இரும்பு முள்வேலி

4

   பகைவனிடம் மூண்டுவிடும் வெறுப்புணர்ச்சி, அந்தப் பண்புகளை மூலைக்குத் துரத்திவிடுகின்றன! கண் சிமிட்டிக் களிப்பூட்டும் விண்மீன்களைக் கருமேகம் மறைத்து விடுவது போன்ற நிலை!

     கப்பிக் கொண்டிருக்கும் காரிருளுக்குப் பின்னே, விண்மீன் உளது என்பதனையும், அதன் ஒளி காரிருளைக் கூடக் கிழித்தெறிந்து கொண்டு வெளிக் கிளம்பக் கூடும் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறார் ஹால்கெயின் என்னும் பேரறிவாளர் 'இரும்பு முள்வேலி' எனும் தமது நூலில்.

     இங்கிலாந்துடன் ஜெர்மனி போரிடும் நாட்கள்; உலகையே தன் காலடி விழச் செய்திடத் துணிந்து கெய்சர், போர் நடாத்திய நாட்கள்; முதலாவது உலகப் போர்.

     ஜெர்மனியில், கெய்சர் போர் வெறி மூட்டுகிறார் என்று துவங்கிய பேச்சு, ஜெர்மானியர் போர் வெறியர்கள் என்ற கட்டத்தை அடைந்து விட்டது. ஒரு நாட்டு மக்களுடைய நாட்டுப் பற்றையும், 'ராஜபக்தி'யையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அந்த நாட்டு அதிபன், அவர்களை பலிக்கிடாக்களாக்கி, இரத்த வெள்ளம் புரண்டோ டச் செய்தான்.

     கெய்சர் மீதுதான் முதலில் கண்டனம், வெறுப்பு, கொதிப்பு! பிறகு ஜெர்மன் மக்கள் மீதே அந்த வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.

     குழந்தைகளை வெட்டித் தின்கிறார்கள் ஜெர்மன் வெறியர்கள் என்று இங்கிலாந்து நாட்டு முதியவர்கள் - குறிப்பாகத் தாய்மார்கள் பேசினர்!

     ஜெர்மன் மொழி, ஜெர்மன் தொழில் திறமை, ஜெர்மன் கலை என்ற எல்லாவற்றின் மீதும் அந்த வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.

     போர் மூளுவதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வந்த ஜெர்மானியர்கள் விரட்டப்பட்டனர் அல்லது சிறை வைக்கப்பட்டனர்.

     ஜெர்மனியுடன் எந்த விதமான தொடர்பும் கூடாது என்பது தேசியக் கட்டளையாகிவிட்டது. எல்லாத் தொடர்புகளும் அறுத்தெறியப்பட்டன.

     இங்கிலாந்து நாட்டு அரச குடும்பம் ஜெர்மன் கெய்சர் குடும்பத்துக்கு நெருங்கிய உறவு. அதனை வெளியே சொல்லக் கூடக் கூசினர். பகை உணர்ச்சி அந்த அளவு கப்பிக் கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையில் நடைபெறும் நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது. 'இரும்பு முள்வேலி' போர் கிளப்பிவிடும் பகை உணர்ச்சிக்கும் இதயத்தின் அடியிலே மறைந்திருக்கும் அன்பு உணர்ச்சிக்கும் இடையே நடைபெறும் போர் பற்றிய கதை.

     மான் தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே ஒரு பகுதி. அங்கு ஒரு விவசாயக் குடும்பம். மிராசுதாரனிடம் ஒரு பண்ணையைக் குத்தகைக்கு எடுத்துப் பாடுபட்டு வாழ்க்கையை நடத்திச் செல்லும் ஒரு குடும்பமும், முதியவர் - அவர் மகன் - அவர் மகள் - கொண்ட குடும்பமும்.

     ஜெர்மனியை அழித்தொழித்தாலொழிய, இங்கிலாந்து மட்டுமல்ல, மனித குலமே அழிந்து போகும் என்ற உணர்ச்சி எங்கும் பரவி இருந்ததுபோலவே, அந்த சின்னஞ்சிறு தீவிலும் பரவி இருந்தது.

     முதியவரின் மகன், பிரிட்டிஷ் படையில் சேர்ந்தான்; முதியவர் மகிழ்ந்தார்.

     'என் அண்ணன் போர்வீரன்! பொல்லாத ஜெர்மானியரை அழிக்கும் புனிதப் போரில் ஈடுபட்டிருக்கிறான்' என்ற எண்ணம் கொண்ட அந்த எழில் மங்கை, தன் குடும்பத்துக்கு அண்ணன் பெருமை தேடிக் கொடுக்கிறான் என்ற பெருமித உணர்ச்சியில் திளைத்திருக்கிறாள்.

     எங்கும் பரவி, எல்லோர் உள்ளத்திலும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது போலவே மோனா மனதிலும் ஜெர்மானியர் வெறுப்புணர்ச்சி ததும்பிக் கிடந்தது. 'ஒரு துளியும் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. கொன்று குவிக்க வேண்டும் அந்தக் கொடியவர்களை; பூண்டோடு ஒழிக்க வேண்டும்' என்று கருதினாள்.

     ஜெர்மானியர்களின் காட்டுமிராண்டித்தனம், கொலை பாதகத் தன்மை பற்றிய தகவல் நிரம்பக் கிளம்பியபடி இருந்தன. ஒன்றுக்குப் பத்தாக இவை வளர்ந்தன! வெறுப்புணர்ச்சி மூண்டுவிட்டிருந்தது. முதியவர் கூட அவ்வளவு கொதித்துப் பேசுவதில்லை. அவருடைய மனதிலே சிறிதளவு பழைய பண்புகள் உலவிட இடம் இருந்தது. அந்த மங்கைக்கோ உள்ளம் முழுவதும் அந்த ஒரே ஒரு உணர்ச்சிதான்; ஜெர்மானியர் மீது வெறுப்பு; அளவு கடந்த அகற்றப்பட முடியாத வெறுப்பு. அதிலும் போர்க்களம் சென்றுள்ள தன் அண்ணனைப் பற்றிய எண்ணம், அந்த வெறுப்புணர்ச்சியை வெந்தழல் ஆக்கிவிட்டிருந்தது.

 

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை