புரட்சித் தூது

அனலை ஆறு இராசேந்திரம்சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒன்றாகும். ஆக்குவோன் தன் கருத்துக்களைத் தூது செல்லும் பாத்திரத்தின் வாயிலாய்த் தங்குதடையின்றி வெளிப்படுத்த இடம் கொடுக்கும் ஓர் அற்புத இலக்கிய வடிவம் இது. இவ்வுண்மையை நன்குணர்ந்த புலவர் திருகோணமலை த.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் இயற்றியதே தத்தை விடு தூது ஆகும். ஏறத்தாள 125 ஆண்டுகளுக்கு முன் எழுந்த இவ்விலக்கியம், அன்றைய நம் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பெண் அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களையும் தகர்த்தெறியும் நோக்கில் அமைந்து 'புரட்சித் தூது' எனப் பாராட்டத்தக்க பெருமைக்குரியதாய் விளங்குகிறது. திறனாய்வுக் கலைப் பெருஞ்செல்வரான பேராசிரியர் முனைவர் க.கைலாசபதி அவர்கள் 'மகாகவி பாரதியார் இந்நூலைக் கற்றிருப்பார் என எண்ண இடமுண்டு' என்றும் 'அவர் சீர்திருத்தக் கருத்துக்கள் சரவணமுத்துப்பிள்ளை கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பிறந்திருக்கலாம்' என்றும் கூறியுள்ளார்.

காதல் மறுப்பு, பெண் அடக்குமுறை, கட்டாயத் திருமணம், பொருந்தாத் திருமணம், பெண் கல்வி மறுப்பு, பெண் பெருமை மறுப்பு முதலாம் தமிழர்தம் முன்னைய மூடக் கொள்ளைகள் இங்கே மறுத்துரைக்கப்படுகின்றன. தூது இலக்கியத்தின் மரபிலிருந்து சிறிது விலகி, சமூக சீர்திருத்தத்தைப் பாடுபொருளாய் முன்னெடுக்கும் புலவர் நூலின் பெரும்பகுதியை அத்தகைய கருத்துக்களை வலியுறுத்துவதற்கே பயன்படுத்தியுள்ளார்.

புலவர் எடுத்தாளும் கதை அந்நாளில் இயலுவதே ஆகும். தலைவனும் தலைவியும் இளம்பருவம் தொட்டு ஒன்றாகப் பழகி வந்தனர். இருவரும் வளர அவர்களுக்கிடையேயான நட்பும் வளர்ந்து காதலாய் விரிந்தது. பெண்ணின் பெற்றோர் தலைவன் வறிஞன் என்பதால் அவர்கள் காதலுக்குத் தடை போட்டனர். மகளைச் செல்வந்தன் ஒருவனுக்கு மணஞ் செய்து வைக்க முயன்றனர். இது கண்ட தலைவன் தன் மனத்துயரைத் தலைவிபாற் சொல்லி வருமாறு கிளி ஒன்றைத் தூது விடுகின்றான்.

தூது இலக்கியப் போக்குக்கிணங்க முதலிற் செஞ்சொற்களாற் கிளியைப் பாராட்டும் தலைவன், தன் சேதியைத் தலைவியிடம் கூறி உதவுமாறு பணிந்த மொழிகளால் வேண்டுகிறான்.

தேனேங்கு பூம்பொதும்பர் செறிந்து பசுந்தளை பரப்பி
வானோங்கு தேமாவில் வாழுமிளம் பைங்கிளியே
மானேங்கு மைவிழியென் வஞ்சியிடைப் பைந்தொடிபால்
நானீங்கு புகலுமொழி நற்கிளியே கூறாயே
நங்கையவள் பாற்சென்று நலம்பெறநீ கூறாயேஅடுத்து, அகத்திடை பொங்கிக் கொண்டிருந்த வேதனைகள் அனைத்தையும் அடுக்கடுக்காய்க் கிளிமுன் கொட்டத் தொடங்குகிறான் தலைவன். பழைய நினைவுகள் அவன் நெஞ்சில் எழுந்தன. தங்கள் இருவர்க்குமிடையேயான நட்புக்கு நீர் வார்த்து காதல் என்னும் நிலைக்கு வளரத்துவிட்ட அவள் பெற்றோர்களே அதற்கு மறுப்பாய் நிற்கும் கொடுமை அவனை வாட்டிற்று.

மல்லிகைசண் பகங்கோங்கு மந்தாரை வெட்சியுடன்
புல்லினமும் பலவளரும் பூம்பொழிலி லக்காலம்
மெல்லமெலப் பந்துகொடு விளையாடுங் காலவடாய்
சொல்லியது மறந்தனளோ சுகமே வினவுதியால்
தோகையெனைத் துறந்தனளோ சுகமே வினவுதியால்


இந்துநுதற் சந்தவளைச் சுந்தரியென் இன்னுயிர்பாற்
சந்துநடந் திளங்கிளியே தமியேன்சொற் கூறுதியால்
முந்திருவரும் சிறியேம் முன்றிலிலா டுங்காலம்
தந்தைமொழிந் திட்டதனைத் தவறுவதேன் வினவுதியால்
தானுமெனை மறந்தனளோ தத்தாஅய் வினவுதியால்


'கிளியே இளமை நாட்களிற் பூஞ்சோலையிலும் முற்றத்திலும் நாமிருவரும் விளையாடுவது கண்டு மகிழ்ந்த அவள் தாயும் தந்தையும் இருவர்க்கும் திருமணம் செய்து வைப்பதாகச் சொன்னார்கள். அவ்வார்த்தைகளை அவர்கள் இன்று மீறுவதேன்? என் காதலி என்னை மறந்தனளா? கைவிட்டனளா? கேளுதி' என்கிறான் தலைவன்.

புன்னிரண்டு ஆண்டுகள் பழகிய தலைவனைக் காண இயலாதவாறு தலைவியை வீட்டுச் சிறையில் வைத்தனர் அவள் பெற்றோர். இரக்கமில்லாதவர்களின் அச்செய்கை அவனைக் கவலைக்குள்ளாக்கிற்று. காவலைத் தகர்த்து அவளை மீட்க முடியாத தன் இயலாமையை எண்ணி எண்ணி இரங்குகிறான் அவன்.

பன்னிருயாண் டவளொடுயான் பயின்றிருந்து மிக்காலம்
கன்னிமுக நோக்கவிடார் கதவடைத்தார் கருணையிலார்
என்னிருகண் மணியணையாளை எனக்குரிய ளென்றிருந்தேன்
என்னேயென தெண்ண மின்றுபட்ட வாறந்தோ
ஏதிலனா யிங்கே இரங்குவல்யான் பைங்கிளியே


அன்றைய நாளிற் திருமணங்கள் பொருட்செல்வத்தைக் கணக்கிற் கொண்டே முடிவாக்கப்பட்டன. கல்விச் செல்வம் கணக்கில் எடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்ட வேதனையைக் கிளிக்குச் சொல்கிறான் தலைவன்.

செல்வமில்லை என்றுரைப்பர் சிந்தியார் மற்றொன்றும்
கல்வியெனும் செல்வம் கருதார் கருதாரால்
செல்வமோ இன்றிருக்கும் சென்றிடுமாம் நாளைமற்றக்
கல்வியொரு காலுமண்மேற் கற்றோர்ப் பிரிவிலதால்
கல்வி சிறந்ததன்றோ கழறாய் பதங்கிளியே.


கல்வி, செல்வம் முதலிய யாவினும் தலைவன் தலைவிக்கிடையேயுள்ள மனப்பொருத்தமே முதன்மையுடன் நோக்கப்பட வேண்டும்.

கல்விமிக இருந்தென் கணக்கில செல்வமிருந்தென்
மெல்லியற்கு நாயகன்மேல் விருப்பிலதேற் பைங்கிளியே
சொல்லரிய காதல்
துகடப வுள்ளொன்றி னன்றோ
நல்லார் மணம்புரிவர் நலம்பெறுவா ருண்மகிழ்வார்
நாரியர்பால் இம்மாற்றம் நவில்வா யிருஞ்சுகமே.


இங்கே 'இருமனம் கலந்ததே திருமணம்' என்னும் நம் முன்னோர் கொள்கை சொல்லப்படுகின்றது.

'தங்களுக்குத் தீங்கிழைக்கும் பெற்றோர் குறைகளைச் சுட்டிக்காட்டி, அதை மறுத்துப் பேசும் துணிவு பெண்களுக்கு ஏற்படவேண்டும். இதற்காக உலகம் அவர்களை ஒருபோதும் குறை சொல்லாது. கிளியே, தலைவியிடம் இதனைச் சொல்வாயாக'

தந்தைமொழி தலைவகித்துத் தாய்சொன்மொழி யுளம்பேணி
நந்தமக்குத் தீங்கிழைத்தல் நலமோ பசுங்கிளியே
மைந்தர்துயர் நோக்கார் மனமெழுந்த வாறுரைக்கில்
அந்தோ மறுத்த லவசியமாம் பைங்கிளியே
ஆருங் குறைசொல்வா ரறிவாய் பசுங்கிளியே


'வீட்டுக்கு ஒரு பசுமாடு வாங்க முற்படுங்கால், அதன் தரத்தைப் பலவிதமாகக் கணக்கீடு செய்தும் இறுதி முடிவு எடுக்க முடியாது மனம் குழம்புதல் மாந்தர் இயல்பாகும். அப்படியான நாம் ஆடவர் தகுதி பற்றிச் சிறிதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. கண்ணைக் கட்டிப் பூனையைக் காட்டில் விடுவது போல் பொருந்தாத் திருமணங்களுள் மங்கையரைத் தள்ளுகிறோம். பெண்கள் கல்விநலம் பெறுவதை வெறுக்கிறோம். அவர்களை வெளியுலகைத் தெரிந்து கொள்ளாதவாறு வீட்டுள் எப்போதும் அடைத்து வைக்கிறோம். இத்தகைய கொள்கைகளும் செயல்களும் மூடத்தனம் வாய்ந்தவை என தலைவிக்குச் சொல்லுதி கிளியே'

பலவாறாக, பெண்ணின விடுதலைக் கருத்துக்களைக் கூறிவந்த தலைவன் இறுதியாகத் தலைவி மேலான தன் காதல் பற்றிப் பேசுகிறான். 'இனிமையான மொழிபேசும் என் காதலியின் தாமரை விழிகளையும், கன்னங்களின் கவர்ச்சியையும், கனி இதழ்களையும், பின்னற் குழலையும், பிடலின் அழகையும். சொல்லவொண்ணா அருங்சிரிப்பையும் என்னால் மறக்கவே முடியாது. அவளின் அன்ன நடையும், மயில்போலும் ஒயிலும், கொடியிடையும், கொவ்வைக் கனிப் பேச்சும், சிலப்பொலியும், முல்லை மணமும் என் நினைவினின்று அகலவே மறுக்கின்றன. ஆதலாற்

கொங்கலர்பூஞ் சோலைவளர் மாங்கிளியே கோதையிடம்
நங்காய்நிற் காதலித்தே நலிவான் மெலிவானால்
தங்கா துயிரென்றான் தானின் சரணென்றான்
நங்கா யிரங்கெனவே நவில்வாய் பசுங்கிளியே
நாரியர்பால் என்னிலையை நவில்வாய் பசுங்கிளியே


எனத் தலைவியிடம் தன்னை முற்றாக இழந்து நிற்கும் நிலையை வெளிப்படுத்தி தூதினை முடிக்கின்றான் தலைவன்.

பெண்ணின விடுதலைக் குரலாய் எழுந்த தத்தை விடு தூது, அதற்குரிய கவனிப்பும் பெறுமதியும் பெறாதுபோயினமை தமிழர் நற்பேற்றின்மையே ஆகும். சமூக மூடத்தனத்திற்குச் சாட்டை அடிகளாய் விழுந்த புலவர் கவிதைகள் ஒவ்வொன்றும் பொன்போற் பேணப்பட வேண்டியனவாகும். கூண்டுக்கிளியாய், அடுப்படி அடிமைகளாய், பிள்ளை பெறும் எந்திரங்களாய் விளங்கிய தமிழ் மகளிர் குலம் சரவணமுத்துப்பிள்ளை, மகாகவி பாரதியார் போன்ற புலவர் பெருமக்களின் புரட்சிக் கருத்துக்களாலேயே விடிவு நோக்கி நடைபோடத் தொடங்கிற்று என்பது வரலாற்று உண்மையாகும். நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், அஞ்சாமையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் உடையராய் இன்று பெண்குலம் பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் விதி எழுதிய புலவர் சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் தமிழ் மக்கள் வரலாற்றில் மறுமலர்;ச்சியாளர் வரிசையில் வைத்துப் போற்றும் பெருமைக்குரியவராவார்.


analaiaraj@hotmail.com