இரும்பு முள்வேலி

2

"இப்படியா இரக்கமின்றி அடிப்பது. அவனும், பாவம் மனிதன் தானே" என்று மனம் உருகிப் பேசிடும் நல்லோர் கூட, மெல்லியலார் கூட, "சுட்டுத் தள்ளவேண்டும்! வெட்டி வீழ்த்த வேண்டும்! பூண்டோ டு அழிக்கவேண்டும்!" என்று பேசுகின்றனர் - போர் மூட்டிவிடும் வெறி உணர்ச்சி காரணமாக! அந்த உணர்ச்சியை வெறி என்று கூடக் கூறிடத் துணிந்திடார்! கவிதைகள் இயற்றப்படுகின்றன, அந்த 'எழுச்சி' பற்றி.

     நாடு வாழ்ந்திட எதனையும் செய்திடுவேன்! - என்ற பேச்சுக்குப் பெரியதோர் மதிப்புக் கிடைக்கிறது. எதனையும் செய்திடுவேன்! படுகொலைகள் கூட! பச்சிளங் குழந்தைகளைக் கொன்றிடும் பாதகம் கூட! போர்க் கோலத்தில், "கொல்லு! இல்லையேல் கொல்லப்படுவாய்!" என்பதுதான் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் - போரிடும் இரு நாடுகளிலும்!

     ஒரு நாடு மற்ற நாட்டின் மீதே எல்லாப் பழிகளையும், எல்லா கெடு நினைப்பினையும் ஏற்றி வைக்கும்; காட்டு மிராண்டிகள்! கொலை பாதகர்கள்! வெறியர்கள்! மனித மாண்பு அறியாதவர்கள்! - என்று கண்டனக் கணைகள் கிளம்பிடும், இருபுறமுமிருந்து.

     போர் ஓய்ந்து, ஓர் புது உறவு ஏற்பட்ட பிறகுதான், உண்மை வெளியே தலைகாட்டும், தைரியமாக! போர் துவங்கியதும், உண்மை ஓடி ஒளிந்து கொள்கிறது.

     வெறி பிடித்தலையும் சிலரால் மூண்டது இந்தப் போர் என்று, போர் ஓய்ந்த பிறகுதான் பேசப்படும் - போர் நடக்கும்போது அந்த நாட்டு மக்கள் அனைவரையுமே வெறியர்கள், காட்டுமிராண்டிகள், இரத்தம் குடிப்பவர், பிணம் தின்பவர், கற்பழிப்பவர், கயவர் என்றுதான் பேசுவர் - ஒருவர் தவறாமல்.

     யாரேனும் ஒருவர் இவ்விதம் பொதுப்படையாக ஒரு நாட்டு மக்கள் எல்லோரையும் மொத்தமாகக் கண்டிப்பது முறை அல்ல என்று கூறிடின், அவனுடைய நாட்டுப் பற்று பற்றிய பலமான ஐயப்பாடு எழும்; அருவருப்பு கிளம்பும்; அவன் 'தேசத்துரோகி' ஆக்கப்பட்டுவிடுவான்.

     தேசத்துரோகி - நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - எதிரிக்கு உளவாளி - எதிரியைவிடக் கொடியவன் - இழி மகன் - என்றெல்லாம் அவன் கண்டிக்கப்படுவான்; தனது நிலைமையை விளக்கிட அவன் முனைந்தாலோ, மக்களின் ஆத்திரம் மேலும் வளரும்; அவனை வெட்டி வீழ்த்திடக் கிளம்புவர்.

     இந்தக் கரத்தால் - இந்த வாள் கொண்டு - பகைவர் இருபதின்மரைக் கொன்றேன்.

     துரத்தினேன்! அவன் ஏற்கனவே அடிபட்டவன். ஆகவே வேகமாக ஓடிட முடியவில்லை. களத்திலே இருள் கப்பிக் கொண்டிருந்தது. படை கிளப்பிய தூசியால்! எதிரில் யானை விரண்டோ டி வருவது அவன் கண்களில் படவில்லை - சிக்கிக் கொண்டான்; காலின்கீழ் போட்டு... ! என்றான் ஒருமுறை; ... ஒரே ஒரு முறை... பிறகு... கூழ்! கூழாகிப் போனான்!

     இப்படிப் பல நிகழ்ச்சிகளைத் தன் வீரத்திற்குச் சான்றுகளாகக் கூறுவான், களம் சென்று திரும்பியவன்; கேட்போர் மகிழ்வர்; அவனை நாட்டைக் காத்த நாயகன் என்று பாராட்டுவர்.

     பகை உணர்ச்சி கிளம்பிவிட்டால் அது தடுப்பாரற்று வேகமாக வளரும்; வளர்ந்திடுவது போரின்போது மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகிவிடுகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் அந்தப் பகை உணர்ச்சியைக் கொண்டு விடுகின்றனர்; பொறி ஏதோ ஓர் இடத்தில்தான் விழுகிறது; தீயோ எங்கும் பரவி, எல்லாவற்றையும் பிடித்துக் கொள்கிறது அல்லவா.

     இன்முகம் காட்டுதல், நன்மொழி பேசுதல், அன்பு வழங்குதல், அறநெறி கூறுதல், இரக்கம் கொள்ளுதல் ஆகிய பண்புகள் அவ்வளவும் போர்ச் சூழ்நிலையில் அடியோடு மறைந்துபோய், 'தாக்கு! அழி! வெட்டு! குத்து!' - என்ற உணர்ச்சியை அனைவரும் பெற்றுவிடுகின்றனரே; அப்படியானால் அந்தப் பண்புகள் - மனிதத் தன்மை - அடியோடு மடிந்து போகின்றனவா? மடிந்து விடுகின்றன என்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் போர் முடிந்து வேறோர் புதிய நிலை ஏற்பட்டதும், மீண்டும் மெள்ள மெள்ள அந்தப் பண்புகள் மலருகின்றன; சமுதாயத்துக்கு மணம் அளிக்கின்றன.

     மடிவதில்லை  ஆனால் அந்தப் பண்புகள் மங்கி விடுகின்றன  மறைந்து விடுகின்றன..

 

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை