இரும்ப முள்வேலி

1


     
தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது  இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது. கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். 'மனிதத் தன்மை'யின புனிதத்தை விளக்கிடும் தூய்மை மிக்க கருத்தோவியம்.

     
கருமேகங்கள் திரண்டுள்ள காட்சியைத் தீட்டிட திறமை மிக்க எந்த ஓவியனாலும் முடியும்.

     
பால் நிலவு அழகொளி தந்திடும் காட்சியினைத் தீட்டிடவும், கைத்திறன் மிக்க ஒரு ஓவியனால் முடியும்.

     
ஆனால் கருமேகங்கள் திரண்டிருப்பதால் காரிருள் கப்பிக் கொண்டிருக்கும் காட்சியுடன் ஓர் புத்தொளி மெள்ள மெள்ளக் கிளம்புகிறது என்பதனையும் இணைத்தளித்திட கைத்திறன் மட்டும் போதாது. கருத்துத் திறனும் இருந்திட வேண்டும், ஓவியனுக்கு.

     
கெட்டவனைக் காட்டிடுவது எளிதான காரியம், ஓரளவு திறமை பெற்ற எழுத்தாளனுக்கு.

     
நல்லவனைக் காட்டிடும் எழுத்தோவியம் தந்திடுவதும் எளிதுதான் தரமான எழுத்தாளனுக்கு.

     
ஆனால் 'கெட்டவன்' நல்லதும் எண்ணுகிறான்; செய்கிறான் என்று காட்டிடவும், நல்லவனிடம் புற்றுக்குள் அரவுபோல கெடு நினைப்போ செயலோ இருந்திடுவதைக் காட்டிடவும், எழுத்தாளனாக மட்டும் இருந்தால் போதாது; எண்ணங்களை ஆள்பவனாகவும் இருந்திட வேண்டும்.

     
எளிதான காரியம் அல்ல என்பதுடன், ஒரு துளி தவறினால், அத்தகைய முயற்சி, ஆபத்தையே கூட மூட்டிவிடக்கூடும், படிப்போரின் உள்ளத்தில்.

     
இந்தச் சூழ்நிலையில், இவன் இப்படித்தான் எண்ணியிருப்பான் - இவ்விதம் தான் செய்திருப்பான் என்று 'யூகித்து' எழுதுவதிலேயே தவறுகள் நேரிட்டு விடுகின்றன.

     
சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுவிடும் எண்ணத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, முற்றிலும் வேறான, ஆனால் தூய்மையான எண்ணத்தை ஒருவன் கொண்டிருந்தான் என்பதை எடுத்துக் காட்டும் எழுத்தோவியம் தீட்டித் தருவதனை எல்லா எழுத்தாளர்களும் மேற்கொள்வதில்லை, ஆபத்தான முயற்சி என்ற காரணத்தால்.

     
ஆனால், சிற்சிலர், தனித் திறமை பெற்றோர், இத்தகைய எழுத்தோவியம் தருகின்றனர். இறவாப் புகழுக்கு உரியராகின்றனர்.

     
பகைவனிடம் கோபமும் கொதிப்பும், வெறுப்பும் எழுவதும், வஞ்சம் தீர்த்தாக வேண்டும் என்ற எண்ணம் வெறி அளவு ஓங்குவதும் இயல்பு.

     
ஆனால் பகைவனிடமும் பரிவு எழுகிறது - எழ முடியும் என்று எடுத்துக்காட்ட மிகச் சிலருக்கு மட்டுமே முடியும் - அது பொது இயல்புக்கு மாறானது; உலகில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டுள்ள முறைக்கு முரணானது. எனவேதான் அதனை கூறுவதற்குத் தனியானதோர் திறமை தேவைப் படுகிறது.

     
நம் நாட்டினை வேறோர் நாட்டினர் தாக்கிடும்போது - போர் மூண்டிடும்போது, நாட்டுப் பற்று உணர்ச்சிதான், மற்ற எந்த உணர்ச்சியையும்விட, மேலோங்கி நிற்கிறது.

     
நம் நாடு தாக்கப்படுகிறது! நமது தன்மானம் தாக்கப்படுகிறது!! என்ற எண்ணம் உள்ளத்தை எரிமலையாக்குகிறது; வெடித்துக் கொண்டு கிளம்புகிறது கோபம், கொதிப்பு, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம், பகைவனை அழித்தொழிக்க வேண்டும் என்ற துடிப்பு.

     
போர் மூண்டிடாதபோது எவையெவை 'வெறி' என்று கருதப்படுமோ அவை யாவும், தேவைப்படுவனவாக, வர வேற்கப்படுவனவாக, போற்றப்படுவனவாக ஆகிவிடுகின்றன.

 

- அறிஞர் அண்ணா

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை