவள் செலும்வழியில் நறுந்தருக்கள்
       நிழல்செய்து மலிக மற்றும்
பொங்குமணல் தாமரையின் பொலந்தாது
       போற்பொலிக புனித வாவி
எங்குமலர்ந் திலங்கிடுக மந்தமா
       ருதம்வீச இனிய தோகை
யுங்குயிலும் துணையாக அறுதொடர்க்கண்
       ணுகரம்போல் உறுக தூரம்


முனிவர் ஆணைகளை பூக்கொண்டு அடுக்கிய மாலைபோல் அழகு தமிழ்ப் பாவாய் வடித்துத் தந்தவர் நம் ஈழத்துப் பெரும்புலவர் பண்டிதர் ம.வே.மகாலிங்கசிவம் அவர்கள். இவர் உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்களின் மைந்தர் ஆவார். தந்தையாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பயின்று பெற்ற ஆழ்ந்த புலமையும் அற்புதமான கவித்துவ ஆற்றலும் மிக்கவர்.

வழியிடத்தே நலங்கள் அத்தனையும் அமைந்தாலும் செல்ல வேண்டிய தூரம் நீண்டது ஆதலின் சகுந்தலை களைப்படைந்து விடுவாள் என்று கண்ட முனிவர் 'தூரம் அரைவாசி ஆகட்டும்!' என்று ஆணையிட்டார். இதனை 'அறுதொடர்க்கண் உகரம்போல் உறுக தூரம்' என முனிவர் ஆணையிட்டதாய்ச் சொல்லும் புலவர் கவித்திறம் வியப்புக்குரிய தாகும். 'இயல்பாக ஒரு மாத்திரை அளவுடைய முற்றிய லுகரம் குற்றிய லுகரமாய் அரை மாத்திரை ஒலித்தாற் போல் அவள் செல்ல வேண்டிய தூரம், அரைவாசியாய்த் தோன்ற வேண்டும்' என்னும் உவமை கற்றோர்க்குக் களிப்பளிக்கும் தன்மையதாகும்.

இலக்கணக் கோட்பாடுகளை இலக்கியங்களில் எடுத்தாளும் போக்கு மிக அரிதானதே. அவ்வகையிற் புலவர் ம.வே.மகாலிங்கசிவம் அவர்களின் இப்பாடல் ஒரு 'மணி' எனப் போற்றத் தக்க சிறப்புக்குரியதாகும். மிகப் பரந்த தமிழ்க் கவிதை உலகில் இததகைய பாக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காணப்படுகின்றன. அழகிய செங்கல் மாளிகையில் பளிங்குங்கல் பதித்து கலையழகு செய்தாற்போல், செஞ்சொற்களாற் புலவர் கட்டிய கவிதை மாளிகைக்கு, அவர் எழுத்தாண்ட ''குற்றியலுகர உவமை'' ஒரு வைர முத்தாய்ப்பன்றோ!.
 



analaiaraj@hotmail.com