ஒரு பயணச்சீட்டின் கதை

ராம் முரளி

காலை முதலேக் கொட்டிக்கொண்டிருந்த மழை, நகரத்தின் புழுங்கிய தார் சாலையை முழுமையாக ஈரப்படுத்திவிட்டு, அப்போதுதான் ஓய்ந்திருந்தது. இந்த மழை நாட்களில்தான் நகரம் எத்தனை அழகாக விரிந்து பிரகாசிக்கிறது என சிந்தித்தபடியே, கருத்த சாலை விரிப்புகளில் திரண்டிருந்த மழை நீரில் முகம் பார்த்தபடி, பேருந்து நிறுத்தத்தின் ஈரமேறியிருந்த இரும்புத் தூணில் தோள் பதித்து நின்றிருந்தான் பிரேம். அவனது அகன்ற கால்களுக்கடியில் நீர் குமிழ்கள் புதிதுபுதிதாக பிறப்பெடுத்து மேலெழுந்து நகருவதும், சில அடிகள் மிதந்து வெடித்து நீரோடு கலந்து விடுவதுமென மழையின் அபிலாசைகளில் பிரேம் சொக்கிப் போயிருந்தான். மழையின் மென் குளிர் பிரேமின் வழுங்கிய மனதினுள் பாசியைப்போல அடர்ந்து வியாபித்திருந்தது.

சிலர் மழைவிட்ட பின்பும், குடையின் நிழலுக்குள் தங்களை திணித்தபடி அவனைத் தாண்டி சாவகாசமாக நடந்துக்கொண்டிருந்தார்கள். குடையில் மேற்பரப்பில் இரவுநேர நட்சித்திரங்களைப்போல சில மழைதுளிகள் குத்திக்கொண்டு மின்னின.ரெயின்கோட்டின் மடிப்புகளுக்குள் புதைந்திருந்த சிறுவனொருவன் சாலையில் அங்குமிங்கும் எக்காளத்தோடு தாவிக்குதித்துக்கொண்டிருந்தான். மழையால் ஓய்வுற்றிருந்த பேரிரைச்சலை கக்கும் வாகனங்கள் சில மீண்டும் உயிர்த்தெழுந்து நகர வீதியில் சரசரவென பெருத்த பாம்பைப்போல விரைந்துக்கொண்டிருந்தன. அதன் சக்கரங்களின் கோர இரும்புப் பற்களில் சிக்கி தரையில் மவுனமுற்றுக் கிடந்த மழைநீர் அலறித் தெறித்தது. பேருந்து நிறுத்தத்தை ஒட்டியிருந்த ஊறிய மரங்களின் பச்சை இலைகளில் மின்னிக்கொண்டிருந்த மழைத்துளிகள் மெல்ல வடிந்தபடியிருந்தன. நகரம் தன் இயல்புக்கு விரைவாக திரும்பிக்கொண்டிருந்தது. பிரேம் இதமான அந்த மழைக்காலக் குளிரை தன் உடலில் தழுவிக்கொண்டு இன்னமும் அங்கேயே நின்றிருந்தான்.                                    

‘மழைக்கு இதமா டீ ஒன்னு சாப்பிடுங்க பாஸ்’ தனக்கு பின்னாலிருந்த கமலம் டீ கடையிலிருந்து வந்த அழைப்பு பிரேமின் காதுகளில் சக்கரையாக இனித்தது. பிரேமுக்கும் இப்போது டீ சாப்பிட்டால் தேவலை என்றுதான் தோன்றியது. ஏனெனில் அவன் காலை முதலே எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அதனால் டீக்கடைக்காரனின் உரத்த அழைப்பு பிரேமின் உடலுக்குள் பெருத்த பனித்துகளொன்றை வெடித்துப் பரப்புவதைப்போல சில்லென்று இருந்தது. ஆனாலும், பிரேமின் கையில் காலணா இல்லை. நேற்றைய இரவு சாப்பாட்டோடு எல்லாமும் கரைந்துப் போயிற்று.

ஆனாலும், கமலம் டீக்கடை ஒன்றும் அவனுக்கு அன்னியமானதல்ல. கையில் காசுத்தேறும் போதெல்லாம் அவனது கால்கள் தானாகத் தேடி செல்லும் இடமது. அவனது பகல்பொழுதுகளின் பெரும்பகுதி கமலம் டீக்கடையின் முகப்பில் ஊன்றியிருக்கும் மரப் பெஞ்சில்தான் கழிந்திருந்தது. அதனால்,தனக்கு பழக்கமான அந்த குரலிலிருந்த கருணை நிச்சயம் தன்னை நிராகரித்துவிடாது என்றெண்ணிய பிரேம், “காசு இப்போ கைல இல்லே, அது விஷயமாதான் போய்கிட்டு இருக்கேன், ஒரு இடத்துல காசு வர வேண்டியிருக்கு, உடம்பு ரொம்ப வெடவெடங்குது, ஒரு டீ போடுங்க, கொஞ்ச நேரத்துல காசு கொடுத்துடுறேன்“என்று இறைஞ்சினான். பிரேமின் கருணையை வேண்டி நிற்கும் அப்பாவித்தனமான குரலை அந்த டீக்கடைக்காரன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவன் பிரேமின் ஒடுங்கிய முகத்தை சந்திப்பதையே முற்றாகத் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் “மழைக்கு இதமா ஒரு டீச் சாப்பிடுங்க பாஸ்” என்று தனது தடித்த குரலை வெளியே நீட்டி பிதற்றிக்கொண்டே இருந்தான்.

அவனது அழைப்பின் சக்கரைப் பாய்ச்சலில் கரைந்துப்போயிருந்த சிலர் அவசர அவசரமாக அங்கு குழுமிவிட்டார்கள். டீக்கடைகளில் மட்டும் எங்கிருந்துதான் நொடிப்பொழுதில் எளிதாகக் கூட்டம்கூடி விடுகிறதோ? டீக்கடைக்காரன் கூட்டத்தின்பால் திருப்தி கண்டவனாய் கரிப்பிடித்த பால்ப்பானையை அடுப்பில் பொங்க வைத்தான்.பிரேமுக்கு இப்போதுக் கொஞ்சமாக நம்பிக்கை சிலிர்த்துக்கொண்டு எழுந்தன. எப்படியும் தனக்கும் ஒரு தேநீர் குவளை உறுதி என தனக்குத்தானே சமாதானம் கூறிக் மன கனத்தை மெல்லக் கரைத்தான்.

சுந்தரம் அண்ணன் மட்டும் இந்நேரம்இங்கிருந்திருந்தால், தனக்கு இந்த நிர்க்கதியான நிலை ஏற்பட்டிருக்குமா என்று உள்ளுக்குள் பொருமிக்கொண்டான் பிரேம்.சுந்தரம் அண்ணன் ஒரு பொறியாளர். அவரிடம்தான் பல காலம் பிரேம் லேபராக பணியாற்றிக்கொண்டிருந்தான்.மாவட்ட வரைப்படத்தில்கூட இடம்கிடைக்காத வஞ்சிக்கப்பட்ட ஒரு சிற்றூரிலிருந்து தன் பால்யகால நெடும்பாதையின் இடையிலேயே விசிறியடிக்கப்பட்ட பிரேமை சுந்தரம் அண்ணனின் அன்பும், அரவணைப்பும்தான் எல்லாப் அசதிகளிலிருந்தும் மீட்டெடுத்தது. பிரேம் - இந்த பெயர்கூட யார் வைத்தது என்று அவனுக்கு தெரியாது, ஒரு கிழவியின் வீட்டில் வளர்ப்பு பிராணிகளுக்கு மத்தியில் வளர்ந்திருந்த அவனுக்கு தன் பெயர் குறித்த சிந்தனை இதுவரையிலும் கிளர்ந்ததே இல்லை. ஊரில் எல்லோரும் கூவி அழைத்தார்கள். அவனும், தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ளும் சர்வாதிகாரிப்போல அந்த பெயரை தனக்கு சூட்டிக்கொண்டான். நிஜத்தில் அந்த பெயர்தான் அவனை சர்வாதிகாரம் செய்துக்கொண்டிருந்தது.

மீசை முளைவிட்டு அரும்ப துடித்துக்கொண்டிருக்கும் பத்தொன்பதின் இறுதியில் சுழலும் பிரேமை, அவனது பதினொன்னாவது வயதிலிருந்து சுந்தரம் அண்ணன்தான் அடைகாத்துவருகிறார். கோழியின் மென் சிறகினுள் சிறைப்படும் குஞ்சைப்போல பிரேம் சுந்தரம் அண்ணனின் அன்புக் கயிற்றில் தானாக பிணைந்துக் கொண்டிருந்தான்.

சுந்தரம் அண்ணனின் குடும்பம் தென்திசையில் இருப்பதாக மட்டும் பிரேம் அறிந்து வைத்திருந்தான். திருமணமாகி இரு பெண் பிள்ளைகள் என்பதுவரை பிரேமுக்கு தெரிந்திருந்தது. ஆனால் அவராக நேரிடையாக தன் குடும்பத்தை எந்த சமயத்திலும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவர் பேசுவதெல்லாம் மனிதத்தை கொன்றொழித்துக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தைப் பற்றிதான். எப்போதும் சமூகம், நேர்மை, அறம்தான் அவரது கோட்பாடு. சக மனிதனின் மீது இரக்கம் சல்லாபிக்காதவரை இந்த சமூகம் செல்லாகாசுக்கு சமம் என்பது அவரது கூற்று. இந்த நகரமே ஒரு மயானக்காடு என்பார். நாமெல்லாம் பிணம் என்று வேறு அச்சுறுத்துக் கொண்டே இருப்பார். அவருடனான இத்தனை வருட வாழ்க்கையில் ஒட்டுண்ணியைப்போல பிரேம் மனதில் பசையாக ஒட்டிக்கொண்டது அவரின் அறக்கோட்பாடுகள்தான்.

பிரேம் உடலளவில் இப்போது தளர்ந்துப் போயிருந்தான். பசி காதை அடைத்தது. தொண்டையில் தேங்கிய எச்சிலின் கனம் கூடிக்கொண்டேப்போனது. அவனுக்கு பக்கத்தில் சிலர் டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தது பிரேமைக் கூடுதலாக இம்சித்துக்கொண்டிருந்தது. அவன் மீண்டுமொருமுறை டீக்கடைக்காரனிடம் “ரொம்ப தாகமா இருக்கு, ஒரே இரு டீக் கொடுங்களேன், கொஞ்ச நேரத்துல சில்லறக் கொடுத்துடுறேன்” என்ன தவம் செய்தாலும், இன்றைய நாளில் அவனால் காசுப் புரட்ட முடியாது என்பினும், ஏதோ ஒரு நம்பிக்கையில் சொன்னான். அந்த உண்மை டீக்கடைக்காரனுக்கும் தெரிந்திருந்ததால், பிரேமின் பார்வையில் விழுவதைக்கூட அவன் தவிர்க்க முயன்றான். டீக்கடையில் கூடியிருந்த சிலர் தங்களது அருவருப்பான கூரிய பார்வையில் பிரேமின் இருப்பை பொசுக்கிக்கொண்டிருந்தனர். பிரேமின் மனதில் பெரும் சோகம் கவிந்து, அவனது சுயமரியாதையை கிழித்துக்கொண்டிருந்தது.

ஒரு கிளாஸ் டீக்கூட தன்னை புறக்கணித்துவிட்டது என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கண்கள் சோர்ந்து துடித்தது. அவனது மனம் சீக்குண்ட கோழிப்போல நொண்டியடித்தது. அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கு முன்னாலும், நகரம் நரகமென நீண்டுக்கொண்டேபோனது. சற்று முன்பு வரை அவனை அரவணைத்துக்கொண்டிருந்த மழைக்கூட இப்போது இல்லை. இனி இன்னைக்கு முழுவதும் கொட்டப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் மேலே வானத்தில் தென்படத்துவங்கின. சூரியன் தனது பொன்னிற ஒளியால் மழை விட்டு சென்றிருந்த எச்சங்களை துடைத்தெறிந்துக் கொண்டிருந்தான். மழைக்கும், வெயிலுக்கும் ஏழாம் பொருத்தம்தான் என்றெண்ணி விரக்தியில் தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். அந்த சிரிப்புக்கூட அவனுடையதில்லை. அது யாரோ ஒருவருடையது. ஒருவேளை அந்த டீக்கடைக்காரனுடையதாக இருக்கலாம். ஆனால் அதுப்பற்றி ஆராயக்கூடிய மனநிலையில் பிரேம் இல்லை.

மனதின் ஏழ்மையை கிழித்துக்கொண்டு சுந்தரம் அண்ணனின் கறுத்த முகமும், வனப்புமிக்க தேகமும் பிரேமின் நினைவில் பிரவாகமெடுத்து பாய்ந்தன. எத்தனை இனிமையான, பசியற்ற எட்டு ஆண்டுகள். அப்போதும் பிரேமின் கைகளில் காசுகள் குலுங்கியதில்லை, ஆனாலும் நிம்மதி தடையற்ற ஊற்றாக பெருகியிருந்தது. பிரேம் தனது உழைப்புக்கு ஒருமுறைக்கூட சுந்தரம் அண்ணனின் கூலிக் கேட்டதில்லை. காலையும், மதியமும் சைட்டிலேயே சோறுக் கொடுத்துவிடுவார்கள். இரவு சாப்பாடுக்கும், ரெண்டு டீக்க்கும் மட்டும் கணக்குப்போட்டு சுந்தரம் அண்ணன் கொடுத்துவிடுவார். அதுவே பெரிய வரமாகப்பட்டது பிரேமிற்கு.  

சுந்தரம் அண்ணன் ஒரு பொறியாளர் என்றாலும், அதற்குரிய எந்த லட்சணங்களையும் அவரிடம் காண முடியாது. தொடைக்கு மேல் ஏற்றிக்கட்டிய வெள்ளை வேஷ்டி, வாயில் எப்போதும் மணமணக்கும் வெற்றிலை, எண்ணெய் வழிய படிய வாரியத் தலைக்கேசம், கவட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிய நோட்டு ஒன்று, இவைதான் நாற்பதின் விளிம்பில் நின்றுக்கொண்டிருந்த சுந்தரம் அண்ணனின் அடையாளம். அவர் வசித்ததே ஒரு ஓலைக் குடிசையில்தான். பசி மிரட்டிய மழை நாள் ஒன்றில் நாயைப்போல போக்கிடமில்லாமல் அவரது குடிசையில் பிரேம் ஒதுங்கி விழுந்த கணத்திலிருந்துதான் அவர்களது உறவு உயிர்பித்தது. அவருக்கும் அந்நாளில்நம்பிக்கைக்குரிய லேபர் ஒருவன் தேவைப்பட்டதால் பிரேமிற்கு நான்கு இட்டலியை வாங்கிக்கொடுத்து சட்டென்று சேர்த்துக்கொண்டார்.

சுந்தரன் அண்ணன் சைட்டை விட்டால் குடிசை, குடிசையை விட்டால் சைட் என்றே எப்போதும் இருப்பவர். எப்படியும் மாதம் இருபதாயிரம் தேறும் அவருக்கு. ஆனாலும், அந்த ஓட்டை விழுந்த குடிசையே கதியென்று கிடப்பது அபத்தமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது பிரேமிற்கு. துவக்கத்தில் ஒருநாள் “ ஏன்னே, மாசம் இருபதாயிரத்துக்கு மேலே சம்பாதிக்கிறீங்க, வச்சு நல்லா வசதியா வாழலாம், ஆக்கி அரைச்சு நல்லா திங்கலாம், அப்புறம் ஏன் இந்த கோழிக் கூண்டுக்குள்ளயே இருக்கீங்க “ என்றுபிரேம் அவரிடம் தயக்கத்துடனேயேக் கேட்டு விட்டான். “ நீ அப்படியா நினைக்கிறே, இருபதாயிரம் எந்த மூலைக்கு பத்தும், நான் சம்பாதிக்கிறது எனக்கு மட்டுமில்ல, எனக்கு பின்னாடி ஒரு குடும்பம் இருக்கு தெரியும்ல, அதுவுமில்லாம இந்த நகரம் எனக்கானது இல்ல பிரேம், இங்க நான் பரதேசி போலத்தான், இந்த பரதேசிக்கு எதுக்கு பட்டு குஞ்சலம்ங்கிறேன். கைல கொஞ்சம் காசு தேத்திக்கிட்டு காலாகாலத்து ஊர் போய் சேர்ந்திடலாம் தவியா, தவிக்கேன், நீ என்னன்னா சுவரில்லாத வீட்டுக்கு வெள்ளையடிக்க சொல்றே “ எத்தனை நேர்மையான, ஜோடனையற்ற பதில். அதுதான் சுந்தரம் அண்ணன். அவரிடமிருந்து எப்போதும் பாசாங்கு எட்டிப்பார்த்ததில்லை.

பிரேம், சுந்தரம் அண்ணனின் உருவத்தில் மனதில் தீட்டி மகிழ்ந்தான்.  ஒரு லேபர் என்றுக்கூடப் பாராமல் தன்னையும் மதித்து கழுத்தை சுற்றி தோளில் கைப்போட்டு பேசுபவர். ஆனால் பிரேம் வாழ்க்கையில் இடையறாத பெய்துக்கொண்டிருந்த அன்பெனும் அடர் மழை, ஒருகணத்தில் ஓய்ந்து அடங்கியது. சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களது சைட்டில் பணிகள் முற்றாக நிறைவடைந்து கான்கிரீட் கூழ் வானத்தோடு முட்டும் பாலமாக மேலுழுந்து நிற்கத் துவங்கின. இனியும் அவர்களின் உதவி அதற்கு தேவையில்லை என்றானது. பணிகள் முடிந்ததும் சுந்தரம் அண்ணன் தனது சொந்த ஊருக்கு புறப்பட தயாராக இருந்தார். அதனால், பிரேமின் எட்டு ஆண்டுகளுக்கான கூலிப் பணத்தை கணக்கு பார்த்து ஒரு பெரும் தொகைச் சேர்ந்திருப்பதாகவும், அவர் புறப்படயிருந்த நாளின் மாலையில் தன் குடிசையில் வந்து பெற்றுக்கொள்ளும்படியும் சொல்லியிருந்தார்.

திசையறியாமல் குறுக்கும் நெடுக்கும் அலைந்துக்கொண்டிருந்த பறவை ஒன்றிடமிருந்து வானம் சட்டென விலகி கரைவதைப்போல சுந்தரம் அண்ணனின் பிரிவை பிரேமால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தானும், அவருடனே வந்துவிடுவதாக சொல்லி கண்கலங்கினான். ஆனால், சுந்தரம் அண்ணன்தான் அவனை அந்த நகரமெனும் ஈவுயிரக்கமற்ற ஊழியிலேயே கடந்து உழலும்படி சொல்லிவிட்டார். எனினும், கைக்கு எட்டப்போகும் காசை வைத்துக்கொண்டு ஒரு புது வாழ்வு தேடிக்கொள்ளும் முடிவை மனமொப்பாமல் ஏற்றுக்கொண்டான்.

அன்றைய மாலையில், சுந்தரம் அண்ணன் வசித்துவந்த அந்த இடுங்கிய  தூசி அண்டிய சாலையில் பிரேம் விரைந்துக்கொண்டிருந்தான். பிரிவின் வலியும், புதுவாழ்வின் ஒளியும் அவனது கண்களில் திரண்டு நின்றன.மனதின் பாரம் அழுத்த, ஒவ்வொரு வீடாக மெல்லக் கடந்து அவருடைய குடிசையை அடைந்துக் கதவைத் தட்டினான். உள்ளிருந்து எந்த சப்தமும் வந்ததாக தெரியவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த பிரேம், கதவில் லேசாக கைவைத்து உள்புறமாக தள்ளினான். கதவு சட்டென்று பின் நகர்ந்து வழிவிட்டது. கூரையின் மேலிருந்த ஓட்டைகளால் அந்த குடிசையினுள் ஒளி ஊடுருவியிருந்தது. பிரேம் உள்ளே நுழைந்து சுற்றும்முற்றும் பார்த்தான். அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. சுந்தரம் அண்ணனின் துணி மணிகள், குடிசையின் குறுக்காக அவர் கட்டியிருந்த நைலான் கயிறு, அவருடைய பெட்டி, சுவரில் சாய்த்துக் கிடத்தப்பட்டிருக்கும் கிழிந்த பாய் என்று எதுவும் இல்லாமல் அந்த குடிசை சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தது. பிரேமின் மனதை அந்த சுத்தம் நடுங்க செய்தது. உடல் வியர்வையால் குளிர்ந்து, தலைவலி திருகி எடுத்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்தவனாக அந்த சுத்தத்தின் மையத்தில் பிரேம் நின்றிருந்தான். கண்ணீர் அவனது முகத்தை நனைத்திருந்தது.

ஒருபோதும் பிரேம், சுந்தரம் அண்ணன் தன்னை ஏமாற்றிவிடுவார் என்று சிந்தித்ததுகூட இல்லை. அவருக்கு இருபதாயிரம் சம்பளம். பிரேமிற்கோ நாளொன்று நூற்றி ஐம்பது, ஒரு மாதத்திற்கு ஐயாயிரம் தேறும், அதில் சாப்பாட்டு இரண்டாயிரம் பிடித்துக்கொண்டாலும் எப்படியும் இந்த எட்டு ஆண்டுகளுக்கு ஒரு பெரியத் தொகைத் தேறும் என்று நினைத்திருந்தான்.  ஆனால் அவனுடைய நினைப்பு யாவற்றையும் இந்த குடிசை சுத்தம் செய்துவிட்டது. அன்பின் மீது அவன் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை அந்த சுத்தம் கேள்விக்குட்படுத்தியது. அதன்பிறகு சுந்தரம் அண்ணன் பற்றி அவன் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. அவருடைய நினைப்பை துடைத்தெறிய விரும்பியபோதும், எதார்த்தமான அவரது குறுநகையும், சமூகத்தை பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவன் மனதில் கண்ணீர் சுரக்கச் செய்யும். அவர் மீதான கரையைத் துடைத்து, தன்னையே அவன் குற்றம்சாட்டிக் கொண்டான்.

பணம் பெரிதல்ல. அவரின் அன்பும், அரவணைப்பும், அவன் கழுத்தை சுற்றி விழுந்த அவரது கரங்களும் அவருக்கு ஒரு புனிதத்தன்மையை மனதினுள் ஏற்படுத்திக்கொண்டான். அவர் என்றென்றும் அவனுள் வாழ்ந்து வந்தார்.

சுந்தரம் அண்ணன் முன்பு ஒருமுறை சொல்லியிருந்த இந்த சமூகம் மயானம் போன்றது, நாமெல்லாம் பிணங்கள் என்ற வார்த்தகள் காதில் அலைஅலையாய் விழுந்தன. பிரேம் அந்த குடிசையினுள் கடைசியாக ஒரு முறை சிரித்துக்கொண்டான். அது அவனுடைய சிரிப்பல்ல. ஒருவேளை சுந்தரம் அண்ணனின் சிரிப்பாக இருக்கலாம். யாருக்குத் தெரியும், இப்போது அதுப்பற்றி சிந்திக்கக்கூடிய மனநிலையில் பிரேம் இல்லை. சுந்தரம் அண்ணனின் உருவம் அவனது கண்களில் கண்ணீராக பெருகி வழிந்தது. அவன் இன்னமும் டீக்கடையின் அருகிலேயே நின்றிருந்தான்.

இறுதியாக ஒரேஒருமுறைக் கேட்டுப்பார்த்தால் என்னவென்று தோன்றியது. “ரொம்ப பசி எடுக்குது, தயவுசெஞ்சு ஒரேயொரு டீக் குடுங்களேன்“ இப்போதும் அவனுக்கு நிராகரிப்பே பதிலாகக் கிடைத்தது. கையில் காசில்லாதவனுக்கு ஒரு கிளாஸ் டீக்கூட கருணை காட்டுவதில்லை என்று உணர்ந்தவனாய் இனி ஒருபோதும் இங்கு வரப்போவதில்லை என்று மனதினுள் மீண்டும் மீண்டும் சத்தியம் செய்துகொண்டுவிட்டு அங்கிருந்து நகரத் துவங்கினான். மனம் சூன்யத்தின் பிடியில் ஆட்கொண்டதைப்போல நிலைக்கொள்ளாமல் விதிர்த்துக்கொண்டிருந்தது.பசி வயிற்றினுள் குத்தீட்டிப்போல சொருகி ரசித்தது. எல்லையற்ற வானக் கூரையின் கீழ் புறக்கணிக்கப்பட்ட ஒரு உருவம் மெல்ல மறைந்து ஒழிந்தது. தேநீர் கடையின் வாயிலில் சுழித்தோடிக்கொண்டிருந்த நீர் குமிழ்கள் மீண்டுமொருமுறை அனாதைகளாயின.