இரும்பு முள்வேலி

5

"இப்படி ஒரு மனமா! ஜெர்மானியர் வந்து தங்கினால் என்ன!! அவர்களுக்குப் பருகிடப் பால் தந்தால் என்ன என்று பேசுவதா? நமது நாட்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்கக் கிளம்பியுள்ள கொடியவர்கள் இந்த ஜெர்மானியர். இவர்களுக்குப் பருகப் பால்! நாம் கொடுப்பதா! என்ன நியாயம் இது! அப்பா ஏன் இப்படிக் கெட்டுக் கிடக்கிறார் - பால் தருவதாமே பகைவர்களுக்கு!! கொடுத்தால் என்னம்மா என்று வாதாடுகிறார்! அவர்களும் மனிதர்தான் என்று நியாயம் பேசுகிறார்! அவர்கள் மனிதர்களா!! பதைக்கப் பதைக்கக் கொன்றார்கள் நம்மவர்களை! பச்சிளங் குழந்தைகளைக் கூடக் கொன்றனர் அக் கொடியவர்கள்! அவர்களும் மனிதர்கள்தான் என்கிறார் அப்பா! ஏன் இவருக்கு இப்படிப் புத்தி கெட்டுப் போய்விட்டது. அங்கே அண்ணன் துரத்துகிறான் ஜெர்மன் கொடியவர்களை - இங்கே அப்பா பால் தரச் சொல்கிறார். அண்ணன் என்ன எண்ணிக்கொள்வார், இதனை அறிந்திடின்? செச்சே! அப்பா சுத்த மோசம்!"

     ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்க, சிறைக்கூடம் கட்டப்படுகிறது. கைதிகள் தப்பித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, அங்கு இரும்பு முள்வேலி போடப்படுகிறது. மிருகங்களை அடைத்து வைப்பது போல ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்கிறார்கள். வெளியே பிரிட்டிஷ் போர் வீரர்கள் காவல் புரிகின்றனர், தப்பியோட முயற்சித்தால் சுட்டுத்தள்ள.

     கைதிகளான எல்லா ஜெர்மானியருமே, போர் வீரர்கள் அல்ல; பலர் தொழிலில், வாணிபத்தில், பல்வேறு அலுவலகங்களில் ஈடுபட்டிருந்தவர்கள்; சிலர் செல்வம் படைத்தவர்கள்கூட!

     எல்லாம் ஜெர்மானியர்தானே! வெறியர்கள் - கொடியவர்கள்தானே! இவர்களை இப்படித்தான் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மோனாவுக்கு. முதியவருக்கோ ஒரு பச்சாதாப உணர்ச்சி. ஜெர்மானியர்கள் தமக்கு அளிக்கப்படும் உணவு மோசமாக இருப்பதாகக் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார். இதுகளுக்கு அப்படிப்பட்ட உணவுதான் தரவேண்டும் என்கிறாள் மோனா, அவள் இதயத்தில் வெறுப்புணர்ச்சி நிரம்பி இருப்பதால். 'வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள்; அது போதாதா; மேலும் வாட்ட வேண்டுமா அவர்களை' என்று முணுமுணுக்கிறார் முதியவர். கொடியவர்களுக்காகப் பரிவு காட்டுவது மோனாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. "நம்முடைய மக்கள் களத்திலே பூப்பந்தாட்டமா ஆடிக் கொண்டிருக்கிறார்கள்! விருந்தும் இசையும் நடன விழாவுமா நடக்கிறது அவர்களுக்கு. என்னென்ன இன்னலோ, ஆபத்தோ! நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ? அதைப்பற்றி நினைத்துக் கொண்டால் நெஞ்சிலே நெருப்பு விழுவது போலிருக்கிறது. இவர் என்னடா என்றால், இந்தக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம் மோசம்! போடப்படும் சாப்பாடு மட்டம் என்று உருகுகிறார். அந்தப் பாவிகளுக்காக! அந்தப் பாதகர்களுக்காக!" என்று மோனா கூறுகிறாள். முதியவர், 'கல்மனம் மகளே! உனக்குக் கல்மனம்!' - என்று மெள்ளக் கூறுகிறார்.

     மேலும் மேலும் ஜெர்மானியர் கொண்டுவரப் படுகின்றனர். இரும்பு முள்வேலி போட்ட சிறைக்குள்ளே தள்ளப்படுகிறார்கள்.

     மோனாவின் மனம் இளகவில்லை; படட்டும், படட்டும்! அனுபவிக்கட்டும்! என்றே கூறுகிறாள். என்ன செய்தார்கள் அவர்கள்? என்ன செய்ய வேண்டும்? அவர்கள் ஜெர்மானியர்கள்; அது போதாதா அவர்களிடம் வெறுப்புக் கொள்ள?

     அத்தனை வெறுப்புக் கொண்டிருக்கும் மோனா! அந்த ஜெர்மானியர்களை நாளைக்கு இரண்டு வேளையாவது பார்த்துத் தொலைக்க வேண்டி வருகிறது. பால் வாங்கிக் கொண்டு போக ஜெர்மன் கைதிகளில் சிலர் வருகிறார்கள். பிரிட்டிஷ் போர்வீரர்கள் உடன் வருகின்றனர், கைதிகள் தப்பி ஓடிவிடாதபடி பார்த்துக் கொள்ள. ஜெர்மானியரைப் பார்க்கும் போதே எள்ளும் - கொள்ளும் வெடிக்கிறது மோனாவின் முகத்தில், சுட்டுவிடுவது போன்ற பார்வை! காலில் ஒட்டிக் கொள்ளும் மலத்தைக் கழிவியான பிறகும் ஒருவிதமான அருவருப்பு இருந்தபடி இருக்குமல்லவா, அதுபோல, அவர்களைக் கண்டால் மோனாவுக்கு ஒருவித அருவருப்பு.

     அந்தக் கைதிகள் அவளிடம் பேச முயற்சிக்கிறார்கள். மோனா வாய் திறக்க மறுக்கிறாள். இதுகளுடன் பேசுவேனோ!! என்று நினைக்கிறாள்.

 

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை