சந்தனப் பாவையர்

 

அனலை ஆறு இராசேந்திரம்

 

ரண்டாயிரம் ஆண்டுகளின் முன் ஒரு நாள் ,தமிழகத்து வீதியொன்றில்நடந்து கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி. அவள் நடையில் விரைவும், முகத்தில் எதையோ இழந்துவிட்ட சோகமும் தெரிந்தன. நீண்டு தொடரும் வீதியில் 'எங்கு செல்வது' என்னும் குறிக்கோள் இல்லாதவளாய் அவள் நடந்தாள். எதிரே வருவோர் முகங்களை உற்று நோக்கியவளாய்ச் சென்ற அவளிடம் எதையோ அறிந்து விடவேண்டும் என்னும் ஆவல் மிக்கிருப்பது தெரிந்தது. சில மணித் துளிகள் தான் அவள் நடந்திருப்பாள். எதிரேபெரியவர் ஒருவர் வந்தார். அவர் திருமுகத்தில் அன்பின் ஒளியும், அறிவின் ஆழமும், பண்பின் படிவும், வாழ்வின் தெளிவும் தெரிந்தன. பார்த்த மாத்திரத்திலேயே, அப்பழுக்கில்லா, சான்றோனாய்த் தோன்றிய 'பெருங்கடுங்கோ' என்னும் அச் செந்தமிழிப் புலவரை'ஐயா என விளித்தாள் அவள்.
 

குரலைக் கேட்டு தன் நடையையும்,சிந்தனையையும் நிறுத்தியவராய்'பெண்ணே உனக்கு யாது வேண்டும்' என்றார் புலவர்.
 

'இவ்வழி என் மகள் இளைஞன் ஒருவனுடன் செல்வதைக் கண்டீர்களா?, எனக் கவலை தோய்ந்த குரலிற் கேட்டாள் அப்பெண்.
 

 மகள் காதலனுடன்  யாரும் அறியாது ஊரைவிட்டுச் சென்ற பிரிவுக்கு ஆற்றாது,அவளைச் தேடிச் செல்லும் தாயின் சோகத்தைப் புரிந்து கொண்டார் புலவர்.
 

அவளைப் பார்த்து 'நான் சொல்வதை கவனமாகக் கேள்' என்றவராய்ப் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்.
 

'பலவுறு  நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே
பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்
நினையுங்கால்
நும்மகள் நுமக்கும்ஆங்கனையளே'

                                                         (கலித்தொகை பாலைக்கலி  8-அடிகள் 12-14

 

புலவர் யாது சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவளாய் விளித்தாள் தாய்.


 'விளங்கவில்லையா'
 

ஆம் என்பதற்கு அடையாளமாக தலையசைத்தாள் அவள்.
 

'நானே புரியும்படி விளக்கிச் சொல்கின்றேன்'என்றவராய் தொடர்ந்தார் புலவர்.
 

பேண்ணே, சந்தன மரம் மலப்புறத்தே வளர்கிறது.ஆனால் அது மலைக்குச் சிறிதளவும் பயன்படுவதில்லை,பூசிக் கொள்வோர்க்கே பயன்படுகிறது. சிந்தித்துப் பார்த்தால் நின் மகளை நீயே ஈன்று வளர்த்திருந்தாலும், அவள் நினக்கு உரியவள் அல்லள், காதலனுக்கே உரியள்.
 

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்
தேருங்கால்
நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே'

                                                                        (கலித்தொகை-பாலைக்கலி-8 அடிகள் 15-17)
 

'முத்து கடலிற் பிறக்கிறது ,கடலுக்கு அதனால் யாதுபயன்? அணிந்து அழகு செய்பவர்க்கே அது பயன் படுகின்றது. ஆராய்ந்து பார்ப்பின் நின்மகளும் நினக்குப் பயன்படுபவள் அல்லள். அவள் காதலனுக்கே உரியள்.'
 

'ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே
பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்
சூழுங்கால்
நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே'

                                                                            (கலித்தொகை-பாலைக்கலி-8- அடிகள் 18-20)
 

இசை யாழிலிருந்து பிறக்கிறது,அவ்விசையால் யாழ் பெறும் பயன் யாதுமில்லை. மீட்டிச் சுவைப்போர்க்கே அது பயனாகிறது, அவ்வாறே, நின்மகளும் நினக்குரியவள் அல்லள். அவள் காதலனுக்கே உரியள்.

 

மூன்று தாழிசைப் பாக்களால் அவர் எடுத்துச் சொன்ன உண்மையை நெஞ்சிற் பதித்தாள் தாய்; புலவர் வடித்துத் தந்த பாக்கள் விலை மதிக்கவொண்ணா மூன்று முத்துக்கள் எனத் தெளிந்தாள்.சிந்தனைத் திறத்தாற் சிறந்து நின்ற அச்சீரிய புலவனை 'நீடுவாழி' என அவள் வாய் வாழ்த்திற்று. தன் சிறுமையை நினைந்து நாணியவளாய் வந்த பணியை விடுத்து, இல்லம் நோக்கி திரும்பி நடந்தாள் அவள்.
 

சில மணித்துளிகள் கழிந்தன.சிறிது தூரமே சென்ற அவளின் மனக்குரங்கு மீண்டும் பிரிவாற்றாமைத் துயரில் மூழ்கத்தொடங்கிற்று.புலவர் பெருமான் எடுத்துரைத்து,நெஞ்சக் களத்தே பதித்த உண்மையை, 'கல்லாப்புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருளென' என்று கம்பன் பாடியதற் கொப்ப வெளி எடுத்து வீசி எறிந்தவளாய். மீண்டும் வீதிவழி மகளை விசாரித்தவாறு திரும்பி நடக்கலானாள்.
 

அவள் எதிரே சிவநெறிச் சீலராகிய மணிவாசகர் வந்தார். ஐந்தவித்தான் ஆற்றலின் அடையாளமாய்த் தெரிந்த அவர் திருமுகத்தை அடக்கத்தோடு கூர்ந்து பார்த்தாள் அத்தாய். அவள் முகக் குறிப்பினின்று நடந்ததைப் புரிந்து கொண்டார் அடிகளார்.
 

மகளின் பிரிவுக்கு ஆற்றாது,அவளைத் தேடிச் செல்லும் தாய்க்கு ஒரு கட்டளைக் கலித்துறை மூலம் உலகியல்பு சொல்வார் ஆயினார்.
 

சுரும்பிவர் சந்தும் தொடுகடல்
முத்தும் வெண்சங்குமெங்கும்
விரும்பினர்
பாற்சென்று மெய்க்கணி
யாம்வியன்
கங்கை என்னும்
செரும்புனல்
சூடும் பிரான் சிவன்
சிற்றம்பலமனைய

கரும்பெனும் மென்மொழி யாரும்அந்
நீர்மையர்
காணுநர்க்கே

                        (திருக்கோவையார் 288)

 

வாசத்தால் வண்டுகளைக் கவரும் சந்தனமும்,நிலமகளை அலைக்கரங்களாற் தொட்டுச் செல்லும் கடலினிடத்தே பிறப்பனவாகிய முத்தும்,சங்கும் இவற்றை விரும்பி அணிவார் உடம்போடியைந்து அழகு தந்து நிற்பனவாம்.பெருமை பொருந்திய கங்கை நதியை தலையிற் 10டிய சிவபெருமானின் திருச்சிற்றம்பலம் என்னும் திருப்பெயர் போற்; கரும்பாய் இனிக்கும் மென்மொழி பேசும் மங்கையரும் அத்தன்மையரே ஆவர்.
 

'மகளிர் பருவத்தாலும்,உணர்வாலும் ஒத்த ஆடவரோடுகாதலின்பம் துய்த்தற்கு உரியரேயன்றி பெற்றோர்க்கு உரியரல்லர்'.எனக்கூறியவராய் அவ்விடம் விட்டு அகன்றார் அடிகள்.
 

வண்ணத் தமிழில் திருவாசகம் வடித்த வாதவூரடிகள் சொல்லும், பொருளும் முன்னைப் புலவர் சொல்லையும் பொருளையும் ஒத்திருக்கக் கண்ட தாய் ஒரளவு அமைதி பெற்றாள். சிறிது வேளை கழித்து கல்லாடர் எனும் பெரும் புலவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவருடன் வருவதை அவள் கண்டாள். உருவிற் பாலை பாடிய பெரும் கடுங்கோவைப் போற் தொன்றிய அச்சீரியரை நோக்கி, 'ஐயா இவ்வழி என்மகள் இளைஞன் ஒருவனுடன் செல்வதைக் கணடதுண்டா?' எனக் கேட்டாள்.
 

அவள் கேள்விக்குப் பதிலாய் நீண்டதொரு விரிவுரைநிகழ்த்தலானார் கல்லாடர்.
 

'செறிதிரைப் பாற்கடல் வயிறு நொந்தீன்ற
செம்மகள்
கரியோற்கு அறுதி போக
மகவின்
இன்பம் கடல் சென்றிலவால்'

                                             (கல்லாடம் - உலகியல்பு உரைத்தல்-9-11)

 

'பெண்ணே.தொடர்ச்சியாக அலைகளை வீசும் திருப்பாற்கடல் வயிறு நொந்து திருமகளை ஈன்றது.
 

திருமால் திருமகளை மணந்த பின் மகளால் வரும் இன்பங்கள் தாயாகிய திருப்பாற் கடலுக்குக் கிடைத்தில'

'அன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
 வவ்வின ரிடத்தும் அவ்வழி ஆன'

                                                         (கல்லாடம்-உலகியல்பு-உரைத்தல் 12-13)

 

'அவ்வாறே விடிவெள்ளி உதித்தாற் போல் ஒளிசிந்தும் முத்துக்கள் உடமை ஆக்கிக் கொள்வோர்க்கு இன்பம் அளிப்பனவாமேயன்றித் தாயான கடலுக்குப் பயன்படுவன ஆகா'
 

பொதியப் பொருப்பும் நெடுமுதுகு வருந்திப்
பெற்று
வளர்த்த கற்புடை ஆரம்
அணியும்
மாமகிழ்நர் பதியுறை புகுந்தால்'
 

'கல்லின் மேல் தோன்றி வளரும் இயல்பினதான சந்தனம்,அணிந்து மகிழ்வோரிடத்துச் சேர்ந்த பின், தாயாகிய பொதிய மலையின் பக்கம் சென்றதில்லை'
 

'உண்டோ சென்றது கண்டது உரைக்க
பள்ளிக் கணக்கர் உள்ளத்துப் பெற்ற
புறமார்
கல்வி அறமா மகளைக்
கொண்டு
வாழுநர்க் கண்டு அருகிடத்தும்
அவர்மன
அன்னை கவரக் கண்டிலம்'

                                                      (கல்லாடம் -உலகியல்பு உரைத்தல் 21-25)

'பள்ளி ஆசிரியரிடத்துப் பெறும் கல்வியினால் ஆகும் சிறப்பு அதனை அவர்களிடம் கற்றுக் கொண்ட மாணக்கர்க்கே  அன்றி,ஆசிரியரைச் சேரக் காணோம்'

 

'பெருஞ்சேற்றுக் கழனி கரும்பு பெறுகாலை
கொள்வோர்க்
கன்றி அவ்வயல் சாரா'

                                                                  (கல்லாடம்-உலகியல்பு -26-27)
 

'வயல்களிலே விளையும் கரும்பு கொள்வோர்க்கு அன்றி,தாயாகிய வயலுக்கு உடைமையாவதில்லை'
 

'அடங்கப் படர்ந்த பசுங்கொடி அதனை
வளர்ந்த
சேண்மலை உளத்துயர் கொண்டு
தொடர்ந்ததும்
இலை'

                                                                (கல்லாடம்-உலகியல்பு 42-44)

 

'உமையம்மையை வளர்த்த பெருமை உடையதாகிய இமயமலை ,அப்பசுங் கொடி சிவனை மணம் புரிந்து, அவர் இடப்பாகத்தே நெருங்கி அமர்ந்த பின்,அவளைப் பின்தொடர்ந்ததில்லை'
 

புராணக் கதைகளையும்,இயற்கை நிகழ்வுகளையும் உவமைகளாய்க் கொண்ட அவர் விளக்கிக் கூறிய உண்மையைப் புரிந்து கொண்டாள் அத்தாய்.
 

'மகளிர் பிறந்த இடத்திதிற்குப் பயன்படார்.அவர் காதலர்கே உரியர் எனும் கருத்தை மூவர் சான்றோரும் ஒரே பான்மைத்தாய் விளக்கியவற்றை எண்ணி எண்ணி வியந்தாள் அவள். 'சான்றோர் என்றும் உயரியவற்றை ஒரே தன்மைத்தாய்ச் சிந்திப்பர்' என்று எங்கோ கேட்டது

அவள் நினைவுக்கு வநது மறைந்தது.
 

கல்லாடர் கருத்துக்களை ஒரு கலித்துறைப் பாவில் அமைத்து உரைத்தார் சிவசம்பர்.
 

இக்காரம் பண்ணை மலைபிறர்க் கீவ எழிலுமைமா
மைக்காலன்
தெவ்வரி பின்போகக் கல்லத்தி மாழ்கிற்றில
மிக்கார்
பரவிடும் பாற்கரன் கற்கட மெய்யன்பன்பின்
புக்காளுக்
கூருண்டி விட்டழல் பேதமை பொற்
கொடியே

                                                             (மதுரை பாற்கர சேதுபதி கல்லாடக் கலித்துறை)
 

'கற்பின் வழி ஒன்றுகூடி இன்பங்கண்டு,காதலனுடன் விரும்பி ஊரைவிட்டே சென்றவளுக்காக உணவை நீத்தும்,மற்றையோர் அறியக் கூக்குரலிட்டும் துன்பம் அடைவது அறியாமையாகும்'
 

காதலனுடன் சென்றவளைத் தேடிச் சென்று துயருறுவது வீணானது'என்னும் சிவசம்பர் கருத்தைப் புரிந்த தாய், பெண்புத்தி பின் புத்தி தான் என்று தன்னைத் தானே நொந்துகொண்டாள். அந்நாளில் தானும் காதலனுடன் யாரும் அறியாது ஊரை விட்டு ஓடியதும், தேடிச் செல்லும் இந்த மகளை ஈன்றதும் நினைவுக்குவர ,தன் அறியாமையை எண்ணி நாணித் தலை கவிழ்ந்தாள்.'உண்டி விட்டுஅழல் பேதமை பொற்கொடியே' என்னும் கவிதையடி ,சொல்லடியாய் அன்றிப் பொல்லடியாய் நோவு செய்தது அவளுக்கு. கற்றிந்தார் ஏத்தும் கலித்தொகையும், பாவை பாடிய வாயாற் பகர்ந்த திருக்கோவையாரும், கரும்பு நிகர் கல்லாடமும்,சிவசம்பர் கலித்துறையும் காட்டும் இச் சொல்லோவியங்களைத் துய்ப்பார் பெறும் இன்பம் சொல்லில் வடிக்கவொண்ணாத் தன்மையதாகும்.

 

 

 

 

 

 

 www.tamilauthors.com